Friday, May 12, 2017

ஒரு ‘நாய’கன் கதை..!

Posted by பால கணேஷ் Friday, May 12, 2017
நாய் படாத பாடு படுகிறேன்’ என்ற வார்த்தையை என்னிடம் யாராவது சொன்னீர்களோ... நாயில்லை, நான் கடித்துக் குதறி விடுவேன். என் வீட்டில் நாயானது மனுஷப்பாடு பட்டு சொகுசாக இருக்க, நான்தான் அதனால் ‘நாய் படாத பாடு’ பட்டுக் கொண்டிருக்கிறேன். இருங்கள்... இருங்கள்... நாய் என்றா சொன்னேன்..? இந்த வார்த்தை என் சகதர்மிணியின் காதில் விழுந்தால் அது இருக்கும், நான் இருக்க மாட்டேன். ஹி... ஹி.. ஹி... நியாயமாக நான் ராஜேந்திரன் என்று சொல்லியிருக்க வேண்டும். அவள் சூட்டிய நாமகரணம் அது. “ஏம்மா, நாய்களுக்கென்றே ஜிம்மி, டாமி, சுப்ரமணி என்றெல்லாம் பெயர்கள் இருக்கே. அதில ஒண்ணை வைக்கலாம்ல?” என்று கேட்ட என்னை (வழக்கம்போல்) புறந்தள்ளி அவளுக்குப் பிடித்த பெயரான ராஜேந்திரனை வைத்தாள்.

இந்த ராஜேந்திரன் என் வீட்டுக்கு வந்த விதத்தை முதலில் சொல்லியாக வேண்டும். ஓர் (அ)சுபயோக (அ)சுபதினத்தில் என்னருகில் வந்து, “என்னங்க, ஆபீஸ்ல ஆடிட்டிங், இன்னும் ஒரு வாரம் ராப்பகலா வேலையிருக்கும்னு சொன்னீங்களே.... அதுவரைக்கும் எங்கம்மா வீட்டுல போய் இருந்துட்டு வரேன்” என்றாள்.

‘‘ஒரு வாரம் நிம்மதி’’ என்று நான் முணுமுணுத்தது அவள் காதில் விழுந்து தொலைத்தது. ‘‘என்னா...து? என்ன சொன்னீங்க?’’ என்று தோள்கள் ஏறி இறங்க புஸ் புஸ்ஸென்று கோபப் பெருமூச்சு விட்டபடி கேட்டாள்.

‘‘ஐயையோ, நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்ட. ஒரு வாரம் வீட்டு வேலை எதுவும் செய்யாம, நிம்மதியா அம்மா வீட்ல நீ என்ஜாய் பண்ணுவங்கறதைத்தான் சுருக்கமா நான் சொன்னேன்... ஹி... ஹி...’’ என்றேன்.

அடுத்த ஒரு வாரம் சந்தடியில்லாமல் சந்தோஷமாகப் போனது. ஆனாலும் விதி யாரை விட்டது..? அவள் மீண்டும் வந்தபோது அவள் கையில் பிடித்து வந்த அதைக் கண்டு அதிர்ந்து, “என்னம்மா இது?” என்றேன் கண்கள் விரிய. “அம்மா வீட்டுக்குப் பக்கத்து வீட்டு சுமதி ஆண்ட்டி வீட்ல இருந்துச்சு. கேட்டேன். குடுத்துட்டாங்க. ஒரு வயசுக் கொழந்தை. குட்டிங்க இது..” என்றாள்.

“அதுசரி.... ஒரு கன்னுக்குட்டியக் கூட்டிட்டு வந்து நாய்க்குட்டிங்கற. வேண்டாம்மா. எனக்கு நாய்ன்னா அலர்ஜின்னு உனக்குத் தெரியாதா..? இதை திருப்பிக் குடுத்துடு” என்றேன். “ஹும்... நான் ஆசைப்பட்டு ஒண்ணு வாங்கிட்டு வந்தா உங்களுக்குப் பொறுக்காதே...இதே உங்கம்மாவோ, தங்கச்சியோ கொண்டு வந்ததா இருக்கட்டும்..” என்று துவங்கி கமா இல்லாமல் அவள் பேசிய பராசக்தி நீள வசனத்தை இங்கே நான் சொன்னால் நீங்கள் ஓடி விடுவீர்கள். கடைசியில்.... வேறென்ன... வழக்கம் போல, நான் வாயை மூடிக் கொண்டு வெள்ளைக்கொடியைப் பிடிக்க வேண்டியதாயிற்று. ஹி.. ஹி... ஹி..

சரி, அதுபாட்டுக்கு ஒரு மூலையில் இருக்கட்டும் என்று நினைத்ததும் தவறாகப் போயிற்று. அடுத்த நாளே ராஜேந்திரனுக்காக ஷாப்பிங் போய்விட்டு அவள் வாங்கி வந்திருந்தவைகளைப் பார்த்து பிரமித்துப் போய் விட்டேன். நாய்க்குக் கூட இவ்வளவு வெரைட்டியாக சோப், ஷாம்பு, பிஸ்கட் எல்லாம் இருக்கிறதா என்ன? ‘‘என்னதிது... உனக்குக் கூட அழகுபடுத்திக்க இவ்வளவு ஐட்டம்லாம் வாங்கின மாதிரி தெரியலையே...’’ என்றேன். ‘‘சும்மா இருங்க... எப்பப் பாரு கண்ணு போட்டுக்கிட்டு’’ என்றாள். அதற்கு குளியல், அலங்காரம், கழுத்துப் பட்டை என அமர்க்களப்பட்டது. அது சுகமாக உண்டு கொழுத்திருக்க, செலவுகளால் பட்ஜெட் எகிறி என் முழிதான் பிதுங்கிக் கொண்டிருந்தது.

‘‘என்னங்க... நைட்ல ராஜேந்திரன் சரியாவே தூங்க மாட்டேங்குது’’ என்றாள் ஒரு முறை. ‘‘நீ வேணா தாலாட்டுப் பாடித் தூங்க ‌வையேன்...’’ என்றேன் கேலியாக. ‘‘ஏன்... அது பாட்டுக்கு ஒரு மூலைல இருக்கறது பிடிக்கலையாக்கும்? அது ஓடிப் போகறதுக்கு வழி சொல்றீங்க?’’ என்று கோபத்தில் ‌தான் ‘ஸேம் ஸைடு கோல்’ போடுவதை அறியாமல் அவள் பேச, நான் வாய்விட்டுச் சிரித்து விட்டேன். அதன்பின் தானே தாமதமாக விஷயத்தைப் புரிந்து கொண்டு அமைதியாகத் தலையில் தட்டிக்கொண்டு அப்பால் சென்றாள்.

சில நாட்களில் அதைச் சகித்துக் கொண்டு வாழ நான் பழகி விட்டேன் (வேறு வழி?). அதனிடம் ஒரு வினோதப் பழக்கம் இருந்தது. ஒருமுறை என் நண்பன் கௌதம் வீட்டுக்கு வரும்போது பேசாமல் இருந்த அது, அடுத்த மாதத்தில் அவன் ஷேவ் செய்யாத பெருந்தாடியுடன் வந்தபோது மேலே விழுந்து பிடுங்கியதிலிருந்து உறுதியானது அதன் வினோதப் பழக்கம். யார் வந்தாலும் குலைக்கிற அது, தெரிந்தவர்கள், நண்பர்கள் வந்தால் சரிதா அல்லது நான் குரல் கொடுத்தால் அடங்கி விடும். ஆனால் தாடி வைத்த ஆசாமிகள் என்றால் எத்தனை சொன்னாலும் அடங்காது, மேலே விழுந்து பிறாண்டி விடும். போன ஜென்மத்தில் எதுவும் தாடி வைத்த வில்லனால் படாதபாடு பட்டிருக்கிறதோ என்னவோ...?

“என்னங்க... வீட்டு வாசல்ல நாய் ஜாக்கிரதைன்னு போர்டு வெச்சிரலாமா?” என்றாள் என்னவள். “நம்ம தெருவுல எந்த வீட்லயும் நாய் வளக்கலை. ‘தாய் இல்லம்’னு அழகா நான் பேர் வெச்ச வீட்டை எல்லாரும் இப்ப அடையாளம் காட்டறதே ‘நாய் இல்லம்’ன்னு தான். போர்டு வேற தேவைதானா உன் ராஜேந்திரனுக்கு?” என்றேன். நிஷ்டூரமாக என்னை முறைத்துவிட்டு அகன்றாள்.

அதன் வினோதப் பழக்கம் பற்றிச் சொன்னேனில்லையா..?அதனாலயே அவள் ஒருமுறை பாதிக்கப்பட்டு கடைசியாக அதை வாங்கி வந்த இடத்திலேயே சேர்த்து விட்டாள். அது எப்டி நடந்துச்சுன்னாக்க....

அவளுடைய நாய்மாமன், ச்சே, தாய்மாமன் சுந்தரராமன் வீட்டுக்கு வருவதாகப் போன் செய்திருந்தார் அன்று. இவளும் மாமாவுக்காக விசேஷமாய்ச் சமைத்துக் காத்திருக்க, டெய்லி ஷேவ் செய்கிற அவள் மாமா விதிப்பயனாக இம்முறை வந்தார் பெருந்தாடியுடன். வள்ளென்று குலைத்த ராஜேந்திரனை அடக்குவதற்குள், அது கழுத்துப் பட்டியை அறுத்துக் கொண்டு பாய்ந்து அவரைக் கவ்வி விட்டது. சுமார் கால்கிலோ கறியாவது போயிருக்கும் அதன் வாய்க்குள். “ஐயோ, அம்மா” என்று அலறிக் கொண்டு அவர் வாசல் கேட்டைத் திறந்து கொண்டு ஓட, கிடைத்த கறி பற்றாதென்று நினைத்ததோ என்னவோ ராஜேந்திரனும் பின்னாலேயே துரத்தியது.

“என்னங்க மாமாவக் காப்பாத்துங்க...” என்ற மனைவியின் அலறலுக்கு மதிப்பளித்து நானும் பின்னாலேயே,“பிடிங்க... ராஜேந்திரனைப் புடிங்க...” என்று கத்திக் கொண்டு தெருவிலிறங்கி ஓடினேன். எனக்குச் சற்றுப் பின்னால் தன் ஸ்தூல சரீரத்தால் மூச்சுவாங்க, ஓட முடியாமல் ஓடிவந்தாள் அவளும்.

“புடிங்க... அந்த ராஜேந்திரனைப் புடிங்க.” என்று மறுபடி நான் கூவி கை காட்டியபடி ஓட, எதிரே வந்து கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் சட்டென்று மடக்கிப் பிடித்தார்கள் -ராஜேந்திரனை அல்ல- மாமா சுந்தரராமனை. அவர் ஏதோ திருடிக் கொண்டுதான் ஓடிவருகிறார், நானும் நாயும் துரத்துகிறோம் என்று நினைத்த அவர்கள் அடுத்த கணம் அவருக்கு தர்ம அடியை வினியோகிக்கத் துவங்கினார்கள்.

“ஐயோ, அம்மா” என்று டிட்டோவாக மாமா மீண்டும் அலற, நான் சென்று தடுத்தாட் கொண்டேன். “ஏங்க, நாயைப் புடிக்கச் சொன்னா, இப்டியா என் மாமாவப் புடிச்சு அடிப்பீங்க..?” என்றாள் ஓடிவந்ததில் மூச்சு வாங்க.

அடுத்த கணம் வந்ததே கோபம் ஒரு இளைஞனுக்கு... “ஏம்மா, நாய்க்கு வெக்கறதுக்கு வேற பேரா கெடைக்கலை உனக்கு..? மணி, டாமின்னு வெக்கறத விட்டுட்டு ராஜேந்திரன்ங்கற நல்ல பேரைப் போயா வெப்பீங்க..?” என்று அவள் மீது காட்டமாகப் பாய்ந்தான். “எனக்குப் புடிச்ச பேர்னு வெச்சேன். உங்களுக்கென்னங்க வந்தது?” என்று சரிதா அவன் மேல் பாய, “என் பேர் ராஜேந்திரன்ங்க...” என்று அவன் கடுப்பாகிக் கத்த, நான் வாய் விட்டே சிரித்து விட்டேன். ‘இடுக்கண் வருங்கால் நக’ச் சொல்லியிருந்த இரண்டடியாரின் குறளை மீறாமல் கடுக்கண் அணிந்த அவள் மாமாவைக் கண்டு நான் நகைத்ததால் காண்டாகிப் போனாள் என்னவள்


“இனிமே உன் வீட்டுப் பக்கம் காலெடுத்து வெச்சேன்னா நான் சுந்தரராமன் இல்ல, சுரணை கெட்ட ராமன்” என்று துவங்கி மாமா லட்சார்ச்சனை செய்துவிட்டு (அவள் மாமாவாயிற்றே... சுருக்கமாகப் பேசுவாரா என்ன..?) எத்தனையோ சமாதானம் சொன்னாலும் கேட்காமல், திரும்பிப் பாராமல் சென்று விட்டார். எனக்கென்னவோ அந்தச் சம்பவத்துக்குப் பின் எனக்கு ராஜேந்திரனைப் பிடித்துப் போய் விட்டது (ஹி.. ஹி... ஹி...) என்றாலும் அதனாலேயே அவளுக்குப் பிடிக்காமல் போக அதை வாங்கிய இடத்திலேயே திருப்பித் தந்துவிட்டாள். ‘நாயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று பழமொழியைச் சற்றே மாற்றி நிம்மதியாக இருந்து கொண்டிருக்கிறேன் அடியேன்.
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube