Tuesday, December 23, 2014

ஒரு சோதனை முயற்சி..!

Posted by பால கணேஷ் Tuesday, December 23, 2014

திப்புரை.காம் என்ற தளத்தில் நீங்க ரெஜிஸ்டர் செய்து, விமர்சனம் எழுத விரும்பும் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். உங்கள் மதிப்புரை வெளியிடப்படும் அதே நேரம் அந்தப் புத்தகம் உங்களுக்கே உடைமையாகி விடும். நான் அங்கு எழுதிய மூன்று மதிப்புரைகளில் ஒன்றை சற்றே வித்தியாசமாக கவிதை(?) நடையில் படைத்திருந்தேன். என்னுடைய தளத்தில் அதைப் பகிர்ந்து என் பதிவுகளை மீண்டும் துவக்குகிறேன் நண்பர்களே... 

        செங்கிஸ்கான்

பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தனர் மங்கோலியர் என்ற ஓரினம்
தனித்தனி குழுக்களாய் வாழ்ந்து தம்முள்ளேயே மோதினர் தினந்தினம்
கூடாரமிட்டு பருவந்தொறும் இடமாறிய அவருக்கிலையோர் ஆரிஜின்
அவ்வினங்களை ஓரரசாய் தனிப் பேரரசாய் மாற்ற வந்துதித்தார் டெமுஜின்!
தலைவனான தந்தை இறந்ததும் சிதறியோடியதவர் கூட்டம்
இலையளவும் டெமுஜின் கொள்ளவில்லை மனதில் வாட்டம்!
அகவை பத்திலேயே தன்னினிய குடும்பத்தின் தலைவரானார்
தகவை யிழந்து பிறிதோர் கூட்டத்திடம் சிக்கி அடிமையுமானார்!
நல்லோரொருவர் உதவ தப்பினார் அக்கூட்டத்தின் பிடியிலிருந்து
வல்லோனாக வேண்டுமென உறுதி கொண்டார் அடிமனதிலிருந்து!
நல்நண்பனாய் அவருக்கு அமைந்தனன் ஜமுக்கா என்பான்
வல்லரசுக் கனவை அன்னவன் டெமுஜினுக்குள் விதைத்தான்!
இந்நாளைய சச்சினைப்போல் அகவையில் மூத்த கன்னியை
அந்நாளில் டெமுஜின் சந்தித்தார்; அவளை மனதில் நன்னினார்!
நல்முகூர்த்த நாளொன்றில் அவளை மணமுடித்தார் மனமெலாம் மகிழ்வாம்
வல்லூறென வேறோர் கூட்டம் கவர்ந்து சென்றதோர் அவலமான நிகழ்வாம்!
காதல் மனையாளை மீட்க அவருக்கு படைதந் துதவினார் சிற்றரசர் ஆங்கான்
முதல் போரில் எதிரிகளை வென்றார் டெமுஜினுக்கோர் இணையிலைகாண்!
டட்டாரெனும் ஓரினத்தை அழித்திட ஆங்கான் வேண்டுகோள் விடுத்தார்
பட்டாரெனச் சென்று எதிரிகளைக் கொன்றெடுத்தார்; போரை வென்றெடுத்தார்!
மெல்ல மெல்லப் பெருகி வந்தது மக்கள் ஆதரவு டெமுஜினின் கூட்டணியில்
நல்ல நண்பன் ஜமுக்காவும் வளர்ந்து நின்றிருந்தான் எதிரியின் படையணியில்!
கூட்டத்தை வளர்க்க தடையாய் நண்பனே எதிர்நின்றதோர் பெருஞ்சோதனை
வாட்டத்தை உதறி வென்றார்; அவன் விரும்பியபடியே கொன்றார் நண்பனை!
பேரரசாய் முடிசூடிய டெமுஜினுக்கிடப்பட்ட பெயர்தான் செங்கிஸ்கான்
ஓரரசாய் மங்கோலிய இனத்தை மாற்ற தொடர்ந்து போர்செய்தா ரவர்காண்!
இட்டப்பட்ட பெண்ணை திருடும் மங்கோலிய வழக்கத்தை மாற்றியது கானின் ஆட்சி
சட்டத்தின் முன் அனைவரும் சமமே என்றுரைத்திட்டது செங்கிஸ்கானின் உயர்மாட்சி!
படைகளைத் திரட்டி ஒழுங்காக அணியணியாய் பிரித்திட்டார்
கடைக்கோடி வீரன்வரை தானும் நெருக்கமாய்ப் பழகிட்டார்!
உலகையே ஓர்குடைக்கீழ் கொணர விரும்பினான் அலெக்சாந்தர்; அன்னானுக்கு
பலகாலம் முன்பே கான் அக்கனவை படையினரிடம் விதைத்திட்ட முன்னோன்!
போர்களிலேயே வாழ்நாளைக் கழித்திட்டது கானின் பெருமை
பார்புகழும் மன்னரென்றாலும் வாராமல் நின்றிடாதே முதுமை!
தந்தைக்குப் பின் ஆரென்று அடித்துக் கொண்டது வாரிசுகளின் பிழைதான்
சிந்தை மிகக்குலைந் தவர்க்குள் ஒற்றுமைசெய முயன்றது கானின் மனந்தான்!
உலகை வெல்லும் கனவை வாரிசுகளிடம் ஈந்து மரித்ததவர் உடலம்
பலகாலம் அதன்பின் மங்கோலியப் பேரரசின் புகழ் மங்காப் படலம்!
கான் மறைந்தபின் கிளைகிளையாய் பெருகியது மங்கோலியப் பேரரசு
சீனத்திலிருந்து இந்தியாவின் மூக்குவரை நீண்டு வளர்ந்ததவ் வல்லரசு!
செங்கிஸ்கான் மரணதேவனை முத்தமிட்டது ஆயிரத் திருநூற் றிருபத்தாறாம் ஆண்டு
மங்கிடாப் புகழுடன் மங்கோலியப் பேரரசு அதன்பின் விளங்கியது ஓர் நூற்றாண்டு!
தகவலாய்ப் பள்ளியில் படித்திட என்றும் கசந்திடும் ஒன்று வரலாறு
கலகலவென கதையாய்ப் படித்தால் மனதில் இறங்கிடும் ஒருவாறு!
கதையென கானின் வரலாற்றை உரைத்திட்ட முகிலின் கைவண்ணம்
இதைப் படிப்போரெல்லாம் வியந்து பாராட்டிடுவர்; இது திண்ணம்!


வாசகர்கூடத்தில இப்போது.... எம்.ஜி.ஆர்.
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube