அரசியல் + மர்மம், ஆன்மீகம் + மர்மம், சரித்திரம் + மர்மம் என்று பல ரசனைகளில் ஐந்து வெற்றிகரமான நாவல்களைத் தந்த காலச்சக்கரம் நரசிம்மாவின் எழுத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் புத்தகம் ‘கர்ண பரம்பரை’. மூலிகை மருத்துவம் + மர்மம் என்கிற காக்டெய்லில் இந்த விறுவிறுப்பான, பரபரப்பான த்ரில்லரை வழங்கியிருக்கிறார் நரசிம்மா.
‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துல வாத்யார் சொல்வாரே.. ‘இது இப்போ அழீவு சக்தியாக உருவாகியிருக்கு. மேலும் ஆராய்ச்சி செய்தால் இதை ஆக்க சக்தியாவும் பயன்படுத்தலாம்’ என்று. அதுபோல அகத்தியமுனி கர்ண மந்திரமாக (கர்ணம் = காது) உபதேசித்து வழிவழியாக அவ்விதமே தொடரச் செய்த அபூர்வகரணி மூலிகையானது ஆக்க சக்தியாகவும் அழிவு சக்தியாகவும் பயன்பட வல்லது அதைத் தீய எண்ணம் கொண்ட ஒருவன் தன் திறமையால் (சூழ்ச்சியால்?) உபதேசம் பெறுபவரிடமிருந்து அபகரித்து விடுகிறான். அதன் விளைவாகத் தொடரும் கொலைகள், மர்மங்கள், செய்தவன் யார். அதன் தீர்வு என்ன என்பதை 482 பக்கங்களில் கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாதபடி விறுவிறுப்பாகக் கொண்டு செல்கிறார் நரசிம்மா.
அகதா கிறிஸ்டியின் நாவல்களைப் படிக்கையில் ஒரு நுணுக்கமான விஷயத்தைக் கவனித்து மலைத்ததுண்டு நான். குற்றச் சம்பவங்களின் சூத்ரதாரி யார் என்பதற்கு கதையின் துவக்கத்திலேயே க்ளூ தந்திருப்பார் அகதா. படிக்கும் சுவாரஸ்யத்தில் நாம்தான் அதை நழுவ விட்டுவிட்டு க்ளைமாக்ஸ் படித்த பிறகு, முன் பகுதியை மீண்டும் படித்தால் அட என்று வியப்பது நிச்சயம். அந்த நுணுக்கத்தை நரசிம்மாவின் இந்த த்ரில்லரிலும் அனுபவித்தேன். முடிச்சுகள் விழும் சமயத்திலேயே குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்கான க்ளூ தந்திருக்கிறார். புத்தகத்தை முழுமையாகப் படித்து முடித்தபின் முன் சென்று பார்த்தால் நிச்சயம் சபாஷ் போடச் செய்கிற உத்தி அது. ஹாட்ஸ் ஆஃப் நரசிம்மா ஸார்.
மற்றொரு புதுமையான விஷயத்தை அவர் செய்திருப்பதற்காகவும் கை குலுக்க வேண்டும். நாவலின் மையச்சரடாக அவர் வைத்திருப்பது பார்வையற்ற ஒரு மூதாட்டியை. நிகழும் தொடர் கொலைகளின், அமானுஷ்ய சம்பவங்களின் பின்னணியைத் துப்பறிந்து கண்டுபிடிக்கும் கதாநாயகியும் அப்பார்வையற்ற மூதாட்டிதான். நெருங்கியவர்களின் துணை கொண்டும், தர்க்க ரீதியாகச் சிந்தித்தும் புதிர்களை விடுவிக்கும் அந்தக் கதாபாத்திரம் தமிழுக்குப் புதியது.
கதையின் மாந்தர்களைப் பற்றியோ, சம்பவங்களைப் பற்றியோ எதைச் சொன்னாலும் நாவல் வாங்கிப் படிக்கும் எண்ணமுள்ளவர்களுக்கு ஸ்பாய்லராக அது ஆகிவிடலாம் என்பதால் எதையும் நான் குறிப்பிடப் போவதில்லை. ஆனால் குறிப்பிட வேண்டிய சில விஷயங்கள் உண்டு. நரசிம்மாவின் முந்தைய ‘பஞ்சநாராயணக் கோட்டம்’ நாவலில் நிறைய சந்திப் பிழைகள், ஒற்றுப் பிழைகள் நெருடலாக இருந்ததைக் குறிப்பிட்டிருந்தேன். இதில் அந்தக் குறைபாடு இல்லை. எழுத்துப் பிழைகளும் தென்படவில்லை. அதற்காக ஒரு ஸ்பெஷல் கை குலுக்கல். நரசிம்மாவின் நாவலில் இத்தனை கதாபாத்திரங்களைக் கையாண்டுஅவர் எழுதியிருக்கும் முதல் நாவல் இது. ஆனாலும் கிஞ்சித்தும் குழப்பமின்றிப் படித்து முடிக்க முடிகிறது அவரது தெளிவான, தங்குதடையற்ற எழுத்து நடையின் காரணமாக. இது மற்றொரு ப்ளஸ்.
மதுரைவீரன் பெண்டாட்டி, அப்பு என்கிற இரு கதாபாத்திரங்கள் சதி பற்றிப் பேசும் காட்சியை வைத்துவிட்டு, அது யாராக இருக்கும் என்று வாசகர்களை ஊகிக்க வைத்து மிஸ்கைட் செய்து விட்டு, நாவலின் பிற்பகுதியில் நீங்கள் ஊகித்தவர்கள் இல்லை, வேறு இருவர் என்பதை லாஜிக்கலாக ஏற்றுக் கொள்ளும்படி சொன்ன திறமை அபாரமான ஒன்று.
கதையில் குறைகளே இல்லையா என்று கேட்டால்... ஒரு லாஜிக் மிஸ்டேக் இருப்பது எனக்கு உறுத்தலாக இருந்தது. ‘நளபவன்’ ஓட்டல்களை ஓடவைக்கும் சாம்பார் ரகசியம் எழுதப்பட்ட ஓலைச் சுவடியை நான் சொல்லி சந்திரசேகர் யாக நெருப்பில் போட்டார் என்று வனதாயி, பூங்குன்றத்திடம் க்ளைமாக்ஸில் சொல்கிறார். ஆனால் கதையில் யாகம் நடந்த சம்பவத்துக்குப் பிறகுதான் சந்திரசேகர் தன் ஓட்டலுக்கு பூங்குன்றத்தை அழைத்துச் சென்று ரகசியமைக வைத்துள்ள அந்த ஓலைச் சுவடியைக் காண்பித்து, அந்தப் பாடலுக்கு பொருள்சொல்வதாக வருகிறது. நெருப்பில் இட்ட ஓலைச்சுவடி எப்படி அங்கே மீண்டு வந்திருக்க முடியும்..? காணாமல் போயிருக்க முடியும்..? இந்த ஒரு சமாசாரம் தான் புரியவில்லை. நரசிம்மா ஐயாதான் இதற்கான விளக்கம் தர முடியும்.
‘என்ன சார், வழக்கமான உங்க நாவல் போல இல்லையே.. இது ஜவ்வா இழுக்குதே..’ என்ற வார்த்தையைக் கேட்டுவிடப் போகிறேனோ என்கிற பயம் என் ஒவ்வொரு நாவல் வெளியாகும் போதும் எழும் என்கிறார் நரசிம்மா. இந்த எண்ணம் உள்ளவரை அவர் நாவல்கள் எதுவும் தோற்காது என்பது என் எண்ணம். இந்த ஆறாவது நாவலும் விறுவிறுப்பில் சொல்லி அடித்த கில்லிதான்.
புத்தகக் கண்காட்சியில் இது வெளியிடப்பட்ட தினத்தன்று அவர் கையெழுத்துடன் வாங்கிய நான் அடுத்த இரண்டு தினங்கள் கழித்தே நாவலைக் கையில் எடுக்க முடிந்தது. ஆனால் முதல் தினம் மதியம் படிக்கத் துவங்கிய நான், அடுத்த தினம் காலை பத்தரை மணிக்குள் படித்து முடித்து விட்டேன் என்றால் கீழே வைக்க விடாதபடியான அதன் விறுவிறுப்பை நீங்கள் யூகிக்க முடியும். 482 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை ரூ.225/- விலையில் எண் 23. தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017ல் அமைந்துள்ள வானதி பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கிறார்கள். தவறவிடாமல் வாங்கிப் படியுங்கள் என்பது என் சிபாரிசு. காலச்சக்கரம் நரசிம்மாவுக்கு ஒரு பூங்கொத்து!