Thursday, October 30, 2014

பதிவர் சந்திப்புகள் இனி தேவையா..?

Posted by பால கணேஷ் Thursday, October 30, 2014
கடந்த இரண்டு வருஷங்களா சென்னையிலயும், இந்த வருஷம் மதுரையிலயும் பதிவர் திருவிழா என்ற பெயரில் ஒரு நாள் நிகழ்வுகள் நடந்து முடிஞ்சாச்சு. எல்லாம் முடிஞ்சு யோசிக்கறப்பத்தான் இதையெல்லாம் நடத்தறதால என்ன பிரயோஜனம் இருக்கு... ஏன் இந்த எழவுக்கு இத்தனை மெனக்கெடணும் அப்படின்னுதான் தோணுது.

வெறும் பதிவர்கள் அறிமுகமாயிட்டு கூடிக் கும்மியடிக்கற நிகழ்வா இல்லாம ஒரு நாள் விழாவா வெச்சு மூத்த பதிவர்களுக்கு ஷீல்டு கொடுத்து மரியாதை பண்ணி, சிறப்பு அழைப்பாளரின் நல்ல ஆலோசனை தரும் பேச்சை அனைவரும் கேட்கணும், கவியரங்கம் நடத்தணும்னு எல்லாம் திட்டமிட்டு புலவர் இராமாநுசம் ஐயா தலைமையில நடத்தினப்ப சில மூத்த பதிவர்கள் தங்களை உரிய மரியாதை(?)யோட அழைக்கலைன்னு பஞ்சாயத்து பண்ணாங்க. எந்த நாட்டாமைங்களும் இங்க இல்லாததால ஒருத்தர் மேல ஒருத்தர் சேத்தை வாரி இறைச்சுக்கிட்டு ஓஞ்சு போனதுதான் மிச்சம்.

ரெண்டாவது வருஷம் நடத்தினப்ப, விழா ஏற்பாட்டுக் குழுவுல இருந்த ஒருத்தரே அங்க தென்பட்ட சில குறைகளை லென்ஸ் வெச்சு தேடிக் கண்டுபிடிச்சு, இதெல்லாம் ஒரு விழாவான்னு மல்லாந்து படுத்துக்கிட்டு எச்சில் துப்பினாரு. அதையும் சகிச்சுக்க வேண்டியதாயிடுச்சு. அப்பவும் பதிவுகள், பின்னூட்டம்னு ஒரே சண்டை, சர்ச்சை மயம்தான்...

இப்ப மூணாவது சந்திப்பை மதுரைல நடத்திட்டு, அதுல தொழில்நுட்ப பதிவர்களை கௌரவிச்சட்டு, அது வெற்றிகரமா நடந்திட்டுதுன்னு நமக்கு நாமே மாலை போட்டுகிட்டு. ஒருத்தன் முதுகை ஒருத்தன் தட்டிக் கொடுத்துக்கறது நிறையப் பேர் கண்ணை உறுத்தியிருக்கு. பேஸ்புக் தோன்றி ட்விட்டர் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த ப்ளாக்கர்ஸான எங்களை, எங்க சந்திப்பை எல்லாம் மதிச்சு நீங்க ஒண்ணும் பண்ணலையேன்னு கொடி புடிச்சுட்டு வர ஆரம்பிச்சுட்டாய்ங்க... அதுக்கு சப்போர்ட் பண்ணி வாதாட அறிவிற் சிறந்த ஒரு சீனியர் பிளாக்கர்ஸ் டீமும் தயாராயி களத்துல இறங்கியாச்சு.

ப்ளாக் அப்படின்னு ஒண்ணு தமிழ்ல பிரபலமாக ஆரம்பிச்ச காலத்துலருந்து எழுதி, இன்னிக்கு ஆயிரத்துக்கும் மேல பதிவுகள் கண்ட துளசி கோபால் டீச்சர் நம்ம சந்திப்புகளுக்கு தவறாம வந்து ஊக்கம் தர்றாங்க. அதுமாதிரி இவங்களும் வந்து கலந்துக்க வேணாம், ஆலோசனைகள் தர வேணாம்... அட்லீஸ்ட் கல்லெறியாமலாவது இருந்து தொலையலாம்ல....? வேணும்னா எங்களை மாதிரி வெரைட்டியான நிகழ்ச்சிகளோட. பெண்களும் கலந்துக்கற மாதிரி ஒரு நிகழ்வை நீங்க நடத்திக் காட்டிட்டு அப்பறம் வந்து பேசுங்கப்பா நியாயம்.  இன்றைய பதிவர்கள் எங்கயும் எல்லாத்து கூடயும் ஒத்துழைக்கத் தயாரானவர்கள்ன்றத நான் பெருமையா சொல்லுவேன்.

தொட்டுத் தொடரும் பிளாக்கர் பாரம்பரியத்துல வருங்கால ப்ளாக்கர் யாராவது சந்திப்பு நடத்திட்டு என் பேரையும் சீனு பேரையும் சொல்லாட்டி எங்களுக்கு வலிக்குமாம். நானும் சீனுவும் என்ன அவங்கவங்க அப்பன் சொத்தை வித்தா நடத்தினோம் இதை எங்களுக்கு வலிக்கறதுக்கு...? ஊர் கூடி இழுத்த தேர் இது. எங்க பேரே வரலைன்னாலும் நாங்க கவலைப்படப் போறதில்ல.. வருங்காலப் பதிவர்கள் எங்களை மறக்கக் கடவார்களாகுக...

இனி சந்திப்பு நடத்தறதா இருந்தா ரிடயர்மெண்ட்ல இருந்துட்டு இன்னிக்கு திடீர்னு கண்ணு முழிச்சுட்டு குதிக்கற இந்த ப்ளாக்கர்ஸ்க்கு சிலைத் திறப்பு விழாவோ, இல்ல படத் திறப்பு விழாவோ நடத்திட்டு அப்பறம் ஏற்பாடு பண்ணுங்கப்பா.  இல்லாட்டி உம்மாச்சி கண்ணக் குத்திடும். என்னையப் பொறுத்தவரை நான் யார் யாரை சந்திக்க விரும்பறேனோ, பர்சனலா போய் சந்திச்சுக்கறேன். நிம்மதியாவது மிஞ்சும். இந்த விழாவுலல்லாம் தலையிடறதா இல்லை. ஆள வுடுங்க சாமிகளா....

எல்லாருக்கும் பொழப்புக்கு ஒரு தொழில் இருக்கு. குடும்பம் இருக்கு. பகுதி நேரத்துல எழுத வந்த எடத்துல பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு, அசிங்கப்பட்டுக்கிட்டு... தேவையா இதெல்லாம். போங்கய்யா.. போய் புள்ள குட்டிங்களப் படிக்க வையுங்க....

பி.கு. : கீழ கருத்துப் பெட்டியில ஆதரிக்கறவங்களும், காறித் துப்புறவங்களும்.... கேரி ஆன். நான் எதுக்கும் பதில் சொல்றதா இல்ல. ஏன்னா நான் சொல்ல வேண்டியத மேல சொல்லிட்டேன். இனி தொடர்ந்து நிறையப் பதிவுகள் எழுதுவேன், நிறையப் பேருக்கு கருத்திடுவேன். பொங்கறவங்க, திட்டறவங்க இந்த ஏரியாவுக்கு வரவேணாம்யா. என்னப் புரிஞ்சுக்கிட்ட ஒரு சிறு நண்பர்கள் குழுவே எனக்கு நிறைவானது. நன்றி.

Monday, October 20, 2014

தீபாவளித் திருநாள் என்கிற தீபஒளித்  திருநாள் வெகு அருகாமையில் வந்துவிட்டது. ஜஸ்ட் 45 மணி நேரங்கள்தான் நமக்கும் தீபாவளிக்கும் இடையில் இப்போது. ஜாதி, மத பேதமில்லாமல் நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்த மகிழ்வான திருவிழாவைக் கொண்டாட கோலாகலமான (அ) பெப்ஸிகலமான ஏற்பாடுகளைச் செய்துவிட்டுக் காத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் என் மகிழ்வான, இதயம் நிறைந்த, இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

சின்ன வயதில் அதிகாலையில் எழுந்து புத்தாடை எப்போது தருவார்கள், பட்டாசு எப்படா வெடிக்கலாம் என்று ஆர்வமாய், வெறியாய் காத்திருந்த தருணங்களும், இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே தீபாவளிக்கான கவுண்ட் டவுனை ஆரம்பித்து உற்சாகமாய்க் காத்திருந்ததும் நினைவில் நிழலாடுகின்றன. அந்த மாணவப் பருவ வாழ்க்கையும், தீபாவளிகளும் மறக்க முடியாதவை.


தீபாவளியைக் கொண்டாடி முடித்த கையோடு நாமெல்லாரும் சந்தித்து மதுரையில் மற்றொரு தீபாவளியைக் கொண்டாட இருக்கிறோம் என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. அதற்கும் தயாராகி விட்டிருப்பீர்கள் என்பதை நான் அறிவேன். 26ம் தேதியன்று நாம் சந்திக்கும் நாளில் நிகழவிருக்கும் நிகழ்வுகளின் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் மாற்றம் இருப்பின் (பெரும்பாலும் இருக்காது) அதுவும் பின்னர் பகிரப்படும்.



இந்த, நம்முடைய இரண்டாவது தீபஒளித் திருநாளையும் சிறப்பிக்க தவறாமல் வந்துடுங்க மக்களே..!

பி.கு.: சென்ற ஞாயிற்றுக்கிழமை என் சரிதாயணம் + நான் இருக்கிறேன் அம்மமா புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற்றது. அது பற்றிய விவரங்களும், புகைப்படங்களும் என் நினைவுக்காக பதிவாக வெளியிட எண்ணியிருந்தேன். தீபாவளி முடிந்ததும் வெளியிடுகிறேன்.

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube