Monday, July 28, 2014

ஓவியக் கதாநாயகர்கள்...!

Posted by பால கணேஷ் Monday, July 28, 2014
சிறுவர்களின் உலகம் கதாநாயகர்களால் நிரம்பியிருப்பது. விவரம் தெரிய ஆரம்பிக்கிற வயதில் தன் அப்பா செய்வதை போல பேப்பர் படிப்பது, சைக்கிள் ஓட்ட முயற்சிப்பது என்று குழந்தை சிறுவனாக முயற்சிக்கிற வயதில் முதல் ஆதர்ஸ ஹீரோ அப்பாதான். அதன்பின் பள்ளி செல்லத் துவங்கி, உலகத்தை சற்றே அறிமுகம் செய்து கொள்கிற பருவத்தில் டீச்சர், பிறகு திரையில் பார்த்து ரசிக்கும் கதாநாயகர்கள் என்று உருவங்கள் மாறலாம். மாறாதது கதாநாயகன் என்கிற பிம்பம்.

வீட்டில் அப்பாவோ அம்மாவோ நிறையப் படிக்கிற பழக்கத்தை மேற்கொண்டிருந்து, குழந்தைகளையும் அவர்களின் வயதுக்கேற்ற புத்தகங்களைப் படிக்கப் பழக்குகிற பெற்றோர்களைப் பெற்ற குழந்தைகள் பாக்கியவான்கள். அவர்கள் புத்தகங்கள் மூலமும் தங்களுக்கான கதாநாயகர்கள் கிடைக்கப் பெறுவார்கள். மதுரையில் இவன் தன் ஏழாவது வயதிலேயே அப்பாவை இழந்து விட்டதால் அண்ணனும் இவனும் படித்து வளர்வதே போராட்டமாக இருந்த சூழ்நிலையில் இவன் வீட்டினர் புத்தகங்கள் எதுவும் வாங்குகிற நிலையில் இல்லை. டி.வி.எஸ். நகரில் இருந்த சமயம் சமவயதில் பக்கத்து வீட்டில் இருந்த ஆனந்த் பழக்கமானான். அவன் அப்பா கிருஷ்ணாராவ் அவனுக்காக வீட்டில் நிறைய (பெரும்பாலும் தமிழ், கொஞ்சம் ஆங்கிலம்) காமிக்ஸ் புத்தகங்களை வாங்கிக் குவித்திருப்பார். வண்ண வண்ணமாக அழகு கொஞ்சுகிற படங்களுடன் இருக்கும் அந்தப் புத்தகங்களைப் புரட்ட ஆரம்பித்த பொழுதில்தான் இவனுக்குள்ளிருக்கும் வாசகன் விழித்துக் கொண்டான். ஆதர்ஸ கதாநாயகர்களும் மனதினுள் நுழைந்தார்கள்.

அப்பாவுடனும் அப்பா இறந்த பின்னர் தனியாக மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பார்த்த படங்களின் மூலமும் இவன் மனதில் அதுவரை இருந்த ஒரே கதாநாயகன் எம்.ஜி.ஆர்.தான்ஆனந்தின் வீட்டில் படித்த காமிக்ஸ்கள் மூலம் ரசனைக்கு உத்தரவாதமளிக்கும் அடுத்தடுத்த கதாநாயகர்கள் அணிவகுத்தனர். கதாநாயகர்களைப் பற்றிச் சொல்வதற்கு முன்... அந்தக் காமிக்ஸ் புத்தகங்களைப் படிக்கப் போனால் ஆனந்து ரொம்பவே அலட்டிக் கொள்வான். ஹோம் ஒர்க் பண்ணணும், அப்பா திட்டுவாரு, புறப்படு என்று விரட்டப்பட  நேரிடும். ஆனந்தை ஆனந்தப்படுத்தி விட்டுத்தான் இவன் ஓசிப் புத்தகம் படித்து ரசிக்க வேண்டிய நிலை. கொடுமைடா சாமி!

மந்திரக் குகை மர்மம், இடியின் மைந்தன் போன்ற மாயாஜால காமிக்ஸ்கள் மனதைக் கவரத்தான் செய்தன. அவற்றில் இடம் பெறும் வீரர்கள் நினைத்தபடி உருமாறும், மின்னலைக் கட்டுப்படுத்தும் போன்ற சாகசங்கள் செய்வது பிரமிப்பைத் தந்தன. (இதையே கொஞ்சம் சஸ்பென்ஸ் சேர்த்துச் சொன்னா அதான் ஹாரிபாட்டர். அதுக்குத் தாத்தால்லாம் தமிழ்ல உண்டுங்க.). ஆனாலும் அந்தந்த கதையுடன் முடிந்து விடுவதால் மனதில் அழுத்தமாக சிம்மாசனமிட்டு அமரவில்லை அவை என்பதே நிஜம். கல்கியில் அப்போது வாண்டுமாமா எழுதும் சரித்திரம் சாகஸம் நிரம்பிய காமிக்ஸ் கதைகளும். ‘நந்து சுந்து மந்துபோன்று சிறுவர்களை வைத்து எழுதிய கலகல துப்பறியும் கதைகளும் அப்படித்தான்.

முதலில் மனதில் பதிந்த கதாநாயகர் இரும்புக் கை மாயாவி. தன்னுடைய இரும்புக் கரத்தை ஏதாவது ஒரு பிளக் பாயிண்டில் செருகி மின்சாரத்தைத் தனக்குள் பாய்ச்சிக்  கொண்டார் என்றால் அவர் உருவம் கண்ணுக்குத் தெரியாது. இரும்புக் கை மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும். இந்த வசதியைப் பயன்படுத்தி அவர் ஈடுபட்ட சாகசங்கள் அடங்கிய ஒவ்வொரு காமிக்ஸும் பித்துப் பிடித்த மாதிரி துரத்தித் துரத்தி (ஆனந்திடம் கெஞ்சி ஓசிவாங்கி) படிக்க வைத்தன இவனை. (இப்போ வாங்கலாம்னு ஆசைப்பட்டாலும் இவன் குறிப்பிடற ஹீரோக்களோட காமிக்ஸ்ல ஒரு பிரதி கூட பழைய புத்தகக் கடைல கூடக் கிடைக்கலை. அவ்வ்வ்வ்வ்).

மாயாவிக்கு அடுத்தபடியாக மனதில் இடம் பிடித்த கேரக்டர்கள் லாரன்ஸ் அண்ட் டேவிட். லாரன்ஸ் என்பவர் ஜேம்ஸ்பாண்டாக நடித்த ரோஜர் மூர் மாதிரி கம்பீரமாக இருப்பார். டேவிட் என்பர் அதிபலசாலியாக மொட்டைத் தலையுடன் நம்மூரு எஸ்..அசோகன் மாதிரி இருப்பார். உளவுத் துறை இவர்கள் இருவரையும் சேர்ந்துதான் கேஸைக் கவனிக்கச்  சொல்லும். ‘பாஸ்என்று லாரன்ஸை அழைக்கும் டேவிட் பின்னாளில் இவன் படித்து ரசித்த, இன்றளவும் ரசித்துக் கொண்டிருக்கும் கணேஷ்-வஸந்த்துக்கு முன்னோடியாக இவன் மனதில் பதிந்த ஹீரோக்கள். ஒருவர் புத்திசாலியாக துப்பறிபவர், மற்றவர் அதிரடியாக ஆக்ஷனில் களமிறங்குபவர்கள் என்ற இந்த ஜோடி மிகப் பிடித்தமான ஒன்றாகிப் போனது.

தன்பின் தினமணி கதிரில் வெளிவந்த ரிப்கெர்பி என்கிற துப்பறிவாளர் மனதைப் பறித்தவர். படிய வாரிய தலையும், இன்னாளில் இவன் அணிந்திருப்பது போன்ற கண்ணாடியும், வாயில் எப்போதும் புகையும் பைப்புமாக ஒரு கல்லூரிப் பேராசிரியர் போலத் தோற்றமளிக்கும் இவர் தான் துப்பறியும் கதைகளில் நிறைய சாகசங்களும் செய்வார். காமிக்ஸாக தமிழிலும் நிறைய வந்திருக்கின்றன.
தற்கு அடுத்தபடியான மற்றொரு கதாபாத்திரம் சாகச வீரர் ஜானி நீரோ. ஜேம்ஸ்பாண்ட் படங்கள் போலதமிழில் அந்த வயதில் பார்த்த சில ஜெய்சங்கர் படங்கள் போல அடுத்தடுத்து சாகசங்கள் தூள் பறக்கும் காமிக்ஸ் கதாநாயகனான இந்த ஜானி நீரோ மனதில் தனியிடம் பிடித்துக் கொண்டார்.

இப்படி மனதில் இடம் பிடித்த காமிக்ஸ் கதாநாயகர்கள் அனைவரைப் பற்றியும் எழுத முற்பட்டால் தொடர்பதிவுகளாக நீளும் அபாயம் உண்டு என்பதால்தான் மனதை அதிகம் ஆக்ரமித்த இந்தக் கதாநாயகர்களை மட்டும் இவன் குறிப்பிடுகிறான். இந்த நான்கு (ஐந்து?) கதாநாயகர்களும் கல்லூரி செல்லும் காலம் வரையிலும் கூட மனதில் நிலைத்திருக்கத்தான் செய்தனர். இப்போதும் நினைத்துப் பார்க்கையில் இவனுக்கு இளம் பருவத்தில் ஓர் இனிய உலாச் சென்று வந்த திருப்தி கிடைக்கத்தான் செய்கிறது. பருவங்கள்தோறும் கதாநாயகர்கள் மாறிக் கொண்டிருந்தாலும், படிக்கிற அவர்களே பின்னாளில் கதாநாயகர்களாக உருவெடுத்தாலும்கூட இளம் வயதில் மனதில் பதிந்த கதாநாய பிம்பங்கள் மாறுவதேயில்லை.

காமிக்ஸ் கதாநாயகர்களை ரசிக்கையில் சினிமாவில் பார்த்து ரசித்த கதாநாயகனையே காமிக்ஸிலும் ரசிக்க முடிந்ததென்றால் அது டபுள் குஷிதானே... அப்படித்தான் அமைந்தது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். துப்பறிவதாக வந்த காமிக்ஸ், அதேபோல வாலிப வயதில் கணேஷ் மட்டும் துப்பறிந்த சுஜாதாவின் முதல் நாவலானநைலான் கயிறுநாவலை வஸந்த் கேரக்டரை சேர்த்து படக் கதையாக வந்த ஒரு மாதநாவல் புத்தகம். இவை இரண்டையும் படித்து, ஓவியங்களைப் பார்த்து ரசிக்கையில் கிடைத்த மகிழ்ச்சி இருக்கிறதே... வார்த்தைகளில் கொண்டுவர முடியாத வர்ணஜாலமான ஒன்று.

படித்து ரசித்து சேமித்து வைத்திருக்கும் புத்தகங்களில் பலவற்றை காலத்தின் ஓட்டத்தில் நாம் இழந்து விடுவது அனைவரின் வாழ்விலும் நடக்கிற ஒரு விஷயம். அதுபோல பழைய பொக்கிஷங்களில் இவன் தொலைத்த லிஸ்டில் இந்த காமிக்ஸ்களும் அடக்கம். பின்னாளில் ஊர் ஊராக பழைய புத்தகக் கடைகளில் வேட்டையாடிய போதும் இவை சிக்கவில்லை. அந்த வேட்டைகளின் பலனாக வேறு பல அரிய பொக்கிஷப் புத்தகங்கள் இவனுக்குச் சிக்கின என்பது வேறு விஷயம்.

சில நாட்களுக்கு முன் இணையதளம் ஒன்றில் வாத்யார் துப்பறிந்த அந்த காமிக்ஸ் புத்தகத்தைக் கண்டதும் இவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இவன் பெற்ற இன்பத்தை நீங்களும் அடைய இங்கே க்ளிக்கி அந்தப் புத்தகத்தைத் தரவிறக்கிப் படித்து, பார்த்து ரசியுங்கள். சினிமாவில் பார்த்த வாத்யாரின் சாகஸங்கள் படக்கதையாகப் பார்க்கையில் கிடைப்பது தனி சுகம். கணேஷ் வஸந்த் துப்பறிந்த அந்த படக்கதை புத்தகம் இப்படிக் கிடைக்குமா, இல்லை... கடைசிவரை நினைவுகளில் மட்டுமே தங்கிவிட்ட ஒன்றாகிவிடுமா தெரியவில்லை..!
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube