Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

Friday, February 27, 2015

சுவாரஸ்ய சுஜாதா

Posted by பால கணேஷ் Friday, February 27, 2015
• என் நண்பன் தேவேந்திர கோயல் போன வாரம் வரை நன்றாக இருந்தான். திடீரென்று கல்யாணம் செய்து கொண்டு விட்டான். கோத்ரேஜ் அலமாரி அப்புறம் ரேடியோ, ரெப்ரிஜிரேடர்,டெரிலின் சூட் கொடுக்கிறார்கள் என்று கல்ணாயம் பண்ணிக் கொண்டானாம். கூட ஒரு பெண்ணையும் கொடுக்கிறார்கள் என்று பிற்பாடுதான் தெரிந்தது. லேட்!

• டெல்லியில் வடக்கத்திக் கல்யாணம் வினோதமானது. காலை எட்டு மணி வரைக்கும் இந்த வீட்டிலா கல்யாணம் நடக்கப் போகிறது என்றிருக்கும். திடீரென்று புயல்போல் சர்தார்ஜி வருவார், ஒரு லாரியில் நாற்காலிகளுடன். இன்னொரு சர்தார் சமைத்த கோழிகளுடன் வந்து இறங்குவார். பின்னால் ஒருவர் பந்தல் துணியுடன் வருவார். அவர் பின்னால் ஸ்வாகத் போர்டு, சக்கர கலர் விளக்கு கம்பிகள் இவற்றோடு எலெக்ட்ரீஷியன் சர்தார்ஜி. ‘பீப் பீப்’ என்று சத்தம் கேட்டு எல்லாரும் ஒதுங்குவார்கள். பாண்டு கோஷ்டி வந்து நிற்கும்.

அப்புறம் ஒரு வெள்ளைப் பெண் குதிரை நொந்துபோய் வரும். அதன் மேல் பூக்களால் ஆன ஒரு குழப்பம். அதுதான் பையன். பையன் பெண்ணின் முகத்தைப் பார்க்கவே மாட்டான். எல்லாவற்றையும் மூடி வைத்திருப்பார்கள். சிறு பையன்களுடன் தடி ஆண்பிள்ளைகள் டுவிஸ்ட் ஆடுகிறேன் என்று சுளுக்கெடுத்து உள்ளே ஒரு எலும்பு மளுக்கென்று ஒடிகிற வரைக்கும் ஆடுவார்கள். பிறகு எல்லோரும் கொக்கோகோலா சாப்பிடுவார்கள். நிறைய ஸ்வீட் வினியோகம் செய்வார்கள். இந்த ஊர் மாப்பிள்ளைகள் பெண்ணுக்குத் தாலி கட்டுவது இல்லை. அப்படி ஒரு வழக்கம் இல்லாதது நல்லதுதான். மற்ற சில்லறை அமர்க்களத்தில் அது மறந்துபோய் விடுமல்லவா?

• மெஸ்ஸில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் என் நண்பர் ஸ்ரீ திடீரென்று தேசபக்தி மிஞ்சிப் போய் ஜவான்களுக்கு ரத்தம் கொடுக்க வெலிங்டன் ஆஸ்பத்திரிக்குச் சென்றார். அவருக்கு ரத்தம் கொடுத்து அனுப்பி விட்டார்கள்.

• டில்லி கரோல்பாக்கில் உள்ள ஏராளமான மதறாசி ‘மெஸ்’களில் ஒன்றில் நுழைகிறோம். எல்லா மெஸ்களுக்கும் பொதுவான சில விஷயங்கள் : பஜனை சமாஜ நோட்டீஸ், ப்ரொப்ரைட்டரின் போட்டோ, ரீகல் தியேட்டரில் ஞாயிறு காலை தமிழ் சினிமா விளம்பரம், ஊதுபத்தி, காதில் பூ வைத்த ராயர், பேரேடு கணக்கு நோட்டு, ‘தோஸ்ஸை’ (இன்றைய ஸ்பெஷல்) அப்புறம்... ஸ்டெனோகிராபர்கள்.

• நம் தமிழ் வார, மாதப் பத்திரிகைகளின் தரத்தைப் பற்றி வருத்தப்பட வேண்டியது படித்தவர்களின் பொறுப்பு. ஒரு முக்கியமான தமிழ்ப் பத்திரிகையில் வெளியான சிறுகதையின் ஆரம்பம் இப்படி!

‘சாப்பிட்ட களைப்பால் சோபாவில் சாய்ந்திருந்த சேகரை மெல்லத் தொட்டாள் உஷா. தொடர்ந்து “இந்தாருங்கள்” என்று அழைத்தாள்.‘

உஷா மேலே என்ன செய்தாள் என்று நமக்கு ஆர்வம். இத்துடன் ஒரு ஆங்கிலக் கதையின் ஆரம்பத்தை ஒப்பிடலாம்.

‘தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த அந்த ஆசாமிக்கு ஒரு தலை இல்லை...’

இந்த ஆரம்பம் திடீரென்று நம்மைக் கவர்கிறது. மேலே அவசரப்பட்டு படிக்கிறோம். இம்மாதிரி துவங்கி எப்படி ஆசிரியர் தப்பிக்கப் போகிறார்  என்று. இப்படித் தப்பிக்கிறார்: “தலை இல்லை என்றா சொன்னேன்? மன்னிக்கவும், எனக்கு ஞாபக மறதிஅதிகம். ஒரு கை இல்லை அவனுக்கு.”
எப்படியோ, உங்களை கதைக்குள் இழுத்து விட்டார். தமிழில் நல்ல சிறுகதைகளே இல்லை என்று சொல்ல வரவில்லை. என் வருத்தம் ஏன் இப்போது கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’, கு.ப.ராஜகோபாலனின் ‘விடியுமா’ போன்ற கதைகள் வருவதே இல்லை என்பதுதான்.

• காற்று வாங்கப் போனேன் - ஒரு
கழுதை வாங்கி வந்தேன் - அதைக்
கேட்டு வாங்கிப் போனான் - அந்த
வண்ணான் என்ன ஆனான்?... ஆ.... (காற்று)

தமிழ் சினிமாப் பாட்டுகளை இம்மாதிரி கொஞ்சம் மாற்றிப் போட்டுப் பாடுவதில் உற்சாகமிருக்கிறது. மற்றொரு உதாரணம் :

பாலிருக்கும் பழமிருக்கும், பசியிருக்காது. பஞ்சணையில் தூக்கம் வரும், காற்று வராது.

நீங்கள் வேறு உதாரணங்கள் யோசிக்கலாம்.

• அச்சுப் பிழைகளில் நகைச்சுவை இருக்கிறது. ‘சம்போ கந்தா’ என்பதை ‘சம்போகந் தா’ என்று அச்சடித்தவர் தன்னையறியாமல் நகைச்சுவை நாஸ்திகராகிறார். சென்ற இதழில் சில சுவாரஸ்யமான பிழைகள் இருந்தன. சுவையுள்ள புத்தகம், சுமையுள்ள புத்தகமானது. “அத்தா, உனை நான் கண்டுகொண்டேன்” என்ற ஆழ்வார் வரி, “அத்தான் உனை நான் கண்டுகொண்டேன்” என்று சினிமாப் பாட்டாக மாறியது. நான் இவைகளை எடுத்துரைப்பதில் என் நோக்கம் இதில் உள்ள ஹாஸ்யத்தைச் சொல்றதற்கே.  அச்சகத்தார் மன்னிக்கவும். அவர்கள் தொழிலில் உள்ள எடினத்தை நான் அறிவேன்.

• இந்த இதழின் மற்றொரு பக்கத்தில் சுஜாதாவின் 6961 என்கிற கதை ஆரம்பிக்கிறதாம். இதற்கு என்ன இத்தனை அல்லோலம்? வருகிறது, வருகிறது என்று இரண்டு மாதமாக பயங்காட்டி, புதுமை, புரட்சி, அது இது என்று புரளி பண்ணி - எனக்கு என்னவோ இந்த எழுத்தாளரைச் சற்று அதிகமாகவே தூக்கி வைக்கிறார்கள் என்று படுகிறது. இதில் ஒரு ஆபத்து - அதிகமாக உயர, உரய இறுதியில் கீழே விழும்போது வலியும் அதிகமாக இருக்கும்.

-ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்ற பெயரில் சுஜாதா எழுதிய கணையாழியின் கடைசிப் பக்கங்களிலிருந்து.

Saturday, May 3, 2014

சுஜாத்...ஆ!

Posted by பால கணேஷ் Saturday, May 03, 2014
தமிழில் சில பிரயோகங்களின் ‘லாஜிக்’ எனக்குப் புரியவில்லை. இலக்கண ஆசிரியர்கள் ஏதாவது காரணம் சொல்லி விளக்கலாம். எழுத்தாளன் என்கிறோம். ஏன் கொலையாளன் என்பதில்லை? கொலையாளி என்கிறோம், உளவாளி ஏன் உளவாளனாவது இல்லை. இதற்கெல்லாம் எங்கேயாவது விதி இருக்கிறதா? பார்த்தால் இலக்கணப் புத்தகங்களில் கிடைக்காது என்றே தொன்றுகிறது. ஆனால் ‘உளவன்’ என்கிற வார்த்தை இருந்திருக்கிறது. இழந்து விட்டோம். உளவன் என்றால் SPY. ‘உளவன் இல்லாமல் ஊரழியாது’ என்கிறது குமரேச சதகம். அதை ஏன் உளவாளி ஆக்கினோம் என்று புரியவில்லை.

தமிழில் நாம் பல சொற்களை இழந்து விட்டோம். ‘இதைத் துடைச்சுரு’ என்கிறோம். துடைப்பதற்கு மற்றொரு நளினமான வார்த்தை இருந்திருக்கிறது. ‘உவனித்தல்’. ஒரு வில்லை அதை எய்துவதற்கு முன் துடைப்பதற்கு, ஏன் தயார் செய்வதற்கும் ஏற்பட்ட வார்த்தை. சீவக சிந்தாமணியில் ‘வில்லன்றே உவனிப்பாரும்’ என்று வருகிறது. எய்யத் தொடங்குவதற்குமுன் ஒருவாறு Preparation for take off. ராக்கெட் விடுவதற்கு முன் count down இவைகளுக்குப் பயன்படுத்தலாம். ‘ஏவுகணையை உவனித்தல்’. இம்மாதிரியான ஆயிரக்கணக்கான வார்த்தைகள் நம் திவாகரம் பிங்கலம் போன்ற நிகண்டுகளில் உள்ளவை வழக்கொழிந்து போவதற்குமுன் அவைகளை தூசுதட்டி புதுப்பித்து கலைச் சொற்களாக பயன்படுத்த இயலும் என்பதை நான் எல்லா மேடைகளிலும் சொல்லக் கொண்டு இருக்கிறேன்.

கணிப்பொறி வார்த்தைகள் Hardware, Software, Operating System போன்றவைகளுக்கெல்லாம் புதிய வார்த்தைகள் தேடவேண்டிய அவசியமே இல்லை. கலைச்சொற்கள் அமைப்பதில் நமக்கு ஒரு கோட்பாடு சரிவர அமைக்கப்படவில்லை. அதனால்தான் தமிழார்வத்தில் இஷ்ட்த்துக்கு வார்த்தைகளை அமைத்துக் கொண்டு இருக்கிறோம், உதாரணமாக ‘கட்டுமானப் பொறியியலில் கண்டதுண்ட பகுப்பாய்வு’ என்று ஒரு கட்டுரையைப் பார்த்தேன். இது எந்த இயல் பற்றியது என்பதாவது புரிகிறது. கட்டுமானப் பொறியியல் என்று ஆர்க்கிடெக்சரைச் சொல்கிறார். ஆனால் கண்டதுண்ட பகுப்பாய்வு..? அதில் வரும் முக்கியமான கணிப்பொறித் திறனான finite element analysis-க்கு கட்டுரையாளர் அமைத்துக் கொண்ட கலைச்சொல். இதை நாம் அங்கீரிக்குமுன் ‘கண்டதுண்டம்’ என்றதும் ஓர் ஆளை வெட்டிப் போடுவதை நாம் மறந்துவிட வேண்டும்.

-ஜுனியர் போஸ்ட், 17,12,1997

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

......‘ஒண்டித்வனி’ (தனிக்குரல்) என்று பெயர் வைத்து நாகாபரணா படப்பிடிப்பைத் துவங்க பூஜை போட்டார்கள். ‘24 ரூபாய் தீவு’ கதையைப் பற்றி அப்போது முன்னணியில் இருந்த நடிகர் அம்பரீஷ் கேள்விப்பட்டார். ‘ஒள்ளே கதே’ என்று தன்னிச்சையாக அதில் நடிக்கிறேன் என்று முன்வந்தார். அதில் நடிக்கவிருந்த சுந்தர்ராஜன் நீக்கப்பட்டார். கதைக்குக் கேடுகாலம் துவங்கியது. கன்னட நடிகை மஞ்சுளாவும் ‘நானும் உண்டு’ என்று சேர்ந்து கொண்டார். தயாரிப்பாளருக்கு இரட்டிப்பு சந்தோஷம். அம்பரிஷ் ஒருவகையில் சூப்பர்ஸ்டார் கேட்டகெரி-2 அந்தஸ்தில் இருந்தார். (ராஜ்குமார் நம்பர் 1)

“அம்பரீஷுக்காக சின்னச்சின்ன மாற்றங்களும் சமரசங்களும் செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு சின்ன ஃபைட் சீனு, சிஸ்டர் வெச்சு ஒரு சாங், அவ்வளவுதான்” என்று தயாரிப்பாள்ர் சொன்னார். “படப்பிடிப்பு மைசூர் ராஜா பேலசில் நடந்து கொண்டிருக்கிறது. வந்து பாருங்கள்” என்றார். போனேன். நாகரா அலற, மஞ்சுளா நடனமாட, சுற்றிலும் திண்டு  போட்டு சேட்டுகள் வீற்றிருந்து நோட்டுகளை தலையைச் சுற்றி விசிறிக் கொண்டிருந்தார்கள். நான், “இதெல்லாம் என் கதையில் எங்கே வருகிறது?” என்ற என்னுடைய பழக்கமாகிவிட்ட கேள்வியைக் கேட்டேன். “அம்பரிஷ் நடிப்பதால் கொஞ்சம் கமர்ஷியல் விஷயங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மற்றபடி நீங்கள் எழுதியபடியே எடுத்திருக்கிறோம்” என்றார்.

படம் வெளிவந்து கினோ தியேட்டரில் பார்த்தேன். உயிரோட்டமுள்ள ஒரு கதையை இயன்ற அளவுக்கு விகாரப்படுத்தியிருந்தார்கள். வெளியே வந்த ரசிகர்கள் “கதே பரிதவனு யாவனப்பா?” என்று அதட்டிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள், நான் மஃப்ளரால் முகத்தை மறைத்துக் கொண்டு விலகினேன். படம் ரசிகர்களால் நிராகரிக்கப்பட்டு ஒரு வாரத்தில் தூக்கப்பட்டது.

-பார்வை 365 நூலிலிருந்து...

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

கதவு மெல்லத் திறக்க வினிதா நடுங்கிக் கொண்டே வெளியே வந்தாள், “இஸ் தி ஷூட்டிங் ஓவர்? வஸந்த், உங்களுக்கு ஏதாவது அடியா?” என்றாள். “அப்படி ஒண்ணும் பிரமாதமில்ல. சின்னதா மார்ல குண்டு பாய்ஞ்சிருக்கு. ஆபரேஷன் பண்ணி எடுத்துட்டா சரியாப் போயிடும், உம் மார்ல எதும் பாயலியே..?”  “வஸந்த்... இஸ் இட் டரூ? நிசமாவே உங்க மார்ல... ஆர் யூ ஆல்ரைட்?” “கவலையே படாத. உன்னை வீட்டில கொண்டு விட்டுட்டு அப்படியே ஆபரேஷன் தியேட்டர் போயிடறேன்...” “மிஸ்! அவன் சொல்றது எதையும் நம்பாதீங்க. புருடா விடறதில மன்னன். உங்களை போலீஸ் வண்டியில கொண்டு விட்டுடறோம்..,” “பாஸ்., இதானே வேணாங்கறது” என்றான் வஸந்த். அவளை நோக்கித் திரும்பி புன்முறுவலித்து. “இவங்க சொல்றதையெல்லாம் கேக்காத வின்னி. வாரம் எட்டு நாள் இவங்க உண்மைக் காதலுக்கு தடை விதிப்பாங்க. நான் உனக்கு ரேகை பார்க்கணும். மச்ச சாஸ்திரம் தெரியுமோ உனக்கு..?” “தெரியாதே!” “உனக்கு எங்கெல்லாம் மச்சம் இருக்குன்னு காட்டு, ஐ மீன்... சொல்லு. நான் அங்கங்கெல்லாம், ஸாரி... அதுக்கெல்லாம் பலன் சொல்றேன். வா...” “பழனிவேல்..! அவங்க மூணு பேர்கூட இவனையும் அரெஸ்ட் பண்ணிட்டுப் போங்க...” என்றான் கணேஷ்.

-‘மீண்டும் ஒரு குற்றம்’ நாவலிலிருந்து...

Thursday, July 18, 2013

வாலிபக் கவிஞனே, நீ வாழி!

Posted by பால கணேஷ் Thursday, July 18, 2013

திருவரங்கத்திலிருந்து புறப்பட்டது அவனது கவிதையுலா
திரைத்தமிழ் தழைக்க அவன் பாடிவந்த முழுநிலா!

சென்னை வந்தவன் பட்டான் பல துயரம்! - அவனை
முன்னிறுத்தியது அவையில் வாத்யாரின் அன்புக்கரம்!

எதிர்ப்பட்டோர் பலம்பாதி கொள்ளும் வாலியெனும்
பெயர்சூடிய அந்நல்லோனின் திருநாமம் ரங்கராஜன்
பழகினோர் பகன்றிடுவார் மாண்பில் அவனோர் தங்கராஜன்!

அவதார புருஷன், பாண்டவர் பூமியெனப் படைத்தான்பல காவியம்
நற்றமிழில் நடனமிடும் அவன்றன் எழுத்து மங்காததோர் ஓவியம்!

ஜாலியான பாடல்களும் புனைந்தவனை உலகம் செய்தது கேலி
கோலமிகு தீந்தமிழ்ப் பாக்களால் வாயடைக்க வைத்தானந்த வாலி!

அவன்றன் கவிதையை அளவிட உலகிலிலை ஓர்அலகு
அம்முதியவனை வாலிபக் கவிஞனெனக் கொண்டாடியது இவ்வுலகு!

தமிழரங்கில் மணிப்பிரவாளமாய் அவன்பாடாத சரணமில்லை
தமிழர்தம் உளம்தனில் எந்நாளும் அவனுக்கு மரணமில்லை!


=====================================================
என்னுடன் ‌இணைந்து இங்கு வாலிபக் கவிஞருக்கு இரங்கல் தெரிவிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி!
=====================================================
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube