Wednesday, May 29, 2013

கேப்ஸ்யூல் நாவல் -8

Posted by பால கணேஷ் Wednesday, May 29, 2013
கரையெல்லாம் செண்பகப் பூ
- சுஜாதா -
ல்யாணராமன் நாட்டுப் பாடல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய திருநிலம் கிராமத்திற்கு வருகிறான். அங்கே வெள்ளரிப்பிஞ்சு விற்கும் வெள்ளி என்ற பெண்ணும், அவள் மூலமாக அவள் முறைப் பையனான மருதமுத்துவும் அவனுக்கு உதவுகிறார்கள். கல்யாணராமன் தங்குவதற்காக ஒதுக்கப்பட்ட ஜமீன் அரண்மனையில் அன்றிரவு சில வினோத சப்தங்களைக் கேட்டு பயப்படுகிறான். மறுதினம் மருதமு்த்துவின் டிராக்டரில் நகரம் சென்று ஷாப்பிங் செய்து வருகையில் லிஃப்ட் கேட்ட ஒரு பெண்ணைப் புறக்கணிக்கிறார்கள். அவள் கிராமத்துக்கு வந்ததும்தான் அவள் பெயர் சினேகலதா என்பதும், ஜமீன்தார் பரம்பரையின் கடைசி வாரிசு என்பதும் தெரிகிறது. அவள் கல்யாணராமனிடம், அவன் வந்திருப்பது உண்மையில் நாட்டுப் பாடல் ஆராய்ச்சிக்குத்தானா என்று கேட்க, திடுக்கிடுகிறான் அவன். பின் பேச்சை மாற்றுகிறாள்.

அன்றிரவும் ஜமீன் மாளிகையின் மாடியில் மர்ம சப்தங்கள் கேட்க, கல்யாணராமனும் மருதமுத்துவும் மேலே செல்ல... அங்கே ஓர் மர்ம உருவம் இவர்களைக் கண்டு ஓடி மறைவதைப் பார்க்கிறார்கள். சினேகலதா வந்தபின் மருதமுத்துவின் நடவடிக்கைகள் சரியில்லை என்றும், அவர்கள் பழகுவது பிடிக்கவில்லை என்றும் வெள்ளி, கல்யாணராமனிடம் சொல்கிறாள். கல்யாணராமனுக்கு வெள்ளியி்ன் மேல் உள்ளூர ஒரு மெல்லிய சபலம் இருக்கிறது. அ‌தை மறைத்து அவளை சமாதானப்படுத்துகிறான். நாட்டுப்பாடல் சொல்ல வரும் பெரியாத்தா என்ற கிழவி ஜமீன்தார் வம்சத்தில் ரத்னாவதி என்ற ஜமீன்தாரிணி பட்ட சித்ரவதைகளைச் சொல்லி சாபப்பட்ட ஜமீன் இது என்கிறாள். அன்றிரவு மாடியில் மர்ம சப்தங்கள் கேட்டு கல்யாணராமன் மேலே செல்ல, அந்த மர்ம உருவத்தைப் பிடிக்க முயல, கைகலப்பில் அந்த உருவத்தால் தாக்கப்பட்டு நினைவிழக்கிறான்.

இரு தினங்களில் உடல்நிலை தேறிய ஒரு பகலில் மாடியில் சென்று ஆராய, பீரோ‌வுக்குப்பின் ஒரு ரகசிய அறையைக் கண்டுபிடிக்கிறான். அறையை மட்டுமல்ல... ரத்னாவதியின் டைரியையும்! அதைப் படிக்கப் படிக்க ரத்னாவதியின் சோகக் கதை மனக்கண்ணில் படமாக விரிகிறது. ரத்னாவதி தன் பூர்வீக நகைகளை ஒளித்து வைத்ததைப் பற்றிச் சொல்வதைப் படிக்கையில் வெள்ளி அங்கே வர, மருதமுத்துவும சினேகலதாவும் சைக்கிளில் வந்து இறங்க கோபமாகி வெடிக்கிறாள் வெள்ளி. வார்த்தைகள் தடிக்க, சினேகலதாவைத் திட்டி, சாபம் விட்டு்ச் செல்கிறாள்.  சினேகலதா கல்யாணராமன் வைத்திருக்கும் ரத்னாவதியின் டைரியை தான்தான் ஜமீன் வாரிசு என்பதால் முதலில் படிக்க வேண்டும் என்று பறித்துக் கொள்கிறாள். வெள்ளி கிராமத்து பூசாரியிடம் சினேகலதாவுக்காக கோழி வெட்டி பலி கொடுப்பதை க.ராமன் பார்க்கிறான். சினேகலதாவின் நடவடிக்கைகள் அந்த டைரி கிடைத்தபின் புதிராக இருப்பதையும் மருதமுத்துவுடன் அவள் கூடிக் கூடிப் பேசுவதையும் கண்டு சந்தேகிக்கிறான்.

கிராமத்து விழாவில் பழையனூர் நீலி கதை கூத்து நள்ளிரவு வரை நடக்க, பாதியில் மருதமுத்துவும், சினேகலதாவும் செல்வதையும் சற்று நேரத்தில் வெள்ளி புறப்படுவதையும் க.ராமன் கவனிக்கிறான். ஜமீன் பங்களா வந்தால் எவரையும் காணவில்லை. தேடிவர, தோட்டத்தில் சினேகலதாவை நிலைத்த விழிகளுடன் பிணமாகப் பார்க்கிறான். போலீஸ் வர, விசாரணை துவங்குகிறது. வெள்ளி காணாமல் போயிருக்க, அவள்தான் கொன்றிருப்பாள் என்று மருதமுத்து சந்தேகப்படுகிறான்.

அன்றிரவு வெள்ளி, க.ராமனைத் தேடி வந்து தானே கல்லைப் போட்டு சி.லதாவைக் கொன்றதாகக் கூறி அடைக்கலம் கேட்கிறாள். க.ராமன் அவளை பீரோவின் பின்னுள்ள ரகசிய அறையில் மறைத்து வைக்கிறான். இன்ஸ்பெக்டரும், கிராமத்து முக்கியஸ்தரும் விசாரணைக்கு வரும்போது அந்த ரகசிய அறையைப் பார்த்துவிட்டு உளளே சர்ச் செய்ய, சமாளிக்கிறான். இதற்கிடையில் ‘உங்கள் குடும்பப் பெண் சினேகலதா இறந்து விட்டாள்’ என்று ஜமீன்தாருக்கு கொடுத்த தந்திக்கு, ‘எங்கள் குடும்பத்தில் சினேகலதா என்று யாருமே இல்லை’ என்று பதில் தந்தி வருகிறது இன்ஸ்பெக்டருக்கு! குழப்பமோ குழப்பம்!

க.ராமன் வெள்ளி‌யுடன பேசிக் கொண்டிருப்பதை ஒரு சிறுவன் பார்த்துவிட்டு ஓட, கிராமத்தவர் வரும்போது அவளைப் பிடிக்கப பார்த்தேன், தப்பி விட்டாள் என்று க.ராமன் சமாளிக்க, ரகசிய அறையை ஆராய, அங்கேயும் வெள்ளி இல்லை. அவள் ஜன்னல் வழியாகத் தப்பிவிட்டதை அறிகிறான் க.ராமன். இரவில் ரத்னாவதியின் நகைகள் அனைத்தையும் அணிந்தவளாய் வெள்ளி அவன்முன் தோன்றுகிறாள். கிணற்றில் ஒளிந்ததாகவும் அங்கே ஒரு ரகசியப் பிறையில் இந்த நகைகள் கிடைத்ததாகவும் கூறுகிறாள். கூடவே பேச்சுவாக்கில் ஒரு உண்மையையும் சொல்கிறாள். சி.லதா மேல் அவள் கோபத்தில் எறிந்தது கோலிகுண்டு அளவு கல் என்றும், அது பூசாரி மந்திரத்தின் மகிமையால் அவளைக் கொன்றுவிட்டது என்றும் சொல்கிறாள். தலையில் அடித்துக் கொள்ளும் க.ராமனுக்கு உண்மை புரிந்து அவள் ஏற்படுத்திய குழப்பத்தால் கோபமும் வருகிறது. அவளுடன சென்று கிணற்றில் நகைகள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தைப் பார்க்கிறான்.

அதற்குள் வெள்ளி அங்கிருப்பதை மருதமுத்துவும், இன்ஸ்பெக்டரும் கண்டுபிடித்துவிட, அவளை இன்ஸ்பெக்டர் அரெஸ்ட் செய்து அழைத்துச் செல்கிறார். கிராமத்தவர்கள் க.ராமனை தவறாகப் புரிந்து கொண்டு அடிக்கவர, அவன் பாதுகாப்பிற்காக ஒரு அறையில் தள்ளி கதவைச் சாத்துகிறார் இன்ஸ்பெக்டர். அங்கே ரத்னாவதியின் டைரி கிடக்க, அதன் மூலம் அவள் நகைகள் மறைத்துவைத்த இடத்திற்கு செண்பகப்பூ மூலம் குறிப்பு தந்திருப்பதையும், சினேகலதாவின் கூட்டாளி சாமி என்பவன் நகைகளைக் கொள்ளையிட வரச் சொல்லி அவளுக்கு எழுதிய கடிதத்தையும் படிக்கிறான் க.ராமன். அந்த அறையிலிருந்து தப்பி கலெக்டரைச் சந்தித்து உண்மையைச் சொல்ல, அவர் போலீஸ் அதிகாரிகளுடன்‌ பேச, நள்ளிரவில் அவர்கள் கிணற்றைச் சுற்றிலும் பதுங்கியிருக்க, அதனுள்ளிருக்கும் நகைப் பெட்டியை எடுக்க வ்ந்தவன் மடக்கப்படுகிறான்; கைது செய்யப்படுகிறான்.

காவல்துறையின் ‘பலத்த’ விசாரணைக்குப் பின் அவன் ஜமீன்தாரின் வைப்பாட்டி மகன் என்பதையும், பல லட்சங்கள் பெறுமானமுள்ள ரத்னாவதியின் நகைகளைக் கண்டுபிடித்து அடைவதற்காக கிராமத்தில் குழந்தைகளுககு பயாஸ்கோப் காட்டுபவனாக (பயாஸ்கோப் பழனியாண்டி) வாழ்ந்து சுற்றி வந்ததாகவும், இரவில் நகையைத் தேடியதாகவும், சரியான சந்தர்ப்பத்தில் திருட்டுத் தொழிலில் தன் கூட்டாளியான சினேகலதாவைச் சேர்த்துக் கொண்டதையும் சொல்கிறான். கிராமத்துத் திருவிழா நடந்த இரவு ‌தோட்டத்தில் மருதமுத்து, சினேகலதாவுடன் சுகித்துவிட்டுச் செல்ல, அவன் வந்து கிணற்றில் இருந்து அவள் எடுத்த நகைப் பெட்டியைக் கேட்க, அவள் எதுவும் எடுக்கவில்லை என்று மறுத்து சித்ரவதைக்குப் பின் கிணற்றின் பிறையில் ஒளித்து வைத்திருப்பதாகச் சொல்லிவிட, அவளை கோபமாக அவன் பிடித்துத் தள்ளியதில் பின் மண்டை கிணற்றுச் சுவரில் மோதி இறந்து விட்டாள் என்கிறான்.

சினேகலதா கொலையால் கிராமத்தில் ஏற்பட்ட குழப்பமும் அமளிதுமளியும் ஓயக் காத்திருந்து வெள்ளியை போலீஸ் அரெஸ்ட் செய்ததால் தைரியம் பெற்று அன்றிரவு வந்து மாட்டிக்கொண்டதை அவன் வாக்குமூலம் தர, கேஸ் முடிகிறது. க.ராமன் அந்த கிராமத்திலிருந்து விடைபெற, சமாதானமாகிவிட்ட வெளளியும் மருதமுத்துவும் ஜோடியாக வந்து அவனுக்கு விடை கொடுக்கிறார்கள். கையாட்டி விடைபெறும் சமயம் வெள்ளியின் உதடுகள் ஏதோ சொல்லத் துடித்ததாக க.ராமனுக்குத் தோன்றுகிறது. ரயில் மெல்ல நகர, ‘அவள் என்ன சொல்ல விரும்பினாள்’ என்ற கேள்வியுடனேயே தன் பயணத்தைத் தொடர்கிறான் கல்யாணராமன்.

இதுபற்றி மேலும் படிக்க க்ளிக்: க‌ரையெல்லாம் செண்பகப்பூ

Monday, May 27, 2013

நான் ரசித்த T.M.S.!

Posted by பால கணேஷ் Monday, May 27, 2013
Thirai isai Mannar Soundarrajan! இப்படித்தான சொல்லத் தோன்றுகிறது அந்த வெண்கலக் குரலுக்கு உரியவரை!
டி.எம்.எஸ். அவர்கள் பாடியது என்பதை அறியாமலேயே என் பள்ளிப் பருவத்தில் அவரது பாடல்களை ரசித்திருக்கிறேன் நான். அதிலும் அதிகமாக எம்.ஜி.ஆருக்காக அவர் பாடிய பாடல்களை. எல்லாமே என் ஃபேவரைட். ‘கட்டித் தங்கம் வெட்டியெடுத்து’, ‘காற்று வாங்கப் போனேன்’, ‘நான் ஆணையிட்டால்’ ‘கடலோரம் வாங்கிய காற்று’ இவை எல்லாம் அந்தச் சிறு வயதில் திரும்பத் திரும்பப் பாட வைத்து ரசிக்க வைத்த அவரின் ஹிட் பாடல்கள்.

பள்ளிப் பருவத்தில் இருந்து சற்றே வளர்ந்து உயர்நிலைப் பள்ளியை எட்டிய சமயத்தில் டி.எம்.செளந்தர்ராஜன் என்ற பாடகரின் பெயரும், அவரின் பிரபல்யமும் நன்கு புரிந்திருந்தது. அப்போது அவரின் நான் கேட்காமல் விட்ட பழைய திரைப்படப் பாடல்களைத் தேடித் தேடி கேட்கத் தொடங்கினேன். மிக ஆரம்ப காலத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பாதிப்பு டி.எம்.எஸஸின் குரலில் இருந்தது. பின்னால் அதை மாற்றி, தனக்கென தனிப் பாணி வகுத்துக் கொண்டார். அவர் பாடிய இந்த ‘ராதே உனக்குக் கோபம் ஆகாதடி’ பாடலைக் கேட்டீர்களென்றால் அதை நன்கு உணர முடியும்.


 பட்டினத்தார், அருணகிரிநாதர் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். இந்த இரண்டில் ஏதோ ஒரு படத்தில் முருகப் பெருமானுக்கு முன்னால் ‘முத்தைத்திரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச்சரவண முத்துக்கொரு வித்துக் குருபர எனவோதும்’ என்று ஒரு பாட்டுப் பாடுவார் பாருங்கள்... அதை அவர் பாடுகிற அதே தெளிவான உச்சரிப்புடன், அவரைப் போலவே பாட வேண்டுமென்று நானும் பலமுறை கேட்டுக் கேட்டு பாடிப் பாடிப் பார்த்ததுண்டு. இன்று வரை தோல்விதான் கிட்டியிருக்கிறது. What a Legend!

டி.எம்.எஸ்ஸின் பாடல்களை எல்லாம் புரிந்து ரசிக்கத் துவ்ங்கிய அதே காலகட்டத்தில் எனக்கு அவர் மீது சிறுபிள்ளைத் தனமாக ஒரு குறையும் இருந்தது. சிவாஜிக்கு அருமையாகப் பாடும் டி.எம்.எஸ்., அதே அளவு எம்.ஜி.ஆருக்குப் பாடவில்லையோ என்பதுதான் அது. அதை ஒரு பதிவாகவும் எழுதி குட்டு வாங்கியதுண்டு நான். அந்தப் பதிவைப் படித்துவிட்டு ஒரு நண்பர் (பேரை குறிச்சுக்க மறந்துட்டேன்) டி.எம்.எஸ். பேசிய ஆடியோவை எனக்கு அனுப்பியிருந்தார். அதில் டி.எம்.எஸ். அவர்கள் கொடுத்திருக்கும் விளக்கம் எனக்கு மிகச் சரியாகப் பட்டது. அதை இந்தப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். கேட்டுப் பாருங்களேன்.... அனுப்பிவைத்த அன்பருக்கு என் மனம் நிறைய நன்றி!

எம்.பி.3 பாடல்களாக இன்று இசை கேட்கிறோம். அதற்கு முந்தைய காலகட்டத்தில் ஆடியோ கேஸட்டுகள் புழக்கத்திலிருந்தன. என் கல்லூரிப் பருவத்தில் ஆடியோ கேஸட்டுகள் அப்போதுதான் மார்க்கெட்டில் பரபரப்பாக ஆரம்பித்திருந்தன. அதற்கு முன் இசைத்தட்டுகளில்தான் பாடல்கள் கேட்போம். பெரிய சைஸ் தோசை மாதிரி இருக்கும் அந்த இசைத் தட்டை ஓடவிட்டு, ஒலிவாங்கும் ஊசியை அதன்மேல் வைத்தால் சுழன்று சுழன்று ஓடும் அதிலிருந்து பாடல்கள் கேட்பது பரமசுகம்! அப்படி ஒரு இசைத்தட்டில் முருகப்பெருமான் மீது டி.எம்.எஸ். பாடிய பக்திப் பாடல்கள் தொகுப்பு முழுவதையும் ரசித்து கண்கள் பனிக்க, மனம் உருகக் கேட்டிருக்கிறேன். ‘தித்திக்கும தேன்பாகும்’ , ‘கல்லானாலும் திருசசெந்தூரில் கல்லாவேன்’ ‘முருகனைக் கூப்பிட்டு’ போன்ற பாடல்களையெல்லாம் அவர் குரலில் கேட்கும் போதே மனதில் முருகப் பெருமானின் உருவத்தை உணர முடிந்ததுண்டு. எம்.பி.3யாக இவை கிடைக்குமா என்று தேடிக் கொண்டும்தான் இருக்கிறேன்.

சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் ‘பொன்மகள் வந்தாள்’ என்கிற டி.எம்.எஸ். பாடிய பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தார் ஏ.ஆர்.ஆர். இன்றைய பாடகரின் குரலில் ரீமிக்ஸிய அந்தப் பாடலில் ‘ராஜனாஆஆக’ ‘வீரனாஆஆக’ என்று ஹைபிட்ச் வரும் இடங்களில் டி.எம்.எஸ்ஸின் குரலையே பயன்படுத்தியிருந்தார். ‘‘ஹைபிட்ச்சில் பாட இன்னிக்கும் டி.எம்.எஸ். தான் தேவைப்படறான். இப்ப உள்ளவங்கள்ல யாருக்கும் அதைத் தொட முடியலை’’ என்று கருத்துச் சொல்லியிருந்தார் டி.எம்.எஸ். நிஜம்தான்! ‘எங்கே நிம்மதி’ என்று ஹைபிட்சில் பாடுவதானாலும் சரி, ‘யார் அந்த நிலவு’ என்று மென்மையாக இழைவதானாலும் சரி... டி.எம்.எஸ்.ஸின் குரல் எட்டுக் கட்டையைத் தொடுவதென்றாலும், இரண்டு கட்டையில் உருகுவதென்றாலும்.அனாயாசமாக சஞ்சரிக்கக் கூடியதுதான். எங்க ஊர்க்காரர் இவர் என்ற பெருமையும் எனக்குள் உண்டு.

தொலைக்காட்சிச் செய்தி அவர் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியதாகச் சொன்னது. அந்தப் பத்தாயிரம் பாடல்களும் பலப்பல வானொலிகளிலும், தொலைக்காட்சியிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும் வரை அவருக்கு மரணமில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. எம்.ஜி.ஆர்., கண்ணதாசன் போன்றவர்களின் உடல் மறைந்தாலும் மக்கள் மனதில் நிலைத்திருப்பதைப் போலத்தான் டி.எம்.எஸ். பெயரும் மனதில் நிலைத்திருக்கும் என்பதே என் எண்ணம்.

1946ம் ஆண்டு தன் இசைப்பணியைத் துவங்கி மனங்களைக் கொள்ளையிட்ட அவர், 2013ல் மறைந்திருக்கிறார். ‘வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது’ என்றும், ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்றும் அவர் பாடிய பாடல்களைக் கேட்டுத்தான் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது!

சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆருக்காகப் பாடிய குரல் பற்றி டி.எம்.எஸ். சொன்‌னதை இங்கே க்ளிக்கி டவுன்லோடு செய்து கேட்கலாம் நீங்கள்!

Saturday, May 25, 2013

குழந்தை!

Posted by பால கணேஷ் Saturday, May 25, 2013
ரம் சரமாய் திரும்பிய பக்கமெல்லாம் கலர் பல்புகள் ஜொலித்தன. தோட்டத்தின் ஒரு பக்கத்தில் வரிசையாய் மேஜைகள் அமைத்து, ஏராஆஆளமான ஐட்டங்களை அடுக்கி வைத்திருக்கிற பஃபே டைப் விருந்து. இந்தப் பக்கம் ஒரு மேடை அமைத்து இசைக் கச்சேரி. ‘ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து’ பாடலை டி.எம்.எஸ். கேட்டால் தற்கொலை செய்து கொள்கிற ரேஞ்சில் ஒருவர் பாடி(?)க் கொண்டிருந்தார். மணமக்களை வாழ்த்திப் பரிசு தந்துவிட்டு இதையெல்லாம் கவனித்தபடி நடந்து கொண்டிருந்த நான், ‘‘ஜெய்ய்யாஆஆ’’ என்ற உற்சாகமான உரத்த குரலைக் கேட்டதுமே, ‘‘விமலா...’’ என்றபடி திரும்பினேன். ஜெயந்தி என்கிற பேரை ஜெய், ஜெய்யூ என்றெல்லாம் அவரவர் மனசுப்படி சுருக்கிக் கூப்பிட்டாலும், நாலு மாத்திரைகூட இழுத்து கூப்பிடக் கூடியவள் விமலா மட்டுமே!

சென்ற வருடம் பார்த்ததைவிடச் சற்றே குண்டாகியிருந்ததாகத் தோன்றியது. நெகுநெகுவென்ற அவள் உயரம் காரணமாக அதிகம் பருமன் தெரியாது. பார்வையிலேயே எல்லாத்தையும் கொட்டிவிடும் அந்த கோலிக்குண்டு கண்கள், ‌கொழு‌கொழுவென்று பார்த்ததுமே கிள்ளத் தூண்டுகிற கன்னங்கள், நிமிஷத்துக்கு 120 வார்த்தைகள் ஸ்பீடில் பேசுகிற அவள் பேச்சு... ரசித்துப் பார்த்தபடியே வந்தவள், சற்றே மேடிட்டிருந்த வயிற்றைக் கண்டதும் வியந்து போனேன். ‘‘ஏய்...! எத்தனை மாசம்?’’ என் கேள்விக்குப் பதில் தராமல் கோபமாக, ‘‘அமெரிக்காவுலருந்து எப்ப வந்த? ஒரு தகவல் இல்ல... போன் கால் இல்ல... இப்பிடி வழில பாத்துத்தான் நான் பேசணுமா? போடி...’’ என்று பொரிந்துவிட்டு நகர்ந்தாள்.

பி்ன்னாலேயே சென்று சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. அதற்குள் எத்தனை இடைஞ்சல்கள்! ‘‘ஹாய் விமலா! சிவா வரலையா?’’ என்றும், ‘‘ஹேய் விமல்! ரம்யாவைக் கூட்டிட்டு வரலையா?’’ என்றும் குறுக்கிட்டு பலர் அவளிடம் பேசிவிட்டுச் சென்றனர். ‘‘நானும் கேக்கணும்னு நெனச்சேன்... ஏன் ரம்யாவைக் கூட்டிட்டு வரலை நீ?’’ என்றேன். ‘‘இல்லடி.. அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல. அதான் சிவாவைக் கூட இருந்து பாத்துக்கச் சொல்லிட்டு நான் மட்டுமாவது அட்டெண்ட் பண்ணலாமேன்னு வந்துட்டேன்’’ என்றாள். அப்போதுதான் லக்ஷ்மி அம்மா தோட்டத்தினுள் நுழைவதைக் கவனித்தேன். ‘‘ஏய்... உன் மாமியார் வர்றாங்கடி. வா, வெல்கம் பண்ணலாம்...’’ என்றதுமே முகம் மாறினாள் விமலா. ‘‘நீ போய்ப் பேசு... நான் வரலை...’’ என்றவள் சட்டென்று வேறு பக்கம் சென்று விட்டாள். நான் லக்ஷ்மியம்மாவை நோக்கி விரைந்தேன்.

க்ஷ்மியம்மாவைப் போல ஒரு மாமியார் எனக்குக் கிடைக்கவில்லையே என்று பலமுறை நான் நினைத்து ஏங்கியதுண்டு. சிவாவை விமலா காதலித்த போது வசதி குறைந்த ஏழைப் பெண் என்பதுபோல காரணங்களை அடுக்காமல் கல்யாணத்துக்கு மனமுவந்து சம்மதித்தவர், மருமகளைப் போல இல்லாமல் ஒரு மகளைப் போலவே அவளைக் கொண்டாடியவர் எனகிற பல விஷயங்களை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன் நான். அவர்களுக்கு கல்யாணமாகி இரண்டு வருஷங்கள் கழிந்தும் குழந்தை பிறக்காமலிருந்ததால், ‘‘போய் டாக்டர்கிட்ட டெஸ்ட் பண்ணிட்டு வந்துருங்களேன்... யார்கிட்ட பிரச்னை இருந்தாலும் ட்ரீட்மெண்ட் குடுத்து சரி பண்ணிக்கலாம்’’ என்று மட்டும்தான் சொன்னார் லக்ஷ்மியம்மா. விமலாவுக்கு வேண்டாதவளாகிப் போனார்.




ஏனோ தெரியாது... சின்ன வயசிலிருந்தே ஹாஸ்பிடல், டாக்டர் என்றால் விமலாவுக்கு அலர்ஜிதான்! 99 சதவீதம் தவிர்த்து விடுவாள். ‘‘இல்ல ஜெய்ய்யா.. டாக்டரைப் பாத்துட்டு அவர் சைடு குறைன்னு சொன்னா, அவருக்கு வருத்தமாயிடும் காம்ப்ளக்ஸ் வரும். என் சைடுலன்னாலோ நான் மாமியாருக்கு வேண்டாதவளாயிடுவேன், ரெண்டாங் கல்யாணம் பத்திப் பேச்சு வரும்... என்னதான் நல்ல மாமியாரா இருந்தாலும் சில விஷயங்கள்ல புலி புல்லைத் திங்காதுடி. அதான் எனக்கு இந்த வார்த்தையே பிடிக்கல...’’ என்றாள் என்னிடம். அன்று துவங்கி சின்னச் சின்ன உரசல்கள் வளர, ‘‘உறவு நீடிக்கணும்னா விலகியிருக்கணும் சிவா. நான் நம்ம பூர்வீக வீட்டுக்கே போ‌றேன். அங்க வந்து என்னப் பாத்துக்கோ’’ என்றுவிட்டு விலகி்ப் போனார் லக்ஷ்மியம்மா.

மேடையில் பாடுபவர்களை உன்னிப்பாக கவனிப்பவள் போல பாவனை செய்து கொண்டிருந்த விமலாவின் அருகில் காலியாயிருந்த இருக்கையைப் பிடித்தேன். ‘‘ஏய... அவங்க உன்னைப் பாத்துட்டாங்க... நீ அவங்களை கவனிக்கலை, அதனாலதான் வந்து பேசலைன்னு சமாளிச்சு வெச்சிருக்கேன். போய்ப் பேசுடி ப்ளீஸ்... இந்த மாதிரி பப்ளிக் ஃபங்ஷன்ல பாத்தும் பாக்காம போறது வம்பு பேசறவங்களுக்கு நீயா ஸ்னாக்ஸ் குடுக்கற மாதிரி ஆய்டும். சும்மா ஃபார்மாலிட்டியாவாவது ரெண்டு வார்த்தை பேசிட்டு வா’’ என்றேன். கொஞ்ச நேரம் இப்படிப் பலவிதமாய் எடுத்துச் சொன்னதும் வேண்டாவெறுப்பாய் கிளம்பிச் சென்றாள் விமலா. அவள் லக்ஷ்மி அம்மாவின் அருகி்ல சென்று அமர்வதையும், அவர்களுடன் பேசுவதையும் இங்கிருந்தே கவனித்துக் கொண்டிருந்தேன்.

‘‘ஏய்... ஜெயந்தி! ப்ரஸன்ட் குடுக்கப் போறேன்... கூட வாடி’’ என்று தோழி ஒருத்தி இழுத்துச் சென்றதால் மேடையேறி விட்டு சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது... சர்ப்ரைஸ்! லக்ஷ்மியம்மாவுடன் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தாள் விமலா. பேசியபடியே அவர்கள் கையைப் பிடித்து எழுப்பி, அழைத்து வந்தாள். ‘‘ஏய் ஜெய்ய்யா... அம்மாவுக்கு பஃபேன்னா அலர்ஜி. அதனால டைனிங் ரூமுக்குக் கூட்டிட்டுப் போய் சாப்பிட வெச்சுட்டு வர்றேன். கிளம்பிடாதடி... நாம சேர்ந்து சாப்பிடலாம்’’ என்றுவிட்டு கடந்து சென்றாள். என்னவாயிற்ற இவளுக்கு? மனதுக்குள் வியந்த‌வாறே பின்‌தொடர்ந்தேன். ஒவ்வொரு ஐட்டமாக பரிமாறுபவர்களுடன் கூடவே இருந்து பார்த்து பார்த்து அப்படி கவனித்தாள! லக்ஷ்மியம்மா கை கழுவ எழுந்து செல்ல...அதற்குமேல் என்னால் பொறுக்க முடியவில்லை. ‘‘ஏய்... என்னாச்சுடி... ரெண்டு வார்த்தை ஃபார்மாலிட்டியா பேசறேன்னு ‌போன... இப்பப் பாத்தா, அம்மா, அம்மான்னு உருகற? என்னாச்சு?’’ என்றேன்.

‘‘ஜெய்ய்யா...’’ என்று என் பக்கம் திரும்பியவளின் கண்கள் கலங்கியிருந்தன. ‘‘இந்த ஃபங்ஷனுக்கு வந்திருந்தவங்க எல்லாரும் என்கிட்ட ‘ரம்யாவைக் கூட்டிட்டு வரலையா?’ன்னு கேட்டாங்க. ஒரு சிலர் ‘எங்க உன் வளர்ப்புப் பொண்ணு? விட்டுட்டு வந்திட்டியா’ன்னு கூடக் கேட்டாங்க. இப்படி  யாரும் பேசறது ரம்யாவோட காதுல பட்டு, அவ மனசுல ஏதும் விரிசல் விட்றக் கூடாதுன்னுதான் இந்த மாதிரி ஃபங்ஷனுக்கு அவளை அவாய்ட் பண்ணிடறேன். அவளுக்கு விஷங்களை அலசற அளவுக்கு வயசும், மனசும் வளர்ந்தபிறகுதான் இந்த விஷயம் தெரியணும்னு நினைக்கிறேன் நான். ஆனா... அம்மாகிட்ட நான் பேசப் போனதுமே, ‘எங்கம்மா என் பேத்தி? கூட்டிட்டு வரலையா? என்ன முழிக்கற...? என் பேத்தி ரம்யாவைக் கூட்டிட்டு வரலையான்னு கேட்டேம்மா?’ன்னு தான் பேசவே ஆரம்பிச்சாங்க. அம்மா வீட்டை விட்டுப் போன பிறகு, என் மன ஆறுதலுக்காக அவங்ககிட்டகூட கன்சல்ட் பண்ணாம நான் ரம்யாவை எடுத்து வளர்கக ஆரம்பிச்சேன்ங்கறத நல்லாப் புரிஞ்சுக்கிட்டும் கூட, ‘என் பேத்தி’ன்னு ஒரே வார்த்தையில அங்கீகரிச்சுட்டாங்க... எவ்ளவ் பெரிய மனசுடி!  நான் உண்டாயிருக்கேன்றதை கவனிச்சதும் அவங்க முகத்துல அவ்வளவு சந்தோஷம். நான்தான் அம்மாவை சரியாப் புரிஞ்சுக்கலேன்னு அந்த நிமிஷம் புரிஞ்சுக்கிட்டேன்.  வீட்டுக்குப் போனதும் சிவாட்ட சொல்லி, முதல்ல அம்மாவை கால்ல, கைல விழுந்தாவது வீட்டுக்குக் கூட்டிட்டு வரச் சொல்லப் போறேன்’’ என்றாள் கோலிக்குண்டு கண்கள் ஜொலிக்க.

அந்த கொழுகொழு கன்னத்தில் ஒரு முத்தமிட்டு, அவளைக் கட்டிக கொண்டு முத்தமிட்ட அந்தக் கணத்தில் என் மனம் முழுக்க சந்தோஷம் ததும்பி வழிந்தது.
 
பி.கு.1.: கதைக்கான கரு மறைந்த திரு.ரா.கி.ர. அவர்களுடையது. இருந்தாலும் கதை சுமாராக வந்திருக்கேன்னு யாராவது நினைச்சா அது எழுதின என்னோட குறைதான். பாராட்டினீங்கன்னா அது அவரையே போய் அடையட்டும்!

 பி.கு.2 : கடந்த வாரத்திலிருந்து நாளை (ஞாயிறு) வரை தொடர்ந்த பணிச்சுமை மற்றும் மின்சாரத் துறை (28 மணி நேரம் கரண்ட் கட் எங்க ஏரியாவுல ஒரு நாள், ராமர் க‌ோவில் தேர் வருதுன்னு ஒரு நாள்) காரணமாக நான் அனைவரின் தளத்திலும் படிக்கவும் கருத்திடவும் இயலவில்லை. பொறுத்தருள்க. திங்கள் முதல் மீண்டும் சந்திக்கலாம்.

Wednesday, May 22, 2013

கமல் மாறி விட்டா(ரா)னா?

Posted by பால கணேஷ் Wednesday, May 22, 2013
‘இதய மலர்’ பட ஷுட்டிங். ஜெமினிகணேசன் அவர்கள் டைரக்ட் செய்து கொண்டிருந்தார். மாலை 3 மணி முதல் 10 மணி வரை கால்ஷீட். ஒரு குழந்தை, விஜயகுமார், கமலஹாசன் நடிக்கும் காட்சி. இரவு 9 மணியைத் தாண்டி விட்டதால் குழந்தைக்குத் தூக்கம் வந்து விட்டது. பெரிய வசனம்! குழந்தைக்குக் குளறியது. கமலஹாசனுக்கும் தூக்கம் வந்துவிட்டதா அல்லது நாள் முழுவதும் ஷுட்டிங் செய்த அலுப்பா என்று தெரியவி்‌ல்லை... சலிப்புடன் முகத்தைச் சுளித்துக் கொண்டான். குழந்தைக்கு வசனம் சரியாக வந்தவுடன் கூப்பிடுமாறு சொல்லிவிட்டு ஒரு சோபாவில் சாய்ந்து கொண்டான்.

டைரக்டர் ஜெமினி சற்றும் சலிப்பில்லாமல், கோபம் கொள்ளாமல் குழந்தைக்கு வசனம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்- குழந்தைக்குச் சமமாக மண்டியிட்டுக் கொண்டு! இந்தக் காட்சியை சலிப்புடனும் வெறுப்புடனும் பார்த்துக் கொண்டிருந்த கமலின் முகம் திடீரென்று மலர்ந்தது. சட்டென்று எழுந்துவந்து குழந்தையை உற்சாகப்படுத்தி, அதற்கு வசனம் பேச வரும்வரை பொறுமையுடன் இருந்து காட்சியை முடித்துக் கொடுத்தான். ‘‘ஏன் இந்தப் புத்துணர்ச்சி?’’ என்று கமல் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

பதில்: புத்துணர்ச்சி அல்ல, குற்ற உணர்ச்சி! குழந்தை நட்சத்திரத்தைப் பார்த்து முகம் சுளித்த கமல், பல ஆண்டுகளுக்கு முன் ஒரு குழந்தை நட்த்திரமாக இதேபோல் பல இரவுகளில் ஷுட்டிங்கில் வசனங்களைக் குழறியிருக்கிறான். சக நடிகர்கள் யாரும் முகம் சுளித்ததாக அவனுக்கு ஞாபகம் இல்லை. மாறாக இன்முகத்துடன் உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தனர். இதே ஜெமினிகணேசன் ‘அங்கிள்’ இதே கனிவுடன் இதேபோல் முகம் சுளிக்காமல் வசனம் சொல்லிக் கொடுத்த ஞாபகம் கமலுக்கு வந்துவிட்டது. அன்று இனிமையாகப் பேசி கொஞ்சிக் கொஞ்சி நடிக்க வைக்கப்பட்ட குழந்தை நட்சத்திரம் கமல் இன்று பெரியோரின் ஆசியால் வளர்ந்துவிட்டான்.

அவனை வளர்த்தவர்கள் அதே அன்புடனும் குணத்துடனும் இருக்கிறார்கள். கமல் மாறிவிட்டானா? கர்வமா? எதுவாக இருந்தாலும் திருத்தப்பட வேண்டிய, திருத்தப்படக் கூடிய தவறுகள்தான். அவன் வந்த வழியை அவன் திரும்பிப் பார்த்தால் அவன் தவற மாட்டான். அது நிச்சயம். ஆனால் அதையும் மீறி அவன் கர்வம் கொண்டால் திருத்த வேண்டியது அவனை உருவாக்கிய பெரியோரின் பொறுப்பு.
அன்றைய கமலஹாசன்கள்! (கல்லூரி நாட்களில் என் ஃபேவரைட்)
கரம் முழுவதும் "Enter the Dragon" வியாதி பரவியிரு்கிறது. என் வயதுள்ள முக்கால்வாசிப் பேர் கராத்தே கற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் முஷ்டி கறத்து, காய்த்துப் போய் விடுகிறது. இதுதான் அவர்கள் கராத்தே வீரர் என்பதற்கு அடையாளம். மற்றபடி எல்லாரையம் போலத்தான் இருக்கிறார்கள். ஒரு கராத்தேக்காரர் அடிப்பதற்கு முன்னால் ‘கீயா’ (kiah) என்ற ‌போடும் ச்த்தமே போதும் எதிரியைப் பயமுறுத்த.

கராத்தே வகுப்புக்கு என் நண்பருடன் சென்றிருந்தேன் வேடிக்கை பார்க்க. நண்பர் மெலிந்தவர். சாமானியர். சென்னை டாக்சி/ஆட்டோ டிரைவர்களிடம்கூட அவருக்குக் கோபம் வராது. அவ்வளவு சாது. கராத்தே வகுப்பில் மாணவர்கள் செய்யும் சத்தத்தைக் கேட்டு மிரண்டு விட்டார். ‘‘ஏன் தம்பி, இதுக்குப் பேரு கராத்தேயா, இல்ல, கத்தறேயா? இப்படிக் கத்தறாங்களே?’’ என்றார். ‘‘என்ன, கேலி பண்றீங்க? முடிஞ்சா அவங்க செய்யற மாதிரி செய்யுங்களேன் பார்ப்போம்’’ என்றேன். ‘‘செய்யறது பெரிய கஷ்டமில்‌லே, செஞ்சிடுவேன். ஆனா இப்ப வேணாம். என்னால இவங்க மாதிரி கத்த முடியாது. தொண்டை சரியில்லை’’ என்று மழுப்பிவிட்டார்.

சினிமா ஸ்டண்ட்காரர் ஒருவர், ‘‘இந்தக் கராத்தே எல்லாம் நம்ம தஞ்சாவூர் குத்துவரிசையும், கேரளத்துக் களரியும் ஒண்ணாச் சேர்ந்ததுதான். இந்தியாவிலிருந்து சைனா போன ஒரு புத்தபிட்சு இங்கேருந்து கொண்டுபோன வித்தைதான் கராத்தே’’ என்று சம்பந்தமில்லாமல் பழம்பெருமை பாடுகிறார். எனக்குத் தெரிந்த உண்மை: பதினேழாம் நூற்றாண்டில் ‘ரூ க்யூ’ (Ryu Kyu) என்ற ஒரு தீவுவாசிகள் ஜப்பானிய ஆதிக்கத்திலிருந்தார்கள். அந்தத் தீவின் மக்கள் யாரும் ஆயுதங்கள் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஜப்பானிய அரசாங்கம் சட்டம் போட்டிருந்தது. ஆதிக்கத்தை முறியடிக்கவும், ஆயுதுமில்லாத தற்காப்புக் கலைக்காகவும் இத்தீவு மக்கள் கண்டுபிடித்த போர் முறை கராத்தே. ‘கரா’ என்றால் வெறுமை. ‘தே’ என்றால் கை. வெறுங்கை - கராத்தே.

ஏழெட்டுச் செங்கல்களை ஒன்றாக அடுக்கி, தலையாலும் கையாலும் உடைக்கும் என் நண்பர்கள் இருக்கிறார்கள். நானும் இரண்டு ஆண்டுகளக்கு முன் கராத்தே கற்கத் தொடங்கி முடியாமல் ஓடிவந்து விட்டேன். இப்போது மீண்டும் கற்கத் தொடங்கி இருக்கிறேன். ஐந்தில் வளையாததைக்கூட வளைக்கிறார்கள் கராத்தே ஆசிரியர்கள். என்னைப் பொறுத்தவரை கராத்தே கற்றுக் கொண்டால் தைரியமாகக் கடன் கொடுக்கலாம், கடன் வாங்கலாம் - கராத்தே தெரியாதவர்களிடம்!

*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

- மேலே கொடுக்கப்பட்டிருப்பவைகள் இன்றைய கலகநாயகன்... ஸாரி, உலகநாயகன் (அன்றைய வளரும் நடிகன்) கமல் 1975ம் ஆண்டு ‘குமுதம்’ இதழில் எழுதி வந்த ஒருபக்கக் கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்டவை.

Monday, May 20, 2013

மாலே, சிவகுமாரா!

Posted by பால கணேஷ் Monday, May 20, 2013
ரண்டு வாரங்களாக டூர் அடித்தபின் நேற்று ஞாயிறன்று சென்னையிலேயே சோம்பலான பொழுதாகக் கழிந்து கொண்டிருந்த சமயம், மெ.ப.சிவகுமாரிடமிருந்து போன் வந்தது. ‘‘என்ன சிவா?’’ என்றதற்கு, ‘‘ஸார்! வடபழனில ஃபோரம் மால்ன்னு புதுசா ஒண்ணு திறந்திருக்காங்க. போய் சுத்திட்டு வரலாமா?..’’ என்றார். கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பித்து மூன்று மணி நேரம் ஏ.ஸி.யி.ல் கழிக்கலாம் என்ற சபலத்தில் ‘‘ஓ.கே.’’ என்றேன் சிவாவின் பின்னணிச் சதி புரியாமல். ‘‘சரி, 12 மணிக்கு ரெடியா இருங்க’’ என்றார். அந்த நல்லவன் வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன், ‘‘சிவனேன்னு வீட்ல கிடந்த என்னை 'வடபழனில புதுசா Forum Mall திறந்திருக்காங்க. கெளம்புடா. சைட் அடிக்க போலாம்' என்று தரதரவென்று உச்சி வெய்யில் இழுத்து செல்லப்போகும் பாலகணேஷ் அவர்களே!! நம்மள எதிர்க்கட்சிக்காரன் பாத்தா என்ன நெனைப்பான்? இருந்தாலும்...இதோ கெளம்பிட்டேன்’’ என்று மூஞ்சிப்புத்தகத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு கிளம்பியிருக்கிறார். கூடவே ‘ரெமோ பாலகணேஷுடன் அம்பி சிவா’ என்று கமெண்ட் வேறு. பாருங்க பொது(ப்ளாக்)மக்களே... ஒரு அப்பாவி(!)யோட இமேஜை எப்படில்லாம் டாமேஜ் பண்றாங்கன்னு...! அவ்வ்வ்வ்வ்!

தரைத்தளத்திலிருந்து பிரம்மாண்டமான இந்த மாலின் ஒரு பகுதி!
டபழனியில் கமலா தியேட்டருக்கு எதிரில், க்ரீன் பார்க் ஓட்டலுக்கு அருகில் நான்கு ப்ளோர்களுடன் பிரம்மாண்டமாக முளைத்திருக்கிற ஒய்யார மோகினி ஃபாரம் விஜயா மால்! சென்ற வாரம் ‌கோவை ஆவியுடன் கோவையில் பார்த்த மாலை மனதிற்குள் மிக வியந்திருந்தேன். இந்த மாலின் அழகு அதைத் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விட்டது! சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் மால், ஸ்கைவாக் மால் உள்ளிட்ட எல்லாவற்றையும் விட வெகு அழகு! வாகனத்தை உள்ளே செலுத்தி நிறுத்தியதுமே முதல் அதிர்ச்சி காத்திருந்தது. ‘‘பார்க்கிங் ஃப்ரீ சார்’’ என்றாள் அங்கு டிக்கெட் வழங்கிய ‌கன்னி(?). சிவாவிடம் இதைப் பற்றிப் புகழ்ந்தவாறே மாலினுள் நுழைய, ‘‘முதல் ஒரு மாசம்தான் இப்படி ஃப்ரீ பார்க்கிங் தருவாங்க. அப்புறம் கண்டிப்பா சார்ஜ் பண்ணிடுவாங்க ஸார்’’ என்றார் சிவா. ‌ம்ம்ம்... இந்த விஷயத்தைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேணும்!

சிங்கம் போல... ஏ சிங்கம் போல நிக்கிறாரு எங்க தளபதி, அட எஸ்கலேட்டர் ஏறி வாரார் எங்க தளபதி!
உள்ளே சென்றதும் முதலில் கவனத்தை ஈர்த்தது இரண்டு வரிசைக கடைகளுக்கு இடையில் நடப்பதற்கு தாராளமாக இடம் விட்டு அமைத்திருக்கும் விதம். இரண்டாவதாக கவனத்தைக் கவர்ந்தது ஒவ்வொரு மாடிக்கும் ஏறி இறங்க எஸ்கலேட்டர்கள் வைத்திருப்பது! மூ்ன்றாவதாக கவனத்தைக் கவர்ந்தது வெறும் செருப்புக் கால்களாலேயே ஸ்கேட்டிங் செய்கிற விதமாக அமைக்கப்பட்டிருக்கும் அழகான வழவழ ஃப்ளோரிங்! நான்காவதாக...  ‘‘சிவா, அந்த பொம்மை நல்லா இருக்கு பாரேன்’’ என்றேன். வேகமாக நான் கை காட்டிய திசையில் திரும்பிப் பார்த்த சிவா, அங்கே ஒரு கடையின் கவுண்ட்டரில் பில்லிங் ‌செக்ஷனில் இருந்த பெண்ணைக் கண்டதும் ஜெர்க் ஆனார். ‘‘ஸாஆஆர்!’’ என்றார். பின்ன ‘ரெமோ’ வேற எப்படி இருக்கறதாம்? எனக்குப் பெண் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் - நிபந்தனை - பதினெட்டு ஆண்டுக்கு முன் பிறந்திருக்க வேண்டும். ஹி... ஹி...!

கிரவுண்ட் ஃப்ளோரில் ‘தாம்பூலா -ரிடர்‌ன் கிஃப்ட் ஷாப்’ என்று ஒரு கடையினுள் முதலில் நுழைந்தோம். ‘‘ரிடர்ன் கிப்ட் என்றால் கல்யாணத்துல நமக்கு அதிகமா வந்த பொருள்களை இவங்கட்ட ரிடர்ன் பண்ணிட்டு பணம் வாங்கிக்கற சிஸ்டமா இருக்கும்’’ என்றேன். கடையில் இருந்தவர், ‘‘கல்யாணத்துல நமக்கு கிஃப்ட் பண்றவங்களுக்கு, நாம ரிடர்ன் கிஃப்ட் இங்க வாங்கி பண்ணலாம். அதுக்கான கடை இது’’ என்றார். அங்கே வைக்கப்பட்டிருந்த சின்ன, பெரிய யானை பொம்மைகள் நுணுக்கமான கலை வேலைப்பாடுகளுடன் கவனத்தைக் கவர்ந்தார். சிவா ஒரு யானை பொம்மையை எடுத்துப் பார்த்துவிட்டு, ‘‘ரொம்ப சீப் ஸார்... 850 ரூபாதான்’’ என்றார். ‘‘அடப்பாஆஆஆவி! இதுவா சீப்பு?’’ என்று வேகமாக அவரை இழுத்துக் கொண்டு, அடுத்த ப்ளோருக்குச் சென்றோம்.

நடக்கறதுக்கு என்னங்க... ஓடிப்பிடிச்சே விளையாடற அளவு தாராளமா இடம்!
கிரவுண்ட் ஃப்ளோரிலும் முதல் ப்ளோரிலும் ஆரெம்கேவி இரண்டு ஷாப்கள் இருக்கின்றன. முதல் ப்ளோர் கடையில் உள்ளே நுழைந்ததும் கஸ்டமர்களுககு அவர்கள் தரும் வரவேற்பு மிகப் பிடித்திருந்தது. உள்ளே ஒரு ரவுண்ட் வந்தோம். குறைந்த பட்ஜெட்டாக 500 ரூபாயில் தொடங்கி கல்யாண மாப்பிள்ளைகள் அணியும் கற்கள் பதித்த உடை, கிரீடம், வேலைப்பாடான செருப்பு உள்ளிட்ட உடைகள் 20ஆயிரம் வரை எக்க்கச்சக்கமாக வைத்திருக்கிறார்கள். கடையின் முகப்பிலேயே எலக்ட்ரானிக் தறியில் ஒருவர் பட்டுப் புடவை நெய்து கொண்டிருப்பதை லைவாகப் பார்க்க முடிந்தது கூடுதல் ரசனை!

இரண்டாவது ப்ளோரில் ஒரு ஸ்போர்ட்ஸ் கடையினுள் விசிட் அடித்தோம். டென்ட் அடிக்கும் மெட்டீரியலிலிருந்து பந்து வரை எல்லா ஐட்டங்களும் வைத்திருக்கிறார்கள்- ‘குறைந்த’(?) விலையில்! அங்கே ஒரு ஆசாமி வாட்டர் ஸர்ஃபிங் பண்ணுவது மாதிரியான ஒரு சக்கரம் வைத்த ஐட்டத்தில் ;நின்றபடி கடையைச் சுற்றிச் சுற்றி வந்ததும், அவர் கையில் விஷ்ணுவின் சக்கரம் போல ஒரு வாலிபால் பந்தை சுழல வைத்தபடி கீழே விழாமல் இருந்ததும் அசர வைத்தது! அங்கே ‘ஸால்ட்’ என்ற ரெஸ்டாரண்ட் இருகக, அதன் வாசலில் ப்ரைஸ் லிஸ்டை போர்டில் எழுதி வைத்திருந்தார்கள். ‘‘இருங்க ஸார், பாத்துட்டுப் போலாம்’’ என்றார் சிவா. என்னே ஒரு தீர்க்கதரிசனம் சிவாவுக்கு! அந்த விலைகளை பார்க்க மட்டும்தான் முடிந்தது. ‘ஹும்ம்’ என்று பெருமூச்சு விட்டு, ‘‘வா, அடுத்த ஃப்ளோருக்குப் போலாம்’’ என்றேன். மூன்றாவது மாடிக்குச் சென்றோம். வழியில் நிறைய ‘பொம்மைகள்’ இந்த இளைஞனின் கண்ணில் பட்டு ரசிக்க வைத்தன. ஸைட் அடிக்கும் வயதைக் கடந்திருந்த சிவா பவ்யமாக நேர் பார்வையுடன் உடன் வந்தார்.

மூன்றாவது மாடியில் சுற்றியபடியே வர ‘உணவு நீதிமன்றம்’ (Food Court) கண்ணைக் கவர்ந்தது. உள்ளே... அராபியன் கடைகளிலிருந்து நம்ம இட்லி, வடை கடை வரை வரிசையாக அணிவகுத்திருந்தன. வரிசையாகப் பார்த்தபடி வர, பாண்டி கடை எனற தலைப்பில் கீழே மதுரை - போஸ்ட் நம்பர் 5 என்ற சப்டைட்டிலுடன் இருந்த கடை கண்ணை இழுத்தது. திண்டுக்கல் பிரியாணியிலிருந்து ஜிகர்தண்டா வரை சுத்தமான எங்கூர்க் கடை! கண்ணை இழுக்காதா பின்னே? சிவா அங்கே ஏதாவது சாப்பிட்டு டேஸ்ட் பார்க்கலாம் என்றதால் (அவர் உபயத்தில்) உணவை வாங்கினோம். ‘‘தண்ணி குடுங்க ஸார்’’ என்றதற்கு, ‘‘‌லெஃப்ட்ல ரெண்டாவது கடையில கிடைக்கும் ஸார்’’ என்றார்கள். தலைவர் கேபிள் சங்கர் சொல்லித் தந்தபடி சண்டை போட்ர வேண்டியதுதான் என்று எங்களுக்குள்ளிருந்த அன்னியனை எழுப்பி நாங்கள் தயாராகி, ‘‘அது வேணாம் ஸார்... சாப்பாடு குடுத்த நீங்க தண்ணி தர வேணாமா?’’ என்க, ‘‘அப்ப ரைட் சைட்ல போனீங்கன்னா வாட்டர் இருக்கு. எடுத்துக்கலாம் ஸார்’’ என்றார் கடைச் சிப்பந்தி. வலதுபக்கத்தில் நிறைய பெட் பாட்டில்கள் வைத்து, வாட்டர் கூலரும் வைத்திருந்தார்கள். அன்னியனை கூல் பண்ணி அனுப்பிவிட்டு பாட்டிலில் தண்ணீர் பிடித்துக் கொண்டு சாப்பிட்டோம். கொடுத்த பணத்துக்கு நிறைவான மதிய உணவுங்க!

எலக்ட்ரானிக் தறியும், பாண்டி கடையும், பின்னே ஃபுட்கோர்ட்டும்!
இந்த ஃபுட்‌கோர்ட்டிலும் சாப்பிடுவதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருந்த டேபிள் சேர்கள் மிகப் பிடித்திருந்தன. நான்கு பேர் உட்கார்ந்து சாப்பிடும்படியும், கூடுதல் இரண்டு பேர் வந்தால் பக்கத்திலிருந்து இழுத்துப் போட்டுக் கொள்ளும்படியும் இருந்தன. கலர் காம்பினேஷனும் ரசனை! நிதானமாக அங்கே அமர்ந்து அரட்டையடித்து விட்டு நிறைய (விண்டோ) ஷாப்பிங் பண்ணியதில் களைப்பாகி விட்டதால், கீழே வந்து ஆளுக்‌கொரு சாக்லேட் பட்டையை பர்ச்சேஸ் பண்ணிவிட்டுக் கிளம்பினோம். மூன்று மணி நேரத்தை நண்பனுடன் அங்கே கழித்ததில் மனம் உற்சாகமாகியிருந்தது. என் பேட்டரி ரீசார்ஜ் செய்யப்பட்டுவிட்ட உணர்வு எனக்குள் நிரம்பியிருந்தது. மாலே மால் இது பலே மால் என்று அடையாளம் காட்டிய சிவகுமாரா! உனக்கு மிக்க நன்றி! (ஹையா... ஒருவழியா டைட்டிலை ஜஸ்டிஃபை பண்ணிட்டேனே!)

Thursday, May 16, 2013

ஜாலியா கொஞ்சம் அரட்டை!

Posted by பால கணேஷ் Thursday, May 16, 2013
ஹாய்... ஹாய்... ஹாய்..! எல்லாத்துக்கும் வணக்கம்! சுகந்தன்னே...? கடந்த வாரம், பத்து நாளா கோவை, பெங்களூரு எனறு தொடர்ந்து பயணங்கள் அமைஞ்சதுனாலயும், எங்க ஏரியாவுல மின்சார கேபிள்கள் ஒண்ணு மாத்தி ஒண்ணா பல இடங்கள்ல பழுதுபட்டுப் போனதுனால சரியானபடி மின்சார வசதி கிடைக்காம படுத்தி எடுத்ததுனாலயும் வலைப் பக்கம் எட்டிப் பாக்கக் கூட முடியாமப் போச்சு. எதையும் படிக்கவும் எழுதவும் முடியாமப் போனதுல ரொம்ப வருத்தம் எனக்கு. ஐ மிஸ்ட் யூ ஆல்!

கோயமுத்தூர்ல நான் போன வேலைய முடிச்சுப்போட்டு நண்பர்களைச் சந்திக்கலாமுனு பாத்தா... ஜீவா அண்ணாவும், சரளா அக்காவும் (ஒரு மருவாதிதேன்) ஊர்லஇல்லன்னு சொல்லிப் போட்டாங்க. அடடா...ன்னு ஏமாற்றமடைஞ்ச எனக்கு ‘நான் க‌ோவைலதான் இருக்கேனுங்கோ’ என்று அபயம் தந்தார் ஆவி. (அறியாதவர்களுக்கு: னந்தராஜா விஜயராகவன் என்பதன் சுருக்!) அவரையும் ஜீவன்சுப்புவையும் பாத்துடலாம், ரெண்டு நாள் கோவையில ரிலாக்ஸ்டா சுத்தலாமுன்னு போனேனுங்கோ. ஆனா நாம நெனச்சச மாதிரி எங்கிங்க நடக்குது? கெரவம் ஒரே நாள்ல பொட்டியத் தூக்க வேண்டியதாயிடுச்சுங்கோ! தம்பி ஜீவன்சுப்புவுக்கு போன் பண்ணி நான் வாங்கியிருந்த அப்பாயின்ட்மென்ட்டை கேன்சல் பண்ணி, அடுத்த முறை பாக்கலாம்னுட்டுக் கெளம்பிட்டனுங்கோ! ஆசாமி நம்ம மேல கான்டாகி செம கடுப்புல இருப்பாருன்னு நெனக்கிறேன்!

கோவை ஆவி என்னை ஒரு ஷாப்பிங் மாலுக்குக் கூட்டிட்டுப் போனார். கோயமுத்தூர்ல அவ்வளவு பிரம்மாண்டமா, அழகான ஒரு மாலை நான் எதிர்பார்க்கலை. ஏறத்தாழ ரெண்டு மணி நேரம் நானும், ஆவியும், (உலகசினிமா ரசிகன்) பாஸ்கரன் சாருமா உரையாடினது மறக்க முடியாத அனுபவம். என் பெங்களூரு நண்பன் ஒரு அவசர வேலை இருப்பதாகச் சொல்லி வரச் சொன்னதால கோவையிலயே என்னுடைய ரொம்ப நாள் விருப்பமான ஆன்ட்ராய்ட் மொபைல் (ஸாம்ஸங்) ஒண்ணை பர்ச்சேஸ் பண்ணிட்டு அன்றிரவே பெங்களூர் போனேன்.எங்க சந்திப்பை பத்தி கோவை ஆவி பதிவாவே எழுதிட்டாரு... இங்க க்ளிக் பண்ணினா நீங்க படிக்கலாம்.

பெங்களூர்ல கலாசிபாளையத்திலருந்து கன்டோன்மென்ட் வரைக்கும் போக ஆட்டோ பிடிச்சேன். டிஸ்டன்ஸை மனசுக்குள்ள கணக்குப் பண்ணிட்டே வந்தேன். கிட்டத்தட்ட ‌சென்னை கோயம்பேடுலருந்து மாம்பலம் போற தூரம் இருக்கும். ஆட்டோ டிரைவர் நூறு ரூபாய் கேட்டாரு. பெங்களூரில் போன வேலைய முடிச்சுட்டு தனியார் ஏ.ஸி.பஸ்ல சென்னை கோயம்பேடு வந்து இறங்கினதும் ஆட்டோ டிரைவர்கள் மொய்ச்சுக்கிட்டாங்க. அங்கருந்து மாம்பலம் போறதுக்கு எவ்வளவுன்னு கேட்டதுக்கு 175 ரூபா குடுங்க சார்ன்னு கூசாம கேட்டாங்க. சர்தான் போங்கப்பா, நான் உள்ளூர்க்காரன்தான்னு சொல்லிட்டு ரெண்டு பஸ் மாறி 20 ரூபா செலவுல வீட்டுக்கு வந்தேன். இந்த ஆட்டோவாலாக்களால அல்லவா நாங்கல்லாம் நூறு நூறாச் செலவழிக்காம சிக்கனமா 10, 20 பஸ்சுக்கு செலவழிக்க முடியுது. சிக்கனத்தை ப்ராக்டிக்கலா கத்துத் தர்ற இந்த சென்னை ஆட்டோ டிரைவர்கள் மகராஜன்களாக இப்படியே இருக்கட்டும்!

ரைட்டு, நாமளும் இருக்கோம்னு அட்டென்டன்ஸ் குடுத்துரலாம்னு தானுங்க இப்ப வந்தேன். அதனால நான் எதுவும் எழுதி உங்களை போரடிக்காம, சின்னதா நான் படிச்ச சுவாரஸ்யமான விஷயங்களை இங்க தரலாம்னு இருக்கேன். (வொர்க் லோடுலயும் அலைச்சல்லயும் மண்டை காய்ஞ்சு போய் எதுவும் எழுத வரலைங்கறத எவ்வளவு நாசூக்காச் சொல்ல வேண்டியிருக்கு. அவ்வ்வ்வவ்!)
மனுசப் பய புள்ளங்களுக்கு நாங்க மட்டும் குறைஞ்சவிங்களா?
பெண்கள் நெத்தியில இட்டுக்கற திலகத்தை பொட்டுன்னு சொல்வாங்க. இப்பல்லாம் நெத்தியில எந்தப்பகுதியில் பொட்டு வைக்கணும்கற  கட்டுப்பாடே கிடையாது. அழகுக்கும், நாகரிகத்திற்கும் தக்கபடி நெத்தியில எங்க வேணும்னாலும் பொட்டு வெச்சிக்கறாங்க.சிலர் வெச்சுக்காமயும் திரியறாங்க. ‘அது எங்க இஷ்டம்லேய்... நீ யாரு கேக்க?’ன்னு தான் பதில் வரும் இதப்பத்திப் பேசினா. நாஞ்சொல்ல வர்றது என்னன்னாக்கே... வெவ்வேறான நெற்றி அமைப்பை உடையவங்க அதுக்குத் தக்கன பொட்டுக்களை தேர்ந்தெடுக்கலாம்கறதுதேங்!

* விசாலமான நெற்றியைக் கொண்ட பெண்கள்,பெரிய பொட்டு வைத்தால் நெற்றியின் அகலம் குறந்தது போல் அழகாகத் தெரியும். * நெற்றி அகலம் குறைந்தவர்கள்,இரண்டு புருவங்களுக்கு இடையில் ஒரு சிறிய பொட்டு வைத்தாலே எடுப்பாக தெரியும். * சதுர வடிவிலான முக அமைப்பு கொண்டவர்கள் சற்றுப் பெரிய வட்ட வடிவிலான பொட்டு வைக்க வேண்டும். * வட்ட வடிவிலான முக அமைப்பைக் கொண்டவர்கள் சிறிய,பெரிய, முக்கோணம், வளைவு வடிவம் போன்ற பொட்டுக்களை வைக்கலாம். * ஜீன்ஸ், டாப்ஸ், ஸ்கர்ட், மிடி போன்றவற்றை அணியும் பெண்கள் பொட்டு வைக்காமல் இருப்பதும் தனி அழகுதான்! (ஹி... ஹி...)

மனமிருந்தால் நத்தைக்கூட்டில் மான்கள் வாழலாம்! சிங்கம்கூட பாசத்தோட மானை வளர்க்கலாம்œ›!


கொஞ்சம் பொறுங்க.. நான் ஊத்தறதை கிளாஸ் ரொம்பினதும் நீஙக எடுத்துக் குடிக்கலாம்!




Monday, May 6, 2013

கொ(கோ)டைக் கா(ண)னல் - 7

Posted by பால கணேஷ் Monday, May 06, 2013
போட்டிங் போக முடியாத ஏமாற்றத்தை மறைத்து, அரட்டையடித்தபடி ஏரியைச் சுற்றி நடந்தோம். இருபது ரூபாய் வாடகையில் சைக்கிள் கொடுத்துக் கொண்டிருந்தனர். நல்ல குளிர் காற்றில் சைக்கிள் மிதித்தபடி ஏரியைச் சுற்றி வ்ந்தது (ஐந்தரை கிலோமீட்டர் தூரம்) மிக ஆனந்தமாக இருந்தது. இரவு காட்டேஜுக்குத் திரும்பியதும், காட்டேஜுக்கு முன்பு இருந்த புல்வெளியில் விறகுக் கட்டைகளை அடுக்கி, வைத்திருந்தனர். அவற்றைக் கொளுத்தி குளிர்காய்ந்தபடி இரவு உணவும், அதன்பின் பாட்டும், கவிதைகளுமாக சுவாரஸ்யமாக இரண்டாம் தினம் முடிந்தது.

ஏரியைச் சுற்றிய வாலிபன்(?)
மூன்றாம் தினம் காலையில் அனைவரும் தயாராகி வேன் புறப்பட்டதும்தான் தலைவர் விஷயத்தைச் சொன்னார். ‘‘நாம இப்ப பெரியகுளத்துக்குப் போறோம். அங்க டிபன் முடிச்சுட்டு, பக்கத்துல சோத்துப்பாறைங்கற மலையில ஏர்றோம். அங்க பரதேசி படத்தோட ஷுட்டிங் ஸ்பாட்டைப் பாத்துட்டு, மலை அருவில குளிக்கறதுதான் இன்னிக்கு ப்ளான்’’.பெரியகுளத்தில் சில சமையல் பாத்திரங்களையும், சமையல் நபர் ஒருவரையும், மற்றொருவரையும் ஏற்றிக் கொண்டதும்,  கொஞ்ச தூரம் சென்றதும் ஏறிய அந்த மலைப்பாதை மிகக் குறுகலான பாதையாக இருந்தது. இங்கேயும் வனத்துறையின் அனுமதி பெற்றால்தான் பயணிகள் உள்ளே செல்ல முடியும். தலைவருடன் புதிதாய் சேர்ந்திருந்த நபர் அனுமதி வாங்கி வைத்திருந்ததால் (அவர் பெரியகுளம் கவுன்சிலர் என்பது பின்னால்தான் தெரிந்தது) எளிதாக இருந்தது.

‘சூடான’ பாட்டும், கவிதைகளும்1
மலைச்சரிவின் பாதியில் வேன் நிறுத்தப்பட்ட இடம் பரதேசி படத்துக்காகப் போடப்பட்ட குடிசைகளின் செட். இன்னும் அப்படியே கலைக்காமல் இருந்தது. அந்த இடம் இயக்குனர் பாலா அவர்களின் சொந்த இடம் என்பதாகச் ‌சொன்னார்கள். நாங்களனைவரும் அங்கே சுற்றிவந்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டோம். அதன்பின் அந்த மலைச்சரிவில் இன்னும் கொஞ்ச தூரம் பயணித்துச் சென்றதும் ‘ஹோ’வென்ற நீரின் இரைச்சல் காதில் விழுந்தது. அங்கே வேனை நிறுத்தினார் ஓட்டுனர். சரிவிலிருந்து இறங்கி உள்ளே சென்றால் வனம் தனக்குள் ஒரு அபூர்வப் பொக்கிஷத்தை ஒளித்து வைத்திருந்தது.

‘பரதேசி’க் குடிசைகள்
வனத்துறையினரின் அனுமதி பெற்று வரவேண்டிய இடமாதலால் சுற்றுலாப் பயணிகள் அங்கு வருவது குறைவே என்பதால் அருவியும் சுற்றுப்புறங்களும் அதிகம் மாசடையாமல் இருந்தன. நீர் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் அத்தனை தெள்ளியதாக இருந்தது. பாறைகள் சூழ்ந்த பகுதியில் மெல்லிய ஓடையாக ஓடிக் கொண்டிருந்தது. அங்கேயிருந்து கொஞச தூரம் பாறைகளைத் தாவி ஏறி மேலேறிச் சென்றால் குற்றாலம் போல அருவியாக வீழ்ந்து கொண்டிருந்தது. பாறைகளில் ஏறிச் செல்வதுதான் கொஞ்சம் கஷ்டமான விஷயமாக இருந்தது. காரணம்... நாங்கள் அங்கே சென்றடைந்த நேரம் நடுமதியம் என்பதால் வெயில் தகித்ததும், பூச்சிகள் சில தென்பட்டதும்தான்.

பின்னே பரதேசி குடிசைகள்! முன்னே இந்தப்..!
இவை தவிர நமக்கு முன்னே வந்த நல்லவர்கள் குடித்து விட்டு வீசியெறிந்திருந்த பீர் பாட்டில்களிலிருந்து சிதறிய கண்ணாடித் துண்டுகளும் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததால் மிக கவனமாகச் செல்லும்படி ஆயிற்று. மற்றவரைப் பற்றித் துளியளவும் கவலைப்படாமல் தன் சந்தோஷத்தையே பெரிதாக நினைக்கும் தமிழினத்தின் அருங்குணத்தை வாழ்த்திய(?)படி உஷ்ணமாக அருவியை அடைந்த எங்களை குளிர்வித்தது அருவி நீர். நீண்ட நேரம் அருவியில் ஆடிவிட்டு கரைக்கு வந்தால், சாப்பாடு தயாராக சிறிது நேரமாகும், அதுவரை இதை டேஸ்ட் பாருங்கள் என்று பொரித்த மீனை பல தட்டுகளில் அள்ளித் தந்தார் சமையற் கலைஞர். நேற்று கொடையில் சாப்பிட்ட மீனின் சுவையை‌ எல்லாம் சாதாரணமப்பா என்று ‌சொல்ல வைத்தது இன்று இந்த அருவிக் கரையில் இவர் தந்தது. பிறகென்ன... மீண்டும் அருவிக் குளியல், வெயிட்டான மதிய உணவு. சிலுசிலுவென்ற காற்றினை ரசித்தபடியே சற்று நேரம் அரட்டை + சிலர் குட்டித் தூக்கம். மீண்டும் அருவிக் குளியல் என்று பொழுது போனதே தெரியவி்‌ல்லை.

அருவி ஓடையான இடத்தில்....!
மாலை ஆறு மணி சுமாருக்கு அங்கிருந்து புறப்பட்டு, பெரியகுளம் வந்த உதவிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி கூறிவிட்டு எங்கள் வாகனம் மீண்டும் சென்னை நோக்கிப் புறப்பட்டது. திண்டுக்கல் மற்றும் மதுரையில் கொஞ்சம் கேப் கிடைத்தால் நண்பர்களைச் சந்தித்து வரலாம் என்று நினைத்திருந்த என் திட்டம் நடைபெறவில்லை என்றாலும், மூன்று முழு தினங்கள் கணிப் பொறியையும், புத்தக வடிவமைப்பையும், வலைத்தளங்கள், முகப்புத்தகம், இமெயில் என யாவற்றையும் நினைக்காமல், முக்கியமாக... அலுவலக விஷயங்களை பயணத்தின் போது பேசாமல் மகிழ்வுடன் சுற்றி வந்தது டோட்டலாக பேட்டரி ரீசார்ஜ் செய்தது மாதிரி எங்களை ரெஃப்ரெஷ் ஆக்கியிருந்தது. இனி வருடம் ஒரு முறையேனும் இப்படி குழுவாக ஊர் சுற்ற வேண்டும் என்று மனதிற்குள் முடிவு செய்தேன். நிறைவேறமா என்பது இனி வரும் நாட்களில் தான் தெரியும்.

பொரித்த மீன் - நாங்க சாப்பிடும் முன்!
இவ்வளவு சுருக்கமாக(!) நான் விவரித்தும் ஏழு பகுதிகள் நீண்டுவிட்ட இந்த கொடைக்கானல் பயணத்தை ரசித்தும், ரசிக்காமலும் என்னுடன் பயணித்த உங்கள் அனைவருக்கு்ம் என் இதயம் நிறைந்த நன்றி! பயணக் கட்டுரை என்கிற புதிய க(கு)ளத்துக்குள் நாமெல்லாம் எழுதினால் சரியாக வருமா என்று தயங்கிய என்னை பிடித்துத் தள்ளி விட்ட தி.கொ.போ. சீனுவுக்கும், வி.ஓ. சுடர்விழிக்கும் ஸ்பெஷல் நன்றிகள்! (இந்த ‘நல்ல’ காரியத்தப் பண்ணினது இவங்கதானான்னு யாரோ பல்லை நறநறக்கறது இங்க கேக்குது!)

Friday, May 3, 2013

‘அசத்திய’ வாக்கான சத்தியவாக்கு!

Posted by பால கணேஷ் Friday, May 03, 2013
சென்னை நாரதகானசபாவில் கோடை நாடக விழா கடந்த பத்து தினங்களாக நடந்து வருகிறது. தினமும் மாலை 7 மணிக்கு நாடங்கள்- அனைத்திற்கும் அனுமதி இலவசம் என்பது கூடுதல் சுவாரஸ்யம். சென்ற ஞாயிறன்று ‘ராஜமாதங்கி க்ரியேஷன்ஸ்’ அரங்கேற்றிய, மதுரை ஜடாவல்லபன் எழுதி இயக்கிய ‘சத்தியவாக்கு’ நாடகத்தைக் காண நாங்கள் சென்றிருந்தோம். ‘நாங்கள்’ என்பது நான், மெட்ராஸ்பவன் சிவகுமார், தி.கொ.போராடு சீனு, கனவு மெய்ப்பட ரூபக் ராம் மற்றும் இரு நண்பர்கள் என அறுவர் குழு. நாடகம் துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே நாங்களனைவரும் அங்கு ஆஜராகி விட்டதால் நிறையப் பேசவும் வாய்ப்புக் கிடைத்தது. அரங்கத்தில் முன்வரிசைகளிலும் இடம் ‌கிடைத்தது. அன்று அரங்கம் நிறைந்திருந்ததைப் பார்க்ககையில் மகிழ்ச்சியாக இருந்தது.

அசத்திய ‘ஆலய’ செட்!

நாடகம் துவங்கிய இரண்டாவது காட்சியிலேயே நடராஜர் ஆலயத்தில் காட்சி என்று ‌வருவதால் தத்ரூபமாக ஒரு கோயில் சன்னதியையே மேடையில் உருவாக்கி, தீபாராதனை உட்பட நடத்தி ஏறத்தாழ கோயிலில் நாம் இருப்பது போன்ற பிரமையை உண்டு பண்ணி அசத்தினார்கள். ஆர்.எஸ்.மனோகர் நாடகங்களில் பார்த்தது போன்ற மிக நேர்த்தியான காட்சியமைப்பு அமைந்து ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. அந்த எதிர்பார்ப்புக்கு ‘சத்தியவாக்கு’ நாடகம் தீனி போட்டதா என்று கேட்டால் ‘ஏறக்குறைய’ என்றுதான் சொல்ல வேண்டும்.

கதை மிக எளிமையானது. உமாசங்கர தீக்ஷிதர் பத்திரிகை நிருபருக்கு பேட்டியளிக்கிறார். அவர் சொல்லும் கதை: அவர் மகன் விஸ்வநாத தீக்ஷிதரின் மனைவி கற்பகம் கலெக்டராகி விட்டதால் அவருக்குக் கிடைககும் மரியாதையும், தீக்ஷிதர்தானே என்கிற அலட்சியமான அவமரியாதைகளும் விஸ்வநாதரின் மனதில் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துவிட, கணவன் மனைவி உறவில் சிக்கல்! விஸ்வநாத தீக்ஷிதரின் பள்ளி நண்பரான அரசியல்வாதி தர்மராஜன் கோயிலிலுள்ள நடராஜர் சிலையைத் திருடி தன்னிடம் தருமாறு விஸ்வநாத தீக்ஷிதரை அன்பாகவும், பின்பு மிரட்டலாகவும் வற்புறுத்த அங்கும் சிக்கல்! இந்த இரண்டு சிக்கல்களும் தீர்ந்ததா, எவ்விதம் என்பதை விரிவாக இரண்டு மணி நேரத்தில் விவரிக்கிறது நாடகம்.

நாடகம் கண்ட அறுவர் குழு!
நாடகத்தில் பங்குபெற்ற அனைத்து நடிகர்களுமே சிறப்பாக நடித்திருந்தனர். கலெக்டர் கற்பகமாக வந்த திருமதி லக்ஷ்மியும், உமாசங்கர தீக்ஷிதராக வந்த திரு.வாசுதேவனும், அமைச்சர் தர்மராஜனாக நடித்த மதுரை ராஜாமணியும் (இவர்தான் நாடகத்தை எழுதி இயக்கிய ஜடாவல்லபன்-ங்கற ரகசியத்தை உங்களுக்கு மட்டும் தெரிவிச்சுக்கறேன்), அத்தை காமாட்சியாக நடித்த திருமதி. காவேரியும் கச்சிதமான நடிப்பை வழங்கியிருந்தனர். கதை நாயகன் விஸ்வநாத தீக்ஷிதராக நடித்த திரு.ரவிக்குமார் மட்டும் மிக அழுத்த்தமான நடிப்பை வழங்கியிருந்தார். அழுத்தமாக வழங்கியதால் சற்றே மிகை நடிப்பாக ஆகிவிட்டதை அவர் தவிர்த்திருந்தால் நாடகம் இன்னும் சிறப்புற்றிருக்கும். மற்றொரு குறிப்பிட வேண்டிய விஷயம்... நாடகத்தில் நடித்த அனைவருக்கும் நல்ல குரல் வளம். வசனங்கள் தெளிவாக அழுத்தமாக உச்சரித்து (உரத்தும்) பேசியதில் அரங்கத்தில் இருககும் அனைவராலும் நன்கு கேட்க முடிந்திருக்கும்.

அமைச்சரும், தீக்ஷிதரும்!
மருந்துக்கும் நகைச்சுவை இல்லாத சீரியஸ் நாடகம் என்பதால் பக்கம் பக்கமாக வசனங்கள். யதார்த்தத்தை உணர்த்தியும், சமூகப் பிரச்னைகளைப் பேசியும், அங்கங்கே ஆன்மீகம், தத்துவத்தைத் தொட்டும் பளிச் பளிச்சென்று மனதை ஈர்த்தன; பல கட்டங்களில் கைதட்டலையும் பெற்றன அழுத்தமான வசனங்கள். ப்ளஸ் பாயிண்ட்டான இதுவேதான் நாடகத்தின் மைனஸும்! ஒரு கட்டத்தில் போரடிககச் செய்து, ‘‘நீளநீளமாப் பேசுறாய்ங்கய்யா. என்னதான்யா சொல்ல வர்றீங்க?’’ என்று சலித்துக் கொள்ளவும் வைத்து விட்டது. ‘‘கபிலாரண்யம்னு நம்ம நாட்ல முனிவர்கள் தபஸ் செஞ்ச இடம்தான் கலிபாரண்யம்னுல்லாம் திரிஞ்சு கலிபோர்னியான்னு இப்ப அழைக்கப்படுது. இதை நான் சொல்லலை... காஞ்சி மாமுனிவர் ‘தெய்வத்தின் குரல்’ புஸ்தகத்துல சொல்லியிருக்கார்.’’ என்று ஒரு வசனம் கவனத்தைக் கவர்ந்து, ‘அட!’ என்று புருவம் உயர்த்த வைத்தது! (வெள்ளைக்காரன் மஞ்சள், பூண்டுக்குல்லாம் காப்பிரைட் வாங்கற மாதிரி, அவன் ஸ்டேட்டுக்கே நாம காப்பிரைட் வாங்கிடலாம் போலருக்கே!)

நாடகத்தின் இயக்குனர் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்: பெரும்பாலான காட்சியில் நடித்தவர்கள் அனைவரும் ஆடியன்ஸைப் பார்த்தே வசனங்களைப் பேசுகிறார்கள்- தன் சீரிய நடிப்பனுபவத்தால் இதைத் தவிர்த்திருக்கும் மதுரை ராஜாமணியைத் தவிர. நடிப்பவரின் முகம், உணர்வுகள் புரிய வேண்டிய காட்சிகளைத் தவிர இருவர் பேசிக் கொள்ளும் போது ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துப் பேசாமல், ஒருவர் வடக்கும், ஒருவர் தெற்கும் பார்க்கிற மாதிரி திரும்பியா பேசுவார்கள்? (அதிலும் பத்திரிகை நிருபராக நடித்தவர் ‘எங்கே வசனங்களை மறந்து விடுவோமோ?’ என்று ஒப்பித்தது ஆடியன்ஸைப் பார்த்துப் பேசியதால் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது)

அரங்கில் திரண்டிருந்த ரசிகர்கள்!
ஒரு மாநிலத்தின் அமைச்சர் பதவியில் இருப்பவர் கோயில் சிலைகளைத் திருடத் திட்டம் போட்டால் அர்ச்சகரை விட்டா சிலையைத் தூக்கிவரச் சொல்வார்? அப்படியே அர்ச்சகரை மிரட்டினாலும் அவரிடம் கோயில் சாவியை மட்டும் பறித்து விட்டால் போதுமாதுதானே, திருடி வருவதற்கு அமைச்சரிடம் இல்லாத தொ(கு)ண்டர் படைகளா? என்று மனஸ் லாஜிக் கேள்வி கேட்டது. அதேபோல கடைசிக் காட்சியில் தீவிரவாதிகளால் அமைச்சர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று தகவலாக வசனம் பேசி அந்த கேரக்டருக்கு மங்களம் பாடி விட்டது சப்பென்றிருந்தது. விஸ்வநாத தீக்ஷிதர் தன் மனைவியிடம் கலெக்டர் வேலையை ராஜினாமா செய்து விடும்படி பலமுறை வற்பறுத்துகிறார். அப்போதெல்லாம் மறுத்துவிட்டு, எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்ததற்குப் பின்னால், கலெக்டர் காமாட்சி ‘‘நான் வேலையை விட்டுவிட்டேன். இனி உங்க மனைவி மட்டும்தான்’’ என்று சொல்லுவது ஏனென்றுதான் புரியவி்ல்லை. அந்த கேரக்டரின் மீது வளர்ந்து வந்திருந்த நம்பிக்கையும் கொலாப்ஸ்ட்! (அதுசரிதான்... இதை அவ முதல்லயே செஞ்சிருந்தா நாடகம் ஏதய்யா?ன்னு சிரிக்குது மனஸ்!)

பத்திரிகை நிருபரிடம் உமாசங்கர தீக்ஷிதர் ப்ளாஷ்பேக்காக விவரிக்கும் இந்தக் கதையில் பிரச்சனைகள் தீர்ந்து, ‌கலெக்டர் வேலையையும் நான் விட்டுவிட்டேன் என்று கற்பகம் சொல்லும் காட்சியிலேயே ஆடியன்ஸ் எழுந்து கொள்ள ஆரம்பித்துவிட்டனர். அதற்கப்புறம் ஆன்ட்டி க்ளைமாக்ஸாக அதே நிருபர் மீண்டும் திரும்ப வர, உமாசங்கர தீக்ஷிதர் இறந்த ஐந்து வருடமாகி விட்டது என்று அவரின் பேரனைக் காட்டுவதும், தன்னுடன் பேசியது அவரின் அரூபமா என்று நிருபர் பிரமித்து நிற்பதுமான காட்சி தேவையற்றது என்றே தோன்றியது.

இப்படியான சின்னச் சின்ன நெருடல்கள் இருந்தாலும் அழுத்தமான சென்ட்டிமென்ட்டும், ஆழமான சமூக அக்கறையும் கொண்ட கதையமைப்பும், வசனங்களும் கொண்ட இந்த (சற்றே நீண்ட) நாடகம் மனதில் பாதிப்பையும், நல்ல ரசனையையும் தோற்றுவித்தது என்பதே நிஜம்!
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube