சரித்திரம், பேன்டஸி, ஆன்மீகம் என்று ஏதாவது ஒரு பின்புலத்தில் மர்மத்தைக் கலந்து காக்டெய்ல் நாவல்களைத் தந்துவரும் இனிய நண்பர் காலச்சக்கரம் நரசிம்மாவின் 8வது நாவலாக ‘காமதேனுவின் முத்தம்’ இப்போது வெளியாகி உள்ளது. இது காதல் + பேன்டஸி + மெலிதான மர்மம் கலந்த காக்டெய்லாக வந்திருக்கிறது. நியாயமாகப் பார்த்தால் ‘காமதேனுவுக்கு முத்தம்’ என்றுதான் அவர் டைட்டில் வைத்திருக்க வேண்டும். ஹி... ஹி... காமதேனு முத்ததைப் பெறுகிறாளே அன்றி அவள் தரவில்லை. சரி, அதை விடுங்கள். நாவல் படிக்க சுவாரஸ்யம் தந்ததா? இல்லையா என்பதைப் பார்க்கலாம்.
கதை இரண்டு ட்ராக்குகளாகச் சொல்லப்படுகிறது. கோவூரில் வசிக்கும் பாண்டி சகோதரர்களின் குடும்பம் பற்றிய கதை ஒரு ட்ராக்கிலும் சென்னையில் வசிக்கும் தொழிலதிபர் நித்யமூர்த்தி, அவர் மகள் சுபாங்கி, டாக்டர் நரேந்திரநாத், அவரின் அக்கா அம்சா ஆகியோர் அடங்கிய ஒரு ட்ராக்கிலும் சொல்லப்பட்டு, நாவலின் பிற்பகுதியில் அழகாக இரண்டையும் ஒன்றிணைத்திருக்கிறார்.
கோவூரில் பாண்டி என்ற பொதுப்பெயர் கொண்ட சகோதரர்கள் குடும்பத்துப் பெண் கர்ப்பம் தரிப்பாளேயாகில் சுபகாயை தினத்தன்று அவள் கண்களுக்குக் காமதேனு காட்சி தருவாள். அப்படிக் காட்சி தந்தால் பிறக்கும் குழந்தை காமதேனுவின் அம்சமாகப் பிறக்கும். காமதேனு வாழுமிடத்தில் சகல சௌபாக்கியங்களையும் தரும் என்பதால் அவர்கள் குடும்பம் செழித்து வளரும் என்பது நம்பிக்கை. கடைசிப் பாண்டியின் மனைவி தமயந்தி காமதேனுவைப் பார்த்துவிட, அவளுக்குத் தரப்பட்ட எச்சரிக்கையையும் மீறி தன் குடும்பத்தினரிடம் பார்த்ததைச் சொல்லிவிட, துவங்குகிறது வினை. ‘சின்னத்தம்பி’ பட குஷ்பூ போல சதாசர்வ நேரமும் பாடிகார்டுகள் சூழ, தெய்வக் குழந்தை வளர்க்கப்பட்டு தெய்வக் குமரி ஆகிறாள்.
ஆண் சம்பந்தம் ஏற்பட்டாலே தெய்வத்தன்மை போய்விடும் என்கிற நிலையில் அதை ஏற்படவிட யாருக்குத்தான் மனம் வரும்? பாண்டி சகோதரர்களின் தங்கை காமதேனுவின் அம்சமாகப் பிறந்தவள் என்பதையும், அவள் என்னவானாள் என்பதே தெரியாது என்கிற நிலையும், மாமியார் தற்போது பைத்தியமாக இருப்பதும் தமயந்தியைக் கலங்கடிக்கின்றன. அப்புறம் என்ன ஆனது..? இந்தக் காமதேனுப் பெண்ணின் சக்திகள் என்ன செய்தன? அவள் சாதாரணப் பெண்ணாக வாழ முடிந்ததா? தேனுவுக்கு முத்தம் தந்த அந்தக் காமன் யார்? சென்னைக் குடும்பம் எந்த வகையில் இவர்களுடன் தொடர்புபடுகிறது? இப்படிப்பட்ட கேள்விகளையெல்லாம் எழுப்பிவிட்டு அந்த முடிச்சுகளை சுவாரசியம் குறையாமல் அவிழ்த்திருக்கிறார் நரசிம்மா. (இதற்குமேல் எதைச் சொன்னாலும் அவர் வைத்திருக்கும் முடிச்சுகள் அவிழ்ந்து படிக்கிற சுவாரசியம் போய்விடும் என்பதால் அடக்கி வாசிக்கிறேன்.)
காதல் இந்தக் கதையில் மூன்று விதங்களில் சொல்லப்பட்டு அலசப்பட்டிருக்கிறது. சந்தீப்பின் மீது சுபாங்கிக்கு வரும் காதல் டிபிகல் தற்கால அவசரயுகக் காதலைக் கண்முன் வைக்கிறது. டாக்டர் நரேந்திரன் ரேணுகா மீது கொண்ட காதல் அன்றும் இன்றும் என்றும் அரிதான வகையில் உள்ள தெய்வீகமான காதலைக் காட்சிப்படுத்துகிறது. தேனுகாவின் மேல் காமேஸ்வரனுக்கு வரும் காதல் உணர்வுகளுடன், அறிவுபூர்வமாகச் சிந்திக்கிற காதலாக ப்ராக்டிகல் காதல் என்ற வகையில் காட்டப்படுகிறது. மூன்றையும் ஒப்பிட்டுப் பார்த்தபடி படித்தோமானால் இரண்டு, மூன்று, ஒன்று என்று வகைப்படுத்தத் தோன்றும். மூன்றுமே உணர்வுபூர்வமாக ரசிக்கும்படி எழுதப்பட்டிருப்பது நரசிம்மாவின் திறமைக்குச் சான்று.
காமதேனுவின் சக்திகள் என்னவெல்லாம் செய்யும்? அது போய்விட்டால் என்னவெல்லாம் நிகழும் என்வற்றை நரசிம்மா காட்சிப்படுத்தியிருக்கும் விதம் பிரமிக்க வைத்தது. அதேபோல்தான் டாக்டர் நரேந்திரன் எந்த வகையில் பாண்டி குடும்பத்தாருடன் சம்பந்தப்படுகிறார் என்பதற்கு அவர் வைத்திருந்த திருப்பமும். ஆனால் க்ளைமாக்ஸ் நெருங்குகையில் நரேந்திரனும், அம்சாவும் மருத்துவமனையில் என்ன செய்கிறார்கள் என்பதை யூகித்துவிட முடிந்தது. (டோண்ட் வொர்ரி நரசிம்மா சார். எளிய வாசகனால் அத்தனை சுலபமாக யூகித்துவிட முடியாது.) என்றாலும் அடுத்தடுத்த திருப்பங்கள் அபாரமானவை.
அழகர் கோடங்கி, காசிலிங்கம் மாமா, செக்யூரிட்டிகளாக வரும் காண்டீபன், தேனப்பன், காமேஷின் அப்பா சிவனேசன் என்று உப பாத்திரங்களும் நேர்த்தியாக, அவரவர் குணாதிசயங்களுடன் வடிக்கப்பட்டிருப்பது பிரமாதமாக இருக்கிறது. அதுபோலத்தான் கதையில் பல வில்லன் கதாபாத்திரங்கள் செயல்பட்டாலும் எவரையும் நாம் வெறுத்துவிடாதபடி கதையைச் சொல்லியிருக்கும் விதமும். பாண்டி சகோதரர்களின் அம்மா பாஞ்சாலி கதாபாத்திரம் படிப்பவர் மனதில் பரிதாபத்தைத் தோற்றுவிக்கத் தவறாத வண்ணம் அழுத்தமாகப் பின்னப்பட்டிருப்பதும் மற்றொரு சிறப்பு. இவை யாவற்றையும் விட மகத்தான ஒன்று, கதைப் பின்னல் உத்தி இங்குமங்குமாக தாவிச் சென்றாலும் சற்றும் குழப்பாமல் கதை சொன்ன அந்த உத்தி சபாஷ் போட வைக்கிற ஒன்று. கதையில் லாஜிக் தவறுகள் எதுவும் இல்லாதிருப்பதும் இதம்.
இத்தனை நல்ல அம்சங்களையும் மீறி ஒருவித எரிச்சலுடனேயேதான் கதையைப் படித்து முடிக்க முடிந்தது. அதற்குக் காரணம் நரசிம்மா அல்ல. கதையை வெளியிட்டிருக்கும் ஸ்ரீ பதிப்பகத்தார், சற்றே சிரமம் பாராமல் ஒரு ப்ரூப் ரீடரை வேலைக்கு வைத்துக் கொள்ளுதல் உத்தமம். புத்தகத்தில் ஒற்றுப் பிழைகள் இருந்தால் பொறுத்துக் கொள்ளலாம். எழுத்துப் பிழைகள் இருந்தால் மன்னிக்கலாம். ஆனால் கருத்துப் பிழைகள் ஏராளமாக வருவது தாங்க முடியாத எரிச்சலைத் தருகிறது. உதாரணமாக, மகளின் தலையை ஆதூரத்துடன் வருடினாள் என்று வரவேண்டியது, ஆதாரத்துடன் வருடினாள் என்று வருகிறது. கணக்குப் பிள்ளை முதலாளியை பெரியய்யா என்று கூப்பிட வேண்டியது ‘பெரியப்பா’ என்று கூப்பிடுகிறார். (கொடூரம்). அவன் சுமையை அனாயாசமாகத் தாங்கினான் என்பதற்குப் பதில் ‘அனாவசியமாக’(?) தாங்கினான் என்றுள்ளது. ஸ்டுபிடிட்டி டு த கோர் என்று வரவேண்டியது ‘ஸ்டுப்பிடிட்டி டு த கேர்ள்ஸ்’ என்றிருக்கிறது. பட்டியல் போட்டால் தனிப் பதிவாகத்தான் எழுத வேண்டியிருக்கும். மொத்தத்தில்... சமையல் நன்றாகச் செய்திருந்தும், சமைத்தவரைப் பாராட்டித் தள்ள விருப்பம் இருந்தும் பரிமாறிய பாத்திரம் சரியாக அமையாமல் போய்விட்டது. பாவம் நரசிம்மா.