Showing posts with label காமெடி. Show all posts
Showing posts with label காமெடி. Show all posts

Wednesday, April 18, 2018

பேரா சார் முக்கியம்..?

Posted by பால கணேஷ் Wednesday, April 18, 2018

பேருல என்ன சார் இருக்கு..? எல்லாம் எழுதி வெச்சபடிதான் நடக்கும்” என்கிற நம்பிக்கைவாதிகளும் சரி, “பேர்ல ஒண்ணுமே இல்ல, எல்லாம் நம்ம திறமைலயும் செயல்பாட்டுலயும்தான் இருக்கு“ என்கிற தன்னம்பிக்கை வாதிகளும் சரி... பெயரில்தான் பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

ஒரு நண்பர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்ததாகத் தகவல் வந்தது. பார்க்கச் சென்றேன். தலையிலும் கையிலும் பெரிய கட்டுக்களோடு படுத்திருந்தார். “என்னய்யா வரதராஜன், எப்டி இப்டி அடிபட்டுது..?” என்றேன். “என் பேராலதான்யா இவ்ளவு பெரிய அடி...” என்றார்.

பேராலயா..? என்னய்யா சொல்ற..?”

அதை ஏன்யா கேக்கற..?” என்று அவர் இழுத்தார்.

சரி, கேக்கலை விடு”

அட, கேளுய்யான்னா...” என்றார் எரிச்சலாக. “நேத்து ஈவினிங் வாக் வந்துட்டிருந்தேன். கைல மொபைல வெச்சுகிட்டு ஃபேஸ்புக்க ஓபன் பண்ணிகிட்டே என் தெருவுல நொழைஞ்சப்ப எதிர்வீட்டு பரந்தாமன் எதிர்ல வந்தான். திடீர்னு என்னைப் பார்த்து, ‘எருமை வரது’ அப்டின்னு கத்தினான். கடுப்பாய்ட்டேன் நான். ‘என்னய்யா திமிரா.? மரியாதையாப் பேசு’ அப்டின்னேன் கோபத்தோட. அவனானா கொஞ்சமும் அசராம கைய வேற நீட்டி, “யோவ், எருமை வரது”ங்கறான் மறுபடி.

இன்னொரு தடவை வாயத் தொறந்த, தொலைச்சுடுவேன்’ அப்டின்னு விரல் காட்டி வார்ன் பண்ணேன். அவ்ளவுதான்யா தெரியும். திடீர்னு பின்னால மலை மோதின மாதிரி ஒரு பீலிங். நாலடி முன்னால பறந்து அங்கருந்த ஒரு ஆட்டோல இடிச்சுகிட்டு கீழ விழறேன். தலை தரைல மோதி ரத்தம் வருது. நிமிர்ந்து பாத்தா, ஒரு எருமை என்னைத்தாண்டி ஓடுது. அந்தப் படுபாவியானா மெதுவா பக்கத்துல வந்து, ‘எருமை வரதுன்னு நான்தான் கத்தினேனேய்யா. இப்டியா கவனிக்காம எருமை மாதிரியே வருவ.?’ அப்டிங்கறான். வேற பேர் வெச்சுக்கலாமான்னு யோசனை பண்ணிட்டிருக்கேன் இப்போ.” என்று பாண்டியராஜன் ஸ்பெஷல் விழி விழித்தபடி அவர் கூற என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

ண்பரொருவரின் (ஒரு நண்பர் இல்லை, இவர் வேறு) அனுபவம் வேறுவிதமானது. பைக்கில் வந்த இவரை ஒரு ட்ராபிக் கான்ஸ்டபிள் வழிமறித்திருக்கிறார். டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் எல்லாம் சோதித்துவிட்டு “இன்சூரன்ஸ் புதுப்பிக்கலை. ஃபைன் போடணும்” என்றிருக்கிறார். “அடாடா, கவனிக்கலை சார். நாளைக்கே ரின்யூ பண்ணிடறேன். ஸாரி சார்..” என்று இவர் விதவிதமாகக் கெஞ்சியும் பிரயோஜனம் இல்லை. பைன் கட்டியே தீரணும் என்று அடம்பிடித்த கான்ஸ், ரசீது புக்கை எடுத்து வண்டி நம்பர் எழுதிவிட்டு, பேரைச் சொல்லுங்க என்றிருக்கிறார். இவர் சொன்னார் : ‘ஸ்தலசயனப் பெருமாள்’.

என்னது..? என்ன பேர் சொன்னீங்க..?”

ஸ்தலசயனப் பெருமாள்..”

அவர் தமிழில் எழுதிப் பார்த்திருக்கிறார். ஆங்கிலத்தில் எழுத முயன்றிருக்கிறார். இந்தப் பெயரை எப்படி எழுதுவதென்று தெரியவில்லை. பேய்விழி விழித்தபடி, “சரி, சரி, கிளம்புங்க. உடனே சரி ரின்யூ பண்ணிடுங்க. போங்க.” என்று விட்டு விட்டாராம். நண்பரொருவர் சொல்லிச் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார் அடுத்த ஒரு வாரத்துக்கு.

சிலபேர் தங்கள் பிள்ளைகளுக்கு மாடர்னாகப் பெயர் வைப்பதாக எண்ணிக் கொண்டு, தாங்கள் அறியாமலேயே விசித்திரமான பெயர்களை வைப்பதும் நடப்பதுண்டு. உறவினர் வீட்டு விசேஷம் ஒன்றிற்குச் சென்றிருந்தபோது, அவரின் பெயரன் துறுதுறுவென்று ஒரு இடத்தில் நிற்காமல் ஓடியாடிக் கொண்டிருந்தான். “பெயரென்ன?” என்று கேட்டதற்கு “ரேவந்த்” என்றார். “இப்டில்லாமா பேரு இருக்கு..?” என்று விழித்தேன். “இது நார்த்சைட்ல வெக்கப்படற பேர்தான்யா. நல்லாருக்குல்ல சொல்றதுக்கு..” என்றார். தலையாட்டிவிட்டு வந்த நான், பெயரகராதியில் இப்படி ஒரு பெயர் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தபோது இருந்தது. பெயருக்கான விளக்கம் இப்படி.... ‘ரேவந்த் - குதிரைகளைப் பராமரிப்பவன்’ ஹா.. ஹா.. ஹா...

இதேபோல மற்றொரு சந்தர்ப்பத்தில் ‘தேனுகா’ என்ற பெயரைக் கேள்விப்பட்டு நான் (வழக்கம்போல்) அகராதியைக் கேட்டதில் வந்த பதிலானது... ’தேனுகா - மாட்டுமந்தை’. , என் கடவுளே, அர்த்தம் புரிந்தால் இப்படிப் பெயர் வைப்பார்களோ... கலைவாணி என்று பெற்றோரால் ரசனையுடன் வைக்கப்பட்ட பெயரைப் பெரும்பாலோர் உச்சரிப்பு வழக்கில் களவாணி என்றே அழைப்பதால் பெயரையே கெஜட்டில் மாற்றிக் கொண்ட பெண்ணையும் நான் சந்தித்திருக்கிறேன்.

ஆக, கயல், யாழிசை போன்ற இனிய தமிழ்ப் பெயர்களும், ராமன், கிருஷ்ணன், சரஸ்வதி போன்ற தெய்வப் பெயர்களுமே வைப்பதற்கு உகந்தவை. எந்தக் குழப்பமும் பிரச்சினையும் வராதவை என்பதை அறிந்து தான் நம் முந்தைய தலைமுறை அத்தகைய பெயர்களைச் சூட்டியிருக்கிறது.

நம் வாத்யார் எம்ஜிஆர் கூட தன் படங்களில் கதாநாயகர்களுக்கு முருகன், ராமு, கண்ணன் என்றெல்லாம் எளிய பெயர் வைத்ததற்குக் காரணமும் அதுவே. ஆதலினால் உலகத்தீரே... உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குச் சுத்தத் தமிழ்ப் பெயரையே வைப்பீராக.

(ஹப்பாடா, சந்தடிசாக்குல ஒரு மெசேஜும் சொல்லியாச்சுப்பா. நல்ல எழுத்தாளர்ன்னுடுவாங்க. ஹி... ஹி.. ஹி...)

-‘சிருஷ்டி’ இணைய இதழில் வெளியானது.

Friday, October 25, 2013

ந்த வாரம் வலைச்சரத்துல ஆசிரியரா இருக்கற ‘எழில் அம்மா' (முறைக்காதீங்க ப்ளீஸ்...! அப்படித்தான் ஒருத்தரு கூப்ட்டிருந்தாரு அவங்கள...! ஹி... ஹி...!) ஒரு படத்தைப் பிரசுரிச்சு ‘‘இதைப் பாத்தா கவிதை தோணுதா?"ன்னு கேட்டிருந்தாங்க. ‘‘நான்லாம் கவிதை எழுதினா விபரீதம் ஏற்படும்"னு பயமுறுத்திட்டு வந்துட்டேன். இருந்தாலும்... எனக்குள்ள உறங்கிட்டிருந்த ஒரு கவிஞனை அவங்க தட்டி(!) எழுப்பிட்டாங்க. அதனால... ஒரு பழைய கவிதைய இப்ப எடுத்துவிடப் போறேன்.

துக்கு ஒரு ப்ளாஷ்பேக் இருககுங்க... னோகரமான ஒரு மாலை நேரம் மார்ஜியானாவுடன் கழிந்து கொண்டிருந்தது. (மார்ஜியானா யாருன்னு கேக்கறவங்களுக்கு அடுத்த பதிவுல விளக்கம் காத்திருக்கு.) அப்பல்லாம் இப்ப மாதிரி ஷாப்பிங் மால் கிடையாதுங்கறதால அது நிகழ்ந்த இடம் (நாங்கள் அடிக்கடி சந்திக்கும்) ஒரு பூங்கா. நிறைய (அவ) பேசிட்டிருந்தப்ப, (நான்) கேட்டுட்டிருந்தப்ப... திடீர்ன்னு, ‘‘உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்னு டீடெய்லாச் சொல்லேன் ப்ளீஸ"ன்னா. ‘‘சொல்றது என்ன... கவிதையாவே எழுதிக் காட்டறேன்" என்று என் கைவசம் எப்போதுமிருக்கும் சிறுகுறிப்புத்தாள் நோட்டில் எழுத ஆரம்பித்தேன். (‘‘உனக்கு கவிதைல்லாம் எழுத வருமா?"ன்னு அவ கேட்டதும், ‘‘கவிதையே பக்கத்துல இருக்கறப்ப கவிதை வராதா?"ன்னு நான் வழிஞ்சதும் இங்க அவுட் ஆஃப் கவரேஜ்ப்பா!) எழுதி முடிச்சுட்டு அவகிட்டக் குடுத்தேன். பொறுமையாப் படிச்சு முடிச்சவ, எழுந்து, என்னை முறைச்சுட்டு, எதுவும் பேசாம டக்குன்னு போயிட்டா... அதுக்கப்புறம் அவளைச் சமாதானப்படுத்த ஒரு வாரம் கடுமையா மெனக்கெட வேண்டியிருந்தது.

அதனால... இந்தக் கவிதை(?)யைப் படிக்கற உங்களுக்கு ஏற்படப் போற ஊசி (பின்) விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல... விபரீதத்துக்கு வித்திட்ட எழில் மேடம்தான் பொறுப்புங்கறதை மீண்டும் வலியுறுத்திச் சொல்லிக்கறேன். (பத்த வெச்சிட்டியே பரட்டை...! ஹி... ஹி... ஹி...!)


                                                   தனிமை விரட்டும் சத்தம்!

கனவில் தினமும் நீந்திடப் பிடிக்கும்! வைகறை
    வானத்தின் சிவப்பு மிகவும் பிடிக்கும்!
மனம் மயக்கும் சங்கீதம் பிடிக்கும்! கொட்டும்
    மழைதனில் நனைந்து ஆடிடப் பிடிக்கும்!


உனது ஓரவிழிப் பார்வை பிடிக்கும்!  ‘ச்சீய்’
    என்னும் சிணுங்கல் கேட்கப் பிடிக்கும்!
எனது பார்வை மேயுங்கால் சீற்றமாய் - நீ
    என்னை அடிப்பதும் பிடிக்கும்! என்றேனும்
சினங்கொண்டு எனை வெறுத்தால் - உனது
    வெறுப்பும் பிடித்தம் தானெனக்கு!



நாங்களும் வெப்போம்ல... கவிதைக்குப் படம்!

படிக்கப் பிடிக்கும்; நிறைய படைக்கப் பிடிக்கும்!
    இருளும் பிடிக்கும்; வெளிச்சமும் பிடிக்கும்!
நடிப்பும் பிடிக்கும்; நங்கையர் சிரிப்பும் பிடிக்கும்!
    மழலையின் முத்தம் மனதுக்குப் பிடிக்கும்!


பண்புடன் ஆடும் பரதம் பிடிக்கும்! உலகம்
    தனை மறந்து உறங்கப் பிடிக்கும்!
அன்பினில் நனைந்து வாழப் பிடிக்கும்! அனல்
    வீசும் எதிரியையும் பிடிக்கு மெனக்கு!


சத்தம் இல்லாத தனிமை பிடிக்கும்! அந்தத்
    தனிமையை விரட்டும் சத்தமும் பிடிக்கும்!
யுத்தம் இல்லாத உலகம் பிடிக்கும்! உன்னில்
    உயிர்ப்பைத் தேடும் தருணங்கள் பிடிக்கும்!


சிந்தனை பிடிக்கும்! வந்தனை பிடிக்கும்! நான்
    புதிதாய்ப் பிறக்கும் தருணங்கள் பிடிக்கும்!

எத்தனை அழகு பூமிதனில்! நிலவுக்குக் கீழே
    வாழ்ந்திடும் உலகில் எல்லாமும் பிடிக்கும்!

இத்தனைக்கு மேலும் என்கவி தொடர்ந்தால் - கண்ணே...
    நிச்சயம் உனக்குப் பைத்தியம் பிடிக்கும்!


கொஞ்சம் புன்னகையுடன்,

கொஞ்சம் குசுமபுடன்,
(கொஞ்சம் கொலவெறியுடன்)...
பாலகணேஷ்!

Monday, August 19, 2013

மோகினிப் பிசாசும், சரிதாவும்!

Posted by பால கணேஷ் Monday, August 19, 2013
மீபகாலமாக பொழுதுபோகாத மோகினிப் பிசாசு ஒன்று வீடு வீடாக சென்று அங்கிருப்பவர்களை பயமுறுத்தி வருகிறது என்று சரவணா ஸ்டோர்சுக்கு மிக அருகில் இருக்கும் மாம்பலத்தில் ஒரு வதந்தி மிகத் தீவிரமாய் பரவியது. அதிலும் இந்த மோகினி சற்றே வித்தியாசமாக பெண்களை மட்டுமே விரட்டி விரட்டி அடிப்பதாக டெவலப் ஆகியிருந்தது அந்த வதந்தி. பொதுவாகவே எனக்கு பேய் பயமெல்லாம் கிடையாது, அதுவும் சரிதா வசிக்கக் கூடிய இடத்தில் எப்படி ஒரு பேயால் தைரியமாக வசிக்க முடியும்? ஹலோ... அவசரப்படாதீங்க... சரிதா மாதிரியான படித்த தைரியமான ஒருத்தி வசிக்கும் இடத்தில் பேய் பயம் இருக்காது என்றுதான் சொல்ல வந்தேன். ஹி... ஹி...!

மேற்படி வதந்தியைக் கேள்விப்பட்ட நாளில் இருந்தே சரிதா கொஞ்சம் பயந்திருந்தாள், இருப்பினும் பயத்தை வெளிகாட்டிக் கொள்ளாமல் வழக்கம் போல் அவள் என்னை அடிக்க, என்னை அவள் அடிக்க என்றளவில் எங்கள் சம்சார வாழ்க்கை ஹிம்சார வாழ்க்கையாக போய்க் கொண்டிருந்தது. அதிலும் ஒரு வினோதம் பாருங்கள்.. அந்த மோகினி ஒன்றாம் நம்பர் வீட்டில் ஆரம்பித்து வரிசை மாறாமல் வீடு வீடாக விஸிட் அடித்து வருகிறதாம், இப்படிபட்ட விபரீத வரிசையில் இன்று இரவு எங்கள் டர்ன். குறிப்பாக அது பெண்களை மட்டுமே டார்கெட் செய்வதால் நான் ஓவர் குஷியிலும், சரிதா வரலாறு காணாத பயத்திலும் இருந்தோம் என்பதை இங்கே எழுத விரும்புகிறேன்.

லேசான தூறலுடன் வானம் மெல்ல இருட்டத் தொடங்கியிருந்தது, வங்கக் கடலில் லேசான காற்றழுத்தத் தாழ்வுநிலை என்று ரமணன் சொல்லிவிட்ட காரணத்தால் காற்று பேயாட்டாம் ஆடிக்கொண்டிருந்தது, பேய்க்காற்றில் (அதிலும் பேயா?) ஜன்னல்கள் அனைத்தும் டமால் டுமீலிக் கொண்டிருந்தன, இதையெல்லாம் சேர்த்துப் பார்த்தல் ஒரு பேய் வருவதற்கான அத்தனை ஸ்பெஷல் எபெக்டும் இயற்கையாகவே அமைந்துவிட்டது போல் தோன்றியது.

"ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும், உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்",  என சஷ்டிகவசம் பாடிக் கொண்டிருந்த சரிதாவின் முகத்தில் முழுவதுமாக கிலி குடிகொண்டிருந்தது. பயத்தில் அவளது கரங்கள் ஐந்து கிலோ ஐஸ்கட்டியை வைத்தது போல நடுங்கிக் கொண்டிருந்தது. சரிதா பயப்படுவதை பார்க்கும் போதெல்லாம் இனம் புரியா ஒரு இன்பம் என்னுள் குடிகொள்வது எனக்கு வழக்கமாகி விட்டது. மின்னல் வரிகளில் சரிதாவின் பெருமை(!)களை டைப்பியபடியே ஓரக்கண்ணால் சரிதா பயந்து கொண்டிருப்பதை ரசித்துக் கொண்டிருந்தேன், மணி சரியாக ஏழைத் தொட்ட நொடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு டிடிஎஸ் எபெக்டில் "ஜல் ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்" என மெல்ல கொலுசுச் சத்தம் கேட்கத் தொடங்கி இருந்தது; சைடு எஃபக்டாக பூமி அதிர்ந்தது. "டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டகுடகு டிகுடிகு டங்கு டிங்குடு" ஓ...! கொலுசுச் சத்தம் கேட்டதும் சஷ்டிக்கவசத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு குடுகுடு குடுகுடுவென நிலமதிர ஓடிவந்து மூச்சிரைக்க என்னருகில் நின்றாள் என் சகதர்மிணி. அந்த எஃபக்டதான்...! ஹி.. ஹி...!

"ஏங்க.. கொலுசு சத்தம்.... அந்த கொலுசு சத்தம் உங்களுக்கு கேட்டதா.?" மேல்மூச்சு கீழ்மூச்சு தனது உடைந்து போன குரலில் சரிதா என்னிடம் கேட்டுக் கொண்டிருந்த பொழுதே மீண்டும் "ஜல் ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்" இம்முறை ஜல்லுடன் பயங்கரமான சிரிப்புச் சத்தமும் சேர்ந்து எக்கோவாகத் தொடங்கியது. சரிதா நடுங்கிக் கொண்டிருந்தாள்.  சரிதா இப்படி நிறையவே பயப்படுவதைப் பார்த்த எனக்கோ உடனே திருப்பதி ஏழுமலையானுக்கு பாதயாத்திரை போக வேண்டும் போல் இருந்தது. "ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்! உன்னய உண்டு இல்லன்னு பண்றேன் பாரு...." அடித்தொண்டையில் இருந்து அலறிய அந்த மோகினிப் பிசாசு இன்னும் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தது. "ஏங்க, எனக்கு ரொம்ப பயமா இருக்குதுங்க, என்ன எப்படியாது காப்பாத்துங்க" என் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டே அழ ஆரம்பித்தாள் சரிதா.

"அய்யோ சொக்கா சொக்கா, அத்தனையும் எனக்கா...அய்யோ சொக்கா சொக்கா...." தருமி நாகேஷ் திருவிளையாடல் படத்தில் துள்ளிக் குதிப்பாரே அப்படித்தான் எனக்கும் துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது. காரணம் சரிதா என்னை இவ்வளளவு மரி‌யாதையாக அழைத்தது அவளுக்கு தாலி கட்டும் முன்வரை மட்டுமே.  "உன்னச் சும்மா விட மாட்டேன்டி, எவ்வளவு தைரியம் இருந்தா என்னையே சீண்டிப் பார்ப்ப... உன்ன சும்மா விடவே மாட்டேன்... ஹாஆஆஆஹ் ஹஹ் ஹஹ் ஹஹ் ஹஹ்ஹா " சத்தமாக, மிக சத்தமாக  சிரிக்கத் தொடங்கியது அந்த மோகினிப் பிசாசு. "ஏங்க உங்களுக்கு கொஞ்சம் கூட பயமா இல்லையா ..." அந்த பயத்திலும் நான் பயப்படாமல் இருப்பதை கண்டுபிடித்து விட்டாள் சரிதா. 

ங்களுக்கு மட்டும் ஒரு ரகசியத்தை இங்கே சொல்கிறேன்... இந்த மோகினிப் பிசாசு வதந்தி பரவியதில் இருந்தே தொடர்ச்சியாக சரிதாவிடம் சில மாற்றங்கள் தெரிந்தது. கொஞ்சம் பவ்யமாய் நடந்துகொள்ள ஆரம்பித்திருந்தாள். அவளை என் வழிக்குக் கொண்டு வர இதைவிட்டால் வேறு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்பதை அறிந்த நான் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். எலக்ட்ரிகல் ஸ்பெஷலிஸ்டான  எனது நண்பன் சரவணன் மூலமாக என் வீட்டை சுற்றிலும் மறைவான இடங்களில் ஸ்பீக்கர் செட் செய்து ஒரு பேய் எபெக்ட் வரும் விதத்தில் ஏற்பாடு செய்திருந்தேன். சிலநாட்களாக சரிதா என்னிடம் பேசிய அதவாது என்னோடு சண்டை போடும் போது அவள் கத்திய குரல்களை அவளுக்கே தெரியாமல் ரெக்கார்ட் செய்து, அதையே மோகினியின் குரலாக மாற்றியிருந்தோம், என்னுடைய அதிபுத்திசாலி மனைவியால் அவளது குரலைக் கூட அவளால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு பயந்திருந்தாள். நான் அவள் பயத்தைக் கண்டு ரசித்துச் சிரித்து மேலுக்கு நான் பயந்த மாதிரி(!) நடித்துக் கொண்டிருந்தேன்.

ன்னை நானே மனதுள் பாராட்டிக் கொண்டிருந்த போதுதான் எதிர்பாராத மற்றொரு புதிய குரல் கேட்டது, இது என் அருகில் நின்று கொண்டிருக்கும் சரிதாவின் குரலும் இல்லை, நாங்கள் ரெக்கார்ட் செய்த சரிதாவின் குரலும் இல்லை. புதுக்குரல்! "டேய் கணேஷா... என்ன விளையாடுறியா..? எம்மேல பயமில்லாமப் போயிருச்சா?" புதிய பெண் குரல் நான்கு புறம் இருந்தும் எக்கோவானது.

"ஏங்க அந்த பேய பார்த்து நீங்க பயப்படல இல்ல, அதான் அதுக்கு உங்க மேல கோவம் வந்த்ருச்சு" சரிதா இன்னும் அப்பாவியாய் பயந்து கொண்டிருந்தாள். இப்போது நான் மெய்யாலுமே பயப்படத் தொடங்கியிருந்தேன். இரண்டு விதமான கொலுசு சப்தம் கேட்டது, இரண்டு விதமான பெண்களின் குரல் கேட்டது. ஒன்று சரிதாவின் ரெகார்டட் குரல் மற்றும் ரெகார்டட் ஜல் ஜல், மற்றொன்று....? அய்யகோ! அப்படியென்றால் மோகினிப் பிசாசு  இருப்பது நிஜம் தானா? நான் தான் அவசரப்பட்டு சரிதாவை சீண்டுவதாக நினைத்து மோகினியை சீண்டி விட்டேனா?

எங்கள் அருகில் மல்லிகை வாசம் வீசத் தொடங்கியது. என்னுடைய முதல் பிளானில் மல்லிகையை சேர்க்க மறந்துவிட்டேன்  . நான் கூட யோசித்தேன் மல்லிகை இல்லாமல் பேய் டிராமாவா என்று. இந்த நிஜப் பேய் நிஜமாகவே மல்லிகையுடன் வரும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. " ஹாஆஆஆஹ் ஹஹ் ஹஹ் ஹஹ் ஹஹ்ஹஹா, கணேஷா நீ செத்தடா" இது நிஜ மோகினிப் பிசாசு "சொன்னாலும் சொல்லாட்டாலும், கணேஷா... நீ செத்தடா!" இது மை மைண்ட் வாய்ஸ்!

"உன்ன சும்மா விடமாட்டேன்.. உன்ன... உன்ன..." இது ரெகார்டட் சரிதா. "ஹையோ! என் புருசன ஒன்னும் பண்ணிராத..." இது நிஜ சரிதா

"தைரியம் இருந்த எதிர்ல வந்துபாரு.. ரெண்டுல ஒண்ணு பாத்துரலாம்".. ரெக்கார்டட் சரிதா. ரெக்கார்டட் வாய்சுக்கும், சரிதாவின் நிஜக் குரலுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரியாத மோகினி, மேற்கூறிய பஞ்ச் டயலாக்கைக் கேட்டதும், "யாரப் பார்த்துடி தைரியம் இல்லாதவன்னு சொன்ன.. தில் இருந்தா என் கூட மோதிப் பாருடி" என்றபடி சட்டென முன்னால் வந்து நின்றது.

நல்ல உஜாலா போட்ட வெள்ளை சாரி, முந்தானை காற்றில் பரவிக் கொண்டிருந்தது. தலை நிறைய மல்லிகைப்பூ,  நல்ல களையான முகம், சிக்கென்ற தேகம், சரிதாவிற்கு முன்னரே இவளைப் பார்த்திருந்தால் இவளே தேவலை என்று மனம் என் நினைத்தாலும் நினைத்திருக்கும். அந்த மோகினியை நான் சைட் அடிப்பதை சரிதா கவனித்து விட்டாலும்... அதைப் பார்த்த அதிர்ச்சியில் கீழே மயங்கி விழாத குறையாக, "என்னங்க என்னக் காப்பாத்துங்க’’ என்று என்னிடம் சரணாகதி அடைந்தாள் சரிதா. (சரிதாவின் சரணாகதி - நல்ல டைட்டில் இல்ல...?)

"உன் புருசனை... மொதல்ல அவனக் காப்பாத்திக்கச் சொல்லு..." என்று சொல்லிக் கொண்டே அவளது நீளமான விரல்களையுடைய கைகளை என் கழுத்தை நோக்கி நீட்டினாள் அந்த மோகினி.  இந்த நேரத்தில் சற்றும் எதிர்பாராத மற்றொரு ஆண் ஒரு குரல், இது என் நண்பன் சரவணனின் குரல் அது! "டேய் கணேஷா... ரெக்கார்டட் வாய்ஸ் பக்காவா வொர்க் ஆகுது... நம்ம செட்டப்ப பார்த்து சரிதா என்ன அந்த மோகினியே வந்தாலும் பயப்படுவா.. உன் காலுல விழுவா... நம்ம பிளான் சக்சஸ்டா... " என்று அவன் கூறிய போது நானும் அவனும் பேய்ச் சிரிப்பாகச் சிரித்ததும் ஒலித்தது. அவசர அவசரமாக பேய் செட்டப்பை ரெக்கார்ட் செய்ததால் இதைக் கவனிக்கத் தவறியிருக்கிறோம். அட தேவுடா!

சரிதா மெல்ல என்னைப் பார்த்தாள்.. பின் மோகினியைப் பார்த்தாள்.. பின் மீண்டுமு் என்னைப் பார்த்தாள்.. இப்போது நான் அவள் கண்களுக்கு சிவப்பாக தெரிந்திருக்க வேண்டும், காரணம் ஏற்கனவே பெரிய அவள் கண்கள் நல்ல பெரிய உருண்டை மாதுளை போலாகி நல்ல சிவப்பாகவும் இருந்தது. மீண்டும் என்னைப் பார்த்து, மோகினியை ருத்ர பார்வை பார்த்தாள். அடுத்த கணம்... அந்த மோகினியின் மேல் பாய்ந்தாள் சரிதா.  "ஏண்டி சக்காளத்தி... குத்துக்கல்லாட்டம் இங்க நான் ஒருத்தி இருக்கும் போதே உனக்கு எம்புருஷன் கேக்குதா? நீயும் அவனும் சேந்து என்னைய இந்த வீட்ட விட்டே அடிச்சி தொரத்தி குடும்பம் நடத்தலாம்னு பாக்றியா குடும்பம்... உன் நாடகம் எல்லாம் என்கிட்டே நடக்காதுடி பிசாசே..." என்றபடி அந்த மோகினியை அடிக்கத் தொடங்கினாள் சரிதா...!

நாளதுவரையில் இப்படி நாயடிப் பேயடியை எங்கும் பட்டிராத அந்த மோகினி, தான் செட்டப்பல்ல, நிஜமாகவே மோகினிதான் என்று எவ்வளவோ கதறியும் சரிதா நம்புவதாயில்லை. என்மீது இருந்த மொத்தக் கோபமும் சேர்த்து அந்த மோகினி மேல் திரும்ப, அடித்து துவம்சம் செய்யலானாள்.‌ மோகினி என்னைப் போல் அடிவாங்குகிற விஷயத்தில் சர்வீஸ் போட்டிராததால்... மல்லிகையைக் காணோம், கொலுசைக் காணோம் என்று ஆவி பறக்க அலறியடித்து ஓடத்தொடங்கியது. ஓடுகிற அந்த அவசரத்திலும்கூட அது  என்னை மிகவும் பாவமாய் பார்த்துக் கொண்டே சொல்லியது: "அப்பனே கணேஷா..! நான் தப்பிச்சுருவேன்... உன் நிலமைய நினைச்சாதான்யா ரொம்ப பாவமா இருக்கு!" அடுத்த கணம் அது எஸ்கேப்பாக... திரும்பி என்னை முறைக்கலானாள் சரிதா. அவ்வ்வ்வ்வ்வ! யாராச்சும் ஓடியாங்க ப்ளீஸ்... உடனே என்னைக் காப்பாத்....!

பின்குறிப்பு1 : இந்த சரிதா கதை (வழக்கத்தைவிட) நன்றாக இருக்கிறதென்று உங்களுக்குத் தோன்றினால் அது மிகச்சரி. ஏனெனில் இதை எழுதியது நானல்ல. என் தீவிர வாசகர்களில் ஒருவர்! சற்றே என் ஸ்டைலுக்கு(?) மாற்றி  இங்கே தந்துள்ளேன். இதை எழுதிய (நீங்கள் அறிந்த) அந்த மர்ம நபர் யார் என்பதை சரியாக பின்னூட்டத்தில் சொல்லும் அனைவருக்கும் அவர்கள் என்னை சந்திக்கும் சந்தர்ப்பத்தில் (அமையும்போது) ஒரு பயனுள்ள புத்தகம் பரிசாக வழஙகப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன். (முடிஞ்சால் அந்த மோகினி கையால தர உத்தேசம்!). அடுத்த பதிவில் அவர் பெயரை அறிவிக்கிறேன்.

பின்குறிப்பு 2 : நாளைலருந்து பதிவர் சந்திப்பு பத்தின தகவல்கள் தொடர்ந்து ‘மின்னல் வரிகள்’ல வெளியிட வேண்டியிருக்கு. இந்த சந்தர்ப்பத்துல என்னதான் இணையத்திற்கு நேரம் ஒதுக்கி அனைவரது எழுத்தையும் படிக்கணும்னு மனசு அடிச்சுக்கிட்டாலும் இப்ப என்னைச் சுற்றியிருக்கற நிர்ப்பந்தங்கள் படுத்துது; தடுக்குது. அதனால... செப்.1 வரை என்னைப் பொறுத்தருளி தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தரும்படி வேண்டுகிறேன்.


================================================================
அப்டேட் : இந்தக் கதையை எழுதியவர்: சீனு (திடங்கொண்டு போராடு)
================================================================

Friday, August 16, 2013

சேட்டையும், நானும்!

Posted by பால கணேஷ் Friday, August 16, 2013
லைப்பைப் படிச்சதும் சின்ன வயசுல (ஏன்... இப்பவும்தான்) நான் செஞ்ச சேட்டைகளைப் பத்திச் சொல்லப்போறேன்னு நினைச்சு வந்திருந்தீங்கன்னா... ஸாரி. இது அதப்பத்தி இல்ல. கடந்த ரெண்டு வாரமா அடுக்கடுக்காக நிறைய கமிட்மெண்ட்ஸ் நேரத்தைச் சாப்பிட்டதாலயும், இணைய இணைப்பும் படுத்தோ படுத்துன்னு படுத்தி எடுத்ததாலயும் ரெண்டு வாரமா இணையப் பக்கம் வரமுடியாமப் போச்சுது. (நிம்மதியா இருந்தீங்கதானே!) ‘உன்னால யார் எழுதினதையும் படிச்சு கருத்திட முடியாத நிலையில நீ மட்டும் பதிவிடறது அநியாயம்’னு மனஸ் சொல்லிச்சுங்கறதும் ஒரு காரணம்.  இப்ப மறுபடி படிக்கவும் எழுதவும் செய்யலாம்னு வந்தா... என்ன எழுதறதுன்னு தெரியல. அதனால... நண்பர் தி.தனபாலன் அழைச்சிருந்த தொடர்பதிவை எழுதலாம்னு முடிவு பண்ணி, என் முதல் பதிவைப் பத்திச் சொல்லப் போறேன்.

கிழக்குப் பதிப்பகத்துல நான் பணிசெய்த காலத்துலதான் பதிவுலகம்னு ஒண்ணு இருக்கறதும், ப்ளாக்னு ஒண்ணை ஓப்பன் பண்ணி நிறையப் பேரு தங்கள் படைப்புகளை வெளியிடறாங்கன்றதும் தெரியும். அப்ப சேட்டைக்காரன், கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், சி.பி.செந்தில்குமார்னு நிறையப் பதிவர்களோட படைப்புகளைப் படிச்சு ரசிச்சிருக்கேன். பின்னாட்கள்ல ‘ஊஞ்சல்’ பத்திரிகையில உதவி ஆசிரியராப் பணி புரிஞ்ச சமயத்துல சேட்டைக்காரன் ‘கல்யாணம் attend பண்ணிப்பார்’ன்னு ஒரு நகைச்சுவைக் கதை எழுதியிருந்தார். அதை ப்ரிண்ட் அவுட் எடுத்து பி.கே.பி. ஸார் கிட்ட காட்டினேன். அவர் அதை மிக ரசிச்சு ‘‘நல்லாருக்கே... யார்னு விசாரிச்சு பர்மிஷன் வாங்குங்க... ஊஞ்சல்ல போடலாம்’’ன்னார்.

சேட்டைக்காரனை எப்படிப் புடிக்கிறதுன்னு யோசிச்சு சி.பி.க்கு போன் பண்ணினேன். ‘‘சேட்டைக்காரன் போன் நம்பர்லாம் இல்லப்பா. அவர் முகம் காட்ட விரும்பறதில்ல. ஈமெயில் ஐ.டி. இருக்கு. அதுல வேணா கான்டாக்ட் பண்ணிப் பாருங்க’’ன்னுட்டுத் தந்தார். ஈமெயில் அனுப்பிக் கேட்டதுக்கு, ‘தாராளமா பப்ளிஷ் பண்ணிக்கங்க. எனக்கு மிக்க மகிழ்‌ச்சி’ன்னு பதில் வந்தது சேட்டை கிட்டயிருந்து. அடுத்த இஷ்யூல பப்ளிஷ் பண்ணிட்டோம். புத்தகத்தோட காப்பியையும், கதைக்கான எளிய சன்மானத்தையும் கொடுக்கலாம்னு அவர் அட்ரஸ்/போன் நம்பர் கேட்டு ஈமெயில் அனுப்பினேன். பதில் இல்ல... மறுபடி ஒரு மெயில்... நோ ரெஸ்பான்ஸ்! எனக்குக் கடுமையான கோபம் வந்துருச்சு. கடுமையா கோபம் வந்துச்சுன்னா.... அலுதுடுவேன்! ‘நான் ரகசியம் காக்கத் தெரிஞ்ச நபர்தான். உங்களப் பத்தி எதையும் சொல்ல மாட்டேன். புத்தக காப்பியும், சன்மானமும் தரத்தானே கேக்கறேன். என்கிட்டயாவது உங்க பேர், ஊர் சொல்லக் கூடாதா?’ன்னு மூணாவதா ஒரு மெயில் அனுப்பினேன். ‘உங்க மெயிலைப் படிச்சதும் எனக்கு லேசான குற்ற உணர்வே வந்துடுச்சு. ஒரு வாரமா வேலையில பிஸிங்கறதாலதான் பதில் தரலை. என் பேர் வேணுகோபாலன்’ அப்படின்னு ஆரம்பிச்சு, போன் நம்பர், அட்ரஸ் தந்து பதில் எழுதியிருந்தார்.

து 2011ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம். உடனே அவரைப் பாக்கணும்னு அவர் தந்திருந்த அட்ரஸுக்குப் போனேன். காலிங்பெல்லை அடிச்சதும், பச்சை மிளகாய்க்கு பேண்ட், ஷர்ட் போட்டாற் போலிருந்த ஒரு ஆசாமி கதவைத் திறந்தார். ‘‘வேணுகோபாலன்...?’’ என்று நான் இழுக்க, ‘‘நான்தான். உள்ள வாங்க’’ என்று அழைத்து அன்பாகப் பேசினார். அந்த முதல் சந்திப்பில் குறிப்பிடும்படி ஒன்றுமில்லை. செப்டம்பரில் அவரை நான் மீண்டும் சந்தித்ததில்தான் குறிப்பிடும்படியான விஷயம் இருக்கு. ப்ளாக் பதிவுகளைப் பத்தி பேசிட்டிருந்துட்டு, ‘‘எப்படி இதெல்லாம் எழுதறீங்க? நிறைய கருத்துக்கள் வேற வருது...? எனக்கும்கூட ட்ரை பண்ணலாம்னு எண்ணம் உண்டு’’ன்னு சொன்னேன். தன் கம்ப்யூட்டர்கிட்ட கூட்டிட்டுப் போயி, டாஷ்போர்ட்னா என்ன, எப்படி பதிவு எழுதி பப்ளிஷ் பண்ணனும்னு எல்லாத்தையும் விளக்கி டெமோ காட்டினார். கூடவே, ‘‘உங்க இமெயில் ‌ஐ.டி. சொல்லுங்க’’ன்னு கேட்டு, ‘‘ஒரு டைட்டில் சொல்லுங்க’’ன்னு கேட்டு (மனசுக்கு வந்த ‘மின்னல் வரிகள்’னு சொன்னேன்) உடனே எனக்கு ஒரு ப்ளாக்கை உருவாக்கிட்டார். ‘‘இதுல எப்ப வேணா நீங்க பதிவுகள் எழுதலாம். எப்ப எந்த டவுட்னாலும் என்னைக் கேளுங்க’’ன்னாரு. அப்ப இருந்து சேட்டைஸார் மாறி சேட்டையண்ணா ஆயிட்டாரு.

சரின்னு வீட்டுக்கு வந்துட்டு, எழுதலாம்னு பாத்தா... ‘என்னத்த எழுதறது, எப்படி எழுத்து நடைய அமைச்சுக்கறது’ன்னு ஒண்ணும் புரியல. மனசுக்கு வந்ததைக் கிறுக்கி (இப்பவும் அப்படித்தான்னு யாரோ சொல்றது கேக்குது) என் முதல் பதிவை பப்ளிஷ் பண்ணினேன். அது 11, செப்டம்பர் 2011ல. இப்ப அதை எடுத்து படிச்சுப் பாத்தா சிரிப்பு சிரிப்பா வருது- நாமளா எழுதினோம்னு! சேட்டைக்காரன் முதல் கமெண்ட் இட்டு, முதல் பின்தொடர்பவராகவும் ஆனார். (வேற வழி?) சி.பி.செந்தில்குமார் கருத்து போட்டிருந்தார். இவங்கல்லாம் நமக்குத் தெரிஞ்சவங்க. தெரியாத நபர்னு பாத்தா... ‘பனித்துளி சங்கர்’ன்னு ஒரு கவிஞர்... அப்ப ப்ளாக்ல கவிதைகள்லாம் எழுதி நிறைய போஸ்ட் போட்டிருந்தார். அவரோட கருத்து வந்து விழுந்தது. எனக்கு தெம்பைத் தந்தது. அந்த தைரியத்துல ரெண்டாவது பதிவை எழுதி பப்ளிஷ் பண்ணினா... அதுக்கு கமெண்ட்டுகள் அதிகம் கிடைச்சுது. ஜாக்கி சேகர், அம்பாளடியாள், முனைவர் குணசீலன் வேலன் இப்படி கருத்துச் சொல்லியிருந்த எல்லாருமே முன்னணிப் பதிவர்ங்க... சும்மாவே குதிச்சுக கூத்தாடற குரங்கு, கள்ளை வேற குடிச்சுட்டா என்ன பண்ணும்...? .அதுக்கப்புறம் என் ‘மின்னல் வரிகள்’ எக்ஸ்பிரஸ் மானாவாரியா ஸ்பீட் எடுத்து கன்னாபின்னான்னு ஓடத் ‌தொடங்கிருச்சு...!

லையுலகில் இப்படி ஒரு விபரீதத்துக்கு வித்திட்டு, உங்களையெல்லாம் மாட்டிவிட்ட சேட்டையண்ணனைப் பழிவாங்கணும்னு ரொம்ப நாளா எனக்கு ஆசை இருந்துச்சு. எப்படின்னு தெரியாம முழிச்சுட்டு இருந்தேன். இப்ப... அது நிறைவேறப் போகுது. சேட்டைக்காரன் எழுதிய நகைச்சுவைக் கதைகளைத் ‌தொகுத்து, ‘மொட்டைத் தலையும் முழங்காலும்’ங்கற தலைப்புல புத்தகமா நான் டிசைன் பண்ணி, பதிப்பித்து வெளியிடறேன். அது செப்டம்பர் 1ல நடக்கவிருக்கற பதிவர் சந்திப்புல வெளியிடப்படும் / புத்தகங்கள் அங்கே கிடைக்கும் என்கிற தகவலை உங்களுடன் பகிர்ந்‌து கொள்வதில் மகிழ்கிறேன். இந்தவிதமாக சேட்டைக்காரனைப் பழிவாங்கி விட்டதில் ரொம்பத் திருப்தி எனக்கு!

Wednesday, March 27, 2013

ஆனானப்பட்ட கணேஷ்! (சிறுகதை)

Posted by பால கணேஷ் Wednesday, March 27, 2013
ல்லூரியின் இரண்டாமாண்டு துவங்கிய இரண்டாம் நாள்!  "மச்சி என்ன பிகருடா அவ... அவள டாவடிக்கிற நம்ம தினேஷ் மெய்யாலுமே கொடுத்து வச்சவன்டா, பொறந்தா அவன மாதிரி கன்னிராசிக்காரனா பொறக்கனும் " கிளாஸ் வாசல்ல நின்னு எவனையோ கடல போட வச்சிட்டு இருந்த ரேவதியப் பார்த்து ஜொள்ளிட்டு இருந்தான் நந்தா. அந்த மன்மதனே பார்த்தாலும் ஜொள்ளுமளவுக்கு ரேவதியாகபட்டவள் சூப்பர் பிகர்களையே பொறமை கொள்ளச் செய்யும் சூப்பர் பிகர்!

கிளாசுக்கு வெளியே ஆரம்பித்த கடலை வாசம் அறை முழுவதையும்  நிறைத்திருக்க, அது யாரை கடுப்பேற்றியதோ இல்லையோ, எங்கள் வாத்தியார் கிறிஸ்டோபரை அதிகமாய் வெறி ஏற்றி இருந்தது.   வகுப்பறையில் இருந்த ஒவ்வொருவரும் ரேவதியுடன் ஏதோ ஒரு பாரின் லொக்கேசனில் டூயட் பாடிக் கொண்டிருந்த நேரம், நான் மட்டும் ரேவதியை ஒருவித வெறுப்பு கலந்த உணர்வுடன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அருகில் இருந்த தினேசையும் மணியையும் பார்த்தேன், ஞாயிறு மதியத்தில் சரவணபவனில் காலி டேபிளைப் பிடித்து விட்டவர்கள் மாதிரி என்னைப் பார்த்து அகலமாகச் சிரித்து என் கடுப்பை மேலும் கடுப்பாக்கிக் கொண்டிருந்தனர்.
 
நான் கணேஷ்! கணேஷாகப் பிறந்த மற்றவர்களுக்கும் எனக்கும் சிறிதாவது வித்தியாசம் தெரிய வேண்டும் என்பதற்காக, என் தாத்தாவும் அவரின் புத்திரனும் எனக்கு வைத்த பெயர் பாலகணேஷ். இருந்தும் அனைவரும் வித்தியாசமே இல்லாமல் "கணேஷ்", "கணேஷ்" என்று விளித்துத் தொலைப்பதால் "உள்ளேன் அய்யா" சொல்லும் பொழுது மட்டும் என் பெயர் பால கணேஷ், நேரம் போகாமல் எதையாவது கிறுக்கித்தள்ளும் பொழுது ஒரு சிறுவித்தியாசத்திற்காக ‘பா கணேஷ்’, மற்ற நேரங்களில் கணேஷ்.  என்னைய நீங்க பார்த்திருப்பீங்களான்னு தெரியாது, ஆனா என்னைப் போல் ஒருவரையாவது நிச்சயம் பார்த்திருக்கலாம், உடனே சென்று கண்ணாடியில் ஒருமுறை உங்களை உருப்படியாய்ப் பாருங்கள், நீங்கள் என்னைப் போல் இருப்பதற்குக் கூட வாய்ப்புள்ளது. நான் வளர வேண்டிய வயதில் காம்ப்ளான் தன் பணியை செய்ய மறந்ததால் என் உயரம் ஐந்தே கால் அடி, சமீபத்தில் எடை பார்த்த பொழுது 55கி. கண்ணாடி போட்டிருப்பேன், எப்போதும் கட்டம் போட்ட மடித்து விடப்பட்ட முழுக்கை சட்டை, எப்பொழுதாவது பூ போட்ட சட்டை. இப்படி எல்லாம் என்னுருவக் குறியீடுகளைச் சொல்வதால் எனக்கு வயதொன்றும் 55 இல்லை. சொன்னால் நம்ப மாட்டீங்க... இரண்டாமாண்டு கல்லூரி மாணவன் நான். என்ன... என்ன சிரிப்பு? என்னைக் கல்லூரி மாணவனாக நினைத்துப் பார்க்க உங்கள் கற்பனை இடம்தர மறந்தால் பிழை என் மீது இல்லை, சூடம் அடித்துச் சத்தியம் செய்வேன்- பிழை உங்கள் கற்பனையில் தான் என்று!

"டேய் கணேஷ்! ஏண்டா அவள பாத்து இப்டி மொறைக்கற? ஒரு பிகர எப்டி சைட் அடிக்கணும்னு கூட தெரியாத பயடா நீ"  இந்த மாதிரி பன்ச் டயலாக்லாம் நந்தா சொல்லி நான் கேக்கணும்ன்னு என்னோட தலையெழுத்து. காரணம், நானாவது சைட் அடிக்கறதுக்காக கிளாஸ் வாசல் வரைக்கும் போவேன். ஆனா இவனோ... முன்னாடி ஒரு சூப்பர் பிகர் வந்து நின்னாக்கூட "ஹலோ, கொஞ்சம் தள்ளி நில்லுங்க போர்ட் மறைக்குது, நோட்ஸ் எடுக்கணும்"ன்னு சொல்லி வெறுப்பேத்துற பய, அதனால தான் கடியாகுது மை லார்ட். இன்னும் நான் அவள வச்ச கண் வாங்காம வெறி கொண்டு மொறச்சு பார்த்துட்டுதான் இருந்தேன்.

"டேய் சொல்லுடா, ஏன்டா தினேஷ்கூட பாலா படத்தை மூணு ஷோவும் தொடர்ந்து பாத்த மாதிரி சீரியஸா இருக்குறான்? அதுசரி... தினேஷும் ரேவதியும் இன்னும் லவ் பண்ணறாங்க தானே?", நந்தா கொஞ்சம் சத்தமாவே கேட்டுட்டான், நல்லவேளை... எல்லாரும் ரேவதிய சைட் அடிக்கிறதுல பிசியா இருக்கறதால, யார் காதுலையும் விழுந்த்ருக்காது. ஏன்னா "தினேஷும் ரேவதியும் இன்னும் லவ் பண்ணறாங்க தான?" அப்டிங்கற கொஸ்டின்ல தான் இந்தக் கதையோட ட்விஸ்டே இருக்கு! (சீரியஸா ட்விஸ்ட்லாம் வெப்போம்ல கதையில- கொஞ்சம் அசட்டுத்தனம் தூக்கலா இருந்தாலும்!)

அதுக்காக நீங்க சீரியஸ் ஆகாதீங்க. இந்தக் கதையில நம்ம வாத்தியார் கிறிஸ்டோபர் தவிர மத்த எல்லாருக்கும் காமெடி ரோல் தான். ஆனானப்பட்ட கணேஷான எனக்கு மட்டும் கொஞ்சம் சீரியசான காமெடி ரோல்- நம்ம பவர்ஸ்டார் மாதிரி... ஹி... ஹி...! அப்போ கிறிஸ்டோபர்க்கு என்ன ரோல்ன்னு கேக்கறீங்களா? இதோ என் தலையில சாக்பீச தூக்கி எறியப்போற இந்த ஆளுக்கு வில்லன் ரோல் கொடுக்காம வேற என்ன ரோல் கொடுக்கிறதாம்? வாத்தி கிறிஸ்டோபர், என்னோட நெத்திக்கு குறிபார்த்து எரிஞ்ச சாக்பீஸ் பத்துநாள் பட்டினியாக் கிடந்த நாய் ப்ரெட்டைப் பாத்ததும் பாயற மாதிரி குறி பிசகாம சுர்ருன்னு என் நெத்தியில வெள்ளைத் திலகமிட்டு நொடி நேர வலி கொடுத்துட்டு கீழ விழுந்தது. நான் கேப்டன் மாதிரி கண்கள் சிவக்க வீராவேசத்தோட எந்திரிச்சு அவரப் பார்த்தேன். நான் அடிபட்ட காட்சியப் பார்த்து மொத்த கிளாஸும் விழுந்து விழுந்து சிரிக்குது, போதாக்குறைக்கு வெளியில வேற சூப்பர் பிகர்! இந்தாளு கண்டிப்பா எதோ பெரிய டயலாக் விடப் போறாருன்னு மட்டும் என்னோட மனசு சொல்லுச்சு... ஆமா, நா எதிர்பார்த்தது சரிதான்.

"டேய் கணேஷ், ஒரு பொம்பளப் புள்ளையப் போயி சைட் அடிக்கிறியே வெக்கமா இல்ல உனக்கு?"ன்னாரு கிறிஸ்! எங்களால எத வேணா அடக்க முடியும் ஆனா சிரிப்பை மட்டும்... ம்ம்ஹும், முடியவே முடியாது! மணி கொஞ்சம் சத்தமாவே சிரிச்சிட்டான், அவன் கூட சேர்ந்து நானும் சிரிச்சிட்டேன், மெதுவா எனக்கு கேக்குற மாதிரி சொன்னான், " சரியான லூசுப்பயடா, பொம்பளப் புள்ளைய சைட் அடிக்காம பக்கத்துல இருக்குற அவனையா சைட் அடிப்பாய்ங்க...!"

இந்தாளு இப்படி எதாவது பேசாட்டா தான் அதிசயம். பேச்சுல கொஞ்சம் பெண்மை இருக்கும், அசைவுகள்ள கொஞ்சம் அபிநயம் இருக்கும், அறச்சீற்றம் வரும் போது மட்டும் பெண்மையும் மென்மையும் கலந்த ‘வரலாறா’ இருப்பாரு. ஆனாலும் வாத்தி கொஞ்சம் ரப் டைப்பாமாம்...! அவரே சொல்லிக்குவாரு அப்படி! காலேஜ்ல வேலைக்கு சேர்ந்து ரெண்டு நாள் தான் ஆவுது... அதுக்குள்ள ரெண்டாயிரம் பட்டப் பேரு வாங்கின அபூர்வ சிகாமணி! நமக்கு இப்போ முக்கியம் கிறிஸ் இல்ல, தினேஷும் ரேவதியும், அவங்களோட லவ்வும் தான், அதத் தெரிஞ்சிக்க ஒரு செமஸ்டர் ரிவேர்ஸ்ல போயே ஆக வேண்டியது காலத்தின் கட்டாயம். வாங்க, போகலாம்...!

எல்லாப் பசங்களும் தனக்குன்னு ஒரு பிகர கரெக்ட் பண்ணகூடிய வசந்த காலம் தான் செகண்ட் செமஸ்டர்.  மதியஉணவுக்குப் பின் வகுப்பறையின் வெளியில் அமர்ந்து இயற்கையை(!) ரசித்துக் கொண்டிருந்த நேரம்,  எங்களைக் கடந்தவள் தான் அழகு தேவதை ரேவதி. "யாருடா அவ, இத்தன நாளு நம்ம கண்ணுல படாம போயிட்டா", அவளைப் பார்த்ததும் தினேஷ் சற்றே சுறுசுறுப்படைந்தான் புள்ளிமானைக் கண்ட வேடன் போல் என்பது அனைவரும் படித்து சலித்துப் போன டயலாக் என்பதால் ரேவதியைக் கண்ட தினேஷைப் போல அவளைப் பின் தொடர ஆரம்பித்தான். நண்பனைத் தொடரும் நிழலாக மணியும் அவனுடன் சேர நானோ "இவிங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லடா, ஆவூன்னா ஃபிகரு பின்னாடி போயிருவானுங்க" என்று அவர்கள் இருவரையும் திட்டிக் கொண்டே நந்தாவின் அருகில் சென்று அமர்ந்தேன். காரணம் நானும் நந்தாவும் ஃபிகர்கள் எங்களைக் கடக்கும் பொழுது மட்டுமே சைட் அடிக்க பிடிக்கும் சோம்பேறிகள் என்பதால்!

முதல் கட்ட முற்றுகையை முடித்த வெற்றிக் களிப்புடன் இருவரும் திரும்பினர், "டேய் கணேஷ்! நீயெல்லாம் சுஜாதா புக் படிக்க மட்டுந்தான்டா லாயக்கு" என்று என்னை கடுப்பேற்றிவிட்டு, ‘‘அவ EEE பர்ஸ்ட் இயர்! எப்புடி... நாங்க கண்டு பிடிச்சோம்ல! என்ன... பேரு தான் கண்டுபிடிக்க முடியல" என்றான் தினேஷ். புவி ஈர்ப்பு விசையைக் கண்டறிந்த நியுட்டன் போல் லுக் விட்ட தினேஷைப் பார்த்து பாலா சொன்னான் "ப்பூ... இதுக்கு தான் இப்டி அலட்டிகிறியா? அவ பேரு ரேவதி, ஏரியா கிண்டி, வாராவாராம் மவுண்ட் சர்ச்க்குப் போவா, இன்னும் ஆள் இல்ல, டுலெட் தான்" அசால்ட்டாக அவ டேட்டாவை அள்ளி எறிந்தான் அசல் பாலா.  "அவ டுலெட் தான், பட், டூ லேட் இல்ல தானே... மணி! நா முடிவு பண்ணிடண்டா, இந்த தினேஷ் மோதிரம் மாத்திக்கிட்டா அது அந்த ரேவதி கூடத் தாண்டா" எப்படித்தான் இவனுங்களால மட்டும் நிமிஷத்துல ஒவ்வொரு மதத்துக்கும் மாறி, அதுக்குத் தக்கபடி பஞ்ச் டயலாக் பேச முடியுதோ? அட ஆண்டவா...!

பேஸ்புக்கும், மொபைலும் கைக்குள்ளிருக்க, இதற்குப் பின்னான காட்சிகள் அனைத்தும் அவர்களின் காதலின் வேகத்திலும்  வேகமாக நகர்ந்தன. அண்ணலும் ஏர்டெல், அவளும் ஏர்டெல்! பத்து பைசா பூஸ்டர் காதலுக்கு மேலும் மேலும் பூஸ்ட் ஏற்றிக் கொண்டிருந்தது. செமஸ்டர் லீவில் இருந்த நேரம், திடிரென்று ஒருநாள் தினேஷிடம் இருந்து போன், " மச்சி அவ போன் நம்பர மாத்திட்டாடா, பேஸ்புக்குல கூட என்ன அன்பிரண்ட் பண்ணிட்டா, எங்களுக்குள்ள எந்தப் பிரச்சனையுமே இல்லடா, ஆனா போன ஒருவாராமா அவ என்கூட ஒழுங்காவே பேசல, அதுனால நானும் கோவத்துல இருந்தேன். இதுக்குலாமாடா போன் நம்பர மாத்துவாங்க" அழாத குறை, ஆனாலும் அவன் அழவில்லை, அவன் அழாததால் இந்தக் கதை ஒரு கண்ணீர்க் கதை ஆகாமல் தப்பித்தது தற்செயலே.

என்னதான் அவன் அவளை உயிருக்கு உயிராய் காதலித்ததாய் சொன்னாலும், மணிக்கணக்கில் வருங்காலம் பற்றி பேசியதாய் சொன்னாலும், அந்த உயிர் இருந்த உறைவிடத்து முகவரி கேட்கவேண்டும் என்று மட்டும் அவனுக்குத் தோன்றவில்லை, அதை துப்பறியலாம் என்று குத்துமதிப்பாய் வண்டிகளில் ஏறி, கிண்டியைச் சுற்றி, தெண்டமாய் அலைந்து முண்டங்களாய்த் திரும்பியதுதான் மிச்சம்! அவள் முகவரி  கண்டுபிடிக்க முடியவில்லை. நாளொரு புலம்பலும் பொழுதொரு சோகப்பாட்டுமாக இவனது காதல் தோல்வி(?)யைப் போன்ற தோல்வி எங்களை வாட்டத்தொடங்கியது- அதிலும் என்னை மிக அதிகமாக! காதல் தோல்வியானது காதலித்தவனை விட அவனது நண்பர்களை அதிகம் தாக்க வேண்டும் என்பது எவன் விட்ட சாபமோ தெரியவில்லை. எதுவானாலும் அவள் கல்லூரி வந்து தானே ஆக வேண்டும், அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று தினமும் அவனிடம் உருவேற்றிக் கொண்டே இருப்பேன். "ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷப்பா! இனி கல்யாணம் ஆனவன்கூட மட்டும் தான் பிரண்ட்ஷிப் வாசிக்கணும்டா கணேஷா. முடியல்ல..."      

பரபரப்பான இறுதி கட்டம் என்பதால், இனிவரும் வரிகளில் பரபரப்பே இல்லாவிட்டாலும் சற்றே பரபரப்பாய் இருப்பது போல் படியுங்கள், எங்குலச்சாமி பாடிகாட் முனி உங்களுக்கு நல்லாசி வழங்குவாராக.

அவளைச் சந்திக்க வேண்டிய நாளும் வந்தது, கல்லூரி வராண்டாவில் நண்பிகளுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தளிடம் எந்த மாற்றமும் இல்லை. இவளை இப்படி ஒரு சந்தோசமான சூழ்நிலையில் பார்த்ததும் எங்களுக்கு இருப்பு கொள்ளவில்லை, அறச்சீற்றம் என்னுள் கொஞ்சம் அதிகமாகவே பிரவாகம் எடுத்தது. இருக்காதா பின்னே..? இத்தனை நாள் இவளால் தினேஷ் தந்த தொல்லைகளை அனுபவித்தது எதுவுமே அறியாத இந்த பால(கன்) கணேஷ் அல்லவா! மணியும் தினேஷும் என்னைப் பின் தொடர, நான் அவள் அருகில் செல்ல எங்களை மற்றுமொரு புதிய மற்றும் சற்றும் அறிமுகமில்லாத மனித ஜந்து நெருங்கியது. எங்களைப் பார்த்ததும் அவளிடம் எவ்வித மாற்றமும் இல்லை. இயல்பாக பேசத் தொடங்கினாள் "ஹாய் கணேஷ்! சாரிப்‌பா, ரியலி சாரி! உங்க யாரையும் என்னோட மாரேஜ்க்கு கூப்பிட முடியல, இதோ பக்கத்துல நிக்குறாரே மிஸ்டர் கிறிஸ்டோபர்! இவரு தான் என்னோட ஹஸ்பண்ட். உங்க டிபார்ட்மென்ட்ல தான் புதுசா ஜாயின் பண்ணி இருக்காரு"

ப்யூஸ் போன மெர்க்குரி பல்பாக வெறும் சிரிப்பை மட்டும் உதிர்த்துவிட்டு அதிர்ச்சியில் நடையைக் கட்ட ஆரம்பித்த பொழுது தான் மீண்டுமொரு பேரதிர்ச்சியைக் கொடுத்தாள் அந்த மாபாவி...  "அப்புறம் கணேஷ், இனி என் பின்னாடி சுத்துறது, என் நம்பர கண்டுபிடிக்க ட்ரை பண்றது, இதெல்லாம் வேணாம், ஒழுங்கா படிக்கிற வழிய மட்டும் பாருங்க" என்று கறாராக சொல்லிவிட்டு 234 தொகுதியிலும் வெற்றிபெற்ற கட்சித் தலைவி மாதிரி சிரித்தாள். நான் டெபாசிட் இழந்த வேட்பாளராகி தலையைத் தொங்கப் போட்டுக் கொள்ள, அருகில் இருந்த அவளது ஹஸ் கிறிஸ் என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்....

"அடிப்பாவி! உனக்கு நூல் விட்டது ஒருத்தன், அல்வா கிண்டினது ஒருத்தன், ஆனா கடைசில ஆப்பு மட்டும் எனக்கா? கணேஷா... நீ பேசாம மாடு மேய்க்கவே போயிருடா கணேஷா..!" உள்ளேயிருந்து உரக்கக் குரல் கொடுத்தது மனஸ்! அவ்வ்வ்வ! ஆனானப்பட்ட கணேஷான எனக்கு மட்டும் கொஞ்சம் சீரியசான காமெடி ரோல் என்று நான் முதல்லயே சொன்னது இதுனால தானுங்கோ...!

========================================================

பி.கு.: ‘அடங்கொண்டு போராடிய சீனு’ என்று நான் கலாய்த்த பதிவைப் படித்த ‘திடங்கொண்டு போராடு’ சீனு இந்தக் கதையை எழுதி அனுப்பி, ‘இது என்னோட பதில் கலாய்ப்பு. இது நல்லாயிருக்குன்னு நீங்க நினைச்சீங்கன்னா, இதுவும் உங்க தளத்துலதான் வரணும்’னு நிஜமாவே அடம் பிடிச்சார். அதனால சீக்கிரமே கு.மி.சி. ஆகப்போற சீனுவை பின்விக்கும்... ஸாரி ஊக்குவிக்கும் விதமாக தான் எழுதின கதை(?)ய எனக்குத் தாரை வார்த்துத் தந்த அவருக்கு நன்றி சொல்லி, அதை இங்கே உங்கள் பார்வைக்கு வைத்தேன்!

Wednesday, January 16, 2013


ன்னுடைய ‘சரிதாயணம் @ சிரிதாயணம்’ புத்தகததிற்கு நூல் வெளியீட்டு விழா நடத்த இயலாமல் போய் விட்டதே என்று ஒரு ஏக்கம் மனதுக்குள் இருக்கத்தான் செய்தது. அந்தக் குறையை நிவர்த்தி செய்து மகிழ்ச்சியைத் தந்தார் ‘சிரிப்பானந்தா’ என்ற பெயரில் அறியப்படும் திரு.சம்பத்குமார். நான் அவரிடம் ‘சரிதாயணம்’ புத்தகத்தை அளித்து, படித்துக் கருத்துக் கூறும்படி கேட்டிருந்தேன். ‘‘ஜோக்ன்ற வார்த்தைய ‌சொன்னாலே சிரிக்கற ஆசாமி நான். நகைச்சுவை கதைகள்னு வேற சொல்றீங்க. அவசியம் படிக்கறேன்’’ என்று சொல்லிச் சென்ற அவர், கதைகளை படித்து ரசித்து, என்னைத் தொடர்பு கொண்டு புத்தகக் கண்காட்சியின் மூன்றாவது தினமான ஞாயிறன்று (போகியன்று) அம்பத்தூரில் மாலையில் நடைபெறவிருந்த சிரிப்பரங்கத்தின் மாதாந்தரக் கூட்டத்திற்கு என்னை அழைத்தார். அங்கே அவரது சிரிப்பரங்க உறுப்பினர்களுக்கு என் புத்தகம் பற்றிப் பேசி அறிமுகம் செய்யவிருப்பதாகச் சொன்னார்.

காலை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். கோவையிலிருந்து தங்கள் புத்தகங்களுடன் வந்திருந்த நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு மதியம் 2.45க்கு அங்கிருந்து கிளம்பினேன்- நண்பர்கள் சீனுவையும், அரசனையும் உடனழைத்துக் கொண்டு. என் பதி்ப்பாளர் பிரகாஷ், வடபழனியிலிருந்து நேராக அம்பத்தூர் வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தார். நாங்கள் பேருந்தில் ஏறிச் சென்று கொண்டிருந்தபோது, தொலைபேசியில் அழைததார் ஸ்ரீராம். தான் புத்தகக் கண்காட்சியில் இருப்பதாக அவர் கூற, நாங்கள் விழாவுக்குச் சென்று கொண்டிருப்பதை அவரிடம் ‌சொன்னேன். நேரில் சந்தித்து அளவளாவி மகிழும் வாய்ப்பு போய்விட்டதே என்று ரொம்பவே வருத்தமாக இருந்தது.

ஏற்கனவே சிரிப்பரங்கத்தி்ன் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அனுபவசாலியான சீனு, எங்களை சரியாக வழிநடத்திச் சென்றார். சிரிப்பரங்கம் துவங்குவதற்கு முன்பு, தலைமை ஏற்பவரை மேடைக்கு அழைத்த சிரிப்பானந்தா, அடுத்து, ‘‘எழுத்தாளர் பாலகணேஷ் அவர்களையும், பதிப்பாளர் பிரகாஷ் அவர்களையும் சிறப்பு விருந்தினராக மேடைக்கு அழைக்கிறேன்’’ என்றார். ஆனந்த அதிர்ச்சியாகிப் போனது எனக்கு. ‘‘என்னை நல்லவேன்னு சொல்லிட்டாங்கம்மா...’’ என்று வடிவேலு புலம்புகிற தினுசில், ‘‘என்னை எழுத்தாளர்ன்னு சொல்லிட்டாங்கய்யா...’’ என்று மனஸ் உள்ளே குதியாட்டம் போட்டது. பாவம்...! ஆட்டுக்கு எப்பவுமே முதலில் அலங்காரம் பண்ணி மாலை போடுவார்கள் என்பது அதற்குத் தெரிந்தால் தானே...

சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு வந்து தங்களுக்குத் தெரிந்த ஜோக்குகளை சொல்லி சபையைச் சிரிக்க வைக்க வேண்டும் என்பது வழக்கமான ஒன்றாம். உறுப்பினர்கள் ‌அழைக்கப்பட்ட வரிசையில் வந்து சொல்லத் தொடங்கினர். சில ஜோக்குகள் பழையவையாக இருந்தன. சில புதிதாகச் சொல்லப்பட்டவையாக இருந்தன. இருந்தாலும் அனைவரும் எல்லா ஜோக்குகளுக்கும் சிரித்து உற்சாகப்படுத்தினார்கள். (ஒருவேளை சிரிக்காவிட்டால் சிரிக்கும்வரை இவர் ஜோக் சொல்லிக் கொண்டே இருப்பாரோ என்பதாலும் இருக்குமோ? ஹி... ஹி....)

மேடையில் அமர்ந்து கொண்டு ஜாலியாக ஜோக்குகள் கேட்டு சிரித்துக கொண்டிருந்த எனக்கு பாக்ஸிங் புலி முகம்மது அலி போல ஒரு ‘பன்ச்’ கொடுத்தார் சிரிப்பானந்தா.  நான்கைந்து உறுப்பினர்கள் ‌பேசியதும், ‘‘இப்போது ‘சரிதாயணம்’ங்கற புத்தகத்தைப் பத்தி சொல்லப் போறேன். அது முடிந்ததும் தலைவர் உரையாற்றுவார். பின் சிறப்பு விருந்தினர்கள் உரை நிகழத்துவார்கள். பின் மற்ற உறுப்பினர்களின் சிரிப்பைத் தொடரலாம்’’ என்றதும் நான் ‘ழே’ என்று விழிக்க ஆரம்பித்தேன். ‘‘ம்மே... ம்மே...’’ என்று மிரண்டு போய் அலறியது மனஸ்!

ஸ்கூல்ல படிக்கறப்பவே பேச்சுப் போட்டிக்கு பேர் கொடுத்துட்டு, ஸ்டேஜுக்குப் ‌போனதும் மைக்கையும், எதிர்லருக்கற மக்களையும் பார்த்து கை, கால் உதறி, பேச்சே வராம ‘திருதிரு’ன்னு முழிச்சுட்டு பேசாமலேயே எஸ்கேப்பான மாவீரன்(!) நான். என்னைப் போய் சிறப்பு உரை ஆத்துவாருன்னு சொல்லிட்டாரே... என்னத்தை ஆத்தறது?ன்னு புரியலையே... என்று எண்ணியபடி பதிபபாளர் பிரகாஷைப் பார்த்தேன். அவர் வாழ்க்கையைப் படித்தவர், மனிதர்களைப் படித்தவர், ஆனால் பள்ளிக்குச் சென்று அதிகம் படிக்காதவர் என்பதால் அவர் என்னைவிட மோசமாக விழித்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

அங்கே சிரிப்பானந்தா புத்தகம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். என் கதைகளைப் புகழ்ந்து தள்ளினார். கதையில் வரும் பல (எனக்கே தெரியாத) நல்ல அம்சங்களை ரசித்து,  நுணுக்கமாக அவர் விவரித்தபோது, சற்றே கூச்சத்தால் நெளிய வேண்டியிருந்தது. அவர் பேசினதும் வந்திருந்த உறுப்பினர்களில் பெரும்பாலானவங்க புத்தகத்தின் ஒரு பிரதியை வாங்கிக்கிட்டாங்க. சிரிப்பரங்க உறுப்பினர்கள் எல்லாரும் ரொம்ப ரொம்ப நல்லவங்க. ஹி... ஹி.... அதன்பின் தலைமையுரை நடக்க ஆரம்பித்தது.

என் மனசுக்குள் நாம என்ன பேசி ஒப்பேத்தப் போறோம் என்கிற சிந்தனை ஓடிட்டிருந்தது. தலைமையுரைக்குப் பின் பதிப்பாளர் பிரகாஷைப் பேசச் சொல்ல, ‘‘நான் ரொம்ப வருஷமா நிறைய புத்தகங்கள் போட்டுக்கிட்டிருக்கேன். ஒரு நகைச்சுவைப் புத்தகம் வெளியிடணும்னு ரொம்ப நாள் எண்ணம். பாலகணேஷ் எனக்கு நீண்டகால நண்பர். இவர் நகைச்சுவைச் சிறுகதைகள்னதும் உடனே வெளியிட்டுட்டேன். உங்க எல்லாருக்கும் நன்றி’’ அப்படின்னு நம்ம பிலாசபி பிரபாகரன் பேசற மாதிரி நாலே வார்த்தை பேசிட்டு ‘எஸ்’ஸாயிட்டாரு.

இவங்க பேசற நேரத்துக்குள்ள யோசிச்சு ஒரு மாதிரியா தயாராயிருந்தேன். நான் முன்ன எழுதின ‘இரட்டைப் புலவர்கள்’ மேட்டர்லருந்து ஒண்ணையும், ‘சிலேடைச் சிதறல்கள்’லருந்து ஒண்ணையும், ரெண்டு நாள் முன்னாடி படிச்ச முனைவர் கு.ஞானசம்பந்தன் புத்தகத்திலிருந்த மூணு ஜோக்குகளையும் எடுத்து, அந்த உதிரி ஜோக்குகளை வார்த்தைப் பூக்களால இணைச்சு ஒரு மாலையா மனசுக்குள்ள தயாரிச்சு வெச்சிருந்தேன். அதை கடகடன்னு மைக் முன்னாடி ஒப்பிச்சேன். குரல்ல கொஞசம் தடுமாற்றம் வேற.

நான் பேசி முடிச்சு மேடைய விட்டு இறங்கினதும், சற்றே பருமனான ஒரு பெண்மணி என்னை‌ நோக்கி அடிக்க வருபவர் போல வேகமாக வந்தார். முன்பே மேடைக்கு வந்து, பிஸ்கட், காபி எல்லாம் கொடுத்து ‘கவனித்தது’ அவர்தான் -இப்போது வரும் வேகத்தைப் பார்த்தால் நம் பேச்சுக்காக ‘கவனித்து’ விடுவாரோ என்று உதறல் எனக்கு. அருகில் வந்தவர், ‘‘மேடையில பேசினதே இல்லை, முதல் அனுபவம்னு சொல்லிட்டு அருமையாப் பேசி அசத்திட்டீங்க. சூப்பர்’’ என்று கை கொடுத்தாரே பார்க்கலாம்! ஹப்பாடா...! ‘‘அட... நமக்கும் ஒரு ரசிகையா... அவ்வ்வ்வ!’’ என்று மனஸ் குட்டிக்கரணமடிக்க, சந்தோஷமாகக் நன்றி சொன்னேன்.

விழாவுக்குக் கிளம்புகையில், பு.கண்காட்சியில் அன்று கூடியிருந்த நண்பர்கள் படையுடன் இருக்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும், திரும்புகையில் பல பிரதிகள் புத்தகம் விற்று பலரைச் சென்றடைந்து விட்ட சந்தோஷமும், ‌ஜோக்குகள் கேட்டு மகிழ்ந்த அனுபவமும் சேர்ந்து கொள்ள, திரும்புகையில் மனஸ் மகிழ்ச்சியில் நிரம்பியிருந்தது. இந்த மகிழ்ச்சிக்கு முழுக்க முழுக்க காரணமான சிரிப்பானநதா அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி. (நிச்சயம் இந்த வார்த்தை என் உணர்வுகளை வெளிக்காட்டுவதாகாது. அதற்கும் மேல் மனஸ் தளும்பிக் கொண்டிருக்கிறது).

சிரிப்பரங்கத்துக்கு எனக்கு வழிகாட்டியா செயல்பட்டதோட இல்லாம, விழாவு்க்கு அழைச்சுட்டுப் போய் அங்கருந்து நான் புறப்படற வரைக்கும் என்கூடவே இருந்து உதவின, திடங்கொண்டு போராடும் ‘சீனு’, பொங்கலுக்கு ஊருக்குப் புறப்படற அவசரத்தில புத்தகக் கண்காட்சில சுற்றுவதைப் புறக்கணித்து எனக்காக என்னுடன் வந்து விழா முழுவதும் உடனிருந்த ‘கரைசேரா அலை’ அரசன் இருவருக்கும் என் மனம் நிறைய நன்றி!

Sunday, December 2, 2012

நான் ரசித்த நகைச்சுவை காட்சிகள்

Posted by பால கணேஷ் Sunday, December 02, 2012

அன்பார்ந்த நண்பர்களே...

தீபஒளித் திருநாள் முடிந்ததும் 3 தினங்கள் கோவை சுற்றுப்பயணம் சென்று வந்தேன். வந்ததும் புதிய வேலை கிடைத்து அலுவலகம் மாறினேன். புதிய அலுகலகத்தில் இணைய பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்கிற செய்தி எனக்கு மிகமிகக் கடினமாக இருக்கிறது. இதுநாள் வரை அலுகலகத்திலிருந்து கொண்டுதான் இணையத்தில் உலாவி வந்ததால் கடந்த 15 தினங்களாக இணையத்திற்கு அன்னியன் ஆக்கப்பட்டேன். வீட்டில் இணைய இணைப்பு பெற்று இன்னும் ஓரிரு தினங்களில் அம்பியாகவோ ரெமோவாகவோ வந்து விடுவேன் என்ற (எனக்கு) மகிழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பதிவை வெளியிட்ட தங்கைக்கு என் நன்றி.

                                       
                                                           

தமிழ் சினிமா தோன்றிய நாளிலிருந்து எத்தனையோ காமெடியன்களைப் பார்த்திருப்பீர்கள். ரசித்துச் சிரித்திருப்பீர்கள். நானும் அப்படியே. ஆனால் காமெடியன்களை விட சில கதாநாயகர்கள் நடிக்கும் காட்சிகள் காமெடியன்களை மிஞ்சி விடுவதுண்டு. என்னை மிகவும் ரசித்துச் சிரிக்க வைத்ததுண்டு. அப்படி இரண்டு கதாநாயகர்கள் நடித்த காமெடிக் காட்சிகளைத்தான் இப்போது சொல்லப் போகிறேன்.


செங்கோட்டை என்று ஒரு படம். ஆக்ஷன் கிங் அர்ஜுன்தான் கதாநாயகன். படத்தின் கிளைமாக்ஸில் வில்லன் குரூப் அடியாட்கள் அவர் மனைவி மீனாவையும் அப்பா விஜயகுமாரையும் தங்கள் கஸ்டடியில் வைத்துக் கொண்டு ஒரு அடியாளுடன் அவரை ப்ளைட்டில் போகச் சொல்வார்கள். விமானம் கிளம்பிய பின் அவர் அடியாளின் கழுத்தில் அடித்து மயக்கமடையச் செய்துவிட்டு விமானத்தின் டாய்லெட்டைத் தாண்டி பின்னால் வந்து டயர் வழியாக வங்கக் கடலில் குதிப்பார். பொதுவாக விமானம் ஆகாயத்தில் ஏறியதுமே மூடிக் கொள்ளும் டயர் அர்ஜுனுக்கு வசதியாக மீனம்பாக்கத்திலிருந்து வங்கக் கடலை அடையும் வரை அரை மணி நேரமாகியும் மேலே ஏறாமலேயே பறந்து கொண்டிருக்கும். ஹா... ஹா... சூப்பர் காமெடி என்கிறீர்களா... இல்லை, இனிதான் காமெடியே...


கடலில் குதித்த அவர் நீந்திக் கரையேறி, தன் வீட்டிற்கு வந்து வில்லன் அடியாட்களை வீழ்த்திவிட்டு பிரதமரைக் கொல்ல நடக்கும் சதியைத் தடுக்க செங்கோட்டைக்கு வருவார். சுதந்திர தின விழா நடந்து கொண்டிருக்க, பிரதமரைக் கொல்ல வரும் கொலையாளியை அவர் தேடுவார். கொலையாளி நாம் யாருமே எதிர்பாராத வண்ணம் மேலே பறந்து கொண்டிருக்கும் பெரிய ஹீலியம் பலூனுக்குள் இருப்பான். அவனுக்கு பலூனுக்குள் சுவாசிக்க ஏதய்யா ஆக்சிஜன், ஹீலியம் வாயுவை சுவாசிக்க முடியாதே என்று யாராவது கேட்டீங்களோ... கொன்டேபுட்டேன்!


அது மட்டுமா... பலூனுக்குள்ளிருந்து ஏதோ பால்கனிக் கதவைத் திறந்து நாம் வேடிக்கை பார்ப்பது மாதிரி ஒரு கதவைத் திறந்து பிரதமரைக் குறி பார்ப்பான். பலூனிலிருக்கும் காற்றெல்லாம் வெளியேறி விட்டால் அது எப்படிப் பறக்கும் என்று பகுத்தறிவுக் கேள்வி யாராவது கேட்டீங்களோ... சரி, அவன்தான் அப்படியென்றால் நம்ம ஆக்ஷன் கிங் சும்மா இருப்பாரா... நிழலில் இருந்தே கொலையாளி பலூனில் இருப்பதைக் கண்டுபிடித்து அப்படியே மல்லாக்கப் படுத்து சுடுவார். பலூன் வெடித்து கொலையாளியும் பரலோகத்துக்கு பார்சல்.


அவ்வளவுதான்... அங்கே இருக்கும், கொலையாளியை ஏவிய மெயின் வில்லன் பிரதமரைச் சுடுவார். துப்பாக்கிக் குண்டு ஸ்லோமோஷனில் வந்து கொண்டிருக்க, அதை குறுக்கிட்டு நம்ம ஆக்ஷன் கிங் தோளில் வாங்கிக் கொள்வார். வில்லனின் அடுத்த குண்டு தேசியக் கொடிக் கம்பத்தை சாய்க்க, அர்ஜுன் இன்னொரு குண்‌டை ஏற்றுக் கொண்டு கொடியைத் தாங்கிப் பிடிப்பார். (தேசபக்தி சார்!) பாதுகாப்புப் படை வீரர்கள் பிரதமரை பாதுகாப்பாக இதற்குள் கூட்டிப் போக மற்ற வீரர்கள் எல்லாம் வேடிக்கை பார்ப்பார்கள். அவர்கள் வில்லனை அழித்து விட்டால் ஆக்ஷன் கிங்குக்கு என்ன மதிப்பு? அத்தனைக்கும் பின்னால் அவரே வில்லனுடன் மோதி சம்ஹாரம் பண்ணுவார்.


அடாடா... அந்தப் படத்தின் கடைசி அரை மணி‌ நேரத்தில் சிரித்துச் சிரித்து எனக்கு வயிற்று வலியே வந்து விட்டது.  இதை மிஞ்சுகிற மாதிரி காமெடி வேறு எந்தப் படத்திலும் வராது என்றுதான் எண்ணியிருந்தேன். அந்த எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டார் ஆர்.சுந்தரராஜன்.


நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தூக்கு மேடைக்கே கொண்டு வந்து விடுவார்கள். அதே நேரம் கட் ஷாட்டில் இன்னொரு ரஜினிகாந்த் இவரைக் காப்பாற்ற ஒரு அம்பாஸடர் காரில் வந்து கொண்டிருப்பதைக் காட்டுவார்கள். இங்கே இவர் கழுத்தில் கறுப்புத் துணி கூட மாட்டி விடுவார்கள். அவர் பரபரப்பாக அதிவேகத்தில் காரில் வந்து கொண்டிருப்பார். லீவரை இழுக்க சைகை காட்டும் நேரம்... ஜெயிலின் கருங்கல் சுவரை அம்பாஸிடர் காரினால(?) இடித்து தூளாக்கிக் கொண்டு அதகளமாக வருவார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார்ன்னா சும்மாவா...


அது மட்டும் காமெடியில்லை... வந்தவர் நேராக அங்கிருக்கும் அதிகாரிகளிடம் வந்து, ‘‘இவன் கொலை பண்ணலை. ஆதாரம் இந்த கேஸட்ல இருக்கு...’’ என்பார். உடனே அனைவரும் தூக்குப் போடுவதை நிறுத்திவிட்டு கேஸட் கேட்கப் போய் விடுவார்கள்.


அட, ஞானசூனியங்களா... தூக்கு மேடைக்குப் போய்விட்ட ஒருவனைக் காப்பாற்ற வேண்டுமானால் ஜனாதிபதியிடமிருந்து போனோ கடிதமோ வந்தால்தானே முடியும், ஆடியோ கேஸட்டை ஒரு ஆதாரமாக எந்த நீதிபதியும் ஏற்றுக் கொள்ள மாட்டாரே... என்றெல்லாம் யாரும் கேட்டுவிடக் கூடாது.


 ரஜினி மற்றொரு ரஜினியின் கழுத்தில் இருக்கும் கறுப்புத் துணியை எடுக்க, அவர் கூலாக, ‘‘நீ எப்படியும் வருவேன்னு எனக்குத் தெரியும். ஏன்னா, நான் தப்பே பண்ணலையே’’ என்க இருவரும் சிரிப்பதைப் பார்த்துக் கை தட்டி ரசிக்க வேண்டும். அப்படி ரசித்துத் தான் ‘ராஜாதி ராஜா’ படத்தை 200 நாட்கள் ஓட வைத்தனர் நம் ரசிகர்கள். இந்த கிளைமாக்ஸ் காட்சியும் பார்க்கும் போதெல்லாம் என்னை ரசித்துச் சிரிக்க வைக்கிறது.


‘போய்யாங்க... இதென்ன ஜுஜுபி! இதைப் போய் பெரிசா காமெடின்னு சொல்ல வந்துட்டே... இதைவிடப் பெரிய காமெடில்லாம் நாங்க பார்த்திருக்கோம்’ என்கிறீர்களா? சொல்லுங்களேன்... நானும் தெரிந்து கொள்கிறேன். பார்த்து ரசிக்கிறேன்.



  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube