வலையுலகில் இப்போது விருது வழங்கும் சீசன் மீண்டும் ஆரம்பமாகி இருக்கிறது. THE VERSATILE BLOGGER என்கிற விருதானது எங்கிருந்தோ துவங்கி, ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடித்தவர்களுக்கு வழங்கி, விருது பெற்றவர்கள் நன்றிகூறி மற்றவர்களுக்கு அதைப் பகிர்ந்து... என்று வலையுலகம் சுறுசுறுப்பாகி இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இப்படித்தான் THE VERSATILE BLOGGER, AWSOME BLOGGER என்று விருதுகள் மழை அனைவரின் தளத்திலும் பொழிந்து ஓய்ந்திருந்தது.
எனக்குக் கிடைத்த பல விருதுகளை நான் என் தளத்தில் ஒட்டி அலங்கரிக்கவில்லை. அதற்குக் காரணம் இவை பற்றி எனக்கிருந்த மாறுபட்ட கருத்துக்களே. அவற்றை விரித்துரைப்பதால் பலர் மனம் புண்படக் கூடுமே என்பதால் அப்போது நான் எதுவும் சொல்லவில்லை. இப்போதும் அப்படியே இருந்துவிடலாம் என்று எண்ணினாலும் மனசு கேட்கவில்லை. மாறி மாறி வரும் + மற்றும்- சிந்தனைகளின் ஊசலாட்டத்தின் ஊடேதான் இப்போது டைப்பிக் கொண்டிருக்கிறேன்.
+ விருதுகள் பகிரப்படறதனால பதிவர்களுக்கு உற்சாகம் கிடைக்குதா இல்லையா...? நம் படைப்புக்கான அங்கீகாரத்துக்கு ஏங்கித்தானே நாமல்லாம் எழுதவே செய்யறோம். அதுமாதிரி நாம நல்லா செயல்பட்டுட்டிருக்கோம்கறதுக்கு இந்த விருது ஒரு சாட்சியில்லையா...?
- விருதுங்கறது என்ன...? ஏதாவது ஒரு துறையில சாதனை பண்ணினவங்களுக்கோ, இல்ல தனித்திறமை படைச்சவங்களுக்கோ அவங்களைப் பாராட்டி வழங்கப்படறது. இங்க ஒரு விருதை எடுத்துக்கிட்டு பெருமாள் கோயில் புளியோதரை மாதிரி ஆளாளுக்கு பகிர்ந்துட்டிருந்தா அந்த விருதுக்கு என்ன மரியாதை? அத்தனை பேர் ப்ளாக்லயும் இந்த விருது ஒட்ட வைக்கப்பட்டிருந்தா அதுக்கு என்ன வேல்யூ? ஒரு ஊர்ல இருக்கறவன் பூரா ரஜினிகாந்தா இருந்துட்டா ரஜினிக்கே வேல்யூ கிடையாதே....?
+ நான் விருதைக் குடுத்தவங்க அதை இன்னொரு அஞ்சு பேருக்கு பகிர்ந்தா, அந்த அஞ்சு பேர்ல எனக்கும் தெரியாதவங்க யாராச்சும் இருந்தா இப்ப அறிமுகமாயிடுவாங்கல்ல... இப்படி தொடர்ந்து போற சங்கிலியக் கவனிச்சா நிறையப் பதிவர்களோட அறிமுகம் கிடைச்சு வலையுலகத் தொடர்புகள் விரிவாகி இன்னும் நெருக்கமாத்தானே ஆகும்...? அது நல்லது தானே!
- ஏதாவது ஒரு போட்டி வெச்சு, அதுல ஜெயிக்கறவங்களுக்கு விருதுன்னு பண்ணினா, அதுல கலந்துக்கறவங்க லிஸ்டை வெச்சே நிறைய நட்பு வட்டம் பெருகுமே... அப்படி ஆண்டுக்கு நாலஞ்சு பேர் ஜெயிச்சால்ல அந்த விருதுக்கே சிறப்பு...? இல்ல, சிறப்பா செயல்படற ப்ளாக்கர்னு சிலரை நாமினேட் பண்ணி மத்த ப்ளாக்கர்ஸ் ஓட்டுப் போட்டு செலக்ட் பண்ணின ப்ளாகர்ஸ்க்கு கொடுத்தாலாவது நியாயம்..? இப்படி எல்லாரும் எல்லாருக்கும் சாக்லெட் தர்ற மாதிரி தர்றது என்ன நியாயம்...?
+ விருது கொடுக்கப்படுதுன்னா அதுக்குப் பின்னால அதை உனக்குத் தர்றவங்க உன் மேல வெச்ச அன்பும் மரியாதையும் இருக்கறது உன் கண்ணுக்குத் தெரியலயா...? அதை எப்படிக் குறை சொல்ல முடியும்...? உன்னை யாருக்காவது பகிரச் சொன்னாலும் அப்படி நீ அன்பு வெச்சிருக்கறவங்களுக்குத் தானே பகிர்வே...?
- விருதுகளை இப்படி அன்பின் காரணமா வழங்கறது சரிதானா...? இதுக்கு தங்களுக்குப் பிடிச்ச அன்பும் மரியாதையும் உள்ளவங்களுக்கு ஏதாச்சும் பட்டம் கொடுத்துப் பாராட்டலாம் இல்லையா..? சினிமாக்காரங்க புரட்சிங்கற வார்த்தைய அவனவன் விதவிதமா தன் பேருக்கு முன்னால சேர்த்துக்கற மாதிரி ப்ளாக் சம்பந்தப்பட்ட அடைமொழிகளைக் குடுத்துக்கிட்டா சிம்பிளா முடிஞ்சு போகுமே விஷயம்..!
இப்படி மாறிமாறி சிந்தனைகள் சுழன்று கொண்டுதான் இருக்கின்றன. அதனாலதான் என் தங்கை மைதிலி கஸ்தூரிரங்கனும், அன்பு நண்பர் மதுரைத் தமிழனும் வழங்கிய இந்த விருதை நான் இன்னும் யாருக்கும் பகிரவில்லை. இந்த இரண்டு அன்புள்ளங்களும் என்னைச் சரியாகப் புரிந்து கொண்டு மன்னிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அந்த நம்பிக்கையுடன் அவர்களுக்குக் காட்டும் அன்பின் வெளிப்பாடாக இதை என் தளத்தில் வைக்கிறேன் சிலகாலம். இந்த விஷயத்தில் நான் ஒரு தெளிவுக்கு வர உங்களின் கருத்துக்கள் கலங்கரை விளக்காக வழிகாட்டும் என்று நம்பிக்கையுடன் வரப்போகும் கருத்துகளுக்காக ஆவலுடன் என் காத்திருப்பு. நன்றி.