ஒரு காதல் கதை திரைப்படமாகிறது என்றால் என்னவெல்லாம் நடக்கும்...? காதல் ஜோடியின் காதலுக்கு எதிர்ப்பு வரும். ‘எதை நம்பிடா உனக்கு பொண்ணு குடுக்கறது?’ என்ற கேள்வி வரும். . காதலி தன் வீட்டில் சத்யாக்கிரகம் செய்து காதலுக்காக போராடுவார். கதாநாயகன் கஷ்டப்பட்டு உழைத்து (பலசமயம் ஒரே பாடலில்) பணம் சம்பாதித்து விடுவார். அதைத் தந்து காதலில் வெல்வார். அல்லது அவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைத் தொலைத்து விட்டு காதலியுடன் ஊரைவிட்டு ஓடுவார் அல்லது காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ளும். இவற்றுக்கிடையில் அவர்கள் காதலுக்கு பலர் உதவுவார்கள். கதாநாயகன் சிலபல சண்டைகளைச் செய்வார். கனவில் டூயட் பாடுவார். ----இவையெல்லாமே (இன்னும் நிறைய இருக்கு) பொதுவாகக் காதல் படங்களுக்கான பொதுவான ஃபார்முலா என்பதை நீங்கள் அறிவீர்கள். இவற்றில் பெரும்பான்மையை தன்னகத்தே கொண்டு, கதாநாயகனும் நாயகியும் பார்வைத்திறன் அற்றவர்கள் என்கிற வித்தியாசமான பின்புலத்தால் நல்ல படம் என்கிற பெயரைப் பெற்றிருக்கிறது ‘குக்கூ’ திரைப்படம்.
+ தன் ‘வட்டியும் முதலும்’ கட்டுரைத் தொடர்கள் மூலம் சாதாரண மனிதர்களின் உணர்வுகளைத் தொட்ட அசாதாரண எழுத்துக்களால் கவனம் ஈர்த்தவர் ராஜு முருகன். அவரின் முதல் திரைப்படமான இதில் பார்வையற்றவர்களின் உலகத்தை மிக இயல்பாகப் பதிவு செய்திருக்கிறார். நிறத்தை இளையராஜாவின் பாடல்கள் மூலம் அறிவதாக நாயகி சொல்வது, நாயகன் மற்றும் அவரின் நண்பர்களின் அனாயாசமான ஹாஸ்யப் பேச்சுகள் என்று பல விஷயங்களை நுணுக்கமாக காட்சிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.
- கதாநாயகன் தன் காதலிக்காக ரோட்டில் தாறுமாறாகச் செல்லும் வாகனங்களைப் பொருட்படுத்தாமல் (பலரின் சாவுகிராக்கி போன்ற திட்டுகளைத் தாங்கி) ஓடி எந்த வாகனத்திலும் இம்மியும் அடிபடாமல் ஓடி அவள் தொலைத்த பொருளை எடுத்துவரும் காட்சிகள் பல தமிழ்ப்படங்களில் எனக்கு எரிச்சலூட்டிய ஒன்று. இந்தப் படத்தில் பார்வையற்ற ஹீரோ அதைச் செய்கிற அரிய காட்சிதனைக் கண்ணுற என்ன புண்ணியம் செய்தனை யான்!
+ சந்திரபாபுவை நினைவுபடுத்துகிற ஒரு கேரக்டர் வடிவமைக்கப் பட்டிருக்கும் விதம. அதில் நடித்துள்ளவரின் இயல்பு மீறாத அருமையான நடிப்பு, எம்.ஜி,ஆராக நடித்தவர் படம் முழுவதும் ஒரு வசனமும் பேசாமல் நடமாடுவது (வாத்யார் வேஷம் போட்டதாலயோ என்னவோ நாயகன் கஷ்டத்தில் இருக்கும்போது தன் தங்கச்சங்கிலியை தானம் வழங்குகிறார்) இப்படி இயல்பான நடிப்பை நடித்தவர்களிடமிருந்து பெற்றிருக்கிறார் இயக்குனர். அவரே கதைசொல்லியின் கதாபாத்திரம் ஏற்று நடிததிருக்கும் உத்தியும் நன்று. நாயகனாக நடித்திருக்கும் தினேஷ் என்பவர் நன்றாகவே செய்திருக்கிறார். எனினும் நடிப்பில் அவரைவிட அதிகம் ஸ்கோர் செய்வதென்னவோ நாயகியான மாளவிகாதான்.
- 3 லட்ச ரூபாயுடன் காதலியின் அண்ணனைச் சந்திக்க வரும் நாயகனை போலீஸ் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து பின் இன்ஸ்பெக்டர் அவனை தன் பைக்கிலேயே சைதாப்பேட்டையில் நள்ளிரவில் டிராப் செய்து, அவன் பணப்பையை அவரிடத் தர, பார்வையுள்ள நமக்கே அந்தப் பணத்தை எண்ண பல நிமிடங்கள் பிடிக்கும் என்ற நிலையில் பார்வையற்ற நாயகன் அதை சில விநாடிகளிலேயே எண்ணி. “சார் அம்பதாயிரம் குறையுது” என்று கூவியபடி சிலஅடி தூரமே சென்றுவிட்ட அவரைத் துரத்துகிறான். அடாடா...! அதேபோல க்ளைமாக்சில் வேகமெடுத்து ஓடும் ரயிலிலிருந்து குதிப்பதும், பிளாட்பாரக் கடைகளில் இடித்தும்., தூணிலும் இடித்துக் கொண்டு வரும் காட்சி இருக்கிறதே... நானும் உணர்ச்சிவசப்பட்டு அருகிலிருந்த கோவை ஆவியின் தோள்களில் முட்டிக் கொண்டேன்.
+ பார்வைத்திறன் குறைந்தவர்கள் சிலரிடம் தங்களின் அந்தக் குறையைப் பயன்படுத்தி பணம் சேர்க்கும் குணம் இருக்கும். வேறு பலரிடம் தங்கள் ஊனத்துக்காக மற்றவர்கள் அனுதாபப்படுவது பிடிக்காத மிகை தன்னம்பிக்கை இருக்கும். கதாநாயகி நாயகன் செய்யும் உதவியை ஏற்க மறுப்பது. தன் கைடின் காதலி தரும் பழந்துணிகளை புறக்கணிப்பது ஆகிய காட்சிகளில் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் ராஜுமுருகன். அதேபோல் அவர்களிடம் இயல்பாகவே இருக்கும் நகைச்சுவையுணர்வை நாயகனின் நண்பனின் கதாபாத்திரத்தின் மூலம் சொல்லியிருப்பது அருமை. பல காட்சிகளில் ஸ்கோர் செய்கிறது அவரின் நகைச்சுவை. குறிப்பாக.. சர்ச்சில் ‘வொண்டர் வொண்டர்’ என்று பாதிரியார் போலவே அவர் சொல்லும் காட்சி.
- நாயகனைப் போல ஷார்ப்பான கேட்கும் திறன் தனக்கு இல்லையென்பதால் அவனுக்கு செண்ட் வாங்கித் தந்து அதன் மூலம் அவனை அடையாளம் காண நினைக்கிறாள் நாயகி. நாயகன் அந்த செண்ட்டை நண்பர்களுக்கும்., ஸ்டேஷன் மாஸ்டருக்கும் அடித்துவிட, அனைவரிடமும் அவனாக எண்ணிப் போய் பேசி ஏமாறுகிறார் நாயகி. க்ளைமாக்ஸ் காட்சியில் ரயில் நிலையத்தில் நாயகியைத் தேடியலையும் நாயகன் அவள் கிடைக்காத ஏமாற்றத்தில் படிக்கட்டில் நின்று அவர்களின் காதல் சந்திப்புக் குறியீட்டின்படி வாக்கிங் ஸ்டிக்கால் பலமாகத் தட்டுகிறான். பல கஷ்டங்களைச் சந்தித்த அந்த காதலர்கள் பிரிவதைப் பொறுக்காத வாயுதேவன் பரபரப்பான ரயில் நிலையத்தின் ஒலிகளைப் புறக்கணித்து நாயகியின் செவிகளில் அந்த ஒலியை மட்டும் கொண்டு சேர்க்கிறார். நாயகி மற்ற சப்தங்களால் துளியும் பாதிக்கப்படாமல் (க்ளைமாக்ஸ்லகூட நாயகிக்கு காது ஷார்ப்பாகலைன்னா எப்படிங்க படத்தை முடிக்கிறது?) ஒலி வந்த இடத்தைக் கண்டடைந்து நாயகனைத் தொட்டுணர்ந்து கட்டித் தழுவ, படம் முடிகிறது. (ஹப்பாடா!)
+ இயல்பான, ரசிக்கத்தக்க வசனங்கள் படத்தின் பலம். “செல்போன் இல்லாத காலத்துல காதலிச்சவன்லாம் புண்ணியம் பண்ணவங்கடா” என்கிற வசனத்திற்கு தியேட்டரில் பலத்த சலசலப்பு. இதுபோல படம் நெடுகிலும் ரசிக்க வைக்கிற வசனங்கள் அருமை. உறுத்தாத பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். நள்ளிரவில் ஹைவேஸில் தவிக்கும் கதாநாயகிக்கு ஆதரவு தந்து வேனில் அழைத்துச் செல்பவர் (இதற்குமுன் பார்த்த படங்களின் பாதிப்பில்) அவளுக்குத் தொல்லை தருபவராக மாறுவார் என்ற நம் எண்ணத்திற்கு மாறாக அவளுக்கும் நாயகனுக்கும் உதவுபவராக அவரைக் காட்டியிருக்கும் பாஸிட்டிவ் அப்ரோச் அருமை.
- “நான் போகிறேன்” என்று கோபித்துக் கொண்டு செல்லும் நாயகி அசால்ட்டாக மும்பை வரை போய் விடுவதும். அங்கே கன்னியாஸ்திரிகளுடன் சேர்ந்து சேவை செய்யும் பணி அவளுக்குக் கிடைப்பதும்., மும்பையில் அவளைப் பார்த்ததாக ராஜுமுருகன் தகவல் தந்த அடுத்த நிமிடம் நாயக்ன் மும்பை ரயிலைக் கண்டறிந்து பயணிப்பதும்.... நடைமுறையில் எத்தனை தூரம் சாத்தியமோ தெரியவில்லை...!
“மொத்தத்துல என்னதான்யா சொல்ல வர்றே?” என்று கேட்பவர்களுக்கு...! ‘இதுபோன்ற வித்தியாசமான படங்களை உற்சாகப்படுத்தினா தான் நல்ல படங்கள் நிறைய வரும்’ என்று என் நண்பரொருவர் சொன்னார். புதிய பாட்டிலிலில் பழைய கள்ளையே தந்திருப்பதை வித்தியாசம் என்று கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடில்லை. சமுதாயத்தைக் கெடுக்கிற விஷயங்களைச் சொல்லாமல் இருப்பதாலேயே, க்ளிஷேக்களைத் தவிர்ப்பதாலேயே... (அப்படியும் சொல்ல முடியாதபடி ஏகப்பட்ட அபத்தங்கள் படத்தில்) ஒரு படம் நல்ல படமாகி விடாது ஒருநாளும். ஆக, என் பார்வையில்... முதல் பாதி ஓ.கே. பின் பாதி ஐயையோ! (என்ன பார்வைடா உன் பார்வைன்னு யாரும் பாயாதீங்க. உலகசினிமாக்களைப் பார்த்து உயர்தர ரசனை வளர்த்துக் கொண்ட அறிவாளியல்ல நான். உள்ளூர் சினிமாக்களை விசிலடித்துப் பார்க்கும் பாமர ரசிகன் நான். என். பார்வை இந்த லட்சணம்தான்!.)