Tuesday, September 5, 2017

ன்று ஆசிரியர் தினம் என்பதால் அனைவரும் அவரவர் ஆசிரியர்களை நினைவுகூர்ந்து நிறையப் பதிவுகள் இட்டிருந்ததைக் காண நேர்ந்தது. நான் என் ஆசிரியர்களைப் பற்றி நினைவுகூர்ந்தால் என்ன என்று மனதில் பின்னோக்கி பள்ளிக் காலத்திலிருந்து எண்ணிப் பார்த்ததில் ஒவ்வொருவராக மனத்தில் ஸ்லைடு ஸ்லைடாக வந்து போனார்கள். யாரைப் பற்றிச் சொல்லலாம்..?

ரிடையர்மெண்டுக்குச் சில ஆண்டுகளே பாக்கி வைத்திருந்த, வழுக்கைத் தலையும் கைத்தடியுமாக யுத்தக் கப்பல் ஒன்று அசைவதைப் போல ஆடிஆடி நடந்து வரும் டிஆர்ஜி (டி.ஆர்.கோவிந்தராஜன்) சார், அகன்ற தன் உடம்பால் கோல்போஸ்ட்டையே மறைத்து எங்களுடன் பந்து விளையாடிய சுந்தரம் வாத்தியார், பத்தாம் வகுப்பை நெருங்கும் நிலையிலும் தமிழ் இலக்கணத்தில் நான் பூஜ்யமாக இருந்ததைக் கண்டு அதிர்ந்து, ஒவ்வொரு நாளும் வகுப்பு முடிந்தபின் எனக்காகப் பத்து நிமிடங்கள் பிரத்யேக இலக்கண வகுப்பு நடத்திய புதிய வார்ப்புகள் பாக்யராஜ் போன்ற தோற்றத்திலிருந்த காளிதாஸ் ஐயா,

என் தமிழை ரசித்து மேம்படுத்திய தாசரதி ஐயா, வழுக்கைத் தலையுடன், சிறு தோல் பிரச்சனையும் இருந்ததால் வெயிலிலும் மழையிலும் எப்போதும் கையில் விரித்த குடையுடன் இருந்ததால் ‘குடை ஸார்’ என்று பட்டப்பெயர் பெற்ற பேராசிரியர் ராஜமாணிக்கம், உலகின் மிகச்சிறந்த ஜோக்கைச் சொன்னால்கூட இவர் சிரிக்க மாட்டார் என்று எங்களால் கேலி செய்யப்பட்ட, மீசையற்ற தீவிரமான முகத்துடன் எப்போதும காணப்படும் பேராசிரியர் கல்யாணம்.... அனைவரும் வந்து போனார்கள்.

ஆனாலும்... பழம் தின்று கொட்டை போட்ட இந்த ஆசிரியர்கள் அனைவரையும் விட, என்னைப் பழம் தின்ன வைத்துக் காசு போட வைத்த மங்கையர்க்கரசி டீச்சர்தான் மனசில் வந்து போகிறார்.  தட்ஸிட்... அவருடன் சேர்ந்து அந்தச் சம்பவமும் மனதில் நிழலாடுகிறது.

அது நான் இரண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த சமயம். என் அப்பாவுக்கு என் மீது பாசம் கொஞ்சமில்லை... மிகமிக அதிகம். யாராவது 2ம் கிளாஸ் படிக்கிற பையனுக்குக் கண்ணில் காசைக் காட்டுவார்களா..? என் அப்பா காட்டியவர். இரண்டு பைசா, ஐந்து பைசா, பத்துப் பைசா என்று அவ்வப்போது மிட்டாய் வாங்கிச் சாப்பிட பாக்கெட் சில்லறை கிடைக்கும். நம்புங்கள்... அந்த நாணயங்களுக்கு அப்போது நல்ல மதிப்பிருந்தது. 30 பைசாவில் ஒருபெரிய மாம்பழமே வாங்கித் தின்னலாம் என்றால் பாருங்கள்.


அப்போது எனக்கொரு வினோத(கெட்ட) பழக்கம் இருந்தது. மங்கை டீச்சர் கிளாஸ் நடத்திக் கொண்டிருக்கையில் வழக்கம்போல பத்துப் பைசாவை வாயின் ஒரு புறத்தில் வைத்து அதக்கியபடி வகுப்பைக் கவனித்துக் கொண்டிருந்தேன். பாடத்தின் இடையில் டீச்சர் ஏதோ சொல்லிச் சிரிக்க வைக்க, மற்ற பையன்களுடன் சேர்ந்து சிரித்ததில் வாயோரமிருந்த பைசாவானது நழுவித் தொண்டையை நோக்கிச் சென்று அங்கே சுங்கச்சாவடி எதுமில்லாததால் நேராக வயிற்றை நோக்கி வழுக்கிக் கொண்டு பயணித்தது.

அப்போதைய பத்துப்  பைசாக்கள் இன்றுள்ளவை போல் வட்டமாக இல்லாமல்  நெளிநெளியான ஓரங்களுடன், மெட்டலில் செய்யப்பட்டிருக்கும். படம் காண்க. அதனால் தொண்டையில் அடைத்துக் கொள்ளவில்லை. இல்லையேல் தொண்டை அடைத்துக் கொண்டு மூச்சுத் திணறி அன்றே பரலோகப் பயணத்தைத் துவக்கியிருப்பேன். ஆனாலும் நாணயத்தை விழுங்கியதில் இயல்புக்கு மாறாக விக்கோ விக்கென்று விக்கி, அட் எ டைம் நாலு ஆடு திருடியவனைப் போல திருதிருவென நான் விழிப்பதைக் கண்டு மங்கை டீச்சர் என்னவென்று கேட்க, உண்மையைத் திக்கி திக்கிச் சொன்னேன்.

அதிர்ந்து போய்விட்டார் மங்கை டீச்சர். ஆனாலும் சமயோசிதமாகச் செயல்பட்டார். ஒரு பயலை அனுப்பி இரண்டு பெரிய வாழைப் பழங்களை வாங்கிவர வைத்து என்னை விழுங்க வைத்தார். நான்கு டம்ளர் நிறையத் தண்ணீரைத் தந்து தலையில் தட்டிக் குடிக்கச் செய்தார். பின் பியூரை (வயசானவரை மருவாதி இல்லாம பியூன்ங்கலாங்களா? ஹி.. ஹி...) அழைத்து நடந்ததை வீட்டில் சொல்லி என்னை ஒப்படைத்து வருமாறு அனுப்பினார். 

அவர் சொன்னதைக் கேட்டு வீட்டில் அதிர்ச்சியுடன் கோபத்தையும் அடைஞ்சாங்க அம்மா.  அந்த பின்மதியத்தில் வீட்டில் யாரும் இருக்கவில்லை. எனக்கு ரெண்டு செல்லச் சாத்து சாத்தி (அம்மா அடிச்சு என்னிக்கு எவனுக்கு வலிச்சிருக்கு?) வயித்தை வலிக்குதாடா? தலை சுத்துதாடா? என்று பலப்பல கேள்விகளைக் கேட்டு பதறிக் கொண்டிருந்தார். எனக்கோ எந்தப் பிரச்சனையும் இல்லை உண்மையில் அந்தக் காசு வயிற்றில் தொல்லை எதுவுமின்றி செட்டிலாகி விட்டது போல. கேட்டதற்கெல்லாம் இல்லை என்றே சொல்லிக் கொண்டிருந்தேன்.

இதற்குள் ஆபீஸிலிருந்து சித்தப்பா வந்துவிட, ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். அங்கு புரியாக்கதிர் எடுக்கச் சொன்னார்கள். எடுத்தோம். மருத்துவர் அதை வெளிச்சத்தில் பார்த்து வயிற்றில் எதுவும் இல்லை, சுத்தமாக இருக்கிறது என்று அறிவித்தார். எதற்கும் இரவு தூங்கட்டும். காலையில் மீண்டும் ஒருமுறை எடுத்துப் பார்த்து விடலாம் என்றார். சொந்த பிசினஸ் என்பதால் இரவுதான் அப்பா வருவார். வந்ததும் அவர்மீது குற்றப் பத்திரிகை சாட்டப்பட, விஸ்கி விஸ்கி... ச்சே, விக்கி விக்கி அழுது கொண்டிருந்த என்னை அப்பாதான் சமாதானம் செய்தார். மறுநாள் காலையில் மீண்டும் புரியாக்கதிர் படம். அப்போதும் வயிறு க்ளியர். இறுதியில் மங்கை டீச்சர் தந்த வாழைப்பழமும் தண்ணீரும் காயினுடன் வினைபுரிந்து அதைக் கழிவுடன் வெளியேற்றியிருக்க வேண்டும் என்றும், இனி எனக்கு எதுவும் பிரச்சினை வராது என்றும் தன் ஆராய்ச்சி முடிவை அறிவித்தார்.

அப்பாடா... என்று ஆறுதலுடன் மருத்துவமனையிலிருந்து தப்பித்த சந்தோஷத்துடன் விளையாடப் போய்விட்டேன் நான். ஆனால் மருத்துவராலும் என் வீட்டினராலும் சமயோசிதமாகச் செயல்பட்ட மங்கை டீச்சர் வெகுவாகப் பாராட்டப்பட்டார். அப்போது நன்றியெல்லாம் சொல்லி மகிழ்விக்கிற அளவுக்குப் பண்பாடு எனக்கு வளரவில்லை என்றாலும், இப்போது நினைக்கையில் மங்கை டீச்சர் நினைவிற்கு வருகிறார். ஆனால், என்ன ஒரு சோகம்... அதன்பின் சில்லறையைக் கண்ணில் காட்டுகிற வழக்கத்தை அப்பா நிறுத்தி விட்டார் என்பதுதான். அவ்வ்வ்வ்....
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube