Saturday, November 23, 2013

மொறு மொறு மிக்ஸர் - 22

Posted by பால கணேஷ் Saturday, November 23, 2013
னந்த விகடன் இதழ் இரண்டு வாரங்களாக 3டி முறையில் படங்களை அச்சிட்டு அசத்தி வருகிறார்கள். இந்த முறையில் அச்சிடுவதற்கு ஒரு வாரம் முன்பு அங்கு பணி செய்யும் நண்பர் ஒருவருடன் இதுபற்றி பேசிக் கொண்டிருந்தோம். ‘‘முன்ன ஒரு சமயம் இப்படித்தான் ஆனந்த விகடன்ல 3டி படங்கள்னு போட்டுட்டு, கண்ணு கிட்ட கொண்டு போய் உத்துப் பாத்தா 3டி எஃபக்ட் தெரியும்னு போட்டீங்க... நானும் புத்தகத்தை கண்ணுகிட்ட வெச்சு வெச்சுப் பாத்ததுல கண்ணே லேசா ஒண்ணரைக் கண்ணாயிட்ட மாதிரி ஃபீலிங் வந்ததே தவிர, எஃபக்ட் ஒண்ணும் தெரியல" என்றேன். ‘‘இந்த முறை அப்படி இல்லிங்க. கண்ணாடியோட பாத்தீங்கன்னா... விளம்பரத்துல சொல்லியிருக்கற மாதிரி அள்ளும்" என்றார். விகடன் வெளியாகி 3டி படங்களை நான் ரசித்த பினனொரு நாளில் அவரை மீண்டும் சந்திக்க நேர்ந்தது. அப்போது இதைப் பற்றிக் குறிப்பிட்டு, ‘‘இப்ப என்ன நினைக்கறீங்க?’’ என்றார். நான் நினைத்ததைச் சொன்னவுடன், ‘‘பாதகா...!" என்கிற மாதிரி ஒரு பார்வை பார்த்துவிட்டு அப்பால் நகர்ந்து சென்றுவிட்டார். நான் சொன்னது என்னவாக இருககும்? யூகியுங்க...

==================================

‘‘வடாபாவ் சாப்பட்டதுண்டா ஸார்?" என்று கேட்டார் சிவா. வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த என் காதில் சரியாக விழாததால், ‘‘என்ன சிவா... திடீர்னு அடா புடாங்கறே?" என்றேன். ‘வடாபாவ் சாப்பிடலாமான்னு கேட்டேன் ஸார்’’ என்று சற்று பலமாகவே சிவா சொன்னதும், ‘‘அப்டீன்னா என்ன?" என்று கேட்டேன். நாங்கள் வேளச்சேரி ஃபீனிக்ஸ் மால் போகலாம் என்று திட்டமிட்டுப் புறப்பட்டு ஸ்கூல் பையன் எங்களுடன் ஜாயின் செய்வதற்காக கிண்டி நோக்கிப் போய்க் கொண்டிருந்த ஒரு ஞாயிறு மதியம் அது. ‘‘மும்பைல ரொம்ப ஃபேமஸ் டிஷ் ஸார்...! நாம டீக்கடையில வடை, ப்ஜ்ஜி சாப்பிடற மாதிரி அங்க அதைச் சாப்பிடுவாங்க. சென்னைல பல இடங்கள்ல இது கிடைக்குதுன்னாலும்... வேளச்சேரியில இதுக்குன்னே ஒரு தனிக் கடை ஆரம்பிச்சிருக்காங்க. வடா பாவ் நாலஞ்சு வெரைட்டில தர்றாங்க..." என்றார். ‘‘ரைட் போலாம்" என்றேன்.

ஆஸர்கானா நிறுத்தத்தில் நாங்கள் காத்திருக்க, ஸ்.பை. வந்தார். ‘அம்மா மினி பஸ்'ஸில் சவாரி செய்தே ஆகவேண்டுமென்று பலப்பம் சாப்பிடாத குழந்தையாக சிவா அடம்பிடிக்க அரை மணி நேரம் காத்திருந்து ஐநது நிமிஷ மினி ட்ரிப் அடித்தோம். மதுரையிலும் கரூரிலும் நான் மினி பஸ் சவாரி செய்ததுண்டு. கசகசவென்று கூட்டம் நிரம்பி வழிய, கன்னாபின்னாவென்று ஏதோ பாட்டைக் கத்தவிட்டுக் கொண்டு, நல்ல அனுபவமாக ஒருநாளும் இருந்திராதது மினி பஸ். சென்னையில் கூட்டமில்லாமல் புதிய பஸ்ஸில் சென்றது வித்தியாசமான நல்ல அனுபவமாக இருந்தது. கொஞ்ச நாட்கள் போனால்தான் இந்த பஸ்கள் எல்லாம் என்ன லட்சணத்தில் பராமரிக்கப்படுகின்றன, எப்படி ஓடுகின்றன என்பதை முழுதாக மதிப்பிட முடியும். பார்க்கலாம். வேளச்சேரியில் குருநானக் கல்லூரி தாண்டி சிறிது தூரம் வந்ததும் சிவா குறிப்பிட்ட ‘கோலி’ என்ற பெயர் கொண்ட வடாபாவ் கடை இருந்தது. பனீர் வடாபாவ், சீஸ ஃபிங்கர் வடாபாவ் என்று இரண்டு வெரைட்டி ருசி பார்த்தேன். சிவா இதைப் பற்றி விரிவாக எழுத இருப்பதாக என்னிடம் சொன்னதால் என் ஒருவரி விமர்சனம்: செம்ம டேஸ்ட்! அதன்பின் மூவருமாக ஃபீனிக்ஸ் மாலுக்குச் சென்று ஒரு ரவுண்டு வந்தோம். ஒரு காஃபிக்கு 130 ரூபாயும், கண்ணில் படும் கடைகளில் ‘அத்தியாவசியப்' பொருள்களுக்கு 500, 1000 என்று செலவழித்துக் கொண்டிருந்த பல ‘ஏழை'களைக் கவனித்தது தனியொரு சந்தோஷம். இங்கே எதிர்ப்படுகிற எவராவது உங்களிடம் ‘‘இந்தியா ஏழைநாடு பிரதர்" என்று சொன்னால் நிச்சயம் கன்னத்தில் அறைவீர்கள்!

==================================

‘தி இந்து' நாளிதழ் தமிழில் லான்ச் ஆன ஓரிரண்டு மாதங்களுக்குள்ளாகவே ‘தீபாவளி மலர்' வெளியிட்டிருக்கிறது. எப்போதுமே ‘முதல்’ புத்தகங்களை வாங்கிப் பார்க்கும் ஆர்வம் எனக்குண்டு என்பதால் வாங்கிப் படித்தேன். கிட்டத்தட்ட விகடன் தீபாவளி மலரின் ‘ரிப்ளிகா’ மாதிரி இருக்கிறது. ஆனாலும் அதைவிடவும் ரசிக்க முடிந்தது என்னால். தமிழகத்தின் முகக்கிய சுற்றுலாத் தளங்களை அழகிய படங்களுடன் ஒரு பக்கக் கட்டுரைகளாக தந்திருப்பது வெகு அழகு!

 தீபாவளி மலர்களின் வழக்கம் போல் ஸ்வாமி படங்களுடன் ராமகிருஷ்ணர், விவேகானந்தர் போன்ற ஞானிகளின் படங்களும் தந்திருப்பது ரசனை! பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார் போன்றவர்களின் கதைகளைத் தவிர்த்து, கட்டுரைகளாக வாங்கி வெளியிட்டிருப்பதும் மிக ரசிக்க வைத்தது. சினிமா பற்றி தரப்பட்டிருக்கும் தனிப் பகுதியில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளும், வாத்தியார் சுஜாதாவின் டாப் சிறுகதையான ‘நகரம்’ வெளியாகியிருப்பதும் ரொம்பவே பிடித்திருந்தது. ஆக மொத்தத்தில்... கொடுத்த காசுக்கு ஏமாற்றாத ஒரு தீபாவளி மலர்!

==================================

ல்ல காரியம் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தால் அதை உடனே செய்ய வேண்டுமென்று பெரியவர்கள் சொல்லக் கேட்டதுண்டு. அதன் முழு விளைவை சமீபத்தில்தான் அனுபவித்தேன். பதிவுலகின் சீனியரும், எனக்குப் பிடித்த பதிவர்களில் ஒருவருமான திரு.ஜி.எம்.பாலசுப்ரமணியன் ஐயா 13 முதல் 16 வரை சென்னையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். 14ம் தேதி நான் ஃப்ரீயாக இருந்தபோதே போய்ப் பார்த்திருக்க வேண்டும். சீனு, ஸ்.பை. உள்ளிட்ட ‘நம்ம பசங்க’ளுடன் போகலாம் என்று அடுத்த நாள் (15ம் தேதி) வருவதாக ஜி.எம்.பி. ஐயாவிடம் சொல்லிவிட்டேன். அடுத்த தினம் எதிர்பாராதவிதமாக அலுவலக ஆணிகள் சற்றும் அசையவிடாமல் என்னை அறைந்துவிட, நண்பர்களும் வேறுவேறு காரணங்கள் சொல்லி அன்று போக இயலவில்லை. அடுத்த தினமோ புயலின் விளைவாகப் பெயத பெருமழை! மழையினூடாக ஜி.எம்.பி. ஐயாவும் ஊருக்குப் புறப்பட்டு விட்டார். ஏன்தான் அந்த சந்திப்பை ஒரு நாள் தள்ளிப் போட்டேனோ... என்று இப்போதும் என் தலையில் குட்டிக் கொண்டு வருந்திக் கொண்டுதான் இருக்கிறேன். வெரி ஸாரி ஜி.எம்.பி. ஸார்!

==================================

நேற்று ‘கிருஷ்ண லீலை' என்ற படம் சன் லைஃப் தொலைக்காட்சியில் பார்க்க நேரிட்டது (பின் பகுதிதான்). குசேலர் கதாபாத்திரத்தை நாகேஷ் செய்திருந்த விதம்...! அரண்மனையில் அலட்சியப்படுத்தும் சேவகர்களின் முன் கிருஷ்ணனே வாசலுககு வந்து அழைத்ததும் காட்டுகிற பந்தா... சேடிகள் கண்ணன் நடக்கும் பாதையில் மலர் இறைக்க, நாகேஷ் மேல் அது பட, அவர் நாணி துள்ளிக் குதிக்கும் அழகு... ஆளுயர மாலையை கண்ணன் போட்டதும் கழுத்து வளைந்து கும்பிடுவதும், ‘‘எத்தனை நேரம் கும்பிடுவாய் குசேலா?’ என கண்ணன் கேட்க, ‘‘கும்பிடலை கண்ணா... நீ போட்ட மாலை நிமிர விடவில்லை’ என்று பன்ச் அடிப்பதும்... கண்ணனின் அன்பில் நனைந்து தனக்கென எதுவம் கேட்காமல் அரண்மனையை விட்டு வெளியே வந்து புலம்புவதும்... எக்ஸ்ட்ரார்டினரி பர்ஃபாமன்ஸ்! பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு மட்டும் பலர் நடித்திருந்த குசேலர் வேஷத்தை இப்படியொரு காமெடி + சென்டிமென்ட்டுடன் பண்ண நாகேஷால்தான் முடியும். What a legend!

==================================

அப்புறம்... ஆ.வி. நண்பரிடம் நான் சொன்ன கமெண்ட்: ‘‘3டி படங்கள் பார்க்கப் பார்க்க பிரமிப்பாதான் இருக்கு பிரதர். ஆனா... இதை ஆ.வி.ல செய்யாம டைம்பாஸ்ல செஞ்சா இன்னும் நல்லா இருக்கும். ஹி... ஹி...!"

Tuesday, November 12, 2013

கேப்ஸ்யூல் நாவல் - 9

Posted by பால கணேஷ் Tuesday, November 12, 2013
                              தொட்டால்... தொடரும்!

                                    பட்டுக்கோட்டை பிரபாகர்
 
வெங்கடேஷ் ‘பாலங்கள்’ பத்திரிகையின் உதவி ஆசிரியர். பிரசவத்துக்காக மனைவி ஊருக்குச் சென்றிருக்க, ஒரு மழைநாளின் மாலையில் பாஸ்கர் என்ற இவனது நண்பன், தான் காதலித்த வசந்தி என்ற பெண்ணுடன் மதுரையிலிருந்து ஓடிவந்து இவன் வீட்டுக் கதவைத் தட்டுகிறான். வெங்கடேஷுக்கு அவர்கள் ஓடிவந்த செயல் பிடிக்காவிட்டாலும் நண்பனுக்கு அடைக்கலம் தருகிறான். ஸ்ரீராம் வெங்கடேஷின் வீட்டு மாடியில் குடியிருக்கும் ஒரு ஓவியன். அவன் கனவுகளி்ல் அடிக்கடி குதிரையில் வரும் ஒரு இளவரசியின் முகம் வசந்தியின் முகமாக இருக்கக் கண்டு வியப்பில் ஆழ்கிறான் ஸ்ரீராம்.

வெங்கடேஷ், ‌தனக்குத் தெரிந்த கெளதமன் என்ற தொழிலதிபரிடம் பாஸ்கருக்கு வேலை கேட்க அழைத்துச் செல்கிறான். கெளதமனுடன் பேசும் நேரம் மாடியிலிருந்து அலறல் சத்தம் கேட்க, அவர் எழுந்து விரைகிறார். கெளதமனின் மகள் மஞ்சு சிகிச்சையை ஏற்க மறுத்து கலாட்டா செய்ய, சமாதானம் செய்கிறார். தூசி படிந்த ஓவியமாய் அந்த அறையிலேயே அடைந்து கிடக்கும் அழகான அந்த மஞ்சு, இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை நினைவுகூர்கிறாள். கெளதமனின் நண்பர் மகன் நந்தாவுடன் காரில் வெளியில் செல்ல, மூன்று ரவுடிகளால் நந்தா தாக்கப்பட்டு, தான் கற்பழிக்கப்பட்டதை தன்னால் சுலபமாக மறந்துவிட முடியாது என்று சொல்லி அழும் அவளைத் தேற்றுகிறார் கெளதமன்.

டாக்டர், மஞ்சுவுக்குத் திருமணம் செய்து வைப்பது நலலதென்றும், அவள் வாழ்வில் நடந்த விஷயங்களை மணப்பவனிடம் மறைக்காமல் இருப்பதே அவளுக்கு நல்லது என்றும் சொல்லிவிட்டுச் செல்கிறார். ‌கீழே வந்ததும் வெங்கடேஷ், பாஸ்கருடனான பேச்சில் பல விஷயங்களினூடே, கற்பழிக்கப்பட்ட பெண்கள் குற்றமற்றவர்கள், வாழ்வுதர வேண்டும் என்று பாஸ்கர் ஆவேசமாகப் பேச கெளதமன் அவனுக்கு தன் அலுவலகத்தில் வேலை தருகிறார்.

ஸ்ரீராம் பாஸ்கர் - வசந்தியுடன் நட்பாகப் பழகுகிறான். ஸ்ரீராமின் பண்பாடான நடத்தையும், ஓவியத் திறமையும் வசந்தியைக் கவர்கிறது. தன் கம்பெனியில் தற்காலிக டைப்பிஸ்டாக வசந்திக்கு வேலை வாங்கித் தருகிறான் ஸ்ரீராம். பாஸ்கருக்கு மஞ்சுவை கெளதமன் அறிமுகப்படுத்தி வைக்கிறார். பாஸ்கரின் விளையாட்டு ஈடுபாடும், கலகல சுபாவமும் மஞ்சுவை சோகத்திலிருந்து மீட்டு வருகிறது. மகிழ்ச்சியடைந்த கெளதமன், பாஸ்கரை தன் பங்களாவின் அவுட் ஹவுஸிலேயே தங்கும்படி கட்டளையிட, வேறு வழியின்றி வசந்தியைப் பிரிந்து அங்கே செல்கிறான் பாஸ்கர்.

கம்பெனியில் ஸ்ரீராமையும், வசந்தியையும் இணைத்து டாய்லெட்டில் யாரோ எழுதி வைத்துவிட, கோபமான ஸ்ரீராம், அதை எழுதிய மாதவ் என்பவனைக் கண்டுபிடித்து, அனைவர் முன்னிலையிலும் அடித்து, வேலையை விட்டு அவனை அனுப்பச் செய்கிறான். ஸ்ரீராமின் அந்த ரோஷமும் காமம் கலக்காத வசந்தியி்ன் மீதான அவன் அன்பும் அவளை பிரமிக்க வைக்கிறது. மஞ்சுவின் அண்மை பாஸ்கரை நிலைதடுமாற வைக்கிறது. வசந்தியின் பிறந்தநாளைக்கூட புறக்கணித்து கெளதமன், மஞ்சுவுடன் திருச்சி செல்கிறான். வேலையாள் மூலம் கேக் அனுப்பி வைக்கிறான். ஸ்ரீராம் இரவு முழுவதும் கண்விழித்து அவளை ஓவியமாக வரைந்து பரிசளிக்கிறான். வசந்தி நெகிழ்கிறாள்.

பாஸ்கர் திரும்பி வந்ததும் வசந்தி அவனிடம் தான் கெளதமனின் பங்களாவுக்கு ‌போன் செய்த விவரத்தைக் கூறி விளக்கம் கேட்க, அவளை எடுத்தெறிந்து கோபமாகப் பேசிவிட்டுப் பிரிகிறான் பாஸ்கர். மறுதினம் மனம் கேட்காமல் வசந்தி போன் செய்ய, அவளிடம் அப்போதும் கடுமையாகப் பேசுகிறான். தன் சொத்து விவரங்களையும், அனைத்தும் மஞ்சுவுக்குத்தான் என்றும், மஞ்சுவின் மீது தான் வைத்திருக்கும் பாசத்தையும் சொல்லி, அவளை மணந்து கொள்ளும்படி பாஸ்கரிடம் கெளதமன் வேண்டுகோள் விடுக்க... தடுமாறுகிறான் பாஸ்கர்.

ஸ்ரீராமின் அப்பா இறந்து விட்டதாக தந்திவர, அப்பாவின்மேல் வெறுப்பிலிருக்கும் அவனுக்கு அறிவுரை கூறி, ஊருக்கு அனுப்பி வைக்கிறாள் வசந்தி. வெங்கடேஷின் அலுவலகம் வரும் பாஸ்கர், தான் முதலாளி மகள் மஞ்சுவை மணக்கத் தீர்மானித்திருப்பாகச் சொல்ல, வெங்கடேஷ் கோபமாகிறான். வசந்தியுடன் திருமணமா நடந்து விட்டது, அவள் தன் ஊருக்கே போகட்டும் என பாஸ்கர் சொல்ல, வெங்கடேஷ் அவனிடம் நியாயத்தை எடுத்துச் சொல்லி சண்டை பிடிக்கிறான். வசதியான வாழ்வு வரும்போது உதறுவது மடத்தனம் என்றும், ப்ராக்டிகலாக நடந்து கொள்ள வேண்டுமென்றும் உறுதியாகச் சொல்லிவிட்டு போகிறான் பாஸ்கர்.

வெங்கடேஷ் கெளதமனைச் சந்தித்து பாஸ்கர்-வசந்தி காதலையும், ஊரை விட்டு ஓடி வந்ததையும் சொல்ல, அவர் தனக்கு ஏற்கனவே தெரியுமென்றும், வசந்திக்கு பணம் தந்து செட்டில் செய்வதாகவும் சொல்கிறார். அவரிடம் நியாயம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகிறான் வெங்கடேஷ். வசந்தியை முகம் பார்த்துப் பேச கஷ்டப்பட்டு, ஸ்ரீராமின் மாடிப் போர்ஷனில் வந்து படுக்கிறான். இரவில் ஸ்ரீராம் வர, அவனிடம் பாஸ்கரின் நடத்தையைப் பற்றிக் கூறி என்ன செய்வது என ஆலோசிக்கிறான். ஸ்ரீராம் கோபமாக நியாயம் கேட்க இப்போதே போகலாம் என்க, வெங்கடேஷ் தடுககிறான். ஸ்ரீராம் மறந்து வைத்துவிட்ட ஸ்டவ்வைக் கொடுக்க வரும் வசந்தி இவர்கள் பேசியது அனைத்தையும் கேட்டு விடுகிறாள்.

கெளதமன் பிஸினஸ் காரியமாக வைத்திருக்கும் மைக்ரோபோனைப் பார்த்ததும் பாஸ்கருடன் விளையாட நினைக்கும் மஞ்சு, அவன் அறையில் அதை வைத்து விட்டு, தன் தோழியின் வீட்டுக்கு வந்து தோழியிடம் பாஸ்கருக்கு போன் செய்யச் சொல்கிறாள். பாஸ்கர் பேசுவது கேசட்டில் ரெகார்டாகும்படி செய்திருக்கிறாள் மஞ்சு. தோழியிடம் பேசிய பாஸ்கர் நிமிர, வசந்தியைக் கண்டு திடுக்கிடுகிறான். நியாயம் கேட்கும் வசந்தியிடம் அவன் கோபமாகப் பேசி அனுப்புகிறான். ஸ்ரீராமின் அறையில் அவன் டைரியை எதேச்சையாகப் பார்க்கும்படி நேர்கிறது வெங்கடேஷுக்கு. அதில் வசந்தி மேல் தான் வைத்திருக்கும் காதலைப் பற்றி ஸ்ரீராம் எழுதியிருப்பதைப் படித்து நெகிழ்கிறான்.

தன் தோழியுடன் பாஸ்கர் பேசிய உரையாடல் டேப்பை போட்டுக காட்டி அவனை கேலி செய்கிறாள மஞ்சு. இங்கே வெங்கடேஷ், ஸ்ரீராமின் காதலைச் சொல்லும் டைரியை வசந்தியிடம் தந்து படிக்கச் சொல்ல, வசந்தி படித்து பிரமிக்கிறாள். மஞ்சுவின் தோழி வீட்டுக்கு வர, அந்த உரையாடல் கேஸட்டை அவளுக்கு போட்டுக் காட்ட, போன் உரையாடலின் தொடர்ச்சியாக வசந்தி - பாஸ்கர் பேசியது முழுவதையும் அப்போதுதான் கேட்கிறாள் மஞ்சு. கடும்கோபத்துடன் கெளதமனையும் அழைத்துக் கொண்டு பாஸ்கரிடம் வரும் மஞ்சு, ‘நாளை தன்னைவிட இன்னொரு பெரிய பணக்காரி கிடைத்தால் தன்னையும் விட்டுவிடுவான்தானே’ என்று சீறி, அவனை மணக்க முடியாது என்கிறாள். வசந்தியிடம் மன்னிப்புக் கேட்டு அவளுடன் வாழ்வதுதான் சரி என்று பாஸ்ரிடம் பொரிந்து தள்ளி, அவனை உதறிவிட்டுப் போகிறாள்.

வெங்கடேஷ், ஸ்ரீராமை மணந்து கொள்ளும்படி வசந்தியிடம் கேட்க, அவள் யோசிக்க ‌நேரம் கேட்கிறாள். வெங்கடேஷ் இதுபற்றி ஸ்ரீராமுடன் பேசி, அவனையும் கன்வின்ஸ் செய்தபடி வர, ஸ்ரீராமால் வேலையை விட்டு அனுப்பப்பட்ட மாதவ், அவனைக் கத்தியால் குத்திவிட்டு ஓடுகிறான். பாஸ்கர், தன் தவறை உணர்ந்து கெளதமனிடம் ராஜினாமாக் கடிதம் தந்து விட்டு, புறப்படுகிறான்.ஸ்ரீராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செய்தியை வசந்திக்கு போன் மூலம் வெங்கடேஷ் சொல்ல, பதறி ஓடி வருகிறாள். அவளிடம் ஸ்ரீராம் எழுதிய கடிதத்தை வெங்கடேஷ் தர, அதன் மூலம் ஸ்ரீராமின் உடல் சாராத தூய காதலை தரிசிக்கிறாள் வசந்தி.

அப்போது பாஸ்கர் அங்கு வந்து அவளிடம் மன்னிப்புக் கேட்டு, வசந்தியின் பதிலை எதிர்பார்த்துக் காத்து நிற்க, ஆபரேஷன் தியேட்டரின் கதவு திறந்து நர்ஸ் வெளிப்பட்டு, ஸ்ரீராமுக்கு ரிஸ்கான ஆபரேஷன் என்பதால் யாராவது கையெழுத்திட வேண்டும் என்க, வசந்தி கையெழுத்திடுகிறாள். ‘ஸ்ரீராமுக்கு நீங்கள் யார்?’ என்று நர்ஸ் கேட்க, வசந்தி, வெங்கடேஷைம் பாஸ்கரையும் பார்த்துவிட்டு அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறாள்: ‘‘நான் அவரோட மனைவி!’’

காதல் கதைகள் நிறையப் படித்திருப்பீ்ர்கள். இந்தக் கதை - பி.கே.பியின் வார்த்தைகளில் சொன்னால் - ‘காதலைப் பற்றிய கதை!’ நிஜமான காதல் என்ற உணர்வை முப்பரிமாணத்தில் காட்டி, உண்மைக் காதலை உயர்த்திப் பிடிக்கும் கதை. குளிர் மேகங்கள் நிரம்பிய மாலையில் கடற்கரைக் காற்றில் நடக்கும் போது உணரும் இதத்தை இந்தக் கதையில் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் எழுத்து நடையில் உணர்வீர்கள், ரசிப்பீர்கள்; அந்த உணர்வை முழுமையாகப் பெற, இந்த ‘கேப்ஸ்யூல் நாவல்’ படிததால் போதாது. ‘தொட்டால் தொடரும்’ புத்தகத்தை முழுமையாகப் படித்தலே நலம்!

Wednesday, November 6, 2013

துப்பறிய வாங்க...!

Posted by பால கணேஷ் Wednesday, November 06, 2013
ன்று இணையம் நமக்கு மட்டற்ற வசதிகளை வழங்கியிருக்கிறது. இணையதளம் ஒன்றை நமக்கெனத் துவக்கி நமது சிந்தையில் முகிழ்க்கும் கவிதை, கதை, கட்டுரைகள் அனைத்தையும் பதிவேற்றி, பல நாடுகளிலிருந்தும் வாசக நட்புகள் அதைப் படித்து உடனுக்குடன் கருத்துச் சொல்லி... பின்னர் அவற்றை புத்தகமாகவும் வெளியிடும் நிலை இன்று சாத்தியம்! என்போன்றோர் கூட ஓரளவு பிரபலமாக இருக்க முடிகிறது! இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இத்தகைய வசதி எதுவுமில்லை. ஒரு எழுத்தாளன் பெயர்பெற வேண்டுமானால் பல பத்திரிகைகளில் படைப்புகள் வெளிவந்து பின்னர்தான் புகழ்பெற முடியும். அத்தகைய காலகட்டத்தில் எழுதத் துவங்கி இன்றும் தன்னுடைய புகழ்க் கொடியைப் பறக்க விட்டுக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர் தன் எழுத்துலக வாழ்வைத் துவங்கிய விதத்தை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உடனே விரைந்து கடைசிப் பாராவுக்குச் செல்லாமல் அவர் யார் என்று கண்டுபிடியுங்கள் (ஆங்காங்ககே க்ளூக்கள் உண்டு) பார்ப்போம்...

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவரான அந்த இளைஞருக்கு எழுத்தாளராக வேண்டும் என்ற கனவு அப்போது இருக்கவில்லை. ‘தேன்மழை' என்ற இதழில் ஒரு புகைப்படம் பிரசுரித்து அதற்கேற்ற வாசகம் எழுதும் போட்டி வைத்திருந்தார்கள். காவியுடை அணிந்து இடுப்புக்கு மேல் ஆடையணியாமல் ருத்ராட்ச மாலைகள் அணிந்த ஒரு துறவி உட்கார்ந்திருக்க... அவர் அருகில் ஆடையணியாத சேரிச் சிறுவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள் - இதுதான் படம். பார்த்ததும் அவர் மனதில் தோன்றிய எண்ணத்தை சுருக்கமாக ‘துறந்த நிலையும், திறந்த நிலையும்' என்று எழுதி அனுப்பினார். அந்த வாசகத்துக்கு முதல் பரிசு கிடைத்தது. முதல் பரிசு என்றால் பெரிதாக எதுவும் நினைச்சுடாதீங்க. அந்த இதழின் ஒரு வருட சந்தா! அவ்வளவுதான்...! ஆனால் ‘நம்ம கிட்டயும் க்ரியேட்டிவிட்டி இருக்கு போலருக்கே...' என்று அவரை எண்ண வைத்தது அது. (இந்த க்ளூவை வைத்து அவர் யாரென்று கண்டுபிடித்திருந்தால் நீங்க 100 மார்க் வாங்கின உஸ்தாத்!)

அதன்பின் வந்த தீபாவளி சமயம்... தினத்தந்தி நாளிதழில் அப்போது பிரபலமாகியிருந்த கதாநாயகி சுஜாதாவிடம் வாசகர்கள் கேட்க விரும்பும் கேள்விகளை தீபாவளி மலருக்காகக் கேட்கலாம் என்று அறிவித்திருந்தார்கள். நம்மவர் ‘நீங்கள் நடிப்பது கலையின் மீதுள்ள ஆசையினாலா, அல்லது பணம் சேர்க்கும் நோக்கத்திலா' என்று ஒரு கேள்வி எழுதி அனுப்பினார். அதைப் பிரசுரித்ததுதான் பிரசுரித்தார்கள்... அவர் எழுதின மாதிரியே போட்டிருக்கலாமில்லையா... இவரின் கேள்வியை இப்படி மாற்றிப் போட்டிருந்தார்கள்... ‘கண்ணே சுஜாதா! நீ நடிப்பது கலையின் மீதுள்ள ஆசையாலா அல்லது பணம் சேர்க்கும் நோக்கத்திலா?' என்று! சரி, போகட்டும்... கேள்வியை மாற்றியவர்கள் பெயர், முகவரியையும் மாற்றிப் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்! இவரின் பெயர் போட்டு வந்ததால் அந்த ஊரில் பெயர் பெற்ற எஸன்ஸ் டீலரான அவரின் தகப்பனார் அதைப் பார்த்துவிட்டு... வேறு என்ன... சரமாரியாகத் திட்டுதான்! ‘என் தவறில்லை... பத்திரிகைக்காரர்கள் மாற்றி விட்டார்கள்' என்று அப்பாவை சமாதானபபடுத்த பெரும்பாடு பட்டார் அவர். (இந்த க்ளூவை வைத்து அவரைக் கண்டுபிடித்திருந்தால் 75 மார்க் உங்களுக்கு!)

அதன்பின் உஷாவாகி... ஸாரி, உஷாராகி சரியான பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதங்கள், கேள்வி பதில் என நிறைய எழுதினார் அவர். ‘டியர் மிஸடர் துக்ளக்' என்ற வாசகர் கடிதம் பகுதி இன்றும் துக்ளக்கில் பிரபலம். அதில் இவரது கடிதங்கள் பலமுறை இடம் பெற்றிருக்கின்றன. தன் பெயரைப் பல பத்திரிகைகளில் பார்த்து மகிழ்ந்து உத்வேகம் பெற்ற அவர், ‘அந்த மூன்று நாட்கள்' என்றொரு சிறுகதையை எழுதி ஆவிக்கு அனுப்பினார். (நம்ம நண்பர் ஆவி இல்லீங்க... னந்த விகடன்!) அது விகடனல் பிரசுரமான ஆண்டு 1977. அடுத்து வந்த 1978ல் அலிபாபா, சாவி என்று வேறுபல இதழ்களில் அவரின் நான்கு சிறுகதைகள் பிரசுரமாயின. தொடர்ந்து நல்ல சிறுகதைகள் படைத்ததில் ஆசிரியர் சாவியின் கவனத்தை ஈர்த்தார் நம்மவர். (இங்கே கண்டுபிடித்திருந்தால் உங்களுக்கு 50 மார்க்!)

சாவி அவர்கள் அப்போது ‘மோனா' என்று ஒரு மாதநாவல் நடத்தி வந்தார். அதில் நாவல் எழுதும் வாய்ப்பு நம்மவருக்குக் கிட்டியது. ‘அங்கே இங்கே எங்கே?' என்ற தலைப்பில் தன் முதல் நாவலை எழுதினார். (இப்போது கண்டுபிடித்திருந்தால் உங்களுக்கு 25 மார்க்!) அதன்பின் பல பத்திரிகைகளில் தொடர்கதைகளும் நாவல்களும் எழுதி தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளராகப் புகழ் பெற்றார் அவர். ‘சாவி' சார் இளைஞர் படையினரை ஆசிரியர் குழுவாக நியமித்து ‘திசைகள்' என்ற இதழைத் துவக்கினார். அதில் இவர் உதவி ஆசிரியரானார். ‘சாவியின் செல்லப் பிள்ளை' என்று பலர் குறிப்பிடும் அளவுக்கு அவருக்கு நெருங்கியவராகவும், அந்தப் பத்திரிகையில் ஏராளமான படைப்புகளை எழுதியும் குவித்தார். (இதுவரை கண்டுபிடிக்கலைன்னா... உங்களுக்கு மார்க்கே கிடையாதுங்க...!)

சாவி இதழில் ‘மிஸ் கவிதா' என்ற பெயரில் (தங்கை பெயர்) சித்திரக் கதைத் தொடர்கள் இரண்டு எழுதியிருக்கிறார் இவர் என்பது பலருக்கும் தெரியாத தகவல். அச்சமயம் வந்த சாவி இதழ் ஒன்றில் ‘பிரபா' என்ற பெயரில் ‘கறுப்புமெயில்' என்ற இவரின் சிறுகதையும், ‘மிஸ்.கவிதா' என்ற பெயரில் ‘டெவில் டேவிட்' தொடரின் அத்தியாயமும், பட்டுக்கோட்டை பிரபாகர் என்ற பெயரில் ‘நீ மட்டும் நிழலோடு' தொடர்கதை அத்தியாயமும், ஒரு பேட்டிக் கட்டுரையில் ஆர்.பிரபாகர் என்று பெயர் போட்டும் ஒரே இதழில் நான்கு படைப்புகள் வெளிவந்த சிறப்பும் இவருக்கு உண்டு.

இவ்ளோ விஷயமும் என்னப் பத்தி தாங்க!
அவர் முதல் சில சிறுகதைகளை தன் சொந்தப் பெயரான ‘ஆர்.பிரபாகர்' என்ற பெயரில்தான் எழுதியிருந்தார். அப்போது அவரின் அப்பா, ‘‘பட்டுக்கோட்டை அழகிரி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்னு ஊர் பேரை தன் பேரோட சேர்த்தவங்க அவங்களும் பிரபலமாகி, ஊருக்கும் பேர் வாங்கிக் கொடுத்திருக்காங்க. அதனால உன் பேரோட ஊரின் பேரைச் சேர்த்து ‘பட்டுக்கோட்டை பிரபாகர்’ன்னு வெச்சுக்கோ" என்று ஐடியா தந்தார். தந்தையின் வார்த்தையை மதித்த அந்தத் தனயன் அதே பெயரில் பிரபலமாகி இன்று பத்திரிகைகள் கடந்தும் தொலைக்காட்சித் தொடர், திரைப்படம் என்று பல தளங்களில் வெற்றிகரமாக இயங்கி வருகிறார். இவர் என் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் (அ) இவரின் நெருங்கிய நண்பர்களில் நானும் ஒருவன் என்பது என்றும் நினைத்தாலே இனிக்கும் விஷயம் எனக்கு!

Friday, November 1, 2013

உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி!

Posted by பால கணேஷ் Friday, November 01, 2013
தீபாவளிப் பண்டிகை ரொம்பக் கிட்டத்துல வந்தாச்சு... இன்னேரம் ‘‘புதுப் புடவைகளும் சுடிதார்களும் பர்ச்சேஸ் பண்ணப் போலாம்"னு மனைவி ஒரு பக்கம் இழுக்க, ‘‘அப்பா... புதுசா வந்துருக்கற பட்டாசு டைப் எல்லாம் வாங்கி வெடிச்சுரணும்" என்று மகன்/மகள் ஒரு புறம் இழுக்க, சராசரி குடும்பத் தலைவர்கள் விழிபிதுங்கி (தீபா)வலியுடன் இருக்கும் நேரம். தீபாவளிப் பண்டிகையைப் பத்தின சில தகவல்களை இப்ப நான் சொல்லப் போறேன்.

தீபாவளியை இந்தியா முழுக்க கோலாகலமாக் கொண்டாடறாங்க. தீபம்ங்கறது ஒளி தருகிற ஒன்று. ஆவளி-ன்னா வரிசைன்னு அர்த்தம். தீபங்களை வரிசையா ஏற்றி இருளை நீக்கும் பண்டிகைதான் தீபாவளி. அவங்கவங்க மனசுல இருக்கற இருட்டை எரிச்சு வெளிச்சமாக்கிக்கணும்கறது இதனோட உள்ளர்த்தம். மனசிலாயோ! நரகாசுரனை கிருஷ்ணர் காலி பண்ணினதால தீபாவளின்னும், சக்தியோட கேதார கௌரி விரதம் முடிஞ்சு சிவனோட அர்த்தநாரீஸ்வரரான தினம்னும் (ஸ்கந்தபுராணம்), தங்கக் கோயில் கட்டுமானப் பணி துவங்கிய நாள் இதுங்கறதால இதான் தீபாவளின்னு சீக்கியர்களும், மகாவீரர் மகாநிர்வாணம் அடைஞ்ச தினமான இதுவே தீபாவளின்னு சமணர்களும் வேறவேற விதமாச் சொன்னாலும் எல்லாரும் கொண்டாடறாங்க. ஆக... இந்தியா முழுக்க ஜாதி, மதம்னு பேதமில்லாம கொண்டாடப்படற ஒரு நாள் இது.

அதுல பாருங்க... சின்ன வயசுல எப்படா புது டிரஸ்ஸையும் பட்டாசுகளையும் கொடுப்பாங்கற பரபரப்புல... ராவெல்லாம் தூக்கமே வராது. இப்பவோ... கோழி கூவுறதுக்கு முன்னாலயே நடுராத்திரியில (நமக்கெல்லாம் காலைல 4 மணியே நடுராத்திரி மாதிரிதானே... ஹி... ஹி...!) எழுப்பி விட்டுடறாளேன்னு இல்லத்தரசி மேல (வெளிய காட்ட முடியாத) எரிச்சல்! தீபாவளி அன்னிக்கு மட்டும் உலகத்திலுள்ள எல்லாத் தண்ணீரிலும் கங்கை வியாபித்திருக்கறதா ஒரு ஐதீகமாம். அதனால எல்லாரும் ‘கங்கா ஸ்நானம் ஆசசா?'ன்னு விசாரிச்சுக்கறதை வழக்கமா வெச்சிருக்காங்க. எதிர் வீட்டு கங்காவைப் பாத்து நான் ஒரு தடவை இப்படிக் கேக்கப் போய்.... ஓ, மேலே கேக்காதீங்க!

தீபாவளி நாள்ல சேட்டுங்கல்லாம் மகாலக்ஷ்மி பூஜை செய்து, புதுக் கணக்கு எழுதவும், புது தொழில் தொடங்கவும் உகந்த நாளா கொண்டாடறாங்க. இமாசலப் பிரதேசத்துல பலவித மண்பாணடங்களை வர்ணம் பூசி அழகுபடுத்தி பிரார்த்தனை பண்ணி அதை மத்தவங்களுக்குப் பரிசாத் தந்து (எவ்ளவு நல்ல பழக்கம்!) கொண்டாடறாங்க. ராஜஸ்தான்ல ஒட்டகம், யானைல்லாம் வெச்சு அணிவகுப்பு நடத்தி, குன்றுகள்ல பெரிய தீபம் ஏத்தி, கலர்கலரா டிரஸ் பண்ணி குதூகலமா கொண்டாடறாங்க. ஒரிஸ்ஸாவுல முன்னோர்களுக்கு படையல் வெச்சு, இந்த தினத்தைக் கொண்டாடறாங்க. பீஹார்ல அரிசி மாவுல லக்ஷ்மி படம் வரைஞ்சு (சினிமா நடிகை இல்லீங்க... கடவுள்!) பட்டாசு வெடிச்சு, துளசிச் செடிக்கு முன்னால படையல் போட்டு தீபாவளியை கொண்டாடி மகிழறாங்க. நாமல்லாம்... காலைல பலகாரத்தை சாம்பிளா டேஸ்ட் பாத்து கொறிச்சுட்டு, தலயோட ஆ ரம்பம் படம் பாக்க தலதெறிக்க ஓடி தீபாவளியக் கொண்டாடப் போறோம்... ஹி... ஹி... ஹி...!

தீ
பாவளிப் பண்டிகையப் பத்தி மகாத்மா காந்தி சொன்ன கீழ்க்கண்ட வரிகளை அப்படியே உங்களுக்கு சப்மிட் பண்ணிட்டு நான் ஜுட் விட்டுக்கறேன். ஸீ.யு...!

தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பது குழந்தைகளுக்குக் குதூகலத்தை ஏற்படுத்துகிறது என்பது எனக்கு ஒன்றும் தெரியாத விஷயமல்ல. ஆனால் இந்தப் பழக்கத்தையெல்லாம் முதலில் அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது நம்மைப் போன்ற பெரியவர்கள்தானே? ஆப்பிரிக்காவில் உள்ள சிறுவர்கள் பட்டாசு வெடிக்க விரும்புவதாக நான் கேள்விப்பட்டதில்லை.

கடைகளில் விற்கப்படும் தரக்குறை வான இனிப்புகளை விட ஆரோக் கியமான விளையாட்டுகளும், உபயோகமான ஓர் இடத்துக்கு பிக்னிக் செல்வதும் எவ்வளவோ நன்மை விளைவிக்கும். ஏழைச் சிறுவர்களாக இருந்தாலும் சரி, பணக்கார வீட்டு சிறுவர்களாக இருந்தாலும் சரி, இதுபோன்ற விடுமுறை நாட்களில் வீடுகளை வெள்ளையடித்துச் சுத்தப் படுத்தக் கற்றுக் கொடுக்க வேண்டும். உழைப்பின் கெளரவத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தீபாவளியன்று கரியாக்கப்படும் பணத்தில் ஒரு பங்கையாவது மிச்சப்படுத்தி காதி இயக்கத்துக்குக் கொடுங்கள். அதில் விருப்பம் இல்லாவிட்டால் வறுமையில் வாடும் ஏழைகளுக்குச் சேவை செய்யக் கூடிய ஏதாவது ஓர் இயக்கத்துக்கு அந்தப் பணத்தைக் கொடுத்து உதவுங்கள்.


                                                                       -‘யங் இந்தியா' இதழில் காந்திஜி


  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube