Monday, June 22, 2015

ந்நாளில் வாழ்ந்த மன்னர்கள், வருங்காலச் சந்ததியினர் தங்களின் சாதனைகளையும் வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற தொலைநோக்குடன் ஆலயங்களின் சுவர்களிலும் கல்வெட்டுகளிலும் தங்கள் ஆட்சியின் சாதனைகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளைப் பொறித்து வைத்தார்கள். அத்தகைய ஆதாரங்களின் அடிப்படையில் மன்னர்கள் வாழ்ந்த காலம், நிகழ்வுகள் முதலியவை சரித்திர ஆராய்ச்சியாளர்களால் குறிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டவையாகத் திகழ்ந்து வருகின்றன.

பின்னாளில் சரித்திரக் கதைகள் என்கிற ஒரு பிரிவு தமிழ்ப் படைப்புகளில் ஏற்பட்டபோது இந்தக் குறிப்புகளின் அடிப்படையில் கதாசிரியர்கள் தங்கள் கற்பனைக் குதிரையை ஓட்டி, சுவையான பல கதைகளைப் படைத்தார்கள். கரிகாலன் தன்னைவிடப் பெரிய படை வலிமையைக் கொண்டிருந்த சேர, பாண்டிய, வேளிர் மன்னர்களை வென்றான் என்பது சரித்திரத்தில் கூறப்பட்ட உண்மை. அதை அவன் எப்படிச் சாதித்திருப்பான் என்று எழுதியது நாவலாசிரியரின் கற்பனை. சரித்திர ஆதாரங்கள் என அந்த நாவலாசிரியர்கள் குறிப்பிடுவது தங்கள் கதைக்கு வலு சேர்க்கத்தானே தவிர, எந்த நாவலாசிரியரும் கரிகாலனுடனோ, பாண்டியன் நெடுஞ்செழியனுடனோ வாழ்ந்தவர்கள் அல்லர். எனவே சரித்திரக் கதைகள் அனைத்தையும் உண்மையின் பேஸ்மெண்டில் எழுந்த கற்பனைக் கதைகள் என்று கொள்வதே சாலச் சிறந்தது. பக்கத்துக்குப் பக்கம் ஆதாரங்கள் தராவிட்டால் சரித்திரக் கதையல்ல என்பது சரியல்ல.

ப்போது இதைச் சொல்லக் காரணம்.. சமீபத்தில் வெளியான ‘காலச்சக்கரம் நரசிம்மா’ எழுதிய ‘பஞ்சநாராயண(க்) கோட்டம்’ என்கிற நாவலைப் படிக்க நேர்ந்ததுதான். ஹொய்சள சரித்திர ஏடுகள், இராமானுஜரின் வாழ்க்கைச் சரிதம், சமண மத நூல்கள், சோழர்களின் சரித்திரம், பஞ்சநாராயண தல புராணங்கள், பெங்களூரு அருங்காட்சியக செப்பேடுகள் என்று பலவற்றைத் தேடி ஆராய்ந்து இந்த நாவலை எழுதியதாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளாரே தவிர, பக்கத்துக்கு பக்கம் அடிக்குறிப்பாக கல்வெட்டுத் தகவல்கள் கொடுத்து, படுத்தவில்லை.

யதிராஜர் இராமானுஜர் திருஅவதாரம் செய்து ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைகின்ற இவ்வேளையில் அவர் இக்கதையில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வருவது சிறப்பு. பேளூர் மற்றும் ஹளபேடு ஆலயங்களில் செதுக்கப்பட்டுள்ள  சிற்ப அதிசயங்களை எழுத்தாளர் நரசிம்மா ரசித்துப் பார்த்தபோது அங்கே இருந்த நான்கு சிற்பங்கள் மற்றவற்றில் இருந்து வேறுபட்டு இருப்பது அவர் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தச் சிற்பங்கள் ஆலயத்தில் எதற்கு வைக்கப்பட்டன? இவை எதுவும் செய்தியைத் தெரிவிக்கின்றனவா, எனில் யாருக்காயிருக்கும்..? கோட்டத்தை எழுப்பிய பிட்டிதேவனுக்காக இருக்குமோ? எனில் சிலைகளைச் செய்து வைத்தது யார்? இப்படியான… இன்னும் பல கேள்விகள் அவருக்குள் எழும்பியிருக்க வேண்டும். தன் கற்பனைத் திறத்தால் ஹொய்சாளர் காலத்து நாவலாக இதைப் படைத்து அந்தச் சிற்பங்களுக்கு ஓர் அர்த்தத்தைக் கொடுத்துள்ளார்.

ஹொய்சள மன்னன் பிட்டிதேவன் ஒரு வைணவப் பெண்ணை விரும்புகிறான். அவன் அன்னை அவனுக்காக ஒரு சமணப் பெண்ணைப் பார்க்கிறாள். இருவரையும் மணக்கிறான் பிட்டிதேவன். அவன் பிரியத்துக்குரிய வைணவ அரசி முதலில் கருவுற்றுவிட, வைணவம் ஓங்குவதா என்று சமணம் பொறும, சதிகள் நடக்கின்றன. அவற்றின் விளைவுகள் என்ன, அந்த வைணவ அரசி பெற்ற பிள்ளை என்னவானது, மன்னன் பிட்டிதேவன் எத்தகைய தருணத்தில் சமண சமயத்தில் இருந்து இராமானுஜரால் ஆட்கொள்ளப்பட்டு வைணவனாக (விஷ்ணுவர்த்தனன்) மாறினான் ஆகியவற்றையும், இராமானுஜரின் விருப்பப்படி ஐந்து நாராயணர் ஆலயங்களை எழுப்ப விஷ்ணுவர்த்தனன் ஆணையிடுவதும், (நம்பி நாராயணம் –தொண்டனூர், கீர்த்தி நாராயணம் – தலக்காடு, செல்வ நாராயணம் – மேல்கோட்டை, விஜயநாராயணம் – வேளாபுரி(எ) பேலூர், வீரநாராயணம் – கதக்(வடகர்நாடகா) அந்த ஆலயப் பணி நிறைவேறக் கூடாது என்பதற்கான சதிகள், இடைஞ்சல்கள் ஆகியவற்றையும் அவற்றைத் தாண்டி எப்படி ஆலயம் எழும்பியது என்பதையும் விவரிக்கிறது ‘பஞ்சநாராயணக் கோட்டம்’ நாவல். ஆலயங்களின் காலம் கி.பி.1102 – 1140.

சரித்திர நாவலை எளிமையான நடையில் ஒரு துப்பறியும் நாவலுக்கு ஈடான விறுவிறுப்புடன் தர முடியும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் நரசிம்மா. •வைணவ அரசி லட்சுமிப்பிரபாவிற்குப் பிறந்த குழந்தை என்னவானது? •பிட்டிதேவனின் மகளைப் பிடித்த பிரம்ம ராட்சஸி யார்? •அந்த பிரம்ம ராட்சஸியின் நோக்கம்தான் என்ன? •பிட்டிதேவன் ஏன் விஷ்ணுவர்த்தனனாக மாறினான்? •இளவரசி வகுளாதேவி சிற்பங்களின் மூலம் தன் தந்தைக்குத் தெரிவித்த செய்தி என்ன? இப்படி அடுத்தடுத்து பல முடிச்சுகளை இடுவதும், ஒரு முடிச்சு அவிழும் தருணத்தில் அடுத்த முடிச்சுக்கான இறுக்கத்தைப் போடுவதுமான அவர் எழுத்து 720 பக்கங்களையும் ஒரே மூச்சில் படித்து விட்டுத்தான் கீழே வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

நிகழ்காலச் சம்பவங்களில் துவங்கி, சரித்திரத்திற்கு அழைத்துச் சென்று ஒவ்வொரு கோட்டம் பற்றிய கதை முடிந்ததும் நிகழ்காலத்துக்கு மீண்டும் வந்து, பின் மீண்டும் சரித்திரத்தினுள் செல்வது என்று நூலாசிரியர் கையாண்டுள்ள உத்தி வெகு அழகு. நாவலின் விறுவிறுப்புக்குத் துணை நிற்கிறது. சிரவணபெலகோலா கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள தகவல்களின் படி கதாசிரியர் அமைத்திருக்கும் பிட்டிதேவனின் (சமண) பட்டத்தரசி ஷாந்தலாவின் பாத்திரப் படைப்பு பிரமாதம். அதேபோல் நபும்சகி(அரவாணி)யான இந்திரசேனாவின் கதாபாத்திரமும் மனதில் நிற்கும். இந்தக் கோட்டங்களை எழுப்பிய சிற்பி ஜெக்கன்னாவின் கதையும் ரசிக்க வைக்கிறது. ‘முருக்கல் அல்லது முருங்கல்’ என்றொரு வார்த்தையை சங்கத்தாராவில் பிடித்து அசத்தியது போல ‘கப்பைக்கு கராவெந்தரே நாரிகே சிரவல்லவே?’ என்றொரு வார்த்தையில் இந்த நாவலையும் பொதித்திருப்பது ரசனைக்கு உத்தரவாதம்.

நாவலைப் படிக்கையில் எனக்குள் இரண்டு நெருடல்கள் எழுந்தன. ஒன்று இத்தனை சதிகளை அறிந்தும் ஏன் ஷாந்தலாவையே தன் பட்டத்தரசியாக பிட்டிதேவன் வைத்திருந்தான் என்பது. அதற்கு நாவலின் இறுதியில் விடை கிடைத்து விட்டது. மற்றொரு நெருடல் கதையின் முன்னுரையில் சரித்திரக் கதைக்கான நடை என்று நல்ல தமிழில் நீளநீள வாக்கியங்கள் எழுதுவதைக் குறிப்பிட்டு எழுதி, தான் அப்படி எழுதுபவனல்ல என நரசிம்மா சொல்லியிருப்பது.

நீளநீள வாக்கியங்களை சாண்டில்யன் அமைத்த காலத்தில்தான் எளிமையான சிறு வாக்கியங்களை அமைத்த கல்கியும் இருந்தார். எளிமை தமிழில் அகிலன், விக்கிரமன் போன்றோர் எழுதிய சமயத்தில்தான் அழகு இலக்கணத் தமிழில் கோவி.மணிசேகரன் எழுதினார். இரண்டு சுவைகளும் எப்போதும் இருப்பவைதாமே…? எது உயர்த்தி, தாழ்த்தி என்றெல்லாம் நூலாசிரியர் ஏன் இப்படி வாலன்டியராக விளக்கம் தரவேண்டும் என்று தோன்றியது. இதற்கு ஒரு விளக்கத்தை கீதா சாம்பசிவம் அவர்கள் எழுதிய பதிவில் நரசிம்மா தந்திருக்கிறார். (முதல்ல படிச்சு முடிச்சவன் நான். ஆனா விமர்சனம் எழுதறதுல என்னை முந்திட்டாங்க அவங்க. கர்ர்ர்ர்.) 

நரசிம்மாவுக்கு ஒரு வேண்டுகோள்… நாவலில் தேவையான இடங்களில் ஒற்றுக்கள் வராமலும் தேவையற்ற இடங்களில் ஒற்றுக்கள் இடப்பட்டும் படிப்பதற்கு சற்று இம்சை தருகின்றன. கவனிக்கவும்.

மொத்தத்தில் ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் ஐந்தாவது முறையும் செஞ்சுரி அடித்திருக்கிறார் நரசிம்மா. (அடுத்த நாவல் இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சா ஸார்?) 720 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை 300 ரூபாய் விலையில் நல்ல ஹார்ட்பவுண்ட் அட்டையில் சிறப்பான அச்சுத்தரத்தோட 23, தீனதயாளு தெரு, தி.நகரில் இருக்கும் வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்காங்க.


  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube