Sunday, April 22, 2018

நினைவுக் குறிப்பிலிருந்து....

Posted by பால கணேஷ் Sunday, April 22, 2018
மாத நாவல்கள் - 1

1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி சானல்களும், கைபேசிகளும் நேரத்தைப் பிடுங்கிக் கொள்ளாத அந்த நாளில் அந்தத் தொடர்கதைகளைப் படித்து பைண்ட் செய்து வீட்டில் வைத்துக் கொள்வது வழக்கம். பின்னர் பதிப்பகங்களின் வெளியீடுகளாக வரும் அந்தக் கதைகளையும் சிலர் வாங்கித் தங்கள் வீட்டில் சேர்த்து வைப்பதுண்டு. ஆனாலும் பதிப்பகப் புத்தகங்கள் விலை அதிகம் என்று இருந்த காரணத்தால் (இன்றைய நம் விலைவாசியில், பதிப்பகப் புத்தகங்களின் தூக்கலான விலைக்கு நாம் பழகிவிட்ட நிலையில் அந்தப் புத்தகங்களின் தொகை நமக்கு அற்பமாகத்தான் தோன்றும்.) பலரால் வாங்க இயலாத நிலை இருந்தது.

அப்படிப் பதிப்பகப் புத்தகங்களை வாங்கி வைத்துக் கொள்ள இயலாதவர்களின் மனக்குறையைப் போக்குவதற்கு அன்றையப் பதிப்பாளர்கள் வழிவகை செய்திருந்தார்கள். பிரபலமான நூல்களை உயர்தரத்தில் வெளியிடும் அதேசமயம், அவற்றை சற்றே தரமிறங்கிய காகிதங்களில் அச்சிட்டு மலிவுப் பதிப்பு என்றும் வெளியிடுவார்கள். புத்தகத்தின் விலையில் ஏறத்தாழ பாதி விலைக்கும் குறைவாகத்தான் இந்த மலிவுப் பதிப்புகள் இருக்கும். நுங்கம்பாக்கம் ’மங்கள நூலகம்’ நிறுவனம் வெளியிட்ட கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’, எஸ்ஏபியின் ‘காதலெனும் தீவினிலே’, ராஜாஜியின் ‘வியாசர் விருந்து’, தியாகராயநகர் அருணா நிலையம் வெளியிடட்ட ‘அகநானூறு’, ‘புறநானூறு’ உள்ளிட்ட பல நூல்களின் மலிவுப் பதிப்புகளை நான் படித்திருக்கிறேன். அவற்றில் சிலவற்றின் பிரதிகள் இன்றும் என்னிடம் உண்டு.

அப்போதுதான் அறிமுகமானது ‘ராணிமுத்து’ மாதநாவல் இதழ். (வருடம் 1967 என்பதாக நினைவு.) சிறந்த படைப்பாளர்களின் புகழ்பெற்ற படைப்புகளைத் துளியும் சுருக்காமல் அப்படியே மாதம் ஒரு நாவலாகத் தருவது என்ற நோக்கத்துடன் துவங்கப்பட்டது. நியூஸ் ப்ரிண்ட் என்கிற சாணித்தாளில்தான் அச்சிடப்படும். விலை ஒரு ரூபாய்தான். அந்தப் புத்தகத்தின் பின் அட்டையில் அடுத்து வரவிருக்கும் நாவல் பற்றிய அறிவிப்பிலேயே தெளிவாகச் சொல்லியிருப்பார்கள். ‘ரூ.5 மதிப்புள்ள இந்த நாவல் உங்களுக்கு ரூ.1க்குக் கிடைக்கும்’, ‘ரூ.3 மதிப்புள்ள இந்த நாவல் உங்களுக்கு ரூ.1 க்குக் கிடைக்கும்’ என்று. பக்க வரையறை கிடையாது. ஒரு புத்தகம் 270 பக்கம் இருக்கும், மற்றொன்று 175 பக்கம் அல்லது 126 பக்கம்கூட இருக்கலாம்.

பேப்பர்களைப் பற்றிக் கவலைப்படாமல் எழுத்தைப் படித்து ரசிக்க விரும்பிய வாசகர்களுக்கு மிகச் சௌகரியமான இதழாக அமைந்தது. நல்ல விற்பனையையும் பெற்றது. முதல் இதழாக அகிலன் எழுதிய ‘பொன்மலர்’ நாவலை வெளியிட்டார்கள். இரண்டாவதாக அறிஞர் அண்ணா எழுதிய ‘பார்வதி பி.ஏ.’ வெளியானது. தொடர்ந்து, பானுமதி ராமகிருஷ்ணாவின் ‘மாமியார்’, மு.வ. எழுதிய ‘அந்த நாள்’, கலைஞர் கருணாநிதியின் ‘வெள்ளிக்கிழமை’, ஜெகசிற்பியனின் ‘நந்திவர்மன் காதலி’, சாண்டில்யனின் ‘ஜீவபூமி’, மாயாவியின் ‘வாடாமலர்’ லக்ஷ்மியின் ‘காஞ்சனையின் கனவு’, ரா.கி.ரங்கராஜனின் ‘ஒரே வழி’, தமிழ்வாணனின் ‘பாலைவனத்தில் பத்து நாட்கள்’ ...இப்படி கணக்கற்ற க்ளாஸிக் நாவல்கள் எளிமையான விலையில் கிடைத்தன.

பின்னாளில் க்ளாஸிக்குகளைக் கைவிட்டு புதிதாக எழுத்தாளர்களிடம் நாவல் வாங்கி வெளியிடப்பட்டது ‘ராணிமுத்து’வில். அப்போதும் 100க்குக் குறையாத பக்கங்கள் கொண்டதாக, எழுதுபவர்களுக்கு நிறைய ஸ்பேஸ் தரும் இதழாகவே இருந்தது. இப்போதைய ‘ராணிமுத்து’தான் அளவில் இளைத்து இன்றைய ‘ஜீரோ சைஸ்’ பெண்களைப் போல மிக ஒல்லியாகக் காட்சி தருகிறது.

தவிர ‘ராணிமுத்து’வுக்கு ஓராண்டு சந்தா கட்டினால் ஏதாவது ஒரு க்ளாஸிக்கை இலவசமாக அனுப்பித் தருவார்கள் என்றொரு ஸ்கீமும் இருந்தது. இன்னொரு சிறப்பம்சம், ஆரம்பம் முதலே ஓவியர் ஜெயராஜின் கை வண்ணத்தில் கலர்ஃபுல்லான அட்டைப்படங்களும், உள்ளே நான்கைந்து கறுப்பு வெள்ளைப் படங்களும் தாங்கித்தான் வெளிவரும். இப்போது அட்டைப்படம் திரை நட்சத்திரங்களைத் தாங்கி வந்தாலும், இன்றளவும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, உள் படங்கள் அதே ‘ஜெ’தான் தொடர்ந்து வரைந்து கொண்டிருக்கிறார் என்பது ‘ஜே’ போட்டுப் பாராட்ட வேண்டிய விஷயம். சாண்டில்யனின் ‘ஜீவபூமி’ அந்நாளில் திரைப்படமாக்கத் திட்டமிருந்ததால் அட்டைப்பட ஓவியத்தில் நடிகர்திலகம், பத்மியினியின் சாயலில் சாண்டில்யனின் நாயக, நாயகியை அவர் வரைந்திருந்தது இன்றும் நினைவில் பசுமையாக.

என் கல்லூரி நாட்களில் பழைய புத்தகக் கடைகளில் வாங்கித்தான் பல க்ளாசிக் நாவல்களை, குறிப்பாக சாண்டில்யனின் நாவல்களைப் படித்து ரசித்தேன். காலப் போக்கில் இரவல் வாங்கியவர்களும், வெள்ளமும் சாப்பிட்டது போக மிகச்சில பிரதிகளே நினைவுக்காக இப்போது என்னிடம் தங்கியிருக்கின்றன.

ராணிமுத்துவைத் தொடர்ந்து அதே காலகட்டத்தில் வேறு சில மாத நாவல்களும் துவங்கப்பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை பல உண்டு. 

ட்யூரோசெல் பேட்டரி விளம்பரத்தில் வரும் முயல்களைப் போல அந்த மாதநாவல்களெல்லாம் காலப்போக்கில் நின்றுவிட்டன என்றாலும், ஜெயிக்கிற முயலாக ராணிமுத்து இன்றும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த மற்ற மாதநாவல்களைப் பற்றி...


சிறிது இடைவெளி விட்டு... தொடரலாமா என்பதை நீங்கள் சொல்லுங்கள்.

Wednesday, April 18, 2018

பேரா சார் முக்கியம்..?

Posted by பால கணேஷ் Wednesday, April 18, 2018

பேருல என்ன சார் இருக்கு..? எல்லாம் எழுதி வெச்சபடிதான் நடக்கும்” என்கிற நம்பிக்கைவாதிகளும் சரி, “பேர்ல ஒண்ணுமே இல்ல, எல்லாம் நம்ம திறமைலயும் செயல்பாட்டுலயும்தான் இருக்கு“ என்கிற தன்னம்பிக்கை வாதிகளும் சரி... பெயரில்தான் பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

ஒரு நண்பர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்ததாகத் தகவல் வந்தது. பார்க்கச் சென்றேன். தலையிலும் கையிலும் பெரிய கட்டுக்களோடு படுத்திருந்தார். “என்னய்யா வரதராஜன், எப்டி இப்டி அடிபட்டுது..?” என்றேன். “என் பேராலதான்யா இவ்ளவு பெரிய அடி...” என்றார்.

பேராலயா..? என்னய்யா சொல்ற..?”

அதை ஏன்யா கேக்கற..?” என்று அவர் இழுத்தார்.

சரி, கேக்கலை விடு”

அட, கேளுய்யான்னா...” என்றார் எரிச்சலாக. “நேத்து ஈவினிங் வாக் வந்துட்டிருந்தேன். கைல மொபைல வெச்சுகிட்டு ஃபேஸ்புக்க ஓபன் பண்ணிகிட்டே என் தெருவுல நொழைஞ்சப்ப எதிர்வீட்டு பரந்தாமன் எதிர்ல வந்தான். திடீர்னு என்னைப் பார்த்து, ‘எருமை வரது’ அப்டின்னு கத்தினான். கடுப்பாய்ட்டேன் நான். ‘என்னய்யா திமிரா.? மரியாதையாப் பேசு’ அப்டின்னேன் கோபத்தோட. அவனானா கொஞ்சமும் அசராம கைய வேற நீட்டி, “யோவ், எருமை வரது”ங்கறான் மறுபடி.

இன்னொரு தடவை வாயத் தொறந்த, தொலைச்சுடுவேன்’ அப்டின்னு விரல் காட்டி வார்ன் பண்ணேன். அவ்ளவுதான்யா தெரியும். திடீர்னு பின்னால மலை மோதின மாதிரி ஒரு பீலிங். நாலடி முன்னால பறந்து அங்கருந்த ஒரு ஆட்டோல இடிச்சுகிட்டு கீழ விழறேன். தலை தரைல மோதி ரத்தம் வருது. நிமிர்ந்து பாத்தா, ஒரு எருமை என்னைத்தாண்டி ஓடுது. அந்தப் படுபாவியானா மெதுவா பக்கத்துல வந்து, ‘எருமை வரதுன்னு நான்தான் கத்தினேனேய்யா. இப்டியா கவனிக்காம எருமை மாதிரியே வருவ.?’ அப்டிங்கறான். வேற பேர் வெச்சுக்கலாமான்னு யோசனை பண்ணிட்டிருக்கேன் இப்போ.” என்று பாண்டியராஜன் ஸ்பெஷல் விழி விழித்தபடி அவர் கூற என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

ண்பரொருவரின் (ஒரு நண்பர் இல்லை, இவர் வேறு) அனுபவம் வேறுவிதமானது. பைக்கில் வந்த இவரை ஒரு ட்ராபிக் கான்ஸ்டபிள் வழிமறித்திருக்கிறார். டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் எல்லாம் சோதித்துவிட்டு “இன்சூரன்ஸ் புதுப்பிக்கலை. ஃபைன் போடணும்” என்றிருக்கிறார். “அடாடா, கவனிக்கலை சார். நாளைக்கே ரின்யூ பண்ணிடறேன். ஸாரி சார்..” என்று இவர் விதவிதமாகக் கெஞ்சியும் பிரயோஜனம் இல்லை. பைன் கட்டியே தீரணும் என்று அடம்பிடித்த கான்ஸ், ரசீது புக்கை எடுத்து வண்டி நம்பர் எழுதிவிட்டு, பேரைச் சொல்லுங்க என்றிருக்கிறார். இவர் சொன்னார் : ‘ஸ்தலசயனப் பெருமாள்’.

என்னது..? என்ன பேர் சொன்னீங்க..?”

ஸ்தலசயனப் பெருமாள்..”

அவர் தமிழில் எழுதிப் பார்த்திருக்கிறார். ஆங்கிலத்தில் எழுத முயன்றிருக்கிறார். இந்தப் பெயரை எப்படி எழுதுவதென்று தெரியவில்லை. பேய்விழி விழித்தபடி, “சரி, சரி, கிளம்புங்க. உடனே சரி ரின்யூ பண்ணிடுங்க. போங்க.” என்று விட்டு விட்டாராம். நண்பரொருவர் சொல்லிச் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார் அடுத்த ஒரு வாரத்துக்கு.

சிலபேர் தங்கள் பிள்ளைகளுக்கு மாடர்னாகப் பெயர் வைப்பதாக எண்ணிக் கொண்டு, தாங்கள் அறியாமலேயே விசித்திரமான பெயர்களை வைப்பதும் நடப்பதுண்டு. உறவினர் வீட்டு விசேஷம் ஒன்றிற்குச் சென்றிருந்தபோது, அவரின் பெயரன் துறுதுறுவென்று ஒரு இடத்தில் நிற்காமல் ஓடியாடிக் கொண்டிருந்தான். “பெயரென்ன?” என்று கேட்டதற்கு “ரேவந்த்” என்றார். “இப்டில்லாமா பேரு இருக்கு..?” என்று விழித்தேன். “இது நார்த்சைட்ல வெக்கப்படற பேர்தான்யா. நல்லாருக்குல்ல சொல்றதுக்கு..” என்றார். தலையாட்டிவிட்டு வந்த நான், பெயரகராதியில் இப்படி ஒரு பெயர் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தபோது இருந்தது. பெயருக்கான விளக்கம் இப்படி.... ‘ரேவந்த் - குதிரைகளைப் பராமரிப்பவன்’ ஹா.. ஹா.. ஹா...

இதேபோல மற்றொரு சந்தர்ப்பத்தில் ‘தேனுகா’ என்ற பெயரைக் கேள்விப்பட்டு நான் (வழக்கம்போல்) அகராதியைக் கேட்டதில் வந்த பதிலானது... ’தேனுகா - மாட்டுமந்தை’. , என் கடவுளே, அர்த்தம் புரிந்தால் இப்படிப் பெயர் வைப்பார்களோ... கலைவாணி என்று பெற்றோரால் ரசனையுடன் வைக்கப்பட்ட பெயரைப் பெரும்பாலோர் உச்சரிப்பு வழக்கில் களவாணி என்றே அழைப்பதால் பெயரையே கெஜட்டில் மாற்றிக் கொண்ட பெண்ணையும் நான் சந்தித்திருக்கிறேன்.

ஆக, கயல், யாழிசை போன்ற இனிய தமிழ்ப் பெயர்களும், ராமன், கிருஷ்ணன், சரஸ்வதி போன்ற தெய்வப் பெயர்களுமே வைப்பதற்கு உகந்தவை. எந்தக் குழப்பமும் பிரச்சினையும் வராதவை என்பதை அறிந்து தான் நம் முந்தைய தலைமுறை அத்தகைய பெயர்களைச் சூட்டியிருக்கிறது.

நம் வாத்யார் எம்ஜிஆர் கூட தன் படங்களில் கதாநாயகர்களுக்கு முருகன், ராமு, கண்ணன் என்றெல்லாம் எளிய பெயர் வைத்ததற்குக் காரணமும் அதுவே. ஆதலினால் உலகத்தீரே... உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குச் சுத்தத் தமிழ்ப் பெயரையே வைப்பீராக.

(ஹப்பாடா, சந்தடிசாக்குல ஒரு மெசேஜும் சொல்லியாச்சுப்பா. நல்ல எழுத்தாளர்ன்னுடுவாங்க. ஹி... ஹி.. ஹி...)

-‘சிருஷ்டி’ இணைய இதழில் வெளியானது.
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube