சமீபத்தில் விஷால் நடித்து ‘நான் சிகப்பு மனிதன்’ என்றொரு படம் வந்திருக்கிறது, பார்த்தீர்களா? அதில் ‘நார்கோலெப்சி’ என்கிற வியாதியால் பாதிக்கப்பட்டவராக அவரைக் காட்டியிருப்பார்கள். அதாவது கோபம், சந்தோஷம் போன்ற உணர்ச்சிகள் தாக்கினால் தூங்கத் தொடங்கி விடுவார். அதுபோல ‘புததகாலெப்சி’யால் பாதிக்கப்பட்ட நிறையப் பேரை நான் பார்த்திருக்கிறேன். அதாகப்பட்டது... ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு சில பக்கங்களைப் படித்தால் போதும்... கண்களைச் சுழற்றிக் கொண்டு தூக்கம் வந்து உறங்கத் தொடஙகி விடுவார்கள். சிலசமயம் அந்தப் புத்தகங்களின் மேலேயே விழுந்துகூட... இதைத்தான் ‘விழுந்து விழுந்து படிக்கிறான்’ என்று சொல்வார்களோ என்றுகூட எனக்கொரு சந்தேகம் உண்டு ஸ்வாமி. ஹி... ஹி... ஹி...!
‘அவர்கள் அப்படித் தூங்கினால் உனக்கென்னய்யா பிரச்னை?’ என்று கேட்பீராயின்... அது நான் இரவல் தந்த புத்தகமாக இருந்து என்னிடம் திரும்பி வருமபோது அதன் கதியைப் பார்த்தால் பணம் கொடுத்து வாங்கிய என் கண்ணீரில் ரத்தமே வரத்தானே செய்யும் ஐயா...? புத்தகங்கள் வாங்குவதற்கு மூக்கால் அழுது கொண்டே பணம் தந்தவர்கள் - முன்பு அண்ணி, இப்போது மனைவி - நான் கண்ணால் ஜலம் விட்டு அழுவதைச் சகிப்பரோ? அதிலும் புத்தகத்தைக் கையில் எடுத்துவிட்டால் வருகிற தூக்கமும் பறந்து விடுகிற என் குணவிசேஷத்தைப் புரிந்தவர்களாயிற்றே...!
இந்த இரவல் வாங்குகிற பேர்வழிகளிடம் இன்னொரு பொதுப் பழக்கமும் உண்டு. புத்தகத்துடனேயே புக் மார்க் வைத்துக் கொடுத்தாலும்கூட அதை உதாசீனம் செய்து, தான் அதுவரை படித்த பக்கத்தை முக்கோணமாக மடித்து வைத்து விட்டு பிறிதொரு சமயம் எடுத்துப் படிப்பதில் அப்படியொரு ஆனந்தம். என்னுடைய பல புத்தகங்கள் இத்தகைய ஆசாமிகளால் ஓரங்களில் ரணகாயப்பட்டு, நான் படிக்கையில் முக்கோணங்களாக உதிர்ந்து சிற்சில வார்த்தைகளும் அத்துடன் கிழிந்து போய்... போகையில் பயில்வான் ரங்கநாதன் மாதிரி ஸ்ட்ராங்கர்க இருந்த அவை திரும்புகையில் ஓமக்குச்சி நரசிம்மனாக மாறியல்லவா வருகின்றன?
“உங்களுக்கு புத்தகம் படிக்கிற பழக்கம் எப்போதிருந்து ஏற்பட்டது?” என்று யாரையேனும் கேட்டுப் பாருங்கள்... ‘காலேஜ் டேஸ்லயிருந்து’ அல்லது ‘ஸ்கூல் டேஸ்லருந்து’ என்பார்கள். உண்மையில் புத்தகம் படிக்கும் பழக்கம் இன்றைய எல்,கே,ஜி (அ) அன்றைய முதல் வகுப்பிலிருந்தேயல்லவா ஆரம்பிக்கிறது? பாடப் புத்தகங்களை எல்லாம் யாரும் புத்தகக் கணக்கில் சேர்ப்பதில்லை போலும்... என்ன கொடுமை சரவணன்? நான் சொல்ல வந்த ஒரு விஷயத்தை விண்டுரைத்துவிட்டு மற்றதற்குப் போகலாம், ஒரு புத்தகம் என்னவெல்லாம் மாயம் செய்யும் தெரியுமா...? அறிஞர் அண்ணா போன்ற மேதைகள் படித்த புத்தகங்கள் அவர்களின் அறிவை வளர்த்திருக்கின்றன... அதைப் போல இன்றும் பலர் பலன் பெற்றிருக்கக் கூடும். ஆனால் நான் சொல்வது பொதுவான வெகுஜன மக்களைப் பற்றி ஐயா... நானறிந்த வரையில் ஒரு மனிதனைப் பொய் சொல்ல வைக்க புத்தகங்களைப் போன்ற சிறந்த சாதனம் வேறு ஒன்றில்லை.
புத்தகங்களைப் படித்து ரசித்துவந்த நான் அத்துடன் நின்றிருக்கலாம். விதி யாரை ஐயா விட்டது...? ‘சரிதாயணம்’ என்ற புத்தகத்தை நாஆஆனே எழுதி வெளியிட்டேன். அதைக் கடைகளில் விறறதைத் தவிர சில வி.ஜ.பி.க்களிடமும் நண்பர்களிடமும் தந்து படித்துவிட்டு கருத்துச் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தேன். நண்பர்களில் சிலர் (வேறுவழி? அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கே!) படித்துவிட்டு கருத்துச் சொன்னார்கள்.. மற்றையோரெல்லாம்... “எங்க ஸார்...? டயமே கிடைக்கறதில்லை... அடுத்த மாசம் என் சித்தி பெண் கல்யாணம் வருதில்ல... அது முடிஞ்சதும் தான் படிக்கணும்...” என்றும் அடுத்த மாதம் ச்ந்தித்தால், “எலெக்ஷன் டூட்டி போட்ருக்கான் பிரதர்... நீங்க நல்லா எழுதியிருப்பீங்க(?) அதனால் இந்த அமளியெல்லாம் ஓய்ஞ்சதும் படிக்கலாம்னு இருக்கேன்” என்றும் விதவிதமாகப் பொய் சொல்கிறார்கள். மற்றும் சிலரோ... “உங்க புத்தகத்தை எங்க பெரியப்பா வாங்கிண்டு போனார். படிச்சுட்டு ரொம்ப நல்லாருக்குன்னு அவரோட ஒண்ணு விட்ட தம்பியோட மச்சினருக்கு படிக்கக் கொடுத்திருக்காராம். வந்ததும் படிக்கணும்” என்பர்.. இவ்விதம் டிசைன் டிசைனாக பொய்களைக் கேட்டாலும், இப்படியாவது என் புத்தகம் ஊர் சுற்றுகிறதே என்று (அல்ப) திருப்திப்பட்டுக் கொள்கிறேன் நான்,
எழுத்தாளர் ராஜேஷ்குமாரிடம் நண்பனாகப் பழக ஆரம்பித்த புதிதில் ஒருமுறை அவரிடம். ”உங்களோட ‘எவரெஸ்ட் தொட்டுவிடும் தூரம்தான்’ புக் ஒண்ணு கொடுங்க ஸார்... படிச்சுட்டுத் தரேன்” என்றேன். அவர். “என்கிட்ட அதோட காப்பி ஒண்ணுகூட இல்ல கணேஷ். ரிலேடிவ்ஸும் ப்ரண்ட்ஸும் படிக்க கேக்கறப்ப குடுததுடறேன். என்கிட்ட புத்தகம் வாங்கிட்டுப் போனவர்கள் வாங்கிட்டுப் போனவர்களே... ஒண்ணுகூட திரும்பி வந்ததில்லை” என்றார். புத்தகங்களைப் படிக்க வாங்கிச் சென்று அதைச் சொந்தமாக்கிக் கொள்வதில் இருக்கும் குஷி என்னவாக இருக்கும் என்பது எனக்குப் புரியத்தான் இல்லை. பின்னாளில் என்னிடம் சாண்டில்யனின் ‘நீலரதி’ நாவலை இரவல் வாங்கிச் சென்ற ஒரு நண்பரை தொடர்ந்த (அவரின்) வெளியூர்ப் பயணங்களால் அடுத்த ஆண்டுதான் சந்திக்க நேர்ந்தது. அப்போது புத்தகங்களைப் பற்றி பேச்சு வருகையில். “நல்ல நல்ல புத்தகங்கள்தான் ஸார் நம்ம சொத்து. நான் நிறையச் சேத்து வெச்சிருக்கேன், நீங்க சாண்டில்யனோட ‘நீலரதி’ படிச்சிருக்கீங்களோ... சூப்பரான கதை. என்கிட்ட இருக்கு. வேணா எடுத்துட்டுப் போயி படிங்க” என்றார் கூலாக. அவ்வ்வ்வ்! அந்த பிரகஸ்பதி புத்தகத்தை இரவல் வாங்கினதையே மறந்துடுச்சா. இல்ல... பண்ணன்டு வருஷம் (தானே?) குடியிருந்தா அவனுக்கே வீடு சொந்தம்னு சொல்ற மாதிரி ஒரு வருஷம் தன்கிட்ட இருந்ததால தன் புத்தகமா கன்வர்ட் பண்ணிக்கிச்சோ தெரியல....
இப்படி எந்தப் புத்தகத்தையும் படிக்காமலேயே படித்ததாக பீலா விட்டுக் கொள்வதற்காக இரவல் புத்தகங்களாக தன் மேஜையில் அடுக்கி வைத்திருக்கும் பேர்வழிகள் ஒரு ரகம் என்றால்... புத்தகங்களை விற்பனை செய்பவ்ர்கள் இருக்கிறார்களே... அவர்கள் தனிரகம். நிலையான ஒரு வேலை இல்லாமல் மதுரையில் வாழ்ந்த நாளில் பணப்பற்றாக்குறை நிரந்தரம் என்கிற காரணத்தால்.. நியூசினிமாவுக்குப் பின்புறம் உள்ள சந்தில் போய் பழைய புத்தகங்களை வாங்கி வாசிக்கும் பழக்கத்தை கைக்கொண்டிருந்தேன். அந்தப் புத்தகம் விற்கும் ஆசாமிகள் இருக்கிறார்களே... புததகங்களை மட்டுமா எடை போடுகிறார்கள்..? ஓரிரு முறை சென்று வந்ததிலேயே என்னைக் கண்டதும். என் ரசனைக்குத் தீனி போடும் புத்தகங்களை தனியாக எடுத்துக் கைகளில் திணிப்பார்கள். வாங்காமல் வர முடியாது உண்மையில் அரிய பல பொக்கிஷப் புத்தகங்களை அங்கிருந்து நான் கைப்பற்றியிருக்கிறேன். இன்றைக்கு அந்தக் கடைகளெல்லாம் வழக்கொழிந்து விட்டன - வாரப்பத்திரிகைகளில் தொடர்கதைகள் வழக்கொழிந்து விட்டதைப்போல!
புத்தகங்களை இரவல் வாங்கிப் படிக்கின்ற சுகத்தை யானும் அனுபவிக்க வேண்டி நண்பர்களிடமிருந்து ஓரிரண்டு புத்தகங்களை வாங்கி வந்ததுண்டு. அதென்னமோ எனக்கென்று ஒரு ராசி பாருங்கள்... நான் கொடுக்க வேண்டியவர்களெல்லாம் கரெக்டாகக் கேட்டு வாங்கி விடுகிறார்கள்... எனக்குக் கொடுக்க வேண்டியவர்கள் மட்டும் கொடுக்கிறார்கள் - அல்வா! அவ்வ்வ்வ்! போகட்டும்... அவர்களால் அல்லவோ ‘புத்தகத்தை வாங்கினா ஒழுங்காப் படிச்சுட்டுக் கொடுத்துடுவான் கணேஷ்’ என்கிற நற்பெயரைப் பெற்றிருக்கிறேன். அதற்காகவேனும் அவர்கள் மகாராஜன்களாக இருக்கட்டும்!
மேற்சொன்ன விஷயங்களெல்லாம் ஒருபுறம் இருக்க... புத்தகங்களால் அவை படிக்கப்படுபவருக்கு உதவுவதைத் தவிர பிஸிக்கலாக என்னென்ன உபயோகங்கள் இருக்கின்றன தெரியுமா..? சுமார் அறுநூறு பக்கங்கள் உள்ள ஒரு புத்தகத்தை அதன் மேலே துண்டை விரித்து என் நண்பர் ஒருவர் தலையணையாகப் பயன்படுத்தி அனந்த சயனத்திலிருக்கும் பெருமாள் போலப் பள்ளி கொண்டதை நான் கண்டதுன்டு. பிறிதொரு சமயம் அதேபோன்ற கனமானதொரு புத்தகத்தை ஏவுகணையாகப் பயன்படுத்தி சரிதா என்னைத் தாக்கியபோது அதிலிருந்து நான் தப்பியதுண்டு, ஒருசிலரோ... காகிதங்கள் பறக்காமலிருக்க புத்தகங்களை பேப்பர் வெயிட்டாகக் கருதி உபயோகப்படுத்தியதையும் கண்டதுண்டு. சமீபத்தில் என் நண்பரொருவர் வீட்டிற்குச் சென்றபோது புத்தகங்களின் மற்றொரு பயனையும் கண்ணாரக் கண்டு ஆனந்திக்க நேர்ந்தது ஐயா... அவர் அமர்ந்திருந்த சேருக்கு எதிரில் கம்ப்யூட்டர் இருந்த டேபிளின் நான்கு கால்களில் ஒன்றின் கீழ்ப்புறம் உடைந்து விட்டிருக்க... அதற்கு நான்கு புத்தகங்களை வைத்து அண்டைக்கொடுத்து நாற்காலியை நிமிர்த்தி வைத்திருந்தார் நண்பர்! அவ்வ்வ்வ்!
புததகங்கள் பற்றிப் பேச ஆரம்பித்தால் நாளெல்லாம் புலம்ப, ஸாரி, பேசக் கூடிய ஆசாமி நான்,. ஆனால் நீங்கள் பொறுமையிழந்து புத்தகத்தாலேயே அடிக்கக்கூடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
ஊசி (பின்) குறிப்பு : தற்சமயம் தேவன் அவர்கள் எழுதிய புத்தகம் ஒன்றைப் படித்து வருகிறேன். அதில் அவர் எழுதியிருப்பது போன்ற அக்கால நடையிலேயே ஒரு கட்டுரை எழுதிப் பார்த்தாலென்ன என்ற (விபரீத) ஆசையின் விளைவே மேலே நீங்கள் படித்தது. கான தேவனாடக் கண்ட வான்கணேஷ்! ஹி.... ஹி... ஹி...!