Wednesday, May 30, 2012

நடை வண்டிகள் - 18

Posted by பால கணேஷ் Wednesday, May 30, 2012

 இந்திரா செளந்தர்ராஜனும் நானும் - 1

ந்திரா செளந்தர்ராஜன்! இந்தப் பெயர் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பரபரப்பாக அடிபட ஆரம்பித்த பிறகு இவரை அறிந்திருப்பீர்கள். ஆனால் எனக்கு ஆரம்பநிலை எழுத்தாளராக (அவர்) இருந்த போதிலிருந்தே இந்திராஜியைத் தெரியும். என் மற்ற எழுத்தாள நண்பர்களின் கதைகளை நான் படிக்க ஆரம்பித்தபோது அவர்கள் பல சிறுகதைகளும் நாவல்களும் எழுதிப் பெயர் பெற்றிருந்தவர்கள்; என்னைவிட வயதில் மூ்த்தவர்கள். ஆனால் இந்திரா செளந்தர்ராஜனுக்கு அவரின் ஆரம்பப் படைப்பிலிருந்தே வாசகன் என்பதிலும், என்னைவிட சற்றே (தான்) வயதில் மூத்தவர் என்பதிலும் மிக்க மகிழ்ச்சி எனக்கு.

கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு மதுரையில் வேலை தேடித் திரிந்து கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது ஒரு பழைய புத்தகக் கடையில் ‘ஒன்றின் நிறம் இரண்டு’ என்ற புத்தகத்தை வாங்கினேன். ‘இந்திரா செளந்தர்ராஜன்’ என்ற ஆசிரியரின் பெயர் எனக்குப் புதியது. அந்த நூலின் முன்னுரையில் ‘கலைமகள் நடத்திய குறுநாவல் போட்டியில் முதல் பரிசு வாங்கிய கதை அது’ என்றும், ‘அதை எழுதுவதற்கு முன் தான் மருந்துக்கும் கதை எழுதியிராத கற்பனையாளன்’ என்றும் இ.செள.ராஜன் குறிப்பிட்டிருந்தார். இது என் ஆவலைத் தூண்டிவிட உடனே அந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.

படித்து முடித்ததும் பிரமித்துப் போனேன். முதல் கதை எழுதிய ஒருவரின் எழுத்தாக அது இல்லை. தேர்ந்த ‌ஒரு எழுத்தாளரின் நடை அதில் இருந்தது. அவர் கையாண்டிருந்த விஷயமும் கனமானதாக இருந்தது. அதன்பின் அவர் பெயர் தாங்கிய சிறுகதைகள் வார இதழ்களில் வந்தால் படிக்க ஆரம்பித்தேன். ஆழமான சமூகப் பிரக்‌ஞை கொண்டவைகளாகத்தான் அவர் சிறுகதைகள் இருந்தன; பொழுதுபோக்காக அல்ல. ஆனால் ‘குங்குமச் சிமிழ்’ இதழில் அவர் க்ரைம் கலந்த நாவல்கள் எழுதினார். அந்தக் க்ரைம் நாவல்களில் மற்ற எழுத்தாளர்கள் போல் துப்பறியும் நிபுணர்கள் வந்து துப்புத் துலக்குவதாக இல்லாமல் நாவலி்ன் கதாநாயகி துப்பறிந்து மர்மத்தை விடுவிப்பதாக எழுதியிருந்தார். (கன்னிப் பருந்து) அன்று முதல் இன்று வரை அவரது நாவல்களில் கதாநாயகிகள் பிரதானமாக இருப்பார்கள். இவையெல்லாம் எனக்கு அவர் மீது மரியாதையையும், அன்பையும் அதிகரித்தன. மாதநாவல்கள் அதிகம் விற்ற ஒரு காலகட்டத்தில் ரா.கு., பி.கே.பி., சுபா, பு.த.துரை போன்றவர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த போது தாமதமாக அந்த ரேஸில் கலந்து கொண்டவர் இந்திராஜி.

‘ரம்யா’ என்ற மாத இதழில் ‘கோடைகாலக் கொலைகள்’ என்ற பெயரில் ஒரு க்ரைம் நாவல் எழுதினார் அவர். படித்ததும் எனக்கு வியப்பும், கோபமும் ஏற்பட்டது. வியப்புக்குக் காரணம் அவர் கையாண்டிருந்த உத்தி. பிற எழுத்தாளர்கள் நாவலின் கடைசி அத்தியாயத்தில் குற்றவாளியை வெளிப்படுத்தி, அவன் ஏன் செய்தான், எப்படியெல்லாம் செயல்பட்டான் என்று விளக்குவார்கள். இந்திராஜியோ நாவலின் கடைசி அத்தியாயத்தில் குற்றவாளி எப்படிச் செயல்பட்டான், ஏன் செயல்பட்டான் என்பதையெல்லாம் (பெயர் குறிப்பிடாமலேயே) விளக்கி, கடைசி வரியில் குற்றவாளியின் பெயரைச் சொல்லி ‘முற்றும்’ போடுவார். இந்த உத்தியை வியந்து ரசித்த நான் கோபப்பட்டதன் காரணம்: அதுவரை பொறுப்புணர்வுடன் எழுதிய அவரது பேனா இந்த நாவல் முழுவதும் செக்ஸ் வர்ணனைகளும், காட்சிகளுமாக வரம்புமீறி விளையாடியிருந்ததுதான்.

உடனே அவருக்கு கோபமாக கடிதம் எழுதலாம் என்றாலோ, நேரில் போய் டோஸ் விடலாம் என்றாலோ முகவரி தெரியவி்ல்லை. அந்தச் சமயம் தினமலரில் வேலை கிடைக்க, மதுரையில் ஆறு மாதங்கள் பணியாற்றிய பின், கோவைக்கு பணி மாறுதல் கிடைத்து போயிருந்தேன். அங்கே ரா.கு.வின் அறிமுகம் கிடைத்துப் பழக ஆரம்பித்த நாட்களி்ன்போது இ.செள.ராஜன் மதுரையைச் சேர்ந்தவர் என்ற தகவலும் தெரிந்தது எனக்கு. ‌எழுத்தாளர் அபிமானத்துடன் ஊர் அபிமானமும் சேர்ந்து கொள்ள, ராஜேஷ்குமாரிடம் இந்திராஜியின் முகவரி வேண்டும் என்று கேட்டேன்.

‘‘அட்ரஸ் நினைவில்ல கணேஷ். ஆனா போன வாரம் கூட எனக்கு ஒரு லெட்டர் போட்டிருந்தார். எங்க வெச்சேன்னு நினைவில்ல. ஒரு ரெண்டு நாள் கழிச்சு வாங்களேன். தேடி வெக்கறேன்’’ என்றார் ரா.கு. எங்கள் நட்பின் ஆரம்ப காலகட்டம் அது என்பதால் நம்ம பங்க்‌ச்சுவாலிட்டி பத்தி அவருக்குத் தெரியவில்லை. சரியாக இரண்டு நாட்கள் விட்டு விட்டு மூன்றாவது நாள் அவர் வீட்டுக்குப் போய் (அவர் துணைவியார் தனலக்ஷ்மி தந்த டீயை ருசித்துவிட்டு) அவர் எதிரில் நின்று அதே விஷயத்தைக் கேட்டேன். அவர் ‘ஙே’ என்று விழித்தார். (அடர்த்ததியான) தன் தலையைச் சொறிந்தபடி ‌சொன்னார்: ‘‘நான் தேடிப் பார்த்துட்டேன் கணேஷ். எங்க போச்சுன்னு தெரியலை, கிடைக்கலை. ஏதாவது பத்திரிகை ஆபீஸ்லருந்து தொடர்கதை அத்தியாயம் கேக்க ‌ஃபோன் பண்ணுவாங்க. அப்ப கேட்டுச் சொல்றேன் கண்டிப்பா’’ என்றார்.

அப்படிச் சொன்னாரே தவிர, அவருக்கிருந்த பிஸியில் சொன்னபடி செய்ய அவரால் முடியவில்லை. நான் அவரை ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும், மற்ற விஷயங்களைப் பேசிவிட்டு கிளம்புகையில் இதைக் கேட்பதும் அவர் ‘ஹி... ஹி...’ என்பதும் தொடர்கதையாகிப் போனது. ஒரு கட்டத்தில் நான் சலித்துப் போய், ‘இனி ரா.கு.விடம் இதைக் கேட்டுப் பிரயோஜனமில்லை’ என்ற முடிவுக்கு வந்து அதைப் பற்றிக் கேட்பதை நிறுத்தி விட்டேன். இ.செள.ராஜனை சந்திக்கும் விருப்பத்தையும் சற்றே ஒத்தி வைத்திருந்தேன். அப்படியே பல மாதங்கள் கழிந்த பின்னர், எனக்கு இந்திரா செளந்தர்ராஜனைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிட்டியது. ஆச்சரியகரமான ஒரு விஷயம் என்னவென்றால்... அந்தச் சந்திப்புக்கு மூலகாரணமாக அமைந்தவர் நண்பர் ராஜேஷ்குமார், அவர் மூலமாகவே இந்திராஜியைச் சந்தித்தேன் என்பதுதான்!

அது எப்படி நிகழ்ந்தது என்பதை...

-தொடர்கிறேன்

Monday, May 28, 2012

நோய் தீர்க்கும் மருத்துவன்!

Posted by பால கணேஷ் Monday, May 28, 2012

கிருத யுகத்தில் வீக்ஷாரண்யம் என்ற அடர்வனத்தில் ‘ஹிருத்தாபநாசினி’ என்ற தீர்த்தக்குளம் ஒன்று அமைந்திருந்தது. ஒவ்வோர் ஆண்டும் கங்கை முதலான பல தீர்த்தங்கள் இந்‌தக் குளத்து நீரோடு கலப்பதாக ஐதீகம். இந்த உண்மையை அறிந்திருந்த முனிவர்களும் தேவர்களும தை அமாவாசையன்று இக்குளத்திற்கு வந்து நீராடிச் செல்வார்கள். தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருந்த சாலிஹோத்ரர் என்ற அந்தணர், ஒரு தை அமாவாசையன்று இங்கு வந்தடைந்து முனிவர்களும் தேவர்களும் நீராடும் காட்சியைக் கண்டு விவரங்களை விசாரித்தறிந்தார். ‘இப்பேர்ப்பட்ட குளத்தி்ன அருகில் இறைவன் இல்லாதிருப்பதா?’ என்ற எண்ணம் அவருள் எழுந்தது.

ஓராண்டு காலம் ஒரு கணமும் பிறழாமல் திருமாலை நோக்கித் தவம் செய்வது என்று தீர்மானித்தார். அதற்கு முன் ஒரு வேளை மட்டும் ஆகாரம் உண்ணலாம் என்று அன்னம் தயாரித்தார் அதிதிக்கு உணவளித்து விட்டு உண்ணுதல் மரபென்பதால் காத்திருந்தார். கண்கள் பஞ்சடைந்து களைப்புடன் காணப்பட்ட ஒரு முதியவர் வந்து யாசகம் கேட்க, மகிழ்வுடன் அவருடைய பங்கைப் படைத்தார். அவர் பசி அடங்கவில்லை. ‘இன்னும் கிடைக்குமா?’ என்று கேட்டார். தன் பங்கையும் சாலிஹோத்ரர் தர, அதை உண்டு திருப்தியுடன் சென்றார் முதியவர். வயிறு வாடினாலும் மன நிறைவுடன் சாலிஹோத்ரர் தவத்தில் ஆழ்ந்தார்.

அடுத்த தை அமாவாசையன்று தேவர்களும், ரிஷிகளும் குளத் தில் நீராட வர, கண் விழித்த சாலிஹோத்ரர் ஓராண்டு ஆகி விட்டதை உணர்ந்தார். குளத்தில் நீராடி, ஆண்டவனைத் தொழுது அன்னம் தயாரித்தார். வழக்கம்போல் அதிதிக்குப் பங்கு பிரித்தார். ஆச்சரியமாக, சென்ற ஆண்டு வந்த அதே முதியவர் இன்னும் உடல் தளர்வுற்று பசியுடன் வந்து யாசகம் கேட்டார். சாலிஹோத்ரர் அவர் பாதத்தைக் கழுவிப் பணிந்து அன்னம் படைத்தார். அதிதிக்குரிய பங்‌கை உண்டபின்னும் அவர் பசி அடங்கவில்லை என்பதைக் குறிப்பாலுணர்ந்த சாலி‌ஹோத்ரர், தன் பங்கையும் அவர் இலையில் பரிமாறினார். அதையும் உண்ட முதியவர் கண்ணில் ஒளி பிறந்தது. ‘‘ஐயா, பசி தீர்ந்தது. உண்ட மயக்கத்தால் உறக்கம் பிடித்தாட்டுகிறது. படுக்கக் கொஞ்சம் இடம் வேண்டும். எவ்வுள் படுப்பது?’’ என்று வினவினார்.

சாலிஹோத்ரர் தன் பர்ணசாலையைக் காட்ட, முதியவர் அங்கு படுத்தார். கடுங்குளிரினால் அவர் உடல் நடுங்குவதைக் கண்ட சாலிஹோத்ரர் தான் ஆடையாக அணிந்திருந்த மரவுரியை முதியவருக்குப் போர்த்தி விட்டு வெளியே வந்தார். அதன்பின் நிகழ்ந்தது அதிசயம்! துந்துபி வாத்யங்கள் முழங்க, கந்தர்வர்கள் கானமிசைக்க, அப்சரஸ்கள் நடனமிட, சாலிஹோத்ரரின் முன்பாக திருமா‌ல் திவ்ய சரீரத்துடன் ஆடை ஆபரணங்கள் அணிந்தவராய் காட்சியளித்தார். ‘‘முதியவராக வந்து உம்மிடம் யாசகம் பெற்றது யாமே. உனக்கு என்ன வேண்டும் சாலிஹோத்ரா?’’ என்று வினவினார்.

சாலி‌ஹோத்ரர் ஆனந்தக் கண்ணீருடன் மண்டியிட்டு, ‘‘ஐயனே, எனக்கு எதுவும் வேண்டாம். உலக மக்களை உய்விக்க நீ இங்கேயே எப்போதும் எழுந்தருளியிருக்க வேண்டும். இக்குளத்தில் நீராடி உன்னை தரிசிக்கும் பக்தர்களுக்கு இடர் எதுவும் நேராமல் காத்தருள வேண்டும்’’ என்று வேண்டினார். ‘‘உமக்காக வேண்டாமல் உலக மக்களுக்காக வேண்டினீரே... உமது சிரசின் மீது ஆணையாக இனி எக்காலமும் நான் இங்கே கிடந்த கோலத்தில் காட்சி தருவேன். என்னைத் தரிசிக்கும் மக்களின் பிணிகளை அகற்றி, அவர்தம் பாவங்களைப் ‌போக்கி அருள்பாலிப்பேன்’’ என்று அருளினார்.

நாராயணன் விரும்பிப் படுத்த பர்ணசாலையே கர்ப்பக்கிரகமாய் .உருவெடுக்க பல்லவர் - சோழர்கள் காலத்தில் அங்கே ஆகம விதிப்படி ஓர் ஆலயம் எழுப்பப்பட்டது. கோயிலின் நுழைவாயிலின் மேல் ஐந்தடுக்கில் கோபுரம் அமைந்தது. அங்கே குடி கொண்ட பெருமாள் ஆழ்வார்கள் காலத்திலிருந்த ‘வீரராகவப் பெருமாள்’ என்று அழைக்கப்படலானார். தன்னை தரிசிக்கும் பக்தர்களின் பிணிகளைப் போக்கும் சக்தி படைத்தவராக விளங்கவதால் ‘பிணிதீர்த்த பெருமாள்’ என்றும் ‘வைத்திய வீரராகவப் பெருமாள்’ என்றும் வழங்கலாயின.

பெருமாள் ‘எங்கே படுப்பது?’ என்று கேட்கும் விதமாக ‘எவ்வுள்?’ என்று வினவியதால் ‘திருஎவ்வுளூர்’ என்று பெயர் பெற்று, அந்த ஊர் இன்று ‘திருவள்ளூர்’ என்று அழைக்கப்படுகிறது. திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆலயத்தில் நுழைந்தவுடன் விஸ்தாரமான ஒரு முற்றம், மையத்தில் பலி பீடம், கொடிமரம். அதைக் கடந்து உட்சென்றால் கோயில் கொண்ட பெருமாளின் கூடம். இரு பதினாறு கால் மண்டபங்களுக்கிடையில் அழகாய் அமைந்த கருடன் சன்னதி. கணமும் கண்ணிமைக்காமல் பெருமாளை தரிசித்தபடி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார் கருடாழ்வார். கருடாழ்வாருக்கு நேரெதிரே கிழக்கு திசை நோக்கி வீரராகவப் பெருமாளின் கர்ப்பக்கிரகம்.

அரவணையில் கிடந்த கோலத்தில் பெருமாள் தென்திசையில் தலையும், வடதிசையில் திருவடியும் வைத்து, இடக்கரம் அவர் நாபியில் உதித்த நான்முனுக்கு பிரவண மந்திரத்தை உபதேசிக்க, வலக்கரம் சாலி ஹோத்ரரின் தலை மீது வலக்கரம் வைத்து சயனித்த திருகக‌ோலத்தில் சேவை சாதிக்கிறார். பெருமாள் சன்னதியில் உட்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் லக்ஷ்மி நரசிம்மரின் சன்னதி. வடமேற்கு மூலையில் உள்ள சன்னதியில் மார்பில் விஜயவல்லி துலங்க, பதினாறு கரங்களுடன் காட்சியளிக்கிறார் சக்கரத்தாழ்வார்.

வெளிப்பிரகாரத்தில் ஆழ்வார்களுக்கான இரண்டு மணி மண்டபங்கள். அதையடுத்து வசுமதித் தாயார் என்றும் கனகவல்லித் தாயார் என்றும் போற்றப்படும் தாயார் சன்னதி. கனகவல்லித் தாயார் அமைதியும், கருணையும் துலங்கும் முகத்துடன் காட்சி தருகிறாள். ஸ்ரீ வேதாந்த தேசிகர் இந்தத் தாயாரின் பேரில் 30 ஸ்லோகங்கள் கொண்ட ‘ஸ்ரீ ஸ்துதி’ பாடியிருக்கிறார். தாயார் சன்னதிக்கு நேர் பின்புறம் தென்மேற்கு திசையில் அமைந்திருக்கும் சன்னதியில் ஸ்ரீராமர், சீதாப்பிராட்டி, இளையபெருமாள், ஆஞ்சநேயர் ஆகியோருடன் காட்சியளிக்கிறார். அடுத்தது ஸ்ரீ வேணுகோபாலன் சன்னதி. பாமா, ருக்மணி சகிதம் புல்லாங்குழலுடன் காட்சி தருகிறான் புருஷோத்தமன்.

பிரகாரத்தின் வடக்கு திசையில் ஒரு சிறு மண்டபம். அதில் சுவாமியின் கல் பாதங்கள். ‘உடல் உபாதைகள் நீங்க வேண்டும்’ என்ற பிரார்த்தனை யுடன் வருபவர்கள் இந்த கல் பாதத்தில் மிளகு கலந்த உப்பு சமர்ப்பிக்கிறார்கள். அவர்களின் பிணி நீக்கி அருள்கிறார் வைத்திய வீரராகவப் பெருமாள். ஆலய தரிசனம் ‌முடித்து வெளிவந்தால் ஆலயத்தின் வலதுபுறம் ஹிருத்தாபநாசினி குளம். இக்குளத்தில் வெல்லத்தைக் கரைத்து பாலை ஊற்றினால் பண்ணிய பாவங்கள் அனைத்தும் அகலும் என்பது நம்பிக்கை.

தை அமாவாசையன்று வீரராகவப் பெருமாள் சாலிஹோத்ர மகரிஷிக்கு காட்சியளித்ததால் ஒவ்வொரு தை அமாவாசையன்றும் கணக்கில்லா பக்தர்கள் திரண்டு வந்து, குளத்தில் நீராடி, வெல்லம் கரைத்து பால் ஊற்றி, பெருமாளைத் தரிசித்து உப்பு மிளகு சமர்ப்பிதது அவனருள் பெறுகிறார்கள். சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் திருவள்ளூருக்கு நீங்களும் ஒரு முறை சென்று வைத்திய வீரராகவப் பெருமாளைத் தரிசித்து அவனருக்குப் பாத்திரமாகுங்கள்!

மேய்ச்சல் மைதானம் செல்ல குறுக்கு வழி!

Saturday, May 26, 2012

கிளி! கிலி! கிழி!

Posted by பால கணேஷ் Saturday, May 26, 2012

நான் அந்த வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த போது எனக்கு முன்பாகவே தினேஷும், கான்ஸ்டபிள்களும் வந்து விட்டிருந்தனர், பைக்கை நிறுத்திவிட்டு நான் இறங்கவும். தினேஷ் சல்யூட் அடித்து என்னை வரவேற்றார். நல்ல நிறமாக, ஐந்தே முக்காலடி உயரத்தில், இளந் தொந்தியோடு சுமாரான பருமனில் ‘மங்காத்தா’ அஜீத் போல பர்ஸனாலிட்டியாக இருக்கும் தினேஷ் எனக்குக் கீழ் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்!  “பாடி எங்க இருக்கு?” கேட்டபடி நான் நடக்க. “மாடிப் போர்ஷன் ஸார்...” என்றார் தினேஷ் உடன் வந்தபடி. மாடிப்படிகளேறி அந்தப் போர்ஷனுக்குள் நுழைந்ததுமே கண்ணில் அறைந்தது அந்தக் காட்சி.

சோபாவில் பாதியும் தரையில் பாதியுமாகக் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்தது அந்த இளம் பெண்ணின் உடல். அவளது உயிரற்ற விழிகள் நேர்ப்பார்வை பார்த்தபடி உறைந்து நின்றிருக்க, அவை என்னை முறைப்பது போலத் தோன்றியது எனக்கு. கர்ச்சீப் எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டேன். உயிருடன் இருந்த காலத்தில் பலரின் தூக்கத்தைக் கெடுத்திருப்பாள்! சுற்றிலும் பார்வையைப் போட்டபடி, “தினேஷ்! ஃபாரன்ஸிக் பீப்பிள்க்கு சொல்லிட்டீங்களா?” என்று கேட்க. “வந்துட்டிருக்காங்க ஸார்” என்றார் பணிவாக.

“இவ பேர் என்ன? அக்கம்பக்கத்துல என்கொயரி பண்ணியாச்சா? வீட்டை சர்ச் பண்ணினீங்களா?” என்ற என் தொடர் கேள்விகளுக்கு பொறுமையாய் பதிலளித்தார் தினேஷ். “இவ பேர் ப்ரீத்தி ஸார். இனிமேதான் அக்கம் பக்கம் என்கொயரி பண்ணணும். வீட்டை ஃபுல்லா ஸர்ச் பண்ணலை ஸார். பாத்ரூம்ல கொலை செய்யப் பயன்படுத்தின கத்தியை கண்டெடுத்தேன். கொலைகாரன் ரத்தக்கறைய கழுவிட்டு கீழ போட்டுட்டு போயிட்டான் போலருக்கு, கர்சீப்ல சுத்தி வெச்சிருக்கேன். வேற எதுவும் பாக்கலை ஸார்...” என்றார்.

‘‘சரி, நீங்க போய் ஹவுஸ் ஓனரைக் கூட்டிட்டு வாங்க. என்கொயரி பண்ணிடலாம்’’ என்றேன். அவர் கீழே இறங்கிச் சென்றார். ஒவ்வொரு அறையாகப் பார்வையிடத் தொடங்கினேன். படுக்கையறையில் கட்டிலுக்குக் கீழே மின்னிய ‘அது’ என் கண்ணில் பட்டது. எடுத்தேன். ‘K.R.' என்கிற இன்ஷியல் பொறித்த மோதிரம். அதை பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன்.

பாரன்ஸிக் ஆட்கள் வந்து ரேகை சேகரிக்கத் துவங்கினர். அவளின் படுக்கையறை அலமாரியில் கிடைத்த டைரியுடன் நான் வெளியே வர, தினேஷ் வீட்டுச் சொந்தக்காரருடன் வந்தார். நாகேஷ் போல ஒல்லியாக, வழுக்கைத் தலையுடன் இருந்த அவரிடம், ‘‘இந்தப் பொண்ணு எவ்வளவு நாளா இங்க இருக்கா? இவளைப் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் சொல்லுங்க...’’ என்றேன் அதட்டலாக.

‘‘ஸார்... ஆறு மாசமா இங்க குடியிருக்கா. இவளுக்கு உறவுன்னு சொல்லிக்க யாரும் இல்லன்னு ‌சொன்னா ஸார். ‌ஏதோ கால் சென்டர்ல வேலைன்னு சொன்னா. நேரங்கெட்ட நேரத்துக்கு வருவா, போவா. சில ஆம்பளைங்க வேற அடிக்கடி சந்திக்க வர்றதுண்டு. இவ நடவடிக்கை பிடிக்காம காலி பண்ணும்படி கூடச் சொல்லிட்டேன். அதெல்லாம் முடியாதுன்னு எதிர்த்துப் பேசிட்டிருந்தா ஸார். நானே போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் தரலாம்னு இருந்தேன். அதுக்குள்ள இப்படியாயிடுச்சு...’’ என்று கடகடவென்று ஐந்தாம் வாய்ப்பாடு ஒப்பிப்பது போல ஒப்பித்தார். கால்கள் வெடவெடவென்று ஆடிக் கொண்டிருந்தன. ‘போலீஸ்’ என்றாலே நடுங்குகிற ஆசாமிபோல! மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். அக்கம்பக்கத்தில் விசாரணை செய்தபோதும் ஏறக்குறைய ஹவுஸ் ஓனர் சொன்னது போலத்தான் சொன்னார்கள். புதிய தகவல் எதுவும் பெயராததால், பாடியை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பிவிட்டு, வீட்டை சீல் வைத்துவிட்டுக் கிளம்பினோம்.

‘‘தினேஷ்! போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் என்ன சொல்லுது?’’ எனக் கேட்டேன் நான். ‘‘கொலை செய்யப்படறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி உடலுறவு கொள்ளப்பட்டிருக்கா ஸார். அவ உடம்புல மூணு கத்திக்குத்துக் காயங்கள் அழுத்தமா விழுந்திருக்கு. குத்தப்பட்ட கோணத்தை வெச்சுப் பாக்கறப்போ, கொலையாளி ஒரு இடதுகைக் காரனா இருக்கணும்னு டாக்டர் குறிப்பிட்டிருககார் ஸார்...’’

‘‘அப்படியா?’’ என்றேன். ‘‘அப்புறம் ஸார்... ஃபாரன்ஸிக்லருந்து வந்த ரிப்போர்ட்ல கத்தியிலயும், டெலிஃபோன்லயும் கிடைச்ச கை ரேகைகள் இருக்கு ஸார். ஸாலிட் எவிடென்ஸ். ஆள் யாருன்னு தெரிஞ்சிட்டா கம்பேர் பண்ணிப் பாத்துடலாம்...’’ என்றார்.

‘‘தினேஷ்! அவளோட டைரியப் படிச்சுப் பாத்தேன். அவ வேலை பாத்த கம்பெனிலயும் என்கொயரி பண்ணிட்டேன். அவ வேலை பாத்த கம்பெனி எம்.டி. அருண்கூட சுத்தியிருக்கா. அதைத் தவிர இளங்கோ, ராஜான்னு இரண்டு பேரை காதலிக்கிறதா சொல்லி ஏமாத்தியிருக்கா. இவங்களைத் தவிரவும் பல பேர் இருக்கணும்னு எனக்குத் தோணுது. எல்லாரையும் டீடெய்லா என்கொய்ரி பண்ணினதுல இவங்க மூணு பேர்தான் என் சந்தேக வளையத்துக்குள்ள வர்றாங்க. ஏன்னா இவங்க மூணு பேருமே லெஃப்ட் ஹேண்டர்ஸ்! நீங்க கான்ஸ்டபிள்ஸை அனுப்பி இவங்க மூணு பேரோட கைரேகையையும் அவங்களுக்குத் தெரியாம, கலெக்ட் பண்ணிட்டு வாங்க. ஃபாரன்ஸிக்ல கம்பேர் பண்ணினா உண்மை வெளில வந்துடும். அப்புறம் இருக்கு கச்சேரி...’’ என்றேன். ‘‘பண்ணிடலாம் ஸார்...’’ என்று துடிப்பாகக் கிளம்பிச் சென்றார் அந்த இளைஞர்.

டுத்த இரண்டாம் நாள் அவர் கைரேகைகளுடன் வர, அதை லேபுக்கு அனுப்பிவிட்டு மேலும் ஒரு தினம் காத்திருக்க வேண்டியிருந்தது. மூன்றாம் நாள் மதியம் தினேஷ் பரபரப்பாக வந்தார். ‘‘ஸார்...! நாம கலெக்ட் பண்ணின மூணு ரேகைகள்ல அவளோட கம்பெனி எம்.டி. அருணோட கைரேகை நூறு சதம் ஒத்துப் போகுதுன்னு ரிப்போர்ட் வந்திருக்கு ஸார்...’’ என்றார்.

உடன் செயல்பட்டு அரெஸ்ட் வாரண்ட் வாங்கி, அவனை ‘ரெட் செல்’லில் வைத்து ‘கவனித்தோம்’.. ‘‘ஸார்... நான் அவகூட நெருங்கிப் பழகினது நிஜம். ஆனா சம்பவம் நடந்த அன்னிக்கு நான் போனப்ப அவ சாகற தருவாய்ல இருந்தா. ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போலாமேன்னு கத்திய உருவினேன். உடனே செத்துட்டா. கத்தியை க்ளீ்ன் பண்ணிட்டு பயத்துல ஓடிட்டேன். சத்தியமா நான் கொலை பண்ணலை ஸார்...’’ என்று கதறினான் அவன். ‘‘மயிலே, மயிலேன்னா இறகு போடாது. இவனுக்கு இன்னும் விசேஷ சிகிச்சை கொடுங்க. இன்னு்ம் அரை மணில இவன் உண்மைய ஒத்துக்கணும்’’ என்று கோபமாகப் பேசிவிட்டு ‘ரெட் செல்’லை விட்டு வெளியே வந்தேன்.

என் இருக்கைக்கு வரும்போது டெலிஃபோன் மணி ஒலித்தது. இடது கையால் ரிஸீவரை எடுத்து, ‘‘எஸ்... இன்ஸ்பெக்டர் கல்யாணராமன் ஹியர்’’ என்றேன். ‘‘என்ன கல்யாண், அந்த ப்ரீத்தி கேஸ் என்னாச்சு? ஏதும் க்ளூ கிடைச்சுதா?’’ என்றார் எதிர்முனையில் கமிஷனர். ‘‘ஸார்... அவ வேலை பாத்த கம்பெனி எம்.டி. அருண்தான் குற்றவாளி. ஸ்ட்ராங் எவிடென்ஸ் கிடைச்சிருக்கு. அரெஸ்ட் பண்ணிட்டு வந்துட்டேன். கேஸ் முடிஞ்சிடுச்‌சு ஸார்’’ என்றேன். என்னைப் பாராட்டி விட்டு அவர் ஃபோனை கட் செய்ய, ரிஸீவரை வைத்துவிட்டுப் பெருமூச்சு விட்டேன்.

 நல்லவேளை...! ப்ரீதியின் வீட்டில் 'K.R.' என்று இன்ஷியல் ‌போட்ட என் மோதிரம் என் கண்ணிலேயே பட்டது. தினேஷ் பார்த்திருந்தால் இவ்வளவு ஈஸியாக விஷயம் முடிந்திருக்குமா, என்ன..? ப்ளடி பிட்ச்! காதலிப்பதாய் நடித்து, என்னுடைய சைடு வருமானத்தைப் பூராவும் கறந்து விட்டு என்னையே ஏமாற்றினால்... விட்டு விட முடியுமா என்ன?  என் ஸ்டேஷன் லிமிட்டுக்குள்ளேயே அவள் குடியிருந்த வீடு இருந்தது என் அதிர்ஷ்டம்தான்!


Thursday, May 24, 2012

நடைவண்டிகள் - 17

Posted by பால கணேஷ் Thursday, May 24, 2012

பி.கே.பி.யும் நானும் - 9

ன் பெற்றோருக்கு என்னைவிட 10 வயது மூத்தவரான என் அண்ணனும் நானும் என இரண்டே பிள்ளைகள். எனக்கு ஏழு வயதாக இருக்கும் போது அப்பாவை இழந்து விட்டோம். அண்ணன் நல்ல வேலை கிடைத்து செட்டிலாகி, அவருக்குத் திருமணம் ஆகி. இரண்டு குழந்தைகள் பிறந்து... அனைவரும் ஒன்றாகவே இருந்தோம். பின்னர் எனது பணி நிமித்தம் பல ஊர்களில் பணி செய்ய வேண்டியிருந்ததால் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க வேண்டியதாக இருந்தது. என் திருமணம் முடிந்து அம்மாவை என்னுடன் வைத்திருக்க விருப்பம் இருந்தாலும் இயலாத சூழல் இருந்தது.

எனக்கு பிரச்னைகள் ஏற்பட்டு. நான் அதிலிருந்து ஒரு வழியாக விடுபட்டு வந்து பி.கே.பி ஸாரிடம் உதவியாளராக இருந்த காலகட்டத்தில் அம்மா என்னுடன் வந்து இருக்க விரும்பியதால் ஊருக்குச சென்று அழைதது வந்தேன். தொலைக்காட்சி ஊடகமாக இருந்தாலும் சரி, திரைப்பட ஊடகமாக இருந்தாலும் சரி.. அலுவலகப் பணி போல நேரம் பார்த்து வேலை செய்ய முடியாது. காலையில் போனால் பணி முடிந்து திரும்ப பல சமயங்களில் இரவாகி விடும். நான் இப்படி நேரம் காலம் பார்க்காமல் வேலை பார்ப்பதும் தன்னோடு நேரம் செலவிடாததும் அம்மாவுக்கு ஒரு குறையாக இருப்பதை அறிந்தேன். ஆகவே அவரிடமிருந்து விலகுவது என்ற முடிவுக்கு வந்தேன். அவரிடம் இதுபற்றிச் சொன்னபோது அவர் புரிந்து கொண்டு என்னைப் பணியிலிருந்து விடுவித்தார். கிழக்குப் பதிப்பகத்தில் பணிக்குச் சேர்ந்தேன் நான்.

அங்கே வேலை பார்த்து வந்த காலத்திலும் ஊஞ்சல் இதழின் உதவி ஆசிரியர் மற்றும் வடிவமைப்புப் பணியை மட்டும் விடாமல் செய்து வந்தேன். அதன் பொருட்டு மாதந்தோறும் சில நாட்கள் ச்ந்திப்பு கிடைப்பது மகிழ்ச்சியாக இருக்கும். ஊஞ்சல் இதழ் குமுதம் சைஸ் ஆக மாறி வடிவமைப்பும். அச்சுத் தரமும் நன்கு வந்து கொண்டிருந்த வேளையில் சில நிர்வாகக் காரணங்களால் தொடர்ந்து வெளியிட முடியாத நிலையில் சென்ற ஆண்டு பப்ளிஷர் அதை நிறுத்தி விட்டார். பணிக் காரணங்களுக்காக இல்லாவிடடாலும் இன்றளவும் இயன்ற போதெல்லாம் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறேன். நட்பிற்கு ஏது முடிவு?

நான் மட்டுமின்றி திரு.பி,கே,பி, அவர்களுடன் பழகிய அனைவருமே ஆவலுடன் எதிர்பார்ப்பது அவரிடமிருந்து வரும் புத்தாண்டு வாழ்த்தைத்தான். அவ்வளவு அழகாக, மிக ரசனையுடன் வடிவமைத்து அனுப்புவார் அவர். 2011ம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்தில் ஒவ்வொருவருக்கும் அவரவர் புகைப்படத்துடனும், நாட்காட்டியுடனும் அவர் வடிவமைத்து அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்ட ஒன்று. அதைப் பற்றி சக்தி விகடன் பொறுப்பாசிரியர் திரு.ரவிபிரகாஷ் அவர்கள் தனியாகப் பதிவே எழுதியிருக்கிறார். இங்கே க்ளிக்கி படிக்கலாம்,

அவருடைய இரண்டு புதல்விகளின் திருமண அழைப்பிதழும் புதுமையாகவே செய்திருந்தார், முதல் மகள் ஸ்வர்ணரம்யாவின் திருமண அழைப்பிதழ் ஒரு டிவிடி தான். சார்லி சாப்ளின். லாரல்ஹார்டி போன்ற நகைச்சுவைப்படங்கள் அடங்கிய சிடியும் அதன் கவரில் அழைப்பிதழுமாக அவர் வடிவமைத்திருந்தது இன்றும் என்னிடம் பாதுகாப்பாக.



இரண்டாவது மகள் ஸ்வர்ண ப்ரியாவின் திருமண அழைப்பிழை சினிமாவின் க்ளாப் போர்டு போல க்ளாம்ப் எல்லாம் அடித்து மிகுந்த ரசனை மற்றும் உழைப்புடன் தயாரித்திருந்தார், இதன் கவரிலும் பெறுபவர்களின் புகைப்படங்கள் அச்சிட்டு அழைப்பிதழ் அனுப்பி இருந்தார். இப்படி எதிலும் ஒரு அழகுணர்ச்சியும், புதுப்புது ஐடியாக்களை செயல்படுத்துவதில் ஆர்வமும் மிகுந்த அவருடன் பழகி வருவதை மிகப் பெருமையாக உணர்கிறேன் நான்.

-பி.கே.பி.யும் நானும் நிறைவு பெற,
இ.செள.ராஜனும் நானும் தொடங்குகிறது...

Tuesday, May 22, 2012


மீபத்தில் ‘எங்கள் ப்ளாக்’கில் ‘சங்கதாரா’ என்ற நூலை அறிமுகம் செய்திருந்தார்கள். அந்த அறிமுகத்தால் ஈர்க்கப்பட்டு உடனே அந்த நூலை வாங்கிப் படித்தேன். ‘விறுவிறுப்பு நான் கியாரண்டி’ என்று எங்கள் ப்ளாக்கில் குறிப்பிட்டிருந்தது மிகச் சரியான வார்த்தை. பாதி படித்து விட்டுக் கீழே வைக்கவே மனம் வரவில்லை.

‘இறந்த கடலில்’ உள்ள ‘பெர்முடா ட்ரையாங்கிள்’ என்ற பகுதியை அறிந்திருப்பீர்கள். அப்பகுதியில் சென்ற விமனங்களும், கப்பல்களும் காணாமல் போனதால் அந்த முக்கோணப் பகுதியில் பயணம் செய்வதை அனைவரும் தவிர்த்து வருகின்றனர். சோழர்கள் அரசியலில் ‘ஆதித்த கரிகாலன் கொலை’ என்பது அத்தகையதொரு பெர்முடா முக்கோணம். கல்கி உள்ளிட்ட பல சரித்திர நூலாசிரியர்கள் மேலோட்டமாக, அதைத் தவிர்த்து விட்டே தங்கள் வாகனத்தைச் செலுத்தியிருக்கிறார்கள். அதனுள் தைரியமாக புகுந்து புறப்பட்டு, ஆதித்த கரிகாலனின் மரணத்தின் பின்னேயுள்ள மர்ம முடிச்சை இந்நூலாசிரியர் மிக அருமையாக விடுவித்திருக்கிறார்.

வேறெந்த இடங்களையும் விட, நம் தமிழ்நாட்டில்தான் ‘ஹீரோ ஒர்ஷிப்’ என்பது மிக அதிகம். நமக்குப் பிடித்த ஹீரோவின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வோம்; பல சிறப்புப் பெயர்கள் சூட்டி மகிழ்வோம்; அவரை யாரேனும் குறை கூறினால் அடிக்கவும், கொல்லவும் தயங்கோம். தமிழன் என்ற இனத்தின் தனிக்குணங்களில் இது ஒன்று. அப்படி நீங்களனைவரும் கல்கி அவர்களின் ‘பொன்னியில் செல்வன்’ நூலைப் படித்து விட்டு சில கதாபாத்திரங்களின் மீது ‘ஹீரோ ஒர்ஷிப்’ மனதில் வளர்த்து வைத்திருப்பீர்கள். அந்தக் கண்ணோட்டத்துடன் இந்நூலைப் படித்தீர்கள் எனில், இந்நாவல் உங்களுக்குப் பேரதிர்ச்சி தரும். குந்தவையும், வந்தியத் தேவரும், பழுவேட்டரையர்களும், அனிருத்தப் பிரம்மராயரும், உத்தம சோழனும் கல்கிக்கு மாறான குணாதிசயங்களில் வேறுவிதமாய் அறிவீர்கள். ‘பொன்னியின் செல்வன்’ என்கிற கூலிங்கிளாஸைக் கழட்டி விட்டு நீங்கள் இந்தப் புதினத்தைப் படிப்பது நல்லது என்கிறார் நூலாசிரியர்.. அப்படிப் படித்ததால்தான் எனக்கு நல்ல வாசிப்பனுபவம் கிடைத்தது.

பொதுவாக எதிரி மன்னர்களுடன் போர் தொடுப்பவர்கள், அவனை சிறை செய்வார்கள் அல்லது கொன்று விடுவார்கள். இது இயல்பு. இந்த இயல்புக்கு மாறாக ஆதித்த கரிகாலன் ஏன் வெறி கொண்டு வீரபாண்டியனின் தலையை வெட்ட வேண்டும்? இந்தக் கேள்விக்கு நூலாசிரியர் சரியான விடை தந்திருக்கிறார். சகல காவலுடன் இருக்கக் கூடிய பட்டத்து இளவரசன், அதிலும் பெரு வீரன்... அப்படிப்பட்ட ஆதித்த கரிகாலனை அவ்வளவு எளிதாக ஒருவன் கொன்றுவிட முடியுமா? ரவிதாஸன் என்பவனும் அவனைச் சேர்ந்த பாண்டிய ஆபத்துதவிகளும் கொன்றனர் என்றும் அவர்களின் சொத்துக்களைப் பறித்துக் கொண்டு நாட்டை விட்டே துரத்தினான் ராஜராஜ சோழன் என்றும் கல்கி, விக்கிரமன், பாலகுமாரன் போன்ற பலர் எழுதிய சரித்திர நூ்ல்கள் கூறுகின்றன. அதேசமயம் ராஜராஜனுக்கு முன் ஆட்சி செய்த உத்தம சோழனின் காலத்தில் ரவிதாஸனுக்கு சோழ அரசில் ‌பெரும் பதவி கொடுத்து ‘பிரும்மாதி ராயன்’ பட்டமும் கொடுத்திருக்கிறார்கள். அப்படியெனில் அவன் எப்படி கொலையாளியாக இருக்க முடியும்?

-இப்படிக் கேள்வியுடன் புதினப் பயணத்தைத் துவக்கம் நூலாசிரியர் ‘காலச்சக்கரம் நரசிம்மா, விறுவிறுப்புக் குன்றாமல் பயணம் செய்து மிகத் தெளிவான ஒரு முடிவைத் தருகிறார். சோழர்கள் காலத்து ஆட்சி முறை, அவர்களுக்குள் இருந்த உறவுச் சிக்கல்கள, அக்காலத்திய பழக்க வழக்கங்கள் என்று நாவலைப் படிக்கையில் ஆச்சரியமும் பிரமிப்பும் எழும். ‘முருக்கல் அல்ல, முருங்கல்’ என்ற வார்த்தைப் பிரயோகத்தின் மூலமே என்னைக் கட்டிப் போட்டார் நரசிம்மா. இந்த வார்த்தைகளின் அர்த்தத்தை நூலாசிரியர் விவரிக்கையில் ஏற்பட்ட ஆச்சரியத்தை நீங்கள் உணர, நீங்களும் அவசியம் வாங்கிப் படியுங்கள்.

நாவலின் ஓட்டத்தினிடையே இத்தனை காலமாக பல சரித்திர நவீனங்களையும், க்ரைம் கதை‌களையும் படித்த அனுபவத்தை வைத்து, நூலின் முடிச்சுகளை ஆசிரியர் இப்படித்தான் அவிழ்ப்பார் என்கிற அனுமானத்துடனேயே படித்து வந்தேன். ஆனால் முடிச்சுகள் அவிழ்க்கப்படும ஒவ்வொரு கட்டத்திலும் நான் எதிர்பார்த்தபடி இல்லாமல் வேறு கோணத்தில் பயணித்து முடிச்சுகளை அவிழ்த்து ஆச்சரியமளித்தார் நூலாசிரியர். நான் ஆனந்த அதிர்வுடன் தோற்றுத்தான் போனேன்.

மக்களின் ஆட்சி என்று நாம் மார்தட்டிக் கொள்ளும் இன்றைய காலகட்டத்தில் பதவிக்காகவும், பணத்துக்காகவும் நடைபெறும் சூழ்ச்சிகளையும், ஊழல்களையும் கண்கூடாகக் கண்டு வருகிறோம். பணத்துக்காக தாயைக் கொன்ற மகன், காதலியைக் கொன்ற காதலன் என்று தினசரி செய்தித் தாள்களில் பல செய்திகளைப் படிககிறோம். அரசன் என்கிற தலைவனின் பேச்சுக்கு மறுபேச்சில்லாதிருந்த சரித்திர காலகட்டத்தில் வாழ்நதவர்களிடம் பதவி ஆசையோ, பண ஆசையோ இல்லாதிருந்திருக்குமா? இக்காலத்தைவிட அதிகமாகவே சதிகளும், போர்களும் நடைபெற்றிருக்கும் என்பதே உண்மை. இப்புதினம் அந்த அரசியல் சதிகளைக் கையாண்டு, விறுவிறுப்புடன் கூடிய ஒரு வாசிப்பனுபவத்தைத் தந்திருக்கிறது.

ஆதித்த கரிகாலன் கொலை இன்னாரால், இன்னவிதமாக நிகழ்ந்தது என்று சரித்திர முடிச்சு ஒன்றை அவிழ்க்கும் நூலாசிரியர் அதை மேலோட்டமாக நுனிப்புல் மேயவில்லை. தகுந்த சரித்திர ஆதாரங்களை நூல் நெடுகிலும் தந்திருக்கிறார். கடின உழைப்பின் பேரில் மட்டுமே சாத்தியப்பட்டிருக்கும் விவரங்கள் இவை. இத்தனை தகவல்களுடன் கூடிய, சர்ச்சைக்குரிய விஷயத்தை அலசும் ஒரு நூல் பள்ளி நாட்களில் நாம் படித்திருக்கும் வரலாற்றுப் புத்தகம் போல் இருக்கும் என்று எண்ணிவிட வேண்டாம். ஒரு க்ரைம் கதைக்குரிய விறுவிறுப்பும், வேகமும் இந்த சரி்த்திரப் புதினத்தில் இருக்கிறது. படிக்கத் துவங்கினால் ஒரே மூச்சில் முடித்து விட்டுத்தான் கீழே வைக்க நினைப்பீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

இந்த ‘சங்கதாரா’ புதினத்தை ஒரே மூச்சாகப் படித்த முடித்த உடனேயே இந்நூலாசிரியரின் மற்ற இரு புத்தகங்களான ‘காலச்சக்கரம்’ மற்றும் ‘ரங்கராட்டினம்’ ஆகியவற்றை வாங்கிப் படித்தேயாக வேண்டும் என்கிற தீர்மானம் எனக்குள் எழுந்து விட்டது. புத்தகத்தைப் படித்தால் நீங்களும் அதே முடிவிற்கு வருவீர்கள் என்பதில் எனக்கு துளியளவும் ஐயமில்லை. 450 பக்கங்கள் கொண்ட, ‘காலச்சக்கரம் நரசிம்மா’ எழுதிய ‘சங்கதாரா’ என்ற இந்நூலை சென்னை தி.நகர் தீனதயாளு தெருவில் 23ம் இலக்கத்திலுள்ள வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள்.

Saturday, May 19, 2012


ல்லாருக்கும் வணக்கம்! நடை வண்டியத் தொடரலாம்னு எடுத்தா... ஒரே தூசா இருக்கு. சரி, துடைச்சுட்டு அப்புறம் ஓட்டலாம், வேற பதிவு எழுதலாம்னு யோசிச்சேன். ஆனா பாருங்க... நாளைக்கு நடக்கப் போற பதிவர் சந்திப்புக்காக என் பிஸி ஷெட்யூலை அட்ஜஸ்ட் பண்ணிக்க ப்ளான் பண்றதால (பார்ரா...) மேட்டர் எழுத டைம் இல்லை. அதனால... நான் கட் பண்ணி வெச்சிருக்கற பழைய ஆ.வி. ஜோக்ஸை இங்க தர்றேன். படிச்சுட்டு எதெல்லாம் சிரிக்க வெச்சதுன்னு சொன்னீங்கன்னா... அதே மாதிரி ஜோக்ஸ் கலெக்ட் பண்ணி இன்னொரு பதிவு பின்னால தருவேன். சரியா..!














         

Thursday, May 17, 2012

கேப்ஸ்யூல் நாவல் - 6

Posted by பால கணேஷ் Thursday, May 17, 2012

வாஷிங்டனில் திருமணம்
மெரிக்க கோடீஸ்வரி ராக்பெல்லரின் நாத்தனார் பெண் லோரிட்டாவும், யுனெஸ்கோவில் பணிபுரியும் மூர்த்தியின் மகள் வசந்தாவும் கல்லூரித் தோழிகள். மிஸஸ் ராக்பெல்லரின் நாத்தனார் கணவரான ஹாரி ஹாப்ஸ், வசந்தாவின் திருமணத்துக்காக குடும்பத்துடன் கும்பகோணம் வருகிறார். அந்தத் திருமணத்தை அதிசயமாகப் பார்க்கும் அவர், அது பற்றிய குறிப்புகளையும் (சாப்பாட்டில் அப்பளம் என்ற வட்டமான ஒரு வஸ்துவைப் போடுகிறார்கள். அதை எப்படி வட்டமாகச் செய்கிறார்கள், எப்படி நொறுங்காமல் செய்கிறார்கள் என்பதெல்லாம் விளங்காத மர்மங்களா யிருக்கின்றன) எழுதிக் கொள்கிறார்.

அந்தக் குறிப்புகளைப் படித்தும், தென்னிந்தியக் கல்யாண விவரங்களை ஹாரிஹாப்ஸ் தம்பதிகள் சொல்லக் கேட்டும் மிஸஸ் ராக்பெல்லருக்கு ஒரு தென்னிந்தியத் திருமணத்தைப் பார்க்கும் ஆசை ஏற்படுகிறது. அமெரிக்காவில் ஒரு தென்னிந்தியத் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்யுங்கள் என்று உத்தரவிடுகிறார். தென்னிந்தியாவில் பெண்(ருக்மயி)ணின் குடும்பத்தினர் அம்மாஞ்சி, சாம்பசிவம் என்கிற இரு சாஸ்திரிகளுடன் அமெரிக்கா வருகின்றனர். பெண் வீட்டைச் சேர்ந்த பஞ்சு கல்யாண ஏற்பாடுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறான். விமானத்தில் பணிப்பெண்ணாக இருக்கும் லலிதாவை பஞ்சுவின் அத்தைக்குப் பிடித்துப் போகிறது. பஞ்சுவுக்கும்தான்!

மணமகன் (ராஜகோபாலன்) குடும்பத்தினர் தனி விமான்தில் ‌அமெரிக்கா வருகின்றனர். இந்தியாவிலிருந்து தனி விமானங்களில் கல்யாணத்துக்கு வேண்டிய அனைத்துப் பொருட்களும், நபர்களும் வரவழைக்கப்படுகின்றனர். பந்தக்கால் நடுதல், அப்பளம் இடுவது, ஜானவாசம், சம்பந்தி சண்டை என்று தென்னிந்தியத் திருமணத்தின் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் அமெரிக்கர்களுக்குப் புதிதாக இருக்க பல கலாட்டாக்கள் அரங்கேறுகின்றன. இவற்றுக்கிடையில் பஞ்சு-லல்லியின் காதலும் வளர்கிறது. இறுதியில் திருமணம் நன்கு நடந்தேற, ராக்பெல்லர் சீமாட்டி அனைவருக்கும் பரிசுப் பொருள்களும், சன்மானங்களும் கொடுத்து, கலங்கிய கண்களுடன் வழியனுப்பி வைக்கிறாள்.

-கதைச் சுருக்கம் என்று சொன்னால் சாவி அவர்கள் எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ கதையை இவ்வளவுதான் சொல்ல முடியும். பல கலாட்டாக்கள் என்று நான் இங்கு குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொன்றும் சாவி அடிக்கும் நகைச்சுவை ஸிக்ஸர்கள். அதை அனுபவிக்க முழுப் புத்தகத்தையும் நீங்கள் படித்தாக வேண்டும். சாம்பிளுக்காக சில இங்கே உங்களுக்காக:

தவில் என்பது டபுள் ஹெட்டட் இன்ஸ்ட்ரூமென்ட். இதை வாசிப்பவர் ஒரு பக்கத்தை ஸ்டிக்கால் ‘பீட்’ செய்து கொண்டு மறு பக்கத்தைக் கையால் அடிக்கிறார். எப்படி அடித்தாலும் தவில் கிழிவதில்லை. தாலி கட்டும்போது சிலர் ஆள்காட்டி விரலை ‌வேகமாக ஆட்டி இவரைப் பயமுறுத்துகிறார்கள். உடனே தவில்காரர் பயந்து ‘டமடம’வென்று தவிலைக் கொட்டி முழக்குகிறார்.

சாஸ்திரிகள் தண்ணீரில் மூழ்கி எழும் போதெல்லாம் ‘ஹாரி, ஹாரி’ என்று ஹரி நாமத்தை நீட்டி முழக்கி கோஷித்தார். கரையில் நின்று கொண்டிருந்த ஹாரி என்ற பெயருடையவர்கள் எல்லாம் தங்கள் பெயரைத்தான் சொல்கிறார் என்று எண்ணி மகிழ்ந்தார்கள்.

வெங்கிட்டு, தன் பாட்டியிடம் ஓடிப் போய், ‘‘பாட்டி! பறந்த அப்பளத்தையெல்லாம் பறக்கும் தட்டுன்னு நினைச்சு அமெரிக்கர்கள் சுட்டு விட்டார்களாம்’’ என்றான். ‘‘அடப்பாவமே! சுடுவானேன்? என்னிடம் சொல்லியிருந்தால் எண்ணெயில் பொரித்துக் கொடுத்திருப்பேனே! சுட்ட அப்பளம் நன்னாயிருக்காதேடா!’’ என்றாள் பாட்டி.

விருந்தில் பரிமாறப்பட்ட வடுமாங்காயைக் கடிக்கத் தெரியாமல் பலர் விரலைக் கடித்துக் கொண்டு ‘ஆ! ஆ!’ என்று அலறினர். பற்களுக்கிடையி்ல் விரல்கள் அகப்பட்டுக் கொண்டதால் காயம் ஏற்படவே விரல்களைச் சுற்றி பிளாஸ்திரி போட்டுக் கொண்டார்கள். மறுதினம் விரலில் துணி சுற்றிக் கொண்டு நின்ற தவில் வித்வான்களைக் கண்ட அமெரிக்கர் சிலர், ‘‘ஐயோ பாவம்! இவர்களுக்கும் வடுமாஙகாய் சாப்பிடத் தெரியவில்லை போலிருக்கிறது’’ என்று சொல்லி அனுதாபப் பட்டனர்.

நடந்து நடந்து கால் வீங்கிய சீமாட்டியின் காலில் விளக்கெண்ணையைத் தடவி ஒத்தடம் கொடுத்தார்கள் அத்தையும் பாட்டியும். ‘‘இப்ப நீங்க என்ன செய்யறீங்க?’’ என்றாள் மிஸஸ் ராக். ‘‘எங்களுக்குத் தெரிந்த கை வைத்தியம் செய்கிறோம்’’ என்றாள் அத்தை. ‘‘கால் வீங்கிப் போயிருக்க, கை வைத்தியம் செய்தால் எப்படி? கால் வைத்தியமாகச் செய்யுங்க’’ என்றாள் திருமதி ராக்.

‘‘நலங்கிட ராரா... ராஜகோபாலா’’ என்று ருக்கு பாடியபோது அத்தனை பேரும் உற்சாகத்துடன் சிரித்தனர். ‘ராஜகோபாலா’ என்று கணவன் பேரைச் சொல்லிப் பாடிவிட்ட ருக்மணி, வெட்கம் சூழ்ந்து கொள்ள மவுனமாகி விட்டாள். ‘‘எதுக்கு எல்லாரும் சிரிக்கிறாங்க?’’ என்றாள் மிஸஸ் ராக். ‘‘ருக்கு தன் ஹஸ்பெண்ட் பேரைச் சொல்லி விட்டாள். அதற்குத்தான் சிரிக்கிறோம்’’ என்றாள் லோசனா. ‘‘ருக்குவின் ஹஸ்பெண்ட் நேம் அவ்வளவு ஹ்யூமரஸா?’’ என்று கேட்டாள் மிஸஸ் ராக்.

Tuesday, May 15, 2012

நடை வண்டிகள் - 16

Posted by பால கணேஷ் Tuesday, May 15, 2012

பி.கே.பி.யும் நானும் - 8

Terrorist என்ற பதத்தின் பொருள் பயங்கரவாதி என்றுதான் இருக்க வேண்டும். தீவிரவாதி என்று பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாகப் படித்தவர்களுக்கு தீவிரவாதி என்றாலே பயங்கரவாதம் செய்பவன் என்றுதான் பொருள் கொள்ளத் தோன்றுகிறது. ‘பெரியார் ஒரு தீவிரவாதி’ புத்தகத்தின் முன்னுரையில் பி.கே.பி. எழுதியதில் ஒரு பகுதியை இங்கே தருகிறேன்:

தன் இனத்திற்காக, மொழிக்காக, மண்ணிற்காக ஆயுதம் ஏந்தி களத்தில் இறங்கி போர் செய்யும் போராளிகளைப் போல சமூகத்தின் முட்டாள்தனங்களுக்கும், அடிமைத்தனத்திற்கும் எதிராக சிந்தித்து செயல்பட்ட தந்தை பெரியார் அவர்களும் ஒரு சமூகப் போராளிதான். கொண்ட லட்சியத்தில் உறுதியும், தீவிரமும் கொண்டு அர்ப்பணிப்புடன் உழைக்கிற ஒவ்வொரு நபருமே ஒரு தீவிரவாதி என்பேன். விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு தீவிரவாதி. நாட்டின் சுதந்திரத்திற்காக அஹிம்சை என்கிற ஆயுதத்துடன் போராடிய மகாத்மா காந்தியும் ஒரு தீவிரவாதி. அந்த வரிசையில் சமூக மேம்பாட்டிற்காக தீவிரமாக கடைசி மூச்சு வரை உழைத்த, தன்னையே அர்ப்பணித்த தந்தை பெரியாரும் ஒரு தீவிரவாதியே! எனவேதான் இந்தப் புத்தகத்திற்கு ‘பெரியார் ஒரு தீவிரவாதி’ என்கிற தலைப்பைத் தேர்வு செய்தேன்.

புத்தகம் தயாரானதும் திரு.பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் திருச்சியில் புத்தக வெளியீட்டு விழா நடத்தினார் பி.கே.பி. கச்சிதமாக சொன்ன நேரத்தில் துவங்கியும், துல்லியமாக சுவாரஸ்யமாக நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தியும் இருந்ததால் விழாவுக்கு வந்திருந்த எவரும் இடையில் எங்கும் எழுந்து போகாமல் முழுமையாக விழா முடியும்வரை இருந்தனர். புத்தக வெளியீட்டு விழாவாக மட்டுமின்றி, ‘க்ளோபல் வார்மிங்’ என்கிற ‘புவி வெப்பமயமாதல்’ பற்றி விரிவான தகவல்களுடன் ஒரு விளக்கப்படம் தன் மகளின் உதவியுடன் தயார் செய்திருந்தார். அதைத் திரையிட்டுக் காட்டியதுடன், வந்திருந்த அனைவருக்கும் ஒரு மரக்கன்றும் வழங்கப்பட்டது.

 விழாக்களில் பொன்னாடை என்று ஒரு கலர் துண்டு போர்த்தி மரியாதை செய்வார்கள். அதை வீட்டில் எடுத்துச் சென்று வைத்துக் கொள்ளலாமே தவிர, எதற்கும் பயன்படாது. அப்படியின்றி நல்ல குற்றாலத் துண்டு ஒன்றை போர்த்தி மரியாதை செய்தால் அது அனைவருக்கும் பயன்படுமே என்று திட்டமிட்டு, அப்படியே செய்தார். வந்திருந்தவர்களுக்கு நினைவுப் பரிசு கூட அழகான புத்தாண்டு டைரியும், பேனாவும் என்று ஒவ்வொன்றையும் பார்‌த்துப் பார்த்து அவர் செய்திருந்தார். நானும் எல்லாவற்றிலும் உடனிருந்தேன். அப்படி உடனிருந்த எனக்கே தெரியாமல் விழா நிகழ்ச்சிகளின் போது (ப்ளானிங், பர்சேஸிங் எல்லாவற்றிலும் உடனிருந்த எனக்கே சர்ப்ரைஸாக) என்னையும் மேடையேற்றி மரியாதை செய்தார் அவர். மிக மகிழ்வாக நான் உணர்ந்த தருணம் அது.

இந்த ‘பெரியார் ஒரு தீவிரவாதி’ புத்தகத்தை தமிழகத்தின் முக்கியப் பிரமுகர்களுக்கு எல்லாம் அனுப்பி வைத்தார் பி.கே.பி. அனைத்துத் தரப்பின ரிடமிருந்தும் புத்தகம் பாராட்டுப் பெற்றது. தலைப்பையும் ரசித்துப் பாராட்டியவர்கள் பலர். சிலருக்கு பி.கே.பி. விளக்கம் சொல்ல வேண்டியிருந்தது. சொன்னதும் புரிந்து கொண்டு பாராட்டுவார்கள். ஆனால் அரசு இயந்திரத்திற்குத்தான் புரியவைக்க முடியவில்லை. நூலகத் துறையில் தலைப்பின் காரணமாக புத்தகத்துக்கு ஆர்டர் கொடுக்கவில்லை. நூலகத்துறை சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து பி.கே.பி. விளக்கம் சொன்னார். என்றாலும் ஏற்கவில்லை அவர்கள்.

முன்பே சொல்லியிருக்க வேண்டிய, விடுபட்ட ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. கல்யாணமாலை இதழின் தலைமை வடிவமைப்பாளராக நான் இருந்த நேரத்தில் ராஜேஷ்குமாரைப் பேட்டி எடுத்தது போன்று பி.கே.பி.ஸாரையும் பேட்டி கண்டு வெளியிட்டேன். அவர் குறித்த நேரத்திற்கு நானும், உதவி ஆசிரியர் திருமதி.புஷ்பா ரமணி அவர்களும் அவர் வீட்டிற்குச் சென்றோம். தான் கொண்டு வந்திருந்த ஐபாட்-இல் ரெக்கார்ட் செய்தார் புஷ்பா ரமணி இந்தப் பேட்டியை.

 எந்தக் கேள்விக்கும் மழுப்பல் இன்றி தெளிவான பதில்கள் உடனுக்குடன் வந்து விழுந்தன பி.கே.பி.யிடமிருந்து.  அலுவலகம் வந்ததும் அந்த ஐபாட்-ஐ இயக்கினால் என்ன காரணத்தாலோ பேசிய எதுவும் பதிவாகவில்லை என்று தெரிந்தது. ‘ஙே’ என்று விழித்தோம் நானும் உதவி ஆசிரியரும்.

பிறகென்ன... அவர் பேசியது என் ஞாபகத்தில் இருக்கிறது என்று சொல்லி அங்கே பேட்டி எடுத்தது முழுமையையும் வரிசைக் கிரமமாக டைப் செய்து கொடுத்தேன். புஷ்பா ரமணி வியந்து போனார். ஒன்றிரண்டு வரிகளை அவர் சேர்த்தார். அந்தப் பேட்டியின் பிரிண்ட் அவுட்டை பி.கே.பி.யிடம் எடுத்துச் சென்று காண்பித்து, அவர் சொன்னவை அப்படியே வந்திருக்கின்றன என்று ஒப்புதல் தந்தபின் வெளியிட்டோம். (இப்படி பேட்டியை சம்பந்தப்பட்டவர்களிடம் காண்பித்துவிட்டு வெளியிடுவது நல்ல நடைமுறை என்று பி.கே.பி. ‌சொன்னதால், அதன்பின் பேட்டிகண்ட வி.ஐ.பி.க்களிடம் இ‌‌தையே நடைமுறைப்படுத்தினோம். அதற்கு நல்ல மதிப்பு இருந்தது).

இந்தப் பேட்டி வெளிவந்த கிட்டத்தட்ட ஓர் ஆண்டிற்குப் பின்னர், அவருடன் உதவியாளனாக புதுச்சேரிக்கு காரில் சென்று கொண்டிருக்கையில் எங்களின் அரட்டைக்கிடையில் பத்திரிகைகள் பற்றியும் பேட்டிக் கட்டுரைகள் பற்றியும் பேச்சு வந்தது. அப்போதுதான் நான் அவரது பேட்டியை ரெக்கார்ட் செய்தது சரியாக வராமல் சொதப்பியதையும், நாங்கள் சமாளித்த விதத்தையும் அவருக்குச் சொன்னேன். ‘‘அடப்பாவிகளா!’’ என்று செல்லமாக அழைத்து வாய்விட்டுச் சிரித்தார். அவரது நாவலின் பெயரைச் சொன்னால் உடனே அதன் கதைச் சுருககத்தைச் சொல்ல முடிகிற என்னுடைய நினைவாற்றல் அவருக்கு மிகவும் பிடித்தமானது.

எந்த ஒரு விஷயத்திற்கும் ஆரம்பம் என்று ஒன்று இருந்தால், அது தொடர்ந்து முடிவு என்றும் ஒன்று வந்துதானே தீர வேண்டும். நட்பு என்கிற விஷயம் வாழ்நாள் முழுமைக்கும் தொடர்கிற விஷயம். மற்ற விஷயங்கள் அப்படியல்லவே... ஒரு கட்டத்தில் அவரிடம் பணி செய்வதிலிருந்து விலக நேர்ந்தது. ஊஞ்சல் இதழின் வடிவமைப்பு + உ.ஆ. வேலையும் ஒரு முடிவுக்கு வந்தது. அந்த இரண்டையும் பற்றி...
-தொடர்கிறேன்!

Sunday, May 13, 2012

மொறுமொறு மிக்ஸர் - 7

Posted by பால கணேஷ் Sunday, May 13, 2012
ஹாய் ப்ரெண்ட்ஸ்! நல்ல சுகம்தானே..! சூப்பர் ஸ்டார் ரஜினியின் பழைய நினைவுகளை வெச்சு ஒரு மினி தொடர் நான் பதிவிட்டதைப் படிச்ச நிறையப் பேரு, ‘இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சிடுச்சே’ன்னு சொல்‌லியிருந்தாங்க. அவங்களுக்காக ரஜினி பத்தி சுவாரஸ்யமா ஏதாவது மேட்டர் கிடைக்குமான்னு தேடினேன். அப்ப ஒரு அருமையான விஷயம் கிடைச்சுது. அது... இதுவரைக்கும் நீங்க பார்த்திருக்காத ரஜினியின் மறுபக்கம்! அதை இந்தப் பதிவின் கடைசியில வெளியிடறேன். இப்ப மிக்ஸரைக் கொறிக்கலாமா?

=====================================

ப்ப ரொம்ப சிம்பிளான சின்னக் கணக்கை நான் சொல்லச் சொல்ல நீங்க பண்ணுவீங்களாம்... நான் அதோட விடைய பதிவோட கடைசியில கரெக்டாச் சொல்லிடுவேனாம். ஓ.கேவா..? பத்துக்குள்ள ஒரு நம்பரை நினைச்சுக்கங்க. இப்ப அந்த நம்பரை அதே நம்பரோட கூட்டுங்க. (உதா: 2 + 2 = 4). கூட்டியாச்சா? வர்ற விடையோட 6 ஐக் கூட்டுங்க. கூட்டினா வர்ற தொகையை பாதியாக்கிக்குங்க. (உதாரணமா 10 வநதா 5ன்னு எழுதிக்கணும்). பாதியாக்கின இந்தத் தொகையிலருந்து நீங்க மனசில நினைச்ச தொகையக் கழிக்கணும். அவ்வளவு தாங்க கணக்கு... என்ன விடை வந்ததுன்னு பதிவோட கடைசில சரிபார்த்துக்கங்க.

=====================================

னக்குச் சில பண்பாடுகளைக் கற்றுக் கொடுத்தது சினிமாத் துறைதான். ஒரு நாள் நடிகர்திலகம் சிவாஜியிடம் சிரித்துக் கொண்டே கேட்டேன். ‘‘எம்.ஜி.ஆர். பாசமானவர், நீங்க கொஞ்சம் கர்வி என்கிறார்களே... உண்மையா?’’ அவரும் சிரித்தார். ‘‘அது வேறொண்ணுமில்ல ராசா... அவர் யார் வந்தாலும் சட்டுன்னு எழுந்து நின்னு வரவேற்பாரு. சுறுசுறுப்பாயிருப்பாரு. நான் கொஞ்சம் சுகவாசி. உட்கார்ந்துக்கிட்டே ‘வாங்க’ம்பேன். அதை அப்படியே மாத்திப் பரப்பிட்டானுங்க பல பேரு...’’

அன்று முதல் நான் அனைவரையும் எழுந்து நின்று வரவேற்க ஆரம்பித்தேன். என்னை எம்.ஜி.ஆர். ஆக்கினார் சிவாஜி!

-‘பாற்கடல்’ நூலில் வைரமுத்து

=====================================

மெளனம் கப்பும் மோகச் சக்கரத்தினுள் கூரிய வாள்களைப் பற்றிய மாயத் தோற்றத்தில் சிதறிடும் அந்திமத் தெரிப்புகளில் வாசனைகளும், நிறப் பிரிகைகளும் கை கோர்த்தபடி எதிர்ப்படுவது வாழ்வியல் தருணம். பூரண ஒழுங்குடன் கூர்தீட்டி வைக்கும் மைவிழிப் பார்வைகளின் ஆழத்தில் துவங்குகிறது உள் பயணம்..!  -என்ன பாக்கறீங்க... போன வாரம் பீச்சுக்குப் போயிருந்தப்ப சுண்டல் வாங்கின பொட்டலத்துல நான் படிச்ச சில வரிகள் இவை. என்ன இலக்கியப் பத்திரிகைலருந்து கிழிச்சானோ... எனக்கு இந்த வரிகள் என்ன சொல்ல வருதுன்னு ஒரு மண்ணும் புரியலை. உங்களுக்கு ஏதாவது புரியுதுங்களா..?

=====================================


=====================================

முஸ்லிம்களுக்குத் தனிநாடுதான் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து இந்தியாவிலிருந்து பிரித்து பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னா, சுதந்திரமடைந்த ஒரே வருடத்தில் (1948) காலமாகி விட்டார். (நமது தேசத்தந்தை காந்தியும் அதே வருடத்தில் காலமானது ஒரு வினோதம்தான்) ‘பாகிஸ்தானின் தந்தை’ என்று முதலில் கூறப்பட்ட போதே ஜின்னாவுக்கு ‘தாத்தா’ வயது. தமது மோசமான உடல்நிலையை அவர் ஒருபோதும் பொருட்படுத்தியதே இல்லை.

‘‘அவர் மட்டும் இன்னும் கொஞ்ச காலம் உயிரோடு இருந்திருந்தால் பாகிஸ்தானின் சரித்திரமே மாறியிருக்கும். இந்தியாவைக் காட்டிலும் சிறந்த ஜனநாயக நாடாக அவர் பாகிஸ்தானை வடிவமைத்திருப்பார்’’ என்று பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி ஒருவர் மவுண்ட் பேட்டனிடம் சொன்னார். அதற்கு மவுண்ட் பேட்டன் பதில்: ‘‘அவர் இத்தனை சீக்கிரம் இறந்து விடுவார் என்று தெரிந்திருந்தால், பிரிட்டிஷ் கவர்மெண்ட் பாகிஸ்தான் பிரிவினைக்கே சம்மதித்திருக்காது!’’

-‘பாக். ஒரு புதிரின் சரிதம்’ நூலில் பா.ராகவன்

=====================================

ன் சினேகிதர்கள் என்னைப் புதியவர்கள் யாருக்கேனும் அறிமுகம் செய்து வைக்கும்போது அவர்கள், ‘‘ஓ! நீங்கள்தான் ரா.கி.ரங்கராஜனா? உங்கள் ஸிட்னி ஷெல்டன் நாவல்களை நிறையப் படித்திருக்கிறேன்’’ என்பார்கள். இத்தனைக்கும் ‘ஜெனிபர்’, ‘லாரா’, ‘தாரகை’ என்று அவரது மூன்று நாவல்களைத்தான் மொழி பெயர்த்திருக்கிறேன்.

‘தாரகை’ கதையின் மூலம் ஸிட்னி ஷெல்டனின் 'If tomorrow comes’ என்பதாகும். இதில் குறிப்பிடத்தக்க ஒரு அனுபவம் நேர்ந்தது. டானியல் ஸ்டீல் என்ற நாவலாசிரியை எழுதிய 'Star' என்ற நாவலைத்தான் மொழி பெயர்த்து வெளியிடுவதாக தீர்மானித்து குமுதத்தில் ‘தாரகை’ அறிவிப்பும் வெளிவந்துவிட்டது. ஆனால் அந்த அம்மையார் அனுமதி தரவில்லை.

‘‘அதனாலென்ன... ஸிட்னி ஷெல்டனின் வேறொரு நாவலை மொழிபெயர்த்து எழுதுங்கள். அவருடைய கதாநாயகிகள் எப்படியும் நட்சத்திரம் போல் ஜொலிப்பார்கள். தாரகை என்ற தலைப்பு பொருத்தமாகவே இருக்கும்’’ என்றார் ஆசிரியர் எஸ்.ஏ.பி. (நல்லவேளையாக, ‘தாரகை’ அறிவிப்பில் டானியல் ஸ்டீலின் பெயரைப் போடாமலிருந்ததால் எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை)

-‘எங்கிருந்து வருகுதுவோ’ நூலில் ரா.கி.ரங்கராஜன்.

=====================================

ரி... இப்ப கணக்கோட விடையச் சொல்றேன். உங்களுக்கு வந்திருக்கிற விடை : 3  எப்பூடி? சரியாச் சொல்லிட்டனா? 10க்குள்ள வேற ஏதாவது நம்பரை நினைச்சுட்டு ட்ரை பண்ணிப் பாருங்க. அப்பவும்‌ தனு‌ஷோட சமீபத்திய படம்தான் விடையா வரும்!

=====================================

மக்கா... நல்லாப் பாத்துக்கங்க... ரஜினியின் மறுபக்கத்தை:


Friday, May 11, 2012

ஆனந்தம் வெகு அருகில்!

Posted by பால கணேஷ் Friday, May 11, 2012

‘எங்கள் ப்ளாக்’ நடத்திய சிறுகதைப் போட்டியில் பங்கேற்றிருந்த எனக்கு ‘ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்டு கால்’ புத்தகத்தை பரிசளித்து ஆனந்தம் அளித்தார்கள். தலைப்புக்கேற்றாற் போல் ஆனந்தத்தை வழங்கிய புத்தகம், நீங்கள் அனைவரும் ‘மிஸ்’ பண்ணாமல் படிக்க வேண்டும் என்று சொல்ல என்னை எழுதவும் வைத்திருக்கிறது.

‘‘நமக்கு தாத்தா, பாட்டின்னாலே அட்வைஸ் பண்ணினா கசப்பா இருக்கும். அதே தாத்தாவோ பாட்டியோ ஒரு கதையச் சொல்லி, ‘இதுலருந்து என்ன புரிஞ்சுக்கிட்டே’ன்னு கேட்டா ஈஸியாச் சொல்லிடுவோம். இந்தப் புத்தகம் அப்படித்தான்... பல கட்டுரைகளா எழுதி புரிய வைக்க வேண்டிய விஷயங்களை அழகா ஒரு கதையில சொல்லியிருக்கு. -கசப்பு மருந்தை இனிப்பான காப்ஸ்யூல்ல வெச்சுத் தர்றது மாதிரி.’’ -இதுதான் படித்து முடித்ததும் என் மனதில் தோன்றிய எண்ணம்.

இந்த நூல் பெண்மையைப் போற்றி உயர்த்திப் பிடித்திருக்கிறது. அதைத் தவிர பண நிர்வாகம் என்கிற விஷயமும் அருமையாக உள்ளூடாகச் சொல்லப்பட்டிருக்கிறது. புத்தகத்தின் துவக்கத்தில் கடவுளுக்கும், தேவதைக்கும் நிகழ்வதாக வரும் உரையாடலே மிக அற்புதமாக அமைந்து, நூலுக்குள் நம்மை இழுத்துச் சென்று விடுகிறது.

‘‘பெண்ணால் வாழ்க்கையின் சுமைகளைத் சுமக்கவும் திறம்படக் கையாளவும் முடியும்; ஏககாலத்தில் சிரிக்கவும், அழவும் தெரிந்தவள்; பாடவும், ஆடவும் ‌‌கொண்டாடவும் தெரிந் தவள்; சந்தோஷத்தையும், பிரியத்தையும், அனுமானத்தையும் வெளிக்காட்டாது இருக்க வும் தெரிந்தவள்; தான் நம்பும் விஷயங்களுக்காகப் போராடுபவள்; தன் குடும்பத்தின் நன்மைக்காக எந்தத் தியாகமும் செய்யத் தயங்காதவள்; குழந்தைகளின் வெற்றியில் களித்துக் குரல் எழுப்புகிறவள்; பிரியமானவர்களை இழக்க நேர்ந்தால் வாழ்வு முழுவதும் அழுகிறவள்’’

‘‘இவ்வளவு உன்னதமாக இந்தப் படைப்பைச் செய்தால் முன்னர் செய்த படைப்புகளுக்கு அநீதி இழைத்து விட்டது போல் தோன்றுகிறதே... சரியா என் எண்ணம்?’’

‘‘இல்லை. அப்படி இருக்க முடியாது. ஏனென்றால் இவ்வளவு கவனமாகச் செய்த உன்னதங்களை மீறி இவளிடம் தவிர்க்க முடியாத ஒரு பிழை இருக்கும்... தன் உன்னதம், தன் மதிப்பு என்ன என்பதை மறந்து விடுகிற தன்மை’’

இப்படித் துவங்கி... தாங்கள் இருக்கிற நிலைக்குத் தாங்களே காரணம் என்பதை உணர்கிற பக்குவம் பெண்களுக்கு வேண்டும். சட்சட்டென்று எதிர்வினை செய்யும் உந்துதலைக் கைவிட்டு பெண்கள் அமைதியான மனதுடன் பிரச்சனைகளை அணுக வேண்டும். வெளிப்படுவதில் இருக்கும் துடிப்பைவிட விழிப்புடனும் பொறுமையுடனும் இருப்பது அவசியம். இல்லையென்றால் சந்தித்த பிரச்னைகளையுமே மீண்டும் மீண்டும் சந்திக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவார்கள்.

பெண்கள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை மற்றவர்களை கவனிச்சுக்கவே செலவு பண்ணிட்டிருக்காங்க. பெண்களை தெய்வம்னு சொல்ற இந்த சமூகம் அந்தப் பெண்ணுக்கு மூப்பு வரும்போது, உடல்நலம் குன்றும்போது அவங்களைக் கவனிக்கிறதே இல்லை. ஏதோ மத்தவங்களுக்கு உழைக்கறது அவங்களுக்கு விதிக்கப்பட்டதுங்கற மாதிரி அந்த உழைப்பை உரிமையோட உபயோகம் பண்ணிக்கறாங்க.

மனிதர்கள் உணர்விலிருந்து தோன்றியவர்கள். அதனால உணர்வுகளை முழுசா விலக்கி வைக்க முடியாது. எல்லோருமே அறிவும் உணர்வும் கலந்த கலவைகள்தான். ஆண்கள் கிட்ட அறிவு டாமினண்ட்டா இருக்கு. பெண்களுக்கு உணர்வு டாமினண்ட்டா இருக்கு. ஆண்களோட போட்டி போடணும்னு பெண்களும் உணர்வுகளை அறவே விலக்கி வெச்சிட்டு ஆண்களாவே மாறிடக் கூடாது. பெண்ணாக இருக்கிறதோட பெனிஃபிட்ஸை இழந்துடுவாங்க அப்படிப் பண்ணா...

-இப்படியெல்லாம் பெண்கள் நிலையையும் நடந்து கொள்ள வேண்டிய முறைகளையும் அலசி... முதுமையில் ஓய்வும் ‌கவனிப்பும் பெண்களுக்கு அவசியம். அதை அவங்க தங்களோட இளமைக் காலத்திலேயே, தாங்கள் ஆரோக்கியமா இருக்கிற காலத்திலேயே திட்டமிட்டுக்க வேண்டியது அவசியம். -இப்படி்த் தொடர்கிற நூல், பணம் ஒருத்தரின் சமூக அடையாளத்தைத் தீர்மானிக்குது என்கிறதில் இருவேறு கருத்துக்கள் இல்லை. வாழ்வும் பணமும் இருவேறு விஷயங்கள் இல்லை. பணம் செருப்புக்குச் சமம்னு சொல்லலாம். அளவுல சின்னதா இருந்தா காலைப் புண்ணாக்கும், நடக்க முடியாது. அளவுக்கு பெரிசா இருந்தா கழண்டு போகும், அப்பவும் நடக்க முடியாது. -என்று பணத்தின் அவசியத்தைப் போதிக்கிறது. பண நிர்வாகத்தையும் பேசத் தவறவில்லை. ‘எங்க தாத்தா பெரிய பணக்காரர். ஆனாலும் ஒரு சின்ன நோட்புக் வெச்சி எழுதிகிட்டே இருப்பாரு. என்னன்னு கேட்டா கையிலிருந்து போற ஒரொரு பைசாவையும் டிராக் பண்ணனும்னு சொல்வார். அவர் பணக்காரரா இருந்ததில ஆச்சரியம் இல்லை!’

-இங்கே நான் சொல்லியிருப்பவை எல்லாம் உதாரணங்கள்தான். புத்தகக் கடலிலிருந்து அள்ளிய ஒரு துளி என்பதை அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். நூலில் நான் ரசித்த அத்தனை கருத்துக்களையும் சொல்ல வேண்டுமென்றால் பல பதிவுகள் தேவைப்படும். புத்தகத்தின் 80 சதவீதத்தை பப்ளிஷ் செய்ய வேண்டி வரும். நூலாசிரியரும், பதிப்பாளர் திரு.பத்ரிசேஷாத்ரியும் என் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பக் கூடும். ஆகவே, ஸிம்பிளாக ‘அனைவரும் தவறவிடாமல் வாசிக்க வேண்டிய நூல் இது’ என்பதை மட்டும் உறுதிபடக் கூறுகிறேன் உங்களுக்கு! முடிப்பதற்கு முன்னால் இரண்டு விஷயங்கள்:

1. இதன் ஆங்கில மூலம் எப்படியிருந்திருக்குமோ தெரியவில்லை.... ஆனால் தமிழில் உறுத்தல் இல்லாத சரளமான நடையில், படிக்கும் சுவாரஸ் யத்திற்கும் குந்தகம் இல்லாதவகையில் அழகாக மொழிபெயர்த்திருக்கிறார் திரு.கே.ஜி.ஜவர்லால். அதற்காக அவருக்கு ஸ்பெஷல் பொக்கே!

2. எங்கள் பிளாக் ஆசிரியகளுக்கு...! வருஷத்துக்கு ஒரு தடவை இந்த மாதிரி சிறுகதைப் போட்டி வையுங்க ஸார். கலந்துக்கற சுவாரஸ்யம் தவிர, புத்தகத்தைப் படிச்ச இனிய அனுபவமும் அடிக்கடி கிடைக்கட்டும். (என் புக் ஷெல்ப்புலயும் ஒரு புத்தகம் கூடிடும். ஹி... ஹி...)

இந்த நூல் வெளியீடு: கிழக்குப் பதிப்பகம், 177/103, முதல் மாடி, அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை. 192 பக்கங்கள். நூலின் விலை: ரூ.150  மூல ஆசிரியர்கள்: சுரேஷ் பத்மநாபன். ஷான் சவான். தமிழாக்கம்: கே.ஜி.ஜவர்லால்.

Wednesday, May 9, 2012

நடை வண்டிகள் - 15

Posted by பால கணேஷ் Wednesday, May 09, 2012

பி.கே.பி.யும் நானும் - 7

ஸ்ரீனிவாஸ் பிரபுவும், தாஸும் இல்லாத அந்த சூழ்நிலையில் இதழின் வடிவமைப்பாளர் பணியுடன் உதவி ஆசிரியராகவும் என்னைப் பணியாற்றும்படி பணித்தார் பி.கே.பி. ஸார். ஊஞ்சல் இதழிற்கு வாசகர்களிடமிருந்து வரும் ஏராளமான படைப்புகளைப் படிப்பதும், அவற்றிலிருந்து பிரசுரத்திற்குத் தகுதி பெற்றதைத் தேர்ந்தெடுப்பதும் ஆகிய அந்தப் பணி எனக்கு மிகமிகப் பிடித்தமான ஒன்றாக அமைந்தது. அவரின் வழிகாட்டுதலுடன் அந்தப் பணியைத் துவங்கியும் வடிவமைப்புப் பணியையும் தொடர்ந்தும் வந்தேன்.

பி.கே.பி. ஸார் என்னிடம் பல முறை, ‘‘உங்களிடம் நல்ல எழுத்துத் திறமை இருக்கிறது. முயன்றால் நீங்கள் நன்றாக வரலாம். நிறைய எழுதுங்கள்’’ என்பார். நான் இயல்பான சோம்பலினாலும், என் மீது எனக்கே நம்பிக்கை இல்லாததாலும் அவர் பேச்சைக் கேட்டதில்லை. இச்செவியில் வாங்கி அச்செவியில் வி்ட்டு விடுவேன். அது எத்தனை தவறென்பதை இப்போது உணர்கிறேன். எதனால் இதை இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், அப்படியிருந்த என்னை ஊஞ்சல் இதழில் கொஞ்சம் கொஞ்சமாக எழுத வைத்தார் என் நண்பர்.

சில இதழ்களில் சினிமா விமர்சனமும், நான் ரசித்துப் படித்த புத்தகங்களிலிருந்து ‘மின்னல் வரி’களைத் தொகுத்தும், மிகச் சிறந்த தமிழ் நாவல்களை நான்கு பக்கங்களில் சுருக்கித் தந்தும் இப்படிப் பல பகுதிகளில் என் படைப்புகள் ஊஞ்சல் இதழில் வெளியானது. என்னையறியாமல் நான் அங்கு பெற்ற எழுத்துப் பயிற்சிதான் இப்போது உங்கள் முன்னால் என்னை ஓட வைத்திருக்கிறது.

நான் அவருடன் இருந்த சமயங்களில் பி.கே.பி. ஸார் கமிட்டான திரைப்படங்களுக்கு வசனம் எழுதும் பணியில் ஈடுபடும் போதும் உடன் இருக்க வாய்ப்புக் கிடைத்தது. இயக்குனருடன் அவர் பேசி, கதை முழுமையாகத் தயாரானதும் பெரும்பாலான சமயங்களில் வசனம் எழுதுவதற்கு அவர் புதுச்சேரியைத் தேர்ந்தெடுப்பார். அங்கு ஒரு ஹோட்டல் அறையில் அமர்ந்து ஒரே மூச்சில் வசனங்களை எழுதி முடித்து விட்டுத்தான் ‌சென்னை திரும்புவார். அவர் காட்சி வாரியாக ஒரு காட்சிக்கு வசனம் எழுதி முடித்து விட்டு, அடுத்த காட்சிக்கு வசனம் எழுதிக் கொண்டிருப்பார். அப்போது நான் அவர் எழுதிய காட்சியை கணிப்பொறியில் டைப்பிக் கொண்டிருப்பேன். இப்படி அவர் எழுதவும், நான் டைப்பவுமாக நாங்கள் அங்கிருந்து கிளம்பும் சமயம், கையெழுத்துப் பிரதியுடன் சேர்ந்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுக்க வேண்டிய ஃபைலும் தயாராக இருக்கும்.

இப்படி நான்கைந்து நாட்கள் அவருடன் சேர்ந்தே பணிபுரியும்படி அமைவதை நான் விரும்பி வரவேற்பேன். பணி நேரம் தவிர மற்ற நேரம் நண்பருடன் மனம் விட்டு உரையாடலாம். புதுச்சேரிக்குப் போகும் போதும், வரும் போதும் கார்ப் பயணங்கள் அரட்டையடிப்பதற்கான சமயம் எங்களுக்கு. கதைகளைப் பற்றி விவாதிக்கவும், ரசித்ததைப் பகிர்ந்து கொள்ளவுமான அந்தப் பணியும், பயணங்களும் இன்று நினைத்தாலும் மனதில் இனிப்பவை.

பட்டுககோட்டை பிரபாகர் அவர்களின் மாமனார் திரு.ஆர்.முத்துநாராயணன் அவர்கள் திருச்சியில் ஒரு வழக்கறிஞர். அவர் தந்தை பெரியாருடன் நெருங்கிய நட்பாக இருந்தவர். அவரின் திருமணத்திற்கு பெரியார் வந்திருந்து வாழ்த்தியிருக்கிறார். இப்படி பெரியாருடன் அவர் பழகியதையும், அவருடைய அனுபவங்களையும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட வேண்டுமென்று பி.கே.பி.க்கு மிகவும் ஆசை. மாமனாரோ அப்புறம் பார்க்கலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார். நானும் பி.கே.பி. ஸாரும் பேசிய ஒரு சமயம் இதைப் பற்றிப்‌ பேச்சு வர, நான் கேஸட்டில் கேட்டு டைப் அடிப்பது அவருக்கு நன்கு தெரியும் என்பதால், ஒரு யோசனை ‌சொன்னார்.

அவர் சொன்னதோடு மட்டுமல்லாமல், உடனே அதைச் செயல்படுத்தவும் செய்தார். அவரின் மாமனாருடன் பேசிவிட்டு என்னை திருச்சிக்குச் சென்று அவரிடம் பேட்டி எடுத்து அதை கேஸட்டில் பதிவு செய்து கொண்டு வரும்படி பணித்தார். நான் திருச்சி சென்றேன். பழகுவதற்கு இனியவரான பி.கே.பி.யின் மாமனார் திரு.முத்துநாராயணன் அவர்களைச் சந்தித்து அறிமுகம் செய்து கொண்டு பேட்டியைப் பதிவு செய்தேன். என்னென்ன கேள்விகள் அவரிடம் கேட்டு பதில்கள் பெற்று வர வேண்டுமென்று நானும் பி.கே.பி. ஸாரும் பேசி, அதை டைப் செய்து ப்ரி்ண்ட் அவுட்டாக எடுத்துப் போயிருந்ததால் எனக்கு அது எளிதாகவே இருந்தது. (திட்டமிடலில் கில்லாடி பி.கே.பி.) அவரிடமிருந்து நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே நிறைய விஷயங்கள் கிடைத்தன. அது தவிர, பெரியாரின் புத்தகங்கள் சிலவற்றையும் அவரின் வீட்டிலிருந்து எடுத்து வந்தேன்.

சென்னை திரும்பியதும் அவரின் பேட்டியை ‘நடைமனிதனில்’ போட்டுக் கேட்டு, டைப் செய்து, அதை ஃப்ரூப் பார்த்து முடித்தோம். பெரியாரின் பல புத்தகங்களைப் படித்து, அவற்றில் இருந்து நல் முத்துக்களாய் கருத்துக்களைக் கோர்த்துத் தந்தார் பி.கே.பி. அத்துடன் பெரியாரின் முழுமையான வாழ்க்கைச் சரிதத்தையும் சேர்த்ததில் புத்தகம் திருப்திகரமாக, படிப்பதற்கு எளிய எழுத்துக்களில் என் வடிவமைப்பில் தயாரானது. அந்தப் புத்தகத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்பதை யோசித்து இரண்டு மூன்று தலைப்புகளைச் சொன்னார் பி.கே.பி. அதில் ஒன்று எனக்கு மிகமிகப் பிடித்துப் போனது. ‘‘தைரியமாக இ‌தையே தலைப்பாக வைக்கலாம் ஸார். மிக வித்தியாசமாக இருக்கிறது. கவனத்தை ஈர்க்கும்’’ என்றேன். அவரும் அதையே புத்தகத்தின் தலைப்பாக வைத்துப் பதிப்பித்தார்.

இங்கே இருககும் அட்டைப் படம் அந்தத் தலைப்பு என்னவென்பதை உங்களுக்குப் புரிய வைத்திருக்கும். இந்தத் தலைப்பு புத்தகத்திற்கு எப்படிப் பொருத்தம் என்பதை ‌உணர முடிகிறதா பாருங்கள்.... இல்லையென்றால் அடுத்த பகுதியில் விளக்குகிறேன்.

-தொடர்கிறேன்...

Sunday, May 6, 2012

பேசும் படங்கள்!

Posted by பால கணேஷ் Sunday, May 06, 2012

ஹாய்... ஹாய்... ஹாய்...
இன்னிக்கு வலைச்சரத்துல என்னுடைய பொறுப்பை முடிக்கிற தினம்கறதால நான் ரசிக்கிற பதிவர்களைப் பத்தி எழுதியிருக்கேன். இங்கே க்ளிக்கி போய்ப் படித்து ஆதரவு தாருங்கள்ன்னு கேட்டுக்கறேன். எனக்குப் பிடித்த பதிவுலக நட்புகளைக் குறிப்பிட்டதால இங்க புதுசா ஏதாவது எழுதலாம்னு உக்காந்தா மனசே வரலை. அதனால... இன்னிக்கு ஜாலியா சில படங்களைப் பாத்து ரசியுங்க. ரெண்டு நாள் கழிச்சு நான் மீண்டும் உங்களைல்லாம் சந்திக்கறேன்.

ஹய்யோ... யாராவது கை கொடுங்க‌ோளேன்..!
பிடியை விட்டுறாதடா... விழுந்தா பீஸ்தான் நீயி!
ரொம்ப ஓல்டா இருக்கானே... மார்னிங் டிஃபனுக்கே பத்தாதே!
சின்ன நூல் கண்டா என்னை சிறைப்படுத்துவது...?
எனக்கு இந்த வெயிட்டெல்லாம் சாதாரணமப்பா..!
படத்தை கொஞ்ச தூரத்திலருந்து மறுபடி பாருங்க..!
ரெண்டு நாள்னுட்டு கணேஷ் ஒரு வாரம் ‘எஸ்’ஸாயிடாம இருக்கணுமே..!

Saturday, May 5, 2012

சைலன்ட்டா சிரியுங்க..!

Posted by பால கணேஷ் Saturday, May 05, 2012


அப்புசாமியின் குறட்டை ஆட்டத்துக்குத் தொல்லை!









சீதாப்பாட்டியா கொக்கா? வெச்சாங்க அப்புவுக்கு ஆப்பு!


ஆறே மாசத்துல கோடீஸ்வரன், அள்ளி விட்டான் ‌ஜோசியன்!
அதிர்ஷ்டம் கைகொடுக்கலை! அப்புசாமி ஆனார் ஆத்திரசாமி!


போர்ட்டருக்கு கூலி தந்து கட்டுப்படியாகாதப்பா... அதனால...
ஐயோ, பாவம் அப்பு..1 ஆனாரே போர்ட்டரா...!

ன்ன ப்ரெண்ட்ஸ்... அப்புசாமித் தாத்தா - சீதாப்பாட்டியை ரசிச்சுச் சிரிச்சீஙகளா? (அட்லீஸ்ட், புன்னகை?) இப்போ இங்கே க்ளிக்கி வலைச்சரத்துல உங்களுக்காக காத்திருக்கற அப்புசாமியையும், சீதாப்பாட்டியையும் சந்தியுங்க. ஸீயு.

Friday, May 4, 2012

விறுவிறுப்பான போராட்டம்

Posted by பால கணேஷ் Friday, May 04, 2012

ரேந்திரன் கஞ்சி போட்ட காட்டன் துணி போல விறைப்பானான். மெதுவாக, மிக மெதுவாக பட்சி சிறகு காற்றில் மிதப்பது போல் தன்னிடத்திலிருந்து நகர்ந்தான். இடுப்பில் ரிவால்வரைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

இரண்டு அறைகளையும் பிரிக்கும் தள்ளு கதவை உராய்ந்து கொண்டு சற்று நேரம் நின்றான். அப்புறம் ஷூ முனையால் கதவை மெல்ல மெல்ல நகர்த்தினான். இப்போது ரிப்பன் அளவு இடைவெளி விழ, தன கண்களை அங்கே பதித்து பக்கத்து அறையை நோட்டமிட்டான்.

நம்பிராஜன் இன்னமும் படுக்கையிலேயே இருந்தார். அவரது அருகில் ஒரு ஆசாமி நின்றிருந்தான். மிகக் குறைவான வாட் வெளிச்சத்தில் இரவு விளக்கு சதி செய்தது. நின்ற ஆளின் முகத்தை மூடி ஸ்கார்ஃப் போல ஏதோ கட்டப்பட்டிருக்க, சுலபத்தில் முக அடையாளம் புரியக் கூடாது என்ற கவனம் தெரிந்தது. உயரமாயிருந்தான். அகலமாயிருந்தான். நம்பிராஜனின் படுக்கையருகே குனிந்து-

அவரை ஏதாவது செய்துவிடப் போகிறான் என்று நரேந்திரன் தன் ரிவால்வரை கைக்கு கொண்டு வந்தான். இல்லை. அந்த ஆள் நம்பிராஜனைத் தொந்தரவு செய்யாமல், கால்களை வாத்து போல் எடுத்து வைத்து அங்கிருந்து நகர்ந்தான். சுவரில் தொங்கிய அலங்கார கடிகாரத்தை அண்டினான். அதை ஒற்றைக் கையால் கழற்றினான். இன்னொரு கையை சுவரில் செலுத்தினான். க்ளிக் என்று சிட்டிகை போடுவது போல் ஒரு ஒலி.

எதையோ எடுக்கிறான். அது இந்தக் கேஸிற்கு மிக முக்கியமானதாக இருக்கக் கூடும். அதை எடுத்துக் கொண்டு அவன் நழுவி விட்டால் ஆபத்து. நரேந்திரன் செயல்பட நிச்சயித்தான். ரிவால்வரின் ஸேஃப்டி காட்சை விடுவித்தான். க்ளக் என்ற அந்த ஒலியைக் கேட்டதும், கடிகாரத்தைக் கழற்றியவன் அப்படியே உறைந்து நின்றான்.

``அசையாதே'' என்றான் நரேந்திரன் குரலை ஏற்றாமல். ``அசைந்தால் என் துப்பாக்கி உன் முதுகை சல்லடையாக்கி விடும்.''

அந்த ஆள் கடிகாரத்தை அதன் ஆணியில் மாட்டிவிட்டு இரண்டு கைகளையும் உயரத் தூக்கி சுவரைப் பார்த்து நின்றான். அவன் இடது கையில் கசக்கப்பட்டு, சுருட்டப்பட்டு சில காகிதங்கள்.

``அதை என்னிடம் கொடு...''

நரேந்திரன் ஒவ்வொரு அடியாக முன்னேறினான். அந்தக் காகிதத்திற்காக தன் இடது கையை நீட்டினான். வலது கையில் ஸ்டெடியாக ரிவால்வர். நரேந்திரன் இன்றைக்கு நிறைய தவறுகள் செய்கிறான். பெட்ரூம் விளக்கின் ஒளி அவன் மீது படிந்து அவனுக்கு முன்னதாக அவனுடைய மசமசப்பான நிழலை சுவர் வரை கொண்டு போய் விட்டதை அவன் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

கையைத் தூக்கி நின்றிருந்தவன் இந்த விஷயங்களில் தனியாக டிப்ளமா வாங்கியிருந்தான். நரேந்திரனின் நிழலை வைத்து நரேந்திரன் இரண்டடி தூரத்திற்குள் வந்ததை கணக்கிட்டதும் செயல்பட்டான்.

 அறுத்து விட்ட தேங்காய் போல சரேலென தரையில் விழுந்தான். விழுந்த அதே கணம் புரண்டு நிமிர்ந்தான். நிமிர்ந்த அதே கணம் உரம் பாய்ந்த அவனுடைய வலது கால் ஸ்ப்ரிங்கால் விடுவிக்கப்பட்டதைப் போல் உதறி நரேந்திரனின் வலது கையை உதைத்தது. சுடுவதா வேண்டாமா என்ற தயக்கமாய் இருந்த ரிவால்வர் காற்றில் டைவ் அடித்துப் பறந்தது.

இப்போது எதிரி கைகளை சுவரில் அடித்து ஊன்றி எம்பினான். நரேந்திரனின் தோளுக்கு அவன் கால் இறங்கியது. நரேந்திரன் உஷாராகி அந்தக் காலைப் பற்றி சரேலென முறுக்கி இழுத்தான். எதிரி அந்தத் தாக்குதலை எதிர்பார்த்தவன் போல் தனது வலது கையை மடக்கி, காற்றில் ஒளி வேகத்தில் பாய்ச்ச, நரேந்திரன் நகருமுன் முகவாயில் அந்த அடி இறங்கியது.

முப்படி உயரத்திலிருந்து கான்க்ரீட் தளத்தில் குப்புற விழுந்தது போல் இருந்தது நரேந்திரனுக்கு. யாரோ பல் டாக்டர் என்னால் பணக்காரர் ஆகப் போகிறார். எதிரியின் காலை விட்டுவிட்டு அவன் முகத்துக்குப் பாய்ந்தான் நரேந்திரன். முதல் ஆர்க்கில் எதிரியின் முக்காட்டுத் துணி கையோடு பிய்ந்து வந்தது. இரண்டாவது ஆர்க் போடுமுன் எதிரி தன் முழங்காலை மடித்து நரேந்திரன் மீது செலுத்தி, முதன் முறை பிசகி, இரண்டாவது முறை நெஞ்சில் கும்க் என்று பாய்ச்சினான்.

 நரேந்திரன் பக்கெட் ஆக்ஸிஜனை இழந்து கைகளை அகல விரித்தான். எதிரி இதற்காகவே தினமும் எண்ணெய் போட்டு மஸாஜ் செய்து தன் தசைகளை முறுக்கி வைத்திருந்தது போலிருந்தது. நரேந்திரன் தன் முஷ்டியை மடக்கி காற்றைக் கிழித்து எதிரியின் மூக்குக்கு குறி வைக்க, அது அவன் தாடையில் இறங்கியது. அவன் மல்லாந்து சுவரை மோதினான். உடன் நரேன் பாய்ந்து அவன் கண்களுக்குக் குறி வைத்து விரல்களைப் பாய்ச்சினான். ``நாஸர், இனி நீ தப்ப முடியாது...''

நாஸர் வெகு உன்னதமாகக் கணக்கிட்டு சரேலென தன் வாய் திறந்து நரேந்திரனின் விரல்களைக் கடித்தான். நெருப்புப் பற்ற வைத்ததுபோல் நரேந்திரன் கைகளை உதறிக் கொள்ள, நாஸர் விரித்த உள்ளங்களையை முறம் போல நரேந்திரனின் கழுத்தில் இறக்கினான். நரேந்திரன் உருண்டு புரண்டு எழுந்திருக்கும் முன், நாஸர் அந்த இடத்திலிருந்து எகிறினான். ஒரே ஜம்ப்பில் கதவை அணுகி, சரேலென வெளியே பாய்ந்து விட்டான்.

நரேந்திரன் அவனுக்குப் பின்னே பாய்ந்தான். ஆனால் அவன் ஹாலுக்குள் பிரவேசிப்பதற்குள் நாஸர் வாசல் கதவைத் தாண்டியிருந்தான். சட்டென அறைக் கதவைச் சார்த்தி அவன் வெளியில் தாளிட்டு விட, நரேந்திரன் அக்கம் பக்கம் பார்த்து, ஜன்னலைத் தேர்வு செய்து வெளியே குதித்தான். ஆனால் அதற்குள் காரியம் மிஞ்சி விட்டது.

சிமெண்ட் பாதையில் காற்றைவிட வேகமாக ஓடி, திறந்த கேட் வழியே வெளியே அம்பு போல் பாய்ந்து இரண்டாவது நொடியில் சின்ன இருமலுடன் ஒரு மோட்டார் சைக்கிள் கிளம்ப, நரேந்திரன் இனி இந்த இரவில் அவனை எட்டிப் பிடிப்பது இயலாத காரியம் என்று உணர்ந்தான்.

============================================

ஃப்ரெண்ட்ஸ்! ‘சுபா’வின் துப்பறியும் நாவலில் இருந்து ஒரு விறுவிறு்ப்பான பகுதியை இங்கே படித்தீர்கள். இனி, இங்கே க்ளிக்கி வலைச்சரம் சென்று நரேந்திரன்-வைஜயந்தியை சந்தியுங்கள்!

Thursday, May 3, 2012

ஜோதிடமும், ராஜேஷ்குமாரும்!

Posted by பால கணேஷ் Thursday, May 03, 2012

கோவையில் கல்லூரி விழா ஒன்றில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் என்னிடம் ஒருவர் கேட்ட கேள்வி இது: ‌ஜோதிடத்தை நம்பலாமா? நான் சொன்ன பதில்: மனோதிடம் உள்ளவர்களுக்கு ஜோதிடம தேவையில்லை.

நான் குடியிருக்கும் பகுதியைச் சேர்ந்த நண்பர் ஒருவர் பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸுக்காக காத்திருந்தபோது அந்தப் பக்கமாய் காரில் சென்ற நான் அவரைப் பார்த்ததும் காரை நிறுத்தினேன். ‘‘என்ன ஜானகிராமன்... பஸ்ஸுக்கா? கார்ல ஏறுங்களேன். சிட்டிக்குத்தானே போறீங்க...?’’

ஜானகிராமன் ஏறிக் கொண்டார். பதினைந்து நிமிஷப் பயணத்தில் காந்திபுரம் வந்தது. காரை நிறுத்தினேன். அவர் செல்ல வேண்டிய வீட்டுக்கு முன்பாய் சுவரில் ஒரு சிறிய போர்டு தெரிந்தது.

                              ஜோதிடபூஷணம் மாணி்க்கவேலு

(இங்கே கைரேகை, ஜாதகம், எண்கணிதம், வாஸ்து துல்லியமாய் கணித்துச் ‌சொல்லப்படும்)

‘‘நீங்களும் உள்ளே வாங்க ராஜேஷ்குமார்! ஜோதிடர் மாணிக்க வேலு உங்களைப் பார்த்தா ரொம்பவும் சந்தோஷப்படுவார்!’’ என்றார் நண்பர். மறுக்க முடியாமல் உள்ளே போனேன்.

ஜோதிடர் மாணிக்க வேலு சுமார் அறுபது வயதில் பளீரென்ற வெள்ளை வேஷ்டி, சட்டையில் நெற்றியில் சந்தனம், குங்குமம் மின்ன உட்கார்ந்திருந்தார். நண்பர் என்னை அவர்க்கு அறிமுகப்படுத்தி வைத்ததும் பெரிதும் சந்தோஷப்பட்டார். காபி வரவழைத்தார். பொதுவான விஷயங்களைப் பேசிக் கொண்டே காபி சாப்பிட்டுக் ‌கொண்டிருந்தபோது வாசல் பக்கம் ஒரு குரல் கேட்டது. ‘‘அய்யா...’’

ஜோதிடர் எட்டிப் பார்த்துவிட்டு மலர்ந்தார். ‘‘வாங்க பொன்னம்பலம்...’’ அந்த பொன்னம்பலம் உள்ளே வந்தார். கையில் ஸ்வீட் பாக்ஸ். ‘‘என்ன பொன்னம்பலம்... குழந்தை பொறந்தாச்சா?’’

‘‘ஆமாங்கய்யா... அய்யா, நீங்க பொண்ணுதான் பொறக்கும்னு சொன்னீங்க. ஆனா பையன் பொறந்து இருக்கான்...’’

‘‘நான் அப்படிச் சொல்லியிருக்கவே மாட்டேன். நீங்க எப்ப என்கிட்டே ஜோஸ்யம் பாக்க வந்திருந்தீங்க?’’

‘‘ரெண்டு மாசத்துக்கு முந்தி. இருப்தி ரெண்டாம் தேதி’’

‘‘இப்ப பாத்துடலாம்...’’ என்று சொன்ன ‌ஜோசியர், மேஜை டிராயரைத் திறந்து, ஒரு டைரியை எடுத்தார். புரட்டினார். ‘‘22ம் தேதிதானே...! ம்... உங்களுக்குச் சொன்ன பலன்களை சுருக்கமா எழுதி வெச்சிருக்கேன். அதில ஒரு பலன் ஆண் குழந்தை பிறக்கும்னு எழுதி வெச்சிருக்கேன். நீங்களே பாருங்க...’’ டயரி வரிகளைக் காட்டினார். அந்த பொன்னம்பலம் பார்த்தார். ‘‘நீங்களும் பாருங்க ஸார்...’’ என்று என்னிடமும் காட்டினார். ‘ஆண் குழந்தைபிறக்கும்’ என்று தெளிவாக எழுதி வைத்து இருந்தார்.

பொன்னம்பலம் தலையைச் சொறிந்தார். ‘‘அய்யா... மன்னிக்கணும். நீங்க சொன்னதை நான்தான் காதுல சரியாப் போட்டுக்கலை போலருக்கு... தப்பா நெனைச்சுக்காதீங்கய்யா...’’ ஸ்வீட் பாக்ஸைக் கொடுத்து விட்டு அவர் போய் விட்டார்.நானும் நண்பர் ஜானகிராமனும் ஜோதிடரிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டோம். என் மனசுக்குள் ஜோதிடத்தைப் பற்றிய ஓர் உயர்வான அபிப்ராயம் லேசாய் முளை விட்டிருந்தது.

காரை ஓட்டிக் கொண்டே நான் ஜானகிராமனைப் பார்த்தேன். ‘‘பரவாயில்லையே... உங்க ஜோதிட நண்பர் ரொம்பவும் பவர்ஃபுல்லாய் இருக்கார்...’’

ஜானகிராமன் உதடு பிரியாமல் சிரித்தார் ‘‘என்ன சிரிக்கறீங்க?’’

‘‘சிரிக்காமே என்ன பண்றது? பொழப்பு நடக்கணும்னா இப்படிப்பட்ட கெட்டிக்காரத்தனம் வேணும். இல்லையா?’’

‘‘கெட்டிக்காரத்தனமா..?’’

‘‘ம்... அந்த பொன்னம்பலத்‌தோட ஜாதகத்தைப் பார்த்துட்டு, உனக்கு பெண் குழந்தைதான் பிறக்கும்னு சொல்லியிருப்பார் மாணிக்கவேலு. அவர் போனதும் டைரியில சொன்ன பலன்களை எழுதும் போது பெண் குழந்தை பிறக்கும் என்பதற்குப பதிலாய் ஆண் குழந்தை பிறக்கும்னு மாத்தி எழுதிக்குவார். ரெண்டு மாசம் கழிச்சு பொன்னம்பலம் வரும்போது பெண் பிறந்திருக்குன்னு அவர் சொன்னா... ‘பாத்தியா, நான் ‌சொன்ன மாதிரியே பெண் குழந்தை பிறந்தது’ன்னு சொல்லி தன்னோட ஜோசியத் திறமையை மெச்சிக்குவார்... ஒருவேளை இவர் சொன்னதுக்கு மாறாய் ஆண் குழந்தை பிறந்து இருந்தால் உடனடியாய் டைரியை எடுப்பார். அதில் ஆண் குழந்தை என்று எழுதியிருப்பதைப் பார்த்ததும் வந்தவர் அயர்ந்து போய் விடுவார். இப்ப சொலலுங்க... இது கெட்டிக்காரத்தனம் இல்லையா?’’

ஜானகிராமன் பேசப் பேச... ஜோதிடக்கலையை உயர்வாய் எண்ணிய என்னுடைய எண்ணத்திற்கு ஒரு மெகா முற்றுப்புள்ளி வைத்தேன்.
-‘ஊஞ்சல்’ இதழில் ராஜேஷ்குமார் எழுதிய
‘ ரெடி, ஸ்மைல் ப்ளீஸ்!’ தொடரிலிருந்து...

ராஜேஷ்குமாரின் ஒரு அனுபவத்தைப் படிச்சு ரசிச்ச நீங்க அவரோட கதாபாத்திரங்களான ரூபலா - விவேக் - விஷ்ணு புகுந்து விளையாடும் வலைச்சரப் பதிவை இங்கே க்ளிக் பண்ணிப் படிச்சு ரசியுங்க..!
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube