Monday, October 31, 2011

மேலும் சில வர்ணனைகள்!

Posted by பால கணேஷ் Monday, October 31, 2011
மிழ் நாவல்களில் நான் படித்த, மின்னலெனப் பளிச்சிடும் ‘மின்னல் வரி’களை முன்பு உங்களுக்கு வழங்கியிருந்தேன். இப்போது மீண்டும் ஒருமுறை தமிழின் பிரபல நாவலாசிரியர்களின் வரிகள் உங்கள் முன் மின்னுகின்றன.

தமிழில் புதிய புதிய வார்த்தைகள் கண்டறியப்பட்டு தமிழ் மேன்மேலும் மேம்பட வேண்டும் என்றார் பாரதியார். அப்படி ‌மாறிவரும் தமிழின் புதிய வகைகளில் இது அறிவியல் தமிழ் :

நாம் எல்லோரும் மெல்ல எரிந்து கொண்டி ருக்கிறோம் ஒரு தீ போல. நம் உடலின் பெரும்பாலன மாலிக்யுல் கூட்டணுக்கள் பாதிக்கு மேல் பதினைந்து நாட்களில் புதுப்பிக்கப் படுகின்றன. நம் உடலின் கால்சியம் நான்கு வருடத்தில் பாதிக்கு மேல் புதுசாகிறது. 86 நாட்களில் நம் தசை நார்களிலும் மூளையிலும் உள்ள புரோட்டீன் வஸ்துக்கள் அனைத்தும் தீர்ந்து போகின்றன.

-‘கற்பனைக்கும் அப்பால்’ நூலில் சுஜாதா

Drizzling என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் மெலிதான மழையை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம். ஆனால் அதை இவர்போல அழகாக வர்ணிக்க நம்மால் இயலுமா? :

ச்சரியப்படும் விதத்தில் இருந்தது சென்னையின் வானம்! ஊட்டியோடும் ‌கொடைக்கானலோடும் போட்டிக்குத் தயாராகி விட்ட மாதிரி சாரல் மழை..! கள்ளிச் சொட்டு போல பருமனாகவும் இல்லாமல், பசுமடிப் பீறல் போல சன்னமாகவும் இல்லாமல், பார்பர் ஷாப்பில் ஷேவிங் முடித்த பிறகு ஸ்ப்ரே செய்யும் தினுசில் ஆனாலும் மகா மெல்லிசான ஒரு கொசுத் தூறல்!

-‘மனசு’ சிறுகதையில் இந்திரா செளந்தர்ராஜன்

பெண்களை வீட்டுக்குள்ளே பூட்டி வைத்திருந்த சமூகத்தில் அடிமைத் தளையிலிருந்து பெண்கள் வெளிவந்து விட்டாலும் இன்னும் முழுமையாக வெளிப்படவில்லையோ என்று எனக்கு சில சமயம் தோன்றுவதுண்டு. அதை இங்கே எழுத்தாளர் எப்படி அழகாகச் சொல்கிறார் பாருங்கள் :

பெண்களின் மீது கற்பென்றும், கெளரவமென்றும் போலியான பல அழுக்குப் போர்வைகள் போர்த்தப் பட்டிருக்கிறது. ‘ஜோதிகா சூப்பர்ல’ என்று ‌சொல்லும் கணவனிடம் ‘சூர்யாகூட அழகு தாங்க’ என்று தன் ரசனையைச் சொல்ல முடியாத அவஸ்தைகள்.

-‘மன ஊஞ்சல்’ நூலில் அனுராதா ரமணன்

யுத்தத்தை யாரும் விரும்புவதில்லை. அப்படி பெரும் யுத்தம் நிகழும் போது மன்னர் காலத்திலும் சரி, தற்காலத்திலும் சரி... தலைவர்களை விட முன்னால் சென்று போரிடும் சிப்பாய்க்குத்தான் எப்போதுமே பாதிப்பு அதிகம். தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான இவர் போர்க்காட்சியை இப்படி விவரிக்கிறார் :
 
ண்டைக்குழல் ஒலிக்கிறது. தூசு, புழுதி, தீக்கல், வாள்கள், துப்பாக்கிக் குண்டு சத்தம், கூச்சல். இன்னும் புழுதி, குழப்பம். கட்டளையிடுவோர் யாரும் இல்லை. படைத் தலைவர்கள் ஓடி ஒளிந்து விட்டார்கள். ஊர் பேர் அறியாச் சிப்பாய்தான் போவதறியாது நிற்கிறான்.

-‘ஒற்றன்’ நாவலில் அசோகமித்திரன்

‘வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வெப்பாங்க. உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வெப்பாங்க’ என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடலைக் கேட்டிருப்பீர்கள். அப்படி பயமுறுத்தப்பட்ட கதாநாயகன் மற்றும் அவன் நண்பர்களின் பார்வையில் பட்ட ‘பிசாசு’ எத்தகையது என்பதை எழுத்தாளர் இப்படி நயம்படச் சொல்கிறார் :

தோ நின்று கொண்டிருக்‌கிறது அந்தப் பிசாசு. தன்னுடைய கருங்கால்களைப் பரப்பிக் கொண்டும், நிழல் போன்ற கைகளைத் தலைக்கு மேலே கூப்பிக் கொண்டும் அது சற்று அசைந்தது. அவனுடைய கண்கள் விழித்தது விழித்தபடியே இருந்தன. பிறகே, பிசாசு வேறொன்றுமல்ல... தடித்த அடிமரங்களும் அவற்றின் உச்சாணிக் கொம்புகளும்தான் அப்படித் தோன்றின என்று அவனுக்குத் தெரிந்தது.

-‘சுவாமியும் சிநேகிதர்களும்’ நாவலில் ஆர்.கே.நாராயண்

அம்பு, ஊசி, தோட்டா இப்படி எந்தக் கூர்மையான பொருளும் எதிர்ப் படுவதை துளைத்துக் கொண்டு ஆபத்தை விளைவிப்பவை. தன் கதாநாயகன் எத்தகைய கூர்மையுள்ளவன் என்பதை தமிழின் குறிப்பிடத்தக்க நாவல்களில் ஒன்றின் ஆசிரியர் இவ்வளவு அழகாக வர்ணிக்கிறார் :
 
கூர்மைக்கு மற்றவைகளைத் துளைத்துக் கொண்டு போகும் ஆற்றல் உண்டு. மற்றவைகள் வழிவிடத் தயங்கினாலும் கூர்மை தன் வழியைத் தானே உண்டாக்கிக் கொண்டு முன்செல்லும். அரவிந்தன் நோக்கிலும் நினைப்பிலும் கூர்மையுள்ளவன். அவன் உள்ளத்துக்கும், பண்புகளுக்கும் மற்றவைகளையும் மற்றவர்களையும் உணரும் ஆற்றல் அதிகம்.

-‘குறிஞ்சி மலர்’ நாவலில் நா.பார்த்தசாரதி

ஏழைகள் செய்தால் குற்றமாகப் படும் எதுவும் பணக்காரர்கள் செய்தால் குற்றமாக கருதப்படாது. மேல் தட்டு வர்க்கத்தினரை இப்படி அழகாகப் படம் பிடித்துக் காட்ட எழுத்துலக ஜாம்பவானாகிய இவரால்தான் இயலும்:


ந்த ஜாதியை தனிப்பட அடையாளம் கண்டுகொள்ள முடியும். சிவப்பாக கொழு கொழுவென்று இருப்பார்கள் இவர்கள். பெண்கள் மெலிதான கருநீல ஸாரி அணிந்து சோரம் போவார்கள். நளினமான விரல்களின் இடையில் சிகரெட்டு குடிப்பார்கள். அவர்கள் குழந்தைகளுக்கு பிங்க்கி, ராகுல், பப்புலு என்று ஏதாவது பேர் இருக்கும். இத்தகைய மனிதர்கள்தான் பெங்களூர் ஜிம்கானாவில் மெம்பராக இருக்க முடியும்.

-‘ஆட்டக்காரன்’ சிறுகதையில் சுஜாதா

என்ன... மின்னிய வரிகளை ரசிச்சீங்களா... இங்க சொல்லிப் போடுங்க...

Saturday, October 29, 2011

முன்குறிப்பு : இந்த விஷயத்தை நகைச்சுவை(என்று நினைத்துக்கொண்டு)யாக எழுதியிருக்கிறேன். ஆகவே, வந்தாலும் வராவிட்டாலும் வரிகளுக்கு இடையில் அவ்வப்போது சிரித்துக் கொள்க!

ந்த வேளையில் என் மனைவி சரிதாவுக்கு அந்த யோசனை தோன்றியதோ தெரியவில்லை. (வேறென்ன... என் போதாத வேளையாகத்தான் இருக்க வேண்டும்.) அன்று மாலை நான் வீடு திரும்பியபோதே கையில் சூடான காபியுடனும், முகத்தில் புன்னகையுடனும் வரவேற்றாள்.

இப்படி புன்னகை + சூடான காபியுடன் அவள் வரவேற்றாள் என்றால் பின்னால் ஏதோ பெரிய சமாச்சாரம் இருக்கிறது என்பதை அனுபவம் உணர்த்தியதால் ‘அம்மா’வைப் பார்க்கும் அ.தி.மு.க. அமைச்சரைப் போல பயத்துடன் அவளை ஏறிட்டேன்.

‘‘என்னங்க... ஆயுதபூஜையை ஒட்டி சேர்ந்தாப்போல அஞ்சு நாளைக்கு உங்களுக்கு ஆபீசுக்கு லீவு வருது... அதை வீணாக்காம...’’

‘‘வீணாக்காம... எந்த ஊருக்குப் போகணும்கறே... சொல்லு, போயிடலாம்...’’

‘‘நான் காரை ஓட்டக் கத்துக்கணும்!’’

அவளுடன் கல்யாணமானதிலிருந்து அவள் தந்த ஏராளமான அதிர்ச்சிகளைச் சந்தித்து ஓரளவு ஷாக் ஃப்ரூப் ஆகியிருந்தேன் என்றாலும் எனக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

‘‘கீரையா... வாங்க மறந்துட்டேன். நாளைக்கு வாங்கிட்டு வந்துடறேன் சரிதா...’’

ஏதாவது அதிர்ச்சியான (எனக்கு) விஷயமாக இருந்தால் இப்படிப் பேசிவிட்டு அவள் கத்த ஆரம்பித்ததும் நகர்ந்து விடுவது என் வழக்கம். இப்போது அந்தப் பாச்சா பலிக்கவில்லை. குறுக்கே வந்து நின்றாள்.

‘‘ம்... நான் ஏதாவது கேட்டா உங்களுக்கு இப்படித்தான் காதே கேக்காது. இதுவே உங்க தங்கச்சி போன வருஷம் வந்தப்போ...’’

‘‘இப்ப எதுக்கு அவளை இழுக்கறே... போன வருஷம் இப்படித்தான் ‘ஒல்லியாகணும்னா டாக்டர் வாக்கிங் போகச் சொன்னார், ஸ்கூட்டர் ஓட்டக் கத்துண்டா பார்க்வரை ஓட்டிட்டுப் போய் நடப்பேன்’னு சொல்லி ஸ்கூட்டர் ஓட்டப் பழகிக்கிட்டே.  உன்னால பல பேர் ஆஸ்பத் திரிக்கு நடந்தாங்க, ரொம்ப ஒல்லியாச்சு என் பர்ஸ்! அவ்வளவுதான் பலன்... இப்ப நீ கார் ஓட்டக் கத்துக்கறது தேவையா..?’’

‘‘இதெல்லாம் மட்டும் மறக்காம ஞாபகம் வெச்சிருங்க. நான் ஏதாவது கேட்டா மட்டும்தான் இப்படிச் சாக்கு சொல்வீங்க. இதுவே உங்க அம்மா...’’

‘‘சரி, சரி... நாளைக்கே உனக்கு கார் ஓட்டக் கத்துத் தர்றேன்’’ என்றேன் அவசரமாக. இல்லாவிட்டால் என் பரம்பரையையே வம்புக்கு இழுப்பாள் என்பது அனுபவப் பாடம். ஹூம்... இப்படிக் கேட்பாள் என்று முன்பே தெரிந்திருந்தால் குறைந்த விலையில் கிடைக்கிறதே என்று செகண்ட் ஹாண்டில் கார் வாங்கியே இருக்க மாட்டேன்.

றுநாள் காரில் அவளை ஒரு பெரிய மைதானத்திற்கு அழைத்துச் சென்றேன். ‘‘எங்க போகணும்னாலும் உங்களையே தொந்தரவு பண்ண வேண்டியிருக்கு. நானே கத்துண்டா உங்களுக்கு கஷ்டம் இல்லாம இருக்குமே...’’ என்றாள் அக்கறையாக. ‘‘நீ கார் ஓட்டக் கத்துக்கறதே எனக்குக் கஷ்டம்தானே...’’ என்று மனதிற்குள் நினைத்தபடியே தலையாட்டி வைத்தேன்.

‘‘இது க்ளட்ச், இது கியர், இது பிரேக், இது ஆக்ஸிலரேட்டர்’’ என்று ஆரம்பித்து எல்லாவற்றையும் பற்றி நிதானமாக ஒரு லெக்சர் கொடுத்து முடித்தேன். ‘‘உங்களுக்கு மனசில இருக்கு. சொல்லிட்டிங்க. எனக்கு ஒரு மண்ணும் புரியலை. காரை ஸ்டார்ட் பண்ணி ஸ்டியரிங்கை என்கிட்ட கொடுங்க. அப்புறம் ஒவ்வொண்ணா தெரிஞ்சுக்கறேன்...’’ என்று எனக்கு போதிக்கத் துவங்கினாள்.

மெதுவாகச் செல்ல ஆரம்பித்த கார், வேட்பாளரை மிதித்த விஜயகாந்த் போல அவள் ஆக்ஸிலேட்டரை நன்கு மிதித்து விட்டிருக்க, திடீரென்று டேக் ஆஃப் ஆகிப் பறக்க ஆரம்பித்தது. என்ன அநியாயம்... சரிதா கார் ஓட்டுவதை அறியாமல் எதிரே ஒரு மரம் வந்து கொண்டிருந்தது. ‘‘ஐயோ சரிதா.. எதிர்ல மரம் வருது. ஸ்‌டியரிங்கை மிதி, பிரேக்கைத் திருப்பு’’ என்று உளறினேன். அலறினேன் என்றும் சொல்லலாம்.

நான் சொன்னது அவளுக்கு உரைத்தால்தானே? ‘‘ஆமாம். எங்க போனாலும் என்னைத் தான் ஒதுங்கச் சொல்வீங்க. அவங்களை மொதல்ல ஒதுங்கச் சொல்லுங்க...’’ என்று கோபமாக அவள் எகிற, வேறு வழியின்றி பிரின்சிபாலைக் கண்ட லெக்சரர் போல பிரேக்கின் மேல் ஏறி நின்றேன். மரத்திற்கு அரையே அரை இஞ்ச் அருகில் சென்று கார் நின்றது. ஆனால் சரிதா ‘காள் காள்’ என்று கத்தினாள். பிரேக்கின் மேல் இருந்த அவள் கால் மேல் என் காலை வைத்து மிதித்ததால் ‘கால் கால்’ என்றும் கத்தினாளோ என்னவோ...

டுத்த நாள் கியர் போடக் கற்றுக் கொடுத்தேன். முதல் கியரிலிருந்து இரண்டாம் கியருக்கு மாற்றும் போது கியர் நியூட்ரலில் விழுந்ததை அறியாமல் அவள் ஆக்ஸிலேட்டரை அழுத்தி மிதிக்க, கார் ஒரு அடியும் நகராமல் அவள் அம்மா (என் மாமியார்தான்) கத்துவதை விடவும் உரத்த டெஸிபலில் அலறியது. நான் பதறிப் போய் கியரைத் தள்ளிவிட, டேக் ஆஃப் ஆன விமானம் போல எகிறிப் பறந்தது கார். பீதியுடன் பிரேக்கை மிதித்து, காரை நிறுத்தி விட்டு இறங்கினாள்.

கல்யாணம் ஆன நாளிலிருந்து முதல் முறையாக அவள் முகத்தில் பயத்தைப் பார்த்ததால் எனக்கு அக்கணமே முத்தமிட்டுக் கொஞ்ச வேண்டும் போல இருந்தது. அவளை அல்ல... காரை!

ப்படி மெல்ல மெல்ல உபத்திரவப்படுத்தி (காரை அல்ல, என்னை...) ஒரு வழியாக கார் ஓட்டக் கற்றுக் கொண்டு விட்டாள். சில பல விபத்துக்களை ஏற்படுத்தி, காருக்கும் என் பேங்க் பேலன்சுக்கும் சேதாரத்தை ஏற்படுத்தியபின் இப்போது சற்று சுமாராகக் கார் ஓட்டுகிறாள்.

முதலில் மெதுவாக ஓட்டி, எல்லாருக்கும் வழி விட்டவள், இப்போது தன் சுபாவப்படி ‘‘நான் வேகமாகத்தான் போவேன். வேண்டுமென்றால் அவர்கள் வழிவிடட்டும்’’ என்று விரட்ட ஆரம்பித்து விட்டாள். ஆக, கார் ஓட்டுவதற்கு அவள் பழகியனாள் என்பதை விட, எங்கள் ஏரியாவாசிகள் அவள் காருக்குத் தகுந்த மாதிரி செல்லப் பழகி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்!

இத்துடன் விஷயம் முடிந்ததா என்றால் அதுதான் இல்லை. அன்று ஆபீசிலிருந்து திரும்பி காரை ஷெட்டில் விட்ட எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஷெட்டில் இருந்த என் ‘ஆக்டிவா’வைக் காணவில்லை. கோபமாக வீட்டிற்குள் நுழைந்த நான், பெல்ட்டைக் கழற்றி...

ஸ்டாண்டில் மாட்டிவிட்டு, சரிதாவிடம் கேட்டேன்: ‘‘என் ஸ்கூட்டர் எங்கே?’’

‘‘நீங்களும் நல்லா கார் ஓட்டறீங்க. நானும் கத்துக்கிட்டேன் இப்ப. இனிமே அது எதுக்குன்னுதான் வித்துட்டேன்...’’

‘‘என்னது..? வித்துட்டியா? எனக்கு ராசியான வண்டிடி. எல்லா நேரத்துலயும் கார்ல போக முடியாதுன்னுதானே அதை வெச்சிருந்தேன். யார்கிட்ட, எவ்வளவுக்கு வித்த?’’

‘‘எங்கண்ணன் வந்திருந்தான். அவன்கிட்டத்தான் குடுத்தேன். மாசாமாசம் இ.எம்.ஐ. மாதிரி பணம் குடுத்துடறேன்னான்....’’

‘‘சரி, விடு... (வேறென்ன சொல்லிவிட முடியும்?) எவ்வளவு பணம் தர்றேன்னார் மாசத்துக்கு?’’

‘‘நூறு ரூபாய்’’ என்றாள். நான் பொறுமை இழந்து, கடுங்கோபம் கொண்டதன் விளைவு... முன் மண்டை வீங்கி விட்டது! அவளுக்கல்ல... எனக்கு! சுவரில் மடேல் மடேலென்று முட்டிக் கொண்டால் பின் என்னவாகும்?

Thursday, October 27, 2011

போன தபா சினிமா விமர்சனம் எழுதச் சொல்லோ, நாலு பெரீவங்க ‘ஷோக்காக் கீதுப்பா’ன்னு சொல்லிக்கினாங்க. அத்தொட்டு, தெகிரியமா மறுக்கா ஒரு மலியாள சினிமா விமர்சனத்த இங்க குட்த்துருக்கேன்.

ஒருநாள் வரும் : மலையாளம்
சினிமா என்றால் பொதுவாக கதாநாயகன் சந்திக்கும் பிரச்சனைகள், அவன் குடும்பம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தித்தான் கதை செய்வார்கள். கதாநாயகன் புத்திசாலித்தனமாக செயல்பட்டு, வில்லனை வெற்றி கொள்வான். ஆனால் வில்லன் புத்தி சாதுர்யத்துடன் செயல்பட்டு தொடர்ந்து ஹீரோ முகத்தில் கரி பூசினால் எப்படி இருக்கும்?

‘ஒருநாள் வரும்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் அப்படித்தான் வில்லன் ஹீரோ வுக்குத் தண்ணி காட்டுகிறார். தவிர, வில்லனின் குடும்பம், அவன் பிரச்சனைகள் ஆகிய வைகளெல்லாம் அலசப்பட்டு இருப்பதால் வித்தியாசமாக அமைந்திருக்கிறது இப்படம். மோகன்லால், சமீரா ரெட்டி, சீனிவாசன் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மோகன்லால் மலையாளத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ. நகைச்சுவையாகவும், சீரியஸாகவும் (ஓவர் ஆக்டிங் இல்லாமல்) நடிக்கத் தெரிந்தவர். இந்தப் படத்தின் கதை, வசனத்தை வில்லனாய் நடித்திருக்கும் சீனிவாசன் எழுதியிருக்கிறார். ‘கத பறயும் போள்’ என்ற வெற்றி பெற்ற (தமிழில் ‘குசேலன்’ என்ற பெயரில் தோல்வி பெற்ற) படத்திற்குப் பின் இப்படத்திற்கு கதை எழுதியிருக்கிறார்.  சென்ற ஆண்டில் வெளியான ‘ஒரு நாள் வரும்’ படத்தை இப்போது தமிழில் டப் செய்து வெளியிட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாக தந்திப் பேப்பரில் விளம்பரம் பார்த்தேன். வந்தால் தவறவிடாமல் அவசியம் பாருங்கள்...

இனி, ‘ஒரு நாள் வரும்’ கதையின் சுருக்கம்:

சீனிவாசன் ஒரு டவுன் ப்ளானிங் ஆபீசர். தன் பணியில் நேர்மையாக இருப்பதாகக் காட்டிக் கொள்வார். ஆனாலும் டிரைவரைப் பயன்படுத்தி ஒவ்வொரு வேலைக்கும் ஒரு தொகையைக் கறந்து விடுவார். இவருக்கு லஞ்சம் தராமல் எந்த வேலையையும் சாதித்துக் கொள்ள முடியாது. இவரது குடும்பம் மனைவி, டாக்டருக்கு படிக்கும் கனவில் உள்ள, +2 படிக்கும் ஒரே மகள் ஆகியோர்.

 மோகன்லால் தன் ஒரே பெண் குழந்தையைக் கவனித்துக் கொண்டு தனியாக வாழ்‌ந்து வருகிறார். அவர் தன் மகளின் மீது உயிராக இருப்பதையும், மனைவி சமீரா ரெட்டியைப் பிரிந்து வாழ்வதையும் காட்சி களாக உணர்த்தப்படுகிறது.  லால் தன்னுடைய நிலத்தில் ஒரு வீடு கட்ட விரும்பி, வீட்டின் ப்ளானுடன் சீனிவா சனை அணுகுகிறார். ப்ளானில் குறை சொல்லி அனுப்பும் சீனிவாசன் வழக்கம் போல் டிரைவர் மூலம் லாலிடம் லஞ்சம் கேட்கிறார். லாலேட்டன் பணம் கொடுத்து காரியம் சாதிக்க விரும்பாமல் இன்ஜினியரைப் பார்த்து ப்ளானை திருத்திக் கொண்டு வர, அப்போதும் இன்னொரு குறை கண்டுபிடித்து துரத்துகிறார் சீனிவாசன். பணம் தராமல் காரியத்தை முடிக்க முடியாது என்பதை டிரைவர் மூலம் மீண்டும் அறிவுறுத்துகிறார்.

லாலின் மனைவி சமீரா ரெட்டி அவரைச் சந்தித்து, குழந்தையைத் தானே வளர்க்க விரும்புவதாகவும், தன்னிடம் ஒப்படைக்கும் படியும் கேட்கிறார். லால் மறுத்து, கோர்ட்டில் சந்திக்கலாம் என்று கோபமாகப் பேசி அவரை அனுப்புகிறார்.

இப்போது லால் ஒரு விஜிலன்ஸ் ஆபீசர் என்பது வெளிப்படுகிறது. அவர் பவுடர் தூவிய பணத்துடன் சீனிவாசனுக்கு லஞ்சம் கொடுக்க வருகிறார். தனியறையில் அவரிடம் பணம் தரும்போது மறைவிலிருந்து போலீஸ் வெளிப்பட்டு (தனக்கு லஞ்சம்தர லால் முற்படுகிறார் என்று சீனிவாசன் முந்திக் கொண்டு புகார் தந்ததால்) லாலைக் கைது செய்கிறது. லால், தான் ஒரு விஜிலன்ஸ் ஆபீசர் என்பதை நிரூபித்து வெளியே வந்தாலும் மாலை வரை சிறையில் இருக்க நேரிடுகிறது. அவரை சிறையில் சந்திக்கும் சீனிவாசன், ‘‘நீ விஜிலன்ஸ் ஆபீசர் என்பதை முன்பே அறிவேன். இது பெரிய (லஞ்ச) நெட்வொர்க். உன்னால் பிடிக்க முடியாது’’ என்று கொக்கரிக்க, ‘‘பிடித்துக் காட்டுகிறேன்’’ என்று சவால் விடுகிறார் லாலேட்டன்.

சீனிவாசனின் மகள் ப்ளஸ் டூவில் சுமாரான மார்க் பெற்றிருக்க, பெரிய தொகையை கேபிடல் ஃபீஸாகத் தந்தால்தான் மெடிக்கல் காலேஜில் சேர்க்க முடியும் என்ற நிலை ஏற்படுகிறது. ஷாப்பிங் மால் ஒன்றின் ப்ளானை அப்ரூவ் செய்வதன் மூலம் அந்தத் தொகையை அடைந்துவிடலாம் என கணக்கிட்டு அந்த பார்ட்டியிடம் (வழக்கம் போல்) டிரைவர் மூலம் பேரம் பேசகிறார் சீனிவாசன். அந்தப் பார்ட்டியிடம் லஞ்சத்தை தங்கக் காசுகளாக வாங்கி கையில் சூட்கேசுடன் வரும் சீனிவாசனை தன் படையுடன் சுற்றி வளைக்கிறார் லால். முகம் வியர்த்த சீனிவாசன் ஓடத் துவங்குகிறார். ஒரு துரத்தல், அங்கங்கே ஒளிதல் ஆகியவற்றின் பின்னர் காரில் ஏறிப் பறக்கும் சீனிவாசனை வீட்டுக்குள் செல்வதற்குமுன் லால் மடக்கி விடுகிறார். சீனிவாசனின் சூட்கேஸை வாங்கிப் பார்த்தால், உள்ளே மல்லிகைப் பூ இருக்கிறது. முகத்தில் கபடச் சிரிப்புடன் நிரபராதியாக நடித்து லாலின் இம்முறையும் முகத்தில் கரி பூசுகிறார் சீனிவாசன்.

லாலின் வக்கீல், கேஸில் தோற்று விட்டதையும், அவர் மகளை மனைவியிடம் ஒப்ப டைக்கத்தான் வேண்டும் என்ப தையும் லாலிடம் தெரிவிக் கிறார். சீனிவாசன் மறைத்து வைத்த தங்கக் காசுகளை பணமாக மாற்றி மகளுக்காகப் பணம் கட்ட குடும்பத்துடன் புறப்படுகிறார். விமான நிலை யத்தில் கஸ்டம்ஸ் உதவியுடன் அவரை மடக்கி, பணப் பெட்டியை சீல் வைத்து கைது செய்கிறார் லால். கோர்ட்டில் சீனிவாசனை நிறுத்தும் போது சீல் வைத்த பெட்டியைத் திறந்தால் அதில் பணத்துக்குப் பதில் சோப்புக் கட்டிகள் இருக்கின்றன. சீனிவாசன், லால் உட்பட அனைவரும் அதிர்கிறார்கள். நேர்மையாகச் செயல்பட முயன்றாலும் முடியாத ஆதங்கத்தை கோர்ட்டில் கொட்டிவிட்டுக் கோபமாகப் போகிறார் லாலேட்டன்.

சிறையிலிருக்கும் சீனிவாசனை வெளியே அழைத்து வரும் லால், அவரை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துப் போகிறார். மருத்துவப் படிப்பில் சேர முடியாத விரக்தியில் அவர் மகள் விஷம் குடித்து ஐ.சி.யு.வில் உயிருக்குப் போராடுவதும், தக்க சமயத்தில் லால்தான் அவளைக் காப்பாற்றியதும் சீனிவாசனுக்குத் தெரிகிறது. சீல்‌ வைத்த பெட்டியில் பணத்தை எடுது்துவிட்டு, சோப்புக் கட்டிகளை வைத்தது தானே என லால் சொல்ல, சீனிவாசன் வியக்கிறார். அவர் ஒருவரை மடக்குவது தன் நோக்கமல்ல, அவரை அப்ரூவராக்கி நெட்வொர்க் முழுவதையும் மடக்குவதே தன் நோக்கம் என லால் சொல்ல, சீனிவாசன் அப்ரூவராகி அவரிடம் எல்லாவற்றையும் சொல்கிறார். லாலின் தலைமையில் அந்த நெட்வொர்க் முழுமையும் கைது செய்யப்படுகிறது.

மகளை அழைத்துப் போக வரும் சமீராரெட்டி, அவள் லால் மீது எவ்வளவு பாசமாக இருக்கிறாள் என்பதை வழக்கு நடந்த காலத்தில் தான் அறிந்ததாகவும் மகளை லாலிடமிருந்து பிரித்துச் சென்று வாழ தனக்கு விருப்பமில்லை என்றும் சொல்கிறார். ‘‘வேறெப்படி வாழ விருப்பம்? மகளுடன் சேர்ந்தே வாழலாமே...’’ என்று லால் சொல்ல, சமீரா சிரிக்கிறார். இருவரும் தோளில் கை போட்டு மகளுடன் வீட்டினுள் செல்ல, படம் நிறைகிறது.

த்திரைப்படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று எம்.ஜி.ஸ்ரீகுமாரின் இசை. படத்திற்கு முக்கியத் தூணாக அமைந்து உயிரூட்டியிருக்கிறது இசை. மோகன்லாலில் அலட்டிக் கொள்ளாத பண்பட்ட நடிப்பு கதாநாயகனின் பாத்திரத்தை ஜொலிக்கச் செய்திருக்கிறது. எதிர்நாயகனாக நடித்திருக்கும் சீனிவாசனுக்கு நிறைய வேலை. சிறப்பாகச் செய்திருக்கிறார். சமீராரெட்டி வந்து போகிறார்.

கதையின் ஒரு பக்கம் லாலின் சவால், சீனிவாசன் அவரை முறியடித்து அசடு வழிய வைப்பது, மீண்டும் லாலின் முயற்சி, அவர் ஜெயிப்பது என்று செல்ல, மறுபக்கம் லாலின் மனைவி, மகள், சீனிவாசனின் குடும்பப் பாசம் என்று சென்டிமென்ட் காட்சிகளுக்கும் பஞ்சமில்லாமல் இரண்டையும் பாலன்ஸ் செய்து விறுவிறுப்பாக திரைக்கதை அமைப்பதில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

படம் நிறைவடையும் போது லால் தன் கடமையிலும் வென்று விடுகிறார், குடும்பத்திலும் அவருக்கு வெற்றி கிடைக்கிறது என்று பாஸிட்டிவ் அப்ரோச்சுடன் நிறைவாக முடித்ததில், படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறது. நீங்களும் படம் பார்த்து அதை உணருங்கள்...

Sunday, October 23, 2011

‌விக்ரம் நடிக்காத விக்ரம்!

Posted by பால கணேஷ் Sunday, October 23, 2011
ந்தப் பதிவைப் படிப்பவர்கள் அனைவருக்குமான முக்கிய அறிவிப்பு ஒன்று இருக்கிறது. அதைப் பதிவின் கடைசியில் உங்களுக்காக வெளியிட்டுள்ளேன். இப்போது நாம் பேசலாம்:

===================================================================

போன வாரம் சன் மியூசிக்கில் ‘என் ஜோடி மஞ்சக் குருவி’ பாடலை ஒளிபரப்பினார்கள். மதுரையில் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் பார்த்திருந்த ‘விக்ரம்’ படத்தை இப்போது மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு விட்டது. அலுவலகப் பணிகள் பிஸியாக இருந்ததால் அதை மறந்து விட்டேன்.

இரண்டு நாள் முன்பு நான் வழக்கமாக டிவிடிக்கள் வாங்கும் (பாரிஸ் கார்னரில் இருக்கும்) பாய் கடைக்கு டிவிடி வாங்கப் போயிருந்தேன். நான் செலக்ட் செய்து வைத்திருந்த சில ஆங்கிலப் படங்களின் பெயர்களைச் சொல்லி இருக்கிறதா என்று கேட்டேன். எடுத்துக் கொடுத்தார். அதன்பின்...

பாய்: என்ன சார், இந்த தடவை தமிழ்ப்படம் எதுவும் வேணாமா?

நான்: வேணும் பாய். விக்ரம் படம் கொடு.

பாய்: எந்தப் படம் சார்? சீக்கிரம் சொல்லுங்க. நிறைய கஸ்டமர் வெயிட்டிங்...

நான்: அதான் சொன்னேனேப்பா... விக்ரம் படம் கொடுன்னு.

பாய்: என்ன சார், அவர் நிறையப் படம் நடிச்சிருக்கார். எதன்னு கொடுக்கறது? படம் பேரச் சொல்லுங்க சார்...

நான்: ஐயோ பாய்! படம் பேருதான் பாய் ‘விக்ரம்’. கமல் கூட அதுல...

பாய்: அவ்வ்வ்வ்வ்வ்வ் (டிவிடியைக் கொடுத்து) புண்ணியமாப் போவும். கிளம்புங்க சார்...

எனக்குப் புரியவில்லை நண்பர்களே... நீங்களே சொல்லுங்கள்... பல்பு வாங்கியது நானா, இல்லை பாயா?
 
===================================================================

நான் தினமும் ஆபீசுக்குப் போகும் போதும், வரும் போதும் பஸ்சில் அந்தப் பெண்களைப் பார்ப்பதுண்டு. (பஸ்ஸில் ஏகப்பட்ட பேர் பயணிக்க, நீ பெண்களை ஏன்யா பார்க்கிறாய் என்று யாருங்க அங்க குரல் கொடுக்கறது... வயசுக் கோளாறுதான் ஐயா!) இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுக்கிடைப்பட்ட ஐந்து பெண்கள். அதில் இரண்டு பெண்கள் கலகலப்பாக சிரித்துப் பேசிக் கொண்டு, அருகருகில் அமர்ந்து கொண்டு, சாக்லேட், பிஸ்கட் பரிமாறிக் கொண்டு நகமும் சதையும் போல இருப்பார்கள். 

இப்போது நான்கைந்து தினங்களாகப் பார்த்தால்... நகமும், சதையும் தனித்தனியாக பஸ்சில் அமர்கின்றன. இவளுடன் ஒருத்தியும், அவளுடன் இரண்டு பேர்களுமாக இருக்கிறார்கள். ஒரு குரூப் முன்புறம் ஏறினால் மற்றொன்று பின்புறம் ஏறுகிறது. சின்ன புன்னகைப் பரிமாற்றம்கூட இல்லை. என் அலுவலகம் இருப்பது ஒரு காம்ப்ளக்சின் இரண்டாம் மாடியில், அவர்களது அலுவலகம் முதல் மாடியில். பஸ்சிலிருந்து இறங்கி ஆபீஸ் போகும் போது மட்டும் மற்றவர்களுக்காக எல்லாமும் சேர்ந்து போகின்றன.

அப்படி என்னதான் நடந்திருக்கும்? பல மாதங்களாக ஒட்டிப் பழகிய தோழிகளுக்குள் புன்னகைகூட இன்றி இப்படி முறைத்துக் கொள்ளும் அளவு பிரிவு வரக் காரணம் யாதாக இருக்கும்? பெண்களுடன் பழகியிராத காரணத்தினால் லேடீஸ் சைக்காலஜி எனக்குப் புரியவில்லை. உங்களில் யாருக்கேனும் புரிந்தால் விளக்குங்களேன்...


===================================================================

ரு மனிதனின் உடலில் இருபத்து நான்கு மணி நேரத்தில் நடக்கும் செயல்கள் என்னென்ன தெரியுமா? ‌சராசரியாக...

* ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 688 தடவை இதயம் துடிக்கிறது!

* ரத்தம் உடலில் பயணம் செய்யும் தூரம் 16 கோடியே 80 லட்சம் மைல்!

* 25 ஆயிரத்து 40 தடவை சுவாசிக்கிறீர்கள். சுவாசிக்கும் காற்றின் அளவு 4.36 கன அடி!

* உடலில் 750 நரம்புகள் இயக்கப்படுகிறது!

* 0.000046 அங்குலம் நகம் வளர்கிறது!

* 0.01714 அங்குலம் தலைமுடி வளர்கிறது!

* 70 லட்சம் மூளை செல்களுக்குப் பயிற்சி அளிக்கிறீர்கள்!

* 6 பவுண்டு கழிவு வெளியேறுகிறது!

ஒரு மருத்துவ இதழில் இந்தத் தகவலைப் படித்தேன். நாம் நடப்பது, பேசுவது, ஓடுவது, பாடுவது எல்லாச் செயல்களையும் செய்தாலும் இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் நம் உடலில் இவ்வளவா நடக்கிறது என்பது நினைக்கவே பிரமிப்பாக இருக்கிறதல்லவா... தானியங்கியாக இத்தனை செயல்கள் செய்யும் நம் உடல் இயந்திரத்தை நாம் சரியானபடி பராமரிக்கிறோமா?


===================================================================

ப்போது உங்களுக்கான அந்த முக்கிய அறிவிப்பு:
அடுத்த பதிவு தீபாவளிக்கு அடுத்த தினம்தான். ஆகவே...

                                                                   ||
                                                                   ||
                                                                   ||
                                                                   ||
                                                                   ||
                                                                   ||
                                                                   ||

                                                                   ||
                                                                   ||
                                                                   ||


Thursday, October 20, 2011

பழைய சோறு + ஊறுகாய் - 2

Posted by பால கணேஷ் Thursday, October 20, 2011
ரே விஷயத்தை அணுகும் முறை ஒவ்வொருவரிடமும் வேறுபட்டிருக்கும். நகைச்சுவை என்கிற விஷயத்தை எல்லோரும் ஒரே விதமாகத் தான் அணுக முடியும். தங்களின் நகைச்சுவை அனுபவங்களைச் சொல்லும்படி கேட்கப்பட்ட போது பழைய தமிழ் சினிமாவின் நகைச்சுவை மேதைகளான இந்த மூவரின் பார்வையும் எப்படி மாறுபட்டிருக்கிறது பாருங்களேன்...

===================================================================
ஜே.பி.சந்திரபாபு :

‘அன்னை’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. மாலை 6 மணி சுமாருக்கு அந்தப் படத்தில் புது மாதிரியான சிரிப்புக் காட்சி ஒன்றைச் சேர்க்கும் படி திடீரென்று என்னிடம் சொன்னார்கள். ‘‘சரி, பெருச்சாளிகளை எங்கிருந்தாவது உடனே பிடித்து வாருங்கள்’’ என்றேன். பன்னிரண்டு பெருச்சாளிகளைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள். அந்தப் படத்தில் பெருச்சாளிகள் என் உடம்பு முழுக்க ஓடுவதைப் பார்த்திருக்கலாம். அசல் பெருச்சாளிகள்தான் அவைகள். என் கன்னத்தில் கூட பெருச்சாளிகள் நிற்கும். அவற்றின் பயங்கர நாற்றம் ஒருபுறம் என்றால் அவைகள் என் உடம்பெங்கும் நகத்தால் கீறியது மறுபுறம் அவஸ்தை. இதற்காகப் பல ஊசிகள் போட்டுக் கொண்டேன்.

‘நாடோடி மன்னன்’ படத்தில் முட்டையைச் சாப்பிட்டுவிட்டு கோழிக்குஞ்சு என் வாயிலிருந்து வருவதாகக் காட்சி. உண்மையாகவே வாயில் அசல் கோழிக்குஞ்சு ஒன்றை வைத்திருந்தேன். அந்த ‘ஷாட்’ முடிய சுமார் மூன்று நிமிடம் ஆயிற்று. அதுவரை வாயில் இருந்த கோழிக் குஞ்சு நாக்கைப் பிறாண்டியது. வாயைக் கொத்தியது. மூச்சுக்கூட விட முடியாமல், கோழி்க்குஞ்சு அளித்த வேதனைகளைப் பொறுத்துக் கொண்டேன். வாயில் ரத்தம்கூட வந்து விட்டது.

ஆனால் இவற்றையெல்லாம் கஷ்டம் என்று நான் கருதவில்லை. நடிப்பு என்பது உயர்ந்த கலை. உண்மையான நடிகன் இதையெல்லாம் பொறுத்துத் தான் ஆக வேண்டும்.

(சந்திரபாபுவின் அந்த ‘அன்னை’ , ‘நாடோடி மன்னன்’ காட்சிகளை இப்போது பார்த்தாலும் குபீர் சிரிப்பு வருவதென்னவோ உண்மைதான்!)


===================================================================
 ஊறுகாய் :
 

===================================================================
   நாகேஷ் :

தாவது ஒரு குறிப்பிட்ட காட்சியில் ரசிகர்களைச் சிரிக்க வைக்க இப்படிக் கஷ்டப்பட்டேன் என்று நான் சொல்ல, அதைப் படிக்கும் ரசிகர், ‘‘பாவம், இவ்வளவு கஷ்டப்பட்டீர்களா? எனக்குத் தெரியாமல் போய் விட்டதே! தெரிந்திருந்தால் சிரித்திருப்பேனே...’’ என்று சொல்லி விட்டால் என்ன செய்வது?

நான் ஒரு படத்தில் ‘‘எனக்கு சோடா கிடையாதா?’’ என்று சாதாரணமாகக் கேட்டபோது ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இன்னொரு படத்தில் நான் கஷ்டப்பட்டு நடித்ததாக நினைத்தேன். ஆனால் யாருமே சிரிக்காமல் ‘கம்’மென்று இருந்து விட்டார்கள்.

(‘பொடி மட்டைகள் தும்மாது. பொடி போடுபவன்தான் தும்முவான்’ என்று தென்கச்சி சுவாமிநாதன் சொன்னார். அதுமாதிரி நாகேஷ் சிரிக்காமல் இதைச் சொன்னாலும் நமக்குத்தான் சிரி்ப்பு பொத்துக் கொண்டு வருகிறது.)
===================================================================
 ஊறுகாய் :


=================================================================== தங்கவேலு :

‘தேன் நிலவு’ படத்திற்காக காஷ்மீர் போயிருந்தபோது நான், ஜெமினி, வைஜயந்தி ஆகியோர் ஒரு ‘டோங்கா’ (குதிரை) வண்டியில் அமர்ந்து மலைச் சாலையில் போய்க் கொண்டிருந்தோம். திடீரென்று குதிரை மிரண்டு படுவேகத்தில் ஓட, வண்டி கழன்று பின்னாலேயே ஓடியது. மலைப்பாதையில் வேலி போட்டிருக்க, பின்புறம் ஓடிக் கொண்டே வந்த வண்டி வேலியை நெருங்கியது. வேலி முறிந்தால் வண்டி அப்படியே மலையிலிருந்து கீழே விழ வேண்டியதுதான். நான் உடனே சமயோசிதமாக வேலியை ஒரு உதை உதைத்தேன். அதிலிருந்த ஒரு கம்பு உடைந்து எகிற, மற்ற இரண்டு கம்புகளில் வண்டிச் சக்கரங்கள் அகப்பட்டுக் கொண்டு வண்டி நின்றதால் தெய்வாதீனமாகத் தப்பித்தோம்.

-இந்த மாதிரி சுவாரசியமான அனுபவங்கள் எதுவும் எனக்கு இல்லை. வேண்டுமானால் இதுபோல இன்னும் சுவாரசியமாகப் பொய் சொல்லவா?

(ஆஹா... நெசம்போலவே ஒரு விசயத்தைச் சொல்லி நம்மை இப்படி ஏமாத்திட்டாரே... ஆனாலும் டமாசாத்தான் இருக்கு!)

===================================================================
 ஊறுகாய் :
 
===================================================================
 
-பழைய ஆனந்த விகடன் இதழ்களிலிருந்து...

Monday, October 17, 2011

திரைப்பட விமர்சனங்கள் எழுதுவதில் நான் அவ்வளவு சமர்த்தன் அல்ல. வலைத்தளங்களில் பல வித்தகர்கள் தாங்கள் ரசித்த பலமொழிப் படங்களைப் பற்றி அழகாக விமர்சனம் எழுதுவதைப் படித்து ரசித்திருக்கிறேன். அவ்வளவே. நான் பார்த்த பிறமொழிப் படங்களில் எனக்குப் பிடித்த, என்னைப் பாதித்த சில படங்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லலாம் என்ற எண்ணத்தில் பிறந்தது சற்றே நீளமான இந்தப் பதிவு.

போர் நிகழும் சமயத்தில் பாழடைந்த ஒரு பங்களாவில் பதுங்கியிருக்கிறான் பியானோ இசைக் கலைஞன் விளாடெக்.  அங்கே ஒரு பியானோவைப் பார்த்ததும் அவன் விரல்கள் இசைக்கத் துடிக்கிறது. ஆனால் இசைக்க முடியாத சூழல்! சப்தம் கேட்டால் அருகிலுள்ள ஜெர்மன் ராணுவ ஆஸ்பத்திரியிலிருக்கும் ஜெர்மானிய வீரர்களிடம் மாட்டிக் கொள்வான். இந்தச் சூழலில் அவன் பியானோவில் விரல் படாமல் இசைத்து, மனதில் அந்த இசையை அனுபவித்து மகிழும் காட்சி இருக்கிறதே... படம் பார்த்து பல வருடங்கள் ஆனாலும் மனதை விட்டுப் போகாது.

'THE PIANIST' என்கிற இந்தப் படத்தை நான் பார்த்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் மனதில் நிற்கிறது. அதன் கதை முழுமையாக இங்கே...

1939ம் வருடம். போலந்திலுள்ள வார்ஸா நகரத்தின் ரேடியோ நிலையத்தில் பியானோ வாசித்துக் கொண்டிருக்கிறான் விளாடெக். ரேடியோ நிலையம் குண்டுச் சத்தத்தில் அதிர்கிறது. பியானோ வாசிப்பதை நிறுத்தச் சொல்லி, அதிகாரிகள் ஓடுகின்றனர். இவன் தொடர்ந்து வாசிக்கிறான். ஸ்டுடியோவின் ஜன்னலருகே ஒரு குண்டு வெடிக்கிறது. விளாடெக் நெற்றியில் ரத்தக் காயம் பட்டு வெளியே ஓடி வருகிறான். மக்கள் அனைவரும் கூக்குரலிட்டபடி சிதறி ஓடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது டொராடோ என்ற பெண் அவனிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறாள். அவன் நண்பனின் தங்கை என்றும், அவனின் பியானோ வாசிப்பு தனக்குப் பிடிக்குமென்றும் அந்த அவசர சூழலிலும் பேசும் அவளை அண்ணன் இழுத்துச் செல்கிறான்.

வீட்டுக்கு வருகிறான் விளாடெக். அப்பா, அம்மா, ஒரு அண்ணன், இரண்டு தங்கைகள் அடங்கிய குடும்பம் அவனுடையது. ஜெர்மானிய நாஜிப் படைகள் டிசம்பருக்குள் போலந்து மக்களை நகரின் கிழக்குப் பகுதிக்குச் செல்ல உத்தரவிட்டிருப்பதைக் கூறி எவ்வளவு பணத்தை தாங்கள் எடுத்துச் செல்ல முடியும் என்று அப்பா பேச, தங்கைகள் கேலி செய்து சிரிக்கின்றனர். விளாடெக்கின் பியானோவை விற்று பணம் சேர்க்கிறார்கள்.

டொராடோவை மீண்டும் சந்திக்கிறான் விளாடெக். அவளுக்கு செல்லோ என்ற வாத்தியத்தை நன்கு வாசிக்கத் தெரியும் என்பதை அறிந்து கொள்கிறான். பேசியபடி ஒரு காபி ஷாப்பிற்குச் செல்ல, அங்கே ‘ஜெர்மானியர்களுக்கு மட்டுமே அனுமதி’ என்ற போர்டைக் கண்டு கொதிக்கிறாள் அவள். அவன் சமாதானப்படுத்துகிறான். அவன் குடும்பம் மற்ற மக்களுடன் இடம் பெயர்கிறது. டொராடோ அவனைச் சந்தித்து, தான் வரவில்லை என்றும் அங்கேயே இருந்துவிடப் போவதாகவும் கூறுகிறாள். அவன் குடும்பத்துடன் நாட்டின் கிழக்குப் பகுதிக்கு வந்து சேர்கிறான். அங்கே ஒரு கிளப்பில் பியானோ வாசிப்பவனாக வேலையில் சேர்கிறான். சிறிது காலம் கழிகிறது.

யுத்தம் தீவிரமடைய, முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரையும் ஒரே சரக்கு ரயிலில் ஆடு மாடுகளைப் போல அடைத்து அழைத்துச் செல்கிறது ஜெர்மன் ராணுவம். மறுபடி சந்திக்கப் போவதில்லை என்பதை அறியாமலேயே தன் குடும்பத்தை அப்போது விளாடெக் பிரிகிறான். இளைஞர்கள் கேம்ப்களுக்கு அனுப்பப்பட்டு வேலை செய்யும்படி கட்டாயப் படுத்தப்படுகின்றனர். பியானோ இசைக் கலைஞன் விளாடெக் செங்கல் சுமப்பவனாக வேலை செய்ய நேர்கிறது. ஒருமுறை சாரத்தில் ஏறும் போது போர் விமானங்கள் வரும் சத்தத்தைக் கேட்டு செங்கற்களை நழுவவிட, ஜெர்மானிய அதிகாரி அவனை மயங்கும் வரை சாட்டையால் அடிக்கிறார்.

அவர்களி்ல் வேலை செய்ய இயலாத பலரை ஜெர்மானிய ராணுவம் இரக்கமின்றிக் கொல் வதைக் கண்டு குமுறுகின்றனர். வாரம் ஒரு முறை சென்று அவர்களுக்கு வேண்டிய ரொட்டி யும், உருளைக் கிழங்குகளும் வாங்கிவர ராணுவம் அனும திக்கிறது. அங்குள்ள இளைஞர் கள் அதனைப் பயன்படுத்தி, உருளைக்கிழங்கு மூட்டை யினுள் பதுக்கி எடுத்து வந்து ஆயுதங்கள் சேகரிக்கின்றனர். அவற்றை வாங்கச் செல்பவனிடம் மேற்குப் பகுதியில் வசிக்கும், தனக்குத் தெரிந்த இசைக்கலைஞரான ஒரு தோழியின் முகவரி தந்து பார்த்துவரச் சொல்கிறான். அவன் பார்த்து வந்து அவர்களிடம் பேசி விட்டதாகவும், அவனை தப்பிவரச் சொன்னதையும் சொல்கிறான்.

விளாடெக் தப்பிச் சென்று அவர்களைச் சந்திக்கிறான். அவர்கள் சொல்லும் ஒரு ஒளிவிடத்தில் மறைகிறான். ‘மிக அவசியமென்றால் இந்த முகவரிக்குச் செல்’ என்று ஒரு முகவரி அவனிடம் தரப்பட, அதை ஷுவில் மறைத்து வைத்துக் கொள்கிறான். அந்த இடத்தில் நீண்ட நாள் இருக்க முடியாத சூழல். ராணுவத்தின் குண்டு வீச்சால் அந்தக் கட்டிடம் பாதிக்கப்பட, அங்கிருந்து விலகி, தனக்கு கொடுக்கப்பட்ட முகவரிக்குச் செல்கிறான்.

அங்கு சென்றதும்தான் அது டொராடோவின் முகவரி என்பதையும், அவளுக்கு கல்யாணமாகி, அவள் கர்ப்பமாக இருப்பதையும் அறிகிறான். அவள் தன் கணவனிடம் அவனை அறிமுகப்படுத்தி அவனுக்கு அடைக்கலம் தரச் சொல்கிறாள். அவர் அவனை ஜெர்மானிய ராணுவ ஆஸ்பத்திரியின் அருகிலுள்ள ஒரு பில்டிங்கில் தலைமறைவாகத் தங்க வைக்கிறார்.

அங்கே சிலகாலம் மறைந்து வாழும் விளாடெக் இப்போது முகமெல்லாம் தாடி அடர்ந்து, இளைத்துப் போனவனாகக் காட்சி தருகிறான். ஆயுதங்கள் சேகரித்த போலந்து இளைஞர்கள் ராணுவத்தை எதிர்க்க, நிகழும் சண்டையில் அவன் மறைந்திருக்கும் பில்டிங் எரிகிறது. அங்கிருந்து விலகி தாக்குதலால் தற்போது பாழடைந்துவிட்ட ராணுவ ஆஸ்பத்திரியில் ஒளிகிறான். குடிக்க தண்ணீர்கூட கிடைக்காமல் அங்கிருக்கும் அழுக்குத் தண்ணீரைக் குடிக்கிறான்.

ஜெர்மானியப் படைகள் ஆஸ்பத்திரியையும் அழித்துவிட, வேறொரு பாழடைந்த கட்டிடத்தில் பரணில் ஒளிகிறான். அங்கே அவன் இருப்பதைக் கண்டுபிடிக்கும் ஒரு ஜெர்மானிய அதிகாரி, அவன் இசைக் கலைஞன் என்பதை அறிந்ததும் அவனைக் கொல்லாமல் தன் ராணுவக் கடமைகளுக்கு இடையே அவனுக்கு ரகசியமாக உணவு தந்து பராமரிக்கிறார். பின்னொரு நாளில் பிரிட்டன், பிரான்ஸ் படைகள் போரில் இறங்கி விட்டதாகவும் தங்கள் ஜெர்மன் ராணுவம் ஒரு வாரத்தில் வெளியேறி விடும் என்றும் சொல்லி, குளிரில் நடுங்கும் அவனுக்குத் தன் கோட்டைத் தந்து விடைபெறுகிறார்.

அவர் சொன்னபடியே படைகள் வெளியேறுவதைப் பார்க்கிறான். போலந்து தேசிய கீதம் இசைக்கப்படுவதையும், தன் நாட்டு மக்கள் விடுதலை பெற்றவர்களாய் வருவதையும் கண்டு மறைவிடத்திலிருந்து வரும் அவனை ஜெர்மானியன் என நினைத்து சுடுகின்றனர். ‘நான் போலந்துக்காரன்’ என்று அலறி, அவர்களிடம் உண்மையைச் சொல்கிறான். அவனைப் பராமரித்த ஜெர்மன் அதிகாரி இப்போது போலந்துப் படையினரிடம் கைதியாய் இருக்க, அவர் இவன் பெயரைச் சொல்லி, தகவல் அனுப்புகிறார். இவன் விரைந்து வந்தும் அவரைக் காப்பாற்ற இயலாமல் போகிறது.

விளாடெக் மீண்டும் வார்சா ரேடியோவில் இசைக் கலைஞனாக வேலைக்குச் சேர்கிறான். இது நிகழ்வது 1944ல் ‘அதன்பின் 2000ம் ஆண்டு வரை அவன் வாழ்ந்தான்’ என்று கார்டு திரையில் போடப்பட, படம் நிறைவடைகிறது.

போரின் கொடூரத்தை ஒரு பியானோக் கலைஞனின் வாழ்க்கையுடன் இணைத்து ஒரு கவிதை போல படத்தைக் கொண்டு போயிருக்கிறார் இயக்குனர் ரோமன் போலன்ஸ்கி.  Władysław Szpilman என்ற இசைக்கலைஞனின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களை அவரது சுயசரிதையிலிருந்து எடுத்து படமாக்கி யுள்ளனர். ரொனால்ட் ஹார்வுட்டின் கச்சிதமான திரைக்கதை படத்தின் விறுவிறுப்புக்குத் துணை நிற்கிறது. அழகான பின்னணி இசையும், கண்களில் ஒற்றிக் கொள்கிறார் போல துல்லியமான ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக நின்று மேலும் மெருகூட்டுகின்றன.

பல நாடுகளில் திரையிடப்பட்டு, பல விருதுகளை வென்ற, 143 நிமிடங்கள் ஓடும் இந்தத் திரைப்படம் அனைவரும் வாழ்நாளில் ஒரு முறை அவசியமாக, கட்டாயமாக பார்த்தே தீர வேண்டிய படம்.

இத்திரைப்படம் பெற்ற விருதுகள் :


* Academy Award for Best Actor – Adrien Brody
* Academy Award for Best Director – Roman Polanski
* Academy Award for Writing Adapted Screenplay – Ronald Harwood
* Palme d'Or, 2002 Cannes Film Festival[1]
* BAFTA Award for Best Film
* BAFTA Award for Best Direction – Roman Polanski
* César Award for Best Actor
* César Award for Best Director
* César Award for Best Film
* César Award for Best Music Written for a Film
* César Award for Best Cinematography
* César Award for Best Production Design
* César Award for Best Sound
* Goya Award for Best European Film

உங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதைத் தெரிவித்துச் சென்றால் மிக மகிழ்வேன்.

Friday, October 14, 2011

காந்தியின் பார்வையில் தீபாவளி!

Posted by பால கணேஷ் Friday, October 14, 2011
தீபாவளிப் பண்டிகை பற்றிய என் பதிவைப் படித்துவிட்டு, ‘பட்டாசு‌கள் வெடிக்காமல் இருக்கலாம் என்பது சரிதான். ஆனால் குழந்தைகள் ஏங்கிப் போய் விடுமே... அதற்கு என்ன செய்வது’ என்ற கேள்வியை நண்பர் திரு.சென்னைப் பித்தனும், திரு.அன்புமணியும் எழுப்பியிருந்தார்கள். இதைப் பற்றி நான் யோசித்த வேளையில் பழைய புத்தகம் ஒன்றில் இந்தத் துணுக்கைப் பார்க்க நேர்ந்தது. மகாத்மாவின் இந்தக் கருத்து அந்தக் கேள்விக்குப் பொருத்தமான பதிலாக அமைந்திருப்பது மிகவும் ஆச்சரியமான விஷயம்தான்! இதோ, மகாத்மா சொன்னது :

தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பது குழந்தைகளுக்குக் குதூகலத்தை ஏற்படுத்துகிறது என்பது எனக்கு ஒன்றும் தெரியாத விஷயமல்ல. ஆனால் இந்தப் பழக்கத்தையெல்லாம் முதலில் அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது நம்மைப் போன்ற பெரியவர்கள்தானே? ஆப்பிரிக்காவில் உள்ள சிறுவர்கள் பட்டாசு வெடிக்க விரும்புவதாக நான் கேள்விப்பட்டதில்லை.

கடைகளில் விற்கப்படும் தரக்குறை வான இனிப்புகளை விட ஆரோக் கியமான விளையாட்டுகளும், உபயோகமான ஓர் இடத்துக்கு பிக்னிக் செல்வதும் எவ்வளவோ நன்மை விளைவிக்கும். ஏழைச் சிறுவர்களாக இருந்தாலும் சரி, பணக்கார வீட்டு சிறுவர்களாக இருந்தாலும் சரி, இதுபோன்ற விடுமுறை நாட்களில் வீடுகளை வெள்ளையடித்துச் சுத்தப் படுத்தக் கற்றுக் கொடுக்க வேண்டும். உழைப்பின் கெளரவத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தீபாவளியன்று கரியாக்கப்படும் பணத்தில் ஒரு பங்கையாவது மிச்சப்படுத்தி காதி இயக்கத்துக்குக் கொடுங்கள். அதில் விருப்பம் இல்லாவிட்டால் வறுமையில் வாடும் ஏழைகளுக்குச் சேவை செய்யக் கூடிய ஏதாவது ஓர் இயக்கத்துக்கு அந்தப் பணத்தைக் கொடுத்து உதவுங்கள்.

-‘யங் இந்தியா’ இதழில் காந்திஜி

==================================================================

தீபாவளிப் பண்டிகை மிக நெருக்கத்தில் இருக்க, தி.நகரில்... குறிப்பாக ரங்கநாதன் தெருவில் நெரிசல் மிக அதிகமாக இருக்கிறது. கன்வேயர் பெல்ட்டில் நகர்வது போல் மனித கன்வேயர் பெல்ட்டாகத்தான் நகர முடிகிறது. அதிலும் அந்தத் தெருவை முழுமையாகப் பயன்படுத்த முடியாதபடி ரோட்டின் நடுவில் பல இடங்களில் பெரிய பள்ளங்கள். இவை நானறிந்து பல மாத காலமாக சரிசெய்யப் படாமல்தான் இருக்கின்றன. இத்தனைக்கும் பண்டிகைக் காலம் இல்லாதபோதுகூட நெரிசலாக இருக்கும் தெரு அது.

இது போதாதென்று தெருவிலுள்ள ஒவ்வொரு கடை எதிரிலும் ஐஸ்க்ரீமிலிருந்து, சில்லி பரோட்டா வரை எல்லாவற்றையும் சகாய(?) விலையில் விற்கப்படுகிறது. நம் மக்களுக்கு இப்படியான பொருட்கள் விற்கும் போது பக்கத்தில் குப்பைத் தொட்டி வைக்க வேண்டும் என்ற அடிப்படை விஷயம் வியாபாரிகளுக்கும், சாப்பிடுபவர்களுக்கு பேப்பர் கப்களையும், அட்டை பிளேட்களையும் குப்பைத் தொட்டியைத் தேடி அதில்தான் போட வேண்டும் என்ற நல்ல பழக்கமும். கற்பிக்கப்படவில்லை. விளைவாக, தெருவெங்கும் குப்பைமயம். தெருவைக் கடக்கும் வரையில் ‌சங்ககால மகளிர் போல தலையைக் குனிந்தபடியும் அங்கங்கே, ஹை ஜம்ப், லாங் ஜம்ப் செய்தும் போக வேண்டியிருக்கிறது. (ஸ்கூல் டைமில் ஸ்போர்ட்ஸ் கிளாசுக்கு டிமிக்கி கொடுத்ததற்கு தண்டனை) இத்தனை இடைஞ்சல்களிலும் நாம் பர்ச்சேஸ் செய்த பொருட்களையும், செல்போன் இத்யாதிகளையும் பறிகொடுத்து விடாமல் செல்ல வேண்டிய அவசியம் வேறு என்று தெருவைக் கடப்பதற்குள் விழிபிதுங்கி விடுகிறது. அந்தப் பகுதியில் ஷாப்பிங் செல்லும் ஐடியா வைத்திருப்பவர்கள்... உஷார்!

இந்த நேரத்தில், ‘‘ரங்கநாதன் சாலையில் ஓர் உண்டியல் வைத்து, அந்த சாலையைக் கடப்பவர்கள் எல்லோரும் ஒரு ரூபாய் போட்டாலும்கூட போதும். தங்கத்திலேயே அந்த ரோட்டைப் போட்டு விடலாம்...’’ என்று எழுத்தாளர் பா.ராகவன் தன் பதிவில் எழுதியிருந்ததைப் படித்தது நினைவுக்கு வந்தது.

==================================================================

மிழ் மொழியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல வார்த்தைகள் புதிதாய் சேர்ந்து கொண்டு விடுகின்றன. ‘சும்மா’ என்கிற வார்த்தை எப்படி, எப்போது தமிழில் சேர்ந்திருக்கும் என்பது தெரியவில்லை. சும்மா என்ற வார்த்தையை சும்மாச் சும்மா உபயோகிக்கிறோம். ‘சும்மா உன்னைப் பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்...’, ‘சும்மா சொல்லக் கூடாது.’, ‘சும்மா எதையாவது சொல்லாதடா. அவன் அப்படிச் செய்யற ஆள் இல்ல...’, ‘சும்மாச் சும்மா என்னையே குத்தம் சொல்லிட்டிருக்காதீங்க...’ என்றெல்லாம் அனைவராலும் சரமாரியாக பேசப்படும் வார்த்தையாக இது இருக்கிறது.

நான் பார்த்த ஒரு பழைய திரைப்படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி, ‘‘சும்மா சொல்லப் படாது...’’ என்று அவர் பாணியில் நீட்டி முழக்கிக் கூற, அருகிலிருக்கும் நாகேஷ் கையமர்த்தி விட்டு, தன் பையிலிருந்து பத்து ரூபாய் எடுத்துத் தந்து விட்டு, ‘இப்பப் பேசு’ என்கிற மாதிரி கையசைப்பார். ஒரு வார்த்தையும் பேசாமல் சிரிக்க வைக்க முடியும் என்றால்... அதுதான் நாகேஷ்! ‘சும்மா’ என்ற வார்த்தையைப் பற்றி சும்மா யோசித்தபோது இது நினைவுக்கு வந்தது. அது இருக்கட்டும்... ‘சும்மா’ எப்படி புழக்கத்துக்கு வந்தது என்பதை யாருக்காவது தெரிந்தால் ‘சும்மா’ கரடி விடாமல் ‌எனக்குச் சொல்லுங்களேன்... (தேனக்கா, நீங்க கோவிச்சுக்காதீங்க... நேத்து ராத்திரி ‘சும்மா’ உக்காந்து என்ன மேட்டர்லாம் எழுதலாம்னு யோசிச்சப்ப இது தோணிச்சு. எழுதிட்டேன்.)

==================================================================

பைனல் டச் :
ஸ்மைல் ப்ளீஸ் சார்..!

Wednesday, October 12, 2011

அழகன் அருகிருக்கும் பட்டிணம்!

Posted by பால கணேஷ் Wednesday, October 12, 2011
லகிலுள்ள நகரங்களில் எந்த ஒரு நகரத்திற்கும் இல்லாத சிறப்பு மதுரை என்று இன்று அழைக்கப்படுகிற ஆலவாய் நகருக்கு உண்டு. மற்ற நகரங்கள் எல்லாம் காலத்தால் உதயமானவை. முதலில் சிற்றூராக இருந்து, பின் பேரூர் ஆகி, அதன்பின் நகரமானவை. ஆனால் மதுரை நகரம் எடுத்த எடுப்பிலேயே நான்கு மாட வீதிகள், நான்கு ஆடி வீதிகள், நான்கு சித்திரை வீதிகள் என்று தாமரை மலரின் இதழ் அடுக்கு போல திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு நகரம். அது மட்டுமல்ல... இந்த நகரை முதலில் உருவாக்கியவன் இந்திரன். அவனே மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தை வடிவமைத்தவனும்கூட. இந்திரன் உருவாக்கிய நகரத்தை ஈசன் மகிழ்ந்து தன் சிரசில் சடைக்குள்ளிருந்து மதுரமாகிய அமுதத் துளிகளை எடுத்து புனிதப் படுத்தினான். மதுரத் துளிகள் பட்டுப் புனிதமடைந்த மண் என்பதால் மதுரை என்று பெயர் பெற்றது.
சிவன் சடையின் மதுரம் பட்டதால் மதுரை என்றான நகருக்கு ஆலவாய் நகர், கூடல் நகர், நான்மாடக் கூடல், அழகன் அருகிருக்கும் பட்டினம், சுந்தரபுரி என்றெல்லாம் பத்துப் பெயர்கள் உண்டு. உலகில் எந்த ஒரு நகருக்கும் இப்படி ஒன்றுக்கு பத்துப் பெயர் வழக்கில் இருந்ததில்லை. மதுரை நகரம் ஒன்றில்தான் நதி, கடல், குளம், கிணறு, ஊற்று என்கிற ஐவகை புண்ணியப் பெருக்குக்கும் இடம் அமைந்தது. நதிக்கு வைகை, கடலுக்கு ஏழுகடல், குளத்துக்கு பொற்றாமரை, கிணற்றுக்கு கோயிலில் பைரவர் சன்னிதி முன் அமைந்த கிணறு, ஊற்றுக்கு அழகர்மலை நூபுர கங்கை என்று ஐவகை தீர்த்தச் சிறப்பும் மதுரையில் மட்டுமே உண்டு!
சொக்கநாதப் பெருமானாகிய இறைவன் எப்படித் தன் உட‌லில் சரிபாதியை சக்திக்குத் தந்தானோ அதேபோல மதுரையையே ஆளும் உரிமையையும் தந்திருக்கிறான். இந்த நகரை மீனாட்சி ஆளும் விதமும் அலாதியானது. மற்ற எல்லா ஊர்களிலும் அம்பிகை சொரூபம் அருள்வது போன்ற கரத்துடன்தான் காட்சி தரும். அன்னை மீனாட்சி மட்டும் வலக்கையில் மலர்ச் செண்டும், இடக் கையில் கிளியும் அமர்ந்திருக்க புன்னகை பூத்தபடி காட்சி தருகிறாள். இதன் பின்னணி... அன்னை மீனாட்சி இங்கே கண்களாலேயே ஆட்சி செய்கிறாள் என்பதுதான் ஆச்சரியமான விஷயம்! அது மட்டுமல்ல... அன்னையின் கையிலிருக்கும் கிளியின் பின்னாலும் நாம் அறிந்து பரவசப்படத்தக்க பல ஆச்சரியத் தகவல்கள் நிறைந்துள்ளன. அது...

 அன்னையின் கையில் பஞ்சவர்ணக்கிளி அமர்ந்திருக்கிறது. கிளி ஒரு பஞ்சபூத வடிவம். நீலம், பச்சை, சிவப்பு, வெள்ளை, மஞ்சள் என்ற நிறங்களைக் கொண்டது பஞ்சவர்ணக் கிளி. வானத்தைக் குறிப்பது நீலம், பூமியைக் குறிப்பது பச்சை, நெருப்பைக் குறிப்பது சிவப்பு, நீரினைக் குறிப்பது வெண்மையாகிய ஸ்படிக நிறம், காற்றைக் குறிப்பது மஞ்சள் வண்ணம். இப்படி பஞ்ச பூதங்களும் அன்னையின் கைகளில் அடங்கியிருக்கிறது என்பதே உள்ளடக்கமான உண்மை. கிளியை அஞ்சுகம் என்பார்கள். அதாவது ஐந்து பூதங்களின் அகம் எனலாம். அதைத் தன் வசம் பிடித்திருக்கிறாள் அன்னை. அதேசமயம் நீரில் திரியும் மீனானது எப்படி உறக்கமில்லாமலும் கண்களாலேயே தன் குஞ்சுகளை அரவணைத்தும் வளர்க்கிறதோ அதுபோல பார்வையாலேயே அனைவரையும் ரட்சிப்பவள் மதுரை மீனாட்சி என்பது உட்பொருள்!
இந்த உலகில் இறைவன் நேரில் தோன்றிய இடங்கள் வெகு சிலவே. அதிலும் ஒரு முறைக்கு பலமுறை தோன்றிய இடமும், பெரும் திருவிளை யாடல்கள் புரிந்ததும் மதுரை யம்பதியில் மட்டும்தான்.  மீனாட்சியம்மன் ஆலயத்தில் உள்ள பொற்றாமரைக் குளமும் ஒரு அதிசயம்தான். இதில் குளித்திராத புலவர்களே இல்லை. பரணர், பாணர், கபிலர் என்று புலவர்கள் தொடங்கி, கெளதமர், பிருங்கி, ஜனகர் என்று முனிவர்கள் வரை பலரும் நீராடிய திருக்குளம் அது. அது மட்டுமல்ல.. உலகம் கொண்டாடும் திருக்குறளை உலகுக்கு அடையாளம் காட்டியது அதுதான். பல உலக இலக்கியங்களை பொற்றாமரைக் குளத்தில் இருந்த சங்கப்பலகைதான் காத்து ரட்சித்தது.

ஆறு, குளம், விருட்சம், ஸ்தலம், அருவி என்று ஐந்தும் ஒரு ஊரில் அமைவது அபூர்வமானதாகும். எல்லா ஊர்களிலும் இதில் ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது. இந்த ஐந்தும் அமையப் பெற்றது மதுரையில் மட்டும்தான். வைகை ஆறு, கடம்ப விருட்சம், பொற்றாமரைக் குளம், மீனாட்சி சன்னதி, அழகர்கோயில் மலையில் ஆகாயகங்கை அருவி என்று ஐந்தும் மதுரையில் மட்டுமே இருப்பதால்தான் காசியில் இறக்க முக்தி, திருவண்ணாமலையை நினைக்க முக்தி, திருவாரூரில் தரிசிக்க முக்தி, சிதம்பரத்தில் பிறகக முக்தி, மதுரையில் வசிக்க முக்தி என்றனர். ஆம்... மதுரையில் பிறந்து மதுரையிலேயே இறப்பவர்களுக்கு வீடுபேறு அடைவது மிகவும் சுலபம்!

மதுரை சைவம், வைணவம், சாக்தம் (சக்தி வழிபாடு), கெளமாரம் (முருக வழிபாடு), காணாபத்யம் (கணபதி வழிபாடு), செளரம் (சூரிய வழிபாடு) ஆகிய ஆறு வழி முறைகளும் செழிப்பாக உள்ள ஒரு ஊராகும். வைணவச் சிறப்புக்கு பல்லாண்டு பாடுவதை உதாரணமாகக் கூறுவார்கள். அந்தப் பல்லாண்டு பாடப்பட்ட போது திருமால் கருடன் மீது அமர்ந்து வந்து சேவை சதித்ததாகக் கூறப்படுவது மதுரையில்தான். அறுபத்து நான்கு திருவிளையாடல்களின் போது அந்தப் பரமசிவன் மதுரை வீதியில் நடந்து திரிந்திருக்கிறான். அன்னை மீனாட்சியோ அரசியாக விளங்கி மதுரையை ஆட்சியே செய்து வருகிறாள். முருகவேளோ திருப்பரங்குன்றத்தில்தான் மணம் முடித்தான். மீனாட்சி ஆலயத்திலேயே பெரிய திருவுருவம் முக்குருணிப் பிள்ளையார்தான். சூரியனால்தான் பொற்றாமரைக் குளத்தில் தாமரை மலர்கள் மலர்ந்து பூஜைக்குப் பயன்பட்டது.

இப்படி ஆறு வழிகளும் சீருடன் இருக்கும் ஒரு ஊராக உலகில் வேறு எந்த ஊரையும் கூற முடியாது. ஒன்றிருந்தால் ஒன்றிருக்காது. ஆனால் மதுரை அதன் பெயருக்கேற்றாற் போல மதுரமான, பரிபூரணமான ஒரு நகரம்.

-இப்போது எதற்காக மதுரையைப் பற்றி இப்படிப் புராணம் படிக்கிறேன் என்றால்... மதுரைக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. நான் பிறந்த, வளர்ந்த ஊர் மதுரைதான் என்பதே அது. ஹி... ஹி...

-மதுரையைப் பற்றிய இந்த அரிய தகவல்கள் முழுவதும் என் சரக்கல்ல. இதில் பெரும்பாலானவை எங்க ஊர்க்காரரும், என் இனிய நண்பருமான எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் வழங்கியது. அவருக்கு என் இதயம் நிறைந்த நன்றி!

Monday, October 10, 2011

வந்தாச்சு தீபாவளி!

Posted by பால கணேஷ் Monday, October 10, 2011
தீபாவளிப் பண்டிகை மிக அண்மையில் இருக்கிறது. புதிய உடைகளுக்குச் செலவிட்டும், வருடம்தோறும் விலை ஏறும் பட்டாசு‌களை குழந்தைகளுக்கு வாங்கித் தந்தும் பட்ஜெட் எகிறும் மாதம் இது. அதைப் பற்றிப் பேசுவதற்கு முன், ஒரு ஐந்து பாராக்களில் சம்பிரதாயமாக தீபாவளியைப் பற்றி ஒரு பார்வை பார்த்து விடலாம்:

தீபாவளிப் பண்டிகை இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது. தீபம் என்பது ஒளி தருவது. ஆவளி என்பது வரிசை. வரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கும் பண்டிகையே தீபாவளிப் பண்டிகை. ஒவ்வொருவரும் தம் மனதில் உள்ள இருட்டுகளை எரித்துவிட வேண்டும் என்பது உட்பொருள்.

இந்துக்கள் தீபாவளி கொண்டாடு வதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. நரகாசுரன் என்ற அசுரனை கிருஷ்ணர் அழித் ததைக் கொண்டாடுவதே தீபாவளி என்றும், ராமர் வனவாசம் முடிந்து மீண்டும் நாடு திரும்பிய நாளே தீபாவளி என்றும் சொல்லப்படுகிறது. ஸ்கந்த புராணம், சக்தியின் கேதாரகெளரி விரதம் இந்நாளில் முடிவடைந்து சிவன் அர்த்தநாரீஸ் வரரான தினம் என்கிறது. சீக்கியர்கள் தங்கக் கோயில் கட்டுமானப் பணிகள் துவங்கிய தினமான இத்தினத்தைக் கொண்டாடுகின்றனர். சமணர்கள் மகாவீரர் மகாநிர்வாணம் அடைந்த தினமாக இத்தினத்தைக் கொண்டாடுகின்றனர். ஆக, இந்தியா முழுவதும் பரவலாக வேறுபாடின்றி கொண்டாடப்படும் ஒரே பண்டிகை தீபாவளி.

தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய்க் குளியல் செய்து, புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுவது வழக்கம். அன்றைய தினம் எல்லா இடங்களிலும் தண்ணீரில் கங்கை வியாபித்து இருப்பதாக நம்பப்படுவதால் ‘கங்கா ஸ்நானம் ஆச்சா?’ என்று கேட்பது வழக்கமாக இருக்கிறது.

அஸாமில் மகாலட்சுமி பூஜை செய்து தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். இந்நாளில் புதுக் கணக்கு எழுதியும், புதிய தொழில் தொடங்கும் நாளாகவும் கருதுகின்றனர். ஹிமாசலப் பிரதேசத்தில் பலவித மண்பாண்டங்களை வர்ணம் பூசி அழகுபடுத்தி பிரார்த்தனை செய்து, அவற்றை மற்றவர்களுக்குப் பரிசளிக்கின்றனர். ராஜஸ்தானில் ஒட்டகங்கள், யானைகளின் அணிவகுப்பு நடத்தி, குன்றுகளில் தீபம் ஏற்றி, பலவர்ண ஆடைகள் அணிந்து கொண்டாடுகின்றனர். ஒரிஸ்ஸாவில் முன்னோர்களை நினைவுகூரும் வண்ணம் அவர்களுக்குப் படையல் வைத்து இத்தினம் கொண்டாடப்படுகிறது. மும்பையில் கணபதிக்கும் லட்சுமிக்கும் பூஜை செய்து, மற்றவர்களுக்கு பரிசுகள், இனிப்புகள் அளித்துக் கொண்டாடுகின்றனர். பீஹாரில் அரிசி மாவில் லட்சுமி படம் வரைந்து, பட்டாசுகள் வெடித்து, துளசிச் செடி முன் படையல் இட்டு தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.

இப்படி இந்தியாவின் ஒவ்வொரு பகுதியில் வேறு வேறு விதமாக தீபாவளி கொண்டாடப்பட்டாலும் அஞ்ஞான இருள் அகற்றி, ஒளிமிகு நல்வாழ்வு அமைய அனைவரும் ஒரு மனதாய் பிரார்த்திக்கின்றனர். நாடெங்கும் மகிழ்ச்சி நிலவுகிறது.

ட்டாசுகள் வெடித்து தீபாவளியைக் கொண்டாடுவது அவசியமா என்பது என் மனதில் நீண்ட நாளாக இருந்து வரும் கேள்வி. புராணக் கதையில் கூட, நரகாசுரன் தான் இறந்த தினத்தை அனைவரும் புத்தாடை அணிந்து, இனிப்புகள் சாப்பிட்டுக் கொண்டாடி மகிழ வேண்டும் என்று கிருஷ்ணரிடம் வரம் கேட்டதாகத்தான் இருக்கிறது. இடையில் பட்டாசு வெடிக்கும் பழக்கம் பிற்காலத்தில் எவராலோ நுழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சிவகாசியில் பட்டாசுத் தொழிற்சாலையில் விபத்து என்று செய்தி வந்து கொண்டுதான் இருக்கிறது. சிறுவர்கள் அதிகம் வேலை வாங்கப்படும் தொழில்கள் என்றால் உங்கள் மனதில் பட்டாசுத் தொழிலும், தீப்பெட்டித் தொழிலும்தான் நினைவுக்கு வரும். புதிய ஆடைகள் பட்டாசு வெடிப்பதால் பாழ்படுவதும், குழந்தைகள் சிறு விபத்துக்களை சந்திப்பதற்கும் காரணமாக இருக்கும் இந்த விஷயம் எதற்காக?  ‘இப்படிப் பலரை துன்புறுத்தி செய்யப்படும் பட்டாசுகளை வெடித்துத்தான் தீபாவளி கொண்டாட வேண்டுமா? கொண்டாடுவதற்கு வேறு வழிமுறைகளா இல்லை?’ என்று கேட்டு என் நண்பரின் மகள் பல வருடங்களாக பட்டாசு வெடிப்பதே இல்லை. நானும் அப்படித்தான்.

பட்டாசுகள் வாங்கு வதற்குச் செலவி டும் பணத்தை வைத்து உங்கள் வீட்டுக் குழந்தை களுக்கு உபயோ கமான பொருள் ஏதாவது வாங்கித் தரலாம், அல்லது அனாதை இல்லங் களில் இருக்கும் குழந்தைகள் தீபா வளி கொண்டாடும் விதமாய் அங்கு டொனேட் செய்ய லாம். பண்டிகை என்பது மன மகிழ்வுக்குத் தானேயன்றி வேறு எதற்குமில்லை.

தீபாவளி்ப் பண்டிகையைப் பொறுத்தமட்டில் என் கருத்து இப்படி. உங்களுக்கு எப்படி...?

Tuesday, October 4, 2011

கேப்ஸ்யூல் நாவல்-1

Posted by பால கணேஷ் Tuesday, October 04, 2011
து பாஸ்ட்ஃபுட் காலம். எதையும் சீக்கிரம் முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்ற எண்ணம் (என்னைப் போன்ற) இளைஞர்களிடம் அதிகம் காணப்படுகிறது. ஆயிரம் பக்க நாவலைக் கொடுத்து படிக்கச் சொன்னால் யோசிக்கிறார்கள். அப்படி சில புகழ்பெற்ற நாவல்களை அவற்றின் கருத்து கெடாமல் கேப்ஸ்யூல்களாக உங்களுக்குத் தரவிருக்கிறேன்.  முதலில் அமரர் கல்கி எழுதிய ‘சிவகாமியின் சபதம்’ நாவல். அவர் இறந்து 58 ஆண்டுகள் ஆகியும் இன்றளவும் வாசகர்களால் விரும்பிப் படிக்கப்படுகிறது இந்தக் கதை. அதனுள் கொட்டிக் கிடக்கும் வீரம், காதல், ஹாஸ்யம் உள்ளிட்ட பல உணர்ச்சிகள் படிப்பவர்களுக்குள் இறங்கிச் செல்லும். அவற்றை இந்த கேப்ஸ்யூல் வடிவத்தில் உங்களால் பெற இயலாது என்பதுதான் குறை.

சிவகாமியின் சபதம்: முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை

ல்லவ மன்னர் வம்சத்தில் பெரும்புகழ் பெற்றிருந்த மகேந்திர பல்லவரின் ஆட்சிக் காலம். திருவெண்காட்டிலிருந்து காஞ்சியிலுள்ள நாவுக்கரசர் மடத்தில் சேர்ந்து படிப்பதற்காக வருகிறான் பரஞ்சோதி என்ற வாலிபன். வழியில் அவன் தூங்கும் போது அவனைக் கடிக்க இருந்த பாம்பைக் கொன்று அவனைக் காப்பாற்றுகிறார் கொடூர முகமுடைய நாகநந்தி என்னும் புத்தபிட்சு. இருவரும் காஞ்சிக்கு வரும் போது கோட்டைக் கதவுகள் சாத்தப்பட்டு நகரெங்கும் பெரும் பரபரப்பு இருக்கிறது. பிட்சு போய்விட, தனியே வரும் பரஞ்சோதி ஒரு முதியவரும் இளம் பெண்ணும் மதம் பிடித்த யானையிடம் சிக்க இருந்த நிலையில் வேலை எறிந்து யானையை காயப்படுத்த, அது பரஞ்சோதியைத் துரத்துகிறது. ஓடுகிறான்.

அந்த முதியவர் அந்நாளில் புகழ்பெற்று விளங்கிய சிற்பி ஆயனர். இளம்பெண் அவர் மகள் சிவகாமி. அன்று நடந்த சிவகாமியின் நாட்டிய அரங்கேற்றத்தின் பாதியில் அவசரத் தகவல் காரணமாக மகேந்திர பல்லவர் சென்றுவிட, அரங்கேற்றம் தடைபட்டு திரும்பிக் கொண்டிருந்த போதுதான் பரஞ்சோதியால் காப்பாற்றப்பட்டனர். அவர்களைக் காப்பாற்ற வந்த மகேந்திர பல்லவர், சாளுக்கிய மன்னன் புலிகேசி பெரும் சைன்னியத்துடன் பல்லவ எல்லைக்குள் பிரவேசித்துவிட்ட தடகவல் வந்ததால்தான் செல்ல நேர்ந்தது என்று ஆயனரிடம் கூற, அவர் மகன் - மாமல்லன் என்ற சிறப்புப் பெயர் கொண்ட - நரசிம்ம வர்மனின் கண்களும் சிவகாமியின் கண்களும் சந்தித்து கதை பேசுகின்றன. 

யானையிடமிருந்து தப்பி தன் பயண மூட்டையைத் தேடிவரும் பரஞ்சோதியை ஒற்றன் என சந்தேகப்பட்டு, பல்லவ வீரர்கள் சிறையிலிடுகின்றனர். இரவில் நாகநந்தி பிட்சு அவனைக் காப்பாற்றி கோட்டையைத் தாண்டி நகருக்கு வெளியே அழைத்துச் செல்கிறார். ஆயனச் சிற்பியிடம், ‘உங்கள் நண்பரின் மகன்’ என்று அறிமுகப் படுத்துகிறார். அழியாத அஜந்தா வர்ணக் கலவையை அறிய வேண்டு மென்ற ஆயனரின் ஆர்வத்தைப் பயன்படுத்தி பரஞ்சோதியை நாகார்ஜுன மலைக்கு அனுப்பும்படி ஆலோசனை சொல்கிறார். அவனிடம் கபடமாக புலிகேசிக்கு ஒரு ஓலை கொடுத்து விடுகிறார்.

மாமல்லரிடம் போருக்கு வர வேண்டாம் என்றும், கோட்டையை பாதுகாக்கும்படியும் பணித்து விட்டு ஒற்றர் தலைவன் வீரபாகு என்ற வேடத்தில் வரும் மகேந்திர பல்லவர் வழியில் பரஞ்சோதியை சந்திக்கிறார். இரவில் அவனை மயக்கப் புகையால் தூங்கச் செய்து அவன் கொண்டுவந்த ஓலையை மாற்றி விடுகிறார். சாளுக்கிய வீரர்களிடம் சிக்கி சக்கரவர்த்தி புலிகேசியின் முன் நிறுத்தப்படும் பரஞ்சோதியை சாமர்த்தியமாகக் காப்பாற்றி, ஆற்றின் அக்கரையிலுள்ள பல்லவர் பாசறைக்கு அழைத்து வருகிறார் மகேந்திரர். அங்கே வந்த பின்புதான் அவர்தான் மகேந்திர சக்கரவர்த்தி என்பதை அறிந்து வியக்கிறான் பரஞ்சோதி.

சிவகாமியின் சபதம்: இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

எட்டு மாதங்கள் கழித்து போர்முனையில் வீர சாகசங்கள் செய்து அனுபவம் பெற்ற படைத் தளபதியாக காஞ்சிக்கு வரும் பரஞ்சோதியை மாமல்லர் வரவேற்று தன் உயிர்த் தோழனாக்கிக் கொள்கிறார். வாதாபிப் படைகள் முற்றுகையிட வருவதால் காஞ்சிக் கோட்டையை ஆயத்தப்படுத்தும் பணியை இருவரும் செய்கின்றனர். ஆயனச் சிற்பியையும், சிவகாமியையும் காஞ்சிக்குள் வரும்படியும் இல்லாவிட்டால் சோழநாடு செல்லும்படியும் பரஞ்சோதி தெரிவிக்கிறார். இதற்கிடையில் மாமல்லரும் சிவகாமியும் எழுதிக் கொண்ட காதல் ஓலைகளை ஒற்றர் தலைவன் சத்ருக்னன், போர்முனையிலிருக்கும் மகேந்திரரிடம் சேர்ப்பிக்கிறான். கங்கநாட்டரசன் துர்விநீதன் காஞ்சியை நோக்கி படையுடன் வருவதாகவும், அவனை எதிர்கொண்டு முறியடிக்கும் படியும் சத்ருக்னனிடம் அவசர ஓலை கொடுத்து காஞ்சிக்கு அனுப்புகிறார் மகேந்திரர்.

ஆயனரையும், சிவகாமியையும் சந்திக்கும் நாகநந்தியடிகள் தன்னுடன் வரும்படி அழைத்துச் செல்கிறார். போருக்குமுன் அங்கு வரும் மாமல்லரும் பரஞ்சோதியும் வீடு பூட்டியிருப்பதைக் கண்டு ஏமாற்றமடைகின்றனர். அசோகபுரம் என்னும் ஊரில் ஆயனரையும், சிவகாமியையும் தங்க வைக்கும் நாகநந்தியடிகள் மகேந்திரரின் சாமர்த்தியத்தால் புள்ளலூரில் நடந்த போரில் துர்விநீதன் தோல்வியுற்றதையும், பல்லவர் படைகள் அவனைத் துரத்திச் செல்வதையும் அறிகிறார். அதேசமயம் சிவகாமியும், ஆயனரும் அங்கே இருப்பதை துரத்திச் செல்லும் படையின் முன்னணியில் இருக்கும் மாமல்லர் பார்த்து விடுகிறார்.

அன்றிரவு திருப்பாற்கடல் என்ற பெரிய ஏரியின் கரையை நாகநந்தி உடைத்துவிட, பெருவெள்ளம் ஊரைச் சூழ்கிறது. வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் ஆயனரையும், சிவகாமியையும் மாமல்லர் வந்து காப்பாற்றுகிறார். வெள்ளம் வடியும் வரை அவர்கள் ஒரு கிராமத்தில் தங்க நேரிடுகிறது. அங்கே நாகநந்தி மறைந்திருந்து விஷக்கத்தி எறிந்து மாமல்லரைக் கொல்ல முயல்கிறார். பல்லவ ஒற்றனான குண்டோதரன் அவரது முயற்சியை முறியடிக்கிறான். மாமல்லரை பரஞ்சோதி சந்தித்து காஞ்சிக்கு உடன் வரும்படி சக்கரவர்த்தியின் ஆணை என்று கூறி அழைத்துப் போகிறான்.

பின் அங்கு வரும் மகேந்திரர், சிவகாமியிடம், மாமல்லனை மறந்து விடும்படி வேண்டுகிறார். பாண்டியனும் காஞ்சி மீது படையெடுத்து வருவதால் அவன் மகளை மாமல்லருக்குத் திருமணம் செய்ய இருப்பதாகச் சொல்கிறார். ஆயனரிடம் பல்லவ இலச்சினை தந்து செல்கிறார். அதைத் திருடிவிடும் நாகநந்தி, காஞ்சிக் கோட்டையினுள் புகுந்து குழப்பம் விளைவிக்க முயன்று மகேந்திரரால் சிறைப்படுகிறார். காஞ்சி நகரை வாதாபிப் படைகள் சூழ்ந்து கொள்ள, முற்றுகை ஆரம்பமாகிறது.

சிவகாமியின் சபதம்: மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல்

புலிகேசியின் படைகள் காஞ்சியின் அகழியையும், கோட்டைச் சுவரையும் உடைக்க முயன்று  தோல்வியடைகின்றன. முற்றுகைக்கு முன்பே மகேந்திரர் எல்லா அணைகளையும் உடைத்து விட்டதால் மூன்று மாத முற்றுகைக்குப் பின்னர் புலிகேசியின் படைகள் உணவும், தண்ணீருமின்றித் தவிக்க நேரிடுகிறது. வடநாட்டு சக்ரவர்த்தி ஹர்ஷவர்த்தனர் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்து வரப்போகிறார் என்ற வதந்தியை மகேந்திரர், ஒற்றர் படை மூலம் புலிகேசியின் படையில் பரவவிட, புலிகேசி சமாதானத் தூது அனுப்புகிறார். மகேந்திரர் அதனை ஏற்றுக் கொண்டு புலிகேசியிடம் நட்பு பாராட்ட விரும்ப, மாமல்லருக்கு அதில் சம்மதமில்லை. அவரை, பரஞ்சோதியுடன் சென்று பாண்டியனைத் தோற்கடித்து புத்தி புகட்டும்படி அனுப்பி விடுகிறார் மகேந்திரர்.

காஞ்சி வரும் புலிகேசிக்கு பலத்த வரவேற்பு கிடைக்கிறது. அவரது விருப்பத்தின் பேரில் சிவகாமியை வரவழைத்து அரசவையில் நடனமாடும்படி செய்கிறார் மகேந்திரர். புலிகேசி புறப்படும் தருவாயில் அவரைத் தாம் வென்ற விதத்தை விரிவாக மகேந்திரர் சொல்ல, ஒவ்வொரு கட்டத்திலும் தான் ஏமாற்றப்பட்டதை உணரும் புலிகேசியின் மனம் எரிமலையாகிறது. தன் படைப் பிரிவின் ஒரு பகுதியை நிறுத்தி பல்லவ நாட்டின் சுற்றுப்புற கிராமங்களை சூறையாடி எரித்து அழிக்கும்படி கூறிவிட்டு வாதாபி நோக்கிச் செல்கிறான். காஞ்சியிலிருந்து சிவகாமியும் ஆயனரும் சுரங்கப்பாதை மூலம் க‌ோட்டையை விட்டு வெளியேறி வாதாபிப் படைகளிடம் சிக்கிக் கொள்கின்றனர்.

இதற்கிடையில் சிறையிலிருந்த நாகநந்தி பிட்சு தப்பித்து விடுகிறார். புலிகேசியைப் போலவே இருக்கும் தன் உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி, புலிகேசி வேடம் தாங்கி மாமல்லபுரத்து கலைச் செல்வங்கள் அழியாமலும், ஆயனர் கொல்லப்படாமலும் காப்பாற்றுகிறார். சிவகாமி வாதாபிப் படைகளிடம் சிக்கி விட்டதை அறிந்த மகேந்திரர் படையுடன் வர, அவருடன் போரிடுகிறார் புலிகேசியாக இருக்கும் நாகநந்தி. போரில் விஷக்கத்தியால் மகேந்திரரைத் தாக்கி விட்டு சிவகாமியை வாதாபிக்குக் கொண்டு செல்கிறார். விஷக்கத்தி தாக்கிய மகேந்திரர் நோய்வாய்ப்படுகிறார்.

வாதாபி சென்றதும்தான் புலிகேசியும், நாகநந்தியும் இரட்டையர்கள் என்பதை சிவகாமி அறிகிறாள். அவள் மீது தான் கொண்ட காதலைச் சொல்கிறார் நாகநந்தி. வேங்கியில் ஏற்பட்ட அரசியல் சிக்கல் காரணமாக பிட்சுவை அங்கே அனுப்பும் புலிகேசி, சிவகாமியை தன் சபையில் நடனமாடும்படி கேட்கிறான். அவள் மறுக்கவே பல்லவ கைதிகளை சாட்டையால் அடித்தே கொல்வதாக அச்சுறுத்தி வாதாபியின் நாற்சந்திகளில் நடனமாடும்படி செய்கிறான். நாடு திரும்பும் பிட்சு, இதைக் கண்டு சினம் கொண்டு புலிகேசியிடம் வாதாடி சிவகாமியை காஞ்சிக்கே திரும்ப அனுப்ப அனுமதி பெற்று வருகிறார். அவளிடம் அதைச் சொல்ல, மாமல்ல நரசிம்மர் படையுடன் வந்து வாதாபியை எரிப்பதையும், வாதாபி மக்கள் மடிவதையும் கண்ணால் கண்ட பின்னரே தான் விடுதலை பெறுவேன் என்று சிவகாமி சபதம் செய்கிறாள்.

மாமல்லர், மகேந்திரரின் அனுமதியின்பேரில் பரஞ்சோதி, சத்ருக்னன் ஆகியோருடன் மாறுவேடத்தில் வாதாபி வருகிறார். சிவகாமியைக் காப்பாற்றி அழைத்துச் செல்ல அவர்கள் முற்பட, அவள் வரமறுத்து தன் சபதத்தைக் கூறுகிறாள். அவர்கள் வாக்குவாதத்தில் இருக்கும் போது நாகநந்தி வந்துவிட, மாமல்லர் மட்டும் கோபத்துடன் தப்பிச் சென்று விடுகிறார். காஞ்சி வரும் மாமல்லரிடம் குலம் தழைக்க பாண்டியன் மகளை மணக்கும்படி வற்புறுத்தி சம்மதம் பெறுகிறார் நோயுற்றிருக்கும் மகேந்திரவர்ம பல்லவர்.

சிவகாமியின் சபதம்: நான்காம் பாகம்: சிதைந்த கனவு

ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட, மாமல்லருக்கு பாண்டியகுமாரியுடன் திருமணமாகி மகேந்திரன் என்ற மகனும், குந்தவி என்ற மகளும் பிறந்திருக்கிறார்கள். மாமல்லர், ஆயனரைச் சந்தித்து தாம் திரட்டியிருக்கும் பெரும் படையுடன் வாதாபி நோக்கிச் செல்வதைச் சொல்ல, தாமும் வருவதாகக் கூறுகிறார் ஆயனர். தன் அரசையிழந்து நரசிம்மரிடம் உதவிகோரி வந்திருக்கும் இளவரசன் மானவர்மன் தானும் மாமல்லருடன் யுத்தத்துக்கு வருவதாகச் சொல்கிறான்.

தன் ஒற்றர் படை மூலம் சில ஆண்டுகளாகவே பல்லவர் படையெடுத்து வருவதாக வதந்தியைக் கிளப்பி, படையெடுக்காமல் புலிகேசியை ஏமாற்றியிருந்தார் மாமல்லர். இப்போது பல்லவர் படையை புலிகேசி எதிர்பார்க்கவில்லை. அஜந்தா மலைச் சித்திரங்களை அவரும் நாகநந்தியடிகளும் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது பல்லவர் படை கிளம்பிய செய்தி வருகிறது. இத்தகவல் முன்பே தெரிந்திருந்தும் தன்னுடன் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக பிட்சு மறைத்துவிட்டார் என்பதை அறியும் புலிகேசி, கோபமாகி அவரைவிட்டுப் பிரிந்து செல்கிறார்.

புலிகேசி தன் படைகளுடன் வாதாபி வரும்முன் வாதாபியை முற்றுகையிட்ட பல்லவர் படையின் ஒரு பிரிவு அவரை எதிர்கொள்கிறது. போரில் சாளக்கிய வீரர்கள் தோல்வியுற, புலிகேசி மாயமாகிறார். நாகநந்தி பிட்சுவை காதலித்து அவரால் காபாலிகையாக்கப்பட்ட ரஞ்சனி என்ற கொடூரமான பெண் தோளில் ஒரு பிணத்துடன் வர, நாகநந்தி எதிர்ப்படுகிறார். அவர் இறந்து விட்டதாகவும், பிணத்தைத்தான் தோளில் சுமந்து கொண்டிருப்பதாகவும் அவள் வியப்புடன் கூற, இறந்தது புலிகேசி என்பதை அறிகிறார். சகோதரனைத் தகனம் செய்து விட்டு, வெறியுடன் வாதாபிக்குள் சுரங்கப்பாதை மூலம் வருகிறார்.

இதற்கிடையே முற்றுகையிலிருக்கும் வாதாபி மக்கள் சமாதானத் தூது அனுப்ப, பரஞ்சோதி ஒப்புக் கொள்ளலாம் என்க, மாமல்லர் மறுக்கிறார். அதற்குள் கோட்டையில் வெள்ளைக் கொடி இறக்கப்பட்டு, புலிகேசி தென்படவே போர் துவங்குகிறது. வாதாபியைத் தீக்கிரையாக்குகிறார் நரசிம்மர். புலிகேசியின் வேடத்தைத் துறந்து நாகநந்தியாகி, சிவகாமியைத் தூக்கிக் கொண்டு சுரங்க வழியாக தப்பிக்கப் பார்க்கிறார் பிட்சு. ஒரு புறம் சத்ருக்னனாலும், மறுபுறம் பரஞ்சோதியாலும் மடக்கப்பட, விஷக்கத்தியை எறிந்து சிவகாமியைக் கொல்லப் பார்க்கிறார். ஆத்திரமாகும் பரஞ்சோதி முந்திக் கொண்டு பிட்சுவின் கையைத் துண்டித்து அவரைப் பிழைத்துப் போகும்படி கூற, பிட்சு இருளில் மறைகிறார்.

தன்னை மீட்ட மாமல்லர் தன்னிடம் கடுமையாகப் பேசுவதன் காரணம் அறியாமல் தவி்க்கிறாள் சிவகாமி. தளபதி பரஞ்சோதி, மாமல்லரிடம், தாம் இனி சைவத் துறவியாக சிறுத்தொண்டர் என்ற பெயர் பூண்டு விளங்கப் போவதாகக் கூறி வி‌டைபெற்றுச் செல்கிறார். சிவகாமி காஞ்சி திரும்பியதும்தான் மாமல்லருக்கு திருமணமானதையும், இரண்டு குழந்தைகள் இருப்பதையும் அறிகிறாள். இறைவனையே கணவனாகத் தேர்ந்தெடுத்து தன் வாழ்வை இறைத் தொண்டுக்கு அர்ப்பணித்துக் கொண்டு ஆலயத்தில் நாட்டியமாடுகிறாள் சிவகாமி. சிவகாமியின் நாட்டியப் பணி தொடர்கிறது.

Saturday, October 1, 2011

பழைய சோறு + ஊறுகாய்..!

Posted by பால கணேஷ் Saturday, October 01, 2011
டுத்து பதிவைப் படிப்பவர்களுக்கு என்ன கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் நம் சக பதிவர்களின் ஸ்டால்களைக் கவனித்தேன். படிப்பவர்களுக்காக ஒருவர் கொத்து பரோட்டா போட்டுத் தருகிறார். இன்னொருவர் சுடச்சுட சாண்ட்விச்சும் நான்வெஜ்ஜீம் கொடுக்கிறார். வேறொருவர் பேல்பூரியைப் பரிமாறுகிறார். சரி,   நாமும் அப்படி ஏதாவது தரலாமே என்று யோசித்தேன். ஒரு முடிவுக்கும் வர முடியாமல் இருந்த வேளையில் என் அப்பா வாங்கிச் சேர்த்து வைத்து விட்டுப் போன புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் புரட்டினேன்.

 ‘கல்கண்டு கதம்பம்’ என்று அவரே தலைப்பு வைத்து பைண்ட் பண்ணி வைத்திருந்த 1960-62 ஆண்டு கல்கண்டு இதழ்களின் (விலை 13 பைசா) தொகுப்பு அது. அதில் இருந்த நிறைய சுவையான விஷயங்களில் சிலவற்றை உங்களுக்குத் தருவதென்று முடிவு செய்தேன். ஆக... இது பழைய சோறும் ஊறுகாயும்! (இந்த காம்பினேஷனின் சுவையே அலாதி என்பதை அனுபவித்தவர்கள் அறிவார்கள்)  
=====================================================================
பழைய சோறு :
சந்திரபாபுவின் திமிர்(?)

ட்டங்களும், கேடயங்களும், கோப்பைகளும் வழங்கப்படும்போது அதை நட்சத்திரங்கள் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த மாதிரி சூழ்நிலையில் பாராட்டுகளையும், பட்டம் கொடுப்பதையும் வெறுக்கும் நகைச்சுவை நடிகர் நம்மிடையில் இருக்கிறாரென்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அவர் சந்திரபாபுவைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?

சந்திரபாபுவிற்கு ‘சிறந்த நகைச்சுவை நடிகர்’ என்று பாராட்டி ஒரு கோப்பையையும் பரிசளித்தது சினிமா ரசிகர் சங்கம். தான் நன்றாக நடிக்காத ஒரு படத்தில் நடித்ததற்காக அந்தப் பரிசு கொடுக்கப்பட்டதால் அதை மறுத்துவிட்ட சந்திரபாபு, ‘‘என் நடிப்பை ரசிப்பவர்கள் என் ரசிகர்கள். அவர்கள் பாராட்டும் அன்பும் இருந்தால் அதுவே எனக்குப் போதும்’’ என்று சொன்னார்.

அவரிடம் பின்னர் அதைப் பற்றிக் கேட்டபோது, ‘‘பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் படம் பார்க்கிறார்கள். ஆனால் சிறந்த நடிகனைத் தேர்ந்தெடுப்பதற்குப் பத்துப் பேர்கள் தானாம்! நான் நடித்ததால் ஓடியது என்று சொல்ல முடியாத ஒரு படத்தில் நடித்ததற்காக எனக்குப் பரிசு கொடுத் தார்கள்! அப்படி என்னை சிறந்த நகைச்சுவை நடிகன் என்று தேர்ந்தெடுக்க யார் இந்தப் பத்து பேர்கள் என்று கேட்கிறேன்...’’ என்று சொல்லுகிறார் சந்திரபாபு.

=====================================================================
ஊறுகாய் :


=====================================================================
பழைய சோறு :

நம்பியாரும், நகைச்சுவையும்!

ப்போதும் தீயவனாக நடிக்கும் நம்பியார் ஒரு நகைச்சுவைப் பேச்சாளர் என்பது நம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்துகிறது இல்லையா? நம்பியார் எல்லோரையும் சிரிக்க வைப்பதற்காக கதை சொல்லும் போது சுற்றுமுற்றும் ஒருமுறை நன்றாகப் பார்த்துக் கொள்வார். ஏன் தெரியுமா? அவர் சொல்லும் ஹாஸ்யங்கள் அவ்வளவு தரமுடையவையாக இரா! நம்பியார் ஒரு ‘ஹ்யூமரிஸ்ட்’ என்‌பதை விளக்க அண்மையில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் ஒன்று போதுமே...

ஜுபிடர் பிக்சர்ஸின் ‘அரசிளங்குமரி’ படப்பிடிப்பில் நடந்தது இது: கதாநாயகன் எம்.ஜி.ஆரும், வில்லன் நம்பியாரும் உக்கிரமாகச் சண்டையிடும் காட்சிதான் அன்று படமாக்கப்பட்டது. இருவருமே கத்திச் சண்டையில் கை தேர்ந்தவர் களாதலால் ‘டூப்’ தேவைப்படவில்லை. கத்திகள் மின்னல் வேகத்தில் சுழன்றன. இருவரும் லாகவமாக சண்டை செய்தும் சற்றும் எதிர்பாராத விதமாக நம்பியாரின் கத்தி, எம்.ஜி.ஆரின் நெற்றியைப் பதம் பார்த்து விட்டது.  ரத்தம் சொட்டுச் சொட்டாக கொட்டவும் ஆரம்பித்து விட்டது.

என்ன செய்வதென்று புரியாமல் அனைவரும் செயலிழந்து நின்றிருந்த போது நம்பியார், ‘‘நான் இன்னமும் டைரக்டர் சொன்ன இடத்தில் குத்தவில் லையே...’’ என்று சொன்னதும் அடிபட்டிருந்த மக்கள் திலகம் காயத்தையும் மறந்து வாய் விட்டுச் சிரித்தார். மற்றவர் களும் சிரித்தார்கள். காரணம், டைரக்டர் குத்தச் சொன்ன இடம் என்று நம்பியார் குறிப்பிட்டது படக் கதையின் படி எதிரியின் நெஞ்சு!

என்ன செய்வதென்று புரியாமல் நின்றிருந்தவர்களை செயல்படச் செய்த நம்பியாரின் நகைச்சுவை யாரைத்தான் சிரிக்க வைக்காது?

=====================================================================
ஊறுகாய் :


=====================================================================
பழைய சோறு :

வில்லனைச் சுட்ட வில்லன்!

‘நல்ல இடத்து சம்பந்தம்’ என்ற படத்தில் எம்.ஆர்.ராதா வில்லன். அவருக்கு வில்லனாக நடித்தார் ‘கள்ளபார்ட்’ நடராஜன். படத்தின் கிளைமாக்ஸ் சீனில் வில்லன் தன்னை எதிர்க்கும் நடராஜை துப்பாக்கியால் சுட வேண்டும், அவர் இறந்து விடுவார் என்று காட்சி. நிஜத் துப்பாக்கியில் டம்மி தோட்டாவை வைத்து விட்டு தனியாக ‘டுப்’ என்ற சப்தத்தை மட்டும் ஒலிப்பதிவாக்குவது வழக்கம்.

படப்பிடிப்பு துவங்கியதும் இரண்டு வில்லர் களுக்கும் ரோஷமான சண்டை நடந்தது. உணர்ச்சிகரமான அந்தக் கட்டத்தில் இருவரும் சிறப்பாக நடித்தனர். அப்போது ராதாவை அடித்துக் கீழே தள்ளிய நடராஜன் அவர் மேல் ஏறி உட்கார்ந்தார். என்ன இருந்தாலும் நடராஜன் இளைஞரல்லவா?
   கோபம் அதிகரித்த ராதா, கையிலிருந்த துப்பாக்கியால் நிஜமாகவே நடராஜனைச் சுட்டு விட்டார். ‘டம்மி’ தோட்டாவாக இருந்தும் சட்டையைக் கிழித்துக் கொண்டு அது நடராஜைக் கொஞ்சம் தாக்கி விட்டது. ரத்தம் வந்தது. இதனால் ‘கள்ளபார்ட்’ நடராஜனுக்கு ஏற்பட்ட காயம் சிறிதானாலும் பெரிய நடிகரால் சுடப்பட்டவர் என்ற பெருமையை அவர் அடைந்து விட்டார் அல்லவா?

=====================================================================
ஊறுகாய் :


=====================================================================
பழைய சோறு:

எம்.ஜி.ஆர்.ன்னா சும்மாவா..?

தமிழ்வாணி தம்பி, கிருட்டிணராயபுரம் எழுப்பிய கேள்வி : எம்.ஜி.ஆரை ஏன் இப்படித் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறீர்கள்?

தமிழ்வாணன் எழுதிய பதில் : ஒரு நடிகன், ஒரு படாதிபதி, ஒரு நடிகை, ஓர் எழுத்தாளன் ஆகியோர் அவரைப் பார்க்கக் காத்துக் கொண்டிருந்தல் முதலில் அவர் எழுத்தாளரைப் பார்த்துப் பேசுகிறார். அடுத்து நடிகனைப் பார்த்துப் பேசுகிறார். அடுத்து நடிகையைப் பார்த்துப் பேசுகிறார். கடைசியில்தான் தனக்குப் பணம் தரும் படாதிபதியைப் பார்த்து அவர் பேசுகிறார். அதனால்தான் எம்.ஜி.ஆரை நான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு இப்படி ஆடுகிறேன்!


டிஸ்கி 1: பழைய சோறு கல்கண்டு இதழ்களிலிருந்தும், முதல் இரண்டு ஊறுகாய்கள் ஆனந்த விகடன் இதழ்களிலிருந்தும் என்னால் தொகுக்கப்பட்டவை. (காப்பி, பேஸ்ட் அல்ல) கடைசி ஊறுகாய் என் நண்பர் ஆரோக்கியதாஸ் வரைந்து கொடுத்தது.


டிஸ்கி 2: நாளை உலக உத்தமர் காந்தியின் பிறந்த தினத்தில் உலகெங்கும் சாந்தி நிலவ பிரார்த்திப்போம்.

டிஸ்கி3 : பழைய சோறும், ஊறுகாயும் எப்படி? ஒரு வார்த்தை சொல்லிப் போட்டிங்கன்னா சந்தோஷம்!
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube