Monday, August 26, 2013

பதிவர் திருவிழாவில் சேட்டை!

Posted by பால கணேஷ் Monday, August 26, 2013
பதிவர் திருவிழாவுக்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாய் நடந்தேறி  வருகின்றன. உணவுப்பட்டியல் இறுதி செய்யப்பட்டு, மேடை அலங்காரம், பதிவர்களுக்கான பாட்ஜ் அச்சிடுதல் என பணிகள் முடுக்கி விடப்பட்டு, வரும் ஞாயிற்றுக் கிழமை சந்திப்பிற்கான படபடப்பு  பட்டாம்பூச்சிகள் அடிவயிற்றில் பறக்கத் தொடங்கிவிட்டன.

சென்ற ஆண்டு பதிவர் திருவிழா நடந்த பொழுது ‘தென்றல்’ சசிகலா எழுதிய ‘தென்றலின் கனவு’ என்ற நூல் வெளியிடப்பட்டது. அதை நான் வடிவமைத்திருந்தேன் என்றபோதிலும் அவசரமாக, குறுகிய காலத்திற்குள் செயல்பட்டு அச்சாக்கி கொண்டுவரவேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக எங்கள் மனதிற்கு முழுமையான  திருப்திதரும் வண்ணம் அமையவில்லை. சரி, அடுத்த தொகுப்பினை சசி வெளியிடும்‌போது அதை ஈடுகட்டிக் கொள்ளலாம் என்று எங்களை நாங்களே ஆறுதல்படுத்திக் கொண்டோம்.

இந்த ஆண்டு வெளியிடப்படவிருக்கும் புத்தகங்கள் நான்கு. அதில் இரண்டு என் கைவண்ணத்தில் வெளிவருகிறது என்பது மகிழ்வான விஷயம் (எனக்கு!). சதீஸ் சங்கவியின் ‘இதழில் எழுதிய கவிதைகள்’ புத்தகத்தை நான் வடிவமைத்திருக்கிறேன். சிற்சில படங்களை மாற்றச் சொன்னதைத் தவிர மற்றபடி முழுமையாக உற்சாகப்படுத்தி நான் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தார் சதீஸ் சங்கவி. அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி! அப்புறம்... அண்ணன் சேட்டைக்காரனின் புத்தகத்தை நான் வடிவமைத்து அச்சிட்டு அது பதிவர் திருவிழாவில் வெளியிடப்பட உள்ளது. அதற்கான அழைப்பிதழ் இங்கே தந்திருக்கிறேன். அவைரும் தவறாது கலந்து கொண்டு உற்சாகப்படுத்தும்படி வேண்டுகிறேன்.


Saturday, August 24, 2013

பதிவர் திருவிழாவில் புத்தக வேட்டை!

Posted by பால கணேஷ் Saturday, August 24, 2013


  • நட்புகளுக்கு ஒரு மகிழ்வான செய்தி..! பதிவர் திருவிழாவில்
  • உங்கள் மனம்கவரும் புத்தகங்களை வாங்கிப் படித்து மகிழ...
  • டிஸ்கவரி புக் பேலஸ் புத்தக அரங்கு
  • அமையவுள்ளது. அனைத்து முன்னணிப் பதிப்பகங்களின்
  • புத்தகங்களையும் அங்கு வாங்கிப் படித்து மகிழலாம்!
  • வாங்கப்படும் புத்தகங்களுக்கு 10% சிறப்புத் தள்ளுபடி உண்டு!
  • விரும்பும் புத்தகங்களை நீங்கள் அவர்களிடம் தெரிவித்தால்
  • அதையும் உங்களுக்காய் அங்கு வரவழைப்பார்கள்!
  • கீழே தந்துள்ள முகவரியில் தொடர்பு கொள்க.

Thursday, August 22, 2013

பதிவர் திருவிழாவில் ஆவியின் பாடல்!

Posted by பால கணேஷ் Thursday, August 22, 2013

கோவை னந்தராஜா விஜயராகவன் - இவ்வளவு நீளமான பேரைச் சொல்லிக் கூப்பிடறதுக்குள்ள எல்லாத்துக்கும் கொட்டாவி வந்துருமேன்ற நல்லெண்ணத்துல கோவை ஆவின்னு பேரைச் சுருக்கி வெச்சுக்கிட்டு பயணம்-ங்கற தளத்துல எழுதிக்கிட்டிருக்காரு இவரு. பேருக்கேத்தபடி தான் செய்த பயணங்களை சுவையா எழுதுவாரு; புதுசா ரிலீஸாகற படங்களுக்கு சுடச்சுட விமர்சனம் எழுதுவாரு; ‘நாங்களும் இஞ்சினீயர்தான்’ன்னு தன்னோட ப்ளாஷ்பேக்கையும் எழுதுவாரு. இப்படில்லாம் வலது கையாலயும், இடது கையாலயும் பதிவுகள் எழுதிட்டு வர்ற இவரு, இப்ப ரெண்டு கைலயும் ப்ராக்சராகி கட்டுப் போட்டிருக்கற நிலையிலயும், நம்ம பதிவர் சந்திப்புக்காக பதிவர்கள் எல்லாரும் சேர்ந்து பாடற மாதிரி ஒரு கோரஸ் பாடலை ரெண்டு கையாலயும் எழுதியும் பாடியும் அனுப்பியிருக்காரு. அவரோட ஆர்வத்துக்கு நாம எல்லாரும் சேர்ந்து பலமா ஒரு ‘ஓ’ போடலாம்... இந்தப் பாட்டு உங்களுக்குப் பிடிச்சிருக்கா, நாம பாடலாமான்ற விவரத்தையும் கொஞ்சம் சொல்லிப் போடுங்க நியாயமாரேஏஏஏஏஏ! 
 

Chorus: லால்லா லால்லா லாலலலா- லல
லால்லா லால்லா லாலலலா
ஆவி, தி பாஸ்!

தமிழா, தமிழா இணைவோமே- தோழா
தமிழால் தமிழால் இணைந்தோமே.
இணையத்தின் மூலம் இணைந்தோமே- இன்று
இசையில் கொஞ்சம் நனைவோமே.
ஆங்கிலம் கலவா தமிழாலே - பல
கவிகள், கதைகள் படைப்போமே.

Chorus: எட்டுத் திக்கும் நம்ம தமிழ் பரவிடவே,
பாட்டேடுப்போம், பாட்டேடுப்போம், பாடிடுவோம்..

சொந்தமில்லை பந்தமில்லை சேர்ந்திருப்போம் - இங்கு
சாதியில்லை சண்டையில்லை சேர்ந்திருப்போம்..
அன்றாட நிகழ்வை எழுதிடுவோம் - சொந்த
சரக்கை அப்பப்போ கடை விரிப்போம்.
மொழி, இனம், மதமிங்கு தேவையில்லை- எல்லோரும்
இந்நாட்டில் மன்னர்களே!

Chorus: பின்னூட்டம் மட்டும் தான் எங்களுக்கு ஊக்கம் தருமே,,!
லாலாலா லல்லாலா லல்லா லாலல்லலலா )

தமிழா, தமிழா இணைவோமே- தோழா
தமிழால் தமிழால் இணைந்தோமே.
இணையத்தின் மூலம் இணைந்தோமே- இன்று
இசையில் கொஞ்சம் நனைவோமே.

தினந்தோறும் அலுவல்கள் ஏராளம்.. நாங்கள்
அதினிடையே பதிவெழுத மறப்பதில்லை.
குற்றம்குறை எழுத்துப் பிழை தாராளம்- அதை
ஏற்றுக்கொள்ள திருத்திக்கொள்ள மறுப்பதில்லை

இணையில்லா இணையத்தின் சாலையிலே- நம்
கற்பனைக்கு என்றுமந்த வானமே எல்லை..

Chorus: பாராட்டு ஒன்றே தான் நாங்கள் கேட்கும் வரமே..!

தமிழா, தமிழா இணைவோமே- தோழா
தமிழால் தமிழால் இணைந்தோமே.
இணையத்தின் மூலம் இணைந்தோமே- இன்று
இசையில் கொஞ்சம் நனைவோமே.
ஆங்கிலம் கலவா தமிழாலே - பல
கவிகள், கதைகள் படைப்போமே.

Chorus: எட்டுத் திக்கும் நம்ம தமிழ் பரவிடவே,
பாட்டேடுப்போம், பாட்டேடுப்போம், பாடிடுவோம்..

தமிழா, தமிழா இணைவோமே- தோழா
தமிழால் தமிழால் இணைந்தோமே.
இணையத்தின் மூலம் இணைந்தோமே- இன்று
இசையில் கொஞ்சம் நனைவோமே.

Chorus: லால்லா லால்லா லாலலலா- லல
லால்லா லால்லா லாலலலா

ஆவியின் அமுதகானத்தைக் கேட்க.....


Wednesday, August 21, 2013

வடம் பிடிக்க வாருங்கள்...!

Posted by பால கணேஷ் Wednesday, August 21, 2013
திவர் திருவிழாவுல அழைப்பிதழ்ல ஒரு கூடுதல் சேர்க்கை. கோவையைச் சேர்ந்த புதிய பெண் பதிவரான யாமிதாஷா தன்னோட புத்தகத்தை வெளியிடறாங்க. அவங்களுக்கு மகிழ்வான நல்வாழ்த்துகள்! அழைப்பிதழ்ல இது சேர்க்கப்பட்டிருக்கு. இங்க க்ளிக்கி அப்டேட்டைப் பாத்துக்கங்க.

து ஓர் ஆலயத்தின் பெருந் தேர்! பிரம்மாண்டமான வடிவத்தில் தூரத்திலிருந்து பார்க்கையிலேயே பிரமிப்பைத் தருகிறது. அந்தத் தேரை ஊரே கூடி இழுக்கிறது. இழுக்கிற கூட்டத்தில் நல்ல உடல் வலிமை பெற்ற இளைஞர்களும், வலிமை குன்றிய நோஞ்சான்களும், ஏன்... முதியவர்களும்கூட உண்டு. அதில் இன்னாரில் பலத்தால்தான் தேர் நகர்ந்தது என்று அறுதியிட்டு பிரித்துக் கூறிவிட முடியுமா என்ன...? அனைவரும் தங்களால் இயன்ற சக்தியை வழங்கியதன் பலன்... அந்தப் பிரம்மாண்டத் தேர் நகர்ந்து ஊரிலுள்ளோர் அனைவருக்கும் இறை தரிசனமும் மகிழ்வும் தருகிறது. அதேபோலத்தான்... நமது வலைப்பதிவர் திருவிழாவும்!

சென்ற ஆகஸ்டில் நிகழ்ந்த தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா அனைவர் நினைவிலும் உறைந்திருக்கும். அஃது மிகவும் சிறப்பாக நடந்தேறியது என்று அனைவரும் பாராட்டியதிலும், எவரும் குறை சொல்லாததிலும் மிக்க மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி தந்த உற்சாகத்துடன் வரும் செப்டம்பர் 1ல் இரண்டாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா நடைபெற இருக்கிறது. ஒரு தினம் முழுவதும் நம்மை மகிழ்விலாழ்த்தும் இந்த விழாவிற்காக பல மனிதத் தேனீக்கள் பறந்து செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த பதிவர் சந்திப்பு மிகவும் சிறப்பாக அமைவதற்கு ஏதுவாக விருப்பப்படும் பதிவர்களிடமிருந்து நன்கொடை வசூலிக்கலாம் என ஒரு முடிவு நிர்வாகக் குழுவினால் எடுக்கப்பட்டது. அதன் முறையான வங்கிக் கணக்காக பதிவர் அரசன் அவர்களின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி வருகிறோம். நன்கொடை கொடுக்க விரும்பும் பதிவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்கணக்கில் பணத்தைச் செலுத்தலாம்.

First Name            : Raja
Last Name            : Sekar
Display Name       : RAJA. S
Account Number   : 30694397853
Branch Code          : 006850
CIF No.                  : 85462623959
IFS Code                : SBIN0006850
MICR Code           : 600002047
Branch                    : SBI Saligramam Branch
Address                  : 49, Arcot Road, Saligramam , Chennai, City Pin - 600093


Contact : 044- 24849775 / தொடர்புக்கு : அரசன்(ராஜா) அலைபேசி எண் - 9952967645

பணத்தை செலுத்திவிட்டு அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பணம் செலுத்திய விபரத்தையும் உங்கள் சுய விபரத்தையும்(வலை முகவரி,மின்னஞ்சல் முகவரி) தெரியப்படுத்துங்கள். பணம் வந்து சேர்ந்ததும்  tamilbloggersinfo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து பெற்றுக்கொண்டோம்.. நன்றி.. என்ற தகவல் வந்து சேரும்.

விருப்பப்படுபவர்கள் விருப்பப்பட்ட தொகையை மனமுவந்து அளித்தால் அதுவே மகிழ்வுதரும் விஷயம். இதில் நோஞ்சான் யார், பலசாலி யார் என்பது கணக்கிடப்படுவதில்லை... அன்புடன் தரும் பங்களிப்பே பிரதானம்! பதிவர் திருவிழாத் தேரை சிறப்பாக இழுத்து அனைவருக்கும் மகிழ்ச்சிதர உங்களின் பங்களிப்பைச் செலுத்த விரும்பினால் உடன் செய்து மகிழுங்கள்/மகிழ வையுங்கள். மிக்க நன்றி.


சீனு - எனக்கு நண்பன், சீடன், விமர்சகன் என்று எல்லா நிலையிலும் நெருக்கமானவன். இவனு(ரு)க்கு நகைச்சுவை நன்றாக எழுதவரும் என்கிற என் கணிப்பை பலமுறை வலியுறுத்தியதுண்டு. ஒருசமயம் நகைச்சுவை எழுத்து பற்றி நேரில் விளக்கம் தந்ததும் உண்டு. சீனு எழுதிய இந்தப் பதிவில் மிகச் சிறப்பாக நகைச்சுவை அமைந்திருந்தது. 

இப்போது நீ்ங்கள் படித்து ரசித்த ‌‘மோகினிப்பேயும் சரிதாவும்’ கதையை எழுதியனுப்பி என் தளத்தில் போடச் சொன்னான். தான் எழுதின படைப்பை இன்னொருத்தரை வெளியிடச் சொல்ல எவ்வளவு திடங்கொண்ட மனசு வேணும்...?  அதைச் சற்றே எடிட் செய்து, என் பங்களிப்பாய் சில வரிகள் சேர்த்து பப்ளிஷ் பண்ணியதில்... நான் எழுதியது என்றே நிறைய கமெண்ட்டுகள்! தான் ஒரு கு.மி.சி.ங்கறத நிரூபிச்சுட்டான் அம்ம பய. மகிழ்ச்சியாய் இருக்கிறது! அசத்துடா பையா! என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களும் ஆசியும்!  சீனுதான் என்று சரியாகக் கணித்தவர்கள் அவர்கள் உண்மைகள், ரமணி ஸார், ஸ்ரவாணி ஆகிய மூவரும்! இவர்களுக்கு என்னிடமிருந்து புத்தகப் பரிசு உண்டு. யப்பா மதுரைத் தமிழா... உடனே ஒரு ப்ளைட் பிடிச்சு சென்னை வாங்க! உங்கள நேர்ல பாத்துத்தான் பரிசக் குடுப்பேனாக்கும்! 

Tuesday, August 20, 2013

‘நம்ம’ திருவிழா அழைப்பிதழ்!

Posted by பால கணேஷ் Tuesday, August 20, 2013
பேரன்(பேத்தி?)புடையீர்...

நிகழும் ஸ்ரீவிஜய ஆண்டு ஆவணி 16ஆம் நாள் சர்வ ஏகாதசி தினத்தன்று காலை 9 மணிக்கு....

என்ன... ஏதோ கல்யாணமோ, காது குத்தோ நடக்கறதுக்கான அழைப்புன்னு தோணிருச்சா? இல்லீங்க... செப்டம்பர் 1ம் தேதி நம்ம பதிவர் திருவிழாவின் துவக்க நேரத்தைத்தான் இப்படி தமிழ்ல சொல்லிப் பாத்தேன். அம்புட்டுதேங்! ஒவ்வொரு விஷயமா பாத்துப் பாத்து, பேசிப் பேசி ‌செதுக்கிட்டிருக்கற இந்த சந்திப்புக்கான அழைப்பிதழ் இங்கே தரப்பட்டுள்ளது. இன்னும் அப்டேட்கள் வரலாம். நீங்கள் ஒவ்வொருவரும் தவறாது பங்கு பெற்று ‘உங்கள்’ திருவிழாவை... இல்ல... ‘நம்ம’ திருவிழாவை சிறப்பித்துத் தரும்படி வேண்டுகிறேன்.



பின்குறிப்பு 1 : தினம் ஒன்றாக வரவிருக்கும் பதிவர் சந்திப்பு அப்டேட் பதிவுகளில் நாளைய பதிவில்  ‘மோகினிப் பிசாசும் சரிதாவும்’ கதை எழுதியவரை வெளிப்படுத்துகிறேன்.

பின்குறிப்பு 2 : பதிவுலகில் ஏராளமானோர் மிகமிக ஆவலோட எதிர்பார்த்துக்கிட்டிருந்த,  நம்ம சீனு நடத்தின ‘காதல்கடிதப் போட்டி’யின் முடிவுகள் வெளியாகியிருக்கு.  இங்க க்ளிக்கி அதைப் படித்துக் கருத்திடவும்.

Monday, August 19, 2013

மோகினிப் பிசாசும், சரிதாவும்!

Posted by பால கணேஷ் Monday, August 19, 2013
மீபகாலமாக பொழுதுபோகாத மோகினிப் பிசாசு ஒன்று வீடு வீடாக சென்று அங்கிருப்பவர்களை பயமுறுத்தி வருகிறது என்று சரவணா ஸ்டோர்சுக்கு மிக அருகில் இருக்கும் மாம்பலத்தில் ஒரு வதந்தி மிகத் தீவிரமாய் பரவியது. அதிலும் இந்த மோகினி சற்றே வித்தியாசமாக பெண்களை மட்டுமே விரட்டி விரட்டி அடிப்பதாக டெவலப் ஆகியிருந்தது அந்த வதந்தி. பொதுவாகவே எனக்கு பேய் பயமெல்லாம் கிடையாது, அதுவும் சரிதா வசிக்கக் கூடிய இடத்தில் எப்படி ஒரு பேயால் தைரியமாக வசிக்க முடியும்? ஹலோ... அவசரப்படாதீங்க... சரிதா மாதிரியான படித்த தைரியமான ஒருத்தி வசிக்கும் இடத்தில் பேய் பயம் இருக்காது என்றுதான் சொல்ல வந்தேன். ஹி... ஹி...!

மேற்படி வதந்தியைக் கேள்விப்பட்ட நாளில் இருந்தே சரிதா கொஞ்சம் பயந்திருந்தாள், இருப்பினும் பயத்தை வெளிகாட்டிக் கொள்ளாமல் வழக்கம் போல் அவள் என்னை அடிக்க, என்னை அவள் அடிக்க என்றளவில் எங்கள் சம்சார வாழ்க்கை ஹிம்சார வாழ்க்கையாக போய்க் கொண்டிருந்தது. அதிலும் ஒரு வினோதம் பாருங்கள்.. அந்த மோகினி ஒன்றாம் நம்பர் வீட்டில் ஆரம்பித்து வரிசை மாறாமல் வீடு வீடாக விஸிட் அடித்து வருகிறதாம், இப்படிபட்ட விபரீத வரிசையில் இன்று இரவு எங்கள் டர்ன். குறிப்பாக அது பெண்களை மட்டுமே டார்கெட் செய்வதால் நான் ஓவர் குஷியிலும், சரிதா வரலாறு காணாத பயத்திலும் இருந்தோம் என்பதை இங்கே எழுத விரும்புகிறேன்.

லேசான தூறலுடன் வானம் மெல்ல இருட்டத் தொடங்கியிருந்தது, வங்கக் கடலில் லேசான காற்றழுத்தத் தாழ்வுநிலை என்று ரமணன் சொல்லிவிட்ட காரணத்தால் காற்று பேயாட்டாம் ஆடிக்கொண்டிருந்தது, பேய்க்காற்றில் (அதிலும் பேயா?) ஜன்னல்கள் அனைத்தும் டமால் டுமீலிக் கொண்டிருந்தன, இதையெல்லாம் சேர்த்துப் பார்த்தல் ஒரு பேய் வருவதற்கான அத்தனை ஸ்பெஷல் எபெக்டும் இயற்கையாகவே அமைந்துவிட்டது போல் தோன்றியது.

"ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும், உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்",  என சஷ்டிகவசம் பாடிக் கொண்டிருந்த சரிதாவின் முகத்தில் முழுவதுமாக கிலி குடிகொண்டிருந்தது. பயத்தில் அவளது கரங்கள் ஐந்து கிலோ ஐஸ்கட்டியை வைத்தது போல நடுங்கிக் கொண்டிருந்தது. சரிதா பயப்படுவதை பார்க்கும் போதெல்லாம் இனம் புரியா ஒரு இன்பம் என்னுள் குடிகொள்வது எனக்கு வழக்கமாகி விட்டது. மின்னல் வரிகளில் சரிதாவின் பெருமை(!)களை டைப்பியபடியே ஓரக்கண்ணால் சரிதா பயந்து கொண்டிருப்பதை ரசித்துக் கொண்டிருந்தேன், மணி சரியாக ஏழைத் தொட்ட நொடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு டிடிஎஸ் எபெக்டில் "ஜல் ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்" என மெல்ல கொலுசுச் சத்தம் கேட்கத் தொடங்கி இருந்தது; சைடு எஃபக்டாக பூமி அதிர்ந்தது. "டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டகுடகு டிகுடிகு டங்கு டிங்குடு" ஓ...! கொலுசுச் சத்தம் கேட்டதும் சஷ்டிக்கவசத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு குடுகுடு குடுகுடுவென நிலமதிர ஓடிவந்து மூச்சிரைக்க என்னருகில் நின்றாள் என் சகதர்மிணி. அந்த எஃபக்டதான்...! ஹி.. ஹி...!

"ஏங்க.. கொலுசு சத்தம்.... அந்த கொலுசு சத்தம் உங்களுக்கு கேட்டதா.?" மேல்மூச்சு கீழ்மூச்சு தனது உடைந்து போன குரலில் சரிதா என்னிடம் கேட்டுக் கொண்டிருந்த பொழுதே மீண்டும் "ஜல் ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்" இம்முறை ஜல்லுடன் பயங்கரமான சிரிப்புச் சத்தமும் சேர்ந்து எக்கோவாகத் தொடங்கியது. சரிதா நடுங்கிக் கொண்டிருந்தாள்.  சரிதா இப்படி நிறையவே பயப்படுவதைப் பார்த்த எனக்கோ உடனே திருப்பதி ஏழுமலையானுக்கு பாதயாத்திரை போக வேண்டும் போல் இருந்தது. "ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்! உன்னய உண்டு இல்லன்னு பண்றேன் பாரு...." அடித்தொண்டையில் இருந்து அலறிய அந்த மோகினிப் பிசாசு இன்னும் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தது. "ஏங்க, எனக்கு ரொம்ப பயமா இருக்குதுங்க, என்ன எப்படியாது காப்பாத்துங்க" என் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டே அழ ஆரம்பித்தாள் சரிதா.

"அய்யோ சொக்கா சொக்கா, அத்தனையும் எனக்கா...அய்யோ சொக்கா சொக்கா...." தருமி நாகேஷ் திருவிளையாடல் படத்தில் துள்ளிக் குதிப்பாரே அப்படித்தான் எனக்கும் துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது. காரணம் சரிதா என்னை இவ்வளளவு மரி‌யாதையாக அழைத்தது அவளுக்கு தாலி கட்டும் முன்வரை மட்டுமே.  "உன்னச் சும்மா விட மாட்டேன்டி, எவ்வளவு தைரியம் இருந்தா என்னையே சீண்டிப் பார்ப்ப... உன்ன சும்மா விடவே மாட்டேன்... ஹாஆஆஆஹ் ஹஹ் ஹஹ் ஹஹ் ஹஹ்ஹா " சத்தமாக, மிக சத்தமாக  சிரிக்கத் தொடங்கியது அந்த மோகினிப் பிசாசு. "ஏங்க உங்களுக்கு கொஞ்சம் கூட பயமா இல்லையா ..." அந்த பயத்திலும் நான் பயப்படாமல் இருப்பதை கண்டுபிடித்து விட்டாள் சரிதா. 

ங்களுக்கு மட்டும் ஒரு ரகசியத்தை இங்கே சொல்கிறேன்... இந்த மோகினிப் பிசாசு வதந்தி பரவியதில் இருந்தே தொடர்ச்சியாக சரிதாவிடம் சில மாற்றங்கள் தெரிந்தது. கொஞ்சம் பவ்யமாய் நடந்துகொள்ள ஆரம்பித்திருந்தாள். அவளை என் வழிக்குக் கொண்டு வர இதைவிட்டால் வேறு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்பதை அறிந்த நான் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். எலக்ட்ரிகல் ஸ்பெஷலிஸ்டான  எனது நண்பன் சரவணன் மூலமாக என் வீட்டை சுற்றிலும் மறைவான இடங்களில் ஸ்பீக்கர் செட் செய்து ஒரு பேய் எபெக்ட் வரும் விதத்தில் ஏற்பாடு செய்திருந்தேன். சிலநாட்களாக சரிதா என்னிடம் பேசிய அதவாது என்னோடு சண்டை போடும் போது அவள் கத்திய குரல்களை அவளுக்கே தெரியாமல் ரெக்கார்ட் செய்து, அதையே மோகினியின் குரலாக மாற்றியிருந்தோம், என்னுடைய அதிபுத்திசாலி மனைவியால் அவளது குரலைக் கூட அவளால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு பயந்திருந்தாள். நான் அவள் பயத்தைக் கண்டு ரசித்துச் சிரித்து மேலுக்கு நான் பயந்த மாதிரி(!) நடித்துக் கொண்டிருந்தேன்.

ன்னை நானே மனதுள் பாராட்டிக் கொண்டிருந்த போதுதான் எதிர்பாராத மற்றொரு புதிய குரல் கேட்டது, இது என் அருகில் நின்று கொண்டிருக்கும் சரிதாவின் குரலும் இல்லை, நாங்கள் ரெக்கார்ட் செய்த சரிதாவின் குரலும் இல்லை. புதுக்குரல்! "டேய் கணேஷா... என்ன விளையாடுறியா..? எம்மேல பயமில்லாமப் போயிருச்சா?" புதிய பெண் குரல் நான்கு புறம் இருந்தும் எக்கோவானது.

"ஏங்க அந்த பேய பார்த்து நீங்க பயப்படல இல்ல, அதான் அதுக்கு உங்க மேல கோவம் வந்த்ருச்சு" சரிதா இன்னும் அப்பாவியாய் பயந்து கொண்டிருந்தாள். இப்போது நான் மெய்யாலுமே பயப்படத் தொடங்கியிருந்தேன். இரண்டு விதமான கொலுசு சப்தம் கேட்டது, இரண்டு விதமான பெண்களின் குரல் கேட்டது. ஒன்று சரிதாவின் ரெகார்டட் குரல் மற்றும் ரெகார்டட் ஜல் ஜல், மற்றொன்று....? அய்யகோ! அப்படியென்றால் மோகினிப் பிசாசு  இருப்பது நிஜம் தானா? நான் தான் அவசரப்பட்டு சரிதாவை சீண்டுவதாக நினைத்து மோகினியை சீண்டி விட்டேனா?

எங்கள் அருகில் மல்லிகை வாசம் வீசத் தொடங்கியது. என்னுடைய முதல் பிளானில் மல்லிகையை சேர்க்க மறந்துவிட்டேன்  . நான் கூட யோசித்தேன் மல்லிகை இல்லாமல் பேய் டிராமாவா என்று. இந்த நிஜப் பேய் நிஜமாகவே மல்லிகையுடன் வரும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. " ஹாஆஆஆஹ் ஹஹ் ஹஹ் ஹஹ் ஹஹ்ஹஹா, கணேஷா நீ செத்தடா" இது நிஜ மோகினிப் பிசாசு "சொன்னாலும் சொல்லாட்டாலும், கணேஷா... நீ செத்தடா!" இது மை மைண்ட் வாய்ஸ்!

"உன்ன சும்மா விடமாட்டேன்.. உன்ன... உன்ன..." இது ரெகார்டட் சரிதா. "ஹையோ! என் புருசன ஒன்னும் பண்ணிராத..." இது நிஜ சரிதா

"தைரியம் இருந்த எதிர்ல வந்துபாரு.. ரெண்டுல ஒண்ணு பாத்துரலாம்".. ரெக்கார்டட் சரிதா. ரெக்கார்டட் வாய்சுக்கும், சரிதாவின் நிஜக் குரலுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரியாத மோகினி, மேற்கூறிய பஞ்ச் டயலாக்கைக் கேட்டதும், "யாரப் பார்த்துடி தைரியம் இல்லாதவன்னு சொன்ன.. தில் இருந்தா என் கூட மோதிப் பாருடி" என்றபடி சட்டென முன்னால் வந்து நின்றது.

நல்ல உஜாலா போட்ட வெள்ளை சாரி, முந்தானை காற்றில் பரவிக் கொண்டிருந்தது. தலை நிறைய மல்லிகைப்பூ,  நல்ல களையான முகம், சிக்கென்ற தேகம், சரிதாவிற்கு முன்னரே இவளைப் பார்த்திருந்தால் இவளே தேவலை என்று மனம் என் நினைத்தாலும் நினைத்திருக்கும். அந்த மோகினியை நான் சைட் அடிப்பதை சரிதா கவனித்து விட்டாலும்... அதைப் பார்த்த அதிர்ச்சியில் கீழே மயங்கி விழாத குறையாக, "என்னங்க என்னக் காப்பாத்துங்க’’ என்று என்னிடம் சரணாகதி அடைந்தாள் சரிதா. (சரிதாவின் சரணாகதி - நல்ல டைட்டில் இல்ல...?)

"உன் புருசனை... மொதல்ல அவனக் காப்பாத்திக்கச் சொல்லு..." என்று சொல்லிக் கொண்டே அவளது நீளமான விரல்களையுடைய கைகளை என் கழுத்தை நோக்கி நீட்டினாள் அந்த மோகினி.  இந்த நேரத்தில் சற்றும் எதிர்பாராத மற்றொரு ஆண் ஒரு குரல், இது என் நண்பன் சரவணனின் குரல் அது! "டேய் கணேஷா... ரெக்கார்டட் வாய்ஸ் பக்காவா வொர்க் ஆகுது... நம்ம செட்டப்ப பார்த்து சரிதா என்ன அந்த மோகினியே வந்தாலும் பயப்படுவா.. உன் காலுல விழுவா... நம்ம பிளான் சக்சஸ்டா... " என்று அவன் கூறிய போது நானும் அவனும் பேய்ச் சிரிப்பாகச் சிரித்ததும் ஒலித்தது. அவசர அவசரமாக பேய் செட்டப்பை ரெக்கார்ட் செய்ததால் இதைக் கவனிக்கத் தவறியிருக்கிறோம். அட தேவுடா!

சரிதா மெல்ல என்னைப் பார்த்தாள்.. பின் மோகினியைப் பார்த்தாள்.. பின் மீண்டுமு் என்னைப் பார்த்தாள்.. இப்போது நான் அவள் கண்களுக்கு சிவப்பாக தெரிந்திருக்க வேண்டும், காரணம் ஏற்கனவே பெரிய அவள் கண்கள் நல்ல பெரிய உருண்டை மாதுளை போலாகி நல்ல சிவப்பாகவும் இருந்தது. மீண்டும் என்னைப் பார்த்து, மோகினியை ருத்ர பார்வை பார்த்தாள். அடுத்த கணம்... அந்த மோகினியின் மேல் பாய்ந்தாள் சரிதா.  "ஏண்டி சக்காளத்தி... குத்துக்கல்லாட்டம் இங்க நான் ஒருத்தி இருக்கும் போதே உனக்கு எம்புருஷன் கேக்குதா? நீயும் அவனும் சேந்து என்னைய இந்த வீட்ட விட்டே அடிச்சி தொரத்தி குடும்பம் நடத்தலாம்னு பாக்றியா குடும்பம்... உன் நாடகம் எல்லாம் என்கிட்டே நடக்காதுடி பிசாசே..." என்றபடி அந்த மோகினியை அடிக்கத் தொடங்கினாள் சரிதா...!

நாளதுவரையில் இப்படி நாயடிப் பேயடியை எங்கும் பட்டிராத அந்த மோகினி, தான் செட்டப்பல்ல, நிஜமாகவே மோகினிதான் என்று எவ்வளவோ கதறியும் சரிதா நம்புவதாயில்லை. என்மீது இருந்த மொத்தக் கோபமும் சேர்த்து அந்த மோகினி மேல் திரும்ப, அடித்து துவம்சம் செய்யலானாள்.‌ மோகினி என்னைப் போல் அடிவாங்குகிற விஷயத்தில் சர்வீஸ் போட்டிராததால்... மல்லிகையைக் காணோம், கொலுசைக் காணோம் என்று ஆவி பறக்க அலறியடித்து ஓடத்தொடங்கியது. ஓடுகிற அந்த அவசரத்திலும்கூட அது  என்னை மிகவும் பாவமாய் பார்த்துக் கொண்டே சொல்லியது: "அப்பனே கணேஷா..! நான் தப்பிச்சுருவேன்... உன் நிலமைய நினைச்சாதான்யா ரொம்ப பாவமா இருக்கு!" அடுத்த கணம் அது எஸ்கேப்பாக... திரும்பி என்னை முறைக்கலானாள் சரிதா. அவ்வ்வ்வ்வ்வ! யாராச்சும் ஓடியாங்க ப்ளீஸ்... உடனே என்னைக் காப்பாத்....!

பின்குறிப்பு1 : இந்த சரிதா கதை (வழக்கத்தைவிட) நன்றாக இருக்கிறதென்று உங்களுக்குத் தோன்றினால் அது மிகச்சரி. ஏனெனில் இதை எழுதியது நானல்ல. என் தீவிர வாசகர்களில் ஒருவர்! சற்றே என் ஸ்டைலுக்கு(?) மாற்றி  இங்கே தந்துள்ளேன். இதை எழுதிய (நீங்கள் அறிந்த) அந்த மர்ம நபர் யார் என்பதை சரியாக பின்னூட்டத்தில் சொல்லும் அனைவருக்கும் அவர்கள் என்னை சந்திக்கும் சந்தர்ப்பத்தில் (அமையும்போது) ஒரு பயனுள்ள புத்தகம் பரிசாக வழஙகப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன். (முடிஞ்சால் அந்த மோகினி கையால தர உத்தேசம்!). அடுத்த பதிவில் அவர் பெயரை அறிவிக்கிறேன்.

பின்குறிப்பு 2 : நாளைலருந்து பதிவர் சந்திப்பு பத்தின தகவல்கள் தொடர்ந்து ‘மின்னல் வரிகள்’ல வெளியிட வேண்டியிருக்கு. இந்த சந்தர்ப்பத்துல என்னதான் இணையத்திற்கு நேரம் ஒதுக்கி அனைவரது எழுத்தையும் படிக்கணும்னு மனசு அடிச்சுக்கிட்டாலும் இப்ப என்னைச் சுற்றியிருக்கற நிர்ப்பந்தங்கள் படுத்துது; தடுக்குது. அதனால... செப்.1 வரை என்னைப் பொறுத்தருளி தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தரும்படி வேண்டுகிறேன்.


================================================================
அப்டேட் : இந்தக் கதையை எழுதியவர்: சீனு (திடங்கொண்டு போராடு)
================================================================

Friday, August 16, 2013

சேட்டையும், நானும்!

Posted by பால கணேஷ் Friday, August 16, 2013
லைப்பைப் படிச்சதும் சின்ன வயசுல (ஏன்... இப்பவும்தான்) நான் செஞ்ச சேட்டைகளைப் பத்திச் சொல்லப்போறேன்னு நினைச்சு வந்திருந்தீங்கன்னா... ஸாரி. இது அதப்பத்தி இல்ல. கடந்த ரெண்டு வாரமா அடுக்கடுக்காக நிறைய கமிட்மெண்ட்ஸ் நேரத்தைச் சாப்பிட்டதாலயும், இணைய இணைப்பும் படுத்தோ படுத்துன்னு படுத்தி எடுத்ததாலயும் ரெண்டு வாரமா இணையப் பக்கம் வரமுடியாமப் போச்சுது. (நிம்மதியா இருந்தீங்கதானே!) ‘உன்னால யார் எழுதினதையும் படிச்சு கருத்திட முடியாத நிலையில நீ மட்டும் பதிவிடறது அநியாயம்’னு மனஸ் சொல்லிச்சுங்கறதும் ஒரு காரணம்.  இப்ப மறுபடி படிக்கவும் எழுதவும் செய்யலாம்னு வந்தா... என்ன எழுதறதுன்னு தெரியல. அதனால... நண்பர் தி.தனபாலன் அழைச்சிருந்த தொடர்பதிவை எழுதலாம்னு முடிவு பண்ணி, என் முதல் பதிவைப் பத்திச் சொல்லப் போறேன்.

கிழக்குப் பதிப்பகத்துல நான் பணிசெய்த காலத்துலதான் பதிவுலகம்னு ஒண்ணு இருக்கறதும், ப்ளாக்னு ஒண்ணை ஓப்பன் பண்ணி நிறையப் பேரு தங்கள் படைப்புகளை வெளியிடறாங்கன்றதும் தெரியும். அப்ப சேட்டைக்காரன், கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், சி.பி.செந்தில்குமார்னு நிறையப் பதிவர்களோட படைப்புகளைப் படிச்சு ரசிச்சிருக்கேன். பின்னாட்கள்ல ‘ஊஞ்சல்’ பத்திரிகையில உதவி ஆசிரியராப் பணி புரிஞ்ச சமயத்துல சேட்டைக்காரன் ‘கல்யாணம் attend பண்ணிப்பார்’ன்னு ஒரு நகைச்சுவைக் கதை எழுதியிருந்தார். அதை ப்ரிண்ட் அவுட் எடுத்து பி.கே.பி. ஸார் கிட்ட காட்டினேன். அவர் அதை மிக ரசிச்சு ‘‘நல்லாருக்கே... யார்னு விசாரிச்சு பர்மிஷன் வாங்குங்க... ஊஞ்சல்ல போடலாம்’’ன்னார்.

சேட்டைக்காரனை எப்படிப் புடிக்கிறதுன்னு யோசிச்சு சி.பி.க்கு போன் பண்ணினேன். ‘‘சேட்டைக்காரன் போன் நம்பர்லாம் இல்லப்பா. அவர் முகம் காட்ட விரும்பறதில்ல. ஈமெயில் ஐ.டி. இருக்கு. அதுல வேணா கான்டாக்ட் பண்ணிப் பாருங்க’’ன்னுட்டுத் தந்தார். ஈமெயில் அனுப்பிக் கேட்டதுக்கு, ‘தாராளமா பப்ளிஷ் பண்ணிக்கங்க. எனக்கு மிக்க மகிழ்‌ச்சி’ன்னு பதில் வந்தது சேட்டை கிட்டயிருந்து. அடுத்த இஷ்யூல பப்ளிஷ் பண்ணிட்டோம். புத்தகத்தோட காப்பியையும், கதைக்கான எளிய சன்மானத்தையும் கொடுக்கலாம்னு அவர் அட்ரஸ்/போன் நம்பர் கேட்டு ஈமெயில் அனுப்பினேன். பதில் இல்ல... மறுபடி ஒரு மெயில்... நோ ரெஸ்பான்ஸ்! எனக்குக் கடுமையான கோபம் வந்துருச்சு. கடுமையா கோபம் வந்துச்சுன்னா.... அலுதுடுவேன்! ‘நான் ரகசியம் காக்கத் தெரிஞ்ச நபர்தான். உங்களப் பத்தி எதையும் சொல்ல மாட்டேன். புத்தக காப்பியும், சன்மானமும் தரத்தானே கேக்கறேன். என்கிட்டயாவது உங்க பேர், ஊர் சொல்லக் கூடாதா?’ன்னு மூணாவதா ஒரு மெயில் அனுப்பினேன். ‘உங்க மெயிலைப் படிச்சதும் எனக்கு லேசான குற்ற உணர்வே வந்துடுச்சு. ஒரு வாரமா வேலையில பிஸிங்கறதாலதான் பதில் தரலை. என் பேர் வேணுகோபாலன்’ அப்படின்னு ஆரம்பிச்சு, போன் நம்பர், அட்ரஸ் தந்து பதில் எழுதியிருந்தார்.

து 2011ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம். உடனே அவரைப் பாக்கணும்னு அவர் தந்திருந்த அட்ரஸுக்குப் போனேன். காலிங்பெல்லை அடிச்சதும், பச்சை மிளகாய்க்கு பேண்ட், ஷர்ட் போட்டாற் போலிருந்த ஒரு ஆசாமி கதவைத் திறந்தார். ‘‘வேணுகோபாலன்...?’’ என்று நான் இழுக்க, ‘‘நான்தான். உள்ள வாங்க’’ என்று அழைத்து அன்பாகப் பேசினார். அந்த முதல் சந்திப்பில் குறிப்பிடும்படி ஒன்றுமில்லை. செப்டம்பரில் அவரை நான் மீண்டும் சந்தித்ததில்தான் குறிப்பிடும்படியான விஷயம் இருக்கு. ப்ளாக் பதிவுகளைப் பத்தி பேசிட்டிருந்துட்டு, ‘‘எப்படி இதெல்லாம் எழுதறீங்க? நிறைய கருத்துக்கள் வேற வருது...? எனக்கும்கூட ட்ரை பண்ணலாம்னு எண்ணம் உண்டு’’ன்னு சொன்னேன். தன் கம்ப்யூட்டர்கிட்ட கூட்டிட்டுப் போயி, டாஷ்போர்ட்னா என்ன, எப்படி பதிவு எழுதி பப்ளிஷ் பண்ணனும்னு எல்லாத்தையும் விளக்கி டெமோ காட்டினார். கூடவே, ‘‘உங்க இமெயில் ‌ஐ.டி. சொல்லுங்க’’ன்னு கேட்டு, ‘‘ஒரு டைட்டில் சொல்லுங்க’’ன்னு கேட்டு (மனசுக்கு வந்த ‘மின்னல் வரிகள்’னு சொன்னேன்) உடனே எனக்கு ஒரு ப்ளாக்கை உருவாக்கிட்டார். ‘‘இதுல எப்ப வேணா நீங்க பதிவுகள் எழுதலாம். எப்ப எந்த டவுட்னாலும் என்னைக் கேளுங்க’’ன்னாரு. அப்ப இருந்து சேட்டைஸார் மாறி சேட்டையண்ணா ஆயிட்டாரு.

சரின்னு வீட்டுக்கு வந்துட்டு, எழுதலாம்னு பாத்தா... ‘என்னத்த எழுதறது, எப்படி எழுத்து நடைய அமைச்சுக்கறது’ன்னு ஒண்ணும் புரியல. மனசுக்கு வந்ததைக் கிறுக்கி (இப்பவும் அப்படித்தான்னு யாரோ சொல்றது கேக்குது) என் முதல் பதிவை பப்ளிஷ் பண்ணினேன். அது 11, செப்டம்பர் 2011ல. இப்ப அதை எடுத்து படிச்சுப் பாத்தா சிரிப்பு சிரிப்பா வருது- நாமளா எழுதினோம்னு! சேட்டைக்காரன் முதல் கமெண்ட் இட்டு, முதல் பின்தொடர்பவராகவும் ஆனார். (வேற வழி?) சி.பி.செந்தில்குமார் கருத்து போட்டிருந்தார். இவங்கல்லாம் நமக்குத் தெரிஞ்சவங்க. தெரியாத நபர்னு பாத்தா... ‘பனித்துளி சங்கர்’ன்னு ஒரு கவிஞர்... அப்ப ப்ளாக்ல கவிதைகள்லாம் எழுதி நிறைய போஸ்ட் போட்டிருந்தார். அவரோட கருத்து வந்து விழுந்தது. எனக்கு தெம்பைத் தந்தது. அந்த தைரியத்துல ரெண்டாவது பதிவை எழுதி பப்ளிஷ் பண்ணினா... அதுக்கு கமெண்ட்டுகள் அதிகம் கிடைச்சுது. ஜாக்கி சேகர், அம்பாளடியாள், முனைவர் குணசீலன் வேலன் இப்படி கருத்துச் சொல்லியிருந்த எல்லாருமே முன்னணிப் பதிவர்ங்க... சும்மாவே குதிச்சுக கூத்தாடற குரங்கு, கள்ளை வேற குடிச்சுட்டா என்ன பண்ணும்...? .அதுக்கப்புறம் என் ‘மின்னல் வரிகள்’ எக்ஸ்பிரஸ் மானாவாரியா ஸ்பீட் எடுத்து கன்னாபின்னான்னு ஓடத் ‌தொடங்கிருச்சு...!

லையுலகில் இப்படி ஒரு விபரீதத்துக்கு வித்திட்டு, உங்களையெல்லாம் மாட்டிவிட்ட சேட்டையண்ணனைப் பழிவாங்கணும்னு ரொம்ப நாளா எனக்கு ஆசை இருந்துச்சு. எப்படின்னு தெரியாம முழிச்சுட்டு இருந்தேன். இப்ப... அது நிறைவேறப் போகுது. சேட்டைக்காரன் எழுதிய நகைச்சுவைக் கதைகளைத் ‌தொகுத்து, ‘மொட்டைத் தலையும் முழங்காலும்’ங்கற தலைப்புல புத்தகமா நான் டிசைன் பண்ணி, பதிப்பித்து வெளியிடறேன். அது செப்டம்பர் 1ல நடக்கவிருக்கற பதிவர் சந்திப்புல வெளியிடப்படும் / புத்தகங்கள் அங்கே கிடைக்கும் என்கிற தகவலை உங்களுடன் பகிர்ந்‌து கொள்வதில் மகிழ்கிறேன். இந்தவிதமாக சேட்டைக்காரனைப் பழிவாங்கி விட்டதில் ரொம்பத் திருப்தி எனக்கு!
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube