வேனிலிருந்து இறங்கியதும் எதிரே பசும் புல்வெளி சூழ்ந்த ஒரு மேடான பிரதேசமும், அங்கே ஒரு கோயிலும தெரிந்தது. ‘‘இதான் பூம்பாறையா பாஸு’’ என்று நண்பரிடம் நான் கேட்டதற்கு, வேனிலிருந்து அப்போதுதான் இறங்கி வந்து கொண்டிருந்த ஓட்டுனரிடமிருந்து பதில் வந்தது. ‘‘இல்ல ஸார். பூம்பாறைக்கு பாதி தூரம்தான் வந்திருக்கோம். இங்க நீங்க பாக்கறது மகாலக்ஷ்மி கோயில். அழகா இருக்கும், எல்லாரும் போய்ப் பாத்துட்டு வரட்டுமேன்னுதான் நிறுத்தினேன்’’ என்றார். ‘‘ரைட்டுங்க. பூம்பாறைல என்ன விசேஷம்?’’ என்று கேட்க, ‘‘அங்க ஒரு முருகன் கோயில் இருக்குது சார். குழந்தை வேலப்பர்னு பேரு. ரொம்ப அழகா இருக்கும் சாமி...’’ என்றார் சக்தி. அட, இன்னிக்கு ஆலய தரிசனம் வரிசையா அமையுதே என்ற வியப்புடன் மேலேறினோம்.
வேனிலிருந்து மஹாலக்ஷ்மி கோயில் வ்யூ! |
மேலேறிச் சென்று பார்க்கையில் அவர் சொன்னது போலவே சிறிய கோயிலாக இருந்தாலும் அழகாக இருந்தது. புகைப்படக் கருவியை எங்கள் கைகளில் கண்டதுமே, ‘‘ஸார் கோயிலையும், கோயிலச் சுத்தியும் படமெடுத்துக்குங்க. அம்மனை படம் எடுக்கக் கூடாது’’ என்றார் அங்கிருந்த ஊழியர். அவர் அப்படிச் சொல்லாவிட்டால், சிறியதாக இருந்தாலும் அழகாக புன்னகை முகத்துடன் இருந்த அம்மனின் சிலையை நாங்கள் படம் எடுத்து விட்டிருப்போம். சொல்லி விட்டதால் வேறு வழியின்றி ஆலயத்தைச் சுற்றியிருந்த இயற்கையை ரசித்து, படங்களை சுட்டுக் கொண்டு கிளம்பினோம் அங்கிருந்து.
ஞானும் பின்னே இயற்கையெனும் இளையகன்னியும்! |
இதுவரை ஏற்றப் பாதையாய் இருந்தது மகாலக்ஷ்மி கோயில் தாண்டி சற்று தூரம் சென்றதுமே இறங்கு பாதையாக மாறியது. சுற்றிச் சுற்றி இறங்கி சுமார் 10 கி.மீ. தூரம் போனதும் பூம்பாறை கிராமம் வந்தது. வேனிலிருந்தபடியே அந்த கிராமத்தைப் பார்க்கையில் மதுரை நகர அமைப்பு மாதிரி குழந்தை வேலப்பர் ஆலயமும் அதைச் சுற்றிய சில தெருக்களும் அமைந்திருப்பதை அவதானிக்க முடிந்தது. குழந்தை வேலப்பர் ஆலய வாசலில் வேனை நிறுத்தி உட்செல்ல, அங்கே கூட்டம் அதிகம் இல்லை. சிறிய ஆலயம். ஆனால் சுற்றிலும் நிறைய இடப்பரப்பு இருந்ததால் பார்க்க ரம்யமாகவே இருந்தது. உள்ளே சென்று முருகப் பெருமானை தரிசித்தோம். என்ன அழகு! ராஜ அலங்காரத்தில் அம்சமாய் நின்றிருந்தார். இங்கே எப்போதுமே ராஜ அலங்கார தரிசனம்தான் என்று அங்குள்ளவர்கள் சொன்னார்கள். நகருங்க, நகருங்க என்று விரட்ட யாரும் இல்லாமல் நிம்மதியான தெய்வதரிசனம் கிட்டியது மனதுக்கு மகிழ்வாக இருந்தது.
ஆலய வாசலில் இவர் விற்பது அசல் மலைப்பூண்டுங்க! |
வழக்கம் போல கேமராவைக் கையிலெடுத்தால் உதை விழும் என்று எச்சரிக்கப்பட்டதால் படம் எடுக்க முடியாமல் போயிற்று.ஆனாலும் சென்னை வந்ததும் கூகிளாண்டவரிடம் வேண்டித் தேடியதில் நான் அங்கு கண்ட முருகப் பெருமானின் ராஜ அலங்காரப் படம் கிடைத்தது. அது இங்கே உங்கள் பார்வைக்கு. சிறிது நேரம் அந்தக் கிராமத்துத் தெருக்களில் நடந்து, தாக சாந்தி (ஐமீன்... கூல்ட்ரிங்ஸ்) செய்து கொண்டு, கொஞ்சம் ஸ்னாக்ஸும் வாங்கிக் கொண்டு வேனில் ஏறினோம். மீண்டும் ஏற்றம் மறுபடி இறக்கம் என்று வாழ்க்கையின் தத்துவத்தைப் போதித்தது பூம்பாறையிலிருந்து கொடைக்குச் செல்லும் சாலை.
![]() |
மனசைக் கவர்ந்த குழந்தை! |
கொடைக்கு வந்ததும், ‘‘சார், சாக்லெட்ஸ், தைலம்லாம் வாங்கணும்னு சொல்லிடிருந்தீங்களே... எனக்குத் தெரிஞ்ச நல்ல கடை இருக்கு. போலாமா?’’ என்றார் ஓட்டுனர். காலையிலிருந்து இரண்டு முறை இந்த விஷயத்தைக் கேட்டுவிட்டார். ஏனென்றுதான் தெரியலை. தலைவர் ‘‘ஓ.கே. போங்க’’ என்க, வேன் சிலபல தெருக்கள் கடந்து, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்றின் வாயிலில் நின்றது.
ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் என்றால் பெரிய மல்ட்டிஸ்டோரி பில்டிங்குகளை நினைத்துவிட வேண்டாம். ‘ப’ வடிவத்தில் வரிசையாகக் கடைகள் இருந்த தரைத்தள காம்பளக்ஸ்தான் அது. கடைக்குள் போனதுமே அங்கிருந்தவர்கள் அருமையாக கேன்வாஸ் செய்ய ஆரம்பித்தார்கள். சுத்தமான மலைத்தேன் பாட்டிலில் அடைக்கப்பட்டிருந்ததை சாம்பிள் காண்பித்தார்கள். தேனின் விலைதான் திகிடுதம்பாக இருந்தது. தலைவலித் தைலம், மூட்டுவலிக்கான தைலம், மூலிகை ஹேர் ஆயில் என இன்ன பிறவற்றின் விலையும் அப்படியே. சாக்லெட்தான் விலை குறைவாக இருந்தது. ‘‘எப்பவோ ஒரு தரம் வர்றோம். வாங்கலாம் பாஸ்!’’ என்றபடி நண்பர்கள் நிறைய வாங்கிக் குவித்தார்கள். (நாங்கள் சொந்தப் பணத்தை செலவு செய்த ஒரே இடம் இதுதானே!) நான் கொஞ்சம் வாங்கிவிட்டு வேனுக்கு வந்துவிட்டேன்.

ஷாப்பிங் செய்வதற்கு முன்! (லிஸ்ட் போடுகிறார் சீனியர்) |
அனைவரும் ஷாப்பிங் முடித்துவிட்டு வேனுக்கு வர நீண்ட நேரமாயிற்று. எல்லோரும் வந்து அவரவர் இருக்கையில் அமர்ந்தும் ஓட்டுனரைக் காணவில்லை. அவர் சற்றுப் பொறுத்தே கடையிலிருந்து வந்து வேனைக் கிளப்பினார். இதற்குள் மதிய உணவு நேரம் தாண்டியிருக்க, காட்டேஜ் சென்று உணவருந்தலாம் என்ற குரல் அனைவரிடமிருந்தும் வந்தது. மதிய உணவாக இன்று மீன் குழம்பும், சிக்கன் ப்ரையும் செய்திருந்தார்கள். மீன் குழம்புடன் சேர்த்து ஒரு மீனையும் சாப்பிட்டுப் பார்த்தேன். வெகு பிரமாதம்! இன்னுமிரண்டு பீஸ் ஃபிஷ்ஷை விழுங்கிவிட்டு காட்டேஜ் பொறுப்பாளரை பார்த்துப் பாராட்டினால், அவர் முன்பு ஒரு நட்சத்திர ஓட்டலில் தான் செஃப் ஆக இருந்ததாகக் கூறினார். அட்றா சக்க.. அட்றா சக்க... அதான் இவ்வளவு சூப்பர் சமையலாவென்று வியந்து பாராட்டிவிட்டு, அவரவர் அறைகளுக்குள் நுழையுமுன், ‘‘ஈவ்னிங் போட்டிங் போகணும். எல்லாரும் ரெடியாகி வந்திருங்க’’ என்றார் தலைவர்.
குழுவாகச் செல்கையில் எப்போதும் நேரத்தை சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும். (குழுவாக இல்லாவிட்டாலும் நேரத்தைக் கடைப்பிடிப்பதே உத்தமமானது என்பது வேறு விஷயம்). ஆனாலும் 12 பேர் வெவ்வேறு அறைகளில் உறங்கிய பின், மீண்டும் எழுந்து, தயாராகி வருவது என்கிற நடைமுறை விஷயத்தில் யாரேனும் ஒருவர் தாமதம் செய்தாலும் அனைவரின் நேரமும் வீணாகத்தான் போய் விடுகிறது. அன்று மாலையிலும் இதே விஷயம்தான் நடந்தது. அனைவரும் கிளம்புகையில் மணி ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது. வேன் ஏரியை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் தலைவருக்கு போன் வந்தது. ‘‘அப்படியா? சரி... சரி... அப்ப நாளைக்கு காலைலயே ஆறு, ஆறரைக்கெல்லாம் கிளம்பி அங்க வந்துடறேன். நீங்க மத்த எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிடுங்க’’ என்று பேசிவிட்டு வைத்தார். அவர் மெதுவான குரலில்தான் போன் பேசுவார் என்றாலும் இந்த ஏரிப் பயணத்தின்போது நான் அவர் அருகாமை சீட்டில் இருந்ததால் அவர் பேசியது கேட்டது. பின் உரத்த குரலில் அறிவித்தார்- ‘‘ஃப்ரண்ட்ஸ்1 இப்ப ஏரியில சுத்தறதோட நம்ம கொடை ட்ரிப் முடியுது. நாளைக்குக் காலையில ஆறு மணிக்கெல்லாம் எல்லாரும் எழுந்து ரெடியாயிடுங்க. நாம இங்கருந்து கிளம்பறோம்’’ என்று!
எல்லாரும் கசமுசவென்று பேசிக் கொள்ளத் துவங்க, ‘‘காலையில எங்க கிளம்பிப் போறோம் தலைவரே?’’ என்று மெல்லப் போட்டு வாங்க முயன்றேன். தலைவர் க.மீனில் ந. மீன்! ‘‘கொஞ்சம் சர்ப்ரைஸா இருக்கட்டும் ஸார்! காலையில சொல்றேன்’’ என்றார். அதற்கு மேல் அவரிடமிருந்து விஷயத்தை உரிக்க முடியாது என்பது எனக்கு அனுபவப் பாடம் என்பதால் எதுவும் கேட்கவில்லை. ஏரிக்கரை அருகில் வேனை பார்க் செய்ததும், அங்கே வரிசையாக ஸ்வெட்டர் விற்றுக் கொண்டிருந்த வியாபாரிகளிடம் பேரம் பேசி ஆளுக்கொரு ஸ்வெட்டர் வாங்கிக் கொண்டோம். இதில் சற்று நேரம் ஓடிவிட, ஏரிக்குச் சென்றால், படகு சவாரிக்கான நேரம் முடிந்து விட்டது என்றார்கள். அடடா... என்னவொரு ஏமாற்றம்!
-தொடர்கிறேன்....