Friday, March 30, 2012

மொறு மொறு மிக்ஸர் - 5

Posted by பால கணேஷ் Friday, March 30, 2012
ன் முயற்சியில் சற்றும் மனம் தளராத நீங்கள் ‘மின்னல் வரிகள்‘ தளத்தை ஓப்பன் செய்ய, அதில் வேதாளம் தோன்றி இப்படிக் கேட்டது. ‘‘மதிப்புக்குரியவரே... நகைச்சுவை நடிகர் ஜே.பி. சந்திரபாபு படங்களில் பாடி நடிக்கும் போது சொந்தக் குரலில்தான் பாடி நடிப்பார். ஒரே ஒரு படத்தில் மட்டும் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாட, அதற்கு வாயசைத்து நடித்திருக்கிறார். அது எந்தப் படம், எந்தப் பாடல் என்று தெரிந்திருந்தும் சொல்லாவிட்டால் உங்கள் தலை சுக்குநூறாக வெடித்துச் சிதறி விடும்...’’

நீங்கள்: ‘‘சரியாச் சொல்லிட்டா...? என்ன தருவ?’’ என்க, ‘‘கணேஷ்! நீங்க சொல்லுங்க’’ என்று எஸ்கேப் ஆகிறது வேதாளம். நான்: ‘‘‌என் ராஜ்யத்துல பாதியையும் என் மகளையும் தர்றேன்...’’ (ரெண்டுமே இல்லைங்கற தைரியம்தான். ஹி.... ஹி...)

========================================================
ஐயோ, பாவம் சிங்கம்ன்னு...

ன்னிடம் சில பேர், ‘‘அது என்ன சார் பூதம் என்றெல்லாம் பெயர்?’’ என்று கேட்பார்கள். ‘‘இல்லையப்பா. நான் திருச்சில பிறந்ததால அந்தப் பெயர். தாயுமானவ ஸ்வாமிக்கு சமஸ்கிருதத்தில் ‘மாத்ருபூதம்’ என்று அர்த்தம். இந்த பூதம் என்ற பெயர் எனக்கு மேலும் பொருத்தமானதுதான். அதாவது... நான் பூதம் என்றால் மற்றவர்களை மாத்ர பூதம், நிறைய மாத்திரைகளைக் கொடுக்கறதினாலே மாத்திரை பூதம் என்றும் சொல்லலாம். ஆனால் ஒருநாளும் நான் ஏமாத்தற பூதம் இல்லை’’ என்பேன்.
-‘புன்னகைப் பூக்கள்’ நூலில்
(பஞ்சபூதங்களுடன் எக்ஸ்ட்ரா பூதமாக ஐக்கியமாகிவிட்ட)
 டாக்டர் மாத்ருபூதம்
========================================================

மிழை வளர்க்கறேன்னு சிலபேர் செய்யற கொடுமைங்களைப் பாத்தா அழுகாச்சி அழுகாச்சியா வருது. அதுலயும் அரசியல் போஸ்டர்களை சுவர்கள்ல பாத்தா... ‘வெற்றிப்பெற்ற’ அப்படின்னு தேவையில்லாத இடத்துல ஒற்று சேத்திருப்பாங்க. ஆனா ‘மாநில செயலாளர்’ ‘மாநில பொருளாளர்’ன்னு சேக்க வேண்டிய இடத்துல ஒற்று சேர்க்காம விட்ருப்பாங்க. இதைத் தவிர ஏராளமான ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் வேற! இவங்க இப்படின்னா... பல பத்திரிகை ஆபீஸ்கள்லயும் இந்தமாதிரி கொடுங் காமெடி நடக்கும்.

‘மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் ............. அவர்கள்’ன்னு போடுவாங்க. மின்சாரத் துறையா மாண்புமிகு? ‘மின்சாரத்துறை அமைச்சர் மாண்புமிகு ........... அவர்கள்’ன்னுல்ல நியாயமா வரணும்? ஒரு ரிப்போர்ட்டர் இப்படி எழுதிக் கொடுத்தார். ‘‘பொதுக்குழுவில் தாறுமாறாக பஸ் ஓட்டி 20 குழந்தைகள் அடிபடக் காரணமாக இருந்த பஸ் டிரைவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.’’ அய்யோ... அய்யோ... பொதுக்குழுவுல டிரைவர் ஏன் பஸ் ஓட்டணும்? ‘‘தாறுமாறாக பஸ் ஓட்டி 20 குழந்தைகள் அடிபடக் காரணமாக இருந்த பஸ் டிரைவருக்கு பொதுக்குழுவில் கண்டனம் தெரிவிககப்பட்டுது’’ன்னு வாக்கியம் அமைச்சிருக்கணும். என்னத்தச் சொல்ல? தமில் வால்க!

========================================================

* உலகின் மிகப்பெரிய விமான நிலையம் பீஜிங் நகரிலுள்ள கிஸ்மோடோ விமான நிலையம்தான். 501 சதுரஅடி பரப்பில் வருடத்துக்கு ஐம்பது மில்லியன் பயணிகளை அனுமதிக்கும் அளவில் .இது உருவாக்கப்பட்டுள்ளது.
* பெண்களுக்கு முதலில் ஓட்டுரிமை வழங்கிய நாடு நியூஸிலாந்து.
* கடல்நீரில் இருக்கும் ஆக்ஸிஜனின் சதவீதம் எவ்வளவு தெரியுமா? 85.5%
* உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும நாடு.... இந்தியா!
* பூனை இனத்தில் மிகப் பெரிய விலங்கு புலி!
*இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி கர்நாடக மாநிலத்திலுள்ள ‘ஜோக்’ நீர்வீழ்ச்சி!
*கிளியின் ஆயுட் காலம் - சுமார் 50 வருடங்கள் (மனிதர்க்குத் தோழன்!)

========================================================

பரிதாபப்பட்டு உதவி செஞ்சவனுக்கு...

சுவாமி ----------------ஐப் பேட்டி காண பத்திரிகை நிருபரான என் நண்பன் ராஜா(என்று வைத்துக் கொள்க)வுடன் செல்ல, நான் உடன் சென்றிருந்தேன்.  வரிசையில் நின்றிருககும் போது, முன்னால் கைக் குழந்தையுடன் நின்றிருந்த ஒரு பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தான் ராஜா. ‘‘பிறந்து ஒரு மாசம்தான் ஆயிருககும் போலருக்கு. இவ்வளவு சின்னக் குழந்தையத் தூக்கிட்டு இந்த வெயில் நேரத்துல சாமியாரைப் பாக்க வரணுமாம்மா?’’ என்றான்.

‘‘நீங்க வேறங்க... இந்தக் குழந்தை பிறக்கறதுக்கே ------------------------ சுவாமிதான் காரணம்’’ என்றாள் அவள். ராஜா ஆர்வமாக குறிப்பு நோட்டுப் புத்தகத்தைத் திறந்து கொள்ள, எனக்கும் சுவாரஸ்யம் ஏற்பட்டது.

‘‘அப்படியா? இவரோட உங்களுக்கு எத்தனை நாளாப் பழக்கம்? என்ன பண்ணினார் அவர்ன்னு விளக்கமாச் சொல்லுங்க?’’ என்றான் ராஜா. அவள் சொன்னாள். ‘‘ரெண்டு வருஷம் முந்தி இங்க வந்திருந்தப்ப, ‘உனக்கு இன்னும் ஒண்ணரை வருஷத்துல குழந்தை பிறக்கும்’னு சொல்லி ஆசீர்வதிச்சு, விபூதி கொடுத்தார். அதுனால பிறந்தவன்தான் இவன். அதைத்தான் நான் சொன்னேன்...’’

நான் ‘ஙே!’. ராஜா: அவ்வ்வ்வ்வவ்வ்!

========================================================

மேகம் கவிந்த வானம்
குடைபிடித்து வந்தாள் என்னவள்
குமுறி அழுதது ஆகாயம்!

-எழுதினவர்: நான்தேங்!

========================================================

அதோட பசி  தெரியல... பாவம்!

டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து விட்டால் காவல் துறையிடம் புகார் அளித்து, அவர்களிடமிருந்து லைசென்ஸை தேடித்தர முடியவில்லை என்ற சான்றிதழைப் பெற்று அதை விண்ணப்பத்துடன் இணைத்து ஆர்.டி.ஓ. ஆபீஸில் கொடுத்தால் 55 ரூபாய் கட்டணத்துடன் விண்ணப்பித்த தினத்தன்றே டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்பட்டு விடும்.

-சமீபத்துல என் டிரைவிங் லைசென்ஸ் தொலைஞ்சு போனப்ப, டூப்ளிகேட்டுக்கு என்ன செய்யணும்னு விசாரிச்சப்ப இப்படிச் சொன்னாங்க.
இதுதான் டிரைவிங் லைசென்ஸ் காணாமல் போனால் ‌கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறையாம்! போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து, சர்டிபிகேட் வாங்கி வருவது என்பது புலிப்பால் கறக்கிற வேலைதான். இந்தக் கருமத்துக்கு புதுசாவே டிரைவிங் லைசென்ஸ் வாங்கிடலாம். அததான் செஞ்சேன்!

Wednesday, March 28, 2012

நடை வண்டிகள் - 10

Posted by பால கணேஷ் Wednesday, March 28, 2012

பி.கே.பி.யும் நானும் - 2

 காலை பத்து மணிக்கு ‘ஸ்டார் ஜெராக்ஸ்’ திறக்கும் நேரத்திற்கு சரியாக அங்கே போய் விட்டேன். கல்லூரி மாணவர்கள் நிறையப் பேர் ப்ரிண்ட் அவுட் எடுக்க வந்திருந்ததால் என்னுடைய ப்ரிண்ட் அவுட் கைக்கு வரத் தாமதமாயிற்று. பத்தரை மணிக்கு ப்ரிண்ட் அவுட்டை எடுத்துக் கொண்டு பி.கே.பி.யின் வீட்டுக்கு போய்க் கொண்டிருந்தபோது போன் செய்தார். ‘‘எங்கே இருக்கீங்க?’’ என்று கேட்டார். ‘‘ஆன் த வே ஸார்... அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்’’ என்று விட்டு போனை கட் செய்தேன். ஆனால் அவர் இல்லத்தை நான் சென்றடைந்தபோது மணி 10.55 ஆகிவிட்டது.

ப்ரிண்ட் அவுட்களைக் கையில் வாங்கிக் கொண்டு, ‘‘பத்தரை மணிக்கு வர்றேன்னுட்டு 10.55க்கு வந்திருக்கீங்க. ஏன் லேட்?’’ என்று சற்றே கோபமாகக் கேட்டார்.

‘‘ஸார்... ப்ரிண்ட் அவுட் எடுக்கற இடத்துல லேட் பண்ணிட்டங்க ஸார்... அதான்...’’ என்றேன்.

அவரின் கோப சதவீதம் சற்றே கூடிற்று. ‘‘சரி, லேட்டாச்சுன்னா, ஒரு ஃபோன் பண்ணி எனக்குத் தகவல் சொல்லலாமில்ல..?’’ என்றார்.

‘‘உங்க வொர்க்லதானே இருக்கேன். அதான் முடிச்சதும் நேர வந்துடப் போறமேன்னுதான் ஸார் ஃபோன் பண்ணலை’’ என்றேன் சிறுபிள்ளைத்தனமாக.

அவரின் கோபம் உச்சத்துக்குச் சென்றது. ‘‘எனக்கு பதினொரு மணிக்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு. உங்ககிட்ட ப்ரிண்ட் அவுட் வாங்கி வெச்சுட்டு கிளம்பணும்னு புறப்படத் துடிச்சுட்டிருக்கேன் நான். நீங்க ஃபோன் பண்ணிச் சொல்லியிருந்தா என்னோட வேலைகளை கொஞ்சம் தள்ளிப் போட்டிருப்பேன். பதினொரு மணிக்கு வர்றேன்னுட்டு நான் லேட்டாப் போனா என்னை மதிப்பாங்களா? மத்தவங்களோட நேரத்துக்கு மதிப்புக கொடுக்க கத்துக்கங்க கணேஷ்’’ என்றார் கோபமாக.

இப்டித் தாங்க திட்டினார்...
அதுவரை பத்து மணிக்கு வர்றேன் என்றால் பத்தே காலுக்கு வந்துவி்ட்டு அதைப் பற்றி எந்தக் குற்ற உணர்வுமில்லாமல் ‘டேக் இட் ஈஸி’ என்கிற சராசரித் தமிழனின் மனநிலைதான் எனக்கு இருந்தது. அவர் பேசியது சுருக்கென்று தைத்தது. வலித்தது. இனி எப்போதும், எங்கேயும் சொன்ன நேரத்துக்குத் தாமதமாகப் போகக் கூடாது என்று அந்த நிமிடம் மனதிற்குள் சப‌தமேற்றேன். முதலில் திட்டமிடல் சற்றுக் கடினமாக இருந்தாலும் என்னால் அதை சாத்தியப்படுத்த முடிந்தது. மற்றவரின் நேரத்தை மதித்து சரியான நேரத்திற்குச் சென்று, திட்டமிட்ட நேரத்தில் வேலைகளை முடிப்பதனால் ஏற்படும் நற்பலன்களை அனுபவித்துத் தெரி்ந்து கொண்டேன். ஒரு நேரத்தைச் சொன்னால் சரியாக அந்த நேரத்திற்கு வந்து விடுவேன் என்று பின்னாளில் பி.கே.பி. அவர்களே பாராட்டியிருக்கிறார் என்னை.

ந்தச் சம்பவம் நடந்த சமயத்தில் நான் ஜி.அசோகன் அவர்களின் கம்பெனியிலிருந்து விலகி ‘கல்யாணமாலை’ இதழின் வடிவமைப்பாளனாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ‘கல்யாணமாலை’ நான் சேர்ந்த போது மாத இதழாக இருந்தது, குறுகிய காலத்திலேயே மாதமிருமுறை இதழாகவும், பின்னர் வார இதழாகவும் பரிமாணம் பெற்றது. அங்கே சேர்ந்தபின் பொருளாதார ரீதியில் பற்றாக்குறையிலிருந்து சற்றே விடுபட்டிருந்தேன். ஆயினும் திருப்திகரமான நிலையில் இல்லை. இந்த விஷயத்தை பி.கே.பி. ஸார் மனதில் வைத்திருந்திருக்கிறார். ஒன்றிரண்டு மாதங்களின் பின் ஒருநாள் அவரது அலுவலகம் வரச் சொன்னார்.

திருவான்மியூரில் இருக்கும் அவருடைய அலுவலகத்திற்குச் சென்றேன். ‘‘பூம்புகார் பதிப்பகத்துல சில புத்தக வேலைகளை வெளியிலயும் குடுத்துப் பண்றாங்கன்னு கேள்விப்பட்டேன். உங்களுக்கு ஒரு அறிமுகக் கடிதம் தர்றேன். அங்க போய்ப் பாருங்க...’’ என்று சொல்லி கடிதம் கொடுத்தார். பெரிய பதிப்பகங்களில் சிலர், தாங்களே சொந்தமாக டிடிபி வைத்திருந்தாலும் அதிக ப்ராஜெக்ட்கள் இருக்கும் சமயங்களில் வெளிநபர்களையும் பயன்படுத்திக் கொள்வதுண்டு. நான் பூம்புகாருக்குச் சென்று அதன் மேலாளரைச் சந்தித்தேன். பி.க‌ே.பி.யின் அறிமுகக் கடிதத்திற்கு மேல் வேறு எதுவும் தேவையிருக்கவில்லை. அப்போது கைவசமிருந்த, அவர்கள் அச்சிடவிருந்த பி.கே.பி.யின் ஏழு புத்தகங்களை எனக்குக் கொடு்த்தார்.

ஏழு புத்தகங்கள் என்றால் ஒவ்வொன்றிலும் நான்கைந்து நாவல்கள் இடம் பெறும் பெரிய தொகுதிகள் அவை. ஆகவே அதிகப் பக்கங்கள். அதிகப் பக்கங்கள் என்றால் டிசைன் செய்பவருக்கு அதிகப் பணம். அந்த வகையில் நல்லதொரு தொகை கிடைத்ததில் நான் பொருளாதார ரீதியில் ஆசுவாசமானேன். அதைத் தொடர்ந்து கோவி மணிசேகரனின் பெரிய சரித்திர நாவல்கள் இரண்டையும் பூம்புகாரில் எனக்கு டிசைன் செய்யச் சொல்லித் தந்தார்கள்.

சுபாவின் பதிப்பகத்துக்கு புத்தகங்கள் செய்தபோதும் சரி... பி‌.கே.பி.யின் புத்தகங்களை அவருககாகவும், பூம்புகாருக்காகவும் செய்தபோதும் சரி... எனக்கு ஒரே கல்லி்ல் மூன்று மாங்கனியை அடித்த திருப்தி. டைப்பிங் செய்யும் போது கதையைப் படித்து ரசிப்பது ஒரு கனி. டிசைனி்ங் முடித்து புத்தகத்தை ஒப்படைக்கும் போது அதற்கான பணம் கிடைப்பது இரண்டாவது கனி. புத்தகம் அச்சானதும் எனக்கு ஒரு பிரதி தந்துவிட வேண்டும் என்று நான் முன்பே வேண்டுகோள் விடுத்து விடுவதால் என் கலெக்ஷனுக்கு புத்தகங்கள் சேரும் என்பது மூன்றாவது கனி.

ப்படி செய்கிற வேலையைத் மனத்திருப்தியுடன் செய்கிற வாய்ப்பு இப்படி நான் பழகிய எழுத்தாள நண்பர்களால் கிடைத்தது. பூம்புகார் கொடுத்த புத்தகங்களை முடிக்க சில மாதங்களானது. முடித்தபின் வேறு ஏதாவது தேவை இருந்தால் அழைப்பதாக அவர்கள் சொன்னதால் சிறு இடைவெளி ஏற்பட்டது. இந்த சில மாதங்களில் அவ்வப்போது போனிலும் நேரிலும் பேசி, அவருடன் ‘டச்’சிலேயே இருந்தேன். பூம்புகாரின் புத்தகங்களை முடித்துக் கொடுத்தபின் வேறு வெளிவேலைகள் எதுவும் செய்யாமல் அலுவலக வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். அச்சமயத்தில் மீண்டும் பி.‌கே.பி. அவரது அலுவலகத்திற்கு வரும்படி அழைத்தார்.

நாங்கள் ஒரு புதிய முயற்சியில் ஈடுபடப் போவதைப் பற்றி விளக்கினார். அதில் என்னுடைய பங்கையும் விவரித்தார். அத்துடன் அங்கிருந்த அவரது உதவியாளர்களை எனக்கும், என்னை அவர்களுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்படி அறிமுகப்படுத்தியதில் எனக்கு இரண்டு நட்பு ரத்தினங்கள் கிடைத்தன. அவர்களைப் பற்றியும், அந்த புதிய ‘ப்ராஜெக்ட்’டைப் பற்றியும்...

-தொடர்கிறேன்

Sunday, March 25, 2012

சுஜாதா! பதில்களிலும் ராஜா!

Posted by பால கணேஷ் Sunday, March 25, 2012
சுஜாதாவை நினைக்கும் போதெல்லாம் பிரமிப்புதான் எழும். எல்லா சப்ஜெக்ட்டையும் கையாண்ட இந்த ஆல்ரவுண்டர் ஒரு தீர்க்கதரிசியும் கூட. எம்.எல்.ஏ. கடத்தல் என்கிற விஷயத்தை இவர் ‘பதவிக்காக’ நாவலில் எழுதினார். பின்னாட்களில் நிஜமாகவே தமிழக அரசியலில் அந்தக் கூத்து அரங்கேறியது. மேட்ச் பிக்ஸிங் என்கிற விஷயத்தை ‘கறுப்புக் குதிரை’ கதையில் இவர் எழுதிய சில காலத்தின் பின் பல கிரிக்கெட் பிரபலங்கள் இதில் சிக்கியிருந்தது வெளிப்பட்டு சீரழிந்தார்கள். தவிர, தன் கற்றதும் பெற்றதும் பகுதியில் ‘‘இன்னும் பத்து ஆண்டுகளில் தமிழில் தொடர்கதைகளும், சிறுகதைகளும் வழக்கொழிந்து போகும். Non-fiction தான் ஆட்சி செய்யும்’’ என்று எழுதினார்.இன்றைய தேதியில் அப்படியே!

சுஜாதா குமுதம் இதழின் ஆசிரியராக இருந்த போது எழுதிய கேள்வி பதில் பகுதியும் பிரபலம். வேறு வேறு இதழ்களில் அவர் எழுதிய கேள்வி-பதில் பகுதிகள் புத்தகங்களாக வந்துள்ளன. சுஜாதா ‘அம்பலம்’ இணைய இதழில் சில காலம் ஆசிரியராக இருந்தார்.இணைய வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் அப்போது. நிறையப் பேர் அதைப் படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால், அவர் அளித்த நறுக்-சுருக் பதில்களிலிருந்து எனக்குப் பிடித்தவைகளை ‘அம்பலம் இணைய இதழ் தொகுப்பு’ நூலிலிருந்து தேர்ந்தெடுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


* மீண்டும் எல்லோரும் கூட்டுக் குடும்ப முறையை விரும்புவது போல் தோன்றுகிறதே?
= யார் சொன்னது? மெகா தொடர்களை நம்பாதீர்கள். எல்லாமே பொய். கூட்டுக் குடும்ப அமைப்பை ஃப்ளாட்டுக்கள் வந்தபோதே தாரை வார்த்து விட்டோம்!

* உலகில் நீங்கள் அதிகம் கவலைப்படும் விஷயம் எது? சந்தோஷப்படும் விஷயம் எது?
= நம் குழந்தைகள் சீக்கிரமாக இழக்கும் அறியாமை, நம் குழந்தைகள் சீக்கிரமாகப் பெறும் திறமை!

* இன்னும் ஆயிரம் வருடங்கள் கழித்து ஜாதி, மதங்கள் இருக்குமா?
= ஆயிரம் ஆண்டுகளில் ஜாதி மதங்கள் வேறு வேஷத்தில் இருக்கும்!

* திடீரென்று ஒரு நாள் இப்போதிருக்கும் இமெயில் கம்பெனிகள் எல்லாம் தங்கள் சேவையை நிறுத்தி விட்டால் என்ன ஆகும்?
= சம்பிரதாய மெயிலுக்குத் திரும்புவோம். அவர்களும் வேலையை நிறுத்தினால் ஷெர்ஷா காலத்து குதிரை தபாலுக்குச் செல்வோம்!

* கவிதை எழுத பெண்கள் அவசியமா?
= இல்லை. எழுதாமலிருக்க!

* ஒரு வெற்றிகரமான சினிமா எடுக்க என்ன ஃபார்முலா என்பதைத் தெரிந்து கொண்டீர்களா?
= ‌தெரிந்து கொண்டேன்- ஃபார்முலா எதுவும் இல்லை என்பதை!

* ஹைக்கூ முதல் ‘யாப்பு’ வரை தெரிந்த நீங்கள் ஏன் கவிதை எழுதுவதில்லை?
= ரசிப்பது, படைப்பது - இரண்டும் ‌வெவ்வேறு விஷயங்கள். நல்ல சமையலை எல்லோரும் ரசிக்கலாம்!

* பெண்களுக்கு ஏற்ற உடை என்று எதைச் சொல்வீர்கள்?
= எந்த நேரத்தில் என்பதைச் சொல்லுங்கள்!

* நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். உங்கள் அறிவுரை என்ன?
= ‌இப்போதே பேச விரும்புவதையெல்லாம் பேசி விடுங்கள்!

* உலகில் மிகவும் அத்தியாவசியமான மொழி ஆங்கிலம் என்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
= அந்தப் பட்டியலில் மெளனம், பார்வை, கணினி மொழிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

* வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்களே, வாய்ப்புகள் நல்ல வாய்ப்புகள் என்று எப்படித் தெரியும்?
= நழுவிப் போனதும் தெரிந்து விடும்!

* யார் அழகு? ஆண்களா? பெண்களா?
= ஆண்களக்கு பெண்கள். பெண்களுக்கு பெண்கள். முக்கியமாக கண்ணாடியில் தெரியும் பெண்!

* எந்த மொழியிலும் இல்லாத சில சொற்கள் தமிழில் புகுந்து வருவது தமிழுக்கு பின்னாளில் பிரச்சனையாகாதா? (உதாரணம்: அசால்ட்)
= உடான்ஸ் கதைகளையெல்லாம் நம்பாதீர்கள். இவ்விஷயத்தில் அசால்டா இருந்தா தப்பில்லை. மனதில் உள்ளதை தெளிவாக கடத்தினால் போதும்!

* ஆண்கள், பெண்கள் - பொய் பேசுவதில் யார் கில்லாடி?
= பொய் பேசுவதில் கில்லாடிகள் ஆண்கள். அதை சட்டென்று கண்டுபிடிப்பதில் கில்லாடிகள் பெண்கள்.

* வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருப்பதால் பலன் கிடைக்குமா?
= கிடைக்கும்- விரத சாமான்கள் விற்பவருக்கு!

* கவிஞர்களுக்கு மட்டும் எப்படி கற்பனைகள் விதவிதமாய் வருகின்றன? எவ்வளவு யோசித்தாலும் எனக்கு எந்தக் கற்பனையும் வரமாட்டேன் என்கிறதே, இதை எப்படி வளர்த்துக் கொள்வது?
= கல்யாணராமன், நீங்கள் பாக்கியம் செய்தவர். கற்பனை இல்லாதவர்களுக்கு அதற்குப் பதிலாக நிம்மதி கிடைக்கும்!

* எந்த நம்பிக்கையில் நாம் இன்னும் ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறோம்?
= வேதாளத்தை மரமிறக்கிய விக்ரமாதித்தன் கதையைப் படித்த நம்பிக்கையில்தான்!

* லஞ்சம் வாங்காத அரசு ஊழியர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
= வழக்‌கொழியும் அபாயத்தில் உள்ள, பாதுகாக்க வேண்டிய உயிரினம்!

* வாழ்க்கையில் நீங்கள் கற்றதிலேயே முக்கியமான விஷயம் என்று எதைக் கருதுவீர்கள்?
= கற்றது போதாது என்பதை!

* கடவுள் கொள்கையில் உங்கள் தெளிவான முடிவு என்ன?
= கடவுள் இருக்கிறார். கடவுள்கள் இல்லை!

* தமிழன் என நினைத்து நீங்கள் கர்வப்பட்டது எப்போது?
= சங்க இலக்கியங்களைப் படிக்கும் போது!

* காதலுக்கும் தாடி வளர்ப்பதற்கும் என்ன தொடர்பு?
= காதலைத்தான் வளர்க்க முடியவில்லை, தாடியையாவது வளர்க்கலாமே என்கிற எண்ணம்தான்.

Friday, March 23, 2012

அர்த்தமுள்ள திருமண மந்திரங்கள்!

Posted by பால கணேஷ் Friday, March 23, 2012
ந்துத் திருமணங்கள் என்பவை விரிவான சடங்குகளைக் கொண்டு செய்யப்படுபவை. அவை யாவும் அழகானவை; அர்த்தமுள்ளவை; மங்கலமானவை. திருமணங்களில் சொல்லப்படும் மந்திரங்களின் மூலம் ரிக் வேதமே. இந்துத் திருமணச் சடங்குகளில் இடம் பெறும் மந்திரங்கள் பெரும்பாலும் இறையைப் பணிவதாகவும், மேன்மையான செய்திகளைத் தாங்கியதாகவும், தனிமனித உறுதிமொழிகளாகவும் இருக்கின்றன. ஆனால் அந்தணர்கள் இந்த வடமொழி மந்திரங்களை எக்ஸ்பிரஸ் வேகத்தில் உச்சரிப்பதனால் நமக்குத்தான் அதன் உட்பொருள் சரிவரப் புரிவதில்லை. நான் அறிந்த வரையில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் செய்யப்படுவது விக்னேஸ்வர பூஜை. ‘கண’ என்றால் குழு. ‘பதி’ என்றால் தலைவன். எனவே கணபதி என்கிற மனிதக் குழுக்களுக்குத் தலைவனை வணங்கி, ‘கணானாஹந்த்வா கணபதிம்’ என்கிற மந்திரத்தில் துவங்கி கணபதி பூஜை நடககிறது. கோள்களின் சுழற்சித் தாக்கம் பூமியைப் பாதிக்கிறது என்கிற பட்சத்தில் மனிதர்களின் வாழ்வில் அவற்றின் தாக்கம் இல்லாதிருக்குமா? எனவே அடுத்ததாக நவக்கிரக பூஜை.  பிறகு விரதம். மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் கையில் காப்பு கட்டப்பட்டு அவர்கள் அக்கினியைத் தொழுகிறார்கள்.

அடுத்தது சங்கல்பம். மேன்மையான நோக்கங்களை நிறைவேற்ற உறுதி பூணுவதற்குப் பெயர் சங்கல்பம். அறவழியில் வாழும் மக்கட் செல்வத்தைப் பெறுவதே திருமணத்தின் நோக்கம். இல்லறத்தாரின் கடமை தர்மத்தைக் கடைப்பிடித்தல் மற்றும் நன்மக்கள் பெறுதல். அதற்காக சங்கல்பம் செய்யப்படுகிறது.  மணப்பெண்ணின் தந்தை மாப்பிள்ளையை விஷ்ணுவாகவே பாவித்து அவன் திருவடிகளைக் கழுவுகிறார். அதற்குப் பதிலாக மாப்பிள்ளை சொல்லும் மந்திரம்: ‘‘என் காலைத் தொட்ட இந்தப் புனித நீர் என் அக எதிரிகளைத் தூளாக்கட்டும். நான் இறையொளியில் தேஜஸ்பட்டுத் திகழ்வேனாக!’’ பெண்ணின் தந்தை சொல்கிறார்: ‘‘ஓ, விஷ்ணுவின் வடிவே! இதோ உங்கள் ஆசனம்! உங்களுக்கு என் இனிய வரவேற்பு!’’


பின் கன்யாதானம்! பெண்ணின் தந்தை மாப்பிள்ளையிடம் சொல்கிறார்: ‘‘இதோ, என் மகளை உமக்கு வழங்குகிறேன். இவள் எல்லாக் குணநலன்களும் பொருந்தியவள். இனிய இயல்புடையவள். அறிவில் தெளிவுடையவள். அணிகலன்கள் பூண்டு நிற்கும் இவள் உமது அறம், செல்வம், அன்பு அனைத்துக்கும் காவலாக இருப்பாள்...’’ மாப்பிள்ளை மணப்பெண்ணை ஏற்றுக் கொண்டு மும்முறை உறுதி சொல்கிறார்: ‘‘இன்பத்திலும் துன்பத்திலும் இப்பிறப்பிலும் இதற்கப்பாலும் என்றென்றும் நான் இவளது துணைவனாக இருப்பேன்!’’ என்று. மணப்பெண் தந்தையின் மடியில் அமர, தந்தை சொல்வது: ‘‘ஓ விஷ்ணுவே! அணிகலன்கள் பூண்ட என் மகளை உமக்கு வழங்குகிறேன். இதன் மூலம் எனது முந்தைய 10 தலைமுறை மற்றும் பிந்தைய 10 தலைமுறை வினைகளிலிருந்து விடுதலை பெறட்டும். எனக்கும் முக்தி கிடைக்கட்டும். அது இவள் மூலம் பிறந்த அறவழியில் நிற்கப் போகும் குழந்தைகளின் மூலம் நிகழட்டும்! அவர்கள் திருமாலையும், திருமகளையும் தொழுது அதன் மூலம் எனக்கு பிரம்மலோகப் பதவி கிடைக்கட்டும். பூமித்தாயும் படைப்பைத் தாங்கும் சக்தியும், எல்லாத் தேவர்களும், அனைத்து உயிரினங்களும் எனது மூதாதையர்கள் முக்தியடையும் பொருட்டு நான் செய்யும் இந்தக் கன்யாதானத்திற்கு சாட்‌சியாய் நிற்கட்டும்!’’ பின் மாப்பிள்ளையிடம், ‘‘பக்தி, செல்வம், ஆசை இவற்றை நிறைவேற்றிக் கொள்வதில் இவளுக்கு இடையூறு நேரக் கூடாது’’ என்க, மாப்பிள்ளை பதிலுக்கு ‘‘நான் அவளுக்கு இடையூறு செய்ய மாட்டேன்’’ என்று மும்முறை உறுதி கூறுகிறார்.

மணமகன் அவள் கழுத்தில் மங்கல நாண் அணிவித்து ஒரு முடிச்சுப் போட, அவனது சகோதரியர் இன்னும் இரு முடிச்சுகளைப் போடுகிறார்கள். மங்கல நாணை அணிவிக்கையில் மாப்பிள்ளை, ‘‘உன்னோடு நான் நீடு வாழ இறையைத் துதிக்கிறேன். இந்த மங்கல நாணை உன் அழகிய கழுத்தில் அணிவிக்கிறேன். எல்லாப் பேறுகளும் பெற்று நீ நூறாண்டு நிறைவான வாழ்க்கை வாழ இறை அருள்வதாக!’’ அதன்பின் அக்னியை நோக்கி அவன் அவளை அழைத்து வரும்போது சொல்லும் மந்திரம்: ‘‘பூஷா தேவதை உன்னை அக்னியின் முன்னிலைக்கு பத்திரமாக அழைத்துச் செல்லட்டும். அஸ்வினி தேவதைகள் என் வீட்டுக்கு உன்னை பாதுகாப்புடன் அழைத்து வரட்டும். பல மங்கலமான செயல்களில் என்னைத் தூண்டப்போகும் பெண்ணே! என் வீட்டின் ராணியாக அடியெடுத்து வை!’’

இதற்குப் பின் பாணிக்கிரஹ ணம். மணமகளின் கரத்தைத் தன் கைக்குள் அடக்கிக் கொண்டு மணமகன், ‘‘ஓ பண்புள்ள பெண்ணே! நீ கடவுளர்களுக்குச் சொந்தமான செல்வம். அவர்கள் கருணை மேலிட்டு நான் இல்லறம் பேணுவதற்காய் உன்னை எனக்கு அளித்துள்ளார்கள். முதுமையிலும் நாம் பிரியாமல் நீடு வாழ்வோமாக! உன் திருக்கரம் பற்றியே நான் இல்லறம் எனும் நிலைவாயிலில் நுழைகிறேன். முன்னோடிகளான பகன் மற்றும் அக்னியின் ஆசிகள் எனக்குண்டு’’ பிறகு சரஸ்வதி தேவியையும், வாயுவையும் தொழுகிறார்கள். பின் இருவரும் அக்னியை வலம் வருகிறார்கள்.

மணமகளின் பாதம் தொட்டு, மெட்டி அணிவித்து ஏழு அடிகள் அவள் எடுத்து வைக்க உதவுகிறான் மணமகன். இது ‘சப்தபதி’ எனப்படுகிறது. அப்போது சொல்லும் மந்திரம்: ‘‘ஓரடி எடுத்து வைத்ததுமே என் துணைவியாகி விட்டாய். இதன் மூலம் உன் நட்பைப் பெற்றேன். முதலடி நிறைவான உணவுக்காக. இரண்டாம் அடி எல்லாவிதமான செல்வங்களுக்காகவும். மூன்றாம் அடி தன் முயற்சிகளில் வெற்றிக்காக. நான்காம் அடி இன்பங்களுக்கும் வசதிகளுக்குமாக. ஐந்தாம் அடி கால்நடைச் செல்வத்துக்காக. ஆறாம் அடி எல்லாப் பருவ நிலைகளிலும் நலமோடு வாழ்வதற்காக. ஏழாம் அடி அக்கினியை எழுப்பி வேள்விகள் செய்யும் பேற்றுக்காக. நாராயணன் உன்னருகே இருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக! என்னோடு ஏழடிகள் எடுத்து வைத்தாய். என் துணை நீ. இப்போதிலிருந்து நாம் நண்பர்கள். இந்த நட்பிலிருந்து என்றும் விலகாதிருப்போம். சேர்ந்தே வாழ்வோம். எந்த முடிவையும் சேர்ந்தே எடுப்போம். எதையும் இணைந்தே செய்வோம். ஒருவர் மீதொருவர் அன்பு கொண்டு, ஒருவருக்கொருவர் ஆசையோடு உணவையும் செல்வத்தையும் ஒரேவிதமாய் பகிர்ந்து கொண்டு ஒரே மனத்துடன் வாழ்வோம். ஒரே நோக்கத்தோடே விரதங்களை கடைப்பிடிப்போம். நீ கவி‌தை-நான் கானம், நீ தொடுவானம்- நான் அதைத் தொடும் பூமி, நான் உயிர்விதை வழங்குவோன்- நீ அ‌தையேந்தும் பாத்திரம், நான் மனம்- நீ சொல்! என்னுடன் நட்பாக இருப்பாயாக! இன்சொல் ததும்பும் பெண்ணே, வா... செல்வமும் நன்மக்களும் பெறுவோம்!’’

அதன்பின் ஹோமம் செய்யப்படும்போது சொல்லும் மந்திரங்கள்: ‘‘இதுவரை இவளைக் காத்தருளிய தேவர்களுக்கு வந்தனம். இந்தக் கன்னி தனது வீட்டிலிருந்து கணவன் வீடு புகுகிறாள். இளவயதுக்குரிய பிணிகளெதுவும் இவளிடம் இல்லாது போகட்டும்! தனது தந்தை வீட்டின் பந்தத்திலிருந்து விடுபட்டு தன் கணவன் வீட்டில் எல்லாரோடும் புதிய சொந்தம் ஏற்படுத்திக் கொள்ளட்டும்! இந்திரனே! இவளக்கு எல்லாப் பேறுகளும் இனிய குழந்தைகளையும் வழங்குவாயாக! இவளுக்கு 10 குழந்தைகளை வழங்கி என்னை 11வது குழந்தையாக்கி இவள் பேணி வளர்ப்பாளாக! சூரியனே, எங்கள் குழந்தைகள் எதுவும் அகால மரணம் அடையாதபடி காப்பாயாக. அக்கினியே, ஆபத்துகளிலிருந்து அவளைக் காப்பாயாக. அவளுக்கு நீண்ட ஆயுளைத் தருவீராக. மழலை பேசும் குழந்தைகளோடு கொஞ்சி விளையாடும் பேற்றை அவளுக்கு அருள்வீராக! ஓ, மணமகளே! உன் வீட்டில் என்றும் துயரமில்லாமல் போகவும், நீ கணவனையும் குழந்தைகளையும் ஒரு போதும் பிரியாமலிருக்கவும் அக்கினிக்கு இந்த ஆஹுதியை வழங்குகிறோம். எல்லாத் தேவர்களும் உன்னைக் காப்பார்களாக!’’’

மணமகளை அம்மியை மிதிக்கச் செய்து, மணமகன் சொல்வது: ‘‘இந்த அம்மியின் மீது ஏறி நிற்பாயாக! உன்னை எதிர்ப்பவர்களை வலிமையுடன் எதிர்கொள்வாயாக! அதே நேரத்தில் எதிரிகளுடன் கருணையுடனும் நடந்து கொள்வாயாக! ’’  சப்த ரிஷிகளிலே வசிஷ்டரின் மனைவியான அருந்ததி அண்டவெளியில் நட்சத்திரமாய் மின்னுகிறார். அந்த அன்னையின் அருள் பெற வேண்டி பார்க்கச் சொல்லும் ஐதீகத்தின் போது சொல்லப்படுவது- மணமகன், ‘‘ஏழு முனிவர்களும் வசிட்டரின் மனைவியான அருந்ததியே சாலச் சிறந்தவள் என்று அறிவித்தார்கள். அதை மற்ற ஆறு மனைவியரும் ஏற்றுக் கொண்டார்கள். அதேபோல என் மனைவியும் கற்பில் தலைசிறந்தவள் என்று கருதப்பட்டு எட்டாவது தாரகையாய் மின்னட்டும்’’ என்று பிரார்த்திக்கிறான். இதன்பின் மணமக்கள் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கிறார்கள். ‘‘ஓ துருவனே! உறுதியான இடத்தில் வசிக்கிறாய் நீ. உறுதியாக இருக்கிறாய். நீ உறுதியின் ஊற்று! வாழ்வில் உயிரின் உறுதிக்கு நீயே பொறுப்பு. நட்சத்திர மண்டலங்களின் அச்சாணி நீ. உறுதியைத் தாக்கும் எதிரிகளிடமிருந்து எம்மைக் காப்பாற்று!’’

பெண் புதிய வீட்டுக்குள் நுழையும் கிருஹப்பிரவேச சடங்கின்போது சொல்லப்படும் மந்திரங்கள்: ‘‘கந்தர்வர்களும் அப்சரஸ்களும் இவள் மீது எல்லா நலன்களையும் பொழிவார்களாக! உனக்குப் புதிதான இந்த வீட்டில் நீ உன் கணவனோடு மகிழ்ச்சியாகவும் மக்கட் செல்வத்தோடும் வாழ்க. இந்த வீட்டில் உன் இல்லறக் கடமைகளில் கவனமாயிரு. உன் தலைவனான கணவனைத் தழுவியிரு. நீங்கள் இருவரும் ஒன்றாகவே வளர்ந்து, இந்த வீட்டின் நியதிகளுக்கேற்ப இதனை நிர்வகிப்பீராக. உன் கணவன் வீட்டின் ராணியாயிரு. உன் நன்னடத்தை மூலம் உன் மாமியார் ம்ற்றும் நாத்தனார்களின் அன்பை வென்று கொள்.’’ பின் மணமகள் சொல்வது: ‘‘வளம் செறிந்த, மங்கலகரமான, வீரர்களால் பாதுகாக்கப்பட்ட, மகிழ்ச்சிமயமான உறவினர்கள், மைத்துனர்கள், அவர்கள் குழந்தைகள் நிறைந்த இந்தப் புதிய வீட்டில் நான் எந்தவிதமான நடுக்கமுமின்றி நுழைகிறேன்!’’ கிரஹப்பிரவேச ஹோமத்தில் மணமகன் சொல்லும் மந்திரம்: ‘‘என் மனைவி வந்து விட்டாள் பரிசுகளோடும், கால்நடைச் செல்வத்தோடும். நிரந்தரமான வேள்வி நீடிக்க, நல்ல குழந்தைகளை அக்கினி தேவன் இவளுக்கு அருள்வானாக!’’

பிறகு இறுதியாக சேஷ ஹோமம் செய்யப்படும். அப்போது மணமகன் சொல்லும் மந்திரம்: ‘‘அக்கினியே! வாயுவே! ஆதித்தனே! பிரஜாபதியே! உங்களைத் தொழுதால் குறைகளும் நிறைகளாய் மாறும். உங்களைச் சரண் புகுந்தேன். தயைகூர்ந்து என்னைக் காக்க வருவீராக. என் மனைவிக்குத் துயரமான வினையெதுவுமிருந்தால் அதைத் தீர்த்தருள்க! உள்ளிருந்து தொல்லை செய்யும் என் எதிரிகளை நீங்கள் தீர்த்துக் கட்டவே இந்த ஆஹுதியை அளிக்கிறேன்.’’ இந்த மந்திரத்தைத் தொடர்ந்து பெரியவர்களிடம் ஆசி பெறுகிறார்கள். திருமணச் சடங்குகள் இனிதே நிறைவடைய இல்லற வாழ்வினுள் அடியெடுத்து வைக்கிறார்கள். வாழி நலம்!

பி.கு: இந்தப் பதிவுக்கான ‘பொறி’யைத் தந்து என்னை எழுதத் தூண்டிய தங்கை ராஜி-க்கு என்  அன்பான கனிவான நன்றி!

Wednesday, March 21, 2012

நடை வண்டிகள் - 9

Posted by பால கணேஷ் Wednesday, March 21, 2012

PKPயும் நானும் - 1

PKP என்று சுருக்கமாக, அன்பாக வாசகர்களால் அழைக்கப்படும் திரு.பட்டுக்கோட்டை பிரபாகருக்கு நான் இதுவரையில் ஒரு வாசகர் கடிதம் கூட எழுதியதில்லை. மாத நாவல்கள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலத்தில், வித்தியாசமான அவரது வர்ணனை நடையாலும், பரத்-சுசிலா கேரக்டர்களி்ன் வார்ப்பினாலும் ஈர்க்கப்பட்டு தொடர்ந்து அவரது எல்லாப் படைப்புகளையும் படித்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் ஏனோ சுபாவிற்கும், ராஜேஷ்குமாருக்கும் எழுதியது போல அவருக்கு வாசகர் கடிதம் எழுதும் எண்ணம் வரவில்லை.

பின்னாளில் சென்னையில் வசிக்கத் தொடங்கிய பிறகு சுபாவின் வீட்டுக்குச் சென்று வரும் சமயங்களில் ஒன்றிரண்டு முறை அவர் என்னை எதிர்ப்பட்டுக் கடந்து சென்றதுண்டு. ஒரு புன்னகையுடன் கடந்து சென்று விடுவேன். பேசத் தோன்றியதில்லை. (கடிதம் எழுதியிருக்கலாம், முன்பே பேசியிருக்கலாம் என்ற எண்ணங்களெல்லாம் பின்னர் தோன்றின.) சுபாவின் சிறுகதைகளை டைப் செய்யும் பணியில் இருந்தபோது என் நண்பன் ஸ்ரீதரன் PKPயி்ன் தீவிர வாசகன் என்பதால் அவன் அவரைச் சந்திக்க விரும்பியதால், அவனுடன் சென்று முதல் முறையாக அவரைச் சந்தித்தேன்.

அந்த முதல் சந்திப்பில் குறிப்பிடத்தக்க விசேஷம் எதுவுமில்லை. சுபாவின் நண்பன் நான் என்பதை அறிந்திருந்த அவரிடம் என்னைப் பற்றிய சுருக்கமான சுய அறிமுகம் செய்து கொண்டு, நண்பனை அறிமுகம் செய்து வைத்தேன். அவரது படைப்புகள் குறித்து சற்று நேரம் பேசினோம். அவரது ‘கனவுகள் இலவசம்’ நாவல் எனக்குப் பிடித்த நாவல் என்று ஸ்லாகித்துப் பேசியதால் அதை ஆட்டோகிராஃபிட்டு எனக்கு அன்பளித்தார். அப்போதுதான் அவர் ‘ரம்யாப்ரியா க்ரியேஷன்ஸ்’ என்று ஒரு பதிப்பகம் துவங்கி அவரது ‘கனவுகள் இலவசம்’, ‘பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்’ நாவல்களை பதிப்பித்திருக்கிறார் என்ற புதிய தகவலை அறிந்து கொள்ள முடிந்தது. மகிழ்வுடன் விடைபெற்றுக் கிளம்பினோம்.

சுபா வீட்டுக்குச் செல்லும்போது அவ்வப்போது அவரைப் பார்த்ததுண்டு என்று சொன்னேனில்லையா... அப்படியிருந்த நாட்களில் ‘குங்குமம்’ பத்திரிகையில் ‘கோமாளி’ என்று ஒரு சிறுகதை எழுதியிருந்தார் அவர். அதன் கதைக் கருவும் அவர் கையாண்டிருந்த விதமும் அசத்திவிட்டது என்னை. உடனே தொலைபேசியில் அழைத்து பத்து நிமிடங்கள் பாராட்டிப் பேசினேன். ‘டச்ல இருங்க’ என்றார் அவர். ஆனால் நான் அப்படி இருக்கவில்லை. பழையபடி என் வேலை உண்டு, சுபா உண்டு என்றுதான் இருந்தேன். அதற்குப் பின் ஒன்றரை மாதம் கழித்து, ‘ஆனந்த விகடன்’ இதழில் ‘ஒரு ஊரில் நான்’ என்ற அவரது சிறுகதையைப் படித்ததும் மீண்டும் பிரமிப்பு. ஒரு எளிமையான கதைக் கருவை எடுத்துக் கொண்டு, மிகமிக வித்தியாசமான ஸ்டைலில் சொல்லியிருந்தார். உடனே ‘ஆத்மா ஹவுஸ்’ ஓடினேன்.

நான் சென்ற நேரம் வெளியே கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தார். ஓடிச் சென்று, ‘‘கை கொடுங்க ஸார்’’ என்று கேட்டு கை குலுக்கினேன். ‘‘ஸார்! ஓவியங்கள்ல அழகான ஓவியங்கள், மாடர்ன் ஆர்ட் ஓவியங்கள்ன்னு ரெண்டு டைப் பாத்திருக்கேன். மாடர்ன் ஆர்ட் ஓவியங்கள் எதையோ உணர்த்தி நம்மை சிந்திக்க வைக்கும். அந்த மாதிரி சிறுகதைகள்ல ‘மாடர்ன் ஆர்ட் சிறுகதை’ன்னு ஒண்ணை இப்பத்தான் பாக்கறேன்...’’ என்று துவங்கி ‘ஒரு ஊரில் நான்’ சிறுகதையை பாராட்டினேன். சுருக்கமாகத்தான். அவர் வெளியே கிளம்பிக் கொண்டிருந்த அந்த அவசரத்திலும் மிக மகிழ்வுடன் என் பாராட்டுக்களை ஏற்றுக் கொண்டார். ‘‘சுபாவுக்கு டிடிபி பண்றதா சொன்னீங்க இல்ல...’’ என்றார். ‘‘ஆமாம் ஸார்... உங்க கூடவும் ஒர்க் பண்ண ஆசை...’’ என்றேன். ‘‘உங்களை எப்படி பயன்படுத்திக்கறதுன்னு நான் ப்ளான் பண்ணிட்டுச் சொல்றேன்...’’ என்றுவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

நான் அதன்பின் அதைப் பற்றி நினைக்காமல் என்‌ வேலை‌களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் PKP வீணாய் வார்த்தைகளை வீசுபவரல்ல என்பது அவருடன் நன்கு பழகிய பின்னால்தான் எனக்குத் தெரிந்தது. அவர் என்னிடம் ‌சொன்னதை மறக்காமல் சுமார் இரண்டு மாதங்கள் கழித்து அழைத்தார். ‘ரம்யாப்ரியா க்ரியேஷன்ஸ்’ சார்பாக மேலும் நான்கு புத்தகங்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகச் சொல்லி அதற்கான வேலைகளைத் துவங்கச் சொன்னார். அவர் செலக்ட் செய்து கொடுத்த கதைகளை வாங்கி வந்து டைப் செய்து ப்ரிண்ட் அவுட் தர, அவரது உதவியாளர்கள் படித்து, பிழை திருத்தி மீண்டும் என்னிடம் தர, பிழைகள் நீக்கிக் கொண்டிருந்தேன்.

புத்தக வடிவமைப்புக்காக அவருடன் பணி செய்தபோதுதான் அவருக்குள் ஒரு ரசனை மிகுந்த வடிவமைப்புக் கலைஞனும் இருப்பது தெரிந்தது எனக்கு. நான் அழகாய் செய்ததை தன் யோசனைகளால் மிக அழகாக்கினார் அவர். எல்லாம் முடிந்து அவர் ஓ.கே. சொன்ன பிறகு, ‘‘நாளைக்கு காலையில இதை ப்ரிண்ட் அவுட் போட்டுக் குடுத்துடுங்க. எப்பத் தருவீங்க?’’ என்றார். நான் பிரிண்ட் போடும் கடை பத்து மணிக்குத்தான் திறப்பார்கள் என்பதால் ‘‘பத்தரை மணிக்கு தந்துடறேன் ஸார்...’’ என்று விட்டு விடைபெற்றேன்.

பி.கே.பி. அவர்களிடமிருந்து நான் கற்றதும் பெற்றதும் மிக அதிகம். மறுதினம் காலையில் நான் சொன்ன நேரத்தில் அவரைச் சந்தித்து ப்ரிண்ட் அவுட்டைத் தர இயலாமல் போயிற்று. அப்போதுதான் அவரிடமிருந்து என்னை மேம்படுத்தும் முதல் விஷயத்தைக் கற்றுக் கொண்டேன். அதைப் பற்றி...

                                                                                                                   -தொடர்கிறேன்.

Monday, March 19, 2012

மொறு மொறு மிக்ஸர் - 4

Posted by பால கணேஷ் Monday, March 19, 2012
ம்முறை மிகவும் சுலபமான இரண்டு புதிர்க் கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன். பதிவின் முடிவில் விடையை வெளியிடப் போவதில்லை. விடை தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். ஆமோதித்து தோளில் தட்டிக் கொடுக்கிறேன். இல்லையெனில், என் தோளில் நானே தட்டிக் கொண்டு, அடுத்த மிக்ஸரில் விடை தருகிறேன். சரியா?

1) சிவப்பு மாளிகை, வெள்ளை மாளிகை, நீல மாளிகை என்று மூன்று மாளிகைகள் இருக்கின்றன. சிவப்பு மாளிகை நடுவிலிருக்கும் மாளிகைக்கு இடது புறத்தில் இருக்கிறது. நீல மாளிகை நடுவிலிருக்கும் மாளிகைக்கு வலது புறத்தில் அமைந்துள்ளது. எனில்... வெள்ளை மாளிகை எங்கே இருக்கிறது?

2) இரண்டு பெண்கள் எதிரெதிராக அமர்ந்து செஸ் விளையாடுகிறார்கள். ஐந்து கேம்கள் விளையாடப்படுகின்றன. இரண்டு பெண்களுமே ஐந்து கேம்களிலும் ஜெயித்திருக்கிறார்கள். எந்த கேமும் ’டை’ ஆகவில்லை. இது எப்படி சாத்தியம்?

======================================================
                                 சைனீஸ் ஹோட்டலா...? வேண்டாம்!

சுபாவின் சிறுகதைகளை கரூரில் இருந்த என் நண்பன் ஸ்ரீதரனோடு சேர்ந்து டைப் செய்ததாக ‘நடை வண்டிகள்’ தொடரில் குறிப்பிட்டிருந்‌தேனல்லவா? ஒருமுறை திருப்பூரிலிருந்து கரூர் சென்று மூன்று நாள் தங்கிய போது அவனிடம், ‘‘ரெண்டு நாளா டைப் பண்ணிட்டே இருந்துட்டோம். இன்னிக்கு நைட் ஏதாவது படம் போலாமாடா?’’ என்று கேட்டேன். அவன், ‘‘இன்னிக்கு நைட் ஹோட்டல்ல டிபன் சாப்ட்டுட்டு படம் பாக்கப் போகலாம் கணேஷ். அம்மாகிட்ட சொல்லிட்டு வந்துடறேன்.’’ என்றான்.

மாலை எட்டு மணி வரை டைப்பிங் செய்து விட்டு சாப்பிடக் கிளம்பினோம். ‘‘ஏதாவது நல்ல ஹோட்டலாப் பாத்துக் கூட்டிட்டுப் போடா’’ என்றேன். அவனுடைய டூ வீலரில் கொஞ்ச தூரம் சென்றதும் கை காட்டினான் அவன், ‘‘கணேஷ், அதான் நாம போகப் போற ஹோட்டல்’’ என்று. பார்த்தேன். தூரத்தில் உயரமான பில்டிங்கின் டாப்பில் ‘ஹோட்டல் நான் ஹினி’ என்று நியான்ஸைன் எரிந்து கொண்டிருந்தது. ‘‘அடேய் பாவி! நான் சுத்த சைவமாச்சுதே! பேரைப் பாத்தாலே சைனீஸ் ஹோட்டல் போலருக்கேடா... ஏண்டா, வேற ஹோட்டலே உனக்குக் கிடைக்கலையா?’’ என்றேன்.

அவன் குழப்பமடைந்தவனாக, ‘‘என்ன சொல்றீங்க கணேஷ்? சுத்த சைவ ஹோட்டலுக்குத் தானே போய்க்கிட்டிருக்கோம்?’’ என்றான். இந்தப் பேச்சுக்கள் நடக்கும் நேரத்திலேயே வாகனம் ஹோட்டலை நெருங்கி விட... இப்போது ஹோட்டலின் போர்டைப் பார்த்த என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அடக் கடவுளே...! அவர்கள் வைத்திருந்த நியான்ஸைனில் ஒரு டியூப்லைட் எரியாததால் 'HOTEL NANDHINI' என்பது எனக்கு 'HOTEL NAN  HINI' ஆகத் தெரிந்து மிரட்டி இருக்கிறது! ஹி... ஹி...!

==================================================

                               உண்மையான சத்தியாக்கிரகம்!

ஜெனரல் ஸ்மட்ஸ்ஸுடைய காரியதரிசிகளில் ஒருவர் தமாஷாக என்னிடம், ‘‘ஆங்கிலேய வேலைநிறுத்தக்காரர்களைப் போல் நீங்களும் இம்சை முறைகளைக் கையாளக் கூடாதா என்று நான் அடிக்கடி விரும்புவதுண்டு. அப்போது உங்களை அடியோடு தொலைத்து விடுவதற்கான வழி எங்களுக்குப் புலனாகும். ஆனால் நீங்கள் எதிரியைக்கூட துன்புறுத்த மாட்டீர்கள். துன்பத்தை அனுபவித்தே வெற்றி பெற விரும்புகிறவர்கள் நீங்கள். நீங்களாக வகுத்துக் கொண்ட வீரம், மரியாதை இவற்றின் வரம்புகளை ஒருபோதும் நீங்கள் மீறிச் செல்வதில்லை. அதுதான் எங்களை முழுவதும் உதவியற்ற நிலைக்குக் கொண்டுவந்து விடுகிறது’’ என்று சொன்னார்.

-‘தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்’  -மகாத்மா காந்தி.

==================================================

ஆ.வி. இதழ் 1960ம் ஆண்டு தீபாவளி மலருக்கு வெளியிட்டிருந்த விளம்பரம் இது. அப்பவே அவங்க தீபாவளி மலருக்கு டிமாண்ட்தான் போலருக்கு... இவ்வளவு கண்டிஷன் போட்ருக்காங்க பாருங்க. விலை 5 ரூபாய் தான்! அவ்வ்வ்வ்வ!

==================================================

                                   மைலாப்பூரில் விவசாயம்!

துரை கோரிப்பாளையத்திலிருந்து நான் சென்னை வந்தபோது என் ஊரிலிருந்து ஒரேயடியாக மாறுபட்ட இடத்திற்கு வந்துவிட்டதாக எண்ணவில்லை. சென்னை அப்போதே வளர்ந்த நகரம்தான். என்றாலும் இப்போது இருப்பதைப் போன்ற நெரிசல் இல்லை. 70களில் நான் இங்கு வந்திருந்தபோது மந்தைவெளி செயிண்ட் மேரீஸ் தாண்டி ராஜா அண்ணாமலைபுரம் பகுதிகளில் விவசாயம்கூட நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆங்காங்கே வீடுகள் இருந்தன. கபாலி தியேட்டர் பக்கம் வாய்க்கால்களில் எல்லாம் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. மைலாப்பூரில் பல இடங்களில் விவசாயம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன்.

நான் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸில் மாணவர்களுக்கு மாடலாக அங்கே பக்கத்துச் சேரியிலிருந்த மக்கள்தான் இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆந்திராவிலிருந்து வந்தவர்கள். தற்போத உள்ள லஸ் ரயில்வே ஸ்டேஷன் இருக்கும் இடத்துக்குப் பக்கத்திலிருந்த ஓடை வழியாக மகாபலிபுரத்துக்கு வைக்கோல் கொண்டு போவதைப் பார்த்திருக்கிறேன்.

-ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் அனுபவங்கள் இவை. ‘சென்னை நம்ம சென்னை’ ஏப்ரல்’11 இதழிலிருந்து.
==================================================

                          முறியடிக்க முடியாத சாதனை!

கிரிக்கெட் சரித்திரத்தில் சாதனைகள் படைக்கப்படும். பின் அவை முறியடிக்கப்படும். ஆனால் இரண்டு இந்தியர்களின் சாதனைகளை இனி எவரும் முறியடிக்க முடியாது. அனில் கும்ப்ளே ஒரு முறை மேற்கிந்தியத் தீவின் பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இனி எவரும் பத்து விக்கெட் வீழ்த்தினாலும் கும்ளேவின் சாதனை சமன் ஆகுமே தவிர, 11 விக்கெட் வீழ்த்தி வெல்ல முடியாது இல்லையா? அதேபோல சுனில் கவாஸ்கர் முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 60 ஓவர்கள் (அப்போது 60 ஓவர்கள்) நாட் அவுட்டாக நின்று 176 பந்துகளை சந்தித்து எடுத்த ரன்கள் : 36! இனி எவரும் இதை முறியடித்து விட முடியுமா, என்ன? ஹி... ஹி....

==================================================

                              அதிகமாக ஒரு ரூபாய் தரணும்!

த்மினி புரொடக்ஷன்ஸ் ‘சபாஷ் மீனா’ என்ற முழுநீள நகைச்சுவைப் படத்தை எடுக்க விரும்பினார்கள். கதாநாயகனாக நடிக்க சிவாஜியிடம் பேசினார்கள். கதையைக் கேட்டார் சிவாஜி. அதில் நாயகன் பாத்திரத்துக்கு இணையாக படம் முழுவதும் வரும் மற்றொரு நகைச்சுவை கலந்த முக்கிய கதாபாத்திரம் ஒன்று இருந்தது. ‘‘அந்த கேரக்டருககு சந்திரபாபுவைப் போட்டா ரொம்ப நல்லா இருக்கும்’’ என்று சொன்னார் சிவாஜி. ப.நீலகண்டன் ‘சபாஷ் மீனா’ படத்தின் கதை, சந்திரபாபுவின் கதாபாத்திரம், சிவாஜி சொன்ன கருத்து ஆகியவற்றை சந்திரபாபுவிடம் சொன்னார்.

‘‘மிஸ்டர் சிவாஜி ஒரு நல்ல பிரமாதமான ஆக்டர். (சந்திரபாபு யாரையும் ‘சார்’ சொல்ல மாட்டார். ‘மிஸ்டர்’ போட்டுப் பேசுவது அவர் வழக்கம்) என் திறமையைப் புரிஞ்சுக்கிட்டிருக்கார்.அதான் என்னை சிபாரிசு பண்ணியிருக்கார். சிவாஜி கணேசனுக்குக் கொடுக்கறதை விட கூட ஒரு ரூபாய் கொடுங்க!’’ என்றார் சந்திரபாபு அலட்சியமாக. இதைக் கேட்ட ப.நீலகண்டனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. சிவாஜியிடம் வந்து நடந்ததைச் ‌சொன்னார் அவர்.

அதற்கு சிவாஜி, ‘‘அவன்கிட்ட விஷயம் இருக்கு. இது காமெடிப் படம். சில சீன்களில் அவன் நடிப்புதான் நிக்கும். நான்தான் பாத்து நடிக்கணும். சில சமயங்களில் இப்படித்தான் லூஸுத்தனமா பேசுவான். விடுங்க...’’ என்றார்.

-‘கண்ணீரும் புன்னகையும்’ நூலில் முகில்.

==================================================

                                 சில சாக்லெட் தகவல்கள்!

* ஜோசப் ஸ்டார்ஸ் ஃபிரை என்பவர் 1849ம் ஆண்டில் முதன்முதலாக சாப்பிடக் கூடிய சாக்லெட்டை உருவாக்கினார்.

* 1876ம் ஆண்டு ஸ்விட்சர்லாந்தின் டேனியல் பீட்டர் எட்டாண்டு பரிசோதனைக்குப் பின்னர் மில்க் சாக்லெட்டைக் கண்டுபிடித்தார்.

* ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் இயக்கிய ‘சைக்கோ’ திரைப்படத்தின் ஷவர் குளியல் காட்சியில் உண்மையில் பயன்படுத்தப்பட்டது சாக்லெட் சாறுதான்!

==================================================

1980களில் ‘சாவி’யில் வந்த நகைச்சுவைத் துணுக்கு!

Saturday, March 17, 2012

நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..!

Posted by பால கணேஷ் Saturday, March 17, 2012

கோடீஸ்வரன் நிகழ்ச்சி அரங்கு, ஒளிவெள்ளம் இல்லாமல் மேடை இருண்டு கிடக்க, பார்வையாளர்கள் மத்தியில் சலசலப்பு. “யார் வந்து நிகழ்ச்சியை நடத்தப் போறாங்கன்னே தெரியலையே... சேனல் காரங்க அறிவிக்காம இப்படி சஸ்பென்ஸ்ல விட்டுட்டாங்களே...” என்று முணுமுணுவென பேச்சுக்கள். 

இப்போது மேடையில் தொகுப்பாளினி ஒருவர் வர, அவர் மீது ஒளிவட்டம் விழுகிறது, “நம்ம நிகழ்ச்சியை நடத்த வந்திருக்கறது யார்ன்னு நீங்க நினைச்சே பாத்திருக்க மாட்டிங்க. வானத்துல ஒரு நெலவு, தமிழ்நாட்டுக்கு ஒரு சூப்பர் ஸ்டார்” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே இருளில் ஒரு உருவம் நடந்து வந்து ஒற்றை விரலை உயர்த்த. உருவத்தின் மேல் ஒளிவெள்ளம் பாய... அட, நம்ம சூப்பர்ஸ்டார் கஜினிகாந்த்!

“நான் எப்ப வருவேன், எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்துட்டேன்...” என்றபடி தொகுப்பாளர் சேரில் அமரும் அவர் மவுஸைத் தூக்கி வீசி கேட்ச் பிடிக்க, தயாரிப்பாளர் அலறியடித்து ஓடி வருகிறார். “சார்... புரோகிராமை ஸ்டார்ட் பண்ணுங்க...”

போட்டியாளர் வந்து எதிர் இருக்கையில் அமர, கஜினி, “உங்க பேர் என்ன?” என்க, அவர், “செல்லப்பா சார்...” என்கிறார். கஜினி, “மிஸ்டர் செல்லப்பா,. ‘செல்’லைக் கண்டுபிடிச்சது யாரு.. இதான் உங்களுக்கு கேள்வி, இதுக்கு நாலு ஆப்ஷன்ஸ் இருக்கு...” என எக்ஸ்பிரஸ் வேகத்தில் பேச, அவர் மிரண்டு, “ஸார், கேள்வி புரியலை, திரும்பச் சொல்லுங்க... என்கிறார்.

கஜினி, “என்னைப் பத்தி தெரியுமில்ல... நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி. நீங்க போகலாம். நெக்ஸ்ட்....” என்று திரும்புகிறார். அடுத்து ஒரு பெண் வந்து அமர, “உங்க பேர் என்ன?” என்கிறார் கஜினி. “பயலலிதா” என்று அந்தப் பெண் சொல்ல, “நோ... நோ... உங்ககிட்ட நான் கேள்வி கேக்க மாட்டேன். தமிழக மக்கள்தான் கேக்கணும். யூகோ... நெக்ஸ்ட்...” என்று அலறுகிறார் கஜினி. 

அடுத்த நபர் வர, அவரிடம், “உங்க பேர்?” என்று கஜினி கேட்க, ”குருணாநிதி” என்கிறார் அவர். “ஐயோ... நான் இமயமலை ப்ளைட்டை பிடிக்கணும். எஸ்கேப்...” என்று அடுத்த செகண்டில் காணாமல் போகிறார் கஜினி.

ப்போது மீண்டும் தொகுப்பாளினி வந்து, ”அவர் போயிட்டதால இப்ப நிகழ்ச்சியைத் தொடர வர்றவர் பேரை நான் சொல்ல வேண்டியதில்லை. ‘கலகநாயகன்’னு சொன்னாலே போதும்...” என்க, கூட்டம் “விமலஹாசன்” என்று கத்துகிறது, சிரித்த முகமாய் கையாட்டியபடி வந்து இருக்கையில் அமர்கிறார்  விமலஹாசன் . போட்டியாளரிடம், “உங்க கிட்ட ஒரு கேள்வி கேக்கப் போறேன். வினான்னும் சொல்லலாம், கொஸ்டின்னும் சொல்லலாம். சரி, கேள்வின்னே வெச்சுப்போமே...” என்க, போட்டியாளர் ‘ஙே‘ என விழிக்கிறார்.

“சங்க இலக்கியத்துல மழையைப் பத்தி எழுதியிருக்கற பாட்டு எதுன்னு நீங்க சொல்லணும். நாலு ஆப்ஷன் வரும்...” என  விமலஹாசன்  சொல்ல, “ஸார்... கொஞ்சம் ஈஸியான கேள்வியா கேளுங்களேன்...” என்கிறார் போட்டியாளர். “ஆ... தமிழனுக்கு தமிழைப் பத்தியே தெரியலை. தமிழனுக்கு கிடைக்க வேண்டிய பேரு, புகழ் எல்லாம் இங்கிலீஷ்காரனுக்கும் கிடைச்சுடுதே... என்ன அநியாயம்... மழையைப் பத்தி நான் ஒரு கவிதை எழுதியிருக்கேன், கேளுங்க...” என்று ஆரம்பிக்க, போட்டியாளர் எழுந்து தலைதெறிக்க ஓடுகிறார். தயாரிப்பாளர் வந்து, “ஸார்... சின்ன கமர்ஷியல் பிரேக் விட்ருக்கோம், வாங்க, காபி குடிச்சுட்டு வரலாம்...” என்று விமலை கூட்டிப் போகிறார்.

மீண்டும் தொகுப்பாளினி வந்து, “இப்ப வர்றவருக்கு அறிமுகமே தேவையில்ல. இவரு பல முகங்கள் கொண்டவர். எந்த முகம் யாருக்குப் பிடிக்கும்னே தெரியாது...” என்க, வந்து நிற்கும் உருவத்தின் மேல் ஒளி வட்டம் விழ, அட! அது பத்திரிகையாளரும் நடிகருமான ‘கோ’.

போட்டியாளர் வந்து அமர, “உலக அரசியல்ல நிறைய கோமாளிங்க இருக்காங்க. அது மாதிரி இந்திய அரசியல்ல இருக்கற சிறந்த கோமாளி யாருன்னு நீங்க சொல்லணும். இதான் உங்களுக்கான கேள்வி. நாலு ஆப்ஷன் தர்றேன்...” என்க, கீழே நான்கு ஆப்ஷன்கள் தோன்றுகின்றன. பார்வையாளர், “என்ன சொல்றதுன்னே புரியலை. ஒரே குழப்பமா இருக்கு ஸார்...” என்கிறார். ”நான் ஒரு இடத்துல இருந்தா... அங்க குழப்பம் இல்லாம இருக்குமா?” என்கிறார் கோ. “தலையப் பிச்சுக்கலாம் போலருக்கு” என போட்டியாளர் சொல்ல, “அதுக்குத்தான் என்னை மாதிரி தலையை வெச்சுக்கணும்” என்று கோ தன் தலையைத் தடவ, பார்வையாளர் தலைதெறிக்க ஓடுகிறார். ‘கோ‘வின் கேள்விகள் தொடர்ந்தால் நிகழ்ச்சியே தாறுமாறாகி விடுமே என்று பயந்து அவரை அழைத்துச் செல்கிறார் தயாரிப்பாளர்.

வேறு வழியின்றி அரங்கம் மீண்டும் இருள. சத்தம் இல்லாமல் ஒரு உருவம் வந்து நிற்கிறது. ‘’முருகனுக்கு இருக்கறது ஆறுமுகம், எனக்கிருக்கறது பல முகம், எனக்குத் தேவையில்ல அறிமுகம்” என்று அந்த உருவம் பிளிற, ஒளிவட்டம் உருவத்தின் மீது விழ, அட... அது நம்ம குஜய கே.ஆர்.! 

போட்டியாளர் வந்து அமர, “தமிழ்நாட்டு அரசியல்ல ரெண்டு முதல்வர்களை எதிர்த்து நின்ன ஒரே நடிகர் யார்? நாலு ஆப்ஷன் தர்றேன்...” என்று சந்தடிசாக்கில் கே.ஆர் சுயவிளம்பரக் கேள்விவீச, போட்டியாளர் யோசிக்கிறார். “எம்.ஜி.ஆர். சுத்தினது கம்பு, எனக்கு பதில் சொல்ல உனக்கு வேணும் தெம்பு, உடனே பதில் சொல்லாட்டா இருக்கு வம்பு” என்று கே.ஆர். அலற, போட்டியாளர் மயங்கி விழுகிறார்.

குஜய கே.ஆர். இப்போது திரும்பிப் பார்க்க, அரங்கமே காலியாக இருக்கிறது. நிகழ்ச்சி தயாரிப்பாளர் மட்டும் ஒரு மூலையில் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு அழுது கொண்டிருக்கிறார். அவரிடம் வருகிறார் கே.ஆர். “என்னாச்சு... மக்கள் எல்லாம் எங்க?” என்று கேட்கிறார்.

“நிகழ்ச்சில நீஙக வந்தவுடனேயே பாதிப் பேர் ஓடிட்டாங்க. பத்தாக்குறைக்கு போகிற போக்கில எவனோ ஒருத்தன் அடுத்ததா நிகழ்ச்சியை நடத்த வரப் போறார் பவுடர் ஸ்டார் கோனிவாசன்னு குண்டை வீசிட்டுப் போயிருக்கான், மிச்ச ஜனங்களும் தலைதெறிக்க ஓடிடுச்சு... இனி நான் எந்த நிகழ்ச்சியையும் நடத்த மாட்டேன். ஆள விடுங்கடா சாமி...” என்றவாறு திரும்பிப் பார்க்காமல் ஓட, ‘’ஏ டன்டனக்கா...” என்றபடி அவரைத் துரத்தி ஓடுகிறார் கே.ஆர்.

ளிச்சென்று முகத்தின் மேல் தண்ணீர்த் துளிகள் விழ, “மழை.... மழை...” என்றபடி கண் விழித்தேன். ’‘என்னடா ஆச்சு உனக்கு? கோடீஸ்வரன், கஜினி, விமல்ன்னு என்னென்னமோ தூக்கத்துல உளர்ற... நைட்டு டிவி பாத்துட்டு படுக்காதன்னா கேக்கறியா..?” என்று அருகில் அம்மாவின் கோப முகம் தெரிந்தது, ச்சே...! கனவில்தானா இத்தனை கூத்தும்!

துப்பாக்கியில் பூத்த பூ!

Posted by பால கணேஷ் Saturday, March 17, 2012


                டெய்ஸி - 2006 - தென்கொரியத் திரைப்படம்

ரு கால்வாயின் குறுக்காக மரத்துண்டு போடப்பட்டிருக்கிறது. கையில் பெயிண்டிங் உபகரணங்களுடன் அதைக் கடக்க முயலும் அவள், தடுமாறிக் கீழே விழுகிறாள். தன் பெட்டியை மட்டும் மீட்டு தண்ணீரிலிருந்து வெளியேறிச் செல்கிறாள். அதை சற்று தூரத்திலிருந்து கவனிக்கும் அவன் ஓடிவந்து நீரில் அடித்து வரும் அவளின் பெயிண்டிங் உபகரணங்களை மீட்கிறான். சில தினங்களுக்குப் பின் அங்கே வரும் அவளுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது! கால்வாயி்ன குறுக்கே மரப்பாலம் அமைககப்பட்டிருக்கிறது. அங்கே ஒரு கிளையில் அவளது உபகரணங்கள் அடங்கிய பை வைக்கப்பட்டிருக்கிறது. தனக்காக யார் செய்தது என்று வியந்து, தான் வரைந்த டெய்ஸிப் பூக்களின் சித்திரத்தை அவனுக்காக அங்கே விட்டுச் செல்கிறாள் அவள். அன்று துவங்கி தினம் மாலை 4.15க்கெல்லாம் ‘ஃப்ளவர்’ என்ற குரலுடன் அவள் வீட்டு வாசலில் டெய்ஸிப் பூக்கள் வைக்கப்படுகிறது. அவன் யாரென அறிய அவள் எவ்வளவு விரைந்து ஓடிவந்து பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவனைக் காணும் ஆவல் அவளுக்குள் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

அவன் பெயர் பார்க் யீ! ஒரு தொழில் முறைக் கொலையாளி. அவளைப் பார்த்ததில் இருந்துதான் அவனுக்குள் பூ பூத்திருக்கிறது. தன்னைச் சுற்றியிருக்கும் துப்பாக்கிப் புகை விலக இந்தப் பூப்பூத்தல் காரணமாக இருக்கும் என அவன் நம்புகிறான். அவள் இருக்கும் வீட்டிற்கு எதிர் வரிசையிலேயே மாடியில் ஒரு அபார்ட்மெண்டிற்கு குடிவந்து பைனாகுலர் மூலம் அவளை ரசித்து வருகிறான். அவன் வீட்டு வாசலில் கறுப்பு ட்யூலிப் மலர்கள் வைக்கப்பட்டால், தலைவனைச் சந்தித்து அவன் தரும் போட்டோவை பெற்றுக் கொண்டு, அந்த நபரைத் தீர்ப்பது அவன் வேலை. அந்தத் தலைவன் பார்க் யீயை, பெண்களைக் காதலிப்பது என்பது துப்பாக்கிக்கு நேராக மார்பைக் காட்டுவது போல, உனக்குத் தேவையற்ற வேலை என்று விமர்சி்க்கிறான்.

அவள் பெயர் ஹ்யூ யங்! நெதர்லாந்தில் ஒரு சதுக்கத்தில் அமர்ந்து 30 யூரோ கொடுப்பவர்களை வரைந்து தரும் ஓவியர் அவள். அன்று ஒருவன் கையில் டெய்ஸிப் பூககளுடன் வந்து அவளுக்குப் பூக்களை கொடுத்துவிட்டு தன்னை வரையச் சொல்கிறான். அவள் பாதி வரைந்து கொண்டிருககும் போதே எதையோ பார்த்துவிட்டு, ‘நாளை வருகிறேன்’ என்று விட்டு ஓடிவிடுகிறான். அவன்தான் தனக்கு மலர் அனுப்புபவனோ என்று மனதில் ஐயம். அவன் ஓவியத்தை பூர்த்தி செய்து வீட்டில் வைக்கிறாள் அவள். மறுதினம் அவன் வந்து மீண்டும் டெய்ஸிப் பூ தர, உங்களை வரைந்த ஓவியத்தின் மீது காப்பி கொட்டி விட்டது, புதிதாக வரைகிறேன் என்று மீண்டும் வரைகிறாள் அவள். அவன்தான் தனக்கு பூக்களை அனுப்புபவன் என்று (தவறாக) எண்ணி அவனைக் காதலிக்கத் தொடங்குகிறாள் ஹ்யூ யங்!

மாடியிலிருந்து பைனாகுலர் மூலம் பார்த்துக் கொண்டி ருக்கும் கொலையாளியான பார்க் யீ, யார் இந்தப் புதியவன்... இவளுடன் சிரித்துப் பேசுகிறான் என்று புரியாமல் குழம்புகிறான். அந்தப் புதியவன் பெயர் ஜியாங் வூ. அவன் ஒரு இன்டர்போல் போலீஸ் ஆஃபீஸர். ஒரு போதைப் பொருள் ராக்கெட்டை பிடிக்க வந்தவன், அந்த சதுக்கத்திலிருந்து எல்லாப் பக்கமும் பார்க்க முடியும் என்பதால் அவள் முன் வரைய உட்கார்ந்தவன், அவளின் டெய்ஸிப் பூ காதலையும், தன்னை அதை அனுப்புபவனாக எண்ணி காதலிப்பதையும் உணர்கிறான். அவளிடம் உண்மையைச் சொல்லாமல், பொய்யும் சொல்லாமல் மெளனமாக இருந்து அவள் காதலனாகிறான்.

மழை பெய்து கொண்டிருக்க, கையில் குடையுடன் அவளைக் காண வரும் ஜியாங் வூ ஒரு மர்ம உருவத்தை சந்தேகித்து துரத்த, ஒரு முட்டுச் சந்தில் அதனால் தாக்கப்பட்டு மயக்கமாகிறான். அவனைத் தாக்கிய பார்க் யீ, அவன் பர்ஸிலிருந்த ஐடிகார்ட மூலம் அவன் யாரென்பதை அறிகிறான். பணத்துக்காக திருடியது போல பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு போக, ஜியாங் வூவும் அப்படியே எண்ணி ஆறுதலாகிறான்.

டெய்ஸிப் பூ!
மறுதினம் ஹ்யூ யங்கின் முன்னால் ஜியாங் வூ அமர்ந்து சூழ்நிலை மறந்து பேசிக் கொண்டிருக்க, அவனைச் சுற்றி வளைக்கிறது போதைப் பொருள் ராக்கெட் கும்பல். மாடியிலிருந்து அதைப் பார்க்கும் பார்க் யீ, அங்கிருந்தே டெலஸ்கோப் துப்பாக்கியால் அவர்களைச் சுட்டு இவனைக் காப்பாற்றுகிறான். இவனும் சுதாரித்து அவர்களைச் சுட, நாலாபக்கமும் துப்பாக்கிகள் சீறுகின்றன. அதில் ஒரு குண்டு ஹ்யூ யங்கின் ‌கழுத்தில் பாய்ந்து விடுகிறது. அவளை ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டு, மாடியிலிருந்து சுட்டவனைப் பிடிக்க வருகிறான் ஜியாவ் வூ. ஆனால் பார்க் யீ, அவனை காலில் சுட்டு வீழ்த்தி விட்டுத் தப்பி விடுகிறான்.

தொண்டையில் குண்டுபட்ட அவளுக்கு பேசும் சக்தி போய் விடுகிறது. அன்றிலிருந்து ஜியாங் வூ கண்ணில் படவேயில்லை. அவள் சோக சித்திரமாக இருப்பதை காணச் சகியாமல் அவளின் முன்வந்து அறிமுகமாகும் பார்க் யீ, அவளுக்கு நல்ல நண்பனாகிறான். அவன் தன்னை நேசிப்பதை உணரும் அவள், தன் காதலைப் பற்றி அவனிடம் சொல்கிறாள். நட்பே போதும் என்கிறான் பார்க் யீ‌. இந்நிலையில் ஆறு மாதத்தின் பின் ஜியாங் வூ திரும்ப வருகிறான். அவன் நண்பரான டிடெக்டிவ் அவனிடம், அவன் காதலியின் புது நட்பு பற்றிச் சொல்கிறார். நேராக அவளிடம் வந்து அவன் தான் போலீஸ்காரன் என்பதையும், துப்பறிய அவளையும், அவள் காதலையும் பயன்படுத்தியதாகச் சொல்லி மன்னிப்புக் கேட்டு திரும்பிப் பாராமல் சென்று விடுகிறான். அப்போது வீட்டின் உள்ளே பார்க் யீயும் இருப்பதால் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கின்றனர்.

அவன் நண்பரான டிடெக்டிவ் மூலம் பார்க் யீ பற்றி அறிகிறான் ஜியாங் வூ. வாடகைக் கொலையாளிகளின் ராக்கெட்டை பிடிக்க தான் முயன்று, அவர்கள் எப்படி அமர்த்தப்படுகிறார்கள் என்பதை கண்டுபிடித்து விட்டதாகச் சொல்கிறார் நண்பர். ‘‘அவனைப் பிடிக்க வேண்டுமானால் அவனை வேலைக்கு அமர்த்திக் கொள், என் படத்தைக் கொடுத்து என்னைக் கொல்லச் சொல்லி பணிக்கு அமர்த்து’’ என்கிறான் ஜியாங் வூ. அவர் அப்படியே செய்ய, தலைவன் மூலம் தனக்கு வரும் படத்தைப் பார்த்து திடுக்கிடுகிறான் பார்க் யீ. சதுக்கத்தில் காரில் அமர்ந்து சுற்றிலும் மறைவான போலீஸ் பாதுகாப்பில் இருககும் ஜியாங் வூவிடம் வந்து அவனுடன் பேச வேண்டும் என்கிறான் பார்க் யீ. போலீஸ் நண்பர்களைத் தவிர்த்துவிட்டு வேறு அமைதியான பகுதிக்கு அவனை அழைத்துச் செல்கிறான் ஜியாங் வூ. காரில் பேசுகையில் பார்க் யீ தான் பூக்கள் அனுப்பிய காதலன் என்பதும், வாடகைக் கொலையாளி அவன்தான் என்பதும் ஜியாங் வூவிற்குத் தெரிகிறது. அவன் யார் என்பதை தான் அறிவேன் என்றும், என்ன நோக்கத்திற்காக தன்னிடம் அவன் போட்டோவை அனுப்பினான் என்பது தனக்குத் தெரியும் என்றும் பார்க் யீ சொல்கிறான்.

இப்படி ஒருவரையொருவர் நன்கு அறிந்த நிலையில் காதல் எதிரிகள் மற்றும் தொழில் முறை எதிரிகளான அவர்களின் சந்திப்பு நிகழ்கிறது. அதன்பின் நி்கழ்ந்த மோதலின் முடிவில் என்ன நிகழ்ந்தது? பிழைத்தது ஜியாங் வூவா இல்லை பார்க் யீயா? இருவரில் யாரை ஹ்யூ யங் ஏற்றுக் கொண்டாள்? பார்க் யீயின் தலைவரும், ஜியாங் வூவின் இன்டர்போல் அமைப்பும் என்ன செய்தன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலை நிச்சயம் நான் நிச்சயம் சொல்ல மாட்டேன். பரபரவென நகரும் இப்படத்தின் கடைசி அரைமணி நேரங்கள் பதில் சொல்லும். தேடிப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

இப்படத்தில் என்னை வியப்பில் ஆழ்த்திய விஷயம் என்னவென்றால், ஒரு காதல் கதைக்குரிய மென்மையும், உணர்ச்சி மோதல்களும் நம் மன‌தைத் தொட்டு அசைக்கிறது. அதே சமயம் வா‌டகைக் கொலையாளி, போலீஸ் மோதலின் காரணமாக அடுத்தடுத்து சுவாரஸ்யமான முடிச்சுகளும், சம்பவ்ஙகளுமாக துப்பறியும் படம் போல பரபரவென்று போரடிக்காமல் படம் விரைகிறது. இப்படி மென்மையையும், ஸ்பீடையும் பாலன்ஸ் செய்ய எப்படி இயக்குனரால் முடிந்தது என்ற வியப்பு இன்னமும் என்னுள்! அழகான அந்தக கதாநாயகியும், கண்களில் ஒற்றிக் கொள்வது போன்ற அழகிய படப்பிடிப்பும் (இயக்குனர்தான் ஒளிப்பதிவாளரும்!) படம் பார்ப்பதை ஒரு அற்புத அனுபவமாக்குகின்றன.

2006ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தைப் பற்றிய தொழி்ல்நுட்பத் தகவல்கள் : Directed by     Andrew Lau, Produced by     Teddy Yung, Written by : Kwak Jae-yong, Music by : Shigeru Umebayashi, Cinematography :Andrew Lau, Editing by : Chan Ki Hop, Running time : 110 min, 125 min. (Hong Kong edit), Country : South Korea, Hong Kong, Language: Korean.

அவளை ஒரு உணவகத்தில் இருக்கச் சொல்லி விட்டு புயல் வேகத்தில் ஓடிச் சென்று, பார்க் யீ தன் கொலைத் தொழிலையும் செய்து விட்டு கூலாக அவளுடன் பேசுவது, காபி‌ கொட்டியதாக அவள் சொன்ன தன் ஓவியத்தை அவள் வீட்டில் பார்த்து ஜியாங் வூ வியக்கையில் அவள் வெட்கப்படுவது, மூன்று பேரின் மன உணர்வுகளை பார்வையாளருக்கு விவரிக்கும் விதமாக குரல்களில் சொல்லி கதையை நகர்த்திச் சென்றது, கொலையாளிக்குள் இருக்கும் சங்கீத ரசனையும், மென்மையான சுபாவங்களும், போலீஸ் காரனிடம் இல்லை என்ற நகைமுரணை போகிற போக்கில் விளக்கியது, அவள் தன் எதிரில் இருக்கும் பார்க் யீ முகத்தை வரைய முற்பட இயல்பாக அவள் கை  ஜியாங் வூ முகத்தை வரைந்துவிட அதைக் கண்டு அவள் அழுவது -என்று இந்தப் படம் தந்த ஆச்சரியங்கள் நிறைய... நுணுக்கமாக ஒவ்வொன்றையும் விவரிக்க ஆசையாக இருந்தாலும் பதிவு நீண்டுவிட்ட காரணத்தால் இத்துடன் முடிக்கிறேன்.

இப்படத்தை யூ டியூப்பில் முழுமையாகப் பார்த்து ரசிக்கலாம். அல்லது டவுன்லோடு செய்தும் பார்த்து ரசிக்கலாம். அதற்கான லிங்க்குகள்:

http://www.youtube.com/watch?v=w3CtE6zmujk

http://www.fileserve.com/file/wKyDRRa


பின்குறிப்பு: என்னாலும் திரைப்படத்தைப் பற்றி எழுத முடியும் என்று நம்பிக்கை வைத்து எழுதத் தூண்டிய நண்பர் குமரன் அவர்களுக்கு நன்றி!

Wednesday, March 14, 2012

நடை வண்டிகள் - 8

Posted by பால கணேஷ் Wednesday, March 14, 2012

சுபாவும் நானும் - 5

‘‘காலையில வீட்டுக்கு வந்துட்டுப் போங்க’’ என்று பாலா ஸார் அழைத்திருந்ததால் அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். (அழைக்கா விட்டாலும் போவதுண்டு) அவர் சொன்னார். ‘‘நாங்க புதுசா ஒரு பதிப்பகம் ஆரம்பிக்கலாம்னு இருக்கோம். முதல் புத்தகமா ‘மகாபலிபுரம்- உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி’ங்கற புத்தகத்தைப் பண்ணலாம்னு இருக்கோம். லேஅவுட் நீங்க பண்ணணும். எங்களின் நண்பர் ஸ்ரீனிவாஸ் எழுதியிருக்கார். இதை தமிழ்ல டைப்படிச்சுக் கொண்டு வாங்க...’’ என்றார். ஸ்ரீனிவாஸ் அவர்கள் அதைத் தமிழில்தான் எழுதியிருந்தார். ஆனால் ஆங்கிலத் தமிழ். உதா: Ange irunthu parthal sirpangal azhagaga therinthana. இப்படி தமிழை ஆங்கிலத்தில் டைப் செய்து அவர் தந்திருந்ததை தமிழிலேயே நான் டைப் செய்ய வேண்டியிருந்தது.

நான் டைப் செய்து முடித்த பின்னர், சுபா அதைச் சீர்திருத்தி ஒரு வடிவத்துக்குக் கொண்டு வந்தபின் வடிவமைப்பில் இறங்கினோம். ஓவியர் ஜெ.பிரபாகர் (‌ஜெ.பி. என்று விகடனில் பல ஓவியங்கள் பார்த்திருப்பீர்கள்) வரைந்து கொடுத்திருந்த படங்களைப் பார்த்ததும் கற்சிலைகளுக்கு பேப்பரில் இவ்வளவு உயிர்தர முடியுமா என்று பிரமித்துப் போனேன்.

 ஒரு கைடின் பார்வையில் மகாபலிபுரத்துக்கு உங்கள் கையைப் பிடித்து கூட்டிச் சென்று ஒவ்வொரு சிற்பங்களையும் விளக்குவது போல வர்ணனைகளும், படங்களும், மேப்புமாக நன்றாக அமைந்திருந்தது புத்தகம். ‌மிக நிதானமாக நேரம் எடுத்து வடிமைக்கப்பட்டாலும்கூட புத்தகம் நன்றாக வந்திருக்கிறதென்ற திருப்தி எனக்கும் சுபாவுக்கும் இருந்தது. ‘தங்கத்தாமரை பதிப்பகம்’ என்பது சுபாவின் பதிப்பகத்தின் பெயர். மகாபலிபுரம் புத்தகம் இதுவரை மூன்று பதிப்புகளைக் கண்டுவிட்டது. அது மட்டுமின்றி, ஆங்கிலம், ஹிந்தி, ப்ரென்ச் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாகி அவையும் டூரிஸ்டுகளால் விரும்பி வாங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த ‘மகாபலிபுரம்- உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி’ நூலுக்கு மிகச் சிறப்பான விமர்சனத்தை ‘திண்ணை’ இணைய இதழில் வழங்கியிருந்தார் என் மதிப்புக்குரிய எழுத்தாளர்/கவிஞர் தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள். இங்கு ‘க்ளிக்’ செய்து படிக்கலாம். (தேனுக்கா நம்ம தம்பியாச்சேன்னு அன்போட சில வரிகள் என்னைப் பற்றியும் எழுதியிருப்பார். அவற்றை ஒதுக்கிவிட்டுப் படிக்கவும்)


அதன்பின் சுபாவின் ‘செல்வா கதைகள்’ தொகுப்பு வெளியானது. கடுகு ஸார் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் புத்தகத்தை இரண்டு பெரும் தொகுதிகளாக தன் ‘நந்தினி பதிப்பகம்’ மூலம் வெளியிட்டிருந்தார். அதை தங்கத்தாமரை பதிப்பகத்தின் நான்காவது புத்தகமாக அழகிய அச்சமைப்பில் சுபா வெளியிட்டிருந்தார்கள். புத்தகக் கண்காட்சியில் அதை வாங்கிப் படித்த மெகா ரைட்டர் சுஜாதா ‘புத்தகக் கண்காட்சியில் எனக்குக் கிடைத்த ரத்தினம் இது’ என்று தன் கேள்வி பதில் பகுதியில் எழுதியிருந்தார். விளைவாக... நிறைய விசாரணைகள் நேரிலும் போனிலும் சுபாவிற்கு வந்தன. வாத்தியார் வாத்தியார்தான்!

அதன்பின் ‘என் நாடு என் மக்கள் உன் ரத்தம்’ என்று காஷ்மீர் பற்றிய புத்தகம், அனுராதா ரமணன் எழுதிய ‘அன்புடன் அந்தரங்கம்’, ‘சிரிக்கப் பழகு’, ‘பெண்ணால் முடியும்’, காஷ்யபன் எழுதிய ‘திருமணப் பேறு அருளும் திருப்பாவை’ -இப்படிப் பல புத்தகங்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. ஒரு வடிவமைப்பாளனாக எனக்கு மிகத் திருப்தி தந்த பணி அது. சுபாவுடன் ‌வேலை செய்வது இன்னும் சுலபம். நான் ஒரு ஐடியாவுடன் துவங்கினால் அவர்கள் இருவரிடமிருந்தும் பல ஐடியாக்கள் துணைக்கு வரும். ஆக, நான் வடிவமைத்தேன் என்று சொல்வதைவிட நாங்கள் வடிவமைத்தோம் என்று சொல்வது சாலப் பொருத்தமாக இருக்கும். ‘கோ’ படத்தின் பின்னால் சுபா திரைப்படத் துறையில் மிகமிக பிஸியாக இருப்பதால் தற்சமயம் ‘தங்கத்தாமரை’ அமைதியாக இருக்கிறது.

நான் முதன்முதலாக இருசக்கர வாகனம் வாங்கிய போது, வாகனத்தை எப்படி விபத்தின்றி கையாள்வது என்று பல அறிவுரைகளை ஒரு மூத்த சகோதரன் போல் எனக்குச் சொன்னார் பாலா. இரவு மிக தாமதமாக சுபாவின் வீட்டிலிருந்து நான் புறப்பட, பைக்கில் சுரேஷ் என்னை பஸ் ஸ்டாப்பில் ட்ராப் செய்ய, நகரத் தொடங்கிய பஸ்ஸில் நான் ஓடிச் சென்று தாவி ஏறிய போது அதைக் கண்டு பதறி, போன் செய்து உரிமையுடன் கோபமாய்த் திட்டி என்னைக் கண்டித்தவர் சுரேஷ். இப்படி சுபா எனக்கு நண்பர்களாக மட்டுமின்றி வழிகாட்டிகளாகவும் இருந்து கொண்டிருக்கிறார்கள். 

திருமதி. ஜெயந்தி சுரேஷ் என்னை தன் தம்பியைப் போல நடத்துவார்கள். பேசுவதிலும், பழகுவதிலும் அந்த வாஞ்சையை நான் உணர்ந்து மகிழ்ந்து கொண்டிருக்கிறேன். திருமதி யசோதா பாலகிருஷ்ணன், நான் வீட்டிற்குள் நுழைந்தால் எதுவும் கேட்காமலேயே  (அருமையான, அவர்களின் கைவண்ணத்தில் ஸ்பெஷலான) காபி தயாரித்து எடுத்து வந்து விடுவார்கள். அப்படி ஒரு அன்பை நான் உணர்ந்திருக்கிறேன். (பல சமயங்களில் சுபா இல்லாவிட்டாலும் போய் காபி மட்டும் குடித்துவிட்டு வந்திருக்கிறேன் என்றால் பாருங்கள்...) முதலில் மகள், பிறகு மகன் என்று சுரேஷ், பாலா இருவருக்கும் இரண்டிரண்டு வாரிசுகள். தத்தம் புதல்விகளுக்கு சுபா நிறைவாய் திருமணம் செய்துவிட, மகன்கள் படிப்பை முடிக்கும் நி‌லையில் இருககிறார்கள்.

திரைப்படத் துறையில் பிஸியாகி விட்டதால் சுபாவின் பத்திரிகைப் பணி குறைந்து விட்டதாக எண்ணியிருப்பீர்கள். அதுதான் இல்லை... ‘காஷ்யபன்’ என்ற பெயரில் ஆன்மீகம் எழுதி வரும் சுபா, இன்னும் பல பெயர்களில் பல பத்திரிகைகளில் எழுதியபடிதான் இருக்கிறார்கள். அந்தப் பெயர்களை வெளியிட எனக்கு அனுமதியில்லை! நமது நண்பர்களில் முப்பது வயது கடந்தவர்கள் கல்கியில் ‘ஜெயமன்மதன்’ என்ற பெயரில் விதவிதமான சினிமா விமர்சனங்களை பல ஆண்டுகள் முன்பு படித்திருக்கக் கூடும். அந்தப் பெயரில் எழுதியதும் சுபாதான்.

பழகப் பழக சுவை குன்றாமல் அதிகரித்து வருவதே சிறந்த நட்பின் இலக்கணம். எனக்கு சுபாவுடனான நட்பு அன்று முதல் இன்று வரை அப்படித்தான் இருந்து வருகிறது. மிக அகமகிழ்வுடன் எதையும் பகிர்ந்து கொள்ளும் இந்த நட்பு என்றென்றும் தொடர வேண்டும் என்ற விருப்பத்துடன் ‘சுபாவும் நானும்’ என்ற பகுதியை நிறைவு செய்கிறேன்.

நடைவண்டி இனி ‘P.K.P.யும் நானும்’ என்ற
புதிய பகுதியில் பயணத்தைத் தொடரும்!




Monday, March 12, 2012

கேப்ஸ்யூல் நாவல் 5

Posted by பால கணேஷ் Monday, March 12, 2012

ரு சரித்திர நாவலைக்கூட துப்பறியும் நவீனத்தின் விறுவிறுப்புடன் எழுத முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஸ்ரீவேணுகோபாலன். இவரை நினைக்கும் போதெல்லாம் ஆச்சரியம்தான் வரும் எனக்கு. தேர்ந்த நடிகன் இரட்டை வேடம் போடுவதைப் போல, புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் செக்ஸ்+க்ரைம் கதைகளையும், ஸ்ரீவேணுகோபாலன் என்ற பெயரில் ஆன்மீக + சரித்திரக் கதைகளையும் அந்தந்தத் தளங்களுக்கே உரிய நடையில் அமர்க்களமாக எழுதுபவர் அவர். 


இந்நாவலில் அவரது அழகிய தமிழ்நடையில் நெருப்பென வரும் வீர சாகசங்களும், உணர்ச்சிக் கொந்தளிப்பான தந்தை-மகன் உறவும், குறிப்பாக.... உத்தமன், விச்வநாதன் காதல்களில்பொங்கிவரும் வர்ணனைகளும், உரையாடல்களும் காதல் ரசத்தில் மூழ்கடித்து விடும். அப்படி காதல் ரசத்தில் மூழ்கித் திளைக்க உடனே முழுக் கதையையும் தேடிப் பிடித்து படித்து மகிழுங்கள். 


கி.பி. பதினாறாம் நூற்றாண்டு. விஜயநகரத்திற்குள் உத்தமன் என்ற இளைஞன் மூன்று சகாக்களுடன் வருகிறான். பாண்டிய ராஜ வம்சத்தைச் சேர்ந்த இளவரசி உடன்கட்டை ஏற முற்பட, சகாக்களுடன் போய் அவளைக் காப்பாற்றி, குதிரையில் பறக்கிறான். ஏழு வீட்டார் என்ற கூட்டத்தின் தலைவர் சிங்கார பூபனின் ஆட்கள் அவர்களைத் துரத்துகின்றனர். ஒரு சத்திரத்தில் தங்கி, தான் மாலடிப் பெருமாள் என்ற சிற்றரசரின் மகன் எனவும், பாண்டிய ராஜவம்சத்தின் கடைசி வாரிசான அவள் தீக்குளிக்கக் கூடாதென்றும் சொல்கிறான் உத்தமன். அவள் சினத்துடன் மறுக்க, அப்போது சிங்காரபூபனின் ஆட்கள் அங்கு வர, சண்டை நடக்கிறது. உத்தமனையும் அவன் சகாக்களையும் கைது செய்து கொண்டு செல்கிறான் சிங்காரபூபன். வழியில் நண்பர்களின் சாதுர்யத்தால் தப்பும் உத்தமன், நண்பர்களைப் பிரிந்து செல்லும்படி நேர்கிறது.

மயக்கமுற்று குதிரையில் சாய்ந்திருந்த அவன் கண் விழிக்கும் போது, ஒரு இளைஞனை புலி துரத்தி வருவதைக் கண்டு, புலியுடன் போரிட்டுக் கொன்று அவனைக் காப்பாற்றுகிறான். அந்த இளைஞன் தன் பெயர் விச்வநாதன் என்றும் தான் விஜயநகரத்தின் ராஜப் பிரதானி என்றும் அறிமுகம் செய்து கொண்டு உத்தமனின் நண்பனாகிறான். உத்தமன் தன் சகாக்களை தேடிப் பிடித்து அவர்களுடன் சென்று பாண்டிய இளவரசியை மறைத்து வைத்திருக்கும் இடத்திலிருந்து மீண்டும் கடத்தி வந்து விஜயநகரத்தில் விச்வநாதனின் பாதுகாப்பில் அவளை விடுகிறான். அவள், உத்தாரணர் என்ற முள்ளிநாட்டுக் குறுநில மன்னரிடம் ஒரு ஓலை தரும்படியும், அதற்கு பதில் வரும்வரை உடன்கட்டை ஏறாமலிருப்பதாகவும் உத்தமனிடம் சொல்ல, உத்தாரணர் போலிப் பாண்டியரின் ஆதரவாளர் என்பதால் அவன் தயங்குகிறான். பின் சம்மதித்து, ஓலையுடன் புறப்படுகிறான்.

உத்தமன் செல்லும் வழியில் துரத்திவரும் விச்வநாதன், பாண்டிய நாட்டில் அவன் தங்கியிருந்த சமயம் அவனுககு ஏற்பட்ட காதல் அனுபவங்களை உத்தமனிடம் சொல்கிறான். தான் இளமையில் காதலித்த அந்தப் பெண்ணை பாண்டிய நாட்டில் உத்தமன் தேடித் தரும்படி வேண்டுகிறான். அவன் சொல்லும் அடையாளங்கள் பாண்டிய இளவரசி சந்திரமாலாவை ஒத்திருக்க, ஏற்கனவே அவளிடம் மனதைப் பறி கொடுத்திருந்த உத்தமன் திடுக்கிடுகிறான். ஆனாலும் நண்பனுக்காக சம்மதிக்கிறான். பின் விச்வநாதனிடம் அவன் தந்தை நாகம நாயக்கர் பாண்டிய நாட்டைத் தானே அபகரித்து மன்னனாகப் பார்க்கிறார் என்று உத்தமன் கூற, அவன் நம்ப மறுக்கிறான்.

விச்வநாதன் விஜயநகரம் திரும்பிச் செல்ல, உத்தமனைத் தொடர்ந்து வந்த சிங்காரபூபன், சாதுர்யமாக உத்தமனுக்கும் சகாக்களுக்கும் உணவில் மயக்க மருந்தைக் கொடுத்து, ஓலையைத் திருடி விடுகிறான். தாமதமாக இதை அறியும் உத்தமன், எங்கும் நில்லாமல் உத்தாரணரை அடைந்து நடந்ததைக் கூறுகிறான். அவர், தான் பாண்டிய வம்சத்தின் எதிரி இல்லையென்பதையும், போலிப் பாண்டியரிடம் உளவறியவே அவர் ஆதரவாளராக நடித்ததையும் கூறி, இப்போது ஓலை தவறியதால் உண்மைப் பாண்டியருக்கு ஆபத்து என்றும் தெரிவிக்கிறார். உத்தமனை உடனழைத்துக் கொண்டு கடினமான மலையான குரங்கணி துர்க்கத்தில் மலை ஏறி வர, மேலே ஒரு மாளிகை எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு உண்மைப் பாண்டியரும் அரசியும் எரிந்து விட்டதாகப் புலம்பிக் கீழே வீழ்கிறார் உத்தாரணர். அக்கணமே அவர் உயிரும் பிரிகிறது.

உத்தமன் விரைந்து விஜயநகரம் வந்து இளவரசியிடம் நடந்ததைக் கூற, அவள் அவனைக் கோபிக்கிறாள். விச்வநாதனிடம் அனுமதி பெற்று முள்ளிநாடு விரைகிறாள். வழியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளும் அவளைக் காப்பாற்றுகிறான் உத்தமன். விளைவாக, அவன் கடும் காய்ச்சலால் அவதியுற, அவனுக்கு வைத்தியம் செய்வித்து தன்னுடன் அழைத்துச் செல்கிறாள் சந்திரமாலா. மயக்கம் தெளிந்த உத்தமன், தான் அரண்மனையில் இருப்பதை உணர்ந்து எழுந்து நடக்க, உத்தாரணரின் விதவை ராணி, சந்திரமாலாவைத் திட்டுவதைப் பார்க்கிறான். அவள் உண்மையில் உத்தாரணரின் மகள் மோகவல்லி என்பதும், பாண்டிய வம்சத்துக்காக உயிர்த்தியாகம் செய்ய முற்பட்டிருப்பதும் அப்போதுதான் அவனுக்குத் தெரிகிறது. உண்மையான சந்திரமாலாவைக் காப்பாற்றிவிட்டு பின்னர் தான் உயிர்த்தியாகம் செய்வதாக தன் தாயிடம் உறுதி கூறுகிறாள் மோகவல்லி.

இதற்கிடையில் பூபன், போலிப் பாண்டியரின் தூண்டுதலின் பேரில் முள்ளிநாட்டு அரண்மனையைச் சுற்றி வளைக்க, சுரங்க வழியாக மோகவல்லியும் உத்தமனும் தப்பிச் செல்கின்றனர். குரங்கணி துர்க்கம் சென்று சந்திரமாலாவைத் தேடுவதாக சொல்லி, அவனைப் பிரிந்து செல்கிறாள் மோகவல்லி. அதே சமயம் பாண்டியநாட்டு மக்கள் உண்மைப் பாண்டியர் இறந்ததை அறிந்து புரட்சியில் ஈடுபடுகின்றனர். அவர்களிடம் மோகவல்லி எதிர்ப்பட, அவள்தான் பாண்டிய இளவரசி என்று புரட்சிப் படையில் சேர்ந்திருந்த பூபனின் ஆட்கள் சிலர் சொல்ல, புரட்சிப் படை அவளைப் பாண்டிய ராணியாக்கி விடுகிறது.

நாகம நாயக்கரோ அவளது அதிகாரத்தைப் பறித்து பொம்மை ராணியாக வைத்திருக்கிறார். மோகவல்லியைத் தேடி வரும் உத்தமனுக்கு அவள் இதைக் குறிப்பால் சொல்ல, அவன் விஜயநகரம் சென்று விச்வநாதனிடம் சொல்கிறான். இதே சமயம் கிருஷ்ணதேவ ராயருக்கும் நாகமரின் எண்ணம் தெரிந்துவிட, அவரை படையுடன் திரும்பிவரச் சொல்லி கடிதம் எழுதுகிறார். நாகமர் மறுத்துவிட, ராயர் கோபத்துடன் படையெடுத்துச் செல்லும்படி தளபதிகளிடம் சீற, நாகமரின் வீரத்தை எண்ணி தளபதிகள் தயங்க, விச்வநாதன் தான் சென்று, தந்தையென்றும் பாராமல் நாகமரை அடக்குவதாக உறுதிகூறி புறப்படுகிறான். உத்தமனின் துணையுடன் நாகமரை போரில் வெல்லும் விச்வநாதன், கைது செய்து ராயரிடம் அவரை அழைத்து வருகிறான்.

ராயர், விச்வநாதனுக்காக நாகமரை மன்னிப்பதுடன், போலிப் பாண்டியரை அடக்கி, அவர் சம்மதத்துடன் விச்வநாதனை மதுரையின் மன்னனாக்கி அனுப்புகிறார். விச்வநாதனும், உத்தமனும் முள்ளி நாட்டுக்கு வர, மோகவல்லியின் அரண்மனை ஏழு வீட்டாரால் எரிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறார்கள். அவளைத் தேடி குரங்கணி துர்க்கம் விரைகிறார்கள். அங்கே எதிர்ப்படும் ஏழு வீட்டார் படைகளை மொத்தமாக அழித்து, பூபனையும் ‌கொல்கிறான் உத்தமன்.

இறக்கும் தருவாயிலிருந்த உத்தமனின் நண்பர்கள் கொடுத்த தகவலின்படி அங்குள்ள துர்க்கை கோயிலுக்கு விரைய, கோயில் தீப்பற்றி எரிவதையும், அதனுள் மோகவல்லியும், சந்திரமாலாவும் இருப்பதையும் அறிந்து, தீயினுள் பாய்ந்து சென்று முதலில் சந்திரமாலாவைக் காப்பாற்றுகிறான் உத்தமன். சந்திரமாலாவை தீ அண்டாமல் போர்வையாய் இருந்து பாதுகாத்த மோகவல்லியை உத்தமன் மீண்டும் தீயினுள் சென்று தூக்கிவர, தீயில் கருகிய அவள் உடலிலிருந்து உயிர் உத்தமனின் மடியில் பிரிகிறது.

விச்வநாத நாயக்கன், சந்திரமாலாவை மணந்து மதுரையில் நாயக்கர் வம்ச ஆட்சியைத் தொடங்கி வைக்கிறான். சந்திரமாலாவுக்கும் அவனுக்கும் குழந்தை பிறக்காததால் வேறொரு ராணியின் மூலம் பிறந்த நாயக்கர் வம்ச வாரிசுகளே பின்னாளில் பாண்டிய நாட்டை ஆண்டனர். (பின்னர் வந்த திருமலை நாயக்கர், ராணி மங்கம்மாள் போன்றோர் நாயக்கர் பரம்பரையில் புகழ்பெற்றவர்கள்) விச்வநாதனின் ஒவ்வொரு வெற்றியிலும் உத்தமன் துணையாயிருக்க, அவனுக்கு உந்துசக்தியாக அவன் மனதில் நின்று தூது பாடிக் கொண்டிருக்கிறாள் மோகவல்லி.

Saturday, March 10, 2012

‘பல்’லவனோடு ஒரு யுத்தம்!

Posted by பால கணேஷ் Saturday, March 10, 2012

னிக்கிழமை மாலையில் தான் அந்த அவஸ்தையின் ஆரம்பம். இரவு உணவுக்கு தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில், தொலைதூரத்தில் மினுக்கி மறையும் நட்சத்திரம் போல இடது மேற்தாடையில் பளிச்சென்று ஒரு வலி தோன்றி மறைந்தது. சாப்பிட்டு முடித்து கை கழுவும் நேரத்தில் மீண்டும் ஒரு வலி நட்சத்திரம். எக்ஸ்ட்ராவாக அதிக பேஸ்ட் எடுத்து நன்றாக பிரஷ் செய்து விட்டுப் படுத்தேன்.

ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்தே அதே ஏரியாவில் விட்டு விட்டு வலி தோன்றிய வண்ணம் இருந்தது. உடனே கண்ணில் பட்ட பல் மருத்துவ மனைக்குள் நுழைந்தேன். டாக்டரைப் பார்த்தால் ஏதோ கல்லூரி மாணவன் போல அவ்வளவு இளமையாக இருந்தார். ‘‘வாயை நல்லாத் திறங்க...’’ என்றார். ‘ஆ’வென்று வாயைப் பிளந்தேன். ‘‘இவ்வளவு திறக்க வேணாம் ஸார். நான் என்ன வாய்க்கு உள்ளயா போய்ப் பாக்கப் போறேன். கொஞ்சம் கம்மி பண்ணிக்குங்க...’’ என்றார் மனோபாலா பேசும் ஸ்லாங்கில்!

யசோதையிடம் வாயைக் காட்டிய கிருஷ்ணன் போல வாய் பிளந்திருந்த நான் சற்றே வாயை மூடினேன். அவர் என் வாய்க்குள் டார்ச் எல்லாம் அடித்து ஏதோ ஆராய்ச்சி செய்துவிட்டு, ஒரு போர்ஸிப்ஸால் குத்தி என்னை அலற விட்டு,‘‘கம்ஸ்ல கிருமிகள் இருக்கு. அதை உறிஞ்சி எடுத்துட்டு, வேற ஆர்டிபிஷியலா இன்ஜக்ட் பண்ணிரலாம். இந்த மாத்திரைகளை சாப்டுட்டு நாளைக்கு ஈவ்னிங் வாங்க...’’ என்று எழுதிக் கொடுத்தார். சிகிச்சைக்கான செலவை அவர் சொன்னபோது பேசாமல் பல்லைப் பிடுங்கியே போட்டு விடலாமா என்று தோன்றியது. அதுவும் கூடாதென்றார்.

பாவி மனுஷன்...  என்னை வைத்து தொழில் கத்துக்கறார் என்பது அப்போது எனக்குத் தெரியாமல் போனது துரதிர்ஷ்டம்! ஞாயிற்றுக் கிழமை இரவு பதினொன்றரை மணி துவங்கி வலி இடைவிடாமல் ஆரம்பித்தது. இடதுமேல் கடைவாய்ப் பல்லில் துவங்கி, உச்சி மண்டை வரைக்கும் மின்னல்கள் பாய்ந்தன. (மின்னல் வலிகள்!) உப்புத் தண்ணீர் விட்டுக் கொப்பளித்தால் சற்றே வலி அடங்கும். அடுத்த இரண்டாவது நிமிடம் மீண்டும் மின்னல்! மீண்டும் கொப்பளித்தல்! இப்படியே சிவன் ராத்திரியாகக் கழிந்தது அன்றைய இவன் ராத்திரி.

மறுநாள் (திங்கள்) காலை என் தங்கை அவளுக்குத் தெரிந்த வேறொரு பல் டாக்டரிடம் அழைத்துப் போனாள். அவர்கள் பல்லை எக்ஸ்ரே எடுத்துக் காட்டி, கடைவாய்ப் பல் முழுக்க சொத்தையாகி விட்டதால் பல்லை எடுக்க வேண்டியது அவசியம் என்றார்கள். (எனக்கு் தரப்பட்ட முந்தைய மருத்துவ ஆலோசனை தவறானதென்று திட்டினார்கள்) அதுவும் உடனே எடுக்க முடியாது. பிளட் டெஸ்ட் எடுத்து ஷுகர் இல்லாமல் இருந்தால்தான் தொடர முடியும் என்பதால் புதன் மாலை எடுக்கலாம் என்று அதுவரை சமாளிக்க மாத்திரைகள் எழுதித் தந்தார்கள்.

அடுத்த நாள் (செவ்வாய்) ஈஸிஜி லேப்பில் ப்ளட் டெஸ்ட் எடுக்க வேண்டும் என்றதும் முழங்கைக்கு மேல் அழுத்தமாக ஒரு பட்டையைக் கட்டிவிட்டு ஊசி ஒன்றை எடுத்தாள் அங்கிருந்த பெண். ‘‘சின்னதா ரத்தத் துளிதானே எடுப்பாங்க. ஊசி எதுக்கு..?’’ என்றேன். அவள் ‘‘இந்த டெஸ்ட்டுக்கு ஒரு துளி எடுத்தாப் பத்தாது. ஊசின்னா ஒண்ணும் வலி்க்காது. அழமாட்டிங்கதானே...’’ என்றாள். ‘‘சின்ன வயசுலருந்தே ஊசியைப் பாத்தாலே அழுகை வந்துடும் எனக்கு. அவ்வ்வ்வ்!’’ என்றேன். சுருக்கென்று கையில் குத்தி அவள் ரத்தம் எடுக்க, சிரிஞ்சில் ஏறிய என் ரத்தத்தின் ரத்தத்தை ஏக்கமாய்ப் பார்த்துவிட்டு வந்தேன். ரிசல்ட் என்னவோ ஆறுதலாயிருந்துச்சுப்பா... பாஸிடிவ்! நோ ஷுகர்!

ஏதோ அவர்கள் கொடுத்த மாத்திரைகள் வலியைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தது சற்றே ஆறுதல். ஆனால் பேசினால் வாய் வலித்ததது. இப்படி ‘பல்’லவனால் அவதிப்பட்ட நேரத்தில், என் இன்னொரு தங்கை போனில் என்னை அழைத்தபோது கூட நான் பேச முடியாமல் அம்மாதான் பதில் சொன்னார்கள். என்ன கொடுமைடா சாமி!

அதற்கடுத்த தினம் (புதன்) மாலை மருத்துவமனைக்குள் போனதும் வாயைத் திறந்து காட்டச் சொன்னாள் உதவி டாக்டர். வாயைத் திறந்ததும் ஊசி ஒன்றை எடு்த்து வாய்க்குள் போட வர, நான் ‘‌ஙே’ என கண்களை அகல விழித்தேன். ‘‘பேடிக்கண்டா. வாய் மரத்துப் போனால்தான் டாக்டர் ஈஸியா பல்லைப் பிடுங்கும்’’ என்று அஃறிணையிலேயே அனைவரையும் பேசி, ஊசியைப் போட்டாள் அவள்.

சற்று நேரத்தில் வாய் மரத்ததும் டாக்டர் வர, இவரின் தோற்றமே நம்பிக்கை தந்தது. ஏதோ பல்லைப் பிடித்து இழுப்பார், வந்துவிடும் என்று நான் நினைத்திருந்ததற்கு மாறாக, சுவரில் ஆணியை இப்படியும் அப்படியும் அசைத்து இழுத்துப் பிடுங்குவோம் பாருங்கள்... அப்படி கொறடால் பல்லை இப்படியும் அப்படியுமாக அசைத்து வெளியில் இழுத்துப் போட்டார் அவர். மூன்று தினங்களாய் என்னை பாடாய்ப் படுத்திய அந்தப் ‘பல்’லவன் ரத்தக் காயத்துடன் உயிரை விட்டு, ட்ரேயில் வந்து விழுந்தான்.

எதிரி இறந்து விட்டாலும் யுத்தகளத்தில் இருந்து ரத்தம் வரும் என்பதால் சமாதானத் தூதுவர்களாய் பஞ்சுத் துண்டுகளை அடைத்து சற்று நேரம் வாயை மூடிக் கொண்டிருக்கச் சொன்னார் டாக்டர். (நமக்கெல்லாம் ரொம்பக் கஷ்டமான விஷயமாச்சுதே அது). அரை மணி நேரம் அப்படியே இருக்க, பின் டாக்டர் வந்து பார்த்து விட்டு யுத்தகளத்தில் ரத்தம் அடங்கி விட்டது என்று சொல்லிவிட்டு இன்னொன்று சொன்னார். ‘செருப்பாலடித்து விட்டு வெல்லம் கொடுப்பது போல’ என்று ஒரு பழமொழி எங்க ஊர்ப் பக்கம் சொல்வார்கள். அதுபோல, பல்லைப் பிடுங்கி உச்சபட்ச வலியைத் தந்து விட்டு, ‘‘வீட்டுக்குப் போனதும் கப் ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டும் உடனே’’ என்றார் டாக்டர். ஆஹா... துன்பத்திலும் ஒரு இன்பம்!

இதைச் சொல்லிவிட்டு உ.டா.வை அழைத்து ‘பல்’லவன் பிடுங்கப்பட்ட இடத்தில் ஒரு தையல் போடச் சொல்லிவிட்டுப் போனார். அவள், ‘‘வாயைத் திறக்கறது... அசையக் கூடாது...’’ என்று என்னையும் அஃறிணையாக்கி, உள்ளே தையல் போட்டாள். ‘‘ஆய்டுச்சு... பாத்தீங்களா?’’ என அவள் சொல்ல, ‘‘வெளில போட்டிருந்தாலாவது எம்ப்ராய்டரி டிசைன் பண்ணி தையல் போடச் சொல்லிருப்பேன். வாய்க்குள்ளல்ல போட்ருக்கீங்க. எங்க பாக்கறது?’’ என்றேன்.

குபீரென்று அவள் சிரித்து விட, அடுத்த கேபினிலிருந்து டாக்டர் கோபமாக வந்து முறைத்தார். ‘‘பேஷண்ட் ஜோக் கடிக்கறது...’’ என்றாள் அவள். ‘‘வாய்ல பஞ்சைத்தான் கடிச்சுட்டிருக்கேன். ஜோக்ல்லாம் கடிக்கலை’’ என்று நான் மேலும் ‘கடி’க்க, வாயைப் பொத்திக் கொண்டு அப்பால் போய்விட்டாள் அவள். (அந்த ரணகளத்திலயும் இவன் கொழுப்பு அடங்கல பாருங்க....)

வீட்டில் சரிதாவோடு சண்டை வரும்போதெல்லாம் நான் கத்துவேன் இப்படி: ‘‘பல்லை உடைச்சிடுவேன், வாயை மூடுடி’’. பதிலுக்கு அவள், ‘‘நல்லா உடைப்பீங்க. எல்லாரையும் பட்டப்பேர் வெச்சு கிண்டல் பண்றதுக்கும், நீங்க பண்ற கேலிக்கும் யாராவது ஒருத்தர் என்னிக்காவது உங்க பல்லைத்தான் தட்டி கைல கொடுக்கப் போறாங்க...’’ என்பாள். அவளின் வார்த்தை இப்படியா நிறைவேற வேண்டும்..? ஹும்...!

-இதுதாங்க ‘பல்’லவனோடு நான் யுத்தம் செஞ்சு ஜெயித்த கதை. இந்த யுத்தத்துக்கு இடையிலதான் என்னோட சென்ற இரண்டு பதிவுகளை வெளியிட்டேன். இப்போ ரொம்ப ரிலாக்ஸ்டாக இருக்க முடிகிறது. (ராஸ்கோலு... இதெல்லாமாடா பதிவு எழுதறதுக்கான மேட்டர்னு யாரோ பல்லைக் கடிக்கறது கேக்குதே...) உங்களுடனும் ஏதாவது ‘பல்’லவன் யுத்தம் செய்ய வந்தால் தயவுசெஞ்சு அலட்சியப்படுத்திடாதீங்க... இந்த நல்ல விஷயத்தை நாட்டுக்குச் சொல்லத்தான் இவ்வளவு ‘ஹிப் டாக்ஸ்’ ஆக (அதாங்க... விலா வரியாக)  என்னோட சொ(நொ)ந்த அனுபவத்தை எழுதினேனுங்கோ...

Thursday, March 8, 2012

நடை வண்டிகள் - 7

Posted by பால கணேஷ் Thursday, March 08, 2012
சுபாவும் நானும் - 4

சுபாவுடன் பழகத் தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே ஒரு வாசகனின் ஆர்வத்துடன் அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தேன் நான். ‘‘எப்படி ஸார் ரெண்டு பேர் சேர்ந்து ஒரு நாவலை எழுத முடியுது?’’ என்று. ‘‘ஒரு டேபிள்ல உக்காந்துககிட்டு அவர் ரெண்டு பக்கம் எழுதிட்டு என்கிட்ட தர, நான் ரெண்டு பக்கம் எழுதிட்டு அவர்கிட்ட தர இப்படியே நா‌வலை எழுதுவோம்னு உங்க மனசுல நினைப்பிருந்தா ரப்பர் போட்டு அழிச்சிடுங்க கணேஷ். நாவலோட தீமும் சம்பவங்களையும் முடிவு பண்ணினதும் எங்கள்ல ஒருத்தர் எழுதற பொறுப்பை எடுத்துப்போம். முழுசா முடிச்சுட்டு மற்றவர்கிட்ட தர, அவர் படிச்சுட்டு திருத்தங்கள் செய்தபின் வேறொரு காப்பி எழுதி பத்திரிகை அலுவலகத்துக்குப் போகும்...’’ என்பது சுபாவின் பதில்.

இங்கே நான் அன்றிலிருந்து இன்றுவரை வியக்கும் விஷயம் என்னவென்றால், இருவரில் யார் எழுதினாலும் வார்த்தைப் பிரயோகங்கள் ஒரே மாதிரிதான் இருக்கும். அது மட்டுமின்றி... உணவு விஷயத்தில், திரைப்பட ரசனையில், புத்தக வாசிப்பில் என எல்லாவற்றிலுமே இருவரின் ரசனைகள் ஒரே மாதிரிதான் இருக்கும். இப்படி 100% புரிதலுள்ள நட்பு அமைவது ஒரு வரம்தான்! அப்படி வரம் பெற்றவர்களுடன் பழகியதில் எனக்கு மிக அகமகிழ்வு!

சுரேஷ் ஸாரை நான் போய்ப் பார்த்தபோது அவர் சொன்னார்: ‘‘கணேஷ்! இப்ப கொஞ்சநாளா எழுதற கமிட்மெண்ட்ஸ் அதிகமாயிட்டதால, நான் நாவலை டிக்டேட் செய்து, கேஸட்ல பதிவு பண்ணிடுவேன். அதை ஜெயந்தி (சுரேஷ்) கேட்டுட்டு எழுதிடுவாங்க. நாங்க அதைப் படிச்சு கரெக்ஷன் செஞ்சு காப்பி எடுத்து பிரஸ்ஸுக்கு அனுப்பிடுவோம். இந்த முறை நாவலை ஜனவரி 1ம் தேதியன்னிக்கு சூப்பர்நாவல் எஸ்.பி.ராமு (ஸார்) கிட்ட குடுக்கலாம்னு நினைக்கிறோம். ஒரு வாரம்தான் இருக்கறதால, கேஸட்டை காதுல கேட்டு, அப்படியே டைப் பண்ணிட முடியுமான்னு பாருங்களேன்...’’ என்றார். இரண்டு கேஸட்டுகளில் அவர் பேசியிருந்ததை வாங்கிக் கொண்டு வந்தேன்.

தெளிவான உச்சரிப்பில், நிதானமான நடையில் அவர் சொல்லியிருந்ததைக் கேட்டு டைப்பிங் செய்தது சிரமமாகவே இல்லை. அருமையான ஒரு த்ரில்லர் அது. மிகவும் ரசனையுடன் அந்த வேலையைச் செய்தேன். ஆனால், டைப் செய்ததை சுபா பார்த்து ஒன்றிரண்டு திருத்தங்கள் சொல்லி ப்ரிண்ட் அவுட்டைத் தர, மீண்டும் ஃபைலை ஓபன் செய்தால் கடைசி சில பக்கங்கள் எப்படியோ Delete ஆகியிருந்தது. டிசம்பர் 31 மாலையில் அவசர அவசரமாக அதை ரீடைப் செய்து, நானே எழுத்துப்பிழை செக் செய்து, இரவு 10 மணிக்கு சுபாவிடம் கொடுத்தேன். மறுநாள் சூப்பர்நாவல் ஆபீஸ் செல்ல என்னையும் உடன்வரும்படி பணித்தார் பாலா. ஒரு நாவலை இருவரும் எப்படி வடிவமைக்கிறார்கள், அதில் ஓட்டைகள் எதுவும் தென்பட்டால் எப்படியெல்லாம் சரி செய்கிறார்கள் என்பதையெல்லாம் ஒவ்வொரு ப்ரூஃப் திருத்தும் போதும் பார்த்து ரசித்த மகிழ்வுடன் விடைபெற்றுச் சென்றேன்.

அடுத்த நாள் காலை புத்தாண்டு வாழ்த்துக்களை மகிழ்வுடன் சுபாவுக்குச் சொல்லி, நாங்கள் சூப்பர்நாவல் அலுவலகம் சென்று ‘குறி தவறாதே’ என்ற அந்த நாவலை குறி தவறாமல் ஒப்படைத்து விட்டு வந்தோம். டைப் செய்ததற்கான தொகையை செக் எழுதி எனக்குக் கொடுத்தார்கள் சுபா. அந்த ஆண்டில் எனக்கு சுபாவின் வேலைகள் மட்டுமின்றி, வெளி‌வேலைகளும் நிறைய வந்து பொருளாதார நிலைமை திருப்திகரமாக அமைந்தது. அதனால் ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் காலையிலும் சுபாவை ‘விஷ்’ செய்து ஆண்டின் முதல் வருமானத்தை சுபாவின் கையால் பெறும் வழக்கமும் தோன்றியது. இன்று வரை (சுபாவின் வேலையை செய்தாலும் இல்லாவிட்டாலும்) அந்த வழக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இடைச்செருகலாய் ‌(சொல்ல விட்டுப்போன) ஒரு விஷயம்: சுபாவின் சிறுகதைகளை டைப் செய்யும் ப்ராஜக்ட் நடந்து முடியும் தருவாயில் இருந்தபோது ஒருமுறை சுரேஷ் ஸாரைச் சந்தித்தபோது, ‘‘ஏன் ஸார்... உங்க ஆரம்பகாலச் சிறுகதைகள்ல ‘விசித்திர உறவுகள்’ சிறுகதை வரவே இல்லையே... கல்கி மர்மச் சிறுகதை போட்டில பரிசு வேற வாங்கின கதையாச்சே....’’ என்றேன். ‘‘அதான் நாங்க எழுதின முதல் கதை கணேஷ். அதுக்கப்புறம் சில வருஷங்கள் எழுதாமலே இருந்து பின்னர் எழுத ஆரம்பிச்சதால ‘அலைகள் ஓய்வதில்லை’ சிறுகதை எங்க முதல் சிறுகதை ஆயிடுச்சு. அந்த ‘விசித்திர உறவுகள்’ எங்ககிட்ட காப்பியே இல்லை. கல்கி ஆபீஸ்லகூட ஒருநாள் பூராவும் போய் தேடிப் பாத்துட்டோம். அங்கயும் இல்லன்னுட்டாங்க...’’ என்றார்.

நான் நெல்லையில் பழைய புத்தகக் கடையில் வாங்கிப் படித்த ஒரு தொகுப்பில் அந்தக கதையைப் பார்த்தேன் என்றும், அதன் பிரதி என்னிடம் இருக்கிறதென்றும் நான் சொல்ல, சுபா துள்ளிக் குதிக்காத குறை! நெல்லை சென்றதும் அனுப்பி வைப்பதாகக் கூறி அனுப்பி வைத்தேன். சுபா அதில் மகிழ்ந்து போய் என்ன வார்த்தைகளால் நன்றி சொல்லியிருக்கிறார்கள் பாருங்களேன்... (எங்களின் பர்ஸனல் மேட்டர்கள் நிறைய பரிமாறப்பட்டிருப்பதால் அந்தக கடிதத்தின் ஒரு பகுதி மட்டும் இங்கே உங்கள் பார்வைக்கு)

அதன்பின் மற்றும் சில நாவல்கள், தொலைக்காட்சித் தொடர்களுக்கான வசனங்கள் என்று சுபாவுடன் கரம்கோர்த்த பணிகள் தொடர்ந்து கொண்டிருந்தன. ஏராளமான கேஸட்டுகள் எங்களுக்குள் புழங்கிக் கொண்டிருந்தன. இப்படியாகச் சில காலம் கழிந்தபின் பாலா ஸார் ஒருநாள் என்னை அழைத்து சுபா துவங்கவிருக்கும் ஒரு புதிய முயற்சியைப் பற்றியும், அதற்கு நாங்கள் இணைந்து செய்யவிருக்கும் பணியைப் பற்றியும் பேசினார். எனக்கு மிகமிகப் பிடித்தமான பணி அது என்பதால் கேட்டதும் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தேன் நான்.
அந்தப் பணியைப் பற்றி...
-தொடர்கிறேன்.
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube