Saturday, May 26, 2012

கிளி! கிலி! கிழி!

Posted by பால கணேஷ் Saturday, May 26, 2012

நான் அந்த வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த போது எனக்கு முன்பாகவே தினேஷும், கான்ஸ்டபிள்களும் வந்து விட்டிருந்தனர், பைக்கை நிறுத்திவிட்டு நான் இறங்கவும். தினேஷ் சல்யூட் அடித்து என்னை வரவேற்றார். நல்ல நிறமாக, ஐந்தே முக்காலடி உயரத்தில், இளந் தொந்தியோடு சுமாரான பருமனில் ‘மங்காத்தா’ அஜீத் போல பர்ஸனாலிட்டியாக இருக்கும் தினேஷ் எனக்குக் கீழ் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்!  “பாடி எங்க இருக்கு?” கேட்டபடி நான் நடக்க. “மாடிப் போர்ஷன் ஸார்...” என்றார் தினேஷ் உடன் வந்தபடி. மாடிப்படிகளேறி அந்தப் போர்ஷனுக்குள் நுழைந்ததுமே கண்ணில் அறைந்தது அந்தக் காட்சி.

சோபாவில் பாதியும் தரையில் பாதியுமாகக் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்தது அந்த இளம் பெண்ணின் உடல். அவளது உயிரற்ற விழிகள் நேர்ப்பார்வை பார்த்தபடி உறைந்து நின்றிருக்க, அவை என்னை முறைப்பது போலத் தோன்றியது எனக்கு. கர்ச்சீப் எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டேன். உயிருடன் இருந்த காலத்தில் பலரின் தூக்கத்தைக் கெடுத்திருப்பாள்! சுற்றிலும் பார்வையைப் போட்டபடி, “தினேஷ்! ஃபாரன்ஸிக் பீப்பிள்க்கு சொல்லிட்டீங்களா?” என்று கேட்க. “வந்துட்டிருக்காங்க ஸார்” என்றார் பணிவாக.

“இவ பேர் என்ன? அக்கம்பக்கத்துல என்கொயரி பண்ணியாச்சா? வீட்டை சர்ச் பண்ணினீங்களா?” என்ற என் தொடர் கேள்விகளுக்கு பொறுமையாய் பதிலளித்தார் தினேஷ். “இவ பேர் ப்ரீத்தி ஸார். இனிமேதான் அக்கம் பக்கம் என்கொயரி பண்ணணும். வீட்டை ஃபுல்லா ஸர்ச் பண்ணலை ஸார். பாத்ரூம்ல கொலை செய்யப் பயன்படுத்தின கத்தியை கண்டெடுத்தேன். கொலைகாரன் ரத்தக்கறைய கழுவிட்டு கீழ போட்டுட்டு போயிட்டான் போலருக்கு, கர்சீப்ல சுத்தி வெச்சிருக்கேன். வேற எதுவும் பாக்கலை ஸார்...” என்றார்.

‘‘சரி, நீங்க போய் ஹவுஸ் ஓனரைக் கூட்டிட்டு வாங்க. என்கொயரி பண்ணிடலாம்’’ என்றேன். அவர் கீழே இறங்கிச் சென்றார். ஒவ்வொரு அறையாகப் பார்வையிடத் தொடங்கினேன். படுக்கையறையில் கட்டிலுக்குக் கீழே மின்னிய ‘அது’ என் கண்ணில் பட்டது. எடுத்தேன். ‘K.R.' என்கிற இன்ஷியல் பொறித்த மோதிரம். அதை பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன்.

பாரன்ஸிக் ஆட்கள் வந்து ரேகை சேகரிக்கத் துவங்கினர். அவளின் படுக்கையறை அலமாரியில் கிடைத்த டைரியுடன் நான் வெளியே வர, தினேஷ் வீட்டுச் சொந்தக்காரருடன் வந்தார். நாகேஷ் போல ஒல்லியாக, வழுக்கைத் தலையுடன் இருந்த அவரிடம், ‘‘இந்தப் பொண்ணு எவ்வளவு நாளா இங்க இருக்கா? இவளைப் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் சொல்லுங்க...’’ என்றேன் அதட்டலாக.

‘‘ஸார்... ஆறு மாசமா இங்க குடியிருக்கா. இவளுக்கு உறவுன்னு சொல்லிக்க யாரும் இல்லன்னு ‌சொன்னா ஸார். ‌ஏதோ கால் சென்டர்ல வேலைன்னு சொன்னா. நேரங்கெட்ட நேரத்துக்கு வருவா, போவா. சில ஆம்பளைங்க வேற அடிக்கடி சந்திக்க வர்றதுண்டு. இவ நடவடிக்கை பிடிக்காம காலி பண்ணும்படி கூடச் சொல்லிட்டேன். அதெல்லாம் முடியாதுன்னு எதிர்த்துப் பேசிட்டிருந்தா ஸார். நானே போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் தரலாம்னு இருந்தேன். அதுக்குள்ள இப்படியாயிடுச்சு...’’ என்று கடகடவென்று ஐந்தாம் வாய்ப்பாடு ஒப்பிப்பது போல ஒப்பித்தார். கால்கள் வெடவெடவென்று ஆடிக் கொண்டிருந்தன. ‘போலீஸ்’ என்றாலே நடுங்குகிற ஆசாமிபோல! மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். அக்கம்பக்கத்தில் விசாரணை செய்தபோதும் ஏறக்குறைய ஹவுஸ் ஓனர் சொன்னது போலத்தான் சொன்னார்கள். புதிய தகவல் எதுவும் பெயராததால், பாடியை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பிவிட்டு, வீட்டை சீல் வைத்துவிட்டுக் கிளம்பினோம்.

‘‘தினேஷ்! போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் என்ன சொல்லுது?’’ எனக் கேட்டேன் நான். ‘‘கொலை செய்யப்படறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி உடலுறவு கொள்ளப்பட்டிருக்கா ஸார். அவ உடம்புல மூணு கத்திக்குத்துக் காயங்கள் அழுத்தமா விழுந்திருக்கு. குத்தப்பட்ட கோணத்தை வெச்சுப் பாக்கறப்போ, கொலையாளி ஒரு இடதுகைக் காரனா இருக்கணும்னு டாக்டர் குறிப்பிட்டிருககார் ஸார்...’’

‘‘அப்படியா?’’ என்றேன். ‘‘அப்புறம் ஸார்... ஃபாரன்ஸிக்லருந்து வந்த ரிப்போர்ட்ல கத்தியிலயும், டெலிஃபோன்லயும் கிடைச்ச கை ரேகைகள் இருக்கு ஸார். ஸாலிட் எவிடென்ஸ். ஆள் யாருன்னு தெரிஞ்சிட்டா கம்பேர் பண்ணிப் பாத்துடலாம்...’’ என்றார்.

‘‘தினேஷ்! அவளோட டைரியப் படிச்சுப் பாத்தேன். அவ வேலை பாத்த கம்பெனிலயும் என்கொயரி பண்ணிட்டேன். அவ வேலை பாத்த கம்பெனி எம்.டி. அருண்கூட சுத்தியிருக்கா. அதைத் தவிர இளங்கோ, ராஜான்னு இரண்டு பேரை காதலிக்கிறதா சொல்லி ஏமாத்தியிருக்கா. இவங்களைத் தவிரவும் பல பேர் இருக்கணும்னு எனக்குத் தோணுது. எல்லாரையும் டீடெய்லா என்கொய்ரி பண்ணினதுல இவங்க மூணு பேர்தான் என் சந்தேக வளையத்துக்குள்ள வர்றாங்க. ஏன்னா இவங்க மூணு பேருமே லெஃப்ட் ஹேண்டர்ஸ்! நீங்க கான்ஸ்டபிள்ஸை அனுப்பி இவங்க மூணு பேரோட கைரேகையையும் அவங்களுக்குத் தெரியாம, கலெக்ட் பண்ணிட்டு வாங்க. ஃபாரன்ஸிக்ல கம்பேர் பண்ணினா உண்மை வெளில வந்துடும். அப்புறம் இருக்கு கச்சேரி...’’ என்றேன். ‘‘பண்ணிடலாம் ஸார்...’’ என்று துடிப்பாகக் கிளம்பிச் சென்றார் அந்த இளைஞர்.

டுத்த இரண்டாம் நாள் அவர் கைரேகைகளுடன் வர, அதை லேபுக்கு அனுப்பிவிட்டு மேலும் ஒரு தினம் காத்திருக்க வேண்டியிருந்தது. மூன்றாம் நாள் மதியம் தினேஷ் பரபரப்பாக வந்தார். ‘‘ஸார்...! நாம கலெக்ட் பண்ணின மூணு ரேகைகள்ல அவளோட கம்பெனி எம்.டி. அருணோட கைரேகை நூறு சதம் ஒத்துப் போகுதுன்னு ரிப்போர்ட் வந்திருக்கு ஸார்...’’ என்றார்.

உடன் செயல்பட்டு அரெஸ்ட் வாரண்ட் வாங்கி, அவனை ‘ரெட் செல்’லில் வைத்து ‘கவனித்தோம்’.. ‘‘ஸார்... நான் அவகூட நெருங்கிப் பழகினது நிஜம். ஆனா சம்பவம் நடந்த அன்னிக்கு நான் போனப்ப அவ சாகற தருவாய்ல இருந்தா. ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போலாமேன்னு கத்திய உருவினேன். உடனே செத்துட்டா. கத்தியை க்ளீ்ன் பண்ணிட்டு பயத்துல ஓடிட்டேன். சத்தியமா நான் கொலை பண்ணலை ஸார்...’’ என்று கதறினான் அவன். ‘‘மயிலே, மயிலேன்னா இறகு போடாது. இவனுக்கு இன்னும் விசேஷ சிகிச்சை கொடுங்க. இன்னு்ம் அரை மணில இவன் உண்மைய ஒத்துக்கணும்’’ என்று கோபமாகப் பேசிவிட்டு ‘ரெட் செல்’லை விட்டு வெளியே வந்தேன்.

என் இருக்கைக்கு வரும்போது டெலிஃபோன் மணி ஒலித்தது. இடது கையால் ரிஸீவரை எடுத்து, ‘‘எஸ்... இன்ஸ்பெக்டர் கல்யாணராமன் ஹியர்’’ என்றேன். ‘‘என்ன கல்யாண், அந்த ப்ரீத்தி கேஸ் என்னாச்சு? ஏதும் க்ளூ கிடைச்சுதா?’’ என்றார் எதிர்முனையில் கமிஷனர். ‘‘ஸார்... அவ வேலை பாத்த கம்பெனி எம்.டி. அருண்தான் குற்றவாளி. ஸ்ட்ராங் எவிடென்ஸ் கிடைச்சிருக்கு. அரெஸ்ட் பண்ணிட்டு வந்துட்டேன். கேஸ் முடிஞ்சிடுச்‌சு ஸார்’’ என்றேன். என்னைப் பாராட்டி விட்டு அவர் ஃபோனை கட் செய்ய, ரிஸீவரை வைத்துவிட்டுப் பெருமூச்சு விட்டேன்.

 நல்லவேளை...! ப்ரீதியின் வீட்டில் 'K.R.' என்று இன்ஷியல் ‌போட்ட என் மோதிரம் என் கண்ணிலேயே பட்டது. தினேஷ் பார்த்திருந்தால் இவ்வளவு ஈஸியாக விஷயம் முடிந்திருக்குமா, என்ன..? ப்ளடி பிட்ச்! காதலிப்பதாய் நடித்து, என்னுடைய சைடு வருமானத்தைப் பூராவும் கறந்து விட்டு என்னையே ஏமாற்றினால்... விட்டு விட முடியுமா என்ன?  என் ஸ்டேஷன் லிமிட்டுக்குள்ளேயே அவள் குடியிருந்த வீடு இருந்தது என் அதிர்ஷ்டம்தான்!


57 comments:

  1. கடைசி வரையில் கதை விறுவிறுப்புடன்
    பறக்கிறது.ஒரு சிறிய பதிவுக்குள்
    மிக நேர்த்தியாக ஒரு கிரைம் கதையைச்
    சொல்லிப் போனது மனம் கவர்ந்தது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மனம் கவர்ந்தது என்று சொல்லி மகிழ்ச்சி தந்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி!

      Delete
  2. தோளில் தட்டிக் கொடுக்கறேன்!

    அருமை. வெல்டன் கீப் இட் அப்!!!

    ReplyDelete
    Replies
    1. தட்டிக் கொடுத்து உற்சாகம் தந்த டீச்சருக்கு என் உள்ளம் நிறைந்த நன்றி!

      Delete
  3. வணக்கம் நண்பரே,
    தலைப்பின் கவித்துவம் பார்த்து
    என் நண்பர் இனிய கவி படைத்திருக்கிறார்
    பார்க்க ஆவலாய் ஓடி வந்தேன்...
    வந்ததும் அதைவிட இன்பம்..
    சிறு வடிவில் பக் பக் திகிலூட்டும் கதை..
    கதையின் வடிவம் அழகாய் அமைந்திருக்கிறது நண்பரே..

    ReplyDelete
    Replies
    1. மினி க்ரைம் கதையை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி மகேன்!

      Delete
  4. அட...அட... கணேஷ்... சூப்பரப்பு....! பிரமாதப் படுத்திட்டீங்க.

    ReplyDelete
    Replies
    1. மனம் விட்டுப் பாராட்டிய உங்களின் கருத்து தந்தது உற்சாகம். மிக்க நன்றி!

      Delete
  5. வித்தியாசமான தலைப்பு.திகிலான கதை.அருமை .

    ReplyDelete
    Replies
    1. திகிலான கதையை ரசித்துப் படித்த தங்கைக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  6. ஒரு கொலை நடந்தா எந்தவிதத்தில் எல்லாம் விசாரணை செய்வாங்கன்னு நேரில் நின்னு பார்ப்பது போல சொல்லி இருக்கீங்க. நல்லாஇருக்கு

    ReplyDelete
    Replies
    1. ஏராளமான க்ரைம் கதைகளைப் படிச்சு ரசிச்ச அனுபவம்தான் காரணம்ம்மா. நீங்கள் நல்லா இருக்குன்னதுல மிகமிக மகிழ்வோட என் நன்றியை தெரிவிச்சுக்கறேன்!

      Delete
  7. விருவிருப்பான கிரைம் கதை பாஸ்

    ReplyDelete
    Replies
    1. விறுவிறுபுன்னு சொல்லி மகிழ்ச்சி தந்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி ராஜ்!

      Delete
  8. நல்லா ட்ரை பண்ணுனா நீங்க ராஜேஷ்குமாரை பீட் பண்ணிரலாம் போலிருக்கே .. :)

    ReplyDelete
    Replies
    1. க்ரைம் கதை மன்னனை, என் நண்பரை பீட் பண்ற ஆசைல்லாம் எனக்கில்ல நண்பா. பக்கத்துல நின்னாலே போதும்னு நினைககறேன். மகிழ்வூட்டும் வார்த்தைகளால் பாராட்டியதுக்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  9. அப்பப்பா படிக்கும்போதே பயம் ஒட்டிகிச்சி சூப்பர் . நானும் இப்படியெல்லாம் கதை எழுதலாம்ன எங்க வருது .

    ReplyDelete
    Replies
    1. என்னங்க தென்றல்! உங்க தளத்துலயும், ஹேமாவோட தளத்துலயும் படிச்சுட்டு இப்படிக் கவிதை எழுத வரலையேடான்னு என்னை நானே திட்டிட்டிருக்கேன். நீங்க என்னடான்னா இப்படிச் சொல்றீங்க. ட்ரை பண்ணினா உங்களாலயும் முடியும்மா. உங்களின் வரிகளில் இருக்கிற மிகப் பெரிய பாராட்டுக்கு மகிழ்வுடன் கூடிய என் நன்றி!

      Delete
  10. தலைப்பே அசத்தலாக இருக்கு! கதை அதைவிட விறுவிறுப்பு! கிரைம் கதை என்றால் அதிகம் எழுதணும் என்று நினைத்திருந்தேன்! ஆனால் சுருக்கமாகவும் எழுத முடியும் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. எந்தக் கதையா இருந்தாலும் வளவளன்னு இழுக்காம நறுக்னு எழுதறதுதான் எனக்கப் பிடிக்கும் மணி. இதை விறுவிறுப்பா இருக்குன்னு நீங்க சொன்னது மனசுக்குத் தெம்பா இருக்கு. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  11. ஃப்ரெண்ட் கை நிறையச் சொக்லேட் பிடியுங்க.நிரஞ்சனாக்குட்டிக்கும் குடுக்கணும்.தனிய சாப்பிடறதில்ல !

    அப்புறம்...கதை தலைப்பே கொஞ்சம் டெரராத்தான் இருந்திச்சு.இப்பிடியெல்லாம் அதுவும் இந்த மெதேட்ல எழுதணும்ன்னா தலைகீழா நிண்டாலும் மூளை வாய்க்குள்ளதான் வரும்.சிரிக்காதீங்க !

    ReplyDelete
    Replies
    1. அந்தப் புள்ள சாக்லெட்னா உயிரை விட்றும். நீங்க குடுத்த சாக்லெட்ல பாதியக் குடுத்துடறேன். தலைப்பையும் கதையையும் நீங்க ரசிச்சுப் படிச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் ஃப்ரெண்ட்! கவிதை எழுதற விஷயத்துல நீங்க சொன்னது மாதிரிதானே என்னோட நிலைமை! அதனால நாமெல்லாம் Same Blood தான்!

      Delete
  12. க்ரைம்ல இறங்கீட்டீங்களா கணேஷ். சுராபி ன்னு பேர் வைக்கிறேன். கண்டுபிடிங்க பார்க்கலாம்;)

    ReplyDelete
    Replies
    1. சுராபி..? சுஜாதா தெரியும், ராஜேஷ்குமார் தெரியும், பிரபாகர் தெரியும். இவங்கதான் இந்தப் பேரைப் படிச்சதும் நினைவுக்கு வர்றாங்க. வேற அர்த்தம் எதுவும் தோணலையே வல்லிம்மா..! சீக்கிரம் புதிரை நீங்களே விடுவிச்சுடுங்க, ப்ளீஸ்! இல்லன்னா (இருக்கற கொஞ்சநஞ்ச) முடியைப் பிச்சுக்கிட்டு மொட்டைத் தலையாய்டுவேன் நான்.

      Delete
  13. சார் கலக்கிட்டீங்க....

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்து பாராட்டிய உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  14. Replies
    1. மகிழ்வு தந்த பாராட்டிற்கு என் இதயம் நிறை நன்றி தனபாலன்!

      Delete
  15. இன்றுதான் உங்களின் வலைத்தளம் வருகிறேன் நண்பரே...
    ஆரம்ப பதிவே அட்டகாசம்.. கற்பனை நல்லா இருந்தது..
    narration கதைகள் சொல்வது கொஞ்சம் ஈசி... விளையாடி இருந்தீங்க..
    இரசித்தேன்..

    மைனஸ்..
    துப்பறியும் கதைகளுக்கே உரிய கொஞ்சம் கிளிஷே இருந்தது...
    அதனாலோ என்னவோ முடிவை முடிவிற்கு நான்கு பத்திகள் முன்பே ஊகித்து விட்டேன்..

    ReplyDelete
    Replies
    1. ம்... க்ரைம் கதைகள் என்றாலே ஃபாரன்ஸிக், என்‌கொயரி போன்ற சில க்ளிஷேக்கள் தவிர்க்க முடியாதவைதான். முடிவை மு்‌ன்பே ஊகித்த உங்களின் புத்திக் கூர்மைக்கு ஒரு சல்யூட்! கற்பனை வளத்தைப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  16. உயர, உயர ,உயரப் போய்விட்டீர்கள் கணேஷ்!

    புலவர்கள் வாக்கு பொய்யாகுமா கணேஷ்! உங்களுக்குப் புரியும் என்று கருதுகிறேன்!நெடுந் தொடர் ஒன்று தொடங்குங்கள்!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. புலவர் வாக்கு என்றும் பொய்த்ததில்லை. என்னாலும் பரபரப்புடன் கூடிய க்ரைம் கதைகள் தர முடியும் என்று நீங்கள் வாழ்த்தியதை நான் மறப்பேனா? நடை வண்டிகள் இன்னும் சில அத்தியாயங்கள்தான் வரும். அது முடிந்தவுடன் நீங்கள் சொல்கிறபடி விறுவிறுப்புக் குன்றாத க்ரைம் நெடுந்தொடர் ஒன்று தொடங்க உள்ளேன். என் உற்சாகம் குன்றாமல் ஊக்கமளிக்கும் உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி!

      Delete
  17. ஒரு கிரைம் கதையை மிகவும் பக்குவப்பட்ட ஒரு எழுத்தாளார் போல கொண்டு சென்ற நேர்த்தி மிகவம் மனம்
    கவர்ந்தது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. க்ரைம் கதையை ரசித்துப் படித்து, என்னை வாழ்த்திய நண்பனுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  18. //என் இருக்கைக்கு வரும்போது டெலிஃபோன் மணி ஒலித்தது. இடது கையால் ரிஸீவரை எடுத்து//
    என்று படித்தபோதே சந்தேகப்பட்டேன்.மிக அருமையாக கதையை நகர்த்திக் கொண்டு சென்றுள்ளீர்கள்.
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் நிறையக் கதை படித்த அனுபவத்தால சந்தேகப்பட்டிருக்கீங்க. நல்லது. கதையை ரசித்து என்னை வாழ்த்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  19. சொல்லிய விதம் , கதை ஓட்டம் நன்று. விகடன் கதை போலவே இருந்தது. நல்வாழ்த்து. (கதைகள் நான் படிப்பதில்லை சார். உங்களுக்காக வாசித்தேன்)
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. கதைகள் படிக்கும் வழக்கம் இல்லாவிட்டாலும் எனக்காய் வாசித்துக் கருததிட்ட உங்களின் அன்பு நெகிழ வைக்கிறது சகோதரி. என்னுடைய உளம் கனிந்த நன்றி உங்களுக்கு.

      Delete
  20. வலைச்சரம் வாங்க
    http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_27.html

    ReplyDelete
    Replies
    1. இந்த வலைச்சர வாரத்தில் இரண்டு முறை என் பதிவுகளை அறிமுகம் செய்து மனமகிழ்வளித்த உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி. உங்களைப் போன்ற நண்பர்களின் மனதில் இடம் பெற்றிருப்பதே பெரிய சொத்து எனக்கு!

      Delete
  21. விறுவிறுப்பாகக் கொண்டு சென்று முடித்திருக்கும் விதம் மிக அருமை. வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்து வாழ்த்திய உங்களின் மகிழ்வு தந்த கருத்திற்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  22. அப்பாடா!பின்னூட்டம் இன்னும் காலியாகவே இருக்குது.

    சும்மா கிளி,கிலி,கிழின்னு கிழிக்கிறீங்க:)

    ReplyDelete
    Replies
    1. ரசித்துபு் பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  23. நீங்க ரொம்ப.....நல்லவர் கணேஷ் சார்!அப்படியே தொட்டவுடன் பின்னூட்டம் வந்து விழுது.அப்படித்தான் இருக்கனும் நல்ல பிள்ளையா:)

    ReplyDelete
    Replies
    1. அப்படியே ஆகட்டுமுங்க!

      Delete
  24. பின்னுங்க.. நம்ம டைப் பொலீஸ் ஆபீசர்.

    (நான் சொல்லாம்னு இருந்தேன்.. அதுக்குள்ள நீங்களே மாத்திட்டீங்க போல..)

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்குப் பிடிச்சிருந்ததுல ரொம்ப சந்தோஷம் + என் இதய நன்றி!

      Delete
  25. சிறிய கதைக்குள் க்ரைம் கையாளப்பட்டிருக்கும் விதமும் அதன் விறுவிறுப்பும் உங்கள் எழுத்து திறமையை காட்டுகிறது.
    அருமையான கதை.

    ReplyDelete
    Replies
    1. மனமகிழ்வு தந்த உங்களின் பாராட்டிற்கு என் இதயம் நிறைந்த நன்றிகள் சே.குமார்!

      Delete
  26. க்ரைம் கதைகள் எனக்கு றொம்ப பிடிக்கும். அதுவும் கணேஷ் அங்கள் கதையாச்சே. இறுதி வரைக்கும்
    விறு விறுப்பு குறையாமல் இருந்தது.. சூப்பர்ர்ர்

    ReplyDelete
    Replies
    1. க்ரைம் கதையை ரசித்து என்னைப் பாராட்டிய உனக்கு என் உளம் கனிந்த ந்னறிம்மா!

      Delete
  27. விறுவிறுப்பான கதை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு மிகமிக அகமகிழ்வு தருகிறது உங்களின் பாராட்டு. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஸார்!

      Delete
  28. பூர்வ ஜென்மத்துல... டிடெக்ட்டிவா? ...அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... உங்களின் ரசனைக்கு ஒரு சல்யூட். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube