Wednesday, February 27, 2013

பாரதிராஜாவின் சீற்றம்!

Posted by பால கணேஷ் Wednesday, February 27, 2013
புகழின் உச்சியில் இருக்கற இயக்குனர்களுக்கு அவங்க நல்ல முயற்சியில ஈடுபடறப்ப எதாவது காரணத்தால தோல்வி ஏற்பட்டுச்சுன்னா, கடுங்க‌ோபம் வரும். அந்த மேதைகள் அதுக்கான காரணங்களை ஆராயாம மக்களின் ரசனையிலதான் குறைன்னு முடிவு கட்டிடுவாங்க. ஒருமுறை பாரதிராஜா அப்படித்தான் கடும் கோபமடைஞ்சாரு. நெறையப் பேருக்கு அது தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லைன்னு தோணறதால ப்ளாஷ் பேக்குல என் மாணவப் பருவத்துக்கு உங்களைக் கூட்டிட்டுப் போய் அதைச் சொல்லப் போறேன்...!

நான் தேவகோட்டையில பள்ளி மாணவனா இருக்கறப்ப ‘நிழல்கள்’னு ஒரு படம் பாரதிராஜாவோட இயக்கத்துல வெளியாச்சு. படம் பாத்தவங்களை வெறுப்பேத்தி தோல்வியாச்சு. கதையில ஹீரோ ராஜசேகருக்கு காதல்லயும் வெற்றி கிடைக்காது; வேலை தேடி அலையற அவருக்கு கடைசி வரைக்கும் வேலையும் கிடைக்காது. இன்னொரு ஹீரோ சந்திரசேகர் சினிமா இசையமைப்பாளராகணும்கற வெறியோட படம் பூரா அலைஞ்சு வாய்ப்புக் கிடைக்காம கடைசியில சட்டையக் கிழிச்சுட்டு பைத்தியமா அலைவாரு. படம் பாத்த நாமளும் கிட்டத்தட்ட அந்த நிலையிலதான் தியேட்டரை விட்டு வெளிய வருவோம்கறது வேற விஷயம்!

நான் சொல்ல வந்தது... அந்த்ப படத்துல இளையராஜா + வைரமுத்து கூட்டணியில பாடல்கள் அத்தனையும் இப்பவும் ரசிக்க வைக்கிறவை. பாரதிராஜாவோட ரசிகர்கள்லாம் அந்த டயத்துல ‘படம் புரியவில்லைன்னு சொல்லுங்கள், பிடிக்கவில்லைன்னு சொல்லாதீர்கள்’ அப்படின்னு ‌போஸ்டர் அடிச்சு ஒட்டினது இன்னொரு ஹைலைட்டான விஷயம். அப்ப பாரதிராஜாவை ரொம்பவே சந்தோஷப்படுத்தியிருக்கும் இந்த விஷயம்னு நினைக்கிறேன். நான் குறிப்பிடற அந்தச் சீற்றம் அவருக்கு வந்த சமயத்துல ரசிகர்கள் இப்படி போஸ்டர் ஒட்டியிருந்தா கூலாகியிருப்பாரோ என்னவோ...

அதன்பிறகு பல வருஷங்கள் கழிச்சு ‘காதல் ஓவியம்’ அப்படின்னு ஒரு படத்தை எடுத்தாரு பாரதிராஜா. இந்தப் படத்துலயும் இளையராஜா + வைரமுத்து கூட்டணி அசத்துச்சு. ஒவ்வொரு பாட்டையும் இப்பக் கேட்டாலும் தலை ஆடும்; கூடவே பாடத் தோணும். படத்தோட கதையும் அப்படி ஒண்ணும் திராபைன்னு ‌சொல்லிட முடியாது. ரசிக்கிற மாதிரிதான் ‌சொல்லியிருந்தாரு பாரதிராஜா. இருந்தாலும் தமிழக மக்கள் அந்தப் படத்தைத் தோல்வியடைய வெச்சாங்க. இந்த முறை ரசிகர்கள் ‘புரியலைன்னு ‌சொல்லுங்க, பிடிக்கலைன்னு சொல்லாதீங்க’ன்னு போஸ்டர் எதும் ஒட்டலை! ‘ஒரு நல்ல படத்தையா தோல்வியடைய வெக்கறீங்க?’ அப்படின்னு இயக்குனர் இமயத்துக்குக் கடுங்கோபம் வந்துச்சு. கோபப்பட்ட அவர் என்ன செஞசாருன்னு சொல்றதுக்கு முன்னால, படம் ஏன் தோல்வியடைஞ்சுச்சுங்கற விஷயத்தைப் பாத்துடலாம்...

பின்னாட்கள்ல அவர் மகன் மனோஜை ஹீரோவா வெச்சு அவர் இயக்கின ‘தாஜ்மகால்’ங்கற படத்தைப் பார்த்திருப்பீங்க. படம் பார்க்காத பாக்கியசாலிகள் ‘ஈச்சி எலுமிச்சி, ஏண்டி கருவாச்சி’ன்னு ஒரு பாட்டையாவது டிவில போடறப்ப பார்த்துடுங்க. கருவாச்சின்னு மனோஜ் பாடற ரியா சென்னோட செவப்பு நெறத்தையும், கருவாச்சின்னு சொல்ற மனோஜோட நிறத்தையும் கண்டு அந்த நகைமுரணை வியந்து மனம் விட்டுச் சிரிப்பீங்க... இப்படி ஒரு விஷயம்தாங்க ‘காதல் ஓவியம்’ விஷயத்துலயும் நடந்தது. ஹீரோயின் அற்புதமா பரதம் ஆடறவன்னு கேரக்டரை வடிவமைச்சாரு பாரதிராஜா. அதுக்கு ராதாவை கதாநாயகியாப் போட்டிருந்தாரு. ராதா ஒரே நேரத்துல கையால உலக்கை குத்தியும், காலால சாணி மிதிச்சும் அற்புதமா பரதநாட்டியம்(?) ஆடியிருந்தாங்க. பின்னாட்கள்ல அவர் கண்டுபிடி்ச்ச ரேவதிய அப்பவே கண்டுபிடிச்சிருந்தாருன்னா படம் பொழச்சிருக்கும். சரி, ஹீரோயின் இப்படீன்னா ஹீரோ... பார்வையற்றவர் கேரக்டர்னா கண்ணை மேல்நோக்கிப் பார்த்தபடி வசனம் பேசினாப் போறும், அதான் அற்புதமான நடிப்புன்னு யாரோ அவருக்கு தப்பா சொல்லிக் குடுத்திருக்கணும். அதுவே போதும்னு நினைச்சதால அதுக்கு மேல அவர் எதுவும் மெனக்கிடலை.

இப்படியான விஷயங்கள்னால படம் தோல்வியடைஞ்சதும், அதுக்கான காரணங்களை ஆராயாம கோபப்பட்ட பாரதிராஜா, ‘‘கடை விரித்தேன்; கொள்வாரில்லை. ஆகவே, ‘சாக்கடை’ விரிக்கிறேன்’’ அப்படின்ற தொனியில பேட்டி குடுத்துட்டு தன்னோட அடுத்த (கேவலப்) படமான ‘வாலிபமே வா வா’ படத்தை எடுத்தாரு. முந்தைய படத்துல சாணி மிதிச்ச அதே ராதாவை ஹீரோயினாக்கி, எவ்வளவு கிளாமராக் காட்ட முடியுமோ அவ்வளவு கிளாமராக் காட்டினாரு. படத்தோட கதையே ‘உவ்வே’ பண்ண வைக்கிற ரகம்தான். தனக்கு ஆண்மையில்லைன்னு நம்பற கதாநாயகன் கார்த்திக், சிட்டுக்குருவி லேகியம், லாட்ஜ் விலைமாது உட்பட அத்தனை கேடுகெட்ட வழிகளிலும் அலைந்து, ஞானம் பெற்று கடைசியில் ராதாவுடன் சேர்வதுதான் கதை.

படத்தோட க்‌ளைமாக்ஸே ஹீரோயின் ராதா, ஹீரோ கார்த்திக்குக்கு வீரத்தை வரவழைக்கிற விதம்தாங்க! அதும் எப்பு்டி? கீழே இவங்களோட நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்துட்டிருக்கும் போது, மாடில ராதா, கார்த்திக்கைப் பாத்து, ‘‘உன்னால எனக்கு ஒரு குழந்தையத் தர முடியாது’’ன்னு உசுப்பேத்திவிட, அவரோட ‘வீரம்’(?) தூண்டப்பட்டு, உடனே சட்டையைக் கழற்றிவிட்டு ராதா மேல் பாய்வாரு. கீழே பெரியவர்கள் ‘மாப்பிள்ளை பெண்ணை அழைச்சுட்டு வாங்க’ன்னு சொல்ல, அழைக்க வரும் நபர், இவர்களின் உடலுறவைப் பார்த்துவிட்டு (கண்றாவி!) கீழே வந்து பெரியவர்களிடம் சொல்ல, கொஞ்சம் கூட அதிர்ச்சியடையாம, அத்தனை பேரும் ஏதோ அந்த வருடத்தின் மிகச்சிறந்த ஜோக்கைக் கேட்டுவிட்ட மாதிரி வாய்விட்டுச் சிரிப்பார்கள். ‘வணக்கம்’ கார்டு வரும்.

கேட்கறதுக்கே புல்லரிக்குதா உங்களுக்கு! டைட்டில் கார்டுல பாரதிராஜான்னு பேர் வர்றதை நம்பறதுக்கு கஷ்டமா இருக்கும். அதை கன்ஃபர்ம் பண்ணிக்கவே மறுபடி படம் பாத்தேன் நான். (‘‘டேய்ய்ய்... அந்த வயசுல ராதாவோட க்ளாமருக்காகப் பாத்தேன்னு உண்மையச் சொன்னா குறைஞ்சா போய்டுவ...?’’ ‘‘ஹய்யய்யோ... இந்த உருப்படாத மனஸ் என் இமே‌ஜை டாமேஜ் பண்ணிட்டுத்தான் ஓயும் போலருக்கே... இத வெச்சுக்கிட்டு... முடியல!’’) பின்னாட்கள்ல இ.இமயம் எடுத்த (என்னைப் பொறுத்த வரை) நல்ல படமான ‘வேதம் புதிது’ சரியானபடி ஓடாதப்ப நல்லவேளையா இவருக்கு மறுபடி சீற்றம் வரலை. வயது தந்த பக்குவமாக இருக்கும்னு எனக்குத் தோணுது.

இமயம் இப்படின்னா... சிகரம் மட்டும் சும்மாவா? இயக்குனர் பாலசந்தர் அவர்கள் ஒரு சமயம் ‘எங்க ஊர் கண்ணகி’ன்னு ஒரு படம் எடுத்தாரு. அப்பாவும், பையனும் ஒரே விலைமாது வீட்டுக்கு சேர்ந்து போற மாதிரி அவர் பாணியில புரட்சிகரமான சிந்தனைகளோட பச்சை நிறத்தில் காட்சிகளை அமைத்து படமெடுத்திருப்பாரு. அது எங்கயும் இப்ப கிடைக்காது, நீங்க பாக்கவும் முடியாதுங்கறது வேற கதை. அந்தப் படத்தைப் பத்தி இப்ப அவர்கிட்ட கேட்டீங்கன்னா, அதைப் பத்தி பேசக்கூட விரும்ப மாட்டாருன்னு நினைக்கறேன்! இயக்குனர் இமயத்துக்கும், இயக்குனர் சிகரத்துக்கும் இந்தத் திரைப்படங்கள் சரியான திருஷ்டிப் பொட்டு.


Monday, February 25, 2013

தெரியுமா இவரை? - 3

Posted by பால கணேஷ் Monday, February 25, 2013
         
          நெப்போலியன் போனபார்ட் (Napoléon Bonaparte)

‘நெப்போலியன்’ அப்படின்னு சொன்னாலே ‘குடி’ மக்களுக்கு பிராந்தியும், சினிமா பிரி(வெறி)யர்களுக்கு ‘மாவீரன்’னு அடைமொழி வெச்சுக்கிட்ட ஒரு நடிகரும் நினைவுக்கு வருவாங்க. ஆனா உண்மையில ‘மாவீரன்’ங்கற அடைமொழிக்கு மிகப் பொருத்தமான ஒரிஜினல் மாவீரன் பிரான்ஸ் நாட்டில் பிறந்த நெப்போலியன் போனபார்ட்தாங்க!  மன்னர் மரபில் வந்தவர்கள் அரசாண்ட காலத்தில் சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒருவன் தேசத்திற்கு சக்கரவர்த்தியாக விளங்கினார் என்றால் அந்தப் பெருமை நெப்போலியன் போனபார்ட் ஒருத்தருக்குத்தாங்க சொந்தம்.

1769ம் வருஷம் ஆகஸ்ட் 16 பிரான்ஸ்ல கோர்சிக்கா என்ற :ஊர்ல பிறந்தாரு நெப்போலியன். அவரோட பெற்றோருக்கு இவரையும் சேர்த்து 13 பிள்ளைகள்.ராணுவப் பள்ளியில படிச்ச நெப்போலியன் புத்திசாலி மாணவனா இருந்தாரு. கணிதம், வரலாறு- புவியியல் ஆகியவை அவருக்குப் பிடித்த பாடங்கள். (அவ்வ்வ்வ்! படிக்கிற காலத்துல எனக்குல்லாம் அலர்ஜியா இருந்ததே இந்த சப்ஜெக்ட்டுங்கதாங்க...) 16 வயசுல படிப்பை முடிச்சுட்டு ராணுவத்துல ஆர்ட்டிலரி பிரிவுல சேர்ந்தாரு. 1796ம் ஆண்டுல டுலால் நகர்ல நடந்த யுத்தத்துல இணையற்ற வீரத்தைக் காட்டினதால இவருக்கு படைத் தளபதியா பதவி உயர்வு கிடைச்சது.

அதுக்கு மூன்றாண்டுகளுக்குப் பின்னால ‘பிரெஞ்சுப் புரட்சி’ன்னு சரித்திரத்துல சொல்லப்படற மிகப்பெரிய புரட்சியை நிகழ்த்தினதுல இவருக்கு முக்கியப் பங்கு இருந்துச்சு. அக்கம்பக்கமிருந்த ரஷ்யா, அமெரிக்கா மாதிரி பஞ்சாயத்து தலைவருங்க, இவரோட வளர்ச்சியப் பாத்துட்டு உஷாராகணும்னு நெனச்ச நேரத்துல.இவரு முந்திக்கிட்டு ராணுவப்புரட்சி மூலமா ஆட்சியைக் கைப்பற்றி, 1804ம் ஆண்டுல - அவரோட 35வது வயசுல - பிரான்ஸின் மன்னராக தனக்குத்தானே முடிசூட்டிக்கிட்டாரு நெப்போலியன். ‘‘இது என் உழைப்பில் கைப்பற்றியது. எனக்கு முடிசூட்டும் அருகதை எவருக்கும் இல்லை’’ன்னு சொன்னதை அவரோட தைரியம்னு நீங்க பாராட்டுனாலும் சரி... திமிருன்னு திட்டினாலும் சரி... அவர் செஞ்சதென்னமோ அதைத்தான்.

போர்த் திட்டங்களை வகுக்கறதுல இணையற்ற திறமை நெப்போலியனுக்கு இருந்துச்சு. அதனால அடுத்தடுத்து அவர் நிகழ்த்திய போர்கள்ல எல்லாம் வெற்றி வாகை சூடி இங்கிலாந்தைத் தவிர மற்ற எல்லா நாடுகளையும் வெற்றிகண்டு மொத்த ஐரோப்பாவையும் தன் கண்ட்ரோலுக்குள்ள கொண்டு வந்தாரு இந்த சாதனையாளர். நம்ம நாட்டாமை தீர்ப்பு சொல்வாரே... ‘இவங்களோட யாரும் அன்னந்தண்ணி பொழங்கக் கூடாது’ன்னு! அப்படி ‘இங்கிலாந்துடன் எந்த நாடும் வர்த்தகம் புரியக் கூடாதுன்னு சொல்லி Continental System-ங்கற ஒரு முறையக் கொண்டு வந்தாரு. இந்த நாட்டாமையோட தீர்ப்புக்கு எதிரா ரஷ்யா, இங்கிலாந்துகூட வர்த்தகம் பண்ணினதால கடுங்கோபம் அடைஞ்சு பெரும் படையோட (படைன்னா உடம்புலன்னு நெனக்காதீங்க. Big Armyங்கற அர்த்தத்துல சொல்றேன்) ரஷ்யாவை நோக்கி்ப் புறப்பட்டது இந்தச் சி்ஙகம்.

சிங்கத்துக்கு போர்த்தந்திரம் நல்லாத் தெரியும்ங்கறது வாஸ்தவம்தான். ஆனா நரியோட தந்திரம் அதைவிட உசத்தியானதாச்சே! மாஸ்கோ நகரத்துல எல்லா கட்டடங்களையும் நொறுக்கி தகர்த்துட்டு, தண்ணி கிடைக்கக் கூட வழியில்லாம பண்ணிட்டு, இரண்டரை ல்டசம் ரஷ்யர்களோட ‌எஸ்கேப்பாயிட்டாரு ரஷ்ய மன்னர் ஷா. மாஸ்கோவுல டென்ட்டடிச்சு, ஷா வந்து சரணடைவார், இல்ல தகவலாவது அனுப்புவார்னு ஒரு மாசம் முகாமிட்டாரு நெப்போலியன். மாச இறுதியில வந்தது... தகவல் இல்லீங்க, கடும் பனிக்காலம்! குளிர்னா உங்க வூட்டுக் குளிரு, எங்க வூட்டுக் குளிரு இல்ல... ரத்தமே உறைஞ்சு போற மாதிரி கடுங்குளிர்! டென்ட்டடிச்சு தங்கியிருந்த நெப்போலிய‌னோட படைகளுக்கு டப்பா டான்ஸாடிடுச்சு. நரியோட தந்திரத்தை தாமதமாப் புரிஞ்சுக்கிட்ட நெப்போலியன், நாட்டுக்குத் திரும்ப உத்தரவி்டடாரு. வழியெல்லாம் குளிரும், பசியும், தாகமும் வாட்ட படை வீரர்கள்ல பெரும்பகுதி இறந்தாங்க. உணவு கிடைக்காம அவங்க பயணம் செஞ்ச குதிரைகளையே வெட்டித் தின்னாங்கன்னா... எவ்வளவு கஷ்டம்னு யூகிச்சு்க்கங்க. சுமார் 6 லட்சம் வீரர்களோட புறப்பட்ட நெப்போலியன் வெறும் 20 ஆயிரம் வீரர்களோட நாடு திரும்பினாருங்க ஐயோ பாவமா!

‘சரிதான்பா... பலவீனமா இருக்கற இந்த சிங்கத்தை இப்பக் காலி பண்ணினாத்தான் .உண்டு’ன்னு முடிவு பண்ணி, பிரிட்டன், ரஷ்யா, ஆஸ்திரியா, ஸ்வீடன் ஆகியவற்றின் கூட்டுப்படைகள் பிரான்ஸ் மேல போர் தொடுத்தன. இந்தப் போர்ல தன்னோட வாழ்க்கைல முதல் முதலா தோல்வியைச் சந்திச்சாரு நெப்போலியன். அவரைக் கைது பண்ணி ‘எல்பா’ங்கற தீவுல சிறை வெச்சாங்க. சிங்கத்தைச் சிறையில வெச்சா என்ன நடக்கும்...? சிங்கம் சிறையவே சிதைச்சுட்டு ஒரே வருஷத்துல தப்பி வந்துடுச்சு. பிரான்ஸ் மக்கள் அவரை சக்ரவர்த்தியா மீண்டும் ஏத்துக்க, புதிய படையை உருவாக்கினார் நெப்போலியன். அடுத்த இரண்டு வருடங்களுக்குப் பின்னால பிரிட்டனும், அதன் நட்பு நாடுகளும் மீண்டும் நெப்போலியனுக்கு எதிரா அணி திரண்டு படையெடுத்து வந்தாங்க. வாட்டர்லூ என்கிற இடத்தில நடந்த அந்த சரித்திரப் புகழ் பெற்ற போரில் நெப்போலியன் இட்ட ஆணைகளை அவர் தளபதிகள் சரியா நிறைவேற்றாததால இன்னொரு முறையும்  (இறுதித் தோல்வி) நெப்போலியன் தோல்வியைச் சந்திச்சாரு.

இம்முறை அவரை செயின்ட் ஹெலினாங்கற தீவுல சிறை வெச்சாங்க. அந்தச் சிறையில இருக்கறப்பதாங்க நெப்போலியனுக்கு கடுமையான வயிற்று வலியும் மனச் சிதைவும் ஏற்பட்டுருச்சு. (வயிற்றுப் புற்றுநோய்னும் சொல்றாங்க.) ரொம்பவே கஷ்டப்பட்ட அவர், ஆறு ஆண்டுகள் அந்தச் சிறையில வாடினாரு. 1821ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி நெப்போலியன்ங்கற மாவீரனோட வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி விழுந்துச்சு.

பிரான்ஸ் மக்களோட பேராதரவோட நெப்போலியன் சக்கரவர்த்தியா திகழ்ந்ததற்குக் காரணம், நாட்டை அவர் ஆண்ட விதம். புதிய வீதிகளை உருவாக்குதல், பாலங்கள் கட்டுதல், தண்ணீர் விநியோகத்தை சீரமைத்தது, வேலைவாய்ப்பில் தன்னிறைவு அடையச் செய்தது, பொருளாதார மற்றும் அரசியல் சட்டங்களில் சீர்திருத்தம் செய்ததுன்னு போர் வெற்றிகளைத் தவிர அவர் சாதிச்சது நிறைய. ‘சட்டத்துக்கும் முன் யாவரும் சமம்’ங்கற விஷயத்தை தீவிரமா கடைப்பிடிச்சாரு நெப்போலியன்.

‌மாவீரன் நெப்போலியன் கிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயங்கள் ரெண்டு: 1. புத்தகங்கள் வாசிப்பதில் நெப்போலியன் ஒரு தீவிரவாதி. நிறையப் புத்தகங்கள் படிக்கிற அவரு ஒரு நாளைக்கு நாலு மணி நேரம்தான் தூங்குவார்னு கேள்வி. 2) ‘முடியாது என்ற வார்த்தையே என் அகராதியில கிடையாது’ -இது நெப்போலியனின் தாரக மந்திரம். இந்த ரெண்டைத் தவிர, துணிச்சல், தன்னம்பிக்கை போன்ற விஷயங்களையும் நாம அவர் வாழ்க்கைலருந்து எடுத்து நம்முடையதாக்கிக்கலாம். என்ன... நாஞ் ‌சொல்றது சரிதானே...!

Monday, February 11, 2013

சினிமா - சில பய(ங்கர) டேட்டா!

Posted by பால கணேஷ் Monday, February 11, 2013
மீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக(!) ஓடிக் கொண்டிருக்கும் ‘கண்ணா, லட்டு தின்ன ஆசையா?’ என்ற படத்தின் கதை பழைய ‘இன்று போய் நாளை வா’ என்கிற பாக்யராஜ் படத்தின் கதை என்பதால் ஒரு சர்ச்சை எழுந்தது அனைவருக்கும் தெரிந்ததே. பழைய திரைப்படங்களை எடுத்து அதை தூசு தட்டி, மாடர்ன் டிரெண்டுக்கு ஏற்றபடி பட்டி, டிங்கரிங் செய்து புதிய சரக்காகத் தரும் பழக்கம் சமீப காலங்களில் அதிகரித்திருக்கிறது.

ஆனால் இது பழைய சரக்கு என்பதை அறியாமலேயே தமிழக மக்கள் நீண்ட காலமாக திரைப்படங்களைக் கண்டு களித்து வந்திருக்கிறார்கள் என்பது உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்காது,. தெரிஞ்சுக்கணுமா... மச்சி, கேளேன்.... மச்சி... நீ கேளேன்... கேக்க மாட்டியா... சரி, நானே ‌சொல்றேன்.

‘விஜயா வாஹினி’ நிறுவனம் வெளியிட்ட ‘எங்க வீட்டுப் பிள்ளை’ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த மகத்தான வெற்றி்ப் படம். அதை ‘ராம் அவுர் ஷ்யாம்’ என்ற பெயரில் ஹிந்தியிலும், ‘ராமுடு பீமுடு’ என்று தெலுங்கிலும் எடுத்து வெற்றி கண்டது அந்த நிறுவனம். சில ஆண்டுகள் கழித்து அதே கதையை எம்.ஜி.ஆர். கேரக்டர்களைப் பெண்ணாக்கி வாணிஸ்ரீயை நடிக்க வைத்து தமிழில் ‘வாணி ராணி’ என்ற பெயரிலும், ஹேமமாலினியை வைத்து ‘சீதா அவுர் கீதா’ என்று ஹிந்தியிலும் படமாக்கி அவையும் வெற்றி பெற்றன. ஒரு தலைமுறை கழித்து ஸ்ரீதேவி நடிக்க ‘சால்பாஸ்’ என்ற பெயரில் அதே கதை மீண்டும் ஹிந்தியில் வெற்றிக் கொடி நாட்டியது. ஒரே தோற்றமுள்ள இருவர் இடம் மாறுவது என்ற அந்த சப்ஜெக்ட் வேறு வேறு விதங்களில் கையாளப்பட்ட படங்கள் தமிழிலும் நிறைய உண்டு.

சிவாஜியும் பத்மினியும் நடித்த ‘தேனும் பாலும்’ என்ற படத்தின் டிவிடி கிடைத்தால் வாங்கிப் பாருங்கள். அதேபோல சிவகுமாரும் அம்பிகாவும் நடித்த ‘கற்பூர தீபம்’ என்ற படத்தை ஏதாவது டி.வி.யில் போட்டால் அவசியம் பாருங்கள். இரண்டு திரைப்படங்களும் காட்சிக்கு் காட்சி... ஏன், ரெண்டு பெண்டாட்டிக்கார காமெடி கூட இரண்டு படங்களிலும் ஒன்றாயிருக்கும் அதிசயத்தைக் கண்டு ரசியுங்கள்.

 சிவகுமார், ஜெயசித்ரா இணைந்து நடித்த ‘எங்கம்மா சபதம்’ என்ற திரைப்படம் பின்னாட்களில் நெப்போலியன், குஷ்பு நடிக்க ‘வனஜா கிரிஜா’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது. ‘உறவுக்குக் கை கொடுப்போம்’ என்ற பெயரில் விசு எழுதிய நாடகம் ஒன்று படமாகி (திரையரங்குகளை விட்டு) நன்றாக ஓடியது. பின்னாளில் விசு நடிகராகவும் ஆனதும் அந்தக் கதையை எடுத்து சீர்திருத்தி புதிய திரைக்கதையில் படமாக்கினார். தேசிய விருதும் வென்றார். அது ‘சம்சாரம் அது மின்சாரம்’

இவையெல்லாமே ஜனங்களின் மறதி என்கிற ஒரு சமாச்சாரத்தினை நம்பி, செய்யப்படும் விஷயங்கள். அன்றாட அவஸ்தைகள் ஏராளமாக உள்ள ஒவ்வொருவரும் பார்க்கும் படங்களின் கதைகளை எல்லாம் ஞாபகம் வைத்துக் கொண்டு, அதை மற்றொன்றுடன் ஒப்பிடும் அளவுக்கு வேலையற்றவர்களா என்ன...?  ஆகவே மறுமுறை எடுத்தாலும் வெற்றிபெறும் என்கிற விஷயத்தை மற்ற எவரையும் விட நன்கு அறிந்தவர் இராம நாராயணன் அவர்கள். நடிகர் மோகன் இரட்டை வேடங்களில் நடிக்க, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ என்று ஒரு திரைப்படம் எடுத்தார். செமயாக ஓடி கலெக்ஷன் அள்ளியது அந்தப் படம். அடுத்த மூன்றே ஆண்டுகளில் மோகன் கேரக்டர்களில் நளினியை நடிக்க வைத்து ‘நன்றி’ என்று அதே கதையை மீண்டும் எடுத்தார்- காட்சிக்கு காட்சி மாற்றாமல். சில காலம் கழித்து அதே கேரக்டர்களை பேபி ‌ஷாம்லிக்கு ஷிப்ட் செய்து ‘துர்கா’ என்ற பெயரில் மீண்டும் படமாக்கினார். இளகிய மனம் கொண்ட தமிழக மக்கள் மூன்று படங்களையும் ஓட வைத்தார்கள். ‘பிலிமோத்சவ்’ என்று திரைப்பட விழா நடக்கிற மாதிரி ‘ராமநாராணனோத்ஸவ்’ என்று ஒன்று நடத்தி அவர் இயக்கிய நூற்று சொச்சம் திரைப்படங்களைத் திரையிட்டால், அவற்றை முழுமையாக எவரேனும் பார்த்தால்... சுமார் பத்து கதைகளை நூறு படங்களாக அவர் எடுத்திருக்கும் அசாத்தியத்தைக் கண்டு இதயத் தாக்குதலே ஏற்பட்டு விடவும் வாய்ப்புண்டு.

ஆகவே... திரைப்பட இயக்குனர்களே, பின்னாட்களில் திரைப்படம் இயக்கவிருக்கும் இன்றைய பதிவர்களே... வெற்றிபெற்ற இன்ன படத்தை மீண்டும் நாங்கள் எடுக்கிறோம் என்று அபத்தமாக தகவல் வெளியிட்டு பிரச்சனைகளில் சிக்காமல், வேறு நடிகர்கள், வேறு ட்ரீட்மெண்ட் என்பதால் காபி ரைட், டீ ரைட் என்பதைப் பற்றி கவலைப்படாமல் தைரியமாக எடுத்து வெளியிடலாம் உங்கள் படங்களை. என்ன... அதற்கு சில கண்டிஷன்கள் உண்டு. ஒன்று ட்ரெய்லரில் அந்தப் பழைய படத்தை நினைவுபடுத்தும் காட்சிகள் இருக்கக் கூடாது. இரண்டாவது இந்த அரிய(?) யோசனையை உங்களுக்குச் சொல்லித் தந்த எனக்கு வசூலில் ஒரு பர்சன்டேஜ் தந்துவிட வேண்டும். ஹலோ... உங்களத்தானுங்க.... எங்க ஓடறீங்க....?

Sunday, February 10, 2013

சுஜாதா - கணேஷ் - வஸந்த் - க்விஸ்!

Posted by பால கணேஷ் Sunday, February 10, 2013

வாங்க... சும்மா ஜாலியா கொஞ்சம் பழகலாம்! எழுத்தாளர் சுஜாதாவுக்கு வலையுலகில் விசிறிகள் அதிகம் என்பதை நான் அவதானித்திருக்கிறேன். அதிலும் கணேஷ் - வஸந்த் கதாபாத்திரங்கள் சிரஞ்சீவித் தன்மை பெற்றவர்கள். இங்கே (எனக்குத் தெரிந்த அளவில்) சில கேள்விகளைக் கேட்டிருக்கிறேன். ஏன்னா... எனக்கு கேக்க மட்டும்தான் தெரியும். சரியான விடை தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். யாரும் விடையளிக்காத கேள்வி (அப்படி ஒன்று இருந்தால்) இருந்தால் சுஜாதாவின் புத்தகங்களைத் தேடிப்பிடிச்சு விடையக் கண்டுபிடிச்சு அப்டேட் செய்யப்படும்.

1) சுஜாதா முதலில் கணேஷ் மட்டும் துப்பறிவதாகத்தான் எழுத ஆரம்பித்தார். பின்னால்தான் வஸந்த் வந்து இணைந்து கொண்டான். கேள்வி என்னவெனில் - கணேஷ் கதாபாத்திரத்தை சுஜாதா எழுதிய முதல் நாவல் எது?


2) ‘‘நீங்க பைபிள் கூடப் படிப்பீங்களா?’’ பிரித்தாள். முதல் பக்கத்தில் அழகாக அச்சிட்டிருந்தது. ‘‘இந்த பைபிள் கிடியன் சங்கத்தினரால் இந்த ஹோட்டல் அறையில் வைக்கப்பட்டிருக்கிறது.’’

அதன் கீழ் பேனாவில், ‘‘இந்த பைபிள் ஆர்.வஸந்த் என்பவரால் அந்த ஹோட்டல் அறையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது...’’ வஸந்தைப் பார்த்துச் சிரித்தாள். ‘‘என்ன செய்யறது? எனக்குப் புஸ்தகம்னா அவ்வளவு இஷ்டம்!’’

-இந்த வரிகள் சுஜாதாவின் எந்த நாவலில் இடம் பெறுகிறது?

3) சுஜாதாவின் கணேஷ் கதாபாத்திரத்தை ‘ப்ரியா’ திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்று நடித்தார். அதற்கு முன்பே இரண்டு முறை சுஜாதாவின் கதைகள் படமானபோது வேறொரு நடிகர் கணேஷ் கேரக்டரில் நடித்திருக்கிறார். அந்தநடிகர் யார்? படங்கள் பெயர் தெரியுமா?

4) ‘‘ஏன் பொம்‌பளைங்களை இப்படி கலாட்டா பண்றார் அவர்?’’

‘‘அவன் எல்லாரையும் கலாட்டா பண்ணுவான். ஹி டேக்ஸ் எவ்ரிதி்ங் ஈஸி. சில வேளைகளில் எனக்கு அவன் மேல் ரொம்பக் கோபம் வரும்!’’

‘‘இருந்தாலும் அவர் உங்களைவிட இன்டலிஜென்ட்டுன்னு சொல்ல முடியாது...’’

‘‘சில சமயங்களில் அவன் மாதிரி வேகமா சிந்திக்கக் கூடியவன் இருக்கவே முடியாது. கோர்ட்டில் கிராஸ் எக்ஸாமினேஷன் பண்றதைப் பார்க்கணும் நீங்க. இட்ஸ் எ பிளஷர்...!’’

-இந்த வரிகள் இடம் பெற்ற சுஜாதாவின் நாவல் எது?

5) சுஜாதாவின் ‘கொலையுதிர் காலம்’ தொலைக்காட்சித் தொடராக வந்தபோது அதில் வஸந்த் கேரக்டரில் நடித்தவர் யார்?

6) மொஸைக் தரை முழுவதும் கண்ணாடித் துண்டுக் இறைந்திருக்க நடுவில் ரத்தக் குதறல் தெரிந்து. கா‌லணிகள், கால்கள், இடுப்பு பெல்ட் வரை தெளிவாக இருந்த அந்த உடலின் மேற்பாகம் உருத்தெரியாமல் செஞ்சிதறலாக இருந்தது. கணேஷ் கூரையைப் பார்க்க, அதில்கூட ரத்தக் கோலம் போட்டு சதைப் பிச்சல் ஒட்டிக் கொண்டிருந்தது. ‘‘மை காட், திஸ் இஸ் டெரிபிள்’’

‘‘ஆள் செத்துப் போயிட்டான்னு நினைக்கிறேன். பல்ஸ் பாக்கலாம்னா கையே இல்லையே...!’’ கணேஷ், வஸந்த்தை முறைத்தான். ‘‘அந்தம்மா எங்கய்யா?’

‘‘தனியா அழைச்சுட்டுப் போயிருக்காங்க. நல்லவேளை பின்பக்கமா வெடிச்சிருக்குது. ஹால்ல இருக்கறவங்களுக்கு சப்தம் கேக்கலியே. கேட்டிருந்தா சனங்க பயந்துபோய் மிதிச்சு அடிச்சுகிட்டு வெளிய போயிருந்தா நிறையப் பேர் செத்திருப்பாங்க...’’

‘‘இந்தாள் யாருங்க?’’ என்று வஸந்த் கீழே கிடந்தவனைக் காட்டினான். ‘‘யாரோ! இங்க எலக்ட்ரிக் வேலை பாக்கறவராம். மலையாளி!’’ வஸந்த் அந்த உடலைப் பார்த்து, ‘‘எல்லா மலையாளமும் மறந்து போயிருக்கும் என்றான். கணேஷ் அவனை அதட்டி, ‘‘வஸந்த், டேண்ட் பி ஸில்லி’’ என்றான்.

-சுஜாதாவின் எந்த நாவலில் இந்த வரிகள் வருகின்றன?

7) ‘‘நாய் என்ன செஞ்சது?’’ என்றான் வஸந்த். ‘‘பாத்ரூம்லயே சுத்திச் சுத்தி வந்தது. எதுக்கும் பண்ணைல துப்புரவா தேடச் சொல்லியிருக்கேன். ரொம்ப பெரிய ஏரியா. அதில நூறு ஆள் மறைஞ்சிருக்கலாம். நூறு தடயம் புதைஞ்சிருக்கலாம்...’’ கணேஷ், லீனாவை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றான். டிபார்ட்மெண்டின் பழுப்புக் காகிதத்தில் தெளிவாக எழுத ஆரம்பித்தான். ‘‘நான் ஜே.கணேஷ், வயது...’’

 வஸந்த் ஜன்னல் ஓரத்தில் லீனாவுடன் உட்கார்ந்து கொண்டு, ‘‘எங்கே உன் கையைக் காட்டு’’ என்றான். அவள் கையைப் பிடித்து ரேகை பார்த்தான். ‘‘லீனா! ஸாரி, நான் ஆஸ்பத்திரி போய்ட்டு வந்தப்புறம் ஒருவிதமா குழப்பமாய்ருச்சு! அதுக்கு முன்னால உன்னை நீங்க, வாங்கன்னுதான் கூப்பிட்டுக்கிட்டிருந்தேன் இல்லை?’’  ‘‘எனக்கு ஞாபகமில்லை வஸந்த். ஆனா என்னை நீன்னே நீங்க கூப்பிடலாம் நான் சின்னவ தானே?’’ ‘‘எனக்கு மட்டும் என்ன வயசுங்கறே? இன்னிக்குல்லாம் இருந்தா ஏழோ, எட்டோ?’’

-சுஜாதாவின் மிகப்புகழ்பெற்ற கணேஷ்-வஸந்த் த்ரில்லரில் இந்த வரிகள் வரும். அது எந்த நாவல்?

அம்புட்டு தாங்க... இனி உங்களோட பதில்கள் என்னவெல்லாம் சுவாரஸ்யங்களைத் தாங்கி வருகின்றன என்பதை எதிர்பார்த்து ஆவலோட காத்திருக்கேன் நான்.


விடைகள் : 1) நைலான் கயிறு, 2) நிர்வாண நகரம், 3) ஜெய் சங்கர் - காயத்ரி, இதுப்படி இருக்கு ஆகிய படங்களில். 4) எதையும் ஒரு முறை, 5) விவேக், 6) கொலை அரங்கம், 7) கொலையுதிர் காலம்.

Friday, February 8, 2013

மொறு மொறு மிக்ஸர் - 16

Posted by பால கணேஷ் Friday, February 08, 2013

ரு சின்னப் புதிரோட இந்த மிக்ஸரைக் கொறிக்க ஆரம்பிக்கலாம். புதிர் என்னவோ ரொம்பவே ஸிம்பிளானது..! ஒன்பதாம் நம்பரை (9) தலைகீழா எழுதினா ஆறு (6) வருமே... அதாங்க புதிரே...!

                                                                            IX

-இந்த ஒன்பதை ஒரே ஒரு கோடு மட்டும் சேர்த்து நீங்க ஆறாக மாத்தணும். அவ்வளவுதாங்க கண்டிஷன். அது எப்படி சாத்தியம்ங்கறதை யோசிங்க... தெரியாதவங்களும் பதிலை யோசிக்கற அளவுக்குப் பொறுமை இல்லாதவங்களும் மட்டும் இந்தப் பதிவோட முடிவுல இருக்கற பதிலைப் பாத்துக்கலாம்.

========================================

ல்யாணமாகி புதிதாய் வாழ்க்கையைத் துவங்கும் மாப்பிள்ளையும் பெண்ணும் வெவ்வேறு ரசனைகள் உள்ளவர்களாக, இரு துருவங்களாகக் கூட இருக்கலாம். இரண்டு பல்சக்கரங்கள் சேர்ந்துதான் ஒரு இன்ஜின் ஓட வேண்டுமென்றால் அந்தப் பல் சக்கரங்கள் உராயும் போது நெருப்புப் பொறி வராமலிருக்கவும், சரியாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதற்காகவும், நிறைய க்ரீஸை அப்புவார்கள். 

அதுபோலத்தான்... புதிதாய்த் திருமணமான கணவன் - மனைவி ஆகிய இரண்டு பல்சக்கரங்களும் தங்களுக்குள் அன்பு என்ற க்ரீஸை நிறைய அப்பிவிட்டால் வாழ்க்கை என்ற இன்ஜின் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மிக ஸ்மூத்தாக ஓடும்!

-ஒரு திருமண வரவேற்புரையில் லேனா தமிழ்வாணன் இப்படிப் பேசக் கேட்டவர் : அடியேன்!

========================================


போன வாரத்துல ஒரு நாள் அலுவலகம் புறப்பட நேரமாயிடுத்தேன்னு அவசரத்துல கிளம்பிப் போனதால என் செல்லை மறந்து வீட்ல விட்டுட்டுப் போயிட்டேன். காலையிலருந்து இரவு வீடு திரும்பும் வரைக்கும் ஒரு காலும் அட்டெண்ட் பண்ணாம இருந்தது ரொம்பவே ரெஃப்ரெஷிங்கா இருந்துச்சு. (ஈவ்னிங் நிறையப் பேருக்கு நான் கூப்ட்டு பேச வேண்டியிருந்தது வேற விஷயம்). இனிமே மாசத்துல ஒரு நாள் நோ டி.வி., நோ செல்போன் டேயா கொண்டாடடினா என்னன்னு தோணுது. புத்தகங்கள் மட்டுமே துணையா அந்த ஒரு நாளை அமைச்சுக்கணும்னு நினைக்கிறேன். உங்களுக்கு என்ன தோணுது?
 
========================================

ரசனாகப்பட்டவன் போர்‌க்களத்தில் எதிரியுடன் பொருது வென்று நாட்டுக்குத் திரும்பியதும் வெற்றி விழாக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யுமாறு ஆக்‌ஞை பிறப்பி்த்தான். மந்திரி பரிவாரங்களெல்லாஞ் சேர்ந்து அவ்வுத்தரவை நிறைவேற்றுங்காலையில் வீரசாகசஞ் செய்த அனைவருக்கும் பரிசு வழங்கலானான் அரசன். படைவீரர்களில் ஒருவன் மிகுந்த கொம்மாளியிட்டுக் கொண்டு சிரித்த முகமாயிருக்கக் கண்டு, ‘‘அகோ வீரனே! மிக மகிழ்வாகவன்றோ காணப்படுகின்றனை? போரில் நீ செய்த சாகசந்தானென்ன?’’ என வினவினான்.

வீரனாகப்பட்டவன் சிரித்தபடி, ‘‘நான் எதிரிப் படை வீரர்களில் இருபது பேரின் கால்களைத் துண்டித்து விட்டேன் அரசே...’’ எனப் பதிலிறுத்தான். ‘‘ஆஹா...! நீயன்றோ என் படையிற் சிறந்த வீரன்...! மிகப்பெரும் பரிசில் தருகிறேனுனக்கு! எதிரிகளின் கால்கலைத் துண்டிக்க முயன்றதின் அதிகமாய் அவர்கள் தலையைத் துண்டித்திருக்கலாமே சிப்பாயே...’’ என அரசன் கேட்டதற்கு அவன் ரொம்பவுஞ் சோகமாய்ப் பதிலிறுத்தானிப்படி: ‘‘நான் என் செய்வேன் அரசே...! யானும் அவ்வண்ணமே விரும்பினேன். ஆயின் எனக்கு முன் எவரோ அவர்கள் தலையைத் துண்டித்திருந்தார்களே... என் செய்வேன் அரசே...!’’

========================================

ன் நண்பன் தேவேந்திர‌ே காயல் போன வாரம் வரை நன்றாகத்தான் இருந்தான். திடீரென்று கல்யாணம் செய்துகொண்டு விட்டான். கோத்ரேஜ் அலமாரி, அப்புறம் ரேடியோ, ரெப்ரெஜிரேடர், டெரிலின் சூட் ‌கொடுக்கிறார்கள் என்று கல்யாணம் பண்ணிக் கொண்டானாம். கூடவே ஒரு பெண்ணையும் கொடுக்கிறார்கள் என்று பிற்பாடுதான் தெரிந்தது. லேட்! (நவம்பர், 1965)

ச்சுப் பிழைகளில் நகைச்சுவை இருக்கிறது. சம்போ கந்தா என்பதை சம்போகந் தா என்று அச்சடித்தவர் தன்னையறியாமல் நகைச்சுவை நாஸ்திகராகிறார். சென்ற இதழில் சில சுவாரஸ்யமான பிழைகள் இருந்தன. சுவையுள்ள புத்தகம், சுமையுள்ள புத்தகமானது. ‘அத்தா உனை நான் கண்டு கொண்டேன்’ என்ற ஆழ்வார் வரி, ‘அத்தான் உனை நான் கண்டு கொண்டேன்’ என்று சினிமாப் பாட்டாக மாறியது. நான் இவைகளை எடுத்துரைப்பதில் என் நோக்கம் இதில் உள்ள ஹாஸ்யத்தைச் சொல்வதற்கில்லை. அச்சகத்தார் மன்னிக்கவும். அவர்கள் தொழிலில் உள்ள கடினத்தை நான் அறிவேன். (ஜனவரி, 1967)

ந்த இதழின் மற்றொரு பக்கத்தில் சுஜாதாவின் ‘6961’ என்ற கதை ஆரம்பிக்கிறதாம். இதற்கு என்ன இத்தனை அல்லோலம்? வருகிறது, வருகிறது என்று இரண்டு மாதமாகப் பயங்காட்டி புதுமை, புரட்சி, அது இது என்று புரளி பண்ணி- எனக்கு என்னவோ இந்த எழுத்தாளரை சற்று அதிகமாகவே தூக்கி வைக்கிறார்கள் என்று படுகிறது. இதில் ஒரு ஆபத்து- அதிகமாக உயர, உயர இறுதியில் கீழே விழும்போது வலியும் அதிகமாக இருக்கும். இந்த எழுத்தாளரை சமீபத்தில் நான் சந்தித்த‌ேபோது நடந்த சம்பாஷனையில் I had the last word:-

அறிமுகப்படுத்தியவர் : ‘‘இவர்தான் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்’’.  *  சுஜாதா: ‘‘அப்படியா... சந்தோஷம். இவர்...’’  *  அறி: ‘‘இவர்தான் கணையாழியில் நீர்க்குமிழிகள், கடைசிப் பக்கம், பெட்டி எல்லாம் எழுதுகிறவர்’’.  *  சுஜாதா : ‘‘அப்படியா? நான் படித்ததில்லை!’’  *  நான் : ‘‘நானும் உங்களுடைய கதைகளைப் படித்ததில்லை.’’  *  சுஜாதா: ‘‘You haven't missed much’’  *  நான்: ‘‘But you have’’. (ஆகஸ்ட் 1969)

-‘நீர்க்குமிழிகள்’ நூலில் சுஜாதா எழுதியவை. (இதில் குறிப்பிட வேண்டிய சுவாரஸ்ய விஷயம் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்பதும் அவரே. சில காலத்தின் பின் சுஜாதாவே அதை வெளிப்படுத்தி வி்டடார். சுஜாதாவைத் தவிர தி.ஜானகிராமன் ‘ஆண்டாளு அம்மாள்’ என்ற பெயரிலும, இந்திரா பார்த்தசாரதி ‘பரகால ஜீயர்’ என்ற பெயரிலும் சில காலம் கணையாழியின் கடைசிப் பக்கங்களை எழுதியிருக்கிறார்கள் என்பது உபரித் தகவல்)

========================================

ரைட்டு... இப்போ அந்தப் புதிரோட விடைக்கு வரலாம். ஒரு கோடு சேர்த்து இப்படி எழுதினீங்கன்னா...
                                                                 SIX

-ஒன்பது இப்ப ஆறா ஆகிடுச்சு இல்லீங்களா... என்ன... என்ன... முறைக்கறீங்க? நான் ஒரு கோடு சேக்கணும்னு சொன்னேனே தவிர, அது நேர்கோடா இருக்கணும்னு எப்பங்க சொன்னேன்...? அதான் ஒரு வளைகோடு சேர்த்து ஆறாக்கிட்டேன். ஹி... ஹி...


Wednesday, February 6, 2013

தெரியுமா இவரை...! - 2

Posted by பால கணேஷ் Wednesday, February 06, 2013

                 ஸோய்சிரோ ஹோண்டா (Soichiro Honda)

1906 நவம்பர் 17ல் ஜப்பானில் சைக்கிள் ரிப்பேர் செய்யும் தந்தைக்கும், நெசவாளியான தாய்க்கும் பிறந்த சோய்சிரோ ஹோண்டோவின் இளமைப் பருவத்தில் குறிப்பிடும்படி ஒன்றுமில்லீங்க. இளைஞன் ஹோண்டா வசதிக்குறைவாக இருந்தாலும் என்னைப் போல மிகத் திறமைசாலியாக இருந்தாருங்கோ. (ஹி... ஹி...) தன் 15வது வயதிலேயே படிப்பை நிறுத்திட்டு... (அவரா எங்க நிறுத்தினாரு? அது மண்டைல ஏறாததால விட்டுட்டாரு) வேலை தேடி டோக்கியோ வந்தாரு.

ஒரு காரேஜில் மெக்கானிக்காகச் சேர்ந்து தொழில் கத்துக்கிட்டாரு. காங்கிரசும் கோ்ஷ்டிப் பூசலும் மாதிரி எதையும் ஆராய்ஞ்சு பாக்கறது அவரோட இணைஞ்ச தனிக்குணம். மோட்டார் பைக்குகளை அக்கக்கா பிரிச்சு மறுபடி சேர்க்கற அளவுக்கு தொழில் கத்துக்கிட்டாரு. அங்க ஆறு வருஷம் வேலை பாத்தாரு. அப்புறமென்ன...  தனிக்கட்சி ஆரம்பிக்க... ச்சே... தனியா ஆட்டோமோபைல் ஆரம்பிக்கணும்னு அங்கருந்து விலகினாரு. ஆறு வருஷம் கழிச்சு தன் 22வது வயதில் 1928-ம் ஆண்டு தனியாக ஆட்டோமொபைல் காரேஜ் வைத்து நடத்த ஆரம்பிச்சுட்டாரு.

ஹோண்டா தனக்கிருந்த ஆராய்ச்சி அறிவின் காரணமாக, ஒரு பிஸ்டனைக் கண்டுபிடிச்சிருந்தாருங்க. அதை கார்கள்ல பொருத்தினா வேகமாக இயங்க உதவுவதுடன், எரிபொருள் சேமிப்புக்கும் உதவுவதை டெஸ்ட் பண்ணிப் பாத்து தெரிஞ்சுக்கிட்டாரு. அதை டொயோட்டோ கம்பெனியில் வித்துரணும்னு விரும்பி அணுகினார். மிகப்பெரிய நிறுவனமான டொயோட்டோவின் இன்ஜினியர் குழுவைச் சந்தித்து தன் பிஸ்டனைப் பற்றி விளக்க முயற்சி பண்ணினாரு.
இவர் மிஸ்டர் ஹோண்டா.

அந்த இன்ஜினியருங்க எல்லாம் இவர் சொல்றதை காது கொடுத்துக் கேக்கவே தயாராயில்லை. சிலர் விழுந்து விழுந்து சிரிச்சாங்க. சிலர் உஷாரா விழாம சேரைப் புடிச்சுக்கிட்டு உக்காந்துட்டு சிரிச்சாங்க. அப்புறம், ‘‘போய் புள்ளைகுட்டிங்களைப் படிக்க வைய்யா...’’ என்று அவரை அவமானப்படுத்தி விரட்டினாங்க.

தன் முயற்சியில சற்றும் மனம் தளராத.... விக்கிரமாதித்தனில்லை, ஹோண்டா மீண்டும் மீண்டும் டொயோட்டாவின் மீது படையெடுத்தாருங்க. ஒரு வாரமில்ல... ஒரு மாசமில்ல... ஒரு வருஷம்! கடைசில இன்ஜினியர் குழு இவர் சொல்றதுக்கு காது குடுத்தது (வேற என்னத்தப் பண்ண? இவர் தொல்லை விட்டா சரின்னுதான்...). இவர் பொறுமையா தன் பிஸ்டனோட சிறப்பம்சங்களை விளக்கி டெமோ காட்டவும் அசந்துட்டாங்க. மேலிடத்துல பேசி, அவருக்கு பிஸ்டன் தயாரிச்சுத் தர்ற கான்ட்ராக்ட் தந்தாங்க.

இங்கதாங்க ஆரம்பிக்குது ‌ஹோண்டாவின் வியக்க வைக்கும் ‘விஸ்வரூப’க் கதை! பிஸ்டன்கள் தயாரிக்கறதுக்காக ஒரு ஃபாக்டரியை நிர்மாணிக்க ஆரம்பிச்சாரு ஹோண்டா. ஃபாக்டரி முக்கால்வாசி கட்டப்பட்ட நிலையில தானா இரண்டாம் உலகப் போர் ஏற்படணும்? அதுல ஜப்பான் மீது வீசப்பட்ட பல குண்டுகள்ல ஒண்ணு சரியா இவர் ஃபாக்டரி மேலயா விழுந்து வைக்கணும்? முற்றிலுமாக அழிஞ்சு போனது ஃபாக்டரி. ஹோண்டா கொஞ்சம் அப்செட்டானாருங்க...

ஆனாலும் மனம் தளராம மறுபடி பணம் திரட்டி, ஃபாக்டரியை மீண்டும் நிர்மாணிக்க ஆரம்பிச்சாரு. இந்த முறை ஃபாக்டரி முழுமையாக உருவெடுத்து, இன்னும் ரெண்டு நாள்ல உற்பத்திய ஆரம்பிச்சுடலாம்னு இருக்கற சூழ்நிலையில வந்துச்சுங்க அடுத்த சோதனை. ஜ்ப்பானுக்கு அடிக்கடி விருந்தாளியா வந்து பாடாப் படுத்தற நிலநடுக்கம் ஏற்பட, ஹோண்டாவோட ஃபாக்டரி முழுவதுமா இடிஞ்சு விழுந்துடுச்சு.

அடுத்தடுத்து இப்படி மெகா சோதனைகளை சந்திச்சிருந்தா நாமளாயிருந்தா, ‘கடவுளே நீ இல்ல. ஆனா இருந்தா நல்லாயிருக்கும்’னு கடவுளைத் திட்டியிருப்போம். இல்லாட்டி, மனசு உடைஞ்சு போயி, பாருக்கோ, டாஸ்மாக்குக்கோ ஓடியிருப்போம். அங்கதான் நிக்கிறாரு ஹோண்டா. மனசைத் தேத்திக்கிட்டு, தன் நண்பர்கள், தெரிந்தவர்களிடமெல்லாமிருந்து பணம் திரட்டி, தன்கிட்ட இருந்த சொற்ப சொத்துக்களையும் வித்து மீண்டும் ஃபாக்டரியை எழுப்பினாரு. இவ்வளவுக்கப்புறம் இவரை இயற்கை சோதிக்கலை. இந்த முறை ஃபாக்டரி முழுசா தயாராச்சு.

உற்பத்தி ஆரம்பிச்சு, டொயோட்டோ கம்பெனிக்கு பிஸ்டன்கள் சப்ளை பண்ண ஆரம்பிச்சாரு. சில காலம் கழிச்சு தன் கம்பெனியை 450,000 யென்னுக்கு டொயோட்டோ நிறுவனத்து கிட்டயே வித்துட்டாருங்க. அந்தப் பணத்தை வெச்சு 1946-ல ‌‘ஹோண்டா டெக்னிகல் ரிஸர்ச் இன்ஸ்டிட்யூட்’ங்கற நிறுவனத்தை ஏற்படுத்தினாரு. அதன் பின்னர் 1948ம் ஆண்டுல ‘ஹோண்டா மோட்டார் கம்பெனி’ தயாரிச்ச மோட்டார் பைக்குகள் விற்பனைக்கு வந்தன.

இது ஹோண்டா கம்பெனி பைக்!
அப்புறமென்னங்க... அண்ணாமலை ரஜினி அப்படியே லிஃப்டில ஏறுற நேரத்துல வாழ்க்கைல மேல ஏறுவாரே... அதுமாதிரி தாங்க... அதுக்கப்புறம் ஹோண்டாவோட பிரம்மாண்டமான வளர்ச்சி நிறுத்த முடியாததாயிடுச்சு. ஒரு கட்டத்துல டொயோட்டோவையே மிஞ்சி கார் சந்தையில முத்திரை பதிச்சது ஹோண்டா நிறுவனம். இன்னிக்கு இன்டர்நேஷனல் மார்ககெட்டில ஹோண்டா நிறுவனத்தின் கார்களும், பைக்குகளும் என்ன மதிப்பில இருக்குங்கறது உங்களுக்கெல்லாம் நல்லாவே தெரிஞ்ச விஷயம். 

1973ம் ஆண்டு ரிடையராகும் வரை ஹோண்டா நிறுவனத்தின் பிரஸிடெண்ட்டா இருந்த அவர், அதன் பி்ன், ‘சுப்ரீம் அட்வைஸர்’ என்கிற உச்சப் அந்தஸ்துல ஹோண்டா நிறுவனத்துல தொடர்ந்தார். 'PEOPLE' பத்திரிகை 1980ல் அவரை '25 Most Intriguing People of the Year' என்ற பட்டியல்ல முதலிடம் அளிச்சும், ‘ஜப்பானியர்களின் ஹென்றிபோர்ட்’ என்று புகழ்ந்தும் கெளரவிச்சது. கல்லீரல் செயலிழந்ததன் காரணமா 5, ஆகஸ்ட்1991ல ஹோண்ட காலமானாரு.

போண்டான்னா விரும்பிச் சாப்பிடற நாம எல்லாரும் இந்த ஹோண்டா கிட்ட இருந்து அயராத தன்னம்பிக்கையையும், உழைப்பையும், பாஸிடிவ் திங்கிங்கையும் கைப்பற்றிக்கணும்ங்கறது என்னோட விருப்பம்! நீங்க என்ன நினைக்கறீங்க...?

Monday, February 4, 2013

‘மலைப் பாதை’யில் கிடைத்த ரசனை!

Posted by பால கணேஷ் Monday, February 04, 2013

‘மலைப் பாதையில் நடந்த வெளிச்சம்’ என்ற கவிதை நூலை தம்பி சத்ரியன் நாங்கள் முதல்முதலில் சந்தித்தபோது கையெழத்திட்டு எனக்குப் பரிசளித்திருந்தார். எந்தப் பதிப்பகம் வெளியிட்டது என்று பார்த்தால் ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ என்றிருந்தது ஒரு ஆச்சரியம்! வேடியப்பரு நல்ல ரசிகரு, தம்பி சத்ரியன் நல்ல கவிஞரு. ஒருவர் வெளியிட்டதை அடுத்தவர் பரிசளித்ததில் இருந்தே இந்தப் புத்தகம் சிறப்பானது என்பதை என் மனது கணித்தது. மெல்ல படிக்கத் துவங்கினேன். மெல்ல என்றால் எப்படி...? 96 பக்கங்களே கொண்ட இந்தக் கவிதை நூலை ஆகஸ்ட் 2012ல் படிக்கத் துவங்கி, பிப்ரவரி 2013ல் முடித்திருக்கிறேன்.

இப்படி மெதுவாகப் படித்ததற்குக் காரணம் சோம்பல் அல்ல... அடுத்தடுத்த பணிகளின் நடுவில் கிடைக்கும் இடைவெளிகளில் எல்லாம் புத்தகம் படிக்கும் என்னால் இன்னும் விரைவாகப் படித்து முடித்து விட்டிருக்க முடியும். நல்ல ஃபில்டர் காஃபியை ஸிப் ஸிப்பாய் உறிஞ்சி சுவைத்துக் குடிப்பது போல ஒவ்வொரு கவிதையாக ரசித்து, மனதில் உள்வாங்கி வியந்து படித்ததுதான் இத்தனை தாமதத்திற்குக் காரணம். அந்த வகையில் கவிதைகளை எழுதிய திருமதி. பத்மஜா நாராயணன் தாங்க குற்றவாளி. நான் இல்லை.

இந்தச் சிறுமியா கவிதை ‌எழுதினது!
‘பத்மஜாவின் கவிதைகள் மனவெளியில் படிமமாய் உறைந்து கிடக்கும் பிம்பங்களின் மாய இருளை அகற்றி புதுவெளிச்சம் பாய்ச்சி ரசனையின் ஆழ்மட்டத்திற்கு நம்மை உள்ளிழுத்துச் செல்கின்றன’ என்று இலக்கிய வார்த்தைகளைப் போட்டு நான் விமர்சிக்க ஆரம்பித்தால் கையில் கட்டையை எடுப்பீர்கள் என்பதால் ஸிம்பிளாக நம்ம ஸ்டைல்லயே சொல்லிடறேன்.

‌பொதுவா கவிதைகள்ல எனக்குத் தெரிஞ்ச வரை மூணு கேட்டகரி உண்டு. ஒண்ணு - படிச்சதும் புரிஞ்சு ‘அட!’ன்னு ரசிச்சுச் சொல்ல வைக்கிற டைப். ரெண்டாவது -  கவிஞர் உள்ளீடா சொல்லியிருக்கறதை கொஞ்சம் சிரமப்பட்டுப் புரிஞ்சுக்கீட்டு ரசிக்க வைக்கிற டைப். மூணாவது - ‌தலைகீழா நின்னு ‌தண்ணி குடிச்சாலும் புரியாத டைப். மூணாவது டைப் புத்தகங்கள் (தப்பித் தவறி) கைல கிடைச்சுட்டா, புத்தகத்தை கீழ வெச்சுட்டு எடுக்கவே மாட்டேன். முதல் டைப்பா இருந்துட்டா எடுத்த புக்கை கீழ வைக்கவே மாட்டேன். இந்தப் புத்தகம் முதல் ரகம்.

‘கதவிலக்கம் தொலைத்த வீடு’ என்கிற இவரின் கவிதையின் கருவை நானும் யோசித்ததுண்டு. என்ன செய்ய.... எனக்கு இப்படி கவிதையாய்ச் சொல்லத் தெரியவில்லையே...! கவிதைகள் சில புரியாவிட்டாலும், புரிந்தது போல் நடிக்கும் சிலரும், வெறும் வார்த்தைகளாகவே வாசிக்கும் பலரும் நம்மிடையே உண்டு. அவற்றை அழகாய் எடுத்துரைக்கும் ‘யாருக்கும் புரியா கவிதை’ என்ற கவிதையும், கவிதாவஸ்தை என்ற கவிதையில் கவிதை எழுதுவதின் அவஸ்தையை பத்மஜா சித்தரித்திருக்கும் அழகும் அவசியம் படித்து உணர்ந்து ரசிக்க வேண்டியவை.
நூலாசிரியர் பத்மஜா நாராயணன்

நூலாசிரியர் பத்மஜா என்னை‌ப் போல ரொம்பவே தன்னடக்கமான பேர்வழி போலருக்கு. தன் முன்னுரையில் தன்னைப் பற்றி எளிமையாகவே சொல்லியிருக்கிறார். ஆனால் கவிதைகளைப் படித்தவுடன் மனதில் பிரம்மாண்ட வடிவெடுத்து விடுகிறார். (ஹைய்யோ பத்மா மேடம்... உங்களை கேலியெல்லாம் பண்ணலை! சீரியஸாத்தான் சொல்றேங்க). என்னை விட அறிவிற் சிறந்த அபபாதுரை ஸார் தன் ‘மூன்றாம் சுழி’ தளத்துல இந்தப் புத்தக்தை படிச்சுட்டு எழுதியிருக்கற விமர்சனத்தை இங்கே ‘க்ளிக்’கி ரசிக்கலாம் நீங்க. அவரைவிட அதிகமா நான் என்னாத்தை சொல்லிடப் போறேன்?

‘தீங்குளிர்’, ‘காகிதக் கப்பலாய் நான்’, ‘காலோவியம்’.... இன்னும் எதைச் சொல்ல, எதை விட? எல்லாக் கவிதைகளுமே ரசனையான வாசிப்பனுபவத்தை எனக்குள் விதைத்தன. அந்த வாசிப்பனுபவத்தை நீங்களும் அனுபவித்தே உணரக் கடவீர்கள் என்று சொல்லிக் கொண்டு, நான் மிக ரசித்த இந்தப் புத்தகத்திலிருந்து சில சாம்பிள் கவிதைகளை உங்கள் ரசனைக்காக இங்கே பகிர்கிறேன்.
கீழ இருக்கற இந்தக் கவிதைல இவங்க என்ன சொல்லியிருக்காங்கன்னு (சின்னப் பையனானதால) எனக்குப் புரியலீங்க... நிஜம்மா..!


ஏனுங்க... கவிதைங்க உங்களைக் கவர்ந்துச்சான்னு கீழ கொஞ்சம் சொல்லிப் போட்டுப் போங்க...!

Friday, February 1, 2013

தெரியுமா இவரை...!

Posted by பால கணேஷ் Friday, February 01, 2013

                                பெனிட்டோ முசோலினி!

லகததையே அஞ்சி நடுங்க வைச்ச சர்வாதிகாரிகள்ல ஹிட்லருக்கு அடுத்தபடியா பிரபலமானவரு முசோலினி. என்னது... ஹிட்லரு யாரா..? அதாங்க நம்ம சார்லி சாப்ளின் மாதிரியே தோற்றத்துல இருப்பாரே... அவருதான். சாப்ளின் நிறையப் பேருக்குத் தநதது சிரிப்பு, ஹிட்லர் நிறையப் பேருக்கு்த் தந்தது இறப்பு! அவ்வளவுதாங்க வித்தியாசம்! மனிதாபிமானம் இல்லாத கொடூரன் ஹிட்லரைப் போலவே இன்னொருத்தர் முசோலினி.

முசோலினி
ஜெர்மனியில சர்வாதிகாரியா இருந்த ஹிட்லர் சின்ன வயசுல தான் ஒரு ஓவியரா வரணும்னு ஆசைப்பட்டாரு. 1922 முதல் 21 ஆண்டு காலம் இத்தாலியை ஆட்டிப் படைச்ச சர்வாதிகாரி முசோலினி ஒரு பள்ளிக்கூட வாத்தியாரா இருந்தவரு. அவரோட ஆசை நிறைவேயிருக்கலாம்; இவரோட கல்விப் பணி(?) தொடர்ந்திருக்கலாம். அப்படி ஆகியிருந்தா உலக வரலாறே வேற மாதிரி ஆயிருக்கும். இவங்க ரெண்டு பேரும் சர்வாதிகாரிகளாப் பரிணமி்ச்சதை விதியின் விநோத விளையாட்டுன்னுதான் சொல்லணும்.

நாம முசோலினியை கவனிப்போம். இத்தாலியில1883ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி முசோலினி பிறந்தாரு. (பிறந்திருக்கணுமா?)  அவரோட அம்மா ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. அப்பா இரும்புப் பட்டறை வெச்சிருந்த ஒரு கொல்லர். அவர் சரியான அரட்டைப் பேர்வழிங்க. வர்றவங்க போறவங்ககிட்ட எல்லாம் இத்தாலியில மன்னர் ஆட்சி ஒழிஞ்சு மக்கள் ஆட்சி மலரணும்னு டீக்கடை பெஞ்சல உக்காந்து அரட்டையடிக்கிற மாதிரி சதா அரசியல் பேசிட்டிருப்பாரு. சின்ன வயசுல மனசுல பதியறது சுலபத்துல மாறாதும்பாங்க. அப்பாவைக் கூர்ந்து கவனிச்சுட்டு வந்த முசோலினிக்கு அப்பவே அரசியல்ல ஈடுபாடு வந்துட்டது. நல்ல பேச்சுத் திறமையும், எழுத்துத்த திறமையும் முசோலனிக்கு இருந்தது அவருக்கு ப்ளஸ். கூடவே லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மனி, ஸ்பானிஷ் ஆங்கிலம்னு பல மொழிகளை வேற கத்து வெச்சிருந்தாரு.

தன் படிப்பை முடிச்சதும் கொஞ்ச காலத்துக்கு வாத்தியாரா பணியாற்றினாரு முசோலினி. பசங்ககிட்ட அப்ப எவ்வளவு சர்வாதிகாரம் செலுத்தினாருன்றதெல்லாம் தெரியல. கொஞ்ச நாள்லயே அவருககு அந்த வேலை போரடிச்சுட்டுது. எத்தனை நாளைக்குத்தான் பசங்களையே போட்டு அடிச்சிட்டிருக்கறது...? ஒரு சேஞ்சுக்கு ஆளுங்களை போட்டுத் தள்ளுவோமேன்னு தோணவும் ராணுவத்துல சேர்ந்துட்டாரு. கொஞ்ச காலம் ராணுவத்துல இருந்த பின்னாடி அதுவும் போரடிக்குதுன்னு அங்கருந்து விலகி ஒரு பத்திரிகை நிறுவனத்துல ‌வேலைக்குச் சேர்ந்தாரு. பயம்கறதே இல்லாத இந்த மனுசன், காரசாரமா எழுதின அரசியல் கட்டுரைகள் பெரிய பரபரப்பை உண்டாக்கிச்சு. அவர் எழுதின ஒரு கட்டுரைக்காக ஓராண்டு ஜெயில் தண்டனை அனுபவிச்சார்னா பாத்துக்‌கங்க... (இதே இவர் சர்வாதிகாரிய இருந்த சமயம்னா, அப்படி எழுதின நிருபரை ஜோலிய முடிச்சிருப்பாரு....)

முசோலினி - ஹிட்லர்
1914ம் ஆண்டுல முதலாம் உலகப் போர் ஆரம்பிச்சிச்சு. அப்போ மறுபடியும் ராணுவத்துல போய்ச் சேர்ந்தாரு முசோலினி. இதே காலகட்டத்துலதான் ஜெர்மன்ல ஹிட்லர் ராணுவத்தில சேர்நதாருங்கறது குறிப்பிடத்தக்க விஷயமுங்க. அப்படிச் சேர்ந்த இவங்க ரெண்டு பேரும் பின்னால 1939ம் ஆண்டுல இரண்டாம் உலகப் போர் மூண்டபோது ஜெர்மனிக்கும், இத்தாலிக்கும் தங்களின் கடின முயற்சியால(?) சர்வாதிகாரியா ஆகியிருந்தது பெரிய ஆச்சரியக்குறிதான்!  இந்த இரண்டாம் உலகப் போர்ல ஹிட்லரும் முசோலினியும் ஒரே அணியில இருந்து (ஒண்ணு கூடிட்டாங்கய்யா.... ஒண்ணு கூடிட்டாய்ங்க...) நேச நாடுகளை ‌எதிர்த்தாங்க. ஆரம்பத்துல இவங்க கூட்டணிக்கு வெற்றிமேல வெற்றி தாங்க கிடைச்சது. எந்தக காலத்திலயும் அயோக்கியங்க நிரந்தரமா ஜெயிக்கறதில்லைங்கறதுதானே வரலாறு...! இப்பவும் அப்படித்தாங்க போரோட போக்கே பின்னால மாறி, ஹிட்லருக்கும் முசோலினிக்கும் தோல்விகள் தொடர ஆரம்பிச்சது.

சரி... தோல்வி ஆயிப்போச்சு. இனி ஜனங்க கிட்டயோ, புரட்சிப் படை கிட்டயோ மாட்டினா ஆபத்துதான்கறதைப் புரிஞ்சுக்கிட்ட முசோலினி தன் காதலி கிளாரா பெட்டாசியைக் கூட்டிக்கிட்டு ஒரு வேன்ல தப்பிக்க முயற்சி பண்ணினாரு. (லூசு! ஹிட்லர்கிட்ட ஐடியா கேட்ருக்கலாம்) 1945ம் ஆண்டு ஏப்ரல் 26 அதிகாலையில எல்லையைக் கடக்க முயற்சி பண்றப்ப புரட்சிப் படை அவங்களை மடக்கிடு்ச்சு. முசோலினியை அவர் காதலியோட சேர்த்து கீழ இறக்கினாங்க. தன்னோட முடிவு நெருங்கிட்டதை உணர்ந்துக்கிட்ட முசோலினி, ஒரு சர்வாதிகாரி செய்யக்கூடாத காரியத்தை செஞ்சாரு. புரட்சிப் படை முன்னால மண்டியிட்டு, ‘‘என்னைக் கொன்னுடாதீங்க...’’ன்னு கெஞ்ச ஆரம்பிச்சாரு. (அப்போ பயத்துல பேண்ட்லயே ‘சுச்சா’ போயிட்டாராம்)

எப்பவுமே கொடுக்கறதுதானே திரும்பக் கிடைக்கும்கறது உலக நியதி? இவர் யார் மேலயாவது இரக்கம் காட்டியிருந்தா தானே இவர் மேல மத்தவங்க இரக்கம் காட்டறதுக்கு...? அவங்க தங்க தோட்டாக்களால (தங்கத்துல தோட்டா இல்லங்க, தங்களோட தோட்டான்னு பொருள்‌ கொள்க) முசோலினியையும், அவர் லவ்வரையும் சல்லடையாத் துளைச்சு அவங்களோட உடலை மிலான் நகர்ல நடுவீதியில போட்டுட்டாங்க. அந்த உடல்கள் மேல ஜனங்கள் எல்லாம் காறித் துப்பியும், ‘சுச்சா’ போயும் அவமானப்படுத்தினாங்க. அவ்வளவு கேவலப்பட்ட பின்னால அந்த உடல்களை ஒரு கம்பத்துல தலைகீழாக் கட்டித் தொங்க விட்டுட்டாங்க.

இவரோட ஒப்பிடறப்ப ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர் புத்திசாலிங்க. தோல்வி நெருங்கினதை உணர்ந்ததும், ஒரு பாதாள அறைக்குள்ள தன் காதலி ஈவா ப்ரெளனோட போய்ப் பதுங்கினவரு, அங்கயே தற்கொலை பணணிக்கிட்டாரு. முசோலினிக்கு நடந்த கேவலம் அவருக்கு நடக்காம தப்பிச்சுட்டாரு அந்த ராட்சசன். எது எப்படியோ... உலகையே மிரட்டுற சர்வாதிகாரிகளோட கடைசிக்காலம் மிகக் கொடூரமானதாக இருக்கும்கறதுக்கு முசோலினி ஒரு மிகப்பெரிய உதாரணம்!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube