Showing posts with label சுயபுராணம். Show all posts
Showing posts with label சுயபுராணம். Show all posts

Tuesday, September 5, 2017

இன்று ஆசிரியர் தினம் என்பதால் அனைவரும் அவரவர் ஆசிரியர்களை நினைவுகூர்ந்து நிறையப் பதிவுகள் இட்டிருந்ததைக் காண நேர்ந்தது. நான் என் ஆசிரியர்களைப் பற்றி நினைவுகூர்ந்தால் என்ன என்று மனதில் பின்னோக்கி பள்ளிக் காலத்திலிருந்து எண்ணிப் பார்த்ததில் ஒவ்வொருவராக மனத்தில் ஸ்லைடு ஸ்லைடாக வந்து போனார்கள். யாரைப் பற்றிச் சொல்லலாம்..?

ரிடையர்மெண்டுக்குச் சில ஆண்டுகளே பாக்கி வைத்திருந்த, வழுக்கைத் தலையும் கைத்தடியுமாக யுத்தக் கப்பல் ஒன்று அசைவதைப் போல ஆடிஆடி நடந்து வரும் டிஆர்ஜி (டி.ஆர்.கோவிந்தராஜன்) சார், அகன்ற தன் உடம்பால் கோல்போஸ்ட்டையே மறைத்து எங்களுடன் பந்து விளையாடிய சுந்தரம் வாத்தியார், பத்தாம் வகுப்பை நெருங்கும் நிலையிலும் தமிழ் இலக்கணத்தில் நான் பூஜ்யமாக இருந்ததைக் கண்டு அதிர்ந்து, ஒவ்வொரு நாளும் வகுப்பு முடிந்தபின் எனக்காகப் பத்து நிமிடங்கள் பிரத்யேக இலக்கண வகுப்பு நடத்திய புதிய வார்ப்புகள் பாக்யராஜ் போன்ற தோற்றத்திலிருந்த காளிதாஸ் ஐயா,

என் தமிழை ரசித்து மேம்படுத்திய தாசரதி ஐயா, வழுக்கைத் தலையுடன், சிறு தோல் பிரச்சனையும் இருந்ததால் வெயிலிலும் மழையிலும் எப்போதும் கையில் விரித்த குடையுடன் இருந்ததால் ‘குடை ஸார்’ என்று பட்டப்பெயர் பெற்ற பேராசிரியர் ராஜமாணிக்கம், உலகின் மிகச்சிறந்த ஜோக்கைச் சொன்னால்கூட இவர் சிரிக்க மாட்டார் என்று எங்களால் கேலி செய்யப்பட்ட, மீசையற்ற தீவிரமான முகத்துடன் எப்போதும காணப்படும் பேராசிரியர் கல்யாணம்.... அனைவரும் வந்து போனார்கள்.

ஆனாலும்... பழம் தின்று கொட்டை போட்ட இந்த ஆசிரியர்கள் அனைவரையும் விட, என்னைப் பழம் தின்ன வைத்துக் காசு போட வைத்த மங்கையர்க்கரசி டீச்சர்தான் மனசில் வந்து போகிறார்.  தட்ஸிட்... அவருடன் சேர்ந்து அந்தச் சம்பவமும் மனதில் நிழலாடுகிறது.

அது நான் இரண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த சமயம். என் அப்பாவுக்கு என் மீது பாசம் கொஞ்சமில்லை... மிகமிக அதிகம். யாராவது 2ம் கிளாஸ் படிக்கிற பையனுக்குக் கண்ணில் காசைக் காட்டுவார்களா..? என் அப்பா காட்டியவர். இரண்டு பைசா, ஐந்து பைசா, பத்துப் பைசா என்று அவ்வப்போது மிட்டாய் வாங்கிச் சாப்பிட பாக்கெட் சில்லறை கிடைக்கும். நம்புங்கள்... அந்த நாணயங்களுக்கு அப்போது நல்ல மதிப்பிருந்தது. 30 பைசாவில் ஒருபெரிய மாம்பழமே வாங்கித் தின்னலாம் என்றால் பாருங்கள்.


அப்போது எனக்கொரு வினோத(கெட்ட) பழக்கம் இருந்தது. மங்கை டீச்சர் கிளாஸ் நடத்திக் கொண்டிருக்கையில் வழக்கம்போல பத்துப் பைசாவை வாயின் ஒரு புறத்தில் வைத்து அதக்கியபடி வகுப்பைக் கவனித்துக் கொண்டிருந்தேன். பாடத்தின் இடையில் டீச்சர் ஏதோ சொல்லிச் சிரிக்க வைக்க, மற்ற பையன்களுடன் சேர்ந்து சிரித்ததில் வாயோரமிருந்த பைசாவானது நழுவித் தொண்டையை நோக்கிச் சென்று அங்கே சுங்கச்சாவடி எதுமில்லாததால் நேராக வயிற்றை நோக்கி வழுக்கிக் கொண்டு பயணித்தது.

அப்போதைய பத்துப்  பைசாக்கள் இன்றுள்ளவை போல் வட்டமாக இல்லாமல்  நெளிநெளியான ஓரங்களுடன், மெட்டலில் செய்யப்பட்டிருக்கும். படம் காண்க. அதனால் தொண்டையில் அடைத்துக் கொள்ளவில்லை. இல்லையேல் தொண்டை அடைத்துக் கொண்டு மூச்சுத் திணறி அன்றே பரலோகப் பயணத்தைத் துவக்கியிருப்பேன். ஆனாலும் நாணயத்தை விழுங்கியதில் இயல்புக்கு மாறாக விக்கோ விக்கென்று விக்கி, அட் எ டைம் நாலு ஆடு திருடியவனைப் போல திருதிருவென நான் விழிப்பதைக் கண்டு மங்கை டீச்சர் என்னவென்று கேட்க, உண்மையைத் திக்கி திக்கிச் சொன்னேன்.

அதிர்ந்து போய்விட்டார் மங்கை டீச்சர். ஆனாலும் சமயோசிதமாகச் செயல்பட்டார். ஒரு பயலை அனுப்பி இரண்டு பெரிய வாழைப் பழங்களை வாங்கிவர வைத்து என்னை விழுங்க வைத்தார். நான்கு டம்ளர் நிறையத் தண்ணீரைத் தந்து தலையில் தட்டிக் குடிக்கச் செய்தார். பின் பியூரை (வயசானவரை மருவாதி இல்லாம பியூன்ங்கலாங்களா? ஹி.. ஹி...) அழைத்து நடந்ததை வீட்டில் சொல்லி என்னை ஒப்படைத்து வருமாறு அனுப்பினார். 

அவர் சொன்னதைக் கேட்டு வீட்டில் அதிர்ச்சியுடன் கோபத்தையும் அடைஞ்சாங்க அம்மா.  அந்த பின்மதியத்தில் வீட்டில் யாரும் இருக்கவில்லை. எனக்கு ரெண்டு செல்லச் சாத்து சாத்தி (அம்மா அடிச்சு என்னிக்கு எவனுக்கு வலிச்சிருக்கு?) வயித்தை வலிக்குதாடா? தலை சுத்துதாடா? என்று பலப்பல கேள்விகளைக் கேட்டு பதறிக் கொண்டிருந்தார். எனக்கோ எந்தப் பிரச்சனையும் இல்லை உண்மையில் அந்தக் காசு வயிற்றில் தொல்லை எதுவுமின்றி செட்டிலாகி விட்டது போல. கேட்டதற்கெல்லாம் இல்லை என்றே சொல்லிக் கொண்டிருந்தேன்.

இதற்குள் ஆபீஸிலிருந்து சித்தப்பா வந்துவிட, ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். அங்கு புரியாக்கதிர் எடுக்கச் சொன்னார்கள். எடுத்தோம். மருத்துவர் அதை வெளிச்சத்தில் பார்த்து வயிற்றில் எதுவும் இல்லை, சுத்தமாக இருக்கிறது என்று அறிவித்தார். எதற்கும் இரவு தூங்கட்டும். காலையில் மீண்டும் ஒருமுறை எடுத்துப் பார்த்து விடலாம் என்றார். சொந்த பிசினஸ் என்பதால் இரவுதான் அப்பா வருவார். வந்ததும் அவர்மீது குற்றப் பத்திரிகை சாட்டப்பட, விஸ்கி விஸ்கி... ச்சே, விக்கி விக்கி அழுது கொண்டிருந்த என்னை அப்பாதான் சமாதானம் செய்தார். மறுநாள் காலையில் மீண்டும் புரியாக்கதிர் படம். அப்போதும் வயிறு க்ளியர். இறுதியில் மங்கை டீச்சர் தந்த வாழைப்பழமும் தண்ணீரும் காயினுடன் வினைபுரிந்து அதைக் கழிவுடன் வெளியேற்றியிருக்க வேண்டும் என்றும், இனி எனக்கு எதுவும் பிரச்சினை வராது என்றும் தன் ஆராய்ச்சி முடிவை அறிவித்தார்.

அப்பாடா... என்று ஆறுதலுடன் மருத்துவமனையிலிருந்து தப்பித்த சந்தோஷத்துடன் விளையாடப் போய்விட்டேன் நான். ஆனால் மருத்துவராலும் என் வீட்டினராலும் சமயோசிதமாகச் செயல்பட்ட மங்கை டீச்சர் வெகுவாகப் பாராட்டப்பட்டார். அப்போது நன்றியெல்லாம் சொல்லி மகிழ்விக்கிற அளவுக்குப் பண்பாடு எனக்கு வளரவில்லை என்றாலும், இப்போது நினைக்கையில் மங்கை டீச்சர் நினைவிற்கு வருகிறார். ஆனால், என்ன ஒரு சோகம்... அதன்பின் சில்லறையைக் கண்ணில் காட்டுகிற வழக்கத்தை அப்பா நிறுத்தி விட்டார் என்பதுதான். அவ்வ்வ்வ்....

Friday, August 11, 2017

என் முதல் நாவல்

Posted by பால கணேஷ் Friday, August 11, 2017
ஏப்ரல் மாதத்தில் ஓர் நாள்... தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்டில் இருந்து என் முகநூல் நண்பராக இருக்கும் உதவி ஆசிரியர் ஒருவர் என்னை வந்து சந்திக்கச் சொன்னார். போய்ப் பார்த்தேன். தாங்கள் மாத நாவல்கள் வெளியிட உள்ளதாகவும், வரும் மாதத்திலேயே நான்கு நாவல்கள் வெளியிடும் உத்தேசம் இருக்கிறது என்றும், நான்கில் ஒரு நாவலை நான் எழுதித் தர இயலுமா என்றும் கேட்டார்.

பத்திரிகைகளில் என் எழுத்துக்கள் வரவேண்டும், அதற்காக நான் சின்ஸியராக முயல வேண்டும் என்று அதற்கு முந்தைய வாரம்தான் நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகர் முகநூலில் பதிவு எழுதி யிருந்தார். நானும் பத்திரிகையில் எழுத முயல்வதற்குத் துவங்கியிருந்தேன் என் முயற்சிகளை. இப்படியான நிலையில் அவர்கள் கேட்டதும் சிறிதும் சிந்திக்காமல் சம்மதம் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். ஒரே வாரத்தில் நாவலைத் தந்தாக வேண்டிய அவசரம் இருந்தது.

நாவலை எழுதத் துவங்கினால்... இடையில் சில காலம் எழுத மறந்ததால் நகைச்சுவை வண்டி ஓடாமல் ஸ்டரக்அப் ஆகி நின்றது. தொடர்ந்து எண்ணெய் போட்டு (ஐ மீன், எழுதி) வைத்திருந்தால்தான் வண்டி ஓடும் என்பதைப் புரிந்து கொண்ட சமயம் அது. ஓடினேன் குருநாதர் சேட்டைக்காரனிடம். அவர் முதல் சில அத்தியாயங்களைத் திருத்தி, அவருடைய ஸ்பெஷல் டச்கள் சிலவற்றை சேர்த்துக் கொடுத்தார். அவ்வளவுதான்... அதையே கெட்டியாகக் பிடித்துக் கொண்டு கடகடவென்று வண்டியை ஓட்ட, அதன்பின் வரும் உவமை, பன்ச் போன்றவை சரளமாக வந்து விழுந்தன. கடகடவென ஒரே வாரத்தில் முடித்து அனுப்பி விட்டேன் நல்ல பிள்ளையாக.

ஆனால் அவர்களின் நிர்வாகப் பிரச்சனைகள் ஏதோ குறுக்கிட, மாதம் ஒன்றாக வெளியிடத் துவங்கினார்கள். அந்த வகையில் நான்காவதாக என் நாவல் இப்போது வெளியாகி இருக்கிறது. (ஹப்பாடா... வந்தாச்சு...)

இது சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிற ஒரு அரிய வகை நாவலாகும். படிக்கையில் நிச்சயம் சிரிப்பீர்கள். படித்து முடித்தபின் எதற்காகச் சிரித்தோம் என்று சிந்திப்பீர்கள். ஆகவே இந்தச் சிறப்பான புத்தகத்தை நீங்கள் அனைவரும் வாங்கிப் படித்து உங்கள் விமர்சனத்தை முன்வையுங்கள். மீ ஆவலுடன் வெயிட்டிங்.

புத்தகத்தின் விலை ஐம்பது ரூபாய் மட்டுமே.

புத்தகம் வேண்டுவோர், சென்னையில் 95978 00485 என்ற எண்ணிலும், புதுச்சேரியில் 95978 00487 என்ற எண்ணிலும், கோவையில் 95978 00415 என்ற எண்ணிலும், மதுரையில் 95978 00452 என்ற எண்ணிலும், சேலத்தில் 96009 69301 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பேசினால் புத்தகம் உங்கள் கைகளில் தவழும்.

உடனே பேசிடுவீங்கதான...?

Wednesday, August 2, 2017

“அண்ணே... அவசரமாப் பேசணும்னு சொன்னீங்களே... என்ன விஷயம்ணே?”

“வாய்யா... ப்ளாக் எழுதறதை விட்டுட்டு காணாமப் போய்ட்டவங்கன்னு சொல்லி நம்ம வெங்கட் நாகராஜ் ஒருபோஸ்ட் போட்ருக்காரு தெரியுமா.-? அதுல முக்கியக் குற்றவாளியா உன்னையும் சேத்திருக்காரு. அதான்... ஏன் நீ இங்கிட்டு வரலன்னு கேக்கலாம்னு கூப்ட்டேன்...”

“ப்ளாக் எழுதறதுக்கு நேரம் ஒதுக்க முடியாம முக்கிட்டு இருக்கறதால முக்கியக் குற்றவாளியா சேத்திருப்பாருண்ணே... ஹி... ஹி... ஹி...”

“ஏன் நேரம் ஒதுக்க முடியலை..? என்னாச்சு..?’‘

“வயித்துப் பொழப்புண்ணே. புல்டைம் ஜாபும், பார்ட் டைம் ஜாபுமா நேரத்தைச் சாப்பிட்ருது. வருமானம் வேணும்லண்ணே பொழைப்புக்கு..?”

“முன்ன ப்ளாக் எழுதிட்டிருந்தப்ப கோடீஸ்வரனா இருந்தியாக்கும்..? அப்பவும் துந்தனாதானே பொழப்பு..? அதில்லை சரியான காரணம். என்னான்னு தெரிஞ்சாவணும் எனக்கு இப்ப...”

“உங்களை டபாய்க்க முடியாது. கிடைக்கற கொஞ்ச நேரத்தை முகநூல்ல உலாவுறதுல செலவு பண்ணிட்டிருக்கேன் அண்ணே. அதான் இங்கிட்டு... ஹி.. ஹி.. ஹி...”

‘என்னது..? முகநூலா..? இங்க இல்லாத என்ன வசதி அங்க கெடைச்சிடுது உனக்கு அங்கயே சுத்திட்டிருக்கற அளவுக்கு..?”

“ரெண்டு சமாச்சாரம்ணே. இங்க எழுதி போஸ்ட் பண்ணிட்டு யாராச்சும் கமெண்ட் சொல்வாங்களான்னு பாத்துட்டிருப்போம். அதுக்கு நாம பதில் போட்டு, அத பாத்துட்டு அவங்க பதில் போட்டு... நாளே ஆயிடும்ணே. அங்கிட்டுன்னா பாத்த உடனே கமெண்ட் போடுவாங்க.நாம பதில் சொன்னா, உடனே பதில் சொல்லுவாங்க. போன்ல பேசிக்கறதுக்கு பதிலா டைப்பிங்ல பேசிக்கற மாதிரிண்ணே. அதான்.”

“ஓகோ... அந்த இன்னொரு சமாச்சாரம்..?”

“இங்ஙன எழுதறதுன்னா எதுனாச்சும் டாபிக் வேணும்ணே. கதையோ, கட்டுரையோ யோசிச்சு எழுதணும். அங்ஙன எழுதணும்னா பெருசா யோசிக்க வேண்டியதில்லைண்ணே. நாலு வரி எழுதுனாலே போதும். டைம் கம்மி. ஈஸியா எழுதிரலாம்ணே....”

“ஓகோ... அப்ப சோம்பேறியா ஆக்கிட்டிருக்குது போல அந்த முகநூல் உன்னைய...”

“அப்டியும் ஒரேயடியா சொல்லிட முடியாதுண்ணே. ப்ளாக்லயும், முகநூல்லயும் திரிஞ்சிட்டிருந்தா பத்தாது அச்சு ஊடகத்துலயும் நீ வரணும்னு நமக்கு வேண்டிய சில பேரு தூண்டி விட்டுட்டாங்கண்ணே. அந்த ஆசை தீயாப் புடிச்சுக்கிச்சு இப்ப. போன வாரத்துக்கு முந்தின வாரம் குமுதம் லைஃப் புக்குல என் ஆர்ட்டிக்கிள் ஒண்ணு வந்துச்சுண்ணே...’‘

“அடடே... சொல்லவே இல்லையே... எங்க அது..?’‘



“இதாண்ணே.. பாருங்க...”

“சபாஷ். அழகான லேஅவுட்ல பாக்கவே நல்லாருக்கு...”

“அவ்வ்வ்வ்... பாக்கத்தான் நல்லாருக்கா..? எழுதுனதும் நல்லாருக்குன்னு நெறையப் பேரு சொன்னாங்கண்ணே. இந்த இஷ்யூ ஜன்னல்ல பாக்கெட் நாவல் அசோகன் சாரை இண்டர்வியூ எடுக்க நானும் போயிருந்தேன் அண்ணே. சொன்னா நம்ப மாட்டீங்கன்னு சாட்சிக்கு போட்டோவே போட்ருக்காங்க பாருங்க இங்க...”



“சூப்பர். இப்டி ரெண்டு ப்ளஸண்ட் சமாச்சாரம் சொல்லிட்டு ஒரு கேக் கூடத் தராட்டி எப்டி..? வாய்யா, போலாம்...”

“கேக் இல்லண்ணே. கிராண்ட் பார்ட்டியே தந்துரலாம். ஏன்னா, இந்த ஆகஸ்ட் மாசத்துல என்னோட மொத மாச நாவல் வெளியாகப் போகுது. ஹி... ஹி... ஹி..”

“வாவ்.... யாரு வெளியிடறாங்க..? எப்ப வருது..?”

“பைனலைஸ் ஆயிருச்சே தவிர, வந்தப்பறம் சொல்லலாம்னு வாயைக் கட்டிருக்காங்கண்ணே. அதுனால வந்ததும் ஒடனே இங்கிட்டு வந்து சொல்லிர்றேன்...”

“சந்தோஷம்டே. ஆக மொத்தத்துல, அங்கிட்டும் இங்கிட்டும் உலாத்துவியே தவிர, ப்ளாக் ஏரியாவுக்கு எண்ட்ரி குடுக்க மாட்டேன்னு சொல்ல வர்ற..? அப்டித்தான..?”

“இல்லீங்ணா. பழைய மாதிரி ப்ளோவுல எழுத முடியுமான்னு கொஞ்சம் பயமா இருக்குங்ணா. நான் நல்லா எழுதி நாலு பேரு பாராட்டினா, “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் வெங்கட் நாகராஜா?” அப்டின்னு அவரு சந்தோஷப்படுவாரு. சரியா எழுதலன்னா, “இதற்காடா ஆசைப்பட்டாய் வெங்கட் நாகராஜா?” அப்டின்னு சொவத்துல முட்டிக்குவாரே.. அத நெனச்சாத்தான்ணே பாவமா இருக்குது...”

“அப்டிச் சொல்லாதீங்க பாலகணேஷ்.. அப்டில்லாம் நடக்காது. அதெல்லாம் எழுதிடுவீங்க. நீங்க யானை மாதிரி...”

“அவ்வ்வ்வ்வ்... அண்ணே, 108 கிலோ இருந்த வெயிட்டை இப்பத்தான் கொறைச்சு 96க்கு வந்துருக்கேன். இன்னும் தீவிரமா இலியானா மாதிரி ஒல்லியானா என்னன்னு யோசிச்சிங். இப்பப் போயி என்னைய யானைன்னு கேலி பண்றீங்களே...”

“அட, உடம்பு சைஸச் சொல்லலய்யா. எழுதற விஷயத்துல சொன்னேன். தயக்கத்தைத் தூர வெச்சுட்டு தைரியமா உள்ள பூந்து அடிச்சு ஆடுங்க. மறுத்துப்  பேசப்படாது. சொல்லிட்டேன்..”

“சரிங்கண்ணே. முன்ன மாதிரி ஒருநாள் விட்டு ஒரு நாள் எழுதாட்டியும் இனிமே வாரம் ஒண்ணாச்சும் போஸ்ட் எழுதிடறேண்ணே. வாங்க, ட்ரீட்டுக்குப் போகலாம்...”

Saturday, July 4, 2015

குறும்(பட) பயண அனுபவம்!!

Posted by பால கணேஷ் Saturday, July 04, 2015
இவனைச் சேர்ந்தவர்கள் குறும்படங்களில் நடிப்பதையும் இயக்குவதையும் ரசித்துப் பார்த்துக் கொண்டும், இயன்ற சமயங்களில் பங்களிப்புச் செய்து கொண்டும் இருந்த இவனுக்குக்கூட குறும்படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தார் துளசிதரன். (என்னா தெகிரியம்!) சரி, அவரே துணிஞ்சப்பறம் நமக்கு என்ன வந்தது என்கிற அசட்டுத் துணிச்சலில் இவன் சம்மதித்தான். சேரநன்நாட்டின் வளமையை, செழுமையை …ஹலோ, இயற்கையைக் குறிப்பிடுகிறேன்… ரசிக்கலாமென்கிற சபலம்தான் இவனுக்கு. சம் என்று சொல்லி மதம் என்று முடிப்பதற்கு முன்னேயே பாலக்காடுக்கு போக, வர மின்வண்டி பயணச்சீட்டை புக் செய்து தந்து அசத்தினார் சகோதரி கீதா ரங்கன். (என்னா திட்டமிடல்!!). சரி, நமக்கு சின்னப் பாத்திரம், இரண்டே வசனங்கள்தானே, சமாளிச்சிரலாம்னு இவனும் புறப்பட்டு சென்னை மத்திய ரயில் நிலையத்திற்கு வந்தாயிற்று.

மின்வண்டிப் பயணங்களில் மேல் இருக்கைதான் பெரும்பாலும் கிடைக்கும் இவனுக்கு. அருகிலேயே மின்விசிறி இருப்பதால் அது வசதி என்றும் தோன்றும். ஆனால் பக்க மேல் படுக்கை வாய்க்கப் பெறுபவர்கள் அபாக்கியவான்கள் என்றொரு திடமான நம்பிக்கை இவனிடம் உண்டு. கால் நீட்டவும் வசதிக் குறைவாய், மின்விசிறிக் காற்றும் எட்டாமல், கழிவறைக்குப் போகிற வருகிற பயணிகள் சத்தத்தையும் சகித்துக் கொண்டு… பெருந்துன்பம்! துரதிர்ஷ்டவசமாக அன்று இவன் அபாக்கியவானாக ஆனான். பக்க மேல் படுக்கையா.. என்று நொந்து கொண்டே கட்டையைச் சாய்த்தால் உறக்கமும் வரவில்லை, மின்வண்டி கிளம்பியும் எதிர் இரண்டு மேல் படுக்கைகளுக்கு ஆட்களும் வரவில்லை.

கட்பாடி.. ஸாரி, காட்பாடி ரயில் நிலையத்தில் வண்டி நின்றபோது இரண்டு சேரநன்நாட்டிளம் பெண்கள் வந்து மேல் படுக்கைகளை ஆக்ரமித்தனர். இவன் கண்படும்படி எதிரே இருந்தவளின் பெயர் ஆஷா என்று மற்றவள் அழைத்ததிலிருந்து தெரிந்தது. மலையாளத்தில் அம்சா என்றால் அம்சை, உஷா என்றால் உஷை என்று அழைப்பார்கள். அப்படிப் பார்த்தால் ஆஷை!!! ஹா.. ஹா… ஹா.. இரண்டு மனோஹரமாய பெண்குட்டிகளும் நான்ஸ்டாப் மலையாளத்தில் மூக்கால் சம்சாரித்துக் கொண்டிருக்க, இவன் ரசித்து, பின் சற்றே யோசித்து, “நிங்ஙள் எவிட இறங்குன்னது?” என்று கேட்க, ஒரு மாதிரியாகப் பார்த்தபடி “ட்ரிவாண்ட்ரம் அங்கிள்” என்றது ஆஷை. “எனிக்கு ஒரு சகாயம் வேண்டே. சப்போஸ் ஞான் உறங்கிட்டெங்கில் என்னை பாலக்காட்டில் இறப்பிக்குமோ..? இதானு பர்ஸ்ட் டைம் ட்ராவல்” என்றான் இவன். “கண்டிப்பாச் சொல்றேன் அங்கிள்.. அதுக்காக தயவுபண்ணி மலையாளத்தைக் கொல்லாதீங்க ப்ளீஸ்” என்று ஆஷை ஸ்பஷ்டமாகத் தமிழில் சொன்னதும் முகத்தில் லிட்டர் கணக்கில் அசடு வழியப் படுத்துறங்கி விட்டான் இவன்.

வாக்குத் தவறாத அந்த வனிதை, சரியாக காலை நான்கு மணிக்கு எழுப்பி விட்டாள் - “இதான் பாலக்காடு ரயில்நிலையம் அங்கிள்” என்று. நன்றி சொல்லி இறங்கி வெளியே வந்தால், பாலக்காடு இவன் நினைத்த மாதிரி பெரிய ஸ்டேஷன் இல்லை. தம்மாத்தூண்டாக இருந்தது. (ஊரே பெரிய சைஸ் கிராமம் போல்தான் என்று பிறகு சொன்னார்கள்). ஸ்டேஷனை விட்டு இறங்கியதும் கோவை ஆவியின் தொலைபேசிக்கு அழைத்தான் இவன். அவன்தான் வந்து இவனை அழைத்துச் செல்வதாக ஏற்பாடு. எங்கே அவன் நம் ‘இலக்கியக் காட்டாறு’ போல ஒலிக்கும் தொலைபேசியைக் கவனிக்காமல் விட்டால் என்ன செய்வது என்றொரு பயம் இவனுள் இருந்தது. நல்லவேளையாக ஆவி, உடனே எடுத்துப் பேசினான். “இதோ கிளம்பிட்டன்” என்றான். பொழுதைப் போக்க எதிரிலிருந்த கடையில் ஒரு குளம்பி பருகினான் இவன்.

பத்து நிமிடங்களின் இறப்பில் இவனின் கைபேசி ஆவி அழைப்பதாகச் சொல்ல, உயிர்ப்பித்தான் இணைப்பை. “சார், நான் வந்துட்டேன். எங்க இருக்கீங்க?” என்றான் ஆவி. “ஸ்டேஷன் வாசல்லயேதானடா இருக்கேன்..” என்றான் இவன். “ஓ… அந்தப் பக்க கேட்ல எறங்கிட்டீங்க போல.. இருங்க, சுத்தி வரேன்” என்றான் ஆவி. காத்திருப்பில் கழிந்த இரண்டு நிமிடங்களின் பின் இவன் ஆவியை அழைத்து, “எங்கடா இருக்க..? இவ்ளவு நேரமா இந்த கேட்டுக்கு வர..?” என்று கேட்க, “ஸார், இங்க இருக்கற ரெண்டு கேட்டையும் பாத்தாச்சு. நீங்க இல்ல… பக்கத்துல எதாவது லாண்ட் மார்க் சொல்லுங்க..” என்று ஆவி சலித்துக் கொள்ள, இவன் கண்ணில் பட்ட அருகாமை லாட்ஜ் பெயரைச் சொல்லி, அழைப்பைத் துண்டித்தான். இரு நிமிடத்தில் மீண்டும் ஆவியின் அழைப்பு. “ஸார், அப்டி ஒரு லாட்ஜே இங்க இல்லங்கறாங்க. நான் ஆலுக்காஸ் ஜ்வல்லரி பக்கத்துல நிக்கறேன். விசாரிச்சு வாங்க..” என்று வைத்துவிட்டான்.

என்னடா இது..? நாம்தான் ராங்சைடில் இறங்கிட்டோமோ என்று இவன் பயந்து நிலையத்தின் படிகளில் ஏறி மறுபுறம் சென்று பார்க்க, அங்கே ஒரு மைதானமும் முட்டுச் சந்தும் போல இருக்க, சாலையே இல்லை. நொந்து கொண்டே மீண்டும் படிகளேறி இந்தப் புறம் மீண்டும் வந்து ஆலுக்காஸை விசாரித்தால் அவிட அந்தக் கடை இல்லையென்றனர். இந்தச் செயல்பாடுகளில் மேலும் ஐந்து நிமிங்கள் கரைந்திருக்க, “இந்தத் தடியன் இப்படிப் படுத்தறானே..?” என்று சலித்துக் கொண்டான் இவன். “எலேய்… நீரென்ன நாகேஷ் மாதிரி ஒடம்புன்னு நெனப்பா..? இந்நேரம் அவனும் உம்மை தடியர்னு திட்டிட்டிருப்பான் வேய்” என்று மனஸ் கொக்கரிக்க, அதன் தலையில் பலமாகத் தட்டி அடக்கினான் இவன்.


இப்போது மீண்டும் கைபேசியை எடுத்து ஆவியை அழைத்தான். அழைப்பு போய்க் கொண்டிருக்க, தான் குளம்பி பருகிய கடையின் போர்டை எதேச்சையாக நிமிர்ந்து அப்போதுதான் கவனித்த (வழக்கமாக சம்சாரத் தாக்குதல் பெறும்) இவன் இப்போது மின்சாரத் தாக்குதல் பெற்றான். போர்டில் ‘ஒலவக்கோடு’ என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. அழைப்பை ஏற்ற ஆவியிடம், “என்னவோ தப்பு நடந்திருக்குடா. இங்க ஸ்டேஷன் வாசல் கடைல போர்டுல ஒலவக்கோடுன்னு இருக்கு. தப்பான ஸ்டேஷன்ல எறங்கிட்டனோ?” என்று புலம்பவாரம்பித்தான் இவன். “இல்ல ஸார். நானும் இங்க டவுட் வந்து விசாரிச்சேன். கோவைலருந்து வர்ற ரயில்லாம்தான் நான் இருக்கற ஸ்டேஷன்ல நிக்குமாம். இது சிட்டி ஸ்டேஷனாம். சென்னைல இருந்து வர்ற வண்டிங்க ஒலவக்கோட்லதான் நிக்கும்னாங்க. இப்ப அங்கதான் வந்துட்டிருக்கேன்.” என்றான் ஆவி.

அடப்பாவிகளா… இப்படி இரண்டு நிலையங்களை வைத்துக் கொண்டு ஏனடா படுத்துகிறீர்கள்..? என்று சலித்துக் கொண்டு இவன் காத்திருக்க மேலும் ஏழு நிமிடங்கள் கழித்து ஆவியானவன் வந்து சேர்ந்தான். நடந்த கூத்துகளை இருவரும் பரிமாறிக் கொண்டு, சிரித்து, மேலும் ஒரு குளம்பி பருகி, தங்க வேண்டிய விடுதியை அடைந்தபோது மணி ஐந்தரையை நெருங்கி இருந்தது. கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நிமிடங்கள் கண்ணாமூச்சு விளையாட்டில் பலியாகி இருந்தன. அறையில் ஒரு குட்டி உறக்கம் போட்டுப் பின் கிளம்பலாம் என்றிருந்த இவன் திட்டத்தில் மண். அவ்வ்வ்வ்… நடந்ததை கீதாவிடமும், இவர்களின் இயக்குனர் துளசியிடமும் விவரிக்க துளசியின் சிரிப்பைப் பார்க்க வேண்டுமே… தெய்வீகச் சிரிப்பையா அவருடையது. படப்பிடிப்பிற்குச் சென்ற இடங்களையும், அங்கே நடந்த சுவாரஸ்யங்களையும் துளசி அவரின் தளத்தில் விரிவாக எழுதிவிட்டார்.

குறும்படத்தில் இவனை நடிக்க வைக்க அவர் பட்ட பாட்டைத்தான் எழுதவில்லை அவர். இவன் சிகையைக் குறுக்கில் சீவி, அதில் சற்றே நீட்சியாக சிறுமுடிகளை இணைத்து நம்பூதிரி ஸ்டைலில் கொண்டையிட்டு, வாளைக் கையில் தந்து குடந்தையாரைக் கொல்லடா என்றால் வசனத்தைச் சரியாகத்தான் பேசிவிட்டு, வாளைச் செருகினான் இவன். “கோபமாப் பாத்து கத்தியால குத்துங்க சார். முகத்துல சிரிப்பு வந்துடுது. அது இருக்கக் கூடாது” என்றார் துளசி. சிரித்த முகமாகவே வாழ்ந்து பழகிவிட்ட இவனுக்கு முகத்தில் சினத்தை வரவழைப்பது பெரும்பாடாக ஆயிற்று. இப்படியாக இரண்டு மூன்று டேக்குகள் எடுத்தபின் ஓகே சொன்னார். மறுதினமும் ஒருமுறை அதே ஷாட்டை எடுத்துப் பார்க்கலாம் என்று ட்ரை பண்ண, அப்போது செய்தது தான் சரியாக ஓகே ஆனது. (அதன் காரணம் ஆவிக்கு மட்டுமே தெரியும். ஹா.. ஹா.. ஹா..)

பாலக்காட்டில் துளசி படப்பிடிப்பை நடத்திய இடங்கள் யாவும் பசுமை போர்த்தியிருந்தன. இயற்கையின் வனப்பை ரசித்தபடி இரு தினங்கள்!! இரண்டாவது தினத்தில் இரவுப் படப்பிடிப்பை நடத்தித்தான் முடிக்க வேண்டிய நிலையை மழை உண்டாக்கிவிட, சென்னை திரும்ப வேண்டிய கட்டாயத்தினால் குடந்தையூரானும் இவனும் மட்டும் குழுவினரிடம் விடைபெற்று விடுதி அறைக்குத் திரும்பினார்கள். சரவணர் ரயிலுக்கு நேரம் குறைவாக இருந்ததால் உடனே கிளம்பிவிட, இவன் சற்று சிரமபரிகாரம் செய்து கொண்டு, ஒன்றரை மணி நேரம் கழித்து ஒலவக்கோடு சென்று மின்வண்டியைப் பிடித்தான். இரண்டு நாள் வேலை செய்த அசதியில் கண்கள் சொக்க, தன் இருக்கையைத் தேடி இவன் அடைந்தபோது, “இப்போதும் நீ அபாக்கியவான் தானடா” என்று கூறி உரக்கச் சிரித்தது விதி. எதிர் மேல் இருக்கையில் இப்போது ஆஷைக்குப் பதிலாக ஒரு ட்ராக்டர் படுத்துக் கொண்டு மூன்றாவது கியரில் ஓடிக் கொண்டிருக்க, விதியின் கூற்றை ஆமோதித்து அவ்வ்வ்வ்வியபடி சென்னை திரும்பினான் இவன்.

POET THE GREAT என்கிற அந்தக் குறும்படம் காண… இங்கே க்ளிக்குக.



Monday, February 16, 2015

கலகக் கோப்பை கிரிக்கெட்

Posted by பால கணேஷ் Monday, February 16, 2015
முன் குறிப்பு : ‘மின்னல் வரிகள்’ தளத்தின் வழக்கத்துக்கு மாறாக இது சற்றே நீண்ட பகிர்வு. பொறுத்தருள்க. (தவறாமல்) படித்திடுக. கருத்தினை உரைத்திடுக.

வாழ்க்கையென்பது மிக வினோதமான ஒரு வஸ்து. நாம் எதிர்பார்த்ததைச் செய்து தொலைக்காது. நாம் சற்றும் எதிர்பாராத விஷயத்தை நிகழ்த்திவிட்டு நம்பைப் பார்த்துச் சிரிக்கும். இதன் வினோதங்களில் ஒன்றுதான் இப்ப நான் சொல்லப் போறது. கிரிக்கெட்ங்கறது ஒரு விளையாட்டு, ஒருத்தன் பந்தை வீசுவான், ஒருத்தன் பேட்டால அடிப்பான், மத்த பேர்லாம் ஓடி ஓடி அதைத் தடுப்பாங்க... இந்த அளவில் மட்டுமே அந்த விளையாட்டுடன் பரிச்சயம் இருந்த நான் விதிவசத்தால் என் பள்ளி நாட்களில் ஒருமுறை அதை விளையாடி அதிலும் மேன் ஆஃப் த மேட்ச் ஆக ஆனேன் என்று சொன்னால் நம்ப முடியுமா உங்களால...? என்னாலயே நம்ப முடியாத ஒரு சமாச்சாரம்தான் அது. ஆளா அப்படித்தான் ஆச்சு. அன்னிக்கு என்ன ஆச்சுன்னா...

ஞாயித்துக்கிழமை காலையில பத்து மணிக்கு கிரிக்கெட்டுக்காக அந்த வாரமும் தவறாம கிரவுண்டுக்குப் போயிட்டேன். நோ.. நோ... கிரிக்கெட் விளையாடப் போனேன்னு நினைச்சிருந்தீங்கன்னா உங்களுக்கு ஃபெயில் மார்க்தான். நான் போனது மரக்கிளைல ஏறி உக்கார்ந்து வழக்கம்போல வேடிக்கை பார்க்க. அன்னிக்கு நான் போறப்ப பசங்க விளையாடாம கூடிநின்னு குசுகுசுன்னு ஏதோ பரபரப்பா பேசிட்டிரூந்தாங்க. என்னப் பாத்ததுமே, “டேய் கிட்டா, கணேஷைச் சேத்துக்கலாம்டா...”ன்னான் அருமைராஜ்.

“டேய் அருமை... வயக்காட்டுக்குப் போயி மல்லாட்டை(கடலை)ச் செடியப் பறிச்சுட்டு ஆளுங்க பாத்தா தலைதெறிக்க ஓடியார வெளையாட்டுக்கு நான் வரலைடா... ஓடி ஓடி மூச்சு வாங்குது. ஆளவுடு”ன்னேன். அதுவரை தலையக் கவுந்துக்கிட்டு யோசிச்சுட்டிருந்த கேப்டன் கிட்டா (கிருஷ்ணமூர்த்தி) என்கிட்ட வந்து என்னை ஏற எறங்கப் பாத்துட்டு, “அதில்லடா... நாளைக்கு முண்டியம்பாக்கத்துக்கு மாட்ச் விளையாடப் போறோம். இந்த நேரம் பாத்து சுந்தருக்கு கடுமையான ஜுரம். ஸோ, அவனுக்குப் பதிலா நீ வர்ற, வெளையாடற...” என்றான். “டேய் எருமை... இப்படியாடா மாட்டி வுடறது?” என்று அ(எ)ருமையிடம் சீறிவிட்டு, “கிட்டா... சுந்தர் செமத்தியா பேட் பண்ணுவான்... எனக்கு பேட்ட எப்படிப் புடிக்கறதுன்னே தெரியாது. என் உருவத்துக்கு வேகமா ஓடவும் முடியாது. (பள்ளிக் காலங்களில் இப்ப இருக்கறதவுட டபுள் சைஸ் மோட்டூவா இருந்தேன்). அதனாலதான் ஃபுட்பால் டீம்லயே என்னை பேக்கியா வெச்சிருக்காங்க. என் அகலத்துக்கு பந்தைத் தடுக்கறதுதான் நல்லாப் பண்றனாம். அதனால நீ வேற யாரையாச்சும் பாருடா”ன்னேன்.

“அதுக்குல்லாம் டயம் இல்லடா. பேட்டை எப்பிடி பிடிச்சு சமாளிக்கறதுன்னு உனக்கு டிரைனிங் தர்றேன் இன்னிக்கு. நீ அதிகம் ஓடல்லாம் வேணாம். உன் அகலத்துக்கு க்ளீன் போல்ட் ஆக்கறது கஷ்டம். சும்மா நீ வந்து ஸ்டம்ப்பை மறைச்சுட்டு டொக்கு போட்டாப் போதும். நானும் தையரத்தையாவும் பாத்துக்கறோம் ரன் எடுக்கறதை”ன்னான். தையரத்தையாவும் (பேரு ஜெயச்சந்திரன். அந்த டைம்ல ‘சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன் தையரத்தைய்யா’ன்ற பாட்டு ஹிட்டாகியிருந்ததால அவன் பேர் இப்படியாயிடுச்சு. ஹி.. ஹி... ஹி...) அவனுக்கு சப்போர்ட்டாப் பேச ஆரம்பிச்சு கடைசில ஒருவழியா என்னைத் தலையாட்ட வெச்சுட்டாங்க. 

கிட்டா, பாபுகிட்ட பவுலிங் போடச் சொல்லிட்டு என் பக்கத்துல வந்து நின்னுக்கிட்டு பந்து எப்படி வரும், பேட்டால எப்படி தடுக்கறது (நீ அடிக்கல்லாம் வேணாம், தடுத்தாப் போறும்) எல்லாம் கத்துக் குடுத்தான். மரத்து மேலருந்து அவங்க ஆடறதப் பாத்து கமெண்ட் அடிச்சு சிரிச்சது எவ்வளவு பெரிய இமாலயத் தவறுன்னு அப்பத்தான் புரிஞ்சது. நான் பேட்டை ஒரு பக்கம் நீட்டினா, பந்து வேற பக்கமில்ல போறது... என் ப்ராக்டிஸ்(?) முடிஞ்சதும் கிட்டாகிட்ட, “டேய் கிட்டா... நான் தேறுவன்னு எனக்கே தோணலடா. வயத்தக் கலக்கற மாதிரி இருக்கு லைட்டா. நான் வரலைடா” என்றேன் பலவீனமாக. “டேய்... ஆளுக்கு அஞ்சு ரூவா போட்டு பெட் கட்டி வெளையாடப் போறோம். ஜெயிக்கற டீம்ல இருக்கறவங்க எல்லாரும் ஜெயிச்சதுல பாதிப் பணத்த ஷேர் பண்ணிட்டு மீதிப் பாதிய மேன் ஆப்த மேட்சுக்கு தரணும். சீரியஸான மேட்ச்ரா. உன்ட்டருந்து பைசா பேறாதுன்னு தெரியும். (என்னா கால்குலேஷன்) உன் பணத்தையும் நாங்க போட்டுக்கறோம். நீ வர்ற... அவ்ளவுதான்...”னு சீறிட்டு போயே போய்ட்டான். யாராவது கோவமாப் பேசினா பணிஞ்சுபோற என் சுபாவம் தெரிஞ்சுதான் கத்திட்டுப் போறான்னு தெரிஞ்சாலும் வேற வழியில்லாம பலியாடு மாதிரி மறுநாள் முண்டியம்பாக்கத்துக்கு அவங்க கூடப் போனேன்.

டாஸ்ல கிட்டா தோத்துட்டான். அவங்க முதல்ல பேட் பண்றோம்னதும் ரொம்ப நிம்மதியாய்ருச்சு எனக்கு. என்னை முன்னாலயும் நிறுத்தாம, பவுண்டரியிலயும் நிறுத்தாம (கேட்ச் புடிக்கற சாமர்த்தியமும் லேது) நடுவால நிப்பாட்டினான் கிட்டா. எதிரணி ஓபனர்கள் ரெண்டு பேரும் வாட்டசாட்டமா கிங்கரன்ங்க மாதிரி இருந்தாங்க. எங்க டீம்ல பாபுவும் சுந்தாவும் நல்லாத்தான் பவுலிங் போட்டாங்க. ஆனாலும் அவங்க ரன் எடுக்கற வேகம் கூடிட்டுத்தான் இருந்துச்சு. நாலு ஓவர்லயே இருவது ரன் எடுத்துட்டானுங்க. (மேட்ச் முடிய ஓவர் கணக்குலாம் கெடையாது. டீம்ல எல்லாரும் அவுட்டாகற வரைக்கும். அடுத்த டீம் அதவிட அதிக ரன் எடுத்துக் காட்டணும்).

 அப்பத்தான் அந்த முதல் திருப்பம் என்னால, என்னையறியாம நடந்துச்சு. மூணு ஃபோர் அடிச்ச அந்தக் கிங்கரன் நாலாவத அடிக்கறதுக்காக பந்தை இழுத்து அடிக்க, அது மின்னல் வேகத்துல என்னை நோக்கி வந்துச்சு. என்ன ஏதுன்னு நான் யோசிக்கறதுக்குள்ள என் வயத்துல ஒரு டமார்... உச்சமான வலியில என் ரிஃப்ளெக்ஸ் அதிவேகமா செயல்பட்டு கையால வயத்தைப் பொத்திகிட்டேன். அடுத்த செகண்ட் கிரவுண்டல பெரிய ஆரவாரம். எல்லாரும் கை தட்றாங்க. ஆமா... பால் என் கைக்கும் வயித்துக்கும் இடையில பத்திரமாப் பதுங்கியிருந்துச்சு. கைய எடுத்து பந்தக் கீழ போட்டுட்டு கண்ல (வலியால) கண்ணீரோட நானும் கை தட்ட, கிங்கரன் என்னை முறைச்சுட்டே வெலகிப் போனான். (நல்லவேளையா அவன் பந்தை இன்னும் கொஞ்சம் கீழயோ, மேலயோ தூக்கி அடிக்காம விட்டானேன்னு எனக்குள்ள ஒரு ஆறுதலும் இருந்தது எனக்கு மட்டுமே தெரிஞ்ச விஷயம். ஹி.. ஹி... ஹி...)

அதுக்கு அப்பறமா வந்தவன் அவனைவிட எமகாதகனா இருந்தான். வர்ற பந்தைல்லாம் ஏறி ஏறி அடிக்க ஆரம்பிச்சான். ரன்னும் அவங்களுக்கு ஏற ஆரம்பிச்சது. பவுலிங்கை மாத்தி மாத்திப் பாத்தும் பிரயோஜனப்படலை. அப்பதான் திடீர்னு கிட்டா என்கிட்ட வந்து பாலை கைலை திணிச்சான். ”நீ ஒரு ஓவர் போடுறா...” ழேன்னு முழிச்சேன். “டேய்... இதென்னடா விபரீத ஐடியா..?நேக்கொரு எழவும் தெரியாதுரா..” அவன் டென்ஷனா, “தெரியும்டா. சும்மா அவன் மூஞ்சைப் பாத்து எறி. அது போறும்... சீக்கிரம் போ...”. முதுகுல கைவச்சுத் தள்ளி விட்டான். 

கையத் தலைக்கு மேல கொண்டு வந்து கிட்டா சொன்னத மனசுல வெச்சுட்டு முதல் பந்த அந்த எ.கா. மூஞ்சை நோக்கி எறிஞ்சேன். அவன் பந்து பிட்சாவும் நெனச்சு பாத்துட்டு இருந்தவன்,  கொஞ்சம் ஏமாந்து, ஆனாலும் சட்னு தடுத்துட்டான் பாலை. ரெண்டாவது பாலும் அதே மாதிரி ஆகவும், எனக்கு புல்டாஸ் தவிர எதும் தெரியாதுன்னு கண்டுபிடிச்சுட்டான் போலருக்கு... மூணாவது பாலை நல்லாத் தூக்கி அடிச்சான். அது பனைமர உசரத்துக்கு எகிறி பவுண்டரி லைனை நோக்கிப் பறக்கறது. அப்பதான் பவுண்டரி  லைன்ல துரத்துல நின்னுட்டிருந்த கிச்சா, பால் வர்ற வேகத்தை கணிச்சு ஓடிவந்து ஏபிடி பார்சல் சர்வீஸ் படத்துல இருக்கற அனுமார் மாதிரி கைய நீட்டிக்கிட்டே தாவறான். அதிசயமா பந்து அவன் கைல ஒட்டிக்கிச்சு. கீழ உருண்டு பந்தைக் கடாசி எறிஞ்சுட்டு குதிக்கறான். அட... விக்கெட்! 

அடுத்த ரெண்டு பந்துலயும் ரெண்டு ரெண்டு ரன் போச்சு. ஆறாவது பந்துல மறுபடியும் துப்பறியும் சாம்பு மாதிரி லக் அடிச்சது எனக்கு. அந்த ஆறாவது பால் (வழக்கம்போல) புல்டாசாக பேட்ஸ்மேன் பக்கத்துல பிட்ச் ஆக, அந்த எடத்துல ஒரு சின்னக் கல் இருந்து பாலோட டைரக்ஷனை மாத்திருச்சு. பால் இண்டிகேட்டரும் போடாம, கையவும் காட்டாம டர்ன் பண்ற சென்னை ஆட்டோக்காரனுங்கள மாதிரி திடீர்னு ரைட் டர்ன் எடுத்து, அவன் பேட்டைத் தாண்டி அவன் முட்டில மோதி கீழ விழுது. மறுபடி எல்லாப் பயலுவளும் கைதட்டறாங்க. என்னடான்னு கேட்டா, அது பேரு எல்பிடபிள்யூவாம். இன்னொரு விக்கெட் எடுத்துட்டனாம் நானு. கிட்டா பல்லெல்லாம் வாயா, “தூள்டா. இனிம அந்த டீம்ல எல்லாம் சொங்கிங்கடா.. சுலபமா கவுத்திரலாம்” என்றான் என்னிடம்.

ரெண்டு விக்கெட்(?) எடுத்துட்டதால மறுபடி என்னை பந்து போடச் சொன்னான் கிட்டா. ஆனா அடுத்த தடவை எனக்கு அதிர்ஷ்டம் அடிக்காததால அவனுங்க அடிச்சானுங்க - பந்தை! ஒரே ஓவர்ல 16 ரன்னான்னு மெரண்டு போயி கிட்டா அதுக்கப்பறம் வெஷப்பரீச்சை எதும் பண்ணாம விட்டுட்டான். அப்படி இப்படின்னு அவனுங்களை சாமர்த்தியமா கிட்டா காலி பண்ணி முடிச்சப்ப டோட்டல் ஸ்கோர் 110 ரன். 

தைய்யரத்தய்யாவும் கிட்டாவும் ஓபனிங் போனானுங்க. கிட்டாவை சுலபத்துல அவுட்டாக்க முடியாது. லூஸ் பாலாப் பாத்துதான் வெளுப்பான். இல்லாட்டி டொக்கு வெச்சு சிங்கிள், டபுள் எடுக்கப் பாப்பான். தைய்யரத்தய்யா அதிரடி ஆசாமி. இவங்க கூட்டணி பல சமயங்கள்ல செம ரன் எடுத்து ஜெயிச்சிருக்கு. அப்டியே யாராச்சும் அவுட் ஆயிட்டாலும் சுந்தர் பாத்துப்பான் பேட்டிங்கை. (இன்னிக்கு அப்படி ஒரு ஆசாமிக்கு சப்ஸ்டிட்யூட் நானு. ஹும்...). அன்னிக்கு மேட்ச்ல அதிர்ஷ்டம் கை கொடுக்கலை. முதல் நாலு ஓவர்ல தைய்யரத்தய்யா செமத்தியா அடிச்சு 18 ரன் எடுத்தான். கிட்டா 5 ரன். அஞ்சாவது ஓவர்ல அந்தக் கிங்கரன் போட்ட பவுன்ஸரை தைய்யரத்தய்யா வீச, பாட்டோட எட்ஜ்ல பட்டு ரெண்டு பனைமர உயரத்துக்குப் பறந்துச்சு பந்து. இத அவனுங்க புடிக்காம வுட்றணுமேன்னு வேண்டிக்கிட்டு இருக்கற போதே அந்த டீம் சுள்ளான் கரெக்டாப் புடிச்சுத் தொலைச்சுட்டான். தைய்யரத்தய்யா அவுட். கிட்டா சைகை காட்ட, என் கைல பாட்டைக் குடுத்து அனுப்புனாங்க. பலியாடு மாதிரி தலையக் குனிஞ்சுட்டே போனேன்.

கிட்டா என் கிட்ட வந்து, “டேய்.. சொன்னது நினைவிருக்கில்ல.. அவுட்டாகாம டொக்கு வெச்சுட்டு ஓடி வந்துரு”ன்னான். அவன் சொல்லித் தந்த டெக்னிக் அது. கிங்கரன் போட்ட பந்தை மரியாதையாக் குனிஞ்சு அது எழும்பறதுக்குள்ள டொக்கு வெச்சுட்டு அதிவேகமா ஓடினேன். அதுக்குள்ள பாதி பிட்ச் ஓடி வந்திருந்தான் கிட்டா. வி.கீப்பர் வந்து பந்தை எடுக்கறதுக்குள்ள அவன் அங்க ரீச். நான் இங்க ரீச். கிரேட் சிங்கிள். அடுத்த ரெண்டு பாலையும் கிட்டா வெளுத்தான். நெக்ஸ்ட் ஓவர்ல முதல் பால்ல நான் சிங்கிள். அவன் போய் தீயா ஒரு ஷாட். இப்படியே சிங்கிள்ஸாவே நான் பண்ணண்டு ரன் தேத்திட்டப்பதான் அது நடந்துச்சு.

அடுத்த ஓவர் போட வந்த கிங்கரன் என்னப் பாத்ததும் ஒரு முடிவோட வந்துருப்பான் போலருக்கு. ஷாட் பிட்சாப் பந்தப் போட, அது எகிறி என் மூஞ்சிக்கு நேர பவுன்ஸ் ஆகி வந்துச்சு. கண்ண மூடிக்கிட்டு பேட்ட நெத்திக்கு நேராத் தூக்கி அதைத் தடுத்தேன். அவ்ளவ்தான் தெரியும். திடீர்னு எல்லாரும் கை தட்டறாங்களேன்னு கண்ணத் தொறந்து பாத்தா... அம்பயர் ரெண்டு கையயும் தூக்கிட்டு நிக்கிறான். சோகமா பேட்ட எடுத்துட்டு கிட்டாவத் தாண்டி நடக்க ஆரம்பிச்சேன். “எங்கடா போற..?”ன்னான் கிட்டா. “அம்பயர் கையத் தூக்கி அவுட் குடுத்துட்டாரேடா... அதான் போறேன்”ன்னேன். “டேய் வெண்ண... மானத்த வாங்காதடா. ஒரு கையத் தூக்கினாத்தாண்டா அவுட். ரெண்டு கையவும் தூக்கினா சிக்ஸர்னு அர்த்தம்டா. நீ அழகா பேட்டால பந்தைத் திருப்பி சிக்ஸர் அடிச்சுருக்க. போய் ஆட்றா...”ன்னான். “இத என்னாலயே நம்ப முடியலயே”ன்னு முனகிட்டே மறுபடி போய் கிரீஸ்ல நின்னேன்.

கிங்கரன் இப்ப வெறியாகி அடுத்த பந்தையும் அதே மாதிரி எறிஞ்சான். நான் தொடவே இல்ல. கிட்டாகிட்டப் போயி, “டேய்... அவன் ஸ்பீடா போடறதக் கூட தடுத்திரலாம் போலத் தோணுது. ஆனா பந்தை வீசறதுக்கு முன்னால பல்லக் கடிச்சுக்கிட்டு வெஸ்ட் இண்டீஸ் பாட்ரிக் பாட்டர்ஸன் போடற மாதிரி எக்ஸ்ப்ரஷன் காட்டறான்டா. அத கட் பண்ணிட்டு சாதாரணமா போடச் சொல்றா”ன்னேன். “அதெல்லாம் நடக்கற காரியமில்லடா. நீ பாட்டுக்கு அப்ப மாதிரி கண்ண மூடிக்கிட்டு சுத்து”ன்னான். சரி, நாம ஆடி செஞ்சுரியா அடிச்சுரப் போறோம்.. ஆவறது ஆவட்டும்னு அடுத்த பந்தை அவன் எறிஞ்சப்ப லேசா பேட்டால திருப்பி வுட்டேன். அது பவுண்டரி..! ஆஹா... இவன இப்படித்தான் சமாளிக்கணும்னு புரிஞ்சுகிட்டதுல அடுத்த ரெண்டு பால்லயும் ஒரு ரெண்டு, ஒரு நாலு ரன்கள். ஆக அந்த ஓவர் முடியறப்ப என் டோட்டல் முப்பது ரன். ஹா... ஹா.. ஹா...

பட்... அந்த சந்தோஷம் ரொம்ப நேரம் நீடிக்கலை. அடுத்த மூணு ஓவர்ல சிங்கிளும் டபுளுமாச் சேத்து இன்னும் அஞ்சு ரன் சேர்த்திருந்த சமயத்துல அவுட் ஆயிட்டேன். அவங்க டீம்ல ஒரு சுள்ளான் ஒருத்தன் இருந்தான்னு சொன்னேன்லியா...? அவன் சரியான சாமர்த்தியசாலி. மொத ரெண்டு பந்தை மெதுவாப் போட்டு அடிக்க வுட்டுட்டு மூணாவது பாலை ஸ்பீடாப் போட்டுட்டான். நான் பேட்டை நகத்தறதுக்குள்ள பந்து ஸ்டம்பை நகத்திடுச்சு. அவ்வ்வ்வ்... பேசாம வந்து ஒக்காந்து ஆட்டத்தை கவனிக்க ஆரம்பிச்சேன். அடுத்து வந்த மூணு பேட்ஸ்மேன்களும் சிங்கிள்ஸ் எடுத்து கிட்டாவைத்தான் அடிக்க விட்டாங்க. கிட்டா நாலும் ஆறுமா வெளுத்திட்டிருந்தான். அடுத்த நாலு ஓவர்கள்ல இன்னும் மூணு விக்கெட்டும் (டொக்கு வெச்சும்கூட) காலி.  அவனுங்க மூணு பேரோட டோட்டல் ஸ்கோர் 5 ரன். கிட்டா மட்டும்தான் ஸ்டெடியா நின்னான். அதுக்கடுத்த ஓவர்ல நாலாவது பால்ல கிட்டா ஒரு பவுண்டரி அடிச்சு 50ஐத் தொட, டீமோட ஸ்கோர் 112 ஆனது. விக்டரி ஷாட். அஞ்சே விக்கெட் இழப்புல கிடைச்ச மகத்தான வெற்றி.

அம்பயர் கிட்டா கிட்ட ஜெயிச்சதுக்கான பணத்தைத் தர, என்னமோ வேர்ல்ட் கப் வாங்கற மாதிரி பெருமையா அத எல்லாத்துக்கும் முன்னால தூக்கிக் காட்டினான் கிச்சா. அம்பயர் அடுத்ததா, “முக்கியமான மூணு விக்கெட் எடுத்ததோட, 35 ரன்னும் சேத்த கணேஷ்தான் மேன் ஆஃப் த மேட்ச்”ன்னத என்னால இன்னிக்கு வரைக்கும் நம்ப முடியல. கிட்டா, கைல பணத்தக் குடுத்துட்டு கை குலுக்கி, “நாளைக்கு நம்ம டீமுக்கு நீ ட்ரீட் தர்ற... முத மேட்ச்லயே மேன் ஆஃப் த மேட்ச் வின் பண்ணதுக்கு”ன்னான். அடுத்த நாள் எல்லாப் பயலுவளுக்கும் குச்சி ஐஸ் வாங்கித் தந்து ‘ட்ரீட்’ வெச்சதுல, கைக்குக் கெடைச்ச மொத்தப் பைசாவும் காலிங்கறதுதான் இதுல உச்சபட்ச சோகம். ஒரு கப் கொடுத்திருந்தாலாவது பெருமையா வெச்சுட்டிருந்திருக்கலாம். நம்ம லக் அவ்ளவ்தான். அவ்வ்வ்வ்...

பின் குறிப்பு : மிகையான கற்பனை கொண்ட கதை என்று நீங்கள் நினைத்தால் அதில் தவறில்லை. ஏனென்றால் என்னாலேயே நம்ப முடியாத, ஆனால் உண்மையில் நடந்த ஒரு விஷயத்தை சற்றே கற்பனை ஜரிகையில் நெய்து இங்கே தந்திருக்கிறேன். ஆகவே இது உண்மைக் கதை. கதை என்று வந்தால் அதில் உண்மையிருக்காது. உண்மையென்று கொண்டால் அதில் கதை விடக்கூடாது. இதில் இரண்டும் கலந்திருப்பதால், உண்மை + கதை என்பதை நீங்கள் நம்பித்தானாக வேண்டும். சில நேரங்களில் உண்மை கதையாகி விடலாம்... சில நேரங்களில் கதை உண்மையாகி விடலாம். இந்த உண்மைக் கதையில்.... ஐயையோ... அதைக் கீழ போடுங்க. நிறுத்திர்றேன்...!

Friday, February 6, 2015

இவனும் ‘இசை’யும்..!!

Posted by பால கணேஷ் Friday, February 06, 2015
ஆர்ப்பாட்டமில்லாத மென்மையான இசை என்றால் இவனுக்கு ரொம்பவே பிடிக்கும். முதன் முதலில் இவன் இசை ரசனையில் ஈடுபட்டது ஏழு, எட்டு வயதில்தான். இவன் அத்தை வீட்டில் அப்போது ஒரு ரெக்கார்ட் பிளேயர் இருந்தது. அதன் சைடில் இருக்கும் கைப்பிடியைச் சுற்றி விட்டால் ரெகார்டு சுழன்று அது பாடும். அதை ஒரு நிதானமான வேகத்தில் சுற்றுகிற அளவுக்குத்தான் கைப்பிடியை லயம் பிசகாமல் சுற்ற வேண்டும். அப்போதுதான் ‘எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே’ என்று பாடும்.

இவனுக்கு லயமாவது, புண்ணாக்காவது... வேகமாகச் சுற்றி விடுவான். ‘எணி எணி பாக மம் இபம் கொடாதே’ என்று விசித்திரமான கீச்சுக் குரலில் அது பாடுவதை ரசித்துச் சிரிப்பான். அப்படியே லீவரைச் சுற்றாமல் விட்டு விட்டால்... போதையில் தள்ளாடுகிறவனின் குரலில் ‘எ...ண்...ணி... எ...ண்...ணி... பா...ர்...க்...க...’ என்று இழுத்துப் பாடிக் கொண்டே சென்று நின்று விடும். அதையும் ரசித்து சிரித்துக் கொண்டிருப்பான் இவன். அத்தை வீட்டுக்காரர்தான் காண்டாகி இவன் புடனியில் தட்டி, ‘‘இப்டில்லாம் இ(ம்)சை பண்ணிணா அது ரிப்பேராயிடும். அதுவுமில்லாம அதுல இருக்கற ஊசி ரெக்கார்டுல ஸ்க்ராட்ச் பண்ணிரும். ஒழுங்கா ஹேண்டில் பண்றா’ என்பார்.

“என்னது...? இதுல ஊசி இருக்கா..? எங்கே?” என்று செந்தில், கவுண்டமணியிடம் கேட்கிற மாதிரி இவன் கேட்பதற்கு பொறுமையாக விடை சொன்வார். “இதோ பாரு... இதான் ஊசி. ரெக்கார்டு சுத்தும்போது தட்டையா சுத்தாம கொஞ்சம் மேடு பள்ளமா சுத்துது பாத்தியா...? அதுல ஊசி உரசறப்ப அதுலருந்து சத்தம் வந்துதான் நமக்கு மியூசிக்கா கேக்குது...”. இவனுக்கு ஒரு எழவும் புரியாட்டியும், எல்லாம் புரிஞ்சுட்ட மாதிரி கெத்தா மண்டையாட்டி வெப்பான். (அப்பவே பந்தா!)

அதன்பின் இவன் அப்பா தவறிவிட, கன்னாபின்னாவென வாழ்க்கை அலைக்கழித்ததில் சில ஆண்டுகள் நோ இசை. பின்னர் சற்று ஸ்டெடியான காலகட்டத்தில் சித்தப்பாவின் வீட்டில் ஒரு ரெக்கார்ட் ப்ளேயரைப் பார்த்தான். இப்போது விஞ்ஞானம் முன்னேறி, மின்சாரத்தால் அதுவே ஸ்ருதி பிசகாமல் சுற்றுகிற அளவிற்கு முன்னேறியிருந்தது. கூடவே ஸ்பீக்கரும் அட்வான்ஸ்டாகியிருந்தது. பாட்டைக் கேட்டல் இனிய அனுபவமாகியிருந்தது இப்போது. 

ஆனால் என்ன கொடுமை...! சித்தப்பா வைத்திருந்தது வெகுசில தமிழ்  இசைத்தட்டுகளே.. பெரும்பாலும் இந்திப்பட இசைத் தட்டுகளாகவே வைத்திருந்தார். ‘வீ டோண்ட் ஹியர் தமிழ் மியூசிக்... ஒன்லி இந்தி மியூசிக்’ என்று கா.நே. செல்லப்பா நாகேஷின் லேட்டஸ்ட் வர்ஷன் போலத் தோற்றமளித்தார் சித்தப்பா இவனுக்கு. கேட்டுப் பார்த்ததில் ஒரு வரி புரியவில்லை. ஆனாலும் விடாப்பிடியாய் ஒவ்வொன்றையும் பலமுறை கேட்டதில் ஆர்.டி.பர்மன் ரொம்பவே மனசுக்குப் பிடித்தவராகிப் போனார். 

அதுவும் ஓராண்டுதான்... மதுரையிலிருந்து கோவை, விக்கிரவாண்டி என்று அண்ணனின் உத்யோக நிமித்தம் ஊர்களும் பள்ளிகளும் மாற, ரெக்கார்ட் ப்ளேயர் பிரியாவிடை பெற்றது. இவன் ப்ளஸ் டூ படித்த சமயம் அண்ணா அப்போது பிரபலமாகிக் கொண்டிருந்த டேப்ரெகார்டர் ஒன்றை வாங்கி வந்தார். நேஷனல் பானாஸோனிக் கம்பெனியின் ஒரிஜினல் மோனோ டேப் ரெகார்டர் அது. ஒற்றை ஸ்பீக்கரில் இசையை இரைக்கும். பின்னாளில் வரப்போகிற விஞ்ஞான விந்தைகளை அந்நாளில் ஊகிக்கிற அறிவை இவன் படைத்திருக்கவில்லை என்பதால் (‘இப்ப மட்டும் படைச்சிருக்கானா’ன்ற உங்க மைண்ட் வாய்ஸ் இங்க கேக்குது... அடங்குங்க... ஹி... ஹி...) அதை மிகவே ஆச்சரியித்து ரசித்தான் இவன் அப்போதிலிருந்து கேஸட்டுகளை வாங்கிக் குவிக்கிற காலம் ஆரம்பமானது. 

அடுத்த சில ஆண்டுகளில் டபுள் ஸ்பீக்கர்கள் வைத்து ஸ்டீரியோ இசை கேட்கிற வசதியுடன் டேப் ரிக்கார்டர்கள் வர ஆரம்பிக்க... மோனோ சவுண்டில் பக்கத்தில் வந்து நின்றிருந்த இளையராஜா ஸ்டீரியோ சவுண்டில் மனசுக்குள்ளேயே சேர் போட்டு உட்கார்ந்து விட்டார். என்னா க்ளாரிட்டி... என்னா சவுண்டு...! அதுல பாதி சத்தம் வைச்சாலே அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க சண்டைக்கு வர்ற அளவுக்கு சும்மா அதிர்ந்துச்சுல்ல...

அதை ரசித்துக் கொண்டிருந்த அடுத்த இரண்டாண்டுகளில் அண்ணாவை (பேரறிஞர் அண்ணா இல்லீங்க... இவனோட அண்ணா) அவர் அலுவலகம் சிங்கப்பூருக்கு ஒரு பயிற்சிக்காக அனுப்பி வைத்தது. அவர் வரும்போது ஸோனி வாக்மேன்கள் இரண்டு வாங்கி வந்திருந்தார். ஆஹா... அதில் கேஸட்டைப் போட்டு, இயர்போனினால் ரசித்தபோது... சொர்க்கம்! அத்தனை துல்லிய இசையை அதற்கு முன் இவன் வாழ்நாளில் கேட்டதே இல்லை. வெளியுலகச் சத்தம் எதுவும் இடறாமல். இவனும் வெளியுலகத்தை சத்தத்தால் இடறாமல் நிம்மதியாகக்  கேட்க முடிந்ததில் அத்தனை ஆனந்தம்.

பிற்காலத்தில் இவன் தினமலரில் வேலைக்குச் சேர்ந்து அவர்கள் ஊர் ஊராக இவனை மாற்றல் செய்து பந்தாடிய சமயங்களில் எல்லாம் வாக்மேன் தான் இவனுக்கு உற்ற தோழன். மதுரையில் எலக்ட்ரானிக் சமாச்சாரங்கள் கிடைக்கும் இடமொன்றில் தேடிப்பிடித்து குட்டி ஸ்பீக்கர்கள் ரெண்டு வாங்கியிருந்தான் இவன். அதை வாக்மேனுடன் இணைத்து இயர்போனுக்கு விடுதலை தந்து மெல்லிய சத்தத்தில் (அந்த ஸ்பீக்கரோட அவுட்புட்டே அவ்ளவ்தான்) இசை கேட்பது இவனுக்கும் அறை நண்பர்களுக்கும் வாடிக்கையாகிப் போனது.

அந்த ரிகார்ட் ப்ளேயர்களும், டேப் ரெகார்டர்களும், வாக்மேனும் இப்போது எங்கே போயின என்றெண்ணி பல சமயம் வியப்பதுண்டு இவன். வெறிகொண்டு வாங்கிக் குவித்த கேஸட்டுகள் எல்லாம் ஒரு ஓரமாக ஷெல்ப் நிறையக் குவிந்து கிடப்பதையும், தூசி படிந்து டேப் ரிகார்டர் தூங்கிக் கொண்டிருப்பதையும் பார்க்கையில் பலசமயம் பரிதாப உணர்வு எழும் இவன் மனதில். ஆனாலும் என்ன செய்வது...? பணத்தைத் துரத்த வேண்டியிருக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில், கம்ப்யூட்டரும் ஸ்பீக்கர்களும் இணைந்து எம்பி3 இசைதர வீட்டிலும், வெளியில் செல்கிற தருணங்களில் பேசுவதற்காக கண்டுபிடிக்கப்பட்டு அதைத் தவிர மற்ற வேலைகளுக்கெல்லாம் இன்று பயன்படுத்தப்படுகிற செல்போனும் இயர்போனும் இசையை மட்டற்ற அளவில் வழங்குகிற சூழ்நிலைக்கு ஆட்பட்டுத்தானே இவனும் வாழ வேண்டி இருக்கிறது.

இவன் ரசித்த வயலின் இசை

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி என்கிற ஊர் உங்களுக்கு பரிச்சயமாகி இருக்கும். வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும்போதோ, சென்னையிலிருந்து வெளியூர்களுக்குப் போகிற போதோ பெரும்பாலும் பஸ்கள் பாடாவதி ஹோட்டல்களின் முன்பாக நிறுத்தப்படுவது விக்கிரவாண்டிக்கருகில் உள்ள மோட்டல்களில்தான். இன்றைக்கு ஊரின் முகமே மாறிவிட்டிருக்கிறது. இவன் வாழ்ந்த காலத்தில் ஊருக்கு சற்றுத் தள்ளி நிறைய வயல்வெளிகள் உண்டு. வயல் வரப்பில் உட்கார்ந்து காற்றில் நெல் கதிர்கள் தலையாட்டுதையும், காற்று அதை ஊடறுக்கிற சமயங்களில் எழும் மெல்லிய இசையையும் ரசிப்பது இவனுக்கு மிகப் பிடித்த ஒரு விஷயம். அந்த வயலின் இசைமேல் இவனுக்கு அப்படியொரு காதல். இந்நாட்களில்தான் வயலின் இசையை இவனால் கேட்கவே முடிவதில்லை. அந்த வயலின் இசையைப் பற்றி நிறையச் சொல்லலாம். ஆனா அங்க ஒருத்தங்க பல்லை நறநறன்னு கடிக்கறது இங்க இவனுக்குக் கேக்கறதால உடனே இவன் அப்பீட்டு...!

Monday, July 28, 2014

ஓவியக் கதாநாயகர்கள்...!

Posted by பால கணேஷ் Monday, July 28, 2014
சிறுவர்களின் உலகம் கதாநாயகர்களால் நிரம்பியிருப்பது. விவரம் தெரிய ஆரம்பிக்கிற வயதில் தன் அப்பா செய்வதை போல பேப்பர் படிப்பது, சைக்கிள் ஓட்ட முயற்சிப்பது என்று குழந்தை சிறுவனாக முயற்சிக்கிற வயதில் முதல் ஆதர்ஸ ஹீரோ அப்பாதான். அதன்பின் பள்ளி செல்லத் துவங்கி, உலகத்தை சற்றே அறிமுகம் செய்து கொள்கிற பருவத்தில் டீச்சர், பிறகு திரையில் பார்த்து ரசிக்கும் கதாநாயகர்கள் என்று உருவங்கள் மாறலாம். மாறாதது கதாநாயகன் என்கிற பிம்பம்.

வீட்டில் அப்பாவோ அம்மாவோ நிறையப் படிக்கிற பழக்கத்தை மேற்கொண்டிருந்து, குழந்தைகளையும் அவர்களின் வயதுக்கேற்ற புத்தகங்களைப் படிக்கப் பழக்குகிற பெற்றோர்களைப் பெற்ற குழந்தைகள் பாக்கியவான்கள். அவர்கள் புத்தகங்கள் மூலமும் தங்களுக்கான கதாநாயகர்கள் கிடைக்கப் பெறுவார்கள். மதுரையில் இவன் தன் ஏழாவது வயதிலேயே அப்பாவை இழந்து விட்டதால் அண்ணனும் இவனும் படித்து வளர்வதே போராட்டமாக இருந்த சூழ்நிலையில் இவன் வீட்டினர் புத்தகங்கள் எதுவும் வாங்குகிற நிலையில் இல்லை. டி.வி.எஸ். நகரில் இருந்த சமயம் சமவயதில் பக்கத்து வீட்டில் இருந்த ஆனந்த் பழக்கமானான். அவன் அப்பா கிருஷ்ணாராவ் அவனுக்காக வீட்டில் நிறைய (பெரும்பாலும் தமிழ், கொஞ்சம் ஆங்கிலம்) காமிக்ஸ் புத்தகங்களை வாங்கிக் குவித்திருப்பார். வண்ண வண்ணமாக அழகு கொஞ்சுகிற படங்களுடன் இருக்கும் அந்தப் புத்தகங்களைப் புரட்ட ஆரம்பித்த பொழுதில்தான் இவனுக்குள்ளிருக்கும் வாசகன் விழித்துக் கொண்டான். ஆதர்ஸ கதாநாயகர்களும் மனதினுள் நுழைந்தார்கள்.

அப்பாவுடனும் அப்பா இறந்த பின்னர் தனியாக மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பார்த்த படங்களின் மூலமும் இவன் மனதில் அதுவரை இருந்த ஒரே கதாநாயகன் எம்.ஜி.ஆர்.தான்.  ஆனந்தின் வீட்டில் படித்த காமிக்ஸ்கள் மூலம் ரசனைக்கு உத்தரவாதமளிக்கும் அடுத்தடுத்த கதாநாயகர்கள் அணிவகுத்தனர். கதாநாயகர்களைப் பற்றிச் சொல்வதற்கு முன்... அந்தக் காமிக்ஸ் புத்தகங்களைப் படிக்கப் போனால் ஆனந்து ரொம்பவே அலட்டிக் கொள்வான். ஹோம் ஒர்க் பண்ணணும், அப்பா திட்டுவாரு, புறப்படு என்று விரட்டப்பட  நேரிடும். ஆனந்தை ஆனந்தப்படுத்தி விட்டுத்தான் இவன் ஓசிப் புத்தகம் படித்து ரசிக்க வேண்டிய நிலை. கொடுமைடா சாமி!

மந்திரக் குகை மர்மம், இடியின் மைந்தன் போன்ற மாயாஜால காமிக்ஸ்கள் மனதைக் கவரத்தான் செய்தன. அவற்றில் இடம் பெறும் வீரர்கள் நினைத்தபடி உருமாறும், மின்னலைக் கட்டுப்படுத்தும் போன்ற சாகசங்கள் செய்வது பிரமிப்பைத் தந்தன. (இதையே கொஞ்சம் சஸ்பென்ஸ் சேர்த்துச் சொன்னா அதான் ஹாரிபாட்டர். அதுக்குத் தாத்தால்லாம் தமிழ்ல உண்டுங்க.). ஆனாலும் அந்தந்த கதையுடன் முடிந்து விடுவதால் மனதில் அழுத்தமாக சிம்மாசனமிட்டு அமரவில்லை அவை என்பதே நிஜம். கல்கியில் அப்போது வாண்டுமாமா எழுதும் சரித்திரம் சாகஸம் நிரம்பிய காமிக்ஸ் கதைகளும். ‘நந்து சுந்து மந்து’ போன்று சிறுவர்களை வைத்து எழுதிய கலகல துப்பறியும் கதைகளும் அப்படித்தான்.

முதலில் மனதில் பதிந்த கதாநாயகர் இரும்புக் கை மாயாவி. தன்னுடைய இரும்புக் கரத்தை ஏதாவது ஒரு பிளக் பாயிண்டில் செருகி மின்சாரத்தைத் தனக்குள் பாய்ச்சிக்  கொண்டார் என்றால் அவர் உருவம் கண்ணுக்குத் தெரியாது. இரும்புக் கை மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும். இந்த வசதியைப் பயன்படுத்தி அவர் ஈடுபட்ட சாகசங்கள் அடங்கிய ஒவ்வொரு காமிக்ஸும் பித்துப் பிடித்த மாதிரி துரத்தித் துரத்தி (ஆனந்திடம் கெஞ்சி ஓசிவாங்கி) படிக்க வைத்தன இவனை. (இப்போ வாங்கலாம்னு ஆசைப்பட்டாலும் இவன் குறிப்பிடற ஹீரோக்களோட காமிக்ஸ்ல ஒரு பிரதி கூட பழைய புத்தகக் கடைல கூடக் கிடைக்கலை. அவ்வ்வ்வ்வ்).

மாயாவிக்கு அடுத்தபடியாக மனதில் இடம் பிடித்த கேரக்டர்கள் லாரன்ஸ் அண்ட் டேவிட். லாரன்ஸ் என்பவர் ஜேம்ஸ்பாண்டாக நடித்த ரோஜர் மூர் மாதிரி கம்பீரமாக இருப்பார். டேவிட் என்பர் அதிபலசாலியாக மொட்டைத் தலையுடன் நம்மூரு எஸ்.ஏ.அசோகன் மாதிரி இருப்பார். உளவுத் துறை இவர்கள் இருவரையும் சேர்ந்துதான் கேஸைக் கவனிக்கச்  சொல்லும். ‘பாஸ்’ என்று லாரன்ஸை அழைக்கும் டேவிட் பின்னாளில் இவன் படித்து ரசித்த, இன்றளவும் ரசித்துக் கொண்டிருக்கும் கணேஷ்-வஸந்த்துக்கு முன்னோடியாக இவன் மனதில் பதிந்த ஹீரோக்கள். ஒருவர் புத்திசாலியாக துப்பறிபவர், மற்றவர் அதிரடியாக ஆக்ஷனில் களமிறங்குபவர்கள் என்ற இந்த ஜோடி மிகப் பிடித்தமான ஒன்றாகிப் போனது.

அதன்பின் தினமணி கதிரில் வெளிவந்த ரிப்கெர்பி என்கிற துப்பறிவாளர் மனதைப் பறித்தவர். படிய வாரிய தலையும், இன்னாளில் இவன் அணிந்திருப்பது போன்ற கண்ணாடியும், வாயில் எப்போதும் புகையும் பைப்புமாக ஒரு கல்லூரிப் பேராசிரியர் போலத் தோற்றமளிக்கும் இவர் தான் துப்பறியும் கதைகளில் நிறைய சாகசங்களும் செய்வார். காமிக்ஸாக தமிழிலும் நிறைய வந்திருக்கின்றன.
அதற்கு அடுத்தபடியான மற்றொரு கதாபாத்திரம் சாகச வீரர் ஜானி நீரோ. ஜேம்ஸ்பாண்ட் படங்கள் போல,  தமிழில் அந்த வயதில் பார்த்த சில ஜெய்சங்கர் படங்கள் போல அடுத்தடுத்து சாகசங்கள் தூள் பறக்கும் காமிக்ஸ் கதாநாயகனான இந்த ஜானி நீரோ மனதில் தனியிடம் பிடித்துக் கொண்டார்.

இப்படி மனதில் இடம் பிடித்த காமிக்ஸ் கதாநாயகர்கள் அனைவரைப் பற்றியும் எழுத முற்பட்டால் தொடர்பதிவுகளாக நீளும் அபாயம் உண்டு என்பதால்தான் மனதை அதிகம் ஆக்ரமித்த இந்தக் கதாநாயகர்களை மட்டும் இவன் குறிப்பிடுகிறான். இந்த நான்கு (ஐந்து?) கதாநாயகர்களும் கல்லூரி செல்லும் காலம் வரையிலும் கூட மனதில் நிலைத்திருக்கத்தான் செய்தனர். இப்போதும் நினைத்துப் பார்க்கையில் இவனுக்கு இளம் பருவத்தில் ஓர் இனிய உலாச் சென்று வந்த திருப்தி கிடைக்கத்தான் செய்கிறது. பருவங்கள்தோறும் கதாநாயகர்கள் மாறிக் கொண்டிருந்தாலும், படிக்கிற அவர்களே பின்னாளில் கதாநாயகர்களாக உருவெடுத்தாலும்கூட இளம் வயதில் மனதில் பதிந்த கதாநாய பிம்பங்கள் மாறுவதேயில்லை.

காமிக்ஸ் கதாநாயகர்களை ரசிக்கையில் சினிமாவில் பார்த்து ரசித்த கதாநாயகனையே காமிக்ஸிலும் ரசிக்க முடிந்ததென்றால் அது டபுள் குஷிதானே... அப்படித்தான் அமைந்தது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். துப்பறிவதாக வந்த காமிக்ஸ், அதேபோல வாலிப வயதில் கணேஷ் மட்டும் துப்பறிந்த சுஜாதாவின் முதல் நாவலான ‘நைலான் கயிறு’ நாவலை வஸந்த் கேரக்டரை சேர்த்து படக் கதையாக வந்த ஒரு மாதநாவல் புத்தகம். இவை இரண்டையும் படித்து, ஓவியங்களைப் பார்த்து ரசிக்கையில் கிடைத்த மகிழ்ச்சி இருக்கிறதே... வார்த்தைகளில் கொண்டுவர முடியாத வர்ணஜாலமான ஒன்று.

படித்து ரசித்து சேமித்து வைத்திருக்கும் புத்தகங்களில் பலவற்றை காலத்தின் ஓட்டத்தில் நாம் இழந்து விடுவது அனைவரின் வாழ்விலும் நடக்கிற ஒரு விஷயம். அதுபோல பழைய பொக்கிஷங்களில் இவன் தொலைத்த லிஸ்டில் இந்த காமிக்ஸ்களும் அடக்கம். பின்னாளில் ஊர் ஊராக பழைய புத்தகக் கடைகளில் வேட்டையாடிய போதும் இவை சிக்கவில்லை. அந்த வேட்டைகளின் பலனாக வேறு பல அரிய பொக்கிஷப் புத்தகங்கள் இவனுக்குச் சிக்கின என்பது வேறு விஷயம்.

சில நாட்களுக்கு முன் இணையதளம் ஒன்றில் வாத்யார் துப்பறிந்த அந்த காமிக்ஸ் புத்தகத்தைக் கண்டதும் இவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இவன் பெற்ற இன்பத்தை நீங்களும் அடைய இங்கே க்ளிக்கி அந்தப் புத்தகத்தைத் தரவிறக்கிப் படித்து, பார்த்து ரசியுங்கள். சினிமாவில் பார்த்த வாத்யாரின் சாகஸங்கள் படக்கதையாகப் பார்க்கையில் கிடைப்பது தனி சுகம். கணேஷ் வஸந்த் துப்பறிந்த அந்த படக்கதை புத்தகம் இப்படிக் கிடைக்குமா, இல்லை... கடைசிவரை நினைவுகளில் மட்டுமே தங்கிவிட்ட ஒன்றாகிவிடுமா தெரியவில்லை..!
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube