Saturday, December 28, 2013

ரெண்டு நாளா ‘சுடுதண்ணி வெக்கிறது எப்படி'ன்னும், ‘முட்டை அவிககிறது எப்படி'ன்னும், ‘டீ போடுறது எப்படி'ன்னும், ஆளாளுக்கு பதிவு போட்டுக் கலக்கிட்டிருக்காங்க. ஆனா பாருங்க... ஒரு பயபுள்ளையும் அதையெல்லாம் சாப்பிடறது எப்படின்னு சொல்லித் தரக் காணோம். அதனால... அந்த அரிய விஷயத்தை நான் ‘டச்' பண்ணலாம்னு நினைக்கிறேன். ‘டிச்' பண்ணிட்டேன்னு யாராவது கொந்தளிச்சீங்கன்னா கம்பெனி பொறுப்பில்ல.

சமைத்தல் யார்க்கும் எளிது அரியவாம்
சமைத்ததைத் தானே உண்ணல்


அப்படின்னு திருவள்ளுவர் சொல்லாத திருக்குறளே ஒண்ணு இருக்குது. அதனால ரொம்பக் கஷ்டமான அந்த சாப்பிடற விஷயத்தை ரொம்ப சிம்பிளாச் சொல்றேன் கேட்டுக்கங்க. இந்த முட்டை இருக்குதே முட்டை... அதை பள்ளிப் பருவத்திலயே மார்
க்க்ஷீட்ல (என்னை மாதிரி) நிறையப் பேர் வாங்கியிருப்பீங்க. இந்த முட்டைங்கறது வெள்ளையா, நீள் வட்டமான வடிவத்துல இருக்கும். (என்னா கண்டுபிடிப்பு!) வேகவைத்துத் தரப்பட்ட அதை கையால அழுத்திககூட ரெண்டு சரிபாதியாப் பிரிக்கலாம். பிரிக்கப்பட்ட பாதியின் மேல கொஞ்சம் உப்பும், கொஞ்சம் மிளகுத்தூளும் சேர்த்து (நமக்கிருக்கற) ஒரே வாய்ல திணிச்சுக்கிட்டு மென்னு சாப்பிட்டா... பேஷ், பேஷ்...! ரொம்ப நனனாருக்கும்.

சில பேத்துக்கு வாய்ங்கறது கொஞ்சம் பெரிய சைஸ்ல இருக்கும். ‘பேச ஆரம்பிச்சா நிறுத்தாத ஒரே உயிரினம் எங்கம்மாதான். வாயா அது...? அலிபாபா குகை' அப்படின்னு பக்கத்து வீட்டுப் பையன் சோகமா சொல்வான். அதுமாதிரி வாய் இருக்கறவங்க ஒரு முட்டையை ஒரே வாய்ல திணிச்சு முழுங்கலாம். இல்ல... மாயாபஜார் படத்துல எஸ்.வி.ரங்காராவ் ஒரே சமயத்துல இருபது லட்டுகளை முழுங்குவாரே... அந்த மாதிரி ரெண்டு மூணு முட்டைகளை அட் எ ஸ்ட்ரெஸ் வாய்ல திணிச்சும் சாதனை பண்ணலாம். இதில் எந்த வகையைச் சேர்ந்தவர் நீவிர் என்பது உங்களுக்கே தெரியும்... ஹி... ஹி...!

அடுத்தது சுடு தண்ணீர்...! இதை ரெண்டு விதமாப் பயன்படுத்தலாம் நீங்க. முதல் வகை... ஒரு டம்ளர்ல எடுத்துக்கிட்டு, கொஞ்சத்தை வாய்க்குள்ள விடணும். அதோட சூடு ரொம்ப அதிகமா இருந்துச்சுன்னா, உங்க நாக்கு வாய்க்குள்ளயே அந்தக் கால டிஸ்கோ டான்ஸ், நடுககால பிரேக் டான்ஸ், இந்தக் கால குத்து டான்ஸ்னு எல்லா டான்ஸையும் ஆடும். அப்புறமா... அதை வாயால ஊதி, அதோ வீரியம் குறைஞ்சுட்டதான்னு ஒரு வாய் உள்ள விட்டு மெதுவாக் குடிககணும். இப்படியே மொத்த டம்ளரையும் குடிச்சுக் காலி பண்ணனுமுங்க. 

நீங்க கல்யாணமானவங்களா இருந்தா... காலையில ‘காபி’ அல்லது ‘டீ’ங்கற பேர்ல இப்படி சுடுதண்ணியைக் குடிச்சுப் பழக்கப்பட்ட அனுபவசாலியா இருப்பீங்க. (நோ... நோ... சரிதா மொபைல் நம்பர் தரமாட்டேன் சிஸ்டர்ஸ்!) ‘சுடு தண்ணியப் போட்டு அதை வாயால ஊதி ஆறவெச்சுக் குடிக்கறதுக்கு... அதை சுடவெக்காமலேயே குடிச்சுத் தொலைக்க வேண்டியதுதானே.... என்ன கெரகததுக்கு சுட வெக்கணும்?' அப்படின்னு .ங்க மைண்ட்வாய்ஸ் கத்திச்சுன்னா அது ரொம்ப நியாயமுங்க. பதிவுலக காதல் இளவரசன் ‘தி.கொ.போ.' சீனுகிட்டதான் இதைப் பத்திக் கேக்கணும்.

இங்கதானுங்க சுடுதண்ணியோட ரெண்டாவது பயன்பாடு வருது. அதை ஒரு பக்கெட்டுல எடுத்துக்கிட்டு, உங்கள் பாத்ரூமில் ஆடைகளற்ற நிலையில் நின்று கொண்டு அப்படியே மேலே ஊற்றிக் கொள்ள வேண்டும். இவ்விதம் செய்யின்... வடிவேல் போன்ற நிறத்தினராக இருந்தீர்களென்றால் கமல் போன்ற நிறத்தினராகி விடுவது நிச்சயம்! கூடவே அந்த சுடுதண்ணீர் உஙகள் உடலில் ஏற்படுத்தும் உற்சாகத்தின் விளைவக நீங்கள் ஒரு பாத்ரூம் நடனம்கூட ஆடுவீர்கள் என்பதால் இலவசமாக நடனப் பயிற்சி« வேறு கிடைப்பது போனஸ் பயன்பாடு. ஹி... ஹி...! ஏற்கனவே கமல் போன்ற நிறத்தினராக இருப்பீர்களாயின், சுடுதண்ணீருடன் கொஞ்சம் குளிர் நீரை மிக்ஸ் பண்ணி... (மிக்ஸ் பண்ணுறதுங்கறது தமிழ்நாட்ல எல்லாருக்கும் இப்ப அத்துப்படி தானுங்களே...!) அதை மேல ஊத்திக்கிட்டு குளிச்சிரலாம்.

அடுத்த கேட்டகரி தீக்குளிக்கிறது... ஸாரி, டீக்குடிக்கிறது! முதல்ல சுடச்சுடத் தரப்படற டீயை ஒரு டம்ளர்ல எடுத்துக்கணும். வலது கையை தலைக்கு மேலே கொண்டு போயி... டீ டம்ளரை அந்தக் கைல வெச்சுக்கணும். அப்புறம் அதுக்கு நேர்கீழா 90 டிகிரியில இடது கையில இன்னொரு காலி டம்ளரை வெச்சுக்கிட்டு அதிலருந்து டீயை இதக்கு டிரான்ஸ்பர் பண்ணனும். அப்புறம் இடது கைய மேல கொண்டுபோயி... வலது கைய கீழ கொண்டு வந்து மறுபடி டீயை டம்ளர் விட்டு டம்ளர் பாய வெக்கணும். இப்படி நாலஞ்சு தடவை பண்ணினப்புறமா டீ இருக்கற டம்ளரை வாய்ல வெச்சு ‘சுர்'ருன்னு சத்தம் வராம நாசூக்கா உறிஞ்சிக் குடிக்கணும்.

ஆக... சமைத்ததைப் பயன்படுத்தும் கலையை... சாப்பிடும் கலையை இப்ப நீங்க நல்லா தெரிஞ்சுக்கிட்டிருப்பீங்கன்னு நெனக்கிறேன். இப்படியான ஒரு அரிய கலையைக் கத்துக் குடுத்ததுக்காக நீங்க எனக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சீங்கன்னா... ஒரு மெயில் அனுப்புங்க. என் பேங்க் அக்கவுண்ட் நம்பர் தரேன். அப்படி இல்லாம விசேசமா ‘ஏதாவது' செய்யணும்னு நினைச்சீங்கன்னா... இந்தப் பதிவை என்னை எழுதுவெச்ச தி.கொ.போ.சீனு, கோவை ஆவி, தமிழ்வாசி பிரகாஷ், ‘நம்ம' நண்பன் அப்துல்பாஷித் ஆகியோரை அணுகுக! என் சார்பில் இவர்களே பரிசைப் பெற்றுக் கொள்வார்கள்! ஹா... ஹா... ஹா...!

Friday, December 20, 2013

மின்னல் திரை : என்றென்றும் புன்னகை

Posted by பால கணேஷ் Friday, December 20, 2013
புத்தகக் கண்காட்சிக்குத் தயாராக வேண்டிய புத்தக வேலைகள் டேபிள்முன் குவிந்து கிடந்தாலும், அவற்றைத் துறந்து தன்னுடன் படம் பார்க்க வரும்படி என்னை கதறக் கதற ஐநாக்ஸுக்கு இழுத்துச் சென்றார் கோவை ஆவி. ‘பிரியாணி’ பார்க்கலாம் என்ற அவரிடம், ‘‘கௌதமபுத்தர் வேஷம் குடுத்தாலும் கார்த்தி தெனாவெட்டாத்தான் பேசுவார். டைரக்டர் வேற தம்பியை ஓவரா புரொஜக்ட் பண்ணுவாரு... அந்தப் படம் பாக்கற அளவுக்கு அஞ்சாநெஞ்சனில்லை நான்’’ என்று அலறினேன். ‘‘ரைட்டு... ‘என்றென்றும் புன்னகை’ பாக்கலாம்’’ என்று அந்தப் படத்துக்கு டிக்கெட் வாங்கினார் அந்த நல்லவர். ஆக... படம் பற்றிய எந்த முன்ஐடியாவும் இல்லாமல் ப்ளெயினாகச் சென்றேன் தியேட்டருக்குள்.

ரொம்ப சிம்பிளான கதைதான். நாசரின் மனைவி அவரைவிட்டு ஓடிப் போக, ‘பெண்களை நம்பக் கூடாது’ என்று நாசர் புலம்புவது அவர் மகனின் மனதில் அழுத்தமாகப் பதிகிறது. பெண்களை வெறுக்கிற ஒருவனாக வளர்ந்து ஜீவாவாகிறார். தான் கல்யாணம் பண்ணப் போவதில்லை என்று தான் கெடுவதுடன் தன் ஆருயிர் நண்பர்களான வினய், சந்தானம் இருவரையும் ‘கல்யாணம் பண்ணிக்கக் கூடாது’ என்று சத்தியம் வாங்குகிறார். ஒரு கட்டத்தில் நண்பர்கள் இருவரும் கல்யாணம் செய்து கொள்ள, அவர்களைத் துறக்கிறார். அப்பா நாசரிடம் சிறு வயதிலிருந்தே பேசுவதில்லை (அதற்கும் ஒரு ப்ளாஷ்பேக் உண்டு) என்பதால் தனிமை கொல்ல... இச்சமயத்தில் தொழில்ரீதியாக அறிமுகமான த்ரிஷாவுடன் நெருக்கம் அதிகரிக்க... ஜீவா மனம் மாறினாரா இல்லையா என்பதை விளக்குகிறது படம்.

படத்தில் குறிப்பிடத்தக்க ப்ளஸ் பாயிண்ட்டுகள் நிறைய இருக்கின்றன. அவற்றை முதலில் பார்க்கலாம். முதல் ப்ளஸ் ஒளிப்பதிவு. நான் பெயர் குறித்துக் கொள்ள மறந்த சினிமோட்டோகிராபர் ஆண்ட்ரியாவை(கூட) அழகாக, கிளாமராகக் காட்டியிருக்கிறார். நண்பர்கள் கல்யாணம் செய்த வெறுப்பில் தண்ணியடிக்கும் ஜீவாவிடம் த்ரிஷா வந்து பேசுகிற காட்சி ஓவியம் போல கண்களை இழுத்துப் பிடிக்கிறது. அசத்தியிருக்கும் ஒளிப்பதிவுக்கு ஒரு ஷொட்டு!

சந்தானத்தின் நகைச்சுவை நன்றாக வந்திருப்பது பெரிய ஆறுதல். வழக்கமாக கவுண்டர் ஸ்டைலில் பனச் டயலாக்கில் மட்டுமே ஸ்கோர் செய்கிற சந்தானம், குடிக்க மாட்டேன் எனறு மனைவியிடம் ஜம்படித்து விட்டு, மூக்குமுட்டக் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் காட்சியில் பாடி லாங்வேஜிலும் (முதல்முறையாக?) ஸ்கோர் பண்ணியிருக்கிறார். டைரக்டர் இயல்பாக அங்கங்கே தெளித்திருக்கும் நகைச்சுவை வெடிகள் நன்றாகவே வெடிக்கின்றன. உதா: ‘‘ஜிமமிங்கறது யாருங்க?’’ ‘‘என் ஃப்ரெண்டு வீட்டு நாய், ஏன்?’’ ‘‘அந்த நாய் கொஞ்சம் முன்னால உங்க செல்லுல கால் பண்ணி பேசிச்சு’’ ‘‘இன்னிக்கு என்னடி டிஃபன் செல்லம்?’’ ‘‘ம்... ஒரு டம்ளர் விஷம்!’’ ‘‘நான் ஆபீஸ்ல இருந்து வர லேட்டாகும். நீ சாப்ட்டுட்டுப் படுத்துடு!’’ ‘‘என்னங்க... எங்கம்மா வீடடு நாய் நேத்து செத்துப் போச்சு. எங்கம்மாவால அதை ஜீரணிக்கவே முடியல...’’ ‘‘உங்கம்மா எதுக்குடி நாயை எல்லாம் சாப்பிடறாங்க?’’

இன்னொரு பெரிய ப்ளஸ் ஹாரிஸ் ஜெயராஜின் இசை. ஆரம்பத்தில் வரும் தோஸ்து பற்றிய பாடலும், ஹரிணி பாடியிருக்கம் ஒரு டூயட்டும் ரம்யமாக ஒலிக்கின்றன. பின்ணனி இசையிலும் அசத்தலாகப் பண்ணியிருக்கிறார் என்று நான் சொன்னால் நீங்கள் நம்பித்தானாக வேண்டும்!

மைனஸ்கள் என்றால்... ஒரு காட்சியில் கரப்பான்பூச்சி கக்கா போனமாதிரி கலர்ஃபுல் தலையுடன் வரும் விளம்பர ஏஜென்சி நிர்வாகி, ஜீவாவிடம், ‘‘உனக்குத்தான் நடிக்க வரலையே. அப்புறம் ஏன் வீணா ட்ரை பண்றே? விட்டுடு’’ என்கிறார். இதை டைரக்டர் தனக்குச் சொன்னதாக ஜீவா எடுத்துக் கொண்டு விட்டார் போலும்! அதிகம் மெனக்கெடாமல் இயல்பாக(?) நடித்திருக்கிறார். அவரைவிட அவர் நண்பனாக வரும் வினய்யின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. (அவன் ஹைட்டுக்கு முன்னால போற ஃபிகரை இங்கருந்தே ப்ரண்ட்ல பாத்துருவான்டா -சந்தானம்)

ஆன்ட்ரியா சிலபல காட்சிகளில் தோனறி தனக்குத் தரப்பட்ட க்ளாமர் வேலையை சரிவரச் செய்திருக்கிறார். மூக்கர் நாசர் வழக்கம் போல அருமை! த்ரிஷா...! சாமியில் பார்த்ததுபோலவே இன்னும் ஸ்லிம்மாக இருக்கிறார். வெளிநாட்டில் காதல் நெருக்கம் காட்டிய ஜீவா, நண்பனிடம், ‘என்கூட ப்ளைட்ல வந்தவங்க’ என்று சொல்லும் காட்சியில் முகத்தில் அதிர்ச்சியும், கண்ணீரும் காட்டி நன்றாகவே நடித்திருக்கிறார். இருந்தும்... அதிவிரைவில் அண்ணி, அக்கா கேரக்டர்களுக்கு பிரமோஷன்(?) ஆகிவிடும் சாத்தியக்கூறும் தென்படத்தான் செய்கிறது.

பெண்களை வெறுககும் தன் மகனின் மனம் மாறவேண்டும் என்பதற்காக இரண்டாம் கல்யாணம் செய்கிறார் நாசர். அதற்காகக் கோபப்பட்டு வெறுப்பைக் கொட்டுகிறான் மகன். ‘‘எனக்காக அபபாவுக்கும் பிள்ளைக்கும் சண்டை வர வேணாம். நான் போறேன்’’ என்று புதுமனைவி சொல்லிவிட்டு என்னமோ ‘கொடுத்த கால்ஷீட் முடிஞ்சிருச்சு, ப்ரொட்யூஸர் பேமெண்ட் தந்துட்டாரு. வரேன்’ என்கிற மாதிரி ஜஸ்ட் லைக் தட் போகிறார். நாசரும் ஒழிஞ்சுது சனியன் என்கிற மாதிரி அதன்பின் சமாதானப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காமல் மகனுக்காக மட்டும் ஏங்குகிறாராம். டைரக்டர்வாள்... என்னங்காணும் இது? கல்யாண பந்தத்துக்கு இவ்வளவுதானா ஓய் மரியாதை?

தனக்குப் பிடிக்காத செயலை அப்பா செய்தாலும், நண்பர்கள் செய்தாலும் தூக்கி எறிகிற, ஏறக்குறைய ஹிட்லர் அளவுக்கு வடிவமைக்கப்பட்ட ஜீவாவின் கேரக்டர் மனம் மாறுவதற்கு இன்னும் அழுத்தமான காட்சிகள் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது என் கருத்து. பின்பாதியில் படத்தின் வேல்யூவைக் குறைக்கிற விஷயம் இதுதான். அதே மாதிரி நிறையப் படங்கள் பார்த்திருக்கும் நம் அனுபவத்தின் காரணமாக நண்பர்களின் மனமாற்றத்திற்கும், திடீர் திருமணத்திற்கும் பின்னணியில் நாசர் இருப்பாரோ என்பதை யூகிததுவிட முடிவது ஒரு மைனஸ்!

படத்தில் த்ரிஷாவைத் தவிர அத்தனை பேரும் பெரும்பாலான காட்சிகளில் ‘தண்ணி’யடித்துக் கொண்டே இருக்கிறார்கள். விளைவாக... ‘மதுகுடித்தல் உடல்நலத்துக்குக் கேடு’ திரையின் கீழ் ரொம்ப நேரம் கண்ணில் மின்னுகிறது. திரையில் சின்னதாக ஒரு கட்டம் கட்டி (டைரக்டர் ஸ்ரீதர் ஸ்டைலில்) அதில் முகேஷைப் பேச வைத்துவிடுவார்களோ எனறு பயம் வருகிற அளவுக்கு ஆகிவிட்டது...! ஹி... ஹி...!

‘‘டோட்டலா என்னதான்யா சொல்ல வர்றே நீயி? படம் பாக்கலாமா, வேணாமா?’’ என்பவர்களுக்கு:

சின்ன வயசிலிருந்து நெருங்கிப் பழகி ஒன்றாகவே வாழும் நண்பர்களை மிக இயல்பாகக் காட்டியிருப்பதும், அவர்கள் தங்களுக்குள்ளும், மற்றவர்¬ளையும் கலாய்க்கும் காட்சிகளை யூத்ஃபுல்லாக அமைத்தும் முதல் பாதி வரை இயல்பான நகைச்சுவையுடன் கொஞ்சமும் போரடிக்காமல் கொண்டு சென்றதற்கும், இரண்டாம் பாதியில் சற்றே சொதப்பினாலும், ‘மோசமான படம்’ என்கிற கேட்டகரிக்குப் போகாதபடி படத்தை முடித்திருக்கும் டைரக்டர் அஹமதுக்கு தாராளமாகத் தரலாம் ஒரு வெலகம் பொக்கே!

பெரிய எதிர்பார்ப்புகள் எதுவுமின்றிச சென்றால், நிச்சயம் ரசிக்க வைக்கிற ‘ஒரு தரம் பாக்கலாம்டா’ என்று சொல்ல வைக்கிற நல்லதொரு என்டர்டெய்னர்!

Wednesday, December 11, 2013

பாட்டுக்(கும்)கொரு புலவன்!

Posted by பால கணேஷ் Wednesday, December 11, 2013
சுப்பிரமணிய பாரதி! மகாகவி என்ற சொல்லுக்கு மேல் ஏதாவது இருந்தால் அந்தப் பட்டத்துக்கும் தகுதியானவர். கண்ணன் கவிதைகளில், குயில் பாட்டில் தென்றலாய் வீசியவர்; தேசபக்திப் பாடல்களில் புயலாய்ச் சீறியவர்; வசன கவிதை என்ற ஒன்றை எழுதி, இன்றைய புதுக் கவிதைக்கு பிள்ளையார் சுழி போட்ட பிதாமகன்; உரைநடைத் தமிழையும் ஒரு கை பார்த்தவர். பாட்டுக்கொரு புலவன் பாரதியின் பிறந்த தினம் டிசம்பர் 11. இத்தருணத்தில் அவரது உரைநடையில் என்னைக் கவர்ந்த வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்கிறேன்.

• தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பம் விளைவிக்கத்தக்க செய்கை பாவம். தனக்கேனும் பிறர்க்கேனும் இன்பம் விளைவிக்கத்தக்க செய்கை புண்ணியச் செயல் எனப்படும்.

* எப்போதும் பாடுபடு. எப்போதும் உழைத்துக் கொண்டிரு. உழைப்பிலே சுகம் இருக்கிறது. வறுமை, நோவு முதலிய குட்டிப் பேய்கள் எல்லாம் உழைப்பைக் கண்டால் ஓடிவிடும்.
 
• உழைப்பு எப்போதும் உண்டு. இதிலே ‘நான்’ என்ற பாரத்தை நீக்கிவிட்டு உழைத்தால், வேலை கிறுகிறு என்று வேகமாகவும், பிழை இல்லாமலும் நடக்கும். தன்னைத் தூக்கித் தலையிலே வைத்துக் கொண்டு வேலை செய்தால் வேலை குழம்பும்.

* தேசாபிமானம் கற்பியாத கல்விமுறை வெறும் மண்ணாகுமேயன்றி ஒன்றுக்கும் பயன்படாது.

* அச்சமே மடமை; அச்சம் இல்லாமையே அறிவு. அன்பே தெய்வம். அன்பு இருந்தால் குழந்தையும் தாயும் சமானம்; ஏழையும் செல்வனும் சமானம்; படித்தவனும் படியாதவனும் சமானம்; அன்பு இருந்தால் மனிதனும் தெய்வமும் சமானம். அன்பு பூமியிலேயே மேலோங்கி நிற்கும்.

• அன்பே தெய்வம். அன்பு இருந்தால் குழந்தையும், தாயும் சமானம்; ஏழையும், செல்வமும் சமானம்; படித்தவனும், படியாதவனும் சமம். அன்பு இருந்தால் மனிதனும் தெய்வமும் சமானம். அன்பு பூமியிலே மேலோங்கி நிற்கும்.

* வீட்டிலும் வெளியிலும் தனிமையிலும் கூட்டத்திலும் எதிலும் எப்போதும் நேர்மை  இருக்க வேண்டும். உண்மை இருக்க வேண்டும்.

* எதற்கும் கவலைப்படாதே. கவலைப்படாது இருத்தலே முக்தி. கவலைப்படாது இருந்தால்தான் இவ்வுலகத்தில் எந்த நோயும் வராது. எவ்வித ஆபத்தும் நேராது. தவறி எவ்வித நோய் அல்லது எவ்வித ஆபத்து நேர்ந்த போதிலும் ஒருவன் அவற்றுக்குக் கவலையுறுவதை விட்டு விடுவானாயின் அவை தாமே விலகிப் போய் விடும்.
• இவ்வுலக வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமானால், அவன் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லா வற்றிலும் மிகமிக உயர்ந்த குணமாவது பொறுமை.

* மனிதனுடைய மனம் சிங்கம் போல் தாக்கும் திறனும், பாயும் திறனும் கொண்டு இருப்பது மட்டு மேயன்றி, ஒட்டகத்தைப் போல பொறுக்கும் திறனும் வேண்டும். அவ்விதமான பொறுமை பலம் இல்லாதவர்களுக்கு வராது. இவ்வுலக வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமானல் அவன் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிக உயர்ந்த குணமானது பொறுமை.

• தீராத ஆவலும், அவசரமும், ஓயாத பரபரப்பும் உள்ள ஜுர வாழ்க்கை நாகரிகம் ஆக மாட்டாது. சரியான நாகரிகத்துக்குச் சாந்தியே ஆதாரம். அடக்கம், பொறுமை. ஜீவகாருண்யம் என்ற குணங்களே உண்மையான நாகரிகத்தையும், நித்திய ஜீவனையும் விளைவிக்கும்.

* மூடன் தான் செய்த குற்றத்தை மறந்து விடுகிறான் அல்லது பிறருக்குத் தெரியாமல் மறைக்கிறான் அல்லது பொய்க் காரணங்கள் செல்லி அது குற்றம் இல்லை என்று ருஜுப்படுத்த முயற்சி செய்கிறான். குற்றத்திற்குக் காரணம் அறியாமை. அதை நீக்கும் வழி சத்சங்கமும், தைரியமும்! பிறர் குற்றங்களை ஷமிக்கும் குணம் குற்றம் இல்லாதவர்களிடத்திலேதான் காணப்படும்.

• நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி, அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டும் என்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும் வேறு வழி இல்லை.

* சொந்த பாஷை கற்றுக் கொள்ளாதவர்கள் குரங்குகளாகப் பிறப்பார்கள் அடுத்த ஜென்மத்தில்!

• யாகம் என்பதன் பொருளை நாம் மிகத் தெளிந்து கொள்ளுதல் வேண்டும். பெரியதோர் இஷ்ட சித்தியின் பொருட்டாகச் சிறிய தற்கால சுகங்களை மனம் அறிந்து வெறுத்து விடுதலே யாகம்.

* பாவத்தைச் செய்வது இல்லை என்ற தீர்மானம் உண்மையாக இருக்க வேண்டும். ஞானமே அவ்வளவுதான். அதைக் காட்டிலும் பெரிய ஞானம் இருக்க முடியாது.

* தமிழ், தமிழ், தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆனால் புதிய புதிய செய்தி, புதிய புதிய யோசனை, புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக் கொண்டே இருக்க வேண்டும்.

* பொறுமை இல்லாதவனுக்கு இவ்வுலகில் எப்போதும் துன்பமே அன்றி அவன் ஒருநாளும் இன்பத்தைக் காண மாட்டான். ஒருவனுக்கு எத்தனைக்கு எத்தனை பொறுமை மிகுதிப்படுகிறதோ அத்தனைக்கு அத்தனை அவனுக்கு உலக விவகாரங்களில் வெற்றி உண்டாகிறது. வீட்டிலே பொறுமை பழகினால் அன்றி ஒருவனுக்கு நாட்டு விவகாரங்களில் பொறுமை ஏற்படாது.

* உண்மையான தெய்வ பக்தி இருந்தால் மனோ தைரியம் உண்டாகும். மனோ தைரியம் இருந்தால் உண்மையான தெய்வ பக்தி உண்டாகும்.

* தர்மத்தை நிலைநிறுத்தும் பொருட்டாக உலகத்தாரி்ன் நிந்தை, பழி, விரோதம், தீங்கு முதலியவற்றைக் கவனியாமல் உழைப்பவன் யக்ஞம் செய்பவன் ஆகிறான்.

• பயத்தை உள்ளே வளர்ப்பவன் பாம்பை வளர்க்கிறான்.

• ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம். ஒரு சொற் கேளீர்... சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்வீர்.

• வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர், நெஞ்சகத்து தருக்குடை நீசர்கள் -இன்னோர் தம்மொடு பிறந்த சகோதரராயினும் வெம்மையோடு ஒறுத்தல் வீரர்தம் செயலாம்.

* அகண்ட வெளிக்கண் அன்பே வாழ்க! துயர்கள் தொலைந்திடுக! தொலையா இன்பம் விளைந்திடுக! வீழ்க கலியின் வலியெலாம்! கிருத யுகம்தான் மேவுகவே!
 
=====================================================
இது ஒரு மறு ஒளிபரப்பு!

=====================================================

Wednesday, December 4, 2013

கணேச பாகவதரின் கச்சேரி - 3

Posted by பால கணேஷ் Wednesday, December 04, 2013
ரொம்ப நாழியா காத்துண்டிருக்கேளா? ஸாரி.... தோ வந்துட்டேன்...! 

ரிதாகிட்ட அந்தப் பொண்ணைக் கூட்டிட்டு வ்ந்த டைரக்டர், ‘‘இவங்க பேரு சரிதா"ன்னு அறிமுகப்படுத்திட்டு, சரிதாட்ட, ‘‘இவங்க பேரு ப்ரீத்தி. இவங்களோடதான் சீரியல்ல நீங்க மோதப் போறீங்க"ன்னுட்டு நகர்ந்துடறாரு. அந்தப் பொண்ணு சரிதாவைப் பார்த்து கும்பிட்டு, ‘‘நீங்க அழகா இருககீங்க ஆன்ட்டி!"ங்கறா. அவ்வளவுதான்... ஏற்கனவே கோபத்துல சிவப்பாயிட்டிருந்த சரிதாவோட முகம் நெருப்பாட்டம் சிவந்துடறது.

‘‘என்னது....? ஆன்ட்டியா? விட்டா பாட்டின்னுவ போலருக்கே...! தோ பாரும்மா... ஒண்ணு அக்கான்னு கூப்பிடு, இல்லன்னா ஸே மேடம்...!"ன்னு பல்லைக் கடிச்சுக்கிட்டு கோபமா சொல்றா. அவளானா கொஞ்சமும் அலட்டிக்காம, ‘‘போங்க ஆன்ட்டி! ரொம்ப தமாஷ் நீங்க... இதுக்கெல்லாம் கோபப்பட்டுக்கிட்டு..."ன்னு உரிமையா சரிதாவோட கன்னத்துல ஒரு தட்டு தட்டிட்டு நகர்றா. அதே கோபத்தோட சரிதா, நம்மாளு பக்கம் திரும்ப... அவன் மெதுவா எஸ்கேப்பாயிடறான். இது மாதிரி சமயங்கள்ல எப்படித் தப்பிக்கறதுன்னு பிள்ளையாண்டானுக்கு அத்துபடியில்லியோ... ஹா... ஹா...!

ஷாட் ரெடின்னுட்டு அசிஸ்டெண்ட் டைரக்டர் கூப்பிடவும் சரிதா போறா. நம்மாளு ஹாயா, ஒரு சேர்ல உக்காந்துண்டு ஷுட்டிங்கை வேடிக்கை பாக்கறான். டைரக்டர், ‘‘ப்ரீத்தி, நீங்க சரிதா மேடத்தப் பாத்து, ‘யாரு ஜெயிக்கறாங்கன்னு பாத்துடலாம்னு" சொல்லி சிரிக்கறீங்க. சரிதா மேடம், நீங்க ப்ரீத்திகிட்ட, ‘யார்கிட்டடி கொக்க
ரிக்கறே?"ன்னு கேட்டு பளார்ன்னு கன்னத்துல அறையறீங்க. புரிஞ்சுதா...?" அப்படின்னு சொல்லிட்டு, ‘‘ரெடி டேக்..."குங்கறார். ப்ரீத்தி அவளோட டயலாக்கைப் பேசி முடிக்கவும், சரிதா ‘‘யாருகிட்டடி கொக்கரைக்கறே?"ன்னு கேட்டுட்டு அவ கன்னத்துல பளார்னு அறையறா.

‘‘கட்... கட்...'ன்னு கத்திட்டு டைரக்டர் வேகமா பக்கத்துல வர்றாரு. ‘‘மேடம்... கொக்கரைக்கறே இல்ல... கொக்கரிக்கறன்னு கேக்கணும். பாத்துப் பண்ணுங்க... ஒன் மோர் ஷாட்" அப்படிங்கறாரு. ‘‘ஸார்..."ன்னு பரிதாபமா குரல் கொடுக்கறா ப்ரீத்தி. ‘‘என்னம்மா?"ன்னு கேக்கற டைரக்டர் கிட்ட, ‘‘இந்த ஆன்ட்டி நடிக்கற இன்ட்ரஸ்ட்ல நிஜமாவே கன்னத்துல அறைஞ்சுட்டாங்க ஸார்..."ன்னு பாவமாச் சொல்றா. ‘‘மேடம்... பாத்துப் பண்ணுங்க..."ன்னு மறுபடி சொல்லிட்டு டைரக்டர் கேமரா பின்னால போய் நின்னுண்டு ‘‘ஸ்டார்ட் கேமரா"ங்கறார்.

இப்போ... மறுபடி அதே மாதிரி ‘‘யார்கிட்டடி கொக்கரைக்கறே?'ன்னு கரெக்டா தப்பாப் பேசிட்டு, திரும்ப அந்தப் பொண்ணை ஒரு ‘பளார்' விடறா சரிதா. ‘‘கட்... கட்..."ன்னு கோவமா கத்தின டைரக்டர் சரிதாட்ட வந்து, ‘‘அரைக்கறது இல்லம்மா... அரிக்குது... அரிக்குது..."ன்னு பலமா கத்தறாரு. ‘‘போங்க ஸார்... அரிக்குதுன்னா சொரிஞ்சுக்கறத விட்டுட்டு என்கிட்ட வந்து சொல்றீங்க?"ன்னு சரிதாவானா வெக்கப்படறா.

அதப் பாத்ததுமே டைரக்டரோட பி.பி. கன்னாபின்னான்னு எகிறிப் போய்டறது போங்கோ... ‘‘அரிக்கறதுன்னு சொல்லலைம்மா. நீங்க பேசவேண்டியது கொக்கரிக்கறதுன்னு. திரும்பத் திரும்ப கொக்கரைக்கறதுன்னே பேசறீங்க. கொக்கைல்லாம் யாரும் அரைக்க முடியாதும்மா... இதான் லாஸ்ட். இந்தத் தடவை நீங்க சரியாப் பேசலைன்னா... நாளைக்கு எடுத்துக்கலாம் இந்த சீனை"ன்னு எரிஞ்சு விழுந்துட்டு, அந்தப் பக்கம் நகர்றாரு.

வேடிக்கை பாத்துண்டு இருககற நம்ம கதாநாயகனுக்கு அந்தப் பொண்ணு ப்ரீத்தியப் பாக்கவே பாவமா இருக்கு. சரிதாட்ட அறை வாங்கினா எப்படி வலிக்கும்னு அனுபவபூர்வமா நேக்கும், உங்களுக்குமா தெரியும்...? அவனுக்கில்ல தெரியும்! அந்தப் பொண்ணை இப்ப ரொம்ப பரிதாபமாப் பாக்கறான். அதைப் பாத்ததுமே சரிதாவோட முகத்துல கோபத்தோட வால்யூம் ஜாஸ்தியாறது. மறுபடி டைரக்டர் டேக் எடுக்க... அவரோட பொறுமையையும், ப்ரீத்தயோட கன்னத்தையும் ரொம்பவே சரிதா சோதிக்க, ஏழாவது டேக்ல சரியாப் பேசிடறா. ‘‘கட்... கட்..."ன்னு குரல் கொடுத்த டைரக்டர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில அட் எ டைம் ஆறு காளைய அடக்கினவர் மாதிரி பெருமூச்சு விட்டுக்கிட்டு வந்து நம்ம கதாநாயகன் பக்கத்துல இருக்கற சேர்ல சரியறாரு.

சரிதா பவ்யமா அவர் பக்கத்துல வந்து நின்னுண்டு, ‘‘நாளைக்கு எப்ப, எங்க வரணும் ஸார்?"ன்னு கேக்கறா. அவரானா அவசர அவசரமா, ‘‘அப்புறமா ஃபோன் பண்ணிச் சொல்றேம்மா... இப்ப நீங்க கிளம்புங்கோ"ங்கறார். கார்ல திரும்பி வரும்போது நம்மாளு சரிதாட்ட கேக்கறான்: ‘‘ஏம்மா... சொல்றதை திருப்பிச் சொல்லத் தெரியாத அளவுக்கு நீ மோசமில்லன்னு நேக்கு நன்னாவே தெரியும். அப்புறம் ஏன் அப்படி ஏகப்பட்ட டேக் வாங்கி இழுத்தடிச்சே.?"ன்னு கேக்கவும், சரிதா கோவமா அவனோட கொமட்டுலயே குத்தறா. ‘‘தெரியாத மாதிரி கேக்கறதப் பாரு... அவகிட்ட நீங்க வழிஞ்சதே என்னால தாங்க முடியல. பத்தாததுக்கு அவ வேற ஆன்ட்டி ஆன்ட்டின்னு கூப்பிட்டு ரொம்பத்தான் எரிச்சல் பண்ணிட்டா. இதான் சாக்குன்னு ஷாட்டுல நடிக்கற சாக்குல நல்லா மொத்திட்டேன்..."ன்னுட்டு ஹா... ஹா...ன்னு பலமாச் சிரிக்கறா.

‘‘நல்ல காரியம் பண்ணினே போ... எனக்கென்னவோ அந்த டைரக்டர் மறுபடி உன்னை நடிக்கக் கூப்பிடுவாருன்னு தோணலம்மா..."ன்னு நம்ம கதாநாயகன் சொல்றதுக்கு, ‘‘கூப்பிட்டாம இருக்க முடியாதே... சீரியல் எபிஸோட் உடனே குடுத்தாகணுமாம், டைமில்லைன்னு டைரக்டர் அவர் அசிஸ்டண்ட் கிட்ட பேசிட்டிருந்ததைக் கேட்டேனே..." அப்படின்னு குதூகலமாத்தானே சொல்றா. நம்மாளு அதுக்கு மேல ஆர்க்யூ பண்ணினா வம்புதானே வந்து சேரும்னுட்டு காருக்கு வெளில பராக்குப் பாக்கற மாதிரி திரும்பிக்கறான். ஆனா... விதியோட விளையாட்டப் பாத்தேளோ... அவன் சொன்ன மாதிரியே நடந்துடுத்து.

அந்த வாரம் ஒளிபரப்பான சீரியல்ல தான் நடிச்சதை எல்லார்ட்டயும் போன் பண்ணிச் சொல்லிப பீத்திக்கறா சரிதா. அதோட நிக்காம... அந்த எபிஸோட் ப்ராட்காஸ்ட் ஆனப்ப அதை ரிகார்டும் பண்ணி திரும்பத் திரும்பப் பாத்து ரசிக்கறா. அதை பாக்க வெச்சு நம்ம ஹீரோவையும் சோதிக்கறா. ஆச்சு... ஒரு வாரம் முடிஞ்சுடுச்சு. சீரியல் கம்பெனிலருந்து போனக் காணலை. அடுத்த வாரம் வரை வெய்ட் பணணிப் பாத்துட்டு சரிதா அந்த டைரக்டருக்கு போன் பண்ணினா... ‘‘ஸார்... மறுபடி எப்ப நடிக்க வரணும்னு சொல்றேன்னேளே..."ன்னு இழுக்க, ‘‘அம்மா தாயி, ஆள விடுஙக... இந்த வாரம் சீரியல்ல வேற ஒரு நடிகைய நடிக்க வெச்சுட்டு அவருக்குப் பதில் இவர்ன்னு உங்க படத்தையும் அவ படத்தையும் காட்டி கதைய நகர்த்திட்டேன். இன்னும் ரெண்டு நாள்ல நடிச்சதுக்கு செக் வந்துரும். ரொம்ப தாங்க்ஸ்ம்மா"ங்கறார்.

சொத்தைக் கடலைய மென்னுட்ட மாதிரி ஆயிடறது சரிதாவோட மூஞ்சி! செல்போனைத்தானே அவ கட் பண்ணிட்டு நம்மாளைப் பாக்கவும், எதிர் முனைல என்ன சொல்லியிருப்பாங்கன்னு ஊகிச்சுட்ட அவன் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கறான். அதப் பாத்ததும் சரிதா கோவமாயி, முகவாயத் தோள்ல இடிச்சுட்டு உள்ள போறா. இதனால லோகத்துல உள்ளவா எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டிய நீதி என்னன்னா... நம்மளை மாதிரி மிடில் கிளாஸ் குடும்பத்துல உள்ளவாள்ளாம் சீரியலைப் பாத்து (அழுது) ரசிக்கணுமே தவிர, நடிககணும்னு ஆசைப்படப் படாதுங்கறதுதான். இம்புட்டு நேரம் என்னோட காலட்சேபத்தை பொறுமையாக் கேட்டவாளும், அடுத்த கச்சேரிக்கு அழைப்புக் குடுக்கலாமா இவருக்குன்னு யோசிக்கறவாளும் எந்தக் குறையும் இல்லாம குடும்பம், பிள்ளை குட்டிகளோட க்ஷேமமா இருக்கணும்! இப்ப நான் உத்தரவு வாங்கிக்கறேன். வரட்டுமா....


இனறு வலைச்சரத்தில் உங்களின் மேய்ச்சல் மைதானம் படிக்க இங்கே க்ளிக்கவும்!

Tuesday, December 3, 2013

கணேச பாகவதரின் கச்சேரி - 2

Posted by பால கணேஷ் Tuesday, December 03, 2013
நான் வர்றதுக்குச் சித்த நாழி கூடவே ஆயிட்டாலும்கூட, கச்சேரியத் தொடர்ந்து கேக்கறதுக்கு ஆர்வத்தோட காத்திருக்கற உங்களுக்கெல்லாம் வணக்கம். அப்புறம் என்னாச்சுன்னா...

 வாசனோட தொணப்பல் தாங்க முடியாத நம்மாளு சரிதாவை பரிதாபமாப் பாக்க... ‘‘ஹும்...! நீங்க ஆரம்பிச்சாச்சு. அவன் சின்னப் புள்ளைலருந்தே அடம் புடிசசா சாதிக்காம விடமாட்டான். அப்புறமென்ன... சொல்லித் தொலையுங்கோ..."ன்னு சலிப்பாத்தானே சொல்றா. நம்மாளு மனசுக்குள்ள தானே சிரிச்சுண்டு, மேலுக்கு சாதுவா முகத்தை வெச்சண்டு வாசன்கிட்ட அந்தக் கதையச் சொல்றான். ‘‘அதையேண்டா கேக்கற... பதினஞ்சு வருஷத்துக்கு முன்னால கப்ஸி உங்கள் சாய்ஸ்ன்னு ஒரு ப்ரொகிராம் ரொம்பவே ஃபேமஸ்! அதுக்கு டயல் பண்ணிப் பேசறவால்லாம் தவறாம, ‘மேடம்.... நீங்க ரொம்ப அழகா இருககீங்க’ன்னுட்டு வழியுவா."

‘‘தெரியும் அத்திம்பேர். அந்த ப்ரொகிராம் பத்தி நானும் கேள்விப்பட்டிருக்கேன்áங்கறான் வாசன். ‘‘அதேதான்... அதுல தன்னோட குரலும் கேக்கணும்னு உங்கக்காக்கு ரொம்பத்தானே ஆசை. பல மாசமா ட்ரை பண்ணிண்டிருந்தா. லைன்ல வெயிட்டிங் போட்டு கட் பண்ணி டெலிபோன் பில்தான் ஏறித்தே தவிர, இவ பேசினபாடில்ல... கடைசில ஒரு நாள் லைன் கிடைச்சிட்டுது. இவ என்ன பேசினா தெரியுமோன்னோ..."ன்னு கப்ஸி ரமா, சரிதா குரல்கள்ல நடிச்சே காட்டறான் நம்ம கதாநாயகன்.

‘‘ஹலோ... கப்ஸி ரமாங்களா...? நீங்களேதானா....? ஹை! எனக்கு லைன் கிடைச்சிருச்சு!"

‘‘சொல்லுங்க மேடம்...! எங்கருந்து பேசறீங்க? உங்க பேர் என்ன?"

‘‘என் பேர் சரிதாங்க. நான் வெஸ்ட் மாம்பலத்துலருந்து பேசறேன்... மேடம்... நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க..."

‘‘ஓ...! தாங்க்யூ! சொல்லுங்க சரிதா. நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க? உங்க ஹஸ்பெண்ட் என்னவா இருக்காரு? உங்களுக்கு எத்தனை கொழந்தைங்க?"

‘‘நான் ஹவுஸ் வைஃபா இருக்கேன் மேடம். என் வீட்டுக்காரர் பத்திரிகைத் துறையில இருக்காரு. ரீசன்ட்டாதான் கல்யாணமாச்சு மேடம்! இதுவரைக்கும் குழந்தைங்க இல்லிங்க..."

‘‘ஓ...! சீக்கிரமா கிடைக்கட்டும்னு வாழ்த்தறேன். அப்புறம் சொல்லுங்க சரிதா... உங்களுக்கு என்ன பாட்டு போடணும்?"

‘‘ஏதோ ஒரு பாட்டு போடுங்க மேடம்..."

‘‘நீங்கதான் டயல் பண்ணியிருக்கீங்க. உங்களுக்குப் பிடிச்ச பாட்டுத்தான் கப்ஸி உங்கள் சாய்ஸ்ல போடுவோம் சரிதா. அதனால நீங்களே சொல்லுங்க என்ன பாட்டுப் போடணும்?"

‘‘அதான் சொன்னேனே மேடம்... ஏதோ ஒரு பாட்டு போடுங்கன்னு..."

‘‘எனக்குப் பிடிச்ச ஏதோ ஒரு பாட்டப் போடணும்னு சொல்றீங்களா? இல்லீங்க... இன்னும் நிறைய நேயர்கள் பேசணும்னு காத்திண்டிருக்கா. சீக்கிரம் சொல்லுங்க சரிதா மேடம்...! எந்தப் படத்துலருந்து என்ன பாட்டு போடணும்னு..."

‘‘அதான் சொன்னேனே மேடம்... ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படத்துலருந்து ‘ஏதோ ஒரு பாட்டு' போடுங்கன்னு..."

‘‘அவ்வ்வ்வ்வ்! பாட்டு பேரையா ஏதோ ஒரு பாட்டுன்னு சொன்னீங்க? சரிங்க.. இப்ப நீங்க கேட்ட ஏதோ ஒரு பாட்டு வருது --அப்படின்னு சொல்றப்ப கப்ஸி ரமாவோட முகம் போன போக்கையும், அவங்க மைல்டா அழுததையும் நீ பாத்திருக்கணுமே..."ன்னு சொல்லிட்டு கபகபன்னு சிரிக்கிறான் நம்மாளு. இப்ப இதைக் கேட்டதும் வாசனும் தன்னை மறந்து வாய்விட்டுச் சிரிச்சுடறான். சரிதா முகத்துல எள்ளு + கொள்ளு வெடிக்க... ‘‘சரி... சரி... ரொம்பத்தான்.... பல்லு சுளுக்கிக்கப் போறது. இதோ பாருங்கோ... வர்ற சனிக்கிழமைலருந்து ஷுட்டிங் ஆரம்பிக்கறதா சொல்லி வரச் சொல்லியிருக்காரு டைரக்டர். அதனால சனிக்கிழமை காலம்பற எட்டு மணிக்கெல்லாம் தயாராயிடுங்கோ... நாம போறோம்..."ன்னு சத்தம் போட்டுட்டு உள்ள போறா சரிதா.

சனிக்கிழமை காலம்பறவே பரபரப்பா தானும் எழுந்து, ஆத்துக்காரனையும் எழுப்பி துள்ளிக் குதிச்சுண்டு தயாராகறா சரிதா. போரூர் தாண்டி ஒரு பங்களால ஷுட்டிங்குங்கறதால எட்டு மணிக்கே கௌம்பி, சரியா பத்து மணிக்கெல்லாம் அங்க போய்ச் சேர்ந்துடறா. அங்க டைரக்டர் சிவகங்கை சிவனாண்டி காத்திண்டிருககார். அவர் டி.வி. சீரியல்ல புரட்சி பண்ணினவார். அதாவது... கண்ணீரும் அழுகையுமா வந்துட்டிருந்த சீரியல்கள்ல 80கள்ல வந்த சினிமா மாதிரி ‘டுஹாய் டுஹாய்'ன்னு கத்திக்கிட்டே பறந்து பறந்து போடற சண்டைகளையும், கார், வேன் சேஸிங்குகளையும் அறிமுகப்படுத்தினவரு. ஆளு பாக்கறதுக்கு பெரிய சைஸ் காராசேவுக்கு பேண்ட் சட்டை போட்ட மாதிரி (நன்றி: சந்தானம்) இருக்காரு. அந்த டைரக்டர் இவாளை நல்லவிதமாவே வெல்கம் பண்றார். ‘‘வாங்க மேடம்...! உங்களோட கேரக்டரைப் பத்தி மொதல்ல சொல்லிடறேன். ஒரு குடும்பத்துல மூத்த மருமகளா நீங்க வர்றீங்க. சின்ன மருமகள்கள் ரெண்டு பேருக்கும் உங்களுக்கும் ஆகாது. மாமியாரோட கூட்டணி வெச்சுட்டு அவங்களை மெரட்டறீங்க..."

‘‘அப்படியா? அப்புறம் என்ன ஆறது?"

‘‘சரிதான்... இவ்வளவு நேரம் கதை சொன்னதே அதிகம் மேடம்! இதை வெச்சுண்டே நூறு எபிசோட் தாண்டிருவேன். அதுக்கப்புறம் என்ன ஆறதுங்கறதை மெல்ல யோசிச்சுக்கலாம். இப்பவே என்ன அவசரம்?"ன்னு சிரிச்சுட்டு அப்பால போயிடறார் டைரக்டர். அப்புறம் கொஞ்ச நேரத்துல நடிக்கறவாள்ளாம் வந்து சேரச் சேர, கல்யாண வீடு மாதிரி ஆயிடறது அந்த பங்களா. சரிதா, ராமராஜன் மாதிரி ‘லைட்'டா மேக்கப்பிண்டுட்டு தன்னை எப்பக் கூப்பிடுவான்னு காத்துண்டிருக்கா. டைரக்டர் கூப்பிடற பாடில்லை. ‘‘ஸார்... என்னை எப்ப நடிக்க வெக்கப் போறீங்க?"ன்னு டைரக்டர் கிட்ட போய் வேற வேற மாடுலேஷன்ல அவ கேக்கறதும், ‘‘கொஞ்சம் பொறுங்க மேடம். நான் கூப்பிடறேன்"ன்னு வேற வேற மாடுலேஷன்ல அவர் சொல்றதும், சரிதா சலிச்சுக்கறதும் பாக்கறப்ப கரகாட்டக்காரன் வாழைப்பழக் காமெடியப் பாக்கற மாதிரி இருக்குது நம்மாளுக்கு. நல்லா சிரிச்சுண்டு ரசிச்சுண்டிருக்கான்.

இதுலயே லன்ச் டைமும் வந்துடறது. சும்மா சொல்லப்படாது... ஐட்டம்லாம் நல்லா இருக்கறதால... அட, சாப்பிடற ஐட்டங்களைச் சொல்றேனாக்கும் நான்... நம்ம ஹீரோ ஒரு பிடி பிடிக்கறான் - சரிதா பாக்காத நேரத்துல அசைவத்தையும்! அவளுக்கானா எப்ப நடிக்கக் கூப்பிடுவாளோங்கற படபடப்புல சாப்பாடே எறங்கலை போங்கோ... கடைசியில ஒரு வழியா ரெண்டு மணிக்கு அவகிட்ட வர்ற டைரக்டர், த்ன்னோட வர்ற அழகான பொண்ணை அவளுக்கு அறிமுகப்படுத்தறார். ‘‘அடுத்த ஷாட் உங்களோடதுதான் மேடம்! இவங்கதான் ரெண்டாவது மருமகளா நடிக்கப் போறாங்க. இவங்களோட நீங்க சண்டை போடற சீனை முதல்ல எடுக்கப் போறோம்"ன்னு சொல்லிட்டு, தன் அசிஸ்டெண்ட் கிட்ட டயலாக் சொல்லித்தரச் சொல்லிட்டு அப்பால போறாரு.

அந்த அழகான பொண்ணைப் பக்கத்துல பாத்ததும் நம்ம ஹீரோ புள்ளையாண்டான் முகம் பிரகாசமாயிடறது. கண்ணு ரெண்டும் பல்பு மாதிரி மின்னுது. அதைப் பார்த்து நறநறன்னு பல்லைக் கடிக்கறா சரிதா. அந்தப் பொண்ணோட சண்டை போடற மூடு அப்பவே ஸ்டார்ட்டாயிடுச்சு அவளுக்கு. ஏற்கனவே சரிதாங்கற நெருப்பு எரிய ஆரம்பிச்சுட்டதைத் தெரியாம, அதுல கொஞ்சம் பெட்ரோலையும் ஊத்தறா அந்தப் பொண்ணு.
   

                                                                     அப்புறம் என்ன நடந்ததுன்னு கேக்க
                                                                         நீங்க ரெடியா இருந்தாலும் நேக்கு லேசா
                                                                         வயத்தைக் கலக்கறது. சித்த நாழி
                                                                         பொறுங்கோ... வந்துடறேன்!

 
மின்னல் டிவியில இன்றைய நிகழ்ச்சி கொஞ்சம் காபி நிறைய இலக்கியம் படிக்க இங்கே க்ளிக்குக!

Monday, December 2, 2013

கணேச பாகவதரின் கச்சேரி - 1

Posted by பால கணேஷ் Monday, December 02, 2013
மப்பார்வதி பதயே... ஹரஹர மஹாதேவா... எல்லாருக்கும் வணக்கம். லோகத்துல எல்லாரும் க்ஷேமமா இருக்கணும், மாசம் தவறாம மழை பெய்யணும்னு வேண்டிண்டு கச்சேரிய ஆரம்பிக்கறேன். இந்தக் காலத்துல லோகத்துல புதுசு புதுசா நெறைய டி.வி. சேனல்கள் வந்துண்டிருக்கு. ஜனங்களும் சலிக்காம (சேனலை) மாத்தி மாத்திப் பாத்துண்டுதான் இருக்கா. அதுலயும் இந்தப் பொம்மனாட்டிங்க இருக்காளோல்லியோ... அவா இந்த டி.வி.யப் பாத்துட்டு... அதுலயும் குறிப்பா சீரியல்களைப் பாத்துட்டு பிழியப் பிழிய அழுது, வீட்டுல இருக்கறவாளப் படுத்தி அவங்களை அழ வெக்கறது இருக்கே... அதையே தனி சீரியலா எடுக்கணும் போங்கோ...! இப்படி டிவி சீரியலால அவதிப்பட்டு சீரியலான... ஸாரி, சீரியஸான ஒருத்தனோட கதைய இப்ப உங்களுக்கு நான் சொல்லப் போறேன்.

 தௌ கீர்த்தனாரம்பத்துல நம்ம கதாநாயகன் பாலகணேஷ் மாம்பலத்துல இருக்கற அவனோட வீட்டுல கம்ப்யூட்டர் முன்னால உக்காந்து எதையோ தட்டிட்டிருக்கான். அப்ப அவன் பக்கத்துல வர்ற அவனோட தர்மபத்தினி சரிதா, ‘‘என்னங்க... கண்ணை மூடிக்கிட்டு ஆ காட்டுங்க..." அப்படிஙகறா. இவ இப்படிச் சொன்னா ஏதோ விபரீதமாச்சேன்னு புள்ளையாண்டான் பயந்துண்டு, ‘‘ஆ காட்டச் சொல்றதே ஆபத்து. அதுல கண்ணை வேற மூடணுமா? எப்படிச் சாப்பிட்டாலும் நீ பண்ணின பதார்த்தத்தோட பேரை என்னால சொல்ல முடியப் போறதில்ல... அப்புறம் எதுக்கு..?"ங்கறான்.

‘‘ஹுக்கும்!’’ன்னு அவன் தோள்ல இடிச்சுட்டு, ‘‘சொன்னதைச் செய்யுங்களேன்"ன்னு அவ மிரட்டவும், அதுக்கு மேல தயங்கினா ஆபத்தாச்சேன்னு பயபக்தியா சொன்னதக் கேக்கறான் நம்ம கதாநாயகன். வாய்ல விழுந்ததைக் கடிச்சுட்டு, ‘ஆ'ன்னு அலறி கைல துப்பறான். கைல ஒரு வெள்ளையான ஒரு வஸ்துவோட சேர்ந்து வந்து விழறது அவன் கடைவாய்ப் பல்! ‘‘அடிப்பாவி...! மைசூர் பாகை இப்படியா கட்டியாப் பண்ணுவே? என்னோட ஒரு பல்லே உதிர்ந்துடுத்து பாரு உன்னால.."ன்னு அவனானா அலர்றான். அவளோ துளிக்கூட அலட்டிககாம. ‘‘மைசூர் பாகா...? நாசமாப் போச்சு! நான் பண்ணினது பாதுஷான்னா!"ங்கறா கூலா.

நம்மாளு வாயக் கொப்பளிச்சுட்டு வந்து மறுபடி சீட்டுல உக்காரப் போற நேரத்துல, ‘‘அக்கா... அத்திம்பேர் ஏன் இப்படி ‘இரண்டாம் உலகம்' படத்த ரெண்டாவது ஷோ பாத்துட்டு வந்தவர் மாதிரி ‘ழே'ன்னு முழிச்சுட்டிருக்கார்?’’ அப்படின்னு குரல் கொடுத்துட்டே உள்ள நுழையறான் சரிதாவோட தம்பி வாசன். அவனைப் பார்த்ததுமே வயத்துல புளிய... புளிய என்ன... மிளகு, உப்பு, இஞ்சின்னு சகல வஸ்துக்களையும் கரைக்கற மாதிரி இருக்கு நம்ம ஹீரோவுக்கு.

‘‘ஒரு குட் நியூஸ் சொல்றதுக்குத்தான்டா வரச் சொன்னேன். அதச் சொல்றதுக்கு முன்னால... இந்தா, இந்த ஸ்வீட்டைச் சாப்பிடு"ன்னு அவன் வாயிலயும் இவன் வாயில திணிச்ச அதே பதார்த்தத்தை திணிக்கறா சரிதா. ‘அடப் படுபாவி! சித்த முன்னால வந்திருக்கப்படாதோ’ன்னு மனசுல நெனச்சுண்டு, நம்மாளு அவனைப் பார்க்க, அவன் கடக் முடக்குன்னு கடிச்சு முழுங்கிட்டு ஏப்பம் விடறான். ‘‘ஸ்வீட் பிரமாதமாப் பண்ணியிருக்கேக்கா..." என்று அவன் சொல்லவும் தீப்பார்வையா முறைக்கறான் நம்மாளு.

‘‘சரி.. இனிமே நீ இந்த மாதிரி புதுசா பலகாரம் பண்ணினா முதல்ல இவனுக்குக் குடுத்துட்டு, (அவன் முழுசா இருந்தா&ன்னு மனசுல சொல்லிண்டு) அப்புறம் எனக்குத் தரணும். சரியா..."ன்னு அவசர ஒப்பந்தம் ஒண்ணு போடறதுக்கு இவன் முயற்சி பண்ண, ‘‘ஹும்...! குட் நியூஸ்ன்னு எந்தம்பி சொன்னானே... அது என்னன்னு கேக்கத் தோணறதா பாரு..."ன்னு (கண்ணீரே வராம) கண்ணைக் கசக்கறா சரிதா. ‘‘ஒன்னோட தம்பியப் பாத்த சந்தோஷத்துலயாக்கும் கேக்க மறந்துட்டேன். என்ன விஷயம், சொல்லும்மா..."ன்னு சமாளிக்கறான் பையன். இல்லாட்டி என்னென்ன விளைவுகள் வரும்னு நேக்கும் ஒங்களுக்கும் தெரிஞ்சதவிட அவனுக்குன்னா நன்னா தெரியும்? அவன் அப்படிக் கேக்கவுமே, சரிதா பல்லெல்லாம் வாயா சிரிச்சுண்டே, ‘‘எனக்கு மின்னல் டிவில சீரியல்ல நடிக்கற சான்ஸ் கிடைச்சிருக்கு" அப்படின்னு ஸ்லோமோஷன்ல ஒரு குண்டைத் தூக்கி இவன் மேல வீசறா.

‘‘ஐயையோ... இதென்ன விபரீதம்! நேரம் காலம் இல்லாம நீ சிரியல் பாத்துட்டு படுத்தறதே தாங்க முடியாது. நடிக்க வேற போறியா? எப்படிறீ?"ன்னு முழி பிதுங்க கேக்கறான் நம்மாளு. ‘‘அதாங்க... மின்னல் டிவில ‘டீ வித் திவ்யா' ** புரோகிராம்ல உங்களப் பேட்டியெடுக்கறதுக்காக டிவி ஸ்டேஷனுக்குப் போனோம்ல... நீங்க பேட்டி குடுத்துட்டிருந்த நேரத்துல சீரியல் டைரக்டர் சிவகங்கை சிவனாண்டியப் பாத்தேன். நான் பேசற ஸ்டைல் நன்னாயிருக்குன்னு சொல்லிட்டு அவர்தான் சீரியல்ல நடிக்கறேளான்னு கேட்டார். சரின்னுட்டேன்.."ங்கறா சரிதா.

‘‘அத்திம்பேர்... அககாவோட திறமயப் பத்தி ஒங்களுக்குத் தெரியாது. ஸ்கூல் டேஸ்லயே ட்ராமாலல்லாம் நடிச்சு கப்லாம் வாங்கிருக்கா தெரியுமோ"ன்னு அக்காக்கு சரியா ஒத்து ஊதறான் வாசன். ‘‘ட்ராமால நடிச்சாளா? என்னவா நடிச்சா?"ன்னு நம்மாளு கேக்கறதுக்கு, ‘‘கதாநாயகியோட தோழிக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கும். கதாநாயகி ஒரு மனோதத்துவ டாக்டர்ங்கறதால அவளைக் குணப்படுத்துவா... எங்கக்கா தோழி கேரக்டர்ல பைத்தியமா நடிச்சா"ங்கறான் வாசன். நம்ம கதாநாயகன் அப்பாவின்னா எப்படி ஒரு அப்பாவி பாருங்கோ... ‘‘நடிச்சிருக்க மாட்டாடா வாசன்... சும்மா வந்து இயல்பா பேசியிருப்பா. சூப்பர் நடிப்புன்னு நம்பி கப்பைக் குடுத்துட்டாங்க..." அப்படின்னு மனசுக்குள்ள நெனக்க வேண்டியதை சத்தமாச் சொல்லித் தொலைக்கறான். ‘‘ச்சீ, போங்க..." என்று கோபமாக சரிதா தன் (உலக்)கையால அவன் தலையில ஓங்கிக் குத்த... இப்ப அவனுக்குன்னா மூளை கலங்கினாப்போல ஆயிடுத்து! ஈரேழு உலகமும் நாலஞ்சு சுத்து சுத்திட்டு அப்பறமா நேராகறது அவனுக்கு! ‘ழே'ன்னு முழிக்கறான்!

அப்பறமா கொஞ்சம் சுதாரிச்சுண்டு, அப்பவும் பேமுழி முழிச்சுண்டு, ‘‘தோ பாரு சரி... இந்த மாதிரி சீரியல்ல நீ நடிக்கப் போறேன்னு சொன்னா எங்கம்மா திட்டுவா..."ன்னு அவன் ஆரம்பிக்க... ‘‘ஆமா... உங்க தங்கச்சி கால்கிலோ மேக்கப்ப முகத்துல அப்பிண்டு ஊர்கோலமா வர்றதுக்குல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டா உங்கம்மா... எனக்குன்னாத்தான் சொல்லுவாளாக்கும்..."ன்னு ஆரம்பிச்சு அவ நான் பண்றதைவிடப் பெரிசா ஒரு காலாட்சேபம் பண்ண... டோட்டலா டெபாஸிட் இழந்த வேட்பாளராட்டமா ஆயிடறான் நம்மாளு.

‘‘ஹும்...! ஒரு காலத்துல டெலிபோன்ல டிவி சேனலுக்குப் பேசி கப்ஸி ரமாவையே அழவெச்சவ நீ! இந்த டைரக்டர் உன்கிட்ட மாட்டிக்கிட்டு என்ன பாடுபடப் போறானோ...?"ன்னு மெதுவா முனகறான. அது வாசனோட பாம்புக் காதுல சரியாப் போய் விழுந்துடறது. ‘‘அத்திம்பேர்... அது என்ன சமாச்சாரம்? நேக்குத் தெரியாதே. எங்கக்கா எப்படி கப்ஸி ரமாவை அழவெச்சான்னு சொல்லுங்கோ முதல்ல..."ன்னு தொணப்ப ஆரம்பிக்கறான். அடுத்தாத்து வம்புன்னா மட்டுமில்ல... சொந்த ஆத்துல வம்புன்னாலும் அத்தனை இன்ட்ரஸ்ட் அவனுக்கு...! இப்ப என்ன பண்றதுன்னு புரியாம சரிதாவ பரிதாபமாப் பாக்கறான் நம்மாளு.
 
                                                               அப்படி சரிதா என்னதான் பேசியிருப்பான்னு
                                                                சித்த நீங்களும் யோசிச்சிண்டிருங்கோ...
                                                                 நான் கொஞ்ச நாழில வெத்தல பாக்கு
                                                                 போட்டுண்டு மறுபடி வந்துடறேன்...!

மின்னல் டிவில நான் பங்கேற்ற ‘டீ வித் திவ்யா’ நிகழ்ச்சியைப் பார்க்க இங்கே க்ளிக்குங்கள்!
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube