Wednesday, January 29, 2014

மொறு மொறு மிக்ஸர் - 23

Posted by பால கணேஷ் Wednesday, January 29, 2014
து தேவகோட்டையில் இவன் பள்ளிச் சிறுவனாயிருந்த காலம். மதுரையிலிருந்து சித்தப்பாவின் குடும்பம் விடுமுறைக்கு தேவகோட்டைக்குத் தவறாமல் வருவார்கள். தங்கையுடனும், தம்பியுடனும் பொழுதைக் கழிப்பதற்காக விடுமுறையை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பான் இவன். மூவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளுக்குக் கணக்கேயில்லை. ஒருநாள் அம்மா தங்கையைக் கூப்பிட்டு, ‘‘தெருமுக்குக் கடைக்குப் போயி நூறு தக்காளியும் அம்பது பொட்டுக்கடலையும் வாங்கிட்டு வா" என்று கூறி 
இவனையும் துணைக்குப் போகச் சொன்னாங்க.

கடைக்குச் சென்றதும் கிளிப் பிள்ளை மாதிரி பெரியம்மா சொன்னதை அப்படியே ஒப்பித்தாள் தங்கை. கடைக்காரர் பொட்டலம் கட்டிக் கொடுத்ததும், இவன் கையிலிருந்த சில்லறையைக் கொடுத்துவிட்டு, ‘‘வாடி, போகலாம்...!" என்றான் தங்கையிடம். அவள் நகராமலே நின்றாள், ‘‘அண்ணா! கடைக்காரன் ஏமாத்தப் பாக்குறான்... என்னன்னு கேளுங்க..." என்றாள். ‘‘என்ன ஏமாத்திட்டாரு...? எதைக் கேக்கணும் நானு?" என்று முழித்தான் இவன். அவள் சொன்னாள்: ‘‘ஐயோ அண்ணா...! பெரியம்மா நூறு தக்காளி வாங்கிட்டு வரச் சொன்னாங்க. இவன் மூணுதான் குடுத்திருக்கான். இப்படித்தான் ஏமாளியா எப்பவும் வாங்கிட்டுப் போவியா?" தங்கையின் புத்திசாலித்தனத்(?)தின் முன் அன்று ‘ஙே' ஆகி நின்றான் இவன்.

===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===

‘நஸ்ரியாவுக்குத் திருமணம்' நிச்சயமான செய்தி வெளியான அடுத்த தினம் என்னைப் பார்க்க வந்திருந்த கோவை ஆவியை ‘‘ஹார்ட் உடைஞ்சிச்சா? ஒட்ட(றதுக்கு)கம் எதும் வேணுமா?"ன்னு கேலி பண்ணிட்டிருந்தேன். அப்ப ஆவி ஒரு விஷயம் சொன்னார் - நஸ்ரியாவுக்கும் அவரைக் கல்யாணம் செய்து கொள்ளப்போகும் பஹத்பாசிலுக்கும் 10 வயது வித்தியாசம் என்று. மார்ஜியானாவும் நானும் ஒரே இனம், ஒரே ஜாதி என்று நிறைய ‘ஒரே' இருந்தும்கூட அவள் அம்மாவும், தாத்தாவும் இதே 10 ஆண்டு வித்தியாசத்தைக் காரணம் காட்டி அவளைத்தர மறுத்தது, இதுவும் ஆடு மாதிரி அம்மா, தாத்தாவை மீறமாட்டேன் என்று நின்றது, ‘என்னைவிட நல்ல பெண் நிச்சயம் உனக்கு கிடைப்பா' என்கிற டெம்ப்ளேட் வசனம் பேசி என்னிடம் அறை வாங்கி ஓடியது, அதன்பின் இன்றுவரை கண்ணிலேயே படாதது என்று பல காட்சிகள் ஸ்லைடு ஸ்லைடாக மனதில் ஓடி முடிந்தன சில விநாடிகளில்! ஆவியிடம் சொன்னேன்: ‘‘நஸ்ரியா வாழ்க! அவள் ஃபேமிலி வாழ்க!" என்று!
 

===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===

ன்றொரு நாள் என் வீட்டிலிருந்து மத்யகைலாஷ் வரை பேருந்துப் பயணம் செய்ய நேர்ந்தது. பேருந்தின் பின்வாசலில் ஏறிய எனக்குப் பின்னிருந்து ஏழெட்டு பேர் நெருக்க, கதவின் அருகிலிருந்து உள்ளே போகலாம் என்றால் முடியவில்லை. முன்னால் நின்றிருந்த ஒரவர் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடுகிறவர் மாதிரி முதுகின் பின்னால் தொங்கவிட்ட பெரிய கறுப்புப் பையின் வார் தோள்பட்டையைச் சுற்றிவர, இரண்டு பேர் நிற்கும் இடத்தை ஆககிரமித்துக் கொண்டிருந்தார். அவரை நசுககிக் கொசண்டு போகலாம் என்றாலோ, அவருக்கு முன் நின்றிருந்த பெண்ணின் உடலின் மேல் நன்ன்ன்றாக உரச வேண்டியிருக்கும், வெறுப்புப் பார்வை அல்லது கோப வசவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், ‘‘ஸார்... நீங்க எங்க இறங்கப் போறீங்க?" என்றேன் மெதுவாக. ‘‘கேன்ஸர் இன்ஸ்டிட்யூட்" என்றார் அவர். ‘‘இன்னும் நிறைய ஸ்டாப் இருக்கே... உங்க தோள்ல இருக்கற பேகைக கழட்டி காலடியில வெச்சா, நான் முன்னால போக முடியும்" என்றேன்.

அவர் முன்புறம் நின்றிருந்த ஒருத்தரைக் கை காட்டி, ‘‘அவர் இதே மாதிரி தோள்ல பேக் மாட்டிட்டுதான் இருக்கார். அவரைக் கேட்டீங்களா? நான்தான் கிடைச்சனா?" என்றார். முட்டாளோடு முரண்பட்டுப் பயனில்லை என, அவனை நசுக்கி முன்னேறி விட்டேன். (நல்லவேளை... அந்தப் பெண் வசவவில்லை... ஹி... ஹி...!) எனக்குப் பின்வந்த நான்கைந்து பேரும் தொடர்ந்து அர்ச்சனை செய்ய... அதன்பின் பேகைக் கழற்றி காலடியில் வைத்தார் அந்த நபர். தான் செய்யும் குற்றத்தை ஒருவன் சுட்டிக் காட்டினால், ‘அவன் செய்யறத விட நான் செய்றது மோசமில்ல' என்று தன் தப்பை நியாயப்படுத்துவது என்ன நியாயம் எனபதுதான் புரியவில்லை. அவன் கொலையே பண்றான், நான் கையைத் தானே வெட்டறேன் என்று சொல்வது என்ன லாஜிக்? என்னத்தச் சொல்ல...? இப்படியே பழகிட்டாய்ங்கப்பூ...!


 ===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===

இனி சில தகவல்கள்:

1) நான் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்த ‘நாலு வரி நோட்டு’ புத்தகங்களை இங்கு க்ளிக் செய்து இணையத்தில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். அல்லது (0)99001 60925 என்ற எண்ணுக்குத் தொலைபேசி உங்கள் முகவரியைக் கூறி பெற்றுக் கொள்ளலாம். மூன்று நூல்களையும் வாங்கும் சென்னை வாசகர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியுடன் கூரியர் செலவும் இலவசம் என்றும், சென்னைக்கு வெளியே உள்ளோருக்குக் கூரியர் செலவு மட்டும் இலவசம் என்றும் பதிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

2) ஐ பேட் வைத்திருக்கிறீர்களா நீங்கள்? ‘கல்கி' வார இதழின் வாசகரா நீங்கள்? எனில் உங்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பு. இந்தச் சுட்டியில் க்ளிக் செய்தால் ஐபேடில் படிப்பதற்கு வசதியாக - இலவச பயன்பாடாக - கல்கி வார இதழ் கிடைக்கிறது. படித்து ரசியுங்கள். இந்தத் தகவலைத் தந்து என் வாசகர்களுக்குப் பகிரச் சொன்ன நண்பர் ப்ரவீண் தியாகராஜனுக்கு ஒரு சல்யூட்!

3) படித்த புத்தகங்களில் ரசித்த விஷயங்கள் பற்றிப் பகிர்வதற்கும், எழுத்தாளர்கள், படைப்புகள் பற்றிய கட்டுரைகள் பகிர்வதற்கும், நூல் அறிமுகம் / விமர்சனம் செய்வதற்கும் என்று புத்தகங்களுக்காக தனியான தளம் ஒன்றை நானும் என் நண்பர்கள் சிலரும் இணைந்து துவங்கியிருக்கிறோம். அதில் முதல் பதிவை இன்று வெளியிட்டுள்ளோம். தளத்தின் பெயர் - வாசகர் கூடம்! பிடிச்சிருக்கா? அங்கும் உங்களின் ஆதரவைத் தந்து எங்களை வளர்க்கும்படி பணிவண்புடன் வேண்டிக் கொள்கிறோம் நாங்கள்.

===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===

ண்பார்வை தெளிவடைய வேண்டுமா? பப்பாளிப் பழம் 2 துண்டு, பேரிச்சம் பழம் 4, செர்ரிபழம் 10, அன்னாசி பழம் 2 துண்டு, ஆப்பிள், திராட்சை 50 கிராம், மலை அல்லது ரஸ்தாளி வாழைப்பழம் 2, மாம்பழம் 2 பத்தை, பலாச் சுளை 2 (மாம்பழம் அல்லது பலா_ சீசனில் மட்டும் போட்டால் போதுமானது) இவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் அல்லது பசும் பாலுடன் சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட நல்லது.

===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===+===

to end with a smile...

hi...hi...hi...!


Monday, January 27, 2014

நாலுவரி நோட்டு

Posted by பால கணேஷ் Monday, January 27, 2014
 ‘‘பேசாம எல்லாத் திருக்குறளுக்கும், அகநானூறு. புறநானூறுக்கும் இளையராஜாவை இசையமைக்கச் சொல்லி பாட்டா கேக்க வெச்சா பசங்க ஈஸியா மார்க் எடுத்துடுவாங்கன்னு தோணுதுப்பா" என்று எனக்குத் தெரிந்த ஆசிரியர் ஒருவர் ஒருமுறை விளையாட்டாகச் அலுத்துக் கொண்டார். ஆனால் அது நிஜம்தான்.

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே


-அப்படின்னு -திருநாவுக்கரசர் பெருமான் எழுதின பாடல் ஒண்ணு இருக்குது. இதை ‘வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா?'ன்னு கட்டபொம்மன் சிவாஜி பேசுவாரே அதுமாதிரி வசனமாப் படிச்சுப் பாத்தா மனசுல பதியாது. தளபதி படத்துல ‘ராக்கம்மா கையத் தட்டு'ங்கற அதிரடிப் பாட்டுக்கு நடுவுல தென்றல் மாதிரி மெலடியா இந்த நாலு வரிகளை இளையராஜா இழைச்சிருப்பார். அதைக் கேட்டா அப்படியே மனசுல ஒட்டிக்கும். சினிமாப் பாடல்களோட மகத்துவம் அத்தகையது.


நாமல்லாம் கேட்டு ரசிச்சிருக்கற/ரசிச்சுட்டிருக்கற சினிமாப் பாட்டுக்களின் ஊடாக, நிறைய இலககியம், கொஞ்சம் இலக்கணம், கொஞ்சம் கலாச்சாரம், கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் அறிவியல், கொஞ்சம் நகைச்சுவைன்னு பல விஷயங்களை சின்னச் சின்னக் கட்டுரைகளா நமக்குத் தருகிறது ‘நாலுவரி நோட்டு' என்கிற புத்தகத் தொகுப்பு. ஆமாம... என.சொக்கன், ஜிரா, மோகனகிருஷ்ணன் என்கிற மூவரும் இணைந்து http://4varinote.wordpress.com/ என்கிற தளத்தில் எழுதியவற்றைத் தொகுத்து மூணு புத்தகங்களாக வெளியிட்டிருக்கிறாங்கள் முன்னேர் பதிப்பகம்.

முதல் புத்தகம் திரு.என்.சொக்கன் எழுதியவை. நாம் திரைப் பாடல்களில் இசையை மட்டும் ரசித்து, பெரும்பாலான சமயங்களில் வரிகளைக் கவனிக்காமல் போகிற போக்கில் விட்டுவிடுகிறோம். என்.சொக்கன் பல பாடல்களின் வரிகளைக் கூர்ந்து கவனித்து அவற்றுக்குப் பொருள் விளககம் தேட முனைகையில் எல்லாம் நமக்கு அடிக்கிறது ஜாக்பாட். எத்தனை சுவாரஸ்யமான விஷயங்கள். வம்பு தும்பு என்ற சொலவடையில் தும்புக்குப் பொருள் என்ன என்கிற ஆராய்ச்சியி துவங்கி, குப்பை என்பதற்கு அர்த்தம் தேடுவது ஊடாக, ஜெயங்கொண்டாரின் இலக்கியப் பாடலை கண்ணதாசன் எளிமையான திரைப்பாடலாக்கியிருக்கும் சாதுயர்த்தை வியத்தல் வரை... ஒவ்வொன்றைப் படித்து முடிக்கையிலும், ‘அட! ஆமாம்ல... இதை நாம கவனிக்கத் தவறிட்டமே' என்கிற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறார் என்.சொக்கன். மெல்லிய நகைச்சுவை கோட்டிங்குடன் அமைந்திருக்கும் எழுத்து நடை என்.சொக்கனின் +. அதுவே கையிலெடுத்த புத்தகத்தை கீழே வைக்காமல் புரட்டவும் வைக்கிறது. என்.சொக்கன் என்கிற பானையிலிருந்து எடுத்த ஒரு சோறு இதோ நீங்கள் பதம் பார்க்க....

சேலை வாசம் படம்: கொடி பறக்குது பாடல்: சேலை கட்டும் பெண்ணுக்கொரு எழுதியவர்: வைரமுத்து இசை: ஹம்சலேகா பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், கே. எஸ். சித்ரா
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு, கண்டதுண்டா? கண்டவர்கள் சொன்னதுண்டா?
கிராமத்து மக்கள் 'சேலை'யைச் ‘சீலை' என்று அழைப்பார்கள். அவர்கள் சரியான சொல் தெரியாமல் கொச்சையாகப் பேசுவதாக நாம் நினைத்துக்கொள்வோம். ஆனால் நாம் Window Curtainsஐத் ‘திரைச்சீலை' என்று சொல்கிறோம், ‘திரைச்சேலை' என்று சொல்வதில்லை. அப்படியானால் எது சரி? எது கொச்சை?
இவை அனைத்துக்கும் வேர்ச்சொல்லாக நம்பப்படுவது, ‘சீரை'.
உதாரணமாக, தேவாரத்தில் சிவபெருமானைக் குறிப்பிடும் திருநாவுக்கரசர் இப்படி எழுதுகிறார்: ‘உடையும் சீரை, உறைவது காட்டிடை.' அதாவது, சிவன் அணிவது சீரை என்ற ஆடை, அதன் அர்த்தம், மரப்பட்டையை எடுத்துப் பதப்படுத்தி உருவாக்கப்பட்ட துணி. ‘மரவுரி' என்று சொல்வார்கள்.
ராமாயணத்தில் ராமனைக் காட்டுக்கு அனுப்ப வரம் கேட்டதோடு கைகேயி நிற்கவில்லை, அவன் காடு செல்லக் கிளம்புகிறான் என்று தெரிந்ததும், அவனுக்கு இந்தச் சீரையைதான் கொடுத்தனுப்புகிறாள். இதைப் பரதன் பின்னர் ஆதங்கத்துடன் சுட்டிக்காட்டுகிறான். சீரையை உடுத்தியது ராமன்மட்டுமல்ல, லட்சுமணனும், சீதையும்தான். இதைக் குறிப்பிடும் கம்பர் வாசகம், ‘சீரை சுற்றித் திருமகள் பின் செல…' ஆக, சீரை என்பது மரவுரி, அதை ஆண்களும் பெண்களும் உடலைச் சுற்றி அணிந்திருக்கிறார்கள். பின்னர் இதுதான் ‘சீலை’யாகத் திரிந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. நாம் இப்போது அதைச் ‘சேலை’ என்கிறோம். கன்னடர்கள் இன்னும் ‘சீரெ' என்றுதான் சொல்கிறார்கள்.
'சேலை கட்டிய பெண்ணை நம்பாதே' என்று ஒரு பழமொழி உண்டு, அதைக் கொஞ்சம் சமத்காரமாக, ‘சேல கட்டிய பெண்ணை நம்பாதே’ என்று மாற்றி, இப்படி ஒரு விளக்கம் சொல்வார்கள்: சேல கட்டிய பெண் : சேல் + அகட்டிய பெண் : சேல் (ஒருவகை மீன்) போன்ற வழிகளை அளவுக்கதிகமாக விரித்துப் பேசும் பெண் பொய் சொல்கிறாள், நம்பாதே!
அது சரி ,'புடவை'க்கு விளக்கம் என்ன?
முதலில், ‘புடவை' என்று எழுதுவது தவறு, அது ‘புடைவை' என்று இருக்கவேண்டும். ‘புடை' என்றால் பக்கம், ‘மந்திரிகள் புடை சூழ முதலமைச்சர் வருகை தந்தார்' என்று செய்திகளில் வருகிறதே, அதுதான். ஆக, ஒரு பெண்ணின் உடலை எல்லாப் பக்கங்களிலும் சுற்றி அணியப்படுகிற ஆடை என்பதால், அதற்குப் ‘புடைவை' என்று பெயர் வந்தது. பின்னர் அது எப்படியோ ‘புடவை' என்று திரிந்துவிட்டது.
அதேபோல், ‘துணி'ப்பதால் (துண்டித்து / கத்தரித்து) விற்பனை செய்வதால், அது ‘துணி'. இதே காரணத்தால் ஆடைக்கு ‘அறுவை' என்றும் பெயர் உண்டு (அறுத்துப் பயன்படுத்துவதால்).
அறுவை போதும் என்கிறீர்களா? சரி, இதோடு நிறுத்திக்கொள்கிறேன்,

இரண்டாவது புத்தகத்தை திரு.கோ.ராகவன் என்கிற ஜிரா எழுதியிருக்கிறார். இவர் தகவல் தொழில்நுட்ப மேலாளராக்ப் பணிபுரிவதாக ஆசிரியர் குறிப்பு கூறுகிறது. இந்தப் புத்தகத்தில் நக்கீரன், ஔவையார் துவங்கி, வைரமுத்து ஈறாக ஒவ்வொரு பாடல்களின் இலக்கிய நயத்தை இவர் பிரித்து அலசியிருக்கும் விதம் பிரமிப்பைத் தருகிறது. முதல் புத்தகம் ஒரு பாடலை எடுத்துக கொண்டு அதன் நயத்தை விளக்குகிறது என்றால் ஜிரா தன் புத்தகத்தில் ஒரே கட்டுரையில் பல பாடல்களைக் குறிப்பிட்டு அலசுகிறார். அந்தப் பாடல்களில் ஒற்றுமை, ரசனை, அவற்றில் மறைந்திருக்கும் இலக்கியம் என்று அலசுகிற கட்டுரைகளின் சுவாரஸ்யம் இந்த இரண்டாவது புத்தகத்தின் +. ஜிரா அவர்களின் எழுத்திலிருந்து ஒரு சாம்பிள் பீஸ் இங்கே நீங்கள் சுவைத்துப் பார்க்க...


உதடுகளில் உன் பெயர்
தூது செல்வதாரடி உடன் வரத் தூது செல்வதாரடி வான் மதி மதி மதி மதி அவரென் பதி என் தேன் மதி மதி மதி கேள் என் சகி உடன் வரத் தூது செல்வதாரடி
படம் – சிங்காரவேலன் பாடல் – பொன்னடியான் பாடியவர் – எஸ்.ஜானகி இசை – இசைஞானி இளையராஜா
காதற் குளத்தில் விழுந்து முழுகி காப்பாற்ற யாருமின்றித் தவிக்கும் ஒரு காதலி அவளுடைய காதலுக்குத் தூதாக யாரை அனுப்புவது என்று புரியாமல் தத்தளிக்கிறாள். அதுதான் மேலே சொல்லியிருக்கும் பாடல்.
காதலுக்குத் தூதாக யாரை அனுப்புவது என்பதே ஒரு பெரிய பிரச்சனை. 'தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாளோ தலைவி' என்று கண்ணதாசன் கூட முன்பு எழுதினார். அதற்கு முன்பு அன்னத்தை தூது விட்டாள் தமயந்தி என்று புகழேந்திப் புலவன் நளவெண்பாவில் எழுதினான். மேகத்தைத் தூது விட்டதைப் பற்றி காளிதாசன் வடமொழியில் எழுதினான். கண்ணையும் கண்ணையும் தூது விட்டு அண்ணலும் நோக்கி அவளும் நோக்கி காதலில் விழுந்ததை கம்பனும் எழுதினான். சுந்தரமூர்த்தி நாயனாரோ காதலுக்கு ஈசனாரையே தூது விட்டார்.
இப்படி தூதாக ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை அனுப்பியிருக்க காளமேகம் அத்தனையும் ஒன்றுக்கும் உதவாதது என்று ஒதுக்கி விடுகிறான். சும்மா ஒதுக்கவில்லை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணத்தோடுதான் ஒதுக்குகிறான். அந்தக் காரணங்களைப் பட்டியலிட்டு நமக்காக ஒரு பாட்டையும் ஒதுக்குகிறான்.
தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது தூதிதூ தொத்தித்த தூததே தாதொத்த துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது தித்தித்த தோதித் திதி
என்ன? ஒன்றும் புரியவில்லையா? கொஞ்சம் பிரித்துப் பிரித்துச் சொல்கிறேன். புரிகின்றதா என்று பாருங்கள்.
தாதிதூ தோதீது – தாதி தூதோ தீது – தாதி(பணிப்பெண்) செல்லும் தூது தீயது தத்தைதூ தோதாது – தத்தை தூதோதாது – தத்தை தூது ஓதாது – கிளியானது தூதைச் சிறப்பாகச் சென்று ஓதாது தூதிதூ தொத்தித்த தூததே – தூதி தூது ஒத்தித்த தூததே(தூது அதே) – தோழி செல்லும் தூது தள்ளிப்போடப்பட்டுக் கொண்டேயிருக்கும் தூதாகி விடும் தாதொத்த துத்தி தத்தாதே – தாது ஒத்த துத்தி தத்தாதே – பூந்தாதை ஒத்த பசலை நிறம் கொண்ட தேமல் என் மேல் படராது தேதுதித்த தொத்து தீது – தே துதித்த தொத்து தீது – தே(இறைவனை) துதித்துத் தொற்றிக் கொள்வதும் தீதே
என்னடா கொடுமை இது? தாதியையும் தூது அனுப்பக் கூடாது. கிளியை அனுப்பினால் சொன்னதையே சொல்லி உளறிவிடும். தோழியை அனுப்பினால் எதுவும் காலத்தில் ஆகாது. தெய்வத்தையே துதித்துக் கொண்டிருந்தால் ஒரு பயனும் இராது. அப்படியானால் என்னதான் செய்வது? எதுதான் நல்லது? அதுதான் பாடலின் கடைசி வரி.
தித்தித்த தோதித் திதி – தித்தித்தது ஓதித் திதி – தித்திப்பான காதலன் பெயரையே ஓதிக் கொண்டிருப்பேனாக!
இதைத்தான் பின்னாளில் “உதடுகளில் உனது பெயர் ஒட்டிக் கொண்டது. அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது" என்று நா.காமராசன் தங்கரங்கன் படத்துக்காக எழுதினார்.

நாலுவரி நோட்டின் மூன்றாவது புத்தகம் திரு.மோகனகிருஷ்ணன் அவர்களின் எழுத்து வண்ணத்தில்! தோளில் கை போட்டு ஒரு நண்பனுடன் பேசுகிறதைப் போன்ற உணர்வைத் தோற்றுவிக்கும் இவரது எளிமையான எழுத்து நடை புத்தகத்திற்கு ஒரு +. இவரும் தன் கட்டுரைகளில் ஒரு பாடலுடன் பல பாடல்களை மேற்கோள் காட்டி பாடல் வரிகளுக்குள் ஒளிந்திருககும் அர்த்தங்களைத் தேடி அவற்றைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் ‘அட1’ என்கிற வியப்பை ஏற்படுத்துகிறார். திரு.ரா.கி.ரங்கராஜன் ‘வினோத்’ என்ற பெயரில் ‘லைட்ஸ்ஆன்’ குமுதத்தில் எழுதியபோது தமிழுடன் ஆங்கிலம் கலந்த ரசனையான தமிழாங்கில நடையைக் கைக்கொண்டிருந்ததை ரசிக்காதவர்கள் இல்லை. திரு.மோகனகிருஷ்ணனின் எழுத்திலும் ஆங்காங்கே டெய்ல் பீஸாகவும், இடையிடையேயும் வரும் ஆங்கில வார்த்தைப் பிரயோகங்களும் பாயாசத்தில் முந்திரியாய் ரசிக்கத்தான் வைக்கின்றன. இவரின் படைப்பு அருவியிலிருந்து சிதறிய ஒரு துளியை இங்கே பார்க்கலாம்...


முரண்களைக் கோத்து மாலை
எண்பதுகளின் துவக்கத்தில் வந்த படங்களில் ஒரு தலை ராகம் முக்கியமானது. நிறைய புதியவர்கள், கல்லூரி ரயில்வே ஸ்டேஷன் வித்தியாசமான களம் என்று சில அடையாளங்களுடன் வந்து மிகப்பெரிய Blockbuster வெற்றி பெற்றது. படத்தின் பாடல்கள் இசைக்காகவும் வரிகளுக்காகவும் பரபரப்பாக பேசப்பட்டன. இதில் எல்லா பாடல்களும் ஆண் குரலில் ஒலிக்கும். இது ஒரு தலை காதல் என்பதை குறிக்கவே என்று அந்த நாளில் கல்லூரியில் விவாதித்ததுண்டு.
எழுதி இசையமைத்தவர் என்று T ராஜேந்தருக்கு படம் வந்தபோது முழு Credit கொடுக்கப்படாவிட்டாலும் பின்னர் வந்த வெற்றிகள் அவர் உழைப்புக்கும் வேர்வைக்கும் பேர் வைத்தது. இதில் முரண்களைக் கோர்த்து மாலை செய்த இனிமையான பாடல் ஒன்று உண்டு. காதல் கைகூடாது என்று வலியுடன் நாயகன் பாடும் பாடல். நடக்க முடியாத அல்லது முரண்பட்ட அல்லது தொடர்ச்சியாக அமையாத அல்லது பொருத்தமில்லாத நிகழ்வாக சில உதாரணங்களை சொல்லி அதுபோலவே தன் காதலும் என்று சொல்லும் பாடல்.
இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம் இது மேற்கில் தோன்றும் உதயம் இது நதியில்லாத ஓடம்
பூபாளம் அதிகாலை ராகம் அது இரவில் பொருந்தாது. மேற்கில் உதயம் நடக்கவே நடக்காது. நதியில்லாத ஓடம் உபயோகமற்றது – என்று தன் காதலின் நிலை சொல்லும் வார்த்தைகள். (சமீபத்தில் ராம் படத்தில் வந்த ஆராரிராரோ பாடல் குழந்தை பாடும் தாலாட்டாக. சரணத்திலும் தொடரும் இந்த அமைப்பு – சில வரிகளைப்பாருங்கள்
நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப் பார்க்கிறேன் வடமிழந்த தேரது ஒன்றை நாள் தோறும் இழுக்கிறேன்
வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்.. வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்
ஆனால் கூர்ந்து கவனித்தால் நாயகன் தன் நிலையை நன்கு உணர்ந்திருக்கிறான் என்றே தோன்றுகிறது. சரணங்களின் முடிவில் வரிகளை கவனியுங்கள் .
உறவுறாத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன் விருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன் ஒரு தலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது
வாழ்வின் அர்த்தமின்மை, உலகை வெறுக்கும் நிலை, வாழ விருப்பமின்மை என்று கதை சொல்லும் பாடல்.
இது என்ன வகைப்பாடல்? இது போல் அது என்று சொல்லும் உவமை மாதிரி தோன்றவில்லை .இது Compound Similie என்று எங்கோ படித்த நினைவு ஆனால் இப்போது கூகிளினால் அது பொருந்தவில்லை. Incongruity , முரண்கள், Inverted Parallels , நெகடிவ் metaphor, என்று கலந்து கட்டி – ஆனால் கேட்டவுடன் ரசிக்கக்கூடிய வரிகள்.
இது போல் வேறு பாடல் உண்டா? கொஞ்சம் யோசித்தால் ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு' பாடல் இந்த வகையோ என்று தோன்றுகிறது. அதில் களமும் காட்சியும் வேறு. நாயகியை சிரிக்கவைக்க மனதில் தோன்றியதை வாயில் வந்ததை குஷியாக பாடும் பாடல்
இது என்ன வகை ? தெரிந்தால் சொல்லுங்கள்.

இந்த மூன்று புத்தகங்களும் தலா ஒவ்வொன்றும் 160 பக்கங்கள் கொண்டவை. முன்னேர் பதிப்பகத்தினர் (நூலில் முகவரி இல்லை) நல்ல தாளில் அழகான அச்சமைப்பில் வெளியிட்டிருக்கிறார்கள். நூலை எங்கு பெறலாம், இணையத்தில் கிடைக்குமா போன்ற விவரங்களை விசாரித்து, அடுத்ததாக நான் பதிவிட இருக்கும் ‘மொறு மொறு மிக்ஸர்’ ஊடாக சொல்லி விடுகிறேன். ரைட்டா...?

Tuesday, January 21, 2014

கவிதை எழுதுவது எப்படி?

Posted by பால கணேஷ் Tuesday, January 21, 2014
ன் இனிய வலை மக்களே... உங்கள் பாசத்திற்குரிய பாலகணேஷின் வணக்கம். முன்பொரு முறை ‘சரித்திரக்கதை எழுதுவது எப்படி?'ன்னு விளக்கமா எழுதி உங்களுக்கு உதவினேன். ஆனால் அதைப் பின்பற்றி யாரும் சரிததிரக் கதை எழுவதாகத் தெரியவில்லை. ஆகவே கவிதை எழுதுவதன் வழிமுறைகளை விளக்கி பல கவிஞர்களை உண்டுபண்ணும் அடங்காத இலக்கிய தாகத்துடன்(!) இப்போது உங்கள் முன் வந்திருக்கிறேன்.

வளமான தமிழில் வாசகர் வியக்கும் வண்ணம் கவிதைகள் எழுத வேண்டும் என்ற ஆவல் நிறைய இருந்தும் எப்படி என்பது புரியாமல் இருக்கிறீர்களா நீங்கள்? எனில், நீங்களும் என் நண்பரே! வாருஙகள் இப்படி அருகில்... உங்களுக்காகத்தான் இந்தப் பகிர்வு! முத்துத் தமிழில் அழகுக் கவிதைகள் படைக்கும் விதத்தை இப்போது யான் விண்டுரைக்கப் போகிறேன் உங்களிடம்! கவிதைகளில் மரபுக் கவிதை, புதுக் கவிதை, ஹைக்கூ ஆகிய பல வடிவங்கள் உண்டு. இவை ஒவ்வொன்றையும் நீங்கள் அறிய வேண்டியது அவசியம். (உண்மையில் எதையும் அறியாமலேதான் கவிதை(?) எழுதப் போகிறீர்கள் என்பது நமக்குள் இருக்கட்டும்...)

மரபுக் கவிதை படைப்பதற்கு தமிழ் இலக்கணம் பயின்றிருக்க வேண்டும். அசை, தொடை, தளை என்று பல கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து, தமிழின் அழகு குலையா வண்ணம் கவிதைகள் படைத்தல் அவசியம். ‘இலக்கணமாவது, ஒண்ணாவது... நான் என்னத்தக் கண்டேன், இனிமே போய்ப் படிச்சுட்டு வர்றதெல்லாம் ஆகாது’ என்று நீங்கள் உரைப்பது என் செவியில் விழுகிறது. அஞ்சற்க... இலக்கணம் அறியாமலேயே மரபுக் கவிதை(!) எழுத சுலப வழியொன்று உள்ளது. நீங்கள் தமிழ்ப் படங்கள் நிறையப் பார்த்திருப்பீர்கள்தானே... படம் பார்க்கும் பழக்கம் இல்லாத என் தங்கையைப் போன்றவர்கள் நிறைய சினிமாப் பாடல்களை நிச்சயம் கேட்டிருப்பீர்கள்தானே...

‘எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம்
உன்னிடத்தில் சொன்னதெல்லாம் கொஞ்சம்
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
உன் மனம்தான் நான் துயிலும் மஞ்சம்'


இப்படில்லாம் எழுதியிருப்பாங்க. இப்படி கடைசிப் பகுதியில ராணி, கோணி, தேனீ, வாநீ அப்படின்னு ஒரே உச்சரிப்புல வார்த்தைகளைப் போட்டு நாலஞ்சு பாரா எழுதி அதுக்கு பொருத்தமா ஒரு தலைப்பு வெச்சுட்டீங்கன்னா.... மரபுக் கவிதை ரெடி. இன்னொரு டைப்பாகவும் இதை நீங்க எழுதலாம்.

செந்நெல் ஆடிய வயல்களினூடே
   என் பார்வை பட்டநேரம்...
மின்னல்போல கண்ணில் தோன்றி
   மினுக்கி நடந்திட்டாள் அப்பாவை
கன்னல் மொழியதனைப் பேசி
   என் மனதைத் திருடிவிட்டாள்!


இதுல கவனிச்சீங்கன்னா முதல் வரியில வர்ற அதே வார்த்தை ஸ்டைலை மூணாவது வரியில கொண்டு வரணும். ரெண்டாவது வரியை முதல் வரியோட கோவிச்சுக்கிட்டுப் போற மாதிரி கொஞ்சம் நகர்த்திப் போடணும். ரைட்டா.... இப்படி கவிதை(?) இயற்றி, அதை பப்ளிஷ் பண்ணிட்டீங்கன்னா நீங்களும் இப்போ மரபுக் கவிஞரே...! (எதுக்கும் பப்ளிஷ் பண்ணினப்புறம் ஒரு ஹெல்மெட்டை தலையில மாட்டிக்கிட்டு உக்காந்திருக்கறது பெட்டர். இல்லாட்டி புலவர் ராமானுசம் ஐயா மாதிரி ஆசாமிங்க படிச்சுட்டு குட்டறப்ப தாங்கறது கஷ்டம்! ஹி... ஹி...!)


கஷ்டமான மரபுக் கவிதைய ஒரு வழி பண்ணிட்ட உங்களுக்கு புதுக்கவிதைங்கறது ரொம்ப ஈஸியான விஷயம்தாங்க... இதுக்கு எந்த கண்ட்ரோலும் கிடையாது. மனசுல தோணறதையெல்லாம் வரி வரியா மடக்கி எழுதிட்டீங்கன்னா ஈஸியா அதை கவிதைன்னு பேர் சூட்டி வெளியிட்டிரலாம். யாரும் எதும் கேக்காம ‘சூப்பர்' ‘அருமை'ன்னு கை தட்டுவாங்க. ஒரு பாராவுல ஒரு வசனத்தை எழுதிக்கஙக முதல்ல. ‘ஐயோ கடவுளே, நீ இருந்தா இப்படி தொடர்ந்து கஷ்டத்தைக் குடுப்பியா? திருட்டுப் பய, மொள்ளமாரிப் பயல்லாம் நல்லா இருக்கான். நேர்மையா இருக்கற எனக்கேன் இப்படி கஷ்டம்?' அப்படின்னு சீரியல்ல நீங்க கேட்ட வசனமாவும் இருக்கலாம். இதையே...

கடவுள் ஒருவர் இருந்தால்
கஷ்டம் இத்தனை தருவானா
திருடன், அயோக்கியனெல்லாம்
மகிழ்வாய்த்தான் திரிவானா?
நலலவனாய் இருப்பவனோ நாளும்
துன்பந்தான் படுகின்றான்!


அப்படின்னு மடக்கி எழுதிட்டீங்க்ன்னா... புதுக்கவிதை ரெடி! இப்படிச் சில பல கவிதைகளை இயற்றிப் பாராட்டு (அ) கல்லடி வாங்கிட்டீங்கன்னா நீங்களும் கவிஞரே! கவிதை மூலமா யாரையாவது வம்புக்கிழுத்து சர்ச்சையில ஈடுபட்டா இன்னும் சிறப்பு. சீக்கிரமா பிரபலமடைஞ்சுடலாம். அத விடுங்க... ரெண்டு டைப்பான கவிதை வகைகளைப் பார்த்துட்ட நீங்க, ஹைக்கூங்கற வடிவத்தை மட்டும் ஏங்க விட்டு வெக்கணும்? அதையும் தெரிஞ்சுக்கங்க. ‘ஹைக்கூ என்பது படித்ததும் உங்கள் மனதில் ஒரு காட்சியை நிறுத்த வேண்டும் அல்லது ஏதாவது ஒரு உணர்வை தோற்றுவிக்க வேண்டும்' அப்படின்னு சொன்னாரு எழுத்தாளர் சுஜாதா.

அவர் கெடக்கார் அப்பாவி மனுஷன்! நமக்கு வேண்டியதெல்லாம் என்ன... ஹைக்கூங்கறது மூணு வரியில வரணும். அவ்வளவு தாங்க வேண்டியது. முன்னல்லாம் ‘ஜுனூன் தமிழ்'ன்னு ஒரு பேட்டர்னை சொல்வாங்க கேட்டிருக்கீங்களா? வரணும் நீ இப்ப.... சொல்ற என்ன நீ? அப்படின்னுல்லாம் வினோதமா சிரசாசனம் செய்யற வாக்கியங்களா வரும். கிட்டத்தட்ட அதே பேட்டர்னை அப்ளை பண்ணினீங்கன்னா ஹைக்கூ ரெடிங்க. உதாரணமா... ‘தண்ணீரில் காதலியின் முகத்தைப் பார்த்தேன். நிலவு போல் தெரிந்தது' அப்படின்னு புதுக்கவிதை எழுதி வெச்சிருக்கீங்கன்னு வெச்சுக்கங்க... அதை அப்படியே ரிவர்ஸ்ல மூணு வரியில எழுதிப் பாருங்க...

நிலவு தெரிந்தது
தண்ணீரில் என்
காதலி முகம்!


...இவ்ளவ் தாங்க ஹைக்கூ! இதை மாதிரி நாலஞ்சு எழுதி நீங்க பிரசுரிச்சுட்டாப் போதும். ஹைக்கூவும் உங்களுக்கு கை வந்திடுச்சு(கைக்கூ?)ன்னு அர்த்தம். இதுல்லாம் ஹைக்கூவே இல்ல பொய்க்கூன்னு யாராச்சும் நாலு பேரு கூவத்தான் செய்வாங்க. விட்டுத் தள்ளுங்க... அப்படிக் கூவக்கூவ உங்க பாப்புலாரிட்டி கூடுதுன்னுதானுங்க அர்த்தம்! அதனால... வெரைட்டி வாரியா கவிதைங்களை எழுதி, கவிஞர் அவதாரமெடுத்து கவிதையுலகைக் கலக்குங்க... அப்புறம்... மறந்துராம அதையெல்லாம் தொகுத்து அடுத்த புத்தகக் கண்காட்சி வர்றதுக்குள்ள புத்தகமா வெளியிட்டுருங்க. பிறகென்ன... நீங்க பு.க.வுக்கு வர்றீங்கன்ற தகவல் கெடைச்சதுமே கெடைக்கற மரியாதையே தனி தான். ஹி... ஹி... ஹி...!

‘ஊசி' குறிப்பு 1 : நல்ல கவிதை எழுதும் என் நண்பர்கள் அனைவரும் இதை ஒரு பகடியாக மட்டுமே எடுத்துக் கொணடு (முடிந்தால்) நகைக்க வேண்டுகிறேன்.

‘ஊசி' குறிப்பு 2 : இவ்வளவு விளக்கமா வழிமுறைல்லாம் சொல்ற... நீ ஏன்யா கவிதை எழுதலைன்னு யாராச்சும கேட்டீங்களோ.... பிச்சுப்புடுவேன் பிச்சு! பேக்கரில இருக்கறவன் ஸ்வீட் தின்ன மாட்டான், சமையல்காரன் தானே சமைச்சதை சாப்பி
மாட்டான். அது மாதிரிதான்... நானும்... ஹெஹ்ஹெஹ்ஹே..!

Friday, January 17, 2014

என்றென்றும் எம்.ஜி.ஆர்!

Posted by பால கணேஷ் Friday, January 17, 2014
வாத்யார் சொன்னவை : (தொகுத்தது: ‘நான் ஆணையிட்டால் - விகடன் பிரசுர வெளியீடு’ மற்றும் ‘எம்.ஜி.ஆர். பேட்டிகள் - மனோன்மணி பதிப்பக வெளியீடு’ இரண்டிற்கும் ஆசிரியர்: எஸ.கிருபாகரன்)

* பக்தி உள்ளவர்கள் சாமி கும்பிட வேண்டும் அல்லது வேண்டாம் என்று நான் சொல்லத் தயாராக இல்லை. ஆனால் கடவுளின் பெயரால் ஏமாற்ற நினைக்காதீர், மோசடிகள் செய்ய முயலாதீர் என்பதே என் வேண்டுகோள். ஒன்றே குலம், ஒருவனே தேவன் - இதுதான் என் கொள்கை. (மதிஒளி 15.12.1962 - மருதமலை முருகன் கோயிலில பேசியது)

* நடிக்கக் கூடியவர்கள், எழுத்துத் திறமை படைத்தவர்கள் ஆயிரக்கணக்கில் நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வவய்ப்பு இல்லை. காரணம் அவர்களுக்கு விளம்பம் இல்லை. விளம்பரம் வேண்டும் என்றால் அவர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும். அவர்கள் திறமையைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் திறமையைப் பயன்படுத்த வேண்டும் என்றால் அவர்களுக்கு விளம்பரம் இருக்க வேண்டும் என்ற நிலை. திருமணம் ஆனால்தான் பைத்தியம் தீரும், பைத்தியம் தீர்ந்தால்தான் திருமணம் ஆகும் என்ற இந்த நிலைதான் நாட்டில் இருக்கிறது. (தென்றல் திரை, 05.11.57) 


* ‘நீங்கள் விரும்புகிறபடியெல்லாம் படத்தின் கதைகளை மாற்றினால் பணம் போட்டுப் படம் எடுப்பவர்களின் கதி என்ன ஆவது?’ என்ற கேள்விக்கு, ‘‘ஒன்றும் ஆகிவிடாது. என்னுடைய ஆலோசனையைக் கேட்டு எடுத்த படங்கள் நன்றாக வெற்றி பெற்றுள்ளன. ‘மதுரை வீரன்’ படத்திள்ள பல காட்சிகளுககும், கர்ண பரம்பரைக் கதைக்கும் சம்பந்தமில்லை. பழைய கதையில் வெள்ளையம்மாள் என்ற பாத்திரம் படுமோசமாக சிருஷ்டிக்கப்பட்டிருந்தது. அதன் தயாரிப்பாளர் என் ஆலோசனைக்கு செவி சாய்த்தார். படம் வெற்றி பெற்றது. ‘மலைக்கள்ள’னிலும் இவ்வாற என் யோசனைக்கு மதிப்பு தந்தார்கள். ‘அலிபாபா’விலும் என்னுடைய யோசனைகள் உபயோகமாக இருந்தன. இதிலிருந்து என் அரசியல் கொள்கைகளை நான் நடிக்கும் படங்களில் திணிப்பதாக முடிவுகட்டி விடாதீர்கள். நான் முதலில் கலைஞன், பிறகுதான் மற்றவை என்ற ரீதியிலேயே இவற்றைக் கூறகிறேன். என் அனுபவத்தை அவர்கள் உபயோகித்துக் கொள்ள அனுமதிக்கிறேன். அவ்வளவுதானே! (தென்னிந்திய சினிமா பத்திரிகையாளர் சந்திப்பில் அளித்த பேட்டியிலிருந்து)

* உள்ளம் எந்த அளவுக்கு உறுதியாக இருக்க வேண்டுமோ, அந்த அளவுக்கு உடலும் உறுதியாக இருந்தால்தான் நாம் காரியங்களை நல்ல முறையில் கவனிக்க முடியும். ஆகவே நடிப்புக்காக வருகிற அன்பர்கள் உடற்பயிற்சியையும் முக்கியமாகக் கொள்ள வேண்டும். (தென்றல் திரை, 05.11.57)

* ‘உங்கள் வயதுக்கு மிகவும் குறைந்த வயது கொண்ட இளைஞனாக நீங்கள் நடிப்பது பொருத்தமாகுமா?’ என்ற கேள்விக்கு, ‘‘திரையில் நீங்கள் என்னைப் பார்க்கும்போது இளைஞனாக நான் தோன்றுகிறேனா இல்லையா என்பதுதான் என் கேள்வி. இருபது வயது இளைஞன் ஐம்பது வயதுக்காரராக நடித்தால் பாராட்டுகிறீர்கள் அல்லவா? நான் இருபது வயது வாலிபனாக நடித்தால் ஏன் பாராட்டக் கூடாது? அதற்குப் பெயர்தானே நடிப்பு?’’ (‘இதயவீணை’ படப்பிடிப்பில் எடுத்த பேட்டியிலிருந்து)

* ‘‘என் மறைவிற்குப் பிறகு என்னைப் பற்றிப் புரிந்து கொள்வார்கள் என்று பேசி இருக்கிறீர்களே, இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கூறி மனதைப் பதற வைக்க வேண்டுமா?’’ என்ற கேள்விக்கு, ‘‘தோற்றம் இருந்தால் மறைவு இருக்கும். வளர்ச்சி இருந்தால் தளர்ச்சி இருக்கும். இளமையிருந்தால் முதுமையிருக்கும். பிறப்பிருந்தால் இறப்பிருந்தே தீரும். எனவே இளைஞர்கள் ஒருவனுடைய கொள்கையிலும், அதைச் செயல்படுத்தும் முறைகளிலும் உண்மையான பற்று வைத்திருந்தார்களேயானால் அவைகளைத் தாங்களும் செயல்படுத்திக் காப்பாற்றுவதற்கு, மேலும் வளர்ப்பதற்குத் தயாராகிக் கொள்ள வண்டும் என்பதற்காக நீங்கள் சொன்ன வார்த்தைகளை வெளியிட்டேன். ஒரு மனிதன் மறைந்தாலும் கொள்கை வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கொள்கையைத் தந்த பெயரும் புகழும் காப்பாற்றப்படும். எனக்குப்பின் உங்களைப் போன்றவர்களின் நம்பிக்கையைப் பெற்றவர்கள் வேறு யாரும் இல்லை என்கிற நிலையில் கழகத்தை விட்டு வைப்பேனேயானால் அது அமரர் பேரறிஞர் அண்ணாவிற்குச் செய்கின்ற மிகப் பெரிய துரோகம் என்று நான் கருதுகிறேன்.


ன்னால் மறக்க முடியாதவர் எம்.ஜி.ஆர். செட்டுக்குள்ளே அவர் வர்றாருன்னாலே அவ்வளவு அமர்க்களப்படும். ஆனா அவர் ரொம்ப சாது. அவரைச் சுத்தி இருக்கறவங்க ஷூட்டிங் சமயத்துல ஆடோ ஆடுன்னு ஆடுவாங்க. என் மேல் எப்பவுமே எம்.ஜி.ஆருக்கு நல்ல மரியாதை உண்டு. நான் அவரை ‘மிஸ்டர் ராமச்சந்திரன்’ அப்படின்னுதான் கூப்பிடுவேன். என் குரலைக் கேட்டதும் இயல்பா புன்னகை உதிர்ப்பார். எந்தப் படம்னு எனக்குச் சரியா ஞாபகம் இல்ல. எம்.ஜி.ஆர். ஹீரோ. நான் ஹீரோயின். வழக்கம் போல நம்பியார்தான் வில்லன். அன்னிக்கு ஷூட் பண்ண வேண்டிய சீன் இதுதான்: என்னை நம்பியார் கிட்ட இருந்து காப்பாத்தறதுக்காக எம்.ஜி.ஆர். அவரோட கத்திச் சண்டை போடணும். நான் பயந்த மாதிரி உடம்பு நடுங்கணும். அன்னிக்குன்னு பார்த்து எம்.ஜி.ஆரும் நம்பியாரும் ரீடேக் வாங்கிட்டே இருக்காங்க. காட்சிக்காக நடுங்குற மாதிரி நடிச்சு நடிச்சு எனக்கு ரொம்ப வெறுப்பாயிடுச்சு. எத்தனை முறை வசனம் எதுவமே இல்லாம நடுங்குற மாதிரி நடிச்சுக்கிட்டே இருக்க முடியும்? நேரா எம்.ஜி.ஆர். கிட்டப் போனேன். ‘‘மிஸ்டர் ராமச்சந்திரன்! காலையில இருந்து கத்திச் சண்டை போட்டுக்கிட்டே இருக்கீங்க. ஆனா என்னைக் காப்பாத்த மாட்டேங்கறீங்க. பேசாம அந்தக் கத்தியை என்கிட்டக் குடுங்க. நானே என்னைக் காப்பாத்திக்கறேன். நானா, நம்பியாரான்னு ஒரு கை பாத்திடுறேன்’’ என்று போலியான எரிச்சலோடு நான் சொன்னதுதான் தாமதம்... வெள்ளிக்காசு கொட்டின மாதிரி எம்.ஜி.ஆரும், நம்பியாரும் சேர்ந்து சிரிச்சாங்க. நம்பியார் வாய்விட்டுச் சிரிச்சதை நான் அன்னிக்குத்தான் பார்த்தேன்.
-பானுமதி ராமகிருஷ்ணா
ஆ.வி.தீபாவளி மலர் 2003-ல் இருந்து...


  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube