மேலைமங்கலம் முழுவதும் ஒரே விஷயத்தைத்தான் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்தது. சற்றுமுன் பறையறிவித்துச் சொல்லப்பட்ட செய்திதான் அது.
“நம் மன்னர் பெரிதாய் ஒரு சிவன் கோயில் கட்டப் போவதாகவும், அதற்கு பொதுமக்கள் அனைவரும் அவரவரால் முடிந்த பணத்தைக் கொடுக்கலாமென்றும், பேரமைச்சரிடம் ஒரு பணம் கொடுத்தாலுங்கூட அவர்களின் பெயர் கோயில் திருப்பணிக் கல்வெட்டில் பொறிக்கப்படுமென்றும் சொல்கிறார்களே... என்ன ஆச்சரியம்..! அரசாங்க கஜானாவில் இல்லாத பணமா ?” என்றான் ஒருவன்.
“அப்படியல்லடா. ஒரு நல்ல காரியத்தில் அனைவரின் பங்கும் இருக்க வேண்டுமென்று அரசர் விரும்புகிறார். அவர் நினைத்தால் ஒரு புதிய வரியை விதித்து. அதில் வரும் பணத்தைக் கொண்டு கோயில் கட்டுவது மிக எளிதாயிற்றே...? எதற்கு இப்படிப் பறையறிவிக்க வேண்டும்?” என்றான் மற்றவன்.
“நீ சொல்வதுதான் சரியென்று தோன்றுகிறது. இன்றே என்னால் முடிந்த பணத்தை நான் பேரமைச்சரிடம் கொடுக்கப் போகிறேன்” என்றான் இன்னொருவன். பேசியபடியே அவர்கள் நகர்ந்தார்கள்.
“ஏனடி, உன் புத்தி கெட்டு விட்டதா என்ன..? நாமெல்லாம் பணம் கொடுத்து, அதை பேரமைச்சர் ஏற்றுக் கொள்வதா? நடக்கும் விஷயமாகப் பேசடி...” என்றாள் மோகனவல்லி.
“ஏனம்மா... தேவதாசிகள் என்றால் கோயில் திருப்பணிக்குப் பணம் கொடுக்கக் கூடாதென்று எதுவும் சட்டம் இருக்கிறதா என்ன? இந்த நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் என்ன உரிமை இருக்கிறதோ, அது எனக்கும் உண்டுதானே? நிச்சயமாக நான் கோயில் திருப்பணிக்காக ஆயிரம் பொன்னைப் பேரமைச்சரிடம் கொடுக்கத்தான் போகிறேன்.”
“வேண்டாமடி. இதனால் வீண் பிரச்னைகள்தான் வரும் என்று எனக்குத் தோன்றுகிறது. அனாவசியமாக வம்பை விலை கொடுத்து வாங்காதே...” மோகனவல்லியின் குரலில் பதற்றம் இருந்தது.
“எந்த வம்பும் இல்லையம்மா... என்னுடைய காலத்துக்குப் பின்பும் என் பெயர் சொல்லுமளவு ஏதேனும் ஒரு விஷயம் இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அதற்குக் கிடைத்திருக்கும் இந்தப் பொன்னான வாய்ப்பை நான் இழந்துவிட விரும்பவில்லை. நாளையே நான் பேரமைச்சரைப் பார்க்கத்தான் போகிறேன்...” என்றாள் அபரஞ்சி திடமான குரலில்.
பேரமைச்சர் அம்பலவாணரின் முகம் செக்கர்வானமெனச் சிவந்திருந்தது. “விளையாடுகிறாயா அபரஞ்சி? நமது மன்னர் ரணதீரர் எழுப்பும் இந்த ஆலயம் காலம் உள்ளளவும் நிலைத்து நின்று அவரது நல்லாட்சியைப் பறைசாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பிரம்மாண்டமாக எழுப்பப் போகிறார். இப்படியான ஒரு பெரும் பணியில் தம் பெயர் மட்டுமல்லாது, குடிமக்கள் ஒவ்வொருவரின் பெயரும் இடம்பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் அவர் இப்படி ஒரு அறிவிப்பைச் செய்துள்ளார். அதற்காக...? உன்னிடமிருந்து நான் ஆயிரம் பொன் என்ன... பத்தாயிரம் பொன் கொடுத்தாலும் பெற்றுக் கொள்ள முடியாது.”
“ஏன் பெற்றுக் கொள்ளக் கூடாது பேரமைச்சரே... குடிமக்கள் ஒவ்வொருவரின் பெயரும் இடம்பெற வேண்டும் என்று மன்னர் விரும்பினார் என்றால் நானும் குடிமக்களில் ஒருத்தியல்லவா? நான் கொடுத்தால் என்ன?”
“ஆலயச் சுவர்களில் ஒரு விவசாயி கொடுத்தது இவ்வளவு பணம், ஒரு வியாபாரி கொடுத்தது இவ்வளவு பணம் என்று பொறிக்கும் போது, தேவதாசி கொடுத்தது இவ்வளவு பணம் என்றா உன் பெயரைப் பொறிக்க முடியும்? வருங்கால சந்ததியினர் இதைப் படித்தால் எள்ளி நகையாட மாட்டார்களா? ஒரு நற்பணிக்குக் களங்கம் கற்பித்தது போல் ஆகிவிடுமே... இந்த எண்ணத்தைத் துறந்து நீ இங்கிருந்து போய்விடு...” என்றார் அம்பலவாணர் கண்டிப்பான குரலில்.
தாசி அபரஞ்சியிடம் இன்னும் பலவிதமாக அவர் எடுத்துக் கூறியும், அவள் ஏற்க மறுத்துவிடவே, சினமடைந்த அவர் அவளை வெளியே தள்ளும்படி வீரர்களை அழைத்து உத்தரவிட்டார். சினத்தின் உச்சிக்குப் போன அபரஞ்சி கூச்சலிட்டாள். “பேரமைச்சரே... என்னை அவமதித்து விட்டீர். நான் இப்போதே மன்னரிடமே சென்று திருச்சபையில் (நீதிமன்றத்தில்) நீதி கேட்கிறேன். அதற்கு நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்” என்றபடியே சென்றாள்.
திருச்சபையில் பேரமைதி நிலவியது. மன்னன் ரணதீரன், சலனமில்லாத முகத்தோடு அபரஞ்சியை ஏறிட்டான். “உன் வழக்கைச் சொல்லம்மா...”
“மன்னா... காலமெல்லாம் தங்கள் பெயர் சொல்லும் வண்ணம் நீங்கள் கட்டும் ஆலயத்தில் என் பெயரும் இடம்பெற வேண்டுமென்று நான் மிகவிரும்பி ஆலயத் திருப்பணிக்காக பேரமைச்சரிடம் ஆயிரம் பொன் கொடுத்தேன். அவர் ஏற்க மறுத்து, என்னையும் அவமதித்து விட்டார்....” என்றாள் அபரஞ்சி.
அவையில் பெரும் சலசலப்பு எழுந்தது. ஒவ்வொருவரும் தங்களுக்குள் பேச முற்பட்டதால் எழுந்த அந்த சலசலப்பை மன்னரின் ஒரு கையசைப்பு அமைதிப்படுத்தியது.
“அம்பலவாணரே... ஏன் அபரஞ்சி கொடுத்ததை ஏற்க மறுத்தீர்கள்?” என முகத்தில் ஒரு குறுஞ்சிரிப்பு தவழ, வினவினான் மன்னன்.
“எப்படி மன்னவா ஏற்க முடியும்? இவள் தாசிக் குலத்தில் பிறந்தவள். நாட்டில் பல ஆண்களின் மோகத்தீயை அணைத்தவள் அல்லவா?” என்றார் அம்பலவாணர்.
“உம்மையும் சேர்த்துத்தானே..?” என்று மன்னன் இடக்காகக் கூறவும், பேரமைச்சர் குரல் எழும்பாமல் திகைத்துப் போய் அமைதியானார்.
“மன்னர் இவ்வாறு பேசுவது தகாது. ஆலயத்தின் சுவரில் ஒரு தேவதாசியின் பெயரை எவ்விதம் பொறிக்க இயலும்? பின்னாளில் வரலாறு நம்மை இகழாதா? பேரமைச்சர் நடந்து கொண்டதில் தவறில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது” என்றார் அரசவைப் புலவர்.
“புலவரே... உயர்ந்தவர் - தாழ்ந்தவர், பணக்காரர் - ஏழை, குலமகள் - தேவதாசி என்ற பாகுபாடெல்லாம் உம்மையும் அமைச்சரையும் போன்றோருக்குத்தான். அரசனாகிய எனக்கு என் குடிமக்களில் ஒவ்வொருவரும் சரிசமமே. புரிகிறதா...? தேவதாசியென்றால் அவ்வளவு கேவலமா என்ன? நீரும் நானும் வணங்கும் சிவபெருமானே, தன் அடியவர் சுந்தரமூர்த்தி நாயனாருக்காக பரவையார் என்ற தேவதாசியின் வீட்டுக்கு நடையாய் நடந்தாரே... தன் அடியவருக்கு அவளைத் திருமணம் செய்விக்கும் பொருட்டு தன் நிலையிலிருந்து இறங்கி வந்த சிவபெருமானைக் கேவலமாய்ச் சொல்வீரா? இறைவனையே கணவனாக வரித்து ஆலயத்தில் நடனமாடி இறைவனுக்குப் பணி செய்வதையே வாழ்க்கையாகக் கொண்ட தேவதாசிக் குலத்தை எம்மைப் போன்ற அரசர்களும், உம்மைப் போன்ற அரசவை உறுப்பினர்களுமாகச் சேர்ந்தல்லவா இப்படி மாற்றினோம்? அவர்கள் செய்வது பாவம் எனில் செய்யத் தூண்டிய பாவிகள் நாமல்லவோ..? அவர்கள் குற்றமுள்ளவர்கள் என்றால் அதில் நமக்கும் பங்கு உண்டில்லையா?”
மன்னன் ரணதீரனின் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார் அரசவைப் புலவர். பேரமைச்சர் அம்பலவாணர் தன்னைச் சுதாரித்துக் கொண்டு பேசினார். “மன்னவா... நீங்கள் சொல்லும் வாதங்களை ஏற்றுக் கொள்ள முடிகிறது. நியாயங்களை உணர முடிகிறது. என்றாலும்... சற்று யோசியுங்கள்... ஆலயத்தின் கல்வெட்டில் தேவதாசி என்றா பொறிப்பது? பின்னர் வரும் சந்ததியினருக்கு அது கேலியாகி விடுமே... என்னவென்று இவள் பெயரைப் போடுவது என்பதுதானே பிரச்சினை? அதனால்தான் இவள் தந்த ஆயிரம் பொன்னை ஏற்க மறுத்தேன். நீங்கள் இவளை ஆதரித்துப் பேசுவதனால் இதற்கொரு முடிவை நீங்களே சொல்லி விடுங்கள். நாங்கள் மனமொப்பி ஏற்றுக் கொள்கிறோம்...” என்றார்.
மன்னன் சற்று நேரம் அமைதியாக இருந்தான். புருவங்கள் முடிச்சிட கண்களை மூடி சில நிமிடம் யோசித்தான். பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய் நிமிர்ந்தான். “சரி பேரமைச்சரே... தேவதாசியென்று பெயர் பொறித்தால்தானே கேவலம்? இன்னாருடைய அன்னை என்று பெயர் பொறித்தால் தவறில்லையே... இந்த அபரஞ்சியை இந்த நிமிடம் முதல் என் வளர்ப்புத்தாயாக ஏற்றுக் கொள்கிறேன். ஆடற்கலையில் வல்லவனாகிய நடராஜப் பெருமானுக்கு ஒரு ஆடல் மண்டபம் எழுப்பி, அதில் மன்னன் ரணதீரனின் வளர்ப்புத்தாய் அபரஞ்சியின் உபயம் என்று பெயர் பொறிக்கச் சொல்லுங்கள்...” என்றான் சிம்மாசனத்திலிருந்து கம்பீரமாக எழுந்து நின்று.
அவை ஸ்தம்பித்தது. அபரஞ்சி கண்ணீர் மல்கியவளாய் அரசரின் காலில் விழப்போனாள். “என்னம்மா இது? நானல்லவா தங்கள் காலில் விழுந்து வணங்க வேண்டும்? தாயே, இனி பேரமைச்சரிடம் நீங்கள் ஆயிரம் பொன்னைத் தரலாம். மனமகிழ்வுடன் நாங்கள் பெற்றுக் கொள்கிறோம். உங்கள் பெயரும் காலம் உள்ளளவும், இந்த ஆலயம் உள்ளளவும் நிலைக்கும். போய் வாருங்கள்...” என்றான்.
அவையினர் அனைவரும் சுய உணர்வு பெற்றவர்களாய், “மன்னர் ரணதீரர் வாழ்க” என்று மன்னனை வாழ்த்தி உரத்துக் குரல் எழுப்பினர். மகிழ்ச்சியின் அலைகள் அரசனின் அந்த திருச்சபையை நிறைத்தது.