Tuesday, February 28, 2012

னதிற்குத் தோன்றுவதை எல்லாம் எழுதி பதிவாக்கிக் கொண்டிருக்கும் இவனை, ‘பள்ளிப் பருவத்தைக்‌ கொஞ்சம் திரும்பிப் பாரண்ணா’ என்று தன்னுடைய இந்தப் பதிவின் மூலம் பணித்தார் தங்கை ராஜி. அவ்வன்பு வேண்டுகோளினை ஏற்று, சற்றே பின்னோக்கிப் பார்ககிறான் இவன்!

வீட்டிலிருந்து இரண்டாவது தெருவில் பள்ளி என்பதால், அப்பா வாங்கித் தந்த அலுமினியப் பெட்டியில் புத்தகங்களைச் சுமந்தபடி, எம்.ஜி.ஆர். ஸ்டைலில் கைவீசி இவன் வர, வீட்டு மாடியிலிருந்து அப்பாவும் அம்மாவும் கையசைக்க, பதிலுக்கு இவன் உற்சாகமாகக் கையசைத்தபடி ஓடிவர, பெட்டி திறந்து புத்தகங்கள் கீழே கொட்டியதையும், தெருவோரச் சிறுவன் ஒருவன் அதைப் பொறுக்கிக் கொண்டு ஓடுவதையும் கண்டு, அம்மாவும் அப்பாவும் பதறிக் கையசைக்க, மேலும் உற்சாகமாய் கையசைத்தபடி (திரும்பிப் பாராமலே) வீட்டுக்கு வந்து இவன் திட்டு வாங்கியது ஒன்றிலே.... வகுப்பு ஒன்றிலே!

ள்ளிப் பரீட்சையன்று எங்கிருந்தோ ஒலிபெருக்கியில் மக்கள் திலகம் ‘சப்லா மாமா டோலக் தாத்தா’ என்று பாடியது மிதந்துவர, அதைக் கேட்ட சுகத்தில் கண்ணுறங்கி எதுவும் எழுதாமல் வந்து, அப்பாவியாய் வீட்டில் நடந்ததைச் சொல்ல, அவர்கள் சிரித்து மகிழ்ந்ததும், அப்பாவை இவன் இழந்ததும் இரண்டில்தான்... வகுப்பு இரண்டில்தான்!

சித்தப்பா கொடுத்த பத்துப் பைசாவை வாயில் அடக்கிய வண்ணம் வகுப்பைக் கவனிக்க, மங்கையர்க்கரசி டீச்சர் ஏதோ சொன்னதற்கு சிரித்து, காசு தொண்டையைத் தாண்டி உட்செல்ல, இவன் கண்கள் செருகி, மங்கை டீச்சரை அழவைத்து, சித்தப்பாவை ஹாஸ்பிடலுக்கு அலைய வைத்தது (மங்கை டீச்‌சர் உடனே வாழைப்பழங்கள் வாங்கித் தந்து சாப்பிட வைத்த புத்திசாலித்தனத்தால் மறுநாள் எக்ஸ்ரேயில் வயிற்றில் எதுவும் இல்லை, வெளியேறி விட்டது என்பது தெரிந்தது.) மூன்றுங்கோ... வகுப்பு மூன்றுங்கோ!

கேட்ட மாத்திரத்தில் மனதில் பதித்துக் கொள்ளும் திறனை இயற்கை தந்திருந்ததால், இரண்டு பக்க விடையை ஒரே மூச்சில் சொல்லி, ட்யூஷன் மிஸ்ஸிடம் இவன் பாராட்டுப் பெற்றதும், என்னை உதாரணம் காட்டி மிஸ் திட்டியதால் உடன் படித்த சேட்டுப் பெண்களின் வயிற்றெரிச்சலைக் ‌கொட்டிக் கொண்டதும் நான்கிலே... வகுப்பு நான்கிலே!

ண்ணனுடன் கோவைக்கு குடிபெயர, இவன் கோலி குண்டும், கிட்டிப்புள்ளும் கதியென தெருத் தெருவாய் அலைந்தது ஐந்தல்லவா... வகுப்பு ஐந்தல்லவா!

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் அடுத்த ஆண்டு படிக்க, வயல் வெளிகளின் ஊடே திரிந்து வகுப்புக்குச் சென்றதும், பாதையில் சர்வசகஜமாய் நடமாடும் பாம்புகளைக் கண்டு இவன் பயந்ததும், கால் பந்து ஆட்டத்தை வெறியுடன் ஆடியதும் ஆறிலேதான்... வகுப்பு ஆறில்தான்!

மலஹாசன் என்ற புதிய கதாநாயகனைப் பார்த்து ரசித்ததும், ஸ்ரீதேவி என்கிற நடிகையை இவன் ஜொள்ளு விட்டதும் ஏழிலேயல்லவா... வகுப்பு ஏழிலே அல்லவா!

துரையில் பாரதியார் பணிபுரிந்த பள்ளி என்கிற பெருமையுடைய சேதுபதியில் இவன் படித்ததும், நிறைய சினிமாக்களை பார்த்ததும், அப்படியும் வகுப்பில் இரண்டாவதாக வந்ததும் (சிவகுமார்னு ஒரு வில்லன் இவனைத் தாண்டி ஃபர்ஸ்ட் வந்தடுவான்) எட்டுங்க... வகுப்பு எட்டுங்க!

தேவகோட்டைக்கு அடுத்த வருஷமே குடும்பம் பெயர, தேபிரித்தோ ஸ்கூல்ல இவன் படிச்சதும், கால்பந்து விளையாடி நண்பனோட கன்னத்துல ரத்தக்கோடு ‌போட்டதும், அதுவே அழுத்தமான நட்பானதும் (என் பதிவு: ரத்தத்தில் பூத்த நட்பு) நிறைய நிறைய சினிமாக்கள் பார்த்ததும் ஒன்பதில்தான்... வகுப்பு ஒன்பதில்தான்!

டுத்த ஆண்டில் காரைக்குடியில் குடும்பம் இருக்க, தினமும் பஸ்சில் தேவகோட்டை போய் வந்ததும், பஸ் அதிர நண்பர்கள் குழாத்துடன் இவன் கொண்டாடி மகிழ்ந்ததும், பெண் பிள்ளைகளுக்காக சில சாகசங்கள் செய்ததும், எல்லாம் தாண்டி நல்ல சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றதும் எல்லாமே பத்துங்கோ... வகுப்பு பத்துங்கோ!

வன் வார இதழ், மாத நாவல்கள் எல்லாம் படிக்கத் துவங்கியதும், டைப்பிங் கற்றுத் தேறியதும், ‘ஐங்கரன் கீதமாளிகை’ நடத்தியவரை நட்பாக்கிக் கொண்டு வகுப்பு நேரம் தவிர, அங்கேயே பழியாய்க் கிடந்து இசை‌ கேட்டு மகிழ்ந்ததும், காரைக்குடி கொப்புடையம்மன் திருவிழாவில் இரவெல்லாம் கோலாகலமாய் கழித்ததும் +1ல தாங்கோ... வகுப்பு +1ல தாங்கோ...

காரைக்குடியில் இவனுக்குத் தனி நண்பர்கள் குழு அமைந்ததும், ஓய்வு நேரத்தில் செஸ் விளையாட்டும், சாக்பீஸ் செய்வதும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும், புத்தகங்கள் படிப்பதுமாய் இனிமையான பொழுதுகள் அமைந்தது +2வில் அன்றோ! வகுப்பு +2வில் அன்றோ!


தொல்லைகள் அற்ற, என்றும் திரும்பி வராத அந்த பிள்ளைப் பருவத்தை எண்ணி இவன் ஏக்கத்துடன் இருப்பது தொடருமன்றோ எந்நாளும்! இந்த நினைவலைகளைத் தொடர்பதிவாக்கும்படி தங்கை ராஜி கோரியதால் இவன் தனக்குப் பிடித்த ஐவரை அவர்களின் பள்ளிப் பருவத்தைத் திரும்பிப் பார்க்கும்படி அன்புடன் அழைக்கிறான்.

1. நண்பர் மதுமதி.
2. நண்பர் நடனசபாபதி
3. நண்பர் வெங்கட் நாகராஜ்
4. ஷைலஜா அக்கா
5. தோழி ‘தென்றல்’  சசிகலா

இவர்களின் பள்ளிப் பருவ அனுபவங்களைப் படித்து மகிழ, உங்களுடன் சேர்ந்து காத்திருக்கிறான் இவன்!

Sunday, February 26, 2012

கடுகு அவர்களின் சதாபிஷேகம்

Posted by பால கணேஷ் Sunday, February 26, 2012
ன்னுடைய நண்பரும், நலம் விரும்பியுமான, அகஸ்தியன், கடுகு ஆகிய பெயர்களில் எழுதி வரும் திரு.பி.எஸ்.ரங்கநாதன் - கமலா தம்பதியினரின் சதாபிஷேக விழா நேற்று (25.2.12) நடைபெற்றது. கடுகு அவர்கள் பிரபல பத்திரிகைகளில் எழுதிப் பெயர் பெற்ற எழுத்தாளர் மட்டுமின்றி வலைத்தளத்திலும் தொடர்ந்து எழுதி வரும் உற்சாக இளைஞர். இந்த விழாவில் வலையுலகின் சார்பாக நானும், ஷைலஜா அக்காவும் மகிழ்வுடன் கலந்து கொண்டோம்.
நூல் வெளியீடு!

நானும் இருக்கேன்ல... கண்டுபிடிங்க!
நானும் ‌ஷைலஜாக்காவும் ஆசிபெற்ற போது...
நானெல்லாம் நகைச்சுவையாக எழுத வேண்டும் என்று நினைத்து முயன்றால்தான் அது வரும். கடுகு ஸாருக்கோ எழுத வேண்டும் என்று நினைத்தாலே நகைச்சுவைதான் பொங்கி வரும். எழுத்தின் மூலம் சிரிக்க வைப்பது மிகக் கடினம். அக்கடினமான செயலை அநாயசமாகச் செய்து வரும் அவர் பேசினாலே நகைச்சுவை தெறிக்கும்.  என் நண்பர் ‘க்ளிக்’ ரவி அவரைப் பேட்டி கண்டபோது...

‘க்ளிக்’ ரவி : நீங்க முதல்முதலா எப்ப எழுத ஆரம்பிச்சீங்க ஸார்?

கடுகு ஸார் : அது... அஞ்சு வயசுல திண்ணைப் பள்ளிக கூடத்துல சேர்த்தபோது, நெல்லுல விரலைப் பிடிச்சு ‘அ’ எழுத வெச்சாங்க. அப்போ...

‘க்ளிக்’ ரவி: அவ்வ்வ்வ்வ்வ! அதைக் கேக்கலை ஸார். பத்திரிகையில எப்ப எழுத ஆரம்பிச்சீங்க?

விழாவில் ‘கமலாவும் நானும்’ என்கிற புத்தகமும் (வலையில் அவர் எழுதியவற்றின் தொகுப் பும் பல சிறுகதைகளும்), ‘நாலாயிர திவ்வியப் பிரபந்தம்’ (பாடல்களும், உரையுமாக பதம் பிரித்து வெளியிட்டிருக்கும் இரு பெரிய தொகுப்புகள்) என்கிற புத்தகங்களின் வெளியீட்டு விழாவும் நடந்தது. விலைமதிப்பற்ற இந்த அரிய புத்தகங்களை வந்திருந்தவர்கள் அனைவருக்கும் பரிசாக உவப்புடன் வழங்கினார் கடுகு அவர்கள். விழாவில் திரு.ராணி மைந்தன் பேசும்போது...

‘‘எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியின் மனைவி, கடுகு ஸாரிடம், ‘கமலாவும் நானும் புத்தகத்தைப் படிச்சேன். கீழ வைக்கவே மனசு வரலை ஸார்’ என்க, கடுகு ஸார் உடனே, ‘சில புஸ்தகத்தை கீழே வெச்சுட்டா மறுபடி எடுக்க மனசு வராது’ என்று பளிச் பஞ்ச் அடிக்க, அவர் உடன் சிரித்து விட்டார்’’ என்று சொல்லவும், விழாவில் கலந்து கொண்ட அனைவரும் கூடச் சிரித்தோம்.
நெகிழ்வுடன் கடுகு ஸார்!

விழாவில் கடுகு அவர்களின் பேத்தி அருந்ததி பகவத் கீதையின் ஒரு அத்தியாயத்தை (கடினமான வடமொழி ஸ்லோகங்களை) அட்சரம் பிசகாமல் அழுத்தம் திருத்தமாக அழகாகப் பாடினார். அமெரிக்காவில் வசிக்கும், ஆங்கிலத்தில் படிக்கும் குழந்தை திருத்தமாக இப்படிப் பாடியது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி!

இயக்குனர் ஸ்ரீதர், சித்ராலயா கோபு ஆகிய இருவரும் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்து கடுகு ஸாரின் நெருங்கிய நணப்ர்கள். அந்த நட்பின் உரிமையுடன், நெகிழ்வுடன் சுவாரஸ்யமாகப் பேசி அசத்தினார் திரு.சித்ராலயா கோபு அவர்கள். எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி, நடிகர் திரு.காத்தாடி ராமமூர்த்தி, ‘கல்கி’ ராஜேந்திரன் அவர்கள், பத்திரிகையாளர் திரு.ராணிமைந்தன், ஹ்யூமர் கிளப் திரு.சிரிப்பானந்தா, எழுத்தாளர் ‌ஜே.‌எஸ்.ராகவன், வலையுலகிலும் பிரபலமான எழுத்தாளர் ஷைலஜா அக்கா, நான் என்று பல பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டு, வாழ்த்தி மகிழ்ந்தார்கள். (சந்தடி சாக்குல என்னையும் சேர்த்துக்கிட்டதை கண்டுக்காதீங்கப்பா)
கடுகு ஸாரின் குடும்பம்!

வந்திருந்த அனைவருக்கும் கடுகு ஸாரின் புதல்வி ஆனந்தி நன்றி கூறினார். கடுகு ஸார் மேடையில் பேச மாட்டேன் என்று முன்பே சொல்லியிருந்தார். எனினும் சில வார்த்தைகள் பேசித்தானாக வேண்டும் என்ற அன்பு வற்புறுத்தலினால், மன நெகிழ்வுடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். விழாவில் கலந்து கொண்டு, கடுகு ஸார் அன்பளிப்பாக வழங்கிய பொக்கிஷ புத்தகங்களையும் பெற்றுக் கொண்டு திரும்பிகையில் மிகுந்த மன நிறைவும், மகிழ்ச்சியும் இருந்தது.

80ம் கல்யாணம் செய்து கொண்டு, முப்பது வயது இளைஞருக்குரிய உற்சாகத்துடன் இன்றும் எழுதி வரும் கடுகு அவர்கள் இன்னும் நிறைய எழுதி நம்மை மகிழ்விக்கவும், திரு.பி.எஸ்.ரங்கநாதன் - கமலா ரங்கநாதன் தம்பதிகள் பல்லாண்டு காலம் நீடூழி வாழவும் நீங்களும் என்னோடு சேர்ந்து வாழ்த்துங்கள். (விழாவில் ராணிமைந்தன் அவர்கள பேசும்போது எனக்கு ஏற்புடைய ஒரு கருத்தைச் சொன்னார்: ‘‘ஆசி பண்றதுக்குத்தான் வயசு வேணும். வாழ்த்தறதுக்கு வயசு தேவையில்ல... நல்ல மனசு இருநதாலே போதும். அதனால நாம எல்லாரும் அவரை வாழ்த்தலாம்’’ என்று. ஆகவே நீங்களனைவருமே வாழ்த்தலாம்) கடுகு ஸார் என் வலைத்தளத்தை தவறாது பார்ப்பார் என்பதால் (என் பாக்கியம்!) உங்கள் வாழ்த்துக்கள் அவரைச் சென்றடைந்து விடும்.

Thursday, February 23, 2012

டி.வி.யில் சரிதா!

Posted by பால கணேஷ் Thursday, February 23, 2012
ன்று அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வரும்‌போதே ஆச்சரியம் காத்திருந்தது. அலங்கார பூஷணியாக (பூசணி இல்லங்க...) சிரித்த முகத்துடன் வரவேற்றாள் சரிதா. ‘‘என்னங்க... முகம் கழுவிட்டு வாங்க. பக்கோடாவும், கேரட் அல்வாவும் பண்ணிருக்கேன். தர்றேன்...’’ என்றாள்.

‘‘என்ன விசேஷம்? ஊர்ல மாடு கன்னு போட்டுட்டதா உங்கம்மாட்டருந்து லெட்டர் எதுவும் வந்ததா? இல்ல... உங்கண்ணன் மகன் அதிசயமா ப்ளஸ் டூ பாஸ் பண்ணிட்டானா?’’

‘‘எங்க பக்கத்து மனுஷங்களை வம்புக்கிழுக்கலைன்னா தூக்கமே வராதே உங்களுக்கு. அதெல்லாம் ஒண்ணுமில்லங்க. நான், லோசனி, கல்பனா, பார்வதி எல்லாரும் கயா டிவியில லூஸ்ஷாட் ப்ரோக்ராம்ல வரப் போறோம். நடிகை ‘கப்பு’வை நேர்ல பாக்கப் போறோம்ல... அதுக்காகத்தான்...’’

‘ஙே’ என்று விழித்தேன். ‘‘அடியேய்... ப்ரோக்ராம்ல வரணும்னு நீ முடிவு பண்ணிட்டாப் பத்தாது. அவங்க ஒத்துக்கணுமே...’’ என்றேன்.

‘‘தெரியும் எல்லாம். நாங்க நாலு பேரும் செலக்ட் ஆயிட்டதாவும், வர்ற வாரம் ரெகார்டிங்குக்கு வரணும்னும் இன்னிக்குத்தான் ஈ மெயில் வந்தது. ‘கப்பு’வை நேர்ல பாத்துப் பேசப் போறேனே...’’ என்றாள் பூரிப்பாக. ‘‘கப்புன்னா ‌எனக்கு ரொம்பப் பிடிக்கும்...’’

‘‘ரெண்டு மூணு நாளா நீ சரியாவே சோப் போட்டுக் குளிக்காததுலயே தெரியுது! பக்கத்துல வந்தாலே ‘கப்பு’தான்’’ என்றேன்.

என் தலையில் குட்டினாள் (நல்லவேளை... மெல்லமாகத்தான், செல்லமாகத் தான்!). ‘‘சும்மா கேலி பண்ணாதீங்க. இந்த புரோகிராமுக்கு லோசனிதான் அப்ளிகேஷன் எழுதிப் போட்டா....’’

‘‘யாரு, அந்த ‘விபரீத லோசனி’யா?’’

‘‘இப்படிப் பட்டப்பேரு வெச்சுக் கூப்பிடறதை விடுங்கன்னு எத்தனை தரம் ‌சொல்லிட்டேன். உங்களைல்லாம் உங்க ஃப்ரெண்ட் ஹேமாவை விட்டு நறுக்குன்னு குட்ட விட்டாத்தான் சரியா வரும்...’’ என்றாள் கோபமாக.

‘‘பின்ன என்னன்னு லோசனியைக் கூப்பிடறதாம்? நமக்குக் கல்யாணம் ஆன புதுசுல அவ வீட்டுக்கு நீ கூப்ட்டப்ப வந்து நான் பட்டபாடு மறக்க முடியுமா, என்ன...? அவ பாட்டுக்கு டி.வி. ‌ஷோவுக்கு ஸ்னேக்காவைக் கூட்டிட்டு வந்துடப் போறா... அப்புறம் புரோக்ராமை விட்டு ‘கப்பு’ ஓடிப் போய்டுவா...’’

‘‘அவ ஒண்ணும் அப்படில்லாம் பண்ண மாட்டா... நீங்களா எதுவும் கிளப்பி விடாதீங்க... அவ அதுக்கப்புறம் எத்தனை தடவை உங்ககிட்ட ஸாரி கேட்டா? நீங்கதான் மறுபடி அவ வீட்டுக்கு வரமாட்டேன்னுட்டிங்க...’’

‘இடைச் செருகலாய் ஒரு சின்ன ப்ளாஷ்பேக்:

லோசனி வீட்டுக்கு நாங்கள் விருந்துக்குப் போனபோது, அவள் கணவர் ராஜேந்திரனும் அவளும் அன்பாக வரவேற்றார்கள். என்னவள், அவள் தோழியுடன் சமையல் கட்டுக்குப் போய்விட, நான் அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்தபடி, எதிரில் சோபாவில் அமர்ந்திருந்த ராஜேந்திரனோடு பேசிக் கொண்டிருந்தேன். திடீரென்று என் கண்கள் நிலைகுத்தி நின்றன. அது...?

‘‘பாம்... பாம்...’’ என்று பெரிய எழுத்தில் நான் அலறிய அலறலில் பக்கத்து ஃப்ளாட்காரர்கள் இரண்டு மூன்று பேர் ஓடி வந்தார்கள்.

‘‘எங்க சார் இருக்கு பாம்? யார் பாம் வெச்சது?’’

பேச வராமல் நடுங்கியபடி கை காட்டினேன்- ராஜேந்திரனின் தோளுக்கு அருகில் படமெடுத்து நின்றிருந்த பாம்பை. ‘‘இதுக்குத்தானா சார் இப்படிக் கத்தினீங்க? தெரிஞ்சிருந்தா நாங்க வந்திருக்க மாட்டோம்ல...’’ என்றுவிட்டு அவர்கள் போய் விட்டனர்.

‘‘என்ன வேணும் ஸ்னேக்கா?’’ என்று அதைக் கையிலெடுத்தா ராஜேந்திரன். ‘‘பயப்படாதீங்க. இது லோசனி வளர்க்கற செல்லம். நம்மளை ஒண்ணும் பண்ணாது. ஸ்னேக்கா... ஸாருக்கு ஹலோ சொல்லு...’’ என்று அதை என் பக்கமாக நீட்ட, அலறியடித்து, உளறிக் கொட்டி, கிளறிமூடி வெளியே ஓடிவந்து விட்டேன்... அஃப்கோர்ஸ் சரிதாவையும் இழுத்துக் கொண்டு.

ப்ளாஷ்பேக் ஓவர்!

‘‘நல்லவேளை... அவளுக்கு சிங்கம், புலில்லாம் வளர்க்கணும்னு தோணலை. இவளை ‘விபரீதலோ சனி’ன்னு கூப்பிடாம எப்படிக் கூப்பிடறதாம்? சரி, அவளை விடு... அந்தக் கல்பனா... அவ பேசறது கன்னடமாவும் இல்லாம, தமிழாவும் இல்லாம சங்கடமா இல்ல இருக்கும். ‘பகல்’ன்னு சொல்லச் சொன்னா ‘பகள்’ன்னு அழுத்தமா உச்சரிப்பா. வார்த்தைய முடிக்கும் போதெல்லாம் ஒரு ‘ஆமாவா’ வேற...’’

‘‘லோசனிக்கு ஜெனரல் நாலேட்ஜ் ஜாஸ்தி. அதனால அவ வேணும். அவ பேசறதை ‘கப்பு’ புரிஞசுப்பாங்க. அவங்க பேசற தமிழே அந்த லட்சணம்தானே...!’’ சிரித்தாள் சரிதா.

‘‘நீங்க ரெண்டு பேரும் சரி... அந்த பார்வதியை ஏன் புடிச்சே? டிவி சீரியலும், சினிமாவும் பாக்கறதைத் தவிர வேற ஒண்ணுமே தெரியாதே அதுக்கு?’’

‘‘அதான் செலக்ட் பண்ணினோம். எப்படியும் சினிமா பத்தி ஏதாவது கேள்வி வரும்ல? அப்ப அவ தேவைப்படுவா... வர்ற ஸண்டே ரெக்கார்டிங். நீங்க வேற எந்த கமிட்மெண்ட்டும் வெச்சுக்காதீங்க. என்கூட ஷோவுக்கு வர்றீங்க...’’ என்றாள் உத்தரவாக சரிதா. சரியென்று தலையாட்டினேன். (வேறு வழி?)

ஞாயிற்று்க்கிழமை காலையில் நான்கு தோழிகளும், நான்கு கணவர்களும், ஆறு குழந்தைகளுமாக வேனில் கிளம்பினோம். (சரிதா கேப்டன் என்பதால் வேன் ஏற்பாடு என் செலவில்... அவ்வ்வ்வவ்!)

டி.வி. ஸ்டேஷனில் நிகழ்ச்சி நடக்கும் ஹால் நன்றாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியைப் பற்றி விரிவாக லெக்சர் தந்துவிட்டு நடிகை ‘கப்பு’வை அறிமுகம் செய்து வைத்தார்கள். இந்தப் பெண்கள் வாயெல்லாம் பல்லாக அவளிடம் பேசினார்கள். ‘‘உங்க ஹஸ்பெண்ட்ஸை அறிமுகம் பண்ணி வைங்க’’ என்றாள் அவள். ஒவ்வொருவராக அறிமுகம் செய்ய, என் பக்கம் வந்த போது, நான் இந்தியில் ‘நலமாக இருக்கிறீர்களா?’ என்று கேட்டேன். அவள் வாயெல்லாம் பல்லாக ‘அச்சா பய்யா’ என்றாள்.

‘‘என்னங்க... இவ்வளவு வளர்ந்துட்டிங்க... உங்களப் போயி பையன்ங்கறா?’’ என்று என் காதைக் கடித்தாள் சரிதா.

‘‘அடியே... பையன் இல்லடி பய்யான்னா இந்தில சகோதரான்னு அர்த்தம்...’’ என்று அடிக்குரலில் விளக்கினேன்.

கப்பு அங்கிருந்து, ‘‘என்ன கேக்கறாங்க அவங்க..?’’ என்றாள். அப்போது என் நாவில் ஸெவன் அன்ட் ஹாஃப் இருந்திருக்க வேண்டும்... ஒரு கேள்வி கேட்டேன்.

‘‘ஆமா, நீங்க ஏன் ‘கப்பு’ன்னு பேரு வெச்சுக்கிட்டீங்க?’’

‘‘அதுவா? எங்கம்மா வெச்ச பேர் கற்பகவல்லி. ரொம்ப்ப ஓல்ட் பேஷன் நேமா இருக்கேன்னு சுருக்கி ‘கப்பு’ன்னு வெச்சுக்கிட்டேன். எங்கம்மா செல்லமா என்‌ன அப்டித்தான் கூப்டுவாங்க, யுநோ...’’ என்றாள்.

‘‘நல்லவேளை... உங்கம்மா உங்களுக்கு ‘குஸுமாம்பாள்’ன்னோ ‘மண்டோதரி’ன்னோ பேர் வெக்கலை. வெச்சிருந்தா எப்படிச் சுருக்கிருப்பீங்களோ...’’ என்றேன்.

வாய்விட்டுச் சிரித்து, ‘‘நாட்டி’’ என்று அருகில் வந்து தோளில் குத்தினாள். என்ன எழவு சென்ட்டைப் போட்டிருந்தாளோ... நிஜமாகவே ‘கப்பு’தான்!

நிகழ்ச்சி ஆரம்பமானது. பலியாடுகள் (அட, கணவர்கள்தான்) பார்வையாளர் காலரியில் அமர்ந்து கொண்டோம். சரிதா பாடுவதில் இப்போது கொஞ்சம் தேறிவிட்டதால் ஒரு பாட்டுப் பாடினாள். சங்கிலியில் கட்டப்பட்டிருக்கும் யானை உடம்பை அசைப்பது போல உடலை லேசாக அசைத்து சரிதாவின் பாட்டுக்கு ஆடினாள் ‘கப்பு’. (இவளைவிட அழகாக சரிதா விடும் ‘பாட்டு’க்கு நான் வீட்டில் ஆடுவேனே...)

முதல் ரவுண்டிற்கு சரிதாவையு்ம், எதிரணி கேப்டனையும் அழைத்தாள் ‘கப்பு’. ‘உப்புமாவை ரவை இல்லாவிட்டால் வேறு எதையெல்லாம் வைத்துப் பண்ணலாம்?’ என்று அவள் கேட்க, சரிதா பஸ்ஸரை அழுத்தி, ‘‘சேமியா’’ என்றாள். போர்டு அதை முதல் எண் விடையாகக் காட்டிவிட, இவள் டீமின் அருகில் வந்து அதே கேள்வியை கல்பனாவிடம் கேட்டாள் கப்பு. ‘‘அவள்ள்’’ என்றாள் கல்பு. ‘‘அவள்ன்னு ‌சொன்னீங்கன்னா... எவள்?’’ என்று கப்பு, போர்டிடம் கேட்க அது ‘பாய்ங்ங்’ என்றுவிட எதிரணிக்கு பாயிண்ட் போனது. ‘‘அடிப்பாவி... அது அவல்டி, அவள் இல்ல’’ என்று இங்கு சரிதா மெல்லிய குரலில் சீறிக் கொண்டிருந்தாள். ‘‘ஆமாவா?’’ என்றாள் கல்பனா.

ஜெனரல் நாலெட்ஜ் கேள்விகள் கேட்கப்பட்டன. இவர்கள் பதிலளித்த அழகு இருக்கிறதே...

கப்பு: ஆப்பில் பலம் கீல விலறது புவிஈர்ப்பு விசையினாலன்னு கண்டுபுடிச்ச வின்னானி யாரு?

சரிதா: (அடுத்த நொடியில்) எடிசன்! (நான் தலையிலடித்துக் கொண்டேன்.) போர்டு: நியூட்டன் என்றது.

கப்பு: சர்க்கரை நோயாளிகள் சர்க்கரைக்குப் பதிலாக எந்த இனிப்பைப் பயன்படுத்துவார்கள்?

கல்பனா: வெள்ள்ளம்! (அனைவரும் சிரிக்க, போர்‌டு ‘வெல்லம்’ என்றது.)

இந்த லட்சணத்தில் இவர்கள் ‘அழகாக’ விளையாடி போட்டியைத் தோற்றுவிட, ‌நீட்டப்பட்ட மைக்கில் ‘எங்களுக்கு ப்ரொக்ராம்ல கலந்துக்கறதை விட ‘கப்பு’வைப் பாக்கறதுக்குதான் ஆசை. அதனால வருத்தமில்லை’ எனறு பேட்டி(?) வேறு தந்தார்கள். திரும்பி வருகையில் அனைவரும் ஹோட்டலில் சிற்றுண்டி(!) அருந்திவிட்டுத் திரும்பினோம். ஆக, சரிதா டி.வி.யில் தோன்றிய வகையில் எனக்கு ஆன செலவு எட்டாயிரம் ரூபாய்! அவ்வ்வ்வ்!

Tuesday, February 21, 2012

நடை வண்டிகள் - 5

Posted by பால கணேஷ் Tuesday, February 21, 2012
சுபாவும், நானும் - 2
 
சுபா எனக்குப் பெரிய பொறுப்பு கொடுக்கப் போவதாகச் சொன்னதைச் சொல்லியிருந்தேன் அல்லவா? அது...

சுபா எழுதிய சிறுகதைகள் 350க்கும் மேல் எண்ணிக்கையில் இருந்தன. அவற்‌றையெல்லாம் ‌டைப் செய்து, ஸாஃப்ட் காப்பியாக கணிப் பொறியில் சேமித்து வைத்துக கொள்ள விரும்பி, அந்தப் பணியைச் செய்துதர இயலுமா என்று என்னிடம் கேட்டார்கள். அது அவசரமாக முடிக்க வேண்டிய பணியல்ல என்பதை விளக்கி, அதற்காக ஒரு குறுந்தொகையையும் (இலக்கிய புத்தகம் அல்ல... Small Amount எனப் பொருள் கொள்க) தருவதாகச் சொன்னார்கள். என்னடா இது... Sugarcane ஈட்டிங்குக்கு Wages கூடக் கிடைக்கிறதே என்று வியந்து உடனே சம்மதித்தேன். ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை இருந்தது.

அப்போது என்னிடம் சொந்தமாகக் கம்ப்யூட்டர் இல்லை. அப்போது திருப்பூரின் தினமலர் அலுவலகத்தில் நான் இருந்தேன். கரூரில் இருக்கும் என் நண்பன் ஸ்ரீதரனிடம் சொந்தமாக கம்ப்யூட்டர் இருந்தது. ஆகவே அலுவலகத்தில் (முடிந்தால்) கொஞ்‌சமும், அவனையும் துணை சேர்த்துக் கொண்டு கரூரில் கொஞ்சமாக வேலையை முடித்து விடலாம் என்று திட்டமிட்டு சுபாவிடம் சம்மதம் சொன்னேன்.
நா....னே எடுத்த படம்!

மறுமுறை சென்னை வந்தபோது ஸ்ரீதரனையும் உ‌டனழைத்துச் சென்று அறிமுகம் செய்வித்தேன். முதல் 50 சிறுகதைகளைப் பெற்றுக் கொண்டோம். சுபா தமிழில் டைப் செய்ய எது நல்ல சாஃப்ட்வேர் என்று கேட்க, நான் ‘ஸ்ரீலிபி’ என்ற சாஃப்ட்வேரை சஜஸ்ட் செய்தேன். அதன் கீபோர்ட் லேஅவுட் கிடைக்குமா என்று சுரேஷ் ஸார் கேட்க, ஊர் சென்று அனுப்புவதாகச் சொன்னேன்.

சொன்னபடியே அனுப்பவும் செய்தேன். (சுரேஷ் ஸார் நான் அனுப்பியதை வைத்து வேகமாக டைப் செய்யப் பழகிக் கொண்டார். பாலா ஸார் ‘பொன்மொழி’ என்ற சாஃப்ட்வேரில் ட்ரான்ஸ்லிட்டரேஷன் முறையில் டைப செய்யப் பழகிக் கொண்டார். இருவரும் தங்கள் படைப்புகளை கணிப்பொறியில்தான் உருவாக்குகிறார்கள்.) ஸ்ரீதரன் பி.கே.பி. என்கிற பட்டுககோட்டை பிரபாகரின் தீவிர விசிறி. அவரை சந்திக்க விரும்புவதாக சுபாவிடம் அவன் கேட்க, போனில் அனுமதி வாங்கி, போய்ப் பார்க்கச் சொன்னார்கள். அவனுடன் சென்று பி.கே.பி.யை முதல் முறையாக சந்தித்தேன். (அது பற்றி விரிவாக அடுத்து வரும் ‘பி.கே.பி.யும் நானும்’ எபிஸோடில் சொல்கிறேன்)

முதல் 50 கதைகளை அடித்து முடித்ததும் ஃப்ளாப்பியில் காப்பி செய்து கொண்டு சென்னை வந்து சுபாவின் கம்ப்யூட்டரில் காப்பி செய்யப் பார்த்தால்... ப்ளாப்பி வேலை செய்யவில்லை. சி.டி.க்களும், டிவிடிக்களும், ஈமெயிலும் இவ்வளவு வசதிகளை அச்சமயம் தரவில்லையே... தரவில்லையே! வேறு வழியின்றி அடுத்த 50 சிறுகதைகளைப் பெற்றுக் கொண்டு அடுத்த முறை வரும் போது அவற்றைத் தருவதாகச் சொல்லி வந்தேன். அதன்பின் இரண்டு அல்லது மூன்று ப்ளாப்பிகளில் பேக்-அப் எடுத்துக் கொண்டு சென்று காப்பி செய்தோம் நாங்கள்.

இரண்டாவது செட்டை முடித்து விட்டு சுபாவைச் சந்திப்பதற்கு முன்னான இடைக் காலத்தில் நான் ஒரு சிறுகதை எழுதி அப்போது வெளியாகிக் கொண்டிருந்த பல மாத நாவல் இதழ்களில் ஒன்றுக்கு அனுப்பி வைக்க, அது பிரசுரமாகியிருந்தது. அம்புலிமாமா கதைகளில் வருவது போல நீதிக்கதை பாணியில் சமூகக் கதையின் முடிவில் நீதி சொல்லி முடித்திருந்தேன். (முதல் கதையல்லவா...) பெருமையாக அந்த இதழ் வந்த பிரதியைக் கையில் எடுத்துக் கொண்டு சுபாவைச் சந்தித்து, அதைப் படித்து கருத்துச் சொல்லும்படி கூறி கொடுத்து விட்டு வந்தேன். கதை வந்த அந்த இதழின் பிரதியை பல ஊர்கள், பல வீடுகள் மாறியதில் தொலைத்து விட்டேன். இல்லாவிடில் உங்கள் பார்வைக்கு வைத்திருப்பேன்.

நம் வீட்டுக் குழந்தை கிறுக்கலாக ஓவியம் வரைந்தாலும் ‘நல்லா வரையிறயே...’ என்று பாராட்டுவோமல்லவா? அதுபோல, சுபாவும் புதிதாக எழுதும் ஆர்வத்துடனிருக்கும் என் மனம் நோகக் கூடாதே என்று மென்மையான வார்த்தைகளால் கதையைப் பாராட்டி விட்டு, எழுத எழுதத்தான் எழுத்து வசப்படும் என்கிற ரீதியில் முடித்து கடிதமிட்டிருந்தார்கள். கொள்ளை கொள்ளையாய் மகிழ்ந்து போனேன். உங்கள் பார்வைக்கு இங்கே...

இச்சமயத்தில் திருநெல்வேலிக்கு மாற்றல் கிடைக்க அங்கிருந்து கடைசி இரண்டு செட் சிறுகதைகளை டைப் செய்து ப்ரொஜக்டை முடித்து சுபாவிடம் கொடுத்தேன். இப்போது சுபாவின் சிறுகதைகள் அனைத்தும் பூம்புகார் பதிப்பகம் மூன்று (பெரும்) தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறது. இப்படி நிறையத் தடவைகள் சந்தித்ததில் என்னைப் பற்றி சுபாவுக்கும், சுபாவைப் பற்றி எனக்கும் நல்ல புரிந்துணர்தல் ஏற்பட்டிருந்தது. இந்த ப்ராஜெக்ட்டை முடித்தபின் ஒரு வருட காலம் திருநெல்வேலியிருந்து சுபாவுக்கும் எனக்கும் கடிதப் பரிமாறல்கள், அவ்வப்போது போனில் பேசுவது மட்டுமே தொடர்பாக இருந்தது.

அடுத்த ஆண்டின் துவக்கத்தில் தினமலரில் இருந்து நான் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தினமலரிலிருந்து வெளியேறியதும் இனி சென்னையில்தான் மிச்ச வாழ்க்கை என்று (நானாக) முடிவு செய்து கொண்டு, ஒரு கம்ப்யூட்டர், ஸ்கேனர், லேஸர் ப்ரிண்டர் எல்லாம் வாங்கிக் கொண்டு சென்னையில் ஒரு டிடிபி சென்டர் ஆரம்பித்து பெரிய ஆளாகி விடலாம் என்ற எண்ணத்துடன் சென்னைக்கு இடம் பெயர்ந்தேன். சென்னை என்னை ‘போடா வெண்ணை’ என்றது! (பாட்டெல்லாம் கூடப் பாடிப் பார்த்தேன்... விக்ரமன் படத்தில் வருவது போல் வளர்ந்துவிட முடியவில்லை என்பது நிதர்சனம்! பஞ்சப்பாட்டுத்தான் பாட முடிந்தது.)

இப்படி இங்கு வந்து பிழைப்புக்குத் தாளம் போட்ட காலச்சதுரத்தில் ஒருமுறை சென்னையை விட்டு மீண்டும் மதுரைக்கே ‌போய்விடலாமா என்ற வெறுப்பான மனநிலையில் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பாலா ஸாரின் வீட்டுக்குச் சென்றேன். அப்போது அவர் செய்த உதவியினாலும், பின்னர் சுபாவின் ஆதரவினாலும் சென்னையில் என் வாழ்க்கை டேக் ஆஃப் ஆனது. அதைப் பற்றி...

-தொடர்கிறேன்..!

Monday, February 20, 2012

புலவர் சா.இராமாநுசம் அவர்களின் ‘வலையில் வந்தே அலையில் மிதக்கும் கவிதைகள்’ நூல் வெளியீட்டு விழா நேற்று தேவநேயப் பாவாணர் நூலகத்தில் நடந்தது. நான்கு மணிக்கு விழா என்பதால் நான்கு மணிக்குச் சென்றேன். மலர்ந்த முகத்துடன் என்னை வரவேற்றவர் புலவரின் மகள் திருமதி. சித்ரா சீனிவாசன். அவர் என்னை புலவரையாவிடம் அழைத்துச் செல்ல, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தேன். அவர் பல சான்றோர்களை எனக்கு அறிமுகம் செய்வித்தார்.

சற்று நேரத்தில் நண்பர் சென்னைப் பித்தன் வந்து என்னோடு இணைந்து கொண்டார். நாங்கள் பேசிக் கொண்டிருக்க, விழா துவங்குவதற்குச் சற்று முன் தோழி ஸ்ரவாணி தன் கணவருடன் வருகை புரிந்தார். சற்று நேரத்தில் விழா துவங்கியது. வரவேற்புரை நிகழ்ந்த பின்னர் புலவர் சா.இராமாநுசம் அவர்களுக்கு பல பெரியவர்கள் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்கள்.

புலவரையா தன் மகள் திருமதி. சித்ராவின் மூலம் வலையுலக நண்பர்களான எங்கள் மூவரையும் மேடைக்கு அழைத்து மரியாதை செய்தார். (முன்பே ‌எங்களுக்குத் தெரிந்திருந்தால் மறுத்திருப்போம்.) இப்படி ஒரு கெளரவத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை. மிகமிக நெகிழ்ச்சியாக உணர்ந்த தருணம் அது. புலவரையா! உங்களுக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை.

இந்த விழா சம்பந்தப்பட்ட ஒரே ஒரு வருத்தமான விஷயம் என்னவெனில்... முழுமையாய் விழா நிகழ்ந்து முடியும் வரை இருக்க முடியாமல் இடையிலேயே புறப்பட வேண்டிய ஒரு தவிர்க்க இயலாத வீட்டு வேலை எனக்கு வாய்த்து விட்டதே என்பதுதான். புலவரையாவிடம் மன்னிப்புக் கோரி, பாதியிலேயே புறப்பட்டு விட்டேன்.

கெளரா புத்தகம் வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகம் மிக நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது. 144 பக்கங்களில் 60 ரூபாய் விலையுள்ள இந்தப் புத்தகத்தை அரங்கில் 50 ரூபாய்க்கு அளித்தார்கள். வலையில் வந்த கவிதைகள் எனினும் படிக்காமல் விட்டவை நிறைய இருப்பதால் முழுமையாகப் படித்துவிட்டு புலவரையாவைச் சந்திக்கலாம் என்றெண்ணியுள்ளேன்.

விழா மேடையில் கேட்ட விஷயம்: தமிழ்நாடு அரசு பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற 370 ஆசிரியர்களை ஒரே நாளில் பணிநீக்கம் செய்தபோது அவர்களுக்காக அரசுடன் போராடி மீண்டும் பணியில் சேர்க்க ஆணை பெற்றுத் தந்திருக்கிறார் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய புலவர் சா.இராமாநுசம் அவர்கள். அது மட்டுமா... போராட்டத்தின் விளைவாக அனைத்து ஆசிரியர்களும் பெற்ற ஓர் ஊதிய உயர்வு தமிழாசிரியர்களுக்கு மட்டும் மறுக்கப்பட, ஓராண்டு போராடி அதைப் பெற்றுத் தந்திருக்கிறார். இப்படி நற்செயல்கள் பல செய்து, அகவை எண்பதைக் கடந்துவிட்ட நிலையில் உற்சாகமாய் நற்கவிதைகள் வழங்கி வரும் அவர் நீடூழி வாழப் பிரார்த்தித்து, வாழ்த்துகிறேன் நான்.

புலவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று யோசித்தேன். எதுவும் தோன்றவில்லை. ஆனால் நேற்றிரவு கவிதை போல் ஒன்று தோன்றியது. அதை அவருக்கு நன்றி சொல்லும் விதமாக இங்கு தருகிறேன்.

========================================================

சாதிக்கொரு சங்கம் உண்டிங்கே - மதங்கள்
    பலப்பல உண்டிங்கே மாந்தர்
மோதிக் கொள்கிறார் அனுதினம் - எவர்
    இனம் பெரிது எனவும்
மதத்தில் சிறந்தது எதுவென்றும் -ஒன்றும்
    அறியாப் பேதையாய் நான்!

பெற்றோர் இவரென்பது என்தெரிவா?- அன்றி
    என்மதம், என்குலம், என்குணம்
நிறம் என்றெதை யேனும் தெரிந்தெடுத்தேனா?
    என்னுடையது சிறந்ததென யானும்
திறமப்ட இயம்பிட காரணம் யாதுமுளதோ?
    எங்கோ இருந்து ஏதோவொன்று
விரும்பிட ஈண்டு பிறந்தனன் யான்!
    ஏனிந்த மோதல் மானிடர்காள்?
அறிவிலியாய் யான் மனங்குழம்பி நிற்கிறேன்...
    அறிந்திட்டோர் விளக்கிடுக அடியேனுக்கு!


Saturday, February 18, 2012

ஓடாத ரயில்! ஒளிரும் மர்மம்!

Posted by பால கணேஷ் Saturday, February 18, 2012
பேருந்துகளில் பயணிப்பதை விட ரயில் பயணங்களே எனக்கு மிகவும் பிடித்தமானவை. கால்களை வசதியாக நீட்டக் கூட முடியாமல், அவசரமாக இயற்கை உபாதைகள் ஏற்பட்டால் அடக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்துடன், எந்த நேரம் டிரைவர் விபத்தை ஏற்படுத்தி விடுவாரோ என்கிற சன்னமான பீதியுடன் பேருந்துகளில் பயணிப்பது என்னைப் பொறுத்தவரை நரகம். ரயிலில்... அதுவும் பகல் நேர ரயில்களில் பயணிப்பது என்றால் அப்படி ஒரு தனி குஷி எனக்கு!

கம்பார்ட்மெண்ட்களை இணைக்கும் பாதை வழியாக பல பெட்டிகள் தாண்டி ஒரு வாக்கிங் போய்விட்டு வரும் பழக்கம் உண்டு எனக்கு. ஒவ்வொரு ரயிலும் ஒரு தனி உலகமாகவே இயங்குகிறதோ என்று வியப்பேன். எத்தனை விதமான மனிதர்கள்! அம்மா கத்தக் கத்த, துறுதுறுவென்று இங்குமங்கும் ஓடும் சிறுமி, தன்னைச் சுற்றி ஓர் உலகம் இயங்குவதை அறியாமல் மொபைலில் வைத்த கண்ணையும் விரலையும் எடுக்காத இளம் பெண், எதிரில் படி்த்துக் ‌கொண்டிருக்கும் ஆசாமி எப்போது விகடன் புத்தகத்தை மூடுவான்... நாம் ‘எக்ஸ்க்யூஸ் மீ, கொஞ்சம் பாத்துட்டுட்த் தரேன்’ என்று கேட்கலாம் என்று காத்திருக்கும் பெரியவர், தொலைக்காட்சிக் கதையை பக்கத்தில் இருப்பவளிடம் பேசியபடி இருக்கும் மாமி... எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள் ரயிலில்! முடிந்தவரை இப்படியான ரயில் பயணங்களையே நான் தேர்ந்தெடுப்பேன். எதிர்பாராத சில நல்ல நட்புகளும் எனக்கு ரயில் பயணங்களில் அமைந்தது உண்டு.

மீபத்தில் ரயில் பயணத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட ஒரு த்ரில்லர் நாவலைப் படித்தேன். அதைப் பற்றி இங்கே சொல்ல விரும்புகிறேன்.

ரோப்பாவுக்குக் குறுக்காக தனது மூன்று நாட்கள் பயணத்தைத் தொடங்குகிறது ஓரியண்ட் எக்ஸ்பிரஸ். பெல்கிரேடில் நின்றுவிட்டு கிளம்பும் அந்த ரயில் பயணத்தின் இரண்டாம் நாளில் எதிர்பாராமல் நிகழ்ந்த பனிப் பொழிவில் சிக்கிக் கொண்டு நடுவழியில் நகர இயலாமல் நிற்கிறது. இப்படிப் பனிப்பொழிவு ஏற்பட்ட வாரக் கணககில் ரயில்கள் சிக்கிக் கொள்வது உண்டு என்பதால் யாரும் பதற்றமடையவில்லை. ஆனால் அவர்களைப் பதற்றமடையச் செய்யும் ஒரு விஷயம் நடந்தேறுகிறது.

குளிர் காலத்தில் அதிகம் பேர் பயணிக்க மாட்டார்கள் என்பதால் காலியாக இருக்கும் அந்த ரயில் இம்முறை மட்டும் ஏனோ ஃபுல்லாக பயணிகளால் இருக்கிறது. ரயில் கம்பெனி டைரக்டர் பெளக்கும் துப்பறியும் நிபுணர் ஹெர்குல் பொய்ரெட்டும் அந்த ரயிலில் பயணிக்கின்றனர். பனிப்பொழிவில் சிக்கி ரயில் நகர இயலாத நிலையில் அதில் பயணித்த மில்லியனர் ஸைமன் ரேச்சட் உள்பக்கமாக பூட்டப்பட்ட தன் கம்பார்ட்மெண்ட்டுக்குள் ஒரு டஜன் முறை கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப் படுகிறார். வெளியாட்கள் எவரும் வந்து கொன்றிருக்க முடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியான நிலையில், கொலைகாரன் ரயிலிலேயே பயணிக்கும் பயணிகளில் ஒருவன் அல்லது ஒருவள்தான்.

அந்தக் குற்றவாளி யார் என்ற பெரும் கேள்வி எழுகிறது. அதற்கு விடை கண்டுபிடிக்கும் பொறுப்பு பொய்ரெட்டின் தலையில் சுமத்தப்படுகிறது. போலீஸ் வரமுடியாது, மோப்ப நாய்கள் கிடையாது, வெளியுலகிலிருந்து எந்தத் தகவலும் பெற முடியாது. இப்படி ஒரு வினோத சூழ்நிலை!

-இப்படி ஒரு அழுத்தமான முடிச்சைப் போட்டுவிட்டு தன் "MURDER ON THE ORIENT EXPRESS" நாவலைத் தொடங்குகிறார் மர்மக்கதை மகாராணி அகதா கிறிஸ்டி. படிக்கும் ஆர்வத்தை ஏகமாக இது கிளறிவிட தொடர்ந்து படித்தேன்.

வழக்கைக் கையிலெடுக்கும் பொய்ரெட், ‌கொலை நடந்த இடத்திலிருந்து ஒரு துப்பு கண்டுபிடிக்கிறார். பின்னர் ரயிலில் பயணிக்கும் ஒவ்வொருவரையும் விசாரிக்கிறார். அந்த விசாரணையில்தான் எவ்வளவு திடுக்கிடும் உண்மைகள் வெளிவருகின்றன! கொலையுண்டவனுக்குத்தான் எத்தனை விரோதிகள் அந்த ரயிலினுள்ளேயே இருந்துள்ளனர் என்கிற பிரமிப்பான விஷயங்கள் வெளிவருகின்றன. பிரயாணிகளில் ஒருவர் நியூயார்க் டிடெக்டிவ் ஏஜென்ஸியைச் சேர்ந்த துப்பறியும் நிபுணர் ஹார்ட்மேன் என்பதையும் பொய்ரெட் கண்டுபிடிக்கிறார். அவரது சாட்சியமும் கேசுக்குத் துணை நிற்கிறது. முடிவில் தர்க்கரீதியாக அலசி, எந்த ஒரு பாயிண்ட்டையும் மறுக்க இயலாதவாறு கொலை நிகழ்ந்த விதத்தை பொய்ரெட் விரிவாக விளக்கி நாவலை முடிக்கும் போது படிக்கும் நம் மனதில் எழும் உணர்வு: பிரமிப்பு!

நாவலின் ரத்தினச் சுருக்கம் தான் மேலே நான் தந்திருப்பது. அகதா கிறிஸ்டியின் நாவல்களைப் படிக்கும் ஒவ்வொரு முறையும் கதை முடிவதற்கு முன்னேயே குற்றவாளி யாராக இருக்க முடியும் என்பதை யூகித்துவிட முயல்வேன். ஒன்றிரண்டு கதைகளைத் தவிர மற்ற எல்லாக் கதைகளையும் நான் படித்து முடிக்கையில் ‘ஏமாந்தியா?’ என்னும் அகதாவின் கேலிச் சிரிப்பு என் காதுகளில் ஒலிக்கும். இந்த நாவலிலும் அப்படியே.

அகதா கிறிஸ்டி கண்ணி‌ வெடிகளைப் போல தன் நாவலினூடே குற்றவாளி யாராக இருககும் என்பதற்கான க்ளூக்களையும் அங்கங்கே தெளித்திருப்பார். அதைப் பற்றிக் கொண்டு கண்டுபிடிப்பதுதான் கஷ்டமான விஷயம். மூளைக்கு வேலைதரும், சுறுசுறுப்பூட்டும் விஷயமும் கூட! நாவலின் முடிவில் குற்றவாளியும், குற்றம் நிகழ்‌ந்த விதமும் அகதாவால் விவரிக்கப்படும் போது, அந்தக் கண்ணிவெடிகளை நாம் அறியும்போது, ‘அட!’ என்கிற பிரமிப்பு நிச்சயம் ஏற்படும். அந்த பிரமிப்பை எனக்குள் இந்த நாவலும் தரத் தவறவில்லை. அகதாவின் நாவல்கள் வரிசையில் இதற்கு இரண்டாம் இடம் தருவேன். முதல் இடம் 'AND THEN THERE WERE NONE' என்ற கதைக்கு.

படமாகப் பார்க்க விரும்புபவர்களுக்கு : ‘‘நாவல்கள் படிப்பதற்கெல்லாம் பொறுமை இல்லைப்பா’’ என்பவர் களுக்கு... இந்த 'MURDER ON THE ORIENT EXPRESS' கதை இரண்டு முறை திரைப்படமாக எடுக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. (1974 வெர்ஷன் மிக நன்றாக இருக்கும்)  'AND THEN THERE WERE NONE' படமும் திரைப்படமாகி உள்ளது. கூகிளாண்டவரிடம் தேடினீர்கள் என்றால் இரண்டு படங்களையும் டவுன்லோடு செய்து பார்த்து ரசிக்க முடியும்.

வாசிப்பு அனுபவம் விரும்புபவர்களுக்கு : ‘‘ஆங்கிலத்தில் நாவல்கள் படிப்பது என்னால் முடியாதுப்பா, அவ்வளவு பொறுமை கிடையாதுப்பா’’ என்பவர்களுக்கு... இவ்விரண்டு நாவல்களையும் கண்ணதாசன் பதிப்பகம் ‘ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்’ என்றும் ‘பிறகு அங்கு ஒருவர்கூட இல்லை’ என்றும் தலைப்புகளில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர்.

பின் குறிப்பு: அண்மையில் நண்பர் தி‌ரு.வெங்கட் நாகராஜ் அவர்கள் தன் பதிவில் பஸ் பயணம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லியிருந்தார். எனக்கு ரயில் பயணம் ஏன் பிடிக்கும் என்பதை எழுதினாலென்ன என்று அதைப் படித்ததும் தோன்றியது. ரயிலைப் பற்றி எழுதும்போது இயல்பாக இந்த நாவலும் இணைந்து கொண்டது. ஒரு பதிவுக்கு வித்திட்ட (தேத்த உதவிய) நண்பர் வெங்கட்டுக்கு நன்றி!

Thursday, February 16, 2012

நடை வண்டிகள் - 4

Posted by பால கணேஷ் Thursday, February 16, 2012
சுபாவும் நானும் - 1

1983 டிசம்பர் மாதம். ஆனந்த விகடனில் ‘சிம்மாசனம்’ என்ற தலைப்பில் வந்திருந்த சிறுகதையைப் படித்த என் சித்தி, என் அம்மாவிடம் அதை மிகவும் பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தார். மாணவப் பருவத்தில் பாடப் புத்தகங்கள் தவிர வேறு பத்திரிகைகள் படிக்காத நான், சித்தி ஸ்கூலுக்குக் கிளம்பிப் போனதும் (டீச்சர்ங்க!) விகடனை எடுத்துப் படித்தேன். அந்தச் சிறுகதையின் நடையழகும், கருப்பொருளும் மனதைக் கொள்ளை கொண்டது. எழுதியது யாரென்று பார்த்தேன். சுபா! ‘யாரிந்தப் பெண்மணி? பிரமாதமாக எழுதியிருக்கிறார்களே...’ என்று எண்ணினேன்.

பின்னர் கல்லூரிப் பருவத்தில் எல்லா எழுத்தாளர்களையும் படித்துப் பழகிய நாட்களில் சுபா ஏராளமான சிறுகதைகளும், மோனா, மாலைமதி ஆகியவற்றில் நாவல்களும் எழுதி பிரபலமான எழுத்தாளர். சுபா’ என்பது ஒரு பெண்ணல்ல, அது ‘சுரேஷ்’, ‘பாலகிருஷ்ணன் என்ற இரு நண்பர்களின் கூட்டு முயற்சியில் இருவர் பெயரின் முதலெழுத்தையும் எடுத்து ‘சுபா’ என்று வைத்துக் கொண்ட விஷயத்தை அப்போது தெரிந்து கொண்டு மிக ஆச்சரியப்பட்டேன்.

வழங்கு தமிழில் எழுதாமல் நல்ல தமிழ் எழுத்து நடையை சுபா கைக் கொண்டிருந்ததை வியந்து ரசித்திருக்கிறேன். அந்த தனித் தமிழ் நடை க்ரைம் கதைகள் எழுதிய போதும், நகைச்சுவைக் கதைகள் எழுதிய போதும் ரசனைக்கு ஏற்றதாகவே இருந்தது மேலும் சிறப்பு.

சில காலத்திற்குப் பின்பு மாத நாவல்கள் அதிகம் விற்கத் தொடங்கிய பருவத்தில் ‘சூப்பர் நாவல்’ என்ற ஒன்று சுபாவின் படைப்புகளுக்காகவே ஆரம்பிக்கப்பட்டது. சூப்பர் நாவலோ, வேறு ஏதாவது மாத நாவலோ... ‘சுபா’வின் எழுத்தைத் தவறாமல் வாங்கிப் படித்து விடுவேன். நாவலைப் படித்த உடனேயே விமர்சனக் கடிதமும் எழுதி விடுவேன். நான் விரும்பிப் படித்த எழுத்தாளர்களில்  மிக அதிகமாக வாசகர் கடிதம் எழுதியது ‘சுபா’வுக்குத்தான். தினமலரில் சேர்ந்த பின்னர், இரவுப் பணி முடிந்து கிளம்புவதற்கு முன்னர், நாவலுக்கான விமர்சனக் கடிதத்தை டைப் செய்து, அழகாக லே அவுட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து அனுப்ப ஆரம்பித்தேன். (அந்தக் கடிதங்களில் எழுத்துப் பிழை இல்லாமல் இருந்ததையும், சிரத்தையாக வடிவமைக்கப் பட்டிருந்ததையும் சுபா மிகவும் ரசித்திருக்கிறார்கள் என்பதை பின்னர் அறிந்தேன்.)

வேலூர் தினமலரில் நான் பணி செய்த போது தீபாவளி வாழ்த்து ஒன்றை கணிப்பொறியில் வடிவமைத்து ப்ரிண்ட் அவுட் எடுத்து சுபாவிற்கு அனுப்பியிருந்தேன். அதை மிகவும் ரசித்த சுபா, அதை ‘கணேஷிடமிருந்து வந்த, கணிப்பொறி அமைத்த தீபாவளி வாழ்த்தை மிகவும் ரசித்தோம். இதோ உங்கள் பார்வைக்கு’ என்று எழுதி ‘சூப்பர் நாவல்’ உள் அட்டையில் பிரசுரித்திருந்தார்கள். அந்த வாழ்த்தை இங்கே தந்திருக் கிறேன். (இப்போது பார்த்தால் சாதாரணமாகத் தெரியும். இன்று கணிப்பொறிகளின் வேகத்தையும், கிடைக்கும் சாஃப்ட்வேர்களையும் வைத்து இதை அளவிடக் கூடாது. அப்போது 386 என்கிற மிகவும் மெதுவான கம்ப்யூட்டர்களே இருந்தன. புரோகிராம் வரிகள் எழுதித்தான் டிசைன் செய்ய வேண்டும். தீபாவளி வாழ்த்துக்கு நான் எழுதிய புரோகிராம் கீக்கள் மொத்தம் 10,020 என்றால் அந்த முயற்சியின் சிறப்பை உணர்வீர்கள்)

சுபா என் பெயரையும் குறிப்பிட்டு, வாழ்த்தையும் பிரசுரித்ததில் மிகமிக மகிழ்ந்து போனேன். சுபாவிற்கு நன்றி சொல்லிக் கடிதம் எழுதினேன். பின்னர் சென்னை வந்த சமயம் சுபாவைச் சந்திக்க விரும்பி ‘ஆத்மா ஹவுஸ்’ சென்றேன். பாலா ஸாரின் வீட்டுக் கதவைத் தட்டினேன். கவுன் போட்ட குட்டிப் பெண் வந்து, ‘‘நீங்க அப்பாவோட ரசிகரான்னு கேட்டாரு’’ என்றாள். ‘‘ரசிகர் இல்லம்மா, வாசகர்னு சொல்லு’’ என்று சொல்லியனுப்பினேன். அப்பாவிடம் பேசிவிட்டு வந்து, ‘‘அப்பா உங்களை மாடியில வெய்ட் பணணச் சொன்னாரு’’ என்றது அந்தக் குழந்தை -ஸ்ரீவைஜயந்தி. (அந்தக் குழந்தைக்கு டிசம்பர் 2011ல் கல்யாணம் நடந்தது. அதில் கலந்து கொண்டு வாழ்த்திய என் பூரிப்பை வார்த்தைகளால் விளக்குவது கடினம்)

பாலா வந்தார். சுபாவின் கதைகளைப் பற்றிப் பேசினேன். ‘‘ஏன் நெர்வஸா இருக்கீங்க? முகத்தைப் பார்த்தே பேச மாட்டேங்கறீங்களே...?’’ என்று கேட்டார். ‘‘உங்க கிட்ட நிறையப் பேசணும்னு மனசுக்குள்ள லிஸ்ட் போட்டுட்டு வந்தேன் ஸார். முகம் பாத்துப் பேசினா சந்தோஷத்துல எதாவது விட்ருவனோன்னுதான் இப்படிப் பேசினேன்’’ என்று விட்டு நினைத்த விஷயங்களைப் பேசிவிட்டுக் கிளம்பினேன். அதன் பின்னர் வாசகனாக எழுதும் கடிதங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன.

சுபா தங்கள் நண்பர் பட்டுக்கோட்‌டை பிரபாகருடன் இணைந்து ‘உங்கள் ஜூனியர்’ என்ற மாத இதழைத் தொடங்கினார்கள். ஒரு மாதம் பி.கே.பியின் நாவலும், மறு மாதம் சுபாவின் நாவலும், நாவலுடன் இணைந்த பல பல்சுவை அம்சங்களும் இணைந்து சுவாரஸ்யமான புத்தகம் அது. மிக ரசித்துப் படித்து கடிதங்கள் எழுதுவேன். ‘உங்கள் ஜுனியர்’ ஆரம்பித்து 25வது இதழ் வெளிவந்தபோது அதில் 25 போட்டிகளை வாசகர்களுக்காக வைத்திருந்தார்கள் (எல்லாமே போஸ்ட் கார்டிலேயே எழுதி அனுப்பும்படி அமைத்திருந்தார்கள்.).அதில் 10 போட்டிகளுக்கு ஆர்வமாக எழுதி அனுப்பினேன்.  26வது இதழில் எனக்கு ஒரு இனிய ஆச்சரியம் காத்திருந்தது. போஸ்ட் கார்டில் எழுதிய என்‌னுடைய குட்டிச் சிறுகதையை முதல் பரிசு பெற்றதாக அறிவித்து வெளியிடப்பட்டிருந்தது. இப்போது படித்தால் எனக்கே சிரிப்பு வருகிற நடை அது. (இங்கே கொடுத்திருக்கிறேன்- நீங்களும் சிரிக்க). ஆனாலும் அச்சில் அதைப் பார்த்தபோது கிடைத்த ஆனந்தம் அளவிடற்கரியது.

பின்னாட்களில் வந்த உங்கள் ஜுனியர் இதழ்களில் ஒன்றிரண்டு சிறு படைப்புகள் வெளியாகியிருந்தன. சென்னை வந்த ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் சுரேஷ் சாரையும் சந்தித்துப் பேசியிருந்தேன். சுபாவுக்கும் அவர்களின் குடும்பத்து உறுப்பினர்களுக்கும் நன்கு தெரிந்த ஒருவனாக ஆகியிருந்தேன். இப்படியான ஒரு காலச்சதுரத்தில் தான் ஒரு முறை சென்னை வந்தபோது சுபாவைச் சந்திக்கச் சென்றேன். சுபா இருவரும் இருந்தார்கள். 

படைப்புகள் பற்றி சற்று நேரம பேசியபின் ஒரு மிகப் பெரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைக்க விரும்புவதாக சுபா சொன்னார்கள். அதைப் பற்றி விரிவாக விளக்கினார் சுரேஷ் ஸார். அந்தப் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்வதின் மூலம் சுபாவிடம் என் நெருக்கம் மிகமிக அதிகமாகப் போகிறது என்பதையும், குடும்ப நண்பர்களில் ஒருவன் என்ற அந்தஸ்தை எனக்கு  அது அளிக்கப் போவதையும் அப்போது கிஞ்சித்தும் அறியாமலேயே சம்மதம் சொல்லி வைத்தேன்.

-தொடர்கிறேன்...

Tuesday, February 14, 2012

பசிப்பிணி என்னும் பாவி

Posted by பால கணேஷ் Tuesday, February 14, 2012
க்களின் அடிப்படைத் தேவை நிறைவேறினாலே போதும். அவர்கள் வசிக்கும் இடம் பொன்னுலகம். அவர்களுக்கு உணவும், நீரும், உறைவிடமும் தவிர வேறென்ன வேண்டும்?

பசி வந்திடப் பத்தும் பறந்து விடும் அல்லவா? பசியால் வருந்துபவரின் இரங்கத்தக்க நிலை எப்படி இருக்கும்? மணிமேகலை அதைக் காட்சியாக்குகிறது. குடிச் சிறப்பை நினையான், போற்றி ஒழுகிய ஒழுக்கத்தை மறப்பான், காக்கும் கடமை மறந்து, துணைவி, குழந்தை என்போர் பெருமிதமுறச் செய்ததை மறந்து அவர்களுடன் மற்றவர் வாசலில் நிற்கச் செய்யுமாம். மானம் துறக்கும் நிலை இது.

குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி
(மணிமேகலை, பாத்திரம் பெற்ற காதை, 76-80)

ஆம்! பிடித்த கல்விப் பெரும்புணையை விடுவான். கற்றதோடு கற்ற வழி நின்ற பெருமகன் எந்தக் கல்வியை வாழ்க்கைக் கடல் கடக்க உதவும் புணையாக எண்ணியிருந்தானோ அதை விட்டு விடுவான். நாணத்தை அணிகலனாக அணிந்த குலமகள், நாணத்தை இழக்கச் செய்துவிடும் நிலையை அவனே உண்டாக்குவான். வேலியே பயிரை மேய்வது போன்றதுதானே இதுவும்?

சிகரம் அடிவாரத்தில்! வேறென்ன வேண்டும், மாறுபாட்டால் வாழ்வு சிதைய?

பசி போக்குவது - மானம் காத்தல்தான். அதைச் செய்ய வேண்டியதல்லவா மன்னன் கடமை? அதைச் செய்வதிலிருந்து விலகுவது தன்மானம் இழக்கும் செயலல்லவா? தாமே அதற்குக் காரணமாதல் எவ்வளவு இழிவானது?

நீ எப்படிப்பட்ட ஆற்றல் உடையவன்?

செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும்
வெண்டிங்களுள் வெயில் வேண்டினும்
வேண்டிய விளைக்கும் ஆற்றலை
(புறநானூறு 38)

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை ஆவூர் மூலங்கிழார் பாராட்டுகிறார். ஆற்றலின் எல்லை காட்டும் இயன்மொழித் துறைப் பாடல் இது. காலத்தை வெல்லும் ஆற்றல் - சூரியனில் நிலவின் தண்மையையும், நிலவில் சூரியனின் வெம்மையையும் விளைவிக்கும் ஆற்றல் - இயலக் கூடிய ஒன்றா? இயலாதுதான்! எனினும் உயர்வுநவிற்சியழகு இது. ‘என்னைப் பெற்ற ராசா’ என்று குழந்தையைத் தாய் கொஞ்சுகிறாளே... அப்படி!

ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்
திங்க ளன்ன தண்பெருஞ் சாயலும்
வானத் தன்ன வண்மையும் மூன்றும்
உடையை யாகி இல்லோர் கையற
நீநீடு வாழிய நெடுந்தகை
(புறநானூறு 55)

என்று பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய ‌நன்மாறனை மருதனிளநாகனார் வாழ்த்துகிறார்.

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்.
(பாரதிதாசன் கவிதைகள், ப.145)

எனப் பாடுகிறார் பாரதிதாசனார். இருபதாம் நூற்றாண்டுப் புலவரின் விருப்பம் இது. இரண்டாம் நூற்றாண்டுப் புலவரின் வாழ்த்தும் இதுவே. இல்லோர் கையற வாழ வேண்டும். இல்லாதார் இல்லையாகும்படி நாட்டை வைத்திருத்தலே திரு.

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையம்
சேரா தியல்வது நாடு
(திருக்குறள் 734)

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனாரும்,

ஆங்கண் விசும்பின் ஆரிருள் அகற்றம்
வெங்கதிர்ச் செல்வன் போலவும் குடதிசைத்
தண்கதிர் மதியம் போலவும்
நின்று நிலைஇய உலகமொடு உடனே
(புறநானூறு 56)

வாழுமாறு வாழ்த்துகிறார்.

‘தமிழ் இலக்கியங்களில் காலம்’ என்னும் நூலிலிருந்து (மணிவாசகர் பதிப்பகம்) எடுக்கப்பட்ட ஒரு துளியைத்தான் இதுவரை நீங்கள் சுவைத்தீர்கள். நூலாசிரியர் டாக்டர் கமலம் சங்கர் எம்.ஏ., பி.எச்டி., மதுரை டி.வி.எஸ். மெட்ரிகுலேஷன் பள்ளியில் தமிழாசிரியையாகவும், மதுரைக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியையாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழறிவை எனக்கு ஊட்டிய முதல் ஆசிரியை மற்றும் உறவு முறையில் எனக்கு சித்தி!

Sunday, February 12, 2012

மொறுமொறு மிக்ஸர்-3

Posted by பால கணேஷ் Sunday, February 12, 2012
வணக்கம் நண்பர்களே, ஒரு சேஞ்சுக்காக... Let us begin with a smile...


வரைந்தவர் : என் நண்பர் ஜி.ஆரோக்கியதாஸ்.  சமீபத்தில் ஒரு ப்ளாக் ஆரம்பித்து எழுதத் துவங்கியிருக்கிறார் தாஸ். ஒருமுறை சென்று பாருங்களேன்... http://pukkoodai.blogspot.in/
============================================

மீபத்தில் ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி’ என்ற எம்.ஜி.ஆரின் பாடலைப் பார்க்க நேரிட்டது. அந்தப் பாடலை ரசித்துக் கொண்டிருந்த போது அதில் வந்த ஒரு வரி என்னை உறுத்தியது. (எம்.ஜி.ஆரை விடமாட்டான்யா இவன்னு யார்ப்பா அங்க முணுமுணுக்கறது?)

‘அன்னையிடம நீ அன்பை வாங்கலாம். தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்’ என்று ஒரு சின்னப் பையனுக்கு புத்தி சொல்லிப் பாடுகிறார் எம்.ஜி.ஆர். அன்னை என்பவள் அடுக்களையில் இருப்பவள், உலக விவரம் தெரியாது. அதனால் அவளிடம் அன்பை மட்டும் பெறலாம். அப்பா ஊரைச் சுற்றுபவர், அதனால் நீ அவரிடம் அறிவைப் பெறலாம் என்றுதானே பொருள் கொள்ள வேண்டும் இதற்கு?

அந்நாட்களில் பெண்கள் ‘பெரிய மனுஷி’ ஆனதும் படிப்பை நிறுத்திவிட்டு கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள். என் அம்மா அப்படித்தான் பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர். ஆனால் என் அம்மாவிடமிருந்து நான் கற்றதும், பெற்றதும் மிக அதிகமாயிற்றே. வெளி உலகத்தில் நிறையப் பழகினாலும் கிணற்றுத் தவளையாய், அறிவற்ற அப்பாக்களும் உண்டுதானே? அன்னையிடம் அதிகப் பாசம் வைத்திருந்த எம்.ஜி.ஆர். எப்படி இப்படிப் பாடலாம்?  தனக்கு உறுத்தலாக இருக்கும் வரிகளை கவிஞர்களிடம் மாற்றி எழுதிப் பதிவு செய்யச் சொல்லித்தான் எம்.ஜி.ஆர். நடிப்பார் என்பது உலகமறிந்தது. அதனால்தான் எந்தப் பாடலாக இருந்தாலும் ‘எம்.ஜி.ஆர். பாட்டு’ என்றுதான் சொல்வார்கள்.

வாலிபக் கவிஞர் வாலி எழுதிய பாடல் அது. வாலியாக இருந்தாலும் சரி, எம்.ஜி.ஆராக இருந்தாலும் சரி... இவை மிகமிகத் தவறான வரிகள் என்றே மனதில் பட்டது. உங்களின் கருத்து என்ன? பகிர்ந்து கொள்ளுங்களேன்...

============================================

து புதிர் நேரம்: இந்தப் படத்தைப் பாருங்கள். நான்கு தீக்குச்சிகளால் ஒரு கோப்பை வரைந்து அதனுள் ஒரு பழம் வைக்கப்பட்டுள்ளது. (கற்பனை பண்ணிக்குங்க) இரண்டே இரண்டு தீக்குச்சிகளை மட்டும் இடம் மாற்ற வேண்டும். பழம் கோப்பைக்கு வெளியில் வர வேண்டும். கோப்பையின் வடிவம் மாறக் கூடாது. (பழத்தை மட்டும் நகர்த்தி, வெளில வெச்சுட்டாப் போச்சுன்னு சொன்னீங்கன்னா ‌‌தலையில குட்டுவேன்) யோசியுங்க. விடையை... (அடுத்த பதிவுல சொல்லலாமான்னு யோசிக்கிறேன்)
============================================

விளம்பர நேரம் இது. இந்நாட்களில் பிரபலமான திரைப்படங்களின் இரண்டாம் பாகத்தை எடுப்பது சகஜமான ஒரு விஷயமாகி விட்டது. அக்காலத்திலேயே தன்னுடைய பெருவெற்றி பெற்ற திரைப்படமான ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க விரும்பியிருக்கிறார் மக்கள் திலகம். அதற்கான விளம்பரத்தை நிறையப் பேர் பார்த்திருக்க மாட்டீர்கள் என்பதால் கீழே தந்துள்ளேன். (அவரின் எண்ணம் ஏனோ நிறைவேறாமலேயே போய் விட்டது.


============================================
புத்தகக் கண்காட்சியைப் பற்றி அனைவரும் எழுதி முடித்து விட்டார்கள். சென்னை புத்தகக் கண்காட்சியில் சுற்றிவந்த போது ஒரு கேள்வி என்னுள் எழுந்தது. தமிழின் முன்னணிப் பதிப்பகங்களின் புத்தகங்களைப் பார்த்தால் சாதாரணப் பதிப்பகங்கள் அதே அளவு பக்கங்களுக்கு வைக்கும் விலையை விட, ஒன்றரை மடங்கு அதிக விலை வைத்திருந்தார்கள். (பேசிவைத்து கூட்டுக் கொள்ளை அடிக்கிறார்கள் என்று மனதில் பட்டது,)

முன்னாட்களில் கல்கியின் ‘பார்த்திபன் கனவு’, ராஜாஜியின் ‘வியாசர் விருந்து’ போன்ற பல பெரிய புத்தகங்களை என் அப்பா ‘மக்கள் பதிப்பு’ என்று வெளியாகியிருந்ததை வாங்கி வைத்திருந்தார். ‘மக்கள் பதிப்பு’ என்பது சாதாரண நியூஸ் பிரிண்ட் பேப்பரில் அச்சிட்டு வெளியிடுவது. விலை உயர்ந்த தாளில் நூலகங்கள் வாங்கிக் கொள்ளலாம். வெகுஜனங்களைச் சென்றடைவதற்காக இப்படி ‘மக்கள் பதிப்பு’ ‘மலிவுப் பதிப்பு’ என்று அந்நாட்களில் வெளியிட்டிருக்கிறார்கள். (நூலகப் பதிப்பின் விலை 40 ரூபாய் இருந்தால் மக்கள் பதிப்பு 10 ரூபாய்தான்)

இப்படி சில மலிவுப் பதிப்பு நூல்கள் ‘பாரதி பதிப்பகம்’ ஸ்டாலில் இப்போது வாங்கினேன். புதுக்கருக்கு அழியாமல் மூன்று ரூபாய்க்கும், நான்கு ரூபாய்க்கும் இருந்தன. அள்ளிக் கொண்டு வந்தேன். நமக்குத் தேவை புத்தக்திலுள்ள விஷயமா, இல்லை, பேப்பரின் தரமா? இந்நாட்களில் எந்தப் பதிப்பகங்களும் இப்படி ‘மக்கள் பதிப்பு’ வெளியிடக்கூட எண்ணுவதில்லை. ஏன் என்பதுதான் புரியவில்லை.
============================================
ழைய விகடன் இதழ் ஒன்றில் நான் ரசித்த துணுக்கு:
============================================
நாகேஷின் டைமிங் காமெடி எனக்கு ரொம்பப் பிடிக்கும். எதிராளி டயலாக்கை முடித்ததும் ஒரு மாத்திரை நேரத்திற்கும் குறைவாய் நாகேஷின் பதில் வந்து விழுந்து சிரிக்க வைக்கும். ஆபீஸிலிருந்து வீட்டிற்குள் நுழைந்தபோது அம்மா பார்த்துக் கொண்டிருந்த பழைய படம் ஒன்றில் நாகேஷ் டைமிங் ஜோக் அடித்ததைப் பார்த்து சிரித்தேன். அந்த ஜோக்ஸ் இங்கே

))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
  
பாண்டியராஜன்: அப்பா! நானும் நாயா அலைஞ்சு பாத்துட்டேன். ஒரு பொண்ணும் கிடைக்க மாட்டேங்குது!

நாகேஷ்: டேய்! நாயா அலைஞ்சா பொண்ணு கிடைக்காதுடா, பன்னுதான் கிடைக்கும்!

))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

ஒ.வி.கிருஷ்ணாராவ்: என் பொண்ணு பங்கஜவல்லி. ‘பங்கு’ன்னுதான் கூப்பிடுவோம். வாம்மா பங்கு...

பெண் வருகிறாள். ஆறரை அடி உயரத்தில்!

நாகேஷ்: இவளை எதுக்கு பங்குன்னு கூப்பிடணும்? பேசாம நுங்குன்னே கூப்பிடுங்களேன்...
:
============================================
புதிரின் விடையை அடுத்த பதிவுல தரலாமான்னு யோசிச்சேன். ஆனா அப்படிச் செஞ்சா மிக்ஸர் பொட்டலம் முழுத் திருப்தியைத் தராதுன்னு தோணினதால இங்க விடை:

============================================
அவ்வளவுதான்.. மிக்ஸர் பொட்டலம் தீர்ந்துடுசு்சு! பின்ன பார்க்கலாம்!

Friday, February 10, 2012

நடை வண்டிகள் - 3

Posted by பால கணேஷ் Friday, February 10, 2012
ராஜேஷ்குமாரும் நானும் - 3

கோவை தினமலரிலிருந்து நெல்லைக்கு மாற்றலாகிப் போனதும் அங்கே ‘கதை மலர்’ என்று வந்து கொண்டிருந்த வார இணைப்பிதழுக்கு பொறுப்பு கொடுத்தார்கள். அந்த இதழுக்காக ஆர்.கே.வுக்கு போன் செய்து, ‘ரத்தினங்கள் போல ஒன்பது முத்திரைச் சிறுகதைகள் (முன்பே எழுதியதாயினும்) தாருங்கள்’ என்று கேட்டேன். அவருக்கு அப்போது அவகாசமில்லாததால் என்னையே செலக்ட் செய்து ‌போட்டுக் கொள்ள அனுமதி கொடுத்தார்.

பின்னர் கோவை சென்று (வழக்கம்போல்) அவரைச் சந்தித்த போது அந்தச் சிறுகதைகளில் சில அவருக்கே நினைவில்லை என்றும் எங்கிருந்து எடுத்தேன் என்றும் கேட்டார். அவரது சிறு‌கதைகளை பைண்ட் செய்து தொகுப்புகளாக வைத்திருப்பதைச் சொன்னேன். மறுமுறை சென்றபோது எடுத்துச் சென்று கொடுத்தேன். மிகமகிழ்ந்து போய், ‘‘ஒரு எழுத்தாளனுக்கு இதைவிடப் பெரிய பொக்கிஷம் கிடையாது கணேஷ்’’ என்று சொல்லி, மகாத்மா எழுதிய ‘சத்தியசோதனை’ நூலை ஆட்டோகிராஃப் போட்டு எனக்கு அன்பளித்தார். என்னுடைய புத்தகப் பொக்கிஷங்களில் அதுவும் ஒன்று இன்றுவரை.

க்ளோனிங் பற்றிய தகவல்களைக் கொடுத்தபோது, ‘‘இந்த மாதிரி வாசகர்கள் தகவல்கள் தந்தால் அவர்கள் பேரை என் கடிதத்தில் சொல்லிவிடுவது வழக்கம். உங்க பேரைப் போட்டுடறேன்’’ என்றார். ‘‘தினமலருக்குப் பரந்த மனம் கிடையாது. அவர்கள் பேரைச் சொல்லிக் கொண்டுதான் நான் உங்களிடம் அறிமுகமாகி நட்பானது போல நினைத்து நடந்து கொள்வார்கள். அதனால் வேண்டாம்’’ என்று சொல்லிவிட்டேன்.

பின்னாளில்  க்ரைம் நாவல் ஸ்பெஷல்’ என்று ஜி.அசோகன் அவர்கள் ராஜேஷ்குமாரின் தொடர்கதைகளை வெளியிட ஆரம்பித்தார். பல நாவல்களை கத்திரி வைக்காமல் வெளியிடுவார். சில நாவல்களில் அவரது கத்திரி விளையாடி விடும். (ஆனால் எங்கு கத்திரி வைக்கிறார் என்பது புதிதாய் படிப்பவர்களுக்குத் தெரியவே தெரியாது. அப்படி ஒரு திறமையான எடிட்டர் அவர்). நான் ராஜேஷ்குமாரிடம் நேயர் விருப்பம் மாதிரி எனக்குப் பிடித்த அவரது தொடர்களையெல்லாம் சொல்லி வெளியிடச் சொல்வேன். இந்த அன்புத் தொல்லையைப் பற்றி அவர் தன் கடிதத்தில் வாசகர்களுக்கு எழுதிவிட, தினமலரில் (படிக்கும் பழக்கம் வைத்திருந்த மிகச் சிலரிடம்) என் மதிப்பு ‘கும்!’

தன்பின் வந்த காலங்களில் அவர் எக்கச்சக்கமாக நாவல் எழுதும் கமிட்மெண்ட்களைக் குறைத்துக் கொண்டு, அளவோடு எழுத ஆரம்பி்த்தார். க்ரைம் நாவல் தவிர வேறு ஏதாவது ஒரு மாத நாவல் மட்டும் எழுதலாம் என்று முடிவெடுத்து அவர் செயல்படுத்த, அவரிடம் நாவல் கேட்டுப் பெற முடியாத மாத நாவல் பதிப்பாளர் ஒருவர் ‘‘ராஜேஷ்குமாருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது’’ என்று செய்தி வெளியிட்ட கொடுமையும் நடந்தது. பின்னொரு சமயம் கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை நன்றாக எழுதுகிறார் என்பதால் ராஜேஷ்குமார் பத்திரிகை உலகிற்கு அறிமுகப்படுத்த, சென்னையில் வேறு சில பத்திரிகைகளில் வாய்ப்புக் கேட்டுச் சென்ற அவர், ‘‘ராஜேஷ்குமாருக்கே கதை எழுத ஐடியாக்கள் எல்லாம் நான்தான் கொடுக்கிறேன்’’ என்றெல்லாம் சொல்லிவிட, அந்த பத்திரிகை நண்பர்கள் ரா.கு.விடம் அதைத் தெரிவித்தனர். ஒருமுறை இவரது க்ரைம் நாவலின் கருவைச் சுட்டு ஒரு திரைப்படமே வெளிவந்தது.

இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் அமைதி காத்துவிடுவது அவரது வழக்கம். அதைப் பற்றிக் கேட்டதற்கு, ‘‘அவதூறாக அவர் பத்திரிகையில் எழுதினால் எழுதிட்டுப் போகட்டும். வாசகர்களுக்கு என்னைப் புரியும்’’ என்றும், ‘‘யார் எழுத்து ஒரிஜினல்ங்கறது காலப் போக்குல நிலைச்சுடும். விடுங்க கணேஷ்.’’ என்றும் சொன்னார். (அவர் சொன்னது போல அந்த ‘டூப்’ எழுத்தாளர் இன்று எழுத்துலகிலேயே இல்லை. க்ரைம்கதை மன்னனோ இன்றும் வெற்றி வலம் வருகிறார்).  ‘‘என் கதையைச் சுட்டு படம் எடுத்து விட்டார்கள் என்று வழக்குப் போட்டால் வாய்தாவாக வாங்கி பல வருடம் போராடி, கடைசியில் ‘இது ராஜேஷ்குமாரின் கதை என்பதற்கு சாட்சி இல்லை. ராஜேஷ்குமாரை கோர்ட் கண்டிக்கிறது’ என்பார்கள். இதற்காக அலையும் நேரத்தில் நான் உருப்படியாக பல விஷயங்கள் செய்யலாம்.’’ என்றார்.

ராஜேஷ்குமாருடன் ஒரு சமயம் பேசிக் கொண்டிருந்தபோது ஆதங்கமாக ஒரு விஷயம் சொன்னார். அவரிடம் அவர் எழுதிய நாவல்களை இரவல் வாங்கிச் சென்ற எவரும் திருப்பிக் கொடுத்ததே இல்லை என்பதே அது. எனக்கும் இது விஷயத்தில் பெரிய மனக்குமுறல்கள் இருந்ததை அவரிடம் கொட்டித் தீர்த்தேன். (பார்க்க: என் பதிவு புத்தகங்களை நேசிப்பவரா நீங்கள்?) அவரிடம் இல்லாத பல நாவல்களை அவர் சொல்ல, என் கலெக்ஷனில் இருந்தவற்றையெல்லாம் அவருக்குக் கொடுத்தேன்.

‘அவரது மகன்களின் திருமணங்களுக்குச் சென்று வாழ்த்தியதும், அவருடனிருந்ததும் மறக்க இயலாத இனிய அனுபவம். அவர் பேரனைப் பார்த்துவிட்ட காலத்தில் நான் சென்னைக்கு வந்து ‘கல்யாணமாலை’ இதழில் லேஅவுட் ஆர்ட்டிஸ்டாக இருந்தேன். பேரனைப் பார்க்க சென்னை வந்த அவரிடம் பேட்டி தரும்படி கேட்டேன்.விரிவாகப் பேசினார் - மூன்று இதழ்களில் வெளியிடும் அளவுக்கு. (கதைகளில் ஏகப்பட்ட கொலைகளைச் செய்துவிட்ட இவருக்கு ரத்தத்தைப் பார்த்தால் மயக்கமே வந்து விடும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?) இன்றும் எப்போது வேண்டுமானாலும் செல்போனில் அழைத்தால் மனம் விட்டு நிறைய நேரம் பேசுவார்.

வ்வளவு புகழ் அடைந்தாலும் சிறிதளவும் கர்வம் இல்லாமல், பழகும் தன்மை மாறாமல் 1996ல் பார்த்ததைப் போலத்தான் இப்போதும் அவரைப் பார்க்கிறேன். அவரிடமிருந்து நான் எடுத்துக் கொண்ட விஷயம் இந்த எளிமையும், எப்போதும் இன்சொற்கள் பேசுவதும்தான்!
-‘ராஜேஷ்குமாரும் நானும்’ நிறைவடைய
‘சுபாவும் நானும்’ தொடங்குகிறேன்....

==========================================================

ண்பர் ‘வசந்த மண்டபம்’ மகேந்திரன் என்னை புத்தாண்டுத் தீர்மானங்களைப் பற்றி தொடர் பதிவு எழுத அழைப்பு விடுத்திருந்தார். ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டுத் தீர்மானங்கள் எடுத்து எவையும் நிறைவேறும் வழியாக இல்லாததால் இவ்வாண்டு நான் எடுத்த ஒரே புத்தாண்டுத் தீர்மானம், ‘இனி புத்தாண்டுத் தீர்மானங்கள் எதுவும் எடுப்பதில்லை’ என்பதே. அதனால் என்னால் தொடர இயலவில்லை. மன்னித்துவிடுங்கள் மகேந்திரன்! (அட, நாவல் தலைப்பு மாதிரி இல்லை..?)

Wednesday, February 8, 2012

இன்னும் ஒரு அங்கீகாரம்!

Posted by பால கணேஷ் Wednesday, February 08, 2012

தோழி ஸ்ரவாணி தந்த விருதின் மகிழ்வு அடங்குவதற்கு முன் மற்றொரு விருது எனக்குக் கிடைத்துள்ளது. தோழி ஷக்திப்ரபா எனக்கு "Versatile blogger award" வழங்கி என்னை பெருமைப்படுத்தியிருக்கிறார். விஷயமறிந்ததும் என் உணர்வுகளை நேர்மையாகச் சொல்வதென்றால் பாராட்டுப் பெற்றதில் நிறைய மகிழ்ச்சி + இந்த நம்பிக்கையைக் காப்பாற்ற நல்ல விஷயங்களைத் தர வேண்டுமே என்ற பயம். இப்படிக் கலவையான உணர்ச்சிகளில் இருக்கும் நான் என் மேல் நம்பிக்கையும், அன்பும் கொண்டு விருது வழங்கிய ஷக்திப்ரபா அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்குப் பிடித்த ஏழு விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதுடன், நான் ஐந்து பேருக்கு வழங்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். நான் தேர்ந்தெடுத்த இந்த ஐவரும் அறிமுகம் தேவையில்லாத, என்னிலும் மேம்பட்ட வித்தகர்கள்.

1, திரு. ரமணி அவர்கள்

2, திரு,சென்னைப் பித்தன் அவர்கள்

3, திரு. அப்பாத்துரை அவர்கள்

4, திரு,ரிஷபன் அவர்கள்

5, திரு,ரெவெரி அவர்கள்

இந்த ஐவருக்கும் விருது வழங்குகிறேன் என்பதைவிட சமர்பபிக்கிறேன் என்று சொல்வதே பொருத்தமானது. இதை ஏற்றுக் கொள்ளும்படியும், எனக்கு விருது தந்த ஷக்திப்ரபாவும், அவருக்கு விருது தந்த வை.கோ அவர்களும் சொன்ன படி, நீங்கள் விரும்பும் ஐந்து நல்எழுத்துக்குச் சொந்தக்காரர்களுக்கு வழங்கி மகிழும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

இனி, எனக்குப் பிடித்த ஏழு விஷயங்கள் : 1. புத்தகங்கள் படிப்பது, 2. மெலோடி பாடல்கள், 3. மழையை ரசிப்பதும், நனைவதும், 4. எம்.ஜி.ஆரின் படங்கள், 5. தூக்கம் (சிரிக்காதீங்க ப்ளீஸ்), 6. நண்பர்களுடன் கழியும் பொழுதுகள், 7. ஐஸ்க்ரீம்கள்.


==============================================

மீபத்தில் தோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தாறுமாறாக அடி வாங்கி, மாவுக் கட்டுடன் திரும்பியிருக்கிறது. ‘வெற்றிகளைக் குவித்த கேப்டன்’ என்று தோனியைக் கொண்டாடியவர்கள் எலலாம் இப்போது அவரைத் திட்டிக் கொண்டு இருக்கிறார்கள். டி.வி. செய்திகளிலும், செய்தித் தாள்களிலும் படித்த இதைப் பற்றி எண்ணியபடியே காலையில் பழைய பாடல்கள் ‌பார்க்க டி.வி.யைப் போட்டேன். சிவாஜி கணேசன் தோன்றி சோக கீதம் பாடிக் கொண்டிருந்தார்.

என்ன ஆச்சரியம்..! அப்படியே அவர் மார்ஃபிங்கில் உருமாறி தோனியாக எனக்குக் காட்‌சியளித்தார். அவர் பாடிய பாடலைக் கேளுங்கள்... இல்லை, படியுங்கள்!

போனால் போகட்டும் போடா - கேப்டன்
பதவியில் நிலையாய் இருந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா...

வந்தது தெரியும், போனது ஸ்டம்ப்பு,
அவுட்டானது எனக்கே தெரியாது!
வந்தவரெல்லாம் நின்று விட்டால் - இந்த
கிரவுண்டினில் எனக்கே இடமேது?
கிரிக்கெட் என்பது வியாபாரம் - அதில்
‘ஆட்’ல் (விளம்பரத்தில்) நடிப்பது வரவாகும்
நான் டக் அவுட் என்பது நிலையாகும்!

போனால் போகட்டும் போடா....

அம்பயர் சொன்னான் அவுட்டென்றே - அதை
இல்லையென்றால் அவன் விடுவானா..?
(பழைய) ரெக்கார்டைச் சொல்லி அழுவதனாலே...
மீண்டும் ஆடவும் விடுவானா..?
கூக்குரலாலே கிடைக்காது - அவன்
உயர்த்திய விரல்தான் இறங்காது -இனி
ஆட்டம் என் பக்கம் திரும்பாது!

போனால் போகட்டும் போடா....

ஸிக்ஸரும் ஃபோரும் ‘ஐபிஎல்’லில் அடித்தேன்-
இங்கொரு ஸிக்ஸர் அடித்தேனா?
அடித்தால் நானும் தலையைக் குனிந்தே
பெவிலியன் மீண்டும் வருவேனா?
நமக்கும் மேலே அம்பயரடா - அவன்
ரூல்ஸ் எ(ல்)லாம் தெரிந்த தலைவனடா!
என்னை ஆட்டிப் படைக்கும் கலைஞனடா!

போனால் போகட்டும் போடா - கேப்டன்
பதவியில் நிலையாய் இருந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா..

==============================================

மீபத்தில் தோழி ஹேமாவின் ‘உப்புமடச் சந்தி’க்குப் போய்ப் படித்தபோது, இந்தப் பதிவின் மூலம் என் கண்ணிலிருந்து இரண்டு சொட்டு நீரை வரவழைத்தார். அதுவரை நாம்தான் வாழ்க்கையில் நிறைய சோகத்தைச் சந்தித்தவன் என்று சுய இரக்கம் கொண்டிருந்த நான், தலையில் குட்டிக் கொண்டு, ‘இதில் பாதியைக் கூட நீ அனுபவித்ததில்லை.’ என்று ‌சொல்லி, சந்தோஷமாகச் சிரிக்க ஆரம்பித்து விட்டேன். என்னை அழவும், பின்பு சிரிக்கவும் வைத்த ஹேமாவுக்கு இந்தப் பாடல் தர்ப்பணம்! ச்சே... வேறென்னமோ சொல்வார்களே... ஆங், சமர்ப்பணம்!

==============================================

ன்னுடைய பதிவில் திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை எல்லாம் தன்னுடைய இந்தப் பதிவின் மூலம் மீண்டும் இயங்கச் செய்த அன்பு நண்பர் அப்துல் பாஷித் அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள் + அவருடைய சேவைக்கு ஒரு ராயல் சல்யூட்!

Sunday, February 5, 2012

நடை வண்டிகள் - 2

Posted by பால கணேஷ் Sunday, February 05, 2012
ராஜேஷ்குமாரும் நானும் - 2

கோவை தினமலரில் நான் கணிப்பொறிப் பிரிவில் பணியில் சேர்ந்தபோது அங்கு வடிவமைப்புப் பிரிவில் வேலை செய்து கொண்டிருந்த விஜயன் எனக்கு நெருங்கிய நண்பனானான். என்னைவிட வயதில் சிறியவனாய் அவன் இருந்தது எந்த விதத்திலும் நட்புக்குத் தடையாக இருக்கவில்லை. கோவையில் எங்கே சுற்றுவதென்றாலும் அவன் இல்லாமல் தனியே செல்வதில்லை. அத்தனை நெருங்கிய நட்பு எங்களுடையது.

கல்யாணம் முடிந்து ஓராண்டு ஆகியிருந்த நிலையில் நண்பர் ராஜேஷ்குமார் என்னிடம் மூன்று சமயங்களில் உதவி கேட்டார். (இதைப் பற்றி இப்போது நான் தற்பெருமை அடித்துக் கொள்வதற்காகச் சொல்லவில்லை. என் மனைவிக்கு என்னுடன் சண்டை ஏற்பட்ட காரணத்தைச் சொல்வதற்காகத்தான் விரிவாகச் சொல்கிறேன்.)

ருநாள் இரவு என் அலுவலகத்துக்குப் போன் செய்து, ‘‘க்ளோனிங்கை அடிப்படையா வெச்சு ஒரு நாவல் எழுதப்போறேன் கணேஷ். அதுசம்பந்தப்பட்ட தகவல்கள் நிறைய எனக்குத் தேவைப்படுது. உங்களுக்கு அது பத்தித் தெரியுமா?’’ என்றார். அந்த சப்ஜெக்டில் எனக்கிருந்த ஆர்வத்தால் ஆங்கில, தமிழ் நாளிதழ்களிலிருந்து எடுத்த கட்டிங்குகளையும், சுஜாதா விரிவாக எழுதிய ஒரு கட்டுரையும், நிறையப் படங்களுமாக ஒரு ஃபைலே தயாரித்து வைத்திருந்தேன்.

‘‘என் கிட்ட நிறைய டீடெய்ல்ஸ் இருக்கு ஸார். நாளைக்கு காலையில கொண்டு வந்து தர்றேன்.’’ என்றேன். (தினமலர் நாளிதழ் காலை பேப்பர் என்பதால் செய்திப் பிரிவு, வடிவமைப்புப் பிரிவு, அச்சுப் பிரிவு அனைவரும் நைட் ஷிப்டில்தான் வேலை செய்ய வேண்டியிருக்கும்- மாலை ஆறிலிருந்து இரவு இரண்டு மணி வரை.)

மறுதினம் காலையில் விஜயனையும் உடனழைத்துக் கொண்டு அவரைச் சந்தித்து அவற்றைத் தந்தேன். பெட்டிச் செய்திகள் எல்லாம் சேர்த்து விறுவிறுவென்று எழுதி அந்த மாத க்ரைம் நாவலை அமர்க்களப்படுத்தினார்.

பின்னொரு சமயத்தில் ‘‘நியூயார்க்ல நடக்கற மாதிரி ஒரு கதை எழுதப் போறேன். அந்த நாட்டைப் பத்தியும், அங்குள்ள வழிகள், புகழ் பெற்ற விஷயங்கள் பத்தின தகவல்கள் தேவைப்படுது. ஏதாவது கிடைக்குமா?’’ என்றார். கோவை மாவட்ட நூலகத்தில் புத்தகங்களை ரெஃபர் செய்து, கொஞ்சம் எழுதியும், கொஞ்சம் ஜெராக்ஸ் செய்தும் கிடைத்தவற்றைக் கொடுத்தேன்.

மூன்றாவது சந்தர்ப்பத்தில் அவர் ஒரு விஷயம் கேட்டபோதுதான் என் மனைவிக்கு கோபம் ஏற்பட்டது. அவரை நானும் விஜயனும் சந்திக்கச் சென்றிருந்த ஒரு சமயம், ‘‘பாக்யா இதழ்ல சமீபத்துல நான் எழுதி முடிச்ச தொடர்கதைல ரெண்டு சாப்டர் என்கிட்ட மிஸ்ஸிங். பப்ளிகேஷனுககு கொடுக்கறதுக்கு தேவைப்படுது. உங்ககிட்ட இருந்தாக் கொடுங்களேன்...’’ என்று கேட்டார். நான் பாக்யா வாங்குவதில்லை என்பதை அவரிடம் சொல்லி, தேடித் தருவதாகச் சொன்னேன். கோவையில் பழைய புத்தகக் கடைகளில் அலைந்து திரிந்து அந்த இரண்டு இதழ்களைப் பிடித்து விட்டேன். உடனிருந்த விஜயன்கூட இதற்காக என்னைக் கேலி செய்தான்.

இந்த விஷயங்களையெல்லாம் கவனித்துக கொண்டிருந்த என் மனைவிக்குக் கோபம வந்து விட்டது. ‘‘நைட் டூட்டி பாத்துட்டு வந்து பகல்ல தூங்காம இப்படி அலைஞ்சிட்டிருந்தா உடம்பு என்னத்துக்கு ஆறது? அவருக்கு எத்தனையோ வாசகர்கள்! கேட்டா செஞ்சிட்டுப் போறாங்க.’’ என்றாள்.

‘‘வாசகர் கிட்ட அவர் கேக்கலைடி. நண்பர்கிட்ட கேட்டிருக்கார். கண்டிப்பாச் செய்யணும்’’ என்றேன்.

‘‘நீங்கதான் ஓடி ஓடிச் செய்யறீங்க. அவருககு நீங்க நூத்துல, ஏன்.. ஆயிரத்துல ஒருத்தர்...’’ என்றாள்.

‘‘நானில்லைம்மா... எம்.ஜி.ஆர்.தான் ஆயிரத்தில் ஒருவன்’’ என்றேன்.

‘‘இந்த இடக்குக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. அவருக்கு நீங்க ஒண்ணும் ஸ்பெஷல் இல்லை. நீங்கதான் அப்படிச் சொல்லிட்டுத் திரியறீங்க...’’ என்றாள்.

‘‘நிச்சயம் இல்லை. அவர் ஃப்ரெண்ட்ஷிப்பை மதிக்கிறவர். எனக்காக எதுவும் செய்வார்’’ என்று நான் சொல்ல, அவள் கத்தி சண்டை  போட (வாயால்தான்), அது முற்றிப் போய் கடைசியில் ஒன்று சொன்னாளே, பார்க்கலாம்... ‘‘சரி, ஒண்ணு பண்ணுங்க. இப்ப நேரா அவர்கிட்ட் போயி, எனக்கு நூறு ரூபா கொடுங்கன்னு கேளுங்க. கேள்வி கேக்காம அவர் குடுத்துட்டார்ன்னா நான் வாயே பேசலை!’’ என்றாள். (நூறு ரூபாயின் மதிப்பு இப்போதிருப்பதை விட அந்த ஆண்டுகளில் அதிகம்தான்.)

என்ன அபத்தமான சவால் என இப்போது தோன்றினாலும் நான் முன்பே சொன்னது போல் அப்போது எனக்கிருந்த ஈகோ என்னை யோசிக்காமல் சவால்விடச் செய்தது. நேராக அவரிடம் விஜயனையும் அழைத்துக் கொண்டு சென்றேன். எந்த விஷயமும் பேசாமல் எடுத்த எடுப்பிலேயே, ‘‘சார்! எனக்கு உடனடியா நூறு ரூபாய் தேவைப்படுது. தரமுடியுமா?’’ என்று கேட்டேன்.. அடுத்த கணம்... நான் என் மனைவியிடம் சொன்னது போலவே சிறிதும் தயங்காமல் சட்டையிலிருந்து எடுத்துத் தந்தார்.

‘‘தாங்க்ஸ் ஸார்’’ என்று நன்றி சொல்லிவிட்டு வேறு சப்ஜெக்ட் எதுவும் பேசாமல் வந்துவிட்டேன். என் மனைவியிடம் அதைத் தந்து விஷயத்தைச் சொன்னதும் அவள் வாய் மூடிப் போனது. (என்னுடன் வந்த விஜயனுக்குக் கூட இன்றுவரை இந்த சவால் விஷயம் தெரியாது. இத்தனை ஆண்டுகள் கழிச்சு இப்ப படிச்சு தெரிஞ்சுட்டிருப்பான்.) ஆனால் அந்தச் செயலை எண்ணி பின்னாட்களில் பல முறை வெட்கப்பட்டிருக்கிறேன். வருத்தப்பட்டிருக்கிறேன்.
-தொடர்கிறேன்,,,

(சரியா இருக்கான்னு யாராவது பின்னூட்டத்துல சொல்லுங்க அன்பர்களே...

Saturday, February 4, 2012

ஆனந்த அதிர்வுகள்

Posted by பால கணேஷ் Saturday, February 04, 2012
‘ராஜேஷ்குமாரும் நானும்’ என்ற தலைப்பில் நான் நடைவண்டிகள் தொடரை ஆரம்பித்திருந்தேன். அனைவரும் ரசித்து, உடனே தொடரச் சொன்னதால் உடனே அடுத்த பகுதியை வெளியிட்டு விடலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் அதற்குள் இரண்டு விஷயங்கள் குறுக்கிட்டு, அதை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டதால் அடுத்த பதிவில் தொடர்கிறேன். மன்னிக்க.

===========================================

‘‌ரா
ஜேஷ்குமாரும் நானும்’ முதல் பகுதியைப் படித்து விட்டு கோவையிலிருந்து என் நண்பன் வீரவிஜயன் போன் செய்தார். ‘‘நானும்தானே ராஜேஷ்குமாரை நீங்க பாக்கப் ‌போகும்போது கூட இருந்தேன். என்னைப் பத்திச் சொல்லாம விட்டுட்டீங்களே...’’ என்றார்.

மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் ஆறு வருடங்களாக தொடர்பில் இல்லாமல் இருந்தோம் நாங்கள். அவர் தொலைபேசி எண்ணை மாற்றி விட்டிருக்க, நான் இங்கே சொல்ல முடியாத பல சொந்தக் கஷ்டங்களில் உழன்று கொண்டிருக்க, ‘டச்’சில் இல்லாமலே இருந்து விட்டோம். இப்போது ய‌தேச்சையாக இந்தப் பதிவைப் படித்தவர், என் தளத்திலிருந்த ஒரு ‘க்ளூ’வைக் ‌கண்டறிந்து, அதன் மூலம் என் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்திருக்கிறார்.

ராஜேஷ்குமார் அவர்களுடனான என் நட்பில் இனிவரும் சில விஷயங்கள் நடந்தபோது முழுக்கவும் என்கூட இருந்தவர் விஜயன். ஆகவே, அவருடன் மீண்டும் பேசியதில் மிக அகமகிழ்வு எனக்கு. இதன் மூலம் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொண்டதிலும் மகிழ்வுதான்.

===========================================

தோழி ஸ்ரவாணி தன் ப்ளாக்கில் எனக்கு ஒரு விருது கொடுத்திருந்தார். அதைப் பற்றிய விவரம் அவர் வார்த்தைகளிலேயே கீழே தருகிறேன்:

'லீப்ச்டர்' என்கிற, இளம் வலைப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது இது. இதன் அர்த்தம் 'மிகவும் பிடித்த' என்பதாகும். இதைப் பெறுபவர், மேலும் தான் விரும்பும் 5 இளம் வலைப்பூக்களுக்கு அதாவது 200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள வலைகளுக்கு விருது வழங்க வேண்டும். இதை தாங்கள் ஏற்றுக் கொண்டதன்  அடையாளமாக அதன் படத்தை தங்கள் வலையில் காப்பி  -பேஸ்ட் செய்து கொள்ளவும். அந்த தொடர் சங்கிலியை உடைத்து விடாமல் மறவாமல் 5 பேர்களுக்கு வழங்கி புளங்காகிதம் அடைக.

எப்படி என்னை ‘இளம்’ வலைப்பதிவாளர் என்று தேர்ந்தெடுத்தாரோ தெரியவில்லை... ஆனாலும் தோழி கொடுத்த விருதை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு இங்கே என் தளத்தில் இணைத்திருக்கிறேன். இப்போது அவர் சொன்னபடி நான் ஐந்து பேருக்கு வழங்கியாக வேண்டும் அல்லவா.... அந்த ஐந்து பேர்:

1. கதை, கவிதை, நகைச்சுவை என்று எல்லா ஏரியாவிலு்ம் முத்திரை பதிக்கும்.... அக்கா ஷைலஜா அவர்கள் (எண்ணிய முடிதல் வேண்டும்)

http://shylajan.blogspot.in/2012/02/blog-post.html

2. சொல்ல வரும் விஷயம் எதுவானாலும் அதை மனதில் பதியும் வண்ணம் ‌சொல்லும் வித்தை தெரிந்த... தங்கை ராஜி அவர்கள் (காணாமல் போன கனவுகள்)

http://rajiyinkanavugal.blogspot.in/2012/02/blog-post.html

3. அழகுத் தமிழ்க் கவிதைகளாலும், அறிவுக்கு வேலைதரும் வார்த்தைப் புதிர்களாலும் (என் அறிவுக்குத்தான் எட்டுறதில்ல) அசத்தி வரும்... நண்பர் மகேந்திரன் அவர்கள் (வசந்த மண்டபம்


http://ilavenirkaalam.blogspot.in/2012/02/blog-post.html

4. சினிமா, தொடர் கதை, சாதனையாளர்களின் வரலாறு, கிரிக்கெட் என்று எல்லாத் திசைகளிலும் எழுதிக் குவித்து வரும்... நண்பர் K.S.S.ராஜ் அவர்கள் (நண்பர்கள்)


http://www.nanparkal.com/2012/02/blog-post_03.html

5. சின்னச் சின்ன சுவாரஸ்யக் கதைகள், உடல் நலத்துக்கேற்ற உன்னத விஷயங்கள், அவ்வப்போது அழகுக் கவிதைகள் என வியக்க வைக்கும்.... நண்பர் துரை டேனியல் அவர்கள் (தளத்தின் பெயரும் இதுவே)

http://duraidaniel.blogspot.in/2012/02/stress_03.html

இவர்கள் ஐவரும் என் அன்பை ஏற்றுக் கொண்டு, தோழி ஸ்ரவாணி சொன்னது போல உங்களுக்கு உகந்த ஐந்து பேருக்கு வழங்கி மகிழும்படி வேண்டுகிறேன். இதோ அந்த விருதின் படம்:


===========================================


 ===========================================

Wednesday, February 1, 2012

நடை வண்டிகள் - 1

Posted by பால கணேஷ் Wednesday, February 01, 2012
ராஜேஷ்குமாரும் நானும்! - 1

ராஜேஷ்குமார் அவர்களை ‘க்ரைம் கதை மன்னன்’ என்றுதான் பெரும்பாலோர் அறிந்திருப்பீர்கள். அவர் ‘குமுதம்’ இதழிலும், ‘சாவி’ அவர்கள் ஆசிரியராக இருந்த ‘குங்குமம்’ இதழிலும், பின்னர் சாவியிலும் ஏராளமான சிறுகதைகள் எழுதும் போதிலிருந்தே அவரின் ரசிகன் நான். அவர் எழுதிய சிறுகதைகளையெல்லாம் சேகரித்து பைண்ட் செய்து வைத்திருந்தேன். (அவருடனான என் நட்பு இறுகுவதற்கு அவை ஒரு கருவியாக இருந்தது பின்னாட்களில்).

அவர் சாவி அவர்கள் நடத்திய ‘மோனா’ வில் முதல் நாவல் எழுதி, பின்னர் மாலைமதியில் சில நாவல்கள் எழுதிய போதெல்லாம் படித்து ரசித்திருக்கிறேன். கடிதமிட்டதில்லை. சில காலம் கழித்து ‘க்ரைம் நாவல்’ என்று மாதம் ஒரு நாவல் ராஜேஷ்குமாரை எழுதவைத்து தனி சிம்மாசனத்தில் அவரை அமர வைத்தார் திரு.ஜி.அசோகன் அவர்கள். அவ்வளவுதான்... ராஜேஷ்குமார் என்ற ராக்கெட் டேக் ஆஃப் ஆகிப் பறக்க ஆரம்பித்தது. சில சமயங்களில் மாதம் ஆறு, ஏழு நாவல்கள் கூட அவருடையது வெளிவரும். ‘க்ரைம் கதை மன்னன்’ என்ற அடைமொழியும் அவருடன் ஒட்டிக் கொண்டது.

அந்நாட்களில் அவ்வப்போது அவருக்கு வாசகர் கடிதம் எழுதியிருக்கிறேன். நாவலின் ப்ளஸ் மைனஸ்களை அலசி எழுதுவேன். எதற்கும் அவரிடமிருந்து பதில் வந்ததில்லை. அந்நாட்களில்தான் ‘நாம் எழுதும் கடிதங்களை எழுத்தாளர்கள் படிக்கிறார்களா?’ என்ற சந்தேகம் என் மனதில் எழும். ‘தினமலர்’ நாளிதழில் கணினி வடிவமைப்பாளாகச் சேர்ந்த பின்னர், பல பதிப்புகளுக்கும் பணிமாற்றம் கிடைத்தது. (சில காலம் அந்நிறுவனத்தில் வேலை செய்தேன்) அப்படி 1995ன் இறுதியில் எனக்கு கோவை தினமலர் அலுவலகத்துக்கு மாறுதல் கிடைத்து கோயமுத்தூர்வாசியானேன்.

கோவையில் அவர் இருக்கும் முகவரி தெரியும் என்பதால் ஒரு சுபதினத்தில் அவரை நேரில் சந்திக்கச் சென்றேன். ஒப்பணக்கார வீதியில் ஒரு எளிமையான வீடு. (பி்னனாட்களில்தான் சொந்த வீடு கட்டிக் கொண்டார்.) மாடியறையில்தான் அவர் எழுதுவது வழக்கம் என்பதால் அங்கு அழைத்துச் சென்றார். கைலி, பனியனில் எளிமையாக இருந்தார். அதே எளிமை அவரின் பேச்சிலும் இருந்தது. அந்நாட்களில் நான் பக்குவப்பட்டவனாக இல்லை. நிறையக் குறைகள் என்னிடம் மிகுந்திருந்த காலகட்டம் அது. அவரைச் சந்தித்ததும் ப்ளஸ் பாயிண்ட்டுகளையும், பாராட்டையும் சொல்வதற்குப் பதிலாக குறை சொன்னேன்.

‘‘எண்ணி ஏழே நாள்-ன்னு உஙக நாவல் படிச்சேன் ஸார். இதை எழுதறதக்கு ஒரு ராஜேஷ்குமார் தேவையில்ல. கதை எழுதணும்னு நினைக்கிற என்னை மாதிரி கத்துக் குட்டிகளே எழுதிடுவாங்க. நீங்கதான் எழுதினீங்கன்னு நம்பவே முடியலை ஸார்...’’ என்றேன். துளியும் கோபப்படாமல் ரசித்துச் சிரித்தார்.

‘‘என்ன பண்றது கணேஷ்? சில சமயங்கள்ல அன்புக் கட்டளைகளை மறுக்க முடியாம அதிக நாவல் எழுதும்படி ஆகறபோது இப்படி சில லைட் சப்ஜெக்டா அமைஞ்சுடுது. உங்களுக்குத் திருப்தி தரலை. ஆனாலும் எனக்கு நிறைய பாராட்டுக் கடிதங்கள் வந்திச்சு’’ என்றார். அதன் பின்னர்தான், நான் அவருக்கு எத்தனை காலமாக வாசகன் என்பதையும் நான் படித்த கதைகளைப் பற்றியும் விரிவாகப் பேசினேன். எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் குறுக்கிட்டு விட்ட என்னிடம் பொறுமையாக நேரம் செலவிட்டுப் பேசினார். சிறுபிள்ளைத்தனமாக, ‘‘ஸார், நீங்க இப்ப எழுதிட்டிருக்கற நாவலோட பக்கத்தை நான் பாக்கலாமா? உங்க கையெழுத்தைப் பாக்கணும் போல இருக்கு’’ என்றேன். சிரித்தபடி எழுதிக் கொண்டிருந்த பக்கத்தைக் காட்டினார். படித்தேன். திருமதி. தனலட்சுமி ராஜேஷ்குமார் தந்த காபியைக் குடித்துவிட்டு விடைபெறும் போது, ‘‘அடிக்கடி வந்துட்டிருங்க’’ என்றார். அந்த வார்த்தைகளில் மிக மகிழ்ந்து போனேன்.

சும்மாவே குதிக்கிற குரங்கு, கள்ளைக் குடிச்சுடுச்சுன்னா சும்மா இருக்குமா? அதன் பின்னர் அவர் நாவல்களைப் படித்த உடன், வாசகர் கடிதமாவது, ஒண்ணாவது... நேரே வீட்டிற்குப் போய் கதவைத் தட்டி விடுவேன். என் கருத்தைச் சொல்வேன். அவர் பதிலளிப்பார். வேறு பல விஷயங்களையும் உரையாடுவார். சில அவசர சமயங்களில் மட்டும் உடனே பேச்சை முடித்துக் கொண்டு விடுவார். இப்படியாக அவருடன் பழகியதில் எழுத்தாளர் - வாசகர் என்ற கட்டத்தைத் தாண்டி நண்பர்கள் என்று சொல்லக் கூடிய அந்தஸ்து எனக்குக் கிட்டியது.

அவரைச் சந்தித்த அடுத்த ஆண்டில் - அதாவது 1997 -ல் எனக்குத் திருமணமானது. வேலூரில் நடந்த திருமணத்திற்கு பத்திரிகை கொடுத்தேன். கல்யாணத்திற்கு அவர் வராவிட்டாலும் வாழ்த்தாவது வரும் என்று காத்திருந்தேன். வரவில்லை. கல்யாணம் முடிந்து கோவை திரும்பியதும் சண்டை போட அவர் வீட்டுக்குச் சென்றேன். என் மனைவிக்கு படிப்பதில் ஆர்வம் இல்லாவிட்டாலும் பிரபல எழுத்தாளர் என்று அவரை அறிந்திருந்ததால் அவர் என் நண்பர் என்பதில் ஒரு  த்ரில். அவளையும் உடன் அழைத்துச் சென்றேன். ஆனால் அவர் வீட்டுக்குச் சென்றதும் அவரின், அவர் மனைவியின் அன்பான உபசரிப்பில் சண்டை போட வந்தது மறந்து விட்டது. ஒரு ஆதங்கமாகக் கேட்டபோது, கோவையில் போஸ்டல் ஸ்ட்ரைக் காரணமாக வாழ்த்துத் தந்தி அனுப்ப இயலாத நிலையை விளக்கினார். (அப்போது செல்ஃபோன் என்கிற வஸ்து இப்படி வெகுஜனப் புழக்கத்தில் இல்லை என்பதை நினைவில் கொள்க.)

என் மனைவிக்கு அவரின் எளிமையும் கலகலப்பான, அன்பான பேச்சும் மிகப் பிடித்திருந்தது. வீ்டடிற்கு வந்து சொல்லிச் சொல்லி மாய்ந்தாள். எல்லாம் கல்யாணமான புதிதில்தான். சில நாட்களிலேயே நான் அடிக்கடி அவரை சந்திக்கப் போவதும், ஒரு சில விஷயங்களை அவருக்காகச் செய்ததும் அவளுக்குப் பிடிக்காமல் போக, எங்களுக்குள் பெரும் சண்டை மூண்டது. வாய்ப் பேச்சாக ஆரம்பித்த அது, பின்னர் ஒரு சவாலில் போய் முடிந்தது. விளைவு... என் நண்பர் ராஜேஷ்குமார் தங்கம் என்பதை நான் ‌அறிந்திருந்தும், தங்கத்தை உரசிப் பார்க்க வேண்டிய நிலை! என் மனைவியின் காரணமாக, ஒரு சோதனை வைத்தேன் அவருக்கு.

என்ன சோதனை அது? அவர் எவ்வளவு தேறினார் என்பதை அறிய... ப்ளீஸ், வெய்ட்டீஸ்!
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube