நேற்று 29.04.2012 அன்று ‘அப்புசாமி-சீதாப்பாட்டி அறககட்டளை’ ஏற்பாட்டில் எழுத்தாளர் அகஸ்தியன் என்கிற கடுகு என்கிற திரு.பி.எஸ்.ரங்கநாதன் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி, பதக்கம் அணிவித்து சிறப்பு செய்தார்கள். கூடவே ‘சாவி நினைவு முதலாம் சொற்பொழிவு’ நிகழ்வும் நடந்தது. அந்த நிகழ்ச்சியியை முழுமையாக இருந்து ரசித்தது ஒரு இனிய அனுபவம். நிகழ்ச்சியின் முடிவில் வந்தவர்கள் அனைவருக்கும் சாவி எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ புததகம் பரிசாக வழங்கப்பட்டது போனஸ் சந்தோஷம். அந்த விழாவில் நான் கேட்ட ஒவ்வொருவரின் சொற்பொழிவும் விரிவாகச் சொல்லப்பட வேண்டியவை. ஆனால் பல பதிவுகள் போகுமென்பதால் அதன் ரத்தினச் சுருககம் இங்கே:
![]() |
பொன்னாடை போர்த்தி மரியாதை! |
முதலில் கடுகு அவர்களை வாழ்த்திப் பேசினார் ‘கலைமகள்’ ஆசிரியர் கீழாம்பூர் அவர்கள். இவர் தினமணி ஏ.என்.சிவராமன் அவர்களின் பேரன் என்பது விழாவில் நான் அறிந்த புதுத் தகவல். அவர் பேசும் போது, கடுகு ஸாரும் அவரும் கலந்து கொண்ட இலககிய விழா பற்றிச் சொன்னார். ‘‘அங்க ஒவ்வொருத்தரையும் தன்னை அறிமுகப்படுத்திக்கச் சொன்னாங்க. நான் எழுந்து, ‘நான் கீழாம்பூர், கலைமகள் ஆசிரியர்’ன்னுட்டு உட்கார்ந்தேன். எனக்கடுதது கடுகு ஸார் எழுந்து ஒரே வார்த்தையில தன் அறிமுகத்தைச் சொல்லிட்டு உட்கார்ந்தார் பாருங்க... அந்த ஒரு வார்த்தையிலயே நகைச்சுவை, தன்னம்பிக்கை எல்லாம் இருந்துச்சு. அவர் சொன்னது: ‘நான் மாண்புமிகு கடுகு’ங்கறதுதான்’’ என்று பேசி அரங்கதிர கை தட்டல் பெற்றுச் சென்றார்.
![]() |
பதக்கமும். பாராட்டுப் பத்திரமும்! |
பின்னர் பேசிய சித்ராலயா கோபு அவர்கள், கடுகு ஸாருக்கும் அவருக்குமான நட்பின் வயது 75 என்றபோது பிரமித்தேன் நான். பல நண்பர்களை இடைக காலத்தில் ‘டச்’சில் இல்லாமல் தவறவிட்டு விடும் அனுபவம் பலருக்கும் பொதுவானதே. 25 ஆண்டு காலம் கூடவே இருக்கும் நண்பன் என்பதே பெருமிதமான விஷயம். இவர்கள் பள்ளிப் பருவத்தில் தொடங்கி, இன்றைய தினம் வரை அதே நட்போடு இருந்து வருவது எவ்வளவு பெரிய விஷயம்! சித்ராலயா கோபுவின் பேச்சில் நான் பலமுறை நினைத்த, எனக்கு மிக உடன்பாடான கருத்து ஒன்றைச் சொன்னார். ‘‘இன்றைய பத்திரிகைகளில் 40 சதவீதம் சினிமா விஷயம் வருகிறது. 30 சதவீதத்தை அரசியல் பிடித்து விடுகிறது. மீதியிருக்கும் 30 சதவீதத்தில் சிலபல மேட்டர்கள் போட்டு விட்டு ஒரு தொடர்கதையும், அரைப் பக்கமோ, ஒரு பக்கமோதான் சிறுகதைகள் வருகின்றன. அந்நாட்களில் பத்திரிகைகளில் நான்கு சிறுகதைகளுக்குக் குறைவில்லாமல் இருக்கும். இப்போதான் இப்படி. கேட்டா, காலம் மாறிப் போச்சுங்கறாங்க - என்னமோ... தமிழ்நாடு பூரா போய் சிறுகதை போட்டா படிக்க மாட்டீங்களான்னு கணக்கெடுப்பு எடுத்துட்டு வந்த மாதிரி...’’ என்றார். மிக நியாயம்தானே அவர் சொன்னது!
![]() |
ஜ.ரா,சு, அவர்களுக்கு பொன்னாடை! |
எழுத்தாளர் (அப்புசாமி புகழ்) பாக்கியம் ராமசாமி அவர்கள் அழகாய் வாழ்த்துரை வழங்கினார். ‘‘கடுகு என்பதற்கு மருத்துவ அகராதியில் ’துன்பத்திற்குத் துன்பம் தருவது’ என்பது. காயம் அல்லது கடி பட்ட இடத்தில் கடுகை அரைத்து, சூடாககி பற்றுப் போட்டால் உடனே வலி குறைந்து விடும். கடுகு இருக்கும் இடத்தில் துன்பம் இருக்காது. (கடுகு ஸாரைக் கை காட்டி) இந்தக் கடுகு இருக்கும் இடத்திலும் துன்பம் இருககாது. நகைச்சுவைதான் இருக்கும்’’ என்று பேசி அரங்கிலிருந்தவர்களின் ஏகோபித்த கையொலிகளைப் பெற்றார். ‘அப்புசாமி - சீதாப்பாட்டி அறக்கட்டளை’ நிறுவனரான அவர் கடுகு ஸாருக்கு் பதக்கம் அணிவித்துப் பாராட்ட, கீழாம்பூர், டெல்லிகணேஷ், சித்ராலயா கோபு மூவரும் பொன்னாடை போர்த்திப் பாராட்டினார்கள்.
![]() |
வாழத்த வந்த கூட்டத்தின் ஒரு பகுதி! |
அடுத்துப் பேச வந்த டெல்லிகணேஷ் டெல்லியில் இருந்த காலத்திலேயே கடுகு ஸாருடன் அவருககு ஏற்பட்ட நட்பைப் பற்றிப் பேசினார். அந்நாட்களில் கடுகு ஸாரின் நாடகங்களை நடித்ததைப் பற்றிச் சொன்ன அவர், அதில் ஒன்றை நடித்தே காட்டினார். ஒரு சங்கீத ஆசிரியரும், வைதீக பிராமணரும் நண்பர்கள். சங்கீத ஆசிரியரின் மனைவி சங்கீதத் தொழிலில் வருமானம் குறைவு நீ வைதிகம் படி என அவரிடம் சொல்ல, அதேநேரம் வைதீக பிராமணரின் மனைவி வைதீகத்தை விட சங்கீதத்தில் வருமானம் அதிகம் எனவே நீ சங்கீதம் படி என அவரிடம் சொல்கிறார். சங்கீத ஆசிரியரும், வைதீக பிராமணரும் சந்திக்கிறார்கள் என்பது சிச்சுவேஷன். சங்கீத ஆசிரியர் ராகம் சொல்லித் தர, அதை வைதீக பிராமணர் மந்திரம் போல உச்சரிப்பதையும், பின் அவர் வைதீக மந்திரம் கற்றுத் தர, அதை சங்கீத ஆசிரியர் ராகமெடுத்துப் பாடுவதையும் ‘மோனோ ஆக்டிங்’காக நடித்துக் காட்டி அரங்கத்தை அதிர வைத்தார் டெல்லியார்.
பின்னர் நன்றியுரை சொல்ல வந்த கடுகு அவர்கள், ஒரு ஜோக் சொன்னார். ‘‘நாலஞ்சு பசங்க விளையாடிட்டிருந்தாங்க. ஒருத்தனை இன்னொருத்தன், ‘டேய் காந்தி, இங்க வாடா’ன்னு கூப்பிட்டான். அதைப் பார்த்த பெரியவர் ஒருத்தர் அந்தப் பையனைக் கூப்பிட்டு, ‘உன் பேர் காநதியா? அந்த பேருக்குரியவரை உனக்குத் தெரியுமா?’ன்னு கேக்க, அவன் ‘தெரியாது’ன்னான். இவர் உடனே, ‘சரி, உனககு நேருவையாவது தெரியுமா?’ன்னு கேக்க... ‘ஓ! நல்லாத் தெரியுமே, என் தம்பி! டேய் நேரு, இங்க வா’ன்னு அவன கூப்பிட்டான்...’’ என்று அவர் சொன்ன ஜோக்கிற்கு எல்லாரும் சிரிக்க, ‘‘இங்கிலீஷ்ல லிங்கன்னும், வாஷிங்டன்னும் போட்டிருந்தது. இப்ப நான் காந்தி, நேருன்னு மாத்திச் சொன்னா சிரிக்கறீங்க.இந்த ஜோக்கோட வயசு 150. அவ்வளவு பழைய புக்ல படிச்சேன் நான். ஜோக்ல புதுசு, பழசுன்னு எதுவும் இல்லை. தெரிஞ்ச ஜோக்கா இருந்தா பழசு. தெரியாததா இருந்தா புதுசு. அவ்வளவுதான்...’’ என்றார் கடுகு ஸார்.
![]() |
பதக்கத்துடன் கடுகு ஸார்! |
இன்னொன்றும் சொன்னார். ‘‘பாக்கியம் ராமசாமி எனக்கு குரு. அவர் கதை ஒண்ணில ஒருத்தன் டாக்டர் கிட்ட போயிட்டு வருவான். இன்னொருத்தன் அவன்கிட்ட எக்ஸ்ரே எடுத்தாராடான்னு கேக்க, அவன் பதிலுக்கு எக்ஸ்ரே, ஒய்ரே, இஸட் ரே, சத்யஜித் ரேன்னு எல்லா ரேயும் எடுத்துப் பார்த்துட்டார்டாம்பான். நான் ரசிச்ச இந்த ஜோக்கை என் கமலா கதைல இப்படி வெச்சேன். கமலா சொல்வா, ‘‘உங்க பக்கத்துக்கு பணம அனுப்ப மதர்ஸ் டே, சிஸ்டர்ஸ் டே, பிரதர்ஸ் டே, காபி டே... இப்படி ஏதாவது ஒரு டேயைக் கண்டுபிடிச்சிடுவீங்களேன்னு. இப்படி அவர் நகைச்சுவையை நான் காப்பியடிச்சதாலதான் குற்றமுள்ள என் நெஞ்சு ‘குரு குரு’ங்குது’’ என்று சொல்லி அனைவரின் கை தட்டலையும் அள்ளினார்.
உண்மையில் நான்கூட நகைச்சுவைக் கதைகள் எழுதும் போது என் சொந்தக கற்பனையுடன் அவரின் சில வார்த்தைப் பிரயோகங்களைக் காப்பியடித்தவன்தான். (இன்னொரு கடுகு என்பார் நண்பர் நடனசபாபதி என்னை) ஆகவே எனக்கும் குற்றமள்ள நெஞ்சு கடுகு ஸாரை ‘குரு குரு’வென்றுதான் சொல்கிறது!
அத்ன் பின்னர் எத்தனையோ எழுத்தாளர்களை உருவாக்கிய மகத்தான, மறக்க இயலாத மாமனிதர் சாவி அவர்களைப் பற்றிய தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு ’சாவி நினைவு சொற்பொழிவு’ ஆற்றினார் எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள்.
மறக்க முடியாத, இனிமையான மாலைப் பொழுதை எனக்கு வழங்கிய கடுகு ஸாருக்கும், அப்புசாமி-சீதாப்பாட்டி அறக்கட்டளையினருக்கும். விழாவில் எடுதத புகைப்படங்களை எனக்கு வழங்கி உதவிய புகைப்படக்காரர் மற்றும் எழுத்தாளரான நண்பர் ’க்ளிக்’ரவிக்கும சொல்வதற்கு ‘நனறி’ என்பதைவிடச் சிறப்பான வார்த்தை ஏதாவது இருந்தால் எனக்குச் சொல்லி உதவுங்களேன் ப்ளீஸ்...!