Showing posts with label தொடர் கட்டுரை. Show all posts
Showing posts with label தொடர் கட்டுரை. Show all posts

Sunday, April 22, 2018

நினைவுக் குறிப்பிலிருந்து....

Posted by பால கணேஷ் Sunday, April 22, 2018
மாத நாவல்கள் - 1

1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி சானல்களும், கைபேசிகளும் நேரத்தைப் பிடுங்கிக் கொள்ளாத அந்த நாளில் அந்தத் தொடர்கதைகளைப் படித்து பைண்ட் செய்து வீட்டில் வைத்துக் கொள்வது வழக்கம். பின்னர் பதிப்பகங்களின் வெளியீடுகளாக வரும் அந்தக் கதைகளையும் சிலர் வாங்கித் தங்கள் வீட்டில் சேர்த்து வைப்பதுண்டு. ஆனாலும் பதிப்பகப் புத்தகங்கள் விலை அதிகம் என்று இருந்த காரணத்தால் (இன்றைய நம் விலைவாசியில், பதிப்பகப் புத்தகங்களின் தூக்கலான விலைக்கு நாம் பழகிவிட்ட நிலையில் அந்தப் புத்தகங்களின் தொகை நமக்கு அற்பமாகத்தான் தோன்றும்.) பலரால் வாங்க இயலாத நிலை இருந்தது.

அப்படிப் பதிப்பகப் புத்தகங்களை வாங்கி வைத்துக் கொள்ள இயலாதவர்களின் மனக்குறையைப் போக்குவதற்கு அன்றையப் பதிப்பாளர்கள் வழிவகை செய்திருந்தார்கள். பிரபலமான நூல்களை உயர்தரத்தில் வெளியிடும் அதேசமயம், அவற்றை சற்றே தரமிறங்கிய காகிதங்களில் அச்சிட்டு மலிவுப் பதிப்பு என்றும் வெளியிடுவார்கள். புத்தகத்தின் விலையில் ஏறத்தாழ பாதி விலைக்கும் குறைவாகத்தான் இந்த மலிவுப் பதிப்புகள் இருக்கும். நுங்கம்பாக்கம் ’மங்கள நூலகம்’ நிறுவனம் வெளியிட்ட கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’, எஸ்ஏபியின் ‘காதலெனும் தீவினிலே’, ராஜாஜியின் ‘வியாசர் விருந்து’, தியாகராயநகர் அருணா நிலையம் வெளியிடட்ட ‘அகநானூறு’, ‘புறநானூறு’ உள்ளிட்ட பல நூல்களின் மலிவுப் பதிப்புகளை நான் படித்திருக்கிறேன். அவற்றில் சிலவற்றின் பிரதிகள் இன்றும் என்னிடம் உண்டு.

அப்போதுதான் அறிமுகமானது ‘ராணிமுத்து’ மாதநாவல் இதழ். (வருடம் 1967 என்பதாக நினைவு.) சிறந்த படைப்பாளர்களின் புகழ்பெற்ற படைப்புகளைத் துளியும் சுருக்காமல் அப்படியே மாதம் ஒரு நாவலாகத் தருவது என்ற நோக்கத்துடன் துவங்கப்பட்டது. நியூஸ் ப்ரிண்ட் என்கிற சாணித்தாளில்தான் அச்சிடப்படும். விலை ஒரு ரூபாய்தான். அந்தப் புத்தகத்தின் பின் அட்டையில் அடுத்து வரவிருக்கும் நாவல் பற்றிய அறிவிப்பிலேயே தெளிவாகச் சொல்லியிருப்பார்கள். ‘ரூ.5 மதிப்புள்ள இந்த நாவல் உங்களுக்கு ரூ.1க்குக் கிடைக்கும்’, ‘ரூ.3 மதிப்புள்ள இந்த நாவல் உங்களுக்கு ரூ.1 க்குக் கிடைக்கும்’ என்று. பக்க வரையறை கிடையாது. ஒரு புத்தகம் 270 பக்கம் இருக்கும், மற்றொன்று 175 பக்கம் அல்லது 126 பக்கம்கூட இருக்கலாம்.

பேப்பர்களைப் பற்றிக் கவலைப்படாமல் எழுத்தைப் படித்து ரசிக்க விரும்பிய வாசகர்களுக்கு மிகச் சௌகரியமான இதழாக அமைந்தது. நல்ல விற்பனையையும் பெற்றது. முதல் இதழாக அகிலன் எழுதிய ‘பொன்மலர்’ நாவலை வெளியிட்டார்கள். இரண்டாவதாக அறிஞர் அண்ணா எழுதிய ‘பார்வதி பி.ஏ.’ வெளியானது. தொடர்ந்து, பானுமதி ராமகிருஷ்ணாவின் ‘மாமியார்’, மு.வ. எழுதிய ‘அந்த நாள்’, கலைஞர் கருணாநிதியின் ‘வெள்ளிக்கிழமை’, ஜெகசிற்பியனின் ‘நந்திவர்மன் காதலி’, சாண்டில்யனின் ‘ஜீவபூமி’, மாயாவியின் ‘வாடாமலர்’ லக்ஷ்மியின் ‘காஞ்சனையின் கனவு’, ரா.கி.ரங்கராஜனின் ‘ஒரே வழி’, தமிழ்வாணனின் ‘பாலைவனத்தில் பத்து நாட்கள்’ ...இப்படி கணக்கற்ற க்ளாஸிக் நாவல்கள் எளிமையான விலையில் கிடைத்தன.

பின்னாளில் க்ளாஸிக்குகளைக் கைவிட்டு புதிதாக எழுத்தாளர்களிடம் நாவல் வாங்கி வெளியிடப்பட்டது ‘ராணிமுத்து’வில். அப்போதும் 100க்குக் குறையாத பக்கங்கள் கொண்டதாக, எழுதுபவர்களுக்கு நிறைய ஸ்பேஸ் தரும் இதழாகவே இருந்தது. இப்போதைய ‘ராணிமுத்து’தான் அளவில் இளைத்து இன்றைய ‘ஜீரோ சைஸ்’ பெண்களைப் போல மிக ஒல்லியாகக் காட்சி தருகிறது.

தவிர ‘ராணிமுத்து’வுக்கு ஓராண்டு சந்தா கட்டினால் ஏதாவது ஒரு க்ளாஸிக்கை இலவசமாக அனுப்பித் தருவார்கள் என்றொரு ஸ்கீமும் இருந்தது. இன்னொரு சிறப்பம்சம், ஆரம்பம் முதலே ஓவியர் ஜெயராஜின் கை வண்ணத்தில் கலர்ஃபுல்லான அட்டைப்படங்களும், உள்ளே நான்கைந்து கறுப்பு வெள்ளைப் படங்களும் தாங்கித்தான் வெளிவரும். இப்போது அட்டைப்படம் திரை நட்சத்திரங்களைத் தாங்கி வந்தாலும், இன்றளவும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, உள் படங்கள் அதே ‘ஜெ’தான் தொடர்ந்து வரைந்து கொண்டிருக்கிறார் என்பது ‘ஜே’ போட்டுப் பாராட்ட வேண்டிய விஷயம். சாண்டில்யனின் ‘ஜீவபூமி’ அந்நாளில் திரைப்படமாக்கத் திட்டமிருந்ததால் அட்டைப்பட ஓவியத்தில் நடிகர்திலகம், பத்மியினியின் சாயலில் சாண்டில்யனின் நாயக, நாயகியை அவர் வரைந்திருந்தது இன்றும் நினைவில் பசுமையாக.

என் கல்லூரி நாட்களில் பழைய புத்தகக் கடைகளில் வாங்கித்தான் பல க்ளாசிக் நாவல்களை, குறிப்பாக சாண்டில்யனின் நாவல்களைப் படித்து ரசித்தேன். காலப் போக்கில் இரவல் வாங்கியவர்களும், வெள்ளமும் சாப்பிட்டது போக மிகச்சில பிரதிகளே நினைவுக்காக இப்போது என்னிடம் தங்கியிருக்கின்றன.

ராணிமுத்துவைத் தொடர்ந்து அதே காலகட்டத்தில் வேறு சில மாத நாவல்களும் துவங்கப்பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை பல உண்டு. 

ட்யூரோசெல் பேட்டரி விளம்பரத்தில் வரும் முயல்களைப் போல அந்த மாதநாவல்களெல்லாம் காலப்போக்கில் நின்றுவிட்டன என்றாலும், ஜெயிக்கிற முயலாக ராணிமுத்து இன்றும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த மற்ற மாதநாவல்களைப் பற்றி...


சிறிது இடைவெளி விட்டு... தொடரலாமா என்பதை நீங்கள் சொல்லுங்கள்.

Monday, August 20, 2012

நடை வண்டிகள் - 31

Posted by பால கணேஷ் Monday, August 20, 2012

நானும், ‘அவரும்!’
கோவையிலிருந்து என் நண்பன் விஜயன் போன்‌ செய்தான். அவனும் அவன் நண்பன் ராமசுப்ரமணியனும் அன்றிரவு சென்னை வருவதாகவும், ராமசுப்ரமணியன் எழுத்தாளர் ............ன் தீவிர விசிறி என்பதால் மறுநாள் ஞாயிறன்று அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்ய முடியுமா என்றும் கேட்டு. அந்த எழுத்தாளரை எனக்கு அறிமுகம் இல்லாவிட்டாலும், அவரின் போன் நம்பரைத் தேடிப் பெற்று டயல் செய்தேன். அவரே எடுத்தார். நான் விஷயத்தைச் சொன்னதும்... ‘‘வாசகரைச் சந்திப்பது என் பாக்கியமல்லவா? நாளைக் காலை அவசியம் வாருங்கள்’’ என்றார். நான் மகிழ்வுடன் கோவைக்கு போன் செய்து என் நண்பனுக்கு விஷயத்தைச் சொல்லி விட்டேன்.

நான் அந்த எழுத்தாளர் எழுதிய கதைகளை நிறையப் படித்ததுண்டு. மனித உறவுகளையும், வாழ்க்கை குறித்த அக்கறையுடனும் எழுதும் அவர் எழுத்தின் மேல் எனக்கு மிக மதிப்பு உண்டு. அவரின் எழுத்துக்களைப் படித்து தீவிர விசிறியான பல வாசகர்கள் அவரை ஞானகுரு என்று கொண்டாடுவார்கள். அத்தகைய மதிப்புமிக்க எழுத்துக்களுக்குச் சொந்தக்காரரைச் சந்திக்கப் போகும் மகிழ்வு என்னுள் ததும்பியது. மறுதினம் காலையில் அவர்கள் இருவரையும் அவர் வீட்டிற்கு அழைத்தச் சென்றேன்.

மலர்ந்த முகத்துடன் வரவேற்றார் அவர். என்னை அறிமுகம் செய்து கொண்டு, என் நண்பர்கள் இருவரையும் அறிமுகம் செய்வித்தேன். ராமசுப்ரமணியம் அவரைச் சந்தித்த மகிழ்வில் அவரின் கதைகளைப் பற்றிப் பேச, அவர் அவனுக்கு பதில் ‌சொல்லிக் கொண்டு, இடையிடையே சில அறிவுரைகளையும் அவனுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த நான் அவர் பேசும் விதத்தையும், நொடிக்கு நொடி மாறும் அவரது முகபாவங்களையும் ரசித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். தன் வாசகனுடன் நீண்ட உரையாடல் நடத்திக் கொண்டிருந்த அவர், திடீரென்று என் பக்கம் திரும்பி, ‘‘இவன் என்ன பெரிய புடுங்கி மாதிரி அட்வைஸ் பண்ணிட்டிருக்கான்னுதானே நீங்க இப்ப மனசில நினைக்கறீங்க?’’ என்று கேட்டார்.

தூக்கிவாரிப் போட்டது எனக்கு. ‘‘இல்லை ஸார்... நான் அப்படியெல்லாம் நினைக்கக் கூடியவன் இல்லை. உங்களோட பேச்சையும், முகபாவங்களையும் ரசிச்சுப் பார்த்துட்டிருந்தேன். என் மனசுல நீங்க சொன்ன மாதிரி நினைப்பு ஓடலை. வேறொரு விஷயம் ஓடிட்டிருந்தது. அதை உங்ககிட்ட கேக்கலாமா?’’ என்றேன். அவருக்கு ஏன் மனதில் அப்படி ஒரு எண்ணம் தோன்றியது என்பதும், என்னை ஏன் அப்படிக் கேட்டார் என்பதும் எனக்குக் குழப்பமாகவே இருந்தது. ‘‘எதுவா இருந்தாலும் கேளுங்க’’ என்றார்

அவர். நான் சொன்னேன்: ‘‘ஸார்! விகடன்ல ஒருசமயம் சிறுகதைப் போட்டி வெச்சிருந்தாங்க. பரிசு மிகப் பெரிய தொகைங்கறதால கோவைல என்கூட வேலை பார்த்துட்டிருந்த முத்துசாமிங்கற நண்பன் லீவு போட்டுட்டு கன்னியாகுமரில (அவன் சொந்த ஊர் நெல்லை) ஒரு தனி இடத்துல உக்காந்து யோசிச்சு கதை எழுதிட்டிருந்தானாம். அப்ப கடற்கரைல நீங்க தனியா நடந்து வர்றதைப் பார்த்திருக்கான். உடனே உங்ககிட்ட ஓடிவந்து மேல்மூச்சு வாங்க, ‘ஸார்... நான் உங்க தீவிர ரசிகன் ஸார். உங்க கதைல்லாம் படிச்சிருக்கேன்’ன்னு சொல்லிருக்கான். நீங்க ஒருமுறை நிமிர்ந்து பார்த்து, ‘படி’ ன்னீங்களாம். அவன் பரசவத்தோட, ‘உங்களை இங்க பாப்பேன்னு நினைக்கவே இல்ல ஸார். உங்களைச் சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம் ஸார்’ன்னானாம். நீங்க ஒரு தடவை ஏறிட்டுப் பார்த்து, கைய உயர்த்தி, ‘சந்தோஷப்படு!’ன்னு சொல்லிட்டு விறுவிறுன்னு நடந்து  போயிட்டீங்களாம். அவன் திகைச்சுப் போய் நின்னுட்டானாம். பின்னொரு நாள்ல இதைச் சொல்லி ‘அந்த எழுத்தாளர் ஒரு கர்வி’ன்னான். ஆனா நீங்க பேசறதை, பழகறதைப் பார்த்தா அப்படித் தெரியலையேன்னு தான் நான் யோசி்ச்சிட்டிருந்தேன்’’ என்றேன்.

‘‘உங்க நண்பனுக்குப் புரியவில்லை. ஒரு எழுத்தாளன் தனிமையில சிந்திச்சபடி நடந்து வந்துட்டிருக்கறப்ப சிந்தனை கலைக்கப்பட்டால் ஏற்படும் எதிர்விளைவு அது. நானென்ன சினிமா நடிகனா என்னைப் பார்த்ததும் பரவசப்பட்டு பேச்சு வராமல் திகைக்கற அளவுக்கு? என் கதைகளைப் பத்திப் பேசியிருந்தா நானும் நின்னு பேசியிருப்பேன். வெறுமே பார்த்ததுலயே பரவசம், சந்தோஷம்ங்கறவங்க கிட்ட நான் என்ன பேசிட முடியும் சொல்லுங்க...’’ என்றார். அவர் சொன்னது எனக்கு மிகச் சரியாகப் பட்டதால் ஆமோதித்தேன். அதன் பின்னர் ஒரு மணி நேரம் அவருடன் உரையாடிவிட்டு நாங்கள் மூவரும் விடைபெற்றபோது வாசல்வரை வந்து வழியனுப்பினார்.

பின்வந்த காலத்தில் அவரின் புத்தகங்களைப் பதிப்பிக்கும் பதிப்பாளர் ஒருவர் எனக்கு நண்பராகி அவருக்கு பல புத்தகங்கள் லேஅவுட் செய்து கொடுத்தேன். அப்போது இந்தச் சம்பவத்தைச் சொன்னேன், "ஏன்யா உங்க எழுத்தாளரு அப்படிச் பேசினாரு?" என்று கேட்டதற்கு அவர் மிக வியந்தார். எழுத்தாளர் இயல்பில் நல்ல குணமுடையவர் என்றும், அனைவரிடமும் அன்பாகப் பேசுபவர் என்றும், உங்களிடம் அப்படி ஒரு கேள்வி‌யைக் கேட்டிருக்க வாய்ப்பேயில்லையே என்றும் சொன்னார். உண்மையில் ஏன் என்னைப் பார்த்து அப்படிக் கேட்டார் அவர் என்பது இன்றும் எனக்குள் ஒரு வியப்புக் குறிதான்! நான் அவரை வெறித்த விதம் அநாகரீகமாக இருந்திருக்கும் போலும் என்றெண்ணி அதை நான் திருத்திக் கொண்டேன். அதன்பின் அந்த எழுத்தாளரைச் சந்திக்கும் வாய்ப்பு இதுவரை அமையவில்லை.

===================================

‘நடை வண்டிகள்’’ தொடர் இத்தடன் நிறைவு பெறுகிறது. இறையருளினால் சில எழுத்தாளர்களை நண்பர்களாகப் பெற்ற நான் அந்த அனுபவங்களிலிருந்து நான் கற்றுக் கொண்ட விஷயங்களையும், எழுத்தாளர்கள் பற்றிய நான் அறிந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்தத் தொடரை எழுதத் தொடங்கினேன். கற்றதும் பெற்றதுமான என் அனுபவங்களை நீங்கள் அனைவரும் ரசித்து வரவேற்று என்னை உற்சாகப்படுத்தியது என்றும் என் மனதிலிருந்து அகலாமல் பசுமையாக இருக்கும். உங்கள் ஒவ்வொருவருக்கும் மிகமிக நெகிழ்வுடன் என் இதயம் நிறைந்த நன்றி.

                                                   - நிறைவு -

Monday, August 13, 2012

நடை வண்டிகள் - 30

Posted by பால கணேஷ் Monday, August 13, 2012

                        நானும் அனுராதாரமணனும்-3

அனும்மாவின் தாத்தா அந்நாளில் பிரபலமான நாடக/திரைப்பட நடிகர். அம்மாவழிப் பாட்டியும், அப்பாவழிப் பாட்டியும் தன் பேத்தி சங்கீதம் கற்றுக் கொண்டு கச்சேரிகள் செய்ய வேண்டும் என்கிற ஆசையுடன் சங்கீத வாத்தியாரை வீட்டுக்கு வரச்செய்து சங்கீதம் கற்றுத்தர ஏற்பாடு செய்திருந்தார்கள். அரியக்குடி ஐயங்கார் வேறு அவர்கள் இருக்கும் அதே தெருவிலேயே குடியிருந்தவர். இப்படியான சங்கீத சூழ்நிலையில் வளர்ந்து சங்கீதம் படித்தவராக இருந்ததால் ராகங்கள் அனைத்தும் அவருக்கு அத்துபடி. குங்குமம் இதழில் டிசம்பர் மாதத்தில் சங்கீத விமர்சனங்கள் எழுதிவந்த ‘காமேஸ்வரி ஐயர்’ அனுராதா ரமணன் அவர்கள்தான். சகுந்தலா பாலு (பெண்கள் துப்பறியும் பாக்டரி - அவள் விகடன்), சாரதா நடராஜன் (வரம் தரும் விரதங்கள் - குங்குமம்) இப்படிப் பலபெயர் மன்னியாக எழுதிக் குவித்தவர் அனும்மா.

நான் சொல்ல வந்த விஷயம் அதில்லை. சங்கீதத்தில் நிறைய ஈடுபாடும் ஞானமும் உள்ள அவரை அந்த ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலருக்காக இளம் திரைப் பாடகர்கள் அனைவருடனும் ஒரே இடத்தில் சந்திக்க வைத்து விரிவான ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தனர். அந்த கலந்துரையாடல் முடிந்ததும் வந்திருந்த இளம் பாடகர்கள் அனைவருக்கும் சிநேகிதியாகி விட்டார் அனும்மா. தன்னுடன் பழகும் எவரையும் தன் இனிய சுபாவத்தில் நண்பர்களாக்கி விடுவதுதானே அனும்மாவின் சிறப்பம்சம்! அவருடைய தொ.பே. எண்ணை வாங்கிக் கொண்டு, அவ்வப்போது பேசி அவருடன் தொடர்பில் இருநத அந்த ‘இளம் குயில்’களை தன் பிறந்த நாள் விழாவில் பாடுவதற்கு அழைத்திருந்தார் அனும்மா.

அனும்மாவின் பிறந்த தினத்தை நினைவில் வைத்துக் கொள்வது எளிது. அவரின் பிறந்த நாளுக்கு அரசாங்க விடுமுறைகூட உண்டு. ஏனென்றால் ஆகஸ்ட் 15ம் தேதி பிறந்தவர் அவர். அனும்மா பிறந்ததினக் கொண்டாட்டத்தை கலாக்ஷேத்ரா காலனியில் ஒரு திறந்தவெளி தோட்டத்தில் ஏற்பாடு செய்திருந்தார். அதிவேகமான பீட்டில், இரைச்சலான குரலில் இன்றைய திரைப்பட சங்கீத(?)த்தைப் பாடும் அந்த இளம் கலைஞர்கள் அனைவரும் அனும்மா தேர்ந்தெடுத்துக் கொடுத்திருந்த பழைய பாடல்களைப் பாடியபடி இருந்தது ஒருபுறம் கேட்கவே ரம்மியமாக இருந்தது. ஓவியர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் என்று பலதரப்பட்ட பிரபலங்களும் வந்திருந்ததில் எனக்குப் பிடித்த பல பிரபலங்களை நான் பார்த்து ஓரிரு வார்த்தைகள் பேச முடிந்தது இரண்டாவதான கூடுதல் மகிழ்ச்சி. விழாவிற்கு வந்திருந்த பிரபலங்கள் அனைவரும் ஓரிரு வார்த்தைகள் பேசியதைக் கேட்டு மகிழ்ந்தது அன்றைய தினத்தின் மூன்றாவது மகிழ்ச்சி. விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் அவர் எழுதிய ‘உறவுகள்’ புத்தகத்தை கையெழு்த்திட்டு அவர் வழங்கியிருந்தார் என்பது நான்காவது போனஸ் மகிழ்ச்சி.

அந்தப் பிறந்ததினக் கொண்டாட்டத்தின் பின்னர் நண்பர் பி.கே.பி.யின் மகள் ஸ்வர்ண ரம்யாவின் திருமணத்தில் அனும்மாவை மீண்டும் சந்தித்தேன். அதற்குப் பின்னர் அவர் வீட்டுக்குச் சென்றிருந்த ஒரு தருணத்தில் அவரிடம் சொன்னேன். ‘‘ஒரு பத்திரிகையாசிரியர் காஞ்சி ஸ்வாமிகள் சர்ச்சை பலமாக அடிபட்ட சமயத்தில் உங்களைப் பற்றி ஒரு மோசமான கருத்துச் சொன்னார். அவர் உங்கள் பிறந்த நாளிலும், ரம்யாவின் கல்யாணத்திலும் உங்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தது எனக்கு ரொம்ப ஆச்சரியம்ங்க’’ என்றேன். பட்டென்று அந்த பத்திரிகை ஆசிரியரின் பெயரைச் சொன்னார் அனும்மா. நான் வியந்தேன். ‘‘மனுஷங்களை என்னால புரிஞ்சுக்க முடியும் கணேஷ். ஒரு பெண் தன்னந்தனியா கணவன் இல்லாம ரெண்டு பெண்களை வளர்த்து ஆளாக்கி, கல்யாணம் செஞ்சு வெக்கறான்னா இந்த சமூகம் பின்னால என்னென்ன பேசும்கறது எனக்கு நல்லாவே தெரியும். அது அவங்க இயல்பு. பேசிட்டுப் போகட்டும். நாம நல்லவிதமாவே நடந்துப்போம்’’ என்றார் அந்த பெரியமனதுக்காரி.

அதன்பிறகு வந்த காலத்தில் நான் நிறையப் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிட்டதால் அடிக்கடி அவரைப் பார்க்க முடிந்ததில்லை. எப்போதாவது சந்திக்கும் சமயங்களில் புன்னகை பூத்த முகத்துடன் அன்பாய்ப் பேசுவார். மறக்க இயலாத ஒரு தினத்தில் நான் அலுவலகம் போய்க் கொண்டிருந்த வழியில் கைபேசி ஒலித்தது. மறுமுனையில் பேசிய பாலா ஸார் அனும்மா உறவுகளையும் நட்புகளையும் விட்டு உலகை விட்டுப் பிரிந்து விட்டதாக சோகச் செய்தி சொன்னார். பதறியடித்து உடன் அவர் வீட்டுக்குச் சென்றேன். அனும்மாவைத் தெரிந்தவர்கள் ஒரு விஷயத்தை நன்கு அறிவார்கள். அவர் உடலில் எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும், வியாதிகளுடன் போராடினாலும் எப்போதும் அழுது வடியும் முகத்துடனோ, கசங்கிய சேலையுடனோ அவரைப் பார்ப்பது இயலாது. உறுத்தாத மெல்லிய மேக்கப்புடன் புன்னகை முகமாய்த்தான் எப்போதும் இருப்பார்.

அன்றைக்கு நான் கண்ணாடிப் பெட்டிக்குள் அவரைப் பார்த்தபோதும் அப்படித்தான் இருந்தார். உறங்குவது போலத்தான் இருந்ததே தவிர, அந்த உடலிலிருந்து ஜீவன் பிரிந்து விட்டது என்பதை மனம் ஏற்றுக் கொள்ள மிகவும் சிரமப்பட்டது. அவரைப் பார்த்து நான் கதறி அழுதேன் என்று சொன்னால் அது பச்சைப் பொய். பழகிப் பேசிய நாட்களும், அவரின் அன்பான புன்னகை முகமும் நினைவில் நிழலாட, அப்போதைய கோலத்தைக் கண்டதும், கண்கள் தளும்பி, இரு சொட்டு நீர் வழிந்தது என்பதே உண்மை. அவருக்கு மெளன அஞ்சலி செலுத்தி விட்டு வந்து சில வருடங்கள் கழித்து இதை நினைவுகூர்ந்து ‘டைப்’பும் போதும்கூடக் கண்கள் பனிக்கிறது எனக்கு என்பது நிஜமான நிஜம். மனதிற்கினிய அந்தத் தோழியின் புகழ் வாழி!

                                                                                       -தொடர்கிறேன்...

Monday, August 6, 2012

நடை வண்டிகள் - 29

Posted by பால கணேஷ் Monday, August 06, 2012

நானும் அனுராதாரமணனும் - 2

நான் முதன்முதலாக அனுராதா ரமணன் அவர்களைச் சந்தித்துப் பேசியது ‘மன ஊஞ்சல்’ என்னும் புத்தகம் தயாரிக்கும் சந்தர்ப்பத்தில். அந்தப் புத்தகம் வெளியானதன் பிறகு ‘அன்புடன் அந்தரங்கம்’ என்கிற பெயரில் ‘வாரமலர்’ இதழில் அனுராதா ரமணன் எழுதின கேள்வி-பதில்களைத் தொகுத்து புத்தகமாக்கலாம் என்று தங்கத் தாமரை பதிப்பகத்தார் முடிவு பண்ண, அதற்கான பணிகளை ஆரம்பித்தேன். அது மீண்டும் அனும்மாவைச் சந்திப்பதற்கான வாய்ப்பைக் கொடுத்தது.

நான் அவர் வீட்டுக்குச் சென்றதும் வழக்கம் போல் முகம் மலர வரவேற்று, காபி தந்து உபசரித்து அன்புடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வந்த ஒரு எஸ்.டி.டி. போன் கால் மூலம் அவரது இன்னொரு பரிமாணத்தை நான் அறிந்தேன். போனில் அனும்மா பேசினதை இங்கே தருகிறேன். மறுமுனையில் என்ன சொல்லியிருப்பார்கள் என்பதை நீங்களும் என்னைப் ‌போலவே யூகித்துக் கொள்ளுங்கள்.

‘‘ஹலோ... ஓ... நீயாம்மா? சொல்லும்மா! நல்லாயிருக்கியா...?’’

‘‘என்னதிது டைவர்ஸ், கிவர்ஸ்னுல்லாம் பேசிக்கிட்டு? இதோபாரு... இப்படில்லாம் பேசறதை முதல்ல நிறுத்து. மனுஷங்களால தீர்க்க முடியாத பிரச்சனைன்னு எதுவுமே கிடையாது. என்னாச்சு அப்படி...?’’

‘‘சரி... உன் மாமனாரும், அவர் தம்பியும் குடிக்கறாங்க... இதுவா உனக்குப் பிரச்சனை? உன் புருஷனுக்கு குடிப்பழக்கம் இல்லதானே...? அப்புறமென்ன? மாமனாரும், சின்ன மாமனாரும் குடிச்சா குடிச்சுட்டுப் போகட்டுமே...’’

‘‘ஓ... நடுவீட்ல வெச்சுக் குடிக்கறாங்கன்றதுதான் உனக்குப் பிடிக்கலையா? ஸ்நாக்ஸ் வேற உங்க மாமியாரே பண்ணித் தர்றாங்கன்றது எரிச்சலா இருக்குங்கற. சரிதாம்மா... ஆக்சுவலா எல்லாருக்கும் இந்தக் கோபம்தான் வரும். உன் கோபத்துல ரொம்ப நியாயம் இருக்கு. ஆனா ஒரு விஷயம் யோசிச்சுப் பாரு... உங்க மாமனாரும், சின்ன மாமனாரும் ஊர்ல மதிப்பும், மரியாதையும் இருக்கற பெரிய மனுஷங்க. ஏதோ வீக்னஸ், குடிப் பழக்கம் வந்துடுச்சு. அவங்க ரோட்ல குடிச்சு, மயங்கி விழுந்துட்டாலோ, இல்ல தடுமாறி நடந்தாலோ குடும்பத்துக்குத் தானே கெட்ட பேர். அதை நினைச்சுத்தான் இப்படி வீட்ல குடிக்கறாங்கன்னு எனக்குத் தோணுது. இப்படி நெனச்சுத்தான் உன் மாமியாரும் அவங்களுக்கு எல்லாம் பண்ணித் தர்றாங்கன்றது என் எண்ணம். அதுசரி... உன் புருஷன் குடிக்கறானா? இல்ல, உன்னை ஏதாச்சும் கொடுமை பண்றானா? ’’

‘‘அப்படியா... அவன் உன்னை உள்ளங்கைல வெச்சுத் தாங்கறானா? அவன் மேல குறை சொன்னா நாக்கு அழுகிடும்னு நீயே சொல்றதானே? ஓ... அவன் குடிக்கறதில்லையா? இதையெல்லாம் கண்ணால பாத்தும்கூட அவனுக்குக் குடிக்கற எண்ணமே தோணலைங்கறது எவ்வளவு சந்தோஷப்பட வேண்டிய விஷயம். அதை விட்டுட்டு நீ இப்படிப் பேசினா என்ன அர்த்தம்? சரிம்மா... அதான் சொன்னேனே... எல்லாத்தையும் சரி பண்ணிடலாம். இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கெல்லாம் இவ்வளவு உணர்ச்சிவசப்படக் கூடாது. போனை உன் வீட்டுக்காரர்ட்ட கொடு...’’

‘‘என்னப்பா... உன் வைஃப் பேசினதெல்லாம் கேட்டே தானே...? (மறுமுனையில் ஏதோ பதில் வர) அது சரிப்பா... உங்கப்பாவையும், சித்தப்பாவையும் உன்னால கண்டிக்க முடியாதுதான். ஒத்துக்கறேன். ஆனா நீ ஒண்ணை யோசிச்சுப் பாரு... வீட்ல ஹால்ல உக்காந்து சைட் டிஷ்ஷைக் கேட்டு வாங்கி அவங்க குடிச்சிட்டிருந்தாங்கன்னா குடும்பத்துல இருக்கற பொம்பளைங்களுக்கு கோபம் வராதா என்ன? வெளியாட்கள் யாராவது பார்‌த்தாங்கன்னா, உங்க வீட்டுப் பெண்களுக்கு என்ன மரியாதை இருக்கும்னு நீ நினைக்கற? அவங்களோட உணர்வுகளுக்கும் மதிப்புத் தரணுமில்ல... நீ ஒண்ணு பண்ணுப்பா... உங்கப்பாட்டயும், சித்தப்பாட்டயும் பேசி, அவங்களை வீட்டு மொட்டை மாடிக்குப் போய் குடிச்சுட்டு அங்கயே தூங்கச் சொல்லிடு...’’

‘‘என்ன... தனியா ரூமே கட்டிடறேங்கறியா மொட்டை மாடில? நல்லதுப்பா... இப்படிப் பேசி ஏற்பாடு பண்ணிட்டேன்னா, அவங்களுக்கும் பிரச்சனையில்ல.. உங்களுக்கும் நிம்மதி. உன்‌ பொண்டாட்டியைப் பத்தியும் யோசிக்கணும் நீ. அவளும் பாவம் இல்லையா? உன்னை நம்பித்தானே தன் குடும்பத்தையும், மனுஷங்களையும் விட்டுட்டு வந்து வாழறா... முதல்ல இதைக் கவனிச்சு சரி பண்ணிடுப்பா... போனை அவ கிட்டக் கொடு...’’

‘‘அம்மா ..........., அவன்கிட்ட தெளிவாப் பேசிட்டேன். இந்தப் பிரச்சனையை சீக்கிரத்துல சரி பண்ணிடறேன்னுட்டான். அதனால அவசரப்பட்டு யோசிச்சு எந்த தப்பான முடிவையும் எடுக்கக் கூடாது நீ. நல்லவனா ஒரு புருஷன் கிடைச்சிருக்காம்மா உனக்கு. அவனை அவசரப்பட்டு முடிவெடுத்து நீ தொலைச்சிடக் கூடாது, என்ன..? நீ வேணாப் பாரேன்... அடுத்த தடவை போன் பண்றப்ப, சந்தோஷத்தோட பேசுவே நீ என்கிட்ட. சரியா... ரைட், வெச்சிடறேன்’’

-இப்படிப் பேசிவிட்டு போனை வைத்தார். உரையாடல் என் நினைவிலிருந்தவரை தந்திருக்கிறேன். ஆனால் நான் எழுதியதை விடவும் இன்னும் விரிவாக, கனிவாக, அன்பாக நீண்டநேரம் பேசினார். போனை வைத்துவிட்டு என்னிடம் சொன்னார்: ‘‘அன்புடன் அந்தரங்கம் பகுதியை நான் எழுத ஆரம்பிச்சதுக்கப்பறம் இப்படி போன் கால்கள்லயும், நேர்லயும் வந்து நிறையப் பேர் தங்களோட பிரச்சனையைச் சொல்றாங்க கணேஷ். நானும் என்னால் முடிஞ்ச அளவுக்கு எல்லாருக்கும் கவுன்சலிங் பண்ணிக்கிட்டிருக்கேன்’’ என்று அது என்னவோ சாதாரண விஷயம் ‌போல என்னிடம் சொன்னார்.

அவர் கல்கியில் எழுதிய ‘நெருப்பாக நீ’ என்கிற தொடர்கதை கல்லூரி நாட்களில் நான் விரும்பிப் படித்து வந்தது. பாதிக்கு மேல் படிக்க இயலாதபடி குடும்ப சூழ்நிலைகள் அமைந்து விட்டன. அந்த புத்தகத்தை அவரிடம் கேட்டபோது, ‘‘அதை ஓவியம்னு வானதில போட்டாங்க. இப்ப புத்தகம் என்கிட்ட இல்ல. அதுக்கு ரீ பிரிண்ட் போடவும் இல்லை. எங்கயாவது கிடைச்சா வாங்கிடுங்க. அதை ரீ பப்ளிஷ் பண்ண ஏற்பாடு பண்றேன்’’ என்றார். ஏமாற்றமாக இருந்தது எனக்கு. (அதிர்ஷ்டவசமாக அந்த புத்தகம் பின்னாட்களில் பழைய புத்தகக் கடை ஒன்றில் கிடைத்தது. அதை வாங்கி படித்துவிட்டு அனும்மாவிடம் கொடுத்துவிட்டேன் என்பது வேறு விஷயம்.)

அவரிடம் விடைபெற்றுப் புறப்படத் தயாரானபோது பதினைந்து தினங்களில் அவரது பிறந்த நாள் வருவதைச் சொல்லி, என் அட்வான்ஸ் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டு, பிறந்த நாள் விழா கொண்டாட அந்த ஆண்டு திட்டமிட்டிருப்பதாகச் சொல்லி அழைப்பிதழ் கொடுத்தார். அனும்மா பற்றி பின்னர் நான் தெரிந்து கொண்ட தகவல்களையும், அந்தப் பிறந்த நாள் விழாவுக்குச் சென்றதையும் பற்றி.....

                                                                                                             -தொடர்கிறேன்...

Monday, July 30, 2012

நடைவண்டிகள் - 28

Posted by பால கணேஷ் Monday, July 30, 2012
                     
                             கடுகு அவர்களும் நானும் - 6

அதன்பின் சில மாதங்களில் கடுகு ஸார் நீலாங்கரைக்கு குடிபெயர்ந்து சென்று விட்டார். தொலைவு சற்று அதிகமாக இருந்தால் என்ன...? மனதிற்குப் பிடித்தமானவர்களாயிருந்தால் அது குறைவாகத்தானே தெரியும். அதனால் இப்போதும் இயன்றபோதெல்லாம் சென்று சந்தித்தக் கொண்டுதான் இருக்கிறேன். எனக்கு வரமாய்க் கிடைத்த நட்புகளில் முக்கியமானவரான அவரும், என் எழுத்துக்கு ஊக்கம் தரும் நண்பராக அவரும் என்னுடனேயே தொடர்ந்து இருக்கிறார்.

                              அனுராதாரமணனும் நானும்-1

நான் மிகக் குறுகிய காலம்தான் இவருடன் பழகியிருக்கிறேன். ஆனாலும் நீண்டகாலம் பழகியதைப் போன்றதொரு உணர்வு. அத்தனை இனிமையாகப் பழகக் கூடியவர் அனும்மா என்று அன்புடன் அழைக்கப்பட்ட அனுராதா ரமணன் அவர்கள். இவரின் கதைகள் ஒரு சிலவற்றைப் படித்ததுண்டு. தீவிர வாசகன் என்று சொல்லும் அளவுக்கு இல்லாவிட்டாலும் இவரின் எழுத்துக்கள் எனக்கு நன்கு பரிச்சயமானவையே. நான் சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டுச் சந்தி்த்த எழுத்தாளர்கள் பலர் என்பதைச் சொல்லி வந்திருக்கிறேன். சற்றும் திட்டமிடாமலேயே எனக்குக் கிடைத்த நல்லறிமுகம் அனும்மா.

தங்கத்தாமரை பதிப்பகம் சார்பில் அனுராதா ரமணனின் இரண்டு நூல்களை உடன் வெளியிட இருப்பதாகக் கூறி பாலா ஸார் அவற்றை டைப் செய்து வரும்படி சொன்னார். அந்த புத்தகங்களை டைப் செய்து டிசைன செய்தபின் வந்த ஒருநாளில் அந்தப் புத்தகத்தில் பிழை திருத்தத்தை அனும்மாவே செய்து வைத்திருப்பதாகவும், டிசைன் செய்த நபரை (என்னை) சந்திக்க அவர் விரும்புவதாகவும் பாலா ஸார் சொல்லி, அனும்மாவின் வீட்டிற்கு வழி சொல்லி அனுப்பினார். பாலா ஸார் எவ்வளவு அழகாக குழப்பமின்றி வழி சொல்வார் என்பதை முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். அதனால் மிக எளிதாக அனும்மாவின் வீட்டை அடைந்தேன்.

வீட்டின் வரவேற்பறையிலேயே ஒரு பெரிய புலி கண்களை விழித்தபடி நின்று பயமுறுத்தியது. அருகில் சென்று பார்த்தபின்தான் அது பொம்மைப் புலி என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அனும்மா என்னை வரவேற்று அமரச் சொன்னார். என்னைப் பற்றி ஒரு சின்ன சுய அறிமுகம் செய்து கொண்டேன். ‘‘நான் உங்க கதைகளோட தீவிர விசிறின்னு என்னை சொல்லிக்கிட்டேன்னா அது பொய். உங்க கதைகளைப் படிச்சதேயில்லைன்னு சொன்னா அதுவும் பொய். ஒருசில கதைகளைப் படிச்சிருக்கேன்’’ என்று அவரிடம் சொன்ன நான், படித்து ரசித்த சில கதைகளைச் சொன்னேன். குறிப்பாக மாலைமதியில் அவர் எழுதிய இரண்டு நாவல்கள்! அந்தக் கதைகளில் அவர் அந்தாதி பாணியைக் கையாண்டிருப்பார். ஒரு அத்தியாயத்தின் இறுதி வரியே அடுத்த அத்தியாயத்தின் ஆரம்ப வரியாக அமையும். அதைப் பற்றிக் குறிப்பிட்டுப் பாராட்டினேன். ‘‘இந்த மாதிரி புதுசு புதுசா ஏதாவது யோசிச்சு ட்ரை பண்றதுதான் நம்மைப் புதுப்பிச்சுக்க உதவுது கணேஷ்’’ என்றார்.

அவரின் கையால் தயாரித்த காபியைக் கொடுத்து உபசரித்தார். புத்தகத்தை நான் வடிவமைத்திருந்த விதத்தைப் பாராட்டினார். மிகமிக மகிழ்ந்தேன் நான். என் வழக்கம்போல அவருடைய புத்தகம் ஒன்றில் கையெததிட்டுத் தரும்படி வேண்டுகோள் வைத்தேன். ‘மீண்டும் மீண்டும் உற்சாகமாய்’ என்கிற அவருடைய புத்தகத்தை நல்வாழ்த்துக்களுடன் கையொப்பமிட்டு எனக்குத தந்தார்.

 நீங்கள் படித்ததில்லை என்றால் அந்தப் புத்தகத்தை தேடிப்பிடித்துப் படித்து விடுங்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில் தன்னுடைய ஆஸ்பத்திரி அனுபவங்களை மெலிதான நகைச்சுவையுடன் ரசிக்கும்படி எழுதியிருப்பார். தான் பட்ட அவஸ்தையைக் கூட நகைச்சுவை கலந்து சொல்ல முடியும் என்பதற்கு எனக்கு இன்ஸ்பிரேஷன் அவர்தான். எத்தனை வேதனைகளைச் சந்தித்து. பல வியாதிகளை தன்னுள் கொண்ட உடலுடன் அவர் உற்சாகமாக வளைய வந்தது இன்றும் எனக்கு வியப்புதான்.

அதன்பின் அவர் எழுதத் தொடங்கிய காலகட்டம் பற்றிக் கூறினார். அவர் டைரி எழுதி வைத்திருந்ததைக் காட்டினார். டைரியின் பக்கங்களை அழகான கையெழுத்தில் சின்னச் சின்ன ஓவியங்கள் வரைந்து பத்திரிகை படிப்பது போல அவர் அமைத்திருந்தது ஆச்சரியம் தந்தது எனக்கு.

அதைப் பற்றிக் கேட்டபோது ஓவியக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர் என்றார். ஒருமுறை ஓவியக் கல்லூரி பரீட்சை சமயத்தில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட. இடது கையால் ஓவியம் வரைந்து பழகி தேர்வில் தேறியதை விளக்கமாகச் சொல்லி வியப்பை அளித்தார் எனக்கு.

இப்படி சற்று நேரம் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்துவிட்டு மனமேயின்றி விடைபெற்றுச் சென்றேன். அடுத்ததாக அவருடைய பிறந்ததின விழாக் கொண்டாட்டத்தின் போது இரண்டாவதாக சந்தித்தேன். மூன்றாவது சந்திப்பில் அவரது இன்னொரு பரிமாணத்தைக் கண்டு அதிசயிக்கும் வாய்ப்புக் கிட்டியது. அடுத்தடுத்த அந்தச் சந்திப்புகளைப் பற்றி விரிவாக...

                                                                           -தொடர்கிறேன்...

Monday, July 23, 2012

நடைவண்டிகள் - 27

Posted by பால கணேஷ் Monday, July 23, 2012

கடுகு அவர்களும் நானும் - 5

நான் வாகனம் வாங்கிய பிறகு அவரை சென்று சந்தித்து பேசிக் கொண்டிருந்த சமயம் அவரும் கமலா அம்மாவும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை புத்தகமாக்குவதற்கான பணிகளைச் செய்து கொண்டிருந்தனர். கடுகு தம்பதிகளுக்கு நாலாயிரம் பாடல்களின் மேல் வெகுநாட்களாகக் காதல் உண்டு. நாலாயிரம் பாடல்களை பதம் பிரித்து படிப்பதற்கு எளிதாக, புரிந்து கொள்வதற்கு இலகுவாக இருக்கும் வகையில் டைப்செட் செய்து அவரே வடிவமைத்துக் கொண்டிருந்தார். அந்தப் புத்தகம் தொடர்பாக அவர் எடுத்திருந்த முடிவுகளைச் ‌சொன்னதுதான் வியப்படைய வைத்தது.

அவர் செய்திருந்த தீர்மானங்கள்: 1) எழுத்துக்கள் படிக்கும் வண்ணம் 13 பாயிண்டிற்கு குறையாமல் இருக்க வேண்டும். 2) பாசுரங்களை பதம் பிரித்துப் போட வேண்டும். 3) எவ்வளவு செலவானாலும் புத்தகத்தின் விலை ரூ.100க்கு மேல் வைக்கக் கூடாது ஆகியவைதான் அது. நாலாயிரத்தை 13 பாயிண்ட்களில் பிரிண்ட் செய்தால் இரண்டு புத்தகங்களும் சேர்த்து 800 பக்கங்களுக்கு மேல் வருமே, அதை எப்படி இந்த விலையில் தர முடியும் என்பதுதான் என் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அதைச் செய்து காட்டினார் அவர். இதுபற்றி விரிவாக அறிய விரும்புபவர்கள் அவரே எழுதிய இந்தப் பதிவைப் படிக்கவும். நெகிழ்ச்சியான பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

அந்தப் புத்தகம் வெளிவந்து விற்பனையாகிக் கொண்டிருந்த சமயத்தில் எழுத்தாளர்கள் சுபா நடத்தி வரும் ‘தங்கத்தாமரை’ பதிப்பகத்தில் நாலாயிரம் புத்தகத்தை கடுகு ஸாரிடம் கேட்டு வாங்கி வெளியிட்டார்கள். அந்த இரண்டு புத்தகங்களின் அட்டையையும் வடிவமைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. (நந்தினி பதிப்பகம் சார்பில் வெளியிட்ட புத்தகத்திற்கு அட்டை டூ அட்டை டிசைனர் கடுகு ஸார்தான்). புத்தகத்தின் பக்கங்கள் அதிகம் என்பதாலும், கடின அட்டையில் அச்சிடுவதாலும் ஸிங்கிள் கலரில் அட்டை அச்சிடுவதாக தீர்மானம். ஆனால் அது குறையாகத் தெரியாத வண்ணம் வடிவமைக்க வேண்டியிருந்தது. பொறுமையாக டிசைன் செய்து, பிரிண்ட் ஆகி வந்தவுடன் பார்க்க நன்றாகவே இருந்தது.

‘தங்கத்தாமரை’ வெளியிட்ட இந்த ‘நாலாயிரம்’ புத்தகத்தை புத்தகக் கண்காட்சியில் வாங்கிப் படித்த மாஸ்டர் சுஜாதா, ‘குங்குமம்’ இதழில் தான் எழுதிவந்த கேள்வி-பதில் பகுதியில் ‘‘புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய ஒரே ரத்தினம் நாலாயிர திவ்யப் பிரபந்தம் புத்தகம்தான். ‘தங்கத் தாமரை பதிப்பகம்’ என்ற பெயரில் எழுத்தாளர்கள் சுபா இந்தப் புத்தகத்தை எழுத்தாளர் கடுகு உதவியுடன் அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார்கள்.’’ என்று எழுதியிருந்தார். வாத்தியார் இப்படி எழுதியவுடன் இதை விசாரித்து நிறைய போன்கால்கள் வந்ததாக சுபாவைச் சந்தித்தபோது சொன்னார்கள். சுஜாதா என்ற மகா எழுத்தாளரின் எழுத்து வீச்சை நான் உணர்ந்த சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று. இந்த இரண்டு புத்தகங்களையும் அவர் மேஜையி்ல் எப்போதும் வைத்திருப்பார் எனறு சுஜாதாவின் தீவிர விசிறியான திரு.சுஜாதா தேசிகன் கடுகு அவர்களிடம் சொன்னதாக நாலாயிரம் பற்றிய கட்டுரையில் கடுகு ஸார் குறிப்பிட்டிருக்கிறார்.

சமீபத்தில் கடுகு ஸாரின் 80வது கல்யாணம்... மன்னிக்கவும், 80ம் கல்யாணம் நடந்தபோது மீண்டும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை பிரசுரித்து விழாவுக்கு வந்த அனைவருக்கும் நினைவுப் பரிசாக வழங்கினார் கடுகு ஸார். அதைத் தவிர ‘கமலாவும் நானும்’ என்ற தலைப்பில் இணையத்தில் அவர் எழுதிய கட்டுரைகளையும், பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளையும் தொகுத்து மற்றொரு புத்தகமும் இணைத்து இரட்டைப் பரிசாக அளித்தார்.

ஹிந்து நாளிதழிலும், ‘அடையார் டைம்ஸ்’ பத்திரிகையிலும் இந்த விழா நிகழ்வுகளை அழகாக வெளியிட்டிருந்தார்கள். அவற்றை கடுகு ஸார் அவரின் தளத்தில் வெளியிடவில்லை. ‘நம்மைப் பத்தி நாமே வெளியிடறதா?’ என்கிற தன்னடக்கம்தான காரணம். நல்லவேளையாக... அவர் என்னை அடக்கவி்ல்லையாதலால், ‘அடையார் டைம்ஸ்’ வெளியிட்ட செய்தியை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
அதன்பின் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் கடுகு ஸாரின் வீட்டுக்குச் சென்று சந்திப்பேன். உரையாடுவேன்; கற்றுக் கொள்வேன். ‘ரொட்டி ஒலி’ என்ற புத்தகத்தின் அட்டைப்படத்தை அவருடன் சேர்ந்து வடிவமைத்து மகிழ்ந்தேன். இப்படியான ஒரு சந்திப்பின் போது அவர் நீலாங்கரையில் அபார்ட்மெண்ட் வேலைகள் பூர்த்தியடைந்து விட்டன என்றும், விரைவில் அங்கே குடி போய் விடுவார்கள் என்பதையும் தெரிவித்தார்.  நீலாங்கரை என்கிற பகுதி சற்றே அவுட்டரில் இருப்பதால் இப்போது போல நினைத்த போதெல்லாம் எளிதாகச் சென்று பார்த்துவிட முடியாதே என்று ஒரு கவலை எனக்குள்.
-தொடர்கிறேன்...

Saturday, July 14, 2012

நடை வண்டிகள் - 26

Posted by பால கணேஷ் Saturday, July 14, 2012

கடுகு அவர்களும் நானும் - 4 

நான் விடைபெற்றுக் கிளம்பும் நேரத்தில் கடுகு ஸார் கேட்டார்: ‘‘ஒவ்வொரு இடத்துக்கும் பஸ் பிடிச்சு, ட்ராபிக் ஜாம்ல மாட்டி... கஷ்டப்பட்டுப் போகறதுக்குப் பதிலா நீங்க ஒரு டூ வீலர் வாங்கிக்கிட்டா என்ன?’’

‘‘எனக்கு அந்த அளவுக்கு வசதியில்ல ஸார்...’’ என்றேன். சற்றும் தயக்கமின்றி உடனே பதில் வந்தது அவரிடமிருந்து: ‘‘நம்ம ஏரியாவுல ராம்கே ஏஜென்ஸி இருக்குல்ல.. அங்க போய் உங்களுக்குப் பிடிச்ச மாடல் வண்டி எதுன்னு பாத்துட்டு கொட்டேஷன் வாங்கிட்டு வாங்க. அதுக்கான மொத்தப் பணத்தையும் நான் கொடுத்துடறேன். உங்ககிட்டருந்து அந்தத் தொகையை நான் மெதுவா வாங்கிக்கறேன்...’’

நான் வியப்பு, அதிர்‌ச்சி, ஆச்சர்யம் ஆகியவற்றின் கவலையான உணர்ச்சிகளுடன் அவரை ஏறிட்டேன். ‘கடுகு ஸாரின் பேச்சிலேயே இயல்பான நகைச்சுவை இருக்குமே... அந்த வரிசையில் ஒன்றாக ஜோக் அடிக்கிறாரா, இல்லை சீரியஸாகத்தான் சொல்கிறாரா’ என்கிற சந்தேகம் எனக்கு. அவர் முகபாவம் அவர் ‌சொன்னது நிஜம்தான் என்பதை உணர்த்தியது எனக்கு.

 ‘‘ஸார்... வாகனம் வாங்கறதுங்கறது பெரிய தொகை. சென்னை ட்ராபிக்ல போயிட்டு வர்றதுக்கு டிவி‌எஸ் சூப்பர் எக்ஸ்எல் மாதிரி சின்ன வண்டிதான் லாயக்கு. அதை என்னிக்காவது ஒரு நாள் வாங்கிடணும்னு நான் ஏற்கனவே முடிவு செஞ்சு வெச்சுட்டேன். ஆனா, எனக்கு வர்ற வருமானத்துல ஐநூறு ஆயிரம் மிஞ்சறதே பெரிய விஷயம். நான் எப்படி உங்களுக்குப் பணம் தர முடியும்? இதெல்லாம் ஆகற காரியமில்லை ஸார்...’’

‘‘அதெல்லாம் ஒண்ணும் பேசாதீங்க. உங்களுக்கு ஐநூறு கிடைக்கறப்ப ஐநூறை கொடுங்க. ஆயிரம் கிடைக்கறப்ப ஆயிரம் கொடுங்க. 200 கிடைச்சா 200 கொடுங்க. மெதுவா பதட்டமில்லாம தரலாம் நீங்க. உடனே போய் நான் சொன்னபடி பாத்துட்டு வாங்க...’’ என்றார். போனேன். நான் நினைத்த அந்த வாகனத்தின் அன்றைய விலை (2006ல்) 23 ஆயிரத்தில் இருந்தது. அதன் கொட்டேஷனுடன் வந்தேன். உடனே செக் எழுதிக் கொடுத்தார். உற்சாகமாய்ச் சென்று உடனே வாகனத்தை புக் செய்தேன்.

அந்த வாகனம் பத்து நாட்களின் பின்னால் என் கையில் கிடைத்தபோது அடைந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் என்றும் மறக்க இயலாது. வாகனத்தை பூஜை போட்டதும் எடுத்துக் ‌கொண்டு அவரின் இல்லத்திற்கு விரைந்தேன். புதிய வாகனத்தைக் காட்டினேன். பார்த்து மகிழ்ந்தார். ஆசி பெற்றேன்.

 நான் அந்த வாகனத்திற்கான தொகையை உண்மையிலேயே அவர் சொன்ன மாதிரிதான் எனக்குப் பணம் கிடைத்த போதெல்லாம் 300, 500 என்றெல்லாம் பிய்த்துப் பிய்த்து வருடக் கணக்காகத் தந்தேன். மிகப் பொறுமையாக பெற்றுக் கொண்டார். இடையில் நான் கோர்ட்டுக்கும் வீட்டுக்குமாக அலைந்த காலங்களிலும் அந்தப் பிரச்னையிலிருந்து விடுபட்ட பின்பும் கூட கையில் பணம் இல்லாமல் ஜீரோவாக இருந்தேன். அச்சமயங்களில் எதுவும் தரவில்லை. ஆனாலும் அவர் என்னை எதுவும் கேட்டதுவோ, விரைவுபடுத்தியதோ இல்லை. அத்தகைய பெருந்தன்மையாளர் அவர். ஒரு விபத்தையும் ஏற்படுத்தாத, ராசியான அந்த வாகனத்தைத் தான் இன்றுவரை நான் பயன்படுத்தி வருகிறேன்.

புதிய வாகனத்துடன் நான் ‘சுபா’வின் இல்லம் சென்று விவரம் ‌சொன்னதும் வியந்து போனார்கள் நண்பர்கள். பாலா ஸார் உடனே போன் செய்து கடுகு ஸாரைப் பாராட்டினார். என்னிடம், ‘‘எங்க மூலமா அறிமுகமாகியிருக்கீங்கன்ற நம்பிக்கைலதான் கடுகு ஸார் இதைச் செஞ்சிருக்கார். அதனால அவர் சொன்னபடி முடியறப்பல்லாம் பணம் கொடுத்துடுங்க. வாகனம் கைல வந்துட்டா, நம்ம கைத் திருகல்ல அது பறக்குதுங்கற உணர்ச்சில எல்லாரும் ஓவர் ஸ்பீடாப் போவாங்க... அதை மட்டும் செய்யாதீங்க. நிதானம்தான் நல்லது’’ என்று சாலையில் செல்வதற்கு எனக்கு உபயோகமான பல டிப்ஸ்களை அவர் அனுபவத்திலிருந்து சொன்னார்.

அதைத் தவிர இன்னொன்றும் செய்திருக்கிறார் பாலா. நான் கிளம்பிப் போனதும், மீண்டும் கடுகு ஸாருக்கு போன் செய்து, ‘‘கணேஷ் தன்னால முடியறப்பல்லாம் கரெக்டா பணம் குடுத்துடுவார். ஸப்போஸ்... ஏதாவது சந்தர்ப்ப சூழ்நிலையால அவரால தர முடியாமப் போச்சுன்னா, கவலைப்படாதீங்க. எனக்கு ஒரு வார்த்தை சொல்லுங்க. அந்தத் தொகைக்கு நான் செக் கொடுத்துடறேன் உங்களுக்கு’’ என்று சொல்லியிருக்கிறார். ‘‘அதுக்கெல்லாம் தேவையிருக்காது பாலா’’ என்று சொன்ன கடுகு ஸார் இந்த விஷயத்தைப் பற்றி என்னிடம் மூச்சு விடாமல் இருந்து விட்டு, சென்ற ஆண்டில் ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும் போதுதான் சொன்னார். இந்த மூன்று எழுத்தாள நண்பர்களின் அன்பையும் எண்ணி வியந்தும் நெகிழ்ந்தும் போனேன் நான்.

-இந்த ‘நடைவண்டிகள்’ தொடரில் இதுவரை நான் எழுதியவற்றைத் தொடர்ந்து படித்துவரும் நண்பர்கள் என்னை நேரில் சந்திக்கையில் சொல்லுவது- ‘‘எப்படி இத்தனை பெரிய மனிதர்களின் நட்பு கிடைச்சு பழக முடிகிறது? கொடுத்து வைத்தவர் நீங்கள்’’ என்பதுதான். ஆம். நான் பழகியவர்கள் உண்மையில் பெரிய ‘மனிதர்கள்’தான்! ஆனால் நான் பெரிய மனிதர்களுடன் பழகும் வாய்ப்புப் பெற்ற ஒரு சாதாரணன் என்பதே உண்மை. ஏதோ இறையருளால் இத்தகைய நல்ல நட்புகள் கிடைக்க ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.

இப்போதும்கூட வலையில் எழுதத் தொடங்கியதன் விளைவாக பல நல்ல நட்புகள் கிடைக்கப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். அவர்களால் பல இனிய அனுபவங்கள் என் கணக்கி்ல சேர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. யார் கண்டது...? சில வருடங்கள் கழித்து, ‘நடைவண்டிகள்- பாகம் 2’ ஆக வலையுலகில் எழுதியதால் எனக்குக் கிடைத்த நண்பர்கள் பற்றி எழுதுவேனோ என்னவோ...

                                                                         -தொடர்கிறேன்...

Tuesday, July 10, 2012

நடை வண்டிகள் - 25

Posted by பால கணேஷ் Tuesday, July 10, 2012

கடுகு அவர்களும் நானும்-3

கடுகு ஸாரை நான் சந்தித்து விட்டு வந்தபின் சில நாட்கள் நான் பார்த்தவந்த வேலை என்னைச் சாப்பிட்டது. அதனால் தொடர்பு கொள்ள இயலவில்லை. ஒருநாள் அவரே அலைபேசியில் அழைத்தார். ‘‘ப்ரீயா இருக்கீங்களா? வர முடியுமா?’’ என்று கேட்டார்.  நான் ப்ரீயாகத்தான் இருந்தேன். உடனே வருகிறேன் என்று கூறி புறப்பட்டுச் சென்றேன்.

அச்சமயத்தில் என்னிடம் இருசக்கர வாகனம் எதுவும் இல்லாததால் சென்னையில் எங்கு செல்வதென்றாலும் பேருந்துகள்தான். எனவே சற்றுத் தாமதமாகவே அவரின் வீட்டைச் சென்றடைந்தேன். ‘‘என்னாச்சு... ஏன் நீங்க வர்றதுக்கு இவ்வளவு நேரமாச்சு?’’ என்று கேட்டார். நான் ட்ராபிக் ஜாமின் காரணமாக பேருந்து லேட்டாக வந்தது என்றேன். ‘‘நான் எழுதின சில கதைகளும், கட்டுரைகளும் இதில இருக்கு. இதை டைப் பண்ணித் தரணும் கணேஷ்’’ என்று எனக்காக எடுத்து வைத்திருந்ததைக் கொடுத்தார். உடன் செய்வதாகக் கூறி பெற்றுக் கொண்டேன்.

அதன்பின் ‌மற்ற விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தோம். கணிப்பொறியில் பயன்படுத்துகிற தமிழ் ஃபாண்ட்கள் பற்றிப் பேச்சு வந்த போது கடுகு ஸார் சொன்னார். ‘‘நானே நிறைய ஃபாண்ட்ஸ் உருவாக்கியிருக்கேன், தெரியுமா?’’ என்றார்.

‘‘ஃபாண்ட்‌ஸை... உருவாக்கறதா..? எப்படி ஸார்?’’ என்றேன் வியப்புடன்.

‘‘Fontographer அப்படின்னு அதுக்கு ஒரு software இருக்கு. அதை நான் டில்லியில இருந்தப்பவே வாங்கினேன். அதைக் கத்துக்கிட்டு அதன் மூலமா ஃபாண்ட்ஸ் க்ரியேட் பண்ணலாம்’’ என்றார். அவர் உருவாக்கியிருந்த ‘ஆனந்தி’ என்ற புதிய, எளிய தமிழ் மென்பொருளின் குறுவட்டும், விளக்கப் புத்தகமும் இணைந்த பேக்கை எனக்குத் தந்தார். எம்.எஸ்.வேர்டில் டைப் செய்து, அங்கிருந்து காப்பி செய்து மற்ற சாப்ட்வேர்களில் பயன்படுத்தும் வண்ணம் அது உருவாக்கப்பட்டிருந்தது. அதை எனக்கு இயக்கிக் காட்டினார்.

தமிழில் எழுத்துக்களை டைப் செய்யும் போது கி என்பதில் க மற்றும் சுழி என இரண்டு ஸிலபிளாக எடுத்துக் கொள்ளும். க் என்பதும் அவ்விதமே க மற்றும் புள்ளி என்று இரண்டு. கடுகு ஸாரின் ஆனந்தியில் டைப் செய்துவிட்டு, மேலே இருக்கும் அவர் படத்தை (மேக்ரோவை) அழுத்தினால், இரண்டு ஸிலபிள்களாக இல்லாமல் இணைந்து ஒன்றாகி விடும். அப்படி அவர் டிஸைன் செய்திருந்த விதத்தைக் கண்டு வியந்து போனேன். அவர் தந்த அந்த சாப்ட்வேரை நான் பயன்படுத்தினேன்.

அவர் உருவாக்கியிருந்த ஃபாண்ட்களின் பெயர்களைப் பாருங்கள்: குந்தவி, வந்தியத்தேவன், கரிகாலன், தாரிணி. அவரின் பதிப்பகத்தின் பெயரோ நந்தினி. இவற்றையெல்லாம் பார்த்ததும் நினைத்திருப்பீர்கள் கடுகு ஸார் கல்கியின் அபிமானி என்று. அது உண்மையல்ல...

அவர் கல்கி அவர்களின் தீவிர பக்தர் என்பதே சரி. நந்தினி பதிப்பகத்தில் அவர் வெளியிட்ட ஆனந்தி சாப்ட்வேர், மற்ற புத்தகங்கள் அனைத்தையுமே ‘கல்கி அவர்களின் பொற்பாத கமலங்களில் சமர்ப்பிக்கிறேன்’ என்ற வரிகள் இல்லாமல் வெளியிட மாட்டார். கல்கி அவர்களைச் சந்தித்ததையும், உரையாடியதையும் இப்போது கேட்டாலும் நேற்று நடந்தது போல் விரிவாகச் சொல்வார் அவர். (‘கமலாவும் நானும்’ என்ற அவரின் புத்தகத்தில் ‘கல்கியும் நானும்’ என்று தனிக் கட்டுரையாக அதை எழுதியிருக்கிறார். படித்துக் கொல்ல... ஸாரி, கொள்ளவும்)

கணிப்பொறியில் அவர் சேகரித்து வைத்திருந்த நிறைய போட்டோஷாப் ப்ரஷ் மற்றும் ஆக்ஷன் டூல்களை இயக்கிக் காட்டியபோது அவரின் கணிப்பொறி ஆர்வம் கண்டு வியந்து போனேன். அவருடைய ப்ரஷ் தொகுப்பு எனக்கு டிசைனிங்குக்குப் பயன்படும் என்பதால் ஒரு சிடியில் காப்பி செய்து எடுத்துக் கொண்டேன். ‘‘இதென்ன பெரிசு... டிடிபிக்கு யூஸ் பண்ற க்ளிப் ஆர்ட்ஸ் தொகுப்பு 14 சிடி இருக்கும்... டெல்லியில இருந்தப்ப என்கிட்ட இருந்துச்சு. அதை வரவழைக்கறேன். அடுத்த தடவை வர்றப்ப ஞாபகப்படுத்துங்க தர்றேன்...’’ என்றார். நான் கிளம்பத் தயாரானபோது, ‘‘முடியறப்போ டைப் பண்ணிட்டு வாங்க. ஒண்ணும் அவசரமில்லை’’ என்றார்.

டைப் பண்ணுகிற சாக்கில் அவருடைய எழுத்துக்களில் படித்ததை மீண்டும் படித்து ரசிக்கவும், படிக்காததை புதிதாய் ருசிக்கவும் கிடைத்த வாய்ப்பு அல்லவா...? எனவே அவர் கொடுத்த மேட்டர்களை ஆர்வமாகப் படித்து, அடித்து விரைவில் முடித்து விட்டேன். முடித்து விட்டு அவருக்கு போன் பண்ணி, வீட்டில் இருப்பாரா, வரலாமா என்பதைக் கேட்டுக் கொண்டு அவற்றைக் கொடுக்கச் சென்றேன். நான் கொடுத்த மேட்டர்களை கணிப்பொறியில் காப்பி செய்து விட்டு, ‘ஐயோ பாவம் சுண்டு’ புத்தகம் தயாராகி வந்திருந்ததைக் கொடுத்தார்.

கூடவே அந்த 14 க்ளிப் ஆர்ட் சிடிக்களையும்! அவற்றை நான் பிரதி எடுத்துக் கொண்டு பின்னொரு நாளில் அவரிடம் கொடுத்து விட்டேன். அந்த 14 சிடிக்களிலும் இருந்தவை க்ளிப் ஆர்ட் பொக்கிஷங்கள்! அவற்றை முழுமையாக நான் இன்னும் பயன்படுத்தி விடவில்லை என்பதும் இன்றுவரை பக்க வடிவமைப்புக்கு எனக்கு அவை துணை நிற்கின்றன என்பதும் நிஜமான நிஜம்.

அகஸ்தியன் மற்றும் கடுகு ஆகிய இரண்டு புனைபெயர்களுக்கான காரணம் கேட்டபோது விரிவாகச் சொன்னார். ‘கமலாவும் நானும்’ புத்தகத்தில் அதை விரிவாக எழுதியிருக்கிறார். அதன் சுருக்: ‘‘குமுதம் இதழில் என் கட்டுரைகளும, துணுக்குகளும் நிறைய வந்து கொண்டிருந்தன. பின்னர் சாவி ஸார் தினமணி கதிரில் ஆசிரியர் பொறுப்பேற்றதும் முன்பின் அறிமுகமில்லாத எனக்குக் கடிதம் எழுதி கதிருக்கு ஏதாவது எழுத வேண்டும் என்று சொன்னார். கதிரில் கதை எழுதலாம் என்று நினைத்தேன். அதாவது எனக்குக் கதை எழுத வரும் என்று நானே தீர்மானித்துக் கொண்டேன். அதுவும் நகைச்சுவைக் கதைகள். ‘அகஸ்தியன்’ என்ற புனைபெயரைச் சூட்டிக் கொண்டு ஒரு பஞ்சு கதை எழுதி அனுப்பினேன்.’’

 இப்படி அகஸ்தியனாக அவதாரமெடுத்த கடுகு ஸார், சில நாட்களிலேயே எஸ்.ஏ.பி. அவர்களைச் சந்தித்தபோது தானே அகஸ்தியன் என்பதைச் சொல்லி அவரின் வாழ்த்துக்களைப் பெற்றிருக்கிறார்.

இப்படி இன்னும் நிறைய விஷயங்களை நேரம் போவதே ‌தெரியாமல் பேசிக் கொண்டிருந்து விட்டு விடைபெறும் சமயத்தில் அவர் என்னிடம் ஒரு வார்த்தை சொன்னார். நான் அதிர்ச்சி, வியப்பு, ஆச்சரியம் ஆகிய உணர்ச்சிகளின் கலவையாக அவரைப் பார்த்தேன். அவர் சொன்னதை என்னால் சட்டென்று நம்ப இயலவில்லை. அந்த விஷயம் என்னன்னாக்கே...

அடடா... பதிவு ரொம்ப பெரிசாயிட்ட மாதிரி இருக்கே... அதிகம் படிச்சா போரடிக்கும் இல்லயா... அதனால...

                                                                                -தொடர்கிறேன்...

Wednesday, July 4, 2012

நடை வண்டிகள் - 24

Posted by பால கணேஷ் Wednesday, July 04, 2012

கடுகு அவர்களும் நானும் - 2

சுபாவின் வீட்டிற்குச் சென்றிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் பேசிக் கொண்டிருந்த போது பாலா கேட்டார். ‘‘கடுகு என்கிற எழுத்தாளரை உங்களுக்குத் தெரியுமா?’’ என்று. ‘‘கடுகு என்கிற அகஸ்தியன் என்கிற பி.எஸ்.ரங்கநாதன் எழுதிய கதை, கட்டுரைகளை படிச்சிருக்கேன் ஸார்’’ என்றேன். ‘‘அவர் உங்களைப் பார்க்கணும்னு விரும்பறார்...’’ என்ற பாலா, கடுகு ஸாருக்கு போன் செய்து பேசினார். ‘‘ஸார்! கணேஷ் வந்திருக்கார். உங்களை அறிமுகம் செய்ய வேண்டிய தேவையே இல்ல எனக்கு. உங்க கதைகள் நிறையப் படிச்சிருக்காராம். புனைபெயர், அசல் பெயர் எல்லாம் சொல்றார். இப்ப அங்க வரச் சொல்லட்டுமா?’’ என்று கேட்டார்.

அவர் போனை வைத்ததும் கேட்டேன்- ‘‘ஸார்! அவர் டெல்லில இல்ல இருக்கார்? எப்படிப் போய் பார்க்க?’’ என்று. ‘‘டெல்லியில இருந்து எப்பவோ சென்னைக்கு வந்தாச்சு. பக்கத்துல சாஸ்திரி நகர்லதான் இருக்கார். வழி சொல்றேன்’’ என்று ஒரு பேப்பரில் அட்ர‌ஸை எழுதி, வழியும் பேப்பரில் வரைந்து காட்டினார்.

பாலா ஒரு இடத்துக்கு வழி சொல்கிறார் என்றால் பள்ளிச் சிறுவன்கூட எந்தக் குழப்பமும் இன்றி அந்த இடத்தை அடைந்துவிட முடியும். அவர் விளக்குவதும், எழுதுவதும் அவ்வளவு தெளிவாக இருக்கும். எனவே, எந்தக் குழப்பமும் இன்றி நான் கடுகு ஸாரின் வீட்டைச் சென்றடைந்து காலிங் பெல்லை ஒலிக்க விட்டேன்.

ஓவியர் நடனம் வரைந்த ‘கடுகு’
அவர் வீட்டு்க் கதவில் ‘உயர்வு அற உயர்நலம் உடையவன் எவன்? அவன்’ என்று துவங்கும் பாசுரத்தை ஒட்டி இருந்தார். அதுவே எனக்குப் பிடித்திருந்தது. மணி ஒலித்ததும் ஒல்லியான தேகத்துடன், புன்னகை முகத்துடன் கடுகு ஸார் கதவைத் திறந்து வரவேற்றார் என்னை. ‘‘சுபா நிறைய சொல்லியிருக்காங்க உங்களைப் பத்தி. இப்ப என்ன பண்ணிட்டிருக்கீங்க?’’ என்று கேட்டார்.

நான் ‘கல்யாணமாலை’யில் வேலை பார்ப்பதைச் சொல்லி விட்டு, ‘‘நான் சின்னப் பையனா இருந்தப்பவே உங்க கதைகள் நிறையப் படிச்சிருக்கேன் ஸார். உங்க எழுத்து எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா, எல்லாம் வாரப் பத்திரிகைகள்ல படிச்சதுதான். லைப்ரரி எடிஷனா எதுவும் படிச்சதில்ல. ‘கமலாவும் கத்தரிக்காய் கூட்டும்’னு ஒரே ஒரு புத்தகம் மட்டும் கிடைச்சது. வாங்கி்ப் படிச்சேன்.’’ என்றேன்.

உள்ளே திரும்பி கமலா அம்மாவுக்குக் குரல் கொடுத்தார். ‘‘கமலா... இங்க பாரேன்... இவர் ‘கமலாவும் கத்தரிக்காய் கூட்டும்’ புத்தகத்தை காசு கொடுத்து வாங்கிப் படிச்சிருக்காராம். ஐயோ பாவம்...’’ என்றார் சந்தோஷமாக. ‘‘நந்தினி பப்ளிகேஷன்ஸ்னு போட்டு ஏதோ அட்ரஸ் கொடுத்திருந்தாங்க. வேற எதுவும் உங்களோட புத்தகம் போட்ருக்காங்களான்னு விசாரிச்சு வாங்கலாம்னு இருக்கேன் ஸார்’’ என்றேன்.

‘‘நந்தினி பப்ளிகேஷன்ஸ்லதான் இப்ப நீங்க இருக்கீங்க. நான்தான் பப்ளிஷ் பண்ணிட்டிருக்கேன்.’’ என்று சொல்லி, இன்னும் மூன்று புத்தகங்களை எடுத்துக் காட்டினார். அகஸ்தியன் நாவல்கள், கேரக்டர், மிஸ்டர் பஞ்சு ஆகிய அந்த மூன்று புத்தகங்களில் கேரக்டர் மற்றும் அகஸ்தியன் நாவல்கள் நான் பத்திரிகைகளில் படித்தவை என்றும், மிஸ்டர் பஞ்சு மட்டும் நான் படிக்கத் தவறிய கதை என்றும் அவரிடம் தெரிவித்தேன்.

அந்த மூன்று புத்தகங்களையும் நான் எடுத்துக் கொள்வதாகச் சொல்லி அதற்குரிய தொகையை மனக் கணக்காக கூட்டத் தொடங்கினேன். அவரோ, ‘‘எடுத்துக்கங்க. பணம் எதுவும் தர வேண்டாம்’’ என்று ஒரு கவரில் போட்டுக் கையில் கொடுத்தார். ‘‘மூணு புத்தகத்துக்கும் பணம் கொடுத்து வாங்கலாம்னு நினைச்சோமே... அன்பளிப்பாவே தந்துட்டாரே இந்த அப்பாவி எழுத்தாளர்’’ என்று நான் மனதில் நினைத்தது நமக்குள்ளேயே இருக்கட்டும், கடுகு ஸாருக்குத் தெரிய வேண்டாம்.

‘‘இது தவிர வேற எதுவும் பப்ளிஷ் பண்ணப் போறீங்களா ஸார்?’’ என்று கேட்டேன். ‘‘ஆமா. ஐயோ பாவம் கடுகுன்னு... ஸாரி, ஐயோ பாவம் சுண்டுன்னு ஒரு கதை ப்ரிண்டிங்ல இருக்கு. படிச்சிருக்கீங்களா?’’ என்று கேட்டார். ‘‘படிச்சதில்லையே ஸார்...’’ என்றேன். ‘‘சர்க்கஸ் பேக்ரவுண்ட்ல நான் எழுதினது. புத்தகம் ரெடியானதும் உங்களுக்குத் தர்றேன்’’ என்றார்.

‘‘கடுகுன்னா தினமணி கதிர்ல உங்க கதைகளுக்கு கார்ட்டூனா கூர் மூக்கோட ஓவியங்கள் வருமே... அதான் ஸார் நினைவுக்கு வருது எனக்கு உங்க வீட்டுக் கதவுலகூட அதை ஒட்டியிருக்கீங்க’’ என்றேன். ‘‘அது நடனம்ங்கற ஓவியர் வரைஞ்சது...’’ என்றார். ‘‘நடனம் ஸார் எனக்குப் பழக்கமானவர்தான் ஸார். ‘கல்யாணமாலை’க்கு என்னை சிபாரிசு பண்ணினவரே அவர்தான்...’’ என்றேன் ஆச்சரியமாக. ‘‘அப்படியா... ஸர்ப்ரைஸ்தான். எல்லாரும் சுத்தி ஒரு வட்டத்துக்குள்ளயே வர்றோம்’’ என்றார். இப்படி இன்னும் நிறைய விஷயங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு விடைபெற்றேன்.

-இது எங்களுடைய முதல் சந்திப்பு. இரண்டாவது சந்திப்பில் கடுகு ஸாரைப் பற்றிய வியப்பான விஷயம் ஒன்றை அவர் மூலமாகவே தெரிந்து கொண்டேன். மூன்றாவது சந்திப்பிலோ... சுலபத்தில் யாரும் செய்யாத ஒரு செயலை எனக்காகச் ‌செய்தார் அவர். அந்த சந்திப்புகளைப் பற்றி....

                                                                                       -தொடர்கிறேன்...

இடையிடையே கடுகு அவர்களின் துணுக்குகள் இருந்தால் சொருகி விடுங்கள் என்று கேட்ட நண்பர் மதுமதிக்காக... கடுகு அவர்கள் தினமணி கதிரில் எழுதிய ஒரு துணுக்கு :

==================================================================

ஆக,19, சென்னை பதிவர் சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல் :


கவியரங்கத்தில் பங்கு கொள்ள விரும்பும் நண்பர்கள், மதுமதி (தூரிகையின் தூறல்)  அவர்களை 9894124021 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பங்களிப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.வாசிக்கப்படும் கவிதைகள் முப்பது வரிகளுக்கு மிகாமல் இருத்தல் நலம். குலுங்கட்டும் சென்னை 19-08-2012 அன்று பதிவர்களின் உரத்த குரலால்!

==================================================================

மேய்ச்சல் மைதானத்தில் இப்போது - கத்தரித்தவை-6

Friday, June 29, 2012

நடை வண்டிகள் - 23

Posted by பால கணேஷ் Friday, June 29, 2012

கடுகு அவர்களும் நானும் - 1
நகைச்சுவையாக நடிப்பதன் மூலம் சிரிப்பை வரவழைப்பதை விட பலமடங்கு கடினமானது நகைச்சுவையான எழுத்தின் மூலம் சிரிப்பை வரவழைப்பது. மனதை உருக்கி அழ வைக்கும்படி கதைகளை சற்று முயன்றால் எவரும் எழுதிவிட முடியும். நகைச்சுவையாக எழுதுவது அத்தனை சுலபமில்லை. (சிலபேர் நகைச்சுவையாக எழுதுகிறேன் பேர்வழி என்று எழுதியே நம்மை அழ வைத்து விடுகிறார்கள் என்பது வேறு விஷயம்). நகைச்சுவை எழுத்தில் ஒரு ஜித்தர் கடுகு என்கிற அகஸ்தியன் என்கிற திரு.பி.எஸ்.ரங்கநாதன் அவர்கள்.

என்னுடைய பள்ளி நாட்களிலேயே அகஸ்தியனின் எழுத்து எனக்கு அறிமுகம் ஆனது. அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் எந்தப் பத்திரிகையும் வாங்குவது கிடையாது. விகடன், குமுதம், கல்கி போன்ற வார இதழ்கள் எதுவும் எனக்குத் தெரியாது. செய்தித்தாள்கள் மட்டுமே அறிந்திருந்தேன். என் அத்தையின் கணவர் தினமணி நாளிதழில் ‘நேரக்காப்பாளர்’ பணியில் இருந்தார். ஆகவே தினமணி வெளியிடும் தினமணி கதிர், சினிமா எக்ஸ்பிரஸ் ஆகிய புத்தகங்கள் Complimentary ஆக அவருக்கு வந்து விடும். அவற்றைப் படிபபதற்காகவே ஞாயிறு வந்தால் அத்தையின் வீட்டிற்கு ஓடுவேன்.

அப்போது தினமணி கதிர் இதழில் ‘பெரியசாமி ஒளிக்கதிர்’ என்கிற அவரின் சிறுகதை ஒன்று வெளியாகியிருந்ததைப் படித்தேன். பேராசிரியர் பெரியசாமி ஒரு லேசர் மிஷினைக் கண்டுபிடிப்பார். அந்த ஒளிக்கதிரைப் பாய்ச்சினால் ஒரு பொருளை டெம்பரரியாக மறைய வைக்கவும், மீண்டும் தோன்றச் செய்யவும் முடியும் என்பது அவர் கண்டுபிடிப்பு. அதை ஒரு காலேஜில் டெ‌மோ காட்டுவதற்காக ‌மேஜையில் இருக்கும் டீ கப்பின் மேல் லேசரைப் பாய்ச்சி அதை மறைய வைப்பார். பின் வேறொரு விசையை முடுக்கி லேசர் மூலம் அதை மீண்டும் வரவழைப்பார். இதே பரிசோதனையை ஒரு கல்லூரி மாணவன் மேல் அவர் பிரயோகிக்க, மாணவன் காணாமல் போய் விடுவான். ஆனால் மீண்டும் வரவழைக்காது மிஷின்.

பெரிய கலாட்டாவாகி, பெரியசாமியின் நண்பர் மயக்கமடைந்து மிஷினின் மேல் விழ, ஏதோ ஒரு பட்டன் முடுக்கப்பட்டு பையன் மீண்டும் வந்து விடுவான். அனைவரும் அந்த ஹாலை விட்டே ஓட, மிஷின் வெடித்து தன்னையே அழித்துக் கொண்டு விடும். இந்தக் கதையை வரிக்கு வரி நகைச்சுவை ததும்ப அவர் எழுதியிருந்தார். சத்தம் போட்டுச் சிரித்துப் படித்து மகிழ்ந்தேன். அதன்பின் வந்த வாரங்களில் பேராசிரியர் பெரியசாமியை வைத்து ‌தொடர்ந்து பல சிறுகதைகள் எழுதினார். (பேராசிரியர் பெரியசாமி கதைகள், சாமுவேல் சார் கதைகள் ஆகியவற்றைத் தொகுத்து ‘ரொட்டி ஒலி’ என்ற புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.)

அதன் பின்னர் நான் படித்த அகஸ்தியனின் எழுத்துக்களில் வந்த கமலாவும், தொச்சுவும், அங்கச்சியும் முழுமையாக என்னை ஆட்கொண்டு ரசித்துச் சிரிக்க வைத்தனர். கடுகு என்ற பெயரில் சின்னச் சின்ன துணுக்குச் செய்திகளும், சுவாரஸ்யமான கட்டுரைகளும் வெளியானதை படித்திருந்தேன் நான். அகஸ்தியன்தான் கடுகு என்பது மட்டும் அப்போது எனக்குத் தெரியாது. அப்போதைய தினமணி கதிரின் ஆசிரியர் சாவி ஸார் 128 பக்கங்களுக்கும் அதிகமாக கனமான மாத நாவல் ஒன்றும் தினமணியிலிருந்து வெளியிட்டு வந்தார். அந்த மாத இதழில் படித்த ‘மிண்ட்டா ரோடு’ மற்றும் ‘சொல்லடி சிவசக்தி’ ஆகிய அகஸ்தியனின் நாவல்கள் நினைவை விட்டு நீங்காகதவை.

மதுரையை விட்டுச் சென்றதும் இந்த படிப்புத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் கல்லூரி நாட்களில்தான் படிக்கும் பழக்கத்தை புதுப்பித்துக் ‌கொண்டேன். அச்சமயம் சாவி இதழிலும் மோனாவிலும் அகஸ்தியனை மீண்டும் படித்தேன். மோனா மாத இதழில் ‘கொல்லவல்லாயோ கிலியே’ என்ற தலைப்பில் ஒரு க்ரைம் கதை அவர் எழுதியிருந்தது என்னை விழி உயர்த்த வைத்தது. அவர் எழுதிய ‘அலைபாயுதே கண்ணா’ நாவல் என் ஆல்டைம் ஃபேவரைட்களில் ஒன்று.

பின்னாளில் வெளிவந்த பாரதிராஜா இயக்கிய ‘புதுமைப் பெண்’ படத்தின் கதை பல அம்சங்களில் இந்த நாவலை ஒத்திருந்தது. (நோ... நோ... பாரதிராஜா சுட்டு விட்டார் என்றெல்லாம் உடனே நினைத்துவிட வேண்டாம். கடுகு ஸாரே அப்படி நினைக்கவில்லை.) வியக்கத் தக்க பல ஒற்றுமைகள் இரண்டுக்கும் இருந்ததை ஒரு கடிதமாக பாரதிராஜாவுக்கு கடுகு ஸார் எழுத, அதற்கு அவர் தந்த பதிலையும் ‘பாரதிராஜாவும் நானும்’ என்ற தன் பதிவில் எழுதியிருக்கிறார் கடுகு அவர்கள்.

இப்படி என் பள்ளி நாட்களிலும், சற்றே இடைவெளிக்குப் பின் கல்லூரி நாட்களில் தொடங்கி இன்று வரை ரசித்துப் படிக்க வைக்கும் எழுத்துக்குச சொந்தக்காரரான கடுகு என்கிற அகஸ்தியனைச் சந்தித்துப் பேச வேண்டும் என்று மட்டும் எனக்குத் தோன்றியதில்லை. காரணம்... அவர் கட்டுரைகளைப் படித்ததிலிருந்து டெல்லியில வசிக்கிறார் என்பதை புரிந்து கொண்டிருந்தேன். ‘சுபா’வுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டு, சென்னைவாசியாக நான் ஆகிவிட்ட ஒரு காலச்சதுரத்தில் சுபா சொல்லித்தான் கடுகு ஸார் சென்னைவாசியாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டன என்கிற விஷயம் தெரிந்தது.

பிற்பாடு சுபாவின் மூலமாகவே கடுகு அவர்களுடனான என் முதல் சந்திப்பும் நிகழ்ந்தது. (ஒரு பள்ளி மாணவன் தென்னை மரத்தைப் பற்றிய கட்டுரைக்கு மனப்பாடம் செய்து கொண்டு போக, பரீட்சையில் பசுவைப் பற்றி கட்டுரை எழுதச் சொல்லிக் கேட்டிருக்க, இவன் படித்த தென்னை மரத்தைப் பற்றி விரிவாக எழுதி கடைசியில், ‘இத்தகைய சிறப்பு வாய்ந்த தென்னை மரத்தில் பசுவைக் கட்டுவார்கள்’ என்று எழுதினான் என்ற துணுக்குச் செய்தி இந்தக் கட்டுரையைப் படிக்கையில் உங்கள் நினைவில் இடறினால் நான் பொறுப்பல்ல.) அந்த முதல் சந்திப்பில் துவங்கி...

                                                                          -தொடர்கிறேன்...

==================================================

                               சென்னையில் பதிவர் சந்திப்பு - ஆகஸ்டு-19 

வலையுலகத் தோழமைகளுக்கு, வணக்கம். வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சென்னையில் பதிவர் சந்திப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தோம். அந்தத் தேதியில் அரங்கம் கிடைக்காத காரணத்தால் ஆகஸ்ட் 19ம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) பதிவர் சந்திப்பு மாற்றப்பட்டுள்ளது. 

கவிரயங்கம், கருத்தரங்கம், சிறப்பு விருந்தினராக ஒரு பிரபலம் என்பன உள்ளிட்ட பல சுவாரஸ்ய நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டு வருகிறது. அவை பற்றிய விரிவான அறிவிப்புகள் இனிவரும் நாட்களில் அறிவிக்கப்படும். கவியரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்குபெற விருப்பமுள்ள நட்புகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். பட்டியல் தயாரிக்க வசதியாயிருக்கும்.

                                   நாள் : 19.08.2012 (ஞாயிற்றுக்கிழமை)  
                                 இடம் : மாணவர் மன்றம், சென்னை.

தங்களின் வருகையை 98941 24021(மதுமதி), 73058 36166(பா.கணேஷ்), 94445 12938(சென்னைப்பித்தன்), 90947 66822(புலவர்.சா.இராமநுசம்) ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாக இருக்கும்.

==================================================

Saturday, June 23, 2012

நடை வண்டிகள் - 22

Posted by பால கணேஷ் Saturday, June 23, 2012

இந்திரா சௌந்தர்ராஜனும் நானும் - 5
அதன் பின்னர் நெல்லையில் இருந்து மதுரை வரும் போதெல்லாம் தவறாமல் அவரைச் சந்தித்து உரையாடுவது என்பது நிகழ்ச்சி நிரலில் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. சிறிது காலத்தில் நெல்லையிலிருந்து சென்னைக்கு இடம் பெயர வேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. சென்னை வந்த பின் அவ்வப்போது போனில் பேசிக் கொள்வதோடு சரி. சென்னை வரும் சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் ‘ப்ளையிங் விசிட்’டாகத்தான் வருவார் என்பதால் சந்திக்கும் வாய்ப்புக் குறைந்து‌ போனது.

ஜி.அசோகன் அவர்களின் க்ரைம் நாவல் அலுவலகத்தில் நான் பணியில் இருந்த சமயம் ‘பாக்கெட் நாவல்’ இதழில் மாதந்தோறும் அவரது நாவல்தான் வெளிவந்து கொண்டிருந்தது. அதனால் ஒவ்வொரு மாதமும் நாவல் அனுப்பியது்ம் கருத்துக் கேட்பார். பாராட்டுதலோ, குறைகளோ மனதில் தோன்றியதை மறக்காமல் ‌சொல்வேன்.

அந்தப் பணியிலிருந்து விலகிய பின்னர் பணத்தேவை எனக்கு அதிகம் இருந்த ஒரு காலகட்டத்தில் அவரது நூல்களை மாதந்தோறும் வெளியிட்டு வந்த பதிப்பாளர் பொன்.சந்திரசேகர் என்பவரை அறிமுகம் செய்வித்தார் இந்திராஜி. (பொன்.சந்திரசேகர் இன்றளவும் என் நல்ல நண்பர்களில் ஒருவர்.) அவர் வெளியிட்டு வந்த இந்திராஜியின் நாவல்களை வடிவமைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஏறத்தாழ ஓராண்டு காலம் அதை மகிழ்வுடன் செய்து கொண்டிருந்தேன். அதன்பின் வாழ்க்கையின் மிகப் பெரிய சிக்கலைச் சந்தித்து கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைந்த காலகட்டத்தில் அந்தப் பணியைத தொடர இயலாமல் விட்டுவிட்டேன். சமீபத்தில் நண்பர் சந்திரசேகர் மீண்டும் தொடர்பு கொண்டு எனக்கு அந்த வாய்ப்பைத் தந்ததால் இப்போது தொடர்ந்து அதில் ஈடுபட்டிருக்கிறேன்.

தினம தவறாமல் கோயிலுக்குச் செல்லும் பழக்கம் கொண்ட ஆன்மீகவாதி அவர். ஜோதிடம், ஜாதகம் இவற்றில் எல்லாம் துளியும் நம்பிக்கையற்றிருந்த எனக்கு அவை முறைப்படி பயின்று செய்தால் அரிய‌ கலைகளே என்பதை விளக்கிப் புரிய வைத்தவர் அவர். இப்படி அவருடன் பழகி வருவதில் நான் கற்றதும் பெற்றதும் அதிகம். இன்றளவும் எங்களி்ன் நட்பு தொடர்ந்து கொண்டிருப்பதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு.

                                              -‘இந்திரா செளந்தர்ராஜனும்’ நானும் நிறைகிறது;
                                                             ‘கடுகு அவர்களும் நானும்’ துவங்குகிறது.

======================================================================

                         அரிய(க்குடியின்) நகைச்சுவை!

அந்த நாளில் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இசை மேதை. நாங்கள இருந்த தெருவில்தான் அவரும் அப்போது இருந்தார். ஐயங்காருக்கு ‌சிலேடையும், கிண்டலும் ரொம்பத்தான் உண்டு. ஒரு சிஷ்யன் அவரெதிரில் பவ்யமாக வந்து நின்றான்.

‘‘எங்கேடா உன்னை ரொம்ப நாளாக் காணும்?’’

‘‘காசிக்குப் போயிருந்தேன்...’’

‘‘அப்படியா? உனக்கெதுக்குடா காசி?’’

‘‘ஏதோ போனேன். அங்கேயும் ஒரு நல்ல குரு ‌கிடைச்சர். நாலு கீர்த்தனை கத்துக் கொடுத்தார்.’’

‘‘பரவாயில்லையே... எங்கே... ஒண்ணு பாடு!’’

சிஷ்யன் அப்படியே .உட்கார்ந்து பாடத் தொடங்கினான். சங்கீதத்தில் அரைகுறையான எனக்கே கேட்கச் சகிக்கவில்லை. ஆனால் ஐயங்காரோ புன்னகை மாறாமல் உட்கார்ந்திருந்தார். இளைஞன் பாடி முடித்ததும், நக்கலாக ஒரு கேள்வி கேட்டார்:

‘‘ஏண்டா அம்பீ! காசிக்குப் போறவா, போயிட்டு வந்ததுக்கு அடையாளமா காயை விடுவா, கனியை விடுவா. நீ சுருதியையே விட்டுட்டியேடா...’’

அ...ப்....பா... அன்றைக்குச் சிரித்த சிரிப்பில் வயிற்று வலியே வந்து விட்டது.

                                                            -‘சிரிக்கப் பழகு’ நூலில் அனுராதா ரமணன்

மேய்ச்சல மைதானத்தில் - கேப்ஸ்யூல் நாவல்-1

Thursday, June 14, 2012

நடை வண்டிகள் - 21

Posted by பால கணேஷ் Thursday, June 14, 2012

இந்திரா செளந்தர்ராஜனும், நானும் - 4

திருநெல்வேலி தினமலரில் எனக்குக் கொடுக்கப்பட்டிருந்த பொறுப்பு இணைப்பிதழ்களை வடிவமைப்பது. சிறுவர் மலர், திரை மலர், வார மலர், கதை மலர் போன்ற இணைப்பிதழ்களை தயாரித்து வடிவமைப்பது நான், ஒரு உதவி ஆசிரியர், ஒரு பிழை திருத்துபவர் கொண்ட குழுவின் பொறுப்பு. என்னுடன் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த நபர் (பெயர் வேண்டாமே...) இனிமையாகப் பேசினார். நன்கு பழகினார்.

ஒரு சமயம் கதை மலர் இதழில் பிரபல எழுத்தாளர்களிடம் எட்டு சிறுகதைகள் வாங்கி சிறுகதைத் தொடராக வெளியிடலாம் என்று முடிவு செய்தோம். நண்பர் ராஜேஷ்குமாரிடம் நான் போனில் தொடர்பு கொண்டு கேட்க, ‘‘நீங்களே என் சிறுகதைகள்ல எதை வேணும்னாலும செலக்ட் பண்ணிப் போட்டுக்கங்க கணேஷ். எதெது போடறீங்கன்னு ஒரு லிஸ்ட் மட்டும் அனுப்பிடுங்க’’ என்றார். ரா.கு.வுக்கு நன்றி சொல்லிவிட்டு அலுவலக பொறுப்பாளரிடம் போனை நான் தர, அவர் ரா.கு.விடம் சன்மானம் தொடர்பான விஷயங்களை பேசி முடிவு செய்து கொண்டார்.

இப்படி நான் செயல்பட்டதையும், மதுரை போய் வரும் போது இந்திராஜியை சந்தித்துப் பேசியதைப் பற்றியும், சுபாவிடம் எனக்குள்ள நட்பையும் கூடவே பணிபுரிவதால் நன்கறிந்த அந்த உதவி ஆசிரியர் என்னிடம் ஒரு யோசனை சொன்னார். ‘‘மாத நாவல்கள் முன்ன மாதிரி நிறைய வர்றதில்லன்னாலும் ஒருசில நாவல்கள் நல்லாத்தான் போயிட்டிருக்கு. உங்க நண்பர்கள்கிட்ட பேசி கதைகளை வாங்கினீங்கன்னா, கட்டுரைகள், ஜோக்ஸ் மாதிரி மத்த விஷயங்களை நான் தயார் பண்ணிடுவேன். நாமளே ஒரு மாத நாவல் நடத்தலாம்’’ என்றார். அதற்கான பண வசதி என்னிடம் இல்லையென்றும், பிரிண்டிங் வசதி திருநெல்வேலியில் இ‌ல்லையென்றும் கூறித் தயங்கினேன் நான். அதற்கு மாற்று யோசனைகளை முன் வைத்தார் அவர்.

பேசிப் பேசி திட்டம் இறுதி வடிவம் பெற்றது. பிரபல எழுத்தாளர்களின் ஏழு சிறுகதைகளும், ஒரு குறு நாவலும் மற்ற பல்சுவைப் பகுதிகளும் வெளியிடலாம் என்பது திட்டம். இதையும் ராஜேஷ்குமாரிடமிருந்‌தே துவங்கினேன். அவரின் ஏழு சிறுகதைகளை தேர்வு செய்து, அவரிடம் பேசி அனுமதி பெற்றபின் இதழ் தயாரித்தோம். ப்ரிண்டிங் செய்யும் போது சைஸ் சற்றே பெரிது, ரெட்யூஸ் பண்ண வேண்டும் என்று ப்ரஸ்ஸில் சொன்னதால், ஃபிலிமில் அளவைக் குறைக்கும் படி ஆனது. இதனால் எழுத்துக்கள் சின்னதாக, படிப்பவர் கண்ணை உறுத்தும் வண்ணம் ஆகிவிட்டது. அட்டைப்படம் வேறு லேமினேஷன் இல்லாமல் சுமாராக வந்திருந்தது. ஏதோ புத்தகம் தயாரித்தோம் என்று பெயரே தவிர, திருப்தி தரவில்லை அந்த முயற்சி.

ஆனாலும் ராஜேஷ்குமார் என்ற மந்திரப் பெயர் புத்தகத்தின் பிரதிகள் நிறைய விற்பதற்கு உதவியிருந்தது. இரண்டாவது இதழில் இந்திரா செளந்தர்ராஜனின் கதைகள் வெளியிடலாம் என்று முடிவு செய்தோம் நாங்கள். மதுரை சென்று இந்திராஜியைச் சந்தித்து, இதுபற்றிப் பேசினேன். அவருடைய ஏழு சிறுகதைகளைத் தேர்வு செய்து கொடுத்துவிட்டுச் சொன்னார்: ‘‘கணேஷ்! இந்தச் சிறுகதைகள் அனைத்தும் அந்தந்த இதழ்களில் வெளிவந்த போதே அதற்குரிய சன்மானத்தை எனக்கு வாங்கித் தந்து விட்டன. அதனால, நீங்க இதுக்கு எந்த சன்மானமும் தர வேண்டாம். இதழை நல்லபடியா வெளிக் கொண்டு வாங்க அது போதும்’’ என்றார். பெருந்தன்மையான அவரின் இந்த வார்த்தைகளில் பிரமித்துப் போனேன் நான்.

‘‘இந்தச் சிறுகதைகளை எந்த சந்தர்ப்பத்துல எழுதினீங்க, எப்படி இந்தக் கரு மனசுல தோணிச்சு? இப்படி ஏதாவது சுவாரஸ்யமான விஷயத்தை ‘கதையின் கதை’ன்னு சில வரிகள்ல எழுதிக் கொடுங்க ஸார்’’ என்று நான் கேட்க, அழகாய் அதையும் உடனே எழுதித் தந்தார். அவற்றைப் பெற்றுக் கொண்டு நெல்லை வந்ததும் இதழ் தயாரிக்கலாம் என்று எண்ணினேன். ஆனால் இதழ் வடிவமைப்பில் இருக்கும் சந்தர்ப்பத்திலேயே ஒரு விஷயம் தெரிந்தது. முதல் இதழ் தயாரித்ததில் என் உதவி ஆசிரிய நண்பர்(?) கணக்கு வழக்குகளில் தில்லுமுல்லு செய்து அவரின் பாக்கெட்டை நிரப்பிக் கொண்டதைக் கண்டுபிடித்தேன். ஜோக்குகள், மற்ற மேட்டர்கள் வெளியிடுவதிலும் அவர் பதவியை துஷ்பிரயோகம்‌ செய்ததும் எனக்குத் தெரிய வந்தது. உடனே அவரிடம் சுமுகமாக, உறுதியாக மாத இதழிலிருந்து நான் விலகுவதாகச் சொல்லிவிட்டு நகர்ந்து விட்டேன்.

இந்திராஜி எனக்‌காக உட்கார்ந்து ‘கதையின் கதை’ எழுதித் தந்தும், சன்மானமாக ஒரு பைசா வேண்டாமென்று சொல்லியும் அதைப் பயன்படுத்த முடியாமல் போனதில் மிகமிக வருத்தம் எனக்குள் இருந்தது. உடனே மீண்டும் மதுரை போய் அவரைச் சந்தித்து நிகழ்ந்தவற்றை விளக்கினேன்; அவரின் சிறுகதைகளை அவரிடம் திருப்பித் தந்தேன். பொறுமையாய் எல்லாவற்றையும் கேட்ட அவர், ‘‘ஆரம்ப கட்டத்துலயே நீங்க பாத்துட்டது நல்லதாப் போச்சு. பின்னால பெரிய ஆபத்துல மாட்டிக்காம இப்பவே விலகிட்டது நல்லதுன்னு பாஸிட்டிவா நினைச்சுக்கங்க. இப்ப இல்லாட்டி என்ன... இன்னொரு சந்தர்ப்பத்துல உங்களுக்கு ஏத்த வாய்ப்பு வரும்’’ என்றெல்லாம் பேசி எனக்கு உற்சாகமூட்டினார். புதிதாய் வெளிவந்திருந்த அவரின் நூல் ஒன்றை ஆட்டோகிராஃபித் தந்தார். மகிழ்வுடன் பெற்றுக் கொண்டு நெல்லை திரும்பினேன் நான்.

                                                                             -தொடர்கிறேன்...

கத்தரித்தவை-3 கண்டு புன்னகைக்க... மே.மை

Saturday, June 9, 2012

நடை வண்டிகள்-20

Posted by பால கணேஷ் Saturday, June 09, 2012

 இந்திரா செளந்தர்ராஜனும் நானும் - 3

அச்சமயத்தில் மாதா மாதம் இந்திரா செளந்தர்ராஜனின் நாவல்களைத் தாங்கி ‘க்ரைம் ஸ்டோரி’ என்ற மாத நாவல் வெளிவந்து கொண்டிருந்தது. இந்திராஜியின் வாசகர்களுடன் பேசும் கடிதமும், கேள்வி பதில்களும், நாவலும் வரும். அடுத்து வந்த இதழில் வாசகர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் என்னைப் பற்றிக் குறிப்பிட்டு ஒன்றிரண்டு பாராக்கள் எழுதியிருந்தார்.

‘இந்த மாதம் சில வாசக நெஞ்சங்களை சந்தித்தேன். அவர்களில் முக்கியமானவர் நெல்லை கணேஷ். இவர் திருநெல்வேலி தினமலரில் பணி புரிந்து வருகிறார். என் முதல் நாவலான ‘கோடைகாலக் கொலைகள்’ தொடங்கி சமீப நாவலான ‘பொன் மழை’ வரையில் ஒன்றையும் அவர் விட்டு வைத்திருக்கவில்லை’ என்று (என் நினைவிலிருந்து. இதழ் என்னிடமில்லை) தொடங்கி தன் மகிழ்வைக் குறிப்பிட்டிருந்தார். நான் திருநெல்வேலி தினமலரில் பணி புரியும் சமயத்தில் அவருக்கு அறிமுகம் ஆனதால் மதுரைக்காரனாக இருந்தாலும், இப்போது சென்னையில் வசித்தாலும் அவருக்கு மட்டும் ‘நெல்லை கணேஷ்’ தான்!

அவர் எழுதியதைப் படித்ததும் மிகமிக மகிழ்ச்சியுடன் என் நண்பர்களுக்கு அதைக காண்பித்து விட்டு மதுரைக்கு வந்ததும் அவர் வீட்டைத் தேடிச் சென்றேன். அவரின் குடும்பத்தினரை அறிமுகம் செய்தார். என்னை அறிமுகம் செய்வித்தார். என்னைப் பற்றிச் சில வரிகள் எழுதியதற்கு நன்றி ‌சொன்னேன். அவரது எழுதும் அறைக்கு அழைத்துச் சென்றார். முதல் சந்திப்பில் பேச அவகாசம் கிடைக்காததை எல்லாம் அன்று பேசித் தீர்த்தேன். கதைகள் தவிர்த்தும் பல விஷயங்களில் அவருடைய கருத்தைப் பகிர்ந்து கொண்டார். அபிமான எழுத்தாளர் என்ற நிலையிலிருந்து நெருக்கமானவராக உணரத் தொடங்கியது அந்தச் சந்திப்பிலிருந்துதான்.

அதன்பின் மதுரைக்குச் செல்லும் போதெல்லாம் தவறாமல் அவரைச் சந்தித்து உரையாடுவது என்பது ஒரு வழக்கமான நிகழ்வாகிப் போனது. அப்போது அவர் ‘விக்ரமா விக்ரமா’ என்கிற தொடர் நாவல் எழுதிக் கொண்டிருந்தார். விக்கிரமாதித்தனும், வேதாளமும் இன்றைய உலகில் வந்தால் எப்படியிருக்கும் என்பதை வைத்து அதை எழுதத் துவங்கி இரண்டு நாவல்கள் வெளியாகியிருந்தன. அந்தச் சமயத்தில் சன் டிவியிலும் இதே கருத்தில் ‘விக்கிரமாதித்தன்’ தொடர் வெளியாவதற்கான அறிவிப்பு வந்து கொண்டிருந்தது. அதைப் பற்றிப் பேசும்போது ‘இப்படிப் ஒரு போட்டி ஏற்படுவது நல்லதுதான். .நாவலைப் படித்து விட்டு, அதேபோன்ற கதையை தொலைக்காட்சியிலும் பார்ப்பவர்களுக்கு உங்களின் தனித்தன்மை நன்கு புலப்படும்.’ என்றேன். இந்தக் கருத்தை ரசித்து, அடுத்த வந்த இதழில் எழுதினார்.

இவற்றை நான் சொல்லக் காரணம், ஒரு வாசகனாக என் மதிப்பீடு சரியாக இருக்கும் என்பதை அவர் உணர்ந்திருந்தார் என்பதைச் சொல்வதற்காகத்தான். நான் ‘க்ரைம் நாவல்’ அலுவலகத்தில் ஜி.அசோகன் அவர்களின் கீழ் பணி செய்தபோது, அங்கே‌ வெளிவந்து கொண்டிருந்த ‘பாக்கெட் நாவல்’ இதழில் மாதந்தோறும் இந்திரா செளந்தர்ராஜன்தான் நாவல்தான் வெளிவந்து கொண்டிருந்தது. அச்சமயங்களில் ஒவ்வொரு மாதமும் நாவலின் முடிவுப் பகுதியை அனுப்பியதும், போன் செய்து, ‘எப்படி இருந்தது?’ என்று கருத்துக் கேட்பார். மனதில் படும் நிறை குறைகளைத் தயங்காமல் சொல்வேன். ஏற்றுக் கொள்வார். ஏன் கதையை அப்படி முடிக்க வேண்டியிருந்தது, ஏன் அப்படி ஒரு திருப்பத்தை வைத்தேன் என்பதற்கான விளக்கங்களையும் ‌சொல்வார். அதைக் கேட்டுக் கொள்வதில் எனக்கு தனி மகிழ்ச்சி. (மற்றெந்த வாசகருக்கும் கிடைக்காத வாய்ப்பாயிற்றே!)

பொதுவாக அவரின் கதைகளும், அதில் சொல்லப்படும் கருத்துக்களும் எந்தக் குழப்பமுமின்றி தெளிவாக இருக்கும். என்றாலும் நிறைய இதழ்களுக்கும். தொலைக்காட்சித் தொடர்களுக்கும் ஒரே நேரத்தில் எழுதி வருகின்ற காரணத்தால், சில சமயங்களில் கதாபாத்திரப் பெயரை மாற்றி எழுதி விடுவார் என்பது அவரது பலவீனம். உதாரணமாக, முதல் ஐந்து அத்தியாயங்களில் பத்மினி என்று எழுதிவிட்டு ஆறாவது அத்தியாயத்தில் அதே கேரக்டரை பாரதி என்று எழுதி விடுவார். இதுபோன்ற விஷயங்களைக் கவனித்துக் குறிப்பிட்டால் என்னையே மாற்றிக் கொள்ளச் சொல்லி விடுவார். வேறு சில பதிப்பகங்களில் இப்படி வாசகர் நிலையில் படித்துக் கவனித்து மாற்றாமல் விட்டதால் பெயர் மாறி வந்த கதைகளும் உண்டு.

நெல்லையில் இருந்த காலகட்டத்தில் ஒரு புதிய முயற்சியில் ஈடுபட விரும்பி அதற்கான உதவி கேட்டு அவரிடம் சென்றபோது, எதிர்பாராத அளவில் எனக்கு உதவினார். ஆனால் என்னால்தான் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போய் விட்டது. அதைப் பற்றி...

                                                                             -தொடர்கிறேன்...

ரங்கராட்டினத்தில் சுற்ற... மேய்ச்சல் மைதானம்

Tuesday, June 5, 2012

நடை வண்டிகள் - 19

Posted by பால கணேஷ் Tuesday, June 05, 2012

இந்திரா செளந்தர்ராஜனும், நானும் - 2

ராஜேஷ்குமாரிடம் இந்திராஜியைப் பற்றிக் கேட்பதை நிறுத்திவிட்ட பின் பல மாதங்கள் கழித்து என்று சொல்லியிருந்தேன் இல்லையா... பல மாதங்கள் அல்ல, ஒன்றரை வருடங்கள் கழித்துத்தான் சந்‌தித்தேன். அந்த இடைக்காலத்தில் நான் திருநெல்வேலிக்கு மாற்றலாகிச் சென்று விட்டிருந்தேன். சுபாவின் சிறுகதைகளை டைப் செய்து கொண்டிருந்த காலகட்டம் அது.

 முடித்தவற்றைக் கொடுத்து, அடுத்த செட் பெறுவதற்காக அவ்வப்போது சென்னை விஸிட் அடிக்க வேண்டியிருந்தது என்று ‘சுபாவும் நானும்’ பகுதியில் குறிப்பிட்டிருந்தேனல்லவா... அப்படி ஒரு முறை சென்னை செல்வதற்கு முதல்நாள் ரா.கு.வுடன் போனில் உரையாடி‌ய போது, சனி, ஞாயிறு சென்னையில் இருப்பேன் என்று சொன்னேன்.

‘‘நானும் சனி, ஞாயிறு சென்னைலதான் இருப்பேன் கணேஷ்.’’ என்றார் ராஜேஷ்குமார். தொடர்ந்து, ‘‘எழுத்தாளர் தேவிபாலா தொலைக்காட்சித் தொடர்ல 1000 எபிஸோட் எழுதிட்டதைப் பாராட்டி சனிக்கிழமை சாயங்காலம் காமராஜர் அரங்கத்துல ஃபங்ஷன் ஏற்பாடு பண்ணியிருக்காங்க. சனிக்கிழமை சென்னைல இருப்பீங்கன்னா, விழாவுக்கு வாங்களேன். என் கெஸ்டா முன்னால உக்காந்து பாககலாம்’’ என்று அழைப்பு விடுத்தார். மிகுந்த மன மகிழ்வுடன் நான் அவசியம் வருவதாக அவரிடம் கூறினேன்.

சனிக்கிழமை சென்னை வந்ததும் சுபாவைச் சந்தித்து, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, பெற வேண்டியதைப் பெற்ற பின், மாலை விழாவுக்குச் செல்வதைப் பற்றிக் குறிப்பிட்ட போது, அவர்களும் வருவதாகவும், பி.கே.பி. ஸாரும் வருவார் என்றும் சொன்னார்கள். 

கரூரிலிருந்து என் நண்பன் ஸ்ரீதரன் அப்போதுதான் சந்தையி்ல் பிரபலமாகியிருந்த, ஃபிலிம் போடாமல் ஃபைல்களாக சேமிக்கும் டிஜிட்டல் காமிரா என்ற வஸ்துவை எடுத்து வந்திருந்தான். நாங்கள் இருவருமாக மாலை விழாவுக்குச் சென்றோம். விழா துவங்குவதற்கு முன்பு வந்திருந்த பல வி.ஐ.பிக்களை சுட்டுத் தள்ளினேன் -காமெராவால். எஸ்.வி.சேகருடன் இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு வந்தால் ரா.கு. வந்திருந்தார். அவருடன் வந்திருந்த ரவி தமிழ்வாணன் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

விழாவில் தேவிபாலா வசனம் எழுதி‌ய சில எபிஸோடுகள் திரையிடப்பட்டு, அதில் நடித்த நடிகர்கள், புரொட்யூஸர்கள் மற்றும் அனைத்து எழுத்தாளர்களும் பாராட்டிப் பேசினார்கள். (விழா நிகழ்வை நான் எழுதப் போவதில்லை. பயப்படாதீர்கள்...) அந்த விழாவில் இந்திரா செளந்தர்ராஜன் வந்திருப்பதைப் பார்த்தேன். இந்த ஒன்றரை வருட காலத்தில் விகடனில் தொடர்கதை எழுதி பெயர் தெரிந்த எழுத்தாளராகியிருந்தார் இ.செள.ராஜன்.

நேராக ராஜேஷ்குமாரிடம் சென்று, ரவி தமிழ்வாணனிடம் பேசிக் கொண்டிருந்த அவர் தோளைக் கொத்தினேன். இந்திராஜியிடம் என்னை அறிமுகம் செய்து வைக்கும்படி ‌கேட்டேன். உடன் எழுந்து வந்து இந்திராஜியிடம், ‘‘இவர் உங்க தீவிர வாசகர். என் நண்பர். பேர் கணேஷ். தினமலர்ல வேலை பார்க்கறார். உங்களை அறிமுகம் செய்து வைக்கச் சொல்லி வருஷக்கணக்கா என்கிட்ட கேட்டுட்டிருக்கார்...’’ என்று அறிமுகப்படுத்திவிட்டு மீண்டும் அவர் இருக்கைக்குச் சென்று விட்டார்.

இந்திரா செளந்தர்ராஜன், ‘‘வாங்க, உக்காருங்க... என் கதைகள் படிச்சிருக்கீங்களா?’’ என்று கேட்டார். அவருடைய கம்பீரமான, அழுத்தமான குரல். அதனால் எனக்குத் தெளிவாகக் கேட்டது அவர் பேசியது. என் குரல் அப்படியல்லவே... நான் சொன்ன பதில் அவருக்கு சரியாகக் கேட்கவில்லை. சற்று உரக்க, ‘‘சார், உங்ககிட்ட விரிவாப் பேசணும். இது சமயமில்ல. நாளைக்கு பூரா சென்னைலதான் இருப்பேன். எப்ப ஃப்ரீயா இருப்பீங்கன்னு சொன்னா வந்து சந்திக்கறேன்’’ என்றேன். லஸ் கார்னரில் ஒரு ஹோட்டலின் பெயரும் அறை எண்ணும் குறிப்பிட்டு, அங்கே மறுநாள் மாலை ஐந்து மணிக்கு வரச் சொன்னார். விழா நிகழ்வுகள் முடிய இரவாகி விட்டதால், ரா.கு.விடம் சொல்லிவிட்டு நாங்கள் தங்கியிருந்த இடத்துக்குச் சென்று விட்டோம்.

மறுதினம் சரியாக மாலை ஐந்து மணிக்கு நானும் ஸ்ரீதரனும் அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக் கதவைத் தட்டினோம். நான் முன்பே சொன்னது போல அவருடைய முதல் நாவலைக் குறிப்பிட்டு, அதில் செக்ஸ் அதிகம் எழுதியிருந்ததற்கு என் கோபத்தை வெளியிட்டேன். கதைக் கரு அப்படி அமைந்து விட்டதால் வேறு வழியில்லை என்றும், இனி அப்படி அவர் எழுத்தில் வராது என்றும் தெரிவித்தார். (இன்றுவரை அவர் எழுத்தில் ஒரு துளியளவும் ஆபாசம் இருக்காது.)

அவர் எழுதிய இரண்டாவது நாவலான ‘பதுங்கும் நாகங்கள்’ நாவலைப் பாராட்டி விட்டு, அதில் ஓவியர் ஜெ. போட்டிருந்த நிர்வாணப் படம் எனக்குப் பிடிக்கவில்லை என்றும், அப்படி வருவது இந்திராஜியின் பெயரையும் பாதிக்கும் என்றும் குறிப்பிட்டேன். இந்த இடத்தில் ‘தாழம்பூ நாகங்கள்’ நாவலின் கதையைப் பற்றிச் சொன்னால் வியப்பீர்கள். ஒரு நடிகை பாத்ரூமில் குளிப்பதை யாரோ வீடியோ படம் எடுத்து வெளியிட்டு விட, அதை யார் என்று இன்ஸ்பெக்டர் ருத்ரா துப்பறிந்து குற்றவாளியைக் கண்டுபிடிப்பதுதான் கதை. (பல வருடங்களுக்குப் பின்னால் யாரோ ஒரு நடிகையின் குளியல் காட்சிகள் இணையத்தில் பரபரப்பாக உலாவியது; முன்பே அதை கற்பனையில் எழுதியிருந்தார் இந்திராஜி).

அதன் பிறகு, அதுவரை வெளியாகியிருந்த அவர் நாவல்களைப் பற்றி நான் விமர்சித்ததையும், அவர் பதிலளித்ததையும் விரிவாகச் சொன்னால் உங்களுக்குப் போர் அடிக்கும், வேறு தளத்திற்குத் தாவி விடுவீர்கள். எனவே... அப்போது அவர் எழுதிக் கொண்டிருந்த கான்ஸெப்ட் பற்றியும், இனி எழுதப் போகும் விஷயங்கள் பற்றியும் பேசினோம். அந்த முதல் சந்திப்பில் படைப்புலகம் தவிர்த்து வெளி விஷயங்கள் எதுவும் பேசவில்லை. கொஞ்சம் பேச்சில் கலந்து கொண்டும், நிறைய கவனித்துக் கொண்டும் இருந்தான் என் நண்பன் ஸ்ரீதரன். அதுவும் நல்லதாகப் போயிற்று..! பேச்சில் மூழ்கிவிட்ட எனக்கு, மணி எட்டைத் தாண்டி விட்டதை அவன் நினைவுபடுத்தினான்.

ஒன்பதரைக்கு எங்களுக்கு பஸ்! சாப்பிட்டு வி்ட்டு பஸ் பிடிக்க நேரமாகிவிடும் என்பதால் இந்திராஜியிடம், ‘‘உங்களை மாதிரி ஆள்கிட்ட எவ்வளவு நேரம் வேணாலும் பேசலாம் ஸார். ஆனா எனக்கு பஸ் பிடிக்க நேரமாயிடுச்சு. புறப்படறேன்’’ என்று விடைபெற்றேன். ஒரு பேப்பர் எடுத்து, நான் எங்கே வேலை செய்கிறேன், முகவரி எல்லாம் கேட்டு குறித்துக் கொண்டார். அவரின் முகவரியை எழுதிக் கொடுத்தார். ‘‘அட, பைக்காராலதான் இருக்கீங்களா? எங்க சித்தப்பா வீடு டி.வி.எஸ்.நகர்ல இருக்கு அடிக்கடி வருவேனே...’’ என்றேன். ‘‘டி.வி.எஸ். நகரா... ரயில்வே லைனை ஒட்டி நடந்தா, எங்க வீட்டுக்கு நடந்தே வந்துடலாமே... அடிக்கடி வாங்க...’’ என்றார்.

அடுத்த முறை மதுரை சென்றால் அவரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு திருநெல்வேலிக்குப் ‌போய்ச் சேர்ந்தேன். என் வழக்கமான பணிகள் என்னை ஆட்கொண்டன. ஆனால் அடுத்த மாத‌மே இந்திராஜி எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்தார். அதனால் உடனே மதுரைக்கு அவரைப் பார்க்க ஓடினேன். அது என்ன இன்ப அதிர்ச்சி என்பதை...

-தொடர்கிறேன்...!
கத்தரித்தவை-2 படித்துச் சிரிக்க - மே.மை

Wednesday, May 30, 2012

நடை வண்டிகள் - 18

Posted by பால கணேஷ் Wednesday, May 30, 2012

 இந்திரா செளந்தர்ராஜனும் நானும் - 1

இந்திரா செளந்தர்ராஜன்! இந்தப் பெயர் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பரபரப்பாக அடிபட ஆரம்பித்த பிறகு இவரை அறிந்திருப்பீர்கள். ஆனால் எனக்கு ஆரம்பநிலை எழுத்தாளராக (அவர்) இருந்த போதிலிருந்தே இந்திராஜியைத் தெரியும். என் மற்ற எழுத்தாள நண்பர்களின் கதைகளை நான் படிக்க ஆரம்பித்தபோது அவர்கள் பல சிறுகதைகளும் நாவல்களும் எழுதிப் பெயர் பெற்றிருந்தவர்கள்; என்னைவிட வயதில் மூ்த்தவர்கள். ஆனால் இந்திரா செளந்தர்ராஜனுக்கு அவரின் ஆரம்பப் படைப்பிலிருந்தே வாசகன் என்பதிலும், என்னைவிட சற்றே (தான்) வயதில் மூத்தவர் என்பதிலும் மிக்க மகிழ்ச்சி எனக்கு.

கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு மதுரையில் வேலை தேடித் திரிந்து கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது ஒரு பழைய புத்தகக் கடையில் ‘ஒன்றின் நிறம் இரண்டு’ என்ற புத்தகத்தை வாங்கினேன். ‘இந்திரா செளந்தர்ராஜன்’ என்ற ஆசிரியரின் பெயர் எனக்குப் புதியது. அந்த நூலின் முன்னுரையில் ‘கலைமகள் நடத்திய குறுநாவல் போட்டியில் முதல் பரிசு வாங்கிய கதை அது’ என்றும், ‘அதை எழுதுவதற்கு முன் தான் மருந்துக்கும் கதை எழுதியிராத கற்பனையாளன்’ என்றும் இ.செள.ராஜன் குறிப்பிட்டிருந்தார். இது என் ஆவலைத் தூண்டிவிட உடனே அந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.

படித்து முடித்ததும் பிரமித்துப் போனேன். முதல் கதை எழுதிய ஒருவரின் எழுத்தாக அது இல்லை. தேர்ந்த ‌ஒரு எழுத்தாளரின் நடை அதில் இருந்தது. அவர் கையாண்டிருந்த விஷயமும் கனமானதாக இருந்தது. அதன்பின் அவர் பெயர் தாங்கிய சிறுகதைகள் வார இதழ்களில் வந்தால் படிக்க ஆரம்பித்தேன். ஆழமான சமூகப் பிரக்‌ஞை கொண்டவைகளாகத்தான் அவர் சிறுகதைகள் இருந்தன; பொழுதுபோக்காக அல்ல. ஆனால் ‘குங்குமச் சிமிழ்’ இதழில் அவர் க்ரைம் கலந்த நாவல்கள் எழுதினார். அந்தக் க்ரைம் நாவல்களில் மற்ற எழுத்தாளர்கள் போல் துப்பறியும் நிபுணர்கள் வந்து துப்புத் துலக்குவதாக இல்லாமல் நாவலி்ன் கதாநாயகி துப்பறிந்து மர்மத்தை விடுவிப்பதாக எழுதியிருந்தார். (கன்னிப் பருந்து) அன்று முதல் இன்று வரை அவரது நாவல்களில் கதாநாயகிகள் பிரதானமாக இருப்பார்கள். இவையெல்லாம் எனக்கு அவர் மீது மரியாதையையும், அன்பையும் அதிகரித்தன. மாதநாவல்கள் அதிகம் விற்ற ஒரு காலகட்டத்தில் ரா.கு., பி.கே.பி., சுபா, பு.த.துரை போன்றவர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த போது தாமதமாக அந்த ரேஸில் கலந்து கொண்டவர் இந்திராஜி.

‘ரம்யா’ என்ற மாத இதழில் ‘கோடைகாலக் கொலைகள்’ என்ற பெயரில் ஒரு க்ரைம் நாவல் எழுதினார் அவர். படித்ததும் எனக்கு வியப்பும், கோபமும் ஏற்பட்டது. வியப்புக்குக் காரணம் அவர் கையாண்டிருந்த உத்தி. பிற எழுத்தாளர்கள் நாவலின் கடைசி அத்தியாயத்தில் குற்றவாளியை வெளிப்படுத்தி, அவன் ஏன் செய்தான், எப்படியெல்லாம் செயல்பட்டான் என்று விளக்குவார்கள். இந்திராஜியோ நாவலின் கடைசி அத்தியாயத்தில் குற்றவாளி எப்படிச் செயல்பட்டான், ஏன் செயல்பட்டான் என்பதையெல்லாம் (பெயர் குறிப்பிடாமலேயே) விளக்கி, கடைசி வரியில் குற்றவாளியின் பெயரைச் சொல்லி ‘முற்றும்’ போடுவார். இந்த உத்தியை வியந்து ரசித்த நான் கோபப்பட்டதன் காரணம்: அதுவரை பொறுப்புணர்வுடன் எழுதிய அவரது பேனா இந்த நாவல் முழுவதும் செக்ஸ் வர்ணனைகளும், காட்சிகளுமாக வரம்புமீறி விளையாடியிருந்ததுதான்.

உடனே அவருக்கு கோபமாக கடிதம் எழுதலாம் என்றாலோ, நேரில் போய் டோஸ் விடலாம் என்றாலோ முகவரி தெரியவி்ல்லை. அந்தச் சமயம் தினமலரில் வேலை கிடைக்க, மதுரையில் ஆறு மாதங்கள் பணியாற்றிய பின், கோவைக்கு பணி மாறுதல் கிடைத்து போயிருந்தேன். அங்கே ரா.கு.வின் அறிமுகம் கிடைத்துப் பழக ஆரம்பித்த நாட்களி்ன்போது இ.செள.ராஜன் மதுரையைச் சேர்ந்தவர் என்ற தகவலும் தெரிந்தது எனக்கு. ‌எழுத்தாளர் அபிமானத்துடன் ஊர் அபிமானமும் சேர்ந்து கொள்ள, ராஜேஷ்குமாரிடம் இந்திராஜியின் முகவரி வேண்டும் என்று கேட்டேன்.

‘‘அட்ரஸ் நினைவில்ல கணேஷ். ஆனா போன வாரம் கூட எனக்கு ஒரு லெட்டர் போட்டிருந்தார். எங்க வெச்சேன்னு நினைவில்ல. ஒரு ரெண்டு நாள் கழிச்சு வாங்களேன். தேடி வெக்கறேன்’’ என்றார் ரா.கு. எங்கள் நட்பின் ஆரம்ப காலகட்டம் அது என்பதால் நம்ம பங்க்‌ச்சுவாலிட்டி பத்தி அவருக்குத் தெரியவில்லை. சரியாக இரண்டு நாட்கள் விட்டு விட்டு மூன்றாவது நாள் அவர் வீட்டுக்குப் போய் (அவர் துணைவியார் தனலக்ஷ்மி தந்த டீயை ருசித்துவிட்டு) அவர் எதிரில் நின்று அதே விஷயத்தைக் கேட்டேன். அவர் ‘ஙே’ என்று விழித்தார். (அடர்த்ததியான) தன் தலையைச் சொறிந்தபடி ‌சொன்னார்: ‘‘நான் தேடிப் பார்த்துட்டேன் கணேஷ். எங்க போச்சுன்னு தெரியலை, கிடைக்கலை. ஏதாவது பத்திரிகை ஆபீஸ்லருந்து தொடர்கதை அத்தியாயம் கேக்க ‌ஃபோன் பண்ணுவாங்க. அப்ப கேட்டுச் சொல்றேன் கண்டிப்பா’’ என்றார்.

அப்படிச் சொன்னாரே தவிர, அவருக்கிருந்த பிஸியில் சொன்னபடி செய்ய அவரால் முடியவில்லை. நான் அவரை ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும், மற்ற விஷயங்களைப் பேசிவிட்டு கிளம்புகையில் இதைக் கேட்பதும் அவர் ‘ஹி... ஹி...’ என்பதும் தொடர்கதையாகிப் போனது. ஒரு கட்டத்தில் நான் சலித்துப் போய், ‘இனி ரா.கு.விடம் இதைக் கேட்டுப் பிரயோஜனமில்லை’ என்ற முடிவுக்கு வந்து அதைப் பற்றிக் கேட்பதை நிறுத்தி விட்டேன். இ.செள.ராஜனை சந்திக்கும் விருப்பத்தையும் சற்றே ஒத்தி வைத்திருந்தேன். அப்படியே பல மாதங்கள் கழிந்த பின்னர், எனக்கு இந்திரா செளந்தர்ராஜனைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிட்டியது. ஆச்சரியகரமான ஒரு விஷயம் என்னவென்றால்... அந்தச் சந்திப்புக்கு மூலகாரணமாக அமைந்தவர் நண்பர் ராஜேஷ்குமார், அவர் மூலமாகவே இந்திராஜியைச் சந்தித்தேன் என்பதுதான்!

அது எப்படி நிகழ்ந்தது என்பதை...

-தொடர்கிறேன்
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube