கார்த்திக் சரவணன் என்கிற ஸ்கூல்பையன் நேற்று முன்தினம் தன் தளத்தில் ஷர்மிலி மிஸ் என்று ஒரு அனுபவக் கதையை வெளியிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியை எழுதி ஷர்மிலி மிஸ்! என் பொண்ண ஏன் அடிச்சீங்க? என்று ஒரு பதிவை நேற்று வெளியிட்டிருந்தார் நம்ம டி.என்.முரளிதரன். கூடவே குறும்படம் எடுக்கிற பதிவர்கள் இதைப் பயன்படுத்தவும்னு கோரிக்கையும் வெச்சிருந்தாரு. அதைப் பார்த்ததுமே குறும்பு பண்ற என் புத்தி, இதை வேற ஸ்டைல்ல எழுதியே ஆகணும்னு அடம் புடிச்சது. விளைவு... இப்ப நீங்க படிக்கப் போற ‘ராதிகா மிஸ்’.
ராதிகா மிஸ்ஸை உடனே பார்த்து, அவள் கன்னத்தில் ‘ரப்’பென்று ஒரு அறை விடவேண்டும் போல கோபம் பொங்கிக் கொண்டிருந்தது எனக்குள். அதைப் பற்றிச் சொல்வதற்கு முன் ராதிகா மிஸ்ஸை நீங்கள் சந்திக்க வேண்டும். என் மகளை நேரடியாக எல்.கே.ஜியில் சேர்க்கச் சென்ற போதுதான் ராதிகா மிஸ் எனக்கு அறிமுகமானாள். இரண்டு குண்டு பன்களை ஒட்ட வைத்தது போன்ற கன்னம், ஜெய்சங்கருக்கிருப்பது போன்ற சின்னக் கண்கள், அதற்குப் பொருந்தாத பெரிய கண்ணாடி, அறிவின் அடையாளமாய் பரந்த நெற்றி, தடித்த உதடுகள், குள்ளமான, குண்டான உருவம் என்று மொத்தமாக அவளைப் பார்த்த போது சற்றே பெரிய சைஸ் பூசணிக்காய் கை கால் முளைத்து வந்தது போல் தோற்றமளித்தாள். தன் கையிலிருந்த லிஸ்டைப் பார்த்துவிட்டு ‘‘உங்க பொண்ணு பேர் என்ன மாநந்தியா..?’’ என்று கேட்டாள். நான் திடுக்கிட்டுப் போய் அவள் கையிலிருந்த லிஸ்டை எட்டிப் பார்த்தேன்.
‘‘சரியாப் போச்சு போங்க... எம்.ஆனந்திங்க அது. என் பேர் முரளி’’ என்றேன். ‘‘ஆபீஸ்ல இருக்கறவங்க புள்ளி வெக்க மறந்துட்டாங்க போல. ஸாரி ஸார்’’ என்று சிறிதும் வருந்தாத குரலில் கூறி இலவச இணைப்பாக குமரிமுத்துவின் சிரிப்பை ஆல்டர் செய்தது போலச் சிரித்தாள். நான் கடுப்பாகி, ‘‘என் பக்கத்து வீட்டு மூவேந்தன் தன் பொண்ணு தேவிய இங்க சேக்கலாம்னு இருந்தான். நல்லவேளை... வேற ஸ்கூலுக்குப் போய்ட்டான்..’’ என்க, நான் சொன்னது புரியாமல் ‘ழே‘ என்று விழித்தபடி நின்றிருந்தாள். தலையிலடித்துக் கொண்டு வீடு திரும்பினேன்.
என்ன அவசரமாக இருந்தாலும் என் மகளைப் பள்ளியில் விடுவது நான்தான். அதை மட்டும் அவளுக்கு விட்டுத்தரவே மாட்டேன். மாலையில் போய் அழைத்து வருவது என் மனைவி ஜெயாதான். குழந்தைகள் வகுப்பு முடிந்து வருவதற்குள் பாகுபலியின் பிரம்மாண்டத்திலிருந்து மெகாசீரியலின் வில்லிகள் வரை எல்லா சப்ஜெட்டுகளையும் அலசி முடித்திருப்பார்கள் அங்கு காத்திருக்கும் தாய்மார்கள். இப்படி என் மனைவிக்கு நிறையத் தோழிகள் அங்கே. எப்போதாவது மற்ற சப்ஜெக்ட்டுகள் போரடித்தால் குழந்தைகளின் படிப்பு பற்றியும் பேசிக் கொள்வார்கள் நேரிலும் சிலசமயம் கைபேசி மூலமும்.
இப்படி நான் நினைத்திருந்தது மகாத்தப்பு என்பது அலுவலகத்துக்கு மட்டம் போட்ட ஒரு தினத்தின் மாலையில் ஆனந்தியை அழைத்துவரப் போயிருந்தபோது தெரிந்தது. மகள் வரும்வரை கைபேசியில் முகநுலில் திரிந்து கொண்டிருந்த எனக்குப் பின்னால் அவர்கள் மெல்லிய குரலில் பேசியது கேட்டது. ‘‘ஏய்.. அவர்தாண்டி ஜெயா வீட்டுக்காரர்..’’ ‘‘இவரா..?’’ ‘‘ஆமாடி. எப்பப் பாரு ஃபேஸ்புக்ல மேஞ்சுட்டிருப்பாருன்னு சொன்னால்ல..?’’ ‘‘கதைல்லாம் எழுதுவாருன்னு சொன்னா. ஆளப் பாத்தா சேட்டு வீட்டுப் பிள்ளை மாதிரில்ல இருக்காரு...’’ ‘‘மெதுவாப் பேசுடி. காதுல விழுந்துரப் போவுது.’’ ‘‘அதெல்லாம் விழாது. நாளைக்கு நீ ஜெயாட்ட நான் இப்டிச் சொன்னேன்னு மாட்டிவுடாம இருந்தாச் சரி..’’ திரும்பி, பேசியவளை முறைக்கலாம் என்று ஆசை துடித்தாலும், வாலண்டியரா வண்டில ஏறாதடா என்று அறிவு தடுத்ததால் பேசாமல் ஆனந்தியை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினேன். அன்றிலிருந்து வீட்டில் சும்மாவே இருந்தாலும்கூட மகளை அழைத்துவர நான் போவதில்லை. ஹி.. ஹி...
நான் சொல்லவந்தது ராதிகா மிஸ்ஸின் மீது எனக்கு வந்த கோபம் பற்றித்தான் இல்லை..? அதைப் பேசலாம். இரண்டு நாட்களுக்கு முன் நான் ஏகப்பட்ட ஆணிகள் பிடுங்கிய அலுப்பில் அலுவலகத்திலிருந்து வந்து உடை மாற்றுவதற்கு முன்பே, ‘‘அப்பா, ஸ்கூல்ல என்னை மிஸ் அடிச்சுட்டாங்க..’’ என்றாள். ‘‘நீ க்யூட் பேபி இல்லையா...? அதான் கிஸ் அடிச்சிருப்பாங்க. விடும்மா..’’ என்றேன். ‘‘ஐயோ அப்பா.. மிஸ்... மிஸ்... அடிச்சுட்டாங்கன்னு சொல்றேன்..’’ என்றாள் சலிப்பாக. ‘‘அவ யார் அடிக்க?’’ என்று நான் கேட்க, ‘‘இவ என்ன செஞ்சான்னு கேளுங்க மொதல்ல’’ என்றாள் ஜெயா. ‘‘நீ என்ன செஞ்ச கண்ணூ?’’ ‘‘மிஸ் உக்கார வெச்ச எடத்துல உக்காராம மாறி உக்காந்துட்டேன்னு அடிச்சிட்டாங்கப்பா’’
எனக்கு கோபம் தலைக்கேறியது. என் மகள் பிறந்ததிலிருந்தே சேட்டைக்காரிதான். அடம் பிடித்து எங்களை நிறையத் தொந்தரவு செய்திருக்கிறாள். என்றாலும் ஒரு நாள் கூட அவளைக் கைநீட்டி அடித்ததில்லை, அவள் முகத்தைப் பார்த்தால் அடிக்கவும் மனசு வராது. ஸ்கூல் மிஸ், அதுவும் ரெண்டு மாசம் கூட ஆகவில்லை, அதற்குள் அவளுக்குக் கைநீட்டுமளவு தைரியம் வந்துவிட்டதா? என் முகத்தின் கோபத்தைப் படித்த ஜெயா, ‘‘ஏன் இப்டி டென்ஷனாகறீங்க..? மிஸ் லேசாத்தான் கன்னத்துல தட்னாங்களாம். அவ அடிச்சதா சொன்னதும் பதறிட்டாங்க. உங்ககிட்ட சொல்ல வேணாம்னு சொன்னாங்க.’’ ‘‘அதான் மறக்காம சொல்லிட்டியாக்கும்..? ஆனந்தி என்ன நினைச்சிருப்பா? இதுக்குத்தான் அம்மா அப்பா நம்மளை அழஅழ ஸ்கூல்ல தள்றாங்க போலன்னு நினைச்சிருக்க மாட்டா? இந்த அடிக்கிற வேலையெல்லாம் வேணாம்னு அவளத் திட்டறத விட்டுட்டு எனக்கு அட்வைஸ் வந்துட்டா பெரிசா..’’ ஜெயா கூலாக ‘‘நாய்னா கடிக்கறதும், மிஸ்னா அடிக்கறதும் சகஜம்தாங்க. சின்ன வயசுல நான் வாங்காத அடியா..? விட்டுட்டு வேலயப் பாருங்க.’’ என்றாள். அதற்கு மேல் அவளை எதிர்த்துப் பேசுவது ஆபத்து என்பதை அனுபவ அறிவு உணர்த்தியதால் மவுனமானாலும், ‘இதச் சும்மா விடக்கூடாது’ என்று மனதினுள் முடிவு செய்தேன்.
மறுதினம் காலை சீக்கிரமாகவே பள்ளிக்குச் சென்று விட்டேன். ஆனந்தியை வகுப்பில் அமர வைத்துவிட்டுக் காத்திருக்க, பூசணிக்காய்க்குப் பதில் காற்றில் பறந்து விடுகிற உடல்வாகில் ஒரு முருங்கைக்காய் வந்தது. ‘‘ராதிகா மிஸ்..?’’ ‘‘அவங்க லீவ் ஸார். நீங்க போங்க நான் பாத்துக்கறேன்’’ என்றது. அடுத்த தினமும் காத்திருப்பு, மு.காயின் வருகை, நான் திரும்புதல் என்று டிட்டோ. ரெண்டு நாள் பாக்காட்டா கோபத்தின் சதவீதம் குறைந்துவிடுமே என்று அதை அவ்வப்போது ஊதிவிட்டுக் கொண்டேன். மூன்றாம் தினமும் அதே மு.காய் வர, ‘‘ராதிகா மிஸ் வரலையா..? என்னாச்சு..?’’ என்று கேட்டே விட்டேன். வந்த பதில் என்னை அதிரச் செய்தது. ‘‘திடீர்னு அவங்களுக்குக் கல்யாணம் ஆய்டுச்சு சார். அதனால இன்னும் ரெண்டு நாள் கழிச்சுத்தான் வருவாங்க’’ என்றது அந்தப் பெண் வெட்கமாக. ‘அதுக்கு இவ எதுக்கு வெட்கப்படணும்’ என்ற கேள்வியுடன் திரும்பி விட்டேன்.
அன்றிலிருந்து மூன்றாவது தினம் தான் ராதிகா மிஸ் வந்தாள். என்னைப் பார்த்ததுமே அடையாளம் கண்டு கொண்டாள். ‘‘நீங்க ஆனந்தியோட அப்பா இல்ல..?’’ ‘‘என் மகளை அடிச்சீங்களாமே..?’’ என்றேன் கோபத்தைக் குரலில் வரவழைத்துக் கொண்டு. ‘‘அடிக்கல்லாம் இல்ல. கொஞ்சம் குறும்பு பண்ணினா. அதான் லேசாத் தட்டினேன். அவங்கம்மாட்ட கூட ஸாரி கேட்டேனே..?’’ ‘‘நீங்க ஸாரி கேட்டா என்ன, வேஷ்டி கேட்டா என்ன.? ஆயிரக்கணக்குல பீஸ்கட்டி நாங்க குழந்தையப் படிக்க அனுப்பினா அடிப்பீங்களோ..? என்ன நெனச்சுட்டிருக்கீங்க மனசுல..?’’ முகத்தைக் கடுகடுவென மாற்றிக் கொண்டு கோபமாக நான் இரைய, கையைக் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டாள் ராதிகா மிஸ். பயந்துவிட்டாள் போலும்!
‘‘குழந்தை தப்பு பண்ணா எங்ககிட்டதான் சொல்லணுமே தவிர நீங்க அடிக்கக் கூடாது. குழந்தைகளை அடிக்கறதுக்குப் பெத்தவங்களுக்கே உரிமை இல்லைங்கறப்ப நீங்க எப்படி அடிக்கலாம்? சைல்ட் சைகாலஜியப் படிக்காமயா வேலைக்கு வந்தீங்க..? நான் பிரின்சிபால் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவேன். அவர் கேக்கலைன்னா சி.இ.ஓ. கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவேன், உங்க வேலை போயிரும்.’’ ‘‘பெரிய கவர்மெண்ட் வேல... போங்க ஸார் வெளையாடிக்கிட்டு...’’ என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு வகுப்பறையினுள் ஓடிவிட்டாள். சில விநாடிகளில் அங்கிருந்து சிரிப்பொலி கேட்க, நான் குழப்பமாக என் வாகனத்தைக் கிளப்பினேன்.
அன்றிரவு வீடு திரும்புகையில் ஆனந்திக்கு மிகப் பிடித்த ப்ளாக் பாரஸ்ட் கேக்கும், பெரிய டெடிபியர் பொம்மையையும் வாங்கி வந்திருந்தேன். வழக்கமாக என் வண்டி நிற்கும் சத்தத்துக்கே ஓடிவரும் ஆனந்தி இன்றைக்கு காணோம். சரி, கேம்ஸ்ல பிஸியா இருப்பா போல என்று நினைத்தபடி உள்ளேறினேன். காபி தந்த ஜெயாவிடம் ‘‘ஆனந்தி எங்க..? அவளுக்காக என்னல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு..? அவளக் கூப்பிடு’’ என்றேன். ‘‘அதென்னமோ சாயங்காலம் ஸ்கூல்லருந்து வந்ததுலருந்தே உம்முன்னு இருக்கா. என்ன கேட்டாலும் பதிலே இல்ல. அப்டியே அடம் அப்பனைப் போல..’’ சந்தடிசாக்கில் அவள் எனக்கொரு பஞ்ச் விட, நான் ‘ழே’ என்று விழிக்க ‘வரச் சொல்றேன் இருங்க. ரொம்பதான் செல்லம் கொடுத்துக் கெடுத்து வச்சுருக்கீங்க’’ என்று அம்மாக்களின் வழக்கமான டயலாக்கை பேசிவிட்டுப் போனாள்.
அன்றிரவு வீடு திரும்புகையில் ஆனந்திக்கு மிகப் பிடித்த ப்ளாக் பாரஸ்ட் கேக்கும், பெரிய டெடிபியர் பொம்மையையும் வாங்கி வந்திருந்தேன். வழக்கமாக என் வண்டி நிற்கும் சத்தத்துக்கே ஓடிவரும் ஆனந்தி இன்றைக்கு காணோம். சரி, கேம்ஸ்ல பிஸியா இருப்பா போல என்று நினைத்தபடி உள்ளேறினேன். காபி தந்த ஜெயாவிடம் ‘‘ஆனந்தி எங்க..? அவளுக்காக என்னல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு..? அவளக் கூப்பிடு’’ என்றேன். ‘‘அதென்னமோ சாயங்காலம் ஸ்கூல்லருந்து வந்ததுலருந்தே உம்முன்னு இருக்கா. என்ன கேட்டாலும் பதிலே இல்ல. அப்டியே அடம் அப்பனைப் போல..’’ சந்தடிசாக்கில் அவள் எனக்கொரு பஞ்ச் விட, நான் ‘ழே’ என்று விழிக்க ‘வரச் சொல்றேன் இருங்க. ரொம்பதான் செல்லம் கொடுத்துக் கெடுத்து வச்சுருக்கீங்க’’ என்று அம்மாக்களின் வழக்கமான டயலாக்கை பேசிவிட்டுப் போனாள்.
அப்போதும் ஆனந்தி வரவில்லை நான் அவள் ரூமுக்குள் நுழைந்தேன். கட்டிலின் மூலையில் உம்மென்று உட்கார்ந்திருந்தது என் செல்லம்.. நான் போனதும் முகத்தை திருப்பிக் கொண்டாள். "ஏண்டா செல்லம்? என்ன கோவம் உனக்கு? .டாடி உனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு... உனக்குப் புடிச்ச ப்ளாக் கரண்ட் கேக், பொம்மை.." பதிலில்லை. ஒருவேளை நான் வந்தும் அந்த குண்டு பூசணிக்காய் என் மகளைத் திட்டியிருக்குமோ..? "கண்ணூ... நான் கோவிச்சுக்கிட்டதுக்காக மிஸ் உன்னைத் திட்டினாங்களா..? சொல்றா.. அவள ஒரு வழி பண்ணிடறேன். என்ன நெனச்சுட்டிருக்கா அவ மனசுல..?" என்றபடி அவள் கையில் பொம்மையைத் தர கோபத்துடன் தூக்கி எறிந்தாள் ஆனந்தி.
‘‘போங்க டாடி.. உங்களை யார் காலைல மிஸ்ஸைத் திட்டச் சொன்னது..? உங்களால எனக்கு பெரிய இன்சல்ட்டாப் போச்சு’’ என்றாள் கோபமாக. ‘‘இன்சல்ட்டா..? என்னம்மா சொல்ற..?’’ நான் வழக்கம்போல பாக்யராஜ் முழி முழிக்க, அவளே தொடர்ந்தாள். ‘‘அமுல் பேபி மாதிரி உங்க மூஞ்சி இருக்காம். அதுல நீங்க கஷ்டப்பட்டு கோவத்தை வரவழைச்சுகிட்டதப் பாத்ததும் ராதிகா மிஸ்க்கு சிரிப்பை அடக்க முடியலையாம். கையால வாயப் பொத்தி கஷ்டப்பட்டு அடக்கிருந்திருக்காங்க. நீங்க போனதும் க்ளாசுக்குள்ள வந்து விழுந்து விழுந்து சிரிக்கறாங்க. அவங்க சொன்னதக் கேட்டு என் ப்ரண்ட்ஸ்லாம் கூடச் சிரிச்சுட்டாங்க. எனக்கு அவமானமாப் போச்சு தெரியுமா..’’ என்று அவள் கோபமாகச் சொல்ல, நான் திகைத்தேன். ‘ழே’ என்று விழித்தேன். அடிப்பாவி... நான் குண்டுப் பூசணிக்காய் என்று அவளுக்குப் பட்டப் பெயர் வைத்தால் இப்படியா எனக்கு அமுல்பேபி என்று பட்டப் பெயர் வைத்து குழந்தைப் பிள்ளைகள் முன்னால் மானத்தை வாங்குவாள்..? அவ்வ்வ்வ்... ‘இனி ஆனந்தியை பள்ளியில் விடப் போனால் தலையில் போட்ட ஹெல்மெட்டைக் கழற்றாமல் அப்படியே திரும்பி ஓடி வந்துவிடத்தான் வேணும்.’ மனதிற்குள் சொல்லியபடியே திரும்ப, அறை வாசலில் நின்று என்னைக் கேலியாகப் பார்த்த ஜெயாவின் பார்வையை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை..!!!