Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, December 23, 2014

ஒரு சோதனை முயற்சி..!

Posted by பால கணேஷ் Tuesday, December 23, 2014

திப்புரை.காம் என்ற தளத்தில் நீங்க ரெஜிஸ்டர் செய்து, விமர்சனம் எழுத விரும்பும் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். உங்கள் மதிப்புரை வெளியிடப்படும் அதே நேரம் அந்தப் புத்தகம் உங்களுக்கே உடைமையாகி விடும். நான் அங்கு எழுதிய மூன்று மதிப்புரைகளில் ஒன்றை சற்றே வித்தியாசமாக கவிதை(?) நடையில் படைத்திருந்தேன். என்னுடைய தளத்தில் அதைப் பகிர்ந்து என் பதிவுகளை மீண்டும் துவக்குகிறேன் நண்பர்களே... 

        செங்கிஸ்கான்

பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தனர் மங்கோலியர் என்ற ஓரினம்
தனித்தனி குழுக்களாய் வாழ்ந்து தம்முள்ளேயே மோதினர் தினந்தினம்
கூடாரமிட்டு பருவந்தொறும் இடமாறிய அவருக்கிலையோர் ஆரிஜின்
அவ்வினங்களை ஓரரசாய் தனிப் பேரரசாய் மாற்ற வந்துதித்தார் டெமுஜின்!
தலைவனான தந்தை இறந்ததும் சிதறியோடியதவர் கூட்டம்
இலையளவும் டெமுஜின் கொள்ளவில்லை மனதில் வாட்டம்!
அகவை பத்திலேயே தன்னினிய குடும்பத்தின் தலைவரானார்
தகவை யிழந்து பிறிதோர் கூட்டத்திடம் சிக்கி அடிமையுமானார்!
நல்லோரொருவர் உதவ தப்பினார் அக்கூட்டத்தின் பிடியிலிருந்து
வல்லோனாக வேண்டுமென உறுதி கொண்டார் அடிமனதிலிருந்து!
நல்நண்பனாய் அவருக்கு அமைந்தனன் ஜமுக்கா என்பான்
வல்லரசுக் கனவை அன்னவன் டெமுஜினுக்குள் விதைத்தான்!
இந்நாளைய சச்சினைப்போல் அகவையில் மூத்த கன்னியை
அந்நாளில் டெமுஜின் சந்தித்தார்; அவளை மனதில் நன்னினார்!
நல்முகூர்த்த நாளொன்றில் அவளை மணமுடித்தார் மனமெலாம் மகிழ்வாம்
வல்லூறென வேறோர் கூட்டம் கவர்ந்து சென்றதோர் அவலமான நிகழ்வாம்!
காதல் மனையாளை மீட்க அவருக்கு படைதந் துதவினார் சிற்றரசர் ஆங்கான்
முதல் போரில் எதிரிகளை வென்றார் டெமுஜினுக்கோர் இணையிலைகாண்!
டட்டாரெனும் ஓரினத்தை அழித்திட ஆங்கான் வேண்டுகோள் விடுத்தார்
பட்டாரெனச் சென்று எதிரிகளைக் கொன்றெடுத்தார்; போரை வென்றெடுத்தார்!
மெல்ல மெல்லப் பெருகி வந்தது மக்கள் ஆதரவு டெமுஜினின் கூட்டணியில்
நல்ல நண்பன் ஜமுக்காவும் வளர்ந்து நின்றிருந்தான் எதிரியின் படையணியில்!
கூட்டத்தை வளர்க்க தடையாய் நண்பனே எதிர்நின்றதோர் பெருஞ்சோதனை
வாட்டத்தை உதறி வென்றார்; அவன் விரும்பியபடியே கொன்றார் நண்பனை!
பேரரசாய் முடிசூடிய டெமுஜினுக்கிடப்பட்ட பெயர்தான் செங்கிஸ்கான்
ஓரரசாய் மங்கோலிய இனத்தை மாற்ற தொடர்ந்து போர்செய்தா ரவர்காண்!
இட்டப்பட்ட பெண்ணை திருடும் மங்கோலிய வழக்கத்தை மாற்றியது கானின் ஆட்சி
சட்டத்தின் முன் அனைவரும் சமமே என்றுரைத்திட்டது செங்கிஸ்கானின் உயர்மாட்சி!
படைகளைத் திரட்டி ஒழுங்காக அணியணியாய் பிரித்திட்டார்
கடைக்கோடி வீரன்வரை தானும் நெருக்கமாய்ப் பழகிட்டார்!
உலகையே ஓர்குடைக்கீழ் கொணர விரும்பினான் அலெக்சாந்தர்; அன்னானுக்கு
பலகாலம் முன்பே கான் அக்கனவை படையினரிடம் விதைத்திட்ட முன்னோன்!
போர்களிலேயே வாழ்நாளைக் கழித்திட்டது கானின் பெருமை
பார்புகழும் மன்னரென்றாலும் வாராமல் நின்றிடாதே முதுமை!
தந்தைக்குப் பின் ஆரென்று அடித்துக் கொண்டது வாரிசுகளின் பிழைதான்
சிந்தை மிகக்குலைந் தவர்க்குள் ஒற்றுமைசெய முயன்றது கானின் மனந்தான்!
உலகை வெல்லும் கனவை வாரிசுகளிடம் ஈந்து மரித்ததவர் உடலம்
பலகாலம் அதன்பின் மங்கோலியப் பேரரசின் புகழ் மங்காப் படலம்!
கான் மறைந்தபின் கிளைகிளையாய் பெருகியது மங்கோலியப் பேரரசு
சீனத்திலிருந்து இந்தியாவின் மூக்குவரை நீண்டு வளர்ந்ததவ் வல்லரசு!
செங்கிஸ்கான் மரணதேவனை முத்தமிட்டது ஆயிரத் திருநூற் றிருபத்தாறாம் ஆண்டு
மங்கிடாப் புகழுடன் மங்கோலியப் பேரரசு அதன்பின் விளங்கியது ஓர் நூற்றாண்டு!
தகவலாய்ப் பள்ளியில் படித்திட என்றும் கசந்திடும் ஒன்று வரலாறு
கலகலவென கதையாய்ப் படித்தால் மனதில் இறங்கிடும் ஒருவாறு!
கதையென கானின் வரலாற்றை உரைத்திட்ட முகிலின் கைவண்ணம்
இதைப் படிப்போரெல்லாம் வியந்து பாராட்டிடுவர்; இது திண்ணம்!


வாசகர்கூடத்தில இப்போது.... எம்.ஜி.ஆர்.

Monday, August 4, 2014

அன்னப்பட்சி செய்த ஜாலம்..!!!

Posted by பால கணேஷ் Monday, August 04, 2014
ன்னால் சுலபமாக எழுத வராத ஒன்று என்பதாலேயே கவிதைகளையும் கவிஞர்களையும் பிடிக்குமெனக்கு. நேரடியாகப் பொருளுணர்த்தும் கவிதைகள், மறைபொருளாய் நம்மை உணரச் செய்யும் கவிதைகள், எதுவும் புரிபடாது – அந்தக் காரணத்தாலேயே – சிறந்த கவிதைகளோ என எண்ண வைப்பவை, உரைநடையை அடுத்தடுத்த வரிகளாக உடைத்துப் போடுகிற கவிதைகள் (என்று சொல்லப்படுபவை) என்று எல்லா எல்லா ரகங்களையும் படித்திருக்கிற படியால் நல்ல கவிதைகளின் தொகுப்பு கையில் கிடைக்கையில், படித்து முடிக்கையில் மனம் நிறைந்து விடும். அத்தகையதொரு நிறைவை சமீபத்தில் எனக்கு வழங்கியது திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின் ‘அன்ன பட்சி’ கவிதை நூல்.

நானறிந்த வரையில் தேனக்காவே ஒரு அன்னப்பட்சிதான். சந்திக்கிற எல்லா மனிதர்களிடமும் ஏதாவது நல்ல விஷயத்தைக் கண்டெடுத்து அதை மட்டுமே போற்றுகிற அன்னப்பட்சி அவர். நெற்றிப் பொட்டில்லாத பெண் மாதிரி ஒற்று இல்லாமல் அன்ன பட்சி என்று தலைப்பு வைத்திருந்தது எனக்கு கொஞ்சம் உறுத்தல்தான். அதுசரி…. இப்பல்லாம் எந்தப் பொண்ணுய்யா நெற்றிப் பொட்டு வைக்குது? புருவப் பொட்டும். மூக்குப் பொட்டும் தானே வைக்குது என்கிறீர்களா…? அதுவும் சரிதேங். பட்… இங்க பேச வந்த விஷயம் கவிதைகளைப் பற்றி.



இந்தத் தொகுப்பில் இருக்கும் எல்லாக் கவிதைகளுமே எனக்குப் பிடித்திருந்தன. அவற்றில் ஒன்றிரண்டைப் பற்றி மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். (பின்ன... முழுசாக் குறிப்பிட்டா தேனக்காவோ, இல்லை அகநாழிகை வாசுதேவனோ என்னைக் ‘கவனிச்சுட’ மாட்டாங்களா என்ன...?) குழந்தைகள் பொம்மை வைத்து விளையாடுவதை ரசிக்காதவர் இருக்க முடியாது. கவிதை படைத்தால் குழந்தையின் பார்வையில் படைப்பது வழக்கம். இவர் பொம்மையின் பார்வையில் கவிதை தந்திருக்கிறார் இப்படி : கடைக்கு வந்தாய் | எல்லா பொம்மைகளிலும் | சொல்பேச்சு கேட்பது போலிருந்த | என்னைத்தான் விரும்பினாய் என்று துவங்கி கனவிலாவது விட்டு | விடுதலையாகும் எண்ணத்தோடு | குப்புறப்படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறாய் | தூங்கப் படைக்கப்படாத நான் | உன் விழிப்புக்காய்க் காத்திருக்கிறேன் | நீ எழுந்தவுடன் விளையாட என்று முடிக்கையில் நம் ரசனைப் புருவங்கள் உயரத்தான் செய்கின்றன.

இந்தத் தொகுப்பில் ‘கடவுளை நேசித்தல்’ என்றொரு கவிதை இருக்கிறது. அது எனக்கு மிகமிகப் பிடித்தமான கவிதை. சற்றே பெரியதாக இருப்பதால் இங்குக் குறிப்பிட முடியவில்லை. ஆனால் படித்தீர்களேயானால் ‘அட... நாமும் இப்படித்தானே’ என்று உங்களில் பெரும்பாலோர் சொல்வீர்கள். ‘சிகண்டியின் சாம்பலும் அமிர்தமும்’ என்கிற கவிதையின் கருப்பொருளும் சொல்லாடலும் தந்த பிரமிப்பு இன்னும் என்னுள்.

இந்நூலில் இயற்கையை ரசிக்கிறார், செல்லப் பிராணியைப் போற்றுகிறார், விவசாயிக்காய் வருந்துகிறார், குழந்தையுடன் கொஞ்சுகிறார், காதலுக்காய் ஏங்குகிறார், படிப்பவருடன் பேசுகிறார், அறிவுரைக்கிறார்... இப்படி எல்லாப் பரிமாணங்களிலும் கவிதைக் குழந்தைகளை நிரப்பியிருக்கிறார் நூலாசிரியர். ஹாட்ஸ் ஆஃப் தேனக்கா..!

தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தை ஊன்றிக் கவனித்து இயற்கையையும் மனிதர்களையும் நேசிப்பவர்கள் அழகிய கவிதைகளையும் நேசிக்கக் கூடியவர்களாகத்தான் நிச்சயம் இருப்பார்கள். நீங்கள் நல்ல ரசனையாளர். கவிதைகளை ரசிப்பவர் என்பதால் இந்த கவிதைத் தொகுப்பையும் நிச்சயம் ரசிப்பீர்கள். வாங்கி அல்லது (இரவல்) வாங்கி எவ்வாறேனும் படித்தீர்களெனில் நான் எழுதியவை எதுவும் மிகையில்லை என்பதை நிச்சயம் உணர்வீர்கள். புத்தகம் விலை என்ன, எங்க கிடைக்கும்னு கேக்கறவங்க உடனே இங்க க்ளிக்கி தேனக்காவோட தளத்துக்கு ஓடுங்கோ....!

பி.கு.: நான் படித்து, எழுதாமல், நீண்ட நாளாக வெயிட்டிங்கில் இருந்த நமது பதிவர்களின் புத்தகங்கள் அனைத்தையும் விமர்சனம்/அறிமுகம் செய்யவிருக்கிறேன் இந்த மாதத்தில். அடுத்தடுத்த பகிர்வுகளுக்கிடையில் அவைகளும் வரும்.

---------------------------------------------------------------------------------------------------
இப்போது வாசகர்கூடத்தில் : தமிழ்பேசுகிறார் ஹாரிபாட்டர்
---------------------------------------------------------------------------------------------------


Friday, May 30, 2014

ஒரு கொலவெறிக் க(வி)தை!

Posted by பால கணேஷ் Friday, May 30, 2014
குறுகுறு குழந்தைகள் துள்ளி விளையாட...
விறுவிறுவென முதியோர் நடை பழக...
துறுதுறுவெனக் காதலர்கள் கூடிமகிழ...
பரபரப்பான நகரின் நடுவே அவ்வமைதிப் பூங்கா!

வானமது நீலநிறத்தினை யிழந்து அடர்
கருமை பெற்றிடும் நேரந் தன்னிலே
பொறுமையினை யிழந்து ராகுல் ஒரு
எருமையென உலாவிய அந்(தி)நேரத்திலே...

ஆடிகாரென ஓசையின்றி ஆடியசைந்து மெல்ல
அருகினிலே வந்திட்டாள் அழகுநங்கை விலாசினி!
குறுநகையொன்றை அவன்மேல் வீசி - காதலனுக்குக்
காத்திருத்தலே அழகு கண்ணா வென்றிட்டாள்!

காதலெனும் அத்தியாயந்தான் முடிந்ததடி கண்ணே...
கல்யாண அழைப்பிதழும் காண் இதோவென்று
காளையவனும் புன்னகை சிந்தி நீட்டிட...
மணமகன் அவனென்றும் மணமகள் அவள்
தோழி மது(வந்தி)யென்றும் பகன்றது பத்திரிகை!

விஜயகாந்த்போல் விழிகள் சிவந்திட
வீறிட்டலறினாள் அழகுநங்கை விலாசினி..!
பாரினிற் சிறந்த அழகி நானெனப் பலநாள்
பகன்றதெல்லாம் பொய்யோ - நீயும் தினம்
மலர்விட்டு மலர் தாவுமொரு வண்டோ...?

மதுவென் னுள்ளிருக்க மதுவின் வீட்டினில்
மழைநாளொன்றில் யான் ஒதுங்கிடவே நேரிட
வழக்கம்போல நம்மரசு மின்சாரத்தைப் பறித்திட
விளைந்திட்ட விளைவாய் மதுவினுள்ளே யின்று
மழலையொன்று விதை கொண்டிட்டதே கண்மணி...


சீராய்ப் பலமுறை யோசித்து யான்.இழைத்திட்ட தவறுக்கு
பிராயச்சித்தம் இதுவெனத் தெளிந்தே மனதின் ஆசைக்கு
மாறாய் முடிவெடுத்தேனவளை மணந்திடவே - மங்கையெனை
மன்னித்தே விலகிடுவாயென ராகுலவன் இயம்பிடவும்...
கண்ணிரண்டும் சிவந்திருக்க பாவையவனை ஏறிட்டாள்...

காவலனாய் நீயிருப்பாய் என நினைக்க நீயோ
கேவலனாய் மாறிடுவாய் என கனவிலும்
யான் நினைத்தேனில்லை தடியா.... ஒழி
என் கண்முன் நில்லாதே இனி...! கண்டால்
கொன்றிடுவேன் நானுனை யென்றாள்...!

கோபம் கொப்பளித்த மங்கையின் மதிமுகத்தை
தாபமுடனொரு முறை பார்த்து ராகுல்வன் நகர...
அரக்கனே நில்.... போவதற்கு முன்பெனக்கு
அரவிந்தனெனும் உன் நண்பனின் அலைபேசி
எண்ணைத் தந்தே யொழிவாய் பாதகா வென்றாள்!

Tuesday, January 21, 2014

கவிதை எழுதுவது எப்படி?

Posted by பால கணேஷ் Tuesday, January 21, 2014
ன் இனிய வலை மக்களே... உங்கள் பாசத்திற்குரிய பாலகணேஷின் வணக்கம். முன்பொரு முறை ‘சரித்திரக்கதை எழுதுவது எப்படி?'ன்னு விளக்கமா எழுதி உங்களுக்கு உதவினேன். ஆனால் அதைப் பின்பற்றி யாரும் சரிததிரக் கதை எழுவதாகத் தெரியவில்லை. ஆகவே கவிதை எழுதுவதன் வழிமுறைகளை விளக்கி பல கவிஞர்களை உண்டுபண்ணும் அடங்காத இலக்கிய தாகத்துடன்(!) இப்போது உங்கள் முன் வந்திருக்கிறேன்.

வளமான தமிழில் வாசகர் வியக்கும் வண்ணம் கவிதைகள் எழுத வேண்டும் என்ற ஆவல் நிறைய இருந்தும் எப்படி என்பது புரியாமல் இருக்கிறீர்களா நீங்கள்? எனில், நீங்களும் என் நண்பரே! வாருஙகள் இப்படி அருகில்... உங்களுக்காகத்தான் இந்தப் பகிர்வு! முத்துத் தமிழில் அழகுக் கவிதைகள் படைக்கும் விதத்தை இப்போது யான் விண்டுரைக்கப் போகிறேன் உங்களிடம்! கவிதைகளில் மரபுக் கவிதை, புதுக் கவிதை, ஹைக்கூ ஆகிய பல வடிவங்கள் உண்டு. இவை ஒவ்வொன்றையும் நீங்கள் அறிய வேண்டியது அவசியம். (உண்மையில் எதையும் அறியாமலேதான் கவிதை(?) எழுதப் போகிறீர்கள் என்பது நமக்குள் இருக்கட்டும்...)

மரபுக் கவிதை படைப்பதற்கு தமிழ் இலக்கணம் பயின்றிருக்க வேண்டும். அசை, தொடை, தளை என்று பல கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து, தமிழின் அழகு குலையா வண்ணம் கவிதைகள் படைத்தல் அவசியம். ‘இலக்கணமாவது, ஒண்ணாவது... நான் என்னத்தக் கண்டேன், இனிமே போய்ப் படிச்சுட்டு வர்றதெல்லாம் ஆகாது’ என்று நீங்கள் உரைப்பது என் செவியில் விழுகிறது. அஞ்சற்க... இலக்கணம் அறியாமலேயே மரபுக் கவிதை(!) எழுத சுலப வழியொன்று உள்ளது. நீங்கள் தமிழ்ப் படங்கள் நிறையப் பார்த்திருப்பீர்கள்தானே... படம் பார்க்கும் பழக்கம் இல்லாத என் தங்கையைப் போன்றவர்கள் நிறைய சினிமாப் பாடல்களை நிச்சயம் கேட்டிருப்பீர்கள்தானே...

‘எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம்
உன்னிடத்தில் சொன்னதெல்லாம் கொஞ்சம்
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
உன் மனம்தான் நான் துயிலும் மஞ்சம்'


இப்படில்லாம் எழுதியிருப்பாங்க. இப்படி கடைசிப் பகுதியில ராணி, கோணி, தேனீ, வாநீ அப்படின்னு ஒரே உச்சரிப்புல வார்த்தைகளைப் போட்டு நாலஞ்சு பாரா எழுதி அதுக்கு பொருத்தமா ஒரு தலைப்பு வெச்சுட்டீங்கன்னா.... மரபுக் கவிதை ரெடி. இன்னொரு டைப்பாகவும் இதை நீங்க எழுதலாம்.

செந்நெல் ஆடிய வயல்களினூடே
   என் பார்வை பட்டநேரம்...
மின்னல்போல கண்ணில் தோன்றி
   மினுக்கி நடந்திட்டாள் அப்பாவை
கன்னல் மொழியதனைப் பேசி
   என் மனதைத் திருடிவிட்டாள்!


இதுல கவனிச்சீங்கன்னா முதல் வரியில வர்ற அதே வார்த்தை ஸ்டைலை மூணாவது வரியில கொண்டு வரணும். ரெண்டாவது வரியை முதல் வரியோட கோவிச்சுக்கிட்டுப் போற மாதிரி கொஞ்சம் நகர்த்திப் போடணும். ரைட்டா.... இப்படி கவிதை(?) இயற்றி, அதை பப்ளிஷ் பண்ணிட்டீங்கன்னா நீங்களும் இப்போ மரபுக் கவிஞரே...! (எதுக்கும் பப்ளிஷ் பண்ணினப்புறம் ஒரு ஹெல்மெட்டை தலையில மாட்டிக்கிட்டு உக்காந்திருக்கறது பெட்டர். இல்லாட்டி புலவர் ராமானுசம் ஐயா மாதிரி ஆசாமிங்க படிச்சுட்டு குட்டறப்ப தாங்கறது கஷ்டம்! ஹி... ஹி...!)


கஷ்டமான மரபுக் கவிதைய ஒரு வழி பண்ணிட்ட உங்களுக்கு புதுக்கவிதைங்கறது ரொம்ப ஈஸியான விஷயம்தாங்க... இதுக்கு எந்த கண்ட்ரோலும் கிடையாது. மனசுல தோணறதையெல்லாம் வரி வரியா மடக்கி எழுதிட்டீங்கன்னா ஈஸியா அதை கவிதைன்னு பேர் சூட்டி வெளியிட்டிரலாம். யாரும் எதும் கேக்காம ‘சூப்பர்' ‘அருமை'ன்னு கை தட்டுவாங்க. ஒரு பாராவுல ஒரு வசனத்தை எழுதிக்கஙக முதல்ல. ‘ஐயோ கடவுளே, நீ இருந்தா இப்படி தொடர்ந்து கஷ்டத்தைக் குடுப்பியா? திருட்டுப் பய, மொள்ளமாரிப் பயல்லாம் நல்லா இருக்கான். நேர்மையா இருக்கற எனக்கேன் இப்படி கஷ்டம்?' அப்படின்னு சீரியல்ல நீங்க கேட்ட வசனமாவும் இருக்கலாம். இதையே...

கடவுள் ஒருவர் இருந்தால்
கஷ்டம் இத்தனை தருவானா
திருடன், அயோக்கியனெல்லாம்
மகிழ்வாய்த்தான் திரிவானா?
நலலவனாய் இருப்பவனோ நாளும்
துன்பந்தான் படுகின்றான்!


அப்படின்னு மடக்கி எழுதிட்டீங்க்ன்னா... புதுக்கவிதை ரெடி! இப்படிச் சில பல கவிதைகளை இயற்றிப் பாராட்டு (அ) கல்லடி வாங்கிட்டீங்கன்னா நீங்களும் கவிஞரே! கவிதை மூலமா யாரையாவது வம்புக்கிழுத்து சர்ச்சையில ஈடுபட்டா இன்னும் சிறப்பு. சீக்கிரமா பிரபலமடைஞ்சுடலாம். அத விடுங்க... ரெண்டு டைப்பான கவிதை வகைகளைப் பார்த்துட்ட நீங்க, ஹைக்கூங்கற வடிவத்தை மட்டும் ஏங்க விட்டு வெக்கணும்? அதையும் தெரிஞ்சுக்கங்க. ‘ஹைக்கூ என்பது படித்ததும் உங்கள் மனதில் ஒரு காட்சியை நிறுத்த வேண்டும் அல்லது ஏதாவது ஒரு உணர்வை தோற்றுவிக்க வேண்டும்' அப்படின்னு சொன்னாரு எழுத்தாளர் சுஜாதா.

அவர் கெடக்கார் அப்பாவி மனுஷன்! நமக்கு வேண்டியதெல்லாம் என்ன... ஹைக்கூங்கறது மூணு வரியில வரணும். அவ்வளவு தாங்க வேண்டியது. முன்னல்லாம் ‘ஜுனூன் தமிழ்'ன்னு ஒரு பேட்டர்னை சொல்வாங்க கேட்டிருக்கீங்களா? வரணும் நீ இப்ப.... சொல்ற என்ன நீ? அப்படின்னுல்லாம் வினோதமா சிரசாசனம் செய்யற வாக்கியங்களா வரும். கிட்டத்தட்ட அதே பேட்டர்னை அப்ளை பண்ணினீங்கன்னா ஹைக்கூ ரெடிங்க. உதாரணமா... ‘தண்ணீரில் காதலியின் முகத்தைப் பார்த்தேன். நிலவு போல் தெரிந்தது' அப்படின்னு புதுக்கவிதை எழுதி வெச்சிருக்கீங்கன்னு வெச்சுக்கங்க... அதை அப்படியே ரிவர்ஸ்ல மூணு வரியில எழுதிப் பாருங்க...

நிலவு தெரிந்தது
தண்ணீரில் என்
காதலி முகம்!


...இவ்ளவ் தாங்க ஹைக்கூ! இதை மாதிரி நாலஞ்சு எழுதி நீங்க பிரசுரிச்சுட்டாப் போதும். ஹைக்கூவும் உங்களுக்கு கை வந்திடுச்சு(கைக்கூ?)ன்னு அர்த்தம். இதுல்லாம் ஹைக்கூவே இல்ல பொய்க்கூன்னு யாராச்சும் நாலு பேரு கூவத்தான் செய்வாங்க. விட்டுத் தள்ளுங்க... அப்படிக் கூவக்கூவ உங்க பாப்புலாரிட்டி கூடுதுன்னுதானுங்க அர்த்தம்! அதனால... வெரைட்டி வாரியா கவிதைங்களை எழுதி, கவிஞர் அவதாரமெடுத்து கவிதையுலகைக் கலக்குங்க... அப்புறம்... மறந்துராம அதையெல்லாம் தொகுத்து அடுத்த புத்தகக் கண்காட்சி வர்றதுக்குள்ள புத்தகமா வெளியிட்டுருங்க. பிறகென்ன... நீங்க பு.க.வுக்கு வர்றீங்கன்ற தகவல் கெடைச்சதுமே கெடைக்கற மரியாதையே தனி தான். ஹி... ஹி... ஹி...!

‘ஊசி' குறிப்பு 1 : நல்ல கவிதை எழுதும் என் நண்பர்கள் அனைவரும் இதை ஒரு பகடியாக மட்டுமே எடுத்துக் கொணடு (முடிந்தால்) நகைக்க வேண்டுகிறேன்.

‘ஊசி' குறிப்பு 2 : இவ்வளவு விளக்கமா வழிமுறைல்லாம் சொல்ற... நீ ஏன்யா கவிதை எழுதலைன்னு யாராச்சும கேட்டீங்களோ.... பிச்சுப்புடுவேன் பிச்சு! பேக்கரில இருக்கறவன் ஸ்வீட் தின்ன மாட்டான், சமையல்காரன் தானே சமைச்சதை சாப்பி
மாட்டான். அது மாதிரிதான்... நானும்... ஹெஹ்ஹெஹ்ஹே..!

Friday, October 25, 2013

ந்த வாரம் வலைச்சரத்துல ஆசிரியரா இருக்கற ‘எழில் அம்மா' (முறைக்காதீங்க ப்ளீஸ்...! அப்படித்தான் ஒருத்தரு கூப்ட்டிருந்தாரு அவங்கள...! ஹி... ஹி...!) ஒரு படத்தைப் பிரசுரிச்சு ‘‘இதைப் பாத்தா கவிதை தோணுதா?"ன்னு கேட்டிருந்தாங்க. ‘‘நான்லாம் கவிதை எழுதினா விபரீதம் ஏற்படும்"னு பயமுறுத்திட்டு வந்துட்டேன். இருந்தாலும்... எனக்குள்ள உறங்கிட்டிருந்த ஒரு கவிஞனை அவங்க தட்டி(!) எழுப்பிட்டாங்க. அதனால... ஒரு பழைய கவிதைய இப்ப எடுத்துவிடப் போறேன்.

துக்கு ஒரு ப்ளாஷ்பேக் இருககுங்க... னோகரமான ஒரு மாலை நேரம் மார்ஜியானாவுடன் கழிந்து கொண்டிருந்தது. (மார்ஜியானா யாருன்னு கேக்கறவங்களுக்கு அடுத்த பதிவுல விளக்கம் காத்திருக்கு.) அப்பல்லாம் இப்ப மாதிரி ஷாப்பிங் மால் கிடையாதுங்கறதால அது நிகழ்ந்த இடம் (நாங்கள் அடிக்கடி சந்திக்கும்) ஒரு பூங்கா. நிறைய (அவ) பேசிட்டிருந்தப்ப, (நான்) கேட்டுட்டிருந்தப்ப... திடீர்ன்னு, ‘‘உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்னு டீடெய்லாச் சொல்லேன் ப்ளீஸ"ன்னா. ‘‘சொல்றது என்ன... கவிதையாவே எழுதிக் காட்டறேன்" என்று என் கைவசம் எப்போதுமிருக்கும் சிறுகுறிப்புத்தாள் நோட்டில் எழுத ஆரம்பித்தேன். (‘‘உனக்கு கவிதைல்லாம் எழுத வருமா?"ன்னு அவ கேட்டதும், ‘‘கவிதையே பக்கத்துல இருக்கறப்ப கவிதை வராதா?"ன்னு நான் வழிஞ்சதும் இங்க அவுட் ஆஃப் கவரேஜ்ப்பா!) எழுதி முடிச்சுட்டு அவகிட்டக் குடுத்தேன். பொறுமையாப் படிச்சு முடிச்சவ, எழுந்து, என்னை முறைச்சுட்டு, எதுவும் பேசாம டக்குன்னு போயிட்டா... அதுக்கப்புறம் அவளைச் சமாதானப்படுத்த ஒரு வாரம் கடுமையா மெனக்கெட வேண்டியிருந்தது.

அதனால... இந்தக் கவிதை(?)யைப் படிக்கற உங்களுக்கு ஏற்படப் போற ஊசி (பின்) விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல... விபரீதத்துக்கு வித்திட்ட எழில் மேடம்தான் பொறுப்புங்கறதை மீண்டும் வலியுறுத்திச் சொல்லிக்கறேன். (பத்த வெச்சிட்டியே பரட்டை...! ஹி... ஹி... ஹி...!)


                                                   தனிமை விரட்டும் சத்தம்!

கனவில் தினமும் நீந்திடப் பிடிக்கும்! வைகறை
    வானத்தின் சிவப்பு மிகவும் பிடிக்கும்!
மனம் மயக்கும் சங்கீதம் பிடிக்கும்! கொட்டும்
    மழைதனில் நனைந்து ஆடிடப் பிடிக்கும்!


உனது ஓரவிழிப் பார்வை பிடிக்கும்!  ‘ச்சீய்’
    என்னும் சிணுங்கல் கேட்கப் பிடிக்கும்!
எனது பார்வை மேயுங்கால் சீற்றமாய் - நீ
    என்னை அடிப்பதும் பிடிக்கும்! என்றேனும்
சினங்கொண்டு எனை வெறுத்தால் - உனது
    வெறுப்பும் பிடித்தம் தானெனக்கு!



நாங்களும் வெப்போம்ல... கவிதைக்குப் படம்!

படிக்கப் பிடிக்கும்; நிறைய படைக்கப் பிடிக்கும்!
    இருளும் பிடிக்கும்; வெளிச்சமும் பிடிக்கும்!
நடிப்பும் பிடிக்கும்; நங்கையர் சிரிப்பும் பிடிக்கும்!
    மழலையின் முத்தம் மனதுக்குப் பிடிக்கும்!


பண்புடன் ஆடும் பரதம் பிடிக்கும்! உலகம்
    தனை மறந்து உறங்கப் பிடிக்கும்!
அன்பினில் நனைந்து வாழப் பிடிக்கும்! அனல்
    வீசும் எதிரியையும் பிடிக்கு மெனக்கு!


சத்தம் இல்லாத தனிமை பிடிக்கும்! அந்தத்
    தனிமையை விரட்டும் சத்தமும் பிடிக்கும்!
யுத்தம் இல்லாத உலகம் பிடிக்கும்! உன்னில்
    உயிர்ப்பைத் தேடும் தருணங்கள் பிடிக்கும்!


சிந்தனை பிடிக்கும்! வந்தனை பிடிக்கும்! நான்
    புதிதாய்ப் பிறக்கும் தருணங்கள் பிடிக்கும்!

எத்தனை அழகு பூமிதனில்! நிலவுக்குக் கீழே
    வாழ்ந்திடும் உலகில் எல்லாமும் பிடிக்கும்!

இத்தனைக்கு மேலும் என்கவி தொடர்ந்தால் - கண்ணே...
    நிச்சயம் உனக்குப் பைத்தியம் பிடிக்கும்!


கொஞ்சம் புன்னகையுடன்,

கொஞ்சம் குசுமபுடன்,
(கொஞ்சம் கொலவெறியுடன்)...
பாலகணேஷ்!

Thursday, July 18, 2013

வாலிபக் கவிஞனே, நீ வாழி!

Posted by பால கணேஷ் Thursday, July 18, 2013

திருவரங்கத்திலிருந்து புறப்பட்டது அவனது கவிதையுலா
திரைத்தமிழ் தழைக்க அவன் பாடிவந்த முழுநிலா!

சென்னை வந்தவன் பட்டான் பல துயரம்! - அவனை
முன்னிறுத்தியது அவையில் வாத்யாரின் அன்புக்கரம்!

எதிர்ப்பட்டோர் பலம்பாதி கொள்ளும் வாலியெனும்
பெயர்சூடிய அந்நல்லோனின் திருநாமம் ரங்கராஜன்
பழகினோர் பகன்றிடுவார் மாண்பில் அவனோர் தங்கராஜன்!

அவதார புருஷன், பாண்டவர் பூமியெனப் படைத்தான்பல காவியம்
நற்றமிழில் நடனமிடும் அவன்றன் எழுத்து மங்காததோர் ஓவியம்!

ஜாலியான பாடல்களும் புனைந்தவனை உலகம் செய்தது கேலி
கோலமிகு தீந்தமிழ்ப் பாக்களால் வாயடைக்க வைத்தானந்த வாலி!

அவன்றன் கவிதையை அளவிட உலகிலிலை ஓர்அலகு
அம்முதியவனை வாலிபக் கவிஞனெனக் கொண்டாடியது இவ்வுலகு!

தமிழரங்கில் மணிப்பிரவாளமாய் அவன்பாடாத சரணமில்லை
தமிழர்தம் உளம்தனில் எந்நாளும் அவனுக்கு மரணமில்லை!


=====================================================
என்னுடன் ‌இணைந்து இங்கு வாலிபக் கவிஞருக்கு இரங்கல் தெரிவிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி!
=====================================================

Wednesday, January 25, 2012

என் கிறுக்கல்கள்!

Posted by பால கணேஷ் Wednesday, January 25, 2012
அன்று

வெறிகொண்ட கூட்டம் ஒன்று
    குரல் உயர்த்திக் கூச்சலிட்டது!
நெறிதவறி நடக்கிறது அரசாட்சி
    மன்னர் இறந்தால் அவர்மகன்
பிறவியினால் தகுதி வருமோ?
    ஒழித்திட வேண்டும் இம்முறையை
பிறையென வளர்ந்து வாழ்ந்திட
    வேண்டும் ‌எமக்கு மக்களாட்சி!


இன்று

வெறிகொண்ட கூட்டம் ஒன்று
    குரல் உயர்த்திக் கூச்சலிடுகிறது!
நற்குணமிக்க தலைவா! வாழிநீயென்று
    அருகினில் தலைவரின் புதல்வன்
கூட்டத்தைப் பார்த்துக் கையசைக்க,
    அன்னாரையும் வா‌‌ழி‌யெனக் கூவுது கூட்டம்!

அக்காலத் தமிழினம் தன்னையுணர்ந்து
    எழுச்சி பெற்று போரிட்டது
மக்களாட்சி பெற்று மாண்புற வேண்டுமென்று!
    காலப்போக்கில் உணர்ச்சிகள் மறைய
இக்காலத் தமிழினம் தன்னையுணராமல்
    மன்னராட்சியிலேயே மூழ்கி வாழ்கிறது!
எக்காளமிடுகிறது இதுவே நல்லாட்சியென...
    மன்னர் பரம்பரையோ இன்றளவும்
‌ஒய்யாரப் பவனிவருகிறது அப்பாவிகளின் தோள்களிலே!

மேலே உள்ள கவிதை(ன்னு நினைச்சு நான் கொடுத்திருக்கிற)யைப் படிச்சுட்டு குட்டணும்னு நினைக்கறவங்கல்லாம் தாராளமாக் குட்டுங்க. ஏன்னா... நம்ம வாசகர்கள்ல நிறையப் பேர் கவிதை ‌எழுதறவங்கதான்! தட்டிக் கொடுக்கற அளவுக்கு இருக்குன்னு நினைச்சு பாராட்டினீங்கன்னா... இப்படி கவிதை எழுத முயற்சிக்கலாம்னு எனக்கு தைரியம் ஊட்டிய புலவர் திரு.ச.இராமாநுசத்தைச் சேரட்டும் அவையனைத்தும்!

அப்புறம்... கவிதைன்னு ட்ரை பண்ணிட்டு, காதல் பத்தி எழுதலைன்னா கவிஞர்கள் ஜாதில சேத்துக்காம ஜாதிப் பிரஷ்டம் பண்ணிடுவாங்கன்னு கேள்விப்பட்டேன். அதனால... இன்னொண்ணு கீழே... (சோதனை இன்னும் விடலையான்னு யாரோ முணுமுணுக்கறது கேக்குது)

 
தேவதைகள் இமைப்பதில்லை!

இமைககாது என் முகத்தையே
பார்ப்பதேனடா என் உளம்கவர் கள்வா
என்றாள் என் தேவதை!

ஆலயத்தின் சிற்பக்கூடத்திற்கு
உன்னுடன் நான் செல்ல
உயிர்ச்சிலையைக் கண்டு
கற்சிலைகள் முகம் திருப்பிக் கொண்டனவே...
உன் விழிகள் இமைக்கின்றனவா
என்பதையே உன்னித்தேன் என்றேன்!

கலகலவென்று நகைத்து
என்னைப் பார்த்து ஒற்றைக்
கண் சிமிட்டினாள் என் தேவதை!

பின்குறிப்பு : சனிக்கிழமையுடன் என் அஞ்ஞாத வாசம் முடிகிறது. ஞாயிறு முதல் அனைவரின் தளங்களுக்கும் வழக்கம் போல் என் வருகை இருக்கும்.
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube