Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Friday, November 9, 2012

இதயக்கோயிலில் குடியேறிய ஈசன்!

Posted by பால கணேஷ் Friday, November 09, 2012

வர் பரம ஏழை. ஆனால் சிவபக்தியில் செல்வந்தர். உடல் முழுவதும் திருநீறைப் பூசுவதனால் அவரின் இயற்பெயரே மறைந்து ‘பூசலார்’ என்ற பெயரே நிலைத்து விட்டது. ஈசனுக்கு ஒரு ஆலயம் எழுப்பிட வேண்டுமென்பதை தன் வாழ்நாள் லட்சியமாக எண்ணியிருந்தார் அவர். பலரிடமும் நிதி கேட்டு இறைஞ்சினார். அவருக்கு உதவிட எவரும் முன்வரவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது. பூசலார் ஒரு முடிவுக்கு வந்தார். அதாவது...தன் சித்தத்தில் உறையும் சிவனுக்கான ஆலயத் திருப்பணியை தன் மனதிலேயே நடத்தி தன் அபிலாஷையைப் பூர்த்தி செய்து கொள்ளத் தீர்மானித்தார்.

நல்ல நாள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, ஒரு மரத்தடியில் தியானத்தில் அமர்ந்தார். மூடிய கண்களுக்குள் முழுமையாக வாழத் தொடங்கினார். ஆகம விதிகளின் படி ஆலயம் அமையத் திட்டமிட்டார்; பாவனையிலேயே கல் தச்சர்களை வரவழைத்து கலை நயம் மிக்க சிற்பங்களை உருவாக்கினார்; பிராகாரங்களை எழுப்பினார்; தச்சர்களை வரவழைத்து ஆலயத்தின் கதவுகளை செதுக்கினார். இரவு, பகல் பாராமல் இருதயத்திலேயே கோயில் எழுப்பும் இனிய பணியில் ஈடுபட்டார். இறுதியில் கும்பாபிஷேகத்துக்கான நாள் குறித்து, கைலைநாதனை அங்கே குடியேறுமாறு மனம் குவித்து வேண்டுகோள் விடுத்தார்.

தே நேரத்தில்... நகரங்களில் சிறந்த காஞ்சியில் கைலாசநாதரின் கோயிலை அழகுறக் கட்டி முடித்திருந்தான் ராஜசிம்ம பல்லவன். கும்பாபிஷேகத்திற்காக நகரமே விழாக்கோலம் பூண்டிருக்க அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய சிவன்- தான் அதே தினத்தில் திருநின்றவூரில் பூசலார் என்ற பக்தர் எழுப்பும் ஆலயத்தில் உறையப் போவதாகவும், வேறொரு நாளில் பல்லவ்ன கும்பாபிஷேகம் நடத்தட்டும் என்றும் கூறி மறைந்தார். கண் விழித்த பல்லவனுக்கு மனமெல்லாம் வியப்பு. பல ஆண்டுகள் இரவு பகல் பாராது உழைத்து தான் நிர்மாணித்த ஆலயத்தைவிட திருநின்றவூர் ஆலயத்தில் அப்படியென்ன சிறப்பு இருக்கிறது என்று இறைவன் அங்கு செல்லத் தீர்மானித்தார் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் தன் ஆலய கும்பாபிஷேகத்தை நிறுத்திவிட்டு ஆன்‌றோர் புடைசூழ திருநின்றவூர் வந்தான்.

ஹ்ருதயாலீஸ்வரர்
என்ன ஆச்சர்யம்! கும்பாபிஷேகம் நடக்கும் ஊர் மாதிரி எந்தப் பரபரப்புமில்லாமல் ஊர் அமைதியாக இருந்தது. அங்குள்ளவரிடம் விசாரித்தான் மன்னன். ‘‘பூசலாரா? அவர் சிவனேன்னு மரத்தடில உக்காந்து தியானம் பண்ணிட்டிருக்காரே தவிர, கோயில் எதும் கட்டின மாதிரி தெரியலையே’’ என்று பதில் கிடைத்தது. பூசலார் இருந்த மரத்தடியை அடைந்த மன்னனும் மற்றையோரும் அங்கு ஓர் அதிசயக் காட்சியைக் கண்டனர். கண்மூடி அமர்ந்திருந்த பூசலாரின் இதயப் பகுதியில் தெய்வீக ஒளி வெள்ளம். அங்கே மானசீகமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த ஆலயத்தில் வேள்வியும், மற்ற மங்கலச் சடங்குகளும் மனதளவில் நடந்தேறுவதை அனைவரும் காண முடிந்தது. உரிய நேரத்தில் தனக்கான சந்நிதியில் நமச்சிவாயன் அனைவரும் பார்க்க குடியேறினான். கைலாசநாதனைக் கண்குளிரத் தரிசித்து மன்னனும் மற்றையோரும் பேறு பெற்றனர். படைபலம் மிக்க பல்லவன், எளியவரான பூசலாரின் கால்களில் விழுந்து, பணிந்து அவர் இதயத்தில் எழுப்பிய அதே கோயிலை நிஜத்திலேயே நிர்மாணித்துத் தர அனுமதி கேட்டான்.

பூசலார் புளகாங்கிதம் அடைந்தார். அவர் அருளாசியுடன் திருநின்றவூரில் (சென்னையிலிருந்து 33 கி.மீ. தூரம்) ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. பூசலாரின் இதயத்தில் எழுந்தருளிய காரணத்தால் ஈசன், இருதயாலீஸ்வரன் என்று பெயர் கொண்டு இவ்வாலயத்தில் எழுந்தருளினார்.

லய தரிசனம செய்வதற்கு முன்பு இந்த ஆலயத்தின் சிறப்பொன்றைச் செப்பிட விழைகின்றேன். இருதயாலீஸ்வரர் எழுந்தருளியிருக்கும் கருவறையின் மேற்கூரையில் இதய வடிவில் நான்கு பிரிவுகளுடன் இதயக் கமலம் செதுக்கப்பட்டுள்ளது. இதய நோயால் துன்புற்றிருப்பவர்கள் இங்கு வந்த இறைவனை மனமுருக வேண்டி பிரார்த்தனை செலுத்தினால் அந்நோய்களிலிருந்து விடுபடுகிறார்கள் என்பது மற்றொரு சிறப்பு. இப்போது ஆலயத்தினுள் நுழைவோம்.

லயம் மூன்று பிராகாரங்களைக் கொண்டுள்ளது. கிழக்குக் கோபுரம் வழியே நுழைந்ததும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கொடிமரம். அடுத்து பலிபீடம். அதையடத்து சிறு தனி மண்டபத்தில் நந்திதேவரின் திருவுருவம். விநாயகரும், வேலவனும் இருபுறமும் வாசம் செய்ய, நேர் எதிரில் இறைவனின் இனிய சன்னிதி. கருவறை வாயிலில் மற்றொரு நந்தி மற்றும் பலிபீடம் இருக்கின்றன. விரும்பி வழிபட்ட பக்தனின் இதயத்தில் குடியேறிய இருதயாலீஸ்வரன் இங்கே லிங்க ரூபத்தி்ல் காட்சி அருள்கிறார்.

ஈசனை இதயபீடத்தில் அமர்த்தி கும்பாபிஷேகமே நடத்திப் பார்த்த பூசலாருக்கு கருவறையிலேயே இடம் அளிக்கப்பட்டுள்ளது. இறைவனுக்கு இடதுபுறம் நின்றிருக்கிறார் பூசலார். லிங்கமே அவர் பக்கம் சற்று சாய்ந்திருப்பது போல் தோற்றம் தருகிறது. லிங்கத்தின் நெற்றியில் மூன்று பட்டையாகத் திருநீறு. சரவிளக்குகளில் பூத்திருக்கும் தீச் சுடர்கள். பூசலாரின் வலது கரத்தில் சின் முத்திரை, இடது கரம் இதயத்தின் அருகில் இருக்க, அதி்ல சிறு லிங்கமாக இருதயாலீஸ்வரன்.
பூசலார்

உமாபதியை வணங்கி, சந்நிதியை வலம் வருகையில் அது கஜபிருஷ்டம் என்கிற அரைவட்ட வடிவில் அமைந்துள்ளதை உணர முடிகிறது. சந்நிதியின் வெளிச் சுவரில் தென்புறத்தில் திருமுகத்தில் குமிழ் சிரிப்புடன் தக்ஷிணாமூர்த்தி, மேற்கில் மகாவிஷ்ணுவின் பிம்பம். அடுத்திருப்பது சிருஷ்டிக் கடவுள் பிரம்மன். வடபுறத்தில் துன்பங்களைத் துரத்தி அடிக்கும் அன்னை துர்க்கை ‌குடி கொண்டிருக்கிறாள்.

மூலிகை வண்ணங்களால் எழுதப்பெற்ற ஆலயத்தின் மேற்கூரையிலுள்ள ஓவியங்களை ரசித்தபடி கடந்து வந்தால், சந்நிதியின் தென்மேற்கு மூலையில் ஸ்தல விநாயகர், வடமேற்கு மூ‌லையில் வள்ளி-தெய்வானையுடன் வரம்தரும் சிவசுப்ரமணியர். வடக்கில் சிவகாமி சமேதராக விளங்கும் நடராஜருக்கான தனி அறை. அருகிலேயே பள்ளியறை. அதையடுத்து ஸ்ரீ பைரவர். வெளியே வந்ததும் இவ்வாலயத்தை நிர்மாணித்துத் தந்த ராஜசிம்ம பல்லவனின் சிற்பம் கைகூப்பிய நிலையில் அழகுற மிளிர்கிறது.

இருதயாலீஸ்வரரின் ஆலயத்தில் மரகதாம்பிகை என்ற பெயரில் தனிச் சந்நிதியில் அன்னை உறைகிறாள். தென்திசை நோக்கிய நின்ற திருக்கோலம். நான்கு திருக்கரங்கள். மேல் இரு கரங்களில் மலரும், பாசமும். கீழ் இரு கரங்களில் அபயஹஸ்த முத்திரை, வலது கரத்தில் அன்போடு வீற்றிருக்கும் கிளி. அன்னைக்கு அர்ச்சித்த மலர்களும், குங்குமமும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. ‌பொதுவாக ஈசானிய மூலையில் காணப்படும் நவக்கிரகங்கள் இந்த ஆலயத்தில் அக்னி மூலையில் அமைக்கப்பட்டுள்ளன.

த்தனை பிராகாரங்களையும் இறைச் சிற்பங்களையும், கலை நுணுக்கமுடன் மனதிலேயே அமைத்து வழிபட்டு, இறைவனருள் பெற்ற பூசலார் நாயனாரைக் குறித்து மனதினுள் வியக்காமல் இருக்க முடியவில்லை. பல்லவன் பாங்குறப் படைத்த இந்த ஆலயத்தை தரிசித்து முடிந்து இல்லம் திரும்புகையில் மனமெங்கும் மகிழ்வும் அமைதியும் வியாபித்திருக்கும். ஒரு முறை சென்று தரிசித்து, உணர்ந்து பாருங்கள்.

Monday, May 28, 2012

நோய் தீர்க்கும் மருத்துவன்!

Posted by பால கணேஷ் Monday, May 28, 2012

கிருத யுகத்தில் வீக்ஷாரண்யம் என்ற அடர்வனத்தில் ‘ஹிருத்தாபநாசினி’ என்ற தீர்த்தக்குளம் ஒன்று அமைந்திருந்தது. ஒவ்வோர் ஆண்டும் கங்கை முதலான பல தீர்த்தங்கள் இந்‌தக் குளத்து நீரோடு கலப்பதாக ஐதீகம். இந்த உண்மையை அறிந்திருந்த முனிவர்களும் தேவர்களும தை அமாவாசையன்று இக்குளத்திற்கு வந்து நீராடிச் செல்வார்கள். தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருந்த சாலிஹோத்ரர் என்ற அந்தணர், ஒரு தை அமாவாசையன்று இங்கு வந்தடைந்து முனிவர்களும் தேவர்களும் நீராடும் காட்சியைக் கண்டு விவரங்களை விசாரித்தறிந்தார். ‘இப்பேர்ப்பட்ட குளத்தி்ன அருகில் இறைவன் இல்லாதிருப்பதா?’ என்ற எண்ணம் அவருள் எழுந்தது.

ஓராண்டு காலம் ஒரு கணமும் பிறழாமல் திருமாலை நோக்கித் தவம் செய்வது என்று தீர்மானித்தார். அதற்கு முன் ஒரு வேளை மட்டும் ஆகாரம் உண்ணலாம் என்று அன்னம் தயாரித்தார் அதிதிக்கு உணவளித்து விட்டு உண்ணுதல் மரபென்பதால் காத்திருந்தார். கண்கள் பஞ்சடைந்து களைப்புடன் காணப்பட்ட ஒரு முதியவர் வந்து யாசகம் கேட்க, மகிழ்வுடன் அவருடைய பங்கைப் படைத்தார். அவர் பசி அடங்கவில்லை. ‘இன்னும் கிடைக்குமா?’ என்று கேட்டார். தன் பங்கையும் சாலிஹோத்ரர் தர, அதை உண்டு திருப்தியுடன் சென்றார் முதியவர். வயிறு வாடினாலும் மன நிறைவுடன் சாலிஹோத்ரர் தவத்தில் ஆழ்ந்தார்.

அடுத்த தை அமாவாசையன்று தேவர்களும், ரிஷிகளும் குளத் தில் நீராட வர, கண் விழித்த சாலிஹோத்ரர் ஓராண்டு ஆகி விட்டதை உணர்ந்தார். குளத்தில் நீராடி, ஆண்டவனைத் தொழுது அன்னம் தயாரித்தார். வழக்கம்போல் அதிதிக்குப் பங்கு பிரித்தார். ஆச்சரியமாக, சென்ற ஆண்டு வந்த அதே முதியவர் இன்னும் உடல் தளர்வுற்று பசியுடன் வந்து யாசகம் கேட்டார். சாலிஹோத்ரர் அவர் பாதத்தைக் கழுவிப் பணிந்து அன்னம் படைத்தார். அதிதிக்குரிய பங்‌கை உண்டபின்னும் அவர் பசி அடங்கவில்லை என்பதைக் குறிப்பாலுணர்ந்த சாலி‌ஹோத்ரர், தன் பங்கையும் அவர் இலையில் பரிமாறினார். அதையும் உண்ட முதியவர் கண்ணில் ஒளி பிறந்தது. ‘‘ஐயா, பசி தீர்ந்தது. உண்ட மயக்கத்தால் உறக்கம் பிடித்தாட்டுகிறது. படுக்கக் கொஞ்சம் இடம் வேண்டும். எவ்வுள் படுப்பது?’’ என்று வினவினார்.

சாலிஹோத்ரர் தன் பர்ணசாலையைக் காட்ட, முதியவர் அங்கு படுத்தார். கடுங்குளிரினால் அவர் உடல் நடுங்குவதைக் கண்ட சாலிஹோத்ரர் தான் ஆடையாக அணிந்திருந்த மரவுரியை முதியவருக்குப் போர்த்தி விட்டு வெளியே வந்தார். அதன்பின் நிகழ்ந்தது அதிசயம்! துந்துபி வாத்யங்கள் முழங்க, கந்தர்வர்கள் கானமிசைக்க, அப்சரஸ்கள் நடனமிட, சாலிஹோத்ரரின் முன்பாக திருமா‌ல் திவ்ய சரீரத்துடன் ஆடை ஆபரணங்கள் அணிந்தவராய் காட்சியளித்தார். ‘‘முதியவராக வந்து உம்மிடம் யாசகம் பெற்றது யாமே. உனக்கு என்ன வேண்டும் சாலிஹோத்ரா?’’ என்று வினவினார்.

சாலி‌ஹோத்ரர் ஆனந்தக் கண்ணீருடன் மண்டியிட்டு, ‘‘ஐயனே, எனக்கு எதுவும் வேண்டாம். உலக மக்களை உய்விக்க நீ இங்கேயே எப்போதும் எழுந்தருளியிருக்க வேண்டும். இக்குளத்தில் நீராடி உன்னை தரிசிக்கும் பக்தர்களுக்கு இடர் எதுவும் நேராமல் காத்தருள வேண்டும்’’ என்று வேண்டினார். ‘‘உமக்காக வேண்டாமல் உலக மக்களுக்காக வேண்டினீரே... உமது சிரசின் மீது ஆணையாக இனி எக்காலமும் நான் இங்கே கிடந்த கோலத்தில் காட்சி தருவேன். என்னைத் தரிசிக்கும் மக்களின் பிணிகளை அகற்றி, அவர்தம் பாவங்களைப் ‌போக்கி அருள்பாலிப்பேன்’’ என்று அருளினார்.

நாராயணன் விரும்பிப் படுத்த பர்ணசாலையே கர்ப்பக்கிரகமாய் .உருவெடுக்க பல்லவர் - சோழர்கள் காலத்தில் அங்கே ஆகம விதிப்படி ஓர் ஆலயம் எழுப்பப்பட்டது. கோயிலின் நுழைவாயிலின் மேல் ஐந்தடுக்கில் கோபுரம் அமைந்தது. அங்கே குடி கொண்ட பெருமாள் ஆழ்வார்கள் காலத்திலிருந்த ‘வீரராகவப் பெருமாள்’ என்று அழைக்கப்படலானார். தன்னை தரிசிக்கும் பக்தர்களின் பிணிகளைப் போக்கும் சக்தி படைத்தவராக விளங்கவதால் ‘பிணிதீர்த்த பெருமாள்’ என்றும் ‘வைத்திய வீரராகவப் பெருமாள்’ என்றும் வழங்கலாயின.

பெருமாள் ‘எங்கே படுப்பது?’ என்று கேட்கும் விதமாக ‘எவ்வுள்?’ என்று வினவியதால் ‘திருஎவ்வுளூர்’ என்று பெயர் பெற்று, அந்த ஊர் இன்று ‘திருவள்ளூர்’ என்று அழைக்கப்படுகிறது. திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆலயத்தில் நுழைந்தவுடன் விஸ்தாரமான ஒரு முற்றம், மையத்தில் பலி பீடம், கொடிமரம். அதைக் கடந்து உட்சென்றால் கோயில் கொண்ட பெருமாளின் கூடம். இரு பதினாறு கால் மண்டபங்களுக்கிடையில் அழகாய் அமைந்த கருடன் சன்னதி. கணமும் கண்ணிமைக்காமல் பெருமாளை தரிசித்தபடி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார் கருடாழ்வார். கருடாழ்வாருக்கு நேரெதிரே கிழக்கு திசை நோக்கி வீரராகவப் பெருமாளின் கர்ப்பக்கிரகம்.

அரவணையில் கிடந்த கோலத்தில் பெருமாள் தென்திசையில் தலையும், வடதிசையில் திருவடியும் வைத்து, இடக்கரம் அவர் நாபியில் உதித்த நான்முனுக்கு பிரவண மந்திரத்தை உபதேசிக்க, வலக்கரம் சாலி ஹோத்ரரின் தலை மீது வலக்கரம் வைத்து சயனித்த திருகக‌ோலத்தில் சேவை சாதிக்கிறார். பெருமாள் சன்னதியில் உட்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் லக்ஷ்மி நரசிம்மரின் சன்னதி. வடமேற்கு மூலையில் உள்ள சன்னதியில் மார்பில் விஜயவல்லி துலங்க, பதினாறு கரங்களுடன் காட்சியளிக்கிறார் சக்கரத்தாழ்வார்.

வெளிப்பிரகாரத்தில் ஆழ்வார்களுக்கான இரண்டு மணி மண்டபங்கள். அதையடுத்து வசுமதித் தாயார் என்றும் கனகவல்லித் தாயார் என்றும் போற்றப்படும் தாயார் சன்னதி. கனகவல்லித் தாயார் அமைதியும், கருணையும் துலங்கும் முகத்துடன் காட்சி தருகிறாள். ஸ்ரீ வேதாந்த தேசிகர் இந்தத் தாயாரின் பேரில் 30 ஸ்லோகங்கள் கொண்ட ‘ஸ்ரீ ஸ்துதி’ பாடியிருக்கிறார். தாயார் சன்னதிக்கு நேர் பின்புறம் தென்மேற்கு திசையில் அமைந்திருக்கும் சன்னதியில் ஸ்ரீராமர், சீதாப்பிராட்டி, இளையபெருமாள், ஆஞ்சநேயர் ஆகியோருடன் காட்சியளிக்கிறார். அடுத்தது ஸ்ரீ வேணுகோபாலன் சன்னதி. பாமா, ருக்மணி சகிதம் புல்லாங்குழலுடன் காட்சி தருகிறான் புருஷோத்தமன்.

பிரகாரத்தின் வடக்கு திசையில் ஒரு சிறு மண்டபம். அதில் சுவாமியின் கல் பாதங்கள். ‘உடல் உபாதைகள் நீங்க வேண்டும்’ என்ற பிரார்த்தனை யுடன் வருபவர்கள் இந்த கல் பாதத்தில் மிளகு கலந்த உப்பு சமர்ப்பிக்கிறார்கள். அவர்களின் பிணி நீக்கி அருள்கிறார் வைத்திய வீரராகவப் பெருமாள். ஆலய தரிசனம் ‌முடித்து வெளிவந்தால் ஆலயத்தின் வலதுபுறம் ஹிருத்தாபநாசினி குளம். இக்குளத்தில் வெல்லத்தைக் கரைத்து பாலை ஊற்றினால் பண்ணிய பாவங்கள் அனைத்தும் அகலும் என்பது நம்பிக்கை.

தை அமாவாசையன்று வீரராகவப் பெருமாள் சாலிஹோத்ர மகரிஷிக்கு காட்சியளித்ததால் ஒவ்வொரு தை அமாவாசையன்றும் கணக்கில்லா பக்தர்கள் திரண்டு வந்து, குளத்தில் நீராடி, வெல்லம் கரைத்து பால் ஊற்றி, பெருமாளைத் தரிசித்து உப்பு மிளகு சமர்ப்பிதது அவனருள் பெறுகிறார்கள். சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் திருவள்ளூருக்கு நீங்களும் ஒரு முறை சென்று வைத்திய வீரராகவப் பெருமாளைத் தரிசித்து அவனருக்குப் பாத்திரமாகுங்கள்!

மேய்ச்சல் மைதானம் செல்ல குறுக்கு வழி!

Friday, March 23, 2012

அர்த்தமுள்ள திருமண மந்திரங்கள்!

Posted by பால கணேஷ் Friday, March 23, 2012
ந்துத் திருமணங்கள் என்பவை விரிவான சடங்குகளைக் கொண்டு செய்யப்படுபவை. அவை யாவும் அழகானவை; அர்த்தமுள்ளவை; மங்கலமானவை. திருமணங்களில் சொல்லப்படும் மந்திரங்களின் மூலம் ரிக் வேதமே. இந்துத் திருமணச் சடங்குகளில் இடம் பெறும் மந்திரங்கள் பெரும்பாலும் இறையைப் பணிவதாகவும், மேன்மையான செய்திகளைத் தாங்கியதாகவும், தனிமனித உறுதிமொழிகளாகவும் இருக்கின்றன. ஆனால் அந்தணர்கள் இந்த வடமொழி மந்திரங்களை எக்ஸ்பிரஸ் வேகத்தில் உச்சரிப்பதனால் நமக்குத்தான் அதன் உட்பொருள் சரிவரப் புரிவதில்லை. நான் அறிந்த வரையில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் செய்யப்படுவது விக்னேஸ்வர பூஜை. ‘கண’ என்றால் குழு. ‘பதி’ என்றால் தலைவன். எனவே கணபதி என்கிற மனிதக் குழுக்களுக்குத் தலைவனை வணங்கி, ‘கணானாஹந்த்வா கணபதிம்’ என்கிற மந்திரத்தில் துவங்கி கணபதி பூஜை நடககிறது. கோள்களின் சுழற்சித் தாக்கம் பூமியைப் பாதிக்கிறது என்கிற பட்சத்தில் மனிதர்களின் வாழ்வில் அவற்றின் தாக்கம் இல்லாதிருக்குமா? எனவே அடுத்ததாக நவக்கிரக பூஜை.  பிறகு விரதம். மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் கையில் காப்பு கட்டப்பட்டு அவர்கள் அக்கினியைத் தொழுகிறார்கள்.

அடுத்தது சங்கல்பம். மேன்மையான நோக்கங்களை நிறைவேற்ற உறுதி பூணுவதற்குப் பெயர் சங்கல்பம். அறவழியில் வாழும் மக்கட் செல்வத்தைப் பெறுவதே திருமணத்தின் நோக்கம். இல்லறத்தாரின் கடமை தர்மத்தைக் கடைப்பிடித்தல் மற்றும் நன்மக்கள் பெறுதல். அதற்காக சங்கல்பம் செய்யப்படுகிறது.  மணப்பெண்ணின் தந்தை மாப்பிள்ளையை விஷ்ணுவாகவே பாவித்து அவன் திருவடிகளைக் கழுவுகிறார். அதற்குப் பதிலாக மாப்பிள்ளை சொல்லும் மந்திரம்: ‘‘என் காலைத் தொட்ட இந்தப் புனித நீர் என் அக எதிரிகளைத் தூளாக்கட்டும். நான் இறையொளியில் தேஜஸ்பட்டுத் திகழ்வேனாக!’’ பெண்ணின் தந்தை சொல்கிறார்: ‘‘ஓ, விஷ்ணுவின் வடிவே! இதோ உங்கள் ஆசனம்! உங்களுக்கு என் இனிய வரவேற்பு!’’


பின் கன்யாதானம்! பெண்ணின் தந்தை மாப்பிள்ளையிடம் சொல்கிறார்: ‘‘இதோ, என் மகளை உமக்கு வழங்குகிறேன். இவள் எல்லாக் குணநலன்களும் பொருந்தியவள். இனிய இயல்புடையவள். அறிவில் தெளிவுடையவள். அணிகலன்கள் பூண்டு நிற்கும் இவள் உமது அறம், செல்வம், அன்பு அனைத்துக்கும் காவலாக இருப்பாள்...’’ மாப்பிள்ளை மணப்பெண்ணை ஏற்றுக் கொண்டு மும்முறை உறுதி சொல்கிறார்: ‘‘இன்பத்திலும் துன்பத்திலும் இப்பிறப்பிலும் இதற்கப்பாலும் என்றென்றும் நான் இவளது துணைவனாக இருப்பேன்!’’ என்று. மணப்பெண் தந்தையின் மடியில் அமர, தந்தை சொல்வது: ‘‘ஓ விஷ்ணுவே! அணிகலன்கள் பூண்ட என் மகளை உமக்கு வழங்குகிறேன். இதன் மூலம் எனது முந்தைய 10 தலைமுறை மற்றும் பிந்தைய 10 தலைமுறை வினைகளிலிருந்து விடுதலை பெறட்டும். எனக்கும் முக்தி கிடைக்கட்டும். அது இவள் மூலம் பிறந்த அறவழியில் நிற்கப் போகும் குழந்தைகளின் மூலம் நிகழட்டும்! அவர்கள் திருமாலையும், திருமகளையும் தொழுது அதன் மூலம் எனக்கு பிரம்மலோகப் பதவி கிடைக்கட்டும். பூமித்தாயும் படைப்பைத் தாங்கும் சக்தியும், எல்லாத் தேவர்களும், அனைத்து உயிரினங்களும் எனது மூதாதையர்கள் முக்தியடையும் பொருட்டு நான் செய்யும் இந்தக் கன்யாதானத்திற்கு சாட்‌சியாய் நிற்கட்டும்!’’ பின் மாப்பிள்ளையிடம், ‘‘பக்தி, செல்வம், ஆசை இவற்றை நிறைவேற்றிக் கொள்வதில் இவளுக்கு இடையூறு நேரக் கூடாது’’ என்க, மாப்பிள்ளை பதிலுக்கு ‘‘நான் அவளுக்கு இடையூறு செய்ய மாட்டேன்’’ என்று மும்முறை உறுதி கூறுகிறார்.

மணமகன் அவள் கழுத்தில் மங்கல நாண் அணிவித்து ஒரு முடிச்சுப் போட, அவனது சகோதரியர் இன்னும் இரு முடிச்சுகளைப் போடுகிறார்கள். மங்கல நாணை அணிவிக்கையில் மாப்பிள்ளை, ‘‘உன்னோடு நான் நீடு வாழ இறையைத் துதிக்கிறேன். இந்த மங்கல நாணை உன் அழகிய கழுத்தில் அணிவிக்கிறேன். எல்லாப் பேறுகளும் பெற்று நீ நூறாண்டு நிறைவான வாழ்க்கை வாழ இறை அருள்வதாக!’’ அதன்பின் அக்னியை நோக்கி அவன் அவளை அழைத்து வரும்போது சொல்லும் மந்திரம்: ‘‘பூஷா தேவதை உன்னை அக்னியின் முன்னிலைக்கு பத்திரமாக அழைத்துச் செல்லட்டும். அஸ்வினி தேவதைகள் என் வீட்டுக்கு உன்னை பாதுகாப்புடன் அழைத்து வரட்டும். பல மங்கலமான செயல்களில் என்னைத் தூண்டப்போகும் பெண்ணே! என் வீட்டின் ராணியாக அடியெடுத்து வை!’’

இதற்குப் பின் பாணிக்கிரஹ ணம். மணமகளின் கரத்தைத் தன் கைக்குள் அடக்கிக் கொண்டு மணமகன், ‘‘ஓ பண்புள்ள பெண்ணே! நீ கடவுளர்களுக்குச் சொந்தமான செல்வம். அவர்கள் கருணை மேலிட்டு நான் இல்லறம் பேணுவதற்காய் உன்னை எனக்கு அளித்துள்ளார்கள். முதுமையிலும் நாம் பிரியாமல் நீடு வாழ்வோமாக! உன் திருக்கரம் பற்றியே நான் இல்லறம் எனும் நிலைவாயிலில் நுழைகிறேன். முன்னோடிகளான பகன் மற்றும் அக்னியின் ஆசிகள் எனக்குண்டு’’ பிறகு சரஸ்வதி தேவியையும், வாயுவையும் தொழுகிறார்கள். பின் இருவரும் அக்னியை வலம் வருகிறார்கள்.

மணமகளின் பாதம் தொட்டு, மெட்டி அணிவித்து ஏழு அடிகள் அவள் எடுத்து வைக்க உதவுகிறான் மணமகன். இது ‘சப்தபதி’ எனப்படுகிறது. அப்போது சொல்லும் மந்திரம்: ‘‘ஓரடி எடுத்து வைத்ததுமே என் துணைவியாகி விட்டாய். இதன் மூலம் உன் நட்பைப் பெற்றேன். முதலடி நிறைவான உணவுக்காக. இரண்டாம் அடி எல்லாவிதமான செல்வங்களுக்காகவும். மூன்றாம் அடி தன் முயற்சிகளில் வெற்றிக்காக. நான்காம் அடி இன்பங்களுக்கும் வசதிகளுக்குமாக. ஐந்தாம் அடி கால்நடைச் செல்வத்துக்காக. ஆறாம் அடி எல்லாப் பருவ நிலைகளிலும் நலமோடு வாழ்வதற்காக. ஏழாம் அடி அக்கினியை எழுப்பி வேள்விகள் செய்யும் பேற்றுக்காக. நாராயணன் உன்னருகே இருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக! என்னோடு ஏழடிகள் எடுத்து வைத்தாய். என் துணை நீ. இப்போதிலிருந்து நாம் நண்பர்கள். இந்த நட்பிலிருந்து என்றும் விலகாதிருப்போம். சேர்ந்தே வாழ்வோம். எந்த முடிவையும் சேர்ந்தே எடுப்போம். எதையும் இணைந்தே செய்வோம். ஒருவர் மீதொருவர் அன்பு கொண்டு, ஒருவருக்கொருவர் ஆசையோடு உணவையும் செல்வத்தையும் ஒரேவிதமாய் பகிர்ந்து கொண்டு ஒரே மனத்துடன் வாழ்வோம். ஒரே நோக்கத்தோடே விரதங்களை கடைப்பிடிப்போம். நீ கவி‌தை-நான் கானம், நீ தொடுவானம்- நான் அதைத் தொடும் பூமி, நான் உயிர்விதை வழங்குவோன்- நீ அ‌தையேந்தும் பாத்திரம், நான் மனம்- நீ சொல்! என்னுடன் நட்பாக இருப்பாயாக! இன்சொல் ததும்பும் பெண்ணே, வா... செல்வமும் நன்மக்களும் பெறுவோம்!’’

அதன்பின் ஹோமம் செய்யப்படும்போது சொல்லும் மந்திரங்கள்: ‘‘இதுவரை இவளைக் காத்தருளிய தேவர்களுக்கு வந்தனம். இந்தக் கன்னி தனது வீட்டிலிருந்து கணவன் வீடு புகுகிறாள். இளவயதுக்குரிய பிணிகளெதுவும் இவளிடம் இல்லாது போகட்டும்! தனது தந்தை வீட்டின் பந்தத்திலிருந்து விடுபட்டு தன் கணவன் வீட்டில் எல்லாரோடும் புதிய சொந்தம் ஏற்படுத்திக் கொள்ளட்டும்! இந்திரனே! இவளக்கு எல்லாப் பேறுகளும் இனிய குழந்தைகளையும் வழங்குவாயாக! இவளுக்கு 10 குழந்தைகளை வழங்கி என்னை 11வது குழந்தையாக்கி இவள் பேணி வளர்ப்பாளாக! சூரியனே, எங்கள் குழந்தைகள் எதுவும் அகால மரணம் அடையாதபடி காப்பாயாக. அக்கினியே, ஆபத்துகளிலிருந்து அவளைக் காப்பாயாக. அவளுக்கு நீண்ட ஆயுளைத் தருவீராக. மழலை பேசும் குழந்தைகளோடு கொஞ்சி விளையாடும் பேற்றை அவளுக்கு அருள்வீராக! ஓ, மணமகளே! உன் வீட்டில் என்றும் துயரமில்லாமல் போகவும், நீ கணவனையும் குழந்தைகளையும் ஒரு போதும் பிரியாமலிருக்கவும் அக்கினிக்கு இந்த ஆஹுதியை வழங்குகிறோம். எல்லாத் தேவர்களும் உன்னைக் காப்பார்களாக!’’’

மணமகளை அம்மியை மிதிக்கச் செய்து, மணமகன் சொல்வது: ‘‘இந்த அம்மியின் மீது ஏறி நிற்பாயாக! உன்னை எதிர்ப்பவர்களை வலிமையுடன் எதிர்கொள்வாயாக! அதே நேரத்தில் எதிரிகளுடன் கருணையுடனும் நடந்து கொள்வாயாக! ’’  சப்த ரிஷிகளிலே வசிஷ்டரின் மனைவியான அருந்ததி அண்டவெளியில் நட்சத்திரமாய் மின்னுகிறார். அந்த அன்னையின் அருள் பெற வேண்டி பார்க்கச் சொல்லும் ஐதீகத்தின் போது சொல்லப்படுவது- மணமகன், ‘‘ஏழு முனிவர்களும் வசிட்டரின் மனைவியான அருந்ததியே சாலச் சிறந்தவள் என்று அறிவித்தார்கள். அதை மற்ற ஆறு மனைவியரும் ஏற்றுக் கொண்டார்கள். அதேபோல என் மனைவியும் கற்பில் தலைசிறந்தவள் என்று கருதப்பட்டு எட்டாவது தாரகையாய் மின்னட்டும்’’ என்று பிரார்த்திக்கிறான். இதன்பின் மணமக்கள் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கிறார்கள். ‘‘ஓ துருவனே! உறுதியான இடத்தில் வசிக்கிறாய் நீ. உறுதியாக இருக்கிறாய். நீ உறுதியின் ஊற்று! வாழ்வில் உயிரின் உறுதிக்கு நீயே பொறுப்பு. நட்சத்திர மண்டலங்களின் அச்சாணி நீ. உறுதியைத் தாக்கும் எதிரிகளிடமிருந்து எம்மைக் காப்பாற்று!’’

பெண் புதிய வீட்டுக்குள் நுழையும் கிருஹப்பிரவேச சடங்கின்போது சொல்லப்படும் மந்திரங்கள்: ‘‘கந்தர்வர்களும் அப்சரஸ்களும் இவள் மீது எல்லா நலன்களையும் பொழிவார்களாக! உனக்குப் புதிதான இந்த வீட்டில் நீ உன் கணவனோடு மகிழ்ச்சியாகவும் மக்கட் செல்வத்தோடும் வாழ்க. இந்த வீட்டில் உன் இல்லறக் கடமைகளில் கவனமாயிரு. உன் தலைவனான கணவனைத் தழுவியிரு. நீங்கள் இருவரும் ஒன்றாகவே வளர்ந்து, இந்த வீட்டின் நியதிகளுக்கேற்ப இதனை நிர்வகிப்பீராக. உன் கணவன் வீட்டின் ராணியாயிரு. உன் நன்னடத்தை மூலம் உன் மாமியார் ம்ற்றும் நாத்தனார்களின் அன்பை வென்று கொள்.’’ பின் மணமகள் சொல்வது: ‘‘வளம் செறிந்த, மங்கலகரமான, வீரர்களால் பாதுகாக்கப்பட்ட, மகிழ்ச்சிமயமான உறவினர்கள், மைத்துனர்கள், அவர்கள் குழந்தைகள் நிறைந்த இந்தப் புதிய வீட்டில் நான் எந்தவிதமான நடுக்கமுமின்றி நுழைகிறேன்!’’ கிரஹப்பிரவேச ஹோமத்தில் மணமகன் சொல்லும் மந்திரம்: ‘‘என் மனைவி வந்து விட்டாள் பரிசுகளோடும், கால்நடைச் செல்வத்தோடும். நிரந்தரமான வேள்வி நீடிக்க, நல்ல குழந்தைகளை அக்கினி தேவன் இவளுக்கு அருள்வானாக!’’

பிறகு இறுதியாக சேஷ ஹோமம் செய்யப்படும். அப்போது மணமகன் சொல்லும் மந்திரம்: ‘‘அக்கினியே! வாயுவே! ஆதித்தனே! பிரஜாபதியே! உங்களைத் தொழுதால் குறைகளும் நிறைகளாய் மாறும். உங்களைச் சரண் புகுந்தேன். தயைகூர்ந்து என்னைக் காக்க வருவீராக. என் மனைவிக்குத் துயரமான வினையெதுவுமிருந்தால் அதைத் தீர்த்தருள்க! உள்ளிருந்து தொல்லை செய்யும் என் எதிரிகளை நீங்கள் தீர்த்துக் கட்டவே இந்த ஆஹுதியை அளிக்கிறேன்.’’ இந்த மந்திரத்தைத் தொடர்ந்து பெரியவர்களிடம் ஆசி பெறுகிறார்கள். திருமணச் சடங்குகள் இனிதே நிறைவடைய இல்லற வாழ்வினுள் அடியெடுத்து வைக்கிறார்கள். வாழி நலம்!

பி.கு: இந்தப் பதிவுக்கான ‘பொறி’யைத் தந்து என்னை எழுதத் தூண்டிய தங்கை ராஜி-க்கு என்  அன்பான கனிவான நன்றி!

Monday, January 2, 2012

‘‘மாதங்களில் நான் மார்கழியாயிருக்கிறேன்’’ என்றான் இறைவன். ‘‘மாதங்களில் அவர் மார்கழி’’ என்று காதலியை வர்ணித்தார் கண்ணதாசன். இத்தனை சிறப்பு மிக்க மார்கழி மாதம் பிறந்தபோதே மார்கழிச் சிறப்பையும், ஆண்டாள் கவிதையையும் வைத்து ஒரு பதிவு போட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். சற்றே தாமதமானதில் மார்கழிச் சிறப்பைப் பற்றி பலரும் பதிவிட்டிருந்ததைப் படிததேன் மகிழ்ந்தேன். மார்கழி 17ம் நாளான இன்று நான் மிக ரசித்த ஆண்டாளின் திருப்பாவையில் 17, 18ம் பாடல்களையும், அதன் எளிய தமிழ் மொழிபெயர்ப்பையும் வழங்கி மகிழ்கிறேன்.

தற்குமுன் என் சிறுவயது அனுபவம் ஒன்று. மதுரையில் மார்கழி மாத அதிகாலையில் பஜனைக் கோஷ்டியினர் பல தெருக்களிலும் பாடியபடி வந்து எங்கள் தெருவைக் கடந்து அடுத்த தெருவில் இருந்த கோதண்டராமர் கோயிலில் முடிப்பார்கள். பனி பெய்யும் அந்த அதிகாலையில் எழுந்திருப்பதே அந்தச் சிறு வயதில் பெரிய விஷயம். அதிலும் குளித்துவிட்டு பஜனை கோஷ்டியுடன் செல்வது... நடக்கிற காரியமா? ஆனால் பஜனை கோஷ்டியுடன் சேர்ந்து பாடியபடி போனால் கோதண்டராமர் கோயிலில் சர்க்கரைப் பொங்கல் கிடைக்கும். அதை விட்டுவிடவும் மனம் வராது.

அதற்காக பஜனைக் கோஷ்டி எங்கள் தெரு முனையில் வரும்போது முகம் கழுவி, குளித்த எஃபெக்டை கொண்டுவந்துவிட்டு, பஜனைக் கோஷ்டியுடன் மெல்லக் கலந்து கொள்வேன். அடுத்த தெரு வரும்வரையில் என் குரல்தான் அங்கு உரத்து ஒலிக்கும். (நான் வருவதை ரிஜிஸ்டர் செய்ய வேண்டுமே...) கோயிலில் பார்த்தசாரதி ஐயங்கார், ‘‘நீ பாடிண்டு வந்தாயோடா?’’ என்று சந்தேகமாகக் கேட்பார். ‘‘என்ன மாமா... நான்தான் முதல்லருந்தே வரேனே... என் குரலைக் கேக்கலையா நீங்க..?’’ என்பேன். ‘‘படவா! சர்க்‌கரைப் பொங்கலுக்காக பெருமாளண்டை நின்னுண்டு பொய் சொல்லப்படாது. இந்தா ரெண்டு தொன்னையா வாங்கிக்க, போ...’’ என்று செல்லமாக தோளில் தட்டி சர்க்கரைப் பொங்கல் தருவார். (இப்போது பார்த்தசாரதி ஐயங்கார் பெருமாள் திருவடி சேர்ந்து விட்டதாக சமீபத்தில் என் பால்ய நண்பனை மதுரையில் பார்த்தபோது சொன்னான்).

ண்டாள்! தமிழில் பெண் கவிஞர் என்றால் முதலில் நினைவுக்கு வருவது ஆண்டாளின் பாடல்கள்தான். விவரமறியாத வயதில் ‘விஷ்ணு  சட்டை போடறதில்லைங்கறத ஆண்டாளே ‘ஓங்கி உலகளந்த உத்தமன் Barebodyன்னு பாடியிருக்காங்கடா’ என்று சொல்லிச் சிரி்த்தது நினைவில் வருகிறது. பின்னாளில் தமிழின் சுவையறிந்து கவிதைகளில் மூழ்கிய காலத்தில் ஆண்டாளைப் படித்த போது உடனே நமஸ்கரிக்கத் தோன்றியது. இனி ஆண்டாள் அருளிய திருப்பாவையின் 17 மற்றும் 18ம் பாடல்கள்:

ம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
    எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே!
    எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்;
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
    உம்பர் கோமானே! உறங்காதெழுந்திராய்;
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
    உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்!
விளக்கம்: ‘‘ஆடை அணிகலன்களையும், அன்னத்தையும், தூய்மையான பருகும் நீரையும், போதும் போதும் என்னும் அளவுக்குத் தானமாகக் கொடுக்கும் நந்தகோபாலா, எழுந்திரு!

பூக்‌கொழுந்தே, புகுந்த வீட்டின் ஒளிவிளக்கே! எங்கள் தலைவியே! தாயே! யசோதா; எழுந்திரு!

பொற்கழல் பூண்ட பலதேவா! அகிலம், ஆகாயம் என அனைத்தையும் காலால் அளந்த கண்ணா! அண்ணன், தம்பி இருவரும் இனியேனும் உறங்காமல் எழுந்து கொள்ளுங்கள்!’’

ந்து மதகளிற்றன், ஓடாத தோள்வலியன்,
    நந்தகோபாலன் மருமகளே, நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்!
    வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
    பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
    வந்து திறவாய், மகிழ்ந்தேலோர் எம்பாவாய்1


விளக்கம்: ‘‘யானை பலம் கொண்டவன், எதிரிகளைக் கண்டு பின்வாங்காத தோள் வலியைக் கொண்டவன் எங்கள் நந்தகோபன்! அவருடைய மருமகளே! நப்பின்னையே! நறுமணக் கூந்தலைக் கொண்டவளே! கதவைத் திறம்மா! கோழி கூவி விட்டது. பூப்பந்தல் மேல் அமர்ந்து குயிலினங்களும் கூவிவிட்டன. .உன் கணவன் கண்ணனின் புகழை உன்னுடன் சேர்ந்து பாட வந்திருக்கிறோம். உன் தாமரைக் கைகளில் அணிந்திருக்கும் வளையல்கள் குலுங்க வந்து வாசல் கதவைத் திறவேன்!’’

விளக்கவுரை : காஷ்யபன். படங்கள் : ஜெ.பி.

Monday, November 21, 2011

தந்தைக்கு உபதேசித்த ஸ்வாமிநாதன்!

Posted by பால கணேஷ் Monday, November 21, 2011
கைலாய மலை. ‘‘சர்வேஸ்வரா... அபயம்...’’ ‘‘நீங்கள்தான் எங்களைக் காத்தருள வேண்டும்...’’ என்று பலவிதமாகக் கூக்குரலிட்டபடி கூப்பிய கரங்களுடன் எதிர்வந்து நின்றனர் தேவர்கள். கண் மூடியிருந்த பரமசிவன் கண்களைத் திறந்து புன்னகை புரிந்தார். ‘‘‌தேவேந்திரா! ஏனிந்தப் பதட்டம்? என்ன நடந்தது?’’

தேவேந்திரன் முன்னால் வந்தான். ‘‘பிரபு! பூலோகத்தில் பிருகு முனிவர் கடுந்தவம் புரிந்து வருகிறார். அவரது தவத்தின் எண்ண அலைகள் தேவலோகத்தையும் எட்டி விட்டது. அவரது தவ அலைகளைத் தடுப்பவர் எவராயினும் தன் அறிவு முழுவதையும் இழந்துவிட வேண்டும் என்று வரமும் பெற்றிருக்கிறார். அகில உலகங்களுக்கும் நாயகனாகிய தாங்கள்தான் இதைத் தடுத்து எங்களைக் காப்பாற்ற வேண்டும்’’ என்று வேண்டினான்.

சிவபெருமான் புன்னகைத்தார். தன் இரு கரங்களையும் நீ்ட்டி முனிவரின் சிரசை மூடினார். முனிவரின் எண்ண அலைகள் தடை பட்டதன் காரணமாக, சிவன் தன் நினைவி லிருந்த வேத மந்திரங்கள் அனைத்தையும் மறந்தார். பிருகு முனிவர் கண் விழித்தார். கைலாயபதியைக் கண்டதும் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்து வருந்தினார். “பரமேஸ்வரா... தாங்களே ஆனாலும் நான் பெற்ற வரத்திற்கு விதிவிலக்கல்ல. என் தவத்தைக் கெடுத்ததின் விளைவை அனுப வித்துத்தான் ஆக வேண்டும். ஆனால், உங்களின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றும் புதல்வனிடம் நீங்கள் பிரணவ மந்திரத்தைக் கேட்டறிந்தால் இழந்ததை திரும்பப் பெறுவீர்கள்’’ என்றார்.

பின்னாளில் சூரபத்மனை அழிப்பதற்காக பரமேஸ்வரன் தன் நெற்றிக் கண்ணி லிருந்து உருவாக்கிய குழந்தை முருகன், அளவில்லாத சுட்டித்தனமும், அளப்பரிய வீரமும் பெற்றிருந்தான். ஒருமுறை பிரம்ம தேவன், சிவபெருமானைத் தரிசிக்க வேண்டி கைலாயம் வந்திருந்தார். சிறுவன் குமரன் அவரிடம் ஓடி வந்தான்.

‘‘ஓ... பிரம்ம‌ தேவரே! நில்லுங்கள்... நில்லுங்கள்...’’

‘‘என்ன வேலவா! எதற்கு இவ்வளவு வேகமாக ஓடி வருகிறீர்கள்? என்ன வேண்டும்?’’

‘‘பிரம்ம தேவரே... ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் உட்பொருளை நீங்கள் எனக்கு விளக்கமாகக் கூறியருள வேண்டும். கணபதிக்கும் இது தெரியாதென்கிறார்...’’

பிரணவ மந்திரத்தை மறந்து விட்டிருந்த பிரம்மன் திருதிருவென்று விழித்தார். தன் இயலாமையை வேலவனிடம் தெரிவித்தார். கடுஞ்சினம் கொண்டான் கார்த்திகேயன். ‘‘பிரணவ மந்திரத்திற்குப் பொருள்கூறத் தெரியாத நீர் படைக்கும் உயிர்கள் ஞான சூன்யங்களாக அல்லவோ விளங்கும்? நீர் படைப்புத் தொழிலைத் தொடர்வது நியாயமில்லை. இனி படைப்புத் தொழிலை யாமே மேற் கொள்வோம்...’’ என்று அவரை பூவுலகில் ஓர் உயர்ந்த மலையில் சிறை யிலிட்டான். சரஸ்வதி தேவியும், தேவர்களும் ஈஸ்வரனை அணுகி, பிரம்மனைக் காப்பாற்றும்படி வேண்டினர்.

‘‘கந்தா... பிரம்ம தேவனை விடுவித்து படைப்புத் தொழில் செம்மையாக நடைபெற வழி செய்..’’’ என்று மகனிடம் ஆணையிட்டார் சர்வேஸ்வரன். ‘‘முடியாது தந்தையே. பிரணவ மந்திரத்தின் பொருளையே மறந்துவிட்ட அவரை எப்படி விட்டுவிட இயலும்?’’ என்றான்.

‘‘குமரா... பிரணவ மந்திரத்தின் உட்‌பொருள் இன்னதென்று நீ அறிவாயா?’’ என்று வினவினார் வெள்ளியங்கிரிவாசன்.

‘‘நன்றாக அறிவேன் தந் தையே...’’ என்று வேலவன் கூற, ‘‘அப்படியானால் அதை எனக்கு உபதேசம் செய்...’’ என்று வேண்டுகோள் விடுத் தார் சிவபெருமான். குறும்புக் கடவுளான சிவகுமரன் புன்முறு வல் பூத்தான். ‘‘தந்தையே... உபதேசம் என்று வந்துவிட்ட பின்னர் நான் குரு. நீங்கள் சிஷ்யன். இதுதான் உறவு. நீங்கள் கை கட்டி, வாய் புதைத்துக் கேட்டால் நான் சொல்லித் தருகிறேன்’’ என்றான்.

சிவபெருமான் கை கட்டியபடி குமரனைத் தன் மடியில் வைத்துக் கொள்ள, சிவனின் காதில் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசித்தான் குமரன். பிருகு முனிவரின் சாபத்தால் சிவன் இழந்திருந்த மந்திர சக்திகள் அனைத்தும் அந்த உபதேசத்தின் மூலம் பரமேஸ்வரனுக்குத் திரும்பக் கிடைத்தன. தன் சக்திகள் முழுவதையும் திரும்பப் பெற்ற ஈசன், மகனை உவப்புடன் அணைத்து, ‘‘தந்தைக்கு உபதேசம் செய்த நீ இன்று முதல் ‘ஸ்வாமிநாதன்’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுவாய். நீ உபதேசம் செய்த இந்த மலையும் இன்று முதல் ‘ஸ்வாமி மலை’ என்ற பெயரில் வழங்கப்படும்’’ என்று வரம் அளித்தருளினார்.

ஸ்வாமி மலை திருத்தலம் கும்பகோணத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. முருகனின் ஆறு படை வீடுகளில் நான்காவது படை வீடாகச் சொல்லப்படுகிறது இத்தலம். ஏனைய முருகனுறை மலைக்கோவில் களைப் போலன்றி, இந்த ஆலயம் செயற்கையான உருவமைக்கப்பட்ட ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. அறுபது அடி உயரமுள்ள இந்த மலையில் தமிழ் ஆண்டுகள் அறுபதையும் குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள அறுபது படிக்கட்டுகளையும் ஏறிச் சென்றால் தமிழ்க் கடவுளான ஸ்வாமிநாதனைத் தரிசித்து அவனருள் பெறலாம். மலைக்குக் கீழே சுந்தரேஸ்வரருக்கும், மீனாட்சி அம்மைக்கும் தனி சன்னிதிகள் அமைந்துள்ளன.

அருணகிரிநாதரால் திருப்புக ழிலும், நக்கீரரால் திருமுருகாற் றுப் படையிலும் பாடல் பெற்ற ஸ்தலம் இது. தினம் ஆறுகால பூஜைகள் நடக்கின்றன. 7 கிலோ தங்கத்திலும், 85 கிலோ வெள் ளியிலும் அழகுற வடிவமைக் கப்பட்ட தங்கத் தேரில் வலம் வரும் முருகப் பெருமானைத் தரிசிப்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும்.

பக்தர்கள் ஸ்வாமி மலையில் தங்கி இறைவனைத் தரிசிப்பதற்கு வசதியாக அறநிலையத் துறையினரால் பராமரிக்கப்படும் தங்கும் விடுதிகளில் அறைகள் மிகக் குறைந்த வாடகையில் கிடைக்கின்றன. மாதந்தோறும் கிருத்திகை, ஏப்ரல் மாதத்தில் தேர்த் திருவிழா, மே மாதத்தில் விசாகத் திருவிழா மற்றும் நவராத்திரி விழா,  அக்‌டோபர் மாதத்தில் கந்தசஷ்டிப் பெருவிழா, நவம்பர், டிசம்பர் மாதங்களில் கார்த்திகைத் திருவிழா, ஜனவரி மாதம் தைப்பூசத் திருவிழா, மாதத்தில் பங்குனி உத்திரத் திருவிழா என்று இங்கே ஆண்டு முழுவதும் விழாக்கள் நடப்பதால் குமரனைத் தரிசித்து அருள் பெறுவதற்கு உகந்த இடமாக விளங்குகிறது.

சுவாமிமலைக்கு திருவேரகம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. கவிகாளமேகம் எழுதிய...

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை-மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியாரே


-என்ற தனிப்பாடல் கூட இந்தத் திருவேரகத்தை (ஏரகத்துச் செட்டியாரே) குறிப்பதுதான் எனச் சொல்வார்கள். குமரக் கடவுள் அருள் மழை பொழியும் ஆலயமான ஸ்வாமி மலையை நீங்களும் ஒருமுறை சென்று தரிசித்து அவனருளுக்குப் பாத்திரமாகுங்கள்..!
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube