Sunday, December 2, 2012

நான் ரசித்த நகைச்சுவை காட்சிகள்

Posted by பால கணேஷ் Sunday, December 02, 2012

அன்பார்ந்த நண்பர்களே...

தீபஒளித் திருநாள் முடிந்ததும் 3 தினங்கள் கோவை சுற்றுப்பயணம் சென்று வந்தேன். வந்ததும் புதிய வேலை கிடைத்து அலுவலகம் மாறினேன். புதிய அலுகலகத்தில் இணைய பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்கிற செய்தி எனக்கு மிகமிகக் கடினமாக இருக்கிறது. இதுநாள் வரை அலுகலகத்திலிருந்து கொண்டுதான் இணையத்தில் உலாவி வந்ததால் கடந்த 15 தினங்களாக இணையத்திற்கு அன்னியன் ஆக்கப்பட்டேன். வீட்டில் இணைய இணைப்பு பெற்று இன்னும் ஓரிரு தினங்களில் அம்பியாகவோ ரெமோவாகவோ வந்து விடுவேன் என்ற (எனக்கு) மகிழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பதிவை வெளியிட்ட தங்கைக்கு என் நன்றி.

                                       
                                                           

தமிழ் சினிமா தோன்றிய நாளிலிருந்து எத்தனையோ காமெடியன்களைப் பார்த்திருப்பீர்கள். ரசித்துச் சிரித்திருப்பீர்கள். நானும் அப்படியே. ஆனால் காமெடியன்களை விட சில கதாநாயகர்கள் நடிக்கும் காட்சிகள் காமெடியன்களை மிஞ்சி விடுவதுண்டு. என்னை மிகவும் ரசித்துச் சிரிக்க வைத்ததுண்டு. அப்படி இரண்டு கதாநாயகர்கள் நடித்த காமெடிக் காட்சிகளைத்தான் இப்போது சொல்லப் போகிறேன்.


செங்கோட்டை என்று ஒரு படம். ஆக்ஷன் கிங் அர்ஜுன்தான் கதாநாயகன். படத்தின் கிளைமாக்ஸில் வில்லன் குரூப் அடியாட்கள் அவர் மனைவி மீனாவையும் அப்பா விஜயகுமாரையும் தங்கள் கஸ்டடியில் வைத்துக் கொண்டு ஒரு அடியாளுடன் அவரை ப்ளைட்டில் போகச் சொல்வார்கள். விமானம் கிளம்பிய பின் அவர் அடியாளின் கழுத்தில் அடித்து மயக்கமடையச் செய்துவிட்டு விமானத்தின் டாய்லெட்டைத் தாண்டி பின்னால் வந்து டயர் வழியாக வங்கக் கடலில் குதிப்பார். பொதுவாக விமானம் ஆகாயத்தில் ஏறியதுமே மூடிக் கொள்ளும் டயர் அர்ஜுனுக்கு வசதியாக மீனம்பாக்கத்திலிருந்து வங்கக் கடலை அடையும் வரை அரை மணி நேரமாகியும் மேலே ஏறாமலேயே பறந்து கொண்டிருக்கும். ஹா... ஹா... சூப்பர் காமெடி என்கிறீர்களா... இல்லை, இனிதான் காமெடியே...


கடலில் குதித்த அவர் நீந்திக் கரையேறி, தன் வீட்டிற்கு வந்து வில்லன் அடியாட்களை வீழ்த்திவிட்டு பிரதமரைக் கொல்ல நடக்கும் சதியைத் தடுக்க செங்கோட்டைக்கு வருவார். சுதந்திர தின விழா நடந்து கொண்டிருக்க, பிரதமரைக் கொல்ல வரும் கொலையாளியை அவர் தேடுவார். கொலையாளி நாம் யாருமே எதிர்பாராத வண்ணம் மேலே பறந்து கொண்டிருக்கும் பெரிய ஹீலியம் பலூனுக்குள் இருப்பான். அவனுக்கு பலூனுக்குள் சுவாசிக்க ஏதய்யா ஆக்சிஜன், ஹீலியம் வாயுவை சுவாசிக்க முடியாதே என்று யாராவது கேட்டீங்களோ... கொன்டேபுட்டேன்!


அது மட்டுமா... பலூனுக்குள்ளிருந்து ஏதோ பால்கனிக் கதவைத் திறந்து நாம் வேடிக்கை பார்ப்பது மாதிரி ஒரு கதவைத் திறந்து பிரதமரைக் குறி பார்ப்பான். பலூனிலிருக்கும் காற்றெல்லாம் வெளியேறி விட்டால் அது எப்படிப் பறக்கும் என்று பகுத்தறிவுக் கேள்வி யாராவது கேட்டீங்களோ... சரி, அவன்தான் அப்படியென்றால் நம்ம ஆக்ஷன் கிங் சும்மா இருப்பாரா... நிழலில் இருந்தே கொலையாளி பலூனில் இருப்பதைக் கண்டுபிடித்து அப்படியே மல்லாக்கப் படுத்து சுடுவார். பலூன் வெடித்து கொலையாளியும் பரலோகத்துக்கு பார்சல்.


அவ்வளவுதான்... அங்கே இருக்கும், கொலையாளியை ஏவிய மெயின் வில்லன் பிரதமரைச் சுடுவார். துப்பாக்கிக் குண்டு ஸ்லோமோஷனில் வந்து கொண்டிருக்க, அதை குறுக்கிட்டு நம்ம ஆக்ஷன் கிங் தோளில் வாங்கிக் கொள்வார். வில்லனின் அடுத்த குண்டு தேசியக் கொடிக் கம்பத்தை சாய்க்க, அர்ஜுன் இன்னொரு குண்‌டை ஏற்றுக் கொண்டு கொடியைத் தாங்கிப் பிடிப்பார். (தேசபக்தி சார்!) பாதுகாப்புப் படை வீரர்கள் பிரதமரை பாதுகாப்பாக இதற்குள் கூட்டிப் போக மற்ற வீரர்கள் எல்லாம் வேடிக்கை பார்ப்பார்கள். அவர்கள் வில்லனை அழித்து விட்டால் ஆக்ஷன் கிங்குக்கு என்ன மதிப்பு? அத்தனைக்கும் பின்னால் அவரே வில்லனுடன் மோதி சம்ஹாரம் பண்ணுவார்.


அடாடா... அந்தப் படத்தின் கடைசி அரை மணி‌ நேரத்தில் சிரித்துச் சிரித்து எனக்கு வயிற்று வலியே வந்து விட்டது.  இதை மிஞ்சுகிற மாதிரி காமெடி வேறு எந்தப் படத்திலும் வராது என்றுதான் எண்ணியிருந்தேன். அந்த எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டார் ஆர்.சுந்தரராஜன்.


நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தூக்கு மேடைக்கே கொண்டு வந்து விடுவார்கள். அதே நேரம் கட் ஷாட்டில் இன்னொரு ரஜினிகாந்த் இவரைக் காப்பாற்ற ஒரு அம்பாஸடர் காரில் வந்து கொண்டிருப்பதைக் காட்டுவார்கள். இங்கே இவர் கழுத்தில் கறுப்புத் துணி கூட மாட்டி விடுவார்கள். அவர் பரபரப்பாக அதிவேகத்தில் காரில் வந்து கொண்டிருப்பார். லீவரை இழுக்க சைகை காட்டும் நேரம்... ஜெயிலின் கருங்கல் சுவரை அம்பாஸிடர் காரினால(?) இடித்து தூளாக்கிக் கொண்டு அதகளமாக வருவார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார்ன்னா சும்மாவா...


அது மட்டும் காமெடியில்லை... வந்தவர் நேராக அங்கிருக்கும் அதிகாரிகளிடம் வந்து, ‘‘இவன் கொலை பண்ணலை. ஆதாரம் இந்த கேஸட்ல இருக்கு...’’ என்பார். உடனே அனைவரும் தூக்குப் போடுவதை நிறுத்திவிட்டு கேஸட் கேட்கப் போய் விடுவார்கள்.


அட, ஞானசூனியங்களா... தூக்கு மேடைக்குப் போய்விட்ட ஒருவனைக் காப்பாற்ற வேண்டுமானால் ஜனாதிபதியிடமிருந்து போனோ கடிதமோ வந்தால்தானே முடியும், ஆடியோ கேஸட்டை ஒரு ஆதாரமாக எந்த நீதிபதியும் ஏற்றுக் கொள்ள மாட்டாரே... என்றெல்லாம் யாரும் கேட்டுவிடக் கூடாது.


 ரஜினி மற்றொரு ரஜினியின் கழுத்தில் இருக்கும் கறுப்புத் துணியை எடுக்க, அவர் கூலாக, ‘‘நீ எப்படியும் வருவேன்னு எனக்குத் தெரியும். ஏன்னா, நான் தப்பே பண்ணலையே’’ என்க இருவரும் சிரிப்பதைப் பார்த்துக் கை தட்டி ரசிக்க வேண்டும். அப்படி ரசித்துத் தான் ‘ராஜாதி ராஜா’ படத்தை 200 நாட்கள் ஓட வைத்தனர் நம் ரசிகர்கள். இந்த கிளைமாக்ஸ் காட்சியும் பார்க்கும் போதெல்லாம் என்னை ரசித்துச் சிரிக்க வைக்கிறது.


‘போய்யாங்க... இதென்ன ஜுஜுபி! இதைப் போய் பெரிசா காமெடின்னு சொல்ல வந்துட்டே... இதைவிடப் பெரிய காமெடில்லாம் நாங்க பார்த்திருக்கோம்’ என்கிறீர்களா? சொல்லுங்களேன்... நானும் தெரிந்து கொள்கிறேன். பார்த்து ரசிக்கிறேன்.



Monday, November 12, 2012

சரிதாவின் ‘இலவச’ தீபாவளி!

Posted by பால கணேஷ் Monday, November 12, 2012

விடுமுறை நாட்கள் என்றால் பெரும்பாலான இல்லத்தரசர்கள் சோம்பலாக இருப்பார்கள்; இல்லத்தரசிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள்- கணவர்களை வேலை வாங்குவதில்!

‘காலைல பத்து மணி வரைக்கும் குளிக்காம அப்படி என்னதான் டி.வி. பார்த்தாகறதோ?’ ‘இப்படி ஒரு எழுத்து விடாம பேப்பர் படிக்கற நேரத்துல உருப்படியா வீட்டுக்கு ஒட்டடை அடிச்சாத்தான் என்னவாம்?’ -இப்படியெல்லாம் கேள்விப் பந்துகள் பவுன்ஸாகி கணவர்கள் முகத்தில் வந்து மோதும். இவையெல்லாம் சராசரி மனைவிகளுக்கான லட்சணங்கள் என்றால் சரிதா அதற்கும் ஒருபடி மேலாச்சே.. அவள் பற்றாதென்று தீபாவளி சமயத்தில் மகளைப் பார்க்க வந்த அவள் அம்மாவும் சேர்ந்து கொண்டதில்... நான் ‘‌‌ஙே’ ஆனேன்.

‘‘என்னங்க.. இந்த முறை தீபாவளிக்கு ஸ்வீட்டும் காரமும் எங்கம்மாவே பண்ணிடறேங்கறாங்க. உடனே போய் அவங்க எழுதற லிஸ்ட் படி மளிகை சாமான்லாம் வாங்கிட்டு வந்துடுங்க...’’ என்று அருகில் வந்து ஐஸ் குரலில் சொன்னாள் சரிதா. கணினியில் கதை ஒன்றை டைப் செய்து ‌கொண்டிருந்த நான் ‘திடுக்’ வாங்கி நிமிர்ந்தேன்.

‘‘ஹய்யய்யோ... சமைக்கற விஷயத்துல நீயே நல்லாப் பண்ணுவ. உங்கம்மா பண்ணினா டேஞ்சராச்சே! தலைதீபாவளி சமயத்துலயே உங்க வீட்டுக்குப் போனப்ப உங்கம்மா பண்ணின ஹல்வாவை வாயில போட்டதுல நாக்கே மேலண்ணத்துல ஒட்டிக்கிட்டு ‘ழே ழே’ன்னுல்ல உளற வேண்டியதாய்டுச்சு. நல்லவேளையா... காராபூந்தில ஆந்திரா ஸ்டைலயும் தாண்டி ஆங்காரமா காரம் போட்டிருந்ததால‘ ‘ஹா ஹா’ன்னு அலறி எட்டு டம்ளர் தண்ணி குடிச்சதுல நாக்கு சரியாச்சு. அதனால பிழைச்சேன். இப்ப இந்த ரிஸ்க் தேவைதானா சரி?’’ என்று மெல்லிய குரலில் கேட்டேன்.

‘‘பேசாதீங்க! அம்மா எவ்வளவு ஆசையா மாப்ளைக்கும் உனக்கும் நான் பண்ணித் தர்றேன்னு சொல்றாங்க. உங்களுக்கு எப்பவுமே எங்கம்மான்னா தொக்குதான். உங்க தங்கை வீட்லருந்து வந்த ஸ்வீட், காரத்தோட லட்சணத்தை நான் தனியாச் சொல்லணுமா என்ன...? அந்த மைசூர் பாக்குல...’’

‘‘சரி சரி... நான் கடைக்கு உடனே போறேன் சரி, லிஸ்ட்டைக் ‌குடு...’’ என்று நான் எழுந்த நேரம் பார்த்துத்தானா கரண்ட் கட்டாக வேண்டும்? கும்மிருட்டு. தடுமாறியபடி என் செல்போனைத் தேடி நான் நடந்த நேரம், சரிதாவும் மெழுகுவர்த்தியைத் தேடி கைகளை நீட்டியபடி நடந்திருக்கிறாள் போலிருக்கிறது...அவளின் விரல் என் கண்ணில் பட்டு விட்டது. (நல்லவேளை... நகம் வளர்க்கும் பழக்கம் அவளுக்கில்லை).

‘‘ஆ...! என் கண்ணு! என் கண்ணு!’’ என்று புலம்பியபடி நான் கண்ணைப் பிடித்துக் கொள்ள... ‘‘போங்க மாப்ளை! நான் இருக்கும் போதே இப்படி என் மகளைக் கொஞ்சறீங்களே, எனக்கு வெக்கமா இருக்கு...’’ என்று குரல் கொடுத்தார் என் மாமியார் சமையல்கட்டிலிருந்து.

‘‘ஐயோ... ஐயோ...’’ என்று தலையிலடித்துக் கொண்டு குத்துமதிப்பாக ஹால் அலமாரியை அடைந்து துழாவினேன். செல் அகப்பட்டது. டார்ச்சைப் போட்டேன்.

ஃப்ரிட்ஜின் கதவைத் திறந்து அலமாரிக் கதவு என்று நினைத்து உள்ளே துழாவிக் கொண்டிருந்த சரிதா ‘‌ஙே’ என்று விழித்தாள் அவசரமாக அதன் கதவை மூடிவிட்டு வந்து அலமாரியிலிருந்து மெழுகுவர்த்திகளை எடுத்து ஏற்றினாள்.

காய்கறிகள் வாங்குவதைப் போலவே வீட்டுக்கு மளிகை சாமான்கள் சரியாக வாங்கி வருவதும் ஒரு கலைதான். எனக்கு அதில் சாமர்த்தியம் போறாது என்பது சரிதாவின் கணிப்பு. (எதில்தான் இருக்கிறதென்று ஒப்புக் கொண்டிருக்கிறாள்?) அவள் சொன்னபடி நான் வாங்கி வந்த மளிகை சாமான்களின் பேக்கிங்குகளைப் பிரித்தபடி கமெண்ட் அம்புகளை வீசிக் கொண்டிருந்தாள்.

‘‘நான் என்ன வாங்கறேன், என்ன பண்றேன்னு ஒரு தடவையாவது சமையல்கட்டுப் பக்கம் வந்திருந்தா தெரிஞ்சிருக்கும்... மிளகாய்ன்னு எழுதினா நீள மிளகாய் வாங்காம இப்படி குண்டு மிளகா வாங்கிட்டு வந்துட்டீங்களே.... இதை வெச்சு எப்படிச் சமைக்கிறதாம்? ’’

‘‘சரி, அடுத்த தடவை மிளகாய் வாங்கணும்னா உன்னைப் போல இருக்கக் கூடாதுன்றதை மனசுல வெச்சுக்கறேன்....’’ என்று சொல்லிவிட்டு உடனே குனிந்தேன். என் தலைக்கு மேல் பறந்த டம்ளர் சுவரில் மோதி விழுந்தது. ஹ! எந்த வார்த்தைக்கு என்ன ரியாக்ஷன் வரும்னு நமக்குல்லாம் அத்துப்படில்ல!

“என்னங்க இது...?” என்று கையில் எடுத்துக் காட்டினாள். “அதுவா...? குளியல் சோப்பு. அதுக்கென்ன..?” என்றேன்.

”நான் தேய்ச்சுக் குளிக்கற சோப் பிராண்ட் ------ தானே? இதை ஏன வாங்கினீங்க?” என்றாள் கோபமாக,

“அதுவா..? அதுல லெமன் ப்ளேவர் இல்லன்னான். அதான் சாதா வாங்கிட்டேன். ஒரே கம்பெனி தானே. விடு...” என்றேன்.

“என்னங்க இது.... இவ்வளவு அஸால்ட்டா சொல்றீங்க? நான் அந்த சோப்பைத்தான் ரெண்டு வருஷமா தேய்ச்சுக் குளிச்சுட்டிருக்கேன, தெரியுமா?” என்றாள் கோபமாக,

“எனக்குல்லாம் ஒரு சோப்பு ஒரு மாசம்தான்டி வருது. நீ எப்படி அதே சோப்பை ரெண்டு வருஷமா தேய்ச்சுக் குளிச்ச?” என்று அப்பாவியாக (முகத்தை வைத்துக் கொண்டு) கேட்டேன்.

உக்ரமானாள் சரிதா. “மாத்தி வாங்கறதையும் வாங்கிட்டு நக்கலா உங்களுக்கு? முதல்ல போய் இந்த ரெண்டு ஐட்டத்தையும் மாத்திட்டு வாங்க....” என்று அவள் கத்த. (வேறு வழியின்றி) மீண்டும் கடைக்குக் கிளம்பினேன் நான்.

மீண்டும் நான் வீடு திரும்பியபோது சரிதா வாசலிலேயே நின்று ஆர்வமாக என்னை எதிர்கொண்டாள். ‘‘என்னங்க... என் தம்பி போன் பண்ணினான். தீபாவளி முடிஞ்ச கையோட அவன் வைஃப் வீட்ல காசி டூர் போகப் போறாங்களாம். அம்மாவையும் கூட்டிட்டுப் போறேன்னு உடனே அனுப்பி வெக்கச் சொன்னான்’’ என்றாள்.

‘ஹையா... மாமியாரின் பலகாரத் தொல்லையிலருந்து தப்பிச்சுட்டோம்’ என்று நிம்மதி முகத்தில் படர, ‘‘இன்னிக்கு கெளம்பறதுக்கு பஸ், டிரெய்ன் எல்லாம் ஃபுல்லாயிருக்குமே சரிதா. ட்ரை பண்ணிப் பாக்கறேன்...’’ என்றேன். ‘‘வேண்டாங்க. நீங்க அம்மாவுக்கு ப்ளைட் டிக்கெட் புக் பண்ணிடுங்க...’’ என்றாள். பகீரென்றது எனக்கு. ‘‘அடியேய்... சென்னைலருந்து மதுரைக்கு ப்ளைட் டிக்கெட் என்ன செலவாகும் தெரியுமா? தீபாவளி போனஸ்ல கிரைண்டர் வாங்கணும்னு சொல்லிட்டிருந்தியே... அது பணால்தான்!’’ என்றேன்.

‘‘அதான் இல்ல... கிரைண்டர் கம்பெனில அதோட விலை அளவுக்கு ஏர் டிக்கெட்ல தள்ளுபடி தர்றாங்க. நமக்கு அந்தப் பொருள் இலவசமா கிடைச்ச மாதிரி ஆச்சு, ப்ளைட் டிக்கெட்டுக்கும் பாதி செலவுதானே ஆகும்னு எங்கம்மாதான் ஐடியா கொடுத்தாங்க...’’ என்றாள். ‘‘நாசமாப் போச்சு. பிஸினஸ் ட்ரிக் புரியாம பேசறியே... நான் இப்ப கிரைண்டருக்கும் செலவு பண்ணி, ப்ளைட் டிக்கெட்டுக்கும் செலவு பண்ணியாகணும்...’’ என்றேன் கோபமாக.

என் மாமியார், ‘‘சரி விடுடி சரிதா. நான் குடுத்து வெச்சது அவ்வளவுதான். ஒவ்வொருத்தர் மனைவியைச் சேர்ந்தவங்கன்னா எப்படித் தாங்கறாங்க தெரியுமா? நம்ம மூணாவது வீட்டு முரளி இருக்கானே....’’ என்று எடுத்துக் கொடுக்க, ‘‘ஆமாம்மா. இவருக்கு இவங்கம்மாவுக்குச் செய்யறதுன்னா மலை ‌போனாலும் தெரியாது. நமக்குன்னா இலை போறதும் தெரிஞ்சிடும்...’’ என்று ஆலாபனை செய்து பெண்களின் மிகச் சக்தி வாய்ந்த ஆயுதத்தை (கண்ணீர்) என்மீது பிரயோகித்தாள்.

‘இந்த ஆஃபர் குடுக்கற கம்பெனிக்காரன் மட்டும் கைல கிடைச்சான்...’ என்று மனதினுள் சபித்தபடி, வழக்கம் போல் பின்வாங்கி, ‘‘சரி... சரி... உடனே அரேன்ஜ் பண்ணிடறேன் சரி...’’ என்றேன். மாமியார் சமையலறையினுள் போய்விட, சரிதா அருகில் வந்து, ‘‘டோண்ட் வொர்ரி. இந்த முறை டபிள் ஸ்வீட் பண்ணி அசத்திடறேன்...’’ என்று வெற்றிக் களிப்பில் சிரித்தாள்.

‘அதெப்படித்தான் ஒரே நிமிடத்தில் சிரிக்கவும் அடுத்த நிமிடத்தில் அழவும் இவர்களால் முடிகிறதோ?’ என்று எப்போதும் தோன்றும் வியப்போடு அவளிடம் சொன்னேன். ‘‘சரி... என் பக்கத்துல வந்து நின்னுட்டு, நான் சொல்றதைத் திருப்பிச் சொல்லு...’’ என்றேன்.

‘‘என்னங்க?’’ என்று அருகில் வந்து நின்றாள். ‘‘‌வாசிக்கும் அனைவருக்கும்...’’ என்று நான் சொல்ல... ‘‘புரிஞ்சு போச். நான் திருப்பிச் சொல்ல வேணாம். உங்களோட சேர்ந்து ஒரே குரல் சொல்லிடறேன்...’’ என்று விட்டு உற்சாகமாக ‘‘ஒன் டூ த்ரீ’’ என்று எடுத்துக் கொடுத்தாள்.

                         ‘‘வாசிக்கும் அனைவருக்கும் நேசமுடன் எங்களின்
                          இதயம் கனிந்த தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!’’




Saturday, November 10, 2012

சுவை மிக்க சுட்ட பழங்கள்!

Posted by பால கணேஷ் Saturday, November 10, 2012

ரு பெண்மணி மிகப்பெரிய அலுவலகத்தில் பொறுப்பான பணியில் இருந்தார். சிறியதும் பெரியதுமாக அவ்வப்போது தவறுகள் செய்து மேலதிகாரியிடம் திட்டு வாங்குவார். ஒவ்வொரு முறையும் திட்டு வாங்கிக் கொண்டு கலங்கிய கண்களுடன் வந்து தன் இருக்கையில் அமரும் போது தன் கைப்பையைத் திறந்து ஒரு படத்தை எடுத்துப் பார்ப்பார். அவர் முகத்தில் புன்னகை ததும்பும். சுறுசுறுபபாக வேலை பார்க்க ஆரம்பித்து விடுவார்..

இதை நெடுநாட்களாக கவனித்து வந்த பக்கத்து இருக்கைப் பெண்மணி ஒருநாள் மானேஜரிடம் திட்டு வாங்கிக் கொண்டு அந்தப் பெண்மனி புகைப்படத்தை எடுக்கும்போது எழுந்து வந்து விட்டார், “இப்படி கஷ்டமான நேரங்களில் எல்லாம் உங்களை உற்சாகப்படுத்தும் படம் எந்தக் கடவுளுடையது என்று தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டபடி அவர் கையிலிருந்த படத்தைக் குனிந்து பார்த்தார். வியந்து போனார், அது அந்தப் பெண்மணியின் கணவரின் படம்,

“அட. கடவுளின் படத்தைப் பார்த்து ஆறுதலடைவதைவிட கணவரின் படத்தைப் பார்த்து ஆறுதலடைகிறீர்களா? கடவுளைவிடக் கணவர்தான் பெரிது போலிருக்கிறது” என்று உருகிச் சொல்ல. திட்டு வாங்கிய பெண் இடைமறித்துச் சொன்னாள், “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, அவர் என்னைத் திட்டும் வசவு வார்த்தைகளுடன் ஒப்பிடும் போது இங்கு வாங்கும் திட்டெல்லாம் சர்வ சாதாரணம். ஒவ்வொரு முறை திட்டு வாங்கி மனம் சஞ்சலப்படும் போதும் அவர் படத்தை எடுத்துப் பார்ப்பேன், அப்போது இதெல்லாம் ஒன்றுமேயில்லை என்று மனம் சமாதானமாகி விடும்.” என்றாள். இந்தப் பெண் ‘ஙே!’

============================================

“ஏம்ப்பா ஆபரேஷன் தியேட்டர்லருந்து தலைதெறிக்க இப்படி ஓடி வர்ற?”

”நர்ஸ் ஆறுதல் சொன்னாங்க - சின்ன ஆபரேஷன் தானே... பயப்படாதீங்க. சுலபமாப் பண்ணிடலாம் - அப்படின்னு...”

“நல்லதைத்தானே சொல்லியிருக்காங்க?  அதுக்கு ஏன்டா இப்படி ஓடி வர்ற?”

“அட்,. நீங்க வேற... அவங்க ஆறுதல் சொன்னது எனக்கில்லைங்க. டாக்டருக்கு. அவருக்கு இது முதல் ஆபரேஷனாம்...”

============================================

மெரிக்காவில் நாய்களுக்கான உணவு தயாரிக்கும பெரிய நிறுவனம் ஒன்றின் விற்பனை சரியாக இல்லை. எனவே விற்பனைப் பிரதிநிதிகளுக்கு உத்வேகமூட்டுவதற்காக ஒரு சுயமுன்றேற்றப் பயிற்சியாளர் அழைக்கப்பட்டார். அவர் விற்பனைப் பிரதிநிதிகளின் மனதில் நிறுவனம் பற்றிய பெருமித உணர்வைத் தூண்டிவிட வேண்டும் என்று திட்டமிட்டு கேள்வி கேட்டார்.

“அமெரிக்காவில் நாய் உணவு தயாரிப்பில் மிகப் பெரிய நிறுவனம் எது?” பதில் வந்தது - “நாம்தான்”

”நாய் உணவுத் தயாரிப்புக்கு அதிகமான அளவில் விளம்பரம் செய்பவர்கள் யார்?” பதில் வந்தது - ”நாம்தான்”

“நாய் உணவில் வசீகரமான சலுகைகளைத் தருபவர்கள் யார்?” பதில வந்தது - “நாம்தான்”

பயிற்சியாளர் கேட்டார்  “அப்படியானால் நாம் ஏன் நம் தயாரிப்பை இன்னும் நன்றாக விற்பனை செய்யவில்லை?” பலத்த அமைதிக்குப் பின் ஒரு குரல் எழுந்தது. “ஐயா. இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் நமக்குத தெரியும், நாய்களுக்குத தெரியாது, அவற்றுக்கு நம் தயாரிப்புகள் பிடிக்காததால் முகர்ந்து பார்த்துவிட்டு நகர்ந்து விடுகின்றன”, பயிற்சியாளர் ‘ஙே’ என்று விழித்தார். தரத்தில் கவனம் செலுத்தாத தயாரிப்புகளுக்கு எத்தனை விளம்பரங்கள் செய்தாலும் எடுபடுமா என்ன?

============================================

திருவாரூரில் கிருபானந்த வாரியார் பாரதக் கதை சொல்லிக் கொண்டிருந்தார், சகாதேவன் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார், “சகாதேவன் கடைசிப் பிள்ளை, அவன் சிறந்த ஞானி. பொதுவாகவே கடைக் குட்டிகள் சிறந்த ஞானியாக இருப்பார்கள், காரணம் அப்பனுக்கு ஞானம் வந்த பிறகு பிறக்கிறவன் கடைக்குட்டிப் பிள்ளை, அல்லது இவன் பிறந்த பிறகு அப்பன் ஞானியாகி விடுவான், என்ன ஞானம்? இனிமேல் குழந்தை பெறவே கூடாது என்ற ஞானம்,”

இப்படி விளக்கிய வாரியார். “இங்கே யாராவது கடைக்குட்டிப் பிள்ளைகள் இருக்கிறீர்களா?” என்று கேட்டார், பத்துப் பதினைந்து சிறுவர் சிறுமிகள் கை தூக்கினார்கள். வாரியார் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துவிட்டு. “உக்காருங்க... யார் எந்த விஷயத்துல முடிவு செய்யறதுன்னு விவஸ்தையே கிடையாதா? அப்பா அம்மா என்ன முடிவுல இருக்காங்களோ? வீட்டுக்குப் போய் உதை வாங்காதீங்கப்பா...” என்றார், கூட்டடத்தினர் அனைவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.

============================================

சிரியர் : “நான் வரும் வழியில் ஒரு வண்ணான் தன் கழுதையைப் போட்டு அடிச்சுக்கிட்டு இருந்தார். நான் கஷ்டப்பட்டு அவரைத் தடுத்து நிறுத்தினேன். என் கிட்ட இருந்த பண்புக்கு என்ன பெயர் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்,

மாணவர் : சகோதர பாசம் அல்லது இனப்பற்று சார்!

============================================

மேலே நீங்கள் படித்த அனைத்தும் “சொன்னார்கள... சொன்னார்கள்... சொன்னார்கள்..!” என்ற புத்தகத்திலிருந்து சுடப்பட்டவை. எழுதியவர் : சுகி சிவம்,

============================================

Friday, November 9, 2012

இதயக்கோயிலில் குடியேறிய ஈசன்!

Posted by பால கணேஷ் Friday, November 09, 2012

வர் பரம ஏழை. ஆனால் சிவபக்தியில் செல்வந்தர். உடல் முழுவதும் திருநீறைப் பூசுவதனால் அவரின் இயற்பெயரே மறைந்து ‘பூசலார்’ என்ற பெயரே நிலைத்து விட்டது. ஈசனுக்கு ஒரு ஆலயம் எழுப்பிட வேண்டுமென்பதை தன் வாழ்நாள் லட்சியமாக எண்ணியிருந்தார் அவர். பலரிடமும் நிதி கேட்டு இறைஞ்சினார். அவருக்கு உதவிட எவரும் முன்வரவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது. பூசலார் ஒரு முடிவுக்கு வந்தார். அதாவது...தன் சித்தத்தில் உறையும் சிவனுக்கான ஆலயத் திருப்பணியை தன் மனதிலேயே நடத்தி தன் அபிலாஷையைப் பூர்த்தி செய்து கொள்ளத் தீர்மானித்தார்.

நல்ல நாள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, ஒரு மரத்தடியில் தியானத்தில் அமர்ந்தார். மூடிய கண்களுக்குள் முழுமையாக வாழத் தொடங்கினார். ஆகம விதிகளின் படி ஆலயம் அமையத் திட்டமிட்டார்; பாவனையிலேயே கல் தச்சர்களை வரவழைத்து கலை நயம் மிக்க சிற்பங்களை உருவாக்கினார்; பிராகாரங்களை எழுப்பினார்; தச்சர்களை வரவழைத்து ஆலயத்தின் கதவுகளை செதுக்கினார். இரவு, பகல் பாராமல் இருதயத்திலேயே கோயில் எழுப்பும் இனிய பணியில் ஈடுபட்டார். இறுதியில் கும்பாபிஷேகத்துக்கான நாள் குறித்து, கைலைநாதனை அங்கே குடியேறுமாறு மனம் குவித்து வேண்டுகோள் விடுத்தார்.

தே நேரத்தில்... நகரங்களில் சிறந்த காஞ்சியில் கைலாசநாதரின் கோயிலை அழகுறக் கட்டி முடித்திருந்தான் ராஜசிம்ம பல்லவன். கும்பாபிஷேகத்திற்காக நகரமே விழாக்கோலம் பூண்டிருக்க அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய சிவன்- தான் அதே தினத்தில் திருநின்றவூரில் பூசலார் என்ற பக்தர் எழுப்பும் ஆலயத்தில் உறையப் போவதாகவும், வேறொரு நாளில் பல்லவ்ன கும்பாபிஷேகம் நடத்தட்டும் என்றும் கூறி மறைந்தார். கண் விழித்த பல்லவனுக்கு மனமெல்லாம் வியப்பு. பல ஆண்டுகள் இரவு பகல் பாராது உழைத்து தான் நிர்மாணித்த ஆலயத்தைவிட திருநின்றவூர் ஆலயத்தில் அப்படியென்ன சிறப்பு இருக்கிறது என்று இறைவன் அங்கு செல்லத் தீர்மானித்தார் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் தன் ஆலய கும்பாபிஷேகத்தை நிறுத்திவிட்டு ஆன்‌றோர் புடைசூழ திருநின்றவூர் வந்தான்.

ஹ்ருதயாலீஸ்வரர்
என்ன ஆச்சர்யம்! கும்பாபிஷேகம் நடக்கும் ஊர் மாதிரி எந்தப் பரபரப்புமில்லாமல் ஊர் அமைதியாக இருந்தது. அங்குள்ளவரிடம் விசாரித்தான் மன்னன். ‘‘பூசலாரா? அவர் சிவனேன்னு மரத்தடில உக்காந்து தியானம் பண்ணிட்டிருக்காரே தவிர, கோயில் எதும் கட்டின மாதிரி தெரியலையே’’ என்று பதில் கிடைத்தது. பூசலார் இருந்த மரத்தடியை அடைந்த மன்னனும் மற்றையோரும் அங்கு ஓர் அதிசயக் காட்சியைக் கண்டனர். கண்மூடி அமர்ந்திருந்த பூசலாரின் இதயப் பகுதியில் தெய்வீக ஒளி வெள்ளம். அங்கே மானசீகமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த ஆலயத்தில் வேள்வியும், மற்ற மங்கலச் சடங்குகளும் மனதளவில் நடந்தேறுவதை அனைவரும் காண முடிந்தது. உரிய நேரத்தில் தனக்கான சந்நிதியில் நமச்சிவாயன் அனைவரும் பார்க்க குடியேறினான். கைலாசநாதனைக் கண்குளிரத் தரிசித்து மன்னனும் மற்றையோரும் பேறு பெற்றனர். படைபலம் மிக்க பல்லவன், எளியவரான பூசலாரின் கால்களில் விழுந்து, பணிந்து அவர் இதயத்தில் எழுப்பிய அதே கோயிலை நிஜத்திலேயே நிர்மாணித்துத் தர அனுமதி கேட்டான்.

பூசலார் புளகாங்கிதம் அடைந்தார். அவர் அருளாசியுடன் திருநின்றவூரில் (சென்னையிலிருந்து 33 கி.மீ. தூரம்) ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. பூசலாரின் இதயத்தில் எழுந்தருளிய காரணத்தால் ஈசன், இருதயாலீஸ்வரன் என்று பெயர் கொண்டு இவ்வாலயத்தில் எழுந்தருளினார்.

லய தரிசனம செய்வதற்கு முன்பு இந்த ஆலயத்தின் சிறப்பொன்றைச் செப்பிட விழைகின்றேன். இருதயாலீஸ்வரர் எழுந்தருளியிருக்கும் கருவறையின் மேற்கூரையில் இதய வடிவில் நான்கு பிரிவுகளுடன் இதயக் கமலம் செதுக்கப்பட்டுள்ளது. இதய நோயால் துன்புற்றிருப்பவர்கள் இங்கு வந்த இறைவனை மனமுருக வேண்டி பிரார்த்தனை செலுத்தினால் அந்நோய்களிலிருந்து விடுபடுகிறார்கள் என்பது மற்றொரு சிறப்பு. இப்போது ஆலயத்தினுள் நுழைவோம்.

லயம் மூன்று பிராகாரங்களைக் கொண்டுள்ளது. கிழக்குக் கோபுரம் வழியே நுழைந்ததும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கொடிமரம். அடுத்து பலிபீடம். அதையடத்து சிறு தனி மண்டபத்தில் நந்திதேவரின் திருவுருவம். விநாயகரும், வேலவனும் இருபுறமும் வாசம் செய்ய, நேர் எதிரில் இறைவனின் இனிய சன்னிதி. கருவறை வாயிலில் மற்றொரு நந்தி மற்றும் பலிபீடம் இருக்கின்றன. விரும்பி வழிபட்ட பக்தனின் இதயத்தில் குடியேறிய இருதயாலீஸ்வரன் இங்கே லிங்க ரூபத்தி்ல் காட்சி அருள்கிறார்.

ஈசனை இதயபீடத்தில் அமர்த்தி கும்பாபிஷேகமே நடத்திப் பார்த்த பூசலாருக்கு கருவறையிலேயே இடம் அளிக்கப்பட்டுள்ளது. இறைவனுக்கு இடதுபுறம் நின்றிருக்கிறார் பூசலார். லிங்கமே அவர் பக்கம் சற்று சாய்ந்திருப்பது போல் தோற்றம் தருகிறது. லிங்கத்தின் நெற்றியில் மூன்று பட்டையாகத் திருநீறு. சரவிளக்குகளில் பூத்திருக்கும் தீச் சுடர்கள். பூசலாரின் வலது கரத்தில் சின் முத்திரை, இடது கரம் இதயத்தின் அருகில் இருக்க, அதி்ல சிறு லிங்கமாக இருதயாலீஸ்வரன்.
பூசலார்

உமாபதியை வணங்கி, சந்நிதியை வலம் வருகையில் அது கஜபிருஷ்டம் என்கிற அரைவட்ட வடிவில் அமைந்துள்ளதை உணர முடிகிறது. சந்நிதியின் வெளிச் சுவரில் தென்புறத்தில் திருமுகத்தில் குமிழ் சிரிப்புடன் தக்ஷிணாமூர்த்தி, மேற்கில் மகாவிஷ்ணுவின் பிம்பம். அடுத்திருப்பது சிருஷ்டிக் கடவுள் பிரம்மன். வடபுறத்தில் துன்பங்களைத் துரத்தி அடிக்கும் அன்னை துர்க்கை ‌குடி கொண்டிருக்கிறாள்.

மூலிகை வண்ணங்களால் எழுதப்பெற்ற ஆலயத்தின் மேற்கூரையிலுள்ள ஓவியங்களை ரசித்தபடி கடந்து வந்தால், சந்நிதியின் தென்மேற்கு மூலையில் ஸ்தல விநாயகர், வடமேற்கு மூ‌லையில் வள்ளி-தெய்வானையுடன் வரம்தரும் சிவசுப்ரமணியர். வடக்கில் சிவகாமி சமேதராக விளங்கும் நடராஜருக்கான தனி அறை. அருகிலேயே பள்ளியறை. அதையடுத்து ஸ்ரீ பைரவர். வெளியே வந்ததும் இவ்வாலயத்தை நிர்மாணித்துத் தந்த ராஜசிம்ம பல்லவனின் சிற்பம் கைகூப்பிய நிலையில் அழகுற மிளிர்கிறது.

இருதயாலீஸ்வரரின் ஆலயத்தில் மரகதாம்பிகை என்ற பெயரில் தனிச் சந்நிதியில் அன்னை உறைகிறாள். தென்திசை நோக்கிய நின்ற திருக்கோலம். நான்கு திருக்கரங்கள். மேல் இரு கரங்களில் மலரும், பாசமும். கீழ் இரு கரங்களில் அபயஹஸ்த முத்திரை, வலது கரத்தில் அன்போடு வீற்றிருக்கும் கிளி. அன்னைக்கு அர்ச்சித்த மலர்களும், குங்குமமும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. ‌பொதுவாக ஈசானிய மூலையில் காணப்படும் நவக்கிரகங்கள் இந்த ஆலயத்தில் அக்னி மூலையில் அமைக்கப்பட்டுள்ளன.

த்தனை பிராகாரங்களையும் இறைச் சிற்பங்களையும், கலை நுணுக்கமுடன் மனதிலேயே அமைத்து வழிபட்டு, இறைவனருள் பெற்ற பூசலார் நாயனாரைக் குறித்து மனதினுள் வியக்காமல் இருக்க முடியவில்லை. பல்லவன் பாங்குறப் படைத்த இந்த ஆலயத்தை தரிசித்து முடிந்து இல்லம் திரும்புகையில் மனமெங்கும் மகிழ்வும் அமைதியும் வியாபித்திருக்கும். ஒரு முறை சென்று தரிசித்து, உணர்ந்து பாருங்கள்.

Wednesday, November 7, 2012

நான் உயிரோடு இருக்கிறேனா?

Posted by பால கணேஷ் Wednesday, November 07, 2012

ன்ஷுரன்ஸ் கம்பெனியிலிருந்து வந்த கடிதம் இந்தச் சந்தேகத்தைக் கிளப்பியது நான் உயிரோடிருப்பதை இத்தனாம் தேதிக்குள் ஒரு டாக்டரின் அத்தாட்சியடன் அவர்களுக்குத் தெரிவிக்கக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு மாதாமாதம் இன்ஷுரன்ஸ் கம்பெனியிலிருந்து வந்து கொண்டிருந்த ரூபாய் இருநூறு கொஞ்ச நாளாக வரவில்லை. சரி, ஏனோ நிறுத்தி விட்டார்கள் போலிருக்கிறது, 200 ரூபாயை விசாரித்து அலைந்து திரிவானேன் என்று சும்மா இருந்து விட்டேன். அந்தச் சமயத்தில்தான் ‘நான் உயிரோடு இருக்கிறேனா?’ என்று கேட்டு கடிதம் வந்தது.

எல்.ஐ.சி. விவகாரம் தெரிந்த என் உறவினரிடம் விஷயத்தைச் சொன்னேன். ‘‘நீங்கள் உயிரோடு இருக்கும் வரை மாதம் 200 ரூபாய் கிடைக்க எல்.ஐ.சி.யுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆபீஸில் வேலை செய்து கொண்டிருந்தபோது உங்கள் கிராஜுவிடி தொகையிலிருந்து மாதம் கொஞ்சமாக இன்ஷுரன்ஸ் கம்பெனிக்குப் பணம் செலுத்தியிருக்கிறார்கள். நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு உங்கள் ஆயுள் பரியந்தம் மாதாமாதம் 200 ரூபாய் தர ஒப்பந்தமாகியிருக்கிறது. ஆகவேதான் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார்கள். ஒரு டாக்டரிடமிருந்தோ, அரசு அதிகாரியிடமிருந்தோ நீங்கள் உயிரோடு இருப்பபதற்குச் சான்றுப் பத்திரம் (எக்ஸிஸ்டன்ஸி சர்டிபிகேட்) வாங்கி அனுப்ப வேண்டும். அதைத்தான் அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.’’

அவர் சொன்னவாறே செய்தேன். ஃபாரத்தைப் பூர்த்தி செய்துகொண்டு எல்.ஐ.சி. போனேன். ஆனால் நான் உயிரோடிருப்பதை அவர்கள் நம்பத் தயாராய் இல்லை. நானே ‌நானா என்று எனக்குச் சந்தேகம் ஏற்படுகிற அளவு சந்தேகப்பட்டார்கள். எல்.ஐ.சி.க்கு எந்த ஜென்மத்திலோ நான் தந்த பாஸ்போர்ட் போட்டோவில் என் முகமண்டலத்தில் தாடி, மீசை இல்லை. அந்தக் காலத்தில் பிளேடுகள் கூர்மையாகவும் மலிவாகவுமிருந்தன. எனக்குத் தினமும் ஷேவ் செய்து கொள்வது பிடிக்கும். ஆகவே பழைய பாஸ்போர்ட் படத்தில் கன்னங்கள் மழமழவென்றிருந்தன.

ஆனால் இப்பொழுதுதான் ரிடையர்ட் கேஸாச்சே... ‘நம்ம முகரக்கட்டையை யார் வந்து பார்க்கப் போகிறாங்க அல்லது யார்கிட்டே கொண்டு போய் காட்டப் போகிறோம்’ என்று அஸால்ட்டாக இருந்ததால் தேன்கூடு கணக்காக மொசமொசவென்று என் முகத்தில் தாடி தொங்கிக் கொண்டிருந்தது. எனக்கே என்னை அடையாளம் தெரியாத அளவு தாடி பெருகியிருந்தது. தலையில் எவ்வளவு இடம் காலியாக இருக்கு? மேல்தளம் பூரா மொஸைக் போட்டாற் போல் ஜம்மென்று இருக்கிறது. அங்கே போய் நூறு ஐம்பது உட்காராதுகளோ? எல்லா முடியும் மோவாயைச் சுற்றியே ஸெட்டிலாகி விட்டன. வெயில் கருதியும், வழுக்கை கருதியும் எப்போதும் தலையில் ஒரு தொப்பி போட்டிருப்பேன்.

நாளடைவில் அது தலையிலிருந்து கழற்றவே முடியாத அளவு தலையோடு ஒட்டிக் கொண்டு விட்டது. (எனக்குத் தலைக்கனம் கூடி அதனால் தொப்பி இறுகியிருக்கலாம் என்ற வாதத்தை நான் ஏற்கவில்லை.) எனது ஆதி அடையாள அட்டையிலுள்ளது போல் நான் மறுபடி புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பினால் எனது புனித தாடி, மீசையை நீக்கிக் கொள்ள வேண்டும். எனது சொந்தப் பிரச்னையில் அந்நியத் தலையீடாக அது எனக்குத் தோன்றியது. ‘‘மூணு நாலு வருஷத்து அரியர்ஸ் பணம் கணிசமாக வருமேடா’’ என்றார் உறவினர்.

சபலமாயிற்று. சலூனுக்குப் போய்த் தாடியை கஞ்சாச் செடிகளை ஈவிரக்கமில்லாமல் போலீஸ் அழிப்பது போல் அழித்தே விட்டேன். ஆறு வயசில் எனக்கொரு பயல் இருக்கிறான். அவன் என்னைச் சில சமயம் டாடி என்றும், சில சமயம் தாடி என்றும் கூப்பிட்டு வந்தான். என் முகத்தில் தாடி இல்லாமல் அவன் என்னைப் பார்த்ததே கிடையாது.

ஆகவே அவன் மதியம் பள்ளியிலிருந்து வந்தபோது அவனது தாயாருடன் (அதாவது தாலிகட்டிய என் பெண்சாதியுடன்) நான் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து, ‘‘அப்பா! அப்பா! அம்மா எந்த மாமா‌வுடைய கன்னத்தையோ தொடறாள்!’’ என்று கத்தியவாறு புழக்கடையில் நான் கீரைப் பாத்தியிடம் இருப்பேன் என நினைத்து ஓடினான். ‘நானே நான்’ என்று அவனுக்கு என்னை நிரூபிக்க ரொம்பக் கஷ்டமாகப் போய் விட்டது. எனது பழைய பாஸ்போர்ட் ஸ்கூல் சர்ட்டிபிகேட், பழைய அடையாள அட்டை, வாக்குச் சீட்டு, ரேஷன் கார்ட் எல்லாம் காட்டி ‘நான் தாண்டா இது’ என்று நிரூபிக்க வேண்டியிருந்தது.

நண்பன் நாராயணன் கரெஸ்பாண்டன்ஸ் கோர்ஸில் படித்து பி.ஏ. பரீட்சை எழுத ஷெனாய் நகரில் உள்ள ஒரு பள்ளிக்குப் போயிருந்தான். பரீட்சை எழுத பல வயதுகளில் பலதரப்பட்ட மாணவர்கள் கூடியிருந்தார்கள். பெயிண்டர், தையல்காரர், மெக்கானிக் என்பதாகப் பல ரகம். ஒரொரு ஹாலிலும் ஐம்பது பேர் பரீட்சை எழுதினார்கள். நாராயணனுடைய ஹாலை நிர்வ்கித்த அதிகாரி ரொம்பக் கறார், கண்டிப்பானவர். மாணவர்களில் பலர் மாணவர்களாக இல்லாமல் வயசாளிகளாக இருந்தனர்.

ஒரு ஆசாமி முரடராகத் தோற்றம் தந்தார். பரீட்சை அதிகாரியை, ‘‘யோவ்! மணி அடிச்சாச்சு, பேப்பர் குடுய்யா’’ என்று உரக்க அதட்டினார்- டெஸ்க்கையும் பெரிசாகத் தட்டியவாறு. ஏதோ ஒரு கெட்ட வார்த்தை வேறு- தொட்டுக் கொள்ள ஊறுகாய் மாதிரி- அவர் வாயில் வந்து விழுந்தது. கிழவரான பரீட்சை அதிகாரி அந்த ஆசாமியை முறைத்துப் பார்த்துவிட்டு, அவனருகில் வந்தார். அவனைக் கோபமாகப் பார்த்தார். பிறகு அவனுக்கு மட்டும் கேள்விப் பேப்பர் தராமல் மற்றவர்களுக்குக் கொடு்த்து விட்டு நாற்காலியில் போய் அமர்ந்து விட்டார்.

அந்த முரட்டு ஆசாமி மேலும் முரட்டுத்தனமாக, ‘‘யோவ்! இன்னாயா நீ பாட்டுக்கு உட்கார்ந்துட்டே. எனக்கு கேள்விப் பேப்பர் தரலியே!’’ என்று கத்தினான். அவர், ‘‘நீ மாணவனே அல்ல. வேறு யாரோ. ராங் அய்டென்டிடி! நீயாக ஹாலை விட்டு வெளியேறுகிறாயா, வாட்ச்மேனை விட்டு வெளியேற்றவா?’’ என்றார். அவன் மிரண்டு போய், ‘‘நான்தான் சார். நானே நான் சார்!’’ என்றான் சுருதி இறங்கி. அவனுடைய அய்டென்டிடி சர்டிபிகேட்டில் ஒட்டியிருந்த போட்டோவில் அவன் தாடி வைத்திருந்தான். இப்போது மழமழவென்று மழித்து விட்டிருந்தான். ஆனாலும் அவன்தான் என்று அடையாளம் தெரிந்தது.

ஆனால் அவன் ‘யோவ்’ போட்டு அவமரியாதையாக ‌எக்ஸாமினரை அழைத்ததால் அவர் கோபம் கொண்டு அவனது அடையாளத்தை சந்தேகப்பட்டு பேப்பர்தர மறுத்து விட்டார். ‘‘போய் பிரின்ஸிபாலிடம் சொல்லு. அவர் ஓ.கே. சொன்னால் உனக்கு பேப்பர் தருவேன்’’ என்று வம்பு பண்ணினார். அவன் பரீட்சையே எழுதாமல் திறந்த பேனாவை டெஸ்க் மீது ஓங்கிக் குத்திவிட்டு வெளியேறி விட்டான்.

நீதி : வாக்குச் சீட்டிலோ, அடையாள அட்டையிலோ உங்கள் தோற்றம் எப்படி உள்ளதோ அதைப் போலவே நீங்கள் இருப்பது உத்தமம். (நல்ல குணம் கூட மாறாமல் பழையபடியே இருந்தால் இன்னும் உத்தமம்!)

-‘சிரிக்காத மனமும் சிரிக்கும்’ (நகைச்சுவைக் கட்டுரைகள்) நூலிலிருந்து. எழுதியவர் : திரு.பாக்கியம் ராமசாமி. வெளியீடு : வானதி பதிப்பகம். விலை : ரூ.60

=======================================
என் நண்பர் கவிஞர் மதுமதி தன் தளத்திற்கு என்னை விருந்தினராக அழைத்து சிறப்பு செய்திருக்கிறார். அங்கே என் மொக்கையை வாசிக்க இங்கே க்ளிக்கவும்.
=======================================

Monday, November 5, 2012

பேசக் கூடாது...!

Posted by பால கணேஷ் Monday, November 05, 2012
 
பேசுவது என்பதே ஒரு கலைதான். நான் மேடைப் பேச்சைக் குறிப்பிடவில்லை. சாதாரணமாக வாய் படைத்த அனைவரும் பேசுவதைத்தான் குறிப்பிடுகிறேன். தேவையான வார்த்தைகளை விட தேவையற்ற வார்த்தைகளைப் பேசுபவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். நீங்கள் சென்னையைச் சேர்ந்தவர். நெரிசல் மிகுந்த பஸ்ஸில் அல்லது ஜனம் பிதுங்கும் ரயிலில் பயணிக்கிறீர்கள். பின்னாலிருந்து ஒருவர் அருகில் வருவார். ‘‘ஸார், இறங்கப் போறீங்களா?’’ என்பார் உங்களிடம். நீங்கள் என்போல் விவகாரம் பிடித்த ஆசாமியாக இருந்தால், ‘‘இல்லங்க. பாய் போட்டு உறங்கப் போறேன்’’ என்பீர்கள். அவர் கடுப்பாகி, ‘‘வழி விடுங்க ஸார். நான் இறங்கணும்’’ என்பார். ‘‘அறிவுகெட்ட முண்டம்! முதல்லயே இதைக் கேக்க வேண்டியதுதானே? நான் எங்க இறங்கினா உனக்கென்னய்யா? தேவையானதைப் பேசித் தொலைய மாட்டீங்களே’’ என்று மனதிற்குள் திட்டியபடியே, முகத்தில் மென்னகையுடன் நகர்ந்து வழி விடுகிறீர்கள். சரிதானே...?

இன்னும் சிலருக்கு வார்த்தைகளைப் பிரயோகிக்கும் விதம் தெரியாது. என் அத்தை வீட்டிற்குப் போனால், ‘‘காபி நேரத்துக்கு வந்திருக்கியேடா? குடிச்சுட்டியா? போடணுமா?’’ என்று கேட்பாள். நான் தன்னியல்பாக, ‘‘குடிச்சாச்சு அத்தே’’ என்று விடுவேன். ஆனால் என் அத்தை பாசக்காரி. ஆனால் வார்த்தைகளில் சொல்லத் தெரியாது... அவ்வளவுதான்! இப்படி தேவையான வார்த்தைகளை விடுத்து தேவையற்றதைப் பேசுகிறதைப் போலவே விஷயம் அதிகமற்ற வெட்டிப் பேச்சுகளிலும் தமிழர்கள்தான் வல்லவர்களாக இருக்கிறோம்.

‘பேச்சைக் குறை; செயலில் ஈடுபடு’ என்று முதுமொழி ஒன்று உண்டு. ஆனால் நாமனைவரும் ‘செயலைக் குறை; பேச்சில் ஈடுபடு’ என்கிற அளவுக்கு அதிகம் பேசுகிறவர்களாக ஆகிப்‌போனோம். நேரில் சந்தித்து அரட்டையடிப்பது போல தொலைபேசியிலும் மணிக்கணக்கில் அரட்டை அடிப்பது சகஜமான நிகழ்வாகிப் போய்விட்டது இன்று. உலக அளவில் செல்பேசி உபயோகிப்பவர்களில் இந்தியாவுக்கு முதலிடம் என்கிறது புள்ளி விவரம். அதிலும் தமிழ்நாட்டில் அதன் பங்களிப்பு அதிகம் இருக்கும் என்பது என் யூகம்.

ஒருவரைச் சந்திக்க நேரம் வாங்கியிருந்து, அதை கேன்சல் செய்ய வேண்டியிருந்தால், ‘‘சார்... உங்க வீட்டுக்கு வரலாம்னுதான் கெளம்பிட்டே இருந்தேன். திடீர்னு ஊர்லருந்து என் சித்தப்பா வந்துட்டாரு. வராத மனுஷன், ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்காரேன்னு தவிர்க்க முடியலை. கூட இருந்து ஊர் சுத்திக்காட்ட வேண்டியிருக்குது. நான் நாளைக்கு உங்களைச் சந்திக்கட்டுமா?’’ என்று பேசுவார்கள். உங்கள் வீட்டுக்கு யார் வந்தார்கள், அவருடன் என்ன செய்யப் போகிறீர்கள் போன்ற விவரங்கள் அவருக்குத் தேவையா என்ன? இத்தனை வார்த்தைகளை விரயம் செய்வதற்குப் பதிலாக சுருக்கமாக, ‘‘சார்! எதிர்பாராம கெஸ்ட் வந்துட்டாங்க வீட்டுக்கு. இஃப் யூ டோண்ட் மைண்ட், நாளைக்கு சந்திக்கிறேன்’’ என்று சொல்லலாம்தானே!

அதிலயும் பெண்கள் பேச ஆரம்பிச்சுட்டா நிறுத்தறதே இல்லிங்க. ஒருமுறை பஸ்ல பயணிச்சப்ப ஒரு பெண் கிண்டியிலருந்து கோயம்பேடு வரை - ஏறத்தாழ 45 நிமிஷம் - மொபைல்ல பேசிட்டே வந்ததைப் பார்த்து வியந்திருக்கேன், பெண்கள் எப்படி அரட்டையடிப்பார்கள் என்பதை அருகிலிருந்து கவனிககும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது சமீபத்தில், ஒருநாள் சரிதாவுக்கு செல்பேசி அழைப்பு வந்தபோது அவள் பேசுவதைக் கவனித்தேன், நோ... நோ... ஒட்டுக் கேட்கும் ரகமில்லை நான். ஏதாவது நல்ல விஷயம் கிடைத்தால் உங்களுக்கும் சொல்லலாமேன்ற பொதுநல நோக்கத்துலதான்... ஹி... ஹி...

‘‘ஹலோ... சரிதாவா..? நான் இந்திரா பேசறேன்...’’

‘‘ஹாய் இந்தூ...! என்ன ரொம்ப நாளா போனையே காணோம்?’’

‘‘அதுவா? ஃபாமிலி டூரா காசிக்குப் போயிட்டு வந்தேன்டி. போறதுக்கு முன்னாலயே போன் பண்ணி சொன்னேனே... மறந்துட்டியா/’’

‘‘சொன்னதா நினைவில்லையே... மறந்துட்டேன் போலருக்கு. ஸாரிடி. காசிப் பயணம் எப்படி இருந்தது?’’

‘‘ஃபைன். காசியில நம்ம ஊர் மாதிரி தள்ளி நின்னு சாமி தரிசனம் பண்ண வேண்டியதில்லை தெரியுமோ? சாமியை நாமே கையால தொட்டு அபிஷேகம் பண்றவரை அனுமதிக்கறா. பனியில, நதிக்கரை ஸ்நான அனுபவம் இருக்கே...  அனுபவிச்சுதான் தெரிஞ்சுக்கணும். அப்புறம்...’’

-இப்படி பத்து நிமிடங்கள் பேசியபின்....

‘‘ஆமாண்டி. சூர்யா அவ்வளவு கஷ்டப்பட்டு நடிச்சும் மாற்றான் எனக்குப் பிடிக்கலை இந்து. அதுசரி, உன் ஹஸ்பெண்டுக்கு கை முறிஞ்சு கட்டுப் போட்டிருந்தாங்களே... இப்ப சேர்ந்துடுச்சா?’’

‘‘என் ஹஸ்பெண்டுக்கு கைல கட்டா...? அவர் போய்ச் சேர்ந்து 5 வருஷம் ஆச்சே? என்ன உளர்றே?’’

‘‘ஹல்லோ... நீங்க இந்திரா சந்திரசேகர்தானே?’’

‘‘இல்லை. நான் இந்திரா செல்வகுமார் . நீங்க சரிதா ராஜேந்திரன்தானே?’’

‘‘இல்லீங்க. நான் சரிதா கணேஷ். ஸாரி... நம்பரைப் பாக்காம உங்ககூட பேசிட்டே இருந்துட்டேன். உங்க குரல்கூட என் ஃப்ரண்டு இந்திரா குரல் மாதிரி இனிமையா இருககுது.’’

‘‘ஸாரிங்க. நானும் அப்படித்தான். உங்க பேச்சு ரொம்ப சுவாரஸ்யமா இருக்கறதுல என்ன நம்பர் போட்டேன்னு கவனிக்கலை. அதுசரி, நீங்க எந்த ஏரியாவுல இருக்கீங்க?’’

-இப்படித் தொடர்ந்து இன்னும் இருபது நிமிடங்கள் பேசிவிட்டுத்தான் வைத்தாள். ராங் நம்பரிலேயே 30 நிமிடங்கள் பேச முடிந்ததென்றால் சரியான நம்பர் போட்டிருந்தால்... எத்தனை மணி நேரம் பேசியிருப்பாளோ? எனக்குத் தலைசுற்றி விட்டது.

செந்நாப்போதார் சொன்னபடி நா காவாமல், ‘‘ராங் நம்பர்கிட்ட கூடவாடி 30 நிமிஷம் பேசுவ? செல் பில் ஏன் எகிறாது பின்ன?’’ என்று நான் சொன்னது தப்பாகி விட்டது. ‘‘ஆமாங்க. இன்கமிங் காலை நான் பேசினதுக்கு உங்களுக்கு பில் எகிறும்தான். இதே உங்க அம்மாவு்க்கும், தங்கைக்கும் கால் போட்டு, கால் மணி நேரத்துக்கு மேல நீங்க பேசறது ஃப்ரீ தானே? உங்க வீட்லன்னா செடி கொடி நல்லா வளர்ந்துச்சான்னுகூட விசாரிப்பீங்க. அவ்வளவு பாஆஆசம்! அதுலயும் உங்க தங்கைக்காரி இருககாளே...’’ -இதன்பின் அவள் 15 நிமிடங்களுக்கு இடைவிடாமல் சஹஸ்ரநாம அர்ச்சனை செய்த விஷயம் நமக்குள் இருக்கட்டும். இங்கு நான் சொன்னால் என் மதிப்பு குறைந்து விடும்.

அதற்காக எல்லாரும் மணிரத்னம் பட டயலாக் மாதிரி, ‘நிப்பாட்டணும்’ ‘எப்படி இருக்க?’ என்று இரண்டு வார்த்தைகளாக கஞ்சத்தனமாகப் பேச வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. தேவையற்ற வார்த்தைகளைக் குறைக்கலாம் என்பதுதான் என் கட்சி. பொதுவாகவே நான் அளவாகப் பேசுபவன். இந்த அறிவுரையை மற்றவர்களுக்குச் சொல்வதற்கு முன், நாமே கடைப்பிடித்தால்தானே நன்றாயிருக்கும் என்று சென்ற வருடத்தில் மிகச் சுருககமாகவே நேரிலும் ‌தொலைபேசியிலும் பேசினேன். வார்த்தைகளைக் குறைத்துப் பேசியதில் மனம் அமைதியாக இருந்தது. அமைதியை அனுபவித்தேன்.

எல்லாம் சில நாட்கள்தான். அன்றைக்கு வீட்டுக்கு வந்த என் சித்தி, ‘‘என்னடா ஆச்சு உனக்கு? முன்னல்லாம் பத்து வார்த்தையாவது பேசிட்டிருந்த? இப்ப நாலு வார்த்தை பேசறதுக்கே காசு கேப்பே ‌போலருக்கே? அப்பப்ப போன் பண்ணி எப்படியிருக்கீங்க, என்னன்னு கேட்டு கொஞ்சநேரம் பேசினா முத்தா உதிர்ந்துடும்? உறவுன்றது பின்ன எதுக்குடா இருககு? நாலு வார்த்தை ஒட்டியும் ஒட்டாமலும் வேண்டா வெறுப்பாப் ஏதோ கடனுக்குப் பேசற மாதிரியே இருக்கு நீ பேசறது... அன்பா ஒரு பத்து நிமிஷம் பேச முடியாதபடி அவ்வளவு பிஸியாயிட்டியா?’’ என்று ஆரம்பித்து கடுமையாக டோஸ் விட்டார். ‘ஙே’யென்று விழித்து அசடு வழிந்து சமாளித்தேன்.

இ‌தேதடா வம்பாப் போச்சு. வளவளவென்று பேசினால் நேர விரயம். சுருககமாகப் பேசினால் உம்மணாமூஞ்சி, ஜடமா? பின்ன மனுஷன் எப்படித்தான்யா பேசறது? சரி... உறவுகள், நட்புகள் கிட்ட கொஞ்சம் வார்த்தைகளை விரயம் செஞ்சே பேசலாம். மற்ற எல்லாரிடமும் சுருககமாய்ப் பேசலாம் என்று முடிவெடுத்து அதை செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஆனால் மனக்குரல் மட்டும், ‘‘இப்படி பேசத் தெரியாம யோசிச்சு மண்டை காஞ்சு அலையறதுக்கு பேசாம மெளன விரதம்னு சொல்லி, பேசாமலேயே இருந்துடலாம்’’ என்கிறது. யப்பா... ஒரே கன்ஃப்யூஷன்!
 

Thursday, November 1, 2012

சிரித்திரபுரம் - 7

Posted by பால கணேஷ் Thursday, November 01, 2012
மன்னிக்கவும்.

சிரித்திரபுரம் இப்போது நாவல் வடிவம் பெறுவதால்
இங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது. 

பொறுத்தருள்க.

Monday, October 29, 2012

பிரமிக்க வைக்குது ஃபிஜித் தீவு

Posted by பால கணேஷ் Monday, October 29, 2012
‘‘பூலா! பூலா!! லாக்கமாய்!!!’’

எனக்கு என்ன ஆச்சோன்னு யோசிக்கறீங்களா? ஒண்ணுமில்லீங்க. ‘‘வணக்கம்! வணக்கம்!! வாங்க!!!’’ அப்படிங்கறதைத்தான் பிஜியர்களின் மொழியில் சொன்னேன். உபயம் - ஃபிஜித் தீவு (கரும்புத் தோட்டத்திலே...) நூலின் ஆசிரியர் துளசி கோபால். நம்ம துளசி டீச்சர் தாங்க!  கோபால் சாரோட பணி நிமித்தமா ஆறு வருடங்கள் பிஜித் தீவில் வாழ்ந்திருந்த சமயம் அங்க அவங்க கவனிச்ச எல்லாவற்றையும் இந்த புத்தகத்துல விரிவா எழுதியிருக்காங்க.

பிஜித் தீவில் தமிழர்கள் குடியேறிய விதம், தமிழர்களுடன் சம அளவில் குஜராத்திகளும் அங்கு வாழ்வதன் பின்னணி, ஃபிஜித் தீவு மக்களின் கலாசசாரம், வாழ்க்கை முறை, தீவி்ன் எழில், அவ்வப்போது விஸிட் அடிக்கும் புயல் விளைவிக்கும் கோரம், தத்துப் பிள்ளைகள் எளிதாகக் கிடைப்பது, பெண் கர்ப்பமானால் புரளி பேசியே சாகடிக்கும் பழக்கம் அங்கில்லை என்பது போன்ற விவரங்கள், ஃபிஜி்த் தீவின் அரசியல் வரலாறு -இப்படி எல்லாக் ‌கோணங்கள்லயும் அந்தத் தீவை அலசிப் பிழிஞ்சு காயப் போட்டிருக்காங்க துளசி கோபால்.

புத்தகத்தைப் படிச்சு முடிச்சப்புறம், முன்னபின்ன ஃபிஜித் தீவைப் பார்த்திராதவங்க கிட்ட, நீங்களே அங்க பல வருஷம் வாழ்ந்ததா ரீல் விட்டு மணிக் கணககாப் பேசி அசத்தலாம். (நான் அந்த மாதிரி யார்ட்டயும் டூப் விடலீங்கோ!) அந்த அளவுக்கு தகவல்கள் கொட்டிக் கிடக்குது. அதுக்காக ஒரே புள்ளி விவரங்களும், தகவல்களுமா போரடிக்கிற புத்தகம்னு மட்டும் நினைச்சிடாதீங்க.
 துளசி டீச்சருக்கே உரித்தான இயல்பான நகைச்சுவை ததும்பற நடையில ஒரு கதைப் புத்தகம் படிக்கிற சுவாரஸ்யத்தோடதான் புத்தகத்தைப் படிக்க முடியுது.  தான் சந்திச்ச, கவனிச்ச அனுபவங்களின் ஊடாக நிறையத் தகவல் அறிவையும் தேன்ல மருந்தைக் கலந்து கொடுக்கற மாதிரி நமக்குள்ளே புகுத்திடறாங்க நூலாசிரியர்.

புத்தகத்தின் மின்னல்களில் சில : ஒரு சமயம் புயல் அடிச்சு ஓய்ஞ்ச நேரம் காரை எடுத்துக்கிட்டு வெளிய சுத்தறாங்க.  அப்ப...

வ்வளவா சேதாரம் இல்லைன்னு வீட்டுக்கு திரும்பி வந்துக்கிட்டு இருக்கோம். நம்ம தெருமுனைக்கு வரும்போது ஒரு பெரிய சத்தத்துடன் காத்து கிளம்புது. அப்படியே வண்டியை தூக்கப் பாக்குது. அடிச்சுப் புடிச்சு வீட்டுக்குள்ள போயிட்டோம். அப்புறம் தொடர்ந்து ஒரு 25 நிமிஷம் புயலடிச்சது பாருங்க... ஒரே நடுக்கம்தான்! கடைசியில்தான் விவரம் தெரியுது-

பெரிய புயல் சுழிச்சு சுழிச்சு உருவாகும் போது அதுக்கு நடுவில ஒரு வெற்றிடம் இருக்குமாம். அதுக்கு ‘புயலின் கண்’ னு பெயராம். (Eye of the Cyclon) அந்த இடம் கடக்கும்போது ரொம்ப அமைதியா இருக்குமாம். காலி இடமாச்சே! அதைத்தான் புயல் நின்னு போச்சுன்னு நினைச்சுக்கிட்டு ஊர் சுத்திட்டு வந்திருக்கோம். அவ்வளவு நேரம் அமைதியாக் கடந்திருக்குன்னா, எவ்வளவு பெரிய புயலா இருக்கணும் பாருங்க!

* (ஃபிஜித் தீவின் கடற்கரையில்) பகலுணவுக்கு மணி அடித்தவுடன் அனைவரும் போய் தட்டுகளில் அவற்றை எடுத்துக் கொண்டு திரும்ப மணல்வெளியில் அமர்ந்து சுற்றிலும் உள்ள கடலை ரசித்த படி உண்ணலாம். கட்டிடத்தி் உள்ளேயும் அமரலாம். ஆனால் எல்லாரும் வெளியே இருக்கவே விரும்புவார்கள். ஆழம் மிகக் குறைவாகவே இருக்கும் என்பதால் கரையை ஒட்டி இருக்கும் தண்ணீரில் குழந்தைகளைப் பயமின்றி விளையாடவும் விடலாம்! ஒரு பெயருக்குக் கூட அலை என்ற சமாச்சாரம் இருக்காது. அமைதியான ஒரு குளம் போன்றே இருக்கும் இந்தக் கடல் பகுதி! ‘ஸ்நோர்கேல்’ செய்யும் உபகரணங்கள் வழங்கப்படுமாதலால் தண்ணீரில் குப்புற மிதந்தபடி, தெளிவான கடலின் அடியில் இருக்கும் காட்சிகளையும் கண்டு மகிழலாம்.

* ஃபிஜியின் பழங்குடி மக்களுக்கு அவசரத் தேவைக்கு பணம் வேண்டுமானால் அடகுக் கடைக்குப் போவார்கள். இதிலென்ன அதிசயம்! அதிசயம்தான்! அது இவர்கள் அடகு வைககும் பொருள்! இந்தியர்களுக்கு நகை, நட்டு எவ்வளவு மதிப்பு வாய்ந்ததோ அதே மதிப்பு இவர்களுக்கு இருப்பது இன்னொரு பொருள் மீது. அது பல்! சாதாரணப் பல் அல்ல, ‘திமிங்கலப் பல்!’ இதன் அளவைப் பொறுத்து இதன் மதிப்புக் கூடும். ஒரு ‘பல்’லைக் கயிற்றில் கோர்த்து மாலையாகக் கழுத்தில் அணிவார்கள். சிறிய பல் என்பது ஒரு ஆறு அங்குல அளவில்(!) இருக்கும். இதன் உருவம் ஃபிஜி நாணயத்திலும் பதிக்கப்பட்டு்ள்ளது. மதிப்புக்கு உரியவர் என்று இவர்கள் நினைக்கும் நபர்களுக்கோ, அல்லது மிகவும் மரியாதைக்குட்பட்ட விருந்தினருக்கோ இந்த ‘பல் மாலை’ அணிவிப்பார்கள்.

* அட்ரெனலின் வாட்டர் ஸ்போர்ட்ஸ். மனுஷனுக்கு பயத்துலே கத்தணுமாம். குடல் வந்து வாய்க்குள்ள விழுந்தாப் போலே அலறணுமாம். ஃப்ளையிங் ஃபிஷ்ன்னு ஒண்ணு. கையில பிடிச்சுக்க வாகாய் ஒண்ணுமே இல்லாத ரப்பர் / பிளாஸ்டிக் மிதவை. அதுலே உக்கார்ந்துக்கிட்டு காலை மட்டும் கீழே இருக்கும் ஒரு பட்டையில் நுழைச்சுக்கணும். இதை ஒரு விசைப்படகு வேகமா இழுத்துக்கிட்டுப் போகும். அந்த வேகத்துக்கு இது துள்ளித் துடிச்சு, மேலேயும் கீழேயுமாப் பறந்து விழுந்துன்னு... அதுலே இருக்கும் மக்கள் கத்திக் கதறி.... இதுக்கு 29 டாலர் டிக்கெட் :))))   நான் மட்டும் இந்த விளையாட்டை நிர்வகிக்கும் ஆளா இருந்தா... அவுங்களுக்கு லைஃப் ஜாக்கெட் போடும் போதே... வாய்க்கும் ஒரு ப்ளாஸ்டர் போட்டு இருப்பேன். இப்பக் கத்துங்க பார்க்கலாமுன்னு... :)))))

-இப்படித்தாங்க... எளிமையான சுவாரஸ்யமான நடையில நிறைய விஷயங்களையும் இந்த புத்தகத்துல இருந்து தெரிஞ்சுககிட்டேன். எனக்குக் கிடைச்ச அந்த அனுபவத்தை நீங்களும் பெறணும்னு விரும்பினீங்கன்னா... 208 பக்கங்கள் கொண்ட இந்தப் பயனுள்ள புத்தகத்தை சென்னை அசோ்க் நகர்ல 9வது அவென்யூவுல 53வது தெருவுல பு.எண்.77ல இருக்கற சந்தியா பதிப்பகம் ரூ.120 விலையில வெளியிட்டிருக்காங்க. போய் வாங்கிக்குங்க. அது செளகரியப்படாதவங்களுக்காக அவங்களோட தொலைபேசி எண் : 044-24896979 ங்கறதையும், www.sandhyapublications.com ங்கற அவங்களோட இமெயில் ஐடியையும் தெரிவிச்சுக்கறேன்.
===================================
பின்குறிப்பு : இந்த புத்தகத்துக்கு என்னைவிட அருமையா என் ஃப்ரண்ட் (என் நண்பரின் மனைவி) விமர்சனம் எழுதியிருந்தாங்க. அதைப் படிச்சதும் தான் இந்த நூலைப் படிக்கணும்னு குறிச்சு வெச்சுக்கிட்டேன். இங்க க்ளிக்கி அதை நீங்க படிக்கலாம்.
===================================

Saturday, October 27, 2012

சிரித்திரபுரம் - 6

Posted by பால கணேஷ் Saturday, October 27, 2012
மன்னிக்கவும்.

சிரித்திரபுரம் இப்போது நாவல் வடிவம் பெறுவதால்
இங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது. 

பொறுத்தருள்க.

Friday, October 26, 2012

மொறு மொறு மிக்ஸர் - 14

Posted by பால கணேஷ் Friday, October 26, 2012

தெள கீர்த்தனாரம்பத்திலே... லோகத்திலே நல்ல விஷயங்களைச் சொல்றவா குறைஞ்சு போயிட்டா இந்தக் காலத்துல. அதனால நாம நல்லதா சில வார்த்தைகளை முதல்ல காதுல போட்டுண்டுரலாம். அப்புறமா மனசுலயும் போட்டுக்கலாம்...  இந்தப் புள்ளையாண்டான் வெளிநாட்டுக்காரனா இருந்தாலும் எவ்வளவு ‌ஜோராச் சொல்லியிருக்கான் பாருங்கோ...

)- நீ காட்டுவதை விட அதிகமாக வைத்திரு. நீ அறிந்தவற்றை விடக் குறைவாகப் பேசு. உன்னிடம் இருப்பதைவிடக் கொஞ்சமாகக் கொடு.

)- நீ கொடுப்பது பெரிய கொடையாக இருந்தாலும் அன்பு இன்றிக் கொடுத்தால் அது கொடையாகாது. தேய்ந்து போகும்.

)- உன்னுடைய நோக்கத்தை வாளின் மூலம் சாதிப்பதைவிட நகை முகத்தால் சாதிக்கக் கற்றுக் கொள்!

                                                                                                -ஷேக்ஸ்பியர்

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

‘நன்றி’ என்கிற வார்த்தை ஏனோ நிறையப் பேரின் அகராதியில் மிக அபூர்வமான ஒரு வார்த்தையாகவே இருக்கிறது. ஓட்டலில் உங்களின் விருப்பத்தையும், அவசரத்தையும் புரிந்து உடனே கவனிக்கும் சப்ளையருக்கோ, பெட்டிக் கடையில் அல்லது அருகில் நிற்பவரிடம் விலாசம் விசாரித்து அவர்கள் வழி ‌சொல்லும் போதோ... இதுபோன்ற பல சந்தர்ப்பங்களில் ‘நன்றி’ என்ற ஒற்றைச் சொல்லை உதிர்க்காமல் பலர் சென்று விடுவதைக் கண்டிருக்கிறேன் நான்.

ஐரோப்பிய நாடுகளில் அதிகம் உச்சரிக்கப்படும் மூன்று வார்த்தைகள் ‘வணக்கம், நன்றி, குட்பை’ ஆகியவைதான் என்று படித்திருக்கிறேன். அங்கெல்லாம் பணம் கொடுத்துப் பொருள் வாங்கும் வாடிக்கையாளரிடம் ‘நன்றி’ என்பார் கடைக்காரர் சில்லறை பாக்கியை கடைக்காரர் தரும் போது வாடிக்கையாளர் ‘நன்றி’ என்பார். ‘நன்றி’ என்கிற எளிய சொல்லும், ஒரு குறுநகையும் நிறையச் சாதிக்கும்.

நியாயமான தொகை கேட்கும் ஆட்டோக்காரருக்கு, கவுண்ட்டிங்கில் ஃப்ராடு பண்ணாமல் பெட்ரோல் போடும் பங்க் காரருக்கு, குறைந்த தொகை வாங்கும் மருத்துவருக்கு, தொகுதிப் பக்கம் வந்து நற்பணி செய்யும் (அப்படி எவரேனும் இருந்தால்) அரசியல் பிரமுகருக்கு, உங்களுக்காக வாகனங்களை நிறுத்தி நடக்க வழி செய்து தரும் போக்குவரத்துக காவலருக்கு இப்படி பல சந்தர்ப்பங்களில் ‘நன்றி’ சொல்லப் பழகலாம் நாம் என்பது என் கருத்து. அந்தச் சொல் தரும் உற்சாகம் அவர்களை நிஜமாகவே சிறப்பாகச் செயல்பட வைக்கும்.

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

க்காலத் திரைப்படப் பாடல்கள் தமிழ்ப் பாடல்களாக இல்லாமல் ஆங்கிலம் கலந்து வருகின்றன. சில சமயங்களில் தமிழை விட ஆங்கிலம் மிகுதியாக இருக்கிறது என்பதை முன்பொரு பதிவில் அங்கலாய்த்திருந்தேன். எ‌தேச்சையாக பழைய ‘குமுதம்’ இதழ் ஒன்றைப் புரட்டியபோது இந்தத் தகவல் கண்ணில் பட்டது. மிக வியப்பாக இருந்தது எனக்கு.



=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

கும்பகோணத்தில் மாடத்தெருவில் இருந்தது டாக்டர் பி.ஜி.கிருஷ்ணனுடைய வீடும் ஆஸ்பத்திரியும். கீழே குடித்தனம், மாடியில் டிஸ்பென்சரி என்று வைத்துக் கொண்டிருந்தார். வாசல்புறமாக இருந்த மாடிப்படி மிகமிகச் ‌செங்குத்தாக இருக்குமாகையால் அதில் ஏறிப் பழக்கப்பட்ட அவ்வளவு பேருக்கும் அதில் இருப்பது 32 படிகள் என்பது நெட்டுருப் பாடம்!

மாடியில் டாக்டரின் அறைக்கு வெளியே டாக்டர் உட்காருவதற்காக மேஜையும், நாற்காலியும் போட்டிருக்கும். மேஜை நிறையப் புஸ்தகங்களாக அடுக்கியிருக்கும். டாக்டரின் நாற்காலியைத் தவிர இன்னோர் நாற்காலியும், ஓர் ஒற்றை பெஞ்சும் அங்கே காணப்படும். ஒற்றைப் பெஞ்சில் நெருக்கமாக நாலு பேர் உட்காரலாம்; அப்பது ஒருவர் முழங்காலுக்குக் கீழே தொங்க விட்டுக் கொள்வதானால் தாராளமாகப் படுக்கலாம். இந்த பெஞ்சியைக் காலியாகப் பார்த்திருக்கும் இருவர் இரவில் கடைசியாக அறையைப் பூட்டும் கம்பவுண்டரும், காலையில் விளக்குமாற்றுடன் வரும் வேலைக்காரியுமாகத் தான் இருக்க வேண்டும்!

                                                                        -‘கல்யாணி’ நாவலில் தேவன்

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

விச்சந்திரன் நடித்து ‘மதறாஸ் டு பாண்டிச்சேரி‘ என்று ஒரு படம் நான் பிறந்த குழந்தையாக இருந்த ஆண்டில் வெளியாகி வெற்றி பெற்றது. அந்தத் திரைப்படத்தை இந்தியில் மெகமூத் என்று ஒரு தயாரிப்பாளர் ‘பம்பாய் டு கோவா’ என்ற பெயரில் எடுத்தார். அமிதாப்பச்சன் நடித்தும் அப்படம் இந்தியில் பப்படமாகியது.

இதில் ஒரு ஆச்சரியத் தகவல் என்னவென்றால் மெகமூத் அந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க முதலில் அணுகியது அப்போதைய பாரதப் பிரதமரின் மகனை.

இந்திராகாந்தியின் மகனான ராஜீவ் காந்தியிடம் அவர் நடிக்க வேண்டுகோள் வைக்க. ராஜீவ் மறுத்து விட்டதால் அவரது நண்பரான அமிதாப் நடித்திருக்கிறார். 

‘த ஹிந்து’வின் ஞாயிறு இணைப்பில் இந்தச் செய்தியைப் பார்த்தபோது மிக வியப்பாக இருந்தது எனக்கு. உங்களுக்கு...?


 =*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

ரஸ்வதி பூஜை தினத்தன்று யதேச்சையாக விஜய் டிவி வைத்த போது ‘துப்பாக்கி’ படம் பற்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சொல்லிக் கொண்டிருந்தார். ‘‘ஹீரோ ஒரு பரபரப்பான கேரக்டர்ங்க. மூணு வேலைய ஒரே நேரத்துல செஞ்சிட்டிருப்பாரு. செஞ்சிட்டிருக்கும் போதே நாலாவது வேலையப் பாக்கப் போயிடுவாரு. அந்த வேலை முடியறதுக்குள்ளயே அஞ்சாவது வேலையில இறங்கிடுவார். அப்படி ஒரு டைப்’’ -இப்படிச் சொன்னார் அவர். ஆகக்கூடி ஹீரோ உருப்படியா ஒரு வேலையும் செய்யத் தெரியாதவன்னுதானே அர்த்தமாகுது. என்னங்ணா இது? ஹி... ஹி...

Wednesday, October 24, 2012

சிரித்திரபுரம் - 5

Posted by பால கணேஷ் Wednesday, October 24, 2012
மன்னிக்கவும்.

சிரித்திரபுரம் இப்போது நாவல் வடிவம் பெறுவதால்
இங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது. 

பொறுத்தருள்க.

Monday, October 22, 2012

மனம் திருடிய ‘குபேரவனம்’

Posted by பால கணேஷ் Monday, October 22, 2012

ரித்திரக் கதை அல்ல; ஆனால் சரி்திரம் பேசும்! காதல் கதை அல்ல; ஆனால் காதலைப் பற்றிப் பேசும்!  மாயமந்திரக் கதையல்ல; ஆனால் மர்மமான நிகழ்வுகளைப் பற்றிப் பேசும்! குடும்பக் கதை அல்ல; ஆனால் குடும்பப் பெருமைகளைப் பற்றிப் பேசும்! -இப்படி ‘குபேரவனக் காவல்’ நூலாசிரியர் தன் உரையில் சொல்லியிருந்தது படிப்பதற்கான என் ஆவலை ஏகத்துக்கும் விசிறி விட்டது. படிக்கத் துவங்கினேன்.

செல்வங்களுக்கு அதிபதியான குபேரனின் வனத்தைக் காவல் காத்து வந்த புருஷாமிருகம் அபார ஆற்றல் பெற்றது. குபேர வனத்திற்குள் பிரவேசிக்கும் எவரையும் நொடியில் விழுங்கி விடும். தர்மரின் யாகத்திற்கு குபேரனை அழைக்க வந்த பீமன் (கண்ணன் ஆலோசனையின் பேரில்) புருஷாமிருகத்திடம் ‘வரும்போது என்னை விழுங்கு’ என்று சொல்லி குபேரனைப் பார்த்துவிட்டு, வருகையில் ஓட்டமெடுக்கிறான். துரத்தி வரும் புருஷாமிருகத்தின் முன் கண்ணன் தந்த 12 கற்களில் ஒன்றைப் போட கல், லிங்கமாக மாறுகிறது. சிவபக்தியில் தலைசிறந்த புருஷாமிருகம் சிவலிங்கத்தைக் கண்டால் குளித்து பூஜை செய்துதான் மற்ற வேலை செய்யும். எனவே அது சென்று விட, ஓடுகிறான். பூஜை ‌செய்து மீண்டும் துரத்துகிறது மீண்டும் கல் - லிங்கம். இப்படியே 11 முறை செய்து 12வது முறை அஸ்தினாபுர எல்லையை தொட்டுவிட்ட சமயத்தில் அதனிடம் அவன் கால் சிக்குகிறது அதனிடம் சிக்கிய கால் புருஷாமிருகத்திற்கே உரியது, அதை வெட்டித்தா என்று தர்மர் கூற, புருஷாமிருகம் அவர் நேர்மையில் மகிழ்ந்து பீமனை விட்டு விடுகிறது. பூமிக்கு வந்த அது சிவாலயங்களில் காவல் காக்கும் பணியைச் செய்கிறது.

புருஷாமிருகம் குபேரவனத்தை விட்டு நீங்கினால் தன் சக்தியை ம்ருகரஞ்சிகா என்கிற யட்சிணியிடம் தந்து, வனத்தை காவல் காக்க நியமிக்கும். ஒருமுறை ஒரு கந்தர்வன் குபேரவனத்திற்குள் நுழைந்துவிட, புருஷாமிருகத்தின் சக்தி பெற்ற ம்ருகரஞ்சிகா துரத்துகிறாள். இறைவன் அருளால் 11 ஜென்மங்களில் அவன் அவளிடமிருந்து தப்பி விடுகிறான். 12வது ஜென்மமாக 1919ல் சிதம்பரத்தில் ‘புரு‌ஷோத்தமன்’ என்ற பெயரில் பிறக்கிறான் அந்த கந்தர்வன்.

ஜாதகம், கைரேகை இவற்றை பார்க்காமல் மனித உடலில் உள்ள நாடிச் சக்கரங்களின் ஒட்டத்தைக் கொண்டு எதிர்காலத்தைத் துல்லியமாகக் கூறுபவர்கள் சகடவாக்கியர் எனப்படுவர்.அப்படி சகடவாக்கியான குடும்ப நண்பர் நம்பாடுவான், புருஷ்ஷின் பூர்வ பிறவிகளைப் பற்றியும், யட்சிணி துரத்துவதையும் எடுத்துக்கூறி, இந்தப் பிறவியில் அவளிடமிருந்து தப்பினால் இனி பிறவி கிடையாது என்கிறார். யட்சிணியின் தோற்றம் எப்படி இருக்கும் என்பதையும் விவரிக்கிறார். பதினொரு ஜன்மங்களாக அவனை அழிக்கத் துரத்தி வரும் யட்சிணியின் கண்ணில் படாமல் புருஷ் வாழ்ந்துவிட இயலுமா என்ன? இப்பிறவியிலும் யட்சிணியைச் சந்தித்து விடுகிறான்.

ப்படி ஒரு பரபரப்பான நிலைக்களத்தை அமைத்து, அவன் யட்சிணியிடம் சிக்கினானா? தப்பினானா? எனில் எப்படி? அவனுக்காய் யட்சிணி என்னவெல்லாம் செய்தாள் என்பது போன்ற பல கேள்விகளுக்கு வெகு சுவாரஸ்யமாக தன்னுடைய 4வது நாவலான ‘குபேரவனக் காவல்’ நூலில் விடை தந்திருக்கிறார் நூலாசிரியர் திரு.‘காலச்சக்கரம்’ நரசிம்மா. புதன்கிழமை காலையில் புத்தகத்தைக் கையிலெடுத்த நான், வியாழன் மாலைக்குள் 432 பக்கங்களையும் கீழே வைக்க மனமில்லாமல் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டுத்தான் வைத்தேன்.

ரபரப்பான ஒரு க்ரைம் த்ரில்லரின் ஊடாக மெலிதான ஆன்மீக, புராணப் பின்னணியைக் கொண்டு, பயனுள்ள பல தகவல்களையும் ஆங்காங்கே அள்ளித் தெளிக்கும் (இந்திராசெளந்தர்)ராஜ ரகசியம் திரு.‘காலச்சக்கரம்’ நரசிம்மாவுக்கும் நன்கு கைவரப் பெற்றிருககிறது. இந்த த்ரில்லரின் ஊடாகவும் அவரின் சிந்தனைகள் அங்கங்கே சிறகு விரித்துப் பறந்து கருத்துக் குவியல்களை நம்முன் கொட்டியிருக்கிறது. எனக்கு மிகப் பிடித்த இரண்டை இங்கே சாம்பிள்களாகத் தருகிறேன் :

===============================

‘‘ஒரு மனநல மருத்துவரோட புத்தகத்தைப் படிச்சேன். நம்ம நெத்தி மையத்துல இருக்கற திங்கிங் டிஷ்யூவை அலைகளால பாதிக்கச் செய்ய முடியுமாம். உதாரணத்துக்கு ‘குளிர் காத்து வீசுது’ன்னு நியூரான் செல்கள் திங்கிங் டிஷ்யூவுக்கு மெசேஜ் அனுப்புது. உடனே ‘ஸ்வெட்டர் போட்டுககோ’ன்னு திங்கிங் டிஷ்யூவும் பதில் மெசேஜ் அனுப்புது. அதனால உடனே ஸ்வெட்டர் போட்டுக்கறோம். இந்த திங்கிங் டிஷ்யூ, நம்ம நியூரான் செல்லுல ஏற்படற மின்சார அதிர்வலை மூலம் மெசேஜ் வாங்கி தன் உத்தரவை மூளைக்கு செலுத்தறது. அந்த நியூரான் செல்லுல இருந்து திங்கிங் டிஷ்யூவுக்கு மெஸேஜ் போகாதபடி வெளி அலைகள் மூலமா அந்த திங்கிங் டிஷ்யூவை கட்டுப்படுத்த முடியும்.

அந்த வெளி சக்தி இருக்கற உணர்வலைகளைத்தான் நாங்க வசியம்னு சொல்றோம். அந்த வெளி சக்திகள் நம்ம திங்கிங் டிஷ்யூவை பாதிக்கக் கூடாதுங்கறதுக்காகத்தான் நாங்க நாமம், திருநீறு, பொட்டுன்னு வெச்சு்கறோம். இந்த வசிய மையை நெற்றியில வெச்சா, வசியம் செய்யறவங்களோட எண்ண அலைகள், மை வச்சுட்டு இருக்கிறவங்களோட எண்ண அலைகளைத் தாக்கி தங்கள் இஷ்டப்படி அவங்களை ஆட்டிப் படைகக முடியும்...’’

‘‘மைகாட்! 20ம் நூற்றாண்டுல கூடவா இப்படி..!’’ மாடில்டா அசந்து போனாள்.

அமுதன் சிரித்தான். ‘‘நீங்க பிளாக் மாஜிக்கை சயன்ஸ் கண்ணோட்டத்துல பார்க்கறீங்க. நாங்க சயன்ஸையே பிளாக் மாஜிக்கா மாத்திக் காட்டறோம். அவ்வளவுதான்...!’’

===============================

‘‘இந்த மாதிரி புருஷனோட உடன்கட்டை ஏற எவ்வளவு தைரியம் வேணும்! எனக்கு அந்‌த தைரியம் வராதுப்பா. பட், அமுதன்... புருஷனோட உயிர் துறக்கணும்னா ஏன் கோரமா நெருப்புல எரியணும்? தூக்க மாத்திரை சாப்பிட்டு அமைதியா சாக முடியாதா?’’

‘‘அப்படியில்லை மாடில்டா. எங்க நாட்டுல ‌அக்னி... அதாவது நெருப்புதான் சுத்தத்துக்கு அடையாளம்! ஃபயர் இஸ் ப்யூர்! ஒருத்தர் சுத்தமானவர்னு காட்டணுமின்னா கிராமத்துல தீ மேல நடந்து, தாங்க பரிசுத்தமானவங்கன்னு நிரூபிப்பாங்க. எங்க சீதாதேவியே அக்னிப் பிரவேசம் செய்துதான, தான் பரிசுத்தமானவள்னு நிரூபிச்சா!’’

‘‘பெண்கள் ஏன் பரிசுத்தமானவள்னு நிரூபிக்கணும்? ஆணை மாதிரி அவளும் எல்லா உரிமையோட இருக்கலாமே...?’’

‘‘நோ மாடில்டா! ஃபாதர் இஸ் பிலீஃப், மதர் இஸ் ட்ரூத்! அப்பா ஒரு நம்பிக்கை! அம்மா ஒரு உண்மை! உண்மைதான் தான் தூய்மையானதுன்னு நிரூபிககணும். நம்பிக்கை இல்லை!’’

‘‘எல்லாத்துக்கும் ஒரு விளக்கம் வெச்சிருக்கு உங்க தேசம்...’’

===============================

432 பக்கங்கள் கொண்ட ‘குபேரவனக் காவல்’ நூலை ரூ.175 விலையில் சென்னை தி.நகரில் தீனதயாளு தெருவில் 23ம் ‌எண்ணில் இருக்கும் வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. சிதம்பரம், சென்னை, கேரளா, லண்டன், உத்தரப்பிரதேசம், ஊட்டி என்று வெவ்வேறு நிலைக்களன்களின் பின்னணியில் விறுவிறுவென்று நகர்கிறது இந்தக் கதை. ‘‘நகத்தைக் கடித்தபடி சுவாரஸ்யமாகப் படிகக ஒரு புத்தகம் வேண்டும்’’ என்கிற ரகமாக நீங்கள் இருந்தால் இந்தப் புத்தகத்தைத் தவற விடாதீர்கள்!

Thursday, October 18, 2012


ங்க இலக்கியப் பாடல்களை அகப்பாடல்கள், புறப்பாடல்கள் என்று இரண்டு பிரிவுகளில் ரசிக்கலாம். தலைவனுக்கும் தலைவிக்குமான காதல் மற்றும் இல்லறம் குறித்த பாடல்கள் அகப்பாடல்கள். அரசனின் வீரம், நாட்டின் நிலை போன்ற பிற விஷயங்களைப் பற்றிச் சொல்பவை புறப்பாடல்கள். நல்ல செந்தமிழில் இருக்கும் இந்தப் பாடல்களைப் படித்ததும் உடனே புரிந்து விடாது. சற்று சிரமம் மேற்கொண்டு பொருள் புரிந்து ரசித்தீர்களாயின்... அன்றைய தமிழர்களின் கற்பனை வளமும், சொல் வளமும் பிரமிக்க வைத்து விடும்.
 
காதல் தலைவன், தன் தலைவியோடு சேர்ந்து மகிழ்ந்திருக்கிறான். அவளுடன் கூடி வாழ்தல் மட்டுமே வாழ்க்கையில்லையே...? அந்த வாழ்க்கையை நல்ல முறையில் நடத்த (எக்காலத்திலும்) பொருள் வேண்டுமே! அஃதில்லாது இவ்வுலக வாழ்வு உண்டோ? எனவே, வேறு வழியின்றி அவளிடம் விடைபெற்று பொருள் தேடுவதற்காக வெளியூர் சென்று விடுகிறான் அவன். 

தன் தலைவனைப் பிரிந்த அவளுக்கு இரவுப் பொழுது நெருப்பாக எரிகிறது. சுற்றுச் சூழலில் காண்பவையெல்லாம் அவள் இதயத்தில் எரியும் நெருப்பை விசிறி விடுபவையாகவே இருக்கின்றன. -இப்படி ஒரு சூழ்நிலையில் அமைந்த இந்தப் பாடலைப் படித்துப் பாருங்கள். பாடலின் விளக்கம் (எனக்கு்த் தெரிந்த அளவில்) கீழே கொடுத்திருக்கிறேன். விளக்கத்தைப் படித்த பின்னர் பாடலை மீண்டும் படித்துப் பாருங்கள். கூடுதலாய் ரசிக்கும் என்பதே என் நம்பிக்கை.

பகலினும் அகலா தாகி யாமம்
தவலில் நீத்தமொடு ஐயெனக் கழியத்
தளிமழை பொழிந்த தண்வால் வாடையொடு
பனிமீக் கூரும் பைதற் பானாள்
பருகு வன்ன காதலொடு திருகி
மெய்புகு வன்ன கைகவர் முயக்கத்து
ஓருயிர் மாக்களும் புலம்புவர் மாதோ
அருளி லாளர் பொருள்வயின் அகல
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து
யானென் உளனோ - தோழி! தானே
பராரைப் பெண்ணைச் சேக்குங் கூர்வாய்
ஒரு தனிஅன்றில் உய்வுக்குரல் கடைஇய
உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனக்
கனைஎரி பிறப்‌ப ஊதும்
நினையா மாக்கள் தீங்குழல் கேட்டே?

                                                               -வடவண்ணக்கன் பேரி சாத்தனார்



பாடலின் பொருள் :

கல் நேரம் நீண்டதாகிக் கொல்கிறது. இரவின் யாமங்களும் வெள்ளப் பெருக்கோடு மெல்ல மெல்லக் கழிந்தன. மேகம் கண் திறந்து மழையைப் பொழிந்து தள்ள, அதனால் வாடைக் காற்றும் வந்தது. பனி மிகுதியாகப் பொழிகின்ற, வருத்தம் தரும் நள்ளிரவு அது.

ஒருவர் உடலினுள்ளேயே மற்றவர் புகுந்துவிடுவது போல கைகளை வளைத்து அவ்வளவு இறுக்கமாகத் தழுவிக் கொண்டிருக்கிறார்கள் அந்த தம்பதி! ஒரே உயிர் போல இப்படி இணைந்திருக்கும் அவர்கள் கூடப் புலம்புவார்களா? ஆம்! புலம்புவார்கள்...! இதோ அந்தத் தலைவி இப்படிப் புலம்புகிறாள்...

இதயத்தில் சற்றும் இரக்கமில்லாத (அருளில்லாத) தலைவன் பொருள் தேடப் பிரிந்து சென்று விட்டார். அந்தத் துயரத்தை தாங்கிக் கொண்டு கனத்த துன்பமுடைய நெஞ்சத்தோடு நான் எப்படித்தான் வாழ்கிறேனோ தோழி? பருத்த அடியை உடைய பனை மரத்தில் இருந்து கூரிய அலகு படைத்த துணையில்லாத ஒரு அன்றில் பறவை ஏக்கக் குரலை எழுப்புகிறது. அது என்னுள் கனலை மூட்டி விட்டதால் உள்ளே கனல்கிறது என் உள்ளம்!

என் வருத்தம் பற்றி சற்றும் அறிந்திராத ஆயர்கள் ஆநிரைகளுக்காக இனிய புல்லாங்குழலை ஊதி இசை ‌எழுப்பி, என் உள்ளத்தின் கனலை மேலும் கொழுந்து விட்டு எரிய வைக்கிறார்களே...! இதையெல்லாம் என்னால் எப்படிப் பொறுத்துக் கொள்ள இயலும்?

--- என்ன நண்பர்களே... பாடலில் இயற்கையும் காதலும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டு வெளிப்பட்டிருப்பதை ரசீத்தீர்கள் தானே...!

Wednesday, October 17, 2012

சிரித்திரபுரம் - 4

Posted by பால கணேஷ் Wednesday, October 17, 2012
மன்னிக்கவும்.

சிரித்திரபுரம் இப்போது நாவல் வடிவம் பெறுவதால்
இங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது. 

பொறுத்தருள்க.

Tuesday, October 16, 2012

ஜாலியா கொஞ்சம் சிரிங்க...!

Posted by பால கணேஷ் Tuesday, October 16, 2012
ஹாய்... நேத்து ராத்திரி பூரா ‘சிரி’யஸா யோசிச்சு சிரித்திரபுரம் எழுதினேனுங்க. பாழாப்போன் மின்சாரத்தை திடீர்னு கட் பண்ணினதுல (யுபிஎஸ் பெய்லியர், சர்வீசுக்கு போயிருக்கு) பிசி ஆஃப் ஆயிடுச்சு. காலையில அந்த ஃபைலை ஓபன் பண்ணினா டேட்டா கரெப்டாகி உள்ள ஒரு மேட்டரும் இல்லாம என்னை ‘ஙே’ன்னு முழிக்க வெச்சிடுச்சு.

எழுதினது மனசுல இருக்கறதால நாளைக்கு அது பதிவா வந்துரும். அதுவரைக்கும் ‘மேய்ச்சல் மைதானம்’ போய் அந்தக் குதிரை மேய்ஞ்சுட்டிருந்த புல்லுல கொஞ்சத்தை திருடிட்டு வந்துட்டேன். பார்த்துச் சிரிங்க. நாளைக்கும் சிரித்திர புரத்துக்கு தவறாம வந்துடுங்க. ரைட்டா?





Saturday, October 13, 2012

மரண வியாபாரி

Posted by பால கணேஷ் Saturday, October 13, 2012

ல்ல உயரமும், ஆஜானுபாகுவான உடலமைப்பும் கொண்ட அவன் அந்த பங்களாவின் முன் வந்து நின்றான். சிவப்புநிற டிஷர்ட். இது வரை சோப்பையும் தண்ணீரையும் கண்டிராத ஜீன்ஸ், பாலீஷ் பார்க்காத ஷு, முற்றிய முரட்டு முகத்தில் இரண்டு கத்தித்தழும்புகள்.

-இதுதான் மனோகர். பணம் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் செய்பவன். யாருக்கும் பயப்படமாட்டான். யாரைப் பற்றியும் கவலைப்படவும் மாட்டான். உலகில் அவனுக்குப் பிடித்த மூன்று விஷயங்கள்: 1. பணம், 2. இன்னும் பணம், 3. மேலும் பணம்.

முகத்தில் விழுந்த முடியை முன்னுச்சி விரல்களால் தள்ளிவிட்டுக் கொண்டு கூர்க்காவை முறைத்தான் மனோகர். பீடி பிடித்துக் கொண்டிருந்த கூர்க்கா இவனைக் கண்டதும் பீடியை அவசரமாக அனைத்து காதில் சொருகிக் கொண்டு பவ்யமாக ஒரு வணக்கத்தைச் சொல்லி கேட்டை திறந்து விட்டான்.

பங்களாவின் மாடியறையில் மெல்லிய குரலில் இசை ஒலித்துக் கொண்டிருக்க, சோபாவில் சாய்ந்தபடி ஒரு கையில் மதுவையும், மற்றொரு கையில் சோடாவையும் சமமாகக் கோப்பையில் ஊற்றிக் கொண்டிருந்தார் தொழிலதிபர் ராஜேந்திரன். ‘‘எதுக்கு வரச் சொன்னீங்க என்னை?’’ என்றபடி அவர் முன்னால் போய் நின்றான் மனோகர்.

''வாடா... வா... மனோ! உனக்கு ஒரு வேலை வந்திருக்கு.என் பொண்ணு தீபாவை, ராஜான்னு ஒருத்தன் தினமும் கலாட்டா பண்றானாம்.நேத்து தீபா என்கிட்ட சொல்லி அழுதா.என்னோட பொண்ணுன்னு தெரிஞ்சும் கலாட்டா பண்ணியிருக்கானே.அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்? அதனாலே...'' நிறுத்திவிட்டு மனோகரை நிமிர்ந்து பார்த்தார் ராஜேந்திரன். அவரின் கையில் ராஜாவின் புகைப்படம் ­­இருந்தது.

''அவன் இனி உங்க பொண்ணுகிட்ட பேசவே மாட்டான். நாக்கு இருந்தாதானே பேசமுடியும்?'' என்றான் மனோகர்.

''நீ ரொம்ப புத்திசாலிடா! நான் மனசுல நினைத்ததை நீ சொல்லிட்டே.சரி எவ்வளவு வேணும்?''

"இருபத்தஞ்சாயிரம்''யோசிக்காமல் சொன்னான் மனோகர்..

"இத்தனூண்டு நாக்குக்கு இருபத்தஞ்சாயிரமாடா?''

‘‘ரைட்டு. நீங்களே பாத்துக்கங்க, நான் வர்றேன்'' என்று சொல்லிவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தான் மனோகர்.

"இரு மனோ... சொன்னா சொன்னபடி செய்றவன் நீங்கறதாலதானே உன்னைக் கூப்பிட்டேன். முணுக்குன்னா கோவிச்சுக்கறியே...''என்றவர் ஒரு நூறு ரூபாய் கட்டை எடுத்து டீபாயின் மேல் போட்டார்.

"இது அட்வான்ஸ். வேலைய முடிச்சிட்டு மீதியை வாங்கிக்க. அடுத்து உனக்கு ஒரு பெரிய வேலை காத்திருக்கு. எனக்குப் போட்டியா தொழில்லே செந்தில்ன்னு ஒருத்தன் குறுக்கிடறான்.அவனை குளோஸ் பண்ணனும். அதுக்கு அஞ்சு லட்சம் தர்றேன் மனோ!''

"நாளைக்கு சாயங்காலம் ராஜாவோட நாக்கோட வந்து உங்களைப் பார்க்கறேன்'' ராஜாவின் புகைப்படத்தை வாங்கிக் கொண்டு, நூறு ரூபாய்க் கட்டை எடுத்து பாண்ட் பாக்கெட்டில் செருகிக் கொண்டு அநாயசயமாக வெளியேறினான் மனோகர்.

றுதினம் மாலையிலேயே சொன்னபடி கண்ணாடி டப்பாவில் அடைபட்ட நாக்குடன் வந்தான் மனோகர். ராஜேந்திரன் இப்போதும் மது அருந்திக் கொண்டிருந்தார். (வேற வேலையே கிடையாதா இவருக்கு?). அவரிடம் நீட்டினான்.  "பேஷ்! நாக்குத் தவறாதவன்டா நீ! ஸாரி, வாககுத் தவறாதவன்டா நீ! ரொம்ப சந்தோஷம். உட்கார்.என்னோட ஒரு பெக் சாப்பிட்டுட்டுப் போகலாம்.’’

இன்னொரு டம்ளரை எடுத்து அவனுக்கும் மதுவை ஊற்றினார். மனோகர் உட்கார்ந்தான். ராஜேந்திரன் எழுந்து போய் பீரோவைத் திறந்தார். கட்டுக்கட்டாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நோட்டுக் கற்றைகளிலிருந்து ஒரு நூறுரூபாய் கட்டையும், ஐம்பது ரூபாய் கட்டையும் எடுத்தார். "இந்தா மனோ..உனக்குச் சேரவேண்டிய மீதி பணம்'' என்று அவனிடம் வீசினார். கப்பென்று கேட்ச் பிடித்தான் அவன்.

மீண்டும் சோபாவில் அமர்ந்த ராஜேந்திரன், ‘சியர்ஸ்’ ஒரு சிப் சிப்பினார். மனோகர் தன் பங்கை ஒரே மடக்கில் உள்ளே தள்ளினான். அமைதியாக அவரையே கவனித்தான். அந்த ரவுண்டை முடித்திருந்த ராஜேந்திரனின் குரல் மது போதையையும் மீறி குழறலாய் வெளிவந்தது.

"மழோ... மழோ... எழக்கு எழ்ழமோ ஆயிழுச்சுடா. ஓவழா தலை சுத்துது.''

‘‘அதுவா ரா‌ஜேந்திரன்! நான் உங்களுக்கு விஸ்கியில கலந்த விஷத்தோட ஆரம்பக்கட்ட செயல்பாடு அது...’’

‘‘ழேய்... விஷம் கழந்தியா...? ஏழ்டா இப்படி?’’

‘‘ஸாரி மிஸ்டர் ராஜேந்திரன். நான் ராஜாவோட நாக்கை அறுத்த விஷயத்தைக் கேள்விபட்ட அவனோட அப்பா ஸிட்டில இருக்கற டாப் ரவுடிகளக் கூப்பிட்டு என்னை தீர்த்துக்கட்டச் சொல்லியிருக்கார். அவங்க என்னோட மோதப் பயந்து வேலைய ஏத்துக்காததால அவரே நேரடியா என்னை வந்து சந்திச்சார். பத்து லட்ச ரூபாய் பணத்தை ஒரே பேமெண்ட்டாக் கொடுத்து உங்களைத் தீர்த்துக் கட்டச் சொன்னார். அதான் நீங்க பணத்தை எடுக்கப் போனப்ப, விஷத்தைக் கலந்துட்டேன். நாளைக்கு ஹார்ட் அட்டாக்ல தொழிலதிபர் ராஜேந்திரன் இறந்ததா செய்தி வரும். சாகறதுக்கு முன்னால ஒண்ணு தெரிஞ்சுக்கங்க... உங்களைத் தீர்த்துக் கட்டச் சொன்ன ராஜாவோட அப்பா பேரு செந்தில். நீங்க கொஞ்சம் லேட். அவர் முந்திக்கிட்டாரு...’’

’’ழேய்... மனோ... எவ்வளவு பணம் கொழுத்திருக்கேன் உழக்கு? இப்பழி நன்ழி இழ்ழாமே...’’

‘‘நன்றியா? என் மாதிரி ஆசாமிங்களுக்கு அதுக்கு ஸ்பெல்லிங்கே தெரியாது என்னமோ இலவசமா பணம் கொடுத்திட்ட மாதிரி நன்றியப் பத்திப் பேசறீங்க...? மிஸ்டர். ப...ண...ம்... அதான் எனக்குத் தெரிஞ்ச விஷயம். நீங்க  அவர் உயிருக்கு போட்ட மதிப்பு அஞ்சு லட்சம். அவர் உங்களுக்குப் போட்ட மதிப்பு பத்து லட்சம்! பிஸினஸ்ல எப்பவுமே எதிரியை குறைச்சு மதிப்பிடக் கூடாது ஸார்! யூஸ் திஸ் இன் நெக்ஸ்ட் ஜென்மா...’’ ராஜேந்திரன் மார்பை பிடித்துக் கொண்டு துடித்துக் கொண்டிருக்க, ரசித்துச் சிரித்தபடி வெளியேறினான் மனோகர்.

Thursday, October 11, 2012

சிரித்திரபுரம் - 3

Posted by பால கணேஷ் Thursday, October 11, 2012
மன்னிக்கவும்.

சிரித்திரபுரம் இப்போது நாவல் வடிவம் பெறுவதால்
இங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது. 

பொறுத்தருள்க.

Tuesday, October 9, 2012

மெல்லப் பேசுங்கள்!

Posted by பால கணேஷ் Tuesday, October 09, 2012

‘பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுவும் பேசாதே’ என்று ஒரு முதுமொழி உண்டு. அக்கம்பக்கம் யாரும் இல்லையே என்று சோதித்துப் பார்த்துவிட்டு ரகசியங்களைப் பேச வேண்டும், இரவின் இருளில் எவர் மறைந்திருப்பதும் தெரியாது என்பதால் இரவில் பேசக் கூடாது என்றும் கருதிய காலத்திலிருந்த இன்றைய காலத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இரவைப் பகலாக்கும் விளக்குகள் எல்லாம் இன்றைய நவீன யுகத்தில் உண்டு.

முற்காலங்களில் சாலையில் ஒருவன் தனக்குத் தானே பேசிக் கொண்டு நடந்தால், ‘‘ஐயோ, பாவம்’’ என்று பரிதாபமாகப் பார்ப்பார்கள். இன்றைக்கு அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டார்கள். காதில் இயர்போன் செருகியிருக்கிறதா என்பதைத்தான் கவனிப்பார்கள். அலைபேசி என்று அழைக்கப்படும் செல்போனை இடுப்பில் வைத்துக்கொண்டு, வயர்‌லெஸ் இயர்போனை காதில் மாட்டிக் ‌‌கொண்டு, நினைத்த நேரம் பேசிக் கொண்டு அலைகிறார்கள் பலர்.

அதில் குற்றம்காண நான் முற்படவில்லை. ஏனென்றால் ‘செல் இல்லாதவன் அரை மனிதன்’ என்று பழமொழியை மாற்றி எழுத வேண்டிய காலகட்டத்தில் இரு்க்கிறோம். ஆகவே நான் குறிப்பிட விரும்புவது செல்போனில் பேசும் விதத்தைப் பற்றித்தான். முன்பொரு பதிவி்ல் பேருந்தில் ஒரு நபர் தன் மனைவியுடன் உரக்கப் பேசிக் கொண்டு வர, அவர் மனைவியின் பெயர், காத்திருக்கும் இடம் போன்ற அனைத்து விவரங்களும் பஸ் டிரைவரிலிருந்து கடைசி சீட் பயணி வரைக்கும் கேட்டது என்பதைக் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். சமீபத்தில் என் அலுவலக நண்பர் ஒருவரின் அனுபவத்தைக் கண்டதும் இதைப் பற்றி மீண்டும் சொல்ல வேண்டியதாகிறது இங்கே.

லுவலக வேலையாக வங்கிக்குச் சென்றுவிட்டு, மீண்டும் அலுவலகத்தில் நழைந்த அவர் படபடப்பாக இருந்தார். வந்ததும் பாட்டிலை எடுத்து அரை டம்ளர் தண்ணீரைக் காலி செய்தார். ‘‘என்னாச்சு... இதோ ‌பக்கத்து தெருவுல இருக்கற பேங்குக்கு போய்ட்டு வர்றதுக்கு இவ்வளவு பில்டப்பா?’’ என்றேன் நான்.

‘‘நீங்க வேற படு்த்தாதீங்க கணேஷ்! பாங்க்ல ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் என்மேல சந்தேகப்பட்டு கேள்வியா கேட்டு தொளைச்சுட்டார்.என்னை. நல்லவேளை... ஆஃபீஸ் ஐடி கார்டு இருந்ததால காட்டிட்டு தப்பிச்சேன்’’ என்றார்.

‘‘போலீஸா? உன்னை சந்தேகப்பட்டாரா? உன் முகத்தைப் பாத்தாலே லேடீஸ் ஹாஸ்டலையே நம்பி உன்கிட்ட ஒப்படைக்கலாம்னு தோணிருமே. இந்தப் பால் வடியற முகத்தையா சந்தேகப்பட்டாரு?’’

‘‘ஆமா, வடியுது.. ஒரு டம்ளர்ல பிடிச்சுட்டுப் போங்க. சும்மா சத்தாயக்காதய்யா.. நான் வழக்கம்போல இயர் போன் மாட்டி செல்லுல பேசினதால வந்த வினை...’’

‘‘அப்படியா? என்ன நடந்துச்சு?’’

‘‘அதை ஏன் கேக்கறீங்க?’’

‘‘சரி, கேக்கலை விடுங்க’’ என்று நான் மானிட்டரிடம் திரும்ப, ‘‘அட, கேளுங்க சார்...’’ என்றார் எரிச்சலாக. ‘‘சொல்லுங்க’’ என்று மீண்டும் அவர் பக்கம் திரும்பினேன்.

‘‘பாங்க்குக்கு போனேனே... அங்க ஒரு வயசான கிழவி சலான் எழுதத் தெரியாம முழிச்சுட்டிருந்துச்சு...’’

‘‘வயசானா தான்யா அது கிழவி!’’

‘‘லொள்ளு பண்ணாம கேளுய்யா. அவங்களுக்கு உதவியா நான் சலான் எழுதிக் கொடுத்துட்டு கேஷ் கவுண்டர்ல பணத்தைக் கட்டிட்டு எதிர்ல இருக்கற சீட்ல வெயிட் பண்ணிட்டிருந்தேன். அப்ப என் செல்லுக்கு ஒரு கால் வந்துச்சு. வழக்கம்போல காதுல இயர்ஃபோன் மாட்டிருக்கறதால நான் பாட்டுக்கு பேச ஆரம்பிச்சுட்டேன். (நண்பருக்கு இயல்பாகவே வெண்கலத் தொண்டை, மெதுவாய்ப் பேச வராது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்) சொல்லு ரமணா, இன்னிக்கே போட்டுடறேங்கறியா? ‌நான் நாளைக்கு நீ போட்டாப் போதும்னு நினைச்சிட்டிருந்தேன். ம்ம்.... சரி, பரவாயில்லை, இன்னிக்கே போட்டுறு. எந்தப் பிரச்சனையும் வராம நான் பாத்துக்கறேன். அட, புலம்பாதடா. நீ போட்று, நான் பாத்துக்கறேங்கறேன்ல -அப்படின்னு பேசிட்டு போனை வெச்சேன் கணேஷ்! பக்கத்துல இருந்த ஆசாமி என்னை முறைச்சுப் பாத்துட்டு, ‘மிஸ்டர் நீங்க யாரு? எங்கருந்து வர்றீங்க?’ன்னு கேட்டாரு. ‘நீங்க ஏன் சார் அதைக் கேக்கறீங்க?’ன்னு நான் கேட்டதுக்கு, ‘நான் இந்த ஏரியா இன்ஸ்பெக்டர்’ன்னு ‌சொன்னாரு அவரு. ‘நீங்க பேசினதப் பாத்தா எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு. யார்ட்ட சார் பேசினீங்க?’ன்னு அவர் கேக்கவும், நான் என்ன பேசினேன்ங்கறதை மனசுல ஒரு தடவை ஓடவிட்டுப் பார்த்தேன். பளிச்சுன்னு மண்டையில பல்பு எரிஞ்சுச்சு.’’

‘‘அது ட்யூப்லைட்டுன்னு எனக்கு நல்லாவே தெரியுமே...’’

‘‘வெளையாடாதய்யா. நான் சட்னு அவரைப் பார்த்து ‘சார், நீங்க நினைக்கிற மாதிரி ஆளைப் போட்டுத் தள்ள போன்ல பேசற தாதா இல்லைங்க நான். அதுவும் இதுமாதிரி பப்ளிக் ப்ளேஸ் யாராவது பேசுவாங்களா. நான் ....... கம்பெனில ஒர்க் பண்றேங்க’ அப்படின்னு சொல்லி கம்பெனி ஐடி கார்டைக் காட்டினேன். ‘அப்படியா? போன்ல நீங்க சொன்னதுக்கு என்ன அர்த்தம்?’னு அவர் கேக்கவும், ‘சார்! மதுரைல இருக்கற என் ஃப்ரெண்டோட பையன் சென்னைல ஹாஸ்டல்ல சேர்ந்து படிச்சுட்டிருக்கான். நாளைக்கு அவனுக்கு எக்ஸாம் ஃபீஸ் கட்ட லாஸ்ட் டேட். அதனால என்னோட பேங்க் அக்கவுண்ட்ல இன்னிக்கே பணத்தைப் போட்டுடறேன்னு அவன் சொன்னான். நாளைக்கு போட்டாக்கூட பிரச்னை இல்லடா. நான் பாத்துக்கறேன்னு நான் சொன்னேன். அவ்வளவுதான் ஸார்’ன்னு அவருக்கு விளக்கிப் புரிய வெச்சுட்டு வர்றதுக்குள்ள போறும் போறும்னு ஆயிடுச்சுப்பா...’’ என்றான் அவன்.

‘‘ஹய்யோ... ஹய்யோ... உன் ‌காமெடி பீஸ் மூஞ்சைப் பாத்துட்டுக்கூட ஆளை போட்டு்த் தள்ள ப்ளான் பண்ற தாதான்னு சந்தேகப்பட்டிருக்காரே... அவரை நினைச்சாத்தான் சிரிப்பா வருது.’’ என்று வாய்விட்டுச் சிரித்தேன் நான். முறைத்தான்.

‘‘சரீ... சரீ... அப்படி முறைக்காத. பேசறதை சரியாப் புரிஞ்சுக்கற மாதிரி பேசலைன்னாலும் சரி, தப்பாப் புரிஞ்சுக்கிட்டாலும் சரி, இப்படி்த்தான் பிரச்னை வரும். முன்ன நான் ஒரு நாளிதழ்ல வேலை பார்த்தேன்ல... அப்ப அங்க சீஃப் எடிட்டர், தன் அசிஸ்டெண்ட்டைக் கூப்பிட்டு, ‘வைகோ நியூஸை கமப்யூட்டர் செக்ஷனுக்கு அனுப்பியிருந்தேன். நீ போய் அதை அடிச்சு வாங்கிட்டு வா’ அப்படின்னாரு. அந்தப் பையன் சமீபத்துலதான் டிகிரி முடிச்சுட்டு வந்த கிராமத்துப் பையன். அவர்கிட்ட தொழில் கத்துக்கிட்டிருந்ததாலயும், அவர் நாலெட்ஜ்னாயும் அவர் மேல தேவதா விஸ்வாசம் அவனுக்கு. நேரா எங்க செக்ஷனுக்கு வந்தான். செக்ஷன் இன்சார்ஜ் குனிஞ்சு ரெஜிஸ்டர்ல என்ட்ரி பண்ணிட்டிருந்தார். அவர் தோள்ல பளார்னு ஒரு அடி வெச்சான். ‘ஹப்பா’ன்னு அலறிட்டு நிமிர்ந்த அவர்கிட்ட ‘வைகோ நியூஸ் ரெடியாயிடுச்சா? சப் எடிட்டர் கேட்டார்’ன்னான். ‘ப்ரூஃப் பாத்துட்டிருக்காங்க. இப்ப வந்துடும். அதக் கேக்க எதுக்குய்யா இப்படி சுளீர்னு அடிச்சே?’ன்னு அவர் கோபமாக் கேக்கவும், ‘சப்-எடிட்டர் ஸார்தான் உங்க செக்ஷன்ல அடிச்சு வாங்கிட்டு வரச் சொன்னார்’ன்னான் அந்த அப்(படு)பாவி! ‘வெளங்காதவனே! அவர் டைப் அடிச்சு வாங்கிட்டு வரச்சொன்னா, ஆளையே அடிச்சா கேக்கறது?’ன்னு கோபமா திட்டி அவனுககுப் புரிய வெச்சாரு....’’

நான் இப்படிச் சொல்லவும், என் நண்பர் டென்ஷன் நீங்கி வாய்விட்டுச் சிரித்தார். ஆகவே தோழர்களே... தோழியர்களே... நான் சொல்ல விரும்புவது என்னன்னா... வேணாம், எதுக்கு வம்பு? ‘‘நீதியாவேய் சொல்றீரு? படிச்சாப் புரிஞ்சுக்கறதுக்கு எங்களுக்கென்ன ஐ.க்யூ கிடையாதா?’’ன்னு என் தலையில குட்ட, நண்பர் கண்பத் கைய ஓங்கிட்டு ரெடியா நிக்கிறார். அதனால... நீங்களே புரிஞ்சுக்கங்கப்பா...!

Saturday, October 6, 2012

மொறு மொறு மிக்ஸர்-13

Posted by பால கணேஷ் Saturday, October 06, 2012

பேரன்புடையீர், உங்களனைவருக்கும் இம்முறை யான் வெற்றியின் ரகசியம் யாதென விண்டுரைத்திட விழைகின்றேன்... அடச்சே... சரிதாவை வெறுப்பேத்தறேன்னு சுத்தத் தமிழ் பேசி அதுவே பழக்கமாயிடும் போலருக்கே... ‌சரி, விடுங்க... முதல்ல கொஞ்சம் தத்துவங்கள், அப்புறம் கொஞ்சம் சிரிக்கலாம்... பின்னால வெற்றியின் ரகசியத்தைத் தெரிஞ்சுக்கலாம், சரியா...?

===============================================

                                        மும்மத மொழிகள்

துடுப்புப் போடாமலேயே படகில் உட்கார்ந்து பயணம் செய்ய முடியுமா? பாடுபட்டு உழைக்காமலே வாழ்க்கைப் பயணத்தில் வெற்றி பெற முடியுமா? சிலருக்குத்தான் அவர்கள் விரும்பும் வேலை கிடைக்கிறது. பலர் தங்கட்குக் கிடைக்கும் வேலையை விரும்புகிறார்கள். வேலை செய்து முடித்த பிறகு தொழிலாளியின் நெற்றியிலிருந்து வியர்வை நிலத்தில் விழுவதற்கு முன்னால் அவரின் கூலியைக் கொடுத்திடு. -நபிகள் நாயகம்

ல்ல மரமானது கெட்ட கனியைத் தராது. அதேபோல கெட்ட மரம் நல்ல கனியைத் தருவதில்லை. யாரும் முள் செடிகளில் அத்திப் பழங்களைப் பறிக்க எண்ணுவதில்லை. அதேபோல நெருஞ்சி முள் செடியில் திராட்சைப் பழங்களைப் பறிக்கவும் முடியாது. நல்ல பெற்றோரிடமிருந்து நல்ல பிள்ளைகளே பிறப்பார்கள். இதனால் உலகம் நல்ல வழியில் முன்னேறும். வெளியில் வராத மறைபொருள் எதுவுமில்லை. மற்றவர்கள் அறியப்படாத ரகசியமும் இல்லை. நீங்கள் யாரும் அறியாமல் இருளில் பேசுவதாக நினைப்பது வெளிச்சத்தில் மற்றவரால் கேட்கப்படும். ஏனெனில் எல்லா இடத்திலும் ஆண்டவன் இருக்கிறார். -இயேசு கிறிஸ்து.

‘‘கடவுளைத் தாங்கள் கண்டிருக்கிறீர்களா? எனக்குக் காட்ட முடியுமா?’’ என்று பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். முதலில் தன்னையே ஒருவன் எதிரே வைத்துப் பார்க்க வேண்டும். ‘உண்மையான நான் யார்?’ என்று கேட்டுக் கொண்டு தன்னையே காண முயல வேண்டும். அதற்கு வேண்டிய மனப்பக்குவம் அவனுக்குக் கிடைத்து விட்டால் தனக்கும் மூலமாக உள்ள கடவுளைக் காண முடியும். ‘நான்’ என்கிற அகந்தை தான் நமக்கும் கடவுளுக்கும் இடையே இருக்கிறது. அது மறைந்து விட்டால் அங்கே எஞ்சியுள்ள நிஜ ஸ்வரூபமே கடவுள். -ஸ்ரீ ரமண மகரிஷி

===============================================

நாட்ல ரெண்டு மூணு பொண்டாட்டியக் கட்டினவன்லாம் ஜாலியா இருக்கான். ஒரே ஒரு சரிதாவக் கட்டிக்கிட்டு நான் படற பாடு இருக்கே. அய்யூய்யய்யய்யோ.... !  அப்படி என்ன பண்ணியிருப்பான்னு தானே யோசிக்கறீங்க? சொல்றேன்...

போன வாரத்துல ஒரு நாள் அவகிட்ட, ‘‘சரி, ஜபல்பூர்ருந்து வந்திருக்கற என் ஃப்ரெண்டோ ஃபாமிலியை ஞாயித்துக்கிழமை லன்ச்சுக்கு வரச் சொல்லியிருக்கேன்னு சொன்னேன்ல... என்ன பண்ணப் போற நீ? நான் என்ன பண்ணனும்?’’ அப்படின்னு கேட்டேன். ‘‘நீங்க ஒண்ணும் பண்ணாம இருந்தாலே போதும்.. நான் பாத்துக்கறேன். இதோபாருங்க... மெனுவே ப்ளான் பண்ணிட்டேன்’’ன்னு சொல்லி ஒரு சீட்டுல எழுதி வெச்சிருந்‌ததைக் கொடுத்தாள்.

படிச்சதும் எனக்குத் தலை சுத்திடுச்சு. ‌என்னத்தை எழுதியிருக்கா இவள்னு புரிஞ்சுக்கவே ரொம்ப நேரம் ஆச்சுது. உங்களுக்குப் புரியுதான்னு பாருங்க மக்கா...!

சரிதாவின் மெனு : 1) இழுAV, 2) ராய்Give, 3) Goளி, 4) பச்சரிசி சாதம், 5) முருங்Hand சாம்பார், 6) Eggபோகுது பொறியல், 7) கண்கள் Cream, 8) ஈDa.

===============================================

செல்லப்பா : உனக்கு ஒண்ணும் தெரியாதுடா, இது சாதாரணக் காதல் இல்லை, தெய்வீகக் காதல்!

கோபி : மண்ணாங்கட்டி! மூணு மணி நேரம் ட்ராமா பாத்திருக்கே காய்கறிக்காரியா அவ நடிச்சா. Just 3 Hours! அதுக்குள்ள காதலா? ‌ஏதோ நல்லவேளை Social Drama போட்டோம். 3 மணில முடிஞ்சது. சம்பூர்ண ராமாயணம் போட்டிருந்தா நீ கல்யாணத்தையே முடிச்சிருப்பே போலருக்கே....

செல் : கண்டிப்பா.... அவ சீதையா நடிச்சிருப்பா!

கோபி : அப்போ உனக்கு No chance!

செல் : ஏண்டா?

கோபி : சீதைக்கும் அனுமாருக்கும் கல்யாணம் நடக்குமா? கொஞ்ச நேரம் பார்த்ததுமே லவ்? நான்சென்ஸ்!

செல் : காதல்ங்கறது ஒரு Govt. Busடா. கிடைக்கிற வரை கிடைக்காதா, கிடைக்காதான்னு காத்துக்கிட்டு இருப்போம். காதலிக்கும் அந்த மாதிரிதான் ஏங்கணும். பஸ் கிடைச்ச ஏறி உட்கார்ந்துட்டா எப்படா நம்ம இடத்துக்குப் போய்ச் சேருவோம்னு ஆயிடும். காதலி கிடைச்ச உடனே எப்பத்தான் கல்யாணம் பண்ணிப்போம்னு தவிப்போம். பஸ்ஸில் நம்ம இடத்துக்குப் போய்ச் சேர்ந்த உடனேயே, ‘சே! இதைவிட நடந்து வந்திருக்கலாமேன்னு தோணும். கல்யாணம் ஆனவுடனே, ‘சே! இதைவிட பிரம்மச்சாரியாவே இருந்திருக்கலாமேன்னு தோணும். Terminusக்கு போய்ச் சேர்ற பஸ்ஸை விட Break down ஆகற பஸ்தான் அதிகம். கல்யாணத்துல முடியற காதலைவிடப் பாதியில Break ஆயிடற காதல்தான் அதிகம்.

                   -‘மனம் ஒரு குரங்கு’ என்கிற ‘சோ’ எழுதிய நாடகத்திலிருந்து...

===============================================

ன் நண்பர் ஒருவர் மின் மடலில் இரண்டு நண்பர்களின் கதை என்று சொல்லி இதை அனுப்பியிருந்தார். படிச்சதும் எனக்கு என்னாவும்னு அவருககு நல்லாத் தெரிஞ்சதால, அவரே கீழ தீர்வும் கொடுத்திருக்கார் பாருங்க...

2 friends named Mr. See & Mr. Saw did not see sea. 1 day Mr.See saw sea mr. Saw didnt see sea. see saw sea jumped in sea. see saw in sea saw saw see in sea. see saw both saw sea & both saw & see were happy to see sea.

I hope you have head ache now? cool down, no tension. Forward this to others and get relaxed, that is the remedy.

===============================================

லுவலத்திலிருந்து வீடு திரும்பிய கணவன், வீடு பூட்டியிருப்பதைக் கண்டதும் ஆத்திரமாகச் சொன்னான்: ‘‘வரட்டும் அவள்...! இன்றைக்கு இரண்டில் ஒன்று கேட்டு விட வேண்டியதுதான்!’’ மனைவி ஷாப்பிங் செய்து, கை நிறைய பைகளுடன் சற்று நேரத்தில் வந்தாள். கண்டதும் கேட்டான்: ‘‘இரண்டு சாவிகளில் ஒன்றையாவது என்னிடம் கொடுத்து வைத்திருக்கக் கூடாதா நீ?’’ என்று. ஹி... ஹி... ஹி...

‘‘உங்களிடம் உள்ளதெல்லாம் ஒருநாள் கொடுத்துத் தீர வேண்டுவனவே!’’ அப்படின்னு ஒரு பழமொழியை கலீல் கிப்ரான்-ங்கற மேதை சொல்லியிருக்காருங்க. அவர் வீட்ல இன்கம்டாக்ஸ் ரெய்டு வந்தப்பா இந்த தத்துவம் அவர் மண்டையில உதிச்சிருக்குமோ? டவுட்டு! ஹி... ஹி... ஹி...

===============================================

ரைட்டு... அடுத்த பதிவுல சந்திக்கலாமா.... என்ன கேக்கறீங்க...? ஆங், மறந்துட்டேன். வெற்றியின் ரகசியத்தைக் கேட்டுச் சொல்லலாம்னு வெற்றியோட வீட்டுக்குப் போனா ‘‘அவன் ஊருக்குப் போயிருக்கான்பா, வர்றதுக்கு நாலு நாளாகும்’’னு அவங்கம்மா சொல்றாங்க. நான் என்னங்க பண்ணட்டும்? ஹி.... ஹி....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube