Monday, January 2, 2012

‘‘மாதங்களில் நான் மார்கழியாயிருக்கிறேன்’’ என்றான் இறைவன். ‘‘மாதங்களில் அவர் மார்கழி’’ என்று காதலியை வர்ணித்தார் கண்ணதாசன். இத்தனை சிறப்பு மிக்க மார்கழி மாதம் பிறந்தபோதே மார்கழிச் சிறப்பையும், ஆண்டாள் கவிதையையும் வைத்து ஒரு பதிவு போட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். சற்றே தாமதமானதில் மார்கழிச் சிறப்பைப் பற்றி பலரும் பதிவிட்டிருந்ததைப் படிததேன் மகிழ்ந்தேன். மார்கழி 17ம் நாளான இன்று நான் மிக ரசித்த ஆண்டாளின் திருப்பாவையில் 17, 18ம் பாடல்களையும், அதன் எளிய தமிழ் மொழிபெயர்ப்பையும் வழங்கி மகிழ்கிறேன்.

தற்குமுன் என் சிறுவயது அனுபவம் ஒன்று. மதுரையில் மார்கழி மாத அதிகாலையில் பஜனைக் கோஷ்டியினர் பல தெருக்களிலும் பாடியபடி வந்து எங்கள் தெருவைக் கடந்து அடுத்த தெருவில் இருந்த கோதண்டராமர் கோயிலில் முடிப்பார்கள். பனி பெய்யும் அந்த அதிகாலையில் எழுந்திருப்பதே அந்தச் சிறு வயதில் பெரிய விஷயம். அதிலும் குளித்துவிட்டு பஜனை கோஷ்டியுடன் செல்வது... நடக்கிற காரியமா? ஆனால் பஜனை கோஷ்டியுடன் சேர்ந்து பாடியபடி போனால் கோதண்டராமர் கோயிலில் சர்க்கரைப் பொங்கல் கிடைக்கும். அதை விட்டுவிடவும் மனம் வராது.

அதற்காக பஜனைக் கோஷ்டி எங்கள் தெரு முனையில் வரும்போது முகம் கழுவி, குளித்த எஃபெக்டை கொண்டுவந்துவிட்டு, பஜனைக் கோஷ்டியுடன் மெல்லக் கலந்து கொள்வேன். அடுத்த தெரு வரும்வரையில் என் குரல்தான் அங்கு உரத்து ஒலிக்கும். (நான் வருவதை ரிஜிஸ்டர் செய்ய வேண்டுமே...) கோயிலில் பார்த்தசாரதி ஐயங்கார், ‘‘நீ பாடிண்டு வந்தாயோடா?’’ என்று சந்தேகமாகக் கேட்பார். ‘‘என்ன மாமா... நான்தான் முதல்லருந்தே வரேனே... என் குரலைக் கேக்கலையா நீங்க..?’’ என்பேன். ‘‘படவா! சர்க்‌கரைப் பொங்கலுக்காக பெருமாளண்டை நின்னுண்டு பொய் சொல்லப்படாது. இந்தா ரெண்டு தொன்னையா வாங்கிக்க, போ...’’ என்று செல்லமாக தோளில் தட்டி சர்க்கரைப் பொங்கல் தருவார். (இப்போது பார்த்தசாரதி ஐயங்கார் பெருமாள் திருவடி சேர்ந்து விட்டதாக சமீபத்தில் என் பால்ய நண்பனை மதுரையில் பார்த்தபோது சொன்னான்).

ண்டாள்! தமிழில் பெண் கவிஞர் என்றால் முதலில் நினைவுக்கு வருவது ஆண்டாளின் பாடல்கள்தான். விவரமறியாத வயதில் ‘விஷ்ணு  சட்டை போடறதில்லைங்கறத ஆண்டாளே ‘ஓங்கி உலகளந்த உத்தமன் Barebodyன்னு பாடியிருக்காங்கடா’ என்று சொல்லிச் சிரி்த்தது நினைவில் வருகிறது. பின்னாளில் தமிழின் சுவையறிந்து கவிதைகளில் மூழ்கிய காலத்தில் ஆண்டாளைப் படித்த போது உடனே நமஸ்கரிக்கத் தோன்றியது. இனி ஆண்டாள் அருளிய திருப்பாவையின் 17 மற்றும் 18ம் பாடல்கள்:

ம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
    எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே!
    எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்;
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
    உம்பர் கோமானே! உறங்காதெழுந்திராய்;
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
    உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்!
விளக்கம்: ‘‘ஆடை அணிகலன்களையும், அன்னத்தையும், தூய்மையான பருகும் நீரையும், போதும் போதும் என்னும் அளவுக்குத் தானமாகக் கொடுக்கும் நந்தகோபாலா, எழுந்திரு!

பூக்‌கொழுந்தே, புகுந்த வீட்டின் ஒளிவிளக்கே! எங்கள் தலைவியே! தாயே! யசோதா; எழுந்திரு!

பொற்கழல் பூண்ட பலதேவா! அகிலம், ஆகாயம் என அனைத்தையும் காலால் அளந்த கண்ணா! அண்ணன், தம்பி இருவரும் இனியேனும் உறங்காமல் எழுந்து கொள்ளுங்கள்!’’

ந்து மதகளிற்றன், ஓடாத தோள்வலியன்,
    நந்தகோபாலன் மருமகளே, நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்!
    வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
    பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
    வந்து திறவாய், மகிழ்ந்தேலோர் எம்பாவாய்1


விளக்கம்: ‘‘யானை பலம் கொண்டவன், எதிரிகளைக் கண்டு பின்வாங்காத தோள் வலியைக் கொண்டவன் எங்கள் நந்தகோபன்! அவருடைய மருமகளே! நப்பின்னையே! நறுமணக் கூந்தலைக் கொண்டவளே! கதவைத் திறம்மா! கோழி கூவி விட்டது. பூப்பந்தல் மேல் அமர்ந்து குயிலினங்களும் கூவிவிட்டன. .உன் கணவன் கண்ணனின் புகழை உன்னுடன் சேர்ந்து பாட வந்திருக்கிறோம். உன் தாமரைக் கைகளில் அணிந்திருக்கும் வளையல்கள் குலுங்க வந்து வாசல் கதவைத் திறவேன்!’’

விளக்கவுரை : காஷ்யபன். படங்கள் : ஜெ.பி.

72 comments:

 1. ஆஹா என் ஆண்டாளைப்பற்றின மதிவா படஙக்ளே அள்ளுகிறதே வாசித்துவிட்டுவரேன் கணேஷ்!

  ReplyDelete
 2. @ ஷைலஜா said...

  -நிதானமாப் படிச்சிட்டு வாங்க... காத்திருக்கேன்க்கா.

  ReplyDelete
 3. தோழரே..இந்த ஏரியாவில் கொஞ்சம் எனக்கு உடன்பாடில்லை..உங்கள் அன்புக்காகத்தான் என் வருகை..சொல்ல வந்ததை நன்றாகச் சொன்னீர்கள்..

  ReplyDelete
 4. நல்லதொரு பதிவு தலைவரே...

  மாதத்துக்கு ஏற்ப அசத்துறீங்க...

  புதிய டிசைன் நல்லாயிருக்கு

  ReplyDelete
 5. எனது கருத்தை தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்..நான் திராவிட வட்டாரத்திலே வளர்ந்தவன்.என் கருத்து உங்களை மட்டுமல்லாமல் அனைவரையும் சங்கடப் படுத்தலாம்.எனவே எனது கருத்தை பிரசுரிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்..நன்றி..

  ReplyDelete
 6. @ மதுமதி said...

  எல்லாருக்கும் எல்லாமும் பிடித்துவிட முடியுமா கவிஞரே... பரவாயில்லை. அன்பையும் நட்பையும் முன்னிட்டு தாங்கள் வாழ்த்தியதில் நெகிழ்கிறேன். நன்றி நவில்கிறேன்.

  ReplyDelete
 7. @ கவிதை வீதி... // சௌந்தர் // said...

  புதிய டிசைனை ரசித்ததற்கு மிக்க நன்றிங்க நண்பா. நானே செய்தது!

  ReplyDelete
 8. @ மதுமதி said...

  கவிஞ்ரே... தங்கள் அன்புக் கட்டளை வருவதற்கு முன்பே வெளியிட்டு விட்டமைக்கு மன்னிக்க. நானும் ஒன்றும் பெரிய பக்திமான் இல்லை. ஆனால் திருப்பாவையின் தமிழ் எனக்கு மிகமிக உவப்பானது. ஆகவே மாற்றுக் கருத்து நீங்கள் வைத்ததில் தவறு எதுவுமில்லை. உங்கள் அன்புக்கு மீண்டும் என் நன்றி.

  ReplyDelete
 9. கிராமத்து வாழ்க்கை அனுபவம் கிடைக்கப்பெற்றவர்கள் மார்கழி பஜனையயும் திருப்பாவையும் மறக்கவே முடியாதுதான். அதை நினைவு படுத்தும் விதமாக இந்தப்பதிவு இருந்தது. வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. நல்ல பாடல். நன்றி...

  ஆனாலும் க்ருஷ்ணரே எழுந்துக்கறதுக்கு முன்னமே, எழுந்து, நப்பின்னை, யசோதா எல்லாரையும் எழுந்திருன்னு எழுந்திருன்னு படுத்தியிருக்காங்க ஆண்டாள் :(

  ராதிகா ரஜினியை எழுப்பும் ஊர்க்காவலம் படம் நினைவுக்கு வருது :))))))

  பாவம் க்ருஷ்ணர் :D

  ஆண்டாளின் சிரத்தைக்குத் தான் செவி சாய்த்தார் போலும் :) என்னை மாதிரி இடக்கு பேசறவங்களை என்னிக்கு கண்டுக்க போறாரோ!!!

  ReplyDelete
 11. பதிவில் ஆண்டாளின் பாடல்களின் பொழிப்புரைகளுக்கும் முன் நீங்கள் எழுதியவை நன்றாக இருக்கின்றன. பாடல்களை நீங்கள் எப்படி அனுபவித்தீர்கள்? என்ன புரிந்தீர்கள்? என்று சொல்லவில்லை. சும்மா காஷயபன் என்பவரின் பொழிப்புரையை போட்டால் சரியாகாது.
  ஆண்டாள் காஷ்யபனுக்கு மட்டும் எழுதவில்லை. உங்களுக்கும் சேர்த்துதான் !

  ReplyDelete
 12. @ Lakshmi said...

  உங்களது வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 13. @ Shakthiprabha said...

  ஊர்க்காவலன்ல நீங்க குறிப்பிட்ட நள்ளிரவு 2 மணிக்கு ரஜினியை ராதிகா எழுப்பி விடற சீன் எனக்கும் ரொம்பப் பிடிக்கும். ஹா... ஹா... உங்க கமெண்ட்டை மிக ரசித்தேன். நானுமே ஆண்டாளைக் கிண்டல் பண்ணினவன்தானே... அந்த அழகுத் தமிழ் மட்டும் என்னை மிக ரசிக்க வைக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி.

  ReplyDelete
 14. நீங்க கோவிலுக்கு போய் திருப்பாவைலாம் கேட்டிருக்கீங்க. அண்ணன் நல்ல பிள்ளை போல, ஆனால் தங்கச்சி சுண்டல், சர்க்கரை பொங்கல், வெண்பொங்கலுக்காக மட்டும்தான் கோவிலுக்கு போவேன்.

  ReplyDelete
 15. @ காவ்யா said...

  நீங்க சொன்னப்பறம் தான் இன்னும் விரிவா எழுதிருக்கலாம்னு தோணுது. உந்து மத களிற்றன், கந்தம் கமழும் குழலீ, பந்தார் விரலி, செம்பொற் கழலடிச் செல்வன் என்று ஆண்டாள் அடுக்கும் உவமைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. திருப்பாவை முழுவதிலுமே இப்படி ஆண்டாளின் அழகுத் தமிழும் அழகிய உவமைகளும் நிறைந்திருக்கும். அதை மிக ரசித்தவன் நான். எளிய உரைக்காகத் தான் காஷ்யபன் என் உதவிக்கு வந்தார். தங்களின் கனிவான கருத்துக்கும் செல்லமாய்க் குட்டியதற்கும் நன்றி.

  ReplyDelete
 16. புதிய டிசைன் சூப்பர் அண்ணா

  ReplyDelete
 17. சிறு வயது நினைவுகள் ரசிக்கும்படியாக இருந்தது.விளக்கம் தந்திருப்பதால் பாடலின் அர்த்தம் புரிந்தது.

  ReplyDelete
 18. @ ராஜி said...

  நீ வேறம்மா... அந்த வயசுல அண்ணன் திருப்பாவை பாடக் கத்துக்கிட்டதே பொங்கல் கிடைக்கும்னுதானே... உங்கண்ணன் வேற எப்படி இருக்க முடியும்? டிசைன் பிடிச்சிருந்ததுன்னு சொன்னதுல மிக்க மகிழ்ச்சி + என் இதய நன்றிகள்!

  ReplyDelete
 19. @ thirumathi bs sridhar said...

  என் சிறுவயது அனுபவங்களை ரசித்தற்கு நன்றி. பாடல்களுக்கு விளக்கம் தந்திருப்பதால் நன்கு புரிந்ததா? காவ்யா மேடத்துக்கு கேக்கற மாதிரி சத்தமாச் சொல்லுங்க... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க...

  ReplyDelete
 20. நல்ல பதிவு.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 21. @ Rathnavel said...

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் இதயம் கனிந்த நன்றி.

  ReplyDelete
 22. நிறைவான பகிர்வு.. பாராட்டுக்கள். வாழ்த்துகள்..

  ReplyDelete
 23. @ இராஜராஜேஸ்வரி said...

  அழகான பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் வழங்கிய தங்களுக்கு என் இதய நன்றி!

  ReplyDelete
 24. எனக்கு இதெல்லாம் தெரியாது....ஹி..ஹி.....ஆமாம், மதுரையில் கோதண்டராமர் கோவில் எங்கே இருக்கிறது?

  ReplyDelete
 25. ஒண்ணு செய்யலாம் கணேஷ். தினமும் பொதிகை சானலில் அறிஞர், ஸ்வாமிகள்
  கருத்துரை கொடுக்கிறார்.மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது. அதை உள்வாங்கிக் கொண்டு
  பாடலும் பொருளும் உங்கள் தமிழில் பதியலாம்.
  பாவைப் பாடல் யார்சொன்னாலும் ரசிக்கும்படிதானே இருக்கும்.

  ReplyDelete
 26. @ ஸ்ரீராம். said...

  உங்களுக்குத் தெரியாததா? ச்சும்மாத்தானே சொல்றீங்க? மதுரைல நாங்க இருந்த ஏரியா இந்தியன் பேங்க் காலனி. அங்க இருந்த கோயில்தான் அது. நினைவிலிருந்து எழுதிருக்கேன். மதுரை ஃப்ரெண்ட்ஸ் கிட்ட பேரை கன்ஃபர்ம் பண்ணிட்டு உங்களுக்கு லொகேஷனே சொல்றேன் சார்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  ReplyDelete
 27. @ வல்லிசிம்ஹன் said...

  பொதிகையிலயா? நான் கேக்கறேன். நீங்க சொன்ன ஆலோசனையைச் செய்ய முயல்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிம்மா!

  ReplyDelete
 28. ஸ்ரீராம் ஸார்! வீட்டுக்கு வந்ததும் இப்ப அம்மாகிட்ட கேட்டேன். அந்த சம்பவம் நடந்தது நாங்க பேங்க் காலனி வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி டி.வி.எஸ். நகர்ல இருந்தப்ப. அங்க கோதண்டராமர் கோயில் இருக்கு கோவிலைச் சுத்திலும் ராஜம் வீதி, சந்தானம் வீதி, துரைசாமி வீதி, மீனாக்ஷி வீதின்னு அடுக்கடுக்கா அமைஞ்சிருக்கும். அவங்க சொன்னதும் எனக்கு பளிங்கு மாதிரி ஞாபகம் ‘பளிச்’ ஆயிடுச்சு! சரியான சந்தேகத்தை எழுப்பி என்னைத் தெளிவுபடுத்தினதுக்கு நன்றி!

  ReplyDelete
 29. வணக்கம்!

  //விவரமறியாத வயதில் ‘விஷ்ணு சட்டை போடறதில்லைங்கறத ஆண்டாளே ‘ஓங்கி உலகளந்த உத்தமன் Barebodyன்னு பாடியிருக்காங்கடா’ என்று சொல்லிச் சிரி்த்தது நினைவில் வருகிறது.//

  நல்ல ஜோக்! திரும்பத் திரும்ப படித்தேன்.

  ReplyDelete
 30. மார்கழி மாதத்தில் உங்கள் பதிவின் மூலம் இந்த திருப்பாவை நானும் சொல்லிவிட்டேன். :) விளக்கமும், படமும் அருமை! மார்கழி மாதம் தினமும் பெருமாள் கோவில் போக தவறியதில்லை. கோவிலும், பெருமாளும் மிகவும் அழகாக இருக்கும் என்பதும் ஒரு காரணம். ஆனால் பிரசாதம் வாங்கியதில்லை, ஏனென்றால் மிகப் பெரிய வரிசை. அதில் நிற்க ஒருநாளும் பொறுமை இருந்ததில்லை. :)
  ஆண்டாள் என் மனதை மிகவும் கவர்ந்தவர். அவர் கண்ணன் மேல் கொண்ட நேசம் எப்பேற்பட்டது என்பதை அவர் வரிகளின் மூலம் உணரும்போது மெய் சிலிர்க்கும். 'எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம்........."
  இப்படி சரணடைய ஒரு மனம் வேண்டும், அதை நன்கு உணர்ந்து ஏற்றுக்கொள்ளவும் ஒரு மனம் வேண்டும். கண்ணதாசனும் இதை அழகாக சொல்லி இருப்பார் 'புரிந்தவன் துணையாக வேண்டும்' என்று. //புரிதலில் பூக்கிறது நேசம் என்னும் பூ// ஹேமாவின் வரிகள். என்னை மிக மிக கவர்ந்த வரியும் கூட.

  ReplyDelete
 31. திருவம்பாதானே....ஒரு சின்னதா ஊர் ஞாபகம் வருது.காலையில் குளிரக் குளிரக் குளிச்சு அங்கு தரும் பிரசாதத்திற்காகவே போயிருக்கிறேன் !

  ReplyDelete
 32. மார்கழி மாசத்து பஜனை ஒன்றில் கலந்து
  கொண்டது போல இருந்தது நண்பரே.

  ReplyDelete
 33. அந்நாளைய நினைவுகளுடன் அழகான பகிர்வு. திருப்பாவை பொருள்புரியும்போது மிகவும் ரசிக்கவைக்கிறது. நன்றி கணேஷ் சார்.

  ReplyDelete
 34. தகவலுக்கு நன்றி. ரிசர்வ் லைன் வழியாகத் தாண்டிச் சென்றால் வரும் நாராயணபுரம் பேங்க் காலனியா?! (அடுத்த ஸ்டாப் ஐயர் பங்களா) பேங்க் காலனிக்கு ஆஞ்சநேயர் கோவில் அல்லது பிள்ளையார் கோவில் ஸ்டாப்பில் பஸ் நிற்கும்போது எதிரே ஏரிக்கு எதிரே ரோடின் மேலேயே இருப்பது போலத் தோன்றும் வீட்டில் இருபத்தொரு வருடங்களுக்கு முன் வாடகைக்குக் குடியிருந்தோம்!!

  ReplyDelete
 35. @ தி.தமிழ் இளங்கோ said...

  உங்கள் வருகைக்கும், ரசித்ததற்கும் நன்றி தமிழ் இளங்கோ ஸார்!

  ReplyDelete
 36. @ மீனாக்ஷி said...

  நானும் க்யூவுல நிக்கக் கூடாதுன்னுதானே பாடிண்டு போற மாதிரி ஆக்ட் பண்ணேன். ஆண்டாள் கண்ணன் மேல் கொண்டது எதிர்பார்ப்பற்ற மட்டற்ற நேசம்! அது எனக்கும் பிடித்ததே. புரிதலில் பூக்கிறது நேசம் என்ற வரிகளை நானும்கூட தோழி ஹேமாவோட ப்ளாக்ல கவிதை படிச்சப்ப ரசிச்சேன். உங்கள் வருகைக்கும் விரிவாகக் கருத்திட்டமைக்கும் என் இதய நன்றி!

  ReplyDelete
 37. @ ஹேமா said...

  -வாங்க தோழி! மலரும் நினைவுகள் தூண்டப்பட்டதா? மிக்க மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 38. @ மகேந்திரன் said...

  -அட, அப்படி ஒரு ஃபீல் கிடைத்ததா? மிக மகிழ்கிறேன். கருத்துக்கு மிக்க நன்றி நண்பா!

  ReplyDelete
 39. @ கீதா said...

  -திருப்பாவை மட்டுமில்ல.. நாலாயிர திவ்யப் பிரபந்தமும் பொருள் புரிஞ்சு படிச்சா அழகுத் தமிழ் அதுல நடமானடியிருக்கும். அதையும் எழுதலாம்னு நினைச்சேன். ஆனா ஏற்கனவே ஒருத்தர் சூப்பரா எழுதிட்டிருக்கார்.
  http://narasimmah.blogspot.com/
  பிடிச்சிருந்தா படிச்சுப் பாருங்க தோழி! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  ReplyDelete
 40. @ ஸ்ரீராம். said...

  கரெக்ட் ஸார். நாராயணபுரம் பேங்க் காலனிலதான் நாங்க இருந்தோம். ஆனா நான் குறிப்பிட்ட கோதண்டராமர் கோவில் டி.வி.எஸ். நகர்ல இருக்கு. பேங்க் காலனி பத்தி நீங்க சொன்ன ஞாபகங்கள் சரி. அந்தப் பிள்ளையார் கோயில் இப்பவும் இருக்கு. நீங்களும் நம்ம பக்கத்து ஆளா நண்பரே...? மிக்க மகிழ்ச்சி!

  ReplyDelete
 41. ஆண்டாள் பாடலக்ளில் முதலில் ஒரு அர்த்தம் புரியும் பிறகு அதன் வேதாந்த விளக்கம் உணர்ந்தால் பிரமிப்பாக இருக்கும். இந்தப்பாடல்கள் பாடும் போது ஆண்டாள் சிறுமி. அந்த வயதுக்குரிய உணர்வுகள் மிகுந்திருக்கும். பிஞ்சில் பழுத்தவள் அவள். யானை எனும் அறிவு கொண்ட விலங்கினை தன்பாடல்களில் பல இடங்களீல் புகுத்தி இருப்பாள். அவள் கூறும் புறவெளி விசாலமானது நாம் அதில் கைவீசி நடந்தால் நிறைய அனுபவங்களைப்பெறலாம். தங்கள் பங்கும் அருமை கணேஷ்.

  ReplyDelete
 42. திருப்பாவை பாடல்களுக்கான பொழிப்புரை அருமை. ஏன் படங்களும்தான்.வாழ்த்துக்கள்!

  நாங்கள் பள்ளியில் படிக்கும்போது ‘பச்சை மால் மலைபோல் மேனி’என்ற பாடலுக்கு திரித்து பொருள் சொல்லி மகிழ்ந்தது, தங்களது ‘Barebody’ பற்றிய நகைச்சுவையை படிக்கும்போது நினைவுக்கு வந்தது.

  ReplyDelete
 43. இனிய காலை வணக்கம் பாஸ்

  மார்கழி மாதம் என்றது எனக்கும் என் சின்னவயது ஞாபகங்கள் வந்துவிடும் நாங்கள் நண்பர்கள் பலர் காலையிலே எழுந்து பனியையும் பொருட்படுத்தாது செல்வதுண்டும்...அது எல்லாம் ஒரு காலம்

  அருமையான பகிர்வு பாஸ்

  ReplyDelete
 44. @ ஷைலஜா said...

  நானும் ஆண்டாளின் பாடல்களில் தென்படும் பல பரிமாணங்களை ரசித்திருக்கிறேன். வார்த்தைகளில் விளக்க எனக்குத் திறன் பத்தலைக்கா. அதான் லைட்டா எழுதினேன். தங்கள் ரசனைக்கு என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 45. @ வே.நடனசபாபதி said...

  அந்த வயசுக்கே உரிய குறும்போட பாடலைத் திரித்துச் சொல்லி மகிழ்வதில் நீங்களும் திளைச்சிருக்கீங்களா... பகிர்வையும் ஓவியங்களையும் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி நண்பரே...

  ReplyDelete
 46. K.s.s.Rajh said...

  பழைய நினைவுகள் ரீவைண்ட் ஆகி நீங்கள் மகிழ்ந்ததில் எனக்கு சந்தோஷம். (உங்கள் தொடர் பதிவுல தொடர்ந்து கருத்துப் போட முடியல. விட்டு விட்டு படிக்கறேன். ஃப்ரீயா இருக்கற அன்னிக்கு முழுமையாப் படிச்சுட்டு கருத்திடறேன். மன்னிச்சூ ராஜ்) உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 47. மார்கழி மாச ஸ்பெஷலா?? நடக்கட்டும் நடக்கட்டும்! Barebody ஜோக் எங்க ஊர்லையும் எல்லாரும் சொல்லுவா. :)

  ReplyDelete
 48. @ தக்குடு said...

  வாங்கோ தக்குடு... நல்வரவு. உங்களோட இயல்பா பேச முடியறதேன்றதுல ரொம்ப சந்தோஷம். உங்கள் கருத்துக்கு என்னோட தேங்க்ஸை ஏத்துக்குங்கோ...

  ReplyDelete
 49. புத்தாண்டு வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 50. @ kovaikkavi said...

  உங்களுக்கு என் நன்றியும், இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களும்!

  ReplyDelete
 51. //கண்ணதாசனும் இதை அழகாக சொல்லி இருப்பார் 'புரிந்தவன் துணையாக வேண்டும்' என்று. //

  ஆண்டாள் நாச்சியார் இலக்குமியின் அவதாரம். இலக்குமி இல்லாமல் திருமால் இல்லை. அதாவது திருமாலை தனியே வணங்குதல் பலனில்லை. திருமாலின் மார்பிலே இருந்து சேதனர்களின் இறைன்சுதலைத் திருமாலுக்குக் கொண்டுபோய் அவர்களுக்கு கருணை காட்டும் இப்படிப்பட்ட தெய்வத்தை மனிதர்களோடு சேர்த்துப் பார்ப்பது பெரும் பாவம். வைணவர்கள் திருப்பாவையை திருவெம்பாவையுடன் கூட சேர்த்து பார்ப்பது இல்லை. காரணம்: மாணிக்கவாசகர் ஒரு மனிதப்பிறவி. அவர் எழுதிய பாடல்கள் தெய்வத்தில் திருவாக்கில் உதித்த பாடல்களோடு இணைத்துப்பார்க்கலாகா எனவே.
  ஆண்டாள் நாச்சியாரைப்பற்றி எழுதுபவர்களும் பின்னூட்டமிடுவர்களும் இவ்வுணர்வுகளை மதிக்கவேண்டுகிறேன்

  ReplyDelete
 52. உங்கள் சிறுவயது அனுபவத்துடன் கலந்து எழுதப்பட்ட
  இந்த மார்கழிமாத பஜனை நினைவுகள் எமது கடந்த
  காலத்தை மீண்டும் நினைக்க வாய்த்த சிறப்பான படைப்பாக அமைந்திருந்தது அருமை!...மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

  ReplyDelete
 53. உணர்வை வருடும் படங்கள். அற்புதமான் பாடல் மற்றும் விளக்கம். கலக்கிட்டிங்க சகோ.
  தமிழ்மணம் வாக்கு செலுத்திவிட்டேன்.

  ReplyDelete
 54. சின்ன வயசுல குழந்தைகள் காலைல குளிர்ல எழாதுகள். ரெண்டு பிள்ளைகளையும் தூக்கக்கலக்கத்துலயே எழுப்பி குளிப்பாட்டி ஸ்கூல் அனுப்பி கூடவே சேர்ந்து சிரமப்படுவோம். அப்ப பிள்ளைக நாம் சொல்வதை கேட்கணும்னு அதுகளுக்கு பிடித்ததை டிஃபன்பேக் செய்து தரேன்னு சொல்லி தாஜா செய்வேன்.

  ஆனா இங்க ஒரு பிள்ளை இந்த காலைக்குளிர்ல இத்தனை சீக்கிரம் எழுந்து சமர்த்தா (குளிக்காம குளிச்சமாதிரியே ஒரு பில்டப் செய்துக்கிட்டு ) பஜன் பாடிக்கிட்டே அதுவும் சத்தமா :) போகுதேன்னு பார்த்தால்... எல்லாம் சர்க்கரை பொங்கல் பண்ற வேலையா? :)
  ஆனாலும் இதுபோன்ற சிறுப்பிள்ளை வயதில் இதுபோன்ற அருமையான விஷயங்களை என்னைப்போன்றோர் மிஸ் பண்ணி இருக்கோம்.

  எதுக்காக காலை எழுகிறோம் இந்த மார்கழி மாதத்தில் என்று பிள்ளைகளுக்கு புரிவதில்லை அதுங்க அளவுக்கு தெரிஞ்சது போனால் சுண்டல் பொங்கல் நைவேத்யம் கிடைக்கும்னு... ஆனால் அதே பிள்ளை வளர்ந்ததுமே அதோட ஆட்டிட்ட்யூட் மாறுது பாருங்க...

  பொங்கலுக்காக போன குழந்தை இப்ப தமிழை ரசித்து ருசித்து திருப்பாவையை பாடும் அந்த தமிழ்க்கவிஞரை பெருமையாய் சொல்லவைத்திருக்கிறது....

  நீங்கள் சொன்னதுபோல ஆண்டாள் தான் முதல் பெண் கவிஞர்... எத்தனை அழகாக மெய்மறந்து அரங்கனிடம் தன்னை முழுமையாய் சமர்ப்பணம் செய்து கண்ணனை எழுப்ப பாடிய பாடல்வரிகள் எழுந்திரப்பா நந்தகோபா நந்தகோபா அப்போதும் அவன் புகழ் பாடி பாடி கண்ணனை துயிலெழுப்பும் அந்த வாஞ்சை ரசிக்கவைக்கிறது....

  கண்ணனுக்காக பாடிக்கொண்டு வந்திருக்கிறோமே கதவை திறவாயோ எழுந்திருக்கமாட்டாயோ குயில்களும் எழுந்தன.. இந்த அதிகாலையில் இன்னமும் எழாமல் ஏனம்மா இப்படின்னு ஆண்டால் உருகி உருகி பாடிய பாடல்வரிகள் அருமையான எளிய நடையில் புரியும்படியான விளக்கங்களுடனும் உங்க சின்னவயசு குறும்புகளையும் ரசிக்க தந்துவிட்டு.... அதாம்பா எடுத்தவுடனே ஆண்டாளை பற்றி படிக்கக்கொடுத்தால் அட எல்லா இடத்துலயும் இதைத்தானே செய்றாங்க. நாம கொஞ்சம் வித்தியாசமா நம்ம சின்னவயசு குறும்பை படிக்கக்கொடுத்து அதை படித்து ரசித்துக்கொண்டே ஆண்டாளின் பாடல்வரிகளையும் ரசித்து எல்லோரும் நலன் பெறட்டும் என்ற அருமையான உங்கள் சிந்தனையும் நகைச்சுவையும் தமிழ்மேல் கொண்ட பற்றினையும் உங்கள் வரிகளில் அறியமுடிகிறது கணேஷா...

  என்னது ரொம்ப லேட்டா பதிகிறேனோ? :) என்னசெய்வது... எப்பவுமே நான் லேட் தான்.... :)

  அன்பு நன்றிகள் கணேஷா ரசிக்கவைத்த பகிர்வுக்கு..

  ReplyDelete
 55. @ காவ்யா said...

  உங்களின் கருத்துக்களோடு நூறு சதம் உடன்படுகிறேன். தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம். இலக்குமி இன்றேல் திருமால் ஏது? இதயத்தில் உறைபவளாயிற்றே... என்னைச் செதுக்குவதற்கு மிகமிக நன்றி!

  ReplyDelete
 56. @ அம்பாளடியாள் said...

  உங்களின் வருகைக்கும் ரசித்ததற்கும் என் இதயம் கனிந்த நன்றி.

  ReplyDelete
 57. @ துரைடேனியல் said...

  துரை... தொடர்ந்து நீங்கள் எனக்குத் தரும் ஊக்கத்துக்கு என் மனமார்ந்த நன்றி. மேலும் உற்சாகமாய் நான் செயல்பட உங்களைப் போன்றவர்கள் தான் காரணம் நண்பா..

  ReplyDelete
 58. @ மஞ்சுபாஷிணி said...

  கொஞ்சம் வயசும் பக்குவமும் வந்ததும் ஆண்டாளின் தமிழை மட்டுமில்லை... அதிகாலையில் எழுவதால் மார்கழிக் குளிருடன் கிடைக்கும் சுத்தமான காற்று நுரையீரலுக்கு நல்லது என்ற விஞ்ஞானமும் அல்லவா புரிந்து நம் முன்னோர்களையும் ஆண்டாளம்மாவையும் வியந்தேன். வெறுமே பாடல்களைக் கொடுத்தால் நன்றாயிராது என எண்ணி என் அனுபவத்தோடு குழைத்துக் கொடுத்ததை நீங்கள் ரசித்ததற்கும் நகைச்சுவை கோட்டிங்கை பாராட்டியதற்கும் என் இதய நன்றி. கணேஷா என்று நீங்கள் அழைத்த வாஞ்சை எனக்குப் பிடித்திருக்கிறது. இப்படியே தொடருங்கள். அப்புறமென்ன... இது உங்கள் நண்பனின் இடம்தானே... நீங்களெல்லாம் எப்போது வந்து கருத்திட்டாலும் எனக்கு மகிழ்ச்சியே. விரிவாக கருத்திட்டு என்னை உற்சாகமூட்டியதற்கு மீண்டும் நன்றி.

  ReplyDelete
 59. படங்களுடன் பகிர்வு மிக மிக அருமை
  குறிப்பாக அந்த "பேர்பாடி " விளக்கம்
  படித்து வீட்டில் அனைவரும்
  சப்தமாகச் சிரித்துக் கொண்டோம்
  மனம் கவர்ந்த பதிவு
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 11

  ReplyDelete
 60. @ Ramani said...

  வீட்டில் அனைவரும் ரசித்துச் சிரித்தீர்களா? அனைவருக்கும் என் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் ரமணி ஸார்!

  ReplyDelete
 61. அருமையான விளக்கவுரை.. பதிவும் பின்னுரைகளும் நல்ல வாசிப்பு அனுபத்தைத் தந்தன.

  ReplyDelete
 62. @ middleclassmadhavi said...

  உங்களின் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்தது. பாராட்டியதற்கு என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 63. நியாபம் வருதேன்னு சொல்வதோடு செயலிலும் செய்தகாட்டிய கணேஷண்ணாவின் இப்பதிவு சூப்பர்..
  மார்கழி மாசமடி
  மனசெல்லாம் குளிருமடி
  என்பதைபோல் இருந்தது பதிவு.

  வாழ்த்துகளண்ணா..

  ReplyDelete
 64. @ அன்புடன் மலிக்கா said...

  மார்கழியின் குளிர்ச்சியை மனதில் உணர்ந்த தங்கைக்கு என் அன்பான நன்றி.

  ReplyDelete
 65. //ஆண்டாள்! தமிழில் பெண் கவிஞர் என்றால் முதலில் நினைவுக்கு வருவது ஆண்டாளின் பாடல்கள்தான். //
  ஆம்.

  ஆண்டாள் பாசுரங்களுக்கு சிறப்பான விளக்கம்.

  சிறு வயது நினைவுகள் அருமை.

  ReplyDelete
 66. மார்கழி மாதத்துக்கேற்ற அருமையான பதிவு. அருமை சார்.

  ReplyDelete
 67. @ RAMVI said...

  உங்கள் வருகைக்கும் ரசித்ததற்கும் என் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 68. @ பாலா said...

  வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றி பாலா சார்!

  ReplyDelete
 69. மிக அருமையாகவும் எழுதி இருக்கீங்க.நேர்த்தியான படங்கள்.ரசித்தேன் ...என் இனிய தைத் திருநாள் வாழ்த்துக்கள் ..

  ReplyDelete
 70. @ Kalidoss Murugaiya said...

  நல்வரவு காளிதாஸ்! உங்களுக்குப் பிடிச்சிருந்ததுல எனக்கு மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு என் இதய நன்றி மற்றும் தைத் திருநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 71. அழைப்பிதழ்:

  உங்களது இவ்விடுகையை இன்றைய வலைச்சரத்தில் “ஞாழல் பூ - அனுபவச்சரம்” என்ற தலைப்பில் வலையுலக நண்பர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறேன்.

  http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_08.html

  நேரம் இருக்கும் போது வந்து பார்வையிட அழைக்கிறேன்.

  நட்புடன்

  வெங்கட்.
  புது தில்லி.

  ReplyDelete
  Replies
  1. கண்டு மகிழ்ந்தேன் வெங்கட்! என் இதயம் நிறை நன்றி தங்களுக்கு!

   Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube