Wednesday, September 26, 2012

சரிதாவும், செம்மொழியும்

Posted by பால கணேஷ் Wednesday, September 26, 2012

தொலைக்காட்சிகளை ‘தொல்லைக்காட்சிகள்’ என்று அழைப்பதில் யாருக்கும் ஆட்சேபணையிராது. ஆனால் என் விஷயத்தில் ‘கொலைக்காட்சி’ என்றே சொல்லலாம் போல எனக்குள் ‘கொலவெறி’யைக் கிளப்பி விட்டது சமீபத்தில். எங்கள் தெருவிலிருக்கும் ஒரு குடும்பத் தலைவி ஜுபிடர் டிவி நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசும் வாங்கி வந்து விட்டாள். அவ்வளவுதான்... தானும் ஒரு டிவி நிகழ்ச்சியில் பரிசு வாங்கி விட வேண்டுமென்று தீர்மானமே (லேடீஸ் சைகாலஜி!) செய்து விட்டாள் சரிதா. விளைவாக...

லுவலகம் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த என்னிடம் வந்தாள் சரிதா. ‘‘என்னங்க... அலுவலகத்திலிருந்து திரும்புகையில் எனக்கு ஒரு முகப்பூச்சுப் பொடி டப்பா வாங்கி வாருங்கள்...’’ என்றாள்.

‘‘சாம்பார் பொடி, மிளகாப் பொடின்னுதானே கேப்ப... அதென்னது புதுசா முகப்பூச்சு்ப் பொடி?’’ என்றேன். ‘‘இதோ பாருங்கள். இதுதான்...’’ என்று அவள் எடுத்துக் காட்டியது அவள் பவுடர் டப்பாவை.

‘‘அடக்கடவுளே... ஃபேஸ் பவுடர் தீர்ந்துடுச்சு, வாங்கிட்டு வாங்கன்னு சொல்ல வேண்டியதுதானே? இதுக்கு ஏன் தமிழ்ப்படுத்திக் கொல்ற?’’ என்றேன் புரியாமல்.

‘‘அதுவா... ஜுபிடர் தொலைக்காட்சியில் ‘கொல்லுங்கம்மா, கொல்லுங்க’ என்று ஒரு நிகழ்‌ச்சி நடத்துகிறார்கள். அதை நடத்துபவரிடம் ஆங்கில வார்த்தை எதுவும் கலக்காமல் தொடர்ந்து மூன்று நிமிடம் தமிழில் உரையாட வேண்டுமாம். அப்படி உரையாடி விட்டால் அளவற்ற பரிசுகள் தருகிறார்கள். நான் அவற்றை அடைவதென முடிவு கட்டி விட்டேன். நிகழச்சிக்கும் விண்ணப்பித்து விட்டேன். ஆதலால் இப்போதிருந்தே தனித் தமிழில் பேசத் துவங்கி விட்டேன்’’ என்றாள்.

‘‘அடியேய்... முதல்ல ஜுபிடர்ங்கற அவங்க டிவி பேரை தமிழ்ல வெக்கச் சொல்லு. அப்புறம் நிகழ்ச்சி நடத்தி தமிழை வளக்கலாம்...’’ என்றேன். ‘ஙே’ என்று விழித்தாள். ‘‘அட, ஆமால்ல...’’ என்றாள்.

ப்ப ஆரம்பிச்சதுங்க. தொடர்ந்து ஒரு வாரமா இங்கிலீஷ் கலக்காம பேசறேன்னு கொலையாக் ‌கொன்னுட்டிருக்கா. நேத்திக்கு காலையில ‘‘நாதா..’’ என்றபடி அருகில் வந்தாள்.

‘‘என்னது... நாதனா? யார் அவன்? அவன் பேரச் சொல்லி என்னைக் கூப்பிடற?’’ என்றேன்.

‘‘ஐயகோ! கணவனை அப்படி அழைப்பார்கள். நீங்கள் பழைய திரைப்படங்களில் பார்த்ததில்லையா? ’’

‘‘டிவில ஓசில போடறானேன்னு எம்.கே.டி. படம்லாம் பாக்காதன்னா கேக்கறியா? இப்டில்லாம் விபரீதமா கூப்பிட்டுக்கிட்டு... சரி, என்ன விஷயம்னு சொல்லு...’’

‘‘மா‌லை அலுவலகத்திலிருந்து விரைவாய் திரும்பி விடுங்கள். நாம் கடற்கரைக்குச் சென்று, பின் பெரிய அங்காடிக்குச் செல்லலாம். அங்கே நம் இல்லத்திற்காய் சில பொருட்களும், எனக்கு சில அழகுசாதனப் பொருட்களும் வாங்கி வர வேண்டும்.’’ என்றாள்.

‘‘பெரிய அங்காடியா? அப்படின்னா?’’ என்று நான் விழிக்க, ‘‘இதைத்தான் இயம்பினேன் நான்’’ என்று அவள் எடுத்துக் காட்டிய கவரில் Big Bazaar என்றிருந்தது. ‘‘ஐயோ... ஐயோ...’’ என்று தலையிலடித்துக் கொண்டேன். அந்தக் கணம் ‘பளிச்’சென்று ஒரு ஐடியா வந்தது. ‘‘சரி, உனக்கெதுக்கு அழகுசாதனப் பொருட்கள்லாம்? அதெல்லாம் சாதாரணப் பெண்களுக்குத்தான்... நீதான் பேரிளம் பெண்ணாச்சே...’’ என்றேன் ஐஸ் குரலில்.

‘‘என்ன... நான் அவ்வளவு இளமை(?)யாகவா தெரிகிறேன்!! மிக்க மகிழ்ச்சிங்க...’’ என்றாள் வெட்கமாக. சரியான அர்த்தம் தெரிந்திருந்தால், நான் இந்தப் பதிவு எழுத முழுதாகத் தேறியிருக்க மாட்டேன். (ஹேமா, சசிகலா மாதிரி கவிஞர்கள் யாரும் போட்டுக் குடுத்துராதீங்கப்பா)

ஐஸ் வைத்த கையோடு அடுத்த கோரிக்கையை வைத்தேன். ‘‘சரி, திருவல்லிக்கேணில இந்தப் பதிப்பகத்துக்குப் போயி, ‘கல்கி களஞ்சியம்’னு இவங்க ஒரு புக் போட்டிருக்காங்க. வாங்கிட்டு வந்துடேன் ப்ளீஸ், ஈவ்னிங் நாம நீ சொன்ன மாதிரி பீச்சுக்குப் போகலாம்’’ என்றேன். ‘‘சரிங்க.....’’ என்றாள் பல்லெல்லாம் வாயாக.

மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது. ‘‘என்னங்க இன்னிக்கு இவ்வளவு லேட்?’’ என்றபடி வரவேற்றாள் என் இல்லாள்.

வியப்பாகப் பார்த்தேன். ‘’சரி... குணமாயிட்டியா? ஐமீன்... இங்கிலீஷ் கலந்து சாதாரணமாப் பேச ஆரம்பிச்சுட்டியே...’’ என்றேன்.

‘‘ஆமாங்க. அந்த ப்ரொக்ராம்ல கலந்துக்கற எண்ணத்தையே இன்னிக்கு காலைலயே கை விட்டுட்டேன்...’’ என்றாள். ‘‘நன்று இந்த திடீர் (நல்ல) முடிவுக்கு காரணம் யாதோ?’’ என்றேன்.

‘‘அதுவா... காலைல நீங்க ஆபீஸ் போகும் போது திருவல்லிக்கேணில ஒரு பப்ளிகேஷன் ஆபீஸ் போய் புக் ஒண்ணு வாங்கி வெக்கச் ‌சொன்னீங்கல்லியா... அதுக்காக பஸ் பிடிச்சேன். கண்டக்டர் வந்ததும், டிக்கெட் கேட்டேங்க. அதுக்கு கன்னாபின்னான்னு திட்ட ஆரம்பிச்சுட்டான்...’’

‘‘டிக்கெட்டை கண்டக்டர்ட்டதானே கேட்டாகணும்? அதுக்கு ஏன் திட்டினான்?’’

‘‘ஐயா, பனிக்கூழ் இல்லத்துக்கு ஒரு சீட்டு தாருங்கள்- அப்படின்னு கேட்டேன். ‘ஙே’ன்னு முழி்ச்சான். ‘அங்கல்லாம் இந்த பஸ் போகாதும்மா’ அப்படின்னான். ‘இல்லை ஐயா, திருவல்லிக்கேணிக்கு முந்தைய நிறுத்தமே அதுதான்’ன்னேன் நான். ‘ஐய, அது ஐஸ் ஹவுஸ்ம்மா’ன்னான் கண்டக்டர். ‘நான் அதைத்தான் ஐயா தமிழில் இயம்பினேன்’ன்னேன் நான். அவ்வளவுதாங்க... நான்ஸ்டாப்பா கத்த ஆரம்பிச்சுட்டான். ‘புரியற மாதிரி தமிழ்ல(!) கேட்டா இன்னா... நமக்குன்னே வர்றாங்க பாரு’ன்னு ஆரம்பிச்சு அவன் கத்தறான். பஸ்ல எல்லாரும் சிரிக்கறாங்க. எனக்கு ரொம்ப இன்சல்ட்டாப் போச்சு. இந்த வம்பே வேண்டாம்னு நார்மலுக்கு மாறிட்டேன்’’ என்றாள்.

வீட்டுக்குள் என்னிடம் தனித் தமிழ் பேசிக் கொல்லும் இவளை வெளி நபர்களிடம் அனுப்பி வைத்தால் வாங்கிக் கட்டிக் கொண்டு சரியாகி விடுவாள் என்று கணித்த என் திட்டத்துக்கு வெற்றி! நானே என் முதுகில் தட்டிக் கொண்டேன்.

‘‘ஆஹா... இல்லாளை வசைபாடுதல் எம்மால் இயலாததன்றோ? அதைச் சாதித்த அந்த நடத்துனர் வாழ்க!’’ என்றேன். அருகில் வந்து வினோதமாகப் பார்த்தாள். ‘‘என்னாச்சுங்க... ஏன் இப்போ இப்படி நீங்க தனித்தமிழ்ல பேசறீங்க?  வேணாங்க...’’ என்றாள்.

‘‘அங்ஙனம் நீ இயம்பினால் யாம் விட்டுவிடுவோமா? எம்மை கடந்த வாரம் முழுதும் தனித்தமிழில் பேசி மகிழ்வித்த(!) உம்முடன் இனிவரும் இரண்டு திங்கள் யாமும் தனித்தமிழில் உரையாடுவதென்பது எமது துணிபு’’ என்றேன்.

சரிதாவின் கண்கள் பிதுங்கின; உதட்டைச் சுழித்தாள் (அழுகையின் ஆரம்பம்!) ‘‘ப்ளீஸ் வேண்டாங்க... நான் டிவில சீரியல் பாத்து அழறது போதாதுன்னு நீங்க வேற அழ வெக்காதீங்க. இனி சீரியலும், சினிமாவும் தவிர வேற எதுவும் பாக்க மாட்டேங்க’’ என்றாள்.

அப்பாடா ஒரு வழியாக டிவி தொல்லையிலிருந்து விடுதலை! ஹி... ஹி... இன்னும் நான் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கிறேனாக்கும்..!!

Monday, September 24, 2012

மொறு மொறு மிக்ஸர் - 12

Posted by பால கணேஷ் Monday, September 24, 2012

திவர் திருவிழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் எனக்கு அலுவலகத்திலும் நிறைய வேலைகள் இருந்ததால் Mental Stress அதிகமாக இருந்தது. விளைவாக... ஸ்டேட் பாங்க் ஏடிஎம்ல போய் கார்டை சொருகிட்டு பின் நம்பர் கேட்கும்போது பார்த்தா... நம்பர் மறந்து போயிட்டுது. இதுவா, அதுவான்னு அடிச்சுப் பாக்கறேன். மூணு தடவைக்கு மேல ட்ரை பண்ண முடியாதுன்னு கார்டை ரிஜக்ட் பண்ணிடுச்சு. சரி, நிதானமா யோசிச்சு ட்ரை பண்ணலாம்னு வீட்ல உக்காந்து நம்பரை நினைவுக்கு கொண்டு வர ட்ரை பண்றேன். ம்ஹும்...! தோணவே இல்லை. அடுத்த நாளும் குருட்டாம்போக்ல ட்ரை பண்ணிப் பாத்து தோத்துட்டேன். சரி, அடுத்த வாரம் டைம் கிடைக்கறப்ப, பேங்க்ல எழுதிக் குடுத்து வேற பின் நம்பர்தான் வாங்கணும்னு முடிவே பண்ணிட்டேன்.

ஆனா அடுத்து வந்த ரெண்டு வாரங்கள்ல அதை செயல்படுத்த முடியலை. மூணாவது வாரத்துல திரும்பவும் அலுவலக, சொந்த வேலைகளின் நெருக்கடி மிக அதிகமாக ஏற்பட்டு டென்ஷன் பண்ணியது. அம்மா பணம் தேவைன்னு சொன்னதால மறுபடி ஏடி‌எம் ஞாபகம் வந்து ட்ரை பண்ணலாமேன்னு போனேன். எனக்கு இருந்த மனக்குழப்பத்துல நம்பரை யோசிக்காம, டைப்பிட்டு தொகையச் சொன்னேன். பணம் குடுத்துடுச்சு அந்த மிஷின். ‘ஆஹா, இப்ப என்ன நம்பரை அடிச்சோம்?’ யோசிச்சப்ப, சோடால கோலிய உடைச்சதும் காஸ் பொங்கற மாதிரி நம்பர் அடி மனசுலருந்து மேல வந்துடுச்சு. டக்னு குறிச்சு வெச்சுக்கிட்டேன்.

தமிழ் சினிமாவுல தலையில அடிபட்டு பைத்தியமாயிட்ட ஹீரோ/ஹீரோயினுக்கு மறுபடி ஒரு சீன்ல அதே மாதிரி அடிபட்டதும் நினைவு திரும்பிடுச்சுன்னு வர்ற காட்சிகளை ஏகத்துக்கு கமெண்ட் அடிச்சிருக்கேன்... இப்போ டென்ஷன்ல மறந்துபோன நம்பர் டென்ஷன்ல நினைவுக்கு வந்ததைப் பார்த்தா... அந்தக் காட்சிகள்லகூட ஒரு லாஜிக் இருக்கோன்னுதான் தோணுது. உங்களுக்கு இந்த மாதிரி விசித்திர அனுபவம் ஏற்பட்டதுண்டா?

=========================================

சீதைக்கு ராமனை மணக்கோலத்தில் கண்டுவிடக் கொள்ளை ஆசை! யாருமறியா வண்ணம் கார்மேக வண்ணனைக் கடைக்கண்ணால் கண்டாள். அப்போது தோழியர் சீதையின் கைகளைக் கிள்ளினராம்! உடனே சீதை தலைகுனிந்தபோது அந்தச் சேடியர் கூட்டம் அவளைப் பார்த்துச் சிரித்ததாம்!

உண்மையில் நடந்தது என்ன? கடைக் கண்களால் ராமனை நோக்‌கியபோது உள்ளத்தால் மட்டுமின்றி உடலாலும் சீதை பூரித்துப் போனாளாம். அவளது கைகள் பூரித்தபோது வளையல்கள்தான் அவ்வாறு கிள்ளினவாம். அப்போது தோழியர் கிள்ளுவதாக எண்ணி சீதை ‌தலைகுனிந்தபோது- ராமனைக் காணாத அந்தச் சிறுபொழுதில் அவள் ரொம்பத் தளர்ந்து போனாளாம். அதனால் பூரிப்பெல்லாம் போய் அவளது வளையல்கள் தங்கள் பழைய நிலையை அடையும்போது ஏற்படுத்திய சத்தம்தான் தோழியர் சிரிப்பாகத் தோன்றியதாம். கம்பரின் வர்ணனைக்கு ஈடு, இணை எதுவும் உண்டா? (என் மாணவப் பருவத்தில் சீதா கல்யாணம்’ கதாகாலட்சேபத்தில் கேட்டது)


=========================================


 =========================================

கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் அவர்கள் தன் வர்ணனையாளர் வாழ்வில் நடந்த பல சுவாரஸ்ய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் என்று சொல்லியிருந்தேனில்‌லையா... அவற்றில் சில இங்கே:

= தமிழில் வர்ணனை செய்யும் போது மொழியைச் சரியாகக் கையாள்வது மிக அவசியம். கிரிக்கெட் பற்றி நான் அதிகம் தெரிந்திராதவனாக இருந்த சமயத்தில் ஒருமுறை கமெண்டேட்டர் பாக்ஸில் இருந்தேன். வர்ணனை செய்பவர், ‘‘நமது பிள்ளைகள் நன்றாக விளையாடுகின்றனர்’’ என்றார். ‘‘என்னங்க இது?’’ என்று கேட்டேன். ‘‘Our boys are playing well-ங்கறதை தமிழ்ல சொன்னேன் ஸார்..’’ என்றார். எனக்குச் சிரிப்பாகப் போய் விட்டது. ‘‘நமது இளைஞர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர்-ன்னு சொல்லுங்க ஸார். இப்படி நேரடியாவா மொழிபெயர்ப்பீங்க. ஸில்லி பாயிண்ட்ல கேட்ச் பிடிச்சான்ங்கறதை ‘முட்டாள் முனையில் நின்று பந்தைப் பிடித்தான்’ அப்படின்னு சொல்வீங்க போலருக்கே...’’ என்று நான் சொன்னதும் அனைவரும் சிரித்து விட்டனர். அவர் ‌சொன்னார்: ‘‘நீங்க எனக்கு நல்லா தமிழ் பேசக் கத்துக் குடுங்க. நான் உங்களுக்கு கிரிக்கெட் கத்துத் தந்துடறேன்..’’ என்று.

= ஒரு முக்கிய பிரமுகர் வந்திருந்த சமயம், கிரிக்கெட் மேட்சைப் பார்த்துவிட்டு கமெண்டேட்டர் பாக்ஸ்க்கும் விசிட் செய்துவிட்டு கீழே வந்தார். அங்கே எதிர்ப்பட்ட என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தனர். ‘‘Oh! I met a Abdul Jabbar in upstairs’’ என்றார் அந்தப் பிரமுகர். நான் சொன்னேன். ‘‘அந்த அப்துல் ஜப்பாருக்குத் தமிழ் தெரியாது. இந்த அப்துல் ஜப்பாருக்கு கிரிக்கெட் தெரியாது’’ என்று. அவர் சிரித்து விட்டார்.

= ஒரு சமயம் தமிழக கிரிக்கெட் அணியில் ‌ராமகிருஷ்ணன், சிவராமகிருஷ்ணன், கமெண்டேட்டர் ராமமூர்த்தி என்று அரங்கம் முழுவதுமே ‘ராம’ மயமாக இருந்தது. அப்போது ஒருவர் இப்படி கமெண்ட் அடித்தார்- ‘‘இத்தனை ராமன்களுக்கு நடுவுல ஒரு பாபர் இருப்பாரே...’’ என்று. உடனே அதற்கு பதில் தந்தார் ராமகிருஷ்ணன்: ‘‘அவர் பாபர் இல்லை, பாபர்ராம்!’’ என்று. அனைவரும் கைதட்டி ரசித்தனர்.

= கிரிக்கெட் வர்ணனையாளர்களில் என் சீனியரான ராமமூர்த்தி செய்யும் வர்ணனை எனக்கு ‌ரொம்பப் பிடிக்கும். ஒரு சமயம் டெஸ்ட் மேட்ச் நடந்து கொண்டிருந்த போது சுனில் கவாஸ்கர் அவுட்டாகி விட்டார். நைட் வாட்ச்மேனாக பிரசன்னா உள்ளே வருகிறார். அப்போது இவர் சொன்னது: ‘‘பொக்கிஷமே பறி போய்விட்ட பிறகு இந்த நைட் வாட்ச்மேன் வந்து எதைப் பாதுகாக்கப் போகிறார்?’’ என்று.

=========================================

சுவின் பால் பசுவின் உடம்பிலிருந்து உற்பத்தியாகிறது. அது எப்படி சைவ உணவாக முடியும்? என்றொரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வாரியார் தந்த பதில்: ‘‘உயிர்களைக் கொல்வது பெரும் பாவம். கொன்று அதனால் வருவது இறைச்சி. அதையுண்பது மகாபாவம். கொல்லாமை, புலாலுண்ணாம‌ை என்று இரு அதிகாரங்களில் திருவள்ளுவர் இதன் கொடுமையைக் கூறுகின்றார். கறக்கின்ற பாலைப் பருகுவது குற்றமன்று. அது அசைவ உணவு ஆகாது. பால் கறக்கவில்லையானால் பசுவுக்குத் துன்பம். கன்றுக்கு இரு மடிகளை விட்டு மற்ற இரு மடிகளில் இருந்து பால் கறக்க வேண்டும். பசுவின் பால் புனிதமானது; சத்துவ குணத்தைத் தர வல்லது. ‘பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்’ என்று ஒளவைப் பிராட்டியார் பாடிய பா‌டலை அறிக. (‘வாரியார் விருந்து’ நூலிலிருந்து)

Friday, September 21, 2012


சில பேர் கிட்ட வருஷக்கணக்கா பழகினாலும் நெருக்கமா உணர முடியாது. சில பேர் கிட்ட ஒரு மணி நேரம் பழகினாலும் பல வருஷம் பழகினவங்க போல உணர்வோம். அப்படிப்பட்ட ரகத்தைச் சேர்ந்தவங்கதான் துளசி டீச்சரும் கோபால் சாரும். நியுசியிலருந்து அவங்க வந்திருக்கறது தெரிஞ்சதும் தி.நகர்ல அவங்க தங்கியிருந்த இடத்துக்குப் போய் சந்திச்சப்ப என்கிட்ட புதிய அறிமுகங்கள்ங்கற எண்ணமே வரல்லை. நேத்திக்கு நடந்த அவங்களோட சஷ்டியப்த பூர்‌த்தியிலயும், மாலையில் நடந்த பிறந்ததின விழா சந்திப்பிலும் முழுமையா கலந்துக்கறதுக்கு ஒரு வாய்ப்புக் கிடைச்சதுல ரொம்ப ரொம்ப சந்தோஷம் எனக்கு.

காலையில மைலாப்பூர்ல இருக்கற ராகசுதா ஹால்ல ஹோமம் வளர்த்து சம்பிரதாயப்படி 60ம் கல்யாண வைபவம் நடந்துச்சுங்க. வல்லிம்மா புன்னகை முகமா என்னை வரவேற்றாங்க. நண்பர் உண்மைத் தமிழன் வந்திருந்தார். அவரோட பேசிக்கிட்டே மேடையில நடக்கற விசேஷங்களை கவனிச்சுட்டிருந்தேன். கொஞ்சநேரத்துல பாரதி மணி ஐயா வரவும், உண்மைத் தமிழன் அவரோட பேசப் போயிட்டார். நான் சும்மா ஹாலைச் சுத்தி வந்தப்ப, ஒரு பெரியவர் என்னை நிறுத்தி, நான் நான்தானா என்று விசாரித்தார். (நீங்கதானே பாலகணேஷ் என்று). ‘‘என் பேரு சுப்புரத்தினம்’’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். ‘சுப்புத்தாத்தா’ என்று அன்பாக நாங்கள் அழைக்கும் அவரை பதிவர் திருவிழாவி்ன்போது சந்தித்திருந்தேன். ஆனாலும் அதிகம் பேச முடிந்ததில்லை. அந்தக் குறை நேற்று நீங்கியது. சுப்புத்தாத்தா எனக்கு ஆசி வழங்கி, நான் எழுதறதை ரசிச்சதா சொன்னது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியங்கள்ல ஒண்ணுன்னுதான் நினைக்கறேன்.

கொஞ்ச நேரத்துல ஷைலஜாக்கா வந்தாங்க. பெங்களூர்ல இருந்து இந்த விழாவுக்காக சென்னை வந்து ரெண்டு நாளாச்சுன்னு சொன்னாங்க. அக்காட்ட பேசிட்டிருந்தா, நேரம் போறதே தெரியாது இந்தத் தம்பிக்கு. ஷைலஜாக்கா, கவிதாயினி மதுமிதாவை எனக்கு அறிமுகப்படுத்தி வெச்சாங்க. அவங்களைப் பத்தி நிறைய சந்தர்ப்பங்கள்ல கேள்விப்பட்டிருந்த எனக்கு சந்திச்சுப் பேசினதுல ரொம்ப சந்தோஷம். அதுலயும் அவங்க ரொம்பவே சிம்பிளா, அன்பா, கனிவா உரையாடினது மேலும் குஷிதான் போங்க.

மணமக்கள் மாங்கல்ய தாரணம் முடிஞ்சு மூத்தவங்க கிட்ட ஆசி வாங்கியும், இளைஞர்களை ஆசிர்வதிச்சுக்கிட்டிருந்தபோது ஷைலஜாக்கா, வல்லிம்மா, மதுமிதா எல்லாருமாச் சேர்ந்து ‘நாளாம் நாளாம் திருநாளாம், துளசிக்கும் கோபாலுக்கும் மணநாளாம்’ன்னு காதலிக்க நேரமில்லை படப் பாட்டின் மெட்டிலேயே வரிகளை எழுதிப் பாடினாங்க. ஒருமித்த குரல்ல பாடின அந்தப் பாட்டுல அவ்வளவு இனிமை! எல்லாரும் கை தட்டி ரசிச்சோம். அருமையான மதிய விருந்தை ஒரு கை பார்த்துட்டு ‘மாலையில் சந்திக்கலாம்’னுட்டுப் பிரிஞ்சோம்.

வ்னிங் 7 மணிக்கு உட்லண்ட்ஸ் ஹோட்டல்ல ‘கெட்-டு-கெதர்’க்காக நான் 6.50க்குப் போயிட்டேன். பர்த்டே பேபியான கோபால் சார் ட்ரிம்மா ட்ரஸ் பண்ணிக்கிட்டு எல்லாரையும் வெல்கம் பண்ணிட்டிருந்தாங்க. காலையில மணமகளா மேடையில இருந்ததால துளசி டீச்சர் கைல எடுக்க இயலாம இருந்த ஆயுதத்தை (கேமிரா) இப்ப கைல எடுத்திருந்தாங்க. என்னையும் சுட்டுத் தள்ளினாங்க. கிரிக்கெட் வர்ணனைகள்ல புகழ்பெற்ற அப்துல் ஜப்பார் அவர்கள் வந்திருந்தாங்க. ரெண்டு வார்த்தை பேசிட்டிருந்தப்ப வலைச்சரம் சீனா அவர்கள் வந்திருக்கறதைப் பார்த்துட்டு அவரோட உரையாடிட்டிருந்தேன். அப்ப, தலைநகரிலிருந்து வந்திருக்கற என் நண்பர் வெங்கட் நாகராஜ் என்ட்ரி கொடுத்தார். அவரோட கொஞ்ச நேரம் பேசிட்டு சந்தோஷமா பொழுது போயிட்டிருந்த நேரத்துல வரிசையா நண்பர்கள் எல்லாரும் வர ஆரம்பிச்சாங்க.

மோகன்குமார், தங்கை ஸாதிகா, உண்மைத்தமிழன், லதானந்த், கேபிள் சங்கர், பலாபட்டறை சங்கர், புதுகை அப்துல்லா, ஜோதிஜி, கேஆர்பி செந்தில், வலைச்சரம் சீனா ஐயா, வெங்கட் நாகராஜ், யுவகிருஷ்ணா, அதிஷா, ஷைலஜாக்கா, மதுமிதா, இன்னும முன்பு நிறையப் பதிவுகள் எழுதிட்டு இப்ப அதிகம் எழுதாத சில பதிவர்கள்ன்னு கிட்டத்தட்ட மினி பதிவர் திருவிழா மாதிரி ஒரு ஃபீலிங் வந்துட்டுது. எல்லாரோடயும் ஜாலியா பேசிட்டு இருந்ததுல (எனக்கு ஜாலி; அவங்களுக்கு?) நேரம் போனதே தெரியலை. அப்புறம்... கோபால் ஸார் வெட்டினாரு - கேக்கை; ஊட்டினாரு- துளசி டீச்சருக்கு. எல்லாரும் பாட்டுப் பாடி (பயமுறுத்தி?) வாழ்த்துச் சொன்னோம். ஷைலஜாக்கா அருமையான கவிதை ஒண்ணை எழுதிட்டு வந்திருந்தாங்க. அதை மேடையில படிச்சு, அத்தனை பேரின் கைதட்டலையும் அள்ளிக்கிட்டாங்க.

யுவகிருஷ்ணாவை அறிமுகப்படுத்தினார் மோகன்குமார். முன்னால மார்னிங் ஃபங்ஷன் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்தப்ப மோகன் போன் பண்ணி, ‘‘ஃபங்ஷனுக்கு யுவகிருஷ்ணா வந்திருந்ததா +ல எழுதியிருக்காரே. பாத்துப் பேசினீங்களா?’’ன்னு கேட்டார். ‘‘அடடா... நான் கவனிக்கலையே மோகன்...’’ன்னு வருத்தமா சொன்னேன். மாலையில பார்ட்டில மோகன் அறிமுகப்படுத்தினதும்தான் தெரிஞ்சது- காலையிலயே அவரை கவனிச்சிருந்தும் யார்னு தெரியாததால ஹலோ சொல்லாம இருந்திட்டேன்னு. அவர்கிட்ட ஒரு ஸாரி சொல்லிட்டு, அப்புறம் நல்லாவே பேசினது ரொம்பத் திருப்தி எனக்கு.

அப்புறம் என்ன... பஃபே விருந்துதான். கைல ப்ளேட்டைத் தூக்கிட்டு உணவு வகைகளைக் கொறிக்கும் இந்தரக பஃபே பார்ட்டிகள் எனக்கு அலர்ஜியா இருந்தாலும், சமீபகாலங்கள்ல அதிகமா அட்டெண்ட் பண்றதால சமாளிக்கப் பழகிடுச்சு. கைல தட்டு ஏந்திக்கிட்டு டிபன் வகைகளை கொறிச்சுட்டிருந்தப்ப, எழுத்தாளர் ஷங்கரநாராயணன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். ஃபங்ஷன் ஹாலில் பார்த்தும் யாரென்று அறியாதிருந்த எனக்கு ஆச்சரியம். அவருக்கு சங்கர் நாராயணனை (கேபிள் சங்கர்) அறிமுகம் செய்து வைத்தேன். கேபிளுக்கு அவரை ஏற்கனவே தெரிந்திருந்தது. முன் சந்தித்த சந்தர்ப்பங்களை சொல்லி ஞாபகப்படுத்தினார். உணவு முடித்து வந்ததும் அப்துல் ஜப்பார் அவர்கள் தன் கிரிக்கெட் வர்ணனையாளர் வாழ்விலிருந்து சில சுவாரஸ்ய சம்பவங்களைப் பகிர்ந்து கலகலப்பாக்கினார். (அஸ்குபுஸ்கு! இங்க சொல்லிடுவனா... தனிப் பதிவால்ல எழுதியாகணும் அதையெல்லாம்!)

காலையிலயும், மாலையிலயும் முழுமையா இருந்து விழா நிகழ்வுகளை ரசிச்சு, கோபால்-துளசி தம்பதிகள்ட்ட ஆசி வாங்கி, நிறைய நண்பர்களோட உரையாடி... இப்படி நிறைய நிறைய மகிழ்ச்சியைத் தந்த தினம் நேத்திக்கு. ஆனா ஒரே ஒரு சின்ன வருத்தம் என்னன்னா... காலையில உண்மைத் தமிழன் தன்னோட ஸேம்ஸங் நோட்ல படம் எடுத்தார், வல்லிம்மா அவங்க கேமரால படம் புடிச்சாங்க, நானும் என் ‌மொபைல்ல பங்ஷன் போட்டோ எடுத்தேன். 

வீட்ல வந்து ஓபன் பண்ணிப் பாத்தா... டீச்சர் முகமும், கோபால் ஸார் முகமும் தண்ணிக்கடியில இருக்கற மாதிரி கலங்கலா வந்திருக்கு. நம்ம மொபைலோட க்வாலிட்டி அந்த லட்சணம்! ஈவ்னிங் பங்ஷன்ல நண்பர் கேபிள் ஒரு சூப்பரான கேமரா வெச்சு படங்களை சுட்டாரு பாருங்க... அதுக்குப் பேரு 7D கேமராவாம். அப்படி ஒரு க்ளாரிட்டி! ‌எனக்கு காதுகள்ல புகை வராத குறைதான்! மக்கா, சீக்கிரம் நாமளும் எப்படியாவது ஒரு கேமரா வாங்கி அழகழகா(!) படங்களை சுட்டுத் தள்ளிரணும்டான்னு முடிவே பண்ணிட்டேன். அதனாலதான் படங்கள் இணைக்காம இந்தப் பதிவு... ஹி... ஹி... ஹி...

Tuesday, September 18, 2012

சிரித்திரபுரம் - 1

Posted by பால கணேஷ் Tuesday, September 18, 2012
மன்னிக்கவும்.

சிரித்திரபுரம் இப்போது நாவல் வடிவம் பெறுவதால்
இங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது. 

பொறுத்தருள்க.

Monday, September 17, 2012

சென் ஸார் என்பவரைத் தெரியுமா?

Posted by பால கணேஷ் Monday, September 17, 2012

ந்தியாவில் திரைப்படங்களில் ஆபாசமான வசனங்களோ, பாடல்களோ, இறையாண்மை(அப்படின்னா?)க்கெதிரான கருத்துக்களோ இடம்பெறாமல் தணிக்கை செய்வதற்காக ‘சென்சார் போர்டு’ என்கிற ஒரு அமைப்பு இருக்கிறது. அதனிடம் சான்றிதழ் பெற்ற பின்னர்தான் திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். இந்த ‘சென்சார்’ என்கிற விஷயத்தை நான் கவனித்த பழைய படங்களிலிருந்து துவங்கி தற்காலத்திற்கு வருகிறேன்.

பாவமன்னிப்பு படத்தில் ‘பாலிருக்கும் பழமிருக்கும்’ பாடலில் ‘‘வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே, அது வேதம் செய்த குருவைக் கூட விடுவதில்லையே...’’ என்று எழுதியிருந்தார் கண்ணதாசன். சென்சார் ஆட்சேபித்ததால் இந்த வரிகள் மாற்றப்பட்டு, ‘‘வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே, அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே...’’ என்று இப்போது கேட்டால் ஒலிக்கும். உதட்டைசைவிற்கு ஏற்றதாக இருப்பதால் ‌அது பெரிதாகத் தெரியாது.

சென்சாரி் இந்த பருப்பு வேகாமல் போனது அபிநய மன்னரான எம்.ஜி.ஆரிடம்தான். ‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்தில் ‘சக்கரைக் கட்டி ராசாத்தி’ பாடலில் ‘‘உரிமை சொல்லி நான் வரவோ, என் உதட்டில் உள்ளதைத் தரவோ’’ என்று கண்ணதாசன் எழுதியிருந்தார். ‘உதட்டில் உள்ளதை’ என்ற வரிகளை சென்சார் ஆட்சேபித்ததால் ‘‘உரிமை சொல்லி நான் வரவோ, என் உயிரை உன்னிடம் தரவோ’’ என்று மாற்றிப் பதிவு செய்திருப்பார்கள். ஆனால் காட்சியில் ஸ்பஷ்டமாக தன் உதட்டையும், சரோஜாதேவியின் உதடையும் சுட்டிக் காட்டி அபிநயித்திருப்பார் எம்.ஜி.ஆர். நல்ல டமாஸு!

அப்படித்தான் ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி’ என்ற பாடலில் ‘‘மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்’’ என்று வரும் ஒரு வரிசை சென்சார் ஆட்சேபித்ததால் ‘‘மேடையில் முழங்கு திரு.வி.க. போல்’’ என்று மாற்றியிருப்பார்கள். ஆனால் எம்.ஜி.ஆரின் உதட்டசைவோ மிகத் தெளிவாக ‘அறிஞர் அண்ணா’ என்றே இருக்கும்.

கன்னாபின்ன‌ொவன்று சென்சார்‌ போர்டு இப்படி மாற்றுவதை தன் படத்திலேயே துணிச்சலாக விமர்சித்தவர் சோ! ஏதோ பெயர் நினைவில்லாத ஒரு படத்தில் கல்கத்தாவிலிருந்து வந்த சென் தம்பதியினரின் வீட்டில் அவரும் அவர் நண்பனும் குடியிருப்பார்கள். தங்கள் போர்ஷனிலிருந்து வெளிவரும் போது, ‘‘அர்ஜண்டா ஒரு போன் பண்ணனும்டா’’ என்பார் சோ. ‘‘சென் சார் கிட்ட பர்மிஷன் வாங்கிப் பண்ணேண்டா’’ என்பார் அவர் நண்பர். ‘‘சென் மேடம் நல்லவங்கடா. போன் பண்ண விடுவாங்க, சென்சார் ஒரு மடையன், முட்டாள்!’’ என்பார் சோ. அரங்கையே அதிர வைத்த வசனம் அது அந்நாளில்.

இப்படியெல்லாம் நல்ல தமிழ் வரிகளையே ஆட்சேபித்த சென்சார் என்கிற அமைப்பு பின்னாளில் அருமையாக எழுதி வரும் நம் சமகாலக் கவிஞரான வைரமுத்துவையும் விட்டு வைக்கவில்லை. உயர்ந்த உள்ளம் படத்தில் ‘‘கலசம் இங்கு கவசமாகும், காமன் அம்பு முறிந்து போகும்.’’ என்று அவர் எழுதியிருந்த வரிகளை மாற்றச் சொன்னதால், ‘‘விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம், தொடங்கு கண்ணே புதிய பாடம்’’ என்று மாற்றிப் பதிவு செய்திருந்தார்கள். வைரமுத்துவையும் விட்டு வைக்காதது இந்த சென்சார்!

இவ்வளவு விழிப்பாகச் செயல்பட்ட சென்சார் போர்டு பின்னாளில் தாராள மனம் கொண்டு ‘‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா, இல்ல ஓடிப் போயி கல்யாணம் கட்டிக்கலாமா?’ என்பது போன்ற இலக்கியத் தரமான(?) பாடல் தொடங்கி எல்லாவற்றையும் அனுமதிக்கிறார்கள். (இன்றைய ஆபாச வரிகள் அடங்கிய பாடல்களின் உதாரணங்களை விலாவரியாக அடுக்கி இதை ஆபாசப் பதிவாக மாற்ற நான் விரும்பாததால் ஒன்றை மட்டும் சொல்லியிருக்கிறேன்.) சமூகத்தில் விரசம் என்பதன் அளவுகோல் என்பது மாறிவிட்டதா... இல்லை, தொலைக்காட்சி செய்யாத கெடுதலையா சினிமா செய்துவிடப் போகிறது என்கிற அலட்சியமா... புரியவி்ல்லை.

பாடல்களில் இப்படி என்றால் வசனங்களில்... யப்பா! வசூல்ராஜா படத்தில் பிரகாஷ்ராஜ் பேசும் வசனம் ஒன்று சைலண்ட் செய்யப்பட்டிருக்கும். அடுத்த செகண்ட் கமல் இப்படிச் சொல்வார்: ‘‘இன்னா சார், பெத்த பொண்ணையே லோலாயி, பூட்ட கேஸ்ன்னு சொல்றீங்க?’’ என்று. அட ஞானசூன்யங்களா...! இப்படித் தெளிவாக வசனத்தைச் சொல்வதற்கு என்ன எழவுக்ககாகய்யா பி,ராஜ் பேசும் வசனத்தை வெட்டினீர்கள்? ஒருவேளை வில்லன் சொன்னால் ஆபாசம். கதாநாயகன் சொன்னால் ஆபாசமில்லை என்பது அளவுகோலா?

யதார்த்தமான மனிதர்களைக் காட்டுகிறேன் பேர்வழி என்று பாரதிராஜா தன் படம் நெடுக தக்காளிக்கான எதுகைச் சொல்லை இறைத்திருந்தார். அதுவும் ஆட்சேபிக்கப்படாமல் வெளியானது. இவையெல்லாவற்றையும் மிஞ்சி விவேக் என்கிற காமெடியர் தன் அங்க அசைவுகளாலும், வார்த்தைகளாலும் இரட்டை அர்த்தம் எதுவுமின்றி வெளிப்படையாக ஒற்றை அர்த்தத்திலேயே காமெடி(?) என்கிற பெயரில் கூத்தடித்து வருகிறார். (இவருக்கு ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டம் வேறு. கலைவாணர் இருந்திருந்தால் இதைக் கேட்டுக் கதறி அழுதிருப்பார்.)

இதையெல்லாம் கவனித்து வருகிற எனக்கு பல நாட்களாகவே மனதில் எழும் கேள்வி: ‘‘சென்சார் போர்டு என்கிற ஒன்று திரைப்படங்களுக்குத் தேவையா?’’ என்பதுதான். படத்தைத் தயாரிப்பவர் அதை நேரடியாக தியேட்டர்களிலோ, டிவிடிகளிலோ வெளியிட்டு விட்டால் என்ன குடிமுழுகிப் போய்விடும்? தமிழக அரசு சந்துக்குச் சந்து டாஸ்மாக் கடைகளைத் திறந்து தமிழக மக்களைக் கெடுப்பதை விடவா அதிகமாக சினிமாக்கள் கெடுத்துவிடப் போகின்றன? பேருக்கு செயல்படுகிறேன் என்று சொல்லிக் கொண்டு ஒரு அமைப்பும், அதற்கு தெண்டமாக சம்பளம் வாங்கிக் கொண்டு ஏழெட்டு அதிகாரிகளும் இருந்து கண் துடைப்பாக செயல்படுவதை விட இழுத்து மூடிவிடுவது உத்தமம் என்பது என் கருத்து.

தணிக்கைத் துறையைப் பொறுத்த வரையில் என் நிலைப்பாடு இப்படி! உங்கள் கருத்து எப்படி?

Friday, September 14, 2012

மின்னலடிக்குது மீண்டும்!

Posted by பால கணேஷ் Friday, September 14, 2012

ஹாய்...  ஹாய்... ஹாய்... எல்லாருக்கும் மீண்டும் என் பணிவான வணக்கங்கள்!

என்னடா வர்றதுக்கு ஒரு மாசமாகும், ரெண்டு மாசமாகும்னு லீவ் லெட்டர் கொடுத்த ஆசாமி மறுபடி மின்னல் வேகத்துல வந்துட்டானேன்னு நீங்க புருவத்தை உயர்த்தறது எனக்குத் தெரியுது. அதுக்குக் காரணம் ஒரு ஆட்டோக்காரர் தானுங்க. ‘‘தமிழ்ச்சங்கம் தீர்த்து வைக்காத பிரச்னையை தனியொருவனாக நின்று தீர்த்து வைத்த தருமியே...’’அப்படின்னு பாண்டிய மன்னன் ‌‌சொல்ற வசனம் மாதிரி, என் விஷயத்துல டாக்டர் தீர்த்து வைக்காத பிரச்னையை ஒரு ஆட்டோவாலா தீர்த்து வைத்தார்.

கொஞ்சம் விவரமா ப்ளாஷ்பேக்கலாம்! ஒரு வாரத்துக்கு முன்னால பெரிய கட்டி ஒண்ணு உடம்புல உருவாயிட்டுது. மல்லாக்கப் படுக்க முடியலை, சேர்ல உக்கார முடியலை, டைப் பண்ண முடியலைன்னு அதனால உண்டானது ஏகப்பட்ட முடியலைகள்! எங்க ஏரியாவுல இருக்கற எனக்குத் தெரிஞ்ச டாக்டரைப் ப‌ோய்ப் பார்த்தேன். அவர் பரிசோதனை பண்ணிட்டு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

‘‘சர்ஜரி பண்ண வேண்டியிருக்கும்னு தோணுது. ஆபரேஷனுக்கப்புறம் பத்து நாள் கம்ப்ளீட் ரெஸ்ட் எடுக்க வேண்டியிருக்கும். நான் எழுதித் தர்ற மாத்திரைகளைச் சாப்பிட்டுட்டு ஒரு வாரம் கழிச்சு வாங்க. அப்ப சொல்றேன்...’’ என்று என்னுள் பீ(பே)தியைக் கிளப்பிவிட்டு ஒரு ஊசியைப் போட்டார், பின், என்னமோ குடும்பத் தலைவி மளிகை சாமான் லிஸ்ட் எழுதுகிற தினுசில் நீளமாய் ஏகப்பட்ட மாத்திரைகள் அடங்கிய ப்ரிஸ்கிருப்ஷன் எழுதித் தந்தார்.

‘‘சாப்பிட்டதுக்கப்புறம் இந்த மாத்திரைகளைப் போட்டுக்கணும்’’ என்றார்.

‘‘எனக்கென்னவோ இத்தனை மாத்திரைகளைச் சாப்பிட்டாலே டிபன் சாப்பிட்ட மாதிரி பசியே எடுக்காதுன்னு தோணுது’’ என்றேன்.

‘‘சொன்னதைச் செய்ங்க கணேஷ். அப்பதான் குணமாகும்’’ என்றார் முறைப்புடன்.

ரியென்றுவிட்டு மாத்திரைகளை விழுங்கத் தொடங்கிய கையோடு, ‘மின்னல் வரிகள்’ வந்து உங்ககிட்டல்லாம் லீவு சொல்லிட்டேன். ‘சரி, நம்ம தொல்லையிலருந்து நண்பர்கள் தப்பிச்சாங்க’ன்னு நினைச்சேன். ஆனா என் தொலைபேசி எண்ணை அறிந்தவர்கள் தொலைபேசியிலயும், மற்ற பலர் ஈமெயில் மூலமாகவும் தொடர்பு கொண்டு, ‘‘என்னாச்சு?’’ன்னு விசாரிச்சு, நான் சீக்கிரம் குணமாக வாழ்த்துச் சொன்னப்ப ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது. அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றி!

ந்த ஆட்டோ மேட்டருக்கு வர்றேன்... நாலு நாள் டாக்டர் தந்த மாத்திரைகளைச் சாப்பிட்டதுல, ரொம்பவே குறைஞ்சு போச்சுது... மாத்திரைகள்! ஆனா கட்டியும், வலியும் மட்டும் குறையல, அப்படியேதான் இருந்துச்சு.

ஐந்தாம் நாள் அலுவலகத்திலருந்து மாநரகப் (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லீங்க...) பேருந்தில தி.நகர் பஸ் ஸ்டாண்டில் இறங்கி ‘அடிமைப் பெண்’ எம்.ஜி.ஆர். மாதிரி லேசா முதுகைக் குனிஞ்சுக்கிட்டே, வலியில முனகிட்டே மெதுவா வீட்டை நோக்கி நடந்துட்டிருந்தேன். அப்ப பின்னாடி... கர்ர்ர்ர்ன்னு பெரிய சத்தம்.

 திரும்பி்ப் பாத்தா... ‌ஜெயன்ட் சைஸ் ஈ மாதிரி ஒரு ஆட்டோ, ஒரு வேனை ஓவர்டேக் பண்ற மும்முரத்துல சாலை ஓரத்துல நடந்துட்டிருந்த என்னை நோக்கி மின்னல் வேகத்துல வந்துட்டிருந்தது. ‘‘எந்த ஒரு டிராபிக் ரூல்ஸ்க்கும் கட்டுப்படாத பிறவிகளாயிற்றே இந்த ஆட்டோக்காரனுங்க’’ன்னு முனகிட்டே நகர்றதுக்குள்ள... ரொம்பப் பக்கத்துல வந்துட்டுது. சட்னு துள்ளிக் குதிச்சேன். இருந்தாலும் உடம்போட பின்பக்கத்தை லேசா உரசிட்டுத்தான் கடந்து போனது அந்த ஆட்டோ.

விண்ணை முட்டும் மின்னல் தெறிப்பாய் ஒரு உச்சபட்ச வலி என்னுள்! அடுத்த கணம் கட்டி உடைந்து, ரத்தமும், நிணமும் என் உள்ளாடைகளை நிறைப்பது எனக்கே தெரிந்து விட்டது. உடனே ஓட்டமாக வீட்டுக்கு ஓடி உடலை சுத்தம் செய்துவிட்டுப் பார்த்தால் கட்டி பெரும்பகுதி கரைந்திருந்தது.

அடுததுவந்த இரண்டு தினங்களும் குளிப்பதற்கு முன் அந்த ஏரியாவில் ஒரு முறை கையால் நன்கு அழுத்திவி்ட்டுக் குளித்ததில் ஏறக்குறைய காணாமல் போகும் நிலைக்கு வந்துட்டுது. மருத்துவர் சொன்னபடி மாத்திரைகளை விழுங்கி முடித்துவிட்டு நேற்று மீண்டும் போய்ப் பார்த்தேன்.

அவர் சோதனை செய்துவிட்டு ‘‘முழுக்க குணமாயிடுச்சு உங்களுக்கு. இனிமே ஆபரேஷன் தேவையில்லை. நான் சொல்ற மாத்திரைகளை இன்னும் ஒரு வாரத்துக்கு சாப்பிடுங்க. அப்புறம் நிறைய பழங்கள் சாப்பிடுங்க போதும்...’’ என்றார்.

‘‘ஐயோ, அது ரொம்பக் கஷ்டமாச்சே டாக்டர்... ’’ என்றேன்.

‘‘என்ன...? இதுல என்ன கஷ்டம் உங்களுக்கு?’’ என்று புரியாமல் பார்த்தார்.

‘‘சென்னை சிட்டில சந்துக்கு சந்து டாஸ்மாக்தான் இருக்கு. கள்ளு கிடைக்கறது கஷ்டமாச்சே..? அதுவும் பழங் கள்ளுன்னு வேற சொல்றீங்க...’’ என்றேன்.

உக்கிரமானார் டாக்டர். ‘‘என்ன... கிண்டலா? ஃப்ரூட்ஸ்னு சொன்னாத்தான் புரியுமோ உங்களுக்கு? டாக்டர்களை எல்லாம் இப்படி ஜோக்கடிச்சு கோபப்படுத்தக் கூடாது... கடவுள் கிட்டயும், என்னை மாதிரி டாக்டர்கள் கிட்டயும் எப்பவும் கோபம் ஏற்படுத்தற மாதிரி நடந்துக்கவே கூடாது. புரியுதா?’’ என்றார்.

‘‘என்னது.... டாக்டர்களும் கடவுளும் ஒண்ணா? எப்படிச் சொல்றீங்க?’’ என்று நிஜமாகவே புரியாமல் கேட்டேன்.

‘‘ம்ம்ம்... கடவுளுக்கு உங்க மேல கோபம் வந்துச்சுன்னா, ஏதாவது ஒரு வியாதியைக் குடுத்து என்னை மாதிரி டாக்டர்கள் கிட்ட அனுப்பிடுவார். என்ன மாதிரி டாக்டர்களுக்கு உங்க மேல கோபம் வந்துச்சுன்னா, ட்ரீட்மெண்ட்டைக் குடுத்து உங்களை கடவுள் கிட்டயே அனுப்பி வெச்சுடுவோம்’’ அப்படின்னார் டாக்டர்.

‘‘அவ்வ்வ்வ்வ்!’’ன்னுட்டு கையால வாயைப் பொத்திக்கிட்டு க்ளினிக்கை விட்டு ஓடியே வந்துட்டேன்.

இதாங்க நான் ஒரே வாரத்துல (ஒரு ஆட்டோக்காரரால) மீண்டு(ம்) வந்த கதை! இதனால் அறியப்படும் நீதின்னுட்டு உடம்புல கட்டி வந்தா ஆட்டோவுல போய் மோதணும்னுட்டு யாரும் தப்பான முடிவுக்கு வந்துடாதீங்க சாமியோவ்... ஒரு நேரம் போல இருக்காது!

ஆபரேஷன் தேவைப்படாது என்று டாக்டர் சொன்னது மனதில் நிம்மதியை நிரப்பி இருந்தது. உறவினர்கள், நண்பர்கள் எல்லாருக்கும் போன் செய்து சொல்லி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன். இதோ... மீண்டும் வந்தாச்சு இங்க...!

மகளென நான் கருதும் ஒருத்தியிடம் நான் சொன்ன வார்த்தைகளை இங்கே சொல்லி நிறைவு செய்கிறேன்: ‘‘மருத்துவரோட ‘அறுவை’யிலருந்து நான் தப்பிச்சு வந்துட்டேன்மா...! ஆனா என்னோட ‘அறுவை’யிலருந்து நாளையிலருந்து நீங்க தப்பவே முடியாது! ஹா... ஹா...’’

Friday, September 7, 2012

மொறு மொறு மிக்ஸர் - 11

Posted by பால கணேஷ் Friday, September 07, 2012
ஹாய்... ஹாய்... ஹாய்... எல்லாருக்கும் வணக்கம். இந்தாங்க... முதல்ல ஸ்வீட் எடுத்துக்கங்க.


என்ன விசேஷம்னு கேக்கறீங்களா? சென்ற வருஷம் இதே மாதம் 11ம் தேதிதான் இந்தத் தளம் துவங்கியது. அந்த முதல் பர்த்டேவைக் கொண்டாடத்தான். அதுக்கு ஏன் 7ம் தேதியே ஸ்வீட் தரணும்னு நினைக்கறீங்களா...?  மிக்ஸரின் இறுதிப் பகுதிக்கு வரும்போது உங்களுக்கே தெரிஞ்சுடும்.

=======================================

ரு ரயில் எண்பது கி.மீ விரைவில் வந்து கொண்டிருக்கிறது. சற்று தூரத்தில் ரயில் டிராக்கைக் கடக்கும் சாலையில் ஒரு கார் அதே 80 கி.மீ. வேகத்தில் விரைந்து வந்து கொண்டிருக்கிறது. ரயில்வே ட்ராக்கின் குறுக்கிலோ கேட் இல்லை. இரண்டும் வேகத்தைக் குறைக்காமல் வந்தும் விபத்து ஏற்படவில்லை. எப்படி இது சாத்தியம்?

=======================================

‘படவா’ என்ற சொல்லை நம்மில் பலர் உபயோகிக்கிறோம். ‘படுவா’ என்னும் வடமொழியானது நாளடைவில் தென்னாட்டில் ‘படவா’வாகப் பரவி விட்டது. விலைமாதர்கள் வீட்டில் தரகு பேசி முடித்துக் கொடுப்பவர்களுக்குத்தான் ‘படுவா’ என்று பெயர். நம் நாட்டில் உள்ளவர்கள் அதன் அர்த்தம் தெரியாமல் மிகவும் சகஜமாக நடைமுறையில் கொண்டுவந்து விட்டார்கள்.
                                                                        -பழைய குமுதம் இதழிலிருந்து...

=======================================

=======================================
டன் வாங்கி ஊரெல்லாம் ஓடிக் கொண்டிருக்கும் ஒருத்தனின் புலம்பல் : ‘‘சே! பணமாம் பணம்! பணம் யாருக்குய்யா வேணும்? மனுஷனுக்கு குணம் வேணும். அதாவது... பணம் கொடுக்கிற குணம்! அ‌ந்தப் பணத்தைத் திருப்பிக் கேட்காதிருக்கிற குணம்!’’ எப்பூடி?

=======================================

லைத் தளங்களில் எழுதுபவர்களிடையே பல மின்னல் தெறிப்புகளைத் தான் காண்பதாக ‘பதிவர் திருவிழா’வில் உரையாற்றிய போது திரு.பி.கே.பி. சொன்னார். அப்படி வலையில் உலவுகையில் என் கண்ணில் படும் நல்ல பல சிதறல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். சமீபத்தில் நான் படித்தவற்றில் திரு.பாலாஜி எழுதிய இந்தப் பதிவு மனதைக் கவர்ந்தது. உங்களுக்கு இவரின் எழுத்து பிடித்திருககிறதா என்று சென்று பாருங்கள்.

=======================================

ழுத்தாளர் பாலகுமாரனின் விசிறியா நீங்கள்? அப்படியெனில் உங்களுக்கு ஒரு நற்செய்தி ‌இதோ... சிலகாலமாய் மருத்துவமனையில் தன் நோயுடன் போராடி மீண்டு வந்துள்ள பாலகுமாரன் ‘கங்கை கொண்ட சோழன்’ என்ற பெயரில் இராஜேந்திர சோழ தேவனின் வரலாற்றை விரிவாக எழுதத் துவங்கியிருக்கிறார் இப்போது. முன்பு ‘உடையார்’ என்ற பெயரில் ராஜராஜ சோழன் கால ஆட்சி முறை, வாழ்க்கை முறை, கோயில் கட்டிய விதம் போன்ற பல விரிவான தகவல்களுடன் கூடிய நெடுந்தொடர் எழுதியிருந்தார் பாலகுமாரன். இப்போது அதன் தொடர்ச்சி என்கிற விதமாக ராஜராஜனின் மகன் ராஜேந்திர சோழனைப் பற்றி எழுத இருக்கிறார்.

‘பல்சுவை நாவல்’ என்கிற, அவரது நாவல்கள் வழக்கமாக வரும் இதழில் இந்த தொடர் வெளியாக இருக்கிறதாம். ஏழு அல்லது எட்டு நாவல்கள் வரக் கூடும் என்கிற அளவி்ல் விரிவாக எழுதியிருக்கிறார் பாலகுமாரன். நேற்று அந்த இதழின் பதிப்பாசிரியர் பொன்.சந்திரசேகர் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்ன தகவல் இது.

=======================================

புதிரின் விடை - கார் ரயில்வே ட்ராக்கின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலத்தின் மேல் ஏறிச் சென்றதால்!

=======================================

மின்னல் நிரந்தரமானதல்ல. மின்னியதும் மறைந்து விடக் கூடியது. இந்தத் தளத்துக்கு அந்தப் பெயர் வைத்து விட்டதாலேயோ என்னவோ... ஓராண்டாக மின்னிய மின்னல் இனி இரண்டு மாதங்களுக்கு மின்னாது. மன்னிக்கவும். (சொந்தப் பிரச்னைகள் நிறைய) புத்தாண்டில் புத்துணர்வுடன் சந்திக்கலாம் என்று ஒரு ஆசை இருக்கிறது உள்ளே. பார்க்கலாம்... எல்லாம் அவன் செயல்!

Monday, September 3, 2012

உண்மையான பிரார்த்தனை எது?

Posted by பால கணேஷ் Monday, September 03, 2012
மீபத்தில் இந்திரா செளந்தர்ராஜன் எழுதிய ‘துளிர்க்கும்’ என்கிற நாவல் படித்தேன் குழந்தை இல்லாத பணக்கா தம்பதியர், அவர்களுக்கு ஒரு சாமியாரம்மாவின் மூலம் கிடைக்கும் குழந்தை, மனநிலை தவறிய அதன் தாய் இன்னும் சில குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டு அவர் அமைத்திருந்த கதை மனதிற்கு நிற‌ைவாக இருந்தது நான் மனதில் எண்ணியிருந்த சில விஷயங்களை அவர் நாவலில் எழுதியிருந்ததைக கண்டு மிக்க ஆச்சரியம் + மகிழ்ச்சி அடைந்தேன். அந்த இரண்டு பகுதிகள் இங்கே உங்களுக்காக...

============================================

டிராஃபிக் போலீஸ் நல்ல வேட்டையில் இருந்தது ஹெல்மெட் போடாமல் வந்து ஒரு பைக் காரர் சிக்கி விட்டிருந்தார் பவானி இருந்த காரை ஓரம் கட்டி நிறுத்தி விட்டு பைக் காரரிடம் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தனர். பைக் காருரும் சளைக்கவில்லை.

‘‘சார், ஹெல்மெட் அணியறதக் கட்டாயப்படுத்தி எந்தச் சட்டமும் போடப்படலை சார். நான் ஒரு வக்கீல். எனக்கும் சட்டம் தெரியும் ஹெல்மெட்டுங்கறது ரேஸ்ல 150 மைல் ஸ்பீடுல ஓட்றவங்க பாதுகாப்புக்காகக் கண்டுபிடிக்கப்பட்டது இங்க டிராஃபிக்ல ஊர்ந்து போறவங்களுக்கு இது தேவையில்லை.’’

‘‘நீங்க வக்கீலா... அதான் இந்த பேச்சு பேசறீங்க! நாங்க உங்க நல்லதுக்குத்தானே சொல்றோம்? ஏன் கேக்க மாட்டேங்கறீங்க?’’

‘‘இது நலலதுக்குத்தான்னு ினைக்கறவங்க தாராளமா போட்டுக்கட்டும். அதே சமயம் இதை பெரிய உபத்ரவமா நினைக்கற என்னைப் போன்றவங்களும் இருக்கோம். எங்க போனாலும் கைல பிச்சைக்காரன் திருவோடு மாதிரி தூக்கிக்கிட்டு சுத்தற கொடுமையை கார்ல போய் கார்ல வர்றவங்களால புரிஞ்சுக்க முடியாது.’’

‘‘அப்ப கோர்ட்டுல ஜட்ஜ் இதை எதிர்த்துப் போட்ட வழக்கை தள்ளுபடி செய்துட்டாரே. இதுக்கென்ன சொல்றீங்க?’’

‘‘எந்த ஜட்ஜ் இப்ப பைக்குல கோர்ட்டுக்கு வரார்? அவர் ஒரு ரெண்டு நாள் ‌ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டினா சத்தியமா தள்ளுபடி பண்ணியிருக்க மாட்டார்.’’

‘‘இது அதிகப்பிரசங்கித்தனம். உங்க நல்லதுக்குச் சொல்றதக் கேட்டு நடககறதுதான் உங்களுக்கு நல்லது’’

‘‘இதுல எந்த நல்லதும் இல்லை. நடந்துபோய் அடிபட்டு சாகறவங்களும் இருக்காங்க. கார்ல போய் ஆக்சிடெண்ட் ஆகி சாகிறவங்களும் இருக்காங்க. அவங்க ஹெல்மெட் போட்டுருந்தா உயிர் பிழைச்சிருக்கலாம்னு கூடத்தான் பேசலாம். தினமும் லட்சக்கணக்குல குடிச்சு செத்துப் போறாங்க. அழிக்க முடியாத கொசுவால காய்ச்சல் வந்து சாகறாங்க. அவங்க நல்லா இருக்க இப்படி ஏதாவது ஒரு சட்டம்னு சொல்லி கட்டாயப்படுத்துங்களேன்.ஏன் டூ வீலர் வெச்சிருக்கறவங்க மேல மட்டும் இவ்வளவு கரிசனம்?’’

அந்த வக்கீலின் கேள்வி பவானிக்கு மிகப் பிடித்து விட்டிருந்தது. ‘‘டேய், இவனை பாத்து வெச்சுக்குங்கடா... நல்லா பாயிண்ட் பேசறான். நமக்கு யூஸ் ஆனாலும் ஆவான்’’ என்றாள்.

============================================

‘‘அதுக்கும் ஒரு எல்லை இருக்கும்மா... இந்தக் குழந்தையும் என்னை விட்டு போயிட்டா நான் தற்கொலை செய்துக்க தயங்கவே மாட்டேன்...’’

‘‘அதுதான் உன் விதின்னா, யாராலம்மா மாற்ற முடியும்?’’

அந்தப் பெண்மணி அப்படி ஒரு பதிலைக் கூறவும் ஜானகிக்குப் பொசுக்கென்று போய்விட்டது. இதைச் சொல்லவா இத்தனை தேஜஸோடும், லட்சணத்தோடும் அருகில் வர வேண்டும்? ஜானகி அந்தப் பெண்ணை வெறித்தாள்.

‘‘என்னம்மா பாக்கறே?’’

‘‘உங்க பதில் எனக்கு அதிர்ச்சியா இருக்கு. உங்க கிட்ட இருந்து ஆறுதலா ஏதாவது கிடைக்கும்னுதான் நான் நம்பினேன்.’’

‘‘உனக்கு ஆறுதலான விஷயத்தை நான் சொல்ல முடியும். வருத்தம் எப்பவும் அதிகமா இருக்குன்னா, சந்தோஷத் தட்டுல எடை குறைவா இருக்குன்னு அர்த்தம். அந்தத் தட்டுல நம்பிக்கைங்கற பிரார்த்தனையை வை. எவ்வளவுக்கெவ்வளவு வைக்கிறியோ அவ்வளவுக்கவ்வளவு தட்டு கனமாகி வருத்தம் சிறிதாயிடும்.’’

‘‘ஒவ்வொரு நொடியும் நான் பிரார்த்தனை செய்துகிட்டுத் தானே இருக்கேன்?’’

‘‘உண்மையா பிரார்த்தனை செய்தியா?’’

‘‘செய்தியாவா? என்னப் பார்த்தா உங்களுக்குத் தெரியலியா?’’

‘‘உண்மையான்னா, புரிஞ்சு பிரார்த்தனை செய்யறதுன்னு அர்த்தம். நீ பிரார்த்தனை செய்யலேன்னு நான் சொல்லலை. புரிஞ்சு செய்யணும்.’’

‘‘புரிஞ்சு செய்யறதுன்னா?’’

‘‘நல்லா கேட்டுக்கோ. எந்த ஒரு நல்லதுக்கும் கெட்டதுக்கும் நம் செயல்தான் காரணம். நம்ம நிழல் போல அதுவும் கூடவே வரும். எப்ப பிள்ளைப் பேறு இல்லையோ அப்ப அந்த கர்மமும் அந்த ரகம்தான். முதல்ல இதை ஒத்துக்கணும். நாம போட்ட குப்பையை நாமதான் எடுத்துப் போடணும். நாம வாங்கின கடனை நாமதான் வட்டியோட கட்டணும். அந்த வகைல பிள்ளை இல்லாத குறையை முதல்ல முழு மனசா ஏத்துக்கோ. கடவுளே, இந்தத் தண்டனையை நான் முழுசா அனுபவிச்சு தீக்கறேன்னு சொல்லு. அதுதான் நீ புரிஞ்சு பிரார்த்தனை செய்யறதுக்கு அர்த்தம்.

பிராந்தர்ங்கற சித்தர் முன்னால அவர் அழைக்காமலே காளிதேவி பிரசன்னமானா. பிரசன்னமானதோட பிராந்தரோட தீராத வியாதியையும் குணப்படுத்தறேன்னு சொன்னார். ஆனா பிராந்தர், ‘வேண்டாம், நீ புறப்படு’ன்னு சொல்லிட்டார். காளிதேவி ஆச்சரியப்பட்டா. ‘இது கர்மத்தால வந்தது. நான் அனுபவிச்சு தீத்துட்றேன்’னார். ‘உன் கருணையால இது தீர்ந்து போனா எனக்கு இதோட முழு வலி தெரியாமலே போயிடும்’ன்னு பதில சொன்னார்.

இப்படி ஒரு மனத்தெளிவோடயும், துணிவோடயும்தான் பிரார்த்தனை செய்யணும். இந்த ஜென்மத்துல நாம தவறுகள் செய்யாம இருந்திருக்கலாம். ஆனா அதற்கு முன்பு பல பிறப்புகள் கடந்துதான் மனிதப் பிறப்புக்கே வந்திருக்கோம். அந்தப் பிறப்புல நாம ஒரு தவறும் செய்யலைன்னு எப்படிச் சொல்ல முடியும்?

அதனாலதான் பிராந்தரோட மனநிலைல நின்னு கர்மத்தை அனுபவிக்கறதை நான் உண்மையான பிரார்த்தனைன்னு சொன்னேன். பிரார்த்தனை மட்டும் செய்தாலே போதும். அவன் கிட்ட எதையும் கேக்கத் தேவையே இல்லை. உனக்கொரு அப்பா, அம்மா, உனக்கொரு கணவன், உனக்குன்னு ஒரு ஊர், அதுல சுற்றங்கள்ன்னு எல்லாத்தையும் அவன் உன்கிட்ட கேட்டா கொடுத்தான்? இதெல்லாம் எப்படி தானா அமைஞ்சதோ அப்படித்தான் உனக்குக் கிடைக்க வேண்டியதெல்லாம் தானா கிடைக்கும்.’’

அந்தப் பெண்ணின் பேச்சில் அளவுக்கதிகமான ஞானமும், பொருளும் இருந்து ஜானகியை ஸ்தம்பிக்க வைத்து விட்டது.

============================================

Saturday, September 1, 2012

இன்னும் கொஞ்சம் சுஜாதா!

Posted by பால கணேஷ் Saturday, September 01, 2012

1970களில் சுஜாதா குமுதம் இதழில் ‘கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் தொடர்ந்து வாரம் ஒரு பக்கம் எழுதி வந்திருக்கிறார். அதிலிருந்து ஒரு சின்னக் கட்டுரை இங்கே...

                                  லிஃப்ட்!
                                   -சுஜாதா-

றைக்குள் நுழைந்ததும் அவரைப் பார்த்தேன். கைகளைக் கட்டிக் கொண்டு என் நாற்காலிக்கு எதிர் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். நான் இதுவரை சந்தித்திராதவர். நடுத்தர வயதும், சதைப் பற்றான உடலுமாக இருந்தார். லிஃப்ட்டுகள் தயாரிக்கும் ஒரு கம்பெனியிலிருந்து தான் வருவதாகவும், சில தினங்களுக்கு முன் அவர் கம்பெனி லிஃப்ட்டுகள் பற்றி நான் தொலைபேசியதை ஞாபகப்படுத்தினார். புதிதாகக் கட்டப்படும் ஒரு கட்டிடத்திற்கு லிஃப்ட் வசதி பற்றி யோசித்துக் கொண்டிருந்த போது அந்தக் கம்பெனிக்கு போன் செய்தது நினைவுக்கு வந்தது.

வந்தவர் தன் கம்பெனி லிஃப்ட்டுகள் பற்றி விஸ்தாரமாகப் புகழ்ந்து சொன்னார். அவைகள் தானாக இயங்கக் கூடியவையாம். ஒரு சிறு குழந்தைகூட அவற்றை இயக்கலாமாம். கதவுகள் சிறிதுகூடச் சப்தமிடாதாம். தானாகத் திறந்து கொள்ளுமாம். தானாக மூடிக் கொள்ளுமாம். புறப்படும் போது மிகவேகமாகச் சென்று விரும்பிய மாடிக்கு வந்து சேரும் முன் வேகம் குறைந்து நிற்க வேண்டிய இடத்திற்கு முக்கால் இன்ச்சுக்குள் சப்தமிடாமல் நின்று, கதவு திறந்து வழிவிட்டு நுழைபவர்களை அணைத்துக் கொண்டு கதவு மூடும். ஆம்!

இந்த லிஃப்ட்டுக்கு மூளை கூட இருக்கிறதாம். முதலில் யார் பட்டனை அழுத்தினார், அவர் மேலே போக வேண்டியவரா, கீழே போக வேண்டியவரா, அடுத்து அழுத்தியது யார், அவர் நோக்கம் மேலா, கீழா என்று பற்பல செய்திகளை எல்லாம் கிரகித்துக் கொண்டு சிக்கனமாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்படும். ‘‘ஷி இஸ் எ ப்யூட்டி! உள்ளே லினோலியம் கண்ணாடி. எமர்ஜென்ஸி பட்டன். மெளனமான மின் விசிறி... ஹைஃபி சங்கீதம்... நீங்கள் கொடுக்கப் போகும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்பு!’’

‘‘என்ன விலை?’’ என்றேன்.

‘‘லட்சத்து எண்பதாயிரம்’’ என்றார்.

நான் மனத்திற்குள் ஒரு குட்டிக்கரணம் அடித்தேன். முழுக்க முழுக்க ஆட்டோமாட்டிக் டிக் டிக் டிக் என்றார்.

இந்த ஆட்டோமாட்டிக் திடீரென்று பாயைப் பிராண்டினால் என்ன ஆகும்? தானாகப் பிரிந்து மூடிக் கொள்ளும் கதவுகளுக்கு இடையில் யாராவது கை மாட்டிக் கொண்டு கதவு சடக்கென்று மூடிக் கொண்டு உடனே கிளம்பி விட்டால் என்ன ஆகும் என்றெல்லாம் சந்தேகம் எழுந்தது எனக்கு.

கேட்கவில்லை. கேட்டால் அவர் எங்கே லிஃப்ட்டுக்கு (லட்சத்து எண்பதினாயிரம்) ஆர்டர் எடுத்துக் கொண்டு செக் கிழிக்கச் சொல்வாரோ என்று பயந்து, ‘‘யோசித்துச் சொல்கிறேன். உங்களுக்கு மறுபடி போன் பண்ணுகிறேன்’’ என்று கத்தரித்துக் கொண்டேன்.

அவர் மேலே கொஞ்சம் தன் லிஃப்ட்களைப் பற்றி ஆராதனை செய்துவிட்டு ஒரு வழியாகப் புறப்பட எழுந்தார். எழுந்தவருடன் வழக்கம் போல் கை குலுக்க முற்பட்ட போது என் ரத்த ஓட்டத்தில் குபுக் என்று ஒரு பாய்ச்சல் ஏற்பட்டது.

அவர் தன் இடது கையால் கை குலுக்கினார். வலது கை மணிக்கட்டுடன் நின்று மொண்ணையாக இருந்தது..!

=========================================

ன்ஸ்டன்ட் ரசம் மிக்ஸ், சாம்பார் மிக்ஸ் என்பவை போன்று நிறைய ஐட்டங்கள் ‘இன்ஸ்டன்ட்’ பாக்கெட்களில் கிடைக்கின்றன. சாதாரணமாக இந்த ‘திடீர் மிக்ஸ்’கள் எதுவாக இருந்தாலும் அவற்றில் ‘பேராசிடமால்’ மாத்திரைகளில் உள்ள கெமிக்கல்கள் சேர்க்கப்படுகின்றன. தவிர, இந்த மிக்ஸ்கள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும் என்கிற காரணத்திற்காக ‘சாலிசிக்’ என்கிற அமிலத்தைச் சேர்க்கின்றனர். இந்த அமிலம் 100 கிராம் மிக்ஸ் பாக்கெட்டில் 75 மில்லிகிராம் மட்டும் சேர்க்கப்பட்டிருக்கும். இவை போன்ற திடீர் மிக்ஸ்களை ஏதாவது அவசர சந்தர்ப்பங்களில் மட்டும் சமைப்பதற்கு உபயோகித்துவிட்டு அதிகம் பயன்படுத்தாமல் இருப்பதே நலம்.

=========================================

‘‘ஸார்... ரயில்வே ஸ்டேஷனுக்கு எந்தப் பக்கம் போகணும்?’’

‘‘நேராப் போங்க ஸார். கொஞ்ச தூரத்துல ஒரு அஞ்சு மாடிக் கட்டிடம் வரும். அதைத் தாண்டினீங்கன்னா, ரயில்வே ஸ்டேஷன்தான்!’

‘‘ஐயோ! என்னால அவ்வளவு உயரம்லாம் தாண்ட முடியாதுங்க. நான் பஸ்லயே போய்க்கறேன்...’’

=========================================

‘‘இப்பத்தான் உங்களை நினைச்சுட்டிருந்தேன், நீங்களே வந்துட்டீங்க...’’

‘‘வர்ற மாசம் சம்பளம் வாங்கினவுடனே கொடுத்துடறேன்...’’

‘‘இந்த வீட்டை உங்க சொந்த வீடு போல நினைச்சுக்குங்க...’’

‘‘என்னைப் பொறுத்தவரை நான் எதுக்கும் பொய் சொல்றதே இல்லை ஸார்..’’

-அன்றாட வாழ்வில் இதுபோல நிறையப் பொய்களை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். இவற்றைப் போன்ற அன்றாடப் பொய்கள் உங்களுக்குத் தெரிந்தவைகளை பகிர்ந்து கொள்ளுங்களேன் நண்பர்களே. அதற்காக ‘நீங்கள் நன்றாக ப்ளாக் எழுதுகிறீர்கள்’ அப்படின்னு போட்டு என்கிட்டயே விளையாட்டுக் காட்டினீங்கன்னா, பிச்சுப்புடுவேன் பிச்சு!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube