Showing posts with label தொடர் கட்டுரை. Show all posts
Showing posts with label தொடர் கட்டுரை. Show all posts

Tuesday, February 21, 2012

நடை வண்டிகள் - 5

Posted by பால கணேஷ் Tuesday, February 21, 2012
சுபாவும், நானும் - 2
 
சுபா எனக்குப் பெரிய பொறுப்பு கொடுக்கப் போவதாகச் சொன்னதைச் சொல்லியிருந்தேன் அல்லவா? அது...

சுபா எழுதிய சிறுகதைகள் 350க்கும் மேல் எண்ணிக்கையில் இருந்தன. அவற்‌றையெல்லாம் ‌டைப் செய்து, ஸாஃப்ட் காப்பியாக கணிப் பொறியில் சேமித்து வைத்துக கொள்ள விரும்பி, அந்தப் பணியைச் செய்துதர இயலுமா என்று என்னிடம் கேட்டார்கள். அது அவசரமாக முடிக்க வேண்டிய பணியல்ல என்பதை விளக்கி, அதற்காக ஒரு குறுந்தொகையையும் (இலக்கிய புத்தகம் அல்ல... Small Amount எனப் பொருள் கொள்க) தருவதாகச் சொன்னார்கள். என்னடா இது... Sugarcane ஈட்டிங்குக்கு Wages கூடக் கிடைக்கிறதே என்று வியந்து உடனே சம்மதித்தேன். ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை இருந்தது.

அப்போது என்னிடம் சொந்தமாகக் கம்ப்யூட்டர் இல்லை. அப்போது திருப்பூரின் தினமலர் அலுவலகத்தில் நான் இருந்தேன். கரூரில் இருக்கும் என் நண்பன் ஸ்ரீதரனிடம் சொந்தமாக கம்ப்யூட்டர் இருந்தது. ஆகவே அலுவலகத்தில் (முடிந்தால்) கொஞ்‌சமும், அவனையும் துணை சேர்த்துக் கொண்டு கரூரில் கொஞ்சமாக வேலையை முடித்து விடலாம் என்று திட்டமிட்டு சுபாவிடம் சம்மதம் சொன்னேன்.
நா....னே எடுத்த படம்!

மறுமுறை சென்னை வந்தபோது ஸ்ரீதரனையும் உ‌டனழைத்துச் சென்று அறிமுகம் செய்வித்தேன். முதல் 50 சிறுகதைகளைப் பெற்றுக் கொண்டோம். சுபா தமிழில் டைப் செய்ய எது நல்ல சாஃப்ட்வேர் என்று கேட்க, நான் ‘ஸ்ரீலிபி’ என்ற சாஃப்ட்வேரை சஜஸ்ட் செய்தேன். அதன் கீபோர்ட் லேஅவுட் கிடைக்குமா என்று சுரேஷ் ஸார் கேட்க, ஊர் சென்று அனுப்புவதாகச் சொன்னேன்.

சொன்னபடியே அனுப்பவும் செய்தேன். (சுரேஷ் ஸார் நான் அனுப்பியதை வைத்து வேகமாக டைப் செய்யப் பழகிக் கொண்டார். பாலா ஸார் ‘பொன்மொழி’ என்ற சாஃப்ட்வேரில் ட்ரான்ஸ்லிட்டரேஷன் முறையில் டைப செய்யப் பழகிக் கொண்டார். இருவரும் தங்கள் படைப்புகளை கணிப்பொறியில்தான் உருவாக்குகிறார்கள்.) ஸ்ரீதரன் பி.கே.பி. என்கிற பட்டுககோட்டை பிரபாகரின் தீவிர விசிறி. அவரை சந்திக்க விரும்புவதாக சுபாவிடம் அவன் கேட்க, போனில் அனுமதி வாங்கி, போய்ப் பார்க்கச் சொன்னார்கள். அவனுடன் சென்று பி.கே.பி.யை முதல் முறையாக சந்தித்தேன். (அது பற்றி விரிவாக அடுத்து வரும் ‘பி.கே.பி.யும் நானும்’ எபிஸோடில் சொல்கிறேன்)

முதல் 50 கதைகளை அடித்து முடித்ததும் ஃப்ளாப்பியில் காப்பி செய்து கொண்டு சென்னை வந்து சுபாவின் கம்ப்யூட்டரில் காப்பி செய்யப் பார்த்தால்... ப்ளாப்பி வேலை செய்யவில்லை. சி.டி.க்களும், டிவிடிக்களும், ஈமெயிலும் இவ்வளவு வசதிகளை அச்சமயம் தரவில்லையே... தரவில்லையே! வேறு வழியின்றி அடுத்த 50 சிறுகதைகளைப் பெற்றுக் கொண்டு அடுத்த முறை வரும் போது அவற்றைத் தருவதாகச் சொல்லி வந்தேன். அதன்பின் இரண்டு அல்லது மூன்று ப்ளாப்பிகளில் பேக்-அப் எடுத்துக் கொண்டு சென்று காப்பி செய்தோம் நாங்கள்.

இரண்டாவது செட்டை முடித்து விட்டு சுபாவைச் சந்திப்பதற்கு முன்னான இடைக் காலத்தில் நான் ஒரு சிறுகதை எழுதி அப்போது வெளியாகிக் கொண்டிருந்த பல மாத நாவல் இதழ்களில் ஒன்றுக்கு அனுப்பி வைக்க, அது பிரசுரமாகியிருந்தது. அம்புலிமாமா கதைகளில் வருவது போல நீதிக்கதை பாணியில் சமூகக் கதையின் முடிவில் நீதி சொல்லி முடித்திருந்தேன். (முதல் கதையல்லவா...) பெருமையாக அந்த இதழ் வந்த பிரதியைக் கையில் எடுத்துக் கொண்டு சுபாவைச் சந்தித்து, அதைப் படித்து கருத்துச் சொல்லும்படி கூறி கொடுத்து விட்டு வந்தேன். கதை வந்த அந்த இதழின் பிரதியை பல ஊர்கள், பல வீடுகள் மாறியதில் தொலைத்து விட்டேன். இல்லாவிடில் உங்கள் பார்வைக்கு வைத்திருப்பேன்.

நம் வீட்டுக் குழந்தை கிறுக்கலாக ஓவியம் வரைந்தாலும் ‘நல்லா வரையிறயே...’ என்று பாராட்டுவோமல்லவா? அதுபோல, சுபாவும் புதிதாக எழுதும் ஆர்வத்துடனிருக்கும் என் மனம் நோகக் கூடாதே என்று மென்மையான வார்த்தைகளால் கதையைப் பாராட்டி விட்டு, எழுத எழுதத்தான் எழுத்து வசப்படும் என்கிற ரீதியில் முடித்து கடிதமிட்டிருந்தார்கள். கொள்ளை கொள்ளையாய் மகிழ்ந்து போனேன். உங்கள் பார்வைக்கு இங்கே...

இச்சமயத்தில் திருநெல்வேலிக்கு மாற்றல் கிடைக்க அங்கிருந்து கடைசி இரண்டு செட் சிறுகதைகளை டைப் செய்து ப்ரொஜக்டை முடித்து சுபாவிடம் கொடுத்தேன். இப்போது சுபாவின் சிறுகதைகள் அனைத்தும் பூம்புகார் பதிப்பகம் மூன்று (பெரும்) தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறது. இப்படி நிறையத் தடவைகள் சந்தித்ததில் என்னைப் பற்றி சுபாவுக்கும், சுபாவைப் பற்றி எனக்கும் நல்ல புரிந்துணர்தல் ஏற்பட்டிருந்தது. இந்த ப்ராஜெக்ட்டை முடித்தபின் ஒரு வருட காலம் திருநெல்வேலியிருந்து சுபாவுக்கும் எனக்கும் கடிதப் பரிமாறல்கள், அவ்வப்போது போனில் பேசுவது மட்டுமே தொடர்பாக இருந்தது.

அடுத்த ஆண்டின் துவக்கத்தில் தினமலரில் இருந்து நான் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தினமலரிலிருந்து வெளியேறியதும் இனி சென்னையில்தான் மிச்ச வாழ்க்கை என்று (நானாக) முடிவு செய்து கொண்டு, ஒரு கம்ப்யூட்டர், ஸ்கேனர், லேஸர் ப்ரிண்டர் எல்லாம் வாங்கிக் கொண்டு சென்னையில் ஒரு டிடிபி சென்டர் ஆரம்பித்து பெரிய ஆளாகி விடலாம் என்ற எண்ணத்துடன் சென்னைக்கு இடம் பெயர்ந்தேன். சென்னை என்னை ‘போடா வெண்ணை’ என்றது! (பாட்டெல்லாம் கூடப் பாடிப் பார்த்தேன்... விக்ரமன் படத்தில் வருவது போல் வளர்ந்துவிட முடியவில்லை என்பது நிதர்சனம்! பஞ்சப்பாட்டுத்தான் பாட முடிந்தது.)

இப்படி இங்கு வந்து பிழைப்புக்குத் தாளம் போட்ட காலச்சதுரத்தில் ஒருமுறை சென்னையை விட்டு மீண்டும் மதுரைக்கே ‌போய்விடலாமா என்ற வெறுப்பான மனநிலையில் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பாலா ஸாரின் வீட்டுக்குச் சென்றேன். அப்போது அவர் செய்த உதவியினாலும், பின்னர் சுபாவின் ஆதரவினாலும் சென்னையில் என் வாழ்க்கை டேக் ஆஃப் ஆனது. அதைப் பற்றி...

-தொடர்கிறேன்..!

Friday, February 10, 2012

நடை வண்டிகள் - 3

Posted by பால கணேஷ் Friday, February 10, 2012
ராஜேஷ்குமாரும் நானும் - 3

கோவை தினமலரிலிருந்து நெல்லைக்கு மாற்றலாகிப் போனதும் அங்கே ‘கதை மலர்’ என்று வந்து கொண்டிருந்த வார இணைப்பிதழுக்கு பொறுப்பு கொடுத்தார்கள். அந்த இதழுக்காக ஆர்.கே.வுக்கு போன் செய்து, ‘ரத்தினங்கள் போல ஒன்பது முத்திரைச் சிறுகதைகள் (முன்பே எழுதியதாயினும்) தாருங்கள்’ என்று கேட்டேன். அவருக்கு அப்போது அவகாசமில்லாததால் என்னையே செலக்ட் செய்து ‌போட்டுக் கொள்ள அனுமதி கொடுத்தார்.

பின்னர் கோவை சென்று (வழக்கம்போல்) அவரைச் சந்தித்த போது அந்தச் சிறுகதைகளில் சில அவருக்கே நினைவில்லை என்றும் எங்கிருந்து எடுத்தேன் என்றும் கேட்டார். அவரது சிறு‌கதைகளை பைண்ட் செய்து தொகுப்புகளாக வைத்திருப்பதைச் சொன்னேன். மறுமுறை சென்றபோது எடுத்துச் சென்று கொடுத்தேன். மிகமகிழ்ந்து போய், ‘‘ஒரு எழுத்தாளனுக்கு இதைவிடப் பெரிய பொக்கிஷம் கிடையாது கணேஷ்’’ என்று சொல்லி, மகாத்மா எழுதிய ‘சத்தியசோதனை’ நூலை ஆட்டோகிராஃப் போட்டு எனக்கு அன்பளித்தார். என்னுடைய புத்தகப் பொக்கிஷங்களில் அதுவும் ஒன்று இன்றுவரை.

க்ளோனிங் பற்றிய தகவல்களைக் கொடுத்தபோது, ‘‘இந்த மாதிரி வாசகர்கள் தகவல்கள் தந்தால் அவர்கள் பேரை என் கடிதத்தில் சொல்லிவிடுவது வழக்கம். உங்க பேரைப் போட்டுடறேன்’’ என்றார். ‘‘தினமலருக்குப் பரந்த மனம் கிடையாது. அவர்கள் பேரைச் சொல்லிக் கொண்டுதான் நான் உங்களிடம் அறிமுகமாகி நட்பானது போல நினைத்து நடந்து கொள்வார்கள். அதனால் வேண்டாம்’’ என்று சொல்லிவிட்டேன்.

பின்னாளில்  க்ரைம் நாவல் ஸ்பெஷல்’ என்று ஜி.அசோகன் அவர்கள் ராஜேஷ்குமாரின் தொடர்கதைகளை வெளியிட ஆரம்பித்தார். பல நாவல்களை கத்திரி வைக்காமல் வெளியிடுவார். சில நாவல்களில் அவரது கத்திரி விளையாடி விடும். (ஆனால் எங்கு கத்திரி வைக்கிறார் என்பது புதிதாய் படிப்பவர்களுக்குத் தெரியவே தெரியாது. அப்படி ஒரு திறமையான எடிட்டர் அவர்). நான் ராஜேஷ்குமாரிடம் நேயர் விருப்பம் மாதிரி எனக்குப் பிடித்த அவரது தொடர்களையெல்லாம் சொல்லி வெளியிடச் சொல்வேன். இந்த அன்புத் தொல்லையைப் பற்றி அவர் தன் கடிதத்தில் வாசகர்களுக்கு எழுதிவிட, தினமலரில் (படிக்கும் பழக்கம் வைத்திருந்த மிகச் சிலரிடம்) என் மதிப்பு ‘கும்!’

தன்பின் வந்த காலங்களில் அவர் எக்கச்சக்கமாக நாவல் எழுதும் கமிட்மெண்ட்களைக் குறைத்துக் கொண்டு, அளவோடு எழுத ஆரம்பி்த்தார். க்ரைம் நாவல் தவிர வேறு ஏதாவது ஒரு மாத நாவல் மட்டும் எழுதலாம் என்று முடிவெடுத்து அவர் செயல்படுத்த, அவரிடம் நாவல் கேட்டுப் பெற முடியாத மாத நாவல் பதிப்பாளர் ஒருவர் ‘‘ராஜேஷ்குமாருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது’’ என்று செய்தி வெளியிட்ட கொடுமையும் நடந்தது. பின்னொரு சமயம் கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை நன்றாக எழுதுகிறார் என்பதால் ராஜேஷ்குமார் பத்திரிகை உலகிற்கு அறிமுகப்படுத்த, சென்னையில் வேறு சில பத்திரிகைகளில் வாய்ப்புக் கேட்டுச் சென்ற அவர், ‘‘ராஜேஷ்குமாருக்கே கதை எழுத ஐடியாக்கள் எல்லாம் நான்தான் கொடுக்கிறேன்’’ என்றெல்லாம் சொல்லிவிட, அந்த பத்திரிகை நண்பர்கள் ரா.கு.விடம் அதைத் தெரிவித்தனர். ஒருமுறை இவரது க்ரைம் நாவலின் கருவைச் சுட்டு ஒரு திரைப்படமே வெளிவந்தது.

இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் அமைதி காத்துவிடுவது அவரது வழக்கம். அதைப் பற்றிக் கேட்டதற்கு, ‘‘அவதூறாக அவர் பத்திரிகையில் எழுதினால் எழுதிட்டுப் போகட்டும். வாசகர்களுக்கு என்னைப் புரியும்’’ என்றும், ‘‘யார் எழுத்து ஒரிஜினல்ங்கறது காலப் போக்குல நிலைச்சுடும். விடுங்க கணேஷ்.’’ என்றும் சொன்னார். (அவர் சொன்னது போல அந்த ‘டூப்’ எழுத்தாளர் இன்று எழுத்துலகிலேயே இல்லை. க்ரைம்கதை மன்னனோ இன்றும் வெற்றி வலம் வருகிறார்).  ‘‘என் கதையைச் சுட்டு படம் எடுத்து விட்டார்கள் என்று வழக்குப் போட்டால் வாய்தாவாக வாங்கி பல வருடம் போராடி, கடைசியில் ‘இது ராஜேஷ்குமாரின் கதை என்பதற்கு சாட்சி இல்லை. ராஜேஷ்குமாரை கோர்ட் கண்டிக்கிறது’ என்பார்கள். இதற்காக அலையும் நேரத்தில் நான் உருப்படியாக பல விஷயங்கள் செய்யலாம்.’’ என்றார்.

ராஜேஷ்குமாருடன் ஒரு சமயம் பேசிக் கொண்டிருந்தபோது ஆதங்கமாக ஒரு விஷயம் சொன்னார். அவரிடம் அவர் எழுதிய நாவல்களை இரவல் வாங்கிச் சென்ற எவரும் திருப்பிக் கொடுத்ததே இல்லை என்பதே அது. எனக்கும் இது விஷயத்தில் பெரிய மனக்குமுறல்கள் இருந்ததை அவரிடம் கொட்டித் தீர்த்தேன். (பார்க்க: என் பதிவு புத்தகங்களை நேசிப்பவரா நீங்கள்?) அவரிடம் இல்லாத பல நாவல்களை அவர் சொல்ல, என் கலெக்ஷனில் இருந்தவற்றையெல்லாம் அவருக்குக் கொடுத்தேன்.

‘அவரது மகன்களின் திருமணங்களுக்குச் சென்று வாழ்த்தியதும், அவருடனிருந்ததும் மறக்க இயலாத இனிய அனுபவம். அவர் பேரனைப் பார்த்துவிட்ட காலத்தில் நான் சென்னைக்கு வந்து ‘கல்யாணமாலை’ இதழில் லேஅவுட் ஆர்ட்டிஸ்டாக இருந்தேன். பேரனைப் பார்க்க சென்னை வந்த அவரிடம் பேட்டி தரும்படி கேட்டேன்.விரிவாகப் பேசினார் - மூன்று இதழ்களில் வெளியிடும் அளவுக்கு. (கதைகளில் ஏகப்பட்ட கொலைகளைச் செய்துவிட்ட இவருக்கு ரத்தத்தைப் பார்த்தால் மயக்கமே வந்து விடும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?) இன்றும் எப்போது வேண்டுமானாலும் செல்போனில் அழைத்தால் மனம் விட்டு நிறைய நேரம் பேசுவார்.

வ்வளவு புகழ் அடைந்தாலும் சிறிதளவும் கர்வம் இல்லாமல், பழகும் தன்மை மாறாமல் 1996ல் பார்த்ததைப் போலத்தான் இப்போதும் அவரைப் பார்க்கிறேன். அவரிடமிருந்து நான் எடுத்துக் கொண்ட விஷயம் இந்த எளிமையும், எப்போதும் இன்சொற்கள் பேசுவதும்தான்!
-‘ராஜேஷ்குமாரும் நானும்’ நிறைவடைய
‘சுபாவும் நானும்’ தொடங்குகிறேன்....

==========================================================

ண்பர் ‘வசந்த மண்டபம்’ மகேந்திரன் என்னை புத்தாண்டுத் தீர்மானங்களைப் பற்றி தொடர் பதிவு எழுத அழைப்பு விடுத்திருந்தார். ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டுத் தீர்மானங்கள் எடுத்து எவையும் நிறைவேறும் வழியாக இல்லாததால் இவ்வாண்டு நான் எடுத்த ஒரே புத்தாண்டுத் தீர்மானம், ‘இனி புத்தாண்டுத் தீர்மானங்கள் எதுவும் எடுப்பதில்லை’ என்பதே. அதனால் என்னால் தொடர இயலவில்லை. மன்னித்துவிடுங்கள் மகேந்திரன்! (அட, நாவல் தலைப்பு மாதிரி இல்லை..?)

Sunday, February 5, 2012

நடை வண்டிகள் - 2

Posted by பால கணேஷ் Sunday, February 05, 2012
ராஜேஷ்குமாரும் நானும் - 2

கோவை தினமலரில் நான் கணிப்பொறிப் பிரிவில் பணியில் சேர்ந்தபோது அங்கு வடிவமைப்புப் பிரிவில் வேலை செய்து கொண்டிருந்த விஜயன் எனக்கு நெருங்கிய நண்பனானான். என்னைவிட வயதில் சிறியவனாய் அவன் இருந்தது எந்த விதத்திலும் நட்புக்குத் தடையாக இருக்கவில்லை. கோவையில் எங்கே சுற்றுவதென்றாலும் அவன் இல்லாமல் தனியே செல்வதில்லை. அத்தனை நெருங்கிய நட்பு எங்களுடையது.

கல்யாணம் முடிந்து ஓராண்டு ஆகியிருந்த நிலையில் நண்பர் ராஜேஷ்குமார் என்னிடம் மூன்று சமயங்களில் உதவி கேட்டார். (இதைப் பற்றி இப்போது நான் தற்பெருமை அடித்துக் கொள்வதற்காகச் சொல்லவில்லை. என் மனைவிக்கு என்னுடன் சண்டை ஏற்பட்ட காரணத்தைச் சொல்வதற்காகத்தான் விரிவாகச் சொல்கிறேன்.)

ருநாள் இரவு என் அலுவலகத்துக்குப் போன் செய்து, ‘‘க்ளோனிங்கை அடிப்படையா வெச்சு ஒரு நாவல் எழுதப்போறேன் கணேஷ். அதுசம்பந்தப்பட்ட தகவல்கள் நிறைய எனக்குத் தேவைப்படுது. உங்களுக்கு அது பத்தித் தெரியுமா?’’ என்றார். அந்த சப்ஜெக்டில் எனக்கிருந்த ஆர்வத்தால் ஆங்கில, தமிழ் நாளிதழ்களிலிருந்து எடுத்த கட்டிங்குகளையும், சுஜாதா விரிவாக எழுதிய ஒரு கட்டுரையும், நிறையப் படங்களுமாக ஒரு ஃபைலே தயாரித்து வைத்திருந்தேன்.

‘‘என் கிட்ட நிறைய டீடெய்ல்ஸ் இருக்கு ஸார். நாளைக்கு காலையில கொண்டு வந்து தர்றேன்.’’ என்றேன். (தினமலர் நாளிதழ் காலை பேப்பர் என்பதால் செய்திப் பிரிவு, வடிவமைப்புப் பிரிவு, அச்சுப் பிரிவு அனைவரும் நைட் ஷிப்டில்தான் வேலை செய்ய வேண்டியிருக்கும்- மாலை ஆறிலிருந்து இரவு இரண்டு மணி வரை.)

மறுதினம் காலையில் விஜயனையும் உடனழைத்துக் கொண்டு அவரைச் சந்தித்து அவற்றைத் தந்தேன். பெட்டிச் செய்திகள் எல்லாம் சேர்த்து விறுவிறுவென்று எழுதி அந்த மாத க்ரைம் நாவலை அமர்க்களப்படுத்தினார்.

பின்னொரு சமயத்தில் ‘‘நியூயார்க்ல நடக்கற மாதிரி ஒரு கதை எழுதப் போறேன். அந்த நாட்டைப் பத்தியும், அங்குள்ள வழிகள், புகழ் பெற்ற விஷயங்கள் பத்தின தகவல்கள் தேவைப்படுது. ஏதாவது கிடைக்குமா?’’ என்றார். கோவை மாவட்ட நூலகத்தில் புத்தகங்களை ரெஃபர் செய்து, கொஞ்சம் எழுதியும், கொஞ்சம் ஜெராக்ஸ் செய்தும் கிடைத்தவற்றைக் கொடுத்தேன்.

மூன்றாவது சந்தர்ப்பத்தில் அவர் ஒரு விஷயம் கேட்டபோதுதான் என் மனைவிக்கு கோபம் ஏற்பட்டது. அவரை நானும் விஜயனும் சந்திக்கச் சென்றிருந்த ஒரு சமயம், ‘‘பாக்யா இதழ்ல சமீபத்துல நான் எழுதி முடிச்ச தொடர்கதைல ரெண்டு சாப்டர் என்கிட்ட மிஸ்ஸிங். பப்ளிகேஷனுககு கொடுக்கறதுக்கு தேவைப்படுது. உங்ககிட்ட இருந்தாக் கொடுங்களேன்...’’ என்று கேட்டார். நான் பாக்யா வாங்குவதில்லை என்பதை அவரிடம் சொல்லி, தேடித் தருவதாகச் சொன்னேன். கோவையில் பழைய புத்தகக் கடைகளில் அலைந்து திரிந்து அந்த இரண்டு இதழ்களைப் பிடித்து விட்டேன். உடனிருந்த விஜயன்கூட இதற்காக என்னைக் கேலி செய்தான்.

இந்த விஷயங்களையெல்லாம் கவனித்துக கொண்டிருந்த என் மனைவிக்குக் கோபம வந்து விட்டது. ‘‘நைட் டூட்டி பாத்துட்டு வந்து பகல்ல தூங்காம இப்படி அலைஞ்சிட்டிருந்தா உடம்பு என்னத்துக்கு ஆறது? அவருக்கு எத்தனையோ வாசகர்கள்! கேட்டா செஞ்சிட்டுப் போறாங்க.’’ என்றாள்.

‘‘வாசகர் கிட்ட அவர் கேக்கலைடி. நண்பர்கிட்ட கேட்டிருக்கார். கண்டிப்பாச் செய்யணும்’’ என்றேன்.

‘‘நீங்கதான் ஓடி ஓடிச் செய்யறீங்க. அவருககு நீங்க நூத்துல, ஏன்.. ஆயிரத்துல ஒருத்தர்...’’ என்றாள்.

‘‘நானில்லைம்மா... எம்.ஜி.ஆர்.தான் ஆயிரத்தில் ஒருவன்’’ என்றேன்.

‘‘இந்த இடக்குக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. அவருக்கு நீங்க ஒண்ணும் ஸ்பெஷல் இல்லை. நீங்கதான் அப்படிச் சொல்லிட்டுத் திரியறீங்க...’’ என்றாள்.

‘‘நிச்சயம் இல்லை. அவர் ஃப்ரெண்ட்ஷிப்பை மதிக்கிறவர். எனக்காக எதுவும் செய்வார்’’ என்று நான் சொல்ல, அவள் கத்தி சண்டை  போட (வாயால்தான்), அது முற்றிப் போய் கடைசியில் ஒன்று சொன்னாளே, பார்க்கலாம்... ‘‘சரி, ஒண்ணு பண்ணுங்க. இப்ப நேரா அவர்கிட்ட் போயி, எனக்கு நூறு ரூபா கொடுங்கன்னு கேளுங்க. கேள்வி கேக்காம அவர் குடுத்துட்டார்ன்னா நான் வாயே பேசலை!’’ என்றாள். (நூறு ரூபாயின் மதிப்பு இப்போதிருப்பதை விட அந்த ஆண்டுகளில் அதிகம்தான்.)

என்ன அபத்தமான சவால் என இப்போது தோன்றினாலும் நான் முன்பே சொன்னது போல் அப்போது எனக்கிருந்த ஈகோ என்னை யோசிக்காமல் சவால்விடச் செய்தது. நேராக அவரிடம் விஜயனையும் அழைத்துக் கொண்டு சென்றேன். எந்த விஷயமும் பேசாமல் எடுத்த எடுப்பிலேயே, ‘‘சார்! எனக்கு உடனடியா நூறு ரூபாய் தேவைப்படுது. தரமுடியுமா?’’ என்று கேட்டேன்.. அடுத்த கணம்... நான் என் மனைவியிடம் சொன்னது போலவே சிறிதும் தயங்காமல் சட்டையிலிருந்து எடுத்துத் தந்தார்.

‘‘தாங்க்ஸ் ஸார்’’ என்று நன்றி சொல்லிவிட்டு வேறு சப்ஜெக்ட் எதுவும் பேசாமல் வந்துவிட்டேன். என் மனைவியிடம் அதைத் தந்து விஷயத்தைச் சொன்னதும் அவள் வாய் மூடிப் போனது. (என்னுடன் வந்த விஜயனுக்குக் கூட இன்றுவரை இந்த சவால் விஷயம் தெரியாது. இத்தனை ஆண்டுகள் கழிச்சு இப்ப படிச்சு தெரிஞ்சுட்டிருப்பான்.) ஆனால் அந்தச் செயலை எண்ணி பின்னாட்களில் பல முறை வெட்கப்பட்டிருக்கிறேன். வருத்தப்பட்டிருக்கிறேன்.
-தொடர்கிறேன்,,,

(சரியா இருக்கான்னு யாராவது பின்னூட்டத்துல சொல்லுங்க அன்பர்களே...

Friday, January 20, 2012

நடை வண்டிகள்: முன்னுரை

Posted by பால கணேஷ் Friday, January 20, 2012
ன் தளத்தில் தொடர்ந்து படித்து வரும் நண்பர்கள் அனைவரும் ஒரு விஷயம் புரிந்திருக்கும். நிறையப் புத்தகங்கள் படிப்பவன் நான் என்பதுதான் அது. நாவல்கள், கட்டுரைகள், சிறு சிறு துணுக்குகள், நகைச்சுவை என்று எந்த வடிவமாக இருந்தாலும் படிப்பதை நேசிப்பவன் நான். தீவிரமான இந்த வாசிப்புப் பழக்கம் எப்போதிலிருந்து என்னைப் பற்றிக் கொண்டது என்பதை சற்றுப் பின்னோக்கிப் பார்க்கிறேன்.

ள்ளி நாட்களில் பாடப் புத்தகங்கள் தவிர வேறு புத்தகங்கள் எதையும் படித்ததில்லை. கொஞ்சம் பெரிய கிளாஸ் (6,7) வந்த சமயத்தில் அம்புலிமாமா, ரத்னபாலா போன்ற காமிக்ஸ் புத்தகங்கள் படித்ததுண்டு. அவ்வளவே. மற்றபடி சினிமா பார்ப்பதில் இருந்த ஆர்வம் படிப்பதில் இருந்தில்லை. அப்படிப்பட்ட என்னை நிறையப் புத்தகங்கள் படிக்கச் செய்தது அழகப்பா கலைக் கல்லூரி.

அழகப்பா கல்லூரியில் மிகப் பெரிய நூலகம் உண்டு. எல்லா சப்ஜெக்ட் புத்தகங்களும், எல்லா எழுத்தாளர்களின் புத்தகங்களும் அங்கே இருக்கும். கல்லூரியில் கொடுத்த இரண்டு டோக்கன்களை உபயோகப்படுத்தி அம்மா விரும்பிப் படிக்கும் லக்ஷ்மி எழுதிய புத்தகங்களை எடுத்துக் கொடுப்பேன். திருப்பித் தருவதற்கு முன் ஒன்றிரண்டை படித்துப் பார்த்து ரசித்ததுண்டு.

என்னுடன் பொருளாதாரம் படித்த நண்பர்களெல்லாம் நூலகத்திற்குச் செல்லும் போது போட்டி போட்டுக் கொண்டு சாண்டில்யன் எழுதிய புத்தகங்களை எடுத்துச் செல்வார்கள். சாண்டில்யனின் சில புத்தகங்களை யார் முதலில் படிக்க எடுத்துச் செல்வது என்பதில் ஏதோ அடிதடி ரேஞ்சுக்கு முட்டி மோதிக் கொள்வார்கள். சரி, அந்த ஆசாமி என்னதான் எழுதியிருக்கிறார் பார்க்கலாமே என்று யாரும் போட்டியிடாத அவருடைய குட்டி புத்தகம் ஒன்றை (வசந்த காலம்) எடுத்துப் போய்ப் படித்தேன். என்ன ஒரு தமிழ் நடை! என்ன விறுவிறுப்பு! சாண்டில்யன் என்னைப் பற்றிக் கொண்டார். அவரது எல்லாப் புத்தகங்களையும் நானும் போட்டி போட்டு எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். அவருக்கு அடுத்து தமிழ்வாணனும், சுஜாதாவும் என்னை விடாமல் பிடித்துக் கொள்ள அந்த இருவரின் எல்லாப் புத்தகங்களையும் எடுத்துச் சென்று படிக்க ஆரம்பித்தேன்.

ல்லூரி முடித்து வெளிவந்து வேலை தேடிய காலங்களில் என் செலவுகளுக்கும், அப்ளிகேஷன் போடும் செலவுகளுக்காகவும் காலையில் என் நண்பனின் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் பகுதிநேர இன்ஸ்ட்ரக்டராகவும், மாலையில் நான் இருந்த பேங்க் காலனி ஏரியா மக்களுக்காக சர்க்குலேஷன் லைப்ரரி ஒன்றை நடத்தியும் சம்பாதித்து வந்தேன். லைப்ரரிக்காக வார, மாத இதழ்கள் அனைத்தையும் வாங்க வேண்டியிருந்தது.

1985ல் துவங்கி 90 வரையில் மாத நாவல்களின் பொற்காலம் எனலாம். ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், சுபா, பட்டுககோட்டை பிரபாகர், புஷ்பா தங்கதுரை, தேவிபாலா ஆகிய அறுமூர்த்திகள் எழுதித் தள்ளிக் கொண்டிருந்தார்கள். (பின்னல் தாமதமாக வந்து சேர்ந்தவர் இந்திரா செளந்தர்ராஜன்) பாக்கெட் நாவல், க்ரைம் நாவல், எ நாவல் டைம், குடும்ப நாவல், ராணிமுத்து, குங்குமச் சிமிழ், கார்த்திகா, டேபிரேக், ஊதாப்பூ, ரேகா, சின்ன ரேகா, டெவில், சஸ்பென்ஸ், சூப்பர் நாவல், ராஜாராணி, ரம்யா, ஏ ஒன், சுஜாதா, சத்யா, நாவல்டி, கோஸ்ட், உங்கள் ஜூனியர், உல்லாச ஊஞ்சல், புல்லட் ஐ, லென்ஸ் நாவல்.... ஹப்பா, மூச்சு வாங்குது. இப்படி ஒரு மாதத்தில் ஏறத்தாழ 25 மாதநாவல்கள் வெளியான காலம் அது. எல்லாவற்றையும் லைப்ரரிக்காகவும், சொந்த விருப்பத்துக்காகவும் படித்து ரசித்துக் கொண்டிருந்தேன்.

இப்படி லைட் ரீடிங்காக ஆரம்பித்த என் படிக்கும் பழக்கம் பின்னர் ஹெவி ரீடிங்காகவும் மாறியது. இலக்கியம் எழுதும் எழுத்தாளர்களையும் விரும்பிப் படித்தேன். (இந்நாட்களில் பின்நவீனத்துவம் என்று எழுதி, படிப்பவர்களை பாயைப் பிறாண்டச் செய்யும் சில நவீன இலக்கிய(?) வாதிகளை நான் படிப்பதில்லை) நான் விரும்பிப் படித்த எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்கள் அனைவரையும் ஒருமுறையாவது சந்தித்துப் பேசிவிட வேண்டும் என்ற தீராத ஆவல் எனக்குள் இருந்தது. மதுரையில் இருந்து கொண்டு எவ்வாறு எழுத்தாளர்களைச் சந்திப்பதும் கதைகள் குறித்துப் பேசுவதும் இயலும்? ஆகவே நான் படித்த நாவல்கள் குறித்து என் விமர்சனங்களை கடிதங்களாக அனுப்பிக் கொண்டிருந்தேன். (இப்படி எழுதுவதையெல்லாம் எழுத்தாளர்கள் கவனித்துப் படிப்பார்களா? சில சமயம் பாராட்டாமல் திட்டியும் எழுதுகிறோமே... என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் எனக்குள் தோன்றும்)

பயப்படாதீங்க... நான்தான்! அழகப்பா காலேஜ்ல படிக்கறப்ப... (எவ்ளோ பெரிய கண்ணாடிடா!)

அப்படி நான் வியந்து ரசித்த எழுத்தாளர்களில் சிலருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு பின்னாட்களில் எனக்குக் கிடைத்தது. நான் பழகிய எல்லா எழுத்தாளர்களிடமிருந்தும் நான் கண்ட பல நல்ல விஷயங்களை (சுட்டு) எனதாக்கிக் கொண்டேன். என்னை நான் பண்புள்ளவனாக மேம்படுத்திக் கொள்ள நான் பழகிய, இன்றும் பழகிவரும் எழுத்தாளர்கள் அனைவருமே காரணகர்த்தாக்கள். (அதனால் ‘என்னைச் செதுக்கிய சிற்பிகள்’ என்றுதான் தலைப்பு வைப்பதாக முதலில் எண்ணியிருந்தேன்.) நடை பழகிக் கொள்ளும் குழந்தைகள் முதலில் நடை வண்டியைப் பிடித்து நடை பழகி, பின் தானே நடப்பது போல எனக்கு நடை வண்டிகளாக இருந்த எழுத்தாளர்களையும், அவர்களுடனான என்னுடைய நட்பைப் பற்றியும் நான் சொல்லிச் செல்லவிருக்கும் தொடர்தான் இந்த ‘நடை வண்டிகள்’.

எழுத்தாளர்களுடன் பழகி வருவதில் நிறைய நல்ல விஷயங்களும், இனிமையான அனுபவங்களும் கிடைத்ததைப் போலவே ஒரே ஒரு எழுத்தாளர் எனக்குக் கசப்பான அனுபவத்தைக் கொடுத்தார். (இனி அவரைச் சந்திக்கவே வேண்டாமடா சாமி என்று மனதிற்குள் அலறும் அளவுக்கு). அதுபோன்ற கசப்புகளை விலக்கி, இனிப்புகளை மட்டுமே இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள வருகிறேன். என்னைத் தொட்டு நீங்களும் தொடர்வீர்கள் தானே...

பின் குறிப்பு: என் நண்பர்களின் பதிவுகளையும், என் தளத்துக்கு வராத மற்றும் பலருடைய பதிவுகளையும் படித்துக் கருத்திடுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பிடித்த அந்த விஷயத்தை சில சொ(நொ)ந்தப் பிரச்சனைகள் காரணமாக இன்னும் ஒரு வாரத்திற்குச் செய்ய இயலாதவனாக இருக்கிறேன். அடுத்த வாரத்திலிருந்து அனைவரின் தளங்களிலும் என் வருகை இருக்கும். பொறுத்தருளுங்கள் நண்பர்களே!

பின்பின்குறிப்பு: நான் இந்த வலையைத் துவக்கி எழுதத் துவங்கியபோது எனக்குள் பெரிதாய் தன்னம்பிக்கை இருக்கவில்லை. ‘‘பல பெரியவங்கல்லாம் எழுதற இடத்துல நாம என்ன எழுதிக் கிழிச்சிடப் போறோம்... பத்து பேராவது நாம கிறுக்கறதைப் படிச்சாச் சரி’’ என்ற மனநிலைதான் இருந்தது. இன்று 50வது பதிவு வெளியிடும் வேளையில் என்னை நம்பி, என்னைப் பின்தொடர்பவர்கள் நூறு பேர்! எனக்குள் தன்னம்பிக்கையை ஊட்டி, பொறுப்புணர்வுடன் எழுத வைத்த அந்த நூறு பேருக்கும் என் கரம்கூப்பிய நன்றி! (ஆதரவு தரும் மற்ற எல்லா நண்பர்களுக்கும் சேர்த்துத்தான்)
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube