Showing posts with label கேப்ஸ்யூல் நாவல். Show all posts
Showing posts with label கேப்ஸ்யூல் நாவல். Show all posts

Tuesday, November 12, 2013

கேப்ஸ்யூல் நாவல் - 9

Posted by பால கணேஷ் Tuesday, November 12, 2013
                              தொட்டால்... தொடரும்!

                                    பட்டுக்கோட்டை பிரபாகர்
 
வெங்கடேஷ் ‘பாலங்கள்’ பத்திரிகையின் உதவி ஆசிரியர். பிரசவத்துக்காக மனைவி ஊருக்குச் சென்றிருக்க, ஒரு மழைநாளின் மாலையில் பாஸ்கர் என்ற இவனது நண்பன், தான் காதலித்த வசந்தி என்ற பெண்ணுடன் மதுரையிலிருந்து ஓடிவந்து இவன் வீட்டுக் கதவைத் தட்டுகிறான். வெங்கடேஷுக்கு அவர்கள் ஓடிவந்த செயல் பிடிக்காவிட்டாலும் நண்பனுக்கு அடைக்கலம் தருகிறான். ஸ்ரீராம் வெங்கடேஷின் வீட்டு மாடியில் குடியிருக்கும் ஒரு ஓவியன். அவன் கனவுகளி்ல் அடிக்கடி குதிரையில் வரும் ஒரு இளவரசியின் முகம் வசந்தியின் முகமாக இருக்கக் கண்டு வியப்பில் ஆழ்கிறான் ஸ்ரீராம்.

வெங்கடேஷ், ‌தனக்குத் தெரிந்த கெளதமன் என்ற தொழிலதிபரிடம் பாஸ்கருக்கு வேலை கேட்க அழைத்துச் செல்கிறான். கெளதமனுடன் பேசும் நேரம் மாடியிலிருந்து அலறல் சத்தம் கேட்க, அவர் எழுந்து விரைகிறார். கெளதமனின் மகள் மஞ்சு சிகிச்சையை ஏற்க மறுத்து கலாட்டா செய்ய, சமாதானம் செய்கிறார். தூசி படிந்த ஓவியமாய் அந்த அறையிலேயே அடைந்து கிடக்கும் அழகான அந்த மஞ்சு, இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை நினைவுகூர்கிறாள். கெளதமனின் நண்பர் மகன் நந்தாவுடன் காரில் வெளியில் செல்ல, மூன்று ரவுடிகளால் நந்தா தாக்கப்பட்டு, தான் கற்பழிக்கப்பட்டதை தன்னால் சுலபமாக மறந்துவிட முடியாது என்று சொல்லி அழும் அவளைத் தேற்றுகிறார் கெளதமன்.

டாக்டர், மஞ்சுவுக்குத் திருமணம் செய்து வைப்பது நலலதென்றும், அவள் வாழ்வில் நடந்த விஷயங்களை மணப்பவனிடம் மறைக்காமல் இருப்பதே அவளுக்கு நல்லது என்றும் சொல்லிவிட்டுச் செல்கிறார். ‌கீழே வந்ததும் வெங்கடேஷ், பாஸ்கருடனான பேச்சில் பல விஷயங்களினூடே, கற்பழிக்கப்பட்ட பெண்கள் குற்றமற்றவர்கள், வாழ்வுதர வேண்டும் என்று பாஸ்கர் ஆவேசமாகப் பேச கெளதமன் அவனுக்கு தன் அலுவலகத்தில் வேலை தருகிறார்.

ஸ்ரீராம் பாஸ்கர் - வசந்தியுடன் நட்பாகப் பழகுகிறான். ஸ்ரீராமின் பண்பாடான நடத்தையும், ஓவியத் திறமையும் வசந்தியைக் கவர்கிறது. தன் கம்பெனியில் தற்காலிக டைப்பிஸ்டாக வசந்திக்கு வேலை வாங்கித் தருகிறான் ஸ்ரீராம். பாஸ்கருக்கு மஞ்சுவை கெளதமன் அறிமுகப்படுத்தி வைக்கிறார். பாஸ்கரின் விளையாட்டு ஈடுபாடும், கலகல சுபாவமும் மஞ்சுவை சோகத்திலிருந்து மீட்டு வருகிறது. மகிழ்ச்சியடைந்த கெளதமன், பாஸ்கரை தன் பங்களாவின் அவுட் ஹவுஸிலேயே தங்கும்படி கட்டளையிட, வேறு வழியின்றி வசந்தியைப் பிரிந்து அங்கே செல்கிறான் பாஸ்கர்.

கம்பெனியில் ஸ்ரீராமையும், வசந்தியையும் இணைத்து டாய்லெட்டில் யாரோ எழுதி வைத்துவிட, கோபமான ஸ்ரீராம், அதை எழுதிய மாதவ் என்பவனைக் கண்டுபிடித்து, அனைவர் முன்னிலையிலும் அடித்து, வேலையை விட்டு அவனை அனுப்பச் செய்கிறான். ஸ்ரீராமின் அந்த ரோஷமும் காமம் கலக்காத வசந்தியி்ன் மீதான அவன் அன்பும் அவளை பிரமிக்க வைக்கிறது. மஞ்சுவின் அண்மை பாஸ்கரை நிலைதடுமாற வைக்கிறது. வசந்தியின் பிறந்தநாளைக்கூட புறக்கணித்து கெளதமன், மஞ்சுவுடன் திருச்சி செல்கிறான். வேலையாள் மூலம் கேக் அனுப்பி வைக்கிறான். ஸ்ரீராம் இரவு முழுவதும் கண்விழித்து அவளை ஓவியமாக வரைந்து பரிசளிக்கிறான். வசந்தி நெகிழ்கிறாள்.

பாஸ்கர் திரும்பி வந்ததும் வசந்தி அவனிடம் தான் கெளதமனின் பங்களாவுக்கு ‌போன் செய்த விவரத்தைக் கூறி விளக்கம் கேட்க, அவளை எடுத்தெறிந்து கோபமாகப் பேசிவிட்டுப் பிரிகிறான் பாஸ்கர். மறுதினம் மனம் கேட்காமல் வசந்தி போன் செய்ய, அவளிடம் அப்போதும் கடுமையாகப் பேசுகிறான். தன் சொத்து விவரங்களையும், அனைத்தும் மஞ்சுவுக்குத்தான் என்றும், மஞ்சுவின் மீது தான் வைத்திருக்கும் பாசத்தையும் சொல்லி, அவளை மணந்து கொள்ளும்படி பாஸ்கரிடம் கெளதமன் வேண்டுகோள் விடுக்க... தடுமாறுகிறான் பாஸ்கர்.

ஸ்ரீராமின் அப்பா இறந்து விட்டதாக தந்திவர, அப்பாவின்மேல் வெறுப்பிலிருக்கும் அவனுக்கு அறிவுரை கூறி, ஊருக்கு அனுப்பி வைக்கிறாள் வசந்தி. வெங்கடேஷின் அலுவலகம் வரும் பாஸ்கர், தான் முதலாளி மகள் மஞ்சுவை மணக்கத் தீர்மானித்திருப்பாகச் சொல்ல, வெங்கடேஷ் கோபமாகிறான். வசந்தியுடன் திருமணமா நடந்து விட்டது, அவள் தன் ஊருக்கே போகட்டும் என பாஸ்கர் சொல்ல, வெங்கடேஷ் அவனிடம் நியாயத்தை எடுத்துச் சொல்லி சண்டை பிடிக்கிறான். வசதியான வாழ்வு வரும்போது உதறுவது மடத்தனம் என்றும், ப்ராக்டிகலாக நடந்து கொள்ள வேண்டுமென்றும் உறுதியாகச் சொல்லிவிட்டு போகிறான் பாஸ்கர்.

வெங்கடேஷ் கெளதமனைச் சந்தித்து பாஸ்கர்-வசந்தி காதலையும், ஊரை விட்டு ஓடி வந்ததையும் சொல்ல, அவர் தனக்கு ஏற்கனவே தெரியுமென்றும், வசந்திக்கு பணம் தந்து செட்டில் செய்வதாகவும் சொல்கிறார். அவரிடம் நியாயம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகிறான் வெங்கடேஷ். வசந்தியை முகம் பார்த்துப் பேச கஷ்டப்பட்டு, ஸ்ரீராமின் மாடிப் போர்ஷனில் வந்து படுக்கிறான். இரவில் ஸ்ரீராம் வர, அவனிடம் பாஸ்கரின் நடத்தையைப் பற்றிக் கூறி என்ன செய்வது என ஆலோசிக்கிறான். ஸ்ரீராம் கோபமாக நியாயம் கேட்க இப்போதே போகலாம் என்க, வெங்கடேஷ் தடுககிறான். ஸ்ரீராம் மறந்து வைத்துவிட்ட ஸ்டவ்வைக் கொடுக்க வரும் வசந்தி இவர்கள் பேசியது அனைத்தையும் கேட்டு விடுகிறாள்.

கெளதமன் பிஸினஸ் காரியமாக வைத்திருக்கும் மைக்ரோபோனைப் பார்த்ததும் பாஸ்கருடன் விளையாட நினைக்கும் மஞ்சு, அவன் அறையில் அதை வைத்து விட்டு, தன் தோழியின் வீட்டுக்கு வந்து தோழியிடம் பாஸ்கருக்கு போன் செய்யச் சொல்கிறாள். பாஸ்கர் பேசுவது கேசட்டில் ரெகார்டாகும்படி செய்திருக்கிறாள் மஞ்சு. தோழியிடம் பேசிய பாஸ்கர் நிமிர, வசந்தியைக் கண்டு திடுக்கிடுகிறான். நியாயம் கேட்கும் வசந்தியிடம் அவன் கோபமாகப் பேசி அனுப்புகிறான். ஸ்ரீராமின் அறையில் அவன் டைரியை எதேச்சையாகப் பார்க்கும்படி நேர்கிறது வெங்கடேஷுக்கு. அதில் வசந்தி மேல் தான் வைத்திருக்கும் காதலைப் பற்றி ஸ்ரீராம் எழுதியிருப்பதைப் படித்து நெகிழ்கிறான்.

தன் தோழியுடன் பாஸ்கர் பேசிய உரையாடல் டேப்பை போட்டுக காட்டி அவனை கேலி செய்கிறாள மஞ்சு. இங்கே வெங்கடேஷ், ஸ்ரீராமின் காதலைச் சொல்லும் டைரியை வசந்தியிடம் தந்து படிக்கச் சொல்ல, வசந்தி படித்து பிரமிக்கிறாள். மஞ்சுவின் தோழி வீட்டுக்கு வர, அந்த உரையாடல் கேஸட்டை அவளுக்கு போட்டுக் காட்ட, போன் உரையாடலின் தொடர்ச்சியாக வசந்தி - பாஸ்கர் பேசியது முழுவதையும் அப்போதுதான் கேட்கிறாள் மஞ்சு. கடும்கோபத்துடன் கெளதமனையும் அழைத்துக் கொண்டு பாஸ்கரிடம் வரும் மஞ்சு, ‘நாளை தன்னைவிட இன்னொரு பெரிய பணக்காரி கிடைத்தால் தன்னையும் விட்டுவிடுவான்தானே’ என்று சீறி, அவனை மணக்க முடியாது என்கிறாள். வசந்தியிடம் மன்னிப்புக் கேட்டு அவளுடன் வாழ்வதுதான் சரி என்று பாஸ்ரிடம் பொரிந்து தள்ளி, அவனை உதறிவிட்டுப் போகிறாள்.

வெங்கடேஷ், ஸ்ரீராமை மணந்து கொள்ளும்படி வசந்தியிடம் கேட்க, அவள் யோசிக்க ‌நேரம் கேட்கிறாள். வெங்கடேஷ் இதுபற்றி ஸ்ரீராமுடன் பேசி, அவனையும் கன்வின்ஸ் செய்தபடி வர, ஸ்ரீராமால் வேலையை விட்டு அனுப்பப்பட்ட மாதவ், அவனைக் கத்தியால் குத்திவிட்டு ஓடுகிறான். பாஸ்கர், தன் தவறை உணர்ந்து கெளதமனிடம் ராஜினாமாக் கடிதம் தந்து விட்டு, புறப்படுகிறான்.ஸ்ரீராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செய்தியை வசந்திக்கு போன் மூலம் வெங்கடேஷ் சொல்ல, பதறி ஓடி வருகிறாள். அவளிடம் ஸ்ரீராம் எழுதிய கடிதத்தை வெங்கடேஷ் தர, அதன் மூலம் ஸ்ரீராமின் உடல் சாராத தூய காதலை தரிசிக்கிறாள் வசந்தி.

அப்போது பாஸ்கர் அங்கு வந்து அவளிடம் மன்னிப்புக் கேட்டு, வசந்தியின் பதிலை எதிர்பார்த்துக் காத்து நிற்க, ஆபரேஷன் தியேட்டரின் கதவு திறந்து நர்ஸ் வெளிப்பட்டு, ஸ்ரீராமுக்கு ரிஸ்கான ஆபரேஷன் என்பதால் யாராவது கையெழுத்திட வேண்டும் என்க, வசந்தி கையெழுத்திடுகிறாள். ‘ஸ்ரீராமுக்கு நீங்கள் யார்?’ என்று நர்ஸ் கேட்க, வசந்தி, வெங்கடேஷைம் பாஸ்கரையும் பார்த்துவிட்டு அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறாள்: ‘‘நான் அவரோட மனைவி!’’

காதல் கதைகள் நிறையப் படித்திருப்பீ்ர்கள். இந்தக் கதை - பி.கே.பியின் வார்த்தைகளில் சொன்னால் - ‘காதலைப் பற்றிய கதை!’ நிஜமான காதல் என்ற உணர்வை முப்பரிமாணத்தில் காட்டி, உண்மைக் காதலை உயர்த்திப் பிடிக்கும் கதை. குளிர் மேகங்கள் நிரம்பிய மாலையில் கடற்கரைக் காற்றில் நடக்கும் போது உணரும் இதத்தை இந்தக் கதையில் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் எழுத்து நடையில் உணர்வீர்கள், ரசிப்பீர்கள்; அந்த உணர்வை முழுமையாகப் பெற, இந்த ‘கேப்ஸ்யூல் நாவல்’ படிததால் போதாது. ‘தொட்டால் தொடரும்’ புத்தகத்தை முழுமையாகப் படித்தலே நலம்!

Wednesday, May 29, 2013

கேப்ஸ்யூல் நாவல் -8

Posted by பால கணேஷ் Wednesday, May 29, 2013
கரையெல்லாம் செண்பகப் பூ
- சுஜாதா -
கல்யாணராமன் நாட்டுப் பாடல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய திருநிலம் கிராமத்திற்கு வருகிறான். அங்கே வெள்ளரிப்பிஞ்சு விற்கும் வெள்ளி என்ற பெண்ணும், அவள் மூலமாக அவள் முறைப் பையனான மருதமுத்துவும் அவனுக்கு உதவுகிறார்கள். கல்யாணராமன் தங்குவதற்காக ஒதுக்கப்பட்ட ஜமீன் அரண்மனையில் அன்றிரவு சில வினோத சப்தங்களைக் கேட்டு பயப்படுகிறான். மறுதினம் மருதமு்த்துவின் டிராக்டரில் நகரம் சென்று ஷாப்பிங் செய்து வருகையில் லிஃப்ட் கேட்ட ஒரு பெண்ணைப் புறக்கணிக்கிறார்கள். அவள் கிராமத்துக்கு வந்ததும்தான் அவள் பெயர் சினேகலதா என்பதும், ஜமீன்தார் பரம்பரையின் கடைசி வாரிசு என்பதும் தெரிகிறது. அவள் கல்யாணராமனிடம், அவன் வந்திருப்பது உண்மையில் நாட்டுப் பாடல் ஆராய்ச்சிக்குத்தானா என்று கேட்க, திடுக்கிடுகிறான் அவன். பின் பேச்சை மாற்றுகிறாள்.

அன்றிரவும் ஜமீன் மாளிகையின் மாடியில் மர்ம சப்தங்கள் கேட்க, கல்யாணராமனும் மருதமுத்துவும் மேலே செல்ல... அங்கே ஓர் மர்ம உருவம் இவர்களைக் கண்டு ஓடி மறைவதைப் பார்க்கிறார்கள். சினேகலதா வந்தபின் மருதமுத்துவின் நடவடிக்கைகள் சரியில்லை என்றும், அவர்கள் பழகுவது பிடிக்கவில்லை என்றும் வெள்ளி, கல்யாணராமனிடம் சொல்கிறாள். கல்யாணராமனுக்கு வெள்ளியி்ன் மேல் உள்ளூர ஒரு மெல்லிய சபலம் இருக்கிறது. அ‌தை மறைத்து அவளை சமாதானப்படுத்துகிறான். நாட்டுப்பாடல் சொல்ல வரும் பெரியாத்தா என்ற கிழவி ஜமீன்தார் வம்சத்தில் ரத்னாவதி என்ற ஜமீன்தாரிணி பட்ட சித்ரவதைகளைச் சொல்லி சாபப்பட்ட ஜமீன் இது என்கிறாள். அன்றிரவு மாடியில் மர்ம சப்தங்கள் கேட்டு கல்யாணராமன் மேலே செல்ல, அந்த மர்ம உருவத்தைப் பிடிக்க முயல, கைகலப்பில் அந்த உருவத்தால் தாக்கப்பட்டு நினைவிழக்கிறான்.

இரு தினங்களில் உடல்நிலை தேறிய ஒரு பகலில் மாடியில் சென்று ஆராய, பீரோ‌வுக்குப்பின் ஒரு ரகசிய அறையைக் கண்டுபிடிக்கிறான். அறையை மட்டுமல்ல... ரத்னாவதியின் டைரியையும்! அதைப் படிக்கப் படிக்க ரத்னாவதியின் சோகக் கதை மனக்கண்ணில் படமாக விரிகிறது. ரத்னாவதி தன் பூர்வீக நகைகளை ஒளித்து வைத்ததைப் பற்றிச் சொல்வதைப் படிக்கையில் வெள்ளி அங்கே வர, மருதமுத்துவும சினேகலதாவும் சைக்கிளில் வந்து இறங்க கோபமாகி வெடிக்கிறாள் வெள்ளி. வார்த்தைகள் தடிக்க, சினேகலதாவைத் திட்டி, சாபம் விட்டு்ச் செல்கிறாள்.  சினேகலதா கல்யாணராமன் வைத்திருக்கும் ரத்னாவதியின் டைரியை தான்தான் ஜமீன் வாரிசு என்பதால் முதலில் படிக்க வேண்டும் என்று பறித்துக் கொள்கிறாள். வெள்ளி கிராமத்து பூசாரியிடம் சினேகலதாவுக்காக கோழி வெட்டி பலி கொடுப்பதை க.ராமன் பார்க்கிறான். சினேகலதாவின் நடவடிக்கைகள் அந்த டைரி கிடைத்தபின் புதிராக இருப்பதையும் மருதமுத்துவுடன் அவள் கூடிக் கூடிப் பேசுவதையும் கண்டு சந்தேகிக்கிறான்.

கிராமத்து விழாவில் பழையனூர் நீலி கதை கூத்து நள்ளிரவு வரை நடக்க, பாதியில் மருதமுத்துவும், சினேகலதாவும் செல்வதையும் சற்று நேரத்தில் வெள்ளி புறப்படுவதையும் க.ராமன் கவனிக்கிறான். ஜமீன் பங்களா வந்தால் எவரையும் காணவில்லை. தேடிவர, தோட்டத்தில் சினேகலதாவை நிலைத்த விழிகளுடன் பிணமாகப் பார்க்கிறான். போலீஸ் வர, விசாரணை துவங்குகிறது. வெள்ளி காணாமல் போயிருக்க, அவள்தான் கொன்றிருப்பாள் என்று மருதமுத்து சந்தேகப்படுகிறான்.

அன்றிரவு வெள்ளி, க.ராமனைத் தேடி வந்து தானே கல்லைப் போட்டு சி.லதாவைக் கொன்றதாகக் கூறி அடைக்கலம் கேட்கிறாள். க.ராமன் அவளை பீரோவின் பின்னுள்ள ரகசிய அறையில் மறைத்து வைக்கிறான். இன்ஸ்பெக்டரும், கிராமத்து முக்கியஸ்தரும் விசாரணைக்கு வரும்போது அந்த ரகசிய அறையைப் பார்த்துவிட்டு உளளே சர்ச் செய்ய, சமாளிக்கிறான். இதற்கிடையில் ‘உங்கள் குடும்பப் பெண் சினேகலதா இறந்து விட்டாள்’ என்று ஜமீன்தாருக்கு கொடுத்த தந்திக்கு, ‘எங்கள் குடும்பத்தில் சினேகலதா என்று யாருமே இல்லை’ என்று பதில் தந்தி வருகிறது இன்ஸ்பெக்டருக்கு! குழப்பமோ குழப்பம்!

க.ராமன் வெள்ளி‌யுடன பேசிக் கொண்டிருப்பதை ஒரு சிறுவன் பார்த்துவிட்டு ஓட, கிராமத்தவர் வரும்போது அவளைப் பிடிக்கப பார்த்தேன், தப்பி விட்டாள் என்று க.ராமன் சமாளிக்க, ரகசிய அறையை ஆராய, அங்கேயும் வெள்ளி இல்லை. அவள் ஜன்னல் வழியாகத் தப்பிவிட்டதை அறிகிறான் க.ராமன். இரவில் ரத்னாவதியின் நகைகள் அனைத்தையும் அணிந்தவளாய் வெள்ளி அவன்முன் தோன்றுகிறாள். கிணற்றில் ஒளிந்ததாகவும் அங்கே ஒரு ரகசியப் பிறையில் இந்த நகைகள் கிடைத்ததாகவும் கூறுகிறாள். கூடவே பேச்சுவாக்கில் ஒரு உண்மையையும் சொல்கிறாள். சி.லதா மேல் அவள் கோபத்தில் எறிந்தது கோலிகுண்டு அளவு கல் என்றும், அது பூசாரி மந்திரத்தின் மகிமையால் அவளைக் கொன்றுவிட்டது என்றும் சொல்கிறாள். தலையில் அடித்துக் கொள்ளும் க.ராமனுக்கு உண்மை புரிந்து அவள் ஏற்படுத்திய குழப்பத்தால் கோபமும் வருகிறது. அவளுடன சென்று கிணற்றில் நகைகள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தைப் பார்க்கிறான்.

அதற்குள் வெள்ளி அங்கிருப்பதை மருதமுத்துவும், இன்ஸ்பெக்டரும் கண்டுபிடித்துவிட, அவளை இன்ஸ்பெக்டர் அரெஸ்ட் செய்து அழைத்துச் செல்கிறார். கிராமத்தவர்கள் க.ராமனை தவறாகப் புரிந்து கொண்டு அடிக்கவர, அவன் பாதுகாப்பிற்காக ஒரு அறையில் தள்ளி கதவைச் சாத்துகிறார் இன்ஸ்பெக்டர். அங்கே ரத்னாவதியின் டைரி கிடக்க, அதன் மூலம் அவள் நகைகள் மறைத்துவைத்த இடத்திற்கு செண்பகப்பூ மூலம் குறிப்பு தந்திருப்பதையும், சினேகலதாவின் கூட்டாளி சாமி என்பவன் நகைகளைக் கொள்ளையிட வரச் சொல்லி அவளுக்கு எழுதிய கடிதத்தையும் படிக்கிறான் க.ராமன். அந்த அறையிலிருந்து தப்பி கலெக்டரைச் சந்தித்து உண்மையைச் சொல்ல, அவர் போலீஸ் அதிகாரிகளுடன்‌ பேச, நள்ளிரவில் அவர்கள் கிணற்றைச் சுற்றிலும் பதுங்கியிருக்க, அதனுள்ளிருக்கும் நகைப் பெட்டியை எடுக்க வ்ந்தவன் மடக்கப்படுகிறான்; கைது செய்யப்படுகிறான்.

காவல்துறையின் ‘பலத்த’ விசாரணைக்குப் பின் அவன் ஜமீன்தாரின் வைப்பாட்டி மகன் என்பதையும், பல லட்சங்கள் பெறுமானமுள்ள ரத்னாவதியின் நகைகளைக் கண்டுபிடித்து அடைவதற்காக கிராமத்தில் குழந்தைகளுககு பயாஸ்கோப் காட்டுபவனாக (பயாஸ்கோப் பழனியாண்டி) வாழ்ந்து சுற்றி வந்ததாகவும், இரவில் நகையைத் தேடியதாகவும், சரியான சந்தர்ப்பத்தில் திருட்டுத் தொழிலில் தன் கூட்டாளியான சினேகலதாவைச் சேர்த்துக் கொண்டதையும் சொல்கிறான். கிராமத்துத் திருவிழா நடந்த இரவு ‌தோட்டத்தில் மருதமுத்து, சினேகலதாவுடன் சுகித்துவிட்டுச் செல்ல, அவன் வந்து கிணற்றில் இருந்து அவள் எடுத்த நகைப் பெட்டியைக் கேட்க, அவள் எதுவும் எடுக்கவில்லை என்று மறுத்து சித்ரவதைக்குப் பின் கிணற்றின் பிறையில் ஒளித்து வைத்திருப்பதாகச் சொல்லிவிட, அவளை கோபமாக அவன் பிடித்துத் தள்ளியதில் பின் மண்டை கிணற்றுச் சுவரில் மோதி இறந்து விட்டாள் என்கிறான்.

சினேகலதா கொலையால் கிராமத்தில் ஏற்பட்ட குழப்பமும் அமளிதுமளியும் ஓயக் காத்திருந்து வெள்ளியை போலீஸ் அரெஸ்ட் செய்ததால் தைரியம் பெற்று அன்றிரவு வந்து மாட்டிக்கொண்டதை அவன் வாக்குமூலம் தர, கேஸ் முடிகிறது. க.ராமன் அந்த கிராமத்திலிருந்து விடைபெற, சமாதானமாகிவிட்ட வெளளியும் மருதமுத்துவும் ஜோடியாக வந்து அவனுக்கு விடை கொடுக்கிறார்கள். கையாட்டி விடைபெறும் சமயம் வெள்ளியின் உதடுகள் ஏதோ சொல்லத் துடித்ததாக க.ராமனுக்குத் தோன்றுகிறது. ரயில் மெல்ல நகர, ‘அவள் என்ன சொல்ல விரும்பினாள்’ என்ற கேள்வியுடனேயே தன் பயணத்தைத் தொடர்கிறான் கல்யாணராமன்.

இதுபற்றி மேலும் படிக்க க்ளிக்: க‌ரையெல்லாம் செண்பகப்பூ

Friday, January 4, 2013

கேப்ஸ்யூல் நாவல் - 7

Posted by பால கணேஷ் Friday, January 04, 2013

                வீரத்தேவன் கோட்டை
                                                     - லக்ஷ்மி -

எழுத்தாளர் லக்ஷ்மி சரித்திரக் கதைகூட எழுதியிருக்கிறாரா என்ன? என்று புருவங்களை உயர்த்துகிறீர்கள் தானே... இந்த நாவல் அவரின் எழுத்துக்களில் மாறுபட்டதாக சரி்த்திர, சமூகக் கதையாகப் பரிமளித்திருக்கிறது. சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த கதை என்கிற குறிப்புடன் 1956ல் இதை எழுதியிருக்கிறார் லக்ஷ்மி அவர்கள். இப்போதும் படிப்பதற்கு போரடிக்காத இந்தக் கதை இங்கே உங்களுக்கு கேப்ஸ்யூலாக!

அந்த திரைப்படக் குழு காவிரிக் கரையில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கிறது. உணவு இடைவேளை விடப்பட, அனைவரும் உணவருந்தியபடியே அரட்டையடிக்கின்றனர். தனக்கு முன் தென்பட்ட இடிந்த கோட்டையைக் கண்ட கதாநாயகி காமினி, அதைப் பறறிக் கேட்க, அதற்கு ‘வீரத்தேவன் கோட்டை’ என்றும், அந்நாட்களில் வீரத்தேவன் பெயர் கேட்டால் அழுத பிள்ளையும் வாய் மூடும் என்றும் கூறுகிறார். ‘இந்தக் கோட்டை போரில் அழிந்திருக்குமோ’ என இயக்குனர் கேட்க, ‘ஒருவகையில் பெரும் போர்தான். அன்பை வெல்ல இருவர் போராடினார்கள். நூறு வருஷங்களுக்கு முன்பு...’ என்று கதையை சொல்லத் தொடங்குகிறார் கதாசிரியர்.

காவிரி பெருக்கெடுத்தோடும் கொள்ளிடக்கரையில் திருவிழா நடந்து கொண்டிருக்க, நண்பர்கள் வீரத்தேவனும் இருளப்பனும் அதைப் பார்த்து மகிழ்ந்தபடி நடககின்றனர். அங்கே கறுப்பாக, நீள் வட்ட முகமும், சிவந்த அதரங்களும், முத்துப் பற்களையும் கொண்ட அழகியொருத்தியைக் கண்டு வீரத்தேவன் மயங்குகிறான். பவளவல்லி என்கிற பெயர் கொண்ட அவள் இதயமும் வீரத்தேவனை நாடுகிறது. திருவிழா முடிந்தபின் அவளைக காண விருமபி பதினைந்து தினங்களுக்கும் மேலாக இருளப்பனுடன் அவளைத் தேடியலைகிறான் வீரத்தேவன். ‘பொன்னம்பலத் தேவர்’ என்கிற எதிரியின் எல்லையில் அந்தப் பெண்ணை மீண்டும் கண்டு அவளுடன் பேச்சுக் கொடுக்கின்றனர். இருளப்பனின் பேச்சில் கோபமடைந்து பவளவல்லி சென்று விடுகிறாள்.

அதேநேரம் அரண்மனையில் சைவப் பழமாய் காட்சியளிக்கும் வீரத்தேவனின் தாய் மங்களாம்பிகையைக் காண ஒரு கிழவி வந்திருப்பதாக தோழியர் சொல்ல, அவள் முகம் வெளிறிப் போகிறது. ‘ஏன் இங்கேயெல்லாம் வந்தாய்’ என்று கிழவியை அவள் கடிந்து கொள்ள, கிழவி பணம் கேட்கிறாள். ‘அந்த ஒலையைத் தந்தால் நிறையப் பணம் தருவேன்’ என மங்களாம்பிகை சொல்ல, ‘அது பிறகு, இப்போது கொஞ்சம் பணம் தா’ என்று அவளை மிரட்டி பணம் பறித்துச் செல்கிறாள் கிழவி.

அன்றைய படப்பிடிப்பு முடிந்து விட்டதால் கதையை நிறுத்திய கதாசிரியர் மறுநாள் லன்ச் பிரேக்கில் மீண்டும் தொடர்ந்து சொல்கிறார்.

அடுத்த சில தினங்களில் பவளவல்லி-வீரத்தேவன் காதல் நன்கு வளர்ந்து விட்டிருக்கிறது. தன் இயற்பெயரான சுந்தரத்தேவன் என்று அவளுடன் அறிமுகமாகிப் பழகி வருகிறான். அவள் வீட்டுக்கு தாமதமாகத் திரும்புவதைக் கண்ட பொன்னம்பலத் தேவர், அவளைக் கண்டித்து வீரத்தேவன் என்பவன் தன் பரமவைரி என்று கூறி, பரம்பரைக் கதையைச் சொல்கிறார். ‘‘கொள்ளிடத்தின் மறுகரையை ஆண்டு வந்த சிவஞானத் தேவனின் மகன் இந்த வீரத்தேவன். பத்தாண்டுகளுக்கு முன் சிவஞானத்தேவர் சிலரால் தாக்கப்பட்டு மரணமடைந்தார். அதை நான் செய்ததாக பலர் சொல்கிறார்கள். நான் செய்யவில்லையே என்பதுதான் என் வருத்தமும். ஆனாலும் வீரத்தேவனின் உதிரத்தில் என் பழி தீர்த்துக் கொள்வேன். வீரத்தேவனின் தாய் மங்களாம்பிகை பெண்ணாகப் பிறந்த ஒரு பேய். என் மகனையும் மருமகளையும் கொன்று தீர்த்த அந்தக் குடும்பத்தை பழி தீர்ப்பேன்’’ என்று குமுறுகிறார். ‘‘உன் மாமன் பாண்டித்துரையும், சிவஞானமும் நெருங்கிய நண்பர்கள். ஒரு பெண் விவகாரமாக அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு எதிரிகளானார்கள். உன் மாமி பூரண கர்ப்பிணியாயிருக்கையில் அவளுடன் ஒரு திருமணத்திற்குச் சென்று திரும்பிய உன் மா‌மனையும் மாமியையும் இருளில் சில ஆட்கள் தாக்கிக் கொன்று விட்டனர். அவர்கள் அணிந்திருந்த நகைகளை சில காலம் சென்றபின் மங்களாம்பிகை குறைந்த விலைக்கு விற்றாள் என்பதால் அதைச் செய்தது இன்னாரென விளங்கிற்று. நம் குடும்ப நகைகளில் மச்ச சின்னம் பொறித்திருக்கும்’’ என்கிறார் பொன்னம்பலத் தேவர். பவளவல்லி அவசரமாக ஓடிச் சென்று வீரத்தேவன் பரிசளித்த பச்சைக்கல் மோதிரத்தை எடுத்துப் பார்க்கிறாள். மச்சச் சின்னம் கண் சிமி்ட்டுகிறது அங்கே.

படப்பிடிப்பு மும்முரமாக நடைபெறவே கதையை இத்துடன் விட்டுவிட்டு மறுதினம் மீண்டும் தொடர்கிறார் கதாசிரியர்.

அதன்பின் வீரத்தேவன் தன் காதலியைச் சந்திக்க வர, பவளவல்லி, தான் பொன்னம்பலத் தேவரின் பேத்தி என்பதால் இந்தக் காதல் நிலைக்காது என்று கண்ணீருடன் சொல்லவிட்டு ஓடி விடுகிறாள். அதற்குப் பதினைந்து தினங்கள் கழித்து இரவில் சில முரட்டு மனிதர்கள் எதிர்பாராதவிதமாக பொன்னம்பலத் தேவரைத் தாக்கி மயக்கமடையச் செய்து, பவளவல்லியைத் தூக்கிச் செல்கின்றனர். கண் விழிக்கும் பவளவல்லியை சந்திக்கும் மங்களாம்பிகை, அவள் கறுத்த நிறத்தை கேலி செய்துபேசி, அழவைத்து, தனக்குப் பணிப்பெண்ணாக இருக்கும்படி கூறுகிறாள். வீரத்தேவன் அவளிடம் ‘சிலகாலம் அம்மாவுக்கு பணிப்பெண்ணாக இருந்து அவள் மனம் மகிழச் செய்தால் உன்னை மன்னித்து நம் கல்யாணத்துக்கு சம்மதிப்பாக சொல்லியிருக்கிறாள், ஆகவே வேறு வழியில்லை’ என்று கடுமையாக சொல்லிச் செல்கிறான்.

மங்களாம்பிகைக்குப் பணிய மறுத்து கைதியாக பவளவல்லி படும் துன்பம் கண்டு பொறாமல், அவளுக்கு ரகசியமாக உதவ முன்வருகிறான் இருளப்பன். தன் நம்பிக்கைக்குரிய சேடிப் பெண் மூலம் இரவு அவளைத் தப்ப வைப்பதாக செய்தியனுப்புகிறான்.  இரவில் அந்தப் பணிப்பெண் வழிகாட்டி அழைத்துச் செல்ல, இருவரும் பதுங்கி தோட்டத்துக்கு வரகின்றனர். பின்கதவை நெருங்குவதற்குள் யாரோ நடந்து வரும் காலடி ஓசை‌ கேட்கவே இருளில் பதுங்குகின்றனர். முக்காடிட்டுக் கொண்டு ஒரு இருள் உருவம் வருவதைக் கண்டு மிரள்கின்றனர். அது முக்காட்டை நீக்க... அந்தக் கிழவி! அவள் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு தன் இடுப்பிலிருந்த துணிப்பையை எடுத்து அருகிலிருந்த திரைச்சீலை மடிப்பில் ஒளித்து வைத்துவிட்டு நிற்கிறாள். தோழிப் பெண் வந்து ராணி காத்திருக்கிறார்கள் என்று கூறி அவளை அழைத்துச் செல்ல, பவளவல்லி மெல்ல அந்த துணிப்பையை கைப்பற்றுகிறாள். அதற்குள் மங்களாம்பிகை, கிழவியுடன் உரத்த குரலில் பேசுவது கேட்கிறது. அவர்களிருவரும் பயந்து ஓடி ஓரிடத்தில் வெளியேற வழியின்றி கதவு பூட்டியிருப்பதைக் கண்டு மறைந்து கொள்கின்றனர்.

சத்தம் கேட்டு அங்கே வரும் மங்களாம்பிகை அவர்களைக கண்டுபிடிக்கவில்லை. பின்னாலேயே கிழவி வருகிறாள். இம்முறை அவளுக்கு பெரும்பணம் தந்து விட்டதால் ஓலையைத் தரும்படி மங்களாம்பிகை மிரட்ட, மலடியானவள் ஒரு மகனுக்குத் தாயாக வேண்டுமானால் கஷ்டங்களை அனுபவிக்கத்தான்வேண்டும் என்று சிரிக்கிறாள் கிழவி. ‘‘உனக்கு குழந்தை பிறக்காததால் வேறு கல்யாணம் செய்ய உன் கணவர் திட்டமிட்டிருந்தார். அப்படி நடந்திருந்தால் இரண்டாவது மனைவிக்கு பணிப்பெண்ணாய் இருந்திருப்பாய். மருத்துவச்சி நான் சூழ்ச்சி செய்து நீ கர்ப்பமாய் இருப்பதாக பொய் சொன்னேன்.திருட்டுத்தனமாக ஒரு குழந்தையைப் பெற்று உன் அறையில் ஒளித்துவைத்து அது உனக்குப் பிறந்தது என்று உறுதிப்படுத்தினேன். உண்மையில் குழந்தையைப் பெற்றவள் ஒரு ஓலையில் அதன் பூர்வோத்திரங்களை எழுதி அவன் வயது வந்ததும் கொடுக்கச் சொல்லிவிட்டு இறந்தாள். அந்த ஓலைக்கு நீ என்ன கொடுத்தாலும் தகும்’’ என்கிறாள். கிழவிக்கு இன்னும் பணம் தந்து ஓலையைத் தரச் சொல்ல, அவள் வைத்த இடத்தில் துழாவி ஓலை காணவில்லையன்று மிரள, கோபமிகுதியில் மங்களாம்பிகை கிழவியின் கழுத்தை நெறித்துக் கொன்று விடுகிறாள். பிணத்தை திரைச்சீ‌லையின் பின் மறைத்துவிட்டு அவள் செல்ல, பவளவல்லி அங்கிருந்து வெளியேறி, இருளப்பன் உதவியுடன் தப்புகிறாள்.

கொள்ளிடக்கரையில் அவளைச் சேர்த்த இருளப்பன், பரிசல் ஏற்பாடு செய்யச் செல்ல, ஆவல் தாங்காமல் அந்த ஓலையைப் பிரித்துப் படிக்கிறாள். அது புதிய கதை சொல்கிறது. ‘‘நான் கொள்ளிடக் கரையில் சில தினங்கள் முன்பு படுகொலை செய்யப்பட்ட பாண்டித்துரையின் பத்தினி பர்வதவர்த்தினி. நான் இனி பிழைப்பேன் என்று தோன்றவில்லை. எங்களுக்கு இந்த நிலை வரும்படி செய்த அந்தப் பாவிகளை என் மாமன் பழிவாங்குவார். ஆகவே, இதைப் படிக்கும் அன்பு சகோதரரே, என் மைந்தனையையும் இந்த ஓலையையும் என் மாமா பொன்னம்பலத் தேவரிடம் ஒப்படைக்கும்படி வேண்டுகிறேன். அதற்கு பிரதியாக என் கைகளில் அணிந்திருக்கும் பச்சைக்கல் பதித்த கங்கணங்கள் இரண்டையும் பரிசளிக்கும்படி என்னைக் காத்த அம்மையாரிடம் சொல்லியிருக்கிறேன்.’’ என்று எழுதப்பட்டிருக்கிறது. அத்துடன் உள்ள மற்றொரு ஓலையில் பொன்னம்பலத் தேவருக்கு அவள் எழுதிய கடிதம் இருக்கிறது. அதில் இந்த விஷஜுரத்தில் தான் பிழைக்க மாட்டேன் என்றும், தன் கணவரைக் கொன்றது சிவஞானத்‌ தேவரின் ஆட்கள் என்பதை அவர்கள் பேசியதைக் கேட்டதாகவும், அவரைப் பழிவாங்குமாறும், அவள் மகனின் மார்பில் பொற்காசு அளவில் மச்சமும், கால்களில் ஆறு விரலும் காணப்படுகின்றன என்று அடையாளங்களும் எழுதப்பட்டிருக்கிறது.

ஓலைகளைப் படித்து முடித்ததும் ஸ்தம்பித்துப் போகிறாள் பவளவல்லி. அதற்குள் சில ஆட்களுடன் வந்த வீரத்தேவன் அவளை எதுவும் பேச விடாமல் மீண்டும் கவர்ந்து செல்கிறான். அங்கே சென்றதும் பவளவல்லி தான் தப்புவதற்காக எதிரில் வந்த கிழவியைக் கொன்று விட்டு ஓடிவிட்டாள் என்று மங்களாம்பிகை குற்றம் சாட்ட, கோபத்தில் கொந்தளிக்கும் பவளவல்லி, வீரத்தேவனிடம் உண்மைகளைப் போட்டு உடைக்கிறாள். அதன் வீரியம் தாங்காமல் மயக்கமாகிறாள் மங்களாம்பிகை.

இங்கே கதையை நிறுத்திவிட்டு, படப்பிடிப்பு தொடர்ந்து நடப்பதால் இரண்டு தினங்கள் கழித்து நடிகை காமினியிடம் கதையைத் தொடந்து சொல்கிறார் கதாசிரியர்.

மூர்ச்சை தெளிந்ததும் ஓர் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டு ‘தன் பரமவைரியின் மகனைத் தத்தெடுத்து வளர்த்து விட்டோமே’ என்ற அதிர்ச்சியைத் தாளாது, வைரமோதிரத்தைப் பொடி செய்து விழுங்கி உயிரை விடுகிறாள். இந்த உண்மைகளை ஜீரணிக்க இயலாமல் பல தினங்கள் அதிர்ச்சியுடன் திரியும் வீரத்தேவன், பின் மனம் தேறி, பவளவல்லியைத் திருமணம் செய்து கொண்டு தன் பாட்டனார் பொன்னம்மபலத் தேவரைச் சந்திக்கிறான். ‘‘என் குலக்கொழுந்தே! உன்னை யாரென்று தெரியாமல் வெறுத்தேனே!’’ என்று அவனைக் கட்டியணைக்கிறார் அவர்.

‘‘இதுதான் இந்த வீரத்தேவன் கோட்டையின் கதை’’ என்று முழுவதுமாகச் சொல்லி முடிக்கிறார் கதாசிரியர். அன்றுடன் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிவதனால் அனைவரும் புறப்படுகின்றனர்.

....என்னங்க... பேக்கேஜ் டூர் மாதிரி சுருக்கமா கதையைப் படிச்சுட்டீங்க. பிடிச்சிருந்ததா? முழுசாப் படிக்கணும்னு தோணிச்சுன்னா... உடனே லைப்ரரிக்கு ஓடுங்க. எந்த மாதிரி சுவாரஸ்யமான இடங்கள்ல லக்ஷ்மியம்மா கதாசிரியர் மூலமா ப்ரேக் விட்டுட்டு, நம்ம படபடப்பை கூட்டிட்டு அப்புறம் தொடர்ந்திருக்காங்கன்றதை கவனிச்சீங்களா? நல்ல யுத்தியா இருக்கில்ல..!  லக்ஷ்மியம்மாவின் வித்தியாசமான இந்தக் கதையைத் தந்ததுபோல அவர் எழுதிய அருமையான குடும்பக் கதைகளில் ஒன்று இன்னொரு கேப்ஸ்யூலாக பின்னர் தருகிறேன்.

Thursday, May 17, 2012

கேப்ஸ்யூல் நாவல் - 6

Posted by பால கணேஷ் Thursday, May 17, 2012

வாஷிங்டனில் திருமணம்
அமெரிக்க கோடீஸ்வரி ராக்பெல்லரின் நாத்தனார் பெண் லோரிட்டாவும், யுனெஸ்கோவில் பணிபுரியும் மூர்த்தியின் மகள் வசந்தாவும் கல்லூரித் தோழிகள். மிஸஸ் ராக்பெல்லரின் நாத்தனார் கணவரான ஹாரி ஹாப்ஸ், வசந்தாவின் திருமணத்துக்காக குடும்பத்துடன் கும்பகோணம் வருகிறார். அந்தத் திருமணத்தை அதிசயமாகப் பார்க்கும் அவர், அது பற்றிய குறிப்புகளையும் (சாப்பாட்டில் அப்பளம் என்ற வட்டமான ஒரு வஸ்துவைப் போடுகிறார்கள். அதை எப்படி வட்டமாகச் செய்கிறார்கள், எப்படி நொறுங்காமல் செய்கிறார்கள் என்பதெல்லாம் விளங்காத மர்மங்களா யிருக்கின்றன) எழுதிக் கொள்கிறார்.

அந்தக் குறிப்புகளைப் படித்தும், தென்னிந்தியக் கல்யாண விவரங்களை ஹாரிஹாப்ஸ் தம்பதிகள் சொல்லக் கேட்டும் மிஸஸ் ராக்பெல்லருக்கு ஒரு தென்னிந்தியத் திருமணத்தைப் பார்க்கும் ஆசை ஏற்படுகிறது. அமெரிக்காவில் ஒரு தென்னிந்தியத் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்யுங்கள் என்று உத்தரவிடுகிறார். தென்னிந்தியாவில் பெண்(ருக்மயி)ணின் குடும்பத்தினர் அம்மாஞ்சி, சாம்பசிவம் என்கிற இரு சாஸ்திரிகளுடன் அமெரிக்கா வருகின்றனர். பெண் வீட்டைச் சேர்ந்த பஞ்சு கல்யாண ஏற்பாடுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறான். விமானத்தில் பணிப்பெண்ணாக இருக்கும் லலிதாவை பஞ்சுவின் அத்தைக்குப் பிடித்துப் போகிறது. பஞ்சுவுக்கும்தான்!

மணமகன் (ராஜகோபாலன்) குடும்பத்தினர் தனி விமான்தில் ‌அமெரிக்கா வருகின்றனர். இந்தியாவிலிருந்து தனி விமானங்களில் கல்யாணத்துக்கு வேண்டிய அனைத்துப் பொருட்களும், நபர்களும் வரவழைக்கப்படுகின்றனர். பந்தக்கால் நடுதல், அப்பளம் இடுவது, ஜானவாசம், சம்பந்தி சண்டை என்று தென்னிந்தியத் திருமணத்தின் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் அமெரிக்கர்களுக்குப் புதிதாக இருக்க பல கலாட்டாக்கள் அரங்கேறுகின்றன. இவற்றுக்கிடையில் பஞ்சு-லல்லியின் காதலும் வளர்கிறது. இறுதியில் திருமணம் நன்கு நடந்தேற, ராக்பெல்லர் சீமாட்டி அனைவருக்கும் பரிசுப் பொருள்களும், சன்மானங்களும் கொடுத்து, கலங்கிய கண்களுடன் வழியனுப்பி வைக்கிறாள்.

-கதைச் சுருக்கம் என்று சொன்னால் சாவி அவர்கள் எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ கதையை இவ்வளவுதான் சொல்ல முடியும். பல கலாட்டாக்கள் என்று நான் இங்கு குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொன்றும் சாவி அடிக்கும் நகைச்சுவை ஸிக்ஸர்கள். அதை அனுபவிக்க முழுப் புத்தகத்தையும் நீங்கள் படித்தாக வேண்டும். சாம்பிளுக்காக சில இங்கே உங்களுக்காக:

தவில் என்பது டபுள் ஹெட்டட் இன்ஸ்ட்ரூமென்ட். இதை வாசிப்பவர் ஒரு பக்கத்தை ஸ்டிக்கால் ‘பீட்’ செய்து கொண்டு மறு பக்கத்தைக் கையால் அடிக்கிறார். எப்படி அடித்தாலும் தவில் கிழிவதில்லை. தாலி கட்டும்போது சிலர் ஆள்காட்டி விரலை ‌வேகமாக ஆட்டி இவரைப் பயமுறுத்துகிறார்கள். உடனே தவில்காரர் பயந்து ‘டமடம’வென்று தவிலைக் கொட்டி முழக்குகிறார்.

சாஸ்திரிகள் தண்ணீரில் மூழ்கி எழும் போதெல்லாம் ‘ஹாரி, ஹாரி’ என்று ஹரி நாமத்தை நீட்டி முழக்கி கோஷித்தார். கரையில் நின்று கொண்டிருந்த ஹாரி என்ற பெயருடையவர்கள் எல்லாம் தங்கள் பெயரைத்தான் சொல்கிறார் என்று எண்ணி மகிழ்ந்தார்கள்.

வெங்கிட்டு, தன் பாட்டியிடம் ஓடிப் போய், ‘‘பாட்டி! பறந்த அப்பளத்தையெல்லாம் பறக்கும் தட்டுன்னு நினைச்சு அமெரிக்கர்கள் சுட்டு விட்டார்களாம்’’ என்றான். ‘‘அடப்பாவமே! சுடுவானேன்? என்னிடம் சொல்லியிருந்தால் எண்ணெயில் பொரித்துக் கொடுத்திருப்பேனே! சுட்ட அப்பளம் நன்னாயிருக்காதேடா!’’ என்றாள் பாட்டி.

விருந்தில் பரிமாறப்பட்ட வடுமாங்காயைக் கடிக்கத் தெரியாமல் பலர் விரலைக் கடித்துக் கொண்டு ‘ஆ! ஆ!’ என்று அலறினர். பற்களுக்கிடையி்ல் விரல்கள் அகப்பட்டுக் கொண்டதால் காயம் ஏற்படவே விரல்களைச் சுற்றி பிளாஸ்திரி போட்டுக் கொண்டார்கள். மறுதினம் விரலில் துணி சுற்றிக் கொண்டு நின்ற தவில் வித்வான்களைக் கண்ட அமெரிக்கர் சிலர், ‘‘ஐயோ பாவம்! இவர்களுக்கும் வடுமாஙகாய் சாப்பிடத் தெரியவில்லை போலிருக்கிறது’’ என்று சொல்லி அனுதாபப் பட்டனர்.

நடந்து நடந்து கால் வீங்கிய சீமாட்டியின் காலில் விளக்கெண்ணையைத் தடவி ஒத்தடம் கொடுத்தார்கள் அத்தையும் பாட்டியும். ‘‘இப்ப நீங்க என்ன செய்யறீங்க?’’ என்றாள் மிஸஸ் ராக். ‘‘எங்களுக்குத் தெரிந்த கை வைத்தியம் செய்கிறோம்’’ என்றாள் அத்தை. ‘‘கால் வீங்கிப் போயிருக்க, கை வைத்தியம் செய்தால் எப்படி? கால் வைத்தியமாகச் செய்யுங்க’’ என்றாள் திருமதி ராக்.

‘‘நலங்கிட ராரா... ராஜகோபாலா’’ என்று ருக்கு பாடியபோது அத்தனை பேரும் உற்சாகத்துடன் சிரித்தனர். ‘ராஜகோபாலா’ என்று கணவன் பேரைச் சொல்லிப் பாடிவிட்ட ருக்மணி, வெட்கம் சூழ்ந்து கொள்ள மவுனமாகி விட்டாள். ‘‘எதுக்கு எல்லாரும் சிரிக்கிறாங்க?’’ என்றாள் மிஸஸ் ராக். ‘‘ருக்கு தன் ஹஸ்பெண்ட் பேரைச் சொல்லி விட்டாள். அதற்குத்தான் சிரிக்கிறோம்’’ என்றாள் லோசனா. ‘‘ருக்குவின் ஹஸ்பெண்ட் நேம் அவ்வளவு ஹ்யூமரஸா?’’ என்று கேட்டாள் மிஸஸ் ராக்.

Monday, March 12, 2012

கேப்ஸ்யூல் நாவல் 5

Posted by பால கணேஷ் Monday, March 12, 2012

ஒரு சரித்திர நாவலைக்கூட துப்பறியும் நவீனத்தின் விறுவிறுப்புடன் எழுத முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஸ்ரீவேணுகோபாலன். இவரை நினைக்கும் போதெல்லாம் ஆச்சரியம்தான் வரும் எனக்கு. தேர்ந்த நடிகன் இரட்டை வேடம் போடுவதைப் போல, புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் செக்ஸ்+க்ரைம் கதைகளையும், ஸ்ரீவேணுகோபாலன் என்ற பெயரில் ஆன்மீக + சரித்திரக் கதைகளையும் அந்தந்தத் தளங்களுக்கே உரிய நடையில் அமர்க்களமாக எழுதுபவர் அவர். 


இந்நாவலில் அவரது அழகிய தமிழ்நடையில் நெருப்பென வரும் வீர சாகசங்களும், உணர்ச்சிக் கொந்தளிப்பான தந்தை-மகன் உறவும், குறிப்பாக.... உத்தமன், விச்வநாதன் காதல்களில்பொங்கிவரும் வர்ணனைகளும், உரையாடல்களும் காதல் ரசத்தில் மூழ்கடித்து விடும். அப்படி காதல் ரசத்தில் மூழ்கித் திளைக்க உடனே முழுக் கதையையும் தேடிப் பிடித்து படித்து மகிழுங்கள். 


கி.பி. பதினாறாம் நூற்றாண்டு. விஜயநகரத்திற்குள் உத்தமன் என்ற இளைஞன் மூன்று சகாக்களுடன் வருகிறான். பாண்டிய ராஜ வம்சத்தைச் சேர்ந்த இளவரசி உடன்கட்டை ஏற முற்பட, சகாக்களுடன் போய் அவளைக் காப்பாற்றி, குதிரையில் பறக்கிறான். ஏழு வீட்டார் என்ற கூட்டத்தின் தலைவர் சிங்கார பூபனின் ஆட்கள் அவர்களைத் துரத்துகின்றனர். ஒரு சத்திரத்தில் தங்கி, தான் மாலடிப் பெருமாள் என்ற சிற்றரசரின் மகன் எனவும், பாண்டிய ராஜவம்சத்தின் கடைசி வாரிசான அவள் தீக்குளிக்கக் கூடாதென்றும் சொல்கிறான் உத்தமன். அவள் சினத்துடன் மறுக்க, அப்போது சிங்காரபூபனின் ஆட்கள் அங்கு வர, சண்டை நடக்கிறது. உத்தமனையும் அவன் சகாக்களையும் கைது செய்து கொண்டு செல்கிறான் சிங்காரபூபன். வழியில் நண்பர்களின் சாதுர்யத்தால் தப்பும் உத்தமன், நண்பர்களைப் பிரிந்து செல்லும்படி நேர்கிறது.

மயக்கமுற்று குதிரையில் சாய்ந்திருந்த அவன் கண் விழிக்கும் போது, ஒரு இளைஞனை புலி துரத்தி வருவதைக் கண்டு, புலியுடன் போரிட்டுக் கொன்று அவனைக் காப்பாற்றுகிறான். அந்த இளைஞன் தன் பெயர் விச்வநாதன் என்றும் தான் விஜயநகரத்தின் ராஜப் பிரதானி என்றும் அறிமுகம் செய்து கொண்டு உத்தமனின் நண்பனாகிறான். உத்தமன் தன் சகாக்களை தேடிப் பிடித்து அவர்களுடன் சென்று பாண்டிய இளவரசியை மறைத்து வைத்திருக்கும் இடத்திலிருந்து மீண்டும் கடத்தி வந்து விஜயநகரத்தில் விச்வநாதனின் பாதுகாப்பில் அவளை விடுகிறான். அவள், உத்தாரணர் என்ற முள்ளிநாட்டுக் குறுநில மன்னரிடம் ஒரு ஓலை தரும்படியும், அதற்கு பதில் வரும்வரை உடன்கட்டை ஏறாமலிருப்பதாகவும் உத்தமனிடம் சொல்ல, உத்தாரணர் போலிப் பாண்டியரின் ஆதரவாளர் என்பதால் அவன் தயங்குகிறான். பின் சம்மதித்து, ஓலையுடன் புறப்படுகிறான்.

உத்தமன் செல்லும் வழியில் துரத்திவரும் விச்வநாதன், பாண்டிய நாட்டில் அவன் தங்கியிருந்த சமயம் அவனுககு ஏற்பட்ட காதல் அனுபவங்களை உத்தமனிடம் சொல்கிறான். தான் இளமையில் காதலித்த அந்தப் பெண்ணை பாண்டிய நாட்டில் உத்தமன் தேடித் தரும்படி வேண்டுகிறான். அவன் சொல்லும் அடையாளங்கள் பாண்டிய இளவரசி சந்திரமாலாவை ஒத்திருக்க, ஏற்கனவே அவளிடம் மனதைப் பறி கொடுத்திருந்த உத்தமன் திடுக்கிடுகிறான். ஆனாலும் நண்பனுக்காக சம்மதிக்கிறான். பின் விச்வநாதனிடம் அவன் தந்தை நாகம நாயக்கர் பாண்டிய நாட்டைத் தானே அபகரித்து மன்னனாகப் பார்க்கிறார் என்று உத்தமன் கூற, அவன் நம்ப மறுக்கிறான்.

விச்வநாதன் விஜயநகரம் திரும்பிச் செல்ல, உத்தமனைத் தொடர்ந்து வந்த சிங்காரபூபன், சாதுர்யமாக உத்தமனுக்கும் சகாக்களுக்கும் உணவில் மயக்க மருந்தைக் கொடுத்து, ஓலையைத் திருடி விடுகிறான். தாமதமாக இதை அறியும் உத்தமன், எங்கும் நில்லாமல் உத்தாரணரை அடைந்து நடந்ததைக் கூறுகிறான். அவர், தான் பாண்டிய வம்சத்தின் எதிரி இல்லையென்பதையும், போலிப் பாண்டியரிடம் உளவறியவே அவர் ஆதரவாளராக நடித்ததையும் கூறி, இப்போது ஓலை தவறியதால் உண்மைப் பாண்டியருக்கு ஆபத்து என்றும் தெரிவிக்கிறார். உத்தமனை உடனழைத்துக் கொண்டு கடினமான மலையான குரங்கணி துர்க்கத்தில் மலை ஏறி வர, மேலே ஒரு மாளிகை எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு உண்மைப் பாண்டியரும் அரசியும் எரிந்து விட்டதாகப் புலம்பிக் கீழே வீழ்கிறார் உத்தாரணர். அக்கணமே அவர் உயிரும் பிரிகிறது.

உத்தமன் விரைந்து விஜயநகரம் வந்து இளவரசியிடம் நடந்ததைக் கூற, அவள் அவனைக் கோபிக்கிறாள். விச்வநாதனிடம் அனுமதி பெற்று முள்ளிநாடு விரைகிறாள். வழியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளும் அவளைக் காப்பாற்றுகிறான் உத்தமன். விளைவாக, அவன் கடும் காய்ச்சலால் அவதியுற, அவனுக்கு வைத்தியம் செய்வித்து தன்னுடன் அழைத்துச் செல்கிறாள் சந்திரமாலா. மயக்கம் தெளிந்த உத்தமன், தான் அரண்மனையில் இருப்பதை உணர்ந்து எழுந்து நடக்க, உத்தாரணரின் விதவை ராணி, சந்திரமாலாவைத் திட்டுவதைப் பார்க்கிறான். அவள் உண்மையில் உத்தாரணரின் மகள் மோகவல்லி என்பதும், பாண்டிய வம்சத்துக்காக உயிர்த்தியாகம் செய்ய முற்பட்டிருப்பதும் அப்போதுதான் அவனுக்குத் தெரிகிறது. உண்மையான சந்திரமாலாவைக் காப்பாற்றிவிட்டு பின்னர் தான் உயிர்த்தியாகம் செய்வதாக தன் தாயிடம் உறுதி கூறுகிறாள் மோகவல்லி.

இதற்கிடையில் பூபன், போலிப் பாண்டியரின் தூண்டுதலின் பேரில் முள்ளிநாட்டு அரண்மனையைச் சுற்றி வளைக்க, சுரங்க வழியாக மோகவல்லியும் உத்தமனும் தப்பிச் செல்கின்றனர். குரங்கணி துர்க்கம் சென்று சந்திரமாலாவைத் தேடுவதாக சொல்லி, அவனைப் பிரிந்து செல்கிறாள் மோகவல்லி. அதே சமயம் பாண்டியநாட்டு மக்கள் உண்மைப் பாண்டியர் இறந்ததை அறிந்து புரட்சியில் ஈடுபடுகின்றனர். அவர்களிடம் மோகவல்லி எதிர்ப்பட, அவள்தான் பாண்டிய இளவரசி என்று புரட்சிப் படையில் சேர்ந்திருந்த பூபனின் ஆட்கள் சிலர் சொல்ல, புரட்சிப் படை அவளைப் பாண்டிய ராணியாக்கி விடுகிறது.

நாகம நாயக்கரோ அவளது அதிகாரத்தைப் பறித்து பொம்மை ராணியாக வைத்திருக்கிறார். மோகவல்லியைத் தேடி வரும் உத்தமனுக்கு அவள் இதைக் குறிப்பால் சொல்ல, அவன் விஜயநகரம் சென்று விச்வநாதனிடம் சொல்கிறான். இதே சமயம் கிருஷ்ணதேவ ராயருக்கும் நாகமரின் எண்ணம் தெரிந்துவிட, அவரை படையுடன் திரும்பிவரச் சொல்லி கடிதம் எழுதுகிறார். நாகமர் மறுத்துவிட, ராயர் கோபத்துடன் படையெடுத்துச் செல்லும்படி தளபதிகளிடம் சீற, நாகமரின் வீரத்தை எண்ணி தளபதிகள் தயங்க, விச்வநாதன் தான் சென்று, தந்தையென்றும் பாராமல் நாகமரை அடக்குவதாக உறுதிகூறி புறப்படுகிறான். உத்தமனின் துணையுடன் நாகமரை போரில் வெல்லும் விச்வநாதன், கைது செய்து ராயரிடம் அவரை அழைத்து வருகிறான்.

ராயர், விச்வநாதனுக்காக நாகமரை மன்னிப்பதுடன், போலிப் பாண்டியரை அடக்கி, அவர் சம்மதத்துடன் விச்வநாதனை மதுரையின் மன்னனாக்கி அனுப்புகிறார். விச்வநாதனும், உத்தமனும் முள்ளி நாட்டுக்கு வர, மோகவல்லியின் அரண்மனை ஏழு வீட்டாரால் எரிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறார்கள். அவளைத் தேடி குரங்கணி துர்க்கம் விரைகிறார்கள். அங்கே எதிர்ப்படும் ஏழு வீட்டார் படைகளை மொத்தமாக அழித்து, பூபனையும் ‌கொல்கிறான் உத்தமன்.

இறக்கும் தருவாயிலிருந்த உத்தமனின் நண்பர்கள் கொடுத்த தகவலின்படி அங்குள்ள துர்க்கை கோயிலுக்கு விரைய, கோயில் தீப்பற்றி எரிவதையும், அதனுள் மோகவல்லியும், சந்திரமாலாவும் இருப்பதையும் அறிந்து, தீயினுள் பாய்ந்து சென்று முதலில் சந்திரமாலாவைக் காப்பாற்றுகிறான் உத்தமன். சந்திரமாலாவை தீ அண்டாமல் போர்வையாய் இருந்து பாதுகாத்த மோகவல்லியை உத்தமன் மீண்டும் தீயினுள் சென்று தூக்கிவர, தீயில் கருகிய அவள் உடலிலிருந்து உயிர் உத்தமனின் மடியில் பிரிகிறது.

விச்வநாத நாயக்கன், சந்திரமாலாவை மணந்து மதுரையில் நாயக்கர் வம்ச ஆட்சியைத் தொடங்கி வைக்கிறான். சந்திரமாலாவுக்கும் அவனுக்கும் குழந்தை பிறக்காததால் வேறொரு ராணியின் மூலம் பிறந்த நாயக்கர் வம்ச வாரிசுகளே பின்னாளில் பாண்டிய நாட்டை ஆண்டனர். (பின்னர் வந்த திருமலை நாயக்கர், ராணி மங்கம்மாள் போன்றோர் நாயக்கர் பரம்பரையில் புகழ்பெற்றவர்கள்) விச்வநாதனின் ஒவ்வொரு வெற்றியிலும் உத்தமன் துணையாயிருக்க, அவனுக்கு உந்துசக்தியாக அவன் மனதில் நின்று தூது பாடிக் கொண்டிருக்கிறாள் மோகவல்லி.

Saturday, January 14, 2012

கேப்ஸ்யூல் நாவல்-4

Posted by பால கணேஷ் Saturday, January 14, 2012
எல்லா எழுத்தாளர்களுக்கும் ‘மாஸ்டர் பீஸ்’ என்று ஒன்றிரண்டு கதைகள் இருக்கும். ஆல்ரவுண்டர் சுஜாதா விஷயத்தில் அவரது மாஸ்டர் பீஸ் எதுவென்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையைச் சொல்வார்கள். எல்லோரும் ரசிக்கும் கணேஷ்-வஸந்த் கேரக்டர்களை சுஜாதாவின் எழுத்தில் முழுவீச்சில் இந்த ‘கொலையதிர் காலம்’ நாவலில் ரசிக்கலாம். கணேஷின் புத்திசாலித் தனமும், வஸந்த்தின் குறும்புகளும் படிக்கும் அனைவரையும் கட்டிப் போட்டு விடும். விறுவிறுப்பான இந்த த்ரில்லர் இங்கே உங்களுக்காக:

கொலையுதிர் காலம்

கணேஷும் வஸந்த்தும் தீபக் என்பவனி்ன் வேண்டுகோளின்படி லீனா என்கிற பெண்ணின் சொத்து விஷயத்தைக் கவனிப்பதற்காக அவள் சித்தப்பா குமார வியாசன் என்பவரை செங்கல்பட்டுக்கு அப்பாலுள்ள ஒரு கிராமத்திலுள்ள எஸ்டேட்டில் சந்திக்கிறார்கள். குமாரவியாசன், லீனாவின் மேல் ஆவி வருவதாகவும், அவள் சென்ற ஆண்டு ஒரு கொலை செய்து விட்டாள் என்றும், தான் அதை மறைத்து விட்டதாகவும் சொல்கிறார். அங்கே தங்கும் கணேஷும் வஸந்த்தும் மாடியறையில் பல வினோதக் குரல்களைக் கேட்கிறார்கள். மேலே சென்று பார்த்தால் பழைய சாமான்கள் போட்டிருக்கும் அறை அது. யாரும் அங்கு இல்லை. இரவில் சுனை அருகில் உள்ள மண்டபத்தில் சாம்பல் நிறத்தில் லீனாவை ஒத்த உருவமுடைய ஆவி உருவத்தையும் பார்க்கிறார்கள்.

வஸந்த் காலையில் வினோதக் குரல்கள் கேட்ட அறையிலிருந்து ‘சில வினோதங்கள்’ என்ற பழைய புத்தகத்தை எடுத்து வருகிறான். அதில் பிசாசு வரு‌வதைப் பற்றியும், அது வியாசர்கள் பரம்பரையை சாபத்தின் காரணமாக அழித்து வருவதாக இருப்பதையும் காட்டுகிறான். அவன் சென்றதும் கணேஷ் அந்தப் புத்தகத்தை எடுக்க முற்பட, அது தானாக நகர்ந்து புத்தக அலமாரிக்குச் செல்ல, திடுக்கிடுகிறான் கணேஷ்.

அன்றிரவு குமாரவியாசனும் லீனாவும் உடன்வர, கணேஷும், வஸந்த்தும் மீண்டும்  சுனை மண்ட பத்தில் பிசாசைப் பார்க்கிறார்கள். கணேஷ் துணிவாக அதன் மிக அருகில் சென்றுவிட, எதனாலோ தாக்கப்பட்டு வீழ்கிறான். சிகிச்சைக்குப் பின் கண் விழித்து, தன்னை ஆவி அடித்தது என்பதை நம்ப முடியவில்லை என்கிறான் கணேஷ். மறுதினம் மண்டபத்தருகில் ஒரு பிணம் கிடப்பதாக தோட்டக் காரன் வந்து அலறுகிறான். போலீஸ் வர, இன்ஸ்பெகட்ர் பிணத்தின் அருகில் லீனாவின் ஒரு காது ஸ்டட்டையும், உடைந்த வளையல்களையும் கண்டெடுக்கிறார். குமாரவியாசன் அது லீனா செய்த இரண்டாவது கொலை என கணேஷிடம் சொல்கிறார்.

வஸந்த் சில விவரங்கள் சேகரிக்க சென்னை செல்ல, தனியே இருக்கும் கணேஷ் இரவில் லீனாவின் குரல் கேட்டு எழ, ஒரு இருள் உருவத்தால் தாக்கப்படுகிறான். உடன் போன் செய்து வஸந்த்தை வரச் சொல்கிறான். காலை இன்ஸ்பெக்டர் வந்து மண்டபத்தில் கிடந்த பிணம் மார்ச்சுவரி போகும் வழியில் காணவில்லை யென்றும் அதை ஒரு பேய் உருவம் தூக்கிச் சென்றதை ஒருவன் பார்த்ததாகவும் கூறுகிறார்.

கணேஷ், குமாரவியாசனை சந்தேகித்து, லீனா+குமாரவியாசனை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் செலவதாகவும், அவர் அறையில் ஆராயும் படியும் வஸந்த்திடம் சொல்கிறான். வஸந்த் அவர் அறையில் எலக்ட்ரீஷியன் வேலைக்கான விளம்பரத்தையும், குமாரவியாசன் அவனுக்கு வேலை கொடுத்த ஆர்டரையும் கண்டுபிடிக்கிறான். இறந்தது அந்த மெக்கானிக்காகத் தான் இருக்க வேண்டும் என முடிவெடுக்கிறார்கள். போலீஸ் சூப்பிரண்டன்ட் விசாரணைக்கு வர, அவருடன் அனைவரும் மண்டபத்தருகில் ஆவியைப் பார்க்கப் போகிறார்கள். கணேஷ் சைகை செய்ய, வஸந்த் நழுவி கு.வியாசனின் அறையில் மேலும் ஆராயச் செல்கிறான். ஆவியைக் கண்டு சூப்பிரண்டன்ட் உட்பட அனைவரும் மிரண்டு திரும்பிவர, ஆவி பேசிய வார்த்தைகளை தான் எப்போதோ பேசி, அதேபோல அழுதிருப்பதாக லீனா கணேஷிடம் சொல்கிறாள். அப்போது வஸந்த்தின் அலறல் குரல் கேட்டு சென்று பார்க்க, மிகமிக மோசமாகத் தாக்கப்பட்டு, ரத்தக் காயங்களுடன் கிடக்கிறான் வஸந்த்.

வஸந்த் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட, லீனாவின் உதவியுடன் குமாரவியாசனின் அறையை ஆராயும் கணேஷ், பாத்ரூமில் ஒரு புத்தக அலமாரியைக் கண்டுபிடிக்கிறான். ஆஸ்பத்திரிக்கு மீண்டும் வர, வஸந்த் பிசாசின் வசனங்கள் எழுதிய ஒரு பேப்பரை தான் வியாசன் பாத்ரூம் வாசலில் கண்டெடுத்தபோது தாக்கப்பட்டதாக கூறுகிறான். அப்போது அங்கு வரும் கு.வியாசன், கணேஷ்+லீனாவை ஒரு முக்கிய விஷயமாகப் பேச மாலை எஸ்டேட் வரும்படி கூறிச் செல்கிறார். மாலையில் செல்லும் கணேஷும் லீனாவும் தலையில் அடித்துக் கொல்லப்பட்ட வியாசனின் பிணத்தைத்தான் பார்க்கிறார்கள்.

போலீஸார் அங்கு முற்றுகையிட, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட பிக் ஆக்ஸ் லீனாவின் பெட்டியில் அவள் புடவைக் கிடையிலிருந்து கிடக்கிறது. கணேஷிடம், ‘வெங்கடேஸ்வரனை 6’ என்று ஏதோ கடிதம் எழுதத் துவங்கும்போதுதான் வியாசன் அடிபட்டிருக்கிறார் என்று சொல்லி அந்தக் காகிதத்தைக் காட்டுகிறார் இன்ஸ். கணேஷும் வஸ்ந்த்தும் சென்னை திரும்ப, வஸந்த் துப்பறிந்து வெங்கடேஸ்வரனைக் கண்டு பிடிக்கிறான். லீனாவின் பண்ணை வீட்டை மும்பை பார்ட்டிக்கு லீசுக்குவிட தன்னிடம் குமாரவியாசன் ஒரு லட்சம் அட்வான்ஸ் பெற்றிருப்பதாக சொல்கிறார். லீனா போன் செய்ய, தீபக் வந்து அவளை அழைத்துச் செல்கிறான்.

வஸந்த் நடப்பவையெல்லாம் அமானுடத்தின் செயல் என்ற கட்சியில் ஆதாரம் தேட, கணேஷ் அந்தச் சம்பவங்களின் விஞ்ஞான சாத்தியங்களை ஆராய முற்படுகிறான். ஹோலோகிராம் என்ற லேஸர் பிம்பத்தின் மூலம் இப்படி காட்சிகளை அமைப்பது சாத்தியம் என்று படிக்கும் கணேஷ், அதில் கில்லயாடியான புரொபசர் ராமபத்ரன் என்பவரை சந்தித்துப் பேச அவர் அசையும் உருவங்கள் சாத்தியமில்லை என்று கூறிவிடுகிறார். கணேஷ் தங்கள் அறைக்கு வர, வஸந்த் வந்திருக்கவில்லை. ஃபேனைப் போட, மேலிருந்து ‌ஒரு வெட்டுண்ட கை விழுகிறது. அதை போலீஸ் உதவியுடன் லாபுக்கு அனுப்புகிறான். தீபக்கும் லீனாவும் வந்து தாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாகச் சொல்லிச் செல்கின்றனர்.

நடந்த ஒவ்வொரு சம்பவத்துக்கும் ஆவி ரீதியாக வஸந்த் விளக்கங்கள் தர, அகண்ட சொத்தினை மோட்டிவ்வாக வைத்து நடப்பவை அனைத்தும் விஞ்ஞான ரீதியாக சாத்தியமே என்று விளக்குகிறான் கணேஷ். வஸந்த் வியந்து போக, லீனாவின் அகண்ட சொத்துக்கு அவளையும், வியாசனையும் அழித்தால் பயனடையக் கூடிய மூன்றாவது வாரிசு யாராவது இருக்க வேண்டுமென்கிறான் கணேஷ்.

வேறொரு விஞ்ஞானக் கட்டுரையில் நகரும் ஹோலோகிராம் பிம்பங்கள் சாத்தியம் என்று படிக்கும் கணேஷ், அது சம்பந்தமாக ஒரு புத்தகம் வாங்கி வர வஸந்தை அனுப்புகிறான். கமிஷனர் ராஜேந்திரன் போன் செய்து, அந்த வெட்டுண்ட கை ஒரு மெடிக்கல் காலேஜ் அனாடமி லாபிலிருந்து கண்ணியமாக உடையணிந்த ஒருவனால் வாங்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்த விட்டதைச் சொல்கிறார். அப்போது வஸந்த் பதட்டமாக ஓடிவந்து, கணேஷ் வாங்கிவரச் சொன்ன புத்தகத்தில் கட்டுரை எழுதியவர்களின் வாழ்க்கைக் குறிப்பு இருப்பதாகவும்,  புரொஃபசர் ராமபத்ரனின் முழுப்பெயர் ராமபத்ர வியாசன் என்றும் சொல்கிறான்.

அவர்தான் மூன்றாவது வாரிசு என்பது புரிந்துவிட, அவர் முகவரியைக் கண்டுபிடித்த கணேஷும் வஸ்ந்த்தும் அவர் வீட்டில் ஆராய, தேனிலவுக்கு ஊட்டிக்குச் சென்றிருக்கும் தீபக்-லீனாவைத் தொடர்ந்து அவர் சென்றிருப்பதை அறிகிறார்கள். உடன் தங்கள் காரில் ஊட்டிக்கு விரைந்து சுற்றித் தேட, ஏரியில் தீபக் மட்டும் நிற்கிறான். புரொஃபசர், லீனாவுடன் போட்டிங் சென்றிருப்பதாக சொல்கிறான். மற்றொரு படகில் சென்று அந்தப் படகு மட்டும் அனாதையாகக் கிடப்பதையும் கரையோரம் ஒரு தனி வீட்டில் லீனா இருப்பதையும் கண்டுபிடிக்கிறார்கள். நடு ஏரியில் ரமபத்ரன் தன்னைப் பிடித்துக் கொண்டதில் படகு கவிழ்ந்துவிட, நீரில் இருவரும் விழுந்ததாகவும், நீச்சல் தெரியாத அவர் இறுகப் பற்றிக் கொள்ள, உதறிவிட்டு தான் நீந்தி தப்பி விட்டதாகவும் லீனா கூறுகிறாள். போலீஸில் ரிப்போர்ட் செய்துவிட்டு அவர்கள் திரும்புகின்றனர்.

நடந்தவை அனைத்தும் விஞ்ஞான ரீதியாகவே நடந்தன என கணேஷ் சொல்ல, பைசாசம் செய்தது என்று வஸந்த் வாதிட, அந்தக் கேள்விக்கான விடையை வாசகர்களிடமே விட்டுவிட்டு நாவல் நிறைகிறது.

Tuesday, December 20, 2011

கேப்ஸ்யூல் நாவல்-3 : யவன ராணி

Posted by பால கணேஷ் Tuesday, December 20, 2011
சாண்டில்யனின் எல்லாப் படைப்புகளும் வாசகர் மனதில் நின்றவை தான். என்றாலும் யவனராணி தனிச் சிறப்புடையது. இரண்டு பாக நாவலான  இதைப் படித்தால் தமிழர்கள் வீரம், பண்பாடு, காதல் என எல்லாத் துறைகளிலும் சிறப்படைந்திருந்ததை அறிந்து பெருமிதம் கொள்ளலாம். சாண்டில்யனின் காதல் ரசம் சொட்டும் வர்ணனைகளையும், அழகான உரையாடல்களையும், கதாநாயகன் இளஞ் செழியனின் வீரம், புத்திசாலித்தனம் ஆகியவற்றை உணர்வதற்கு முழுநாவலையும் படித்து அனுபவிப்பதே சிறப்புடையது. இது அதன் ஜுஸ் மட்டுமே!

சோழர்களின் பிரதான கடற்கரை நகரமான பூம்புகாரில் சோழர் படை உபதலைவன் இளஞ்செழியன், தன் மேல் கோபத்துடன் இருக்கும் மாமன் மகள் பூவழகியின் நினைவுடன் கடற்கரையில் நடந்து சென்று கொணடிருக்கும் போது அவன் காலில் இடறுகிறாள் ஒரு யவனப் (கிரேக்க) பெண். அவளைத் தன் இல்லத்துக்கு எடுத்து வந்து முதலுதவி செய்ய முற்படுகிறான் இளஞ்செழியன்.  அவன் மெய்க்காப்பாளன் ஹிப்பலாஸ், அவள் அணிந்திருக்கும் அன்னப் பறவை ஆபரணத்தை வைத்து அவள் யவன அரச குடும்பத்தைச் சேர்ந்தவள் என்றும் அவள் வந்திருப்பது தெரிந்தால் புகாரின் யவனர்கள் ஒன்று திரண்டு புரட்சி செய்து புகாரைக் கைப்பற்றி அவளை அரசியாக்கி விடுவார்கள் என்றும் சொல்லி அஞ்சுகிறான். அதை மெய்ப்பிப்பது போல் கோட்டைக் காவல் தலைவன் (யவனன்) விசாரணைக்கு வர, யவன ராணியை மறைத்து கோட்டைத் தலைவனை மிரட்டி அனுப்புகிறான் இளஞ்செழியன்.

வீரர்களுடன் வருவதாகக் கூறிய கோட்டைத் தலைவன், சோழ மன்னன் இளஞ்சேட்சென்னி அவர் மாளிகையிலேயே இருங்கோவேள் என்பவனால் எரித்துக் கொல்லப்பட்டதாகவும், இளவரசன் திருமாவளவனைக் காணவில்லை என்றும் அதிர்ச்சிக் குண்டுகளை இளஞ்செழியன் மீது வீசிச் செல்கிறான். மயக்கத்திலிருந்து விழித்த அந்த யவனப் பெண்ணோ, தான் டைபீரியஸ் என்ற புகழ்பெற்ற கடற்படைத் தலைவனுடன் வந்ததாகவும் கடற் கொள்ளையருடன் ஏற்பட்ட போரினால் கப்பல் மூழ்கி தான் மரக்கட்டையைப் பிடித்து தப்பியதையும் கூறுகிறாள்.

இதற்கிடையில் கோட்டைத் தலைவன் பல வீரர்களுடன் இளஞ்செழியன் மாளிகையைச் சூழ்ந்து கொள்ள, போரிட்டுத் தப்பும் இளஞ்செழியன், யவன ராணியை பிரும்மானந்தர் என்னும் துறவியின் மடத்திற்கு அழைத்துச் செல்கிறான். அங்கே இருக்கும் பூவழகி அவன் ஒரு யவனப் பெண்ணுடன் வருவதைக் கண்டதும் மேலும் சினமடைகிறாள். அப்போது டைபீரியஸ் அங்கு வர, தன் ஆசிரமம் வீரர்களால் சூழப்பட்டிருப்பதை அறிந்த அடிகள், இளஞ்செழியன் விருப்பத்துக்கு மாறாக யவனராணியை அவனுடன் அனுப்புகிறார். சுரங்கப்பாதை வழியாக அனைவரும் தப்பிச் சென்று கடற்கரையை அடைகையில் டைபீரியஸால் கைது செய்யப்படுகின்றனர். அப்போது அவர்களுடன் வந்த இளஞ்செழியன் தப்பிச் சென்றுவிட்டதை அறிகிறான் டைபீரியஸ்.

தப்பிய இளஞ்செழியன் இரவில் கோட்டைச் சுவரேறி யவன ராணியைத் தன் வாணகரை என்னும் கடற்கரை தீவுக் கோட்டைக்கு கடத்திச் செல்கிறான். அவளை மீட்க வரும் டைபீரியஸிடம் பிரும்மானந்தர் உள்ளிட்டவர்களை விடுவிக்கும்படி யவனராணி சொல்ல, டைபீரியஸ் அவள் ஆணைப்படி அவர்களை விடுதலை செய்து அனுப்பி வைக்கிறான். பிரும்மானந்தர், திருமாவளவனின் மாமாவான இரும்பிடர்த் தலையர் என்பவருக்கு ஒரு ஓலை எழுதி இளஞ்செழியனை யவனராணியுடன் சேர நாட்டில் தன் சிஷ்யனின் மடத்துக்கு செல்லச் சொல்கிறார். அங்கு செல்லும் இளஞ்செழியன் அந்த ஓலையை இருங்கோவேளிடமே ஒப்படைக்கும்படி நேர்கிறது.  இருங்கோவேளை தந்திரமாகப் பேசி சமாளிக்கிறான் இளஞ்செழியன்.

அன்றிரவு. வீரர்களால் சூழப்பட்ட மடத்தில் சமணத் துறவியுடன் தங்கும் இளஞ்செழியன், மர்ம மாளிகை என்று அவர் காட்டும் ஒரு மாளிகை அப்போது எரிவதைக் காண்கிறான். இருவரும் அங்கு சென்று எரிந்த மாளிகையிலிருந்து தப்பும் திருமாவளவனைக் காப்பாற்றுகின்றனர். ஒரு பாழடைந்த மாளிகையில் பதுங்குவதற்கு அவர்கள் வர, அங்கு பூவழகியம் அவள் தோழிகளும் இருக்கின்றனர். இருங்கோவேளி்ன் வீரர்களை சமாளித்து அனுப்பிவிட்டு திருமாவளவனின் காயங்களுக்கு சிகிச்சை செய்கிறாள் பூவழகி. தீயில் எரிந்ததால் அவன் கால் இனி கருநிறமாகவே இருக்கும் என அவள் சொல்ல, தன் பெயர் இனி கரிகாலன் எனவும், அவள் தன் சகோதரி எனவும் கூறி அங்கிருந்து செல்கிறான் திருமாவளவன்.

இளஞ்செழியன் மீண்டும் சமண மடத்திற்கு வர, அங்கு இருங்கோவேள் ராணியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயல்வதைக் கண்டு சினமடைய, அங்கு வரும் பிரும்மானந்தர் நைச்சியமாகப் பேசி இருங்கோவேளை சமாளித்து அனுப்புகிறார். இரவில் இருங்கோவேளின் வீரர்கள் யவனராணியைக் கடத்த முற்பட, இருளில் வாட்போர் செய்து அவளைக் காப்பாற்றி அழைத்துச் செல்கிறான் இளஞ்செழியன். முன்னர் தன்னால் காப்பாற்றப்பட்ட அல்லி என்பவளின் வீட்டில் அவளைத் தங்க வைக்கலாம் என்று வர,அங்கே டைபீரியஸைக் காண்கிறான். டைபீரியஸும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள, புகார் செல்லும் வழியில் ஏற்படும் ஆபத்திலிருந்து தன் புத்தி சாதுயர்யத்தால் அவர்களைக் காப்பாற்றுகிறான் இளஞ்செழியன்.

புகாருக்கு படகில் செல்கையில் யவன ராணியிடம் காதல் மயக்கத்தில் இருக்கும் இளஞ்செழியனை வஞ்சகமாக மயக்கத் துளிகளால் மயங்கச் செய்து யவனர் கப்பலில் ஏற்றி அனுப்பி விடுகிறான் டைபீரியஸ். அவன் செயலைக் கடுமையாக எதிர்க்கும் ராணியைச் சிறை வைத்து புகாரைக் கைப்பற்றி ஆட்சி செய்கிறான். இதேநேரம் இருங்கோவேள் பூவழகியின் தந்தையை சிறை வைத்து விட்டு மற்ற வேளிர்கள் உதவியுடன் சோழநாட்டின் மறைமுக மன்னனாக இருப்பதுடன், பூவழகியை மணக்க விரும்பி அவளை மாளிகைச் சிறையில் வைக்கிறான்.

யவனர் கப்பலில் செல்லும் இளஞ்செழியன், ஹிப்பலாஸின் உதவியால் கப்பலிலிருந்து தப்பி அடிமை வர்த்தகர்களிடம் சிக்கிக் கொள்கிறான். அடிமை வர்த்தகர்கள் அவர்களை விற்க கப்பலில் அழைத்துச் செல்ல, கொள்ளையர் கப்பல் சூழ்ந்து கொள்கிறது. வீரமாகப் போரிடும் இளஞ்செழியனையும் மற்றவர்களையும் கொள்ளையர் கைது செய்கின்றனர். கொள்ளையர் தலைவனுக்கு ஆசை ஊட்டி இலி ஆஸு என்ற கொடுங்கோல் மன்னனிடம் அவர்களை மாட்டி விடுகிறான் இளஞ்செழியன்.

இளஞ்செழியனைத் தன் படைத்தலைவனாகும்படி வற்புறுத்தும் அந்த மன்னனை தன் புத்தி சாதுர்யத்தால் ஏமாற்றி தப்புகிறான் இளஞ்செழியன். அந்நாட்டில் அவன் மேல் மோகம் கொண்ட அலீமா ன்றெ பெண் அவனுக்கு உதவ, கிரேக்க நாட்டு ரதப் போட்டியில் வென்று பல கப்பல்களுடன் தமிழகம் திரும்பும் இளஞ்‌செழியன் தன்னிடம் இருக்கும் யவனர் உதவியுடன் முகக்கவசம் அணிந்து யவனத் தூதனாக டைபீரியஸை சந்திக்கிறான். அவனுடன் உறவாடியபடியே புகாரில் அவனை முறியடிக்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்கிறான். அடிக்கடி வரும் யவனக் கப்பல்கலைக் கண்ட பிரும்மானந்தர் அல்லியைக் கொண்டு உளவறிய முற்பட, அவள் மூலம் கரிகாலனுக்குச் செய்தி அனுப்புகிறான் இளஞ்செழியன்.

யவன ராணியை ரகசியமாகச் சந்தித்து தமிழர்களின் இந்திர விழாவை யவனர்களின் வீனஸ் விழாவாக நடத்தும்படி இளஞ்செழியன் வேண்ட, அவள் தன்னை அவன் மணமுடிக்க வேண்டுமென்று பதிலுககு சத்தியம் கேட்கிறாள். அவ்வாறே சத்தியம் செய்கிறான் இளஞ்செழியன்.

அதேசமயம் திருமாவளவனும் இரும்பிடர்த் தலையரும் சிறு படை திரட்டி பதினெட்டு வேளிர் மற்றும் சேர, பாண்டிய மன்னர் துணையால் பெரும்படையுடன் இருக்கும் இருங்கோவேளுடன் போர் புரியத் தயாராகின்றனர்.  இளஞ்செழியன் அவர்களைச் சந்தித்து கோவில் வெண்ணி என்ற இடத்தில் போர் புரியச் சொல்லி வெற்றி தரும் போர்த்திட்டம் ஒன்றையும் வகுத்துத் தருகிறான். அவன் திட்டப்படி போர் நடக்க, கரிகாலன் போரில் வென்று, இருங்கோவேளை கொன்று பழி தீர்த்து வெற்றிவாகை சூடுகிறான். சோழர் படை, பின்வாங்கி ஓடிய சேர, பாண்டியப் படைகளை வாகை என்ற ஊருக்கு துரத்திச் செல்கிறது.

புகாரில் வீனஸ் விழாவில் பொதுமக்களுடன் கலந்து ‌வரும் கரிகாலன் தன் வீரர்களுடன் சூழ்ந்து கொள்ள, அவனுடன் போரிட்டுத் தப்பும் டைபீரியஸ், யவன நாட்டுக்கே செல்லும் உத்தேசத்துடன் கடற்கரைக்கு ராணியை இழுத்துச் செல்கிறான். அங்கே இளஞ்செழியனால் மடக்கப்பட, இனி தப்ப இயலாது என்றறியும் டைபீரியஸ் யவனராணியின் மீது குறுவாளை வீசிவிட்டு, இளஞ்செழியனின் உபதலைவன் வீசிய வேலுக்கு இரையாகி மடிகிறான்.

இளஞ்செழியனின் மாளிகையில் சிகிச்சை பலனின்றி அவன் மடியில் யவனராணி இறக்கிறாள். கரிகாலன் சோழ சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்டு அல்லியை மணந்து கொள்ள, பூவழகியை மணந்து கொண்டு சோழர்களின் பிரதான படைத்தலைவனாகும் இளஞ்செழியனின் நினைவில் (வாசகர்களின் மனதிலும்) யவனராணி வாழ்கிறாள்.

Wednesday, November 9, 2011

கேப்ஸ்யூல் நாவல்-2

Posted by பால கணேஷ் Wednesday, November 09, 2011
தமிழின் குறிப்பிடத்தக்க நாவல்களை ரத்தினச் சுருக்கமாகத் தரும் முயற்சியாக ‘சிவகாமியின் சபதம்’ நாவலை உங்களுக்கு ‘கேப்ஸ்யூல் நாவல்’ என்ற பெயரில் முன்பு வழங்கியிருந்தேன். அதைப் போலவே தமிழில் குறிப்பிடத்தக்க புத்தகங்களின் லிஸ்ட் போட்டால் அதில் தவறாமல் இடம் பெறத் தக்க அமரர் நா.பார்த்தசாரதி எழுதிய குறிஞ்சி மலர் என்ற அரிய நாவலின் சுருக்கம் இப்போது உங்களுக்காக இங்கே! இந்த நாவல் சென்னைத் தொலைக்காட்சியில் 13 வாரத் தொடராக திரு.மு.க.ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.
குறிஞ்சி மலர் : நா.பார்த்தசாரதி

    தமிழ்ப் பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் மகள் பூரணி. சமீபத்தில் காலமான அவர், தம்பிகள் நாவுக்கரசனையும், சம்பந்தனையும், தங்கை மங்கையர்க்கரசியையும் காப்பாற்றும் பொறுப்பை பூரணியின் இளம் தோள்களில் சுமத்தி விட்டுப் போயிருந்தார். செல்வம் எதையும் சேகரித்து வைக்காவிட்டாலும் ஒழுக்கத்தையும், தமிழறிவையும் பூரணிக்கு சொத்துக்களாக விட்டுப் போயிருந்தார்.

    வாடகை பாக்கியைக் கொடுத்துவிட்டுக் காலி செய்யும்படி வீட்டுக்காரர் சொல்லிவிட, அப்பாவுக்கு வர வேண்டிய பணத்தைக் கல்லூரியில் கேட்பதற்காக பூரணி தான் வசிக்கும் திருப்பரங்குன்றத்திலிருந்து மதுரை வருகிறாள். கல்லூரியிலும் சரியான பதிலின்றி, அப்பாவின் புத்தகங்களை வெளியிட்ட பதிப்பாளரும் பணம் தராமல் ஏமாற்றிவிட வெயிலில் நடந்து வரும் பூரணி நடுச்சாலையில் கார் ஒன்றின் முன் மயங்கி விழுகிறாள்.

    காரை ஓட்டிவந்த மங்களேசுவரி என்ற அம்மாள் அவளைத் தன் வீட்டிற்குக் கொண்டு சென்று மயக்கம் தெளிவிக்கிறார். பூரணியின் அழகும் பேச்சும் அவரைக் கவர்ந்து விடுகிறது. இலங்கையிலிருந்து வந்த செல்வம் மிகுந்த அந்த அம்மாள், நாகரீக மங்கையான தன் மூத்த மகள் வசந்தாவையும், அடக்கமான இளைய பெண் செல்லத்தையும் பூரணிக்கு அறிமுகப்படுத்துகிறார்.

    பூரணி மயங்கி விழுந்ததையம், எவரும் கவனிக்காமல் செல்வதையும் கண்ட அரவிந்தன் என்ற இளைஞன் தன் டைரியில் அதைக் கவிதையாக எழுதி வைக்கிறான். அரவிந்தன் அழகன்; கவிஞன்; ஏழைகளுக்கு உதவும் லட்சிய ிளைஞன். தானே வேலை செய்து படித்து வளர்ந்தவன். மீனாட்சி அச்சகத்தின் உரிமையாளர் மீனாட்சிசுந்தரம் அவனுக்கு சிறு வயதிலிருந்து ஆதரவளித்தவர். பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் நூல்களை வெளியிட உரிமை வாங்கி வருமாறு அரவிந்தனை அனுப்புகிறார். அப்பாவின் பதிப்பாளர் ஏமாற்றிய கோபத்தில் பூரணி அரவிந்தனைத் திட்டிவிட, அரவிந்தன் போய் விடுகிறான். அவன் விட்டுச் சென்ற டைரியைப் படிக்கும் பூரணி, அவனைப் புரிந்து கொண்டு அப்பாவின் நூல்களை வெளியிட அனுமதி தருகிறாள்.

    மங்களேசுவரி அம்மாள் பூரணிக்கு ‘மங்கையர் கழக’த்தில் பாடம் சொல்லித் தரும் வேலையை வாங்கித் தருகிறார். புத்தகம் வெளியிடுவதற்காக அடிக்கடி சந்திக்க நேரும் அரவிந்தனும் பூரணியும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்கின்றனர். பேராசிரியரின் நூல்களை வெளியிட்ட புதுமண்டபப் பதிப்பாளர் பூரணியின் வீட்டுக்கு வந்து, அவள் மீனாட்சி அச்சகத்துக்கு உரிமை அளித்ததற்காக சண்டை போடுகிறார். அப்போது அங்கு வரும் அரவிந்தனையும் அறைந்துவிட்டு, கருவியபடி சென்று விடுகிறார்.

    அரவிந்தன் முருகானந்தம் என்ற ஒரு முரட்டு இளைஞனை அவளுக்கு அறிமுகப்படுத்துகிறான். பார்வைக்கு முரடனாகத் தெரியும் அவன் உண்மையில் நல்ல மனம் படைத்தவன் என்பதை உணர்கிறாள் பூரணி. அரவிந்தன், மீனாட்சி அச்சகத்திலுள்ள புத்தகங்களை எரிப்பதற்கு நள்ளிரவில் நடக்கும் ஒரு முயற்சியை முறியடிக்கிறான். அதை முருகானந்தத்திடம் கூறும்போது பூரணியை அழைத்துக் கொண்டு மங்களேசுவரி அம்மாள் பதறியபடி அங்கு வருகிறார். அவர் மகள் வசந்தா நிறையப் பணத்துடன் வீட்டை விட்டுச் சென்று விட்டதாகவும், எங்கே என்று தெரியவில்லை என்றும் பதறுகிறார். போலீஸ் மூலம் மறுநாள் நடவடிக்கை எடுக்கலாம் என அவர்களுக்கு ஆறுதல்கூறி அனுப்பி வைக்கிறான் அரவிந்தன்.

    வசந்தாவின் போட்டோவைப் பார்க்கும் முருகானந்தம் தன் கஸ்டமர் விட்டுச் சென்ற பர்ஸிலிருந்த அவள் போட்டோவைக் காட்டுகிறான். பர்ஸிலிருந்த லெட்டர் மூலம் வசந்தா சினிமாவில் நடிக்கும் ஆசையில் வீட்டை விட்டு ஓடியதை அறிகிறார்கள். தான் திருச்சியில் இருப்பதாகவும், தன்னை அழைத்துச் செல்லுமாறும் வசந்தா கொடுத்த தந்தி அடுத்தநாள் மங்களேசுவரி அம்மாளுக்கு வருகிறது. பணம், நகைகளைப் பறிகொடுத்து ஏமாந்த அவளை முருகானந்தத்துடன் சென்று அழைத்து வருகிறார் அவர்.

    தீய சகவாசத்தால் ‌கெட்ட வழியில் செல்லும் பூரணியின் தம்பி நாவுக்கரசைத் திருத்தி தன் அச்சகத்திலேயே வேலைக்குச் சேர்க்கிறான் அரவிந்தன். வசந்தாவை ஏமாற்றியவனை முருகானந்தம் போலீசில் பிடித்துக் கொடுக்கிறான். இதற்கிடையில் பூரணி மேடைச் சொற்பொழிவாற்றுவதில் நல்ல புகழ் பெற்று, தொடர்ந்து சொற்பொழிவுகள் செய்த வண்ணமிருக்கிறாள். அவ்வாண்டு மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்ட பூரணியின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்கிறான் அரவிந்தன். சொற்பொழிவில் உணர்ச்சிவசப்பட்டு பேசும் பூரணி வாயிலிருந்து ரத்தம் வர மயங்கி விழுகிறாள். தொடர்ந்த சொற்பொழிவால் தொண்டை பாதிக்கப் பட்டிருக்கும் அவளுக்கு ஓய்வு ‌தேவை ‌என டாக்டர் சொல்ல, ஓய்வுக்காக வசந்தாவுடன் அவளை கொடைக்கானலுக்கு அனுப்புகிறார் மங்களேசுவரி.

    முருகானந்தத்துக்கு கொடைக்கானலிலிருந்து வந்த கடிதத்திலிருந்து அவனும் வசந்தாவும் காதலிப்பதை அறிகிறான் அரவிந்தன். மீனாட்சிசுந்தரம் அவனிடம் பூரணியை தேர்தலில் நிற்க வைக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தைக் கூறி, பூரணியை சம்மதிக்க வைக்குமாறு கேட்கிறார். அரவிந்தனுக்கு அதில் விருப்பமின்றி அரை மனதுடன் சம்மதி்கிறான். அவனால் கொடைக்கானல் போக இயலாதபடி சித்தப்பாவின் மரணம் குறுக்கிட, தானே முருகானந்தத்துடன் கொடைக்கானல் போகிறார் மீனாட்சிசுந்தரம்.

    சித்தப்பாவின் ஈமச்சடங்கில் அரவிந்தனைச் சந்திக்கும் பர்மாக்காரர் என்றழைக்கப்படும் அவன் உறவினர், புதுமண்டப பதிப்பாளர் தேர்தலில் நிற்கப் போவதாகவும், பூரணியை அரவிந்தன் நிறுத்தக் கூடாதென்றும் மிரட்டுகிறார். விளைவாக, அரவிந்தன் பூரணியை வேட்பாளராக நிறுத்துவதென்று முடிவெடுத்து, அவள் சம்மதத்தையும் பெற்று விடுகிறான்.

    மங்களேசுவரி அம்மாளிடம் பேசி முருகானந்தம்-வசந்தாவுக்குத் திருமணம் செய்து வைக்கிறான் அரவிந்தன். அவனுக்கும் பூரணிக்கும் மணம் செய்து வைக்க மங்களேசுவரி அம்மாவும், மீனாட்சிசுந்தரமும் விரும்ப, மனம் ஒன்றுபட்ட வாழ்க்கையே போதும் என மறுத்து விடுகிறான் அரவிந்தன். பூரணிக்கு பர்மா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பேச அழைப்பு வர, வெளிநாடு செல்கிறாள்.

     தன் நபர் தேர்தலில் ஜெயிப்பதற்காக அரவிந்தனுக்கு பல தொல்லைகள் தரும் பர்மாக்காரர், மீனாட்சிசுந்தரம் விற்க விரும்பிய சொத்தை விற்க விடாமல் செய்து அவரை பணக்கஷ்டத்தில் ஆழ்த்துகிறார். அந்தக் கவலையில் மீனாட்சிசுந்தரம் இறந்து விடுகிறார். தேர்தல் வேலையில் ஈடுபட்ட நாவுக்கரசை பர்மாக்காரரின் ஆட்கள் அடித்துவிட, கோபமாக நியாயம் கேட்கப் போகும் அரவிந்தனையும் அடித்துத் துன்புறுத்தி புதுமண்டப குடோனில் அடைத்து விடுகிறார்கள். விபரமறியும் முருகானந்தம், தன் நண்பர்களுடன் சென்று பர்மாக்காரரின் ஆட்களை உதைத்து, குடோன் பூட்டை உடைத்து அரவிந்தனை மீட்டு வருகிறான்.

    நாடு திரும்பும் பூரணி, நடந்ததையெல்லாம் அறிந்து வருந்துகிறாள். முருகானந்தம் தன் ஆட்களை அடித்ததில் கோபமான பர்மாக்காரர் மேலும் சூழ்ச்சி செய்து மீனாட்சிசுந்தரத்தின் மனைவி மற்றும் மருமகன்களின் மனதைக் கலைத்து அச்சகப் பொறுப்பை அவர்களே ஏற்று நடத்தும்படியும், அரவிந்தனை வெளியேற்றும்படியும் செய்கிறார். மனமுடைந்த அரவிந்தனை முருகானந்தமும், வசந்தாவும் வற்புறுத்தி தங்கள் வீட்டுக்கு அழைத்துவர, மங்களேசுவரி அம்மாள் ஆறுதல் சொல்கிறார்.

    மதுரை மாவட்டத்தின் மேற்குப் பிரதேசத்தில் கொடும் விஷக்காய்ச்சல் ஒன்று பரவி, பலர் இறந்து கொண்டிருப்பதை செய்திகளில் படிக்கும் அரவிந்தன் கடிதம் எழுதி வைத்துவிட்டு மக்களுக்கு உதவ அங்கு சென்று விடுகிறான். தேர்தல் வேலையை வெறியுடன் கவனிக்கும் முருகானந்தத்திடம், அரவிந்தன் சென்ற நாளிலிருந்து பூரணி சோகமாக இருப்பதைக் கூறி அவனை அழைத்து வரும்படி விரட்டுகிறாள் வசந்தா. அரவிந்தன் அங்கு தொண்டு செய்து நிறையப் பேரைக் காப்பாற்றி, தான் விஷக்காய்ச்சலைப் பெற்றுக் கொண்டு களை இழந்தவனாக வருகிறான். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர்.

    தேர்தலில் பூரணி வெற்றி பெற்ற செய்தியுடன், மேளதாளத்துடன் அவளை அழைத்துவர வருகிறான் முருகானந்தம். அங்கே அரவிந்தன் இறந்த செய்தி அவனுக்குக் கிடைக்கிறது. அரவிந்தனை இழந்து கதறி அழும் பூரணி, ஒருவாறு தன்னைத் தேற்றிக் கொண்டு வெள்ளை ஆடையுடன், திலகம், வளையல் அணியாமல் விதவைக் கோலம் பூணுகிறாள். தனக்குக் கிடைத்த பதவியையும் துறந்துவிட்டு பெண்கள் முன்னேற்றத்துக்காகத் தன் சொற்பொழிவுகளைத் தொடர்கிறாள். அந்தக் குறிஞ்சி மலர் என்றும் வாடாமல் அரவிந்தன் நினைவுடன் தன்சேவையைத் தொடர்கிறது.

நாவலில் ஆங்காங்கே திரு.நா.பார்த்தசாரதி அள்ளித் தெளித்திருக்கும் தத்துவ முத்துக்களையும், அநாயாசமாக வந்து விழும் அவருடைய உவமைகளையும், அரவிந்தன், பூரணி கதாபாத்திரங்களை அவர் வார்த்திருக்கும் அழகையும் இந்தக் ‘கேப்ஸ்யூல் நாவல்’ உங்களுக்குத் தந்துவிட இயலாது. புத்தகத்தை முழுமையாகப் படித்தால் மட்டுமே இந்தக் ‘குறிஞ்சி மல’ரின் மணத்தை நன்கு நு்கர முடியும். குறிஞ்சி மலர் 800 பக்கத்திற்கும் மேற்பட்ட கடல். இந்த கேப்ஸ்யூல் நாவல் அந்தக் கடலிலிருந்து அள்ளிக் கொட்டிய ஒரே ஒரு ஸ்பூன்தான்!

Tuesday, October 4, 2011

கேப்ஸ்யூல் நாவல்-1

Posted by பால கணேஷ் Tuesday, October 04, 2011
இது பாஸ்ட்ஃபுட் காலம். எதையும் சீக்கிரம் முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்ற எண்ணம் (என்னைப் போன்ற) இளைஞர்களிடம் அதிகம் காணப்படுகிறது. ஆயிரம் பக்க நாவலைக் கொடுத்து படிக்கச் சொன்னால் யோசிக்கிறார்கள். அப்படி சில புகழ்பெற்ற நாவல்களை அவற்றின் கருத்து கெடாமல் கேப்ஸ்யூல்களாக உங்களுக்குத் தரவிருக்கிறேன்.  முதலில் அமரர் கல்கி எழுதிய ‘சிவகாமியின் சபதம்’ நாவல். அவர் இறந்து 58 ஆண்டுகள் ஆகியும் இன்றளவும் வாசகர்களால் விரும்பிப் படிக்கப்படுகிறது இந்தக் கதை. அதனுள் கொட்டிக் கிடக்கும் வீரம், காதல், ஹாஸ்யம் உள்ளிட்ட பல உணர்ச்சிகள் படிப்பவர்களுக்குள் இறங்கிச் செல்லும். அவற்றை இந்த கேப்ஸ்யூல் வடிவத்தில் உங்களால் பெற இயலாது என்பதுதான் குறை.

சிவகாமியின் சபதம்: முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை

பல்லவ மன்னர் வம்சத்தில் பெரும்புகழ் பெற்றிருந்த மகேந்திர பல்லவரின் ஆட்சிக் காலம். திருவெண்காட்டிலிருந்து காஞ்சியிலுள்ள நாவுக்கரசர் மடத்தில் சேர்ந்து படிப்பதற்காக வருகிறான் பரஞ்சோதி என்ற வாலிபன். வழியில் அவன் தூங்கும் போது அவனைக் கடிக்க இருந்த பாம்பைக் கொன்று அவனைக் காப்பாற்றுகிறார் கொடூர முகமுடைய நாகநந்தி என்னும் புத்தபிட்சு. இருவரும் காஞ்சிக்கு வரும் போது கோட்டைக் கதவுகள் சாத்தப்பட்டு நகரெங்கும் பெரும் பரபரப்பு இருக்கிறது. பிட்சு போய்விட, தனியே வரும் பரஞ்சோதி ஒரு முதியவரும் இளம் பெண்ணும் மதம் பிடித்த யானையிடம் சிக்க இருந்த நிலையில் வேலை எறிந்து யானையை காயப்படுத்த, அது பரஞ்சோதியைத் துரத்துகிறது. ஓடுகிறான்.

அந்த முதியவர் அந்நாளில் புகழ்பெற்று விளங்கிய சிற்பி ஆயனர். இளம்பெண் அவர் மகள் சிவகாமி. அன்று நடந்த சிவகாமியின் நாட்டிய அரங்கேற்றத்தின் பாதியில் அவசரத் தகவல் காரணமாக மகேந்திர பல்லவர் சென்றுவிட, அரங்கேற்றம் தடைபட்டு திரும்பிக் கொண்டிருந்த போதுதான் பரஞ்சோதியால் காப்பாற்றப்பட்டனர். அவர்களைக் காப்பாற்ற வந்த மகேந்திர பல்லவர், சாளுக்கிய மன்னன் புலிகேசி பெரும் சைன்னியத்துடன் பல்லவ எல்லைக்குள் பிரவேசித்துவிட்ட தடகவல் வந்ததால்தான் செல்ல நேர்ந்தது என்று ஆயனரிடம் கூற, அவர் மகன் - மாமல்லன் என்ற சிறப்புப் பெயர் கொண்ட - நரசிம்ம வர்மனின் கண்களும் சிவகாமியின் கண்களும் சந்தித்து கதை பேசுகின்றன. 

யானையிடமிருந்து தப்பி தன் பயண மூட்டையைத் தேடிவரும் பரஞ்சோதியை ஒற்றன் என சந்தேகப்பட்டு, பல்லவ வீரர்கள் சிறையிலிடுகின்றனர். இரவில் நாகநந்தி பிட்சு அவனைக் காப்பாற்றி கோட்டையைத் தாண்டி நகருக்கு வெளியே அழைத்துச் செல்கிறார். ஆயனச் சிற்பியிடம், ‘உங்கள் நண்பரின் மகன்’ என்று அறிமுகப் படுத்துகிறார். அழியாத அஜந்தா வர்ணக் கலவையை அறிய வேண்டு மென்ற ஆயனரின் ஆர்வத்தைப் பயன்படுத்தி பரஞ்சோதியை நாகார்ஜுன மலைக்கு அனுப்பும்படி ஆலோசனை சொல்கிறார். அவனிடம் கபடமாக புலிகேசிக்கு ஒரு ஓலை கொடுத்து விடுகிறார்.

மாமல்லரிடம் போருக்கு வர வேண்டாம் என்றும், கோட்டையை பாதுகாக்கும்படியும் பணித்து விட்டு ஒற்றர் தலைவன் வீரபாகு என்ற வேடத்தில் வரும் மகேந்திர பல்லவர் வழியில் பரஞ்சோதியை சந்திக்கிறார். இரவில் அவனை மயக்கப் புகையால் தூங்கச் செய்து அவன் கொண்டுவந்த ஓலையை மாற்றி விடுகிறார். சாளுக்கிய வீரர்களிடம் சிக்கி சக்கரவர்த்தி புலிகேசியின் முன் நிறுத்தப்படும் பரஞ்சோதியை சாமர்த்தியமாகக் காப்பாற்றி, ஆற்றின் அக்கரையிலுள்ள பல்லவர் பாசறைக்கு அழைத்து வருகிறார் மகேந்திரர். அங்கே வந்த பின்புதான் அவர்தான் மகேந்திர சக்கரவர்த்தி என்பதை அறிந்து வியக்கிறான் பரஞ்சோதி.

சிவகாமியின் சபதம்: இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

எட்டு மாதங்கள் கழித்து போர்முனையில் வீர சாகசங்கள் செய்து அனுபவம் பெற்ற படைத் தளபதியாக காஞ்சிக்கு வரும் பரஞ்சோதியை மாமல்லர் வரவேற்று தன் உயிர்த் தோழனாக்கிக் கொள்கிறார். வாதாபிப் படைகள் முற்றுகையிட வருவதால் காஞ்சிக் கோட்டையை ஆயத்தப்படுத்தும் பணியை இருவரும் செய்கின்றனர். ஆயனச் சிற்பியையும், சிவகாமியையும் காஞ்சிக்குள் வரும்படியும் இல்லாவிட்டால் சோழநாடு செல்லும்படியும் பரஞ்சோதி தெரிவிக்கிறார். இதற்கிடையில் மாமல்லரும் சிவகாமியும் எழுதிக் கொண்ட காதல் ஓலைகளை ஒற்றர் தலைவன் சத்ருக்னன், போர்முனையிலிருக்கும் மகேந்திரரிடம் சேர்ப்பிக்கிறான். கங்கநாட்டரசன் துர்விநீதன் காஞ்சியை நோக்கி படையுடன் வருவதாகவும், அவனை எதிர்கொண்டு முறியடிக்கும் படியும் சத்ருக்னனிடம் அவசர ஓலை கொடுத்து காஞ்சிக்கு அனுப்புகிறார் மகேந்திரர்.

ஆயனரையும், சிவகாமியையும் சந்திக்கும் நாகநந்தியடிகள் தன்னுடன் வரும்படி அழைத்துச் செல்கிறார். போருக்குமுன் அங்கு வரும் மாமல்லரும் பரஞ்சோதியும் வீடு பூட்டியிருப்பதைக் கண்டு ஏமாற்றமடைகின்றனர். அசோகபுரம் என்னும் ஊரில் ஆயனரையும், சிவகாமியையும் தங்க வைக்கும் நாகநந்தியடிகள் மகேந்திரரின் சாமர்த்தியத்தால் புள்ளலூரில் நடந்த போரில் துர்விநீதன் தோல்வியுற்றதையும், பல்லவர் படைகள் அவனைத் துரத்திச் செல்வதையும் அறிகிறார். அதேசமயம் சிவகாமியும், ஆயனரும் அங்கே இருப்பதை துரத்திச் செல்லும் படையின் முன்னணியில் இருக்கும் மாமல்லர் பார்த்து விடுகிறார்.

அன்றிரவு திருப்பாற்கடல் என்ற பெரிய ஏரியின் கரையை நாகநந்தி உடைத்துவிட, பெருவெள்ளம் ஊரைச் சூழ்கிறது. வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் ஆயனரையும், சிவகாமியையும் மாமல்லர் வந்து காப்பாற்றுகிறார். வெள்ளம் வடியும் வரை அவர்கள் ஒரு கிராமத்தில் தங்க நேரிடுகிறது. அங்கே நாகநந்தி மறைந்திருந்து விஷக்கத்தி எறிந்து மாமல்லரைக் கொல்ல முயல்கிறார். பல்லவ ஒற்றனான குண்டோதரன் அவரது முயற்சியை முறியடிக்கிறான். மாமல்லரை பரஞ்சோதி சந்தித்து காஞ்சிக்கு உடன் வரும்படி சக்கரவர்த்தியின் ஆணை என்று கூறி அழைத்துப் போகிறான்.

பின் அங்கு வரும் மகேந்திரர், சிவகாமியிடம், மாமல்லனை மறந்து விடும்படி வேண்டுகிறார். பாண்டியனும் காஞ்சி மீது படையெடுத்து வருவதால் அவன் மகளை மாமல்லருக்குத் திருமணம் செய்ய இருப்பதாகச் சொல்கிறார். ஆயனரிடம் பல்லவ இலச்சினை தந்து செல்கிறார். அதைத் திருடிவிடும் நாகநந்தி, காஞ்சிக் கோட்டையினுள் புகுந்து குழப்பம் விளைவிக்க முயன்று மகேந்திரரால் சிறைப்படுகிறார். காஞ்சி நகரை வாதாபிப் படைகள் சூழ்ந்து கொள்ள, முற்றுகை ஆரம்பமாகிறது.

சிவகாமியின் சபதம்: மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல்

புலிகேசியின் படைகள் காஞ்சியின் அகழியையும், கோட்டைச் சுவரையும் உடைக்க முயன்று  தோல்வியடைகின்றன. முற்றுகைக்கு முன்பே மகேந்திரர் எல்லா அணைகளையும் உடைத்து விட்டதால் மூன்று மாத முற்றுகைக்குப் பின்னர் புலிகேசியின் படைகள் உணவும், தண்ணீருமின்றித் தவிக்க நேரிடுகிறது. வடநாட்டு சக்ரவர்த்தி ஹர்ஷவர்த்தனர் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்து வரப்போகிறார் என்ற வதந்தியை மகேந்திரர், ஒற்றர் படை மூலம் புலிகேசியின் படையில் பரவவிட, புலிகேசி சமாதானத் தூது அனுப்புகிறார். மகேந்திரர் அதனை ஏற்றுக் கொண்டு புலிகேசியிடம் நட்பு பாராட்ட விரும்ப, மாமல்லருக்கு அதில் சம்மதமில்லை. அவரை, பரஞ்சோதியுடன் சென்று பாண்டியனைத் தோற்கடித்து புத்தி புகட்டும்படி அனுப்பி விடுகிறார் மகேந்திரர்.

காஞ்சி வரும் புலிகேசிக்கு பலத்த வரவேற்பு கிடைக்கிறது. அவரது விருப்பத்தின் பேரில் சிவகாமியை வரவழைத்து அரசவையில் நடனமாடும்படி செய்கிறார் மகேந்திரர். புலிகேசி புறப்படும் தருவாயில் அவரைத் தாம் வென்ற விதத்தை விரிவாக மகேந்திரர் சொல்ல, ஒவ்வொரு கட்டத்திலும் தான் ஏமாற்றப்பட்டதை உணரும் புலிகேசியின் மனம் எரிமலையாகிறது. தன் படைப் பிரிவின் ஒரு பகுதியை நிறுத்தி பல்லவ நாட்டின் சுற்றுப்புற கிராமங்களை சூறையாடி எரித்து அழிக்கும்படி கூறிவிட்டு வாதாபி நோக்கிச் செல்கிறான். காஞ்சியிலிருந்து சிவகாமியும் ஆயனரும் சுரங்கப்பாதை மூலம் க‌ோட்டையை விட்டு வெளியேறி வாதாபிப் படைகளிடம் சிக்கிக் கொள்கின்றனர்.

இதற்கிடையில் சிறையிலிருந்த நாகநந்தி பிட்சு தப்பித்து விடுகிறார். புலிகேசியைப் போலவே இருக்கும் தன் உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி, புலிகேசி வேடம் தாங்கி மாமல்லபுரத்து கலைச் செல்வங்கள் அழியாமலும், ஆயனர் கொல்லப்படாமலும் காப்பாற்றுகிறார். சிவகாமி வாதாபிப் படைகளிடம் சிக்கி விட்டதை அறிந்த மகேந்திரர் படையுடன் வர, அவருடன் போரிடுகிறார் புலிகேசியாக இருக்கும் நாகநந்தி. போரில் விஷக்கத்தியால் மகேந்திரரைத் தாக்கி விட்டு சிவகாமியை வாதாபிக்குக் கொண்டு செல்கிறார். விஷக்கத்தி தாக்கிய மகேந்திரர் நோய்வாய்ப்படுகிறார்.

வாதாபி சென்றதும்தான் புலிகேசியும், நாகநந்தியும் இரட்டையர்கள் என்பதை சிவகாமி அறிகிறாள். அவள் மீது தான் கொண்ட காதலைச் சொல்கிறார் நாகநந்தி. வேங்கியில் ஏற்பட்ட அரசியல் சிக்கல் காரணமாக பிட்சுவை அங்கே அனுப்பும் புலிகேசி, சிவகாமியை தன் சபையில் நடனமாடும்படி கேட்கிறான். அவள் மறுக்கவே பல்லவ கைதிகளை சாட்டையால் அடித்தே கொல்வதாக அச்சுறுத்தி வாதாபியின் நாற்சந்திகளில் நடனமாடும்படி செய்கிறான். நாடு திரும்பும் பிட்சு, இதைக் கண்டு சினம் கொண்டு புலிகேசியிடம் வாதாடி சிவகாமியை காஞ்சிக்கே திரும்ப அனுப்ப அனுமதி பெற்று வருகிறார். அவளிடம் அதைச் சொல்ல, மாமல்ல நரசிம்மர் படையுடன் வந்து வாதாபியை எரிப்பதையும், வாதாபி மக்கள் மடிவதையும் கண்ணால் கண்ட பின்னரே தான் விடுதலை பெறுவேன் என்று சிவகாமி சபதம் செய்கிறாள்.

மாமல்லர், மகேந்திரரின் அனுமதியின்பேரில் பரஞ்சோதி, சத்ருக்னன் ஆகியோருடன் மாறுவேடத்தில் வாதாபி வருகிறார். சிவகாமியைக் காப்பாற்றி அழைத்துச் செல்ல அவர்கள் முற்பட, அவள் வரமறுத்து தன் சபதத்தைக் கூறுகிறாள். அவர்கள் வாக்குவாதத்தில் இருக்கும் போது நாகநந்தி வந்துவிட, மாமல்லர் மட்டும் கோபத்துடன் தப்பிச் சென்று விடுகிறார். காஞ்சி வரும் மாமல்லரிடம் குலம் தழைக்க பாண்டியன் மகளை மணக்கும்படி வற்புறுத்தி சம்மதம் பெறுகிறார் நோயுற்றிருக்கும் மகேந்திரவர்ம பல்லவர்.

சிவகாமியின் சபதம்: நான்காம் பாகம்: சிதைந்த கனவு

ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட, மாமல்லருக்கு பாண்டியகுமாரியுடன் திருமணமாகி மகேந்திரன் என்ற மகனும், குந்தவி என்ற மகளும் பிறந்திருக்கிறார்கள். மாமல்லர், ஆயனரைச் சந்தித்து தாம் திரட்டியிருக்கும் பெரும் படையுடன் வாதாபி நோக்கிச் செல்வதைச் சொல்ல, தாமும் வருவதாகக் கூறுகிறார் ஆயனர். தன் அரசையிழந்து நரசிம்மரிடம் உதவிகோரி வந்திருக்கும் இளவரசன் மானவர்மன் தானும் மாமல்லருடன் யுத்தத்துக்கு வருவதாகச் சொல்கிறான்.

தன் ஒற்றர் படை மூலம் சில ஆண்டுகளாகவே பல்லவர் படையெடுத்து வருவதாக வதந்தியைக் கிளப்பி, படையெடுக்காமல் புலிகேசியை ஏமாற்றியிருந்தார் மாமல்லர். இப்போது பல்லவர் படையை புலிகேசி எதிர்பார்க்கவில்லை. அஜந்தா மலைச் சித்திரங்களை அவரும் நாகநந்தியடிகளும் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது பல்லவர் படை கிளம்பிய செய்தி வருகிறது. இத்தகவல் முன்பே தெரிந்திருந்தும் தன்னுடன் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக பிட்சு மறைத்துவிட்டார் என்பதை அறியும் புலிகேசி, கோபமாகி அவரைவிட்டுப் பிரிந்து செல்கிறார்.

புலிகேசி தன் படைகளுடன் வாதாபி வரும்முன் வாதாபியை முற்றுகையிட்ட பல்லவர் படையின் ஒரு பிரிவு அவரை எதிர்கொள்கிறது. போரில் சாளக்கிய வீரர்கள் தோல்வியுற, புலிகேசி மாயமாகிறார். நாகநந்தி பிட்சுவை காதலித்து அவரால் காபாலிகையாக்கப்பட்ட ரஞ்சனி என்ற கொடூரமான பெண் தோளில் ஒரு பிணத்துடன் வர, நாகநந்தி எதிர்ப்படுகிறார். அவர் இறந்து விட்டதாகவும், பிணத்தைத்தான் தோளில் சுமந்து கொண்டிருப்பதாகவும் அவள் வியப்புடன் கூற, இறந்தது புலிகேசி என்பதை அறிகிறார். சகோதரனைத் தகனம் செய்து விட்டு, வெறியுடன் வாதாபிக்குள் சுரங்கப்பாதை மூலம் வருகிறார்.

இதற்கிடையே முற்றுகையிலிருக்கும் வாதாபி மக்கள் சமாதானத் தூது அனுப்ப, பரஞ்சோதி ஒப்புக் கொள்ளலாம் என்க, மாமல்லர் மறுக்கிறார். அதற்குள் கோட்டையில் வெள்ளைக் கொடி இறக்கப்பட்டு, புலிகேசி தென்படவே போர் துவங்குகிறது. வாதாபியைத் தீக்கிரையாக்குகிறார் நரசிம்மர். புலிகேசியின் வேடத்தைத் துறந்து நாகநந்தியாகி, சிவகாமியைத் தூக்கிக் கொண்டு சுரங்க வழியாக தப்பிக்கப் பார்க்கிறார் பிட்சு. ஒரு புறம் சத்ருக்னனாலும், மறுபுறம் பரஞ்சோதியாலும் மடக்கப்பட, விஷக்கத்தியை எறிந்து சிவகாமியைக் கொல்லப் பார்க்கிறார். ஆத்திரமாகும் பரஞ்சோதி முந்திக் கொண்டு பிட்சுவின் கையைத் துண்டித்து அவரைப் பிழைத்துப் போகும்படி கூற, பிட்சு இருளில் மறைகிறார்.

தன்னை மீட்ட மாமல்லர் தன்னிடம் கடுமையாகப் பேசுவதன் காரணம் அறியாமல் தவி்க்கிறாள் சிவகாமி. தளபதி பரஞ்சோதி, மாமல்லரிடம், தாம் இனி சைவத் துறவியாக சிறுத்தொண்டர் என்ற பெயர் பூண்டு விளங்கப் போவதாகக் கூறி வி‌டைபெற்றுச் செல்கிறார். சிவகாமி காஞ்சி திரும்பியதும்தான் மாமல்லருக்கு திருமணமானதையும், இரண்டு குழந்தைகள் இருப்பதையும் அறிகிறாள். இறைவனையே கணவனாகத் தேர்ந்தெடுத்து தன் வாழ்வை இறைத் தொண்டுக்கு அர்ப்பணித்துக் கொண்டு ஆலயத்தில் நாட்டியமாடுகிறாள் சிவகாமி. சிவகாமியின் நாட்டியப் பணி தொடர்கிறது.
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube