Saturday, July 20, 2013

திவுலகிற்குப் புதுமுகமாய் நுழைந்து ஒருசில நண்பர்களுக்கு மட்டுமே நான் பரிச்சயமாகியிருந்த ஆரம்ப காலத்தில் குழந்தைகள் தினத்தன்று ஒரு பதிவிட்டு அதைத் தொடரும்படி என் நட்புகள் ஐவரை வேண்டியிருந்தேன். புதியவன் அழைச்சிருக்கானேன்னு அலட்சியப்படுத்தாம நண்பர்கள் தொடர்ந்து எழுதினாங்க. அந்தத் ‌தொடர் சங்கிலியைத் தொடரத் தொடர எனக்கு மேலும் மேலும் நிறைய நட்புகள் கிடைத்தன. நிறையப் பேருக்கு என்னோட ல்டசணமும்(!) தெரிஞ்சு, ஏதோ கிறுக்கி ஒப்பேத்துதே இந்தப் புள்ளன்னு படிக்கவும் கமெண்ட்‌‌ போடவும் ஆரம்பிச்சாங்க. அதுக்கப்புறம் யாரும் தொடர் பதிவுகள் எழுதலை. என்னையும் எழுதக் கூப்பிடலை. இப்ப என்னோட தங்கச்சி (காணாமல்போன கனவுகள்) ராஜி ‘முதல் கம்ப்யூட்டர் அனுபவம்’ பத்தி தொடர் பதிவா எழுதச் சொல்லி அழைச்சிருக்காங்க. கொஞ்ச நாளைக்கு ப்ளாஷ்பேக்கி உங்களைல்லாம் படுத்த வேணாம்னு நான் நினைச்சாலும் விதி வலியது... என் தங்கை ரூபத்துல வந்து மாட்டிவிட்ருச்சு உங்களை. ஹா... ஹா...!

காரைக்குடி அழகப்பர் கலைக் கல்லூரியில பொருளாதாரப் பட்டம் வாங்கினதும் எங்க சொந்த ஊரான மதுரைக்கு குடும்பத்தோட ஷிப்ட் ஆகிட்டோம். அங்க டைப்ரைட்டிங், ஷார்ட் ஹேண்ட் எல்லாம் கத்துக்கிட்டு, காலையில டைப்ரைட்டிங் இன்ஸ்ட்ரக்டராகவும், மாலையில சர்க்குலேஷன் லைப்ரரி ஓனராகவும் நான் சம்பாதிச்சுக்கிட்டு நல்ல வேலை கிடைக்குமான்னு அப்ளிகேஷனா போட்டுத் தள்ளிட்டிருந்த காலம் அது. வருஷம் ஞாபகமில்ல... (ஞாபகமிருந்தாலும் சொல்ல மாட்டோம்ல... வயசக் கண்டுபிடிச்சுருவீங்க!). கம்ப்யூட்டர்ன்னு ஒண்ணு உலகத்துல இருக்குதுன்ற அளவுக்குத்தான் அப்பத் தெரியும். நாம டைப்ரைட்டர்ல விரல வெச்சா ஹை ஸ்பீடைத் தாண்டி ஹைஹைஸ்பீடுன்னு எதுவும் கிடையாதான்னு கேட்டுக்கிட்டு துடிப்பா இருந்த பீரியட் அது.

அந்த நேரத்துலதான் என் அத்தை பையன் ஸ்ரீதரன் என் வாழ்க்கையத் திசை திருப்பி விட்டான். (என்னைவிட அஞ்சு வயசு மூத்தவனை நியாயமா அண்ணான்னுதான் கூப்பிடணும். சின்ன வயசுலருந்து கூடவே வளர்ந்து ஃப்ரண்டாவே பழகிட்டதால ‘அவன் இவன்’ தான்!) கனரா பாங்க்ல வேலை பாத்துட்டிருந்த அவன், ஒரு நாள் காலைல வீட்டுக்கு வந்து, ‘‘டவுன்ஹால் ரோட்ல ப்ளியாடிஸ் (Pleades)ன்னு ஒரு கம்ப்யூட்டர் சென்டர் இருக்கு. (அந்தப் பேருக்கு நட்சத்திரக் கூட்டம்னு அர்த்தமாம்) அங்க டைப்பிங் நல்லாத் தெரிஞ்ச ஆள் வேணும்னு என் ஃப்ரெண்டு சொன்னான். அவன் அந்தக கம்பெனில ஒரு பார்ட்னர். சாலமன்னு பேரு. அவன் பேரைச் சொன்னாலே சேத்துக்குவாங்க. உடனே போய்ப் பாருடா...’’ன்னான். அடியேனும் என் இருசக்கர வாகனத்தை (சைக்கிள்தான்... ஹி... ஹி...) கிளப்பி உடனே டவுன்ஹால் ரோடுக்கு விரைந்தேன்.

‘ப்ளியாடிஸ்’க்குள் நுழைந்ததும் அங்கிருந்த மூன்று பேரில் உயரமாய், அகன்ற நெற்றியுடன், முயல் போலப் பல்லுடன் இருந்த ஒரு நபர், ‘‘என்ன வேணும்...? யார் நீங்க?’’ன்னாரு. ஸ்ரீதரன் என்கிட்ட பேசினதை அப்படியே கிளிப்பிள்ளையா ஒப்பிச்சேன். ‘‘வாங்க... இந்த மாசம் பூரா காலேஜ் டெஸர்டேஷன் (Dessertaion) வொர்க் நிறைய வரும். கம்ப்யூட்டர்ல டைப் பண்ணி இன்னிக்கு ப்ராக்டிஸ் பண்ணிக்குங்க. நாளைலருந்து வொர்க் பண்ணலாம்’’ என்று விட்டு ஒரு குறைந்த தொகையை சம்பளமாகத் தருவதாகச் சொன்னார். (வேறு வழியின்றி) நான் ஒப்புக் கொண்டதும் கம்ப்யூட்டரிடம் என்னை அழைத்துச் சென்றார். வரிசையாய் டி.வி. பெட்டிகள் போல நான்கைந்து இருந்தன. எதிரில் ஒரு கீபோர்ட் இருந்தது. சேரில் அமரச் சொல்லி, ‘‘இந்த கீ போர்டில் டைப் பண்ணினால் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் தெரியும்’’ என்றார்.

அடுத்து அவர் பேசும் முன்னாடி நான் குறுக்கிட்டு ஸ்கிரீனைக் காட்டினேன். ‘‘இதான் கம்ப்யூட்டரா ஸார்...? கறுப்பு ஸ்கிரீனா இருக்குதே...?’’ என்றேன்- அப்போது கலர் மானிட்டர்கள் புழக்கத்தில் வந்திருக்கவில்லை என்பதும் அது Monochrome மானிட்டர் என்பதும் எனக்குத் தெரியாதாகையால்! ‘‘ஐயோ... இந்தா இருக்கு பாருங்க... இதான் சி.பி.யூ. அதாவது கம்ப்யூட்டர்... இது மானிட்டருங்க...’’ என்றார் விஷ். (விஷ்வநாதன் என்று அவர் சொன்ன பெயரை இப்படித்தான் சுருக்கிக் கூப்பிட்டார்கள்). கம்ப்யூட்டர் என்றால் ஏதோ மிகப் பெரியதான ஒரு மிஷின் என்று அதுநாள்வரை என் கற்பனையில் இருந்தது. ஒரு டப்பாவை நிற்க வைத்தது போல சின்னதாகக் காட்சியளித்த இந்தச் சின்ன வஸ்துதான் கம்ப்யூட்டரா? என வியப்புடன் பார்த்தேன்.  பிறகு வேர்ட் ஸ்டார் என்ற மென்பொருளை எப்படித் திறக்க வேண்டும், புதிய ‌ஃபைலை எப்படி ஓபன் செய்வது என்றெல்லாம் அவர் ஒருமுறை ‘டெமோ’  செய்து காண்பித்தார். பின் ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்து, ‘‘இதை டைப் பண்ணுங்க’’ என்றுவிட்டு அந்த அறையை ஒட்டி முன் அறையிலிருந்த அவரின் சேரில் சென்று அமர்ந்தார்.

டைப்ரைட்டரில் ஹார்ட் டச் கொடுத்து அடித்தால்தான் பேப்பரில் இம்ப்ரஷன் தெளிவாக விழும் என்பதால் அப்படியே பழகியிருந்தவன் நான். தடதடவென்று அசுர வேகத்தில் டைப்ப ஆரம்பித்தேன். நாலு வரிகள் டைப்பி முடிப்பதற்குள் விஷ்க் விஷ்க்கென்று வேகமாக ஓடிவந்தார் விஷ். ‘‘வெளியில அஸ்பெஷ்டாஸ் ஷீட்ல தடதடன்னு மழை பேஞ்சா வர்ற மாதிரி சவுண்ட் கேக்குது. என்னான்னு பாக்கலாம்னு வந்தா இங்க கீபோர்ட்ல குதிரை ஓட்டிட்டிருக்கீங்க... இதை டைப்ரைட்டர் மாதிரி இவ்வளவு வேகமா, ஃபாஸ்டா தட்டக்கூடாதுங்க கணேஷ். மெல்லவே டைப் பண்ணுங்க...’’ என்றார்! கூடவே அந்த குறுகிய நேரத்திற்குள் நான் ஐந்தாறு வரிகளை கடந்து விட்டிருந்ததை ஆச்சரியமாகவும் பார்த்துவிட்டு வெளியே போனார். போனாரா...? போனவரால் நிம்மதியாக சேரில் உட்கார முடியவில்‌லை. விட்டேனா நான்? ‘‘ஸாஆஆஆர்’’ என்று சத்தமாக நான் அலறியதைக் கேட்டு மீண்டும் விழுந்தடித்து உள்ளே ஓடிவந்தார் விஷ், ‘‘என்னாச்சு...?’’ என்றபடி.

 ‘‘பாருங்க ஸார்... டைப் பண்ணிட்டே இருந்தேன். திடீர்னு நடுவுல டைப்படிச்சதெல்லாம் காணாமப் போய்டுச்சு. வேற ஏதோ தெரியுது...’’ என்றேன். அவர் பார்த்துவிட்டு, ‘‘எஸ்கேப் கீயத் தட்டிருக்கீங்க. இதோ பாருங்க... மறுபடி அதே கீயைத் தட்டினா சரியாய்டும்’’ என்று தட்டினார். நான் டைப் செய்து கொண்டிருந்த இடத்தில் கர்ஸர் வந்து நின்றது இப்போது. ‘‘ஹப்பாடா’’ என்று பெருமூச்சு விட்டேன். ‘‘ஸேவ் பண்ணீங்களா?’’ என்றார். ‘‘அதெல்லாம் காலைலயே பண்ணிட்டேன் ஸார்...’’ என்று தாடையைத் தடவிக் காண்பித்தேன். ‘‘அடராமா... ஷேவ் இல்ல ஸார்... ஸேவ்... நீங்க அடிக்கறதையெல்லாம் அப்பப்ப கன்ட்ரோல் கே + எஸ் கீயை அடிச்சா... இதோ பாருங்க... இதுக்குப் பேரு ஃப்ளாப்பி (கறுப்பாக சதுரமாக இருந்த ஒரு வஸ்துவைக் காட்டினார்). இதுல நீங்க டைப் பண்றது ஸேவ் ஆயிடும். அப்புறம் எப்ப வேணா எடுத்து ப்ரிண்ட் போட்டுக்கலாம்’’ என்று பொறுமையாக விளக்கி, ‌ஃபைலை ஸேவ் செய்து காட்டினார். எங்க அப்பாலிக்கா நகர்ந்து போனா இவன் மறுபடி குண்டக்க மண்டக்க ஏதாவது பண்ணிட்டு கூவுவானோன்னு பயந்துக்கிட்டு, மத்யானம் வரைக்கும் கூடவே இருந்தாரு. லன்ச் டயம் வந்ததும், ‘‘ஓகே கணேஷ்... இப்படித்தான் கம்ப்யூட்டர்ல வொர்க் பண்ணணும். நாளைக்கு காலை‌லேர்ந்து வேலைக்கு வந்திடுங்க...’’ என்று வடை கொடுத்து, ச்சே... விடை கொடுத்து அனுப்பி வைத்தார்.

-இதாங்க கம்ப்யூட்டரை நானும் என்னை கம்ப்யூட்டரும் சந்திச்ச முதல் அனுபவம். அதுக்கப்புறம் ப்ரொபேஷனரியா டி.வி.எஸ்.ல ஆறு மாசம் இருந்தப்ப இன்னும் கொஞ்சம் கம்ப்யூ்ட்டர் கத்துக்கிட்டு - முக்கியமா ‘பாரதி’ ஸாப்ட்வேர்ல தமிழ் டைப் பண்ண பழகிட்டு - அங்கருந்து விலகினதும் தினமலர்ல சேர்ந்து... எங்கங்கியோ இடம் மாறி... நாளது தேதி வரைக்கும் கம்ப்யூட்டரோடதான் மல்லுக்கட்டிட்டிருக்கேன். புதுசு புதுசா ஸ்பீடான கம்ப்யூட்டர்களும், புதுப்புது சாஃப்ட்வேர்களும் வர வர என்னை அதுக்கேத்த மாதிரி அப்டேட் பண்ணிட்டேதான் இதுகூடவே ட்ராவல் பண்றேன். மதுரையில அன்னிக்கு என்னைப் பிடிச்ச கம்ப்யூட்டர் விட மாட்டேங்குது. கிட்டத்தட்ட கம்ப்யூட்டர் கூட பொண்டாட்டி மாதிரிதான் போலருக்கு... ஒருநாள் தாலி கட்டினதும் லைஃப் பூரா விடாத வொய்ஃப் மாதிரி, ஒரு நாள் நான் அதைத் தொட்டதுக்கு அது என்னை விடாம வாழ்நாள் பூராவும் பிடிச்சுக்கிட்டதுன்னா... என்னத்தச் சொல்ல... ஹி... ஹி... ஹி...!

ரைட்டு...! இப்ப இந்த ரிலே போஸ்ட்டைத் தொடர, தங்களோட ‘முதல் கம்ப்யூட்டர் அனுபவம்’ பத்திச் சொல்ல ஐந்து பேரை நான் மாட்டிவிட வேண்டிய கட்டத்துக்கு வந்தாச்சு... அந்த பஞ்ச பாண்டவர்கள்....

1. சிறுகதை, தொடர்கதை, பயணக்கட்டுரைன்னு எல்லா ஏரியாவுலயும் அசால்ட்டா சிக்ஸர் அடிக்கற... திடங்கொண்டு போராடற நம்ம சீனு!

2. ‘சந்திரமண்டலத்துல போய் இறங்கினாலும் அங்க ஒரு நாயர் டீக்கடை வெச்சிருப்பாரு’ன்னு சொல்வாங்க. அதுமாதிரி புதுசா ஒருத்தர் இன்னிக்கு ப்ளாக் எழுத ஆரம்பிச்சாலும் இவரோட கமெண்ட் இருக்கும். அவர்... நண்பர் திண்டுக்கல் தனபாலன்!

3. இவங்க கவிதை எழுதுவாங்க, அழகா சிறுகதை எழுதுவாங்க, நெடுநல்வாடையை எளிய தமிழ்ல தருவாங்க, இப்படி எந்த விஷயம் எழுதினாலும் அசத்தற எழுத்துக்களுக்குச் சொந்தக்கார(ரி)ங்க.... என் ஃப்ரெண்ட் கீதமஞ்சரி!

4. ‘எளிமையான கிராமத்தான்’ அப்படின்னு தன்னைச் ‌சொல்லிக்குவாரு இவரு. ஆனா மருத்துவம், கவிதை, நாட்டுநடப்புன்னு பொளந்து கட்டறதப் பாத்தா... கிராமத்தான்தானா?ன்னு நமக்கே டவுட்டு வந்துரும். நண்பன்.... சங்கவி! (சதீஷ்)

5. இவரு ரொம்பச் சாதுவா இருப்பாரு... என்ன எழுதறாரு, எப்ப எழுதறாருன்னே தெரியாது, ஆனாலும் அசத்தலா எழுதறவரு... அதெல்லாத்தையும் விட முக்கியமா... திண்டுக்கல் தனபாலனுக்கு அடுத்தபடி நிறையத் தளங்கள்ல கருத்திடற தங்கத் தளபதி... நண்பர் ‘எங்கள் ப்ளாக்’ ஸ்ரீராம்!

இந்த ஐவரும் என் வேண்டுகோளை ஏற்று தங்களின் கம்ப்யூட்டருடனான தங்களின் ‘முதல்’ அனுபவங்களைப் பகிர்ந்து தொடரை சுவாரஸ்யமாக்கும்படி பணிவன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். கூடவே மறக்காம அவங்களும் அஞ்சு பேரை மாட்டி விடணும்ங்கற விஷயத்தையும் ஞாபகப்... படுத்திக்கறேன்! ஹி... ஹி...!

Thursday, July 18, 2013

வாலிபக் கவிஞனே, நீ வாழி!

Posted by பால கணேஷ் Thursday, July 18, 2013

திருவரங்கத்திலிருந்து புறப்பட்டது அவனது கவிதையுலா
திரைத்தமிழ் தழைக்க அவன் பாடிவந்த முழுநிலா!

சென்னை வந்தவன் பட்டான் பல துயரம்! - அவனை
முன்னிறுத்தியது அவையில் வாத்யாரின் அன்புக்கரம்!

எதிர்ப்பட்டோர் பலம்பாதி கொள்ளும் வாலியெனும்
பெயர்சூடிய அந்நல்லோனின் திருநாமம் ரங்கராஜன்
பழகினோர் பகன்றிடுவார் மாண்பில் அவனோர் தங்கராஜன்!

அவதார புருஷன், பாண்டவர் பூமியெனப் படைத்தான்பல காவியம்
நற்றமிழில் நடனமிடும் அவன்றன் எழுத்து மங்காததோர் ஓவியம்!

ஜாலியான பாடல்களும் புனைந்தவனை உலகம் செய்தது கேலி
கோலமிகு தீந்தமிழ்ப் பாக்களால் வாயடைக்க வைத்தானந்த வாலி!

அவன்றன் கவிதையை அளவிட உலகிலிலை ஓர்அலகு
அம்முதியவனை வாலிபக் கவிஞனெனக் கொண்டாடியது இவ்வுலகு!

தமிழரங்கில் மணிப்பிரவாளமாய் அவன்பாடாத சரணமில்லை
தமிழர்தம் உளம்தனில் எந்நாளும் அவனுக்கு மரணமில்லை!


=====================================================
என்னுடன் ‌இணைந்து இங்கு வாலிபக் கவிஞருக்கு இரங்கல் தெரிவிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி!
=====================================================

Wednesday, July 17, 2013

வாத்யாரின் படகோட்டி - 2

Posted by பால கணேஷ் Wednesday, July 17, 2013
க்கள் விரும்பிப் பார்த்து ரசித்த படங்களை அதே கதையை வைத்துக் கொண்டு புதிய ட்ரீட்மெண்ட்டில் கொடுத்து வெற்றி பெறுவது சமீப காலமாக தமிழ்சினிமாவில் வழக்கமாகி விட்டது. பில்லா, நான் அவன் இல்லை, தில்லுமுல்லு.... இப்படிப் பல படங்கள் வந்து விட்டன. எம்.ஜி.ஆர்., நம்பியார், நாகேஷ் போன்றோரை வைத்து சி.ஜி.யில் மீண்டும் படகோட்டி-2 படம் தயாரிக்க முடிவு செய்தார் எனக்குத் தெரிந்த ஒரு தயாரிப்பாளர். கதையை புதிய ட்ரீட்மெண்டில் எழுதித்தர குடிகார எழுத்தாளர் கோவணாண்டியிடம் கேட்டுக் கொண்டார். கோவணாண்டியும் குடிக்காத நேரம் போக மீதி நேரமெல்லாம் சிரமப்பட்டு உழைத்து(!) கதையை எழுதினார்.

ஒரு சமயம் டாஸ்மாக்கில் பிராந்தி வாங்கிக் குடிக்கப் பணமில்லாமல் தான் எழுதிய ஸ்கிரிப்டை எடைக்குப் போட்டுவிட்டு அந்தப் பணத்தில் குடிக்கப் போய்விட்டார். என் வீட்டுப் புத்தகங்களை எடைக்குப் போடப் போயிருந்தபோது, அந்த ஸ்கிரிப்டைப் பார்த்துவிட்டு விசாரித்த என்னிடம் கடைக்காரன் சொன்ன தகவல் இது. கடைக்காரன் எடை போடுகையில், அந்த ஸ்கிரிப்டிலிருந்து இரண்டு தாள்களை சுட்டு வந்தேன். அதில் இருந்தது ஒரு சீனும், அதைத் தொடர்ந்து வரும் பாடலும்...! இதோ உங்களுக்காக அது இங்கே:

ரசாங்கம் மதுக்கடைகளை அரசைத் தவிர தனியாரும் ஏலத்தில் எடுத்து நடத்தலாம் என்று அறிவித்திருந்தது. ஆகவே ஆங்காங்கே தனியார் மதுக்கடைகளும் முளைக்கத் துவங்கியிருந்தன. வில்லன் எம்.என். நம்பியாரும் தனது பிரம்மாண்டமான மதுக்கடை‌யைத் திறந்திருந்தார். அந்த மதுக்கடையை நோக்கிச் செல்லும் தன் காலனி மக்களை வழிமறிக்கிறார் வாத்யார்.

எம்.ஜி.ஆர்.: ‘‘இதோ பாருங்க... குடிக்காதீங்க, குடிக்காதீங்கன்னு நான் தலை தலையா அடிச்சுக்கிட்டாலும் நீங்க கேக்கறதா இல்ல. சரி, குடிக்கறதுதான் குடிக்கறீங்க... தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் கடைகள்ல குடிங்க...’’

குடிகாரன் 1 : ‘‘இன்னாபா இது... புச்சா ஏதோ கடை பேரச் சொல்றாரு தலீவரு...?’’

நாகேஷ் : ‘‘அட லூசு! டாஸ்மாக்கைத் தான்யா அவர் விரிவாச் சொல்லுறாரு... அங்க சரக்குல்லாம் சரியா இல்லண்ணே... அதான் வேற கடைக்குப் போறோம்...’’

எம்.ஜி.ஆர்.: ‘‘அரசுக்கு வரி செலுத்தறது குடிமகன்களோட கடமை. அதுமாதிரி ‘டாஸ்மாக்’ல குடிக்கறதும் ‘குடி’மகன்கள் கடமை. உங்களுக்காக இன்னிக்கு குடிக்கறவங்களுக்கெல்லாம் சைட் டிஷ் இலவசமா தரச் சொல்லியிருக்கேன்...’’

அப்போது ஒரு கார் வந்து நிற்க, அதிலிருந்து எம்.என். நம்பியார் இறங்குகிறார். கைகளில் (இல்லாத) கஞ்சாவைக் கசக்கியபடி எம்.ஜி.ஆரைப் பார்த்துச் சிரிக்கிறார்.

நம்பியார்: ‘‘ஹுக்குக்கும்! டேய்... இவன் சைட்டிஷ் மட்டும்தான் கொடுப்பான். நான் சரக்கையே கொடுப்பேன்டா... என் கடையில விஸ்கி பாதி ரேட்ல தரச் சொல்லியிருக்கேன். அத்தோட... நீங்கள்ளாம் ரசி்க்கறதுக்காக ஒரு ஐட்டம் டான்ஸும்  ஏற்பாடு பண்ணியிருக்கேன். அங்க‌ே போங்கடா....’’

‘குடி’ மக்கள் அனைவரும் வாத்யாரைத் தள்ளிவிட்டு, நம்பியாரின் மதுக்கடையை நோக்கி ஓட, வாத்யாரின் மேல் ஒரு ஏளனப் பார்வையை வீசுகிறார் நம்பியார். வெறுப்புப் பார்வை ஒன்றை நம்பியாரின் மீது வீசிவிட்டு, தோள்களை ஏற்றி இறக்கி, கைகளைத் தூக்கி விரித்துவிட்டு கேமராவை நோக்கி நடக்கத் துவங்குகிறார் எம்.ஜி.ஆர். ஸ்டார்ட் மூஜிக்...! டன்டன் டன்டன் டன்டன் டன்டன்.....


குடித்ததெல்லாம் குடித்தார் - அவர்
யாருக்காகக் குடித்தார்?
ஒருத்தருக்கா குடித்தார் - இல்லை,
அரசுக்காகக் குடித்தார்..!
ஒருத்தருக்கா குடித்தார் - இல்லை,
அரசுக்காகக் குடித்தார்...!


பாதிரேட்டில் விஸ்கி என்றால் எவர் குடிக்க வெறுத்திடுவார்?
பிராந்தி தரும் போதையைத்தான் பீரும் தர மறுத்திடுமா?
முடியாட்சி அன்று, ‘குடி’யாட்சி இன்று
குடிக்காமல் எவரும் இருப்பதில்லை!


குடித்ததெல்லாம் குடித்தார் - அவர்
யாருக்காகக் குடித்தார்?
ஒருத்தருக்கா குடித்தார் - இல்லை,
அரசுக்காகக் குடித்தார்..!


குடித்தவன் மேல் பழியுமில்லை...
கொடுத்தவன்‌மேல் பாவம் இல்லை...
சந்து சந்தாய் கடை திறந்தார்
குடித்தவர்கள் தெருவில் நின்றார்...!
துயர் வந்தபோதும், சுகம் வந்தபோதும்
ஒருபோதும் குடியை நிறுத்தவில்லை!


குடித்ததெல்லாம் குடித்தார் - அவர்
யாருக்காகக் குடித்தார்?
ஒருத்தருக்கா குடித்தார் - இல்லை,
அரசுக்காகக் குடித்தார்..!


பண்புடையோர் சபைதனிலே
குடித்தவர்கள் தொல்லை செய்வார்!
வயிறு நிறைய மதுவிருக்கும்....
வார்த்தையெல்லாம் கப்படிக்கும்...!
தடையொன்று போட்டு கடைதன்னை மூடி
குடியாதோர் வாழ வாழ்த்திடுவோம்!


குடித்ததெல்லாம் குடித்தார் - அவர்
யாருக்காகக் குடித்தார்?
ஒருத்தருக்கா குடித்தார் - இல்லை,
அரசுக்காகக் குடித்தார்..!


பாடியபடியே மாலை நேர எஃபெக்டில் கடற்கரையை நோக்கி வாத்யார் நடக்க அவர் உருவம் புள்ளியாகும் வரை காமிரா தொடர்கிறது. வாத்யார் ஸில் அவுட்டாக... டிஸ்ஸால்வ்!

கட்!

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

கோவணாண்டியிடமிருந்து இதற்குமுன் நான் சுட்ட பாடல் : போனால் போகட்டும் போடா!

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

Monday, July 15, 2013

மொறு‌மொறு மிக்ஸர் - 19

Posted by பால கணேஷ் Monday, July 15, 2013
டந்த ஒரு வாரமாக  இணைய இணைப்பு மூன்று நாட்கள் சொதப்பியதென்றால், கீ போர்ட் ஸ்ட்ரக்காகியதி்ல் எதையும் டைப் செய்ய முடியாமல் பேக்ஸ்பேஸாக விழுந்து இரண்டு நாட்கள் படுத்தியெடுத்ததின் விளைவாக இணையத்தின் பக்கம் வர இயலவில்லை. மொபைல் மூலம் ‌முகநூல்தான் எளிதில் படிக்க முடிகிறது; ஒன்றிரண்டு தளங்களைத்தான் படிக்க முடிந்தது. இப்பவும் இணைய இணைப்பு முழுமையா சரியாகலை. இருந்தாலும்... உங்களோட ஒரு வார நிம்மதியைப் பறிக்க இதோ வந்தூட்டேன்.... ஹா... ஹா...!

=/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/=

ந்த ஆண்டு மெகா பதிவர் சந்திப்பு நடத்துவது குறித்துப் பேசுவதற்காக நேற்று மாலை வழக்கமான இடமான கே.கே.நகரிலுள்ள ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ஸில் நான், மெ.ப.சிவகுமார், கே.ஆர்.பி., பட்டிக்காட்டான் ஜெய், ஆரூர் மூனா செந்தில், அரசன், புலவர் ராமானுசம் ஐயா, கவியாழி, செல்வின், ரூபக்ராம் ஆகியோர் சந்தித்தோம். முதலில் நானும் ரூபக் ராமும் ஒரே சமயத்தில் வர, பின்னர் பட்டிக்காட்டானும், ஆரூர் மூனா செந்திலும் வர, நால்வருமாகப் பேசிக் கொண்டிருந்த பொழுது, கீழே பார்க் செய்து கொண்டிருந்த எங்கள் வாகனங்களை போலீஸ் வேனில் ஏற்றுவதாக மேலே தகவல்வர, வேகமாக கீழே ஓடினோம். கீழே சில டூவீலர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், நானும் பட்டிக்காட்டானும் எங்கள் வாகனங்களின் பேரில் பாய்ந்து நகர்த்திவிட, ரூபக் மற்றும் செந்திலின் வாகனங்கள் வேனில் ஏற்றப்பட்டிருந்தன.
டிஸ்கவரியி்ன் ‘சைடில்’
‘நோ பார்க்கிங்’ என்று அறிவிக்கப்படாத இடத்தில் நிறுத்திய வாகனங்களின் பேரில் ஏன் கை வைத்தார்கள்?’ என்ற குழப்பத்துடன் எங்கள் வாகனங்களை தள்ளி பார்க் செய்துவிட்டு நானும் ஜெய்யும் வர, செந்திலும் ரூபக்கும் வேனிலிருந்த போலீஸ்காரரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘‘நோ பார்க்கிங் போர்டு சைடு ரோடுல வெச்சிருக்கு. நீங்க பாக்கலை’’ என்றார் அந்த போலீஸ்காரர். பட்டிக்காட்டான் அவரிடம் நேராகச் சென்று, ‘‘நாங்கள்ளாம் ப்ளாகர்ஸ் சார்...’’ என்றதும் போலீஸ்காரர் ‘ழே’யென்று விழித்தார். ‘‘இவன் சிவப்பாகத்தானே இருக்கிறான்... ஏன் ப்ளாக்கர்னு சொல்லிக்கறான்? பக்கத்துல இருக்கற மூணு பேரும் வேணா கறுப்பா இருக்காங்க. ப்ளாக்கர்ஸ்னு சொல்லலாம்’’ என்று நினைத்தாரோ என்னவோ... பட்டிக்காட்டான் மீண்டும், ‘‘நெட்ல எழுதறவங்க... ரைட்டர்ஸ் சார்...’’ என்றதும் தலையாட்டிக் கொண்டார். பலனெதுவும் இல்லை. செந்தில், ரூபக் வாகனங்களுடன் கைப்பற்றப்பட்ட ஒரு ஸ்கூட்டரை மட்டும் (அதன் ஓனர் பெண்ணானதால்) விட்டுவிட்டார். பெண்ணென்றால் பேயே இரங்கும் எனும்போது ‘மாமா’க்கள் இரங்க மாட்டார்களா என்ன? இவர்களிடம், ‘‘சரி, ஸ்டேஷன்ல வந்து வண்டியை எடுத்துக்கங்க’’ என்று வேகமாக வண்டியை கிளப்பிச் சென்று விட்டார்.

டிஸ்கவரியின் எதிர்புறம்
ரூபக்கும், ஆரூர் மூனாவும், அப்போதுதான் வந்து சேர்ந்த கே.ஆர்.பி.யுடன் காவல் நிலையத்துக்குப் ப‌ோனார்கள். அங்கே வழக்கம் போல ‘கப்பம்’ கட்டிவிட்டு தங்களின் வாகனத்தை மீட்டுக் கொண்டு வெற்றி வீரர்களாகத் திரும்பினர். இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால்.... டிஸ்கவரி புக் பேலசின் சைடிலும், எதிரிலும் நோ பார்க்கிங் போர்டு வைத்திருந்த இடங்களை இங்குள்ள படங்களில் பாருங்கள்.... ரைட் ராயலாக அங்கே வண்டியை பார்க் செய்திருக்கிறார்கள் பாவிகள்...! இதையெல்லாம் கண்டுக்காத இந்த ‘வசூல் சக்கரவர்த்தி’களுக்கோ அப்பாவிகளான நாங்கள் நோ பார்க்கிங் இல்லாத இடத்தில் வண்டியை நிறுத்தியதுதான் சமூகக் குற்றமாகப் பட்டிருக்கிறது. அட தேவுடா, இக்கடச் சூடுடா!

அதெல்லாம் சரி... பதிவர் சந்திப்பு பத்தி என்னதான்யா பேசினீங்கன்னு கேக்கறீங்களா...? அதற்கென தனித் தளம் ஒன்று தொடங்கப்பட்டு இருக்கிறது. விரைவில் அங்கே தொடர்ந்து செய்திகள் பகிரப்படும். அதன் லின்க் அனைவரின் பதிவிலும் இருக்கும். சற்றே வெய்ட்டீஸ் ப்ளீஸ்!


=/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/=


=/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/=


காலக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி மூவரும் தேவலோகத்தில் கூடிப் பேசி்க் கொண்டிருந்தபோது தேவலோகவாசி ஒருவர் அவர்களிடம் ‘‘லக்ஷ்மி கல்யாணம், பார்வதி கல்யாணம், வள்ளி கல்யாணம், சீதா கல்யாணம் என்று தேவிகளின் பெயரிலேயே குறிப்பிடுகிறார்களே... ஏன், பரமசிவன் கல்யாணம், முருகன் கல்யாணம் என்று அழைப்பதில்லை?’’ என்று தன் சந்தேகத்தைக் கேட்டார். அப்போது அங்கு வந்த வைகுந்தவாசனான ஸ்ரீநிவாசன் பெருமையாக, ‘‘ஏன்... ஸ்ரீநிவாசன் கல்யாணம் என்று சொல்லி என்னைப் பெருமைப்படுத்துகிறார்களே...’’ என்று கூற, அருகிலிருந்த மகாலக்ஷ்மி இடைமறித்து, ‘‘அதிலும் என்னைத்தான் குறிப்பிடுகிறார்கள். உங்கள் திருநாமத்தின் முதல் எழுத்தான ஸ்ரீ என்னைத்தானே குறிக்கிறது!’’ என்று கூறிவிட்டுக் கணவரைப் பெருமையுடன் பார்த்தாளாம்!
-கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் கேட்டு ரசித்ததாக (பழைய) விகடனில் வெளியான துணுக்கு.

=/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/=


                                              முதல் நாவல் உருவான கதை!

‘‘எ
ன்னுடைய முதல் நாவலான ‘பவானி’யை 1944-ல் எழுதினேன். மருத்துவக் கல்லூரியில் நான்காம் வருடத் தேர்வுகளை எழுதி முடித்துவிட்டு ரிசல்ட்டை எதிர்நோக்கியிருந்த சமயம்... விடுமுறையை வீணாக்காமல் நாலு குயர் வெள்ளைக் காகிதம், பார்க்கர் பவுண்டன்‌  பேனா, இங்க் புட்டி எல்லாம் எடுத்துக் கொண்டு முண்டக்கண்ணி அம்மன் கோயில் தெருவிலிருந்த என் சகோதரி வீட்டின் மாடியில் எனக்கென ஒதுக்கப்பட்டிருந்த தனியறையில் தொடர்ந்து ஏழு நாட்கள் இரவும் பகலும் விடாமல் இந்த நாவலை எழுதி முடித்தேன்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் என்ற சிற்றூரில் நாங்கள் ஏழெட்டு வருடங்கள் இருந்தோம். அங்கே வி்ண்ணாரம்பள்ளி ஜமீன்தாருக்கு என் தந்தை குடும்ப டாக்டராக இருந்தார். இதனால் ஜமீன்தார் குடும்பத்தினருடன் சமமாகப் பழகும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. அந்த அனுபவமே ‘பவானி’ நாவலில் ஒரு பணக்காரக் குடும்பத்தைச் சித்தரிப்பதற்கு உதவியது.

காவிரியும், துளிர் வெற்றிலைக் கொடிக்காலும், அகத்திக் கீரையும், வயல் வரப்புகளும், ஜமீன்தார் வீட்டுக் குழந்தைகளுடன் உல்லாசப் பயணம் ‌போன திருவேங்கிமலையும் அந்த நாவலின் வர்ணனைகளுக்கான பின்னணி ஆயின.’’
                                                          -நாவலாசிரியை ‘லக்ஷ்மி’  (நன்றி: 12.8.84 ஆ.வி.)


Monday, July 8, 2013

மீண்டும் ஞாபகநதிக் கரையினில்!

Posted by பால கணேஷ் Monday, July 08, 2013
வனுடைய அண்ணன் முதலில் பணியமர்ந்தது கோவையிலிருக்கும் மில் ஒன்றில். எனவே போத்தனூர் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டான் இவன். ஒருமுறை பள்ளி ஆண்டுவிழாவுக்கான போட்டிகள் பல அறிவிக்கப்பட்ட சர்க்குலர் வகுப்பிற்கு வர, ஆசிரியர் ஒவ்வொன்றாக படித்தார். ‘‘நான் விரும்பும் தலைவர் - இது தலைப்பு! பேச்சுப் போட்டில யார்லாம் கலந்துக்கறீங்க? கை தூக்குங்க’’ என்றார். சற்றும் யோசிக்காமல் கை தூக்கி விட்டான் இவன். (யோசிச்சிருக்கணும்!) வீட்டுக்கு வந்ததும்தான் ஒரு வாரத்துக்குள் எப்படித் தயாராவது, என்ன பேசுவது என்று கவலைகள் துரத்தின இவனை. இவன் படித்திருந்த, நினைவில் இருந்த அம்பேத்கர் பற்றிய விஷயங்களை ஒரு பேப்பரில் எழுதி விட்டு ஹேமாக்காவை தேடிப் போனான்.

இவர்கள் இருந்த வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளி சே.போ.கழகத்தில் நடத்துனராக இருந்த கிருஷ்ணசாமி வீடு. அவர் மகள் பத்தாம் வகுப்பு ஹேமலதாவுக்கு இவன் என்றால் கொள்ளைப் பிரியம். ஹேமாக்கா இவன் எழுதியதைப் படித்துப் பார்த்துவிட்டு, ‘‘இது பத்தாதுடா. டீடெய்ல்ஸ் கம்மியா இருக்கு’’ என்று நிறையச் சேர்த்து, திருத்தி அழகாக்கித் தந்தாள். கூடவே, ‘‘இதைப் படிச்சுட்டு வந்து என்கிட்ட பேசிக் காட்டணும்’’ என்று அதட்டி அனுப்பினாள். இயல்பிலேயே இவனுக்கு மனப்பாடம் செய்யும் திறனும் ஞாபகசக்தியும் அதிகம் இருந்ததால் உடனேயே நெட்டுருப் பண்ணிவிட்டு வந்தான். ‘‘பேசறேன். சரியா இருக்கா பாருக்கா’’ என்றுவிட்டு கடகடவென்று நான் ஸ்டாப்பாகச் சொல்லி முடித்தான். ஹேமாக்கா பொறுமையாகக் கேட்டுவிட்டு, ‘‘இப்படி மனப்பாடச் செய்யுளை ஒப்பிக்கிற மாதிரி பேசக் கூடாதுடா’’ என்று சொல்லிவிட்டு ஏற்ற இறக்கங்கள், பேச்சை நிறுத்த வேண்டிய இடங்கள் (கைதட்டலுக்காகவாம்! என்ன ஒரு நம்பிக்கை என் மேல்!) என்று எல்லாம் சொல்லித் தந்து பேசிக் காட்டினாள்.

அதன்படியே இவன் மறுபடி பேசிக் ‌காட்டி, ஓகே வாங்கி போட்டிக்கு முன்தினம் வரை குஷியாக தயாராகியிருந்தான். போட்டிகள் பள்ளியில் நடைபெற, ஒவ்வொருவராக அழைக்க இவன் பேரும் அழைக்கப்பட்டது. மேடையில் ஏறுகிறான். மைக் முன் நிற்கிறான். எதிரே எல்லா வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள்! நா எழவில்லை. தொண்டை உலர, ‘ஙே’யென்று விழிக்கிறான். பையன்கள் பக்கமிருந்து பலத்த சத்தம், கூச்சல்! வகுப்பு ஆசிரியர் இவன் நிலையைச் சட்டென்று புரிந்து கொண்டு, அடுத்த பெ‌யரை அழைத்தார். அவ்வளவுதான். அடுத்த கணம் யார் கண்ணிலும் படாமல் ஸ்கூலில் இருந்து எஸ்கேப்பாகி ஓடிவிட்டான் இவன்.

ஆனால் மாலையில் ஹேமாக்காவின் கண்ணில் படவேண்டியிருந்ததைத் தவிர்க்க முடியவில்லை. ‘‘நல்லாத்தானடா தயார் பண்ணின? ஏன் அப்படி சொதப்புன?’’ என்று‌ கோபமாகக் கேட்டு தலையில் நறுக்கென்று ரெண்டு குட்டு குட்டினாள். கண்ணீருடன் கோபித்துக் கொண்டு போய் இரண்டு நாட்களாகப் பேசாமலிருந்த இந்த ஆண் சிங்கத்தை சமாதானப்படுத்த, பின்னால் அவளே பக்கோடாவும், ஜிலேபியும் வாங்கித் தந்தாள். அதன் சுவை இப்போதும் மனதில் இனிக்கிறது. (சமீபத்தில் சிரிப்பரங்கம் நிகழ்ச்சியில் மேடையி்ல் பேசி கைதட்டல் வாங்கியபோது இவன் இந்தப் பள்ளி நிகழ்வை நினைத்து சிரித்துக் கொண்டான் தனக்குள்!)

வன் பத்தாம் வகுப்பு படித்தது தேவகோட்டையில் தே பிரித்தோ பள்ளியில். அங்கேயும் இதேபோல் ஆண்டுவிழா வர, தமிழாசிரியர் தாசரதி ஐயா சொன்னார்- ‘‘நம்ம தமிழ் வகுப்பு சார்பா மூவேந்தர்கள் புகழ் பாடற மாதிரி ஒரு உரைச்சித்திரம் தயாரிக்கப் போறேன். உங்கள்ல மூணு பேர் சேர, சோழ, பாண்டியரா நடிக்கணும்’’. என்று. சொன்னதுடன் நில்லாமல் அப்போதே மாணவர்களை ஸ்கேன் செய்து வெங்கடசுப்ரமணியனை முதலில் செலக்ட் செய்தார். வெங்கி்ட்டு நெருங்கிய நண்பன் இவனுக்கு என்பதால் இவனுக்கு படு குஷி! அடுத்ததாக சிவாவை செலக்ட் செய்தவர், மூன்றாவதாக இவனைப் பார்த்து ‘‘நீங்க சோழ மன்னர் தம்பி’’ என்றதும் குஷி ப்யூஸ் போன பல்பானது.

‘‘ஐயா...! மன்னர்னா கம்பீரமா இருக்கணும். நான் சரியா வர மாட்டேங்கய்யா’’ என்று இவன் சொல்ல... ‘‘அதெல்லாம் எனக்குத் தெரியும்யா. நீங்க ராஜகம்பீரமா(!)தான் இருக்கீங்க. நீங்க சரியா இருப்பீங்கய்யா’’ என்று வாயை அடைத்தார் தமிழய்யா. ‘‘எனக்கு மேடையில பேசறதுன்னா வராதுங்கய்யா. அதனாலதான் சொல்றேன்’’ என்று இவன் மீண்டும் நழுவ, ‘‘பேச‌வே வேண்டாம்யா. உங்களுக்குப் பின்னால டேப்ல உரைச்சித்திரம் ஓடிட்டிருக்கும். நீங்க மூவேந்தர்களும் பேசாம சிம்மாசனத்துல(?) உட்கார்ந்திருந்தாப் போறும்யா’’ என்று ஒரு பவுன்ஸர் வீசி, இவனை க்ளீன் போல்டாக்கினார் தாசரதி ஐயா. வேறு வழியில்லாமல், ‘‘அப்ப நான் பாண்டிய மன்னராத் தான் இருப்பேன் (ஊர்ப்பற்று!)’’ என்று அடம் பிடித்து ஒப்புக் கொண்டான் இவன்.

ஆண்டுவிழா தினத்தன்று முகத்தில் கன்னாபின்னாவென்று மேக்கப்(?) போட்டுவிட்டு, மீசையெல்லாம் ஒட்டி, தலையில் டம்மி கிரீடம் ஒன்று வைத்து, மூன்று சாதாரண சேர்களை சிம்மாசனமாக்கி வரிசையாய் உட்கார வைத்தார் தமிழய்யா. ‘‘அக்கம் பக்கத்து ஸ்கூல், காலேஜ்லருந்து எல்லாரும் வருவாங்கய்யா. யாராவது பக்கத்துல வர்ற சமயத்துல மட்டும் கண்ணை இமைக்காம நேராப் பாருங்க’’ என்றார் தமிழய்யா. அவர் சொன்னதை இம்மி பிசகாமல் செய்தோம் - பக்கத்து கல்லூரி, ஸ்கூல் பெண்கள் வந்தபோது மட்டும்! ஹி... ஹி...!

இரண்டாம் நாளன்று மதியம் பன்னிரண்டு மணிக்கெல்லாம் தமிழய்யா வந்து, ‘‘அவ்வளவு தான்யா. எல்லாரும் மேக்கப்பைக் கலைச்சுட்டு வீட்டுக்குக் கிளம்புங்கய்யா’’ என்று விட்டார். மாலை வரை ஆகுமென்று அனைவரும் வீட்டில் சொல்லிவிட்டு வந்திருந்தோம். வெங்கிட்டு சட்டென்று ஒரு யோசனை சொன்னான். ‘‘டேய், காரைக்குடிக்குப் போய் சினிமா பாத்துட்டு வரலாம்டா. இப்ப விட்டா இது மாதிரி ஒரு சான்ஸ் கிடைக்காதுடா’’ என்று அவன் யோசனை ஏற்கப்பட்டு, ஆளுக்கொரு சைக்கிளில் 25 கி.மீ. தூரம் (என நினைக்கிறேன்... அதற்குக் குறையாத தூரம்) காரைக்குடிக்கு சைக்கிளிலேயே சென்று ஜாலி கலாட்டா, அரட்டை இத்யாதிகளுடன் திரைப்படம் பார்த்துவிட்டு மாலை வீட்டுக்கு வந்தபோது சந்தோஷத்தால் மனம் நிரம்பியிருந்தது. அன்று வெங்கிட்டு சொன்னதென்னவோ மிகச் சரியாகத்தான் போயிற்று. அதன்பின் அதுமாதிரி ஒரு சந்தர்ப்பம் எங்கள் பள்ளி வாழ்வில் அமையவில்லை!

என்ன... கொசுவத்தி சுத்தறது ரொம்ப ஓவராப் போயிட்டிருக்குன்னு தோணுதோ? அடுத்த முறை வழக்‌கமான நம்ம ஏரியாவுக்குள்ள புகுந்துரலாம். சரியா...?

Friday, July 5, 2013

என் பழைய கணக்கு!

Posted by பால கணேஷ் Friday, July 05, 2013
விஞ்ஞான வசதிகளும், கல்வியறிவிற்கான எல்லை விஸ்தீரணங்களும் அதிகரித்துவிட்ட நிலையில் இன்றைய குழந்தைகள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். ஒரு ஏழு வயதுப் பையன்/பெண்ணுக்கு மொபைல் ஆபரேட் பண்ணவும், கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடவும், கூகிளில் தேடவும், சமயங்களில் பெற்றோருக்கே சொல்லித் தரும் அளவுக்கு விஷயம் தெரிந்திருக்கிறது. சுமார் 35 வருடங்களுக்கு முன்னால் இத்தகைய வசதிகளுடன் பழகாத குழந்தைகள் இந்த அளவுக்கு ப்ரைட்டாக இல்லை. அதிலும் இவன் ரொம்பவே மோசம். புத்தகம் படிப்பதும், எஞ்சிய நேரங்களி்ல தெருவில் விளையாடுவதும் தவிர வேறு பொதுஅறிவு எதுவும் கிடையாது. மற்ற பிள்ளைகள் போல துறுதுறுவென்று கடைகளுக்கும் ஊர் சுற்றவும் செல்லக்கூடிய சாமர்த்தியம்கூட இல்லாமல் ரொம்பவே ‘அப்பாவி’யாக இருந்தான் இவன்.
 
இவனுடைய அப்பா ஜமீன்தாராகப் பிறந்திருக்க வேண்டியவர், தவறிப்போய் சாதாரண குடும்பத்தில பிறந்து தொலைத்தார். ‘‘இன்னொருத்தன்கிட்ட கை கட்டி வேலை பாக்குறது ஒரு பொழைப்பா?’’ என்று சொல்லிவிட்டு சொந்தமாக ஒரு மாவுமில் வைத்து நடத்தினார். (இதே டயலாக்கை இவன் சொல்லலாம்னு நெனச்சாலும் இந்தக் காலகட்டத்துல முடியலியேஏஏஏ!) நன்றாகத்தான் வியாபாரம் நடந்தது; வருமானம் வந்தது. அந்த வருமானத்தை வெச்சு தம்பியை இன்ஜினியரிங் படிக்க ‌வெச்சு, தங்கைகளை கல்யாணமும் பண்ணிக் குடுத்திருக்கார்னா பாருங்க! அத்துடன் சும்மாயிராமல் ஒரு ஓட்டலும் ஆரம்பிக்க, அது நஷ்டத்தைத் தர, கூடவே உடல்நிலையும் மோசமாக இவன் தன் ஆறாவது வயதிலேயே அப்பாவை இழக்க நேர்ந்தது.

அப்பாவின் பிரின்ஸிபிள் சித்தப்பாவிடம் இல்லை. இன்ஜினியரிங் கிராஜுவேட்டான அவருக்கு டி.வி.எஸ்.ஸி.ல் வேலை கிடைத்து விட்டதால் கடையைப் பார்த்துக் கொள்ள மறுத்துவிட, கடையை விற்றுவிட்டு அந்தப் பணத்தை ஹாஸ்டலில் படிக்கும் இவன் அண்ணனின் கல்விச் செலவுக்காக ஒதுக்கி விட்டார்கள். அண்ணன் படிப்பை முடித்து வேலைக்குச் செல்லும் காலம் வரை இவனும் அம்மாவும் சித்தப்பாவின் ஆதரவில்தான் இருக்க வேண்டியிருந்தது. அதன்பின் ஓராண்டு கழிந்து சித்தப்பா கல்யாணம் செய்து கொண்டார். சித்தியாய் வரவிருந்தவர் ஏற்கனவே மாமா பெண் உறவுமுறைதான் என்பதால் தெரிந்தவரே. அந்நாளில் சித்தப்பா காதல் கல்யாணம் செய்து கொண்டார் என்கிற தகவல் இவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. மதுரையிலிருந்து சென்னைக்கு ரயிலில் போகப் போகிறோம். அங்கே மயிலாப்பூர் என்ற இடத்திலுள்ள கபாலீஸ்வரர் கோயிலில் கல்யாணம் என்கிற தகவல் மட்டுமே இவனை குஷிப்படுத்தப் போதுமானதாயிருந்தது.

அப்போது நிலக்கரி ரயில்கள்தான் பெரும்பாலும் புழக்கத்தில் இருந்தன. ரயில் வந்து நிற்கையிலும், புறப்படுகையிலும் ‘புஸ்ஸ்ஸ்ஸ்’ என்று அது பெருமூச்சு விடும் சப்தம் இருக்கிறது பாருங்கள்...!  மிக ரசிக்கிற ஒரு விஷயம்! இன்றைய தலைமுறையினருக்கு இனி கிடைக்க வாய்ப்பில்லாத ஒன்றும் கூட! ரிஸர்வேஷன் கன்ஃபர்ம் ஆகாமல், அன்ரிஸர்வ்ட் ‌கம்பார்ட்மெண்ட்டில் சிலர் பயணம் செய்ய நேர்ந்தது. இன்ஜினுக்கு அடுத்த இரண்டாவது கம்பார்ட்மெண்ட். இவன் அடம்பிடித்து ஜன்னலோர சீட்தான் வேண்டுமென்று கேட்டு வாங்கி அமர, ‘ழே’ என்று ரயிலின் நீஈஈஈண்ட விசில் கூவலும், ஜன்னலின் வழி வரும் எதிர்காற்றும் மிகவும் குஷியைத் தந்தது இவனுககு. எதிர்காற்று மட்டுமா வந்தது ஜன்னல் வழி? என்ஜினிலிருந்து தெறித்த சில நிலககரி நெருப்புத் துளிகள் காற்றில் பறக்க, அதில் ஒன்று மிகச் சரியாக இவன் கன்னத்தைக் குறிவைத்து வந்து ஒட்டிக் கொண்டது. ஹா ஹுவென்று அலறித் துடிக்க, மற்றவர்கள் துடைத்து வேறிடத்தில் அமர வைக்க, அந்நாளைய எட்டணா அளவுக்கு ஒரு நெருப்புச் சுட்ட வடு கன்னத்தில்! சித்தப்பா ஒரு பிளாஸ்டரை ஒட்டி விட்டார்.

சித்தப்பா தன் கல்யாணத்தை முன்னிட்டு இவனுக்கு ட்ராயர் சட்டையுடன் ஒரு வாட்ச்சும் வாங்கித் தந்திருந்தார். ரொம்ப நல்ல வாட்ச் அது. ஒரு நாளைக்கு இரண்டு தடவை மிகத் துல்லியமாக நேரத்தைக் காட்டும். இவனுக்கு அந்த வாட்ச்சைக் கையில் கட்டியதும் கொள்ளைப் பெருமை. புது டிரஸ்ஸுடன், கையில் வாடச்சுடன் போட்டோ்வில் தானும் இருக்க வேண்டுமென்று பேராசை வந்துவிட்டது. மதுரையில் குடும்ப நண்பரான போட்டோகிராபர் கோபு அண்ணாவையும் சென்னைக்கு அழைத்து வந்திருந்ததால், அவர் கேமராவைத் தயார் செய்யும் போதெல்லாம் இவன் ஓடிச்சென்று போட்டோவுக்கு நிற்பவர்களின் அருகில் நின்றோ, காலடியில் அமர்ந்தோ தானும் படங்களில் விழும்படி ‌பார்த்துக் கொண்டான். வாட்ச் தெரியாமல் போய் விட்டால்...? நெஞ்சில் ஒரு கையை வைத்தபடி போஸ் வேறு! கூடவே ஒரு பக்கம் கன்னத்தில் பிளாஸ்திரி இருந்ததால் ‘தெய்வமகன்’ சிவாஜி மாதிரி ஒருபக்க முகத்தைக் காட்டாமல் மறுபக்க முகம் மட்டுமே போட்டோவில் விழும்படி போஸ் கொடுக்க வேண்டிய அவசியம் வேறு. ரெம்பக் குஷ்டமப்பா... ச்சே, ரொம்பக் கஷ்டமப்பா!

அத்தனை சிரமமாக இருந்தாலும், கல்யாண ஆல்பம் வந்ததும் ஏகப்பட்ட ஃப்ரேம்களில் தான் பளிச்சென்று பிரிண்ட்டாகி இருந்ததை (எல்லாம் க/வெ. படங்கள்தான். அப்ப கலர் பிலிம் அதிகம் புழக்கத்திலில்லை) பார்த்ததும் ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டான் இவன். அந்தக் கல்யாண ஆல்பத்தை வந்தவர்களிடமெல்லாம் காட்டி மகிழ்ந்தது போக, அடுத்த சில மாதங்கள் வரை படிக்கும், விளையாடும் நேரம் தவிர மற்ற நரங்களெல்லாம் அந்த ஆலபத்தோடேயே பொழுது கழிந்தது இவனுக்கு. ஹு...ம்! அது ஒரு அழகிய நிலாக்காலம்!

-சமீபத்தில் இவனுடைய இல்லத்திற்கு விசிட் அடித்த தோழி மஞ்சுபாஷிணி, அலைகள் எதுவுமின்றி உறைந்த நீருடன் இருந்த இவன் மனக்குளத்தில் ஒரு சின்னக கல்லெறிந்து போனார். அதன் விளைவாய் ஏற்பட்ட சலனத்தின் விளைவாய்தான் இவனுடைய சுயபுராணத்தை நீங்கள் கேட்டுத் துன்புற நேர்ந்தது. இதெல்லாம் சொல்லப்பட வேண்டிய பெரிய விஷயமா என்ன? 1) என் டைரி மாதிரி இதை சொல்றதுல எனக்கு மகிழ்ச்சி. 2) வரலாறு ரொம்ப முக்கியம் நண்பர்களே...! ஹி... ஹி...!

Wednesday, July 3, 2013

தே(வ)ன் துளிகள்!

Posted by பால கணேஷ் Wednesday, July 03, 2013
காதேவன் என்கிற தேவன் எழுத்துக்களில் இயல்பான ஹாஸ்ய ரசம் ததும்பும். அவரது சுவாரஸ்யமான எழுத்து நடை எனக்கு மிகப் பிடிக்கும். அதைப் பற்றி எழுத வேணுமென்று ரொம்ப நாளாக ஆசை. நான் எழுதி என்னத்த பெரிசாச் சொல்லிடப் போறேன்னு தோணிச்சு. அதனால அவர் எழுத்துலருந்து கொஞ்சம் ஸாம்பிள் இங்க உங்களுக்காக:

====================================

திருநெல்வேலி ஜங்ஷனுக்கும் திரு‌ச்செந்தூருக்கும் இடையேயுள்ள மைல்கள் முப்பத்தெட்டுதான் என்றாலும் மொத்தம் பத்தொன்பது ஸ்டேஷன்களையும் அவைகளி்ல் ஒன்று தவறது நிற்கும் ரயில் வண்டிகளையும் இங்கே காணலாம். அடிக்கடி கதவுகளைத் திறப்பதும் அடைப்பதும் இறங்குவதும் ஏறுவதுமாயுள்ள மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளுக்கிடையே நடைபெறும் சச்சரவுகளுக்கும், சண்டைகளுக்கும் இங்கே குறைச்சல் ஓய்ச்சல் ஏதும் இல்லை.

‘‘ஓய்! உமக்கு மூளை கொஞ்சமாவது இருக்கா? இவ்வளவு கொழந்தைகளும் பொம்பிளைகளும் இருக்கிற வண்டியிலே பார்த்து ஏற வந்துட்டீரே! மேலே வண்டி அம்பிட்டும் காலி!’’ என்று ஞானதிருஷ்டியில் கண்டாற்போல் ஒருவர் புத்தி சொல்வார். ‘‘இருக்கட்டும் ஸார்! நான் என்ன, அடுத்த ஸ்டேஷன்லயே இறங்கப் போறவன். ஒரு மூலையில ஓர் அங்குல இடத்தில் நின்றுவிட்டால் போச்சு’’ என்று மார்பின் சுற்றளவு நாற்பத்திரண்டு அங்குலம் கொண்ட ஆசாமி முண்டுவார்.

‘‘காலை மிதித்து விட்டீர‌ே கடங்கார மனுஷா!’’

‘‘என்னமோ, ரயிலையே விலைக்கு வாங்கிட்டாற் போல்தான் வாய்வீச்சு!’’

‘‘மனுஷனுக்கு அறிவு வேணும். அது இல்லையோ, ரயில் வண்டியிலே வந்து ஏறப்படாது...’’

‘‘ஓஹோஹோ! நான் ஏறினதுதான் இப்போ சங்கடமோ? எங்கேயும் பார்த்துட்டேன். இடமில்லை. உங்க பக்கத்திலே நிற்கணும்னு ஆசையா, பிரார்த்தனையா! இரண்டுமில்லையே!’’ என்று ஏறிக் கொண்டான் அவன். ‘‘ஏறாதே என்கிறேன். என்ன? மேலே ஏறினா?  நான் சொல்கிறவன் மனுஷனாப் படல்லே! என்ன?’’ என்று எகிறினார் அவர். ‘‘மனுஷனாயிருந்தால் அப்படிச் சொல்ல மாட்டானே! ஒரு மாதிரி நகர்ந்து இடம் கொடுப்பானே!’’ என்று நடராஜன் நன்றாக உள்ளே வந்து கதவையும் சாத்திக் கொண்டான்.

‘‘இப்ப நீ இறங்கப் போறியா என்ன? ஏய்...!’’

‘‘இறங்கப் போறேன், தாத்தா! கட்டாயம் இறங்கத்தான் போறேன். நான் போக வேண்டிய ஸ்டேஷன் வந்துட்டா ஒரு விநாடி உட்காருவேனா? இல்லை, வேற யார்தான் உட்காருவா? நீங்கதான் நிமிஷம் நிற்பேளா?’’

-‘மிஸ் ஜானகி’ நாவலிலிருந்து.


====================================

ங்கநாதத்தின் வீட்டில் அன்று மத்தியானம் டிபனுக்குத் தவலை அடை செய்திருந்தார்கள். தவலை அடை என்றால் ரங்கநாதத்திற்குத் தேவதா விசுவாசம். தூக்கு மேடை மீது ஏற்றுமுன் அவரை அதிகாரிகள், ‘‘கடைசியாக உன் விருப்பம் என்ன?’’ என்று கேட்டிருந்தால், ‘‘ஓர் அரை டஜன் தவலை அடைகள் சாப்பிட்டு விடுகிறேன். அப்புறம் உங்கள் இஷ்டம் போல் என்னைச் செய்து கொள்ளுங்கள்’’ என்று திருப்தியுடன் சொல்லி விடுவார்.

சுடச்சுடக் கொண்டுவந்து கனகம் அடைகளைப் பரிமாறுவதும், அவைகளை அவசரம் அவசரமாக ரங்கநாதம் அந்தர்த்தானமாக்குவதுமாக முனைந்திருந்த தருணம். அந்த மாதிரி சமயங்களில் அவர் மனம் மிக விசாலமாக இருக்கும். யார் என்ன வரம் கேட்டாலும் கொடுக்கத் தயாராக இருப்பார். அதை அறிந்த அவருடைய மூத்த பிள்ளையான கஸ்தூரி ‘ஸ்கவுட்’டில் சேர காக்கி உடுப்புகளுக்குப் பணம் கேட்டு, உத்தரவும் பெற்றுக் கொண்டு விட்டான். பெரிய பெண் அலமேலு பூச்சவுக்கம் போட புதிய நூல்களுக்கு‘ஆர்டர்’ வாங்கிக் கொண்டு விட்டாள். கனகமோ தன் வைர பேஸரியை அழித்து திருச்சி டாக்டர் சம்சாரம் பண்ணிக் கொண்டிருக்கிற மாதிரி புது மோஸ்தரில் செய்து கொள்ள வரம் வாங்கும் தருணம் எது என்று காத்திருந்தாள். அப்போது வாசல் கதவை வேதாந்தம் தட்டினான்.

‘‘யாரடா அவன் சனியன்? ஓடிப் போய்ப் பாருடா கஸ்தூரி!’’ என்றார் ரங்கநாதம். அவர் குரல் வேதாந்தத்திற்கும் கேட்டது. ‘சனியன்’ என்று சொல்ல, தன்னைப் பார்க்குமுன் அவர் எப்படிக் கண்டுபிடித்தார் என்று அவன் ஆச்சரியத்துடன் சிரித்துக் கொண்டான். ‌வேறு சமயமாக இருந்தால் ரங்கநாதம் ஓடி ஒளிந்திருப்பார். வெங்காய போண்டாவுடன் அகப்பட்டுக் கொள்ளும் எலி மாதிரி இவர் தவலை அடையும் கையுமாக இன்று சிக்கிக் கொண்டு விட்டார் வேதாந்தத்திடம்.

-‘மிஸ்டர் வேதாந்தம்’ நாவலிலிருந்து

====================================

‘‘ராஜம்! நாம் முன்பிருந்த வீட்டில் சாண் பூமியாவது இருந்தால் பிரமாதமாகத் தோட்டம் போடுவேன் என்று சொன்னாயே! இப்போது வீட்டைச் சுற்றி ஒன்றே முக்கால் கிரவுண்ட் தரை இருந்தும் நீ வாளாயிருப்பதன் ரகசியம் என்ன?’’ என்று என் மனைவியைக் கேட்டேன். ‘‘இப்போதானே வேலி போட்டீர்கள்? தவிர, இந்தப் பங்குனி மாசத்தில் செடியும் கொடியும் வைத்தால் எப்படிப் பிழைக்கும்?’’ என்று அவள் என்னைத் திருப்பிக் கேட்டாள். ‘‘அப்படியானால் ஏதோ பூஞ்செடிகள் விற்றுக் கொண்டு வருகிறானே, அவன் ஒரு மூடனா? நான் வாங்குகிறேன் பார்’’ என்று அவனைக் கைதட்டி அழைத்தேன். அவன் வந்து தலைச்சுமைக்ை கீழே வைத்துவிட்டு எதிரில் உட்கார்ந்தான்.

‘‘ரொம்ப உசந்த செடிகள் இருக்குது... பார்த்தீங்களா இந்தப் பூங்கொத்தை? விருட்சிப் பூங்க!’’ என்று ஒரு பூங்கொத்தைக் காட்டினான். ‘‘ரொம்ப நன்றாக இருக்கிறதே இந்தப் புஷ்பம்! எங்கே இதன் செடி?’’ என்றதும் ‘‘இதோ பாருங்க’’ ன்று சுமார் பத்துச் செடிகளை எடுத்து வெளியே போட்டான். ஒவ்வொன்றின் வேர்ப்புறமும் ஒரு சருகில் சுருட்டி அழகாகக் கட்டி வைக்கப்பட்டிருந்தது.

‘‘இதைப் பாருங்க முல்லைச் செடி... முல்லையிலே பதினாறு விதமுங்க. பதினாறும் நம்மகிட்ட இருக்குது...’’

‘‘அதையெல்லாம தனியா வை. அப்புறம்...?’’

‘‘பழச்செடிங்க! இதெல்லாம் அலகாபாத் கொய்யா... ஒசத்தி ஒட்டுங்க. ஒரு பளம் சும்மா ஒரு சொம்பளவு வருமுங்க. வாயில போட்டீங்கன்னா கரைஞ்சு போவுங்கோ...’’

அவன் சொல்லும்போதே என் தோட்டத்தில் விருட்சியும் இருவாட்சியும் பூத்துக் குலுங்குவது போலும், கொய்யாவும், மாதுளையும், ஒட்டுமாவும் பழுத்துத் தொங்குவது போலவும் என் கண்முன் ஒரு பிரமை உண்டாயிற்று. நாற்பத்தி நாலு ரூபாய் விலை சொன்ன அந்தச் செடிகளை நானும் ராஜமும் சாமர்த்தியமாகப் பேரம் பேசி இரண்டே கால் ரூபாய்க்குத் தீர்த்தோம். ‘‘ஐயா பேச்சிலே தேனு ஒழுகுது’ என்று அவன் பணத்துடன் சென்றான்.

பிற்பகல் வந்த வாட்ச்மேன் ஆறுமுகத்தைக் கொண்டு அவைகளைப் புதைக்கச் சொன்ன ‌போதுதான் உண்மை வெளியாகியது. பாதிச் செடிகளில் சருகுப் பார்சலை அவிழ்த்ததும் வேர் என்பதே இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு வேதனைப்பட்டோம். ‘‘இதற்காக நீங்கள் வருந்த வேண்டாம் ஸ்வாமி! இந்தச் செடிகளில் வேர் இருந்தாலும் உபயோகம் இல்லை. இத்தனையும் நீங்க பூஞ்செடிகளே இல்லை... எல்லாம் காட்டுச் செடிகள்!’’ என்று சொல்லி விட்டான் அவன்.

இவ்வளவு லகுவாக நாங்கள் ஏமாந்து விட்டதை நினைத்து நானும் ராஜமும் சிறிதுநேரம் வருந்திவிட்டு, ‘இனிமேல் இந்த வீட்டுக்காக காலணா செலவழிப்பதில்லை; தெரிந்தும் தெரியாமலும் வேண்டியது நஷ்டப்பட்டு விட்டோம்’ என்று கடும் வைராக்கியம் செய்து கொண்டு காம்பவுண்டின் ஒரு மூலையில் எல்லாச் செடிகளையும் வாரி வீசினோம்.

-‘ராஜத்தின் மனோரதம்’ நாவலிலிருந்து.


====================================

தேவனின் புகழ்பெற்ற துப்பறியும் சாம்பு உள்ளிட்ட நிறைய புதினங்களிலிருந்து இன்னும் இன்னும் சொல்ல விருப்பம்தான். ஆனால் இங்கே இடம் பற்றாதே... எனவே பிடித்திருந்தால் நீங்களே அவர் புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படித்துக் கொள்ளும்படி கோருகிறேன்!

Monday, July 1, 2013

நோ குழந்தை - வீடு சுத்தம்!

Posted by பால கணேஷ் Monday, July 01, 2013
நோ... நோ... அப்படிப் பாக்காதீங்க. இப்படியொரு (அபத்தமான) கருத்தை நான் சொல்ல மாட்டேங்க. குழந்தைங்க இருக்கணும்.... வீடு கலகலப்பா இருக்கணும். எல்லாப் பொருட்களும் இறைஞ்சு கிடக்கணும். அதை ஒழுங்குபடுத்தணும். இல்லன்னா என்ன சுவாரஸ்யம் லைஃப்ல? இப்படி ஒரு கருத்தைச் சொன்னவர் சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்ற நம்ம கலகநாயகன்... ஸாரி, உலகநாயகன் கமலஹாசன்தான். பழைய குமுதம் இதழில் ஒரு பக்கக் கட்டுரைகள் பல வாரங்கள் இளைஞர் கமல் எழுதியிருக்கிறார். அதில் ஒரு பக்கம் இங்கே நீங்கள் படிக்க... :



ப்போது நான் திருவல்லிக்கேணி இந்து ‌ஹைஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் பால்கனியில் விளையாடும் போது சறுக்கி விழுந்து அடிபட்டு விட்டது. என்னை வீட்டில் கொண்டு வந்து விட்டு சிகிச்சையளித்தார்கள். என்னோடு படித்துக் கொண்டிருந்த டி.கே.பகவதியின் மகன் மணிவண்ணன் என் புத்தக மூட்டையை டி.கே.எஸ.ஸின் மகன் கலைவாணன் மூலம் வீட்டுக்கு அனுப்பியிருந்தான்.

என் உடம்பு தேறியதும் திரு டி.கே.எஸ்ஸின் வீட்டுக்குப் போனேன்- நன்றி தெரிவிக்க. வீட்டிலேயே அவர் ஷு சாக்ஸ் உடன் வெள்ளை வெளேரென்ற வேஷ்டியுடன் படு சுத்தமாக இருந்தார். அதைவிட அவர் லைப்ரரி கனகச்சிதமாக ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. வீடு முழுவதும் கோவிலைப் போல ஒரே ஊதுவத்தி ஸ்மெல். ரொம்ப இனிமையாக இருந்தது.

உடல் சுத்தத்தை விட மன சுத்தம் அந்தக் குடும்பத்தில் அதிகம். அனைவரிடமும் அன்பு, உரிமை, பிரியம் என்பது அந்தக் குடும்பத்தில் இருக்கிறது. இப்போதும் என் மனம் தடுமாறும் நேரங்களில் அண்ணாச்சி ரூமுக்குப் போய், சில நிமிடங்கள் நின்றுவிட்டு மானசீகமாக அவர் ஆசியைப் பெற்று வருவேன்.

சுத்தமான மனிதர் என்று கூறும்போது என் தந்தை திரு.சீனிவாசன் ஞாபகம் வருகிறது. அவருக்கு வயது அறுபத்தேழு. ஐம்பது வருஷமாக ஒரே பெண்டாட்டியுடன் குடும்பம் நடத்துகிறாரே? அத்துடன் வெற்றிலை, பாக்கு, பொடி, சிகரெட், ‘தண்ணி’ எதுவும் கிடையாது அவருக்கு. அதைவிட சுத்தம், பிள்ளைகள் விஷயத்தில் தலையிடாதது. அவர் எப்போதும் காவிக் கலர் கதர் சட்டை வேஷ்டியுடன்தான் இருப்பார். அவரைப் போல இப்போது யாரும் நடக்க முடியாது. சொல்லப் போனால் நான் அவரை இதுவரை இரண்டே தடவை தான் தொட்டுப் பார்த்திருக்கிறேன்!

வீடு சுத்தமாக இருக்கணுமானால் சின்னக் குழந்தைகள் இருக்கக் கூடாது.

மூன்று வயதிலிருந்து எனக்கு ஃபுல் பேண்ட் போட்டுக் கொள்ள ஆசை. வீட்டில் கேட்டால் வாங்கித்தர மாட்டார்கள். ‘‘நீ வளரும் பிள்ளை. முழுக்கால் சட்டை சின்னதாகப் போய்விடும். பெரியவனானதும் தைக்கலாம்’’ என்று சாக்குச் சொல்லி விடுவார்கள்.

இன்று வீட்டில் சூட் போடவே பிடிக்காது. பெரிய பார்ட்டிகள், நிகழ்ச்சிகளுக்கு மட்டும்தான் சூட் போடுவேன். கழுத்தில் டை இறுக்க, வேர்க்க விறுவிறுக்க என்ன சூட் வேண்டிக் கிடக்கிறது என்று சமயத்தில் கோபமாக வரும்.

வீட்டில் எப்போதும் நான் வெறும் டவலுடன்தான் இருப்பேன். அதிலிருக்கும் ஆனந்தம் எதிலும் கிடையாது. எனக்கென்று வீட்டில் வேஷ்டி எதுவும் கிடையாது. லுங்கி உண்டு. என் அப்பா மெட்றால் வரும்போது அவர் வேஷ்டி ஒனறு இரண்டை விட்டுப் போவார். அதைக்கூட லுங்கி மாதிரி இரண்டு பக்கமும் தைத்துத்தான் கட்டிக் கொள்வேன்.

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube