Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Monday, August 24, 2015

விடுமுறை விபரீதம்..!!!

Posted by பால கணேஷ் Monday, August 24, 2015
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் எழுந்திரிப்பது என்பது மட்டும் ராஜ ரமேஷால் முடியாத காரியம். மற்ற நாட்களில் எழுந்து கிழித்து விடுவானா என்று கேட்டால்.. ஹி… ஹி… ஹி...! அந்த ஞாயிறின் அதிகாலை 9 மணிக்கு (அவனுக்கு சார்) "பர்ர்ர்..." என்றது அழைப்பு மணி. "யார்?" என்றான் ராஜ ரமேஷ். "பார்..." என்றாள் சபிதா அவன் முதுகில் ஒன்றுவைத்து. வேகமாய் எழுந்துபோய்க் கதவைத் திறந்தான். வெளியில் நின்றிருந்தவள் அவனைப் பார்த்துச் சிரித்தாள். அவளைப் பார்த்து அவன் அதிர்ந்து போய் ‘ழே‘ என்று விழித்தான். நெற்றிச் சுட்டியும், காதுகளில் அகன்ற வளையங்களும், பளிச்சென்ற மூக்குத்தியும், நாலணா அளவுக்குப் பொட்டும் அணிந்து சாண்டில்யனின் கதையிலிருந்து நேரே குதித்துவந்த ஓவியப் பெண் போல இருந்தாள். என்ன... சாண்டில்யனின் நாயகி சுரிதார் அணிய மாட்டாள்; இவள் அணிந்திருந்தாள்.

யாரும்மா நீங்க..? என்ன வேணும்..? என்றான். என்னையா யாரென்று கேட்கிறாய் பார்த்திபேந்திர பல்லவா… உன் தலையைக் கொய்யாமல் விட மாட்டேன்.. என்றவள் குமரிமுத்துவின் சிரிப்பு டெஸிபலில் பாதி வருகிற அளவுக்கு ஹாஹாவெனச் சிரித்தாள். அப்போதுதான் கவனித்தான். ஐயோ...! சிரிக்கையில் வாயில் இரண்டு கடைவாய்ப் பற்களும் சற்றே நீண்டிருப்பது போலில்லை? அந்தப் பற்களின் நுனியில் அதென்ன… தக்காளி சாஸா, இல்லை ரத்தமா..? பார்த்த டிராகுலா சினிமாவும் பேய்ப்படங்களும் இன்ஸ்டன்ட்டாய் நினைவுக்கு வந்து வயிற்றைக் கலக்க, பார்வையைச் சற்று கீழிறக்கியபோதுதான் அதைக் கவனித்தான். அவள் கையில் ஒரு கத்தி! கன்பர்ம்டாக அதில் சொட்டிக் கொண்டிருந்தது ரத்தம்தான்!

நானில்ல.. நீங்க அட்ரஸ் மாறி வந்துட்டீங்க.. என்றவன், அவள் கத்தி பிடித்த கையை உயர்த்த, உளறிக் கொட்டி, கிளறி மூடி அலறியடித்து உள்ளே ஓடி, கட்டிலில் கிடந்த சபிதாவின் அருகில் விழுந்தான். அலறினான். "ஐயோ.. பேய்... பேய்...!". எரிச்சலாய் எழுந்து  'பளார்' என்று முதுகில் ஒரு அறை வைத்தாள். "ய்யூ ராஸ்கல்! ராத்திரி பூரா என்னை தேவதைன்னு கொஞ்சிட்டு, இப்ப பொழுது விடிஞ்சதும் பேய்ங்கறியா..? கெட் லாஸ்ட்" என்றாள். ஐயோ, உன்னையில்லடி. நெஜம்மாவே ஹால்ல ஒரு பேய் வந்து நிக்குதுடி. உடனே வாயேன்… என்றான். ஹாலிடேல கூட தூங்கவிடாம ஏன்யா படுத்தற..? என்றபடி ஹாலுக்கு அவள் செல்ல, அவள் புடவைத் தலைப்பைப் பிடித்தபடி பின்னால் போனான் அவன்.

அவள் இப்போது சோபாவில் ஒய்யாரமாகச் சாய்ந்து படுத்து, டீபாயிலிருந்த சபிதாவின் செல்போனை ஆராய்ந்து கொண்டிருக்க, சபிதா கோபமானாள். ஏய், யார்றி நீ? என்ன வேணும் உனக்கு? என்று அவன் கேட்டதையே அட்சரம் பிசகாமல் கேட்டாள். குதித்தெழுந்த அவள், உன் கணவனின் உயிரை வாங்கவே யாம் வந்திருக்கிறோம் இளவரசி.. என்றாள். நான் ஒருத்தி இருக்கற வரைக்கும் அது உன்னால முடியாதுடி.. என்றாள் சபிதா. ஆமாம். அதை இவளே வாங்கிடுவா. உனக்குல்லாம் விட்டுத் தருவாளா? என்று ரமேஷ் முனக, கும்மென்று அவன் இடது கன்னத்தில் குத்தினாள் சபிதா. கன்னத்தைப் பிடித்தபடியே சட்டென்று ஆங்கிலத்துக்கு மாறினான். Sabi, I think she is mad. Please dial to kilpauk என்றவனின் வலது கன்னத்தில் கத்தி பிடிக்காத மற்றொரு கரத்தால் கும்மென்று குத்தினாள் வந்தவள். You Idiot!! How dare you say that? I’m not mad என்றாள்.  என்னாங்கடி ஆளாளுக்குக் குத்தறீங்க…? அவ்வ்வ்… என்று புலம்பியபடி சோபாவில் சரிந்தான் ராஜரமேஷ். என்னங்க… நெஜமாச் சொல்லுங்க. இவள உங்களுக்குத் தெரியாதுதானே..? என்று சபிதா கத்தினாள்.

நீ வேறடி… மொதல்ல அவளப் புடி என்று அலறியபடி வாசலைப் பார்த்தவன் பிரகாசமானான். ரங்குவும் பொடியனும் வந்து கொண்டிருந்தனர். ரங்கநாதன் பாலசந்திரன் என்று அவன் நண்பன் பெயரைச் சொல்வதைவிட ரங்கு என்றால் அனைவருக்கும் தெரியும். அப்படியே ரித்விக் பிரணவன் என்கிற அவன் நண்பன் பெயரைச் சொன்னால் தெரிவதைவிட பொடியன் என்கிற அவன் புனைபெயர் வெகு பிரபலம். இப்போது சபிதா, அந்த வினோதள் கையிலிருந்த கத்தியைப் பிடுங்க போராடிக் கொண்டிருக்க, அதை புதிராகப் பார்த்தபடி ரமேஷின் அருகில் வந்தார்கள் எழுத்தாள நண்பர்கள்.

என்ன சார், புத்தகக் கண்காட்சிக்குப் போகலாம்னு எங்களை வரச் சொல்லிட்டு இங்க ஏதோ சண்டைக் காட்சிக்கு ஒத்திகை நடக்குது போலத் தெரியுதே..? உங்க குறும்பட ஸ்க்ரிப்ட் ரெடியாய்டுச்சா? இவங்கதான் ஹீரோயினா? என்றான் ரங்கு. அடேய்… குறும்படத்துல ஹீரோவா நடிச்சு பர்னிங் ஸ்டார்னு பட்டம் வேற வாங்கினப்பறம் உன் ரவுசு தாங்கலடா… பாக்கறதெல்லாம் குறும்படமா? இது கொடும்படம்டா. நான் பல்லவ இளவரசனாம். என்னக் கொலை பண்ணியே தீருவேன்னு ஒத்தக் கால்ல நிக்கறாடா.. என்று அலறினான் ரமேஷ். ரங்கு ஏறிட்டுப் பார்க்க, சபிதாவைக் கீழே சாய்த்து ஒற்றைக் காலில் நின்றபடி தள்ளிக் கொண்டிருந்தாள் அவள். சரியாத்தான் சொல்றீங்க சார் என்றான் ரங்கு மூக்குக் கண்ணாடியை மேலேற்றியபடி. கோபமாக அவன் தலையில் தட்டி, அடேய்... முதல்ல போய் சபிதாவக் காப்பாத்துடா என்று ரமேஷ் அலற, அவளை நோக்கிப் பாய்ந்தான் ரங்கு.

சார், மென்டலாய்ட்டாலும்கூட மனசுல பதிஞ்ச எடத்துக்குத்தான் போகத் தோணும். நீங்க இவங்கள எப்பவோ சந்திச்சு எதோ செஞ்சிருப்பீங்களோன்னு தோணுது. நல்லா யோசிச்சுப் பாருங்க… ஒரு அனுபவக் கதையே பின்னால இருக்கும்.. என்றான் பொடியன். அடேய், சந்திக்கற அனுபவத்துலல்லாம் கதையத் தேட உன்னாலதான்டா முடியும். நான் ஒரு மண்ணும் தெரியாத அப்பிராணிடா. காலேஜ் டேஸ்ல லவ்கூடப் பண்ணினது கெடையாது. நீ பாட்டுக்கு எதையாவது பேசி குடும்பத்துல கும்மியடிச்சிராதடா என்று பதறியவனாக பொடியனின் வாயைப் பொத்தினான் ரமேஷ்.

இப்போது சபிதாவும் ரங்குவுமாக அவளைச் சமாளித்து கட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்கள். அவள் கையைப் பின்னால் பிடித்து மடக்கியபடி கத்தியைப் பறித்துவிட்டுக் கேட்டான் ரங்கு. சொல்லுலே… எதுக்கு கத்தியோட அலையுத? அரிமர்த்தன பாண்டியரின் துணைவி யான். என் கணவரின் சிரத்தைச் சதிசெய்து கொய்த சோழன் செழியனை யாம் சற்றுமுன்தான் கொன்றோம். அவன் தோழனான இந்தப் பல்லவனின் சிரத்தைத் துண்டிக்கா விட்டால் எம் கணவரின் ஆத்மா அமைதியுறாது. விடுங்கள் என்னை என்று திமிறினாள் அவள்.

தபாரு… சாருக்கு பல்லு கொஞ்சம் பெரிசுதான். அதுக்காக வாய்க்கு வாய் அவரைப் பல்லவன்னு சொன்னா மிதிபடுவ.. என்று ரங்கு அலற, அவள் அவன் கையை உதற, பொடியன் இப்போது அவளைப் பிடிக்க உதவிக்கு வர, உங்களுக்கு அறிவே கெடையாதா? செல்லை எடுத்து போலீசைக் கூப்புடுங்க.. என்று சபிதா அலற, ரமேஷ், அதிவேகமாக செல்லைக் கையிலெடுத்து டயல் செய்யத் தொடங்க.. ஸ்டாப் இட். டயல் பண்ணாதீங்க சார்… என்று வாசலில் அதிகாரமான ஒரு குரல் கேட்டது. ரமேஷ் நிமிர்ந்து பார்க்க, மற்றவர்கள் திரும்பிப் பார்க்க, அங்கே காவி நின்றிருந்தான்.

காரைக்குடி வினாயகராஜன் என்கிற அவன் பெயரை முழுதாகச் சொன்னால் அனைவரும் ‘ழே‘ என்றுதான் விழிப்பார்கள். ஆனால் பெயரின் முதலிரண்டு எழுததுக்களைக் கோர்த்து அவன் வைத்துக் கொண்டிருக்கும் காவி என்கிற பெயரானது ஜகப்பிரசித்தம். டேய் காவி, எப்படா காரைக்குடிலருந்து வந்த..? இங்க என்ன நடக்குது தெரியுமா…? என்று ஆரம்பித்த ரமேஷைக் கையமர்த்தினான் காவி. இந்த சீனுக்கு நான்தான் சார் டைரக்டர். எனக்குத் தெரியாதா என்ன..? டேய், ரங்கு… அவள விடுடா. இதான் சாக்குன்னு அமுக்காத. அவ என் அடுத்த குறும்பட ஹீரோயின் வினோதினி என்றான் காவி. ஹாய் அங்க்கிள் என்றது அந்த வினோதினி. என்ன.. குறும்படமா… கதாநாயகியா…? என்று துண்டு துண்டாய் வியந்த ரமேஷிடம் விளக்கினான் காவி.

என் அடுத்த குறும்படத்தோட சப்ஜெக்டே வினோதமா ஒரு கேரக்டர் வீட்ல புகுந்து அட்டகாசம் பண்ணா வீட்ல இருக்கறவங்களோட ஆக்டிவிடீஸ் என்னவா இருக்கும்ங்கறதுதான். நேத்து ஈவினிங் இந்தப் பொண்ணை ஹீரோயினா பிக்ஸ் பண்ணப்பதான் இந்த ஐடியா வந்துச்சு. ரிகர்சல்னு தனியா வெக்காம ப்ராக்டிகலாவே பண்ணிப் பாத்தா என்னன்னு மனசுல பட்டதும் உங்க நெனைப்புதான் வந்துச்சு. நான் மறைஞ்சு நின்னு உங்க ரெண்டு பேரோட எக்ஸ்பிரஷனையும் கவனிச்சுட்டிருந்தேன். இவங்க ரெண்டு பேரும் குறுக்க வருவாங்கன்றது நான் எதிர்பாக்காதது…. ஹி.. ஹி… ஹி. ஸாரி ஸார்… என்றான் காவி.

கடைசில எல்லாம் உங்க வேலையா காவியண்ணா? என்று சபிதா சிரிக்க, கடைசில இல்லம்மா.. ஆரம்பத்துலருந்தே என் வேலைதான் என்று காவியும் சிரிக்க, அதைக் கண்டு கடுப்பாகி, அடேய் குறும்படம் எடுக்கற குரங்குப்பயலே… (நன்றி: ரா.பார்த்திபன்) நீ காவியே இல்லடா… பாவி, படுபாவி!! என்று பல்லைக் கடித்துக் கையை ஓங்கியபடி ராஜரமேஷ் காவியை அடிக்கப் பாய, கூடவே பாய்ந்தனர் ரங்குவும், பொடியனும்.


பி.கு. : இந்தக் கதை முழுக்க முழுக்க கற்பனைக் கதைதான் மக்களே... உங்களுக்குத் தெரிந்த நபர்களை கதை மாந்தர்களாக நீங்களே கற்பனை செய்து கொண்டு படித்தால் அதற்குக் கம்பெனி பொறுப்பில்லை..!!

Wednesday, July 22, 2015

ர்... ரா.. ராதிகா மிஸ்..!!!

Posted by பால கணேஷ் Wednesday, July 22, 2015
கார்த்திக் சரவணன் என்கிற ஸ்கூல்பையன் நேற்று முன்தினம் தன் தளத்தில் ஷர்மிலி மிஸ் என்று ஒரு அனுபவக் கதையை வெளியிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியை எழுதி ஷர்மிலி மிஸ்! என் பொண்ண ஏன் அடிச்சீங்க? என்று ஒரு பதிவை நேற்று வெளியிட்டிருந்தார் நம்ம டி.என்.முரளிதரன். கூடவே குறும்படம் எடுக்கிற பதிவர்கள் இதைப் பயன்படுத்தவும்னு கோரிக்கையும் வெச்சிருந்தாரு. அதைப் பார்த்ததுமே குறும்பு பண்ற என் புத்தி, இதை வேற ஸ்டைல்ல எழுதியே ஆகணும்னு அடம் புடிச்சது. விளைவு... இப்ப நீங்க படிக்கப் போற ‘ராதிகா மிஸ்’.

ராதிகா மிஸ்ஸை உடனே பார்த்து, அவள் கன்னத்தில் ‘ரப்’பென்று ஒரு அறை விடவேண்டும் போல கோபம் பொங்கிக் கொண்டிருந்தது எனக்குள். அதைப் பற்றிச் சொல்வதற்கு முன் ராதிகா மிஸ்ஸை நீங்கள் சந்திக்க வேண்டும். என் மகளை நேரடியாக எல்.கே.ஜியில் சேர்க்கச் சென்ற போதுதான் ராதிகா மிஸ் எனக்கு அறிமுகமானாள். இரண்டு குண்டு பன்களை ஒட்ட வைத்தது போன்ற கன்னம், ஜெய்சங்கருக்கிருப்பது போன்ற சின்னக் கண்கள், அதற்குப் பொருந்தாத பெரிய கண்ணாடி, அறிவின் அடையாளமாய் பரந்த நெற்றி, தடித்த உதடுகள், குள்ளமான, குண்டான உருவம் என்று மொத்தமாக அவளைப் பார்த்த போது சற்றே பெரிய சைஸ் பூசணிக்காய் கை கால் முளைத்து வந்தது போல் தோற்றமளித்தாள். தன் கையிலிருந்த லிஸ்டைப் பார்த்துவிட்டு ‘‘உங்க பொண்ணு பேர் என்ன மாநந்தியா..?’’ என்று கேட்டாள். நான் திடுக்கிட்டுப் போய் அவள் கையிலிருந்த லிஸ்டை எட்டிப் பார்த்தேன். 

‘‘சரியாப் போச்சு போங்க... எம்.ஆனந்திங்க அது. என் பேர் முரளி’’ என்றேன். ‘‘ஆபீஸ்ல இருக்கறவங்க புள்ளி வெக்க மறந்துட்டாங்க போல. ஸாரி ஸார்’’ என்று சிறிதும் வருந்தாத குரலில் கூறி இலவச இணைப்பாக குமரிமுத்துவின் சிரிப்பை ஆல்டர் செய்தது போலச் சிரித்தாள். நான் கடுப்பாகி, ‘‘என் பக்கத்து வீட்டு மூவேந்தன் தன் பொண்ணு தேவிய இங்க சேக்கலாம்னு இருந்தான். நல்லவேளை... வேற ஸ்கூலுக்குப் போய்ட்டான்..’’ என்க, நான் சொன்னது புரியாமல் ‘ழே‘ என்று விழித்தபடி நின்றிருந்தாள். தலையிலடித்துக் கொண்டு வீடு திரும்பினேன்.

என்ன அவசரமாக இருந்தாலும் என் மகளைப் பள்ளியில் விடுவது நான்தான். அதை மட்டும் அவளுக்கு விட்டுத்தரவே மாட்டேன். மாலையில் போய் அழைத்து வருவது என் மனைவி ஜெயாதான். குழந்தைகள் வகுப்பு முடிந்து வருவதற்குள் பாகுபலியின் பிரம்மாண்டத்திலிருந்து மெகாசீரியலின் வில்லிகள் வரை எல்லா சப்ஜெட்டுகளையும் அலசி முடித்திருப்பார்கள் அங்கு காத்திருக்கும் தாய்மார்கள். இப்படி என் மனைவிக்கு நிறையத் தோழிகள் அங்கே. எப்போதாவது மற்ற சப்ஜெக்ட்டுகள் போரடித்தால் குழந்தைகளின் படிப்பு பற்றியும் பேசிக் கொள்வார்கள் நேரிலும் சிலசமயம் கைபேசி மூலமும். 

இப்படி நான் நினைத்திருந்தது மகாத்தப்பு என்பது அலுவலகத்துக்கு மட்டம் போட்ட ஒரு தினத்தின் மாலையில் ஆனந்தியை அழைத்துவரப் போயிருந்தபோது தெரிந்தது. மகள் வரும்வரை கைபேசியில் முகநுலில் திரிந்து கொண்டிருந்த எனக்குப் பின்னால் அவர்கள் மெல்லிய குரலில் பேசியது கேட்டது. ‘‘ஏய்.. அவர்தாண்டி ஜெயா வீட்டுக்காரர்..’’ ‘‘இவரா..?’’ ‘‘ஆமாடி. எப்பப் பாரு ஃபேஸ்புக்ல மேஞ்சுட்டிருப்பாருன்னு சொன்னால்ல..?’’ ‘‘கதைல்லாம் எழுதுவாருன்னு சொன்னா. ஆளப் பாத்தா சேட்டு வீட்டுப் பிள்ளை மாதிரில்ல இருக்காரு...’’ ‘‘மெதுவாப் பேசுடி. காதுல விழுந்துரப் போவுது.’’ ‘‘அதெல்லாம் விழாது. நாளைக்கு நீ ஜெயாட்ட நான் இப்டிச் சொன்னேன்னு மாட்டிவுடாம இருந்தாச் சரி..’’ திரும்பி, பேசியவளை முறைக்கலாம் என்று ஆசை துடித்தாலும், வாலண்டியரா வண்டில ஏறாதடா என்று அறிவு தடுத்ததால் பேசாமல் ஆனந்தியை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினேன். அன்றிலிருந்து வீட்டில் சும்மாவே இருந்தாலும்கூட மகளை அழைத்துவர நான் போவதில்லை. ஹி.. ஹி... 

நான் சொல்லவந்தது ராதிகா மிஸ்ஸின் மீது எனக்கு வந்த கோபம் பற்றித்தான் இல்லை..? அதைப் பேசலாம். இரண்டு நாட்களுக்கு முன் நான் ஏகப்பட்ட ஆணிகள் பிடுங்கிய அலுப்பில் அலுவலகத்திலிருந்து வந்து உடை மாற்றுவதற்கு முன்பே, ‘‘அப்பா, ஸ்கூல்ல என்னை மிஸ் அடிச்சுட்டாங்க..’’ என்றாள். ‘‘நீ க்யூட் பேபி இல்லையா...? அதான் கிஸ் அடிச்சிருப்பாங்க. விடும்மா..’’ என்றேன். ‘‘ஐயோ அப்பா.. மிஸ்... மிஸ்... அடிச்சுட்டாங்கன்னு சொல்றேன்..’’ என்றாள் சலிப்பாக. ‘‘அவ யார் அடிக்க?’’ என்று நான் கேட்க, ‘‘இவ என்ன செஞ்சான்னு கேளுங்க மொதல்ல’’ என்றாள் ஜெயா. ‘‘நீ என்ன செஞ்ச கண்ணூ?’’ ‘‘மிஸ் உக்கார வெச்ச எடத்துல உக்காராம மாறி உக்காந்துட்டேன்னு அடிச்சிட்டாங்கப்பா’’ 

எனக்கு கோபம் தலைக்கேறியது. என் மகள் பிறந்ததிலிருந்தே சேட்டைக்காரிதான். அடம் பிடித்து எங்களை நிறையத் தொந்தரவு செய்திருக்கிறாள். என்றாலும் ஒரு நாள் கூட அவளைக் கைநீட்டி அடித்ததில்லை, அவள் முகத்தைப் பார்த்தால் அடிக்கவும் மனசு வராது. ஸ்கூல் மிஸ், அதுவும் ரெண்டு மாசம் கூட ஆகவில்லை, அதற்குள் அவளுக்குக் கைநீட்டுமளவு தைரியம் வந்துவிட்டதா? என் முகத்தின் கோபத்தைப் படித்த ஜெயா, ‘‘ஏன் இப்டி டென்ஷனாகறீங்க..? மிஸ் லேசாத்தான் கன்னத்துல தட்னாங்களாம். அவ அடிச்சதா சொன்னதும் பதறிட்டாங்க. உங்ககிட்ட சொல்ல வேணாம்னு சொன்னாங்க.’’ ‘‘அதான் மறக்காம சொல்லிட்டியாக்கும்..? ஆனந்தி என்ன நினைச்சிருப்பா? இதுக்குத்தான் அம்மா அப்பா நம்மளை அழஅழ ஸ்கூல்ல தள்றாங்க போலன்னு நினைச்சிருக்க மாட்டா? இந்த அடிக்கிற வேலையெல்லாம் வேணாம்னு அவளத் திட்டறத விட்டுட்டு எனக்கு அட்வைஸ் வந்துட்டா பெரிசா..’’ ஜெயா கூலாக ‘‘நாய்னா கடிக்கறதும், மிஸ்னா அடிக்கறதும் சகஜம்தாங்க. சின்ன வயசுல நான் வாங்காத அடியா..? விட்டுட்டு வேலயப் பாருங்க.’’ என்றாள். அதற்கு மேல் அவளை எதிர்த்துப் பேசுவது ஆபத்து என்பதை அனுபவ அறிவு உணர்த்தியதால் மவுனமானாலும், ‘இதச் சும்மா விடக்கூடாது’ என்று மனதினுள் முடிவு செய்தேன்.

றுதினம் காலை சீக்கிரமாகவே பள்ளிக்குச் சென்று விட்டேன். ஆனந்தியை வகுப்பில் அமர வைத்துவிட்டுக் காத்திருக்க, பூசணிக்காய்க்குப் பதில் காற்றில் பறந்து விடுகிற உடல்வாகில் ஒரு முருங்கைக்காய் வந்தது. ‘‘ராதிகா மிஸ்..?’’ ‘‘அவங்க லீவ் ஸார். நீங்க போங்க நான் பாத்துக்கறேன்’’ என்றது. அடுத்த தினமும் காத்திருப்பு, மு.காயின் வருகை, நான் திரும்புதல் என்று டிட்டோ. ரெண்டு நாள் பாக்காட்டா கோபத்தின் சதவீதம் குறைந்துவிடுமே என்று அதை அவ்வப்போது ஊதிவிட்டுக் கொண்டேன். மூன்றாம் தினமும் அதே மு.காய் வர, ‘‘ராதிகா மிஸ் வரலையா..? என்னாச்சு..?’’ என்று கேட்டே விட்டேன். வந்த பதில் என்னை அதிரச் செய்தது. ‘‘திடீர்னு அவங்களுக்குக் கல்யாணம் ஆய்டுச்சு சார். அதனால இன்னும் ரெண்டு நாள் கழிச்சுத்தான் வருவாங்க’’ என்றது அந்தப் பெண் வெட்கமாக. ‘அதுக்கு இவ எதுக்கு வெட்கப்படணும்’ என்ற கேள்வியுடன் திரும்பி விட்டேன்.

ன்றிலிருந்து மூன்றாவது தினம் தான் ராதிகா மிஸ் வந்தாள். என்னைப் பார்த்ததுமே அடையாளம் கண்டு கொண்டாள். ‘‘நீங்க ஆனந்தியோட அப்பா இல்ல..?’’ ‘‘என் மகளை அடிச்சீங்களாமே..?’’ என்றேன் கோபத்தைக் குரலில் வரவழைத்துக் கொண்டு. ‘‘அடிக்கல்லாம் இல்ல. கொஞ்சம் குறும்பு பண்ணினா. அதான் லேசாத் தட்டினேன். அவங்கம்மாட்ட கூட ஸாரி கேட்டேனே..?’’ ‘‘நீங்க ஸாரி கேட்டா என்ன, வேஷ்டி கேட்டா என்ன.? ஆயிரக்கணக்குல பீஸ்கட்டி நாங்க குழந்தையப் படிக்க அனுப்பினா அடிப்பீங்களோ..? என்ன நெனச்சுட்டிருக்கீங்க மனசுல..?’’ முகத்தைக் கடுகடுவென மாற்றிக் கொண்டு கோபமாக நான் இரைய, கையைக் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டாள் ராதிகா மிஸ். பயந்துவிட்டாள் போலும்! 

‘‘குழந்தை தப்பு பண்ணா எங்ககிட்டதான் சொல்லணுமே தவிர நீங்க அடிக்கக் கூடாது. குழந்தைகளை அடிக்கறதுக்குப் பெத்தவங்களுக்கே உரிமை இல்லைங்கறப்ப நீங்க எப்படி அடிக்கலாம்? சைல்ட் சைகாலஜியப் படிக்காமயா வேலைக்கு வந்தீங்க..? நான் பிரின்சிபால் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவேன். அவர் கேக்கலைன்னா சி.இ.ஓ. கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவேன், உங்க வேலை போயிரும்.’’ ‘‘பெரிய கவர்மெண்ட் வேல... போங்க ஸார் வெளையாடிக்கிட்டு...’’ என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு வகுப்பறையினுள் ஓடிவிட்டாள். சில விநாடிகளில் அங்கிருந்து சிரிப்பொலி கேட்க, நான் குழப்பமாக என் வாகனத்தைக் கிளப்பினேன்.

ன்றிரவு வீடு திரும்புகையில் ஆனந்திக்கு மிகப் பிடித்த ப்ளாக் பாரஸ்ட் கேக்கும், பெரிய டெடிபியர் பொம்மையையும் வாங்கி வந்திருந்தேன். வழக்கமாக என் வண்டி நிற்கும் சத்தத்துக்கே ஓடிவரும் ஆனந்தி இன்றைக்கு காணோம். சரி, கேம்ஸ்ல பிஸியா இருப்பா போல என்று நினைத்தபடி உள்ளேறினேன். காபி தந்த ஜெயாவிடம் ‘‘ஆனந்தி எங்க..? அவளுக்காக என்னல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு..? அவளக் கூப்பிடு’’ என்றேன். ‘‘அதென்னமோ சாயங்காலம் ஸ்கூல்லருந்து வந்ததுலருந்தே உம்முன்னு இருக்கா. என்ன கேட்டாலும் பதிலே இல்ல. அப்டியே அடம் அப்பனைப் போல..’’ சந்தடிசாக்கில் அவள் எனக்கொரு பஞ்ச் விட, நான் ‘ழே’ என்று விழிக்க ‘வரச் சொல்றேன் இருங்க. ரொம்பதான் செல்லம் கொடுத்துக் கெடுத்து வச்சுருக்கீங்க’’ என்று அம்மாக்களின் வழக்கமான டயலாக்கை பேசிவிட்டுப் போனாள்.

அப்போதும் ஆனந்தி வரவில்லை நான் அவள் ரூமுக்குள் நுழைந்தேன். கட்டிலின் மூலையில் உம்மென்று உட்கார்ந்திருந்தது என் செல்லம்.. நான் போனதும் முகத்தை திருப்பிக் கொண்டாள். "ஏண்டா செல்லம்? என்ன கோவம் உனக்கு? .டாடி உனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு... உனக்குப் புடிச்ச ப்ளாக் கரண்ட் கேக், பொம்மை.." பதிலில்லை. ஒருவேளை நான் வந்தும் அந்த குண்டு பூசணிக்காய் என் மகளைத் திட்டியிருக்குமோ..? "கண்ணூ... நான் கோவிச்சுக்கிட்டதுக்காக மிஸ் உன்னைத் திட்டினாங்களா..? சொல்றா.. அவள ஒரு வழி பண்ணிடறேன். என்ன நெனச்சுட்டிருக்கா அவ மனசுல..?" என்றபடி அவள் கையில் பொம்மையைத் தர கோபத்துடன் தூக்கி எறிந்தாள் ஆனந்தி. 

‘‘போங்க டாடி.. உங்களை யார் காலைல மிஸ்ஸைத் திட்டச் சொன்னது..? உங்களால எனக்கு பெரிய இன்சல்ட்டாப் போச்சு’’ என்றாள் கோபமாக. ‘‘இன்சல்ட்டா..? என்னம்மா சொல்ற..?’’ நான் வழக்கம்போல பாக்யராஜ் முழி முழிக்க, அவளே தொடர்ந்தாள். ‘‘அமுல் பேபி மாதிரி உங்க மூஞ்சி இருக்காம். அதுல நீங்க கஷ்டப்பட்டு கோவத்தை வரவழைச்சுகிட்டதப் பாத்ததும் ராதிகா மிஸ்க்கு சிரிப்பை அடக்க முடியலையாம். கையால வாயப் பொத்தி கஷ்டப்பட்டு அடக்கிருந்திருக்காங்க. நீங்க போனதும் க்ளாசுக்குள்ள வந்து விழுந்து விழுந்து சிரிக்கறாங்க. அவங்க சொன்னதக் கேட்டு என் ப்ரண்ட்ஸ்லாம் கூடச் சிரிச்சுட்டாங்க. எனக்கு அவமானமாப் போச்சு தெரியுமா..’’ என்று அவள் கோபமாகச் சொல்ல, நான் திகைத்தேன். ‘ழே’ என்று விழித்தேன். அடிப்பாவி... நான் குண்டுப் பூசணிக்காய் என்று அவளுக்குப் பட்டப் பெயர் வைத்தால் இப்படியா எனக்கு அமுல்பேபி என்று பட்டப் பெயர் வைத்து குழந்தைப் பிள்ளைகள் முன்னால் மானத்தை வாங்குவாள்..? அவ்வ்வ்வ்... ‘இனி ஆனந்தியை பள்ளியில் விடப் போனால் தலையில் போட்ட ஹெல்மெட்டைக் கழற்றாமல் அப்படியே திரும்பி ஓடி வந்துவிடத்தான் வேணும்.’ மனதிற்குள் சொல்லியபடியே திரும்ப, அறை வாசலில் நின்று என்னைக் கேலியாகப் பார்த்த ஜெயாவின் பார்வையை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை..!!!

Saturday, December 28, 2013

ரெண்டு நாளா ‘சுடுதண்ணி வெக்கிறது எப்படி'ன்னும், ‘முட்டை அவிககிறது எப்படி'ன்னும், ‘டீ போடுறது எப்படி'ன்னும், ஆளாளுக்கு பதிவு போட்டுக் கலக்கிட்டிருக்காங்க. ஆனா பாருங்க... ஒரு பயபுள்ளையும் அதையெல்லாம் சாப்பிடறது எப்படின்னு சொல்லித் தரக் காணோம். அதனால... அந்த அரிய விஷயத்தை நான் ‘டச்' பண்ணலாம்னு நினைக்கிறேன். ‘டிச்' பண்ணிட்டேன்னு யாராவது கொந்தளிச்சீங்கன்னா கம்பெனி பொறுப்பில்ல.

சமைத்தல் யார்க்கும் எளிது அரியவாம்
சமைத்ததைத் தானே உண்ணல்


அப்படின்னு திருவள்ளுவர் சொல்லாத திருக்குறளே ஒண்ணு இருக்குது. அதனால ரொம்பக் கஷ்டமான அந்த சாப்பிடற விஷயத்தை ரொம்ப சிம்பிளாச் சொல்றேன் கேட்டுக்கங்க. இந்த முட்டை இருக்குதே முட்டை... அதை பள்ளிப் பருவத்திலயே மார்
க்க்ஷீட்ல (என்னை மாதிரி) நிறையப் பேர் வாங்கியிருப்பீங்க. இந்த முட்டைங்கறது வெள்ளையா, நீள் வட்டமான வடிவத்துல இருக்கும். (என்னா கண்டுபிடிப்பு!) வேகவைத்துத் தரப்பட்ட அதை கையால அழுத்திககூட ரெண்டு சரிபாதியாப் பிரிக்கலாம். பிரிக்கப்பட்ட பாதியின் மேல கொஞ்சம் உப்பும், கொஞ்சம் மிளகுத்தூளும் சேர்த்து (நமக்கிருக்கற) ஒரே வாய்ல திணிச்சுக்கிட்டு மென்னு சாப்பிட்டா... பேஷ், பேஷ்...! ரொம்ப நனனாருக்கும்.

சில பேத்துக்கு வாய்ங்கறது கொஞ்சம் பெரிய சைஸ்ல இருக்கும். ‘பேச ஆரம்பிச்சா நிறுத்தாத ஒரே உயிரினம் எங்கம்மாதான். வாயா அது...? அலிபாபா குகை' அப்படின்னு பக்கத்து வீட்டுப் பையன் சோகமா சொல்வான். அதுமாதிரி வாய் இருக்கறவங்க ஒரு முட்டையை ஒரே வாய்ல திணிச்சு முழுங்கலாம். இல்ல... மாயாபஜார் படத்துல எஸ்.வி.ரங்காராவ் ஒரே சமயத்துல இருபது லட்டுகளை முழுங்குவாரே... அந்த மாதிரி ரெண்டு மூணு முட்டைகளை அட் எ ஸ்ட்ரெஸ் வாய்ல திணிச்சும் சாதனை பண்ணலாம். இதில் எந்த வகையைச் சேர்ந்தவர் நீவிர் என்பது உங்களுக்கே தெரியும்... ஹி... ஹி...!

அடுத்தது சுடு தண்ணீர்...! இதை ரெண்டு விதமாப் பயன்படுத்தலாம் நீங்க. முதல் வகை... ஒரு டம்ளர்ல எடுத்துக்கிட்டு, கொஞ்சத்தை வாய்க்குள்ள விடணும். அதோட சூடு ரொம்ப அதிகமா இருந்துச்சுன்னா, உங்க நாக்கு வாய்க்குள்ளயே அந்தக் கால டிஸ்கோ டான்ஸ், நடுககால பிரேக் டான்ஸ், இந்தக் கால குத்து டான்ஸ்னு எல்லா டான்ஸையும் ஆடும். அப்புறமா... அதை வாயால ஊதி, அதோ வீரியம் குறைஞ்சுட்டதான்னு ஒரு வாய் உள்ள விட்டு மெதுவாக் குடிககணும். இப்படியே மொத்த டம்ளரையும் குடிச்சுக் காலி பண்ணனுமுங்க. 

நீங்க கல்யாணமானவங்களா இருந்தா... காலையில ‘காபி’ அல்லது ‘டீ’ங்கற பேர்ல இப்படி சுடுதண்ணியைக் குடிச்சுப் பழக்கப்பட்ட அனுபவசாலியா இருப்பீங்க. (நோ... நோ... சரிதா மொபைல் நம்பர் தரமாட்டேன் சிஸ்டர்ஸ்!) ‘சுடு தண்ணியப் போட்டு அதை வாயால ஊதி ஆறவெச்சுக் குடிக்கறதுக்கு... அதை சுடவெக்காமலேயே குடிச்சுத் தொலைக்க வேண்டியதுதானே.... என்ன கெரகததுக்கு சுட வெக்கணும்?' அப்படின்னு .ங்க மைண்ட்வாய்ஸ் கத்திச்சுன்னா அது ரொம்ப நியாயமுங்க. பதிவுலக காதல் இளவரசன் ‘தி.கொ.போ.' சீனுகிட்டதான் இதைப் பத்திக் கேக்கணும்.

இங்கதானுங்க சுடுதண்ணியோட ரெண்டாவது பயன்பாடு வருது. அதை ஒரு பக்கெட்டுல எடுத்துக்கிட்டு, உங்கள் பாத்ரூமில் ஆடைகளற்ற நிலையில் நின்று கொண்டு அப்படியே மேலே ஊற்றிக் கொள்ள வேண்டும். இவ்விதம் செய்யின்... வடிவேல் போன்ற நிறத்தினராக இருந்தீர்களென்றால் கமல் போன்ற நிறத்தினராகி விடுவது நிச்சயம்! கூடவே அந்த சுடுதண்ணீர் உஙகள் உடலில் ஏற்படுத்தும் உற்சாகத்தின் விளைவக நீங்கள் ஒரு பாத்ரூம் நடனம்கூட ஆடுவீர்கள் என்பதால் இலவசமாக நடனப் பயிற்சி« வேறு கிடைப்பது போனஸ் பயன்பாடு. ஹி... ஹி...! ஏற்கனவே கமல் போன்ற நிறத்தினராக இருப்பீர்களாயின், சுடுதண்ணீருடன் கொஞ்சம் குளிர் நீரை மிக்ஸ் பண்ணி... (மிக்ஸ் பண்ணுறதுங்கறது தமிழ்நாட்ல எல்லாருக்கும் இப்ப அத்துப்படி தானுங்களே...!) அதை மேல ஊத்திக்கிட்டு குளிச்சிரலாம்.

அடுத்த கேட்டகரி தீக்குளிக்கிறது... ஸாரி, டீக்குடிக்கிறது! முதல்ல சுடச்சுடத் தரப்படற டீயை ஒரு டம்ளர்ல எடுத்துக்கணும். வலது கையை தலைக்கு மேலே கொண்டு போயி... டீ டம்ளரை அந்தக் கைல வெச்சுக்கணும். அப்புறம் அதுக்கு நேர்கீழா 90 டிகிரியில இடது கையில இன்னொரு காலி டம்ளரை வெச்சுக்கிட்டு அதிலருந்து டீயை இதக்கு டிரான்ஸ்பர் பண்ணனும். அப்புறம் இடது கைய மேல கொண்டுபோயி... வலது கைய கீழ கொண்டு வந்து மறுபடி டீயை டம்ளர் விட்டு டம்ளர் பாய வெக்கணும். இப்படி நாலஞ்சு தடவை பண்ணினப்புறமா டீ இருக்கற டம்ளரை வாய்ல வெச்சு ‘சுர்'ருன்னு சத்தம் வராம நாசூக்கா உறிஞ்சிக் குடிக்கணும்.

ஆக... சமைத்ததைப் பயன்படுத்தும் கலையை... சாப்பிடும் கலையை இப்ப நீங்க நல்லா தெரிஞ்சுக்கிட்டிருப்பீங்கன்னு நெனக்கிறேன். இப்படியான ஒரு அரிய கலையைக் கத்துக் குடுத்ததுக்காக நீங்க எனக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சீங்கன்னா... ஒரு மெயில் அனுப்புங்க. என் பேங்க் அக்கவுண்ட் நம்பர் தரேன். அப்படி இல்லாம விசேசமா ‘ஏதாவது' செய்யணும்னு நினைச்சீங்கன்னா... இந்தப் பதிவை என்னை எழுதுவெச்ச தி.கொ.போ.சீனு, கோவை ஆவி, தமிழ்வாசி பிரகாஷ், ‘நம்ம' நண்பன் அப்துல்பாஷித் ஆகியோரை அணுகுக! என் சார்பில் இவர்களே பரிசைப் பெற்றுக் கொள்வார்கள்! ஹா... ஹா... ஹா...!

Monday, September 30, 2013

வாங்க... வாங்க... நீங்க ரொம்ம்ம்ப்ப நல்லவர்! நான் தலைப்புலயே எச்சரிச்சும்கூட என்னைய நம்பிப் படிக்கலாம்னு உள்ள வந்துட்டீங்க. இப்படித்தாங்க... "ப்ளீஸ், இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க"ன்னு ஒருத்தர் சொன்னப்பக் கூட அவரோட பேச்சைக் கேக்காம நம்ம ஜனங்க அந்தப் புத்தகத்தை வாங்கித் தள்ளிட்டாங்க. யார் எது சொன்னாலும் அதுக்கு நேர்மாறாச் செய்யறது சின்னப் புள்ளையில இருந்தே நமக்கெல்லாம் பழக்கம்தானுங்களே... நல்லது சொன்னா ஜனங்க எங்கங்க கேக்கறாங்க...? இப்பகூட நான் உங்களோட கழுத்துல இருந்துல்லாம் ரத்தம் வந்துரக் கூடாதேங்கற நல்லெண்ணத்துலதான் இந்தத் தலைப்பை வெச்சேங்க... அதைத் தாண்டி அப்படி ஒண்ணு நடக்கணும்னு இருந்துச்சுன்னா... எல்லாம் விதிங்க! சரி, இப்ப உங்ககிட்ட சில கேள்விகள் கேக்கப் போறேன். அதுக்கு உடனே விடை கண்டுபிடிச்சவங்க, உங்களோட ரெண்டு கையையும் முதுகுக்குப் பின்னால கொண்டு போயி தட்டிக் கொடுத்துக்கங்க. முடியாதவங்களுக்கு... பதிவோட கடைசியில வடை கிடைக்கும்... ஸாரி, விடை கிடைக்கும்!

======================================

1. நஸ்ரியான்னா உருகற ஆளாச்சே நம்ம கோவை ஆவி, 'ராஜாராணி' எப்படியிருக்குன்னு அவரக் கேட்டாத் தெரியுமேன்னுட்டு போன் செய்தபோது தொடர்ந்து ரிங் போச்சு... ஆனா எடுக்கலை. சரி... பயபுள்ள ஏதோ தியேட்டர்ல இருக்குதுன்னு புரிஞ்சுக்கிட்டு கட் பண்ணிட்டேன். அது மிகச்சரி! ஒரு மணி நேரம் கழிச்சு போன் பண்ணின ஆவி, தான் தியேட்டர்ல 'ராஜாராணி' படம் பாத்துட்டிருந்ததாச் சொன்னார். அப்ப நான் ஆவி, தி பாஸ் கிட்ட ஒரு கேள்வி கேட்டேன். அந்தக் கேள்வியைக் காதுல வாங்கினதும், என் பக்கத்து சீட்ல வொர்க் பண்ணிட்டிருந்தவர் தலைசுத்தி சீட்லயே மயங்கி விழுந்துட்டாருங்க! அப்படி நான் என்ன கேள்வியைக் கேட்டிருப்பேன்?

======================================

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் போர் நடந்தபோது பாகிஸ்தான் உபதளபதி ஒருவர் புதிய பைலட்டுக்கு போர் விமானத்தை இயக்கும் விதத்தை விளக்கிக் கொண்டிருந்தார். "இந்த பட்டனை அழுத்தினால் விமானம் மேலேறும், இதை அழுத்தினால் வலதுபுறம் திரும்பும், இதை அழுத்தினால் இடதுபுறம் திரும்பும்" என்றார். விமானி கேட்டார் "சரி ஐயா... விமானத்தைக் கீழே இறக்க என்ன செய்ய வேண்டும்?" உபதளபதியின் பதில்: "அதைப் பற்றிக் கவலைப்படாதே. அதை இந்தியர்கள் கவனித்துக் கொள்வார்கள்." (1980 தினமணி கதிரிலிருந்து)

======================================

2. சென்னையின் பிரம்மாண்ட நூலகத்திற்குப் போயிருந்தப்ப அந்த ஆங்கில நாளிதழ் என் கண்ணுல பட்டது. நமக்கு ஆங்கிலப் பேப்பர்லாம் படிக்கிற அளவுக்கு 'வெவரம்' பத்தாதுன்னாலும் ஒரு 'பந்தா'வுக்காக அப்பப்ப புரட்டறதுண்டு. அப்படி அந்த பேப்பரைக் கையிலெடுத்து புரட்டினப்ப சென்ட்டர்ல வர்ற டபுள் ஸ்ப்ரெட் பேஜ்ல இடதுபக்க ஓரத்துல ஒரு ஆப்பிரிக்க யானையோட கலர்ப் படத்தைப் போட்டு, ஒரு column அளவுல அதைப் பத்தி மேட்டர் போட்டிருந்தாங்க... அதே பேஜோட வலது பக்க ஓரத்துல ஒரு சயாமியப் பூனையோட கலர்ப் படத்தைப் போட்டு, அதைப் பத்தியும் ஒரு column அளவுல மேட்டர் போட்டிருந்தாங்க. இதைக் கவனிச்சதும் என்னோட மூளையில (நிசமா இருக்குங்க!) ஒரு ஸ்பார்க் ஆச்சு! உடனே ஒரு தமிழ்ப் பழமொழியோட ஞாபகம் வந்துருச்சுங்க. அந்தத் தமிழ்ப் பழமொழி எதுன்னு உங்களுக்குத் தெரியுதா?

======================================

ண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து வழக்கம் போல் பள்ளிச் சிறுவர்கள் பேருந்தில் கூட்டமாக ஏறினர். ஒவ்வொரு பயணிக்குமாக டிக்கெட் வழங்கிக் கொண்டு வந்த கண்டக்டர் அவர்கள் அருகில் வந்ததும், "என்னப்பா... எல்லாரும் பாஸ் தானா?" என்று கேட்டார். உடன் ஒரு சிறுவன், இன்னொருவனைக் கை காட்டி, "இல்லை ஸார்... இவன் மட்டும் ஃபெயில் ஸார்" என்றுகூற, அனைவரும் சிரித்து விட்டனர். (1980 'அதே' கதிரிலிருந்து)

======================================

3. தங்களின் மகளுக்கு சமீபத்தில் திருமணத்தை முடித்திருந்த அந்தப் பெற்றோர், வீட்டிற்கு வந்த தங்கள் உறவின தம்பதியிடம் கல்யாண போட்டோக்களைக் காட்ட விரும்பி, ஒரு கேள்வி கேட்டனர். அந்தக் கேள்வியைக் காதில் வாங்கியதும் உறவினர்கள் தலையிலடித்துக் கொண்டு, "கர்மம்... கர்மம்...!" என்றபடி இடத்தைக் காலி செய்தனர். அப்படி அவர்கள் கேட்ட கேள்விதான் என்ன?

======================================

"சார்..." என்றார்கள் யாரோ. "யார்?" என்றேன் நான். "பார்..." என்றாள் திவ்யா என் முதுகில் ஒன்றுவைத்து. வேகமாய் எழுந்துபோய் கதவைத் திறந்தேன். வெளியில் நின்றவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள். ஏதோ புதுமையான விதத்தில் உடையும் நகைகளும் அணிந்து நேரே சரித்திரப்பட ஷுட்டிங்கிலிருந்து வந்த ஹீரோயின் போலத் தோற்றமளித்தாள். "யாரும்மா நீ?" என்றேன். "அரிமர்த்தன பாண்டியரின் துணைவி யாம். எமை எதிர்த்த சோழனின் ரத்தத்தைக் குடித்துவிட்டு படுகளத்திலிருந்து வந்திருக்கிறேன் பல்லவ இளவரசே..." என்று பல்லைக்காட்டிச் சிரித்தாள். ஐயோ...! சிரிக்கையில் வாயில் இரண்டு கோரைப் பற்கள் நீண்டிருந்தது தெரிந்தது. அவற்றிலிருந்து ரத்தம் வழிந்தது. அப்போதுதான் அவள் கையைக் கவனித்தேன்... ரத்தம் சொட்டியபடி ஒரு கத்தி! உளறிக் கொட்டி, கிளறி மூடி அலறியடித்து உள்ளே ஓடி, கட்டிலில் கிடந்த திவ்யாவின் அருகில் விழுந்தேன்--- "ஐயோ.. பேய்... பேய்...!". 'பளார்' என்று முதுகில் ஒரு அறை வைத்தாள். "ராஸ்கல்! ராத்திரி பூரா என்னை தேவதைன்னு சொல்லிட்டு, பொழுது விடிஞ்சதும் பேய்ங்கறியா..? கெட் லாஸ்ட்" என்றாள்.

-நான் எழுதிக் கொண்டிருக்கும் கதையில் வரும் சில வரிகள் இவை. இதை வைத்து இது க்ரைம் கதையா? சரித்திரக் கதையா, ஆவிக் கதையா, நகைச்சுவைக் கதையா என்று சொல்லுங்கள் பார்க்கலாம். சரியான விடை தெரிந்திருந்தும் சொல்லாவிட்டால் உங்கள் தலை இஞ்சிநூறாகச் (சுக்குநூறாகத்தான் எப்பவும் சிதறணுமா?) சிதறிவிடும்! ஹா... ஹா...!

======================================

இனி... விடைகள் :

1. நான் கேட்ட கேள்வி: "ஆனந்து, படத்துல நஸ்ரியாவைத்தவிர நம்மளை மாதிரி இளைஞர்களுக்குப் பிடிக்கற விஷயங்கள் என்ன இருக்கு?"

2. அந்தப் பழமொழி: யானைக்கு ஒரு column வந்தா பூனைக்கு ஒரு column வரும்!

3. அந்தப் பெற்றோர் கேட்டது: "எங்க சாந்தி கல்யாண போட்டோ வந்திருக்கு. பாக்கறேளா...?"

Wednesday, July 17, 2013

வாத்யாரின் படகோட்டி - 2

Posted by பால கணேஷ் Wednesday, July 17, 2013
க்கள் விரும்பிப் பார்த்து ரசித்த படங்களை அதே கதையை வைத்துக் கொண்டு புதிய ட்ரீட்மெண்ட்டில் கொடுத்து வெற்றி பெறுவது சமீப காலமாக தமிழ்சினிமாவில் வழக்கமாகி விட்டது. பில்லா, நான் அவன் இல்லை, தில்லுமுல்லு.... இப்படிப் பல படங்கள் வந்து விட்டன. எம்.ஜி.ஆர்., நம்பியார், நாகேஷ் போன்றோரை வைத்து சி.ஜி.யில் மீண்டும் படகோட்டி-2 படம் தயாரிக்க முடிவு செய்தார் எனக்குத் தெரிந்த ஒரு தயாரிப்பாளர். கதையை புதிய ட்ரீட்மெண்டில் எழுதித்தர குடிகார எழுத்தாளர் கோவணாண்டியிடம் கேட்டுக் கொண்டார். கோவணாண்டியும் குடிக்காத நேரம் போக மீதி நேரமெல்லாம் சிரமப்பட்டு உழைத்து(!) கதையை எழுதினார்.

ஒரு சமயம் டாஸ்மாக்கில் பிராந்தி வாங்கிக் குடிக்கப் பணமில்லாமல் தான் எழுதிய ஸ்கிரிப்டை எடைக்குப் போட்டுவிட்டு அந்தப் பணத்தில் குடிக்கப் போய்விட்டார். என் வீட்டுப் புத்தகங்களை எடைக்குப் போடப் போயிருந்தபோது, அந்த ஸ்கிரிப்டைப் பார்த்துவிட்டு விசாரித்த என்னிடம் கடைக்காரன் சொன்ன தகவல் இது. கடைக்காரன் எடை போடுகையில், அந்த ஸ்கிரிப்டிலிருந்து இரண்டு தாள்களை சுட்டு வந்தேன். அதில் இருந்தது ஒரு சீனும், அதைத் தொடர்ந்து வரும் பாடலும்...! இதோ உங்களுக்காக அது இங்கே:

ரசாங்கம் மதுக்கடைகளை அரசைத் தவிர தனியாரும் ஏலத்தில் எடுத்து நடத்தலாம் என்று அறிவித்திருந்தது. ஆகவே ஆங்காங்கே தனியார் மதுக்கடைகளும் முளைக்கத் துவங்கியிருந்தன. வில்லன் எம்.என். நம்பியாரும் தனது பிரம்மாண்டமான மதுக்கடை‌யைத் திறந்திருந்தார். அந்த மதுக்கடையை நோக்கிச் செல்லும் தன் காலனி மக்களை வழிமறிக்கிறார் வாத்யார்.

எம்.ஜி.ஆர்.: ‘‘இதோ பாருங்க... குடிக்காதீங்க, குடிக்காதீங்கன்னு நான் தலை தலையா அடிச்சுக்கிட்டாலும் நீங்க கேக்கறதா இல்ல. சரி, குடிக்கறதுதான் குடிக்கறீங்க... தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் கடைகள்ல குடிங்க...’’

குடிகாரன் 1 : ‘‘இன்னாபா இது... புச்சா ஏதோ கடை பேரச் சொல்றாரு தலீவரு...?’’

நாகேஷ் : ‘‘அட லூசு! டாஸ்மாக்கைத் தான்யா அவர் விரிவாச் சொல்லுறாரு... அங்க சரக்குல்லாம் சரியா இல்லண்ணே... அதான் வேற கடைக்குப் போறோம்...’’

எம்.ஜி.ஆர்.: ‘‘அரசுக்கு வரி செலுத்தறது குடிமகன்களோட கடமை. அதுமாதிரி ‘டாஸ்மாக்’ல குடிக்கறதும் ‘குடி’மகன்கள் கடமை. உங்களுக்காக இன்னிக்கு குடிக்கறவங்களுக்கெல்லாம் சைட் டிஷ் இலவசமா தரச் சொல்லியிருக்கேன்...’’

அப்போது ஒரு கார் வந்து நிற்க, அதிலிருந்து எம்.என். நம்பியார் இறங்குகிறார். கைகளில் (இல்லாத) கஞ்சாவைக் கசக்கியபடி எம்.ஜி.ஆரைப் பார்த்துச் சிரிக்கிறார்.

நம்பியார்: ‘‘ஹுக்குக்கும்! டேய்... இவன் சைட்டிஷ் மட்டும்தான் கொடுப்பான். நான் சரக்கையே கொடுப்பேன்டா... என் கடையில விஸ்கி பாதி ரேட்ல தரச் சொல்லியிருக்கேன். அத்தோட... நீங்கள்ளாம் ரசி்க்கறதுக்காக ஒரு ஐட்டம் டான்ஸும்  ஏற்பாடு பண்ணியிருக்கேன். அங்க‌ே போங்கடா....’’

‘குடி’ மக்கள் அனைவரும் வாத்யாரைத் தள்ளிவிட்டு, நம்பியாரின் மதுக்கடையை நோக்கி ஓட, வாத்யாரின் மேல் ஒரு ஏளனப் பார்வையை வீசுகிறார் நம்பியார். வெறுப்புப் பார்வை ஒன்றை நம்பியாரின் மீது வீசிவிட்டு, தோள்களை ஏற்றி இறக்கி, கைகளைத் தூக்கி விரித்துவிட்டு கேமராவை நோக்கி நடக்கத் துவங்குகிறார் எம்.ஜி.ஆர். ஸ்டார்ட் மூஜிக்...! டன்டன் டன்டன் டன்டன் டன்டன்.....


குடித்ததெல்லாம் குடித்தார் - அவர்
யாருக்காகக் குடித்தார்?
ஒருத்தருக்கா குடித்தார் - இல்லை,
அரசுக்காகக் குடித்தார்..!
ஒருத்தருக்கா குடித்தார் - இல்லை,
அரசுக்காகக் குடித்தார்...!


பாதிரேட்டில் விஸ்கி என்றால் எவர் குடிக்க வெறுத்திடுவார்?
பிராந்தி தரும் போதையைத்தான் பீரும் தர மறுத்திடுமா?
முடியாட்சி அன்று, ‘குடி’யாட்சி இன்று
குடிக்காமல் எவரும் இருப்பதில்லை!


குடித்ததெல்லாம் குடித்தார் - அவர்
யாருக்காகக் குடித்தார்?
ஒருத்தருக்கா குடித்தார் - இல்லை,
அரசுக்காகக் குடித்தார்..!


குடித்தவன் மேல் பழியுமில்லை...
கொடுத்தவன்‌மேல் பாவம் இல்லை...
சந்து சந்தாய் கடை திறந்தார்
குடித்தவர்கள் தெருவில் நின்றார்...!
துயர் வந்தபோதும், சுகம் வந்தபோதும்
ஒருபோதும் குடியை நிறுத்தவில்லை!


குடித்ததெல்லாம் குடித்தார் - அவர்
யாருக்காகக் குடித்தார்?
ஒருத்தருக்கா குடித்தார் - இல்லை,
அரசுக்காகக் குடித்தார்..!


பண்புடையோர் சபைதனிலே
குடித்தவர்கள் தொல்லை செய்வார்!
வயிறு நிறைய மதுவிருக்கும்....
வார்த்தையெல்லாம் கப்படிக்கும்...!
தடையொன்று போட்டு கடைதன்னை மூடி
குடியாதோர் வாழ வாழ்த்திடுவோம்!


குடித்ததெல்லாம் குடித்தார் - அவர்
யாருக்காகக் குடித்தார்?
ஒருத்தருக்கா குடித்தார் - இல்லை,
அரசுக்காகக் குடித்தார்..!


பாடியபடியே மாலை நேர எஃபெக்டில் கடற்கரையை நோக்கி வாத்யார் நடக்க அவர் உருவம் புள்ளியாகும் வரை காமிரா தொடர்கிறது. வாத்யார் ஸில் அவுட்டாக... டிஸ்ஸால்வ்!

கட்!

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

கோவணாண்டியிடமிருந்து இதற்குமுன் நான் சுட்ட பாடல் : போனால் போகட்டும் போடா!

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

Saturday, June 22, 2013

பிரபலமாக (குறுக்கு) சுருக்கு வழி!

Posted by பால கணேஷ் Saturday, June 22, 2013
தோழி மஞ்சுபாஷிணியுடனான சந்திப்பு நிகழ்ந்த தினத்தன்று பல விஷயங்கள் பேசிக் கொண்டிருக்கையில் வலையுலகில் பிரபலமாவது எப்படி என்பது பற்றிப் பேச்சு வந்தது. ‘‘யாரையாவது திட்டி எழுதினா சீக்கிரம் பிரபலமாய்டலாம்’’ என்று சேட்டையண்ணா சொல்ல, ‘‘ஆமா சீனு. அடேய் கணேஷான்னு ஆரம்பிச்சு ஏதாவது என்னைத் திட்டி நீ எழுதி, நான் காரசாரமா அதுக்கு பதில் தந்தா பரபரப்பு ஏற்படும். நாம சீக்கிரம் பிரபலமாயிடலாம்’’ என்றேன் நான். ‘‘அப்படியா? சரிவருமா?’’ என்றார் சீனு. நான் சொன்னேன்:

‘‘டேய் சீனு...! நான் ஸ்கூல் படிக்கிற பையனா இருந்தப்ப நடிகர் ஜெமினிகணேசனுக்கு கமலஹாசன் வளர்ப்பு மகன் மாதிரி. ரெண்டு பேருக்கும் உள்ள அட்டாச்மெண்ட் எல்லாருக்குமே தெரியும். ஆனா ‘குமுதம்’ பத்திரிகையில ஜெமினி, கமலைத் திட்டி ஒரு கடிதம் எழுத, கமல் அதுக்கு சூடா அடுத்த வாரம் பதில் தர, மறுபடி ஜெமினி எழுத, கமல் திட்ட... இப்படி நாலு வாரங்கள் வந்ததுக்கப்புறம் ரெண்டு பேருமே கட்டிப்பிடிச்சுட்டு சிரிச்சுக்கிட்டே போட்டோவுக்கு போஸ் குடுத்து, ‘நாங்க விளையாட்டாதான் சண்டை போட்டுக்கிட்டோம். எங்களுக்குள்ள எதுவுமில்‌ல’ன்னாங்க. ஆனா அந்த நாலு வாரமும் பரபரப்பு ஏற்பட்டு, பத்திரிகை நல்லா வித்திச்சு. அதுமாதிரிதான் எனக்கு நீ எவ்வளவு வேண்டியவன்னு எல்லாருக்கும் தெரிஞ்சாலும் தொடர்ந்து நாலஞ்சு லெட்டர் காரசாரமா எழுதிக்கிட்டோம்னா நிஜமாவே பதறிடுவாங்க... பரபரப்பு கிளம்பி நீ பிரபலமாகறியோ, இல்லையோ... நான் பிரபலமாய்டுவேன்’’ என்றேன். ‘‘சரி வாத்தியாரே... உடனே உங்களைத் திட்டி ஒரு பதிவு போட்டுடறேன்’’ன்னாரு சீனு.

நேத்திக்கு சீனு இதப் பத்தி பதிவு போட்ருக்காரேன்னு ஆர்வமா உள்ள போய்ப் படிச்சா... எதுவும் திட்டாம நகைச்சுவையா எழுதி நம்ம தமிழ் சினிமா ஹீரோக்கள் மாதிரி போங்கு ஆட்டம் ஆடியிருக்குது பயபுள்ள...! தமிழ் சினிமா ஹீரோக்கள் என்ன போங்கு ஆட்டம் ஆடினாங்கன்னு ஆர்வமா எழும்பற குரல் எனக்கு கேக்கறதால ரெண்டு பாரா செலவழிச்சு அதை முதல்ல சொல்லிடறேன். அப்புறம் இந்தச் சீனுப் பயலப் பத்திப் பேசலாம்.

ம்ம வாத்யார் எம்சியாரு இருககாருங்களே... ‘இதயக்கனி’ படத்துல வில்லன்க கூடாரத்துக்குள்ள ஒரு வெள்ளக்கார துரையா வேசம் போட்டுக்கிட்டு தன் பேரை ‘எம்.ஜி.ரெட்’ன்னு சொல்லிக்கிட்டு வருவாருங்க. "Hai baby, What's your name? Oh, How Sweet!" அப்டின்னு இங்கிலீசுல்லாம் பேசுவாருங்க. போட்ருககற வேசத்த கரெக்டாப் பண்ண வேணாமுங்களா...? ‘சபாஷ் வாத்யாரே’ன்னு நாம மனசுக்குள்ள நெனக்கறப்ப போடுவாரு பாருங்க ஒரு கூடை மண்ணை நம்ம நெனப்புல! ஒரு ஃபிகர் வந்து டான்ஸாட ஆரம்பிச்சதும், ‘‘எங்கேயோ பார்த்த ஞாபகம்’’னு நல்ல தமிழ்ல கணீர்க் குரல்ல பாடுவாருங்க. அதுவும் உங்கூட்டுத் தமிழ், எங்கூட்டுத் தமிழ் இல்லீங்கோ... அந்தாதித் தமிழ்ல பாடுவாரு. இந்த வில்லக் கேனையனுங்க உடனே விசயத்தப் புரிஞ்சுக்கிட்டு அவரப் போட்டுத் தள்றத விட்டுப்புட்டு, ‘ழே’ன்னு முழிச்சுக்கிட்டு அவரு பாடறத ரசிச்சுக்கிட்டிருக்கும்க! என்னத்தச் சொல்ல...!

வரயே தூக்கிச் சாப்ட்டு ஏப்பம் விட்டவருங்க நம்ம சூப்பரு ஸ்டாரு ரசினி! ‘படையப்பா’ங்கற படத்துல ஒரு பார்ட்டியில செந்திலும் மத்தவங்களும் கூல்ட்ரிங்க் கிளாஸ்ல பிராந்திய ஊத்திக் குடிச்சிட்டிருப்பாங்க. தண்ணியடிச்சா நம்ம படையப்பருக்குப் புடிக்காதுங்களே... அதனால! அப்ப நம்ம ரசினி வந்து செந்தில் கைல இருக்கற ட்ரிங்க்கைப் புடுஙகிக் குடிப்பாருங்க. ‘‘ஐயய்யோ... படையப்பா குடிச்சுட்டான்’’னு செந்தில் பதற, ‘‘ஏண்டா குடிச்சா என்ன? கூல்ட்ரிங் தானே?. இதையும் குடிப்பேன், இதையும் குடிப்பேன்’’னு எல்லார் கைல இருக்கறதையும் வாங்கிக் குடிச்சுப் போடுவாருங்க. ஸ்கூல் பையனுக்குக் கூட (பதிவர் இல்லீங்க, நிஜ ஸ்கூல் பையனச் சொல்றேன்) கூல்ட்ரிங்க்குக்கும், பிராந்தி கலந்த ட்ரிங்க்குக்கும் ஸ்மெல், காரம்னு ஆறு வித்தியாசம் தெரியும். நம்ம ரசினி பச்சப் புள்ள மாதிரி இல்லீங்களா... அவருக்கு எதுவுமே தெரியாம அப்புராணியாக் குடிச்சுப்புடுவாருங்க... ஆனா குடிச்சதுக்குப் பொறவு தனக்குள்ள என்ன நடக்குதுங்கறத மட்டும் தெளிவாப் புரிஞ்சுக்கிட்டு பாடுவாரு பாருங்க... ‘‘ஓஹோஹோ கிக்கு ஏறுதே’’ன்னு...! இப்படி ஒரு அப்பாவிப் புள்ளய உலகமெல்லாம் தேடினாலும் நீங்க பாக்க முடியாதுங்கோ! அர்சூனு, விசயகாந்துன்னு மத்த ஹீரோக்களப் பத்தி சொல்ல ஆரம்பிச்சா, பல பதிவுகள் தேவைப்படுமுங்கோ!

இப்படில்லாம் ஜனங்களை ஏமாளிங்களா நினைச்சு நம்ம ஹீரோக்கள் ஆடற போங்கு ஆட்டத்தை மாதிரித் தாங்க சீனுவும் எழுதிப்புட்டாரு... சரி, திட்டறதுன்னா எப்படின்னு நம்ம சிஷ்யப்புள்ளைக்குத் தெரியல.. நாம நாலு வார்த்தை ‘நல்லதா’ திட்டிக் காமிச்சுரலாம்னு முடிவு பண்ணிட்டேங்க.  யாரும் என்னைத் தடுக்காதீங்க...! யாரையாச்சும் திட்டறதுன்னு முடிவு பண்ணிட்டா, அதுக்கப்புறம் என் பேச்சை நானே கேக்க மாட்டேங்க. ஹி... ஹி...!

லேய் சீனு! சரியான கோட்டிக்காரப் பயபுள்ளையா இருக்கியேலேய்! இல்ல, நான் தெரியாமத்தான் கேககுறேன்... இம்புட்டு நாளா பதிவு எழுதிட்டிருக்கியே... ஏதாச்சும் உருப்படியா எழுதினதுண்டாலே நீயி? சவத்து மூதி! கதைய எழுதறேங்க... பயண அனுபத்தை எழுதறேங்க... நாட்டுக்கு ஏதாச்சும் பிரயோஜனம் உண்டாலே? எம்பூட்டு ஏழை சனங்க சோத்துக்கு வழியில்லாம தவிக்குதுங்க... அதுங்களப் பேட்டி எடுத்துப் போட்டியாலே நீயி? பொசகெட்ட பயலே! எம்பூட்டு ஓட்டல்ல புகுந்து கன்னாபின்னான்னு வெட்டறே? எதயாச்சும் பத்தி சனங்களுக்குப் பிரயோசனமா பகிர்ந்துக்கிட்டியாலே நீயி? சரி போவுது களுத...அத விடு... மூணு மூணு வார்த்தையா எழுதி, நாலு நாலு வரியா மடக்கிப் போட்டுப்புட்டு கவிதைன்னு சொல்றாய்ங்களே... அவியளப் போல ஒண்ணாவது எழுதத் துப்பு இருக்காலே உனக்கு? போக்கனங்கெட்ட பயலே! சோறு தண்ணியில்லாம, நேரங்காலம் பாக்காம புதுப்படத்த ரிலீசான நாலு மணி நேரத்துக்குள்ள விமர்சனம் பண்ணத் தெறம இருக்காலேய் உனக்கு?  இதெல்லாம் இல்லாம நீயெல்லாம் பதிவரான்னே தெரியலியே லேய்! அப்புறம் என்னாத்தலேய் பிரபல பதிவராகறது?

ப்பூடிங்க...? பயபுள்ளக்கு இந்தத் திட்டு போதுமா, இல்ல இன்னும் காரம், மணம், குணம் சேத்துக்கலாமா? எலேய் சீனு...! திட்றதுன்னா எப்பூடின்னு இப்ப புரிஞ்சுட்டிருப்ப... என்னதான் கோபமா உன்னியத் திட்டினாலும் நம்ம பயலாச்சேன்னு பாசமும் இருக்கறதால ஒரு அட்வைசும் சொல்றேன், கேட்டுக்கலேய்...! உனக்கு கோபம் வந்து, (இல்லாத) மீசை துடிச்சு, பதிலுக்கு நீ திட்டறதானா என்னை மாதிரி மனுசங்க பேர்ல எழுதறவங்களைத் திட்டு... இல்ல, தெகிரியமில்லேன்னா, ‘‘வாத்யாரே நான் ஆட்டத்துக்கு வரலை’’ன்னு ஜகா வாங்கிட்டு, கோவை ஆவி, ஸ்கூல் பையன் மாதிரி உஞ்சோட்டு பசங்களத் திட்டு. அதை வுட்டுட்டு ஓவரா உணர்ச்சிவசப்பட்டு வவ்வாலு, பன்னிக்குட்டின்னு பறவை, பிராணிங்க பேர்ல எழுதற மனுசங்க யாரையும் திட்டிப்புடாத. நானாச்சும் கைப்புள்ள மாதிரி மெல்லமா வயித்துல குத்துவேன். அவிய்ங்க கோவக்கார பயபுள்ளைங்க... ஓங்கிக் குத்தினா ஒம்பது டன் வெயிட் லேய்! குத்தினாங்கன்னு வையி... உனக்கு டாங்க் பர்ஸ்ட்டாயிடும் பாத்துக்கோ...! சூதானமா நடந்துக்க...! வர்ட்டா?

Saturday, April 20, 2013

திருமதி தமிழ்! - சுடச்சுட விமர்சனம்!

Posted by பால கணேஷ் Saturday, April 20, 2013
‘மின்னல் வரிகள்’ல சினிமா விமர்சனம்... அதுவும் புதுசா வந்த படத்துக்கு சுடச்சுட விமர்சனமான்னு ஆச்சரியப்படறீங்களா? அதுக்கு்க் காரணகர்த்தா நம்ம ‘மெட்ராஸ்பவன்’ சிவகுமார் தாங்க! போன வாரமம் நம்ம சீனு போன் செஞ்சு, ‘‘சனிக்கிழமை மதியம் நீங்க ஃப்ரீயா? நீங்க, நான், ‘கரைசேரா அலை’ அரசன், ‘அஞ்சாசிங்கம்’ செல்வின், ஸ்கூல் பையன், ஆரூர் மூனா செந்தில் எல்லாருமா சேர்ந்து படம் பாக்கலாம்னு ‘மெட்ராஸ் பவன்’ சிவா சொல்றாரு. வர்றீங்களா? டிக்கெட் வாங்கிரட்டுமா?’’ என்றார். நண்பர்களுடன் ஜாலியாகப் படம் பார்க்கும் ஆசையில் ‘‘சரி’’ என்றேன்.

தலைவன் கட்டையால அடிச்சாலும் அசராத சிவா!
சிவகுமாரும், பிலாசபி பிரபாகரனும் ராமராஜனின் ‘மேதை’ படத்தையே முதல் நாளில் படம் பார்த்து விமர்சனம் எழுதிய தைரியசாலிகள். இம்முறை பிலாசபி எதுவும் பேசாமல் பிரபாகரன் வரவில்லை என்றுவிட, சிவா எங்களனைவரையும் ஓரணியில் திரட்டினார். ‘‘படத்துல பெரிசா எதுவும் எதிர்பார்க்காதீங்க. சும்மா ஜாலியா போய் கலாய்ச்சுட்டு வரலாம்’’ என்று முதலிலேயே என்னைத் தயார்படுத்தியிருந்தார். ஆனாலும் படத்தில் நான் கிஞ்சித்தும் எதிர்பாராத விஷயங்கள் நிறைய இருக்கத்தான் செய்தது.

‘‘ஸாரே, என்டே காதலி உங்க வொய்ஃபாயிட்டு வரும். பட்சே, நின்டே வொய்ஃப் என்டே காதலியாயிட்டு வராது’’ என்று அப்பாவி(?) பாக்யராஜ் தெரியாமத்தனமா முன்ன சொல்லிட்டாரு. ‘‘உன் கழுத்துல நூறு பேரு தாலி கட்டினாலும் பரவாயில்ல... ஐ லவ் யூ சாருமதி...’’ என்று கோர்ட்டில் அனைவர் முன்பும் ‘டெரர் ஸ்டார்’ ராஜகுமாரன் (ஏன் இந்தப் பட்டம்னு யோசிக்கறீங்களா? படம் பாத்தா நீங்களே கொடுப்பீங்க) பேசும் வசனத்தைக் கேட்காவிட்டால் செவிகள் பெற்ற பாக்கியத்தை அடைய மாட்டீர்கள்!

முகத்தில் அரை லிட்டர் பவுடர் அப்பிக் கொண்டு வரும் ஹீரோ ராஜகுமாரன் காற்றில் பறந்து பறந்து பாடுவதையும், அவரை அரெஸ்ட் செய்ய வரும் போலீஸ் இன்ஸ்பெக்டரை ஏரோப்ளேன் கட்டாகக் கட்டி மரண அடி அடிப்பதையும், விண்ணில் பறந்து எதிரிகளை அவர் துவம்சம் செய்து(?) காற்றில் பறக்க வைப்பதையும் கண்ணுற்று கண்கள் பெற்றதன் புண்ணியத்தை அடைவீராக!

என்னையும் விட்டு வெக்கலீங்கோ...!
கதாநாயகியின் விருப்பமில்லாமல் அவள் பெற்றோர் திருமணம் நடத்தி வைத்து விட்டார்கள் என்பதற்காக, கோர்ட்டில் கேஸ் ஃபைல் பண்ணி, கல்யாணத்துக்கு நாதசுரம் ஊதுபவர், மந்திரம் ஓதிய ஐயர், சமையல்காரர், மைக்செட் கட்டியவர், மெல்லிசைக் குழுவினர், ஏன்... பூ விற்ற பெண்மணியைக் கூட கூண்டில் ஏற்றி, ‘‘பெண்ணின் விருப்பத்தைக் கேட்காம எப்படி நீங்க கல்யாணத்துல வேலை பண்ணினீங்க?’’ என்று லாயர் தேவையாநீ... ஸாரி, தேவயானி குறுக்குக் கேள்விகள் கேட்டு மடக்கும் மெயசிலிர்க்க வைக்கும் காட்சியைக் கண்டு கை தட்டுவதற்கு அல்லாமல் இரண்டு கைகளை நாம் எதற்காகப் பெற்றிருக்கிறோம்?

கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஹீரோவாகவும் நடி்த்திருக்கும் ராஜகுமாரனை மிகக் குறைவாக மதிப்பிட்டது என் தவறுதாங்க! ஓப்பனிங் சீன்ல, போலீஸ் அடிக்கிறதையெல்லாம் ஹீரோவா லட்சணமா வாங்கிக்கிட்டு, ‘‘எப்படிறா அடி?’’ன்னு கேட்டதும், ‘‘இது அடியில்ல, இடி’’ன்னு பதிலுக்கு எல்லாரையும் தாக்கி ஒரு ரணகள சுனாமி பண்றாரே... அது ஆச்சரியம் 1! எதிர்வீட்டு மாடியில இருக்கற கதாநாயகிக்காக தோட்டத்துல இருக்கற இரும்புக் கம்பத்தைப் பிடுங்கி, இவர் வீ்டடு பால்கனிக்கும் அவங்க வீட்டு பால்கனிக்கும் நடுவுல பாலம் அமைச்சு, கொட்டற மழையில, கால்ல ‌போட்டிருக்கற ஹீல்ஸ் ஷுவக் கூடக் கழட்டாம, கம்பத்து மேல நடந்து அவளுக்கு சாப்பாடு பார்சலைக் கொடுத்துட்டு, திரும்ப தன் வீட்டுக்கு வர்றார் பாருங்க... சலங்கை ஒலி கமல்லாம் என்னத்தக் கிழிச்சாருன்னு க‌ை தட்ட வெச்சுடுச்சு. (இந்த சீன்லதான் அவர் பேர் டைட்டில் வருது- கைதட்டல் வாங்கற ஆசையில) இது ஆச்சரியம் 2!

விசயம், அலுகை, குலந்தைன்னு கேப்டன் விஜயகாந்தைவிட மோசமாப் பேசி அவரே தேவலைப்பான்னு நினைக்க வெச்சுட்டாரு ராஜகுமாரன்! ஆச்சரியம் 3! இந்த ராமராஜன் முகத்துல பாவமே இல்லாம வசனம் பேசறாருன்னு பாவம்... அப்பாவியான அவரை திட்டிருக்கேன் ஒரு காலத்துல. காதலி பெட்டியோட வீட்டை விட்டு ஓடி வந்துட்ட சீன்ல கூட ‘டீ சாப்டியா?’ங்கற மாதிரி ‘‘பெட்டியத் தூக்கிட்டு வந்துட்டியா?’’ன்னு முகத்துல பாவமே இல்லாம (வராததுக்கு அவர் என்ன செய்வார், பாவம!) நடிச்சு ராமராஜனே தேவலைன்னு நினைக்க வெச்சுட்டாரு. ஆச்சரியம் 4! படம் பூரா தான் எழுதின வசனங்களை நல்லாவே ஒப்பிச்சிருககாருங்க ரா.கு.. அப்புறம்... ஹலோ, எல்லாத்தையும் நானே சொல்லிட்டா எப்பூடி? படத்தை நீங்களே பாத்துத் தெரிஞ்சுக்கங்க மீதிய!

இடைவேளையில், மக்கள் வெள்ளத்தினூடே நாங்கள்!
ஹீரோ ராஜகுமாரனை விடுங்கள்... இயக்குனர் ராஜகுமாரன் செமத்தியாக ஸ்கோர் பண்ணியிருக்கிறார். எல்கேஜி வயசிலிருந்து கல்லூரி வயசு வரை தேவயானியிடம், ‘‘உன் புருஷனைக் கூட்டிட்டு வாம்மா’’ என்று சொல்லும் ராதாரவி, திடீரென்று ராஜகுமாரன் ஒன்றுக்கும் உதவாதவர் என்ற ஞானோதயம் வரப்பெற்று, தேவயானியை வேறொருவருக்கு கட்டி வைப்பதன் மூலமாக மனித மனத்தின் நிலையாமைத் தன்மையை பளிச்சென்று எடுத்துக் காட்டியிருக்கிறார். பெண்ணின் சம்மதம் கேட்காமல் திருமணம் செய்வது தப்பு என்ற மெஸேஜை படம் பார்ப்பவர்கள் மண்டையில் ஆணி வைத்து சுத்தியலால் அடி்த்து இறக்காத குறையாகப் புரியவைத்து மெஸேஜ் சொல்லியிருக்கிறார். அதை விடுங்கள்... கிளைக் கதாபாத்திரமான சாருஹாசனுக்கும் வைத்தார் பாருங்கள்... ஒரு சென்டிமென்ட் பேக்ட்ராப்! சான்ஸே இல்ல...! ‘‘நாளைக்கு பத்து மணிக்கு இங்க சந்திக்கிறேன்’’ என்று சொன்ன காதலி வராததால அந்த பஸ் ஸ்டாப்பிலயே தன் வசிப்பிடத்தை(!) அமைச்சுக்கிட்டு நாப்பது வருஷமா அங்கேயே வாழ்ந்து அந்த இடத்துலயே உயிரை விடறாரு சாருஹாசன்! இத்தனைக்கும் அவர் பெரும் பணக்காரராம், சமூகத்தில் மதிப்புக்குரிய பெரிய மனிதராம்! புல்லரிக்குதா...! சரி, கொஞ்சம் சொறிஞ்சுக்கிட்டு வாங்க!

தேவயானி முதல் பாதியில ராஜகுமாரனோட காதலியாகவும், பின் பாதியில அவருக்கு உதவற லாயராகவும் (காதலியி்ன் அக்காவாக இரட்டை வேடம்) வந்து அவங்க பங்கை குறைவின்றி செய்திருக்காங்க. முதல் பாதியில அவங்களை ஸ்கூல் பெண்ணா காட்டறதுக்காக மிகை மேக்கப் போட்டு (நம்மளை) படுத்தியிருக்கறதைத் தான் சகிக்க முடியல! (மறைந்த) மலேசியா வாசுதேவன், ராதாரவி, ரோகிணி, சாருஹாசன் இவங்கல்லாம் (அ)கெளரவ வேடங்கள்ல தலைகாட்டறாங்க.

அஞ்சாத மும்மூர்த்திகள்!
படத்தோட கதைய விரிவாச் சொல்லணும்னா... சரி, எதுக்கு வம்பு? அதைத் தெரிஞ்சுக்கற விரும்பற தைரியசாலிங்க பின்னூட்டத்துல உங்க இமெயில் ஐடி கொடுங்க விரிவாக கொல்றேன், ஸாரி, சொல்றேன். படத்துல ஒரு சீன்ல ரமேஷ்கன்னா, ‘‘இவன் பேர் தமிழரசன். தமிழ்னும் கூப்பிடலாம், அரசன்னும் கூப்பிடலாம்’’ன்னு சொல்ல... நாங்க திரும்பி பக்கத்துல இருந்த அரசனைப் பார்க்க... அவரு ‘‘ஐயோ, நான் இல்லீங்க அந்த அரசன்’’ன்னு அலறினாரு பாருங்க.. அய்யோ, அய்யோ...நல்ல டமாஸு!  படத்தோட இடைவேளை எப்படா வரும்னு காத்துட்டே இருந்து ஆரூர் மூனாவும், அஞ்சாசிங்கம் செல்வினும் (அஞ்சிய சிங்கமாகி) ‌தியேட்டரை விட்டு தெறிச்சு ஓடிட்டாங்க! நானும் அரசனும் ஓடிரலாம்னு நினைச்சாலும் சிவாவோட அன்பு(!)க்கு கட்டுப்பட்டு முழுப் படத்தையும் பாத்து வெச்சோம்.

அடுத்த தடவை இந்த சிவா படம் பாக்கலாமா ஸார்ன்னு கூப்பிடட்டும்... நற! நற! நற! பின்ன என்னங்க... நானும் எவ்வளவு நேரத்துக்குத்தான் நல்லவனாவே நடிச்சுட்டிருக்கறது? ஹி... ஹி....!

Thursday, April 18, 2013

‘கொசு’வநாத புராணம்!

Posted by பால கணேஷ் Thursday, April 18, 2013
மிஸ்டர் ‘கொசு’வை உங்களுக்குத் தெரியுமா? தினம் இரவில் உங்கள் கைகளிலோ அல்லது பிற பாகங்களிலோ தன் ஆன்டெனாவால் இன்ஜெக்ஷன் போட்டு ரத்தத்தை உறிஞ்சுகிற அற்ப ஜந்துவைச் சொல்லவில்லை நான்! விஸ்வநாதன் என்று பெயரிடப்பட்டு, விசு என்று சுருக்கி அழைக்கப்பட்டு, பிறகு நண்பர்களால் ‘கொசு’வநாதன் என்று நாமகரணம் சூட்டப்பட்டு, அதுவும் சுருங்கி இப்போது விசுவுக்குப் பதில் கொசு என்று அழைக்கப்படும் மே.மாம்பலம் விஸ்வநாதனைப் பற்றித்தான் நான் குறிப்பிட்டேன். அவர் ஏன் அப்படி அழைக்கப்படுகிறார் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன் மே.மாம்பலம் கொசுக்களைப் பற்றி நீங்கள் நன்கறிந்து கொண்டாக வேண்டும்.

எங்கள் பகுதியில் மொட்டை மாடியில் படுத்திருந்தீர்களென்றால், ‘இவன் நம்மைக் கடிக்க சான்ஸே தர்றதில்லையே..’ன்னு கான்டான கொசுக்கள் பத்து இருபது ஒன்று சேர்ந்துச்சுன்னு வைங்க...  எல்லாம் ஒண்ணு கூடிச்சுன்னாக்க உங்களையே தூக்கிக் கொண்டு பறந்து நான்காவது வீட்டு மொட்டை மாடியில் போட்டுவிடும் அளவுக்கு ஊட்டமானவை இந்தப் பகுதி கொசுக்கள். சில ஆண்டுகளுக்கு முன் விஸ்வநாதன் இங்கே குடிவந்ததும் முதலில் சந்தித்த பெரிய பிரச்னைகளே இரவானால் முற்றுகையிடும் கொசுக்களின் கடிதான்! மனைவியின் கடியையே இருபதாண்டுகளாய்த் தாங்கி வருபவரால் கொசுவின் கடியை இரண்டு நாள்கூட தாங்க முடியவில்லை. அவற்றை வீட்டினுள் வரவிடக் கூடாது என்று முடிவெடுத்தார். முடிவெடுத்தவர் என்ன பண்ணினார்ன்னா...

ஹாலில் ஏறத்தாழ முக்கால் வாசியளவு அடைக்கிற மாதிரி பெரிய கொசுவலை, அதற்குள் இன்னொரு சிறிய கொசுவலை என்று இரண்டடுக்குப் பாதுகாப்பு செய்து, தன் குடும்ப உறுப்பினர்களுடன் அதனுள்ளே படுத்தார் முதல் கட்டமாக! ஓரிரண்டு நாட்கள் கொசுவிடமிருந்து தப்பித்ததென்னவோ நிஜந்தான். அதன்பின் காலையில் அவர் மடித்து வைத்த கொசுவலைக்குள் சுண்டெலியார் ஒரு சிறு ஓட்டை போட்டுவிட, மூன்று நாளாக முற்றுகையிட்டுத் தோற்ற ஆவேசமோ என்னவோ... கொசுக்கள் நறுக்கென்று கடிக்கலாயின. வலையைத் தைத்து மறுபடி படுத்தார். மறுபடி சிற்றெலியார் கைவரிசை காட்ட... இனி எலிகளை விரட்டும் வரை கொசுககளை வலைமூலம் அடக்க முடியாது என்பதை உணர்ந்தார் விசு. முதல் முயற்சி தோல்வி.

வர் மனைவி குமுதம் (குமுதவல்லியின் சுருக்!) ‘‘ஏன்னா... கொசுவர்த்திச் சுருள் வாங்கிட்டு வந்து கொளுத்தி வெச்சா அந்தப் புகைக்கு எந்தக் கொசுவும் அண்டாது’’ என்றாள். அத்தோடு நிறுத்தியிருககலாம் அவள்... ‘‘‌காய்ஞ்ச வேப்பிலைகளை எரிச்சா அந்த மணத்துக்கும் கொசுங்க கிட்ட அண்டாதுங்க...!’’ என்று தான் எப்போதோ ‌புத்தகத்தில் படித்த ‌ஹெல்த் டி‌ப்ஸையும் நினைவு கூர்ந்தாள். ஆரம்பித்தது வினை! ‘‘ஆஹா... லைஃப்ல முதல் தடவையா நல்ல ஐடியா குடுத்திருக்கேடி...!’’ என்று விரைந்தோடிச் சென்று உடனே முப்பது பாககெட் வாங்கி வந்தார். வந்தவர் அன்று மாலையே எல்லா ஜன்னல்களையும், கதவையும் அடைத்துவிட்டு, ‘‘கொஞ்ச நேரம் புகை வீட்டுக்குள்ளயே சுத்தினப்புறம் கதவைத் திறந்தா கொசுவெல்லாம் இந்தத் திசைலயே அண்டாது. இதுலயெல்லாம் கஞ்சத்தனமே கூடாதுடி’’ என்று தாராளப் பிரபுவாய் ஒரு அறைக்கு நான்கு பத்திகளை ஏற்றி வைத்தார். கூடவே எங்கிருந்தோ பொறுக்கி வந்திருந்த முற்றிய வேப்பிலைகளையும் கொளுத்தினார்.

அடுத்த சில நிமிடங்களில் வீட்டின் கதவு உடைப்பதுபோல் இடிக்கப்பட... வேகமாய்ப் போய்க் கதவைத் திறந்தவரின் முகத்தில் பளீரென்று அடித்தது தண்ணீர்! ‘ஹா’வென்று அலறி விழுந்தார். அப்புறம்தான் புரிந்தது... தீயணைப்புப் படையினரின் ஹோஸில் இருந்து பீறிட்ட நீர் அது என்று! பக்கத்து வீட்டுக்காரன் இவர் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவு மூலம் கசிந்த புகையைக் கண்டு உள்ளே தீப்பிடித்து விட்டதாய் எண்ணியதன் விளைவு! ஃபயர் சர்வீஸ்காரர்களிடம் விசு கன்னாபின்னாவென்று திட்டு வாங்கி, அசடு வழிந்ததும், பக்கத்து வீட்டுக்காரன் பழி சண்டை போட்டதும்தான் நிகரலாபமே தவிர இரண்டாவது முயற்சியும் படுதோல்வி தாங்க...!

ன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விசு, வேறொரு ஐடியாவைப் பிடித்தார். ஒரு குறிப்பிட்ட க்ரீமைத் தடவிக் கொண்டு படுத்தால் கொசு அண்டாது என்ற விளம்பரத்தைப் பார்த்ததும் அதில் ஒரு டஜன் ட்யூபுகளை வாங்கி வந்து தனக்கும், மனைவி குழந்தைகளுக்கும் தாராளமாக ஆயில் மசாஜ் செய்வது மாதிரி உடம்பு பூராவும் தேய்த்து விட்டுப் படுக்கச் செய்தார். ஊஹும்! ‌அந்தக் கீரிமின் நாற்றத்தாலேயே தூக்கம் வரவில்லை என்று மனைவி, குழந்தைகள் கோபாவேசமானதாலும், ரெண்டே நாளில் க்ரீமைப் பழகிக் கொண்ட கொசுக்கள், அதை அலட்சியம் செய்து ‘மவனே, எங்களையாடா ஒழிக்கப் பாத்தே?’ என்று முன்னிலும் உக்கிரமாய்‌க் கடிக்க ஆரம்பித்ததாலும் ஆஸ் யூஷுவல் இதுவும் ‌ஃபெய்லியர்!

விசுவைக கடிச்ச கொசு!
ந்த முயற்சிகளெல்லாம் ஒவ்வொன்றாய் நடந்து கொண்டிருந்த காலச்சதுரத்தில் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும், ‘‘இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலடா நாராயணா’’ என்கிற ரீதியில் இவர் புலம்பித் தள்ளி, ஆலோசனை கேட்க, முன்பே நான் குறிப்பிட்டதுபோல இவரின் பெயர் ‘விசு’விலிருந்து ’கொசு’வாக மாறியதுதான் மிச்சம். அப்போதுதான் அவரின் ‘நண்பேன்டா’ நரசிம்மன் ஐடியா தந்தார். ‘‘டேய் கொசு! ச்சே... விசு! இப்ப புதுசா மார்க்கெட்ல எலக்ட்ரானிக் பேட் ஒண்ணு வந்திருக்காம்,. அதை சார்ஜ்ல போட்டுட்டு கொசு வர்றப்ப வீசினா, பட் பட்னு எலக்ட்ரிக் ஷாக் பட்டு எல்லாக் கொசுவும் செத்து விழுந்துருதாம்...’’ என்றார். எத்தைத் தின்றால் கொசு ஒழியும் என்று காத்திருந்த விசு உடன் அதை வாங்கிக் ‌கொண்டு வீட்டிற்கு வந்து குமுதத்திடம் ‘டெமோ’ செய்து ‌காட்டினார்.

காற்றில் அந்த பேட்டை வீசி, ‘பட் பட்’டென்ற ஒலியுடன் கொசுக்கள் செத்து விழ, பெருமை ‌பொங்க மனைவியைப் பார்த்தார். ‘‘எப்பூடிடி?’’ குமுதம் சற்றும் அசராமல், ‘‘ஆமா... பெரிய லியாண்டர் பெயஸ்! சர்வீஸ் ஷாட் அடிச்சுட்ட மாதிரி போஸைப் பாரு...! எத்தனை நேரம் இதை வீசிட்டே இருப்பீங்கன்னு பாக்கறேன். நாங்க படுத்துக்கறோம். கொசு எங்களை அண்டாம, ராப்பூரா நீங்க பேட்டால அடிச்சுட்டே இருங்கோ...’’ என்றுவிட்டு நிம்மதியாகத் தூங்கினாள். பாவம்... கொசுவநாதன், ஸாரி, விசுவநாதன்தான் அணியணியாகத் திரண்ட கொசுக்களுக்கு முன் பேட்டைச் சுழற்றியே ஓய்ந்து போனார்.

‘‘ஏங்க... இந்தக் கொசுத் தொல்லைய ஒழிக்க வேற வழியே கிடையாதா?’’ என்று மறுநாள் மனைவி கேட்ட போதாவது இவர் வாயை மூடிக் கொண்டிருந்திருக்கலாம்...! காக்கை வாகனர் ஸெவன் அண்ட் ஹாஃபாக நாவில வந்து அமர, ‘‘ஒரு வழி இருக்குடி. கொசுக்கள்லயே கடிக்கறது பெண் கொசுக்கள்தான்னு ஒரு மெடிக்கல் மேகஸின்ல படிச்சேன். பாத்தியா... கொசுக்கள்லகூட பிடுங்கறது பெண் கொசுக்கள்தான். நீ என்ன பண்றே...? ஆண் கொசுக்களைல்லாம் கண்டுபிடிச்சுக் கொன்னுடு. அந்த வருத்தத்துலயே பெண் கொசுக்களும் செத்துடும். கொசுத் தொல்லையிலயிருந்து நிரந்தர ரீலிஃப்!’’ என்றார். இதுபோதாதோ...? குமுதம் பத்ரகாளியாக அவதாரமெடுத்து, இவரை அன்பாக(!) ரெண்டு தட்டுத் தட்டி வராண்டாவில் தள்ளிக் கதவைச் சாத்தித் தாழிட்டுவிட்டு குழந்தைகளுட்ன் நிம்மதியாகத் தூங்கினாள். வராண்டாவில் இரவு முழுவதும் கொசுக்களுடன் யுத்தம் செய்த மிஸ்டர் விசு அதன்பின் குமுதத்தை என்ன... ஆனந்தவிகடன், கல்கியைக் கூட எதிர்த்துப் பேசுவதில்லை என்று முடிவுகட்டி விட்டார்.

போன வாரம் அவரைப் பார்த்தபோது... ‘‘ஹாய் கொசு, ஸாரி... விசு! இப்பல்லாம் நீங்க கொசுத் தொல்லையப் பத்தி யார்கிட்டயும் புலம்புறதில்லையாமே.. ப்ராப்ளம் சால்வ்டா?’’ என்று கேட்டேன். ‘‘ஆமாப்பா... அதுக்கு ரெண்டு காரணம் இருக்கு... முதலாவது, இப்பல்லாம் பாதி ராத்திரி கரண்ட் இருக்கறதில்லைங்கறதால கொசுக்களுக்கும் கண் தெரியறதில்லையோ என்னவோ... அவ்வளவா தொந்தரவில்லை. ரெண்டாவது கொசுக் கடியத் தாங்கிண்டு தூங்கறதுங்கறது இப்ப பழகிப் போயிடுத்து... வொய்ஃபோட பேச்சையே தாங்கிண்டு நாமல்லாம் தூங்கலையா என்ன?’’ என்று கேட்டுவிட்டு ‘ஈ’யென்று அத்தனை பற்களும் தெரியச் சிரித்தார் கொசு! ‘‘ஓய்..! அப்படிச் சிரிக்காதேயும்...! உம்ம பல்வரிசையப் பாத்தாலே குலை நடுங்கறது!’’ என்றேன். கப்பென்று வாயை மூடினார்! நான் அவரிடமிருந்து எஸ்கேப்பாகி ஓடினேன்!

பின்குறிப்பு: வைரமுத்து ஸார் மட்டும்தான் காவியம், காப்பியம்னுல்லாம் கதைகளுக்குப் பேர் வெக்கணுமா என்ன? நாம ஏன் ஒரு புராணத்தை எழுதக்கூடாதுன்னு நினைச்சப்பத்தான் இந்த ‘கொசுவநாத’ புராணம் உற்பத்தியாச்சு. ரசிச்சீங்களான்னு ஒரு வார்த்தை சொல்லிப்போட்டுப் போங்க!

Wednesday, March 27, 2013

ஆனானப்பட்ட கணேஷ்! (சிறுகதை)

Posted by பால கணேஷ் Wednesday, March 27, 2013
ல்லூரியின் இரண்டாமாண்டு துவங்கிய இரண்டாம் நாள்!  "மச்சி என்ன பிகருடா அவ... அவள டாவடிக்கிற நம்ம தினேஷ் மெய்யாலுமே கொடுத்து வச்சவன்டா, பொறந்தா அவன மாதிரி கன்னிராசிக்காரனா பொறக்கனும் " கிளாஸ் வாசல்ல நின்னு எவனையோ கடல போட வச்சிட்டு இருந்த ரேவதியப் பார்த்து ஜொள்ளிட்டு இருந்தான் நந்தா. அந்த மன்மதனே பார்த்தாலும் ஜொள்ளுமளவுக்கு ரேவதியாகபட்டவள் சூப்பர் பிகர்களையே பொறமை கொள்ளச் செய்யும் சூப்பர் பிகர்!

கிளாசுக்கு வெளியே ஆரம்பித்த கடலை வாசம் அறை முழுவதையும்  நிறைத்திருக்க, அது யாரை கடுப்பேற்றியதோ இல்லையோ, எங்கள் வாத்தியார் கிறிஸ்டோபரை அதிகமாய் வெறி ஏற்றி இருந்தது.   வகுப்பறையில் இருந்த ஒவ்வொருவரும் ரேவதியுடன் ஏதோ ஒரு பாரின் லொக்கேசனில் டூயட் பாடிக் கொண்டிருந்த நேரம், நான் மட்டும் ரேவதியை ஒருவித வெறுப்பு கலந்த உணர்வுடன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அருகில் இருந்த தினேசையும் மணியையும் பார்த்தேன், ஞாயிறு மதியத்தில் சரவணபவனில் காலி டேபிளைப் பிடித்து விட்டவர்கள் மாதிரி என்னைப் பார்த்து அகலமாகச் சிரித்து என் கடுப்பை மேலும் கடுப்பாக்கிக் கொண்டிருந்தனர்.
 
நான் கணேஷ்! கணேஷாகப் பிறந்த மற்றவர்களுக்கும் எனக்கும் சிறிதாவது வித்தியாசம் தெரிய வேண்டும் என்பதற்காக, என் தாத்தாவும் அவரின் புத்திரனும் எனக்கு வைத்த பெயர் பாலகணேஷ். இருந்தும் அனைவரும் வித்தியாசமே இல்லாமல் "கணேஷ்", "கணேஷ்" என்று விளித்துத் தொலைப்பதால் "உள்ளேன் அய்யா" சொல்லும் பொழுது மட்டும் என் பெயர் பால கணேஷ், நேரம் போகாமல் எதையாவது கிறுக்கித்தள்ளும் பொழுது ஒரு சிறுவித்தியாசத்திற்காக ‘பா கணேஷ்’, மற்ற நேரங்களில் கணேஷ்.  என்னைய நீங்க பார்த்திருப்பீங்களான்னு தெரியாது, ஆனா என்னைப் போல் ஒருவரையாவது நிச்சயம் பார்த்திருக்கலாம், உடனே சென்று கண்ணாடியில் ஒருமுறை உங்களை உருப்படியாய்ப் பாருங்கள், நீங்கள் என்னைப் போல் இருப்பதற்குக் கூட வாய்ப்புள்ளது. நான் வளர வேண்டிய வயதில் காம்ப்ளான் தன் பணியை செய்ய மறந்ததால் என் உயரம் ஐந்தே கால் அடி, சமீபத்தில் எடை பார்த்த பொழுது 55கி. கண்ணாடி போட்டிருப்பேன், எப்போதும் கட்டம் போட்ட மடித்து விடப்பட்ட முழுக்கை சட்டை, எப்பொழுதாவது பூ போட்ட சட்டை. இப்படி எல்லாம் என்னுருவக் குறியீடுகளைச் சொல்வதால் எனக்கு வயதொன்றும் 55 இல்லை. சொன்னால் நம்ப மாட்டீங்க... இரண்டாமாண்டு கல்லூரி மாணவன் நான். என்ன... என்ன சிரிப்பு? என்னைக் கல்லூரி மாணவனாக நினைத்துப் பார்க்க உங்கள் கற்பனை இடம்தர மறந்தால் பிழை என் மீது இல்லை, சூடம் அடித்துச் சத்தியம் செய்வேன்- பிழை உங்கள் கற்பனையில் தான் என்று!

"டேய் கணேஷ்! ஏண்டா அவள பாத்து இப்டி மொறைக்கற? ஒரு பிகர எப்டி சைட் அடிக்கணும்னு கூட தெரியாத பயடா நீ"  இந்த மாதிரி பன்ச் டயலாக்லாம் நந்தா சொல்லி நான் கேக்கணும்ன்னு என்னோட தலையெழுத்து. காரணம், நானாவது சைட் அடிக்கறதுக்காக கிளாஸ் வாசல் வரைக்கும் போவேன். ஆனா இவனோ... முன்னாடி ஒரு சூப்பர் பிகர் வந்து நின்னாக்கூட "ஹலோ, கொஞ்சம் தள்ளி நில்லுங்க போர்ட் மறைக்குது, நோட்ஸ் எடுக்கணும்"ன்னு சொல்லி வெறுப்பேத்துற பய, அதனால தான் கடியாகுது மை லார்ட். இன்னும் நான் அவள வச்ச கண் வாங்காம வெறி கொண்டு மொறச்சு பார்த்துட்டுதான் இருந்தேன்.

"டேய் சொல்லுடா, ஏன்டா தினேஷ்கூட பாலா படத்தை மூணு ஷோவும் தொடர்ந்து பாத்த மாதிரி சீரியஸா இருக்குறான்? அதுசரி... தினேஷும் ரேவதியும் இன்னும் லவ் பண்ணறாங்க தானே?", நந்தா கொஞ்சம் சத்தமாவே கேட்டுட்டான், நல்லவேளை... எல்லாரும் ரேவதிய சைட் அடிக்கிறதுல பிசியா இருக்கறதால, யார் காதுலையும் விழுந்த்ருக்காது. ஏன்னா "தினேஷும் ரேவதியும் இன்னும் லவ் பண்ணறாங்க தான?" அப்டிங்கற கொஸ்டின்ல தான் இந்தக் கதையோட ட்விஸ்டே இருக்கு! (சீரியஸா ட்விஸ்ட்லாம் வெப்போம்ல கதையில- கொஞ்சம் அசட்டுத்தனம் தூக்கலா இருந்தாலும்!)

அதுக்காக நீங்க சீரியஸ் ஆகாதீங்க. இந்தக் கதையில நம்ம வாத்தியார் கிறிஸ்டோபர் தவிர மத்த எல்லாருக்கும் காமெடி ரோல் தான். ஆனானப்பட்ட கணேஷான எனக்கு மட்டும் கொஞ்சம் சீரியசான காமெடி ரோல்- நம்ம பவர்ஸ்டார் மாதிரி... ஹி... ஹி...! அப்போ கிறிஸ்டோபர்க்கு என்ன ரோல்ன்னு கேக்கறீங்களா? இதோ என் தலையில சாக்பீச தூக்கி எறியப்போற இந்த ஆளுக்கு வில்லன் ரோல் கொடுக்காம வேற என்ன ரோல் கொடுக்கிறதாம்? வாத்தி கிறிஸ்டோபர், என்னோட நெத்திக்கு குறிபார்த்து எரிஞ்ச சாக்பீஸ் பத்துநாள் பட்டினியாக் கிடந்த நாய் ப்ரெட்டைப் பாத்ததும் பாயற மாதிரி குறி பிசகாம சுர்ருன்னு என் நெத்தியில வெள்ளைத் திலகமிட்டு நொடி நேர வலி கொடுத்துட்டு கீழ விழுந்தது. நான் கேப்டன் மாதிரி கண்கள் சிவக்க வீராவேசத்தோட எந்திரிச்சு அவரப் பார்த்தேன். நான் அடிபட்ட காட்சியப் பார்த்து மொத்த கிளாஸும் விழுந்து விழுந்து சிரிக்குது, போதாக்குறைக்கு வெளியில வேற சூப்பர் பிகர்! இந்தாளு கண்டிப்பா எதோ பெரிய டயலாக் விடப் போறாருன்னு மட்டும் என்னோட மனசு சொல்லுச்சு... ஆமா, நா எதிர்பார்த்தது சரிதான்.

"டேய் கணேஷ், ஒரு பொம்பளப் புள்ளையப் போயி சைட் அடிக்கிறியே வெக்கமா இல்ல உனக்கு?"ன்னாரு கிறிஸ்! எங்களால எத வேணா அடக்க முடியும் ஆனா சிரிப்பை மட்டும்... ம்ம்ஹும், முடியவே முடியாது! மணி கொஞ்சம் சத்தமாவே சிரிச்சிட்டான், அவன் கூட சேர்ந்து நானும் சிரிச்சிட்டேன், மெதுவா எனக்கு கேக்குற மாதிரி சொன்னான், " சரியான லூசுப்பயடா, பொம்பளப் புள்ளைய சைட் அடிக்காம பக்கத்துல இருக்குற அவனையா சைட் அடிப்பாய்ங்க...!"

இந்தாளு இப்படி எதாவது பேசாட்டா தான் அதிசயம். பேச்சுல கொஞ்சம் பெண்மை இருக்கும், அசைவுகள்ள கொஞ்சம் அபிநயம் இருக்கும், அறச்சீற்றம் வரும் போது மட்டும் பெண்மையும் மென்மையும் கலந்த ‘வரலாறா’ இருப்பாரு. ஆனாலும் வாத்தி கொஞ்சம் ரப் டைப்பாமாம்...! அவரே சொல்லிக்குவாரு அப்படி! காலேஜ்ல வேலைக்கு சேர்ந்து ரெண்டு நாள் தான் ஆவுது... அதுக்குள்ள ரெண்டாயிரம் பட்டப் பேரு வாங்கின அபூர்வ சிகாமணி! நமக்கு இப்போ முக்கியம் கிறிஸ் இல்ல, தினேஷும் ரேவதியும், அவங்களோட லவ்வும் தான், அதத் தெரிஞ்சிக்க ஒரு செமஸ்டர் ரிவேர்ஸ்ல போயே ஆக வேண்டியது காலத்தின் கட்டாயம். வாங்க, போகலாம்...!

எல்லாப் பசங்களும் தனக்குன்னு ஒரு பிகர கரெக்ட் பண்ணகூடிய வசந்த காலம் தான் செகண்ட் செமஸ்டர்.  மதியஉணவுக்குப் பின் வகுப்பறையின் வெளியில் அமர்ந்து இயற்கையை(!) ரசித்துக் கொண்டிருந்த நேரம்,  எங்களைக் கடந்தவள் தான் அழகு தேவதை ரேவதி. "யாருடா அவ, இத்தன நாளு நம்ம கண்ணுல படாம போயிட்டா", அவளைப் பார்த்ததும் தினேஷ் சற்றே சுறுசுறுப்படைந்தான் புள்ளிமானைக் கண்ட வேடன் போல் என்பது அனைவரும் படித்து சலித்துப் போன டயலாக் என்பதால் ரேவதியைக் கண்ட தினேஷைப் போல அவளைப் பின் தொடர ஆரம்பித்தான். நண்பனைத் தொடரும் நிழலாக மணியும் அவனுடன் சேர நானோ "இவிங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லடா, ஆவூன்னா ஃபிகரு பின்னாடி போயிருவானுங்க" என்று அவர்கள் இருவரையும் திட்டிக் கொண்டே நந்தாவின் அருகில் சென்று அமர்ந்தேன். காரணம் நானும் நந்தாவும் ஃபிகர்கள் எங்களைக் கடக்கும் பொழுது மட்டுமே சைட் அடிக்க பிடிக்கும் சோம்பேறிகள் என்பதால்!

முதல் கட்ட முற்றுகையை முடித்த வெற்றிக் களிப்புடன் இருவரும் திரும்பினர், "டேய் கணேஷ்! நீயெல்லாம் சுஜாதா புக் படிக்க மட்டுந்தான்டா லாயக்கு" என்று என்னை கடுப்பேற்றிவிட்டு, ‘‘அவ EEE பர்ஸ்ட் இயர்! எப்புடி... நாங்க கண்டு பிடிச்சோம்ல! என்ன... பேரு தான் கண்டுபிடிக்க முடியல" என்றான் தினேஷ். புவி ஈர்ப்பு விசையைக் கண்டறிந்த நியுட்டன் போல் லுக் விட்ட தினேஷைப் பார்த்து பாலா சொன்னான் "ப்பூ... இதுக்கு தான் இப்டி அலட்டிகிறியா? அவ பேரு ரேவதி, ஏரியா கிண்டி, வாராவாராம் மவுண்ட் சர்ச்க்குப் போவா, இன்னும் ஆள் இல்ல, டுலெட் தான்" அசால்ட்டாக அவ டேட்டாவை அள்ளி எறிந்தான் அசல் பாலா.  "அவ டுலெட் தான், பட், டூ லேட் இல்ல தானே... மணி! நா முடிவு பண்ணிடண்டா, இந்த தினேஷ் மோதிரம் மாத்திக்கிட்டா அது அந்த ரேவதி கூடத் தாண்டா" எப்படித்தான் இவனுங்களால மட்டும் நிமிஷத்துல ஒவ்வொரு மதத்துக்கும் மாறி, அதுக்குத் தக்கபடி பஞ்ச் டயலாக் பேச முடியுதோ? அட ஆண்டவா...!

பேஸ்புக்கும், மொபைலும் கைக்குள்ளிருக்க, இதற்குப் பின்னான காட்சிகள் அனைத்தும் அவர்களின் காதலின் வேகத்திலும்  வேகமாக நகர்ந்தன. அண்ணலும் ஏர்டெல், அவளும் ஏர்டெல்! பத்து பைசா பூஸ்டர் காதலுக்கு மேலும் மேலும் பூஸ்ட் ஏற்றிக் கொண்டிருந்தது. செமஸ்டர் லீவில் இருந்த நேரம், திடிரென்று ஒருநாள் தினேஷிடம் இருந்து போன், " மச்சி அவ போன் நம்பர மாத்திட்டாடா, பேஸ்புக்குல கூட என்ன அன்பிரண்ட் பண்ணிட்டா, எங்களுக்குள்ள எந்தப் பிரச்சனையுமே இல்லடா, ஆனா போன ஒருவாராமா அவ என்கூட ஒழுங்காவே பேசல, அதுனால நானும் கோவத்துல இருந்தேன். இதுக்குலாமாடா போன் நம்பர மாத்துவாங்க" அழாத குறை, ஆனாலும் அவன் அழவில்லை, அவன் அழாததால் இந்தக் கதை ஒரு கண்ணீர்க் கதை ஆகாமல் தப்பித்தது தற்செயலே.

என்னதான் அவன் அவளை உயிருக்கு உயிராய் காதலித்ததாய் சொன்னாலும், மணிக்கணக்கில் வருங்காலம் பற்றி பேசியதாய் சொன்னாலும், அந்த உயிர் இருந்த உறைவிடத்து முகவரி கேட்கவேண்டும் என்று மட்டும் அவனுக்குத் தோன்றவில்லை, அதை துப்பறியலாம் என்று குத்துமதிப்பாய் வண்டிகளில் ஏறி, கிண்டியைச் சுற்றி, தெண்டமாய் அலைந்து முண்டங்களாய்த் திரும்பியதுதான் மிச்சம்! அவள் முகவரி  கண்டுபிடிக்க முடியவில்லை. நாளொரு புலம்பலும் பொழுதொரு சோகப்பாட்டுமாக இவனது காதல் தோல்வி(?)யைப் போன்ற தோல்வி எங்களை வாட்டத்தொடங்கியது- அதிலும் என்னை மிக அதிகமாக! காதல் தோல்வியானது காதலித்தவனை விட அவனது நண்பர்களை அதிகம் தாக்க வேண்டும் என்பது எவன் விட்ட சாபமோ தெரியவில்லை. எதுவானாலும் அவள் கல்லூரி வந்து தானே ஆக வேண்டும், அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று தினமும் அவனிடம் உருவேற்றிக் கொண்டே இருப்பேன். "ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷப்பா! இனி கல்யாணம் ஆனவன்கூட மட்டும் தான் பிரண்ட்ஷிப் வாசிக்கணும்டா கணேஷா. முடியல்ல..."      

பரபரப்பான இறுதி கட்டம் என்பதால், இனிவரும் வரிகளில் பரபரப்பே இல்லாவிட்டாலும் சற்றே பரபரப்பாய் இருப்பது போல் படியுங்கள், எங்குலச்சாமி பாடிகாட் முனி உங்களுக்கு நல்லாசி வழங்குவாராக.

அவளைச் சந்திக்க வேண்டிய நாளும் வந்தது, கல்லூரி வராண்டாவில் நண்பிகளுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தளிடம் எந்த மாற்றமும் இல்லை. இவளை இப்படி ஒரு சந்தோசமான சூழ்நிலையில் பார்த்ததும் எங்களுக்கு இருப்பு கொள்ளவில்லை, அறச்சீற்றம் என்னுள் கொஞ்சம் அதிகமாகவே பிரவாகம் எடுத்தது. இருக்காதா பின்னே..? இத்தனை நாள் இவளால் தினேஷ் தந்த தொல்லைகளை அனுபவித்தது எதுவுமே அறியாத இந்த பால(கன்) கணேஷ் அல்லவா! மணியும் தினேஷும் என்னைப் பின் தொடர, நான் அவள் அருகில் செல்ல எங்களை மற்றுமொரு புதிய மற்றும் சற்றும் அறிமுகமில்லாத மனித ஜந்து நெருங்கியது. எங்களைப் பார்த்ததும் அவளிடம் எவ்வித மாற்றமும் இல்லை. இயல்பாக பேசத் தொடங்கினாள் "ஹாய் கணேஷ்! சாரிப்‌பா, ரியலி சாரி! உங்க யாரையும் என்னோட மாரேஜ்க்கு கூப்பிட முடியல, இதோ பக்கத்துல நிக்குறாரே மிஸ்டர் கிறிஸ்டோபர்! இவரு தான் என்னோட ஹஸ்பண்ட். உங்க டிபார்ட்மென்ட்ல தான் புதுசா ஜாயின் பண்ணி இருக்காரு"

ப்யூஸ் போன மெர்க்குரி பல்பாக வெறும் சிரிப்பை மட்டும் உதிர்த்துவிட்டு அதிர்ச்சியில் நடையைக் கட்ட ஆரம்பித்த பொழுது தான் மீண்டுமொரு பேரதிர்ச்சியைக் கொடுத்தாள் அந்த மாபாவி...  "அப்புறம் கணேஷ், இனி என் பின்னாடி சுத்துறது, என் நம்பர கண்டுபிடிக்க ட்ரை பண்றது, இதெல்லாம் வேணாம், ஒழுங்கா படிக்கிற வழிய மட்டும் பாருங்க" என்று கறாராக சொல்லிவிட்டு 234 தொகுதியிலும் வெற்றிபெற்ற கட்சித் தலைவி மாதிரி சிரித்தாள். நான் டெபாசிட் இழந்த வேட்பாளராகி தலையைத் தொங்கப் போட்டுக் கொள்ள, அருகில் இருந்த அவளது ஹஸ் கிறிஸ் என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்....

"அடிப்பாவி! உனக்கு நூல் விட்டது ஒருத்தன், அல்வா கிண்டினது ஒருத்தன், ஆனா கடைசில ஆப்பு மட்டும் எனக்கா? கணேஷா... நீ பேசாம மாடு மேய்க்கவே போயிருடா கணேஷா..!" உள்ளேயிருந்து உரக்கக் குரல் கொடுத்தது மனஸ்! அவ்வ்வ்வ! ஆனானப்பட்ட கணேஷான எனக்கு மட்டும் கொஞ்சம் சீரியசான காமெடி ரோல் என்று நான் முதல்லயே சொன்னது இதுனால தானுங்கோ...!

========================================================

பி.கு.: ‘அடங்கொண்டு போராடிய சீனு’ என்று நான் கலாய்த்த பதிவைப் படித்த ‘திடங்கொண்டு போராடு’ சீனு இந்தக் கதையை எழுதி அனுப்பி, ‘இது என்னோட பதில் கலாய்ப்பு. இது நல்லாயிருக்குன்னு நீங்க நினைச்சீங்கன்னா, இதுவும் உங்க தளத்துலதான் வரணும்’னு நிஜமாவே அடம் பிடிச்சார். அதனால சீக்கிரமே கு.மி.சி. ஆகப்போற சீனுவை பின்விக்கும்... ஸாரி ஊக்குவிக்கும் விதமாக தான் எழுதின கதை(?)ய எனக்குத் தாரை வார்த்துத் தந்த அவருக்கு நன்றி சொல்லி, அதை இங்கே உங்கள் பார்வைக்கு வைத்தேன்!
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube