ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில்
எழுந்திரிப்பது என்பது மட்டும் ராஜ ரமேஷால் முடியாத காரியம். மற்ற நாட்களில் எழுந்து
கிழித்து விடுவானா என்று கேட்டால்.. ஹி… ஹி… ஹி...! அந்த ஞாயிறின் அதிகாலை
9 மணிக்கு (அவனுக்கு சார்) "பர்ர்ர்..." என்றது அழைப்பு மணி. "யார்?" என்றான் ராஜ ரமேஷ். "பார்..." என்றாள் சபிதா அவன் முதுகில் ஒன்றுவைத்து. வேகமாய் எழுந்துபோய்க் கதவைத் திறந்தான். வெளியில் நின்றிருந்தவள் அவனைப் பார்த்துச் சிரித்தாள். அவளைப் பார்த்து அவன் அதிர்ந்து
போய் ‘ழே‘ என்று விழித்தான். நெற்றிச்
சுட்டியும், காதுகளில் அகன்ற வளையங்களும், பளிச்சென்ற மூக்குத்தியும், நாலணா அளவுக்குப்
பொட்டும் அணிந்து சாண்டில்யனின் கதையிலிருந்து நேரே குதித்துவந்த ஓவியப் பெண் போல இருந்தாள்.
என்ன... சாண்டில்யனின் நாயகி சுரிதார் அணிய மாட்டாள்; இவள் அணிந்திருந்தாள்.
“யாரும்மா
நீங்க..? என்ன வேணும்..?” என்றான்.
“என்னையா யாரென்று கேட்கிறாய்
பார்த்திபேந்திர பல்லவா… உன் தலையைக் கொய்யாமல் விட மாட்டேன்..” என்றவள் குமரிமுத்துவின்
சிரிப்பு டெஸிபலில் பாதி வருகிற அளவுக்கு ஹாஹாவெனச் சிரித்தாள். அப்போதுதான் கவனித்தான்.
ஐயோ...! சிரிக்கையில் வாயில் இரண்டு கடைவாய்ப் பற்களும் சற்றே
நீண்டிருப்பது போலில்லை? அந்தப் பற்களின் நுனியில் அதென்ன… தக்காளி சாஸா, இல்லை ரத்தமா..?
பார்த்த டிராகுலா சினிமாவும் பேய்ப்படங்களும் இன்ஸ்டன்ட்டாய் நினைவுக்கு வந்து வயிற்றைக்
கலக்க, பார்வையைச் சற்று கீழிறக்கியபோதுதான் அதைக் கவனித்தான். அவள் கையில் ஒரு கத்தி! கன்பர்ம்டாக
அதில் சொட்டிக் கொண்டிருந்தது ரத்தம்தான்!
“நானில்ல.. நீங்க அட்ரஸ்
மாறி வந்துட்டீங்க..” என்றவன், அவள் கத்தி
பிடித்த கையை உயர்த்த, உளறிக் கொட்டி, கிளறி மூடி அலறியடித்து உள்ளே ஓடி, கட்டிலில்
கிடந்த சபிதாவின் அருகில் விழுந்தான். அலறினான். "ஐயோ.. பேய்... பேய்...!".
எரிச்சலாய் எழுந்து 'பளார்' என்று முதுகில்
ஒரு அறை வைத்தாள். "ய்யூ ராஸ்கல்! ராத்திரி பூரா என்னை தேவதைன்னு கொஞ்சிட்டு,
இப்ப பொழுது விடிஞ்சதும் பேய்ங்கறியா..? கெட் லாஸ்ட்" என்றாள். ”ஐயோ, உன்னையில்லடி. நெஜம்மாவே ஹால்ல ஒரு பேய் வந்து நிக்குதுடி.
உடனே வாயேன்…” என்றான். “ஹாலிடேல கூட தூங்கவிடாம ஏன்யா படுத்தற..?” என்றபடி ஹாலுக்கு அவள் செல்ல, அவள் புடவைத் தலைப்பைப் பிடித்தபடி
பின்னால் போனான் அவன்.
அவள் இப்போது சோபாவில் ஒய்யாரமாகச்
சாய்ந்து படுத்து, டீபாயிலிருந்த சபிதாவின் செல்போனை ஆராய்ந்து கொண்டிருக்க, சபிதா
கோபமானாள். “ஏய், யார்றி நீ? என்ன
வேணும் உனக்கு?” என்று அவன் கேட்டதையே
அட்சரம் பிசகாமல் கேட்டாள். குதித்தெழுந்த அவள், “உன் கணவனின் உயிரை வாங்கவே யாம் வந்திருக்கிறோம் இளவரசி..” என்றாள். “நான் ஒருத்தி இருக்கற
வரைக்கும் அது உன்னால முடியாதுடி..” என்றாள் சபிதா. ”ஆமாம். அதை இவளே வாங்கிடுவா. உனக்குல்லாம் விட்டுத் தருவாளா?” என்று ரமேஷ் முனக, கும்மென்று அவன் இடது கன்னத்தில் குத்தினாள்
சபிதா. கன்னத்தைப் பிடித்தபடியே சட்டென்று ஆங்கிலத்துக்கு மாறினான். “Sabi,
I think she is mad. Please dial to kilpauk” என்றவனின்
வலது கன்னத்தில் கத்தி பிடிக்காத மற்றொரு கரத்தால் கும்மென்று குத்தினாள் வந்தவள்.
“You Idiot!! How
dare you say that? I’m not mad” என்றாள். “என்னாங்கடி
ஆளாளுக்குக் குத்தறீங்க…? அவ்வ்வ்…” என்று
புலம்பியபடி சோபாவில் சரிந்தான் ராஜரமேஷ். “என்னங்க… நெஜமாச் சொல்லுங்க. இவள உங்களுக்குத்
தெரியாதுதானே..?” என்று
சபிதா கத்தினாள்.
“நீ
வேறடி… மொதல்ல அவளப் புடி” என்று
அலறியபடி வாசலைப் பார்த்தவன் பிரகாசமானான். ரங்குவும் பொடியனும் வந்து கொண்டிருந்தனர்.
ரங்கநாதன் பாலசந்திரன் என்று அவன் நண்பன் பெயரைச் சொல்வதைவிட ரங்கு என்றால் அனைவருக்கும்
தெரியும். அப்படியே ரித்விக் பிரணவன் என்கிற அவன் நண்பன் பெயரைச் சொன்னால் தெரிவதைவிட
பொடியன் என்கிற அவன் புனைபெயர் வெகு பிரபலம். இப்போது சபிதா, அந்த வினோதள் கையிலிருந்த
கத்தியைப் பிடுங்க போராடிக் கொண்டிருக்க, அதை புதிராகப் பார்த்தபடி ரமேஷின் அருகில்
வந்தார்கள் எழுத்தாள நண்பர்கள்.
“என்ன
சார், புத்தகக் கண்காட்சிக்குப் போகலாம்னு எங்களை வரச் சொல்லிட்டு இங்க ஏதோ சண்டைக்
காட்சிக்கு ஒத்திகை நடக்குது போலத் தெரியுதே..? உங்க குறும்பட ஸ்க்ரிப்ட் ரெடியாய்டுச்சா?
இவங்கதான் ஹீரோயினா?” என்றான்
ரங்கு. “அடேய்… குறும்படத்துல
ஹீரோவா நடிச்சு பர்னிங் ஸ்டார்னு பட்டம் வேற வாங்கினப்பறம் உன் ரவுசு தாங்கலடா… பாக்கறதெல்லாம்
குறும்படமா? இது கொடும்படம்டா. நான் பல்லவ இளவரசனாம். என்னக் கொலை பண்ணியே தீருவேன்னு
ஒத்தக் கால்ல நிக்கறாடா..” என்று
அலறினான் ரமேஷ். ரங்கு ஏறிட்டுப் பார்க்க, சபிதாவைக் கீழே சாய்த்து ஒற்றைக் காலில்
நின்றபடி தள்ளிக் கொண்டிருந்தாள் அவள். “சரியாத்தான்
சொல்றீங்க சார்” என்றான்
ரங்கு மூக்குக் கண்ணாடியை மேலேற்றியபடி. கோபமாக அவன் தலையில் தட்டி, “அடேய்... முதல்ல போய்
சபிதாவக் காப்பாத்துடா” என்று
ரமேஷ் அலற, அவளை நோக்கிப் பாய்ந்தான் ரங்கு.
“சார்,
மென்டலாய்ட்டாலும்கூட மனசுல பதிஞ்ச எடத்துக்குத்தான் போகத் தோணும். நீங்க இவங்கள எப்பவோ
சந்திச்சு எதோ செஞ்சிருப்பீங்களோன்னு தோணுது. நல்லா யோசிச்சுப் பாருங்க… ஒரு அனுபவக்
கதையே பின்னால இருக்கும்..” என்றான்
பொடியன். “அடேய்,
சந்திக்கற அனுபவத்துலல்லாம் கதையத் தேட உன்னாலதான்டா முடியும். நான் ஒரு மண்ணும் தெரியாத
அப்பிராணிடா. காலேஜ் டேஸ்ல லவ்கூடப் பண்ணினது கெடையாது. நீ பாட்டுக்கு எதையாவது பேசி
குடும்பத்துல கும்மியடிச்சிராதடா” என்று
பதறியவனாக பொடியனின் வாயைப் பொத்தினான் ரமேஷ்.
இப்போது சபிதாவும் ரங்குவுமாக அவளைச் சமாளித்து கட்டுக்குள்
கொண்டு வந்திருந்தார்கள். அவள் கையைப் பின்னால் பிடித்து மடக்கியபடி கத்தியைப் பறித்துவிட்டுக்
கேட்டான் ரங்கு. “சொல்லுலே…
எதுக்கு கத்தியோட அலையுத?” “அரிமர்த்தன பாண்டியரின்
துணைவி யான். என் கணவரின் சிரத்தைச் சதிசெய்து கொய்த சோழன் செழியனை யாம் சற்றுமுன்தான்
கொன்றோம். அவன் தோழனான இந்தப் பல்லவனின் சிரத்தைத் துண்டிக்கா விட்டால் எம் கணவரின்
ஆத்மா அமைதியுறாது. விடுங்கள் என்னை” என்று
திமிறினாள் அவள்.
“தபாரு…
சாருக்கு பல்லு கொஞ்சம் பெரிசுதான். அதுக்காக வாய்க்கு வாய் அவரைப் பல்லவன்னு சொன்னா
மிதிபடுவ..” என்று
ரங்கு அலற, அவள் அவன் கையை உதற, பொடியன் இப்போது அவளைப் பிடிக்க உதவிக்கு வர, “உங்களுக்கு அறிவே கெடையாதா?
செல்லை எடுத்து போலீசைக் கூப்புடுங்க..” என்று
சபிதா அலற, ரமேஷ், அதிவேகமாக செல்லைக் கையிலெடுத்து டயல் செய்யத் தொடங்க.. “ஸ்டாப் இட். டயல் பண்ணாதீங்க
சார்…” என்று வாசலில் அதிகாரமான
ஒரு குரல் கேட்டது. ரமேஷ் நிமிர்ந்து பார்க்க, மற்றவர்கள் திரும்பிப் பார்க்க, அங்கே
காவி நின்றிருந்தான்.
காரைக்குடி வினாயகராஜன் என்கிற அவன் பெயரை முழுதாகச் சொன்னால்
அனைவரும் ‘ழே‘ என்றுதான் விழிப்பார்கள். ஆனால் பெயரின் முதலிரண்டு எழுததுக்களைக் கோர்த்து
அவன் வைத்துக் கொண்டிருக்கும் காவி என்கிற பெயரானது ஜகப்பிரசித்தம். “டேய் காவி, எப்படா காரைக்குடிலருந்து
வந்த..? இங்க என்ன நடக்குது தெரியுமா…?” என்று
ஆரம்பித்த ரமேஷைக் கையமர்த்தினான் காவி. “இந்த
சீனுக்கு நான்தான் சார் டைரக்டர். எனக்குத் தெரியாதா என்ன..? டேய், ரங்கு… அவள விடுடா.
இதான் சாக்குன்னு அமுக்காத. அவ என் அடுத்த குறும்பட ஹீரோயின் வினோதினி” என்றான் காவி. “ஹாய் அங்க்கிள்” என்றது அந்த வினோதினி.
“என்ன.. குறும்படமா… கதாநாயகியா…?” என்று துண்டு துண்டாய்
வியந்த ரமேஷிடம் விளக்கினான் காவி.
“என்
அடுத்த குறும்படத்தோட சப்ஜெக்டே வினோதமா ஒரு கேரக்டர் வீட்ல புகுந்து அட்டகாசம் பண்ணா
வீட்ல இருக்கறவங்களோட ஆக்டிவிடீஸ் என்னவா இருக்கும்ங்கறதுதான். நேத்து ஈவினிங் இந்தப்
பொண்ணை ஹீரோயினா பிக்ஸ் பண்ணப்பதான் இந்த ஐடியா வந்துச்சு. ரிகர்சல்னு தனியா வெக்காம
ப்ராக்டிகலாவே பண்ணிப் பாத்தா என்னன்னு மனசுல பட்டதும் உங்க நெனைப்புதான் வந்துச்சு.
நான் மறைஞ்சு நின்னு உங்க ரெண்டு பேரோட எக்ஸ்பிரஷனையும் கவனிச்சுட்டிருந்தேன். இவங்க
ரெண்டு பேரும் குறுக்க வருவாங்கன்றது நான் எதிர்பாக்காதது…. ஹி.. ஹி… ஹி. ஸாரி ஸார்…” என்றான் காவி.
“கடைசில
எல்லாம் உங்க வேலையா காவியண்ணா?” என்று
சபிதா சிரிக்க, “கடைசில
இல்லம்மா.. ஆரம்பத்துலருந்தே என் வேலைதான் என்று காவியும் சிரிக்க, அதைக் கண்டு கடுப்பாகி,
“அடேய் குறும்படம் எடுக்கற
குரங்குப்பயலே… (நன்றி: ரா.பார்த்திபன்) நீ காவியே இல்லடா… பாவி, படுபாவி!!” என்று பல்லைக் கடித்துக்
கையை ஓங்கியபடி ராஜரமேஷ் காவியை அடிக்கப் பாய, கூடவே பாய்ந்தனர் ரங்குவும், பொடியனும்.
பி.கு. : இந்தக் கதை முழுக்க முழுக்க கற்பனைக் கதைதான் மக்களே...
உங்களுக்குத் தெரிந்த நபர்களை கதை மாந்தர்களாக நீங்களே கற்பனை செய்து கொண்டு படித்தால்
அதற்குக் கம்பெனி பொறுப்பில்லை..!!