Monday, July 30, 2012

நடைவண்டிகள் - 28

Posted by பால கணேஷ் Monday, July 30, 2012
                     
                             கடுகு அவர்களும் நானும் - 6

தன்பின் சில மாதங்களில் கடுகு ஸார் நீலாங்கரைக்கு குடிபெயர்ந்து சென்று விட்டார். தொலைவு சற்று அதிகமாக இருந்தால் என்ன...? மனதிற்குப் பிடித்தமானவர்களாயிருந்தால் அது குறைவாகத்தானே தெரியும். அதனால் இப்போதும் இயன்றபோதெல்லாம் சென்று சந்தித்தக் கொண்டுதான் இருக்கிறேன். எனக்கு வரமாய்க் கிடைத்த நட்புகளில் முக்கியமானவரான அவரும், என் எழுத்துக்கு ஊக்கம் தரும் நண்பராக அவரும் என்னுடனேயே தொடர்ந்து இருக்கிறார்.

                              அனுராதாரமணனும் நானும்-1

நான் மிகக் குறுகிய காலம்தான் இவருடன் பழகியிருக்கிறேன். ஆனாலும் நீண்டகாலம் பழகியதைப் போன்றதொரு உணர்வு. அத்தனை இனிமையாகப் பழகக் கூடியவர் அனும்மா என்று அன்புடன் அழைக்கப்பட்ட அனுராதா ரமணன் அவர்கள். இவரின் கதைகள் ஒரு சிலவற்றைப் படித்ததுண்டு. தீவிர வாசகன் என்று சொல்லும் அளவுக்கு இல்லாவிட்டாலும் இவரின் எழுத்துக்கள் எனக்கு நன்கு பரிச்சயமானவையே. நான் சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டுச் சந்தி்த்த எழுத்தாளர்கள் பலர் என்பதைச் சொல்லி வந்திருக்கிறேன். சற்றும் திட்டமிடாமலேயே எனக்குக் கிடைத்த நல்லறிமுகம் அனும்மா.

தங்கத்தாமரை பதிப்பகம் சார்பில் அனுராதா ரமணனின் இரண்டு நூல்களை உடன் வெளியிட இருப்பதாகக் கூறி பாலா ஸார் அவற்றை டைப் செய்து வரும்படி சொன்னார். அந்த புத்தகங்களை டைப் செய்து டிசைன செய்தபின் வந்த ஒருநாளில் அந்தப் புத்தகத்தில் பிழை திருத்தத்தை அனும்மாவே செய்து வைத்திருப்பதாகவும், டிசைன் செய்த நபரை (என்னை) சந்திக்க அவர் விரும்புவதாகவும் பாலா ஸார் சொல்லி, அனும்மாவின் வீட்டிற்கு வழி சொல்லி அனுப்பினார். பாலா ஸார் எவ்வளவு அழகாக குழப்பமின்றி வழி சொல்வார் என்பதை முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். அதனால் மிக எளிதாக அனும்மாவின் வீட்டை அடைந்தேன்.

வீட்டின் வரவேற்பறையிலேயே ஒரு பெரிய புலி கண்களை விழித்தபடி நின்று பயமுறுத்தியது. அருகில் சென்று பார்த்தபின்தான் அது பொம்மைப் புலி என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அனும்மா என்னை வரவேற்று அமரச் சொன்னார். என்னைப் பற்றி ஒரு சின்ன சுய அறிமுகம் செய்து கொண்டேன். ‘‘நான் உங்க கதைகளோட தீவிர விசிறின்னு என்னை சொல்லிக்கிட்டேன்னா அது பொய். உங்க கதைகளைப் படிச்சதேயில்லைன்னு சொன்னா அதுவும் பொய். ஒருசில கதைகளைப் படிச்சிருக்கேன்’’ என்று அவரிடம் சொன்ன நான், படித்து ரசித்த சில கதைகளைச் சொன்னேன். குறிப்பாக மாலைமதியில் அவர் எழுதிய இரண்டு நாவல்கள்! அந்தக் கதைகளில் அவர் அந்தாதி பாணியைக் கையாண்டிருப்பார். ஒரு அத்தியாயத்தின் இறுதி வரியே அடுத்த அத்தியாயத்தின் ஆரம்ப வரியாக அமையும். அதைப் பற்றிக் குறிப்பிட்டுப் பாராட்டினேன். ‘‘இந்த மாதிரி புதுசு புதுசா ஏதாவது யோசிச்சு ட்ரை பண்றதுதான் நம்மைப் புதுப்பிச்சுக்க உதவுது கணேஷ்’’ என்றார்.

அவரின் கையால் தயாரித்த காபியைக் கொடுத்து உபசரித்தார். புத்தகத்தை நான் வடிவமைத்திருந்த விதத்தைப் பாராட்டினார். மிகமிக மகிழ்ந்தேன் நான். என் வழக்கம்போல அவருடைய புத்தகம் ஒன்றில் கையெததிட்டுத் தரும்படி வேண்டுகோள் வைத்தேன். ‘மீண்டும் மீண்டும் உற்சாகமாய்’ என்கிற அவருடைய புத்தகத்தை நல்வாழ்த்துக்களுடன் கையொப்பமிட்டு எனக்குத தந்தார்.

 நீங்கள் படித்ததில்லை என்றால் அந்தப் புத்தகத்தை தேடிப்பிடித்துப் படித்து விடுங்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில் தன்னுடைய ஆஸ்பத்திரி அனுபவங்களை மெலிதான நகைச்சுவையுடன் ரசிக்கும்படி எழுதியிருப்பார். தான் பட்ட அவஸ்தையைக் கூட நகைச்சுவை கலந்து சொல்ல முடியும் என்பதற்கு எனக்கு இன்ஸ்பிரேஷன் அவர்தான். எத்தனை வேதனைகளைச் சந்தித்து. பல வியாதிகளை தன்னுள் கொண்ட உடலுடன் அவர் உற்சாகமாக வளைய வந்தது இன்றும் எனக்கு வியப்புதான்.

அதன்பின் அவர் எழுதத் தொடங்கிய காலகட்டம் பற்றிக் கூறினார். அவர் டைரி எழுதி வைத்திருந்ததைக் காட்டினார். டைரியின் பக்கங்களை அழகான கையெழுத்தில் சின்னச் சின்ன ஓவியங்கள் வரைந்து பத்திரிகை படிப்பது போல அவர் அமைத்திருந்தது ஆச்சரியம் தந்தது எனக்கு.

அதைப் பற்றிக் கேட்டபோது ஓவியக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர் என்றார். ஒருமுறை ஓவியக் கல்லூரி பரீட்சை சமயத்தில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட. இடது கையால் ஓவியம் வரைந்து பழகி தேர்வில் தேறியதை விளக்கமாகச் சொல்லி வியப்பை அளித்தார் எனக்கு.

இப்படி சற்று நேரம் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்துவிட்டு மனமேயின்றி விடைபெற்றுச் சென்றேன். அடுத்ததாக அவருடைய பிறந்ததின விழாக் கொண்டாட்டத்தின் போது இரண்டாவதாக சந்தித்தேன். மூன்றாவது சந்திப்பில் அவரது இன்னொரு பரிமாணத்தைக் கண்டு அதிசயிக்கும் வாய்ப்புக் கிட்டியது. அடுத்தடுத்த அந்தச் சந்திப்புகளைப் பற்றி விரிவாக...

                                                                           -தொடர்கிறேன்...

Friday, July 27, 2012

பொருட்காட்சியில் சரிதா!

Posted by பால கணேஷ் Friday, July 27, 2012

ரிதாவின் அண்ணன் சாரதி இருக்கிறாரே...  அவரிடம் பேசும்போது எப்போதுமே நான் மிக ஜாக்கிரதையாகத்தான் பேசுவேன். பேச்சில் திறமைசாலியென்று (தவறாக) எண்ணிவிட வேண்டாம். சதா வாயி்ல் வெற்றிலையை திணித்துக் கொண்டு மாடு மெல்லுவதைப் போல அசை போட்டுக் கொண்டிருப்பார். அருகில் நின்று பேசினால் ‘மழை’ச் சாரலில் என் வெள்ளைச் சட்டை நனைந்து செம்பழுப்பு சட்டையாகிவிடும் அபாயம் உண்டு. ‘இஷ்ட மித்ர பந்துக்களுடன்’ வரும்படி கல்யாண அழைப்பிதழ்களில் சொல்வது போல, ‘குடும்பத்தோட வாங்க’ என்று சரிதா அடிக்கடி லெட்டர் போடுவாள் (இரண்டும் ஒன்றுதான் என்பது வேறு விஷயம்). இவரும் தங்கை சொல் தட்டாத தமையனாக குடும்பத்தோடு ‘டேரா’ போட வந்து விடுவார்.

‘‘மாப்ளே... இந்தாங்க...’’ என்று ஒரு லிஸ்ட்டை நீட்டினார் என்னிடம். ‘‘என்ன, மளிகை சாமான் லிஸ்ட் போலருக்கே. இங்கருந்தே வாங்கிட்டுப் போகப் போறீங்களா ஊருக்கு?’’ என்றபடி வாங்கிப் படித்துப் பார்த்தேன். ‘‘விஜிபி கோல்டன் பீச், மகாபலிபுரம், திருவேற்காடு, மாங்காடு, மேல்மருவத்தூர், எக்ஸிபிஷன், சத்யம் தியேட்டர், முருகன் இட்லிக் கடை’’ என்று இன்னும் நிறைய வரிசையாக எழுதி வைத்திருந்தார்.

‘‘என்ன சாரதி... இங்கல்லாம் ‌வீடு வாங்கப் போறீங்களா? சொல்லவே இல்லயே...’’ என்றேன்.

‘‘மாப்ளைக்கு எப்பவும் குறும்புதான்...’’ என்று அருகில் வந்து தோளில் தட்டி, வாய்விட்டுச் சிரித்தார். போச்...! சட்டை போச்..!

‘‘இந்த இடங்களையெல்லாம் சுத்திப் பாக்கணும்னு குறிச்சு வெச்சுக்கிட்டேன் மாப்ளே. உங்க கார்ல நீங்கதான் கூட்டிட்டுப் போறீங்க...’’ என்றார். ‘‘ஆமாங்க... எல்லாரும் குடும்பத்தோட வெளிய போய் நாளாச்சு. ப்ளான் பண்ணுங்க, போகலாம்’’ என்றாள் என் சகதர்மிணியும்.

அவளை சற்றுத் தள்ளி அழைத்துச் சென்று, ‘‘அடியே... செகண்ட் ஹேண்ட்ல வாங்கின கார்டி நம்முது. உன் வெயிட்டையே தாங்காம அடிக்கடி முனகிட்டு மக்கர் பண்ணும். உங்கண்ணன் வீட்டு டிக்கெட் ஆறையும் ஏத்தினா, கார் தாங்காதுடி’’ என்றேன். ‘‘பேசாம இருஙக. அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. எங்க பக்கத்து மனுஷங்கன்னா ஆயிரம் யோசிப்பீங்க. இதுவே உங்கம்மா, தங்கச்சில்லாம் வந்தப்ப...’’ என்று ஆரம்பித்து தன் வீட்டோ பவரை அவள் வெளிப்படுத்த, நான் (வழக்கம் போல்) அடங்கிப் போனேன்.

முதலில் எக்ஸிபிஷன் செல்லலாம் என்று (அவர்கள்) அனைவரும் தீ்ர்மானிக்க. வெற்றிலை மென்று துப்ப வசதியாக சாரதி ஜன்னலோரத்திலும் அவன் மனைவி அழகுசுந்தரி என்கிற அழகி (பெயரில் மட்டும்தாங்க) இந்தப் பக்க ஜன்னலோரத்திலும் அமர, நான்கு குழந்தைளில் இரண்டை மடியிலும் இரண்டை அருகிலும் அமர வைத்துக் கொள்ள, முன்பக்கம் சரிதா அமர, முக்கி முனகி புறப்பட்டது கார்.

‘‘மாப்ளே... முதல்ல நங்கநல்லூர் போங்க... ’’ என்றார் சாரதி. ‘‘எக்ஸிபிஷன் தீவுத்திடல்ல தானே... நேர் எதிரால்ல போகச் சொல்றீங்க? அங்க எதுக்கு போகணும்?’’ என்றபடி புரியாமல் அவரை ஏறிட்டேன் நான்.

‘‘அங்க எங்க சி்த்தப்பா வீடு இருக்கில்ல... அவரையும் கூட்டிட்டுப் போறதாப் பேசியிருக்கோம்’’ என்றார்.

இன்னும் ஒரு டிக்கெட்டா...? அப்போதே தலை சுற்றியது எனக்கு.

அந்தக் கார் பயணத்தை விவரிப்பது ரொம்பவே கஷ்டமான விஷயம். அழகிக்கு பயணங்கள் ஒத்துக் கொள்ளாது என்பதால் ‌கையில் எலுமிச்சைகள் நிறைய வைத்திருந்தும், அதன் பாச்சா பலிக்காமல் மசக்கைக்காரி மாதிரி கிலோமீட்டருக்கு ஒரு முறை ‘உவ்வே’ பண்ணிக் கொண்டிருந்தாள். அந்த சித்தப்பா இருக்கிறாரே... பக்தி மான், பக்திப் புலி எல்லாம் இல்லீங்க.. பக்தி டைனோசாராக் இருந்தார். போகிற வழியில் ஏதாவது ரோட்டோரக் கோயில் ஏதாவது கண்ணில் பட்டாலும் போயிற்று...! காரை நிறுத்தச் சொல்லி இறங்கிப் போய் விழுந்து கும்பிட்டு விட்டு வந்துதான் காரை நகர்த்த விடுவார். ‘‘கார்ல போறதுல என்ன சவுரியம் பாருங்க... இல்லன்னா இப்படி நிம்மதியா சாமி கும்பிட முடியுமா மாப்ளே?’’ என்று சிரித்தார்.

இந்தக் குழப்படிகளின் விளைவு... கல்யாண ஊர்வலக் கார் போல மெதுவாகப் போகும்படி ஆயிற்று. பற்றாக்குறைக்கு காரில் பாட்டைப் போடச் சொன்ன அந்த நான்கு வாண்டு(?)களும் ஆடுகிறேன் பேர்வழி என்கிற பெயரில் காருக்குள்ளேயே குதிக்கத் துவங்க, ஒரு புதுவிதமான நாட்டியம் போல, கள் குடித்த குரங்கு போல கார் குலுங்கிய ஆடியபடியேதான் சென்றது.

க்ஸிபிஷன் கிரவுண்டின் வாசலில் நிறுத்திவிட்டு இறங்கியதும் பார்த்தால்... சத்தியமாக என் கார் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது.

‘‘இங்க பாரு சரி... நீங்க படுத்தின பாட்டுல பொறுக்க முடியாம நம்ம காரே கண்ணீர் விட்டு அழுவுது பாரு...’’ என்றேன்.

‘‘ஹய்யோ... ஹய்யோ... பெட்ரோல் டாங்க்ல ஏதோ லீக் ‌போலருக்கு. பெட்ரோல் ஒழுகிட்டிருக்குங்க. ஸ்மெல்கூடவா தெரியலை?’’ என்று தலையில் அடித்துக் கொண்டாள் சரிதா. ‘‘போய் முதல்ல அதை சரி பண்ணிட்டு வாங்க. நாங்க எக்ஸிபிஷன்ல சுத்திட்டிருக்கோம். வந்து ஜாயின் பண்ணிக்குங்க...’’ என்று விட்டு அந்தக் கும்பலுடன் உள்ளே போய் விட்டாள்.

ரு மணி நேரம் கழித்து, நான் .உள்ளே அவர்கள் இருக்கும் இடத்தைக் கேட்டுப் போனபோது... ஒருவருக்கொருவர் திட்டிக் கொண்டிருந்தார்கள். ‘‘நீங்க ‌பொறுப்பா பாத்துட்டிருந்தீங்களேன்னுதான் நான் கவனிக்கலை. வரவர உங்களுக்கு மறதி ரொம்ப ஜாஸ்தியாய்டுச்சு’’ என்று அழகி சீற, ‘‘அதென்னமோ வாஸ்தவம்தான். ஒரு நாள் ஆபீஸ்ல நீயின்னு நினைச்சு எங்க ரிசப்ஷனிஸ்ட் கிட்ட...’’ என்று அவர் நிறுத்த, ‘‘என்ன.... என்ன பண்ணித் தொலைச்சீங்க?’’  என்று அவள் அலற, சாரதி கூலாக, ‘‘நீயின்னு நினைச்சு... இன்னிக்கு மார்க்கெட் போறச்சே உனக்கு என்னல்லாம் காய்கறி வேணும்னு கேட்டு்த் தொலைச்சிட்டேன்’’ என்க, ‘ங‌ே’ என்று விழி்த்தாள் அவள்.

‘‘ஐயோ அண்ணா... முதல்ல உன் பையனைத் தேடற வழியப் பாப்போம். உங்க சண்டையை அப்பறம் போடலாம்...’’ என்று சரிதா சீறினாள். அப்போதுதான் கவனித்தேன்- சித்தப்பா மேய்த்துக் கொண்டிருந்தது அவர்களின் முதல் மூன்றைத்தான், கடைக்குட்டியைக் காணோம் என்பதை. முதலில் அவர்கள் கவனிக்கவில்லை. அரை மணி நேரம் ஸ்டால் ஸ்டாலாகச் சுற்றிவிட்டு கண்ணில் பட்டதையெல்லாம் வாங்கித் தள்ளியபடி வந்தவர்கள் அப்புறம்தான் கவனித்திருக்கிறார்கள் ஒரு டிக்கெட் குறைவதை. உணர்ந்ததும் தேடிப் பார்த்திருக்கிறார்கள். கிடைத்த பாடில்லை.

‘‘அடப்பாவிகளா! குழந்தையக் காணோம்னா முதல்ல அனவுன்ஸ்மெண்ட் ரூமுக்குப் ‌போய் தகவல் சொல்லணும்னு கூடவா உங்க யாருக்கும் தோணலை? இங்க நின்னு சண்டை பிடி்ச்சுட்டிருக்கீங்களே...’’ என்று திட்டினேன் நான்.

அதற்குள் ‘மதுரப் பொண்ணு’ என்று பாடிக் கொண்டிருந்த ஸ்பீக்கர்கள், பாட்டை நிறுத்திவிட்டு அலறின இப்படி: ‘‘போதுண்டா சாமிங்கற அஞ்சு வயசுப் பையன் இங்க இருக்கான். அவனோட பெற்றோர் எங்கிருந்தாலும் வரவும்’’ என்று அலறியது. வரிசையாக மூன்று ஆண் குழந்தைகள் பிறந்ததால் சென்டிமென்டாக சாரதியின் அப்பா நாலாவது குழந்தைக்கு வைத்த பெயர் ‘போதுண்டா சாமி’ என்பது.

அரக்கப் பறக்க அனவுன்ஸ்மெண்ட் ஸ்டாலை நாங்கள் அடைந்‌தபோது... ‘போதுண்டா சாமி’ இரண்டு கையிலும் இரண்டு கோன் ஐஸ்க்ரீம்களை சப்பிக் கொண்டு உட்கார்ந்திருக்க, பக்கத்தில் ‘ஙே’ என்று விழித்தபடி அமர்ந்திருந்தார் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். என்னைப் பார்த்ததும், ‘‘நாலு கேக், மூணு சோளத் தட்டை, ரெண்டு ஐஸ்க்ரீம்’’ என்றார்.

‘‘பையனைப் பாத்துக்கிட்டதுக்கு இதெல்லாம் வேணுமா உங்களுக்கு?’’

‘‘நாசமாப் போச்சு. இதெல்லாம் உங்க வீட்டுப் பையன் அரை மணி நேரத்தல தின்னு தீர்த்தது ஸார். திங்கறதை நிப்பாட்டினா ‌‌ஸைரன் மாதிரில்ல அலர்றான்னு வாங்கித்தர வேண்டியதாப் போச்சு. நூத்தம்பது ரூபா ஆச்சு ஸார்... நம்மையும் கவனிச்சுக்கங்க...’’ என்று தலையைச் சொறிந்தார். ‘கவனித்து’ விட்டு கிளம்ப ஆயத்தமான நேரத்தில் வாயை வைத்துக் கொண்டு சும்மாயிராமல், ‘‘எப்படித்தான் இவனை வீட்ல சமாளிக்கறீங்களோ... இது மாதிரி ஒரு பிள்ளை போதுண்டா சாமி’’ என்று அவர் புலம்ப, ‘‘அங்க்கிள் கூப்பிடறார்’’ என்று அவர் மீது பாய்ந்தது அந்த ‘போதுண்டா சாமி’. ‘‘இன்னொரு ஐஸ்க்ரீம் வாங்கித் தாங்க அங்க்கிள்’’ என்று அது அவர் தாடையைப் பிடிக்க, அவர் தலைசுற்றி மயக்கமாக விழுந்து வைத்தார்.

தன்பின்னரும் அரைமணி நேரம் எக்ஸிபிஷனை சுற்றியதும் நான் சொன்னேன். ‘‘சரி, புறப்படலாமா?’’

‘‘இருங்க... அந்த ஸ்டால்ல ஏதோ நிறையக் கூட்டமா இருக்கு. என்னமோ இன்ட்ரஸ்டிங்கா இருக்கும் போலருக்கு... பாத்துடலாம்...’’

கையில் நிரம்பி வழிந்த அட்டைப் பெட்டிகள் கண்ணை மறைக்க, எரிச்சலுடன் (கண்ணீருடன்?) சொன்னேன். ‘‘அடியேய்... அங்க என்ன வேணா இன்ட்ரஸ்டிங்கா இருக்கலாம். ஆனா உனக்கு ஒண்ணு, உங்கண்ணன் வீட்டுக்கு ஒண்ணுன்னு நீ டபுள் டபுளா திங்ஸ் வாங்கிக் குவிச்சதுல என் பர்ஸ் காலிடி. இங்க இன்ட்ரஸ்ட் இருக்காது.’’

ரு வழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விட முடியவில்லை. சரிதா கோபமாய் இருக்கிறாள். ‘‘ஏங்க... கொஞ்சமாவது மேனர்ஸ் வேண்டாம் உங்களுக்கு? கார் நின்னு போச்சேன்னு நட்டநடு மத்தியான வெயில்ல எங்கண்ணனும். அண்ணியும், நானும் இறங்கித் தள்ளினா... அந்த நேரத்துல பாட்டென்ன வேண்டிக் கிடக்கு உங்களுக்கு?’’

‘‘இல்ல... தள்றதுக்கு உங்களுக்கு ஒரு உற்சாகமா இருக்கட்டுமேன்னு தான்மா...’’

‘‘நல்லாப் பாடினீங்க... ‘ஆகட்டுண்டா தம்பி ராஜா, நடராஜா’ன்னு நீங்க பாடி, நாங்க தள்ளின லட்சணத்துக்கு பக்கத்துல பைக் ஓட்டிட்டு வந்த ஒருத்தன் வண்டியை நிறுத்தி, ‘பொருத்தமாத்தான் பாடறீங்க சார்’ன்னுட்டு என்னைப் பார்த்து சிரிச்சுட்டுப் போறான். யானையா நானு? ரோட்ல நாலு பேர் என்னைப் பாத்து சிரிச்சுட்டுப் போற மாதிரில்ல பண்ணிட்டிங்க..! இன்னும் ரெண்டு நாளைக்கு உங்களுக்கு சாப்பாடு கிடையாது. இந்த ஓட்டைக் காரை முதல்ல விக்கற வழியப் பாருங்க... வேற ஒண்ணு இன்ஸ்‌ட்டால்மெண்ட்ல போட்டு புதுசா வாங்கிரலாம்’’

மரியாதையாய் (திருதிரு) விழித்தேன். ‘‘அடியேய்... வயசாயிடுச்சுன்னா நம்ம தாத்தா பாட்டிக்கு கூடத்தான் கொஞ்சம் முடியாமப் போகும். அதுககாக வீட்டை விட்டு போகச் சொல்லிடுவியா? ரொம்ப ராசியான வண்டிடி’’ என்றேன்.

‘‘அதெல்லாம் ஒண்ணும் பேசாதீங்க. ஒழுங்கா மரியாதையா அதை யார்கிட்டயாவது தள்ளிட்டு வாங்க. அதுவரைக்கும் என் பக்கத்துலயே வராதீங்க’’ என்று கோபமாகக் கத்திவிட்டு உள்ளே போய் விட்டாள்.

ரொம்ப நல்ல மாடல் அம்பாஸடர் ஸார் அது..ஹாரனை அழுத்தினால் ஏரியாவே திரும்பிப் பார்க்கும்படி அலறும் (சிலசமயம் நிறுத்துவதுதான் கஷ்டம்). பிரேக் பிடித்தால் பத்தே பத்தடி ஓடிவிட்டு கரெக்டாக நின்று விடும். ரஜினி ஸார் டாக்ஸியுடன் பேசுவாரே... அதுமாதிரி உங்களைப் புரிஞ்சுக்கிட்டு அனுசரிச்சு நடந்துக்கும் ஸார்! இப்படிப்பட்ட நல்ல கார். உங்கள்ல யாருக்காவது வேணும்னா உடனே ஒரு போன் அடிங்க ஸார்! ரேட்டுல்லாம் முன்னபின்ன அட்ஜஸ்ட் பண்ணி போட்டு்க்கலாம்...! உடனே வித்தாகணும் ஸார்..! குளிர்காலம் வேற ஆரம்பிச்சுடுச்சு பாருங்க...! ஹி... ஹி.. ஹி...!

Wednesday, July 25, 2012

உண்மையான தலைவர்

Posted by பால கணேஷ் Wednesday, July 25, 2012

மீபத்தில் ரமணி ஸார் பள்ளி நாட்களில் காமராஜருடனான அவர் அனுபவம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டிருந்தார். நான் மிக வியக்கும் தலைவரான காமராஜரைச் சந்திக்கும் பாக்கியம் பெற்ற அவரின் அனுபவத்தைப் படித்ததில் மிக மகிழ்ந்தேன் நான். அந்தச் சமயத்தில் தான் காமராஜரைச் சந்தித்த அனுபவத்தை ந்ண்பர் ராஜேஷ்குமார் எழுதியிருந்தது என் நினைவுக்கு வந்தது. நீங்கள் அதைப் படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அவர் எழுதியதை இங்கே தருகிறேன்.

                              உண்மையான தலைவர்!

னக்குப் பிடிக்காத தமிழ் வார்த்தைகளில் ஒன்று அரசியல். கட்சித் தலைவர்களில் சிலரை மட்டும் ஓரளவு பிடித்துக் கொண்டிருந்தது- 1975 வரை. இப்போது அதுவும் இல்லை. ‘‘உங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர் யார்?’’ என்று கேள்வி கேட்டால் என் பதிலுககாக 2012ம் வருஷம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அதற்குள் ஒரு நல்ல தலைவர் உருவாகிவிட மாட்டாரா என்ன?

1968ம் வருடம். கோவை அரசினர் கல்லூரியில் நான் பி.எஸ்ஸி தேர்ட் இயர் படித்துக் கொண்டிருந்த காலகட்டம். அன்றைக்கு காலை 11 மணியிருக்கும். கெமிஸ்ட்ரி தியரில் க்ளாஸை முடித்துக் கொண்டு பாட்டனி ப்ராக்டிகல் லேபுக்கு நானும் என் க்ளாஸ்மேட்ஸ் ஐந்து பேரும் போய்க் கொண்டிருந்தபோது பி.ஏ. தேர்ட் இயர் படிக்கும் சண்முகசுந்தரம் வியர்வை வழியும் முகமாய் வந்தான். கல்லூரியின் மாணவர் தலைவர் தேர்தலில் இரண்டு வாரத்துக்கு முன்புதான் வெற்றி பெற்றிருந்தான். சமூகப் பணியில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். வகுட்டறையில் எப்போதாவது அதிசயமாய் இருப்பான்.

‘‘ப்ரதர்ஸ்! ஒரு நிமிஷம்..! ப்ராக்டிகல் கிளா‌ஸை கட் பண்ணிட்டு என்கூட கொஞ்சம் வர முடியுமா..?’’

‘‘எங்கே..?’’

‘‘ஒரு இடத்துக்குப் போறோம். ஒரு பத்து நிமிஷம் அங்க இருக்கறோம். உடனே வந்துடறோம். அது மோசமான இடமோ, சட்டவிரோதமான இடமே இல்லை. கண்ணியமான இடம்.’’

‘‘கண்ணியமான இடம்னா சொல்ல வேண்டியதுதானே...? எதுக்காக திரையைப் போட்டுட்டு பூஜை பண்றே?’’

‘‘ஆளுக்கு 100 ரூபாய் தர்றேன்... வர்றீங்களா?’’ சண்முகசுந்தரம் தன் சட்டைப் பாக்கெட்டில் வைத்து இருந்த புத்தம் புது ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்துக் காட்டினான். என்னோடு இருந்தவர்கள் வாயைப் பிளந்தார்கள். (1968ல் 500 ரூபாய் என்பது பெரிய தொகை. அப்போது தங்கம் 1 பவுன் விலை 200 ரூபாய்)

ஆசை எங்களை காட்டிக் கொடுக்க, ஒரு தயக்கத்திற்குப் பின் நாங்கள் பரவசமாய் வாங்கிக் கொண்டோம். அவன் நடக்க ஆரம்பித்துவிட... பின்தொடர்ந்தோம். மனத் தண்டவாளத்தில் ஒரு கூட்ஸ் ரயில் ஓடிக் கொண்டிருந்தது. கல்லூரிக்கு வெளியே வந்தோம். ரோட்டோரமாய் நின்றிருந்த ஒரு வேனைக் காட்டினான் சண்முகசுந்தரம். ஏறி அமர்ந்ததும் வேன் புறப்பட்டது. பீளமேடு போகும் ரோட்டில் வேகமான பயணம். நானோ, நண்பர்களோ ஏதாவது பேச முயற்சி செய்த போதெல்லாம் தன் உதட்டில் ஆட்காட்டி விரலை வைத்து ‘உஷ்’ என்றான் சண்முகசுந்தரம். நாங்கள் பெட்டிப் பாம்பாய் அடஙகிப் போனோம்.

சரியாய் பதினைந்து நிமிஷ பயணத்துக்குப் பிறகு வேன் பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜுக்குப் பக்கத்து ரோட்டில் திரும்பியது. அந்த ரோடு முழுக்கப் பரபரப்பாய் இருந்தது. ரோட்டின் இரண்டு பக்கங்களிலும் காங்கிரஸ் கட்சியின் கொடிகள் பறந்தன. பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதில் ஏதோ வாசகங்கள். படிப்பதற்குள் வேன் பறந்தது. ஒரு பங்களா காம்பவுண்டுக்குள் நுழைந்து நிற்க, நாங்கள் இறங்கினோம்.

‘‘இப்பவாவது ‌சொல்லுடா. நாம எங்கே வந்திருக்கோம்?’’ அவன் உதட்டில் சின்னதாய் ஒரு புன்னகை. ‘‘இன்னிக்கு உங்களுக்கெல்லாம் ஒர நல்ல நாள். பெரிய அரசியல் தலைவர் காமராஜரைச் சந்திக்கப் போறீங்க!’’

எங்களுக்கு ஒரே அதிர்ச்சி. ‘‘‘காமராஜரா..! உண்மையாவா..? எதுக்காக அவரைப் பார்க்கப் போறோம்?’’

‘‘டேய்..! நான் இப்ப காங்கிரஸ் கட்சியில் மாணவர் அணி செயலாளராய் இருக்கேன். கட்சியைப் பலப்படுத்த வேண்டிய யுக்திகளைப் பற்றிப் பேசறதுக்காக கட்சித் தலைவர்கள் வந்திருக்காங்க. இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணின்னு தனித் தனியாப் போய் காமராஜரைப் பார்த்துப் பேசணும். ஒவ்வொரு அணிக்கும் பத்து நிமிஷம் டயம். மாணவர் அணி சார்பா நான் பேசப் போறேன். நான் மட்டும் தனியா போய் நின்னா ஒரு மாதிரியா இருக்கும். அதான் உங்களையும் கூப்பிட்டேன்...’’

எனக்கு பயத்தில் வியர்த்தது. பங்களாவின் போர்டிகோவில் இருந்து காம்பெளண்ட் கேட் வரைக்கும் வரிசையாய் நாற்காலிகள் போடப்பட்டு, அவைகளில் கட்சிப் பிரமுகர்கள் சாய்ந்து உட்கார்ந்தபடி அரசியல் பேசிக் கொண்டிருக்க, எங்களை சண்முகசுந்தம் உள்ளே கூட்டிக் கொண்டு போனான்.

‌தொந்தி வளர்த்து குள்ளமாய் இருந்த ஒர பிரமுகர் எதிர்ப்பட்டார். பெருந்தலைவரோடு யாரோ ஒரு தொழிலதிபர் பேசிக் கொண்டிருப்பதாகச் சொல்லி எங்களைக் காத்திருக்கச் சொன்னார். காத்துக் கிடந்தோம். ஒரு பெரிய தலைவரைப் பக்கத்தில் இருந்து பார்ககப் போகிற ஆவல் எனக்குள்ளே கன்றுக்குட்டியாய் முட்டிக் கொண்டிருந்தது.

சரியாய் ஒரு மணி நேரம். அந்தத் தொழிலதிபர் வெளியே வந்ததும் நாங்கள் உள்ளே போனோம். தொளதொளப்பான வெள்ளை நிற கதர் சர்ட்டிலும், வேஷ்டியிலும் அந்த நெடிய கருப்பு மனிதர் சோபாவில் கம்பீரமாய்த் தெரிந்தார். நாங்கள் கும்பிட்டோம். ‘‘ஐயா.. வணக்கம்!’’

காமராஜர் எங்களை ஏறிட்டார். பிறகு அந்தக் குள்ளமான மனிதரைப் பார்த்து, ‘‘யார் இவங்க?’’ என்று கேட்டார். ‘‘அய்யா... இவங்க மாணவர் அணி..!’’ என்றார் அவர். காமராஜரின் முகம் லேசாய் மாறியது.‘‘மாணவர் அணியா? இவங்க எதுக்கு இங்கே வந்தாங்க?’’

‘‘அய்யா... நம்ம காங்கிரஸ் கட்சியைக் கல்லூரி லெவலில் இருந்தே பிரபலப்படுத்த வேண்டி...’’

‘‘நான்சென்ஸ்!’’ என்றார் காமராஜர். பிறகு எங்களைக் கோபமாகப் பார்த்து, ‘‘இன்னிக்கு என்ன கிழமை?’’ என்று கேட்டார்.

‘‘திங்கட் கிழமைய்யா...’’

‘‘காலேஜ் இருககா..?’’

‘‘இருக்கு அய்யா...’’

‘‘காலேஜ் இருக்கும்போது படிக்காம இங்க எதுக்காக வரணும்னேன்? போங்க, போய் ஒழுங்காப் படிங்க. படிச்சாத்தான் ஒரு வேலை கிடைக்கும். வேலை கெடைச்சாத்தான் பெத்தவங்களைக் காப்பாத்த முடியும். இந்த காங்கிரஸ் கட்சியை எப்படி பலப்படு்தறதுன்னு எனக்குத் தெரியும்னேன். போங்க... மொதல்ல இங்கருந்து...’’

காமராஜர் ‌போட்ட கத்தலில் நாங்கள் எல்லாம் அரண்டு போய் வெளியே வந்தோம். சண்முகசுந்தரத்தின் முகத்தில் சுரத்தே இல்லை. எங்களுடைய கைகளைப் பற்றிக் கொண்டு தொண்டையடைக்கச் சொன்னான். ‘‘ஸாரிடா! காமராஜர் இப்படிப் பேசுவார்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கலைடா...’’

நான் சொன்னேன்: ‘‘ஒரு உண்மையான தலைவர் இப்படித்தான்டா பேசணும்...!’’ என்று!

==============================================

அடுத்த பதிவுக்கு ஒரு சின்ன(?) மு்‌ன்னோட்டம்:

                                          பொருட்காட்சியில் சரிதா!

க்ஸிபிஷன் கிரவுண்டின் வாசலில் நிறுத்திவிட்டு இறங்கியதும் பார்த்தால்... சத்தியமாக என் கார் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது.

‘‘இங்க பாரு சரி... நீங்க படுத்தின பாட்டுல பொறுக்க முடியாம நம்ம காரே கண்ணீர் விட்டு அழுவுது பாரு...’’ என்றேன்.

‘‘ஹய்யோ... ஹய்யோ... பெட்ரோல் டாங்க்ல ஏதோ லீக் ‌போலருக்கு. பெட்ரோல் ஒழுகிட்டிருக்குங்க. ஸ்மெல்கூடவா தெரியலை?’’ என்று தலையில் அடித்துக் கொண்டாள் சரிதா. ‘‘போய் முதல்ல அதை சரி பண்ணிட்டு வாங்க. நாங்க எக்ஸிபிஷன்ல சுத்திட்டிருக்கோம். வந்து ஜாயின் பண்ணிக்குங்க...’’ என்று விட்டு அந்தக் கும்பலுடன் உள்ளே போய் விட்டாள்.

==============================================

Monday, July 23, 2012

நடைவண்டிகள் - 27

Posted by பால கணேஷ் Monday, July 23, 2012

கடுகு அவர்களும் நானும் - 5

நான் வாகனம் வாங்கிய பிறகு அவரை சென்று சந்தித்து பேசிக் கொண்டிருந்த சமயம் அவரும் கமலா அம்மாவும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை புத்தகமாக்குவதற்கான பணிகளைச் செய்து கொண்டிருந்தனர். கடுகு தம்பதிகளுக்கு நாலாயிரம் பாடல்களின் மேல் வெகுநாட்களாகக் காதல் உண்டு. நாலாயிரம் பாடல்களை பதம் பிரித்து படிப்பதற்கு எளிதாக, புரிந்து கொள்வதற்கு இலகுவாக இருக்கும் வகையில் டைப்செட் செய்து அவரே வடிவமைத்துக் கொண்டிருந்தார். அந்தப் புத்தகம் தொடர்பாக அவர் எடுத்திருந்த முடிவுகளைச் ‌சொன்னதுதான் வியப்படைய வைத்தது.

அவர் செய்திருந்த தீர்மானங்கள்: 1) எழுத்துக்கள் படிக்கும் வண்ணம் 13 பாயிண்டிற்கு குறையாமல் இருக்க வேண்டும். 2) பாசுரங்களை பதம் பிரித்துப் போட வேண்டும். 3) எவ்வளவு செலவானாலும் புத்தகத்தின் விலை ரூ.100க்கு மேல் வைக்கக் கூடாது ஆகியவைதான் அது. நாலாயிரத்தை 13 பாயிண்ட்களில் பிரிண்ட் செய்தால் இரண்டு புத்தகங்களும் சேர்த்து 800 பக்கங்களுக்கு மேல் வருமே, அதை எப்படி இந்த விலையில் தர முடியும் என்பதுதான் என் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அதைச் செய்து காட்டினார் அவர். இதுபற்றி விரிவாக அறிய விரும்புபவர்கள் அவரே எழுதிய இந்தப் பதிவைப் படிக்கவும். நெகிழ்ச்சியான பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

அந்தப் புத்தகம் வெளிவந்து விற்பனையாகிக் கொண்டிருந்த சமயத்தில் எழுத்தாளர்கள் சுபா நடத்தி வரும் ‘தங்கத்தாமரை’ பதிப்பகத்தில் நாலாயிரம் புத்தகத்தை கடுகு ஸாரிடம் கேட்டு வாங்கி வெளியிட்டார்கள். அந்த இரண்டு புத்தகங்களின் அட்டையையும் வடிவமைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. (நந்தினி பதிப்பகம் சார்பில் வெளியிட்ட புத்தகத்திற்கு அட்டை டூ அட்டை டிசைனர் கடுகு ஸார்தான்). புத்தகத்தின் பக்கங்கள் அதிகம் என்பதாலும், கடின அட்டையில் அச்சிடுவதாலும் ஸிங்கிள் கலரில் அட்டை அச்சிடுவதாக தீர்மானம். ஆனால் அது குறையாகத் தெரியாத வண்ணம் வடிவமைக்க வேண்டியிருந்தது. பொறுமையாக டிசைன் செய்து, பிரிண்ட் ஆகி வந்தவுடன் பார்க்க நன்றாகவே இருந்தது.

‘தங்கத்தாமரை’ வெளியிட்ட இந்த ‘நாலாயிரம்’ புத்தகத்தை புத்தகக் கண்காட்சியில் வாங்கிப் படித்த மாஸ்டர் சுஜாதா, ‘குங்குமம்’ இதழில் தான் எழுதிவந்த கேள்வி-பதில் பகுதியில் ‘‘புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய ஒரே ரத்தினம் நாலாயிர திவ்யப் பிரபந்தம் புத்தகம்தான். ‘தங்கத் தாமரை பதிப்பகம்’ என்ற பெயரில் எழுத்தாளர்கள் சுபா இந்தப் புத்தகத்தை எழுத்தாளர் கடுகு உதவியுடன் அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார்கள்.’’ என்று எழுதியிருந்தார். வாத்தியார் இப்படி எழுதியவுடன் இதை விசாரித்து நிறைய போன்கால்கள் வந்ததாக சுபாவைச் சந்தித்தபோது சொன்னார்கள். சுஜாதா என்ற மகா எழுத்தாளரின் எழுத்து வீச்சை நான் உணர்ந்த சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று. இந்த இரண்டு புத்தகங்களையும் அவர் மேஜையி்ல் எப்போதும் வைத்திருப்பார் எனறு சுஜாதாவின் தீவிர விசிறியான திரு.சுஜாதா தேசிகன் கடுகு அவர்களிடம் சொன்னதாக நாலாயிரம் பற்றிய கட்டுரையில் கடுகு ஸார் குறிப்பிட்டிருக்கிறார்.

சமீபத்தில் கடுகு ஸாரின் 80வது கல்யாணம்... மன்னிக்கவும், 80ம் கல்யாணம் நடந்தபோது மீண்டும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை பிரசுரித்து விழாவுக்கு வந்த அனைவருக்கும் நினைவுப் பரிசாக வழங்கினார் கடுகு ஸார். அதைத் தவிர ‘கமலாவும் நானும்’ என்ற தலைப்பில் இணையத்தில் அவர் எழுதிய கட்டுரைகளையும், பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளையும் தொகுத்து மற்றொரு புத்தகமும் இணைத்து இரட்டைப் பரிசாக அளித்தார்.

ஹிந்து நாளிதழிலும், ‘அடையார் டைம்ஸ்’ பத்திரிகையிலும் இந்த விழா நிகழ்வுகளை அழகாக வெளியிட்டிருந்தார்கள். அவற்றை கடுகு ஸார் அவரின் தளத்தில் வெளியிடவில்லை. ‘நம்மைப் பத்தி நாமே வெளியிடறதா?’ என்கிற தன்னடக்கம்தான காரணம். நல்லவேளையாக... அவர் என்னை அடக்கவி்ல்லையாதலால், ‘அடையார் டைம்ஸ்’ வெளியிட்ட செய்தியை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
அதன்பின் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் கடுகு ஸாரின் வீட்டுக்குச் சென்று சந்திப்பேன். உரையாடுவேன்; கற்றுக் கொள்வேன். ‘ரொட்டி ஒலி’ என்ற புத்தகத்தின் அட்டைப்படத்தை அவருடன் சேர்ந்து வடிவமைத்து மகிழ்ந்தேன். இப்படியான ஒரு சந்திப்பின் போது அவர் நீலாங்கரையில் அபார்ட்மெண்ட் வேலைகள் பூர்த்தியடைந்து விட்டன என்றும், விரைவில் அங்கே குடி போய் விடுவார்கள் என்பதையும் தெரிவித்தார்.  நீலாங்கரை என்கிற பகுதி சற்றே அவுட்டரில் இருப்பதால் இப்போது போல நினைத்த போதெல்லாம் எளிதாகச் சென்று பார்த்துவிட முடியாதே என்று ஒரு கவலை எனக்குள்.
-தொடர்கிறேன்...

Friday, July 20, 2012

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்!

Posted by பால கணேஷ் Friday, July 20, 2012

‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்று பாடின பாரதிதாசன் இன்றைக்கிருந்திருந்தால் ‘எங்கெங்கு காணினும் சத்தமடா’ என்று மாற்றிப் பாடியிருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது. மனிதர்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்கான சாதனங்களாக அமைந்தவை மொழியும், சப்தங்களும். இன்றைய காலச் சூழ்நிலை சப்தங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக உணர்கிறேன்.

ஆடி மாதம் பிறந்து விட்டால் போதும்... அமைதி காணாமல் போய் சப்தங்களால் சூழப்பட்டு விடும் தமிழ்நாடு. இங்குதான் தெருவுக்குத் தெரு கோயில்கள் உண்டே. மைக்குகள் கட்டி, அதிகாலையில் துவங்கி பாட்டுக்களை அலற வைத்து அக்கம் பக்கத்தில் எவரும் நிம்மதியாக இருக்க விடாமல் செய்தால்தானே கோயில்கள் இருப்பதும், பக்தி பொங்கி வழிவதும் மற்றவருக்குத் தெரியும்! காதைக் கிழிக்கும் இந்த ஓசைகளால் அக்கம் பக்கத்து இல்லங்களில் சீனியர் சிட்டிசன்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டாலோ, மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்பட்டாலோ நமக்கென்ன...?

ஒரு கருத்தை மெதுவான குரலில் நான் சொல்கிறேன். அதற்கு எதிர்க் கருத்தை உரத்த குரலில் என் நண்பன் எதிரொலித்தால் அவன் சொல்வதே சரியோவென எண்ணக்கூடிய மனப்பாங்கை இன்று நான் காண்கிறேன். தொலைக்காட்சிகளில் நடக்கும் அரட்டை அரங்கம், மக்கள் மன்றம் போன்ற நிகழ்ச்சிகளைப் பாருங்கள். மைக்கைப் பிடித்ததும் காச் மூச்சென்று கத்தி, கதறி மூச்சைப் பிடித்துக் கொண்டு உரத்த குரலில் பிளிறி தம் கருத்தைச் சொல்வதே பேச்சுத் திறமை என்று நினைக்கத் தோன்றும்.

 அங்கே கருத்துக்களுக்கு மதிப்பில்லை. சத்தத்துக்கே மதிப்பு. அமைதியாக ஒரு பெண் பேசினால் எடுபடாது. பத்ரகாளி போல் கத்தி எதிரணிப் பெண் பேசினால் அவளுக்குத்தான் கைதட்டல் விழுகிறது. தங்கள் பிள்ளைகள் வெற்றிபெற வேண்டும் என்று விரும்பும் பெற்றோர் ‘அவங்க பேசறதைப் பாரு’ என்று இப்போது கத்துவதற்குப் பழக்குகிறார்கள். என்னத்தச் சொல்ல...

மெல்லிசை நிகழ்ச்சி, ஆடியோ கேசட் வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கே மேடையில் இருப்பவர்கள் பார்வையாளர்களை சத்தம் போட்டுக் கத்தவும், கூச்சலிடவும் ஊக்குவிககிறார்கள்; பழக்கப்படுத்துகிறார்கள். அதாவது... ஆடியன்ஸ் காட்டுக் கத்தல் கத்திக் கூச்சல் போட்டும், கைதட்டல் சப்தங்களை கடலளவு எழுப்பியும்தான் தாங்கள் உற்சாகமாக இருப்பதை வெளிப்படுத்த வேண்டும்.

இரண்டு மூன்று இளைஞர்கள் கூடிப் பேசும் சந்தர்ப்பங்களில் கவனித்தீர்களானால்... ‘‘நேத்து தியேட்டர்ல கைதட்டல், விசில், டான்ஸ்னு அமர்க்களப்படுத்திட்டோம்ல...’’ என்கிற ரீதியில் பேசுவதைக் கேட்க முடியும். அதாவது இந்தக் கும்பல் எங்காவது சத்தம் எழுப்பியோ, தங்கள் நடவடிக்கைகளால் அடுத்தவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியோ.... எப்படியோ எல்லாரும் இவர்களைக் கவனிக்க வைத்து விட்டால் போதும்... அமர்க்களப்படுத்தி விட்டதாக அர்த்தம். ஆர்ப்பாட்டங்களும் வெற்று சப்தங்களும்தான் கொண்டாட்டமா?

பேருந்தில் பயணிக்கும் சமயத்திலோ சப்தங்களின் பல்வேறு நிலைகளை என்னால் காண முடிகிறது. உதாரணத்துக்கு மூன்று கேரக்டர்களைச் சொல்கிறேன். (1) ஒரு இளைஞன் தன் செல்போனில் ஸ்பீக்கரில் போட்டுப் பாட்டுக் கேட்டபடி வந்தான்- இப்படி சத்தமாகப் பாட்டுக் கேட்பது மற்றவர்களுககுத் தொந்தரவாக இருக்குமே என்ற யோசனையே இல்லாமல். சரி, கேட்கிற பாட்டாவது மென்மையாக அனைவரும் ரசிக்கிற மாதிரியானவையாக இருந்து தொலைக்கக் கூடாதோ... கேட்கச் சகிக்காத வார்த்தைகள் கொண்ட பாடல்கள் வேறு.

(2) பின்னிருக்கையில் அமர்ந்திருந்த ஒரு நபரின் செல்போன் ஒலிக்க, எடுத்துப் பேசினார்- விசு அவர்கள் சினிமாவில் பேசுவாரே... அதுபோன்ற உரத்த குரலில். ‘‘ஆங்... சொல்லு ராதா, டி.நகர் வந்துட்டியா? பஸ் ஸ்டாண்டுக்கு எதிர்ல ரத்னா கபே கிட்ட வெயிட் பண்ணு. நான் பஸ்ல வந்துட்டிருக்கேன். பத்து நிமிஷத்துல வந்துடுவேன்.’’ என்று அவர் உரரரத்த குரலில் பேசியதில் கடைசி சீட் பெண்மணியிலிருந்து டிரைவர் வரை அனைவரும் ராதா டி.நகரில் காத்திருப்பதை அறிந்து கொண்டிருப்பார்கள்.

(3) ஸ்டாண்டிங்கில் நான் நின்றிருக்க, பக்கத்தில் நின்றபடி ஒரு பெண் செல்போனி்ல் பேசுகிறாள். உதடுகள் அசைவதுதான் தெரிகிறது எனக்கு. ஓசைகள் வெளிப்பட்டதாகத் தெரியவில்லை. எவ்வளவுதான் காதைத் தீட்டிக் கவனித்தாலும் என்ன பேசுகிறாள் என்பதை உணர முடியவில்லை ஐயா.

முதலிரண்டு கேரக்டர்களை விட மூன்றாவது எனக்குப் பிடித்திருக்கிறது. என் பள்ளிப் பருவத்தில் இத்தனை சப்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் கண்டதாக நினைவில்லை. கல்லூரிப் பருவத்திலும் அப்படியே. சமீப காலங்களாகத்தான நான் மேற்கூறிய விஷயங்கள் எல்லாம் நிகழ்ந்து அதிகரித்தும் வருவதாக நினைக்கிறேன். ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ என்று கவிஞன் அலறிப் பாட வேண்டிய நிலைதான் இன்றுள்ளது.

 ஒருசில சந்தர்ப்பங்களில் நானும்கூட சத்தமாகப் பேச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதுண்டு. என்ன செய்வது...? ‘அமைதியா இரு’ என்று சொல்வதைக் கூட இங்கே கூச்சலிட்டுத்தானே சொல்ல வேண்டியதாயிருக்கிறது. ஆனால் பொதுவாக மெல்லப் பேசுவதும், சப்தங்கள் குறைவாக இருப்பதும் எனக்குப் பிடித்தமானவை.

சப்தங்கள் என்கிற விஷயத்தைப் பொறுத்தமட்டில் என் கருத்து இப்படி. உங்களுக்கு எப்படி?

Thursday, July 19, 2012

இன்னும் சிதறுது சிலேடை!

Posted by பால கணேஷ் Thursday, July 19, 2012

முன்னொரு பதிவில் நான் ரசித்த சிலேடைகளை  ‘சிலேடைச் சிதறல்’ என்று எழுதியபோது ‘கி.வா.ஜ மற்றும் வாரியார் சிலேடைகளைத் தரலாமே’ என்று நண்பர் நடனசபாபதி கேட்டிருந்தார். தருவதற்கு எண்ணமிருந்தும் ஏனோ சந்தர்ப்பம் அமையாமல் போய்விட்டது. இப்போது ‘வாகீச கலாநிதி’ கி.வா.ஜகந்நாதன் அவர்களின் சிலேடைகளில் நான் ரசித்ததை உங்களுக்குத் தருகிறேன். புகழ்பெற்றவை என்பதால் பல சி‌லேடைகளை நீங்கள் ஏற்கனவே கேட்டிருக்கக் கூடும்.

 கி.வா.ஜ. ஒருமுறை, ‘‘நான் உண்மையிலேயே பேசிய சிலேடைத் துணுக்குகளைத் தவிர, நான் பேசாத சில சி‌லேடைகளும் என் பெயரில் பத்திரிகைகளில் இடம்பெற்று விடுகின்றன. சில துணுக்கு எழுத்தாளர்கள் அவர்களின் சி‌லேடைகளுக்கு என் பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். ஒன்று ‌சொல்ல வேண்டும்... நான் சொன்ன சிலேடைகளை விட நான் ‌சொன்னதாக வரும் சில சிலேடைகள் மிக நன்றாகவே இருக்கின்றன.’’ என்று சொன்னார். ஹா... ஹா... இது எப்புடி இருக்கு?

கி.வா.ஜ. அவர்களுக்கு கடைசிக் காலத்தில் உடல்நலம் குன்றிய போது நிறைய ஓய்வு தேவைப்பட்டது. அவரைச் சோதித்த மருத்துவர், ‘‘TAKE REST’’ என்று அறிவுரை சொன்னார். அதற்கு மருத்துவருக்கு கி.வா.ஜ. சொன்ன பதில்: ‘‘OK. I TAKE REST AND LEAVE THE REST TO YOU!’’

சேலத்தி்ல் சாரதா கல்லூரி சில காலத்துக்கு முன் உயர்நிலைப் பள்ளியாக இருந்தது. கி.வா.ஜகந்நாதன் அவர்கள் பள்ளிக்கு வந்து பேச வேண்டும் என்று நிர்வாகத்தினர் விரும்பி அழைத்தார். கி.வா.ஜ.வும் வந்தார். ஊருக்கு வெளியே பல ஏக்கர் புன்செய் நிலங்களுக்கு இடையே அந்தப் பள்ளி இருந்ததாகையால் பள்ளியின் பின்புறம் கிணறு இருந்தது. அதையும் காட்டினார்கள். ‘‘கவலை ஏற்றம் போட்டுத்தான் இதுவரை தண்ணீர் இறைத்து வந்தோம். ஆனால் இப்போது பம்ப் செட் போட்டு விட்டோம். பம்ப் மூலமாகத் தண்ணீர் கொட்டுகிறது’’ என்றார் பள்ளித் தலைமை ஆசிரியர். இதைக் கேட்ட அடுத்த கணம் கி.வா.ஜ., ‘‘அடடே! அப்படியானால் இனிமேல் தண்ணீருக்குக் கவலையே இல்லை என்று சொல்லுங்கள்!’’ என்றார்.

‘இலக்கியமும் ஆன்மீகமும்’ குறித்துப் பேச கி.வா.ஜ. அழைக்கப்பட்டிருந்தார். அவர் வாழ்க்கையின் நிலை‌யாமைத் தத்துவத்தைப் பேசிவிட்டு, இம்மை மறுமை ஆகியவை குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அவர் பேசிக் கொண்டிருந்த மைக் தகராறு செய்தது. உடனே அதை நீக்கி விட்டு வேறொரு மைக்கை வைத்தார் மைக்செட் உரிமையாளர். அதில் இவர் பேச்சைத் தொடர, அந்தோ... அதுவும் தகராறு செய்தது. உடனே கி.வா.ஜ. அவர்கள் உரத்த குரலில், ‘‘இம்மை மறுமை இரண்டிலும் பயன்படுவது ஆன்மீகம் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்று எனக்கு இம்மைக்கும் பயன்படவில்லை, மறுமைக்கும் பயன்படவில்லை. என்ன செய்ய..?’’ என்றார். அவையினர் வியந்து கரவொலி எழுப்பினார்கள்.

சில பேருக்கு வாய் பேசிக் கொண்டிருக்கும் போதுகூட கைகள் தானாக ஏதாவது (குரங்குச்) சேட்டை செய்து கொண்டிருக்கும். அப்படிப்பட்ட இயல்புடைய ஒரு பேச்சாளர் கி.வா.ஜ. அருகில் ஒரு விழா மேடையில் அமர்ந்திருந்தார். கி.வா.ஜ.வுககும், அவருக்கும் மாலை போட்டு மரியாதை செய்தார்கள். கி.வா.ஜ.வுடன் பேசியபடி இருந்த அவரது கரங்கள் மாலையிலிருந்து ரோஜாவின் இதழ்களை ஒவ்வொன்றாகப் பிய்த்துப் போட்ட வண்ணம் இருந்தன. இயல்பாக அவர் செய்து கொண்டிருந்த இந்தச் செயல் கி.வா.ஜ.வுக்குச் சங்கடமாக இருந்ததால் அவரால் சரியாகப் பேச முடியவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வந்து, ‘‘ஐயா, ஆரம்பிக்கலாமா?’’ என்று கி.வா.ஜ.விடம் கேட்டார். உடனே பளிச்சென்று ஒரு பன்ச் அடித்தார் கி.வா.ஜ..- - ‘‘நான் இனிமேல்தான் ஆரம்பிக்க வேண்டும். இவர் ஏற்கனவே ஆரம் பிய்த்துக் கொண்டிருக்கிறார்’’ என்று.

கி.வா.ஜ.வும் நண்பர்களும் காரில் போய்க் கொண்டிருந்த போது அது ரிப்பேராகி நின்று விட்டது. கி.வா.ஜ. வயதானவர் என்பதால் அவரை காரிலேயே இருக்கச் சொல்லிவிட்டு மற்ற நண்பர்கள் இறங்கி காரைத் தள்ள முற்பட்டனர். கி.வா.ஜ. தானும் காரை விட்டு இறங்கி, அவர்களுடன் காரைத் தள்ளியபடியே சொன்னார் இப்படி: ‘‘என்னை என்ன தள்ளாதவன் என்று நினைத்து விட்டீர்களா?’’

கி.வா.ஜ. ஒரு நண்பரின் வீட்டில் பேசிக் கொண்டிருந்தபோது காலையில் செய்த உப்புமாவை மாலையில் தன் குழந்தைக்கு அம்மா ஊட்டிக் கொண்டிருக்க, அது சாப்பிட மறுத்து அடம் பிடித்தது. ‘‘ஏண்டி... பாத்துப் பாத்து உப்புமா செஞ்சா திங்கக் கசக்குதோ? தொண்டையில குத்துகிறதா?’’ என்று கோபமாக மகளின் தலையில் குட்டினார் அந்த அம்மா. அருகிலிருந்த கி.வா.ஜ. ஒரு வாய் உப்புமாவை வாயில் போட்டுப் பார்த்துவிட்டு, ‘‘ஆம், தொண்டையில் குத்தத்தான் செய்யும். ஏனென்றால் இது ‘ஊசி’ இருக்கிறதே!’’ ‌என்றார்.

ரு விழாவில் கி.வா.ஜ.வுக்கு மு்ன்னதாகப் பேசிய குமரி அனந்தன் அருமையாகப் பேசி அவையோரின் ஏகோபி்த்த கை தட்டல்களை அள்ளினார். அடுத்துப் பேச வந்த கி.வா.ஜா. அவரிடம், ‘‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?’’ என்று கேட்க, குமரி, ‘‘வண்ணாரப் பேட்டையிலிருந்து’’ என்றார். ‘‘அதுதான் இப்படி வெளுத்துக் கட்டி விட்டீர்கள்!’’ என்று ஒரு போடு போட்டார் கி.வா.ஜ.

ண்பரின் வீட்டில் விருந்துண்ண அழைக்கப்பட்டிருந்த கி.வா.ஜ. உணவு அருந்தியதும் கை கழுவத் தண்ணீர் கேட்டார். நண்பரின் மனைவி ஒரு பிளாஸ்டிக் குவளையில் நீர் மொண்டு வந்து அவரிடம் தர, கி.வா.ஜ. சொன்னார் இப்படி: ‘‘நீரில்தான் குவளை இருக்கும் என்று சொல்வார்கள். இங்கே குவளையிலேயே நீர் இருக்கிறதே!’’.

தேபோன்ற மற்றொரு சந்தர்ப்பத்தில் நண்பருடன் டிபன் சாப்பிட கி.வா.ஜ. அமர, நண்பரின் மனைவி இலையில் பூரிகளைப் போட்டபடி, ‘‘நீங்க டிபன் சாப்பிட வர்றீங்கன்னதும் பூரியும் கிழங்கும் தயார் பண்ணிட்டேன். உங்களுக்குப் பிடிக்குமா, பிடிக்காதான்னுகூட கேட்டுக்கலை. நாங்க...’’ என்றார். கி.வா.ஜ. உடனே, ‘‘என்னம்மா சொல்கிறீர்கள்...? ஜகந்நாதனுக்கு பூரி பிடிக்காமல் இருக்குமோ?’’ என்றார். இந்தப் பதில் நண்பரையும் அவர் மனைவியையும் ‘பூரி’க்க வைத்து விட்டது.

ஸ்ரீரங்கத்தில் நடந்த இலக்கியக் கூட்டத்திற்காக சென்னையிலிருந்து வந்தார் கி.வா.ஜ. அந்த ரயில் அதிகாலை 4 மணிக்கே ஸ்ரீரங்கத்தை அடைந்து விடும். பெரிய ரோஜாப்பூ மாலை ஒன்றைப் போட்டு அவரை வரவேற்றனர் இலக்கிய அன்பர்கள். இத்தனை அதிகாலையில் இவ்வளவு பெரிய மாலையை எப்படி இவர்கள் வாங்கிவந்தார்கள் என்ற வியப்பு மனதில் ஓட, கி.வா.ஜ., ‘‘அடடா... என்ன இது? காலையிலேயே மாலை வந்து விட்டதே!’’ என்றதும், அனைவரும் கை தட்டி ஆரவாரித்தனர்.

ண்பரின் மனைவியொருவர் டிபன் எதுவும் வேண்டாம் என்று மறுத்த கி.வா.ஜ.விடம், ‘‘அப்படியானால் பழம் கிழம் எதுவும் சாப்பிடுகிறீர்களா?’’ என்று கேட்டிருக்கிறார்.  ‘‘பழைய காலத்துக் கிழவன் நான் என்பதால் இப்படிச் சொன்னீங்க போல இருக்கு. எனக்கு எதுவும் வேண்டாம்மா...’’ என்ற கி.வா.ஜ.வி்ன் பதில் அவர்களைச் சிரிக்க வைத்து விட்டது.

Monday, July 16, 2012

மேலும் கொஞ்சம் சுஜாதா

Posted by பால கணேஷ் Monday, July 16, 2012

ம்பலம் இதழில் வந்த சுஜாதாவின் பதில்களை நான் வெளியிட்ட பதிவைப் படித்ததும் இனனும் கொஞ்சம் வெளியிடக் கூடாதா என்று 10000 இமெயில்கள்.... ஓஓஓ.... கீபோர்ட் லூசாக இருப்பதால் (அதுவுமா?) மூன்று ஜீரோ அதிகம் விழுந்து விட்டது. அழிக்க மனம் வரவில்லை... வந்ததன் காரணமாக இப்போது இன்னும சில உங்களின் ரசனைக்காக இங்கே...
 
சூடிக் கொடுத்த சுடர்‌க் கொடியாள் பாடல்களில் எது பிடிக்கும்? ஏன்? -மா..வி.கோவிந்தராசன், ஆரணி.

‘கருப்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ, திருப்பவழச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ, மருப்பொசிந்த மாதவன்தன் வாய்ச் சுவையும் நாற்றமும் விருப்புற்றக் கேட்கின்றேன். சொல் ஆழிவெண்சங்கே’ என்று கண்ணனின் உதடுகளைப் பற்றி அந்த உதடுகளோடு உறவு கொண்ட சங்கைக் கேட்கும் பாடல். காரணம், எதுபற்றிக் கேள்விகேட்டால் எதனிடமிருந்து பதில் கிடைக்கும் என்ற ஆண்டாளின் பகுத்தறிவு.

முதலைக் கண்ணீருக்கும், அரசியல்வாதிகளக்கும் என்ன சம்பந்தம்? முதலைக் கண்ணீர் என்றால் என்ன?  -கே.சஞ்சீவிபாரதி, அவ்வையார் பாளையம்.

வழக்கில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், தாங்கள் மக்களை ஏமாற்றிச் சேகரித்த முதலை இழக்காமல் இருப்பதற்காக ஒன்றும் அறியாத அப்பாவிகள் போல் வடிக்கும் கண்ணீர்தான் அது.

‘செப்பு’ என்கிற வார்த்‌தை ‘சொல்லு’ என்கிற அர்த்தத்தில் நிறையத் தமிழ்ப் பாட்டுகளில் வருகிறது. (‘செப்பேலோர் எம்பாவாய்’ -ஆண்டாள், ‘செப்புமொழி பதினெட்டுடையாள்’ -பாரதியார்). தெலுங்கில் இதேபோல் செப்பு என்கிற ஒரு வார்த்தை இருக்கிறது. (தமிழில் Seppu, தெலுங்கில் Cheppu) இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? ஆந்திராவில் வெற்றிலை தெளிக்கிற செவ்வாயுடன்(?) யார் ‘செப்பன்டி’ என்றாலும் எனக்கு இந்த சந்தேகம் வந்து மண்டையை உடைக்கிறது. தயவுசெய்து விளக்குங்களேன். -லாவண்யா, ஹைதராபாத்.

என் கருத்தைச் செப்புகிறேன். இது Gloctochronology என்கிற மொழியியல் பிரிவில் வருகிறது. ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழி பிரியும் போது அதன் அன்றாட வார்த்தைகள் ஆயிரத்துக்கு பத்தோ பதினைந்தோதான் மாறும் என்கிறார்கள். அதற்கு திராவிட மொழிகளான கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்றவைகளில் பழந்தமிழ் வார்த்தைகள் அன்றாட வார்த்தைகளாக இருப்பதை உதாரணம் காட்டுகிறார்கள். கன்னடத்தில் ‘மனை, தாயி, தந்தே’  போன்றவை அன்றாட வார்த்தைகள். தெலுங்கில் ‘இல்லு, செப்பு’ போன்றவை அன்றாட வார்த்தைகள். மலையாளத்தில் அகம் புறம்.

 இந்த வார்த்தைகளின் எண்ணிக்கையை வைத்துக் கொண்டு இம்மொழிகள் எப்போது தனி அடையாளம் பெற்றன என்பதைக் கணக்கிட முடியும் என்கிறார்கள். வார்த்தை ஆராய்ச்சியை வைத்து கம்பராமாயண காலம் கி.பி. 12-ம் நூற்றாண்டின் பிற்பகுதி என்கிறார் வையாபுரிப் பிள்ளை. ‘குட்டன்’ என்கிற இன்றைய மலையாள வார்த்தை பெரியாழ்வாரில் உள்ளது. ஒரு மொழிச் சொல் இன்னொரு மொழிக்கு வருவத ஒருவழிப் பாதையாக இருக்க முடியாது. பிறமொழிச் சொற் கலப்பு என்பது பெருமையுமல்ல, சிறுமையுமல்ல. அது உலக மொழிகள் அனைத்திற்குமுள்ள தன்மை- தமிழ் உட்பட.

‘தள்ளாத வயது’ என்பது எது?  -எஸ்.அப்துல்லா அஹ்மது, நாகூர்.

இளம் வயதுதான். உப்பு, சர்க்கரை, எண்ணெய் -எதையும் நீக்கித் தள்ளாமல் எல்லாவற்றையும் சாப்பிடலாம். முதுமை இவற்றையெல்லாம் விலக்கித் தள்ளுகிறது.

ஏகலைவன், அர்ஜுனன், கர்ணன் - யார் சிறந்த வில் வீரன்?  -ரா.மைக் மணிகண்டன், வேம்படிதாளம்.

ஏகலைவன். மற்ற இரு ரெகுலர் கல்லூரி மாணவர்களுக்கு இணையாக, அஞ்சல் வழிக் கல்வியிலேயே தேர்ச்சி பெற்றதால்!

அறிவு முதிர்ச்சிக்கும், வழுக்கைக்கும் தொடர்பு உண்டா?  -கல்லார் ரஹ்மத், நாகை.

உறுதியாகச் சொல்ல முடியாது. உதாரணமாகத் தேங்காயைப் பொறுத்தவரை வழுக்கை, அதன் முதிர்ச்சியின்மைக்கு அடையாளம்.

திரைப்படத் துறை வளர்ச்சிக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பவர்கள் யார்?  -கே.அரவிந்த், சென்னை.

‘டப்பிங்’ கலைஞர்கள்தான்!

ஆங்கிலத்தில் 'WAR' என்றால் தமிழில் ‘போர்’. அதே மாதிரி ஆங்கிலத்தில் 'POUR' என்றால் தமிழில் ‘வார்’ (வார்த்தல்) என்றாகிறது. இதுபோல வேறு மொழி வார்த்தைகள் இருக்கின்றனவா?  -ராணிகுருநாதன், ஈரோடு.

‘பனி’ என்ற சொல்லுக்குத் தமிழ்ப் பொருள் தெரியும். அதே சொல்லுக்குத் தெலுங்கில் ‘வேலை’ என்று அர்த்தம். மலையாளத்தில் ‘காய்ச்சல்’ என்று பொருள். தமிழ்ப் பனியில் தெலுங்குப் பனி செய்தால் மலையாளப் பனி வரும்.

விலை ஏறாத பொருளையே தொடர்ந்து வாங்க ஆசை. எதை வாங்கலாம்?  -ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

காற்று!

பழம் சாப்பிட விரும்புகிறேன். எப்போதும் மலிவாகக் கிடைக்கும் பழம் எது?  -கே.சஞ்சீவிபாரதி, கலிங்கியம்.

வாழைப்பழம்தான். அதுதானே எப்போதும் ‘சீப்’பாகக் கிடைக்கிறது.

குற்றாலத்திற்கு எந்த இடத்தில் இருந்து தண்ணீர் வருகிறது?  -எஸ்.அப்துல்லா அஹ்மது, நாகூர்.

மன்னிக்கவும். நான் ஃபால்ஸ் இன்பர்மேஷன் தருவதில்லை!

‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாடுபவர்கள், சாதி அடிப்படையில் ஒதுக்கீடுகளும், சலுகைகளும் வழங்குவது சரிதானா?  -இரா.மகராசன், வடக்கூர்.

சரிதான். கைப்பிடியில்லாத கூஜாவை இரண்டு கைகளாலும் ஆதரவாகத் தூக்குவது மாதிரி, பல நூற்றாண்டுக் காலமாக ஒதுக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு தேவைதான். ஆனால் சரியான ஆய்வு செய்து, உண்மையிலேயே அவர்கள் முன்னேறுகிறார்களா இல்லையென்றால் சிஸ்டத்தில் என்ன கோளாறு என்று கண்டுபிடித்துக் களைய வேண்டும்.

அவர்கள் உண்மையிலேயே முன்னேற வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்க வேண்டும். முன்னேறிவிட்ட ஜாதியை ஒவ்வொன்றாக பொதுப் பிரிவுக்கு மாற்றவும் வேண்டும். முற்பட்டவர்களில் ஏழைகளுக்கும் ஒதுக்கீடு வேண்டும்.

கன்னி எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொல்லிக் ‌கொள்ள விரும்புவது என்ன?  -அமுதவன், திருநெல்வேலி.

சீக்கிரம் மணம் புரிந்து கொள்ளுங்கள். சோகக் கதைகளுக்கான கருப்பொருளைக் காப்பியடிக்காமல் சொந்தத்திலேயே பெற அது ஒன்றுதான் சுலபமான வழி!

===========================================================

னைவருக்கும் வணக்கம்!  வரும் ஆகஸ்ட் 19 ம் தேதி சென்னை மாணவர் மன்றத்தில் பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடாகியுள்ளது உங்களுக்கு தெரியும். இதுகுறித்த விபரங்களை முன்பே வெளியிட்டிருந்தோம். நிகழ்வின் முக்கிய அம்சமாக பதிவர்கள் கவிதை பாட கவியரங்கம் ஏற்பாடாகி வருகிறது. அதில் கலந்து கொண்டு கவிபாட விரும்பும் அன்பர்கள் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு சொல்லியிருந்தோம். இதுவரை 15 தோழர்கள் கவி பாட உறுதியளித்திருக்கிறார்கள். மேலும் கவிபாட விழையும் தோழர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள விரும்பும் தோழமைகளும் அலைபேசியில் தொடர்பு கொண்டு வருகையை உறுதிபடுத்தும்படி கோருகிறோம். வருபவர்களின் பட்டியல் முழுமையடைந்தால்தான் ஏற்பாடுகள் செய்ய வசதியாயிருக்கும். எனவே காலம் தாழ்த்தாமல் தங்களின் வருகையை உறுதி படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம். நன்றி..!

தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்:  மதுமதி (தூரிகையின் தூறல்)-98941 24021, பால கணேஷ் (மின்னல் வரிகள்)-73058 36166, சென்னைப்பித்தன் (நான் பேச நினைப்பதெல்லாம்)-94445 12938, புலவர் சா.இராமாநுசம் (புலவர் கவிதைகள்)- 90947 66822, சசிகலா (தென்றல்)-99410 61575

===========================================================

Saturday, July 14, 2012

நடை வண்டிகள் - 26

Posted by பால கணேஷ் Saturday, July 14, 2012

கடுகு அவர்களும் நானும் - 4 

நான் விடைபெற்றுக் கிளம்பும் நேரத்தில் கடுகு ஸார் கேட்டார்: ‘‘ஒவ்வொரு இடத்துக்கும் பஸ் பிடிச்சு, ட்ராபிக் ஜாம்ல மாட்டி... கஷ்டப்பட்டுப் போகறதுக்குப் பதிலா நீங்க ஒரு டூ வீலர் வாங்கிக்கிட்டா என்ன?’’

‘‘எனக்கு அந்த அளவுக்கு வசதியில்ல ஸார்...’’ என்றேன். சற்றும் தயக்கமின்றி உடனே பதில் வந்தது அவரிடமிருந்து: ‘‘நம்ம ஏரியாவுல ராம்கே ஏஜென்ஸி இருக்குல்ல.. அங்க போய் உங்களுக்குப் பிடிச்ச மாடல் வண்டி எதுன்னு பாத்துட்டு கொட்டேஷன் வாங்கிட்டு வாங்க. அதுக்கான மொத்தப் பணத்தையும் நான் கொடுத்துடறேன். உங்ககிட்டருந்து அந்தத் தொகையை நான் மெதுவா வாங்கிக்கறேன்...’’

நான் வியப்பு, அதிர்‌ச்சி, ஆச்சர்யம் ஆகியவற்றின் கவலையான உணர்ச்சிகளுடன் அவரை ஏறிட்டேன். ‘கடுகு ஸாரின் பேச்சிலேயே இயல்பான நகைச்சுவை இருக்குமே... அந்த வரிசையில் ஒன்றாக ஜோக் அடிக்கிறாரா, இல்லை சீரியஸாகத்தான் சொல்கிறாரா’ என்கிற சந்தேகம் எனக்கு. அவர் முகபாவம் அவர் ‌சொன்னது நிஜம்தான் என்பதை உணர்த்தியது எனக்கு.

 ‘‘ஸார்... வாகனம் வாங்கறதுங்கறது பெரிய தொகை. சென்னை ட்ராபிக்ல போயிட்டு வர்றதுக்கு டிவி‌எஸ் சூப்பர் எக்ஸ்எல் மாதிரி சின்ன வண்டிதான் லாயக்கு. அதை என்னிக்காவது ஒரு நாள் வாங்கிடணும்னு நான் ஏற்கனவே முடிவு செஞ்சு வெச்சுட்டேன். ஆனா, எனக்கு வர்ற வருமானத்துல ஐநூறு ஆயிரம் மிஞ்சறதே பெரிய விஷயம். நான் எப்படி உங்களுக்குப் பணம் தர முடியும்? இதெல்லாம் ஆகற காரியமில்லை ஸார்...’’

‘‘அதெல்லாம் ஒண்ணும் பேசாதீங்க. உங்களுக்கு ஐநூறு கிடைக்கறப்ப ஐநூறை கொடுங்க. ஆயிரம் கிடைக்கறப்ப ஆயிரம் கொடுங்க. 200 கிடைச்சா 200 கொடுங்க. மெதுவா பதட்டமில்லாம தரலாம் நீங்க. உடனே போய் நான் சொன்னபடி பாத்துட்டு வாங்க...’’ என்றார். போனேன். நான் நினைத்த அந்த வாகனத்தின் அன்றைய விலை (2006ல்) 23 ஆயிரத்தில் இருந்தது. அதன் கொட்டேஷனுடன் வந்தேன். உடனே செக் எழுதிக் கொடுத்தார். உற்சாகமாய்ச் சென்று உடனே வாகனத்தை புக் செய்தேன்.

அந்த வாகனம் பத்து நாட்களின் பின்னால் என் கையில் கிடைத்தபோது அடைந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் என்றும் மறக்க இயலாது. வாகனத்தை பூஜை போட்டதும் எடுத்துக் ‌கொண்டு அவரின் இல்லத்திற்கு விரைந்தேன். புதிய வாகனத்தைக் காட்டினேன். பார்த்து மகிழ்ந்தார். ஆசி பெற்றேன்.

 நான் அந்த வாகனத்திற்கான தொகையை உண்மையிலேயே அவர் சொன்ன மாதிரிதான் எனக்குப் பணம் கிடைத்த போதெல்லாம் 300, 500 என்றெல்லாம் பிய்த்துப் பிய்த்து வருடக் கணக்காகத் தந்தேன். மிகப் பொறுமையாக பெற்றுக் கொண்டார். இடையில் நான் கோர்ட்டுக்கும் வீட்டுக்குமாக அலைந்த காலங்களிலும் அந்தப் பிரச்னையிலிருந்து விடுபட்ட பின்பும் கூட கையில் பணம் இல்லாமல் ஜீரோவாக இருந்தேன். அச்சமயங்களில் எதுவும் தரவில்லை. ஆனாலும் அவர் என்னை எதுவும் கேட்டதுவோ, விரைவுபடுத்தியதோ இல்லை. அத்தகைய பெருந்தன்மையாளர் அவர். ஒரு விபத்தையும் ஏற்படுத்தாத, ராசியான அந்த வாகனத்தைத் தான் இன்றுவரை நான் பயன்படுத்தி வருகிறேன்.

புதிய வாகனத்துடன் நான் ‘சுபா’வின் இல்லம் சென்று விவரம் ‌சொன்னதும் வியந்து போனார்கள் நண்பர்கள். பாலா ஸார் உடனே போன் செய்து கடுகு ஸாரைப் பாராட்டினார். என்னிடம், ‘‘எங்க மூலமா அறிமுகமாகியிருக்கீங்கன்ற நம்பிக்கைலதான் கடுகு ஸார் இதைச் செஞ்சிருக்கார். அதனால அவர் சொன்னபடி முடியறப்பல்லாம் பணம் கொடுத்துடுங்க. வாகனம் கைல வந்துட்டா, நம்ம கைத் திருகல்ல அது பறக்குதுங்கற உணர்ச்சில எல்லாரும் ஓவர் ஸ்பீடாப் போவாங்க... அதை மட்டும் செய்யாதீங்க. நிதானம்தான் நல்லது’’ என்று சாலையில் செல்வதற்கு எனக்கு உபயோகமான பல டிப்ஸ்களை அவர் அனுபவத்திலிருந்து சொன்னார்.

அதைத் தவிர இன்னொன்றும் செய்திருக்கிறார் பாலா. நான் கிளம்பிப் போனதும், மீண்டும் கடுகு ஸாருக்கு போன் செய்து, ‘‘கணேஷ் தன்னால முடியறப்பல்லாம் கரெக்டா பணம் குடுத்துடுவார். ஸப்போஸ்... ஏதாவது சந்தர்ப்ப சூழ்நிலையால அவரால தர முடியாமப் போச்சுன்னா, கவலைப்படாதீங்க. எனக்கு ஒரு வார்த்தை சொல்லுங்க. அந்தத் தொகைக்கு நான் செக் கொடுத்துடறேன் உங்களுக்கு’’ என்று சொல்லியிருக்கிறார். ‘‘அதுக்கெல்லாம் தேவையிருக்காது பாலா’’ என்று சொன்ன கடுகு ஸார் இந்த விஷயத்தைப் பற்றி என்னிடம் மூச்சு விடாமல் இருந்து விட்டு, சென்ற ஆண்டில் ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும் போதுதான் சொன்னார். இந்த மூன்று எழுத்தாள நண்பர்களின் அன்பையும் எண்ணி வியந்தும் நெகிழ்ந்தும் போனேன் நான்.

-இந்த ‘நடைவண்டிகள்’ தொடரில் இதுவரை நான் எழுதியவற்றைத் தொடர்ந்து படித்துவரும் நண்பர்கள் என்னை நேரில் சந்திக்கையில் சொல்லுவது- ‘‘எப்படி இத்தனை பெரிய மனிதர்களின் நட்பு கிடைச்சு பழக முடிகிறது? கொடுத்து வைத்தவர் நீங்கள்’’ என்பதுதான். ஆம். நான் பழகியவர்கள் உண்மையில் பெரிய ‘மனிதர்கள்’தான்! ஆனால் நான் பெரிய மனிதர்களுடன் பழகும் வாய்ப்புப் பெற்ற ஒரு சாதாரணன் என்பதே உண்மை. ஏதோ இறையருளால் இத்தகைய நல்ல நட்புகள் கிடைக்க ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.

இப்போதும்கூட வலையில் எழுதத் தொடங்கியதன் விளைவாக பல நல்ல நட்புகள் கிடைக்கப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். அவர்களால் பல இனிய அனுபவங்கள் என் கணக்கி்ல சேர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. யார் கண்டது...? சில வருடங்கள் கழித்து, ‘நடைவண்டிகள்- பாகம் 2’ ஆக வலையுலகில் எழுதியதால் எனக்குக் கிடைத்த நண்பர்கள் பற்றி எழுதுவேனோ என்னவோ...

                                                                         -தொடர்கிறேன்...

Thursday, July 12, 2012

மறுபடியும் சுஜாதா

Posted by பால கணேஷ் Thursday, July 12, 2012

அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய நறுக் சுருக் கேள்வி பதில்களை முன்னர் ஒருமுறை கொடுத்திருந்தேன். அதன் அடுத்த தொகுப்பைப் படித்துப் பார்த்தபோது இன்னும் சில கேள்வி பதில்களை ரசிக்க முடிந்தது. அவையும் உங்கள் பார்வைக்காக...

சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று பேசுகிறீர்களே... கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி நிறுவனத்தில் கேன்டீன் எப்படி?   -எம்.பரிமளா, சென்னை.

கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி ஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்ளம்’’.

திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும் என்ன ‌சார் தொடர்பு? 
-ஏ.ஆர்.மார்ட்டின், திருமானூர்.

இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும் ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை ‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும். இரண்டிலும் இலக்கணப் பிழைகள் இருக்கக் கூடும். மணம் புரிந்து கொண்ட மனைவி ‘வஞ்சிப்பா’ளானால் வாழ்க்கை ‘வருத்தப்பா’ ஆகிவிடும்.

ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையாக இருந்தால் ‘கள்’ சேர்த்துக் கொள்கிறோம். (உம்) பறவை, பறவைகள்; நூல் நூல்கள் -இப்படி. ஆனால் 1330 இருந்தும் அதனை திருக்குறள் என்றுதானே சொல்கிறோம். திருக்குறள்கள் என்று சொல்வதில்லையே. ஏன்?  -வி.மகேஸ்வரன், காரைக்குடி.

திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை.

‘மானும் மழுவமேந்தி மலர்ப் பாதம் தூக்கி ஆடும் இறைவன்’ என சிவனை கவிஞர்கள் பாடுகிறார்களே; ‘மலர்ப் பாதம்’ பெண்களுக்குத் தானே பொருந்தும். சிவனுக்கு எப்படி?  -டி.என்.பாலகிருஷ்ணன், சென்னை.

சிவனே என்றிராமல் இப்படியொரு சக்தியுள்ள கேள்வி கேட்டிருக்கிறீர்கள். மலர்ப்பாதம் என்ற சொல்லுக்கு மலர் போன்ற பாதம் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்பதில்லை. மலர்களால் அர்ச்சிக்கப்படுகிற பாதம் என்று பொருள் கொள்ளலாமல்லவா? உவமைத் தொகையை மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையாகப் புரிந்து கொள்ளுங்களேன்.

தற்போ‌தைய பட்டிமன்றங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  -என்.எஸ்.பார்த்தசாரதி, திருப்பூர்.

கி.வா.ஜ., குன்றக்குடி அடிகளார், திருச்சி தேசியக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் போன்றோர் காலங்களில் பட்டிமன்றங்கள் சிந்தனையைத் தூண்டின. இப்போது பெரும்பாலான பட்டிமன்றங்கள் நகைச்சுவை என்ற பெயரில் சிரிப்பாய்ச் சிரிக்கின்றன.

லால்குடி ஜெயராமனு்க்கும், லால்குடியில் காவேரிக் கரையில் விவசாயம் செய்யும் விவசாயிக்கும் ஏதேனும் ஒற்றுமை உண்டா?  -வி.அம்பிகை, சென்னை.

உண்டே. இவர் ஸ்வரம் பாடுகிறார்; அவர் உரம் போடுகிறார். இவர் பண் மூலம் பண்படுத்துவது மனதை; அவர் மண் மூலம் பண்படுத்துவது நிலத்தை. மொத்தத்தில் இருவருமே வயலின் மேன்மைக்காகப் பாடுபடுகிறார்கள்.

சமையலில் மனைவிக்கு உதவி செய்வீர்களா?  -ஆவடி த.தரணிதரன், சென்னை.

சமையல் கலை இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று சமைப்பது. இன்னொன்று சாப்பிடுவது. நான் இரண்டாவது பகுதியில் உதவுவதுண்டு.

நீங்கள் மரபுக் கவிதைகள் எழுதுவது உண்டா? உங்களுடைய ஏதாவது ஒரு மரபுக் கவிதை ப்ளீஸ்! -என்.அஞ்சுகம், பாலப்பட்டி.

உண்டு. எப்போதாவது. ‘வேண்டாம் வரதட்சணை’ என்ற ஈற்றடிக்கு முன்பு தினமணி கதிரில் ஒரு நேரிசை வெண்பா எழுதினேன். அது-

பத்து பவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி - மத்தபடி
பாண்டு வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட் சிணை!

‘சிங்களத் தமிழ்’, ‘சிங்கார சென்னைத் தமிழ்’ ?  -ந.வந்தியக்குமாரன், சென்னை.

இலங்கைத் தமிழர்களுடன் கதைக்கும் போது அவர்கள் பாவிக்கும் சில தமிழ் வார்த்தைகள் சொக்கிலேற்றுகளாய்‌த் தித்திக்கும் என்று நம்மால் அவதானிக்க முடிகிறது. கனகாலமாய் அவற்றைப் படித்து வருவதால் சென்னைத் தமிழைப் பொறுத்தவரை அதிக அளவில் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் வட்டாரத் தமிழ் அதுதான்.

காதல் கவிதை எழுதக் காதலித்துத்தான் ஆக வேண்டுமா?  -ராஜசுதா, சேலம்.

சரிதான்... துப்பறியும் கதை எழுத கொலை செய்ய வேண்டும் என்பீர்களா?

ஊழல் பெருச்சாளிகள் எங்கிருந்து வருகிறார்கள்? -எஸ்.வெண்ணிலாராஜ், வேம்படிதாளம்.

பெரும்பாலும் அரசியல் சாக்கடையிலிருந்துதான்.

ஆலய உண்டியலில் பணம் போடுவது, ஏழையொருவனுககு அறம் செய்வது. -நற்பயன் தரக் கூடியது?  -எஸ்.ஏ.கேசவன், இனாம் மணியாச்சி.

‘நடமாடும் கோயில் நம்பர்க்கொன்று ஈந்தால் அது படமாடும் கோயில் பரமற்கு் போய்ச் சேரும் என்கிறார் திருமூலர். ஏழை சப்-போஸ்ட் ஆபீஸ், கடவுள் ஹெட் போஸ்ட் ஆபீஸ். ஏழைக்குக் கொடுத்தால் கடவுளுக்குப் போகும்.

தினமும் பூண்டு சாப்பிட்டால் இதய நோய் வராதாமே? -எஸ்.சண்முகம், திருவண்ணாமலை.

தொடர்ந்து அதன் நாற்றத்தைச் சகித்துக் கொள்வதில் உறுதிபூண்டு செயல்பட்டுப் பாருங்கள்.

இடமிருந்து வலமாக வாசித்தாலும், வலமிருந்து இடமாக வாசித்தாலும் ஒரே வார்த்தையைத் தரும் ‘விகடகவி’யைப் போல் வேறு ஏதாவது?   -த.முரளிதரன், சென்னை.

‘தேருவருதே’, ‘மோருபோருமோ’ தமிழில் ஒரு முழுக்குறள் வெண்பாவே இப்படி இருக்கிறது. ‘நீவாத மாதவா தாமோக ராகமோ தாவாத மாதவா நீ’

அன்னை ஓர் ஆலயம் என்று கூறுவது ஏன்? -ஆடுதுறை கோ.ராமதாஸ், தஞ்சாவூர்.

‘கர்ப்ப’க்கிரகம் அங்கிருப்பதால்.

Tuesday, July 10, 2012

நடை வண்டிகள் - 25

Posted by பால கணேஷ் Tuesday, July 10, 2012

கடுகு அவர்களும் நானும்-3

டுகு ஸாரை நான் சந்தித்து விட்டு வந்தபின் சில நாட்கள் நான் பார்த்தவந்த வேலை என்னைச் சாப்பிட்டது. அதனால் தொடர்பு கொள்ள இயலவில்லை. ஒருநாள் அவரே அலைபேசியில் அழைத்தார். ‘‘ப்ரீயா இருக்கீங்களா? வர முடியுமா?’’ என்று கேட்டார்.  நான் ப்ரீயாகத்தான் இருந்தேன். உடனே வருகிறேன் என்று கூறி புறப்பட்டுச் சென்றேன்.

அச்சமயத்தில் என்னிடம் இருசக்கர வாகனம் எதுவும் இல்லாததால் சென்னையில் எங்கு செல்வதென்றாலும் பேருந்துகள்தான். எனவே சற்றுத் தாமதமாகவே அவரின் வீட்டைச் சென்றடைந்தேன். ‘‘என்னாச்சு... ஏன் நீங்க வர்றதுக்கு இவ்வளவு நேரமாச்சு?’’ என்று கேட்டார். நான் ட்ராபிக் ஜாமின் காரணமாக பேருந்து லேட்டாக வந்தது என்றேன். ‘‘நான் எழுதின சில கதைகளும், கட்டுரைகளும் இதில இருக்கு. இதை டைப் பண்ணித் தரணும் கணேஷ்’’ என்று எனக்காக எடுத்து வைத்திருந்ததைக் கொடுத்தார். உடன் செய்வதாகக் கூறி பெற்றுக் கொண்டேன்.

அதன்பின் ‌மற்ற விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தோம். கணிப்பொறியில் பயன்படுத்துகிற தமிழ் ஃபாண்ட்கள் பற்றிப் பேச்சு வந்த போது கடுகு ஸார் சொன்னார். ‘‘நானே நிறைய ஃபாண்ட்ஸ் உருவாக்கியிருக்கேன், தெரியுமா?’’ என்றார்.

‘‘ஃபாண்ட்‌ஸை... உருவாக்கறதா..? எப்படி ஸார்?’’ என்றேன் வியப்புடன்.

‘‘Fontographer அப்படின்னு அதுக்கு ஒரு software இருக்கு. அதை நான் டில்லியில இருந்தப்பவே வாங்கினேன். அதைக் கத்துக்கிட்டு அதன் மூலமா ஃபாண்ட்ஸ் க்ரியேட் பண்ணலாம்’’ என்றார். அவர் உருவாக்கியிருந்த ‘ஆனந்தி’ என்ற புதிய, எளிய தமிழ் மென்பொருளின் குறுவட்டும், விளக்கப் புத்தகமும் இணைந்த பேக்கை எனக்குத் தந்தார். எம்.எஸ்.வேர்டில் டைப் செய்து, அங்கிருந்து காப்பி செய்து மற்ற சாப்ட்வேர்களில் பயன்படுத்தும் வண்ணம் அது உருவாக்கப்பட்டிருந்தது. அதை எனக்கு இயக்கிக் காட்டினார்.

தமிழில் எழுத்துக்களை டைப் செய்யும் போது கி என்பதில் க மற்றும் சுழி என இரண்டு ஸிலபிளாக எடுத்துக் கொள்ளும். க் என்பதும் அவ்விதமே க மற்றும் புள்ளி என்று இரண்டு. கடுகு ஸாரின் ஆனந்தியில் டைப் செய்துவிட்டு, மேலே இருக்கும் அவர் படத்தை (மேக்ரோவை) அழுத்தினால், இரண்டு ஸிலபிள்களாக இல்லாமல் இணைந்து ஒன்றாகி விடும். அப்படி அவர் டிஸைன் செய்திருந்த விதத்தைக் கண்டு வியந்து போனேன். அவர் தந்த அந்த சாப்ட்வேரை நான் பயன்படுத்தினேன்.

அவர் உருவாக்கியிருந்த ஃபாண்ட்களின் பெயர்களைப் பாருங்கள்: குந்தவி, வந்தியத்தேவன், கரிகாலன், தாரிணி. அவரின் பதிப்பகத்தின் பெயரோ நந்தினி. இவற்றையெல்லாம் பார்த்ததும் நினைத்திருப்பீர்கள் கடுகு ஸார் கல்கியின் அபிமானி என்று. அது உண்மையல்ல...

அவர் கல்கி அவர்களின் தீவிர பக்தர் என்பதே சரி. நந்தினி பதிப்பகத்தில் அவர் வெளியிட்ட ஆனந்தி சாப்ட்வேர், மற்ற புத்தகங்கள் அனைத்தையுமே ‘கல்கி அவர்களின் பொற்பாத கமலங்களில் சமர்ப்பிக்கிறேன்’ என்ற வரிகள் இல்லாமல் வெளியிட மாட்டார். கல்கி அவர்களைச் சந்தித்ததையும், உரையாடியதையும் இப்போது கேட்டாலும் நேற்று நடந்தது போல் விரிவாகச் சொல்வார் அவர். (‘கமலாவும் நானும்’ என்ற அவரின் புத்தகத்தில் ‘கல்கியும் நானும்’ என்று தனிக் கட்டுரையாக அதை எழுதியிருக்கிறார். படித்துக் கொல்ல... ஸாரி, கொள்ளவும்)

கணிப்பொறியில் அவர் சேகரித்து வைத்திருந்த நிறைய போட்டோஷாப் ப்ரஷ் மற்றும் ஆக்ஷன் டூல்களை இயக்கிக் காட்டியபோது அவரின் கணிப்பொறி ஆர்வம் கண்டு வியந்து போனேன். அவருடைய ப்ரஷ் தொகுப்பு எனக்கு டிசைனிங்குக்குப் பயன்படும் என்பதால் ஒரு சிடியில் காப்பி செய்து எடுத்துக் கொண்டேன். ‘‘இதென்ன பெரிசு... டிடிபிக்கு யூஸ் பண்ற க்ளிப் ஆர்ட்ஸ் தொகுப்பு 14 சிடி இருக்கும்... டெல்லியில இருந்தப்ப என்கிட்ட இருந்துச்சு. அதை வரவழைக்கறேன். அடுத்த தடவை வர்றப்ப ஞாபகப்படுத்துங்க தர்றேன்...’’ என்றார். நான் கிளம்பத் தயாரானபோது, ‘‘முடியறப்போ டைப் பண்ணிட்டு வாங்க. ஒண்ணும் அவசரமில்லை’’ என்றார்.

டைப் பண்ணுகிற சாக்கில் அவருடைய எழுத்துக்களில் படித்ததை மீண்டும் படித்து ரசிக்கவும், படிக்காததை புதிதாய் ருசிக்கவும் கிடைத்த வாய்ப்பு அல்லவா...? எனவே அவர் கொடுத்த மேட்டர்களை ஆர்வமாகப் படித்து, அடித்து விரைவில் முடித்து விட்டேன். முடித்து விட்டு அவருக்கு போன் பண்ணி, வீட்டில் இருப்பாரா, வரலாமா என்பதைக் கேட்டுக் கொண்டு அவற்றைக் கொடுக்கச் சென்றேன். நான் கொடுத்த மேட்டர்களை கணிப்பொறியில் காப்பி செய்து விட்டு, ‘ஐயோ பாவம் சுண்டு’ புத்தகம் தயாராகி வந்திருந்ததைக் கொடுத்தார்.

கூடவே அந்த 14 க்ளிப் ஆர்ட் சிடிக்களையும்! அவற்றை நான் பிரதி எடுத்துக் கொண்டு பின்னொரு நாளில் அவரிடம் கொடுத்து விட்டேன். அந்த 14 சிடிக்களிலும் இருந்தவை க்ளிப் ஆர்ட் பொக்கிஷங்கள்! அவற்றை முழுமையாக நான் இன்னும் பயன்படுத்தி விடவில்லை என்பதும் இன்றுவரை பக்க வடிவமைப்புக்கு எனக்கு அவை துணை நிற்கின்றன என்பதும் நிஜமான நிஜம்.

அகஸ்தியன் மற்றும் கடுகு ஆகிய இரண்டு புனைபெயர்களுக்கான காரணம் கேட்டபோது விரிவாகச் சொன்னார். ‘கமலாவும் நானும்’ புத்தகத்தில் அதை விரிவாக எழுதியிருக்கிறார். அதன் சுருக்: ‘‘குமுதம் இதழில் என் கட்டுரைகளும, துணுக்குகளும் நிறைய வந்து கொண்டிருந்தன. பின்னர் சாவி ஸார் தினமணி கதிரில் ஆசிரியர் பொறுப்பேற்றதும் முன்பின் அறிமுகமில்லாத எனக்குக் கடிதம் எழுதி கதிருக்கு ஏதாவது எழுத வேண்டும் என்று சொன்னார். கதிரில் கதை எழுதலாம் என்று நினைத்தேன். அதாவது எனக்குக் கதை எழுத வரும் என்று நானே தீர்மானித்துக் கொண்டேன். அதுவும் நகைச்சுவைக் கதைகள். ‘அகஸ்தியன்’ என்ற புனைபெயரைச் சூட்டிக் கொண்டு ஒரு பஞ்சு கதை எழுதி அனுப்பினேன்.’’

 இப்படி அகஸ்தியனாக அவதாரமெடுத்த கடுகு ஸார், சில நாட்களிலேயே எஸ்.ஏ.பி. அவர்களைச் சந்தித்தபோது தானே அகஸ்தியன் என்பதைச் சொல்லி அவரின் வாழ்த்துக்களைப் பெற்றிருக்கிறார்.

இப்படி இன்னும் நிறைய விஷயங்களை நேரம் போவதே ‌தெரியாமல் பேசிக் கொண்டிருந்து விட்டு விடைபெறும் சமயத்தில் அவர் என்னிடம் ஒரு வார்த்தை சொன்னார். நான் அதிர்ச்சி, வியப்பு, ஆச்சரியம் ஆகிய உணர்ச்சிகளின் கலவையாக அவரைப் பார்த்தேன். அவர் சொன்னதை என்னால் சட்டென்று நம்ப இயலவில்லை. அந்த விஷயம் என்னன்னாக்கே...

அடடா... பதிவு ரொம்ப பெரிசாயிட்ட மாதிரி இருக்கே... அதிகம் படிச்சா போரடிக்கும் இல்லயா... அதனால...

                                                                                -தொடர்கிறேன்...

Friday, July 6, 2012

மினி க்ரைம் நாவல்!

Posted by பால கணேஷ் Friday, July 06, 2012

முன்பொரு சமயம் குமுதம் இதழைத் தயாரித்தபோது ராஜேஷ்குமார் தன் வாசகர்களுக்காக ஒரு மினி க்ரைம் நாவலை நான்கே பக்கங்களில் எழுதினார். அதை நிறையப் பேர் படித்திருக்க மாட்டீர்கள் என்பதால் இங்கே...

                               தீர்ப்பின் நிறம்
                                   - ராஜேஷ்குமார் -

(1) இரவு மணி பத்து. காலிங் பெல் நீளமாகக் கூப்பிட, யூனிபார்மைக் கழட்டிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் சுகுமார் கதவைத் திறக்க- வெளியே ஒரு நபர். இருட்டில் முகம் தெரியவில்லை. ‘‘யார்?’’ -வந்தவன் சுட்டான். ‌‌ஸைலன்ஸர் பிஸ்டல்! இன்ஸ்பெக்டர் மல்லாந்தார்.

(2) பப்ளிக் பிராசிக்யூட்டர் நாகராஜ் செகண்ட் ஷோ சினிமா பார்த்துவிட்டு ஸ்கூட்டரில் வீடு திரும்ப, போக்குவரத்தற்ற ரோட்டின் வளைவில் திடுமென்று அவன் நின்றிருக்க, அதிர்ந்து போய் பிரேக்கை அழுத்தினார். நின்றிருந்தவன் அவருடைய தலையில் ஓங்கி அடிக்க, குப்புற விழுந்தார். விழுந்தவரை இழுத்துக் கொண்டு போய் ரோட்டின் நடுவே இருந்த மேன்-ஹோலைத் திறந்து உள்ளே திணித்து மூடினான். ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

(3) இரவு பன்னிரெண்டு மணி. மத்திய சிறைச்சாலை. சிறை சூப்பிரண்டெண்டுக்கு முன் ஜெயிலர், வார்டன். கலவர முகங்கள். ‘‘பூபதி தப்பிச்சுட்டானா?’’ ‘‘ஆமா ஸார். எப்படின்னு தெரியலை’’

(4) ‘‘ஸார், டெலிகிராம்’’ குரல் கேட்டுக் கொட்டாவி‌யோடு கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த சேதுவின் மார்பில் தோட்டா பாய்ந்து அவரை உடனடியாகச் சாய்த்தது.

(5) ஊருக்கு வெளியே இருட்டில் மயானம். சுண்ணாம்புப் பூச்சோடு சமாதிகள் தெரிய, கிழக்குப் பக்க சமாதியில் ஓர் உருவம் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தது. வானத்தில் உடைந்த நிலா. சிதறிய நட்சத்திரங்கள்.

(6) காலை ஐந்தரை மணி. ஜட்ஜ் பிரகாசம் மார்னிங் வாக் போக வெளியே வந்தார். வேகமாய் நூறு மீட்டர் தூர நடை. அவர் அந்த மரத்தைக் கடந்ததும் அதன் பின்னிருந்து வெளிப்பட்டான் அவன். சுட்டான். ஜட்ஜ் பின்பக்கமாய் மடங்கி விழ, சுட்டவன் பக்கத்தில் வந்து அவருடைய நெஞ்சை மிதித்து, துடித்துக் கொண்டிருந்த உயிரை நிறுத்தினான்.

(7) சரோஜா பயமாய் அவனை ஏறிட்டாள். ‘‘நீ அவசரப்பட்டுட்டே செல்வம்...’’ என்றாள். ‘‘ஊ...ஹும்... நான் எடுத்த முடிவு சரிதான்...’’ என்றான் அவன்.

(8) ‘‘ராத்திரியில் நாலு கொலை. இன்ஸ்பெக்டர் சுகுமார், பப்ளிக் பிராசிக்யூட்டர் நாகராஜ், ஸாடாக் விட்னஸ் சேது, ஜட்ஜ் பிரகாசம் -ஒரே மாதிரி சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்காங்க’’ போலீஸ் கமிஷனர் பெருமூச்சு விட்டார்.

(9) ஜெயில் சூப்பிரண்டெண்ட் ஜீப்பில் தாவி ஏறினார். ஜெயிலர் ஓடி வந்தார். ‘‘ஸார்....’’ ‘‘என்ன..?’’ ‘‘தப்பின கைதி பூபதி போன் பண்ணியிருந்தான். அவனைத் தேடறதை நாம நிறுத்தணுமாம். இல்லேன்னா உங்க கர்ப்பிணிப் பொண்ணைச் சுட்டுக் கொல்வானாம்.’’ ‘‘என்னோட இருபத்தஞ்சு வருஷ சர்வீஸ்ல எந்தக் கைதியையும் தப்பிப் போக விட்டதில்லை. என் கர்ப்பிணிப் பொண்ணை அவன் சுட்டாலும் சரி, அவனைப் பிடிக்காம நான் வரப் போறதில்லை’’ -சொன்ன ஜெயில் சூப்பிரண்டெண்ட் ஜீப்பை விரட்டினார்.

(10) டி.எஸ்.பி. அதிர்ச்சியாய் கமிஷனரை ஏறிட்டார். ‘‘தப்பியோடின கைதி பூபதி ஒரு மரண தண்டனைக் கைதியா...?’’ ‘‘ஆமா ஸார். வர்ற பத்தாம் தேதி அவனைத் தூக்கிலே போடறதா இருந்தது.’’

(11) ‘‘என்னாச்சு...?’’ டி.ஜி.பி. கேட்டார். ‘‘ஆள் கிடைக்கலை ஸார்...’’ ஜெயில் சூப்பிரண்டெண்ட் முனகினார். ‘‘ரிடையராக ரெண்டு மாசம் இருக்கும் போது உங்க சர்வீஸ்ல இப்படி நடந்திருக்க வேண்டாம்.’’ ‘‘ஸார்... ஷுட் அட் ஸைட் ஆர்டர் எனக்கு வேணும்...’’ ‘‘கிராண்டட். அந்தப் பூபதியைப் பார்த்த நிமிஷமே சுட்டுத் தள்ளுங்க...’’

(12) ‘‘ஹலோ... போலீஸ் ஸ்டேஷன்?’’  ‘‘ஆமா...’’ ‘‘கார்ப்பரேஷன் எருக் கிடங்கு லாரியில் ஒரு டெட்பாடி...’’ போலீஸ் போய்ப் பார்த்தார்கள். ஒரு நிர்வாணப் பெண்- உடம்பில் தோட்டா. ஒரு கான்ஸ்டபிள் கத்தினார். ‘‘ஸார்! இது சரோஜா. பூபதியோட காதலி!’’

(13) ராத்திரி ஒரு மணி. மயானத்துக்குக் கொஞ்சம் தள்ளி ஜீப்பை நிறுத்தி, ஜெயில் சூப்பிரண்டெண்ட் இறங்கினார். உடன் வந்த ஜெயிலரைக் கூப்பிட்டார். ‘‘விக்டர்...’’ ‘‘ஸார்...’’ நீங்க மயானத்தை இடப்பக்கமாச் சுத்திட்டு வாங்க... நான் வலது பக்கமாச் சுத்திட்டு வர்றேன்...’’

(14) சமாதிக்கு மத்தியிலிருந்து அவன் எழுந்தான். ஜீ்ப்பிலிருந்து இறங்கி நடக்கிற ஜெயில் சூப்பிரண்டெண்டையும், ஜெயிலரையும் பார்த்தான்.

(15) ஜெயில் சூப்பிரண்டெண்ட் மெதுவாய் நடந்து மயானத்திற்குள் நுழைந்து இடிந்த அந்தப் பழைய கட்டிடத்துப் பக்கமாய்ப் போனார்.

(16) கட்டிடத்துக்குள் மறைந்திருந்த அவன் சுவரில் முதுகைத் தேய்த்துக் கொண்டு அசையாமல் அப்படியே நின்றான்.

(17) ஜெயில் சூப்பிரண்டெண்ட் கட்டிடச் சுவரை நெருங்கியதும் மெல்லக் கூப்பிட்டார். ‘‘பூபதி!’’ ‘‘ஐயா...’’ ‘‘உன் லிஸ்ட்ல இருக்கற எல்லாரையும் முடிச்சுட்டியா?’’ ‘‘முடிச்சுட்டேன்யா. லட்சக்கணக்கில் பணம் தர்றவங்களுக்கு சாதகமாக தீர்ப்பை சொல்லிட்டு வந்த நீதிபதி பிரகாசம், பொய் சாட்சிகளை உருவாக்கி நிரபராதிகளை தூக்குக்கு அனுப்பிட்டிருந்த பப்ளிக் பிராசிக்யூட்டர் நாகராஜ், ப்ராடு இன்ஸ்பெக்டர் சுகுமார், பொய்சாட்சி சொல்றதுக்காகவே அவதாரம் எடுத்த சேது, என்மேல கொலைப் பழியைச் சுமத்திட்டு அப்பாவி மாதிரி நடிச்ச சரோஜா... எல்லாரையும் முடிச்சுட்டேன்யா. செய்யாத கொலைக்கு தூக்குல தொங்கணுமேன்னு நினைச்சேன்... இப்ப மனசு திருப்தியா இருக்குய்யா. ஊருக்கு ஒரு நல்ல காரியம் பண்ணின திருப்தி இருக்கு.’’ ‘‘நான் கொடுத்த துப்பாக்கி எங்கே?’’ ‘‘அதை ஆழமாக் குழி தோண்டிப் புதைச்சுட்டேன்யா...’’ ‘‘குட்..! உன்னைக் கண்டதும் சுடறதுக்கான ஆர்டரோட இப்ப வந்திருக்கேன். எனக்குப் பயந்து ஓடற மாதிரி ஓடு. சுட்டுத் தள்றேன்...’’ ‘‘சந்தோஷம்ய்யா...’’ அவன் இருட்டிலிருந்து வெளிப்பட்டு ஓடினான்.

(18) ஜெயில் சூப்பிரண்டெண்ட் வேண்டுமென்றே கத்தினார். ‘‘பூபதி... ஓடாதே...!’’ அவன் ஓடினான். ‘‘ஜெயிலர், கம் திஸ் ஸைட்..!’’ சூப்பிரண்டெண்ட் குரல் கொடுக்க, ஜெயிலர் மறு பக்கத்திலிருந்து ஓடி வந்தார். ஜெயிலரைச் சாட்சியாக வைத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்த பூபதியை நிம்மதியாய்ச் சுட்டார் சூப்பிரண்டெண்ட். பூபதி சந்தோஷமாய் தோட்டாவை மார்பில் வாங்கிக் கொண்டு சரிந்தான். திருப்தியோடு உயிரை விட ஆரம்பித்தான்.

மேய்ச்சல் மைதானத்தில் இப்போது - பேசும் ஓவியங்கள்!

Wednesday, July 4, 2012

நடை வண்டிகள் - 24

Posted by பால கணேஷ் Wednesday, July 04, 2012

கடுகு அவர்களும் நானும் - 2

சுபாவின் வீட்டிற்குச் சென்றிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் பேசிக் கொண்டிருந்த போது பாலா கேட்டார். ‘‘கடுகு என்கிற எழுத்தாளரை உங்களுக்குத் தெரியுமா?’’ என்று. ‘‘கடுகு என்கிற அகஸ்தியன் என்கிற பி.எஸ்.ரங்கநாதன் எழுதிய கதை, கட்டுரைகளை படிச்சிருக்கேன் ஸார்’’ என்றேன். ‘‘அவர் உங்களைப் பார்க்கணும்னு விரும்பறார்...’’ என்ற பாலா, கடுகு ஸாருக்கு போன் செய்து பேசினார். ‘‘ஸார்! கணேஷ் வந்திருக்கார். உங்களை அறிமுகம் செய்ய வேண்டிய தேவையே இல்ல எனக்கு. உங்க கதைகள் நிறையப் படிச்சிருக்காராம். புனைபெயர், அசல் பெயர் எல்லாம் சொல்றார். இப்ப அங்க வரச் சொல்லட்டுமா?’’ என்று கேட்டார்.

அவர் போனை வைத்ததும் கேட்டேன்- ‘‘ஸார்! அவர் டெல்லில இல்ல இருக்கார்? எப்படிப் போய் பார்க்க?’’ என்று. ‘‘டெல்லியில இருந்து எப்பவோ சென்னைக்கு வந்தாச்சு. பக்கத்துல சாஸ்திரி நகர்லதான் இருக்கார். வழி சொல்றேன்’’ என்று ஒரு பேப்பரில் அட்ர‌ஸை எழுதி, வழியும் பேப்பரில் வரைந்து காட்டினார்.

பாலா ஒரு இடத்துக்கு வழி சொல்கிறார் என்றால் பள்ளிச் சிறுவன்கூட எந்தக் குழப்பமும் இன்றி அந்த இடத்தை அடைந்துவிட முடியும். அவர் விளக்குவதும், எழுதுவதும் அவ்வளவு தெளிவாக இருக்கும். எனவே, எந்தக் குழப்பமும் இன்றி நான் கடுகு ஸாரின் வீட்டைச் சென்றடைந்து காலிங் பெல்லை ஒலிக்க விட்டேன்.

ஓவியர் நடனம் வரைந்த ‘கடுகு’
அவர் வீட்டு்க் கதவில் ‘உயர்வு அற உயர்நலம் உடையவன் எவன்? அவன்’ என்று துவங்கும் பாசுரத்தை ஒட்டி இருந்தார். அதுவே எனக்குப் பிடித்திருந்தது. மணி ஒலித்ததும் ஒல்லியான தேகத்துடன், புன்னகை முகத்துடன் கடுகு ஸார் கதவைத் திறந்து வரவேற்றார் என்னை. ‘‘சுபா நிறைய சொல்லியிருக்காங்க உங்களைப் பத்தி. இப்ப என்ன பண்ணிட்டிருக்கீங்க?’’ என்று கேட்டார்.

நான் ‘கல்யாணமாலை’யில் வேலை பார்ப்பதைச் சொல்லி விட்டு, ‘‘நான் சின்னப் பையனா இருந்தப்பவே உங்க கதைகள் நிறையப் படிச்சிருக்கேன் ஸார். உங்க எழுத்து எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா, எல்லாம் வாரப் பத்திரிகைகள்ல படிச்சதுதான். லைப்ரரி எடிஷனா எதுவும் படிச்சதில்ல. ‘கமலாவும் கத்தரிக்காய் கூட்டும்’னு ஒரே ஒரு புத்தகம் மட்டும் கிடைச்சது. வாங்கி்ப் படிச்சேன்.’’ என்றேன்.

உள்ளே திரும்பி கமலா அம்மாவுக்குக் குரல் கொடுத்தார். ‘‘கமலா... இங்க பாரேன்... இவர் ‘கமலாவும் கத்தரிக்காய் கூட்டும்’ புத்தகத்தை காசு கொடுத்து வாங்கிப் படிச்சிருக்காராம். ஐயோ பாவம்...’’ என்றார் சந்தோஷமாக. ‘‘நந்தினி பப்ளிகேஷன்ஸ்னு போட்டு ஏதோ அட்ரஸ் கொடுத்திருந்தாங்க. வேற எதுவும் உங்களோட புத்தகம் போட்ருக்காங்களான்னு விசாரிச்சு வாங்கலாம்னு இருக்கேன் ஸார்’’ என்றேன்.

‘‘நந்தினி பப்ளிகேஷன்ஸ்லதான் இப்ப நீங்க இருக்கீங்க. நான்தான் பப்ளிஷ் பண்ணிட்டிருக்கேன்.’’ என்று சொல்லி, இன்னும் மூன்று புத்தகங்களை எடுத்துக் காட்டினார். அகஸ்தியன் நாவல்கள், கேரக்டர், மிஸ்டர் பஞ்சு ஆகிய அந்த மூன்று புத்தகங்களில் கேரக்டர் மற்றும் அகஸ்தியன் நாவல்கள் நான் பத்திரிகைகளில் படித்தவை என்றும், மிஸ்டர் பஞ்சு மட்டும் நான் படிக்கத் தவறிய கதை என்றும் அவரிடம் தெரிவித்தேன்.

அந்த மூன்று புத்தகங்களையும் நான் எடுத்துக் கொள்வதாகச் சொல்லி அதற்குரிய தொகையை மனக் கணக்காக கூட்டத் தொடங்கினேன். அவரோ, ‘‘எடுத்துக்கங்க. பணம் எதுவும் தர வேண்டாம்’’ என்று ஒரு கவரில் போட்டுக் கையில் கொடுத்தார். ‘‘மூணு புத்தகத்துக்கும் பணம் கொடுத்து வாங்கலாம்னு நினைச்சோமே... அன்பளிப்பாவே தந்துட்டாரே இந்த அப்பாவி எழுத்தாளர்’’ என்று நான் மனதில் நினைத்தது நமக்குள்ளேயே இருக்கட்டும், கடுகு ஸாருக்குத் தெரிய வேண்டாம்.

‘‘இது தவிர வேற எதுவும் பப்ளிஷ் பண்ணப் போறீங்களா ஸார்?’’ என்று கேட்டேன். ‘‘ஆமா. ஐயோ பாவம் கடுகுன்னு... ஸாரி, ஐயோ பாவம் சுண்டுன்னு ஒரு கதை ப்ரிண்டிங்ல இருக்கு. படிச்சிருக்கீங்களா?’’ என்று கேட்டார். ‘‘படிச்சதில்லையே ஸார்...’’ என்றேன். ‘‘சர்க்கஸ் பேக்ரவுண்ட்ல நான் எழுதினது. புத்தகம் ரெடியானதும் உங்களுக்குத் தர்றேன்’’ என்றார்.

‘‘கடுகுன்னா தினமணி கதிர்ல உங்க கதைகளுக்கு கார்ட்டூனா கூர் மூக்கோட ஓவியங்கள் வருமே... அதான் ஸார் நினைவுக்கு வருது எனக்கு உங்க வீட்டுக் கதவுலகூட அதை ஒட்டியிருக்கீங்க’’ என்றேன். ‘‘அது நடனம்ங்கற ஓவியர் வரைஞ்சது...’’ என்றார். ‘‘நடனம் ஸார் எனக்குப் பழக்கமானவர்தான் ஸார். ‘கல்யாணமாலை’க்கு என்னை சிபாரிசு பண்ணினவரே அவர்தான்...’’ என்றேன் ஆச்சரியமாக. ‘‘அப்படியா... ஸர்ப்ரைஸ்தான். எல்லாரும் சுத்தி ஒரு வட்டத்துக்குள்ளயே வர்றோம்’’ என்றார். இப்படி இன்னும் நிறைய விஷயங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு விடைபெற்றேன்.

-இது எங்களுடைய முதல் சந்திப்பு. இரண்டாவது சந்திப்பில் கடுகு ஸாரைப் பற்றிய வியப்பான விஷயம் ஒன்றை அவர் மூலமாகவே தெரிந்து கொண்டேன். மூன்றாவது சந்திப்பிலோ... சுலபத்தில் யாரும் செய்யாத ஒரு செயலை எனக்காகச் ‌செய்தார் அவர். அந்த சந்திப்புகளைப் பற்றி....

                                                                                       -தொடர்கிறேன்...

இடையிடையே கடுகு அவர்களின் துணுக்குகள் இருந்தால் சொருகி விடுங்கள் என்று கேட்ட நண்பர் மதுமதிக்காக... கடுகு அவர்கள் தினமணி கதிரில் எழுதிய ஒரு துணுக்கு :

==================================================================

ஆக,19, சென்னை பதிவர் சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல் :


கவியரங்கத்தில் பங்கு கொள்ள விரும்பும் நண்பர்கள், மதுமதி (தூரிகையின் தூறல்)  அவர்களை 9894124021 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பங்களிப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.வாசிக்கப்படும் கவிதைகள் முப்பது வரிகளுக்கு மிகாமல் இருத்தல் நலம். குலுங்கட்டும் சென்னை 19-08-2012 அன்று பதிவர்களின் உரத்த குரலால்!

==================================================================

மேய்ச்சல் மைதானத்தில் இப்போது - கத்தரித்தவை-6

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube