Showing posts with label படித்தது. Show all posts
Showing posts with label படித்தது. Show all posts

Friday, January 23, 2015

புத்தகம் வடிவமைப்பவனாக இருக்கிற ஒருவனுக்கு வடிவமைக்கத்  தரப்படுகின்ற ஒவ்வொரு புத்தகமும் சப்ஜெக்ட்தான். வாசகநிலையில் இருந்து படிக்க வேண்டும் என்பது அவசியமில்லை, அப்படிப் படிக்கவும் இயலாது. ஏனென்றால் பதிப்பாளர்கள் அச்சாகும் இடத்திலும், பைண்டாகும் இடத்திலும் தாமதமானால் பொறுத்துக் கொள்வார்கள்... வடிவமைப்பாளனிடம் வரும்போது மட்டும் காலில் கஞ்சியைக் கொட்டிக்கொண்டுதான் வருவார்கள். ஹி... ஹி... ஹி... நான் சொல்ல வந்த விஷயம் அதில்லை. அப்படிப் புத்தகங்களை வடிவமைக்கையில் படிக்க நேரிடும் சில பக்கங்கள் நம்மை உள்ளிழுத்து முழுமையாக வாசிக்க வைத்துவிடும் அனுபவம் வெகுசில புத்தகங்களில்தான் ஏற்படும். சமீபத்தில் அப்படி எனக்கு அமைந்த ஒரு புத்தகம் கணேசகுமாரன் எழுதிய ‘மெனிஞ்சியோமா’.

இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கும் கணேசகுமாரனின் முதல் நாவல் முயற்சிதான் இந்த ‘மெனிஞ்சியோமா’. படித்துப் பல நாட்கள் ஆகியும் இந்தக் கதை தந்த பாதிப்பு இன்னும் மனசில் பச்சைப்பசேல். 


மரபார்ந்த கதைசொல்லும் முறைகள், நவ செவ்வியலின் கூறுகள் இவற்றிலிருந்து விலகி இன்றைய தகவல் யுகத்தில் உருவாகும் பிரதிகள், ஆய்வுகள் மற்றும் தரவுகளின்மீது கட்டமைக்கப்படும் புனைவுகளாக எழுதப் பெறுவதைக் காண்கிறோம். -இப்படியான இலக்கிய வார்த்தைகளால் புத்தகத்தைப் பற்றிய ஆழமான முன்னுரை தந்திருக்கிறார் திரு.நேசமித்ரன். இலக்கியத்துக்கும் எனக்கும் ரொம்பவே தூரம்கறதால எனக்குத் தெரிஞ்ச எளிய நடையில உணர்ந்ததைச் சொல்றேன். ஹி.. ஹி... ஹி....

கதையின் நாயகன் சந்துருவிற்கு மூளையில் ஒரு சிக்கல் என்பதால் அந்தப் பிரதேசத்தில் ஒரு ஆபரேஷன் செய்யப்படுகிறது. அதன் பிள்விளைவாக அவன் அனுபவிக்கும் அவஸ்தைகளையும். வலி, வேதனைகளையும் வார்த்தைகளின் துணைகொண்டு ஜீவனுடன் நம்மிடம் கடத்துகிறது நாவல். வெறும்வார்த்தைக்காய் நான் இதைச் சொல்லவில்லை -உண்மையில் படிக்கையில் சந்துருவாக என்னை உணர்ந்தேன் நான். சாதாரணமாக எதற்கும் கலங்காத என் கண்கள் கலங்கின என்றால் அது மிகை வார்த்தையில்லை.

நோயுற்றிருக்கும் உறவினர்களையோ, நண்பர்களையோ காண்பதற்கு மருத்துவமனைகளுக்குச் செல்லும் சமயம் அங்கே கண்ணில்படும் பல நோயுற்றவர்களின் காரணமாக திரும்புகையில் மனசு பாரமாகிவிடும் எப்போதும். எத்தனையெத்தனை கஷ்டங்கள் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் படைத்தது இந்த உடலம்!  பல வியாதிகள் நாமாக (அறிந்தோ, அறியாமலோ) வரவழைத்துக் கொள்பவை வேறு. ‘இப்படியொரு துன்பம் நமக்கோ, நம்மைச் சேர்ந்தவர்களுக்கோ வரக்கூடாது... நோய்த் துன்பம் எதுவும் இல்லாம ஓரிரவில் பொட்டுன்னு போயிரணும் உசிரு’ இப்படியான எண்ணம்தான் என்னுள் எழும். சந்துருவின் துன்பமும் ‘இவனைப் போல யாருக்கும் வரக்கூடாதுய்யா’ என்று எண்ண வைப்பதுதான்.

கணேசகுமாரன் அற்புதமான எழுத்து நடையைக் கைக்கொண்டிருக்கிறான். சந்துருவின் தவிப்பையும், தகிப்பையும் முப்பரிமாணத்தில் நம்மிடம் கடத்த அவன் எழுத்துநடையால் முடிகிறது. ஆபரேஷனின் பிறகு தாகத்தால் ஜீவன் தவித்து சந்துரு அவஸ்தைப்படுவதும், தரக்கூடாது என்ற டாக்டரின் கண்டிப்பான உத்தரவால் அது மறுக்கப்படுவதும், அதற்கு நிவாரணமாக அவன் செய்யும் செயலும் படிக்கையில் உருக்கிவிட்டது அவன் எழுத்து. அப்பாவிடம் சொல்லாமல் பக்கத்து பார்க்குக்கு வாக்கிங் போக, அங்கே ஃபிட்ஸ் வந்துவிட, சந்துருவின் நிலையை கணேசா சொல்லும்போது விழியோரம் துளிர்க்கும் நீரை அடக்குதல் சிரமம்தான்.

சந்துருவின் துன்பங்களுக்கு மௌன சாட்சியாக இருக்கிற, அவனைப் பராமரித்து ஆதரவாய் இருக்கிற அப்பாவின் நிலை மற்றொரு துயரமுனை. தன் அவஸ்தை பொறுக்காமல் உயிர்விட எண்ணி சந்துரு தூக்க மாத்திரைகளை விழுங்க, நோயின் தீவிரத்தால் அது உயிரைப் போக்காமல் மேலும் துன்பத்தைத் தர, அப்பாவின் பார்வையும் அது கேட்கும் கேள்விகளையும் எதிர்கொள்ளும் சந்துருவின் நிலையை கனேசா விவரிக்கையில் மனசு பதைத்துப் போனது.

கணேசகுமாரன் இக்கதையில் நோயின் தன்மையையும், மருந்தின் பெயரையும் தந்திருந்தாலும் (சந்துருவின் டிஸ்சார்ஜ் ஷீட் முழுமையாக தரப்பட்டிருக்கிறது) மருத்துவர்களைக் கொண்டு புரியாத மெடிக்கல் வார்த்தைகளால் நோயைப் பற்றி விவாதிக்க வைக்கவில்லை. மாறாக அதன் விளைவுகளையும், சந்துருவின் கஷ்டங்களையும் உணர்வுபூர்வமாக விளக்கத்தான் முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறான். 

சந்துருவின் அவஸ்தையை, வலியை எதற்காக நான் இந்த முப்பரிமாண எழுத்தில் படிக்க வேண்டும், அதனால் பாதிக்கப்பட வேண்டும், இதைப் படிப்பதால் என்ன பிரயோஜனம்? என்றெல்லாம் புத்திபூர்வமாகக் கேள்வி கேட்பீர்களாயின்.. வெல், இந்தப் புத்தகம் தேவையில்லைதான். ஆனால் உணர்வுகளை மதிப்பவர்களாக இருப்பீராயின், புத்தகம் என்பது ஏதோ ஒரு உணர்வால் படிப்பவனைப் பாதிக்க வேண்டும் - அது சிரிக்க வைப்பதாகவோ, கலங்க வைப்பதாகவோ - என்பதை ஒப்புக் கொள்வீராயின் நீர் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று.

‘கணேசகுமாரனின் இந்த முதல் நாவல் முயற்சி தனதான திசைகளை அங்கீகாரங்களை அடையும் தகுதிகளோடு இருப்பதாகவே நம்புகிறேன்’ என்கிற நேசமித்ரனின் வார்த்தைகளோடு நானும் உடன்படுகிறேன். இன்னும் பல எழுத்து முயற்சிகளை அவன் முன்னெடுத்து வெல்ல என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

நூலின் விலை 80 ரூபாய். வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ் (யாவரும்.காம்) தொடர்புக்கு : editor@yaavarum.com / 90424 61472 / 98416 ஆன்லைனில் வாங்கியும் படிக்கலாம்.

பின்குறிப்பு : ஒரு எழுத்தாளனை ‘அவன்’ என்று ஏகவசனத்தில் எழுதியிருக்கிறேனே என்று என்னைத் தவறாக எண்ண வேண்டாம். அதற்கான உரிமையை அவனி(ரி)டமிருந்து பெற்றிருக்கிறேன். ‘அவர் இவர்’ என்றால்தான் வெகுசம்பிரதாயமாக இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது எனக்கு.

Monday, June 24, 2013

தமிழ் படிங்க - புன்னகையுடன்!

Posted by பால கணேஷ் Monday, June 24, 2013
ந்த ஒரு மனிதனும் தான் கற்ற மற்ற மொழிகளில் பிழைபட பேசவும் எழுதவும் செய்வானே தவிர, தன் தாய்மொழியைப் பிழையறக் கற்றிருப்பான். தாய்மொழியில் எழுதுவதிலும் பேசுவதிலும் தவறு செய்கிற‌ ஒரே இனம் தமிழனாகத்தான் இருக்கும். அதற்குத் தமிழனை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. மிகத்தொன்மையான தமிழ் மொழியானது, காலப்போக்கில் பிறமொழிச் சொற்களால் கலப்புற்று, ஒவ்வொரு வட்டாரங்களிலும் வசிப்பவர்கள் தங்களுக்கென தனித் தனியாகப் பேசும் முறைகளை உண்டாக்கிக் கொள்ள... மதுரைத் தமிழ், நெல்லைத தமிழ், கொங்கு தமிழ், சென்னைத் தமிழ் என்று பல ஸ்டைல்களாகப் பிரிந்து நிற்கிறது.

இதுபற்றாதென்று தமிழ்வழிக் கல்வி படிப்பது கேவலம், ஆங்கில வழிக் கல்வியே சிறந்தது என்கிற எண்ணம் தமிழ் மககளின் மனதில் விதையூன்ற, ‘நாமதான் படிககல... நம்ம புள்ளையாவது படிக்கட்டுமே’ என்கிற ஆதங்கப் பாசத்துடன் ஆங்கில வழிப் பள்ளிகளைக் கொழிக்க வைத்ததன் விளைவு... இன்று பலரும் தமிழை தப்புத்தப்பாக எழுதுகிறார்கள். தமிழில் கவிதை எழுதும் சிலர் கூட ‘செய்துப் பார்த்தான்’ என்றெல்லாம் கண்ட இடங்களில் ஒற்றைப் பிரயோகித்து எழுதுவதைக் கண்டு நொந்து போனதுண்டு நான். அப்பாதுரை ஸார் கேட்ட மாதிரி தமிழுக்கு மட்டும் ஏன் இத்தனை ரூல்ஸ்?

என்னாச்சு இந்த ஆசாமிக்கு? படு சீரியஸாப் பேச ஆரம்பிச்சுட்டாரேன்னு நீங்க நினைக்கிறது புரியுது. விஷயம் என்னன்னா... தமிழ்ல சரளமாப் பேசற நிறையப் பேர்கள் எழுதும் போது தப்புக்கள் நிறையப் பண்ணுறாங்க. வல்லின மெல்லின வித்தியாசம் புரியாம ‘ன’ ‘ண’ மாத்தி எழுதறது, ‘ல’ ‘ள’ தப்பாப் போடறது, தேவையில்லாத இடங்கள்ல ஒற்றுக்களைச் சேர்த்து எழுதி தமிழைத் தப்பில்லாம எழுதிட்டதா மார் த்டடிக்கிறது இப்படி ஏராள விஷயங்கள்!

என்னிடம் பேசும்போது ஒன்றிரண்டு பேர் கேட்டதுண்டு. ‘‘தமிழைப் பிழையின்றி எழுத, எங்கெங்க ஒற்று வரணும், வரக்கூடாதுன்ற மாதிரி முக்கிய விஷயங்களைச் சொல்லித் தர்றதுக்கு எளிமையா ஏதாவது புத்தகம் இருக்குங்களா? தெரிஞ்சா உடனே வாங்கிப் படிச்சுடுவேன்’’ அப்படின்னு. ‘‘அப்படி ஏதாச்சும் நல்ல புத்தகம் கண்ல பட்டா சொல்றேங்க’’ என்று ரெடிமேட் பதிலைச் சொல்லிவிட்டு நழுவி விடுவேன். இப்ப... அப்படி ஒரு நல்ல புத்தகம் கண்ணுல பட்டுருச்சு. அதப்பத்திச் சொல்லத்தான் இத்தனை பீடிகை! (என் கைல பீடின்னு அர்த்தம் பண்ணிக்காதீங்க... படிக்கறவங்களை தயார்படுத்தறதுக்காக சுத்திவளைக்கறதைக் குறிக்கற வார்த்தைங்க).

 தமிழ் வகுப்புல தமிழாசிரியர் பாடம் நடத்தற மாதிரி இலக்கணத்தைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சா, படிக்கறவங்க புத்தகத்தைக் கீழ வீசிட்டு நகர்ந்துடுவாங்கன்னு நல்லாப் புரிஞ்சு வெச்சிருக்கறாரு நூலாசிரியர். அதனால ரெண்டு நண்பர்கள் பேசிக்கற மாதிரி உரையாடலை அமைச்சு மெல்லிய நகைச்சுவை கலந்து எழுதி, காப்ஸ்யூலுக்குள்ள மருந்தை அடைச்சுத் தர்ற மாதிரி எளிமையா தமிழ் இலக்கணப் பாடத்தை நடத்தியிருக்காரு. படிக்க சுவாரஸ்யமா இருந்துச்சு. இன்றைய மாடர்ன் இளைஞர்களும் படிச்சுப் புரிஞ்சுக்கற மாதிரி லேட்டஸ்ட் சினிமாப் பாட்டுகள் உட்பட எளிய .உதாரணங்கள் கூறி தமிழ் கற்பிக்கப்படுகிறது இப்புத்தகம் மூலமா.

இடக்கரடக்கல் அப்படின்னா என்னன்னு தெரியுமா உங்களுக்கு? சரவணபவன்ல அறிமுகப்படுத்தியிருக்கற புது டிபனான்னு கேட்டீங்கன்னா உங்களுக்கு விமோசனமே கிடையாது.

தொடை தெரியுமா? ‘ஓ! ரம்பா பல படங்கள்ல காட்டியிருக்காங்க, பாத்திருக்கேனே’ன்னு சொன்னீங்கன்னா நீங்க தேற மாட்டீங்க. ‘இயைபுத் தொடை’ன்னு ஆரம்பிச்சு தமிழ்ல ரூல்ஸே இருக்குது.

அப்புறம்.... புணர்ச்சி விதிகள் தெரியுமா? இந்தக் கேள்விக்கு மட்டும் முகம் பிரகாசமாகுது. ‘தெரியும்’னு பலமா தலையாட்டறீங்க... நீங்க நினைக்கிறது இல்லீங்க... தமிழ்ல ரெண்டு வார்த்தைகளைச் சேர்க்கறதுக்கு, இயல்புப் புணர்ச்சி, விகாரப் புணர்ச்சின்னு ரூல்ஸ் இருக்கு. அதத்தான் கேட்டேன்.

அப்புறம் எந்த இடத்துல ‘ஒரு’ங்கற வார்த்தைய பிரயோகிக்கணும், எங்க ‘ஓர்’ வரணும்னு தெரியுமா உங்களுக்கு? தமிழ் வார்த்தைகள்ல எங்க வலி மிகும் தெரியுமா...? சரி.. சரி... நீங்க உருட்டுக கட்டையவும், பெண்கள் பூரிக் கட்டையவும் வீசி எனக்கு வலி மிகுந்து போறதுக்குள்ள விஷயத்தைச் சொல்லிடறேன்.. அதுவும் தமிழ் இலக்கணத்துல ஒரு பகுதிதாங்க.

இதுபோல பல தலைசுற்ற வைக்கிற விஷயங்களை, கொஞ்சம் கூடக் குழப்பமில்லாமல், நகைச்சுவை ததும்புகிற எழுத்து நடையில் சொல்லித் தருகிறது ‘ஜாலியா தமிழ் இலக்கணம்’ என்கிற புத்தகம். இதை எழுதியிருக்கிறவர் இலவசக் கொத்தனார் (ராஜேஷ் கர்கா) என்பவர். இவர் முன்னாடியே ‘ஈஸியா பழகலாம் வெண்பா’ன்னு ஒரு புத்தகம் எழுதி, வெண்பா எழுதப் பயிற்சி கொடுத்திருந்தார். இப்ப இது. பயன் தரும் 112 பக்கங்கள் கொண்ட இந்த நூலை ரூ;75 விலையில சென்னை ராயப்பேட்டையில, லாயிட்ஸ் ரோட்ல, அம்பாள் பில்டிங்கில, 177/103, முதல் தளம் என்ற இலக்கத்தில் இருக்கிற கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்காங்க. (தொலைபேச: 4200 9603)

தப்பில்லாம தமிழ் எழுத விரும்பறவங்களுக்கு இந்தப் புத்தகத்தை நான் சிபாரிசு பண்றேன். வாங்கிப் படித்துப் பலனடையுங்கள். உரையாடல் வடிவத்துல சொல்லியிருக்கறதால அதுல உள்ள நகைச்சுவையப் படிச்சு சிரிச்சுட்டு பாடத்த மனசுல வாங்கிககாம போயிட்டா என்ன பண்றதுன்னு யோசிச்சு, ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் அந்த சாப்டர்ல போதிக்கப்பட்ட இலக்கணங்களை சிறு குறிப்புகளா, புல்லட் பாயிண்ட்கள் வைச்சு கொடுத்திருக்கறது இந்த நூலோட கூடுதல் சிறப்பு.

Wednesday, May 22, 2013

கமல் மாறி விட்டா(ரா)னா?

Posted by பால கணேஷ் Wednesday, May 22, 2013
‘இதய மலர்’ பட ஷுட்டிங். ஜெமினிகணேசன் அவர்கள் டைரக்ட் செய்து கொண்டிருந்தார். மாலை 3 மணி முதல் 10 மணி வரை கால்ஷீட். ஒரு குழந்தை, விஜயகுமார், கமலஹாசன் நடிக்கும் காட்சி. இரவு 9 மணியைத் தாண்டி விட்டதால் குழந்தைக்குத் தூக்கம் வந்து விட்டது. பெரிய வசனம்! குழந்தைக்குக் குளறியது. கமலஹாசனுக்கும் தூக்கம் வந்துவிட்டதா அல்லது நாள் முழுவதும் ஷுட்டிங் செய்த அலுப்பா என்று தெரியவி்‌ல்லை... சலிப்புடன் முகத்தைச் சுளித்துக் கொண்டான். குழந்தைக்கு வசனம் சரியாக வந்தவுடன் கூப்பிடுமாறு சொல்லிவிட்டு ஒரு சோபாவில் சாய்ந்து கொண்டான்.

டைரக்டர் ஜெமினி சற்றும் சலிப்பில்லாமல், கோபம் கொள்ளாமல் குழந்தைக்கு வசனம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்- குழந்தைக்குச் சமமாக மண்டியிட்டுக் கொண்டு! இந்தக் காட்சியை சலிப்புடனும் வெறுப்புடனும் பார்த்துக் கொண்டிருந்த கமலின் முகம் திடீரென்று மலர்ந்தது. சட்டென்று எழுந்துவந்து குழந்தையை உற்சாகப்படுத்தி, அதற்கு வசனம் பேச வரும்வரை பொறுமையுடன் இருந்து காட்சியை முடித்துக் கொடுத்தான். ‘‘ஏன் இந்தப் புத்துணர்ச்சி?’’ என்று கமல் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

பதில்: புத்துணர்ச்சி அல்ல, குற்ற உணர்ச்சி! குழந்தை நட்சத்திரத்தைப் பார்த்து முகம் சுளித்த கமல், பல ஆண்டுகளுக்கு முன் ஒரு குழந்தை நட்த்திரமாக இதேபோல் பல இரவுகளில் ஷுட்டிங்கில் வசனங்களைக் குழறியிருக்கிறான். சக நடிகர்கள் யாரும் முகம் சுளித்ததாக அவனுக்கு ஞாபகம் இல்லை. மாறாக இன்முகத்துடன் உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தனர். இதே ஜெமினிகணேசன் ‘அங்கிள்’ இதே கனிவுடன் இதேபோல் முகம் சுளிக்காமல் வசனம் சொல்லிக் கொடுத்த ஞாபகம் கமலுக்கு வந்துவிட்டது. அன்று இனிமையாகப் பேசி கொஞ்சிக் கொஞ்சி நடிக்க வைக்கப்பட்ட குழந்தை நட்சத்திரம் கமல் இன்று பெரியோரின் ஆசியால் வளர்ந்துவிட்டான்.

அவனை வளர்த்தவர்கள் அதே அன்புடனும் குணத்துடனும் இருக்கிறார்கள். கமல் மாறிவிட்டானா? கர்வமா? எதுவாக இருந்தாலும் திருத்தப்பட வேண்டிய, திருத்தப்படக் கூடிய தவறுகள்தான். அவன் வந்த வழியை அவன் திரும்பிப் பார்த்தால் அவன் தவற மாட்டான். அது நிச்சயம். ஆனால் அதையும் மீறி அவன் கர்வம் கொண்டால் திருத்த வேண்டியது அவனை உருவாக்கிய பெரியோரின் பொறுப்பு.
அன்றைய கமலஹாசன்கள்! (கல்லூரி நாட்களில் என் ஃபேவரைட்)
கரம் முழுவதும் "Enter the Dragon" வியாதி பரவியிரு்கிறது. என் வயதுள்ள முக்கால்வாசிப் பேர் கராத்தே கற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் முஷ்டி கறத்து, காய்த்துப் போய் விடுகிறது. இதுதான் அவர்கள் கராத்தே வீரர் என்பதற்கு அடையாளம். மற்றபடி எல்லாரையம் போலத்தான் இருக்கிறார்கள். ஒரு கராத்தேக்காரர் அடிப்பதற்கு முன்னால் ‘கீயா’ (kiah) என்ற ‌போடும் ச்த்தமே போதும் எதிரியைப் பயமுறுத்த.

கராத்தே வகுப்புக்கு என் நண்பருடன் சென்றிருந்தேன் வேடிக்கை பார்க்க. நண்பர் மெலிந்தவர். சாமானியர். சென்னை டாக்சி/ஆட்டோ டிரைவர்களிடம்கூட அவருக்குக் கோபம் வராது. அவ்வளவு சாது. கராத்தே வகுப்பில் மாணவர்கள் செய்யும் சத்தத்தைக் கேட்டு மிரண்டு விட்டார். ‘‘ஏன் தம்பி, இதுக்குப் பேரு கராத்தேயா, இல்ல, கத்தறேயா? இப்படிக் கத்தறாங்களே?’’ என்றார். ‘‘என்ன, கேலி பண்றீங்க? முடிஞ்சா அவங்க செய்யற மாதிரி செய்யுங்களேன் பார்ப்போம்’’ என்றேன். ‘‘செய்யறது பெரிய கஷ்டமில்‌லே, செஞ்சிடுவேன். ஆனா இப்ப வேணாம். என்னால இவங்க மாதிரி கத்த முடியாது. தொண்டை சரியில்லை’’ என்று மழுப்பிவிட்டார்.

சினிமா ஸ்டண்ட்காரர் ஒருவர், ‘‘இந்தக் கராத்தே எல்லாம் நம்ம தஞ்சாவூர் குத்துவரிசையும், கேரளத்துக் களரியும் ஒண்ணாச் சேர்ந்ததுதான். இந்தியாவிலிருந்து சைனா போன ஒரு புத்தபிட்சு இங்கேருந்து கொண்டுபோன வித்தைதான் கராத்தே’’ என்று சம்பந்தமில்லாமல் பழம்பெருமை பாடுகிறார். எனக்குத் தெரிந்த உண்மை: பதினேழாம் நூற்றாண்டில் ‘ரூ க்யூ’ (Ryu Kyu) என்ற ஒரு தீவுவாசிகள் ஜப்பானிய ஆதிக்கத்திலிருந்தார்கள். அந்தத் தீவின் மக்கள் யாரும் ஆயுதங்கள் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஜப்பானிய அரசாங்கம் சட்டம் போட்டிருந்தது. ஆதிக்கத்தை முறியடிக்கவும், ஆயுதுமில்லாத தற்காப்புக் கலைக்காகவும் இத்தீவு மக்கள் கண்டுபிடித்த போர் முறை கராத்தே. ‘கரா’ என்றால் வெறுமை. ‘தே’ என்றால் கை. வெறுங்கை - கராத்தே.

ஏழெட்டுச் செங்கல்களை ஒன்றாக அடுக்கி, தலையாலும் கையாலும் உடைக்கும் என் நண்பர்கள் இருக்கிறார்கள். நானும் இரண்டு ஆண்டுகளக்கு முன் கராத்தே கற்கத் தொடங்கி முடியாமல் ஓடிவந்து விட்டேன். இப்போது மீண்டும் கற்கத் தொடங்கி இருக்கிறேன். ஐந்தில் வளையாததைக்கூட வளைக்கிறார்கள் கராத்தே ஆசிரியர்கள். என்னைப் பொறுத்தவரை கராத்தே கற்றுக் கொண்டால் தைரியமாகக் கடன் கொடுக்கலாம், கடன் வாங்கலாம் - கராத்தே தெரியாதவர்களிடம்!

*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

- மேலே கொடுக்கப்பட்டிருப்பவைகள் இன்றைய கலகநாயகன்... ஸாரி, உலகநாயகன் (அன்றைய வளரும் நடிகன்) கமல் 1975ம் ஆண்டு ‘குமுதம்’ இதழில் எழுதி வந்த ஒருபக்கக் கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்டவை.
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube