Showing posts with label சரிதாவும் நானும். Show all posts
Showing posts with label சரிதாவும் நானும். Show all posts

Saturday, June 7, 2014

சரிதா டார்லிங் அட் டார்ஜிலிங்!

Posted by பால கணேஷ் Saturday, June 07, 2014
இனிமையான ஒரு மாலை நேரத்தில் நான் ஒரு காபிஷாப்பில் அமர்ந்திருந்த வேளை சட்டைப் பையிலிருந்த செல்பேசி அதிர்ந்தது. எடுத்துப் பார்த்தேன்... என் தலைவலி... ஸாரி, தலைவி சரிதா தான் அழைக்கிறாள். “சொல்லும்மா...?”

“என்னங்க.... நீங்க இப்ப எங்க இருக்கீங்க...?”

“சைதாப்பேட்டையில கீதா ஜூவல்லரி இருககில்ல....?”

“கீதா ஜூவல்லரியா....?”

“உனக்கு நினைவில்லையா..? மெயின் ரோட்ல இருக்கே... போன மாசம் நீகூட அங்க ஒரு கல்வெச்ச நெக்லஸ் பார்த்துட்டு நல்லாருக்குன்னு சொல்லி வாங்கித்தரச் சொன்னியே... நான்கூட வருமானம் வர்றப்ப வாங்கிட்டு வர்றேன்னு சொன்னேனே...”

“ஆஹா... ஞாபகம் வந்திருச்சு. அங்கயா இருக்கீங்க...? பர்ச்சேஸ் பண்ணிட்டீங்களா...?” சரிதாவின் குரலில் குதூகலம் கும்மியடித்தது.

“அங்க இல்லம்மா... அந்த ஜூவ்ல்லரிக்குப் பக்கத்துல இருக்கற காபிஷாப்ல இருக்கேன்...”

“அடத்தூ...! லேண்ட்மார்க் சொல்ற அழகப்பாரு... வீட்டுக்கு வாங்க, இன்னிக்கு இருக்கு...” மறுமுனையில் அவள் பல்லைக் கடிக்கும் சப்தம் இங்கே கேட்டது. “அங்க என்ன பண்றீங்க...?”

“காபிஷாப்ல சாராயமா குடிக்க முடியும்..? என் ஒண்ணுவிட்ட ஃப்ரெண்டோட உக்காந்து காபி குடிச்சுட்டிருக்கேன்...”

“என்னது...? ஒண்ணுவிட்ட ஃப்ரெண்டா..?”

“என் ஃப்ரெண்ட் சிவா இருக்கான்ல... அவனோட நண்பர்ன்னு சொல்லி அறிமுகப்படுத்தி வெச்சான் இவரை. அதனால நண்பனோட நண்பனை ஒண்ணுவிட்ட நண்பன்னுதானே சொல்லணும்..? அதுசரி... நீ எதுக்குக் கூப்ட்டே...?”

“உங்க கோப்ரோ நம்ம வீட்டுக்கு வந்து உங்களுக்காக வெயிட் பண்ணிட்டிருக்காரு. உடனே வீட்டுக்கு வாங்கன்னு சொல்லத்தான்...”

“என்னது...? கோப்ரோவா..? அப்படின்னா...?”

“அதாங்க... ப்ரதர்ங்கறதை இப்ப சுருக்கமா ப்ரோன்னு சொல்றாங்கல்ல... கோ-பிரதரை நான் சுருக்கமா கோப்ரோன்னு சொன்னேன். எங்கக்கா வீட்டுக்காரர் கைலாச அத்திம்பேர் வந்திருக்காரு...”

“அவரை நீ கோப்ரான்னே சொல்லிருக்கலாம். மனுஷன் உடம்பெல்லாம் விஷமாச்சே... அவரைப் பார்த்தாலே எனக்கு வந்துருமேடி காப்ரா...”

“எங்க சைட்ல யாராயிருந்தாலும் உங்களுக்கு இளப்பம்தானே...? அந்த சமாச்சாரத்தை அப்பறம் டீல் பண்ணிக்கறேன். இன்னும் அரை மணிக்குள்ள நீங்க வீட்ல இருந்தாகணும். இல்லே....”

‘சரீ... சரீ... வால்யூமைக் கூட்டாத... இப்ப வந்துடறேன்....” என்றுவிட்டு போனை கட் பண்ணினேன். என் சகலை கைலாஷ் எப்போது வந்தாலும் எனக்கு கேஷ் லாஸ் என்பது என் கடந்தகால அனுபவங்கள் தந்த பாடம். இப்போது என்ன மாதிரியான விஷயத்துடன் வந்திருக்கிறாரோ தெரியலையே... என்ற பயத்துடனேயே கிளம்பினேன் நான்.

வீட்டின் வாசலில் என் வாகனத்தை நிறுத்தத்துக்குக் கொண்டு வரும்போதே கிட்டத்தட்ட பி.எஸ்.வீரப்பா பாணியிலான என் சகலையின் சிரிப்புச் சத்தம் கேட்டது. “வாங்கோ மாப்ளே... வாங்கோ...” என்று பல்லெல்லாம் வாயாக வரவேற்றார் என் வீட்டின் உள்ளே நுழைந்த என்னை! ஆறடி உயரம், ஒரு ஏரியாவின் ரோட் மேப்பையே வரையலாம் போல அகன்ற நெற்றி, (ஆரம்பகால) விஜயகாந்த்துக்கு இருந்தது போல பெரிய கண்கள், சின்ன்ன்ன சைஸ் மூக்கு (பிற்பாடு தன் பிள்ளை எப்படி மூக்கால் அழும் என்று அவர் அம்மா கவலைப்பட்டிருப்பாள்), தடிமனான, பட்டையான உதடுகள் - இவை கைலாஷின் முகலட்சணங்கள்.

“நமஸ்காரம். நல்லா இருக்கேளா...?” என்று வலிந்து புன்னகையை வரவழைத்தபடி கை கூப்பினேன் நான். “சரி... அண்ணாக்கு காபி, டிபன் ஏதாச்சும்....” என்று நான் இழுக்க... “அதெல்லாம் பேஷா ஆச்சு மாப்ளே... நான் வந்த விஷயத்தை சொல்லிட்டு உடனே கிளம்ப வேண்டிருக்கு. உங்களுக்காகத்தான் வெய்ட் பண்ணிண்டிருந்தேன். அது என்னன்னாக்கே... போன தடவை நான் சென்னை வந்திருந்தப்ப என்னை ............. மாலுக்கு சினிமா பாக்க கூட்டிண்டு போனேளே... ஞாபகம் இருக்கோ...?”

மறக்கக்கூடிய அனுபவமா அது..? ஹும்...! பெருமூச்சுடன், “நல்லாவே நினைவிருக்கு. சொல்லுங்கோ...” என்றேன். “அங்க க்யூவில நின்னப்ப நம்மளை ஒரு ஃபாரம் ஃபில்லப் பண்ணித்தரச் சொல்லி சொன்னானோல்லியோ... அந்த கம்பெனிலருந்து போன் பண்ணினான். என் கூப்பனை ப்ரைஸ்க்கு செலக்ட் பண்ணிருக்காளாம் மாப்ளே... டார்ஜிலிங்ல நாலு நாள் தங்கறதுக்கு காட்டேஜ் ப்ரீயாத் தராளாம். சமைக்கறதுக்கு குக்லாம்கூட அரேஞ்ஜ் பண்ணிடறாளாம். போய்ட்டு வர செலவும், சாப்பாட்டுக்கான செலவும் மட்டும்தான் நாம பண்ணிக்கணுமாம்...” என்றார் பியானோ கட்டைகள் போன்று அகலமாயிருந்த தன் பற்களைக் காட்டி, அதே பி.எஸ்.வீ.யின் ஸ்டைல் சிரிப்பை உதிர்த்தார்.

“கங்காரு... ச்சே... கங்க்ராஜுலேஷன்ஸ்! சந்தோஷமாப் போயிட்டு வாங்கோ...” என்று கை குலுக்க கை நீட்டினேன். “இல்லை மாப்ளே... நான் போக முடியாது. அந்த ஆஃபரை இன்னும் பத்து நாளைக்குள்ள யூஸ் பண்ணிக்கணுமாம். இந்த நேரம் பார்த்து என் பையனுக்கு அம்மை போட்டுடுத்து... ஸோ... நீங்களும் சரிதாவும் போய்ட்டு வாங்கோ... அந்தக் கம்பெனில போய் நாம ஒரு ஃபாரம் பில்லப் பண்ணிக் கொடுத்தா போதும், மாத்திக்கலாமாம். பேசிட்டேன்....” என்றார்.

திகைத்தேன். ’ழே’ என்று விழித்தேன். “இப்படி திடீர்னு முடிவெடுக்கறது கஷ்டம்ணா... இந்த மாசம் பட்ஜெட் டைட்...” என்று நான் ஆரம்பிக்கும் முன்னாலேயே இடைவெட்டினார். “நம்மளை மாதிரி மிடில்க்ளாஸ்க்கெல்லாம் எப்பத்தான் ஓய் டைட் இல்லாம இருநதது? நாமளா பிளான் பண்ணி எப்பவாவது போக முடியற இடமா அது? சான்ஸை மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிக்குங்கோ...” என்றார். 

“நீங்க சொல்றதெல்லாம் சரிதான். ஆனா ப்ளைட் டிக்கெட், சாப்பாட்டு செலவு, அங்க சுத்திப் பாக்கற செலவுன்னு எப்படிப் பார்த்தாலும் பெரிய தொகையாயிடுமே...” என்று நான் இழுக்க... “அவருக்கு எப்பவும் நம்ம பக்கத்து மனுஷா எந்த ஐடியா சொன்னாலும் பட்ஜெட் முன்னால வந்துரும், இல்லாட்டி ஹெல்த் கெட்டுப் போயிடும், அதுவும் இல்லாட்டி அவரோட அம்மாவோ, தங்கச்சியோ வீட்டுக்கு வர்றதா கழுகுக்கு மூக்குல வேர்த்த மாதிரி லெட்டர் போட்டுடுவாங்க... இத்தனை வருஷமா இவரோட குப்பை கொட்டறேனே (இப்பத்தான் சரியா தான் செய்றதை சொல்றா மகராசி) இது மாதிரி எத்தனை வெளியூர் ட்ரிப் ப்ளான் பண்ணி கேன்சலாயிருக்கு தெரியுமா... எதுக்கும் குடுப்பினை வேணும் அத்திம்பேர்.... இவரோட அம்மா இருக்காளே....” என்று நான்ஸ்டாப்பாக சரிதா ஆரம்பிக்க... “சரி... சரி.... இநதப் ப்ளானுக்கும் சரிதான் சரி... நாம போலாம்...” என்றேன் அவசரமாக. (வேறு வழி? அப்படி அவள் வாயை மூடாவிட்டால் என் முப்பாட்டன் என்ன... அறுபாட்டன் எழுபாட்டன் பரம்பரை வரை சொல்லிக் காட்டுவாள். ஹி... ஹி..)

“குட்... இப்பத்தான் சரியாப் பேசறேன் மாப்ளே...” என்றபடி எழுந்தார் கைலாஷ். “நீங்க பட்ஜெட்லாம் போட்டு சிரமப்பட வேணாமேன்னுதான் உங்களுக்காக வெயிட் பண்ண நேரத்துல நான் அப்ராக்ஸிமேட்டா எல்லாச் செலவும் எவ்வளவு ஆகும்னு நான் கணக்கு போட்டுப் பார்த்தே வெச்சிருக்கேன். இதோ பாருங்கோ....” என்று ஒரு சீட்டைக் கையில் எடுத்து நீட்டினார். அசால்ட்டாக அதைக் கையில் வாங்கிப் பார்த்த எனக்கு ‘மொத்தம்’ என்ற தலைப்பிற்கு நேரே அவர் போட்டிருந்த தொகையைப் பார்த்ததும் த...லை...யை...ச்... சு...ற்...ற.....

‘டொம்ம்ம்ம்!‘

ஜுரத்தால வீட்ல ரெஸ்ட்ல இருக்கறதால
ஜுர வேகத்துல திடீர்னு தோணினதை 
மனசுக்கு வந்தபடி கிறுக்க ஆரம்பிச்சதுல
இதுவரை வந்துருச்சு. இதுக்கு மேல
எப்படி தொடர்கிறதுன்னு தெரியல... ஸோ...
தொடரலாம்...?!!

Monday, April 21, 2014

எம்.பி.ஆகிறாள் சரிதா!

Posted by பால கணேஷ் Monday, April 21, 2014
தலைப்பைப் படித்ததும் ஒருகணம் புருவத்தை உயர்த்தி ஆச்சர்யித்தீர்கள்தானே...? உங்களுக்கென்னங்க... தூரத்திலிருந்து கொண்டு ஆச்சர்யப்படலாம். நான் அடுக்கடுக்காய் அனுபவித்த அவஸ்தைகள் எனக்குத்தானே தெரியும்...? வழக்கம்போல் என் கம்ப்யூட்டரில் ஒரு புத்தக அட்டைப்படம் வடிவமைத்துக் கொண்டிருந்த நேரம்... புயலென அருகில் வந்தாள் சரிதா. “என்னங்க... நீங்க இப்ப நடக்கப்போற எலக்ஷன்ல நின்னு ஜெயிச்சு எம்.எல்.ஏ. ஆகணும்...”

திகைத்தேன். ‘ழே’ என்று விழித்தேன். “அதுநடக்கற காரியமில்ல சரி! திடீர்னு ஏனிந்த ஆசை?"

“அது நடக்கற காரியமில்ல... நிக்கிற காரியம்னு எனக்கும் தெரியும். என் பிரண்டு ஜெயந்தியோட ஹஸ்பென்ட் எலக்ஷன்ல நிக்ககறாராம். அவ பெருசா பீத்திக்கறா. என் ஹஸ்பெண்டை எலக்ஷன்ல நிக்கவச்சு அவளோட ஹஸ்பெண்டை  விட ஒரு ஒட்டாவது அதிகம் வாங்கிக் காமிப்பேன்னு சபதம் போட்டுட்டு வந்திருக்கேன்  ஏன்   நீங்க நிக்கக் கூடாதா? ஜெயிச்சு எம். எல்.ஏ ஆக முடியாதா?”

“சரிதாக் கண்ணு! கோபப்படாதே... நீ ஒக்காந்திருக்கும்போது கூட நான் எப்பவுமே நின்னுக்கிட்டுதானே இருக்கேன். இப்ப நடக்கறது எம்.பி எலெக்ஷன்மா..! இதுல ஜெயிச்சு எம்.எல்.ஏ.வா ஆகமுடியாதும்மா. அதைத்தான் சொன்னேன்.”

 சரிதா முறைத்தாள்... “இந்த கேலிக்கு ஒண்ணும் குறைச்சலில்ல. ஓட்டுப் போடற வயசுகூட வராத ஸ்கூல் பையன்ங்க கூடல்லாம் சகவாசம் வச்சுக்கிட்டா இப்படிதான் இருக்கும்...” என்க, ‘நல்ல வேளைடா... இவ ஆவிய, சீனுவ மறந்துட்டா போல இருக்கு””’ குஷியானது மனஸ்.

“அதில்ல சரி... நான் எந்த கட்சியில நிக்க முடியும்? எனக்கு யாரும் சீட்டு தர மாட்டாங்களே..?”

“நீங்க அம்மாவுக்கு போன் போடுங்க. நான் கேக்கறேன்...”

“ஒரு மாசம் இங்க தங்கிட்டு நேத்துதானே  உங்க அம்மா  ஊருக்கு போனாங்க. இன்னும் ஊருக்குக்கூட போய்ச் சேர்ந்திருக்க மாட்டாங்களே! அதுக்குள்ள எதுக்கு போன்?"

 “ஐயோ... ஐயோ... உங்களை மாதிரி தத்தியை வச்சுகிட்டு என்ன பண்றது? நான் புரட்சித்தலைவி அம்மாவுக்கு டயல் பண்ண சொன்னேன்...”

நான் (வழக்கம்போல) ‘ழே’ என்று விழிக்க... சரிதாவே, அம்மாவுக்கு போன் செய்தாள். “வணக்கம்மா..!”  போனில் பேசும்போதே முதுகை வளைத்து அவள் வணக்கம் சொன்னது வேடிக்கையாக இருந்தது.... ஆச்சர்யமாகவும் கூட! சரிதாவால் இவ்வளவு வளைய முடியுமா..?. ஆஹா... அம்மா கிட்டபோன்லே பேசும்போதே  என்னா பவ்யம்! ‘சபாஷ் சரிதா... நீ அரசியல்ல தேறிருவ’ என்றது மனஸ்.

“அப்படியா... அப்படியா... அப்படியா...” போன் எதிர்முனையில் வைக்கப்பட்டாலும்கூட சூரியன் பட கவுண்டமணி போல பில்டப் தந்து நிறையப் பேசிவிட்டு... “அம்மா அடுத்தமுறை அவசியம் சீட் தர்றதா சொல்லிட்டாங்க. இப்ப நீங்க கலைஞர் நம்பரை தேடிக் கொடுங்க” என்றாள்.

நிறைய மெனக்கெட்டு நம்பரைத் தேடித்தர, கலைஞருக்கு கால் போனபோது அவள் தெரியாமல் ஸ்பீக்கரை ஆன் செய்ய... “ஹலோ, கலைஞர்  தாத்தாவா? நான் சரிதா பேசறேன். எனக்கு ஒரு எம்.பி சீட் வேணும்...” என்று ஏதோ குடும்ப உறுப்பினர் போல் அவள் உரிமையாக கேட்க... “எந்த சரிதா? நம்ம குடும்பத்துல எல்லாருக்கும் சீட்டு குடுத்திட்டேனே. உன்னை மறந்திட்டன் போல இருக்கு  வயசாகிடிச்சா! அத்தனை பேரையும் ஞபகம் வச்சுக்க முடியலம்மா. முன்னாடியே வந்து கேக்கக் கூடாதா. இப்போதைக்கு என் மனசுலதாம்மா  இடம் கொடுக்க முடியும்" என்று கலைஞர் சொல்வது தெளிவாக கேட்டது.

 ‘சே!’ என்று சலிப்பாக முனகியபடி இப்படியும் அப்படியுமாக நடந்து கொண்டிருந்தாள். “சரி, நான் வேணும்னா காங்கிரஸ்ல கேட்டுப் பாக்கட்டுமா?” என்றேன். “சே! காங்கிரஸ்லாம் வேணவே வேணாம். நான் வீசற பூரிக்கட்டையைவே சமாளிக்கத் தெரியாது உங்களுக்கு. அங்க போனீங்கன்னா... சண்டைல வேட்டியென்ன டவுசரே கிழிஞ்சிடும் உங்களுக்கு...” என சரிதா சொல்ல... ‘சரிதாவே காங்கிரசை வேணாம்னு சொல்லற அளவுக்கு மோசமாயிடுச்சே’ காங்கிரஸ் மீது பரிதாபமே வந்துவிட்டது எனக்கு.

“சரி... அப்ப மோடியை காண்டாக்ட் பண்ணி சீட் கேப்பமா..?”

“அது சரிப்படாதுங்க. அப்புறம் என்னோட பாய் பிரெண்ட்ஸ் எல்லாம் ஓட்டு போட மாட்டாங்க”

“என்னது..? உனக்கு பாய் பிரெண்ட்ஸா..?” அதிர்ந்தேன் நான். “அடச்சே! நீங்க நினைக்கறதில்ல... எனக்கு முஸ்லீம் பெண்கள் நிறையப் பேர் பிரெண்டுங்க இல்லயா..? அதைத்தான் சொன்னேன்.  அவங்க ஓட்டு  BJP க்கு  கிடைக்காது.”

நான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். அதற்கு ஆயுள் கம்மி. “சரிங்க... அர்விந்த் அகர்வாலுக்கு போன் பண்ணுங்க...”

“எனக்கு முன்ன சோனியா அகர்வால்... இப்ப காஜல் அகர்வால் தெரியும். ஹி... ஹி... அரவிந்த் அகர்வால் யாரு?”

“கடவுளே... இப்படி பாலிடிக்ஸ்ல பூஜ்யமா இருக்கற உங்களப்போய் நம்பி சவால் விட்டுட்டு வந்தேனே... என்னைச் சொல்லணும்! அதாங்க... டெல்லியில உண்ணாவிரதம் இருந்தாரே... இப்பகூட ஆட்டோ டிரைவர்ட்ட அறை வாங்கினாரே... அவர்தாங்க...”

“நாசமாப் போச்சு! அவர் அகர்வால்  இல்லம்மா... அர்விந்த் கெஜ்ரிவால்! ஆம் ஆத்மிங்கற கட்சியோட தலைவர்”

“ஏதோ ஒரு வால்! சீக்கிரம் டயல் பண்ணிக் குடுங்க நான் ஹிந்தியில பேசி உங்களுக்காக சீட் கேக்கறேன்...” என்க., டயல் செய்து தந்தபின் அவள் பேசிய ஹிந்தியாவது :

“ஹலோ ஜி! நான் சென்னை மாம்பலம் சுயஉதவிக் குழு தலைவி சரிதா பேசறேன்ஹை! மை ஹஸ்பன்ட்ஜிக்கு எம்.பி சீட் வேணும் ஹை””

‘என்னது...? சுய உதவியா? பல் தேய்க்கற பிரஷ்ல இருந்து குளிக்கறதுக்கு சோப்பு டவல் வரை நான்ல்ல எடுத்து வைக்கணும் இவளுக்கு. அவ்வ்வ்வ்!’ என அலறியது மனஸ்.

“.......................”

“அவர் பக்கா ஆம்ஆத்மிஹை! நான் என்னா சொன்னாலும் ஆம் ஆம் சொல்லற  ஆத்மி ஹை! அவர். உங்க கட்சிக்கு பொருத்தமா இருப்பாரு ஜி”

“.......................”””

“க்யா? அடிக்கடி உண்ணாவிரதம் இருக்கணுமாஜி?  அதெல்லாம் இருப்பார்... நான் பாதிநாள் சமூக சேவை செய்யறதுக்கு வெளிய போய்டுவேன்ஜி.  அப்ப அவரு உண்ணாவிரதம்தான் ஹை”” ”

எப்பூடி...? ‘‘ஜி’’”யும் “ஹை”யும் சேர்த்துக்கிட்டா அதுதான்   ஹிந்தின்னு அவ புரிஞ்சுக்கிட்டது சக‘வாச‘ தோஷத்தாலதான்! ஒருமுறை டெல்லி போனபோது சரிதாவுக்கு வாசன் ஹிந்தி கற்றுக் கொடுத்த லட்சணம் அப்படி!. ரெண்டு பேர் வாயிலும் சிக்கி ஹிந்தி படாத பாடு பட்டது  நினைவுக்கு  வந்தது. கெஜ்ரிவாலுடன் பேச்சு வார்த்தை அனுமார் வால் மாதிரி நீளமாக போய்... கடைசியில் கோபத்துடன் போனைத் தூக்கி எறிந்தாள். (பணம் கொடுத்து வாங்கியது நானல்லவா? அவ்வ்வ்!)

‘ஒருவழியா தப்பிச்சிட்டோம்டா... சிஷ்யப் பிள்ளை சீனுப்பய வேற தெனாலிராமன் படத்துக்கு டிக்கெட் வாங்கிட்டு காத்துக்கிட்டு இருப்பானே... சரிதாவை சமாளிச்சு எப்படிக் கிளம்பறதுன்னு  தெரியலையே...’ என்று மனஸ் புலம்ப... தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத சரிதா, “ஏங்க... நான் இங்க நாயா பேயா உங்களுக்காக கத்திக்கிட்டிருக்கேன். நீங்க என்னடான்னா இஞ்சி தின்ன எதுவோ மாதிரி முழிச்சிக்ட்டிருக்கீங்க!”

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நான் வாசல் பக்கம் பார்க்க அங்கே சீனுவின் தலை தெரிந்தது. அடப்பாவி! நான் வர்றதுக்கு லேட்டானதால் வீட்டுக்கே வந்துட்டான் போல இருக்கே.... அதிர்ந்த நான். ‘சீனு! அப்படியே போயிடு...’ என்று ஜாடை காட்ட... அதை ’உள்ளே வா’ என்பதாகப் புரிந்து கொண்டு உள்ளேயே வந்துவிட்டான்.

“அடடே... சீனுவா? வாப்பா...” என சரிதா வரவேற்றது ஆச்சர்யமாக இருந்தது . அவங்க வீட்டு ஆட்களை தவிர வேறு யார் வந்தாலும் பத்ரகாளியாக மாறி விடும் சரிதாவா இது? நம்ப முடியவில்லை. ஒருவேளை இது சரிதாவின் அரசியல் பாடமோ..?

“டேய் சீனு! சரிதா கோவத்துல இருக்கா... உடனே ஓடிரு...” ” என்று நான் அடிக்குரலில் சொல்ல... சீனு தன் டிரேட் மார்க் புன்னகையை உதிர்த்து ரகசியத்தை ரகசியமாய் சொன்னான் : “ஸார்! நான் போன தடவை வந்தபோது உங்க வீட்டில சாப்பிட்டனே ஞாபகம் இருக்கா? அப்பவும் அண்ணி கோபமா இருந்தாங்கள்ல... அவங்க வச்ச சுண்டக்கா சொத்தக் குழம்பை - சாரி வத்தக் குழம்பை ரொம்ப ரொம்ப சூப்பர்னு சொன்னேனே! அப்ப எனக்கு பாராட்டும் உங்களுக்கு அடியும் கிடைச்சதே மறந்து போச்சா? இப்பவும் அப்டி சமாளிச்சுருவேன்” என்றான் .

சரிதா,“சீனு! உன் வாத்தியாரை எலக்ஷன்ல சுயேச்சையா நிக்க வெக்கலாம்னு இருக்கேன். எவ்வளவு நாள்தான் வெட்டியா மின்னல் வரிகள், ஜன்னல் கரிகள்னு பத்து பைசாவுக்கு  பிரயோசனம் இல்லாம எழுதிக்கிட்டிருக்கிறது? நீதான் இவருக்காக பேஸ்புக்கு,  பேஸ் நோட்டுன்னு எல்லாத்துலயும் பிரச்சாரம் பண்ணனும். இப்ப அதுதானே ட்ரென்ட்?” ”

 "அண்ணி! சூப்பர் ஐடியா! ஆனா ஒரு சின்னத் திருத்தம்...! சாருக்கு பதிலா நீங்களே நிக்கணும். அவரைவிட நீங்கதான் பேமஸ். உங்களை வச்சுதான் அவரே பேரு வாங்கி இருக்கார்...?’ ”

தெனாலிராமன் படத்தைவிட இங்கு நடப்பது சுவாரசியமாக இருந்ததால் சினிமாவுக்கு கூப்பிட வந்ததையே மறந்தவனாக சீனு என்னை வைத்து காமெடி பண்ணிக் கொண்டிருக்க, நான் கோபமாய் முறைக்க... சீனுப்பயல் அதைக் கண்டுகொள்ளாமல் சீரியசாக கலாய்த்துக் கொண்டிருந்தான்.  “கணேஷ் சார்  எழுதின ‘‘சரிதாயணம்’” கதைகள்ல நீங்கதான் ஹீரோயின்! நான், என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் உங்களோட ரசிகர்கள்தான். உங்களுக்குத்தான் அவரைவிட அதிக ஓட்டு கிடைக்கும், அதையும் தவிர. அவருக்கு எழுத தெரியுமே தவிர அதிரடியா பேசல்லாம் தெரியாது. அதுக்கு நீங்கதாங்க சரி” ” என்று உசுப்பேற்றிக் கொண்டிருந்தான்.

“அடப்பாவி! உன்னைப் பத்தின கதைகள்னு மட்டும்தானே சரிதாட்ட சொல்லி வச்சிருக்கேன். இவனால சரிதாயணத்தை முழுசா அவ படிச்சா என் கதி என்னவாகு? பயபுள்ள தெரிஞ்சே பத்த வைக்கிறானே” என்று ப(க)தறியது மனஸ். சீனு அசால்ட்டாய் தொடர்ந்தான். “அண்ணி! அற்புதமா தேர்தல் அறிக்கை ஒண்ணு தயார் பண்ணனும்! நீங்க இணையத்துல பேமஸா இருகறதால நெட்டை யூஸ் பண்ற அத்தனை பேரோட வோட்டும் கிடைக்கற மாதிரி இலவசங்களை அறிவிக்கலாம்”

சரிதா உற்சாகமானாள். “அட. நல்லா இருக்கே ஐடியா... சாம்பிளுக்கு ஒண்ணு சொல்லு பாக்கலாம்”

“பேஸ் புக்கில போடற ஸ்டேடஸ்க்கு 1000 லைக் இலவசமா போடப்படும், ப்ளாக்ல எழுதற ஒவ்வொருவருக்கும் 100  விலையில்லா பாராட்டு  பின்னூட்டம் போடப்படும். இலவச இன்டர்நெட் வசதி செய்து தரப்படும்... ” என்று தொடர்ந்து சீனு அள்ளி விட... “எக்சலன்ட் சீனு! இதெல்லாம் ஏன் இவருக்கு தோணவே மாட்டேங்குது? ரைட்டு... எப்ப வேட்பு மனு தாக்கல் பண்ணலாம்?” ”

“இப்பவே பண்ணலாம். ஆனா வேட்பு மனு தாக்கல் பண்ண ரெண்டு பேர் போகக்கூடாது கூட்டமா போகணும்”

“கூட்டத்துக்கு எங்க போறது?””

“கவலைப்படாதீங்க... இப்ப வரவழைச்சிட்றேன். ”

பயபுள்ள மொபைலில் அடுத்த விநாடியே மெசேஜ் அனுப்ப... ஸ்கூல் பையன், கோவை ஆவி, மெ.ப.சிவா, ரூபக்ராம், டி.என்.முரளிதரன், குடந்தையூர் சரவணன், அரசன், மதுமதி, பிரபாகரன், செல்வின், ஆரூர்மூனா, சேட்டைக்காரன், கே,ஆர்,பி,செந்தில், மதுரைத்தமிழன், தமிழ்வாசி பிரகாஷ் என ஒரு பெரும் படையே சில நிமிடங்களில் கூடிவிட்டது. ஒருசில நிமிடங்களில் பெருங்கூட்டத்தை கூட்டிய சீனுவின் திறமையைக் கண்டு, தன் சபதம் நிறைவேறிவிடும் என்று சரிதா சந்தோஷமானாள். “சீனு... இவரோட தங்கைகள் ராஜி. சசிகலா. பிரியா இவங்களுக்கெல்லாம் போன் போடு. அவங்க மத்தவங்களக் கூப்ட்டு ஒரு மகளிர் அணிக் கூட்டத்தையே சேர்த்துடுவாங்க. நாம உடனே கிளம்பலாம்...’ ” என்றாள் குஷியாக.

அதற்குள் நான்கைந்து கார்கள் வாசலில் வந்து நின்றன. எல்லாம் இந்த உத்தமவில்லன் சீனுவின் ஏற்பாடாகத்தான் இருக்க வேண்டும். பயபுள்ளக்கி என்னைய மாட்டிவிடுறதுன்னா எப்பவும் ஸ்பீடுதான்! “அண்ணி கார்லாம் வந்துடுச்சி... வாங்க போகலாம்... போற வழில மகளிரணிய பிக்கப் பண்ணிக்கலாம்.” என்க, சரிதா என்னைப் பார்த்து, “வீட்டை பாத்துக்கோங்க. நான் தம்பிங்ககூட போய் வேட்பு மனு தாக்கல் பண்ணிட்டுவரேன். அதுக்குள்ள எனக்காக உருப்படியா பேனர் கட் அவுட்டையாவது  டிஸைன் பண்ணி வைங்க”

நான் அந்தக் கும்பலை முறைக்க கண்டு கொள்ளாமல் அனைவரும் புறப்பட்டனர். “எலே சீனு! குருவையே காமெடி  பீசாக்கிட்டியே... நீல்லாம் நல்லா வருவ லேய்...” என்று நொந்து கொண்டே, காலையில் இருந்து பிரிக்கப் படாமல் இருந்த அன்றைய பேப்பரை எடுத்துப் பிரித்தேன்.  அதில் தலைப்பு செய்தியாக “நேற்றோடு வேட்பு மனு தாக்கல் முடிந்தது” என்றிருந்தது. அதைப் படித்ததும் சந்தோஷமாக இருந்தாலும் சரிதா கோபமாகித் திரும்பி வருவதால் விளையும் பின்விளைவுகளை எண்ணியதும் சற்று கலக்கமாக  இருப்பதால் ‘ழே’ என்று விழித்தபடி அமர்ந்திருக்கிறேன் நான்.
=========================================================
,இந்தச் சிறுகதையை எழுதியது நானல்ல... சரிதாயணத்தின் ரசிகரான நம் வலையுலக நண்பர் ஒருவரின் கைவண்ணம் இது. சற்றே என் பாணிக்கு மாற்றி வெளியிட்டிருக்கிறேன். எழுதியவரின் பெயர் பதிவிலேயே இருக்கிறது. அவர் யார் என்பதைச் சரியாகச் சொல்லும் முதல் மூன்று பேருக்கு என்னிடமிருந்து புத்தகப் பரிசு நிச்சயம்.
=========================================================

Monday, April 7, 2014

சரிதாவும் செல்போனும்..!

Posted by பால கணேஷ் Monday, April 07, 2014
‘லை டிடெக்டர்’ என்று ஒரு கருவி இருக்கிறதாம். அது பொய் பேசுகிறவர்களைக் கண்டுபிடித்து விடுமாம். அதென்ன பெரிய விஷயம் ஐயா....?. மனிதர்களைப் பொய் பேச வைக்கும் கருவி ஒன்றிருக்கிறது... தெரியுமா உங்களுக்கு...? அசோக் பில்லரில் இருக்கும்போதே,  ”சைதாப்பேட்டை வந்துட்டேன். இன்னும் அஞ்சே(?) நிமிஷத்துல வந்துருவேன்” என்று பல்லாவரத்தில் நின்றிருப்பவரிடம் புளுகுவதில் தொடங்கி இந்தக் கருவி வயது பாகுபாடில்லாமல் அனைவரையும் பொய் பேசவைக்கிறது. ‘செல்போன்’ என்பது அதன் பெயர். சரி, இந்தக் கருமத்தை விட்டொழிச்சுட்டு இருந்துடலாம்னாலும் முடியல... எத்தனை தொல்லை தந்தாலும் மனைவிகளைச் சகிச்சுக்கிட்டு வாழற மாதிரி இதோடயும் வாழறது பழகிப் போய்டுச்சு. ஸாரி... சென்ற வாக்கியத்தில் ‘மனைவிகள்’ என்றிருப்பதை ‘மனைவி’ என்று திருத்தி வாசிக்கவும். ஹி... ஹி... ஹி...!

மேற்கண்ட பாராவில் இருப்பது நான் சொல்கிற பொன்மொழிகள் அல்ல... சரிதாவின் ‘பெண்மொழி’கள்தான் அவை - கடைசி இரண்டு வரிகளைத் தவிர... ஹி... ஹி... ஹி...!. செல்போன்கள் அறிமுகமாகி பேஸிக் மாடல் வகையைப் பயன்படுத்த நான் பழகிய நாளிலிருந்து ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் இன்றைய தினம் வரை “உனக்கும் ஒரு செல்போன் இருந்தா நல்லது. வாங்கிக்கம்மா...” என்று நான் பலமுறை வற்புறுத்தியபோதும் மறுத்து வந்தவள் சரிதா. “அதெதுக்கு வீணா தொல்லை...? உங்களுக்கு போன் பண்வறன்லாம் ஒண்ணு குளிக்கும் போது பண்றாங்க... இல்ல, சாப்பிடும் போது பண்றாங்க... நானாவது நிம்மதியா இருக்கேனே...” என்பாள். சரி... அதுவும் சரிதான் என்று நாளது வரை நான் நிம்மதியாகவே இருந்து வந்தேன். 

பெரிய பவுன்ஸரை வீசப் போகிறாள் என்று நாம் எதிர்பார்க்கும் சமயம் நோபால் வீசுவதும், நோபாலை எதிர்பார்க்கும் சமயம் பவுன்ஸரை நம்மிடம் பிரயோகிப்பதுமான மனைவி இனத்தின் வாடிக்கைப்படி ஒரு (அ)சுப தினத்தின் காலையில் என்னிடம் நெருங்கி வந்தாள் சரிதா.
‘
“என்னங்க... நேத்து என் ஃப்ரண்ட் தமிழ் பேசினா...”

“ஓ... முந்தாநாள் வரைக்கும் உன் ஃப்ரண்ட் தெலுங்குல பேசிட்டிருந்தாளா...?”

“ஐயோ... கடவுளே... நான் சொன்னது என் ஃப்ரண்ட் தமிழரசி பேசினாங்கறதை...”

“அப்புடித் தெளிவாச் சொல்லு... புடவை கட்டின நவீன நாரதராச்சே உன் தமிழரசி!” இப்போ என்ன கிளப்பி விட்டிருப்பாளோ என்று சந்தேகாபஸ்தமாக சரிதாவைப் பார்த்தேன்.

“என்னங்க... எனக்கு உடனே ஒரு செல் வாங்கித் தரணும் நீங்க...”

“வாங்கிட்டாப் போச்சு... டார்ச் லைட்டுக்கா இல்ல வால் கிளாக்குக்கா?”

“ஈஸ்வரா... நான் சொன்னது பேட்டரி செல் இல்லீங்க... செல்போன்...”

“என்னது? நீயா செல்போன் கேக்கறே? ஆச்சரியமாயிருக்கே...?”

“அது ஒண்ணுமில்லீங்க... தமிழ் புதுசா ஒரு செல் வாங்கியிருக்காளாம். சும்மா சும்மா போன் பண்ணி ரொம்பத்தான் பீத்திக்கறா. எனக்கு ஒரு மொபைல் உடனே வாங்கியாகணும்...”

“சரி, வர்ற ஸண்டே உனக்கு ஒரு ஸ்மார்ட் போனாவே வாங்கிரலாம்...”

“வேணாம்... போனாவது ஸ்மார்ட்டா இருக்கட்டுமேன்னுதான் நீங்க ஸ்மார்ட் போன் வாங்கிக்கறதை நான் கண்டுக்கலை. எனக்கு சிம்பிளான போன் போதும்” என்ற சரிதாவை நான் முறைக்க... (வழக்கம் போல) கண்டுகொள்ளாமல் சமையலைறை நோக்கிச் சென்றாள் அவள்.

செல்போன் வாங்கி வந்த கையோடு அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை என்னை விவரிக்கச் சொல்லி பொறுமையாக கேட்டுக் கொண்டாள். நான் லைன் போட்டுக் கொடுக்க, அவள் தோழிகளிடமெல்லாம் புது போன் வந்த சரித்திரத்தை(!) சொல்லி, தன் நம்பரையும் பரப்பி... ஞாயிற்றுக்கிழமை நன்றாகவே போனது. முக்கியமான நம்பர்களை ‘ஸ்பீட் டயல்’லில் போட்டு எப்படி அழைப்பது என்பதையும் விரிவாக விளக்கியிருந்தேன்.

அடுத்த தினம் நான் அலுவலகத்தில் முக்கியமான ஆணி ஒன்றை பிடுங்கிக் கொண்டிருந்த சமயம் ‘சம்சாரம் என்பது வீணே... ஸாரி... வீணை’ என்று பாடி அழைத்தது என் மொபைல். சரிதா அழைக்கிறாள் முதல்முறையாக1

“சொல்லும்மா...”

“ஒண்ணுமில்லீங்க... புதுபோன்ல உங்ககிட்ட பேசணும்னு தோணிச்சு. அதான் கூப்ட்டேன்...”

 “நல்லாக் கூப்ட்டே...! மத்தியானம் லன்ச் டயம்ல கூப்டிருக்கலாம்ல? இப்படியா பிஸியான வொர்க்கிங் ஹவர்ல் சும்மா கூப்பிடுவ..? வைடி போனை..” என்று (ஆங்)காரமாகச் சொல்லிவிட்டு போனை கட் பண்ணினேன். ஆனாலும் பாருங்கள்... முக்கியமான ஆணிகளைப் பிடுங்கி, சற்றே ஃப்ரீயானதுமே, ‘ஆசையா மொததடவையாக் கூப்பிடறவ கிட்ட இப்படியா எரிஞ்சு விழுவ?’ என்று படுத்த ஆரம்பித்தது மனஸ். அவளுக்கு டயல் செய்தால்... ‘இந்த எண் அழைப்பு எல்லைக்கு அப்பாலுள்ளது அல்லது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது’ என்கிற மறுமொழி கிடைத்தது. அந்த தினத்தின் லன்ச் அவரிலும் மாலையிலும் தன் முயற்சியில் மனந்தளராத விக்ரமாதித்தன் போல நான் மீண்டும் மீண்டும் முயற்சிக்க, கிடைத்ததென்னவோ அதே பதில்தான். என்னவாயிற்று இவளுக்கு ஏன்ற குழப்பத்துடனேயே வீடு திரும்பியவனை கோபமாக வரவேற்றாள் சரிதா.

“ஏங்க... நான் ஸ்மார்ட் போன் வேணாம்னு சொன்னது வாஸ்தவம்தான். அதுக்காக இப்படியா மட்டமான போனா வாங்கித் தர்றது. உங்ககிட்ட போன் பண்ணிட்டு கட் பண்ணதுமே ஆஃப் ஆயிடுச்சு. திரும்ப ஆன் பண்ணி, தமிழ்கிட்ட பேசிட்டு வெச்சா மறுபடி ஆஃப் ஆயிடுது. வந்த எரிச்சல்ல அப்படியே போட்டுட்டேன். ஒரொருத்தர் பொண்டாட்டிக்குன்னு உருகி உருகி(?) செய்யறாங்க. நீங்களும் இருக்கீங்களே...” என்று அவள் பேச்சை (வழக்கம்போல்) நான் ஸ்டாப்பாகத் தொடர்ந்து கொண்டிருக்க, நான் அவள் போனை எடுத்து ஒரு கால் செய்து முடித்தேன். சரியாகத்தானே இருக்கிறது?

“சரி, சரியாத்தானே இருக்கு உன் போன்?”

“என்னத்த சரியா இருக்குது? இப்படிக் குடுங்க...” என்று வாங்கி தன் தோழிக்கு கால் செய்து பேசினாள். அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த நான் ஒரு குட்டித் தூக்கமே போடும்ளவுக்கு ‘கொஞ்ச நேரம்’ பேசிவிட்டு காலை கட் செய்தாள். இருங்கள்.... நியாயமாக அதை கட்ட்ட்ட்ட் செய்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். காலை கட் பண்ணுவதற்கு ரெட் பட்டன் மேல் வைத்த விரலை எடுக்காமலேயே வைத்திருந்தால் ஸ்விட்ச் ஆஃப் ஆகாமல் என்னவாகும் ஸ்வாமீ? அய்யோ... அய்யோ... என்று வடிவேலு மாடுலேஷனில் சொல்லிக் கொண்டு அவளுக்கு பொறுமையாக எடுத்துச் சொன்னேன்.

“இப்படித் தெளிவா முதல்லயே சொல்லிக் கொடுத்திருக்கலாம்ல? நான்னா எதுலயும் உங்களுக்கு அலட்சியம்தான்” என்று சரிதா சரியாக அதற்கும் பழியை என்மீது போட்டாள். அவ்வ்வ்வ்வ்!

இப்படியாகத்தானே செல்போனுடன் பழகி அதன் மூலம் ரேடியோ கேட்கவும், பாடல்கள் கேட்க/பார்க்கவும் இதன் முக்கிய பயன்பாடான பேசுதலை அவ்வப்போதும் செய்து வந்து கொண்டிருந்தாள். நானும் நிம்மதியாக அலுவலகம் சென்று வந்து கொண்டிருந்தேன். அதற்கும் ஆப்ப்டிக்க வந்து சேர்ந்தான் என் ஆஸ்தான வில்லன. அன்று மாலை நான் வீடு திரும்புகையில் பல்லெல்லாம் வாயாக வரவேற்றாள் சரிதா. “என்னங்க.. உங்க போனைக் குடுங்க...” என்று வாங்கி, சரியாக ஸ்வைப் செய்து ஒரு கால் பேசிவிட்டு வைத்தாள். நெட் கனெக்ஷனை ஆன் செய்து ‘மின்னல் வரிகள்’ தளத்தை ஓபன் செய்து காண்பித்தாள். ‘ழே’ என்று விழிக்க ஆரம்பித்தேன் நான்.

“எப்படி சரி.. எப்படி இதெல்லாம்...?” என்று வியந்த அதேநேரம். “நான்தான் அக்காவுக்குக் கத்துக் கொடுத்தேன் அத்திம்பேர். ஆனாலும் நீங்க ரொம்ப மோசம்... இதெல்லாம் நின்னு சொல்லித்ர நேரமில்லாம ஓடிட்டிருக்கீங்க” என்று உள்ளறையிலிருந்து வந்தபடி சிரித்தான் வாசன் என்கிற அந்த உத்தம வில்லன்.

சரிதா என்னை ஏறிட்டாள். “என்னங்க... நெட்ல ப்ரவுஸ் பண்ண... போட்டோ எடுக்க... எத்தனை வசதி இருக்குது? உடனடியா எனக்கு இந்த ஸண்டே ஒரு ஐ போன் வாங்கிக் குடுத்துடுங்க...” என்றாள். இரட்டை டவரை மோதிய விமானம் நேரே என்னை வந்து தாக்கிய மாதிரி இருந்தது எனக்கு.

 ஐபோனுக்கு ஆகக்கூடிய செலவை நினைத்ததுமே லேசாக தலை சுற்றத் தொடங்கியது. சரி, அதையாவது சமாளித்து விடலாம். அதன் மூலம் சரிதா நெட்டில் உலவினால்...? ஐயையோ... அந்த விபரீதத்தை நினைத்ததுமே அட் எ டைம் நான்கைந்து ரோலர் கோஸ்டரில் பயணித்துவிட்டு வந்த மாதிரி தலை மேலும் சுழலவாரம்பித்தது துதைப் படிக்கிற நீங்க எல்லாரும் நல்லவங்க, வல்லவங்க (ஐஸ்!. அதனால உங்க அனுபவத்துலருந்து இதைத் தடுகக ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்க ஐயாமார்களே... அம்மாமார்களே..!

Wednesday, December 4, 2013

கணேச பாகவதரின் கச்சேரி - 3

Posted by பால கணேஷ் Wednesday, December 04, 2013
ரொம்ப நாழியா காத்துண்டிருக்கேளா? ஸாரி.... தோ வந்துட்டேன்...! 

சரிதாகிட்ட அந்தப் பொண்ணைக் கூட்டிட்டு வ்ந்த டைரக்டர், ‘‘இவங்க பேரு சரிதா"ன்னு அறிமுகப்படுத்திட்டு, சரிதாட்ட, ‘‘இவங்க பேரு ப்ரீத்தி. இவங்களோடதான் சீரியல்ல நீங்க மோதப் போறீங்க"ன்னுட்டு நகர்ந்துடறாரு. அந்தப் பொண்ணு சரிதாவைப் பார்த்து கும்பிட்டு, ‘‘நீங்க அழகா இருககீங்க ஆன்ட்டி!"ங்கறா. அவ்வளவுதான்... ஏற்கனவே கோபத்துல சிவப்பாயிட்டிருந்த சரிதாவோட முகம் நெருப்பாட்டம் சிவந்துடறது.

‘‘என்னது....? ஆன்ட்டியா? விட்டா பாட்டின்னுவ போலருக்கே...! தோ பாரும்மா... ஒண்ணு அக்கான்னு கூப்பிடு, இல்லன்னா ஸே மேடம்...!"ன்னு பல்லைக் கடிச்சுக்கிட்டு கோபமா சொல்றா. அவளானா கொஞ்சமும் அலட்டிக்காம, ‘‘போங்க ஆன்ட்டி! ரொம்ப தமாஷ் நீங்க... இதுக்கெல்லாம் கோபப்பட்டுக்கிட்டு..."ன்னு உரிமையா சரிதாவோட கன்னத்துல ஒரு தட்டு தட்டிட்டு நகர்றா. அதே கோபத்தோட சரிதா, நம்மாளு பக்கம் திரும்ப... அவன் மெதுவா எஸ்கேப்பாயிடறான். இது மாதிரி சமயங்கள்ல எப்படித் தப்பிக்கறதுன்னு பிள்ளையாண்டானுக்கு அத்துபடியில்லியோ... ஹா... ஹா...!

ஷாட் ரெடின்னுட்டு அசிஸ்டெண்ட் டைரக்டர் கூப்பிடவும் சரிதா போறா. நம்மாளு ஹாயா, ஒரு சேர்ல உக்காந்துண்டு ஷுட்டிங்கை வேடிக்கை பாக்கறான். டைரக்டர், ‘‘ப்ரீத்தி, நீங்க சரிதா மேடத்தப் பாத்து, ‘யாரு ஜெயிக்கறாங்கன்னு பாத்துடலாம்னு" சொல்லி சிரிக்கறீங்க. சரிதா மேடம், நீங்க ப்ரீத்திகிட்ட, ‘யார்கிட்டடி கொக்க
ரிக்கறே?"ன்னு கேட்டு பளார்ன்னு கன்னத்துல அறையறீங்க. புரிஞ்சுதா...?" அப்படின்னு சொல்லிட்டு, ‘‘ரெடி டேக்..."குங்கறார். ப்ரீத்தி அவளோட டயலாக்கைப் பேசி முடிக்கவும், சரிதா ‘‘யாருகிட்டடி கொக்கரைக்கறே?"ன்னு கேட்டுட்டு அவ கன்னத்துல பளார்னு அறையறா.

‘‘கட்... கட்...'ன்னு கத்திட்டு டைரக்டர் வேகமா பக்கத்துல வர்றாரு. ‘‘மேடம்... கொக்கரைக்கறே இல்ல... கொக்கரிக்கறன்னு கேக்கணும். பாத்துப் பண்ணுங்க... ஒன் மோர் ஷாட்" அப்படிங்கறாரு. ‘‘ஸார்..."ன்னு பரிதாபமா குரல் கொடுக்கறா ப்ரீத்தி. ‘‘என்னம்மா?"ன்னு கேக்கற டைரக்டர் கிட்ட, ‘‘இந்த ஆன்ட்டி நடிக்கற இன்ட்ரஸ்ட்ல நிஜமாவே கன்னத்துல அறைஞ்சுட்டாங்க ஸார்..."ன்னு பாவமாச் சொல்றா. ‘‘மேடம்... பாத்துப் பண்ணுங்க..."ன்னு மறுபடி சொல்லிட்டு டைரக்டர் கேமரா பின்னால போய் நின்னுண்டு ‘‘ஸ்டார்ட் கேமரா"ங்கறார்.

இப்போ... மறுபடி அதே மாதிரி ‘‘யார்கிட்டடி கொக்கரைக்கறே?'ன்னு கரெக்டா தப்பாப் பேசிட்டு, திரும்ப அந்தப் பொண்ணை ஒரு ‘பளார்' விடறா சரிதா. ‘‘கட்... கட்..."ன்னு கோவமா கத்தின டைரக்டர் சரிதாட்ட வந்து, ‘‘அரைக்கறது இல்லம்மா... அரிக்குது... அரிக்குது..."ன்னு பலமா கத்தறாரு. ‘‘போங்க ஸார்... அரிக்குதுன்னா சொரிஞ்சுக்கறத விட்டுட்டு என்கிட்ட வந்து சொல்றீங்க?"ன்னு சரிதாவானா வெக்கப்படறா.

அதப் பாத்ததுமே டைரக்டரோட பி.பி. கன்னாபின்னான்னு எகிறிப் போய்டறது போங்கோ... ‘‘அரிக்கறதுன்னு சொல்லலைம்மா. நீங்க பேசவேண்டியது கொக்கரிக்கறதுன்னு. திரும்பத் திரும்ப கொக்கரைக்கறதுன்னே பேசறீங்க. கொக்கைல்லாம் யாரும் அரைக்க முடியாதும்மா... இதான் லாஸ்ட். இந்தத் தடவை நீங்க சரியாப் பேசலைன்னா... நாளைக்கு எடுத்துக்கலாம் இந்த சீனை"ன்னு எரிஞ்சு விழுந்துட்டு, அந்தப் பக்கம் நகர்றாரு.

வேடிக்கை பாத்துண்டு இருககற நம்ம கதாநாயகனுக்கு அந்தப் பொண்ணு ப்ரீத்தியப் பாக்கவே பாவமா இருக்கு. சரிதாட்ட அறை வாங்கினா எப்படி வலிக்கும்னு அனுபவபூர்வமா நேக்கும், உங்களுக்குமா தெரியும்...? அவனுக்கில்ல தெரியும்! அந்தப் பொண்ணை இப்ப ரொம்ப பரிதாபமாப் பாக்கறான். அதைப் பாத்ததுமே சரிதாவோட முகத்துல கோபத்தோட வால்யூம் ஜாஸ்தியாறது. மறுபடி டைரக்டர் டேக் எடுக்க... அவரோட பொறுமையையும், ப்ரீத்தயோட கன்னத்தையும் ரொம்பவே சரிதா சோதிக்க, ஏழாவது டேக்ல சரியாப் பேசிடறா. ‘‘கட்... கட்..."ன்னு குரல் கொடுத்த டைரக்டர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில அட் எ டைம் ஆறு காளைய அடக்கினவர் மாதிரி பெருமூச்சு விட்டுக்கிட்டு வந்து நம்ம கதாநாயகன் பக்கத்துல இருக்கற சேர்ல சரியறாரு.

சரிதா பவ்யமா அவர் பக்கத்துல வந்து நின்னுண்டு, ‘‘நாளைக்கு எப்ப, எங்க வரணும் ஸார்?"ன்னு கேக்கறா. அவரானா அவசர அவசரமா, ‘‘அப்புறமா ஃபோன் பண்ணிச் சொல்றேம்மா... இப்ப நீங்க கிளம்புங்கோ"ங்கறார். கார்ல திரும்பி வரும்போது நம்மாளு சரிதாட்ட கேக்கறான்: ‘‘ஏம்மா... சொல்றதை திருப்பிச் சொல்லத் தெரியாத அளவுக்கு நீ மோசமில்லன்னு நேக்கு நன்னாவே தெரியும். அப்புறம் ஏன் அப்படி ஏகப்பட்ட டேக் வாங்கி இழுத்தடிச்சே.?"ன்னு கேக்கவும், சரிதா கோவமா அவனோட கொமட்டுலயே குத்தறா. ‘‘தெரியாத மாதிரி கேக்கறதப் பாரு... அவகிட்ட நீங்க வழிஞ்சதே என்னால தாங்க முடியல. பத்தாததுக்கு அவ வேற ஆன்ட்டி ஆன்ட்டின்னு கூப்பிட்டு ரொம்பத்தான் எரிச்சல் பண்ணிட்டா. இதான் சாக்குன்னு ஷாட்டுல நடிக்கற சாக்குல நல்லா மொத்திட்டேன்..."ன்னுட்டு ஹா... ஹா...ன்னு பலமாச் சிரிக்கறா.

‘‘நல்ல காரியம் பண்ணினே போ... எனக்கென்னவோ அந்த டைரக்டர் மறுபடி உன்னை நடிக்கக் கூப்பிடுவாருன்னு தோணலம்மா..."ன்னு நம்ம கதாநாயகன் சொல்றதுக்கு, ‘‘கூப்பிட்டாம இருக்க முடியாதே... சீரியல் எபிஸோட் உடனே குடுத்தாகணுமாம், டைமில்லைன்னு டைரக்டர் அவர் அசிஸ்டண்ட் கிட்ட பேசிட்டிருந்ததைக் கேட்டேனே..." அப்படின்னு குதூகலமாத்தானே சொல்றா. நம்மாளு அதுக்கு மேல ஆர்க்யூ பண்ணினா வம்புதானே வந்து சேரும்னுட்டு காருக்கு வெளில பராக்குப் பாக்கற மாதிரி திரும்பிக்கறான். ஆனா... விதியோட விளையாட்டப் பாத்தேளோ... அவன் சொன்ன மாதிரியே நடந்துடுத்து.

அந்த வாரம் ஒளிபரப்பான சீரியல்ல தான் நடிச்சதை எல்லார்ட்டயும் போன் பண்ணிச் சொல்லிப பீத்திக்கறா சரிதா. அதோட நிக்காம... அந்த எபிஸோட் ப்ராட்காஸ்ட் ஆனப்ப அதை ரிகார்டும் பண்ணி திரும்பத் திரும்பப் பாத்து ரசிக்கறா. அதை பாக்க வெச்சு நம்ம ஹீரோவையும் சோதிக்கறா. ஆச்சு... ஒரு வாரம் முடிஞ்சுடுச்சு. சீரியல் கம்பெனிலருந்து போனக் காணலை. அடுத்த வாரம் வரை வெய்ட் பணணிப் பாத்துட்டு சரிதா அந்த டைரக்டருக்கு போன் பண்ணினா... ‘‘ஸார்... மறுபடி எப்ப நடிக்க வரணும்னு சொல்றேன்னேளே..."ன்னு இழுக்க, ‘‘அம்மா தாயி, ஆள விடுஙக... இந்த வாரம் சீரியல்ல வேற ஒரு நடிகைய நடிக்க வெச்சுட்டு அவருக்குப் பதில் இவர்ன்னு உங்க படத்தையும் அவ படத்தையும் காட்டி கதைய நகர்த்திட்டேன். இன்னும் ரெண்டு நாள்ல நடிச்சதுக்கு செக் வந்துரும். ரொம்ப தாங்க்ஸ்ம்மா"ங்கறார்.

சொத்தைக் கடலைய மென்னுட்ட மாதிரி ஆயிடறது சரிதாவோட மூஞ்சி! செல்போனைத்தானே அவ கட் பண்ணிட்டு நம்மாளைப் பாக்கவும், எதிர் முனைல என்ன சொல்லியிருப்பாங்கன்னு ஊகிச்சுட்ட அவன் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கறான். அதப் பாத்ததும் சரிதா கோவமாயி, முகவாயத் தோள்ல இடிச்சுட்டு உள்ள போறா. இதனால லோகத்துல உள்ளவா எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டிய நீதி என்னன்னா... நம்மளை மாதிரி மிடில் கிளாஸ் குடும்பத்துல உள்ளவாள்ளாம் சீரியலைப் பாத்து (அழுது) ரசிக்கணுமே தவிர, நடிககணும்னு ஆசைப்படப் படாதுங்கறதுதான். இம்புட்டு நேரம் என்னோட காலட்சேபத்தை பொறுமையாக் கேட்டவாளும், அடுத்த கச்சேரிக்கு அழைப்புக் குடுக்கலாமா இவருக்குன்னு யோசிக்கறவாளும் எந்தக் குறையும் இல்லாம குடும்பம், பிள்ளை குட்டிகளோட க்ஷேமமா இருக்கணும்! இப்ப நான் உத்தரவு வாங்கிக்கறேன். வரட்டுமா....


இனறு வலைச்சரத்தில் உங்களின் மேய்ச்சல் மைதானம் படிக்க இங்கே க்ளிக்கவும்!

Tuesday, December 3, 2013

கணேச பாகவதரின் கச்சேரி - 2

Posted by பால கணேஷ் Tuesday, December 03, 2013
நான் வர்றதுக்குச் சித்த நாழி கூடவே ஆயிட்டாலும்கூட, கச்சேரியத் தொடர்ந்து கேக்கறதுக்கு ஆர்வத்தோட காத்திருக்கற உங்களுக்கெல்லாம் வணக்கம். அப்புறம் என்னாச்சுன்னா...

 வாசனோட தொணப்பல் தாங்க முடியாத நம்மாளு சரிதாவை பரிதாபமாப் பாக்க... ‘‘ஹும்...! நீங்க ஆரம்பிச்சாச்சு. அவன் சின்னப் புள்ளைலருந்தே அடம் புடிசசா சாதிக்காம விடமாட்டான். அப்புறமென்ன... சொல்லித் தொலையுங்கோ..."ன்னு சலிப்பாத்தானே சொல்றா. நம்மாளு மனசுக்குள்ள தானே சிரிச்சுண்டு, மேலுக்கு சாதுவா முகத்தை வெச்சண்டு வாசன்கிட்ட அந்தக் கதையச் சொல்றான். ‘‘அதையேண்டா கேக்கற... பதினஞ்சு வருஷத்துக்கு முன்னால கப்ஸி உங்கள் சாய்ஸ்ன்னு ஒரு ப்ரொகிராம் ரொம்பவே ஃபேமஸ்! அதுக்கு டயல் பண்ணிப் பேசறவால்லாம் தவறாம, ‘மேடம்.... நீங்க ரொம்ப அழகா இருககீங்க’ன்னுட்டு வழியுவா."

‘‘தெரியும் அத்திம்பேர். அந்த ப்ரொகிராம் பத்தி நானும் கேள்விப்பட்டிருக்கேன்áங்கறான் வாசன். ‘‘அதேதான்... அதுல தன்னோட குரலும் கேக்கணும்னு உங்கக்காக்கு ரொம்பத்தானே ஆசை. பல மாசமா ட்ரை பண்ணிண்டிருந்தா. லைன்ல வெயிட்டிங் போட்டு கட் பண்ணி டெலிபோன் பில்தான் ஏறித்தே தவிர, இவ பேசினபாடில்ல... கடைசில ஒரு நாள் லைன் கிடைச்சிட்டுது. இவ என்ன பேசினா தெரியுமோன்னோ..."ன்னு கப்ஸி ரமா, சரிதா குரல்கள்ல நடிச்சே காட்டறான் நம்ம கதாநாயகன்.

‘‘ஹலோ... கப்ஸி ரமாங்களா...? நீங்களேதானா....? ஹை! எனக்கு லைன் கிடைச்சிருச்சு!"

‘‘சொல்லுங்க மேடம்...! எங்கருந்து பேசறீங்க? உங்க பேர் என்ன?"

‘‘என் பேர் சரிதாங்க. நான் வெஸ்ட் மாம்பலத்துலருந்து பேசறேன்... மேடம்... நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க..."

‘‘ஓ...! தாங்க்யூ! சொல்லுங்க சரிதா. நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க? உங்க ஹஸ்பெண்ட் என்னவா இருக்காரு? உங்களுக்கு எத்தனை கொழந்தைங்க?"

‘‘நான் ஹவுஸ் வைஃபா இருக்கேன் மேடம். என் வீட்டுக்காரர் பத்திரிகைத் துறையில இருக்காரு. ரீசன்ட்டாதான் கல்யாணமாச்சு மேடம்! இதுவரைக்கும் குழந்தைங்க இல்லிங்க..."

‘‘ஓ...! சீக்கிரமா கிடைக்கட்டும்னு வாழ்த்தறேன். அப்புறம் சொல்லுங்க சரிதா... உங்களுக்கு என்ன பாட்டு போடணும்?"

‘‘ஏதோ ஒரு பாட்டு போடுங்க மேடம்..."

‘‘நீங்கதான் டயல் பண்ணியிருக்கீங்க. உங்களுக்குப் பிடிச்ச பாட்டுத்தான் கப்ஸி உங்கள் சாய்ஸ்ல போடுவோம் சரிதா. அதனால நீங்களே சொல்லுங்க என்ன பாட்டுப் போடணும்?"

‘‘அதான் சொன்னேனே மேடம்... ஏதோ ஒரு பாட்டு போடுங்கன்னு..."

‘‘எனக்குப் பிடிச்ச ஏதோ ஒரு பாட்டப் போடணும்னு சொல்றீங்களா? இல்லீங்க... இன்னும் நிறைய நேயர்கள் பேசணும்னு காத்திண்டிருக்கா. சீக்கிரம் சொல்லுங்க சரிதா மேடம்...! எந்தப் படத்துலருந்து என்ன பாட்டு போடணும்னு..."

‘‘அதான் சொன்னேனே மேடம்... ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படத்துலருந்து ‘ஏதோ ஒரு பாட்டு' போடுங்கன்னு..."

‘‘அவ்வ்வ்வ்வ்! பாட்டு பேரையா ஏதோ ஒரு பாட்டுன்னு சொன்னீங்க? சரிங்க.. இப்ப நீங்க கேட்ட ஏதோ ஒரு பாட்டு வருது --அப்படின்னு சொல்றப்ப கப்ஸி ரமாவோட முகம் போன போக்கையும், அவங்க மைல்டா அழுததையும் நீ பாத்திருக்கணுமே..."ன்னு சொல்லிட்டு கபகபன்னு சிரிக்கிறான் நம்மாளு. இப்ப இதைக் கேட்டதும் வாசனும் தன்னை மறந்து வாய்விட்டுச் சிரிச்சுடறான். சரிதா முகத்துல எள்ளு + கொள்ளு வெடிக்க... ‘‘சரி... சரி... ரொம்பத்தான்.... பல்லு சுளுக்கிக்கப் போறது. இதோ பாருங்கோ... வர்ற சனிக்கிழமைலருந்து ஷுட்டிங் ஆரம்பிக்கறதா சொல்லி வரச் சொல்லியிருக்காரு டைரக்டர். அதனால சனிக்கிழமை காலம்பற எட்டு மணிக்கெல்லாம் தயாராயிடுங்கோ... நாம போறோம்..."ன்னு சத்தம் போட்டுட்டு உள்ள போறா சரிதா.

சனிக்கிழமை காலம்பறவே பரபரப்பா தானும் எழுந்து, ஆத்துக்காரனையும் எழுப்பி துள்ளிக் குதிச்சுண்டு தயாராகறா சரிதா. போரூர் தாண்டி ஒரு பங்களால ஷுட்டிங்குங்கறதால எட்டு மணிக்கே கௌம்பி, சரியா பத்து மணிக்கெல்லாம் அங்க போய்ச் சேர்ந்துடறா. அங்க டைரக்டர் சிவகங்கை சிவனாண்டி காத்திண்டிருககார். அவர் டி.வி. சீரியல்ல புரட்சி பண்ணினவார். அதாவது... கண்ணீரும் அழுகையுமா வந்துட்டிருந்த சீரியல்கள்ல 80கள்ல வந்த சினிமா மாதிரி ‘டுஹாய் டுஹாய்'ன்னு கத்திக்கிட்டே பறந்து பறந்து போடற சண்டைகளையும், கார், வேன் சேஸிங்குகளையும் அறிமுகப்படுத்தினவரு. ஆளு பாக்கறதுக்கு பெரிய சைஸ் காராசேவுக்கு பேண்ட் சட்டை போட்ட மாதிரி (நன்றி: சந்தானம்) இருக்காரு. அந்த டைரக்டர் இவாளை நல்லவிதமாவே வெல்கம் பண்றார். ‘‘வாங்க மேடம்...! உங்களோட கேரக்டரைப் பத்தி மொதல்ல சொல்லிடறேன். ஒரு குடும்பத்துல மூத்த மருமகளா நீங்க வர்றீங்க. சின்ன மருமகள்கள் ரெண்டு பேருக்கும் உங்களுக்கும் ஆகாது. மாமியாரோட கூட்டணி வெச்சுட்டு அவங்களை மெரட்டறீங்க..."

‘‘அப்படியா? அப்புறம் என்ன ஆறது?"

‘‘சரிதான்... இவ்வளவு நேரம் கதை சொன்னதே அதிகம் மேடம்! இதை வெச்சுண்டே நூறு எபிசோட் தாண்டிருவேன். அதுக்கப்புறம் என்ன ஆறதுங்கறதை மெல்ல யோசிச்சுக்கலாம். இப்பவே என்ன அவசரம்?"ன்னு சிரிச்சுட்டு அப்பால போயிடறார் டைரக்டர். அப்புறம் கொஞ்ச நேரத்துல நடிக்கறவாள்ளாம் வந்து சேரச் சேர, கல்யாண வீடு மாதிரி ஆயிடறது அந்த பங்களா. சரிதா, ராமராஜன் மாதிரி ‘லைட்'டா மேக்கப்பிண்டுட்டு தன்னை எப்பக் கூப்பிடுவான்னு காத்துண்டிருக்கா. டைரக்டர் கூப்பிடற பாடில்லை. ‘‘ஸார்... என்னை எப்ப நடிக்க வெக்கப் போறீங்க?"ன்னு டைரக்டர் கிட்ட போய் வேற வேற மாடுலேஷன்ல அவ கேக்கறதும், ‘‘கொஞ்சம் பொறுங்க மேடம். நான் கூப்பிடறேன்"ன்னு வேற வேற மாடுலேஷன்ல அவர் சொல்றதும், சரிதா சலிச்சுக்கறதும் பாக்கறப்ப கரகாட்டக்காரன் வாழைப்பழக் காமெடியப் பாக்கற மாதிரி இருக்குது நம்மாளுக்கு. நல்லா சிரிச்சுண்டு ரசிச்சுண்டிருக்கான்.

இதுலயே லன்ச் டைமும் வந்துடறது. சும்மா சொல்லப்படாது... ஐட்டம்லாம் நல்லா இருக்கறதால... அட, சாப்பிடற ஐட்டங்களைச் சொல்றேனாக்கும் நான்... நம்ம ஹீரோ ஒரு பிடி பிடிக்கறான் - சரிதா பாக்காத நேரத்துல அசைவத்தையும்! அவளுக்கானா எப்ப நடிக்கக் கூப்பிடுவாளோங்கற படபடப்புல சாப்பாடே எறங்கலை போங்கோ... கடைசியில ஒரு வழியா ரெண்டு மணிக்கு அவகிட்ட வர்ற டைரக்டர், த்ன்னோட வர்ற அழகான பொண்ணை அவளுக்கு அறிமுகப்படுத்தறார். ‘‘அடுத்த ஷாட் உங்களோடதுதான் மேடம்! இவங்கதான் ரெண்டாவது மருமகளா நடிக்கப் போறாங்க. இவங்களோட நீங்க சண்டை போடற சீனை முதல்ல எடுக்கப் போறோம்"ன்னு சொல்லிட்டு, தன் அசிஸ்டெண்ட் கிட்ட டயலாக் சொல்லித்தரச் சொல்லிட்டு அப்பால போறாரு.

அந்த அழகான பொண்ணைப் பக்கத்துல பாத்ததும் நம்ம ஹீரோ புள்ளையாண்டான் முகம் பிரகாசமாயிடறது. கண்ணு ரெண்டும் பல்பு மாதிரி மின்னுது. அதைப் பார்த்து நறநறன்னு பல்லைக் கடிக்கறா சரிதா. அந்தப் பொண்ணோட சண்டை போடற மூடு அப்பவே ஸ்டார்ட்டாயிடுச்சு அவளுக்கு. ஏற்கனவே சரிதாங்கற நெருப்பு எரிய ஆரம்பிச்சுட்டதைத் தெரியாம, அதுல கொஞ்சம் பெட்ரோலையும் ஊத்தறா அந்தப் பொண்ணு.
   

                                                                     அப்புறம் என்ன நடந்ததுன்னு கேக்க
                                                                         நீங்க ரெடியா இருந்தாலும் நேக்கு லேசா
                                                                         வயத்தைக் கலக்கறது. சித்த நாழி
                                                                         பொறுங்கோ... வந்துடறேன்!

 
மின்னல் டிவியில இன்றைய நிகழ்ச்சி கொஞ்சம் காபி நிறைய இலக்கியம் படிக்க இங்கே க்ளிக்குக!

Monday, December 2, 2013

கணேச பாகவதரின் கச்சேரி - 1

Posted by பால கணேஷ் Monday, December 02, 2013
நமப்பார்வதி பதயே... ஹரஹர மஹாதேவா... எல்லாருக்கும் வணக்கம். லோகத்துல எல்லாரும் க்ஷேமமா இருக்கணும், மாசம் தவறாம மழை பெய்யணும்னு வேண்டிண்டு கச்சேரிய ஆரம்பிக்கறேன். இந்தக் காலத்துல லோகத்துல புதுசு புதுசா நெறைய டி.வி. சேனல்கள் வந்துண்டிருக்கு. ஜனங்களும் சலிக்காம (சேனலை) மாத்தி மாத்திப் பாத்துண்டுதான் இருக்கா. அதுலயும் இந்தப் பொம்மனாட்டிங்க இருக்காளோல்லியோ... அவா இந்த டி.வி.யப் பாத்துட்டு... அதுலயும் குறிப்பா சீரியல்களைப் பாத்துட்டு பிழியப் பிழிய அழுது, வீட்டுல இருக்கறவாளப் படுத்தி அவங்களை அழ வெக்கறது இருக்கே... அதையே தனி சீரியலா எடுக்கணும் போங்கோ...! இப்படி டிவி சீரியலால அவதிப்பட்டு சீரியலான... ஸாரி, சீரியஸான ஒருத்தனோட கதைய இப்ப உங்களுக்கு நான் சொல்லப் போறேன்.

 ஆதௌ கீர்த்தனாரம்பத்துல நம்ம கதாநாயகன் பாலகணேஷ் மாம்பலத்துல இருக்கற அவனோட வீட்டுல கம்ப்யூட்டர் முன்னால உக்காந்து எதையோ தட்டிட்டிருக்கான். அப்ப அவன் பக்கத்துல வர்ற அவனோட தர்மபத்தினி சரிதா, ‘‘என்னங்க... கண்ணை மூடிக்கிட்டு ஆ காட்டுங்க..." அப்படிஙகறா. இவ இப்படிச் சொன்னா ஏதோ விபரீதமாச்சேன்னு புள்ளையாண்டான் பயந்துண்டு, ‘‘ஆ காட்டச் சொல்றதே ஆபத்து. அதுல கண்ணை வேற மூடணுமா? எப்படிச் சாப்பிட்டாலும் நீ பண்ணின பதார்த்தத்தோட பேரை என்னால சொல்ல முடியப் போறதில்ல... அப்புறம் எதுக்கு..?"ங்கறான்.

‘‘ஹுக்கும்!’’ன்னு அவன் தோள்ல இடிச்சுட்டு, ‘‘சொன்னதைச் செய்யுங்களேன்"ன்னு அவ மிரட்டவும், அதுக்கு மேல தயங்கினா ஆபத்தாச்சேன்னு பயபக்தியா சொன்னதக் கேக்கறான் நம்ம கதாநாயகன். வாய்ல விழுந்ததைக் கடிச்சுட்டு, ‘ஆ'ன்னு அலறி கைல துப்பறான். கைல ஒரு வெள்ளையான ஒரு வஸ்துவோட சேர்ந்து வந்து விழறது அவன் கடைவாய்ப் பல்! ‘‘அடிப்பாவி...! மைசூர் பாகை இப்படியா கட்டியாப் பண்ணுவே? என்னோட ஒரு பல்லே உதிர்ந்துடுத்து பாரு உன்னால.."ன்னு அவனானா அலர்றான். அவளோ துளிக்கூட அலட்டிககாம. ‘‘மைசூர் பாகா...? நாசமாப் போச்சு! நான் பண்ணினது பாதுஷான்னா!"ங்கறா கூலா.

நம்மாளு வாயக் கொப்பளிச்சுட்டு வந்து மறுபடி சீட்டுல உக்காரப் போற நேரத்துல, ‘‘அக்கா... அத்திம்பேர் ஏன் இப்படி ‘இரண்டாம் உலகம்' படத்த ரெண்டாவது ஷோ பாத்துட்டு வந்தவர் மாதிரி ‘ழே'ன்னு முழிச்சுட்டிருக்கார்?’’ அப்படின்னு குரல் கொடுத்துட்டே உள்ள நுழையறான் சரிதாவோட தம்பி வாசன். அவனைப் பார்த்ததுமே வயத்துல புளிய... புளிய என்ன... மிளகு, உப்பு, இஞ்சின்னு சகல வஸ்துக்களையும் கரைக்கற மாதிரி இருக்கு நம்ம ஹீரோவுக்கு.

‘‘ஒரு குட் நியூஸ் சொல்றதுக்குத்தான்டா வரச் சொன்னேன். அதச் சொல்றதுக்கு முன்னால... இந்தா, இந்த ஸ்வீட்டைச் சாப்பிடு"ன்னு அவன் வாயிலயும் இவன் வாயில திணிச்ச அதே பதார்த்தத்தை திணிக்கறா சரிதா. ‘அடப் படுபாவி! சித்த முன்னால வந்திருக்கப்படாதோ’ன்னு மனசுல நெனச்சுண்டு, நம்மாளு அவனைப் பார்க்க, அவன் கடக் முடக்குன்னு கடிச்சு முழுங்கிட்டு ஏப்பம் விடறான். ‘‘ஸ்வீட் பிரமாதமாப் பண்ணியிருக்கேக்கா..." என்று அவன் சொல்லவும் தீப்பார்வையா முறைக்கறான் நம்மாளு.

‘‘சரி.. இனிமே நீ இந்த மாதிரி புதுசா பலகாரம் பண்ணினா முதல்ல இவனுக்குக் குடுத்துட்டு, (அவன் முழுசா இருந்தா&ன்னு மனசுல சொல்லிண்டு) அப்புறம் எனக்குத் தரணும். சரியா..."ன்னு அவசர ஒப்பந்தம் ஒண்ணு போடறதுக்கு இவன் முயற்சி பண்ண, ‘‘ஹும்...! குட் நியூஸ்ன்னு எந்தம்பி சொன்னானே... அது என்னன்னு கேக்கத் தோணறதா பாரு..."ன்னு (கண்ணீரே வராம) கண்ணைக் கசக்கறா சரிதா. ‘‘ஒன்னோட தம்பியப் பாத்த சந்தோஷத்துலயாக்கும் கேக்க மறந்துட்டேன். என்ன விஷயம், சொல்லும்மா..."ன்னு சமாளிக்கறான் பையன். இல்லாட்டி என்னென்ன விளைவுகள் வரும்னு நேக்கும் ஒங்களுக்கும் தெரிஞ்சதவிட அவனுக்குன்னா நன்னா தெரியும்? அவன் அப்படிக் கேக்கவுமே, சரிதா பல்லெல்லாம் வாயா சிரிச்சுண்டே, ‘‘எனக்கு மின்னல் டிவில சீரியல்ல நடிக்கற சான்ஸ் கிடைச்சிருக்கு" அப்படின்னு ஸ்லோமோஷன்ல ஒரு குண்டைத் தூக்கி இவன் மேல வீசறா.

‘‘ஐயையோ... இதென்ன விபரீதம்! நேரம் காலம் இல்லாம நீ சிரியல் பாத்துட்டு படுத்தறதே தாங்க முடியாது. நடிக்க வேற போறியா? எப்படிறீ?"ன்னு முழி பிதுங்க கேக்கறான் நம்மாளு. ‘‘அதாங்க... மின்னல் டிவில ‘டீ வித் திவ்யா' ** புரோகிராம்ல உங்களப் பேட்டியெடுக்கறதுக்காக டிவி ஸ்டேஷனுக்குப் போனோம்ல... நீங்க பேட்டி குடுத்துட்டிருந்த நேரத்துல சீரியல் டைரக்டர் சிவகங்கை சிவனாண்டியப் பாத்தேன். நான் பேசற ஸ்டைல் நன்னாயிருக்குன்னு சொல்லிட்டு அவர்தான் சீரியல்ல நடிக்கறேளான்னு கேட்டார். சரின்னுட்டேன்.."ங்கறா சரிதா.

‘‘அத்திம்பேர்... அககாவோட திறமயப் பத்தி ஒங்களுக்குத் தெரியாது. ஸ்கூல் டேஸ்லயே ட்ராமாலல்லாம் நடிச்சு கப்லாம் வாங்கிருக்கா தெரியுமோ"ன்னு அக்காக்கு சரியா ஒத்து ஊதறான் வாசன். ‘‘ட்ராமால நடிச்சாளா? என்னவா நடிச்சா?"ன்னு நம்மாளு கேக்கறதுக்கு, ‘‘கதாநாயகியோட தோழிக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கும். கதாநாயகி ஒரு மனோதத்துவ டாக்டர்ங்கறதால அவளைக் குணப்படுத்துவா... எங்கக்கா தோழி கேரக்டர்ல பைத்தியமா நடிச்சா"ங்கறான் வாசன். நம்ம கதாநாயகன் அப்பாவின்னா எப்படி ஒரு அப்பாவி பாருங்கோ... ‘‘நடிச்சிருக்க மாட்டாடா வாசன்... சும்மா வந்து இயல்பா பேசியிருப்பா. சூப்பர் நடிப்புன்னு நம்பி கப்பைக் குடுத்துட்டாங்க..." அப்படின்னு மனசுக்குள்ள நெனக்க வேண்டியதை சத்தமாச் சொல்லித் தொலைக்கறான். ‘‘ச்சீ, போங்க..." என்று கோபமாக சரிதா தன் (உலக்)கையால அவன் தலையில ஓங்கிக் குத்த... இப்ப அவனுக்குன்னா மூளை கலங்கினாப்போல ஆயிடுத்து! ஈரேழு உலகமும் நாலஞ்சு சுத்து சுத்திட்டு அப்பறமா நேராகறது அவனுக்கு! ‘ழே'ன்னு முழிக்கறான்!

அப்பறமா கொஞ்சம் சுதாரிச்சுண்டு, அப்பவும் பேமுழி முழிச்சுண்டு, ‘‘தோ பாரு சரி... இந்த மாதிரி சீரியல்ல நீ நடிக்கப் போறேன்னு சொன்னா எங்கம்மா திட்டுவா..."ன்னு அவன் ஆரம்பிக்க... ‘‘ஆமா... உங்க தங்கச்சி கால்கிலோ மேக்கப்ப முகத்துல அப்பிண்டு ஊர்கோலமா வர்றதுக்குல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டா உங்கம்மா... எனக்குன்னாத்தான் சொல்லுவாளாக்கும்..."ன்னு ஆரம்பிச்சு அவ நான் பண்றதைவிடப் பெரிசா ஒரு காலாட்சேபம் பண்ண... டோட்டலா டெபாஸிட் இழந்த வேட்பாளராட்டமா ஆயிடறான் நம்மாளு.

‘‘ஹும்...! ஒரு காலத்துல டெலிபோன்ல டிவி சேனலுக்குப் பேசி கப்ஸி ரமாவையே அழவெச்சவ நீ! இந்த டைரக்டர் உன்கிட்ட மாட்டிக்கிட்டு என்ன பாடுபடப் போறானோ...?"ன்னு மெதுவா முனகறான. அது வாசனோட பாம்புக் காதுல சரியாப் போய் விழுந்துடறது. ‘‘அத்திம்பேர்... அது என்ன சமாச்சாரம்? நேக்குத் தெரியாதே. எங்கக்கா எப்படி கப்ஸி ரமாவை அழவெச்சான்னு சொல்லுங்கோ முதல்ல..."ன்னு தொணப்ப ஆரம்பிக்கறான். அடுத்தாத்து வம்புன்னா மட்டுமில்ல... சொந்த ஆத்துல வம்புன்னாலும் அத்தனை இன்ட்ரஸ்ட் அவனுக்கு...! இப்ப என்ன பண்றதுன்னு புரியாம சரிதாவ பரிதாபமாப் பாக்கறான் நம்மாளு.
 
                                                               அப்படி சரிதா என்னதான் பேசியிருப்பான்னு
                                                                சித்த நீங்களும் யோசிச்சிண்டிருங்கோ...
                                                                 நான் கொஞ்ச நாழில வெத்தல பாக்கு
                                                                 போட்டுண்டு மறுபடி வந்துடறேன்...!

மின்னல் டிவில நான் பங்கேற்ற ‘டீ வித் திவ்யா’ நிகழ்ச்சியைப் பார்க்க இங்கே க்ளிக்குங்கள்!

Monday, September 23, 2013

சரிதாவும், நம்பியாரும்!

Posted by பால கணேஷ் Monday, September 23, 2013
பொதுவாக சரிதா விருப்பங்கள் அதிகம் இல்லாதவள். ஆனால் சில சமயங்களில் அவளுக்கு ஏற்படும் விருப்பங்கள் விபரீதமாகி, என் பேங்க் பேலன்ஸுக்கு உலை வைப்பது வழக்கம். அப்படி என்னதான்யா அவள் விருப்பப்பட்டு அடம் பிடித்துவிடப் போகிறாள் என்றுதானே நினைக்கிறீர்கள்..? சென்ற வாரம் நடந்த (சோகக்)கதையைக் கேளுங்கள்... புரிந்துவிடும்!

‘‘ஹ
ப்பா... என்னா வெயில்... என்னா வெயில்...’’ என்று முனகியபடி ஃபேனைச் சுழலவிட்டு அதன் கீழிருந்த ஃசோபாவில் சரிந்தேன். ‘‘என்னங்க... ஏசிப் போடுங்க, ஏசிப் போடுங்கன்னு ஒரு வாரமா கரடியாக் கத்திட்டிருக்கேன். கொஞ்சமாச்சும் கவனிக்கிறீங்களா?’’ என்றாள். ‘‘அறிவு கெட்டவளே... மனுஷியாக் கத்த வேண்டியது தானேடி முட்டாளே... லூசு...’’ என்று ஆரம்பித்து நான் திட்டத் திட்ட, அவள் முகம் சிறுத்தது. நான் பணிந்தால் எகிறுவதும், எகிறினால் பணிவதும் அவள் வழக்கம் என்பதால் ‘‘இப்ப எதுக்காக இப்படிக் கன்னாபின்னான்னு திட்டறீங்களாம்?’’ என்றாள் மெதுவாக. ‘‘நீதானே ஏசிப்போடுன்னு சொன்ன... அதான் நல்லா ஏசிப் போட்டேன்’’ என்றேன். சப்தமெழத் தலையில் அடித்துக் கொண்டாள்.

‘‘அடராமா... என்னிக்கு நான் சொல்ற விஷயத்தை நீங்க சரியாப் புரிஞ்சுட்டிருக்கீங்க இப்ப புரியறதுக்கு? ஒரே வெக்கையா இருக்கே... ஒரு ஏ.சி. மெஷின் வாங்கிப் போடுங்கன்னுதானே கேட்டுட்டிருக்கேன். நம்ம அக்கம் பக்கத்து வீட்ல எல்லார்ட்டயும் இருக்கு தெரியுமா? நம்ம வாசனுக்குத் (அவள் தம்பி) தெரிஞ்ச கடை ஒண்ணு இருக்காம். டிஸ்கவுண்ட்ல வாங்கித் தர்றேன்... நமக்கு நாலாயிரம் மிச்சமாகும்ங்கறான்...’’

‘‘வாசனா...?  அவன் எனக்கு நாலாயிரம் மிச்சம் பண்ணினா, அதுக்குப் பின்னால நாப்பதாயிரத்துக்குச் செலவு வெச்சிருப்பானே...’’ என்றேன். ‘‘ஹும்... அவனானா அக்கா, அத்திம்பேர்னு உசிர விடறான். உங்களுக்கானா அவனைக் கண்டாலே இளக்காரம்தான். எங்க வீட்டு மனுஷாளை எப்ப மதிச்சிருக்கீங்க நீங்க...’’ என்று ஆரம்பித்தாள் கடூரமான குரலில். வேறென்ன... ‘‘சரிம்மா... ஆஃபீஸ்ல என்னை வந்து பாக்கச் சொல்லு. செக் தர்றேன். உடனே ஒண்ணு வாங்கிரலாம்’’ என்று (வழக்கம் போல) நான் சொல்வதில் முடிந்தது அது.

‘‘என்னங்க... நானும் வாசனுமாப் போயி ஏ.ஸி. மெஷின் வாங்கிட்டு வந்துட்டோம். அதை ஃபிட் பண்றதுக்கு ஆளுங்களை அனுப்பறேன்னாங்க. கொஞ்சம் பர்மிஷன் போட்டுட்டு உடனே வாங்களேன்...’’ என்று செல்போனில் பேசிய சரிதாவின் குரலில்தான் எத்தனை இனிமை! உடனே கிளம்பி வந்த எனக்கு, என் வீட்டில்தான் நுழைகிறேனா என்று சந்தேகமே வந்துவிட்டது. அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் வரவழைத்து தான் ஏ.ஸி. மெஷின் வாங்கிவிட்ட பிரபாவத்தைப் பாடிக் கொண்டிருந்தாள். ஏதோ பெண் பார்க்க வந்தவர்கள் மாதிரி அவர்களுக்கு பக்கோடா, (நெய் மணக்க) கேசரி என்று உபசாரம் வேறு. சரிதான்... இந்த யானையை வாங்கியதால் இன்னும் எத்தனை அங்குசங்களுக்குச் செலவு பண்ணப் போகிறேனோ என்று (அவற்றைச் சாப்பிடாமலேயே) எனக்கு வயிற்றைக் கலக்கியது.

ஏ.ஸி. மெஷின் பொருத்தித் தருவதற்காக இரண்டு மெக்கானிக்குகள் வந்தனர். ஹாலில் எங்கே மாட்ட வேண்டுமென்று சரிதா சொல்ல, வேலை செய்து கொண்டிருந்த அவர்களிடம் ஏ.ஸி. மெஷின் என்ன லெவல் கூலிங்கில் வைக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்டிருந்த சமயம் பார்த்துத்தானா சரிதா அக்கம்பக்கத்தினரை அனுப்பிவிட்டு உள்நுழைய வேண்டும்? ‘‘டேய் வாசா... இவங்க கிட்ட ஏ.ஸி. மெஷின் பத்தின எல்லா விஷயத்தையும் நல்லாக் கேட்டுக்கோடா... உங்கத்திம்பேருக்கு அவ்வளவு சமத்து(?) பத்தாது’’ என்று உரக்க அவள் சொல்ல, அந்த ஏ.ஸி. மெக்கானிக் என்னை காக்காய் கொண்டு வந்து போட்ட வஸ்துவைப் போலப் பார்த்தான். அவ்வ்வ்வ்வ்! என்று புலம்பியபடி இடத்தைக் காலி செய்தேன்.

சற்று நேரத்தில் அவர்கள் சென்றதும், என்னமோ காஃன்பரன்ஸில் நலத்திட்டங்களை திறக்கும் முதல்வர் போல வாசன் பெருமையாய் ரிமோட்டைக் கையில் ஏந்தி ஏ.ஸி.யை ஆன் செய்ய, சரிதா கைதட்டினாள். அப்போது வாசனின் செல்ஃபோன் ‘‘ஊதா கலரு ரிப்பன்’’ என்று உரக்க அலறியது. ‘‘டேய், அவருக்கு இப்படி கண்ட பாட்டையும் ரிங்டோனா கத்தவிடறது பிடிக்காதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். வீட்ல வந்தா செல்லை ‘மன்மோகன்’ மோடில போட்டுத் தொலையேண்டா’’ என்று சரிதா (அவனையும்) திட்ட, அவன் தன் அப்பா அம்மாவிடம் ஏ.ஸி. வந்த கதையைச் சொல்ல ஆரம்பித்தான். அப்புறமென்ன...

வேறொரு வேலையாக வெளியில் சென்ற நான் இரவு வீடு திரும்பியபோது ஏ.ஸி. மெஷினிலிருந்து இரண்டு ரம்பங்கள் உரசிக் கொள்கிற தினுசில் ‘கொர்’ என்று பெருத்த சப்தம் வந்து கொண்டிருக்க... மிஷினுக்குக் கீழே வெள்ளையாய் ஒரு மூட்டை தெரிந்தது. ‘‘சரிதாம்­மா... ஏ.ஸி. மெஷினுக்கு என்னமோ ஆய்டுச்சு. வினோதமா சத்தம் போடுது பாரு’’ என்று பயந்து சத்தமிட்டபடி அருகில் சென்று பார்த்தால்... அடக்கடவுளே... மரவட்டை போல உடலைச் சுருக்கிக் கொண்டு படுத்திருந்த சரிதாவின் அப்பாவின் வெள்ளை பனியன், வேஷ்டிதான் எனக்கு மூட்டை மாதிரி தெரிந்திருக்கிறது. அந்த ரம்ப சத்தம் அவரிடமிருந்தல்லவா வந்து கொண்டிருக்கிறது! இலவச இணைப்பாக என் மாமியாரின் குரலும் சமையலறையிலிருந்து என்னை வரவேற்றது!

அன்னிக்கு ஆரம்பிச்சதுங்க... அடு¢த்து வந்த வாரம் முழுக்க தான் ஏ.ஸி. வாங்கி விட்ட பெருமை(!)யை விதவிதமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள் சரிதா. உதாரணத்துக்கு... செல்லில் வந்த காலை அட்டெண்ட் பண்ணினால், ‘‘அதுவாடி... புதுசா ஏ.ஸி. போட்ருக்கோம்ல. அதனால ரிங் அடிச்ச சத்தமே காதுல விழல...’’ என்று ஆரம்பிப்பதும், இவளாகவே கால் செய்து ‘‘இப்பல்லாம் ஏ.ஸி.யிலயே புழங்கிட்டு, நான் ஏ.ஸி.யில சினிமா பாக்கக் கூட முடிய மாட்டேங்கறது’’ என்று செல் பேச்சை முடிப்பதும் ஆக, சரிதா டமாரம் பலமாக இரைய ஆரம்பித்தது-... ‘இவளுக்கு ஏன்டா செல்ஃபோன் வாங்கித் தந்தோம்’ என்று நான் சலித்துக் கொள்ளுமளவுக்கு. (செல்போன் வாங்கிப் பட்ட அவஸ்தை தனிக்கதை).

‘‘ஏங்க... ஏ.ஸி. ரூம்ல இவ்ளோ பெரிய பீரோ இருந்தா இடைஞ்சலா இருக்கு. ரூம் நல்லாக் கூல் ஆக மாட்டேங்கறது. இதை நகத்தி முன் ரூம்ல போடுங்க...’’ என்று ஆரம்பித்து அடுத்த ஒரு வாரம் என்னை முதுகு அடிமைப்பெண் எம்.ஜி.ஆர். போல வளைந்து போகுமளவுக்கு வீட்டை ரீஅரேன்ஜ் பண்ணுகிறேன் பேர்வழியென்று ‘ட்ரில்’ வாங்கினாள். அவளுக்கு ஏ.ஸி. மெஷின் கூலாக இருக்க, எனக்குள்ளே எழுந்த உஷ்ணத்தில் அது ‘எம்.என்.நம்பியார்’ மாதிரி தெரிய ஆரம்பித்தது எனக்கு.

அந்த மாதக் கடைசியில் கணக்கு வழக்குப் பார்த்தபோது கன்ஃபர்ம்டாகத் தெரிந்து போனது அது நம்பியார்தானென்று! சரிதா செல்போனில் அனைவரிடமும் தன் ஏ.ஸி. பெருமை(!)  பேசியதில் செல்ஃபோன் பில் இரண்டு மடங்காகி விட்டிருந்தது. ஏ.ஸி.யை தரிசிக்க(?) வந்த அவள் தோழிகள், உறவினர்கள், அக்கம்பக்கத்தவர்கள் எல்லாருக்கும் தாராளமாக டிபன், ஸ்வீட் செய்து வழங்கியதில் மளிகை பில் இரண்டு மடங்காகி, என்னை விழி பிதுங்க விட்டிருந்தது. அவள் குடும்பம் இடத்தை அடைத்துக் கொண்டதே என்று ஏ.ஸி. ஹாலை அவர்களுக்கு வழங்கிவிட்டு, நான் முன் ரூமில் ஃபேனில் படுத்துக் கொண்டது தப்பாயிற்று. ÔÔஏ.ஸி. ரூம்ல இருக்கறச்ச யாராவது கதவு தட்டினாலும் கேக்கறதில்ல. காலம்பற பால்காரன் பால் போடறதுகூடத் தெரிய மாட்டேங்கறது. நீங்க முன் ரூம்லயே இருந்தா இதெல்லாம் கரெக்டாப் பாத்துக்கறீங்க... இதையே மெயின்டைன் பண்ணுங்களேன்ÕÕ என்று கூலாக அவள் உத்தரவிட... அவ்வ்வ்வ்வ! ஏ.ஸி. எனக்கு எட்டாக்கனி ஐயா...!

இப்போது புரிகிறதா உங்களுக்கு... சரிதா புதிதாய் எதன் மேலாவது ஆசை வைத்தால் நான் ஏன் அலறுகிறேன் என்பது...! அதுசரி... உங்கள் வீட்டில் ‘நம்பியார்’ உண்டா? உங்க அனுபவங்களையும் சொல்லுங்களேன், ப்ளீஸ்...!
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube