Wednesday, February 27, 2013

பாரதிராஜாவின் சீற்றம்!

Posted by பால கணேஷ் Wednesday, February 27, 2013
புகழின் உச்சியில் இருக்கற இயக்குனர்களுக்கு அவங்க நல்ல முயற்சியில ஈடுபடறப்ப எதாவது காரணத்தால தோல்வி ஏற்பட்டுச்சுன்னா, கடுங்க‌ோபம் வரும். அந்த மேதைகள் அதுக்கான காரணங்களை ஆராயாம மக்களின் ரசனையிலதான் குறைன்னு முடிவு கட்டிடுவாங்க. ஒருமுறை பாரதிராஜா அப்படித்தான் கடும் கோபமடைஞ்சாரு. நெறையப் பேருக்கு அது தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லைன்னு தோணறதால ப்ளாஷ் பேக்குல என் மாணவப் பருவத்துக்கு உங்களைக் கூட்டிட்டுப் போய் அதைச் சொல்லப் போறேன்...!

நான் தேவகோட்டையில பள்ளி மாணவனா இருக்கறப்ப ‘நிழல்கள்’னு ஒரு படம் பாரதிராஜாவோட இயக்கத்துல வெளியாச்சு. படம் பாத்தவங்களை வெறுப்பேத்தி தோல்வியாச்சு. கதையில ஹீரோ ராஜசேகருக்கு காதல்லயும் வெற்றி கிடைக்காது; வேலை தேடி அலையற அவருக்கு கடைசி வரைக்கும் வேலையும் கிடைக்காது. இன்னொரு ஹீரோ சந்திரசேகர் சினிமா இசையமைப்பாளராகணும்கற வெறியோட படம் பூரா அலைஞ்சு வாய்ப்புக் கிடைக்காம கடைசியில சட்டையக் கிழிச்சுட்டு பைத்தியமா அலைவாரு. படம் பாத்த நாமளும் கிட்டத்தட்ட அந்த நிலையிலதான் தியேட்டரை விட்டு வெளிய வருவோம்கறது வேற விஷயம்!

நான் சொல்ல வந்தது... அந்த்ப படத்துல இளையராஜா + வைரமுத்து கூட்டணியில பாடல்கள் அத்தனையும் இப்பவும் ரசிக்க வைக்கிறவை. பாரதிராஜாவோட ரசிகர்கள்லாம் அந்த டயத்துல ‘படம் புரியவில்லைன்னு சொல்லுங்கள், பிடிக்கவில்லைன்னு சொல்லாதீர்கள்’ அப்படின்னு ‌போஸ்டர் அடிச்சு ஒட்டினது இன்னொரு ஹைலைட்டான விஷயம். அப்ப பாரதிராஜாவை ரொம்பவே சந்தோஷப்படுத்தியிருக்கும் இந்த விஷயம்னு நினைக்கிறேன். நான் குறிப்பிடற அந்தச் சீற்றம் அவருக்கு வந்த சமயத்துல ரசிகர்கள் இப்படி போஸ்டர் ஒட்டியிருந்தா கூலாகியிருப்பாரோ என்னவோ...

அதன்பிறகு பல வருஷங்கள் கழிச்சு ‘காதல் ஓவியம்’ அப்படின்னு ஒரு படத்தை எடுத்தாரு பாரதிராஜா. இந்தப் படத்துலயும் இளையராஜா + வைரமுத்து கூட்டணி அசத்துச்சு. ஒவ்வொரு பாட்டையும் இப்பக் கேட்டாலும் தலை ஆடும்; கூடவே பாடத் தோணும். படத்தோட கதையும் அப்படி ஒண்ணும் திராபைன்னு ‌சொல்லிட முடியாது. ரசிக்கிற மாதிரிதான் ‌சொல்லியிருந்தாரு பாரதிராஜா. இருந்தாலும் தமிழக மக்கள் அந்தப் படத்தைத் தோல்வியடைய வெச்சாங்க. இந்த முறை ரசிகர்கள் ‘புரியலைன்னு ‌சொல்லுங்க, பிடிக்கலைன்னு சொல்லாதீங்க’ன்னு போஸ்டர் எதும் ஒட்டலை! ‘ஒரு நல்ல படத்தையா தோல்வியடைய வெக்கறீங்க?’ அப்படின்னு இயக்குனர் இமயத்துக்குக் கடுங்கோபம் வந்துச்சு. கோபப்பட்ட அவர் என்ன செஞசாருன்னு சொல்றதுக்கு முன்னால, படம் ஏன் தோல்வியடைஞ்சுச்சுங்கற விஷயத்தைப் பாத்துடலாம்...

பின்னாட்கள்ல அவர் மகன் மனோஜை ஹீரோவா வெச்சு அவர் இயக்கின ‘தாஜ்மகால்’ங்கற படத்தைப் பார்த்திருப்பீங்க. படம் பார்க்காத பாக்கியசாலிகள் ‘ஈச்சி எலுமிச்சி, ஏண்டி கருவாச்சி’ன்னு ஒரு பாட்டையாவது டிவில போடறப்ப பார்த்துடுங்க. கருவாச்சின்னு மனோஜ் பாடற ரியா சென்னோட செவப்பு நெறத்தையும், கருவாச்சின்னு சொல்ற மனோஜோட நிறத்தையும் கண்டு அந்த நகைமுரணை வியந்து மனம் விட்டுச் சிரிப்பீங்க... இப்படி ஒரு விஷயம்தாங்க ‘காதல் ஓவியம்’ விஷயத்துலயும் நடந்தது. ஹீரோயின் அற்புதமா பரதம் ஆடறவன்னு கேரக்டரை வடிவமைச்சாரு பாரதிராஜா. அதுக்கு ராதாவை கதாநாயகியாப் போட்டிருந்தாரு. ராதா ஒரே நேரத்துல கையால உலக்கை குத்தியும், காலால சாணி மிதிச்சும் அற்புதமா பரதநாட்டியம்(?) ஆடியிருந்தாங்க. பின்னாட்கள்ல அவர் கண்டுபிடி்ச்ச ரேவதிய அப்பவே கண்டுபிடிச்சிருந்தாருன்னா படம் பொழச்சிருக்கும். சரி, ஹீரோயின் இப்படீன்னா ஹீரோ... பார்வையற்றவர் கேரக்டர்னா கண்ணை மேல்நோக்கிப் பார்த்தபடி வசனம் பேசினாப் போறும், அதான் அற்புதமான நடிப்புன்னு யாரோ அவருக்கு தப்பா சொல்லிக் குடுத்திருக்கணும். அதுவே போதும்னு நினைச்சதால அதுக்கு மேல அவர் எதுவும் மெனக்கிடலை.

இப்படியான விஷயங்கள்னால படம் தோல்வியடைஞ்சதும், அதுக்கான காரணங்களை ஆராயாம கோபப்பட்ட பாரதிராஜா, ‘‘கடை விரித்தேன்; கொள்வாரில்லை. ஆகவே, ‘சாக்கடை’ விரிக்கிறேன்’’ அப்படின்ற தொனியில பேட்டி குடுத்துட்டு தன்னோட அடுத்த (கேவலப்) படமான ‘வாலிபமே வா வா’ படத்தை எடுத்தாரு. முந்தைய படத்துல சாணி மிதிச்ச அதே ராதாவை ஹீரோயினாக்கி, எவ்வளவு கிளாமராக் காட்ட முடியுமோ அவ்வளவு கிளாமராக் காட்டினாரு. படத்தோட கதையே ‘உவ்வே’ பண்ண வைக்கிற ரகம்தான். தனக்கு ஆண்மையில்லைன்னு நம்பற கதாநாயகன் கார்த்திக், சிட்டுக்குருவி லேகியம், லாட்ஜ் விலைமாது உட்பட அத்தனை கேடுகெட்ட வழிகளிலும் அலைந்து, ஞானம் பெற்று கடைசியில் ராதாவுடன் சேர்வதுதான் கதை.

படத்தோட க்‌ளைமாக்ஸே ஹீரோயின் ராதா, ஹீரோ கார்த்திக்குக்கு வீரத்தை வரவழைக்கிற விதம்தாங்க! அதும் எப்பு்டி? கீழே இவங்களோட நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்துட்டிருக்கும் போது, மாடில ராதா, கார்த்திக்கைப் பாத்து, ‘‘உன்னால எனக்கு ஒரு குழந்தையத் தர முடியாது’’ன்னு உசுப்பேத்திவிட, அவரோட ‘வீரம்’(?) தூண்டப்பட்டு, உடனே சட்டையைக் கழற்றிவிட்டு ராதா மேல் பாய்வாரு. கீழே பெரியவர்கள் ‘மாப்பிள்ளை பெண்ணை அழைச்சுட்டு வாங்க’ன்னு சொல்ல, அழைக்க வரும் நபர், இவர்களின் உடலுறவைப் பார்த்துவிட்டு (கண்றாவி!) கீழே வந்து பெரியவர்களிடம் சொல்ல, கொஞ்சம் கூட அதிர்ச்சியடையாம, அத்தனை பேரும் ஏதோ அந்த வருடத்தின் மிகச்சிறந்த ஜோக்கைக் கேட்டுவிட்ட மாதிரி வாய்விட்டுச் சிரிப்பார்கள். ‘வணக்கம்’ கார்டு வரும்.

கேட்கறதுக்கே புல்லரிக்குதா உங்களுக்கு! டைட்டில் கார்டுல பாரதிராஜான்னு பேர் வர்றதை நம்பறதுக்கு கஷ்டமா இருக்கும். அதை கன்ஃபர்ம் பண்ணிக்கவே மறுபடி படம் பாத்தேன் நான். (‘‘டேய்ய்ய்... அந்த வயசுல ராதாவோட க்ளாமருக்காகப் பாத்தேன்னு உண்மையச் சொன்னா குறைஞ்சா போய்டுவ...?’’ ‘‘ஹய்யய்யோ... இந்த உருப்படாத மனஸ் என் இமே‌ஜை டாமேஜ் பண்ணிட்டுத்தான் ஓயும் போலருக்கே... இத வெச்சுக்கிட்டு... முடியல!’’) பின்னாட்கள்ல இ.இமயம் எடுத்த (என்னைப் பொறுத்த வரை) நல்ல படமான ‘வேதம் புதிது’ சரியானபடி ஓடாதப்ப நல்லவேளையா இவருக்கு மறுபடி சீற்றம் வரலை. வயது தந்த பக்குவமாக இருக்கும்னு எனக்குத் தோணுது.

இமயம் இப்படின்னா... சிகரம் மட்டும் சும்மாவா? இயக்குனர் பாலசந்தர் அவர்கள் ஒரு சமயம் ‘எங்க ஊர் கண்ணகி’ன்னு ஒரு படம் எடுத்தாரு. அப்பாவும், பையனும் ஒரே விலைமாது வீட்டுக்கு சேர்ந்து போற மாதிரி அவர் பாணியில புரட்சிகரமான சிந்தனைகளோட பச்சை நிறத்தில் காட்சிகளை அமைத்து படமெடுத்திருப்பாரு. அது எங்கயும் இப்ப கிடைக்காது, நீங்க பாக்கவும் முடியாதுங்கறது வேற கதை. அந்தப் படத்தைப் பத்தி இப்ப அவர்கிட்ட கேட்டீங்கன்னா, அதைப் பத்தி பேசக்கூட விரும்ப மாட்டாருன்னு நினைக்கறேன்! இயக்குனர் இமயத்துக்கும், இயக்குனர் சிகரத்துக்கும் இந்தத் திரைப்படங்கள் சரியான திருஷ்டிப் பொட்டு.


63 comments:

  1. அதிமேதாவித்தனம் சில நேர‌ங்களில் எவ்வளவு பெரிய இயக்குநர்களாக இருந்தாலும் கண்ணை மறைத்துவிடுகிறது....

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான் நண்பா. மேதைகளுக்கு கோபம் வந்தால் தாங்குவதரிது. மிக்க நன்றி!

      Delete
  2. பாலகணேஷ் சார், அவராவது படம் சரியா ஒடலைன்னு கோபத்தில் அடுத்த படத்தை கிளுகிளுப்பா, சாக்கடைன்னு அவருக்கே தெரிஞ்சு ( சில பேர் அந்த படத்தை விரும்பியதாகவும் கேள்வி, உங்கள சொல்லல) கொடுத்தார்.

    ஆனா விண்ணைத்தாண்டி வருவாயான்னு ஒரு வெற்றிப் படத்துக்கு பிறகு "நடுநிசி நாய்கள்" ன்னு ஒரு குப்பையை கொடுத்த இயக்குனரை என்ன சொல்றது?

    ReplyDelete
    Replies
    1. பாரதிராஜா எடுத்த படத்தை இவ்வளவு குறை சொன்னாலும், நீங்க சொல்ற ந.நாய்கள் பத்தி நெனச்சா அந்தப் படமே உசத்தின்னு ஆயிடும் ஆனந்த்! மிக்க நன்றி!

      Delete
  3. /// இவர் படத்தில் ஒரு பாடலுக்கு எத்தனை வித விதமா காட்சிகள்.
    கட் கட் செய்து ... ஆனாலும் அது கோர்வையாகவும், அழகாகவும் வரும்...
    எடிட்டிங் செய்பவர் தான் பாவம்...

    மண் வாசனை படம் இன்றும் நினைவிற்கு வருகிறது... அதில் ஒரு காட்சியில் பாண்டியனிடமிருந்து ரேவதிக்கு ஒரு கடிதம் வரும். அதை அவர் வாங்கிக் கொண்டு ஓடி வருவதாக ஒரு காட்சி... அந்தக் காட்சியில் முதலில் வறண்ட நிலம் வரும்... பிறகு நெல் நடுவு, கொஞ்சம் வளர்ச்சி... இப்படியே முழுதாக நெற்பயிர் செழித்து வளர்ந்து காற்றில் அலைபாயுவதை காண்பிப்பார்... அதாவது இவ்வளவு நாள் ஏங்கிய அவளின் மனம் எவ்வாறு மகிழ்ந்ததாக இருக்கும் என்பதாக இருக்கும்...

    அவர் படங்களில் ஒவ்வொரு பிரேமும் கதை சொல்லும். கவிதையையும் சொல்லும்.

    அவரின் படக் காட்சிகளை எழுத வேண்டுமென்றால் ஒரு பதிவு பத்தாது... ///

    இது ஒரு நண்பர் தளத்தில் முன்பு இட்ட கருத்துரை... எனது கருத்து சேமிப்பகத்திலிருந்து...

    காட்சி அமைப்பில் கதை சொல்வது அவரிடம் மிகவும் பிடித்த விசயம்...

    பாரதிராஜாவின் சீற்றத்தையும் அறிந்தேன்...

    (ஓஹோ... நீங்களும் ராதாவின் ரசிகரா...?)

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. பெண் ஒரு பக்க முகத்தை மூடிக்கிட்டு வெக்கப்படுவது, வெள்ளை உடை தேவதைகள்னு இவரை நிறையவே கிண்டல் பண்ணினாலும்கூட, அழகுணர்ச்சியோட ரசிக்க வெச்சதுல மன்னன் பாரதிராஜா. படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
    2. தெரிஞ்சு போச்சு.தனபாலன் சார் ராதா ரசிகர்தான்

      Delete
  4. இப்போதெல்லாம் பாரதிராஜாவும் இளையராஜாவும் அதிகமாக பேசிக்கொண்டிருக்கிரார்கள் (சண்டையிட்டுக் கொள்கிறார்கள்)

    ReplyDelete
    Replies
    1. கலைஞர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுகிறவர்கள். அப்படித்தான் கோபமும் சண்டையும். காலம் ஒருநாள் இவர்களை பழைய கிராம நாட்களுக்கு கூ்ட்டிட்டுப் ப‌ோய் ஒண்ணு சேத்துரும் முரளி. மிக்க நன்றி.

      Delete
  5. தலைமுறை இடைவெளி காரணமோ என்னவோ, எனக்கு பாரதிராஜாவின் படங்களின் மேல் அவ்வளவு பெரிய ஈர்ப்பு இருந்ததில்லை.. ஆனால் கிழக்குச் சீமையிலே பார்த்த போது கலங்கியது உண்மை..!

    ReplyDelete
    Replies
    1. படம் நெடுக இறைக்கப்பட்டிருந்த ‘தக்காளி’ககு எதுகைச் ‌சொல்லைத் தவிர வேற உறுத்தல்கள் எதுவுமில்லாத உணர்வுபூர்வமான படம் அது. எனக்கும் பிடிக்கும் ஆனந்த்!

      Delete
  6. ம்ம்ம்..

    நீங்கள் சொன்ன படங்களில் வாலிபமே வா படம் மட்டும் நான் பார்க்கல! :)

    பாரதிராஜா படங்களை விட நான் பாடல்களை அதிகம் கேட்டு ரசிப்பேன்!

    ReplyDelete
    Replies
    1. சரி, அந்தப் படத்துல குறிப்பிடற மாதிரி எதுவும் இல்லங்கறதால.. விடுங்க வெங்கட்! பாரதிராஜாவின் பாடல்கள் எடுக்கும் விதத்தை ரசிக்காதவங்க இருக்க முடியாது. மிக்க நன்றி!

      Delete
  7. நீங்கள் சொல்லும் கருத்துக்கள் சினிமா உலகுக்கு மட்டுமல்ல, எல்லாத்துறைகளைச் சார்ந்தவர்களுக்கும்
    பொருந்தும்.

    ஒவ்வொரு துறையிலும் சில முன்னோடிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் தமது ஆக்கங்களில்
    அவ்வப்பொழுது சோதனை முயற்சிகளில் ஈடுபடுவது இயற்கையே. (

    வெற்றி பெறுபவரை உலகம் தலை மேல் தூக்கி வைத்துக்கொள்கிறது. தோல்வி அடைபவரை உலகம்
    மேலும் தொய்ய வைக்கிறது.

    ஒரு விஞ்ஞானி, ஒரு மருத்துவர், ஒரு சட்ட வழக்குரைஞர், ஒரு பேராசிரியர், ஏன் ! ஒரு எழுத்தாளர் கூட இவர் யாவரிலுமே சிலர்
    துணிந்து ஒரு புதிய பாதையில் செல்ல முயற்சிக்கும்பொழுது, சம காலத்தைய சிந்தனையாளர்களுக்கு
    அந்த பரிணாமத்தில் ( வேவ் லெங்க்த் ) வர இயலாத நிலை ஏற்படுகிறது.

    இவர்கள் வாழ்க்கையில் தோல்வியுற்றாலும் மன நிறைவு அடைகிறார்கள்.

    இது பற்றி நிறைய சொல்லலாம். கருத்துக்கள் மாறுபடுவதும் இயற்கையே.

    சுப்பு ரத்தினம்.
    www.subbuthatha.blogspot.in



    ReplyDelete
    Replies
    1. பாரதிராஜாவைக் குறை சொல்வது என் நோக்கமில்லை, ஒரு சமயம் நேர்ந்த விஷயத்தைக் குறிப்பிடுகிறேன் அவ்வளவே என்பதைப் புரிந்து கொண்டு நல்ல, வியக்க வைக்கும் கருத்துச் சொன்ன சூரித்தாத்தாவுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  8. சறுக்கல்கள் என்பது அனைவருக்கும் சகஜம் தானே .
    சீற்றம் சீரழிவிற்குத் தானே வழி வகுத்தது ....[ வாலிபமே வா வா ]
    எதுவாகினும் ஏற்றுக் கொள்வதே சிறந்த பண்பு.







    ReplyDelete
    Replies
    1. சறுக்கியது யானை அல்லவா? என்பதே கவலை. நன்றி தோழி.

      Delete
  9. பாரதி ராஜாவைப்பற்றி எனக்கு புதிய தகவல்.

    ReplyDelete
    Replies
    1. புதிய தகவலை அறிந்த கொண்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  10. தன்னுடைய படத்தையே சாக்கடை என்று சொல்லும் இயக்குனரை இப்போது தான் கேள்விப்படுகிறேன். அதில் நடித்த கலைஞர்களுக்கு எத்தனை பெரிய கௌரவம்! ஆகா.. இவரல்லவோ மேதை! காசு கொடுத்து இந்த மேதையை வாழவைத்த ரசிகர்கள் எத்தனை பாக்கியசாலிகள்! ஆகா.. புல்லரிக்குதே..

    ReplyDelete
    Replies
    1. ‘சாக்கடை’ என்ற தொனியில் சொன்னார் என்றுதானே சொல்லியிருக்கிறேன். அவர் ‘கமர்ஷியல்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி பூசி மெழுகியிருந்தார் அப்பா ஸார்...!

      Delete
  11. இவருக்கு இயக்குனர் இமயம் என்று பட்டமா!

    ReplyDelete
    Replies
    1. திரையுலகில் நிறையப் பேருக்கு ஆளுக்கும் பட்டத்துக்கும் சம்பந்தம் இல்லாமல்தானே இருக்கிறது...!

      Delete
  12. ////‘டேய்ய்ய்... அந்த வயசுல ராதாவோட க்ளாமருக்காகப் பாத்தேன்னு உண்மையச் சொன்னா குறைஞ்சா போய்டுவ...?’’////
    ஹி.ஹி.ஹி.ஹி...............

    ReplyDelete
    Replies
    1. உண்மையைச் சொன்னதை ரசித்துச் சிரித்த நண்பன் ராஜிற்கு மனம் நிறை நன்றி!

      Delete
  13. பாரதிராஜா ‘டிக்..டிக்..டிக்’னு ஒரு படம் எடுத்தாரு கணேஷு! அதுக்கு முதல்லே வைச்ச பேரு ‘டாப் டக்கர்’. கமல் சொல்லித்தான் பேரை மாத்துனதா சொல்லுவாங்க. கே.பாலசந்தர் ஆரம்பக்காலத்துலே ‘ நான்கு சுவர்கள்’னு ஒரு படம் எடுத்திருக்காரு தெரியுமா? :-))

    பாரதிராஜாவும் சரி; பாலசந்தரும் சரி - தோல்வியை பெருந்தனமையோடு ஒப்புக்கொள்கிற மனப்பக்குவம் இல்லாத இயக்குனர்கள் என்பதற்கு இன்னும் நிறைய சான்றுகள் உள்ளன. நானே எழுதலாம்னு இருந்தேன். நீங்க பண்ணிட்டீங்க... நன்றி...! :-)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... ஜெய்சங்கரும் ரவிச்சந்திரனும் சேர்ந்து நடிச்சதுதானே ‘நான்கு சுவர்கள்’? அதில ‘ஓமைனா ஓமைனா இதுஉன் கண்ணா பொன்மீனா’ எஸ்.பி.பி.யோட அருமையான பாட்டு ஒண்ணும் மட்டும் பாத்து ரசிச்சிருக்கேன். படம் பாக்கற வாய்ப்பு கிடைச்சதில்லைண்ணா. நீங்க நடமாடும் சினிமா என்சைக்ளோ பீடியாங்கறதால இன்னும் நிறையத் தகவல்களோட அழகா எழுத முடியும். எழுதுங்க சேட்டையண்ணா..! மிக்க நன்றி!

      Delete
  14. சேர்ந்தே வளர்ந்தவங்க இப்போ சண்டையும் சேர்ந்தே போடுறாங்க.ஆனால் அவங்க மதுரைகாரங்க சேந்துடுவாங்க.

    ReplyDelete
    Replies
    1. சேரணும்னுதான் எல்லாரும் விரும்பறோம் தோழரே. பார்க்கலாம். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  15. ஈச்சி எலுமிச்சி ஏண்டி கருவாச்சி// அட ஆமாம் இல்லே.. :(

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... கவனிச்சுட்டீங்களா விஜி?

      Delete
  16. பாரதிராஜாவின் புதுமைபெண் என்னை அதிகம் கவர்ந்த படம். பாலசந்தரின் எல்லா படங்களும் மிகவும் பிடிக்கும்.. சர்வ சுந்தரம் பார்த்துப்பார்த்து ரசிப்பேன் இன்னமும்

    ReplyDelete
    Replies
    1. அந்தச் சிற்பிகள் இயக்கிய நல்ல படங்களை நானும் இப்போதும் பார்த்து வியந்து ரசித்துக் கொண்டுதான் இருக்கிறேன் விஜி. ரசனையைப் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  17. Very nice post. Whether it is sigaram or imayam, they should make a movie in such a way that it takes them to still better height but not to slip from them.

    Mr.Danabal, please see the mann vasanai movie once again and observe closely the lip movements of pandian in the song Pottu Vaitha Malligai Mottu. In this song, there are only one or two close up shots and rest are long shots.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துதான் என் கருத்தும். பத்து பர்ஸன்ட் கூட நடிப்புத் திறமை இல்லாத பாண்டியன் என்ற நடிகரை எப்படித்தான் பாரதிராஜா புடிச்சார‌ோ...? அவர்ட்ட போய் நீங்க லிப் மூவ்மெண்ட்லாம் எதிர்பாக்கறது... ரொம்ப ஓவரு மோகன்! மிக்க நன்றி!

      Delete
  18. சில இயக்குனர்களின் படங்களை விரும்பிப் பார்த்ததில் பாரதிராஜாவும், பாலசந்தரும் முக்கியமானவர்கள்...யாருக்கு எப்படியோ நிழல்களும், காதல் ஓவியமும் இன்னமும் எனக்குப் பிடிக்கும்... பாடல்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டபடியே இருக்கலாம்... சுவாரசியமாகப் படித்துக்கொண்டிருந்த உங்கள் பதிவு திடீரென முடிந்து விட்டதாகத் தோன்றியது பால கணேஷ் சார்.



    ReplyDelete
    Replies
    1. அந்த இரண்டு படங்களின் பாடல்களும் இப்பவும் எனக்குப் பிடி்த்தமானவைதான் எழில். திடீரென முடிந்து விட்டதாக படிப்பவருக்குத் தோன்றுவது நல்ல எழுத்தின் அறிகுறி -இது சுஜாதா ஸார் சொன்னது நானும் தேறிட்டிருக்கேன்றது உங்க கருத்துமூலமா தெரியுது. மிகமிகமிக சந்தோஷத்தோட என் நன்றி எழில்!

      Delete
  19. அறிந்திராத தகவல்கள்.

    ReplyDelete
    Replies
    1. அறிந்து கொண்ட தங்கைக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  20. பாரதிராஜாவின் புதுமைப்பெண், வேதம் புதிது டி.வியில் பார்த்திருக்கிறேன். இரண்டுமே என்னால் மறக்க முடியாத படம். பாரதிராஜாவின் படத்தின் பாடல்கள் எப்போதும் ரசிக்கும்படியாகத்தான் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. வேதம் புதிது எப்பவும் எனக்குப் பிடிச்ச படம்ங்க உஷா. அவர் பாடல்கள் எடுக்கற விதமும் எல்லாருக்கும் பிடிச்சதுதான். யானையின் சறுக்கலை மட்டுமே இங்க குறிப்பிட்டேன் அவ்வளவே. உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  21. பாரதிராஜாவுக்கு அறச்சீற்றம் (அப்படித்தானே சொல்லணும்?!) அடிக்கடி வரும். இதுமாதிரிப் படங்களையும் மீறி அவரின் 16 வயதினிலே யும் நி.மா.பூக்களும் நல்ல படங்களே. அது போகட்டும் வா.வா.வா படத்தில் கேட்கும்படி ஒரு யேசுதாஸ் பாட்டு உண்டு. நினைவிருக்கிறதா? அதே போல எங்க ஊரு கண்ணகியிலும் ஒரு நல்ல பாடல் உண்டு. மலேஷியா வாசுதேவன் டூயட்.

    ReplyDelete
    Replies
    1. நிறம் மாறாத பூக்கள் எனக்கு இப்பவும் பிடிச்ச படம்தான் ஸ்ரீராம். தாஸண்ணாவின் ‘பொன்வானப் பூங்காவில் தேனோடுது’ என்ற அந்தப் பாடல் இன்னும் உங்களுக்கு நினைவிருக்கா? கிரேட் நீங்க! எ.ஊரு.கண்ணகில ம.வாசுதேவன் பாட்டு எனக்கு நினைவில்லையே..! தெரிஞ்சா சொல்லுமையா! மிக்க நன்றி!

      Delete
    2. எங்க ஊரு கண்ணகி பாடல் "வைகை நீராட.... வானில் தேரோட...." இசை வி. குமார்தானே?

      Delete
    3. ஆஹா... இப்ப அந்தப் பாட்டு கேட்ட ஞாபகம் வந்துடுச்சு. நன்றி ஸ்ரீராம்! இசை யார்னு நினைவில்ல.

      Delete
  22. ஒரே மூச்சில் மளமளன்னு படிச்சேன் அண்ணா! உங்கள் எழுத்து நடை அந்த மாதிரி!

    வாலிபமே வா வா எங்காச்சும் தேடிப் பார்க்கணும்! ஆவ்வ்வ்வ்!

    ஒரு படைப்பு தோல்வியடையும் போது, மக்களைக் குறை கூறுதல் சரியன்று!

    இதை அழகாக விளக்கியது உங்கள் பதிவு அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. நான் ரசிக்கிற எழுத்துகளுக்குச் சொந்தக்காரர்களில் ஒருவரான நீங்க என் எழுத்து நடையை சிலாகித்தது மகிழ்வு தருகிறது மணி. மிகமிக நன்றி! (தேடினாலும் அந்தப் படத்தோட டிவிடி கிடைக்காது மணி. ஒருவேளை யூடியூப்ல இருக்கோ என்னவ‌ோ?)

      Delete
  23. ஓடாத இரண்டு படங்களிலும் பாடல்கள் அருமையாக இருக்கும்! நிழல்கள் படத்தை தூர்தர்ஷணில் பத்து வயதில் பார்த்து விட்டு படம் எப்படி இருக்கு நல்லா இருக்கா என பக்கத்து வீட்டு அக்கா கேட்க நான் ஒன்றும் தெரியாமல் விழித்து சூப்பரா இருந்துச்சு! என்று சொன்னபோது அந்த அக்கா தலையில் அடித்துக் கொண்டது நினைவுக்கு வருகிறது! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... சிரிக்கச் சிரிக்க உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சுரேஷ்!

      Delete
  24. நல்ல ஆராய்ச்சி! சறுக்கல் எல்லாருக்கும் உள்ளது தானே...:)

    பாடல்கள் என்றைக்கும் இனிக்கும் தேன் அல்லவா...

    ReplyDelete
    Replies
    1. தேனான பாடல்களை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி தோழி!

      Delete
  25. இனிய வணக்கம் நண்பர் கணேஷ்...

    நலமா??

    சற்று இடைவெளி விட்டுவிட்டேன்...


    ..

    காதல் ஓவியம் படத்தில் தான் இளையராஜா பாரதிராஜா

    இடையிலான விரிசல் விட ஆரம்பித்தது...

    பாடல்கள் தனியாக எடுத்த பின்னர்... கதையில் விவாதித்த

    இளையராஜா அவர்கள் படத்தின் சிலபல காட்சிகளை

    மாற்ற சொன்னாராம்.. ஆனால் இயக்குனர் மறுத்துவிட்டாராம்...

    ......

    ஆனால் அந்த விரிசல் முதல் மரியாதையில் சற்று அடைக்கப்பட்டது...

    ....

    இயக்குனர் இமயம் அவர்களின் கோபம் பற்றியும் அதனால் விளைந்த

    சீர்கெட்ட படங்கள் பற்றியுமான இந்த பதிவு என் மனத்தைக் கவர்ந்தது

    நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியான, ரசித்து எழுதிய .உங்களின் கருத்துக்கு மனம் நிறை நன்றிகள் மகேன்!

      Delete
  26. இ.இ. யின் சீற்றம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். பின்னணி இப்போதுதான் தெரிந்துகொண்டேன். 'நிழல்கள்' வெளியான நேரத்தில் தான் இ.சி. யின் படம் வறுமையின் நிறம் சிவப்பு' வெளியானது. இரண்டுமே நம்மை பாய் பிராண்ட வைக்கும் படங்கள்.

    நல்ல பதிவுக்குப் பாராட்ட்க்கள்!

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட்தான்மா. உற்சாகம் தந்த உங்களின் கருத்துக்கு உளம் கனிந்த நன்றி!

      Delete
  27. பாரதிராஜாவைபற்றிய அறிந்திரா தகவல்களை கொடுத்து அசத்திட்டீங்க கணேஷண்ணா..

    ‘காதல் ஓவியம்’ படத்திலிருக்கும் பாடல்களின் வரிகள் மிகவும் பிடிக்கும்..

    ReplyDelete
    Replies
    1. பாடல்களை ரசித்து பதிதையும் ரசித்த தங்கைக்கு என் இதய நன்றி!

      Delete
  28. பதிவும் பதிவில் வந்த பின்னூட்டங்களும் அடேயப்பா எவ்வளவு விஷயங்கள் சொல்கின்றன.... அருமையான பதிவும் பதிவு சார்ந்த பின்னூட்டங்களும்

    ReplyDelete
    Replies
    1. சீனு! என் எழுத்தோட சேர்த்து என் நட்புகளும் உறவுகளும் எழுதின கருத்துக்களையும் நீங்க படிச்சு ரசிக்கிறது... ஐ லைக் த திஸ் வெரிமச். ரொம்ப தேங்ஸ்டா நண்பா!

      Delete
  29. எவ்ளோ பெரிய இயக்குனரா இருந்தாலும் சறுக்கல் இல்லாம முன்னேறமுடியாது.. ஆனாலும் பாரதிராஜா இப்படி கூட படம் எடுத்து இருக்கார்...

    ReplyDelete
    Replies
    1. வியந்து ரசித்த சமீராவுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  30. பாலு மகேந்திராவின் காலத்தால் அழியாத காவியமான 'நீங்கள் கேட்டவை' படத்தை மறந்து விட்டீர்களே :-)

    ReplyDelete
    Replies
    1. கமர்ஷியல் கதையை வித்தியாசமான ட்ரீட்மெண்ட்ல தர்றேன்ட்டு சாம்பார்ல பாயசத்தைக் கலந்து எடுத்த அவரோட படம் மட்டுமில்ல.. இன்னும் பல படங்களைப் பத்தியும் குறிப்பிட வேண்டியிருக்கும். ரொம்ப நீளமாய்டுமே பதிவுன்னு ஒரு ஏரியாவை மட்டும் எடுத்துக்கிட்டேண்ணா. இன்னொரு பதிவு தனியா போட்டுட்டாப் போச்சு. மிக்க நன்றி.

      Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube