Saturday, August 30, 2014

இந்த ஆண்டு இரண்டு தீபாவளிகள்..!

Posted by பால கணேஷ் Saturday, August 30, 2014
மிழ்ப் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்...

கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ம் நாள் அன்றும், 2013 செப்டம்பர் மாதம் 1-ம் தேதி அன்றும் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர் சந்திப்புகளை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. விழாவின் இனிய நினைவுகளை நண்பர்கள் பகிர, முதல் ஆண்டில் கலந்து கொள்ள இயலாமல் போன அனேக பதிவர்கள் ஆர்வமுடன் இரண்டாம் ஆண்டின் சந்திப்பில் பங்கேற்று அசத்தினார்கள். அதே போல் மூன்றாம் ஆண்டிலும் அசத்துவதற்கு இப்போதிருந்தே தயாராகுங்கள் நண்பர்களே..!மூன்றாம் ஆண்டு பதிவர் சந்திப்பிற்கான வேலைகள் கோலாகலமாக ஆரம்பித்து விட்டன... சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்து மங்காப் புகழ் பெற்ற மதுரை நகரில் இம்முறை நம் மூன்றாமாண்டு சந்திப்பு நடைபெற உள்ளது.

நாள் : அக்டோபர் 26-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

இடம் : மாரியம்மன் தெப்பக்குளம் மேலவீதியிலுள்ள கீதா நடனகோபால நாயகி மந்திர், மதுரை.

அக்டோபர் 23ம் நாள் உலகெங்கும் மக்கள் அனைவரும் மகிழ்வுடன் கோலாகலமாகக் கொண்டாடும் தீபாவளித் திருநாள். அதைத் தொடர்ந்து மூன்று தினங்களில் 26ம் தேதியன்று வலைப்பதிவர்களான நம் அனைவருக்குமான மற்றொரு தீபாவளித் திருவிழாவாக அமைய இருக்கிறது இந்தப் பதிவர் சந்திப்பு. அந்தப் பண்டிகையைக் கொண்டாடிய அதே உற்சாகத்தை விடாமல் பற்றிக் கொண்டு, அலைகடலெனத் திரண்டு வந்து மதுரையில் இன்னொரு சித்திரைத் திருவிழா ஆரம்பித்து விட்டதோ என்று மதுரைவாசிகள் வியக்கும் வண்ணம் அசத்த வேண்டும் நாம்... வாருங்கள் வலைப்பதிவர்களே..!

விழா நிகழ்வு என்றும் நினைவில் நிற்கும் ஒன்றாக அமையவும், வேறு சில இனிய ஆச்சர்யங்களை உங்களுக்கு விழா நாளன்று வழங்கவும் மதுரை வலைப்பதிவர்களின் குழு சுறுசுறுப்பாகச் செயல்படத் தொடங்கி விட்டனர்.  இந்த வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவில் பங்கேற்கும் பதிவர்கள் அனைவரும் கீழுள்ள படிவத்தை நிரப்பி உங்களின் வருகையை உறுதிசெய்ய அன்புடன் வேண்டுகிறோம்...


படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள் 15.10.2014 ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலோ, மேலும் விவரங்கள் தேவைப்பட்டாலோ தொடர்புக்கு:- திண்டுக்கல் தனபாலன் - 9944345233 - dindiguldhanabalan@yahoo.com தமிழ்வாசி பிரகாஷ் -9080780981 - thaiprakash1@gmail.com

நூல் வெளியீடு : பதிவர்கள் தங்களின் நூல்களை இந்த மாபெரும் நிகழ்ச்சியில் வெளியிடலாம். அவ்வாறு நூல் வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 10.10.2014க்குள் விவரங்களை கீழ்கண்ட நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள். சீனா ஐயா (வலைச்சரம்)திண்டுக்கல் தனபாலன் - 9944345233 - dindiguldhanabalan@yahoo.com

அன்பளிப்பு : இந்தச் சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் மிக முக்கியமானது. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பதிவர்கள், திண்டுக்கல் தனபாலன் மற்றும் தமிழ்வாசி பிரகாஷ் அலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும். பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்துத் தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும்.

மேலும் விரிவான தகவல்கள் மற்றும் விபரங்கள் அடுத்தடுத்த பதிவுகளில் வெளியிடப்படும். பதிவுலக நண்பர்கள் அனைவரும் இந்த விபரங்கள் அனைத்தையும் தங்களது வலைப்பதிவில் எழுதி உங்கள் நட்பு வட்டத்திற்கும், அனைத்து பதிவர்களுக்கும் விஷயத்தை எடுத்துச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி. சந்திப்போம்..!

=================================================================

விழா நடைபெறும் இடத்தை நான் க்ளிக்கிய படம் இது. இந்த ஹால் விசாலமாகவும் நிறைய ஜன்னல்களுடனும் இருப்பதால் நல்ல காற்றோட்டம். தவிர, விழா நடக்கும் ஹாலைச் சுற்றி அனைத்துப் பதிவர்களும் யானையில் வந்தால்கூட கட்டுவதற்குத் தேவையான அளவு விசாலமான பார்க்கிங் வசதி இருக்கிறது. அதுவும் தவிர, நிழலில் நின்று பதிவர்கள் கலந்துரையாடி மகிழ போதிய இடமும் இருக்கிறது. ஆகவே... அனைவருக்கும் நிறைவைத் தரும் வண்ணம் இந்த ஆண்டின் நிகழ்வுகள் அமையும் என்பது திண்ணம்.

=================================================================

Monday, August 11, 2014

ராமலக்ஷ்மியின் ‘அடைமழை’

Posted by பால கணேஷ் Monday, August 11, 2014
முத்துச் சரம் நமக்குத் தொடுத்து அளிக்கும் ராமலக்ஷ்மி ராஜன் அவர்களைத் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை.  பத்திரிகைகளில் (தளத்தில்) பேனாவால் கவிதை எழுதுவார், தன் காமிராவினாலும் அதை எழுதுவார், கச்சிதமாய் சிறுகதைகளும் எழுதுவார், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு அழகாக மொழிபெயர்ப்பும் செய்வார். மொத்தத்தில் பொறாமை கொள்ளச் செய்கிற பன்முகப் படைப்பாளி. அவர் எழுதிய ‘அடைமழை’ என்கிற சிறுகதைத் தொகுப்பை சென்ற புத்தகக் கண்காட்சியில் வாங்கி, அடுத்து வந்த மாதத்தில் வாசித்து முடித்து விட்டேன். என்றாலும் அதைப் பற்றிப் பேச  இப்போதான் சந்தர்ப்பம் கிடைத்தது.

ராமலக்ஷ்மி  இயற்கை வர்ணனை, கதாபாத்திர வர்ணனை என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாது, நம்மை நேரடியாகக் கதைக்குள் இழுத்துச் சென்று விடுகிற எளிமையான எழுத்து நடை கைவரப் பெற்றிருக்கிறார். அவர்தம் கதை மாந்தர்களும் 90 சதம் அடித்தட்டு மக்களாகவே அமைந்து விடுவது இப்படியான எழுத்து நடைக்கு கூடுதல் வேகத்தை அளிக்கிறது. ‘அடைமழை’ தொகுப்பில் இடம் பெற்றுள்ள 13 கதைகளின் மையச்சரடாக அமைந்திருப்பது மனிதம்தான். சக மனிதர்களின் மீதான அக்கறை, சமூகத்தின் மீதான அக்கறை என்று நாம் கவனிக்க வேண்டிய, கவனிக்கத் தவறுகிற விஷயங்களின் மீது விரல் நீட்டுகின்றன இவரின் கதைகள். அவற்றைச் சில வரிகளில் பார்த்து விடலாம்....

முதல் சிறுகதை ‘வசந்தா’ குழந்தைத் தொழிலாளர்கள் எப்படி உருவாகிறார்கள். அதைப் பற்றிய விழிப்புணர்வு பரவி விட்டதாக நாம் நினைக்கும் இன்றையச் சூழலிலும் எவ்விதத்தில் அது நம்முடன் இருக்கிறது என்பதை அழகாகச் சொல்கிறது. இரண்டாவது கதையான ‘பொட்டலம்’ வசதிக் குறைவான பெற்றவர்கள் நல்ல கல்வியை விரும்பி பெரிய பள்ளியில் தங்கள் மகனைப் படிக்க வைப்பதால் அந்தச் சிறுவனுக்கு எழும் மனவியல் பிரச்னையையும் கூடவே ஆசிரியைகள் நடந்து கொள்ளும் விதத்தையும் கண்முன் படம் பிடிக்கிறது. மூன்றாவது கதை ‘வயலோடு உறவாடி’ விவசாய நிலங்களை மறந்து. துறந்து வாழும் நம்மை கையைப் பிடித்து அங்கே இழுத்துச் சென்று அதன் அருமையை மனதில் உணரச் செய்கிறது.

நான்காவது சிறுகதை ‘ஈரம்’ எனக்கு மிகப் பிடித்திருந்தது. கணவனின் விருப்பத்திற்காக வேலையை விட முடியாமல் குழந்தையை ‘க்ரச்’சில் விட்டுவிட்டுச் செல்லும் ஒரு பெண்ணின் குடும்ப, அலுவலகச் சூழல்கள் இவரின் எழுத்தில் ஒரு குறும்படமாய் மனதில் விரிகிறது. அந்தப் பெண்ணின் உணர்வுகள் படிப்பவரையும் தொற்றிக் கொள்கிறது. ஐந்தாவது சிறுகதை ‘அடையாளம்’ தன் பெயரை எவரும் விசாரிக்கக் கூட செய்யாமல் வாழும் ஒரு எளியவனின் மன உணர்வுகளைப் பிரதிபலிக்கிற சிறந்த சிறுகதை. ஆறாவது சிறுகதை ‘பயணம்’ கூட்டுத் தொழில் செய்யும் நண்பன் திட்டியதால் மன உளைச்சலுடன் ரயிலில் பயணிக்கும் ஒருவனுக்கு ஏற்படும் திடுக் அனுபவத்தை விளக்கி எதிர்பாராத முடிவினால் புன்னகைக்க வைக்கிறது. 

ஏழாவது சிறுகதை ‘ஜல்ஜல் எனும் சலங்கையொலி’ அவரது தளத்தில் படிக்கையிலேயே மனதில் தனியிடம் பிடித்த ஒன்று. படித்து முடிக்கையில் சுப்பையாத் தாத்தாவிடம் கதை கேட்க வேண்டுமென்ற ஏக்கம் என் மனதிலும் வந்தது. அவர் ஏன் அந்த ‘ஜல்ஜல் மாட்டுவண்டி’க் கதையை கடைசிவரை சொல்லவே இல்லை என்பதை நீங்கள் படித்துத் தெரிந்து கொண்டால்தான் சிறப்பு. எட்டாவது சிறுகதை ‘அடைமழை’யை நட்சத்திரக் கதை என்றே சொல்லலாம். தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் ஒருவன். போலீஸ்காரர் ஒருவரால் துரத்தப்பட்டு, அவமானமடைந்து வாழ்க்கையின் முன்னேற சபதம் செய்து போராடுகிறான். சற்றே வளர்ந்துவிட்ட நிலையில் நாணயத்தின் மற்றொரு பக்கத்தைப் பார்ப்பது போல அந்தப் போலீஸ்காரரின் கோணத்தில் அவர்கள் வாழ்வை அவன் பார்க்க நேரிடுகிறது. அங்கே மனிதம் மலர்கிறது.

ஒன்பதாவது சிறுகதை ‘சிரிப்பு’ உம்மணாமூஞ்சியான ஒருவனை சிரிக்கச் செய்வது எது என்பதை விவரித்து நம் உதடுகளிலும் புன்னகையை ஒட்டுகிறது. பத்தாவது சிறுகதை ‘பாசம்’ பிற்பட்டோருக்கான கோட்டாவில் ஸ்காலர்ஷிப்பில் மகனை பெரிய படிப்பு படிக்க அனுப்பிவிட்டு அவ்வப்போது அவன் கேட்கும் பணத்தை அனுப்ப அந்தப் பாசமுள்ள பெற்றோர் படும் பாட்டை ரத்தமும் சதையுமாக வர்ணிக்கிறது. இச்சிறுகதையின் முடிவு கண்களை வேர்க்கச் செய்து விடுகிற ஒன்று. பதினொன்றாவது சிறுகதை ‘உலகம் அழகானது’ எனக்கு மிகப் பிடித்தமான சிறுகதை. பார்க்கில் காலை நடைபயிலும் இரண்டு நண்பர்கள் அருகம்புல் விற்கும் வியாபாரிகளிடம், தன் மகனைப் படிக்க வைப்பதற்காக அதே தொழில் நடத்தும் ஒருவனுக்காகப் பரிந்து பேச, அவர்களுடன் தகராறு செய்ய நேரிடுகிறது. பின்னர் அந்த வியாபாரிகளின் மனமாற்றம் நேர்ந்து அந்த வியாபாரிக்கும் ஓரிடம் கிடைக்கிறது அங்கு. இந்தச் சிறுகதையின் உள்ளீடான மனிதநேயமும், பாஸிட்டிவ் அப்ரோச்சும் சேர்ந்து ராமலக்ஷ்மியின் மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக்கி விடுகிறது இதை.

பன்னிரண்டாவது சிறுகதை ‘இதுவும் கடந்து போகும்’ கூட பாஸிட்டிவ் அப்ரோச் கொண்ட கதைதான். ‘தானே’ புயலின் விளைவாக ஏற்பட்ட பாதிப்புகளின் பின்ணணில் துவங்கி உணர்வுகளைப் பேசும் கதை. படித்துத்தான் அதை நீங்கள் அனுபவிக்க முடியும். பதிமூன்றாவது சிறுகதை ‘அடைக்கோழி’ மருமகளின் விருப்பத்துக்கு மாறாக மாமியார் வளர்க்கும் கறுப்பி என்கிற கோழியையும் மாமியார்  உடல்நிலை மோசமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட பின் அந்த அடைக்கோழி என்னாகிறது என்பதையும் விவரிக்கிறது. இதுவும் நுட்பமான உணர்வுபூர்வமான கதைகளில் ஒன்றாகக் குறிப்பிட வேண்டியது.

நான் தமிழில் ‘சுதாரித்துக் கொண்டு’ என்று வார்த்தை இருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறேன். புத்தகம் பூராவிலும் ‘சுதாகரித்துக் கொண்டு’ என்றே வருகிறது. (சுதாரி - சரியா, சுதாகரி - சரியா?) பேச்சு வழக்கில் எது சரியான சொல் என்பது சரியாகத் தெரியவில்லை. யாராவது தமிழ் அறிஞர்களிடம் கேட்டுத்தான் தெளிவு பெற வேண்டும். பார்க்கலாம்...

மொத்தத்தில் ‘அடைமழை‘ தொகுப்பைப் படித்து முடிக்கையில் உங்களுக்கு ஒரு மனநிறைவும், கூடவே லேசாய் மனதில் கனமும் ஏற்படுவதும், சிந்தனைகள் கிளறப்படுவதும் நிச்சயம் நடக்கக் கூடிய விஷயங்கள். என்னைப் பொறுத்த வரையில் இதுபோன்ற நல்ல கதைகள் சிலவற்றை நாமும் எழுதியாகணும் என்று மனம் உறுதி கொண்டது. தொப்பிகள் இறக்கப்பட்டன (ஹாட்ஸ் ஆஃப்-க்கு தமிழ்.. ஹி... ஹி...) ராமலக்ஷ்மி மேடம்!

Thursday, August 7, 2014

மொறு மொறு மிக்ஸர் - 26

Posted by பால கணேஷ் Thursday, August 07, 2014
ண்பர்கள் தினத்தன்று சென்னைக்கு வந்திருந்த, விமர்சன உலகம் என்ற தளத்தில் எழுதிவரும் மாக்னேஷ்-ஐ நான், சீனு, ஸ்.பை. மூவரும் சந்திக்க நடேசன் பார்க் சென்றோம். பார்க் வாசலை நாங்கள் அடைந்த நேரம் சிவப்பாக ‘மொபைல் போலீஸ் ஸ்டேஷன்’ என்று பெயர் பொறித்த பெரிய வேன் ஒன்று பார்க் வாசலில் வந்து நின்றது. ‘மொபைல் கோர்ட்’ பாத்திருக்கிறோம்... இதென்ன மொபைல் போலீஸ் ஸ்டேஷன் என்கிற வியப்புடன் பார்த்தோம்.  “சரிதான்... ரோட்ல பிடிக்கறவங்களை ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு போறதுக்குக் கூட பொறுமையில்லாம வேன்லயே வெச்சு வெளுக்கப் போறாங்களா?”என்றேன் நான். பார்க்கினுள் சென்று சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்த சமயம்... அந்த போலீஸ் வேனிலிருந்து மெகாபோன் வைத்து பேசுவது மாதிரி சத்தம் கேட்க, பொதுஜனங்கள் நிறையப் பேர் வேனின் அருகில் சென்று நிற்பதையும் பார்க்க முடிந்தது. வாசலுக்கு வந்தோம்.


அட.. வேனின் பின்புறத்தில் ஒரு ஸ்கிரீன் கட்டி, ப்ரொஜக்டர் வைத்து படம் காட்டிக் கொண்டிருந்தார்கள். கொலை மற்றும் கொள்ளைக் கேஸ் ஹிஸ்டரிகள் மூன்றை குறும்படமாக எடுத்து, எப்படியெல்லாம் குற்றவாளிகளுக்கு நம் இயல்பான பேச்சின் மூலம் க்ளூ கொடுக்கிறோம், எப்படியெல்லாம் தனியே இருக்கும் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் விதமாக காட்டிக் கொண்டிருந்தார்கள். நடுநடுவே நடிகர் நாஸர் தலைகாட்டி அட்வைஸிக் கொண்டிருந்தார்.

டாகுமெண்ட் படம்தானே என்று ஏனோதானோ என்று எடுக்காமல் விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் பார்ப்பது போன்ற உணர்வு வரும்படி சிரத்தையாக எடுத்திருந்தார்கள் குறும்படத்தை. ஒரு பெண் போலீஸ் அதிகாரி படத்தைப் பற்றிய கருத்தை எழுதித் தரும்படி லெட்ஜர் ஒன்றை நீட்டினார். நானும் சீனுவும் எங்கள் கருத்தைப் பதிந்தோம். ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்று சொல்லப்படும் வாசகத்தை மெய்ப்பிக்கும் விதமாக மக்களுடன் நெருங்கி வந்து காவல்துறை செய்திருக்கும் இந்த ஏற்பாடு எங்களுக்கு ரொம்பவே பிடித்திருந்தது.

====================================================

“நான் இன்று கதை சொல்ல வரவில்லை. தமிழில் உள்ள சிறுகதை இலக்கியத்தைப் பற்றிச் சொல்லத்தான் வந்திருக்கிறேன். அதற்கு பூர்வ பீடிகையாக சிறுகதை என்றால் என்ன என்பதைச் சிறிது கவனித்துக் கொள்வோம். சிறுகதையின் முக்கிய அம்சம், அதில் ஒரேயொரு சம்பவம்தான் இருக்க வேண்டும். அந்தச் சம்பவத்தை வெறும் வளர்த்தல் இல்லாமல், வேறு சம்பந்தமற்ற விஷயங்களுக்குப் போகாமல் நேரே நெடுகச் சொல்லிக் கொண்டு போனால் அது நாலு வரியாக இருந்தாலும் சிறுகதை தான்; நாற்பது பக்கங்கள் வந்தாலும் சிறுகதைதான்....”

-ஆனந்த விகடன் 1939ம் ஆண்டு இதழில் இப்படிச் சொல்பவர் கல்கி அவர்கள்.

====================================================

ரம்ப தினங்களில் பக்கங்களை ப்ளாக் எடுத்து ஓட்டி புத்தகம் தயாராகும். பின்னாளில் ஈயத்தில் எழுத்துக்களைக் கோர்த்து கம்போஸ் செய்து அச்சாகின. அதன்பின் கம்ப்யூட்டரில் ப்ரிண்ட் அவுட் எடுத்து, அதை வெட்டி ஒட்டி பிரிண்டுக்கு அனுப்பும் நிலை. இப்யோதைய நவீன கம்ப்யூட்டர்களினால் வெட்டி ஒட்டுகிற வேலை இல்லாமல் மொத்தப் பக்கங்களும் கம்ப்யூட்டரிலேயே வடிவநைத்து ப்ரிண்டிங்கிற்கு அனுப்பிவிட முடிகிறது. இத்தனை முன்னேறிய நிலையில் புத்தகங்கள் தயாராகி நம்மை வந்தடைந்து கொண்டிருக்க இதன் அடுத்த பரிணாமம் ஒன்றும் தற்போது அரங்கேறியுள்ளது.

புத்தகத்தைத் தயாரித்து அதை அச்சிடாமல் ஈபுக் என்ற பெயரில் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போனில் படிக்கும் விதமாக எளிய கட்டணத்தில் வழங்குவது என்ற முறைதான் அது. பேப்பர் மிச்சம், அச்சிடும் செலவு மிச்சம் என்பதால் பெரிய பெரிய புத்தகமாக இருந்தாலும் குறைந்த விலையில் தரமுடியும் இந்த முறையில். அப்படி அரவிந்த் சச்சிதானந்தம் என்பவர் எழுதிய ‘தட்பம் தவிர்’ என்ற க்ரைம் நாவலை சமீபத்தில் வாங்கி (மொபைலிலேயே) படித்தேன். கொலை, விசாரணை, மர்மம், அடுத்த கொலை என்று விறுவிறுப்பாகக் கொண்டு சென்று ஏமாற்றாத முடிவுடன் அமைந்த அந்தக் கதையை ஒரே நாளில் படித்து முடித்து விட்டேன். இங்கே க்ளிக்கி நீங்களும் வாங்கிப் படிக்கலாம். ஹாட்ஸ் ஆஃப் டு மிஸ்டர் அரவிந்த் சச்சிதானந்தம். இதைப் படிச்சதும் நாமளும் இப்படி ஈ புத்தகம் தயாரிச்சு வெளியிட்டா என்னன்னு ஆசை வந்துடுச்சு. முதாலாவதா சீனு வைத்த காதல் கடிதப் போட்டிக்கு வந்த சுவாரஸ்ய கடிதங்களைத் தொகுத்து பளிச்சென்று கலர் ஈ புத்தகமாக வெளியிடலாம் என்று எனக்கு ஆசை. சீனுவும். அப்பாதுரை ஸாரும் பச்சைக்கொடி காட்டினால் தயாராகிடும்.

====================================================

சீனாவின் நான்ஜிங் நகரத்தில் இருக்கிறது அழுகாச்சி கடை. அங்கே போனால் நீங்கள் உங்கள் பிரச்னைகளை நினைத்து உங்கள் இஷ்டத்துக்கு கத்திக் கதறி அழுதுவிட்டு வரலாம். கையில் கிடைத்ததை தூக்கிப் போட்டு உடைத்து உங்கள் கோபத்தையும் வெளிப்படுத்தலாம். இதற்காக ஒரு மணி நேரத்துக்கு ஆறு டாலர் வசூலிக்கிறார்கள். அழுகாச்சி கடைகளைக் கண்டுபிடித்தவர் லுவோ ஜன் என்பவர். இப்போது இந்த ஐடியா சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. ஆங்காங்கே ஓரிரு அழுகாச்சி கடைகள் இதேபோல் வந்து விட்டன. லுவோ ஜன் அழுகாச்சி கடை ஆரம்பித்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் வர ஆரம்பித்தது. இப்போது நல்ல காசு. (அதனால அவர் மட்டும் அழுகாச்சி இல்லாம சிரிச்சுட்டிருப்பாரு போலருக்கு....)

-ப்ரஸன்னா எழுதிய ‘பணமே ஜெயம்’ நூலிலிருந்து...

Monday, August 4, 2014

அன்னப்பட்சி செய்த ஜாலம்..!!!

Posted by பால கணேஷ் Monday, August 04, 2014
ன்னால் சுலபமாக எழுத வராத ஒன்று என்பதாலேயே கவிதைகளையும் கவிஞர்களையும் பிடிக்குமெனக்கு. நேரடியாகப் பொருளுணர்த்தும் கவிதைகள், மறைபொருளாய் நம்மை உணரச் செய்யும் கவிதைகள், எதுவும் புரிபடாது – அந்தக் காரணத்தாலேயே – சிறந்த கவிதைகளோ என எண்ண வைப்பவை, உரைநடையை அடுத்தடுத்த வரிகளாக உடைத்துப் போடுகிற கவிதைகள் (என்று சொல்லப்படுபவை) என்று எல்லா எல்லா ரகங்களையும் படித்திருக்கிற படியால் நல்ல கவிதைகளின் தொகுப்பு கையில் கிடைக்கையில், படித்து முடிக்கையில் மனம் நிறைந்து விடும். அத்தகையதொரு நிறைவை சமீபத்தில் எனக்கு வழங்கியது திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின் ‘அன்ன பட்சி’ கவிதை நூல்.

நானறிந்த வரையில் தேனக்காவே ஒரு அன்னப்பட்சிதான். சந்திக்கிற எல்லா மனிதர்களிடமும் ஏதாவது நல்ல விஷயத்தைக் கண்டெடுத்து அதை மட்டுமே போற்றுகிற அன்னப்பட்சி அவர். நெற்றிப் பொட்டில்லாத பெண் மாதிரி ஒற்று இல்லாமல் அன்ன பட்சி என்று தலைப்பு வைத்திருந்தது எனக்கு கொஞ்சம் உறுத்தல்தான். அதுசரி…. இப்பல்லாம் எந்தப் பொண்ணுய்யா நெற்றிப் பொட்டு வைக்குது? புருவப் பொட்டும். மூக்குப் பொட்டும் தானே வைக்குது என்கிறீர்களா…? அதுவும் சரிதேங். பட்… இங்க பேச வந்த விஷயம் கவிதைகளைப் பற்றி.இந்தத் தொகுப்பில் இருக்கும் எல்லாக் கவிதைகளுமே எனக்குப் பிடித்திருந்தன. அவற்றில் ஒன்றிரண்டைப் பற்றி மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். (பின்ன... முழுசாக் குறிப்பிட்டா தேனக்காவோ, இல்லை அகநாழிகை வாசுதேவனோ என்னைக் ‘கவனிச்சுட’ மாட்டாங்களா என்ன...?) குழந்தைகள் பொம்மை வைத்து விளையாடுவதை ரசிக்காதவர் இருக்க முடியாது. கவிதை படைத்தால் குழந்தையின் பார்வையில் படைப்பது வழக்கம். இவர் பொம்மையின் பார்வையில் கவிதை தந்திருக்கிறார் இப்படி : கடைக்கு வந்தாய் | எல்லா பொம்மைகளிலும் | சொல்பேச்சு கேட்பது போலிருந்த | என்னைத்தான் விரும்பினாய் என்று துவங்கி கனவிலாவது விட்டு | விடுதலையாகும் எண்ணத்தோடு | குப்புறப்படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறாய் | தூங்கப் படைக்கப்படாத நான் | உன் விழிப்புக்காய்க் காத்திருக்கிறேன் | நீ எழுந்தவுடன் விளையாட என்று முடிக்கையில் நம் ரசனைப் புருவங்கள் உயரத்தான் செய்கின்றன.

இந்தத் தொகுப்பில் ‘கடவுளை நேசித்தல்’ என்றொரு கவிதை இருக்கிறது. அது எனக்கு மிகமிகப் பிடித்தமான கவிதை. சற்றே பெரியதாக இருப்பதால் இங்குக் குறிப்பிட முடியவில்லை. ஆனால் படித்தீர்களேயானால் ‘அட... நாமும் இப்படித்தானே’ என்று உங்களில் பெரும்பாலோர் சொல்வீர்கள். ‘சிகண்டியின் சாம்பலும் அமிர்தமும்’ என்கிற கவிதையின் கருப்பொருளும் சொல்லாடலும் தந்த பிரமிப்பு இன்னும் என்னுள்.

இந்நூலில் இயற்கையை ரசிக்கிறார், செல்லப் பிராணியைப் போற்றுகிறார், விவசாயிக்காய் வருந்துகிறார், குழந்தையுடன் கொஞ்சுகிறார், காதலுக்காய் ஏங்குகிறார், படிப்பவருடன் பேசுகிறார், அறிவுரைக்கிறார்... இப்படி எல்லாப் பரிமாணங்களிலும் கவிதைக் குழந்தைகளை நிரப்பியிருக்கிறார் நூலாசிரியர். ஹாட்ஸ் ஆஃப் தேனக்கா..!

தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தை ஊன்றிக் கவனித்து இயற்கையையும் மனிதர்களையும் நேசிப்பவர்கள் அழகிய கவிதைகளையும் நேசிக்கக் கூடியவர்களாகத்தான் நிச்சயம் இருப்பார்கள். நீங்கள் நல்ல ரசனையாளர். கவிதைகளை ரசிப்பவர் என்பதால் இந்த கவிதைத் தொகுப்பையும் நிச்சயம் ரசிப்பீர்கள். வாங்கி அல்லது (இரவல்) வாங்கி எவ்வாறேனும் படித்தீர்களெனில் நான் எழுதியவை எதுவும் மிகையில்லை என்பதை நிச்சயம் உணர்வீர்கள். புத்தகம் விலை என்ன, எங்க கிடைக்கும்னு கேக்கறவங்க உடனே இங்க க்ளிக்கி தேனக்காவோட தளத்துக்கு ஓடுங்கோ....!

பி.கு.: நான் படித்து, எழுதாமல், நீண்ட நாளாக வெயிட்டிங்கில் இருந்த நமது பதிவர்களின் புத்தகங்கள் அனைத்தையும் விமர்சனம்/அறிமுகம் செய்யவிருக்கிறேன் இந்த மாதத்தில். அடுத்தடுத்த பகிர்வுகளுக்கிடையில் அவைகளும் வரும்.

---------------------------------------------------------------------------------------------------
இப்போது வாசகர்கூடத்தில் : தமிழ்பேசுகிறார் ஹாரிபாட்டர்
---------------------------------------------------------------------------------------------------


  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube