Saturday, March 10, 2012

‘பல்’லவனோடு ஒரு யுத்தம்!

Posted by பால கணேஷ் Saturday, March 10, 2012

னிக்கிழமை மாலையில் தான் அந்த அவஸ்தையின் ஆரம்பம். இரவு உணவுக்கு தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில், தொலைதூரத்தில் மினுக்கி மறையும் நட்சத்திரம் போல இடது மேற்தாடையில் பளிச்சென்று ஒரு வலி தோன்றி மறைந்தது. சாப்பிட்டு முடித்து கை கழுவும் நேரத்தில் மீண்டும் ஒரு வலி நட்சத்திரம். எக்ஸ்ட்ராவாக அதிக பேஸ்ட் எடுத்து நன்றாக பிரஷ் செய்து விட்டுப் படுத்தேன்.

ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்தே அதே ஏரியாவில் விட்டு விட்டு வலி தோன்றிய வண்ணம் இருந்தது. உடனே கண்ணில் பட்ட பல் மருத்துவ மனைக்குள் நுழைந்தேன். டாக்டரைப் பார்த்தால் ஏதோ கல்லூரி மாணவன் போல அவ்வளவு இளமையாக இருந்தார். ‘‘வாயை நல்லாத் திறங்க...’’ என்றார். ‘ஆ’வென்று வாயைப் பிளந்தேன். ‘‘இவ்வளவு திறக்க வேணாம் ஸார். நான் என்ன வாய்க்கு உள்ளயா போய்ப் பாக்கப் போறேன். கொஞ்சம் கம்மி பண்ணிக்குங்க...’’ என்றார் மனோபாலா பேசும் ஸ்லாங்கில்!

யசோதையிடம் வாயைக் காட்டிய கிருஷ்ணன் போல வாய் பிளந்திருந்த நான் சற்றே வாயை மூடினேன். அவர் என் வாய்க்குள் டார்ச் எல்லாம் அடித்து ஏதோ ஆராய்ச்சி செய்துவிட்டு, ஒரு போர்ஸிப்ஸால் குத்தி என்னை அலற விட்டு,‘‘கம்ஸ்ல கிருமிகள் இருக்கு. அதை உறிஞ்சி எடுத்துட்டு, வேற ஆர்டிபிஷியலா இன்ஜக்ட் பண்ணிரலாம். இந்த மாத்திரைகளை சாப்டுட்டு நாளைக்கு ஈவ்னிங் வாங்க...’’ என்று எழுதிக் கொடுத்தார். சிகிச்சைக்கான செலவை அவர் சொன்னபோது பேசாமல் பல்லைப் பிடுங்கியே போட்டு விடலாமா என்று தோன்றியது. அதுவும் கூடாதென்றார்.

பாவி மனுஷன்...  என்னை வைத்து தொழில் கத்துக்கறார் என்பது அப்போது எனக்குத் தெரியாமல் போனது துரதிர்ஷ்டம்! ஞாயிற்றுக் கிழமை இரவு பதினொன்றரை மணி துவங்கி வலி இடைவிடாமல் ஆரம்பித்தது. இடதுமேல் கடைவாய்ப் பல்லில் துவங்கி, உச்சி மண்டை வரைக்கும் மின்னல்கள் பாய்ந்தன. (மின்னல் வலிகள்!) உப்புத் தண்ணீர் விட்டுக் கொப்பளித்தால் சற்றே வலி அடங்கும். அடுத்த இரண்டாவது நிமிடம் மீண்டும் மின்னல்! மீண்டும் கொப்பளித்தல்! இப்படியே சிவன் ராத்திரியாகக் கழிந்தது அன்றைய இவன் ராத்திரி.

மறுநாள் (திங்கள்) காலை என் தங்கை அவளுக்குத் தெரிந்த வேறொரு பல் டாக்டரிடம் அழைத்துப் போனாள். அவர்கள் பல்லை எக்ஸ்ரே எடுத்துக் காட்டி, கடைவாய்ப் பல் முழுக்க சொத்தையாகி விட்டதால் பல்லை எடுக்க வேண்டியது அவசியம் என்றார்கள். (எனக்கு் தரப்பட்ட முந்தைய மருத்துவ ஆலோசனை தவறானதென்று திட்டினார்கள்) அதுவும் உடனே எடுக்க முடியாது. பிளட் டெஸ்ட் எடுத்து ஷுகர் இல்லாமல் இருந்தால்தான் தொடர முடியும் என்பதால் புதன் மாலை எடுக்கலாம் என்று அதுவரை சமாளிக்க மாத்திரைகள் எழுதித் தந்தார்கள்.

அடுத்த நாள் (செவ்வாய்) ஈஸிஜி லேப்பில் ப்ளட் டெஸ்ட் எடுக்க வேண்டும் என்றதும் முழங்கைக்கு மேல் அழுத்தமாக ஒரு பட்டையைக் கட்டிவிட்டு ஊசி ஒன்றை எடுத்தாள் அங்கிருந்த பெண். ‘‘சின்னதா ரத்தத் துளிதானே எடுப்பாங்க. ஊசி எதுக்கு..?’’ என்றேன். அவள் ‘‘இந்த டெஸ்ட்டுக்கு ஒரு துளி எடுத்தாப் பத்தாது. ஊசின்னா ஒண்ணும் வலி்க்காது. அழமாட்டிங்கதானே...’’ என்றாள். ‘‘சின்ன வயசுலருந்தே ஊசியைப் பாத்தாலே அழுகை வந்துடும் எனக்கு. அவ்வ்வ்வ்!’’ என்றேன். சுருக்கென்று கையில் குத்தி அவள் ரத்தம் எடுக்க, சிரிஞ்சில் ஏறிய என் ரத்தத்தின் ரத்தத்தை ஏக்கமாய்ப் பார்த்துவிட்டு வந்தேன். ரிசல்ட் என்னவோ ஆறுதலாயிருந்துச்சுப்பா... பாஸிடிவ்! நோ ஷுகர்!

ஏதோ அவர்கள் கொடுத்த மாத்திரைகள் வலியைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தது சற்றே ஆறுதல். ஆனால் பேசினால் வாய் வலித்ததது. இப்படி ‘பல்’லவனால் அவதிப்பட்ட நேரத்தில், என் இன்னொரு தங்கை போனில் என்னை அழைத்தபோது கூட நான் பேச முடியாமல் அம்மாதான் பதில் சொன்னார்கள். என்ன கொடுமைடா சாமி!

அதற்கடுத்த தினம் (புதன்) மாலை மருத்துவமனைக்குள் போனதும் வாயைத் திறந்து காட்டச் சொன்னாள் உதவி டாக்டர். வாயைத் திறந்ததும் ஊசி ஒன்றை எடு்த்து வாய்க்குள் போட வர, நான் ‘‌ஙே’ என கண்களை அகல விழித்தேன். ‘‘பேடிக்கண்டா. வாய் மரத்துப் போனால்தான் டாக்டர் ஈஸியா பல்லைப் பிடுங்கும்’’ என்று அஃறிணையிலேயே அனைவரையும் பேசி, ஊசியைப் போட்டாள் அவள்.

சற்று நேரத்தில் வாய் மரத்ததும் டாக்டர் வர, இவரின் தோற்றமே நம்பிக்கை தந்தது. ஏதோ பல்லைப் பிடித்து இழுப்பார், வந்துவிடும் என்று நான் நினைத்திருந்ததற்கு மாறாக, சுவரில் ஆணியை இப்படியும் அப்படியும் அசைத்து இழுத்துப் பிடுங்குவோம் பாருங்கள்... அப்படி கொறடால் பல்லை இப்படியும் அப்படியுமாக அசைத்து வெளியில் இழுத்துப் போட்டார் அவர். மூன்று தினங்களாய் என்னை பாடாய்ப் படுத்திய அந்தப் ‘பல்’லவன் ரத்தக் காயத்துடன் உயிரை விட்டு, ட்ரேயில் வந்து விழுந்தான்.

எதிரி இறந்து விட்டாலும் யுத்தகளத்தில் இருந்து ரத்தம் வரும் என்பதால் சமாதானத் தூதுவர்களாய் பஞ்சுத் துண்டுகளை அடைத்து சற்று நேரம் வாயை மூடிக் கொண்டிருக்கச் சொன்னார் டாக்டர். (நமக்கெல்லாம் ரொம்பக் கஷ்டமான விஷயமாச்சுதே அது). அரை மணி நேரம் அப்படியே இருக்க, பின் டாக்டர் வந்து பார்த்து விட்டு யுத்தகளத்தில் ரத்தம் அடங்கி விட்டது என்று சொல்லிவிட்டு இன்னொன்று சொன்னார். ‘செருப்பாலடித்து விட்டு வெல்லம் கொடுப்பது போல’ என்று ஒரு பழமொழி எங்க ஊர்ப் பக்கம் சொல்வார்கள். அதுபோல, பல்லைப் பிடுங்கி உச்சபட்ச வலியைத் தந்து விட்டு, ‘‘வீட்டுக்குப் போனதும் கப் ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டும் உடனே’’ என்றார் டாக்டர். ஆஹா... துன்பத்திலும் ஒரு இன்பம்!

இதைச் சொல்லிவிட்டு உ.டா.வை அழைத்து ‘பல்’லவன் பிடுங்கப்பட்ட இடத்தில் ஒரு தையல் போடச் சொல்லிவிட்டுப் போனார். அவள், ‘‘வாயைத் திறக்கறது... அசையக் கூடாது...’’ என்று என்னையும் அஃறிணையாக்கி, உள்ளே தையல் போட்டாள். ‘‘ஆய்டுச்சு... பாத்தீங்களா?’’ என அவள் சொல்ல, ‘‘வெளில போட்டிருந்தாலாவது எம்ப்ராய்டரி டிசைன் பண்ணி தையல் போடச் சொல்லிருப்பேன். வாய்க்குள்ளல்ல போட்ருக்கீங்க. எங்க பாக்கறது?’’ என்றேன்.

குபீரென்று அவள் சிரித்து விட, அடுத்த கேபினிலிருந்து டாக்டர் கோபமாக வந்து முறைத்தார். ‘‘பேஷண்ட் ஜோக் கடிக்கறது...’’ என்றாள் அவள். ‘‘வாய்ல பஞ்சைத்தான் கடிச்சுட்டிருக்கேன். ஜோக்ல்லாம் கடிக்கலை’’ என்று நான் மேலும் ‘கடி’க்க, வாயைப் பொத்திக் கொண்டு அப்பால் போய்விட்டாள் அவள். (அந்த ரணகளத்திலயும் இவன் கொழுப்பு அடங்கல பாருங்க....)

வீட்டில் சரிதாவோடு சண்டை வரும்போதெல்லாம் நான் கத்துவேன் இப்படி: ‘‘பல்லை உடைச்சிடுவேன், வாயை மூடுடி’’. பதிலுக்கு அவள், ‘‘நல்லா உடைப்பீங்க. எல்லாரையும் பட்டப்பேர் வெச்சு கிண்டல் பண்றதுக்கும், நீங்க பண்ற கேலிக்கும் யாராவது ஒருத்தர் என்னிக்காவது உங்க பல்லைத்தான் தட்டி கைல கொடுக்கப் போறாங்க...’’ என்பாள். அவளின் வார்த்தை இப்படியா நிறைவேற வேண்டும்..? ஹும்...!

-இதுதாங்க ‘பல்’லவனோடு நான் யுத்தம் செஞ்சு ஜெயித்த கதை. இந்த யுத்தத்துக்கு இடையிலதான் என்னோட சென்ற இரண்டு பதிவுகளை வெளியிட்டேன். இப்போ ரொம்ப ரிலாக்ஸ்டாக இருக்க முடிகிறது. (ராஸ்கோலு... இதெல்லாமாடா பதிவு எழுதறதுக்கான மேட்டர்னு யாரோ பல்லைக் கடிக்கறது கேக்குதே...) உங்களுடனும் ஏதாவது ‘பல்’லவன் யுத்தம் செய்ய வந்தால் தயவுசெஞ்சு அலட்சியப்படுத்திடாதீங்க... இந்த நல்ல விஷயத்தை நாட்டுக்குச் சொல்லத்தான் இவ்வளவு ‘ஹிப் டாக்ஸ்’ ஆக (அதாங்க... விலா வரியாக)  என்னோட சொ(நொ)ந்த அனுபவத்தை எழுதினேனுங்கோ...

85 comments:

 1. என்ன அழகாக எழுதுரீங்க..எங்க எப்படி இவ்வளவு சூப்பரா எழுத கத்துக்கிட்டீங்க சார்..? தொடங்கிய முதல் வரி முதல் கடைசி வரி வரை எத்தனை சுவாரஸ்யங்கள்..படிக்கவே இனிமையாக எளிதாக இருக்கிறது..தொடர்ந்து எழுதுங்கள்..அட்லீஸ் நான் உங்கள காப்பியாவது அடிச்சுக்குறேன்.மிக்க நன்றி.

  சார்..ஏதாவது பட விமர்சனம் போடலாமுனு இருக்கிங்களா ?? அதற்கும் ஆவாலாக இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அட, இவ்வளவு தூரத்துக்கு என் எழுத்தை ரசிக்கிறீங்களா குமரன்? உங்களைப் போன்றோர் தரும் உற்சாகம்தான் நல்ல எழுத்தை வரவழைக்கிறது. வேறென்ன..? சமீபத்துல நான் பார்த்த ஒரு தென்‌கொரியப் படம் ‘என்னைப் பத்தி எழுதுடா’ன்னு பாடாப் படுத்திட்டிருக்கு என்னை. அடுத்த வாரத்துல கண்டிப்பா ஷேர் பண்ணிக்குறேன். மிக்க நன்றி!

   Delete
 2. ஹிப் டாக்ஸ்-விலாவரி...

  மொழிபெயர்ப்புதிலகம் வாழுக !

  ‘‘நல்லா உடைப்பீங்க. எல்லாரையும் பட்டப்பேர் வெச்சு கிண்டல் பண்றதுக்கும், நீங்க பண்ற கேலிக்கும் யாராவது ஒருத்தர் என்னிக்காவது உங்க பல்லைத்தான் தட்டி கைல கொடுக்கப் போறாங்க...’’ என்பாள்.//

  சரிதா மன்னி சரியகத்தான் சொல்லி இருக்காங்க. ஹி..ஹி..

  நல்ல நேரத்தில் பதிவு போட்டீங்க.கொஞ்ச நாளா ஐஸ் சேர்க்காத தண்ணீர் குடித்தாலே கடவாய் பல் கூசுகின்றது.டெண்டிஸ்ட் கிட்டே போக பயம்..இப்ப உங்க பதிவை வேறு படிச்சுட்டேனா?:(

  ReplyDelete
  Replies
  1. ஸாதிகாம்மா... அலட்சியப்படுத்தாம மருத்துவரைப் பாத்துடும்மா. நான் பட்ட அவஸ்தை இருக்கே... நீங்க படக் கூடாது! சரிதாவுக்கு சப்போர்ட்டா..? நாத்தனார் சப்போர்ட்டப் பாத்தா இன்னும் குஷியாயிடுவா... என்பாடுதான் பரிதாபம்! உங்களுக்கு என் இதய நன்றி!

   Delete
 3. அருமையான நடை...
  வாசிக்கத்துண்டும் வரிகள்...
  அருமை... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. என் ‘சுய’ புராணத்தை ரசித்துப் படித்து வாழ்த்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 4. 'பல் "அவனோடு நடத்திய போராட்டம் குறித்த
  பதிவைப் படித்து ஆச்சரியம் கொண்டேன்
  துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்ற
  புலவரின் பாடல் கேட்க நன்றாகத்தான் இருக்கும்
  அவஸ்தை பட்டால்தானே தெரியும்
  அதையும் சுவாரஸ்யமாக சொல்லிப்போனதை
  நினைத்து அதிக ஆச்சரியம் கொண்டேன்
  நலமாக வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஸார்... ‘துன்பம் வரும் வேளையில் சிரிக்கச்’ சொன்னவன் அப்ப என் கையில கிடைச்சிருந்தா தாடியப் பிடிச்சு இழுத்திருப்பேன். சுவாரஸ்யமாகச் சொன்னேன் என்ற தங்களின் பாராட்டில் மகிழ்ந்து என் நன்றியை தங்களுக்கு உரித்தாக்குகிறேன்.

   Delete
 5. படிக்கும் எங்களுக்கு இது நகைச்சுவையாக இருந்தாலும், நீங்க அந்த நேரத்தில் பட்ட கஷ்டத்தை நினைத்தால் பாவமாக இருக்கிறது சார்.....

  எங்களுக்கும் அட்வைஸா சொல்லியிருக்கீங்க....

  ReplyDelete
  Replies
  1. நான் படற எந்தக் கஷ்டத்தையும் நகைச்சுவையாப் பாக்கறது எனக்கு வழக்கமாயிடுச்சு. அதனாலதான் லைஃபே ஓடிட்டிருக்கு. உங்கள் வருகைக்கும் உற்சாகம் தந்த நற்கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!

   Delete
 6. வணக்கம்...வெள்ளி அன்று எனக்கும் இதே..ரொம்ப போராட்டத்திற்கு அப்புறம் பல்லவன் வெளியே வந்து விழுந்தான்....எதுவும் சாப்பிட முடியாமல் நான் படுகிற அவஸ்தை இருக்கே.....முடியல...

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... நாம் ஒரே படகில் பயணிக்கிறோமா..? சூடாக எதையும் விழுங்கக் கூடாது, காரம் கூடாது என்று டயட்டிங் ப்ராப்ளம் சொல்லக் கூடியதா என்ன? தங்களுக்கு என் இதய நன்றி!

   Delete
 7. பல்லவ புராணம்.... ரொம்ப நகைச்சுவைப் புராணம். அங்கேயும் போய் நம்ம வாய் சும்மா இருக்காதுன்னு சரியாச் சொன்னீங்க!

  பல் பற்றியே நானும் ஒரு பதிவு சில மாதங்களுக்கு முன்பு எழுதி இருந்தேன் - ”அண்டங்காக்கையை வென்ற பல்லவன்”.

  http://www.venkatnagaraj.blogspot.in/2010/05/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. ‘பல்செட்’ பதிவு படித்து ரசித்துச் சிரித்தேன் வெங்கட். உங்களோட லேட்டா நட்பானதால நிறைய மிஸ் பண்ணிருக்கேன்னு புரிஞ்சுது. இந்தப் பதிவை ரசிச்ச உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 8. /உங்களுடனும் ஏதாவது ‘பல்’லவன் யுத்தம் செய்ய வந்தால் தயவுசெஞ்சு அலட்சியப்படுத்திடாதீங்க./

  தேவையான பகிர்வு. சீக்கிரம் குணமாகட்டும்.

  ReplyDelete
  Replies
  1. மேல் கடைவாய்ப் பல் என்பதால் அது கபாலத்துக்குச் செல்லும் நரம்புகளோடு ஒட்டியிருக்குமாம். அதனால்தான் இந்த பேரவஸ்தைப் பட்டேன் என மருத்துவர் சொன்னார். அதனால்தான் மற்றவர் படக் கூடாதென்று எண்ணிப் பகிர்ந்து கொண்டேன். விரைவில் குணமடைய வாழ்த்திய உங்களின் அன்புக்கு நெகிழ்வுடன் என் நன்றி!

   Delete
 9. மிகவும் அவஸ்தையான அனுபவங்கள்தான்....(எங்களுக்கும் அனுபவமிருக்கில்லே....!) எந்த வலி வந்தாலும் அந்த வலிதான் மற்ற வலிகளை விட அதிகம் தாங்க முடியாததாய்த் தோன்றும்.... இப்போ சரியாகி விட்டது அல்லவா...

  ஆனால் இவ்வளவு செலவு செய்ததற்கு பேசாமல் ஒரு பேட்டை ரௌடியிடம் வம்பு செய்திருந்தால் ஒரு தட்டில் சரியாகப் போயிருக்குமே...! :)))

  ReplyDelete
  Replies
  1. இப்போது 70 சதவீதம் சரியாகி விட்டேன் ஸ்ரீராம் ஸார். என்ன ஒரு யோசனை குடுத்திருக்கீங்க நீங்க! அடுத்த முறை ‘பல்’லவன் பிரச்சனை பண்ணினா ஞாபகம் வெச்சுக்கறேன். ஹி... ஹி...

   Delete
 10. இந்த தொல்லைக்குதான் நாங்கள் தினமும் பல்லு விளக்குறோம் , நிங்களும் ட்ரை பண்ணுங்க ( ஹீ .. ஹீ )

  ReplyDelete
  Replies
  1. சந்தடி சாக்குல எனக்கு ஒரு ‘குத்து’ விட்டுட்டிங்களே ராஜா... நான் தினம் ரெண்டு தடவை பல் விளக்குற ஆசாமி. ஆயிரம் இருந்தும்... வசதிகள் இருந்தும்... ஹி... ஹி... மிக்க நன்றி தங்களுக்கு!

   Delete
 11. பல்சுவை விருந்தாக உள்ளது! ரசித்தேன்...
  என்னுடைய பதிவில் புதிதாக ஒரு சுய முன்னேற்றத் தொடர்.
  'அன்புடன் ஒரு நிமிடம்...' முதல் பகுதி. 'எண்ணிச் சிந்திடுவோம்...'
  http://kbjana.blogspot.com/2012/03/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி! சுயமுன்னேற்றத் தொடரைச் சுவைக்க இதோ புறப்பட்டுட்டேன்...

   Delete
 12. பல்சுவை பதிவு என்பது இதுதானா? சிரிப்பா இருந்ததுங்கோ! (என் வலி உங்களுக்கு சிரிப்பா இருக்கான்னு பல்லை கடிக்காதிங்க.....)ஹிஹி

  ReplyDelete
  Replies
  1. க‌ரெக்ட் சுரேஷ்! இது ‘பல்’சுவைப் பதிவுதான். நீங்கல்லாம் ரசி்ச்சுச் சிரிக்கணும்னுதானே எழுதினேன். பல்லைக் கடிப்பேனா? (கடிக்கிற நிலைல பல் இப்போ இல்லைன்றது வேற விஷயம்) மிக்க நன்றி!

   Delete
 13. எதையுமே நகைச்சுவையாகப் பார்ப்பதில் உங்களை அடிக்க முடியாது கணேஷ்.

  ReplyDelete
  Replies
  1. பொதுவாவே என்னை ‘அடிக்க’ கஷ்டப்படணும். உருவம் அப்படி! உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸார்!

   Delete
 14. ஃப்ரெண்ட்...நீங்க கடிச்ச கடிக்கு வாயைத் தைக்காம விட்டாங்களே.சிரிச்சா வலி போயிடுமோ.இனி நீங்க குழப்படி பண்ணினா அடுத்த பல்லையும் பிடுங்கச் சொல்லணும்.பேடிக்கண்டா !

  ReplyDelete
  Replies
  1. நான் என்ன ப்ளான் பண்ணியா ’கடி’க்கறேன்... அதுவால்ல வருது... என்னது... இன்னொரு பல்லா...? இப்போதைக்கு வேண்டாம்மா... எஸ்கேப்!

   Delete
 15. கணேஷ் இந்தபல்லவன் என்னையும் அவஸ்தைபடவச்சிருக்கான் எனக்கும் ஷுகர்லாம் கிடையாது ஆனாலும் பல்லைப்பிடுங்க முடியாது ரூட்கேனல் பண்ணனும்னு 4 ஸிட்டிங்க் அலயவிட்டாங்க அப்புரம் எக்ச்ரேல்லாம் எடுத்து ப்ரிட்ஜ் கட்டனும்னு வேர சொன்னாங்க பல்லுல போயி எதுக்குப்ரிட்ஜெல்லாம் கட்ராங்கன்னுனினைச்சேன் அப்புரம் கேப்(தொப்பி)வேர போடனும்னாங்க.செராமைக் பல்லு பொறுத்த 4000 ரூவா ஆகும்னாங்க அப்படி இப்படின்னு 6 மாசம் அலையவிட்டாங்க.ரூட்கேனலப்போ வாயை பெரிசா திறந்தே வச்சி தாடைப்பக்கம்லாம் வலி எடுத்துடும்.ஐயோன்னுதான் ஆச்சு

  ReplyDelete
  Replies
  1. யப்பா... எவ்வளவு அவஸ்தைப் பட்டிருக்கீங்க நீங்களும். இதைப் பாத்தா நான்லாம் கம்மின்னு தோணுது. மிக்க நன்றிம்மா!

   Delete
 16. வணக்கம்! இனி நீங்கள் கலங்கரை விளக்கம் எம்ஜிஆர் ஸ்டைலில் “பல்லவன் பல்லவி பாடட்டுமே “ என்று பாடலாம்

  ReplyDelete
  Replies
  1. எம்.ஜி.ஆர். பாட்டுக்களை சும்மாவே என் வாய் முணுமுணு்த்துட்டிருக்கும் இளங்கோ. இப்ப நீங்க வேற எடுத்துக் குடுத்துட்டீங்களா... மிக்க நன்றி!

   Delete
 17. ஹா ஹா பல்லவன் போர் அட்டகாசம். ஆனால் போரை நகைச்சுவையோடு எதிர்கொண்டதற்கு நிறைய தில் வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. ‘வாய்விட்டுச் சிரிச்சா நோய்விட்டுப் போகும்’ங்கறதுதானே நம்ம பாலிஸி! முடிஞ்ச வரை சிரிக்க/சிரிக்க வைக்க ட்ரை பண்ணுவோம் பாலா. தங்களின் பாராட்டுக்கு அகமகிழ்வுடன் என் நன்றி!

   Delete
 18. ரொம்ப நாளா கவனிச்சுகிட்டு வாரேன்!யாரிது பேட்டைக்குள்ள புதுசான்னு:)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அண்ணாத்தே... கவனிச்சிங்க சரி... பேட்டைல நமக்கும் இடம் உண்டுங்களா? மிக்க நன்றி!

   Delete
 19. மறுபடியும் ஒரு நகைச்சுவைப் பதிவு. இயல்பாவே உங்க நடை நகைச்சுவை கலந்ததாதான் இருக்கு. ஓ.கே. 'பல்'லவ யுத்தம் அருமை. இரத்தம் வந்தாலும் நீங்க ஜெயிச்சிட்டீங்களே. அது போதும். மின்னல் வலிகள் மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. மின்னல் வரிகள்ல மலர்ந்த மின்னல் வலிகளைப் பாராட்டிய நண்பனுக்கு என் இதய பூர்வமான நன்றி!

   Delete
 20. துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்று சொன்னார் வள்ளுவர். உங்களுக்குத் துன்பம் வந்த வேளையிலும் எங்களைச் சிரிக்க வைத்துவிட்டீர்கள்!
  த ம 12 (நாங்களும் கணக்குப் பண்ணுவோம்ல!)

  ReplyDelete
  Replies
  1. சிரித்து மகிழ்ந்த உங்களுக்கு என் இதய நன்றி!

   Delete
 21. ‘பல்’லவனோடு நீங்கள், அல்ல அல்ல பல் டாக்டர் புரிந்த யுத்தம் பற்றி விரிவாக விளக்கிய உங்கள் பதிவைப் படித்த எனக்கு பல் சுளுக்கிக்கொண்டது! ஒவ்வொரு வரியையும் இரசித்துப்படித்தேன். இனி பல் வலி வந்தால் (வர வேண்டாம்) தற்காலிக நிவாரணியாக புளியையும் உப்பையும் வலிக்கும் இடத்தில் வைக்கவும் அல்லது பொட்டாசியம் பர்மாங்கனேட்டை தண்ணீரில் கலந்து கொப்பளிக்கவும்

  ReplyDelete
  Replies
  1. நன்று... நீங்கள் அளித்திருக்கும் யோசனை எனக்கு மட்டுமின்றி, இப்பதிவைப் படிக்கும் அனைவருக்கும் பயன்படும். தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

   Delete
 22. பதிவுலகில் முடிசூடா மன்னாக வலம் வரும் பல்லவ மன்னரே யுத்த நேரத்திலும் பதிவுகள் இட்டு யுத்ததிலும் வெற்றி பெற்று வந்த மன்னா நீர் வாழ்க வாழ்க என்று உங்களை வாழ்த்துகிறேன்.

  உங்களை நான் வாழ்த்தியதால் மறக்காமல் என் விலாசத்திற்கு பொற்காசுகளை அனுப்பி வைக்குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.

  பதிவு அருமை..குருவே இப்படியெல்லாம் பதிவுகள் போடலாம் என்று உங்களிடம் கற்று கொண்டேன் நன்றி. கண்டிப்பாக இந்தியா வரும் போது குருதட்சனையாக எலுமிச்சம்பழம் கண்டிப்பாக வாங்கி வந்து உங்களை சந்திக்கிறேன்

  நல்ல வேளை நீங்கள் சாருநிவேதா போல இல்லை. இல்லையென்றால் உங்களை பார்க்க பாட்டிலோடதான் வந்து பார்க்க முடியும்.

  ReplyDelete
  Replies
  1. என்னை ‌தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தும் உங்களுக்கு எத்தனை பொற்காசுகளும் தரலாம். (இங்கு சந்திக்கையில் தரப்படும்) யப்பாடா... சாருபோல இல்லாம தப்பிச்சேன்! பாட்டிலுக்கும் எனக்கும் ரொம்ம்ம்ப தூரம் நண்பா! மிக்க நன்றி!

   Delete
 23. நானும் இதே மாதிரி ஒரு பல் மருத்துவரிடம் போனேன்... ஒரு எக்ஸ் ரே எடுக்க சொன்னார், எடுத்து விட்டு உங்களுக்கு பல் வெளியே வராமல் உள்ளேயே வளருது அதனால உங்களுக்கு தலைவலி வருது என்றார்.. இதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம் என்றார்... ஆளை விடுடா சாமி என்று அன்று கிளம்பி வந்தவன் தான்... தலைவலி வந்தால் ஒரு தலை வலி மாத்திரை சாப்பிட்டு விட்டு தூங்கி விடுவேன்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பா... பாத்து நாளாச்சு? நலம்தானே? பல் உள்ளேயே வளர்வது என்கிற பிரச்சனை எனக்குப் புதியது. ‘பல்’லவனுடன் மோதிய அனுபவம் பலருக்கும் இருந்திருக்குது தெரிய வர்றப்ப ஆறுதலா இருக்கு. தங்களின் வருகையினால் மிக மனமகிழ்வுடன் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

   Delete
 24. //‘ஆ’வென்று வாயைப் பிளந்தேன். ‘‘இவ்வளவு திறக்க வேணாம் ஸார். நான் என்ன வாய்க்கு உள்ளயா போய்ப் பாக்கப் போறேன். கொஞ்சம் கம்மி பண்ணிக்குங்க...’’ என்றார் மனோபாலா பேசும் ஸ்லாங்கில்!
  //

  ஆஹா! உங்கள் நகைச்சுவையை என்னவென்று பாராட்ட...
  துன்பம் வரும் போதும் சிரிச்சிருக்கிங்க பாருங்க....
  அங்க தான் நிக்கறீங்க!!!

  ரொம்ப ரசித்தேன்...விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. இதனை ரசித்துப் பாராட்டியதற்கும், விரைவில் குணம் பெற வாழ்த்திய அன்பிற்கும் மனமகிழ்வுடன் தலைவணங்கி என் நன்றி!

   Delete
 25. நல்ல நகைச்சுவை இத்தனை வலியிலும்! இந்த மனநிலை தான் எல்லோருக்கும் வேண்டும். உங்கள் பதிவின் மூலம் கடுகு அவர்களுக்கு சதாபிஷேகம் நடந்ததை தெரிந்துகொண்டு அவருக்கு என் நமச்காரங்களைத் தெரிவித்தேன். நெரில் அறிமுகமில்லாமலேயே வாழ்த்தி அவரின் புஸ்தகத்தையும் அனுப்பிவைத்தார். உங்களுக்கும் என் நன்றி. - ஜெகன்னாதன்

  ReplyDelete
  Replies
  1. எந்தத் துன்பமும் புன்னகையுடன் எதிர்கொண்டால் சிறுத்து விடும். கடுகு ஸார் மிகச் சிறந்த பண்பாளர். அவரின் அறிமுகம் தங்களுக்குக் கிடைகக அரங்கன் என்னை ஒரு கருவியாய் பயன்படுத்தியதில் மகிழ்ச்சியுடன் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 26. ஒவ்வொரு வரியிலும் நகைச்சுவை நண்பரே..
  பல் வலியினால் அவஸ்தை பட்டாலும்
  அதை இயல்பாக நகையுணர்வுடன் கொடுத்தமை அழகு...

  ReplyDelete
  Replies
  1. வருக நண்பா... இயல்பான இந்த நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி!

   Delete
 27. வலியிலும் நகைச்சுவை குறையவில்லை. தொலைதூரத்தில் மினுக்கிடும் நட்சத்திரமாய் வலியை அறிமுகம் செய்த விதத்திலாகட்டும், செருப்பால் அடித்து வெல்லம் கொடுத்த உவமையாகட்டும், நகைச்சுவைக்குப் பஞ்சமேயில்லை. இனிப்பு உடலில் இல்லை, உங்கள் பேச்சிலும் எழுத்திலும் எக்கச்சக்கமாய் உண்டு. பல்லவனிலிருந்து வல்லவனானதற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஹையா... இனிப்பு உடலில் இல்லை, என் பேச்சிலும் எழுத்திலும் எக்கச்சக்கமாய் உண்டு என்ற தங்களின் பாராட்டு எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வைட்டமின் டானிக். வாழ்த்துக்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி தோழி.

   Delete
 28. அட...பலலுகூட இவ்வளவு மல்லு கட்டியிருக்கீங்க...
  வாழ்க பல்லுடன் - சாரி...வளமுடன்.
  வேலன்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கமெண்ட்டுகள் ஒவ்வொன்றும் மிகச் சுருக்கமாக அழகாக அமைந்து இன்னும் எழுத மாட்டாரா என்று தோன்ற வைக்கும் நண்பா. இப்போதும் அப்படியே. தங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
 29. Replies
  1. ஹா... ஹா... அழகாக சுருக்கமாக வாழ்த்திய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

   Delete
 30. "பல்"லவனோடு மிகவும் ரசனையான யுத்தம்.

  ReplyDelete
  Replies
  1. ரசனையாய் ரசித்த தங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
 31. பல்லை எடுக்க முடிந்தது அவரால் உங்கள் நகைச்சுவை சொல்லை தடுக்க இயலுமா எவரால்?

  சா இராமாநுசம்

  ReplyDelete
  Replies
  1. நகைச்சுவையை ரசித்து மகிழ்ந்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

   Delete
 32. பல்லவன் உங்க வாயை கட்டி போட்டதால் சில நாட்கள் வீட்டுல நிம்மதியா இருந்திருப்பாங்களே அண்ணா.

  ReplyDelete
  Replies
  1. அதையேம்மா கேககறே... என் பல்வலி அவஸ்தையால மனம் கஷ்டப்பட்டாலும் ஜாடையிலயே நான் எதையும் கேட்டதையும், வலிக்கிடையில பேசறப்ப சின்னச் சினனதா ஜோக்கடிச்சதையும் ரசிக்கத்தான் செஞ்சாங்க. (நம்மகூட இருந்துட்டு இந்த சென்ஸ் இல்லாட்டி எப்புடி) ஹி... ஹி...

   Delete
 33. தமிழ்மணத்துல 11வது இடம் பிடிச்சதுக்கு வாழ்த்துக்கள் அண்ணா

  ReplyDelete
  Replies
  1. சென்ற வார இடுகைகள்ல எனக்கு 11வது இடம் தந்திருக்காங்கன்னு நீ சொன்னப்பறம் தாம்மா போய்ப் பார்த்து சந்தோஷப்பட்டுக்கிட்டேன். இனி ‘தங்கையுடையான் பதிவுக்கஞ்சான்’ன்னு புதுப் பழமொழி எழுதிட வேண்டியதுதான். மிக்க நன்றிம்மா...

   Delete
 34. பல்லை பக்குவமாக பிடுங்கிய டாக்டர் பல்லாண்டு வாழ்க!!

  ReplyDelete
  Replies
  1. டாக்டரை ‘பல்’லாண்டு வாழ்த்திய சிவாவுக்கு மனமகிழ்வுடன் கூடிய என் நன்றி.

   Delete
 35. சார் பட்ட அவஸ்தைகளை நகைச்சுவையா சொல்லிட்டிங்க,பல் பிடிங்கிய பின்னர் தையலா?புதுசா இருக்கே,நல்ல வேலை பல்லை பிடுங்க சொல்லிட்டாங்க,நவீன சிகிச்சைன்ற பேரில் உங்களை தொல்ல பண்ணாம விட்டாங்களே.எத்தன தட பல் விளக்கினாலும் வரப்போகும் பல் தொல்லைகளை முழுமையா தவிர்க்க முடியாது சார்.சில பேருக்கு ஓவரா பல் தேச்சே பல் பிரச்சனைகள் வருது.

  ReplyDelete
 36. எனக்கு ஏற்கனவே ஒரு பல் பிடுங்கியிருக்கேன். அபப தையல் போடலை. இந்தப் பல் மேல் வரிசை கடைவாய்ப் பல்ங்கறதால மூளைக்குப் போகற நரம்போட சேர்ந்ததாம். அதனால தையல் போட்டாங்க. உங்கள் வருகைக்கும் நற்கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 37. தங்கள் பதிவை படித்த பின் கருத்துரை பக்கத்துக்கு வந்தேன் என்னால் என்ன எழுதுவதென்று தெரியாமல் இப்போது திண்டாடுகிறேன் அண்ணா நான் நினைத்தவற்றையெல்லாம் ராஜி முதல் சகலரும் எழுதி தள்ளிவிட்டார்கள். சரி இருக்கட்டும் என்னால் ஆன வாழ்த்து............................. தமிழ் வலை யில் தமிழ் கலை வளர்க்கும் கணேஷ் அண்ணாவிற்கு இச்சிறிய தங்கையின் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்..

  ReplyDelete
  Replies
  1. என் எழுத்து பிடிச்சிருந்ததுன்னு தங்கைகள் சொன்னால அதைவிட வேறு மகிழ்வு ஏது? மனமகிழ்வுடன் என் நன்றி எஸ்தர்...

   Delete
 38. தமிழன் பல்லவனோடு யுத்தம். பிடுங்கிப் போட்டிட்டாங்க. நல்ல சுவையாக எழுதியிருந்தீர்கள். ஓல்டர் போஸ்ற்றுக்குப் போய் வாசித்தேன் நன்றி. பாராட்டுகள், சந்திப்போம்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. ஓ... இப்போதான் கவனிச்சீங்களா? அதனாலென்ன... யுத்தத்தை ரசித்துப் பாராட்டியதிலேயே எனக்கு மிக்க மகிழ்ச்சிதான். மகிழ்வு தந்த உங்களுக்கு என் நன்றி!

   Delete
 39. செருப்பாலடித்து வெல்லம் இப்பத்தான் கேள்விப்படுறேன். அருமை. யூஸ் பண்ணிக்கிறேனே ப்லீஸ்.
  ஐஸ்க்ரீம் சாப்பிடச் சொன்ன டாக்டர் கத்துக்குட்டி தான் சந்தேகமேயில்லை. ஐஸ் வைங்கனு சொன்னா ஒருவேளை நீங்க வேறே ஏதாவது புரிஞ்சுக்குவீங்கனு அப்படி சொன்னாரா?
  பல்லெல்லாம் மாணிக்கப் பல்லாயிடுச்சா இப்போ? நல்லது.

  ReplyDelete
  Replies
  1. என் இடத்துலருந்து எதையும் எப்ப வேணும்னாலும் நண்பர்கள் பயன்படுத்திக்கலாம் ஸார். மாணிக்கப் பல்! இதுமாதிரி அருமையான வார்த்தைகள் உங்களிடமிருந்து நிறைய சுட்டு வைத்துக் கொண்டிருக்கிறேன் நான்! நன்றி!

   Delete
 40. பல் செக்கப் படம் உங்கள மாதிரியே இருக்கே? வரைஞ்சீங்களா?

  ReplyDelete
  Replies
  1. ஸ்கூல் டேஸ்லயே நான் யானை படம் வரைஞ்சா குதிரை மாதிரி இருக்குன்னு கிண்டல் பண்ணுவாங்க. நானாவது... வரையறதாவது? எதேச்சையா கூகிள் தேடல்ல கிடைச்சது ஸார்!

   Delete
 41. ‘‘வெளில போட்டிருந்தாலாவது எம்ப்ராய்டரி டிசைன் பண்ணி தையல் போடச் சொல்லிருப்பேன். வாய்க்குள்ளல்ல போட்ருக்கீங்க. எங்க பாக்கறது?’’///ஹாஹாஹா .... இதுக்குப் பேருதான் “இடுக்கண் வருங்கால் நகுக ” வா? நல்லா ஃபாலோ பண்றீங்க வள்ளுவர..... ம்ம்ம்ம் பதிவு மிக அருமை! நன்றி!

  ReplyDelete
 42. வலைச்சரத்தில் அடையாளம் காட்டப்பட்டதற்கு
  வாழ்த்துகள்..பாராட்டுக்க்ள்..

  ReplyDelete
 43. அட்டகாசம் போங்க ....!

  ஆமா அடுத்து எப்பன்னேன் பல்லு புடுங்க போவீங்கோ ..? ஹா ஹா !இல்ல இன்னொரு நகைச்சுவை பதிவு கிடைக்கும்ல அதான் ....!

  ReplyDelete
 44. ஹா ஹா ஹா கலக்கல்

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube