Sunday, January 29, 2012

மொறுமொறு மிக்ஸர் - 2

Posted by பால கணேஷ் Sunday, January 29, 2012
முன்குறிப்பு : இந்தப் பதிவின் நடுவில் பெண்கள் படிக்கக் கூடாத ஒரு ஜோக்கை வெளியிட்டிருக்கிறேன். தங்கைகள், அக்காக்கள், தோழிகள் எல்லாருக்கும் அதைப் படித்தால் கோபம் வரும் என்பதால் தாண்டிச் சென்றுவிடும்படி வேண்டுகிறேன்.

================================================

ராஜுவும் லதாவும் விரித்து வைக்கப்பட்ட ஒரு செய்தித்தாளின் இரு முனைகளில் நிற்கிறார்கள். ராஜு கை நீட்டினால் லதாவைத் தொட முடியவில்லை. லதா தன் கையை நீட்டி ராஜுவைத் தொட முடியவில்லை. இது எப்படி சாத்தியம்? யோசியுங்கள்... பிறகு ‌சொல்கிறேன்.

================================================

சென்னை ராயப்பேட்டை பகுதியில் ஒருசில தெருக்களுக்கு மட்டும் ஒரு தனிப் பெயர் உண்டு. கேட்டால் குபீர் என்று சிரிக்கத் தோன்றும். அப்பகுதியின் பெயர் கொலைகாரன்பேட்டை! நான் பார்த்த வரையில் அந்தப் பகுதியில் கொலை காரர்கள் யாரும் வசிப்பதாகத் தெரியவில்லை; சாதாரண ஜனங்கள்தான் இருக்கிறார்கள். எதனால் இப்படி ஒரு வினோதப் பெயர் வந்திருக்கக் கூடும்..? பல இடங்களுக்கு எதனால் இப்படிப் பெயர் வந்தது? எப்படி மருவியது என்றே கண்டுபிடிக்க இயலவில்லை. இல்லையா...!

==============================================

ண்டனில் வெஸ்ட் எண்ட் தியேட்டரில் நிர்வாணக் காட்சிகள் நிறைந்த ‘ஓ கல்கட்டா!’ நாடகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாடக நிர்வாகிகளுக்குப் புதிதாக ஒரு பிரச்னை முளைத்திருக்கிறது. நாடகக் கொட்டகையில் சரியான முறையில் கதகதப்பு ஏற்படுத்தும் சாதனம் நிறுவ்பப்டாவிடில், நடிகர்கள் அத்தனை‌ பேரும் உடையணிந்து மேடை மீது தோன்றப் போவதாகப் பயமுறுத்தியிருக்கிறார்கள்!
-25.12.1970 தினமணிகதிரில் வெளிவந்த துணுக்கு!

================================================

து விளமபர நேரம். 1970-75களில் தினமணி கதிரில் வெளிவந்த ஒரு விளம்பரம் இது:

================================================

ப்போது ‘பெண்கள் படிக்‌கக் கூடாத’ அந்த ஜோக்:

டாக்டர் தன் முன்னால் வந்து அமர்ந்த அந்த இளைஞனை ஏறிட்டார். ‘‘சொல்லுப்பா... என்ன உன்னோட பிரச்சனை?’’

இளைஞன் சொன்னான்: ‘‘டாக்டர்! எனக்கு நூறு வயசு வரைக்கும் வாழணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. அதுக்கு நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க...’’

டாக்டரின் பதில்: ‘‘உடனே கல்யாணம் பண்ணிக்கோ...’’

இளைஞன் முகம் மலர்ந்தவனாய், ‘‘கல்யாணம் பண்ணிக்கிட்டா நூறு வயசு வரைக்கும் வாழலாமா டாக்டர்?’’ என்று கேட்க, டாக்டர் சிரிப்புடன் பதிலிறுத்தார், ‘‘இல்லை! இந்த மாதிரி நூறு வயசு வரைக்கும் வாழணுங்கற அபத்தமான ஆசை எல்லாம் வராது!’’ என்று.

‘பெண்கள் படிக்கக் கூடாத ஜோக்’ என்றதும் நான் ஏதோ 18+ ஜோக்கைப் போட்டிருப்பேன் என்று நினைத்து வேகமாகத் தாண்டி வந்தவர்கள் முகத்தைத் துடைத்துக் கொள்ளுங்கள்! ஹி... ஹி...

==================================================

சுஜாதா! பன்முக எழுத்துக்களுக்குச் சொந்தக்காரரான இவரது படைப்புகளைப் படிக்கும் போதெல்லாம் மனதினுள் ஒரு பிரமிப்பு எழும். தினமணி கதிர் பத்திரிகையில் எழுதிய ‘நில் கவனி தாக்கு’ தொடர்கதைக்கு அதன் ஆறாவது வாரத்தில் இப்படி முன்கதைச் சுருக்கம் கொடுத்திருக்கிறார்:

இதுவரை : இந்த முன்கதை உங்களுக்குப் புரியாது. பேசாமல் சென்ற ஐந்து இதழ்களைப் படித்து விடுங்கள்! நான் தாக்கப்பட்டேன். முதலில் அந்தப் பெண்ணின் கண்களால். பின்பு சில பெயர் தெரியாத ரெளடிகளால். ஒரு விஞ்ஞானியை இழந்தேன். நடேசன் என்னைத் திட்டாமல் விடுவாரா? டெலிபோன் கால் ஒன்றில் ஐம்பது லட்சம் கேட்டார்கள். ‘கால்’ எங்கிருந்து வந்தது என்ற கண்டுபிடித்து அங்கே சென்றால், இந்த வெரோனிக்கா... சே சே, நான் பார்க்கவே இல்லையே! கடமையே கண்ணாக இருந்தேன்.

-எப்பூடி! ரத்தினச் சுருக்கம் என்பதற்கும் மேலாக பிளாட்டினச் சுருக்கமாக இப்படி முன்கதையைத் தர இந்த ஜாம்பவானால் மட்டும்தான் முடியும்! இதே நாவலில் ஒரு காபரே நடனம் நடப்பதை கதாநாயகன் பார்க்கிறான். அதை இப்படி விவரிக்கிறார்:

‘தம்’ என்று ஏதோ அதிர்ந்தது. ‘‘பத்து’’ என்று வழுக்கையின் குரல் ஒலித்தது. வெரோனிக்கா தன் இடது கை வளையல்களைக் கழற்றி விசிறி எறிந்தாள். மீண்டும் லயம். மீண்டும் சுழற்சி. மீண்டும் சிரிப்பு. மீண்டும் ‘தம்’. ‘‘ஒன்பது’’ என்றான் வழுக்கை. வெரோனிக்கா தன் முத்து மாலையைக் கழற்றினாள். மீண்டும் சுழற்சி. மீண்டும் ‘தம்’. ‘‘எட்டு’’ காது வளையங்கள் கழன்றன... ‘தம்’. ‘‘ஏழு’’ கார்டிகனின் ZZZப்! ‘‘ஆறு!’’ ஸ்கர்ட் உதிர்ந்தது. அவள் காஃபி நிற உடல் நீச்சல் உடையில் பளபளத்தது.

‘‘ஐந்து’’

இரண்டு நட்சத்திரங்கள், பூ

‘‘நான்கு’’

ஒரு பூ
ரு பூ
பூ


|

-இப்படி வார்த்தைகளிலேயே படம் பிடித்துக் காட்டும் வித்தை... No chance except One and only Sujatha!

==================================================

புதிரின் விடை மிகவும் ஸிம்பிளானது. ஒரு அறையில் கதவு மூடப்பட்டிருக்க, கதவிடுக்கில் நியூஸ் பேப்பர் நுழைக்கப்பட்டிருக்கிறது. இந்த முனையில் ராஜுவும் அந்த முனையில் லதாவும் இருந்தாலும் கதவு மூடியிருப்பதால் ஒருவரை ஒருவர் தொட இயலவில்லை. அவ்ளவ் தாங்க... ஹி... ஹி...

==================================================

இப்போது... To end with a smile, 1970-75களில் தினமணி கதிரில் வெளிவந்த ஒரு ஜோக்!

==================================================
-சுஜாதா 1970லிருந்து 1976 வரையிலான காலகட்டத்தில் தினமணி கதிர் பத்திரிகையில் எழுதிய தொடர்களை பைண்ட் செய்து வைத்திருந்ததை புரட்டிக் கொண்டிருந்ததில் இத்தனை மேட்டர்களும் தேறின. நல்லாருக்கா..?

Wednesday, January 25, 2012

என் கிறுக்கல்கள்!

Posted by பால கணேஷ் Wednesday, January 25, 2012
அன்று

வெறிகொண்ட கூட்டம் ஒன்று
    குரல் உயர்த்திக் கூச்சலிட்டது!
நெறிதவறி நடக்கிறது அரசாட்சி
    மன்னர் இறந்தால் அவர்மகன்
பிறவியினால் தகுதி வருமோ?
    ஒழித்திட வேண்டும் இம்முறையை
பிறையென வளர்ந்து வாழ்ந்திட
    வேண்டும் ‌எமக்கு மக்களாட்சி!


இன்று

வெறிகொண்ட கூட்டம் ஒன்று
    குரல் உயர்த்திக் கூச்சலிடுகிறது!
நற்குணமிக்க தலைவா! வாழிநீயென்று
    அருகினில் தலைவரின் புதல்வன்
கூட்டத்தைப் பார்த்துக் கையசைக்க,
    அன்னாரையும் வா‌‌ழி‌யெனக் கூவுது கூட்டம்!

அக்காலத் தமிழினம் தன்னையுணர்ந்து
    எழுச்சி பெற்று போரிட்டது
மக்களாட்சி பெற்று மாண்புற வேண்டுமென்று!
    காலப்போக்கில் உணர்ச்சிகள் மறைய
இக்காலத் தமிழினம் தன்னையுணராமல்
    மன்னராட்சியிலேயே மூழ்கி வாழ்கிறது!
எக்காளமிடுகிறது இதுவே நல்லாட்சியென...
    மன்னர் பரம்பரையோ இன்றளவும்
‌ஒய்யாரப் பவனிவருகிறது அப்பாவிகளின் தோள்களிலே!

மேலே உள்ள கவிதை(ன்னு நினைச்சு நான் கொடுத்திருக்கிற)யைப் படிச்சுட்டு குட்டணும்னு நினைக்கறவங்கல்லாம் தாராளமாக் குட்டுங்க. ஏன்னா... நம்ம வாசகர்கள்ல நிறையப் பேர் கவிதை ‌எழுதறவங்கதான்! தட்டிக் கொடுக்கற அளவுக்கு இருக்குன்னு நினைச்சு பாராட்டினீங்கன்னா... இப்படி கவிதை எழுத முயற்சிக்கலாம்னு எனக்கு தைரியம் ஊட்டிய புலவர் திரு.ச.இராமாநுசத்தைச் சேரட்டும் அவையனைத்தும்!

அப்புறம்... கவிதைன்னு ட்ரை பண்ணிட்டு, காதல் பத்தி எழுதலைன்னா கவிஞர்கள் ஜாதில சேத்துக்காம ஜாதிப் பிரஷ்டம் பண்ணிடுவாங்கன்னு கேள்விப்பட்டேன். அதனால... இன்னொண்ணு கீழே... (சோதனை இன்னும் விடலையான்னு யாரோ முணுமுணுக்கறது கேக்குது)

 
தேவதைகள் இமைப்பதில்லை!

இமைககாது என் முகத்தையே
பார்ப்பதேனடா என் உளம்கவர் கள்வா
என்றாள் என் தேவதை!

ஆலயத்தின் சிற்பக்கூடத்திற்கு
உன்னுடன் நான் செல்ல
உயிர்ச்சிலையைக் கண்டு
கற்சிலைகள் முகம் திருப்பிக் கொண்டனவே...
உன் விழிகள் இமைக்கின்றனவா
என்பதையே உன்னித்தேன் என்றேன்!

கலகலவென்று நகைத்து
என்னைப் பார்த்து ஒற்றைக்
கண் சிமிட்டினாள் என் தேவதை!

பின்குறிப்பு : சனிக்கிழமையுடன் என் அஞ்ஞாத வாசம் முடிகிறது. ஞாயிறு முதல் அனைவரின் தளங்களுக்கும் வழக்கம் போல் என் வருகை இருக்கும்.

Sunday, January 22, 2012

ஞாபக நதிக் கரையினிலே...

Posted by பால கணேஷ் Sunday, January 22, 2012
நேரத்தின் மதிப்பை உணராத பெரும்பாலனவர்களை நான் அன்றாட வாழ்வில் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறேன். என்னைப் பொறுத்த வரை என்னுடைய நேரத்திற்குக் கொடுக்கும் மதிப்பைவிட பல மடங்கு அதிகமாக மற்றவர்களின் நேரத்திற்கு மதிப்புக் கொடுப்பேன்.

 ‘‘இதோ அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்’’ என்று போன் செய்யும் என் நண்பன் கால் மணி நேரம் கழிந்து வந்து சேர்கிறான். தாமதமாய் வந்துவிட்டோமே, அடுத்தவனின் நேரத்தை வீணடித்து விட்டோமே என்று எந்த உணர்வுமின்றி இருக்கிறான். ’அஞ்சு நிமிஷம்’ என்பது பலரின் அகராதியில் ‘கால் மணி நேரம்’ அல்லது ‘அரை மணி நேரம்’ என்று அர்த்தமாகிறது. இதுகுறித்து எந்தவிதக் குற்ற உணர்வுமின்றி இவர்கள் இருப்பதுதான் இன்னும் கொடுமை.

இன்னொரு நண்பரின் இப்படிச் செய்வார். அவரும் நானும் வடபழனி சந்திப்பில் சிக்னலில் நின்றிருக்கும் போது போன் வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ‘‘அசோக் பில்லர் வந்துட்டோம் பிரதர். அங்கயே இரு அஞ்சு நிமிஷத்துல வந்துடறோம்’’ என்பார் ஈக்காடு தாங்கலில் காத்திருக்கும் நண்பரிடம். வடபழனி சிக்னலிலிருந்து ‘அஞ்சு’ நிமிஷத்தில் ஈக்காடுதாங்கலை அடைவது ஹெலிகாப்டரில் போனால்தான் சாத்தியம்!  ஏனிப்படி அனாவசியமாகப் பொய் சொல்லி அந்த நண்பரைக் காத்திருக்க வைத்து அவமதிக்க வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை.

இதுபற்றி என் ஆதங்கத்தை, கோபத்தை என் நண்பன் ஒருவனிடம் வெளிக்காட்டியபோது அவன் சொன்னான். ‘‘ஆமாம். அஞ்சு நிமிஷத்துல வர்றேன்னு சொல்லிட்டு பத்து நிமிஷத்துல வந்நதுக்கு கோவிச்சுக்றியே... அந்த அஞ்சு நிமிஷத்துல என்ன சாதிச்சுடப் போறியாம்?’’ கடுங்கோபத்துடன் அவனைத் திட்டிவிட்டுக் கிளம்பி விட்டேன். இந்த அலட்சியம்தான் நமக்கெல்லாம் பெரும் எதிரி. ஐந்து நிமிடத்தில் முடிக்கக் கூடிய காரியங்கள் எதுவும் எனக்கு இருக்காதா? அதைத் தீர்மானிக்க அவன் யார்? மற்றவர்களின் நேரத்தை மதிக்காதவனால் தன்னுடைய நேரத்துக்கு மதிப்புத்தர இயலாது. நேரத்துக்கு மதிப்புத் தராதவனால் எந்த ஒரு காரியத்தையும் சாதிக்க இயலாது.

நான் யாரையாவது சந்திக்கப் போகிறேன் என்றால் அவர் இருக்கும் ஏரியாவை அடைவதற்கு டிராஃபிக்கில் எவ்வளவு நேரம் பிடிக்கும் என்பதைக் கணக்கிட்டு ஒருவேளை எதிர்பாராத டிராஃபிக் ஜாம் ஏற்பட்டால் என்ன செய்வது என்பதையும் கருத்தில் கொண்டு, பத்து நிமிடம் கூடுதலாக ஒதுக்கித்தான் நேரம் ஃபிக்ஸ் பண்ணுவேன். சொன்ன நேரத்திற்கு சரியாக வருவதாலும், தேவையற்ற அரட்டையைத் தவிர்த்து பேச வேண்டிய விஷயங்களைப் பேசுவதாலும் மற்றவர்களிடம் மதிப்புக் கூடுமென்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். நீங்களனைவரும் இதுபோல நேரத்திற்கு மதிப்புத் தர வேண்டுமென்பது என் ஆசை.

ஆசைக்கு அளவேதும் உண்டோ? சைக்கிளில் செல்கையில் பைக்கில் செல்ல ஆசை. பைக்கில் செல்கையில் அருகில் கார் ஓட்டுபவனைப் பார்த்து ஆசை. கார் வாங்கியதும், விமானத்தில் பறப்பதைப் பற்றி ஆசை. விமானத்தில் பறக்கும் வசதியை அடைந்து பறக்கும் போதோ, ‘ஒரு காலத்துல நிம்மதியா காலார நடந்து போன சுகம் வருமா?’ என்று அதை நினைத்து ஆசை. ‘ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்றார் புத்தர். ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்கிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ். தலையைப் பிச்சுக்கலாம் போல ஒரே குழப்பமாயிருக்கு கடவுளே!

கடவுளை வேண்டினானாம் ஒருத்தன்: ‘‘பசி தாங்க முடியலையே இறைவா. இன்னிக்கு நான் நடந்து போற வழியில எதாவது பணம் கீழே கிடந்து எனக்குக் கிடைககற மாதிரி பண்ணு. எவ்வளவு பணம் கிடைச்சாலும் அதுல பாதிய உன் உண்டியல்ல போட்டுடறேன்...’’ தரையைப் பார்த்துக் கொண்டே நடந்து சென்றவனின் கண்களுக்கு சற்று தூரத்தில் 500 ரூபாய் நோட்டு ஒன்று கீழே விழுந்து கிடப்பது கண்ணில் பட்டது. உடனே அதைப் பாய்ந்து எடுத்த அவன் மகிழ்ச்சியுடன் சிரித்தான். சற்று யோசித்தான். பின் வானத்தை நோக்கி கை நீட்டிச் சொன்னான்: ‘‘கடவுளே... உன்னோட 500 ரூபாயை எடுத்துக்கிட்டு என்னோட பங்கை கண்ணுல காட்டினதுக்கு ரொம்ப நன்றி!’’. இப்படிச் சுயநலமாக நேர்மையற்று சிந்திப்பதுதான் மனிதனின் மனம்.

மனம் என்பது மனித உடலில் எங்கே இருக்கிறது? அலுவலகம் போ, வீட்டுககு வா, இவன் உன் நண்பன் என எல்லாவற்றையும் அறிவுறுத்துவது மூளை. அதிலிருந்துதான் எண்ணங்கள் பிறக்கின்றன. எனில் அதுதான் மனமா? பின்னே ‘நெஞ்சைத் தொட்டுச் ‌சொல்லு’ என்று மனம் என்கிற வஸ்து அங்கிருப்பது போல் பேசுகிறோமே... அது ஏன்?  அழுவதும், சிரிப்பதும், பாடுவதும், படம் வரைவதும் எல்லாம் மனதின் செயலா அன்றி மூளையின் செயலா? மூளை எனில் இனி ‘மனச்சாட்சியைக் கேட்டுப் பாரு’ என்று சொல்வதற்குப் பதில் ‘மூளையக் கேட்டுப் பாரு’ என்று சொல்ல வேண்டுமோ? என்ன ஒரு இடியாப்பக் குழப்பம்!

இடியாப்பம்தான் எனக்கு மிகவும் பிடித்த டிபன். ‘சேவை’ என்று எங்கள் வீட்டில் அழைக்கப்படும் அதை தேங்காய் சேவை, எலுமிச்சம் சேவை, வெல்ல எள்ளுப்பொடி சேவை என்று என் அம்மா பல வெரைட்டிகளில் செய்து தருவார்கள். ஆசையாக அடிககடி செய்யச் சொல்லிச் சாப்பிடுவேன். ‘அன்னையோடு அறுசுவை போம்’ என்று சொன்னவன் எவனோ அவன் வாயில் சர்க்கரை போட வேண்டும். மனைவி வநததும் அது போச்சு. இவள் சமையலில் பல விஷயங்களை நன்றாகவே செய்வாள் என்றாலும் இந்த சேவை விஷயத்தில் வீக். ‘‘சரி, தா... சாப்பிட்டு வைக்கிறேன்’’ என்கிற மாதிரிதான் இருக்கும் என்னவள் செய்வது! வாட் டு டூ? எல்லாம் விதி!

விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்கிறார்களே... உங்களுக்கு அதில் உடன்பாடு உண்டா? கல் தடுககினால் நீங்கள் கீழே விழுவீர்கள் என்பது பெளதீக விதி. இன்ன கரைசலை இன்ன கரைசலுடன் சேர்த்தால் இன்ன செயல் நிகழும் என்பது ரசாயன விதி. இதுபோன்ற விதிகளின்மேல் எனக்கு நம்பிக்கை உண்டு. தலையில் எழுதப்பட்டதாகச் சொல்லும் விதி மேல்தான் நம்பிக்கை இல்லை. ‘விதிப்படிதான் நடக்கும்’ என்று அதன்மேல் பழியைப் போட்டு சோம்பி உட்கார்ந்து விடுவது தவறு என்பது என் எண்ணம்.

எண்ணம் எப்படியோ அப்படித்தான் வாழ்க்கையும் அமையும் என்பது நிஜம்தானா? ‘அன்பைக் கொடுத்து, அன்பைப் பெற்று மகிழ்ச்சியாய் வாழத்தான் இந்தப் பிறவி’ என்பது என் கருத்து. அப்படித்தான் வாழ முயற்சித்து வருக்கிறேன். நல்லெண்ணங்களுடன், பாசிட்டிவ் திங்க்கிங் உடன் இருந்தால் மற்றவர்களுக்கும் அந்த எண்ண அலைகள் பரவும் என்று ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன். நிஜமா என்பதுதான் தெரியவில்லை. டிவியில் சீரியல்களைப் பார்த்தால் மனநலம் பாதிக்கும் என்பதிலிருந்து இந்தக் கூற்றை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. அப்படி எல்லோரையும் கட்டிப் போட்டல்லவா வைத்திருக்கிறது இந்த டிவி.

டிவி பார்ப்பதில் இன்றைய குழந்தைகள் கவனம் திரும்பியதால் பல நல்ல விளையாட்டுக்களை அவர்கள் இழந்து விட்டார்கள். படிப்பு, டியூஷன், அப்பா-அம்மா விருப்பத்திற்காக பாட்டு, டான்ஸ் ‌போன்ற கிளாஸ்கள் எல்லாம் போக கிடைக்கும் சற்று நேரத்தில் அவர்கள் டிவியில் போ‌கோ போன்ற சேனல்களைப் பார்க்கிறார்கள். இல்லாவிட்டால் கம்ப்யூட்டர் முன் கேம்ஸ் விளையாட அமர்ந்து விடுகிறார்கள். ரோட்டில் ஆடுவதென்றால் கிரிக்கெட்தான் விளையாட்டு போலருக்கு. நான் சின்னப் புள்ளையில விளையாடின கோலிக் குண்டு, பம்பரம் போன்ற விளையாட்டுக்க ளெல்லாம்கூட வரும் காலத்தில் வழக்‌‌கொழிந்து விடும் என்று தோன்றுகிறது. பாவம் குழந்தைகள்!

குழந்தைகள் என்றால் பிடிககாதவர்களே இருக்க முடியாது... žம்கிீபந‌ைிகர்ரரவிீரஙயரக்ர

சரிதா: ஐயய்யோ... இவருக்கு என்னமோ ஆய்டுச்சு. ஏதோ சீரியஸா டைப்படிக்கிறாரேன்னு பாத்தா நான்ஸ்டாப்பா புலம்பிட்டேயில்ல இருக்காரு. ஸாரி மக்கா! அடுத்த பதிவு எழுதறதுக்குள்ள இவரை சரி பண்ணிடறேன். ஸீ யு!

Friday, January 20, 2012

நடை வண்டிகள்: முன்னுரை

Posted by பால கணேஷ் Friday, January 20, 2012
ன் தளத்தில் தொடர்ந்து படித்து வரும் நண்பர்கள் அனைவரும் ஒரு விஷயம் புரிந்திருக்கும். நிறையப் புத்தகங்கள் படிப்பவன் நான் என்பதுதான் அது. நாவல்கள், கட்டுரைகள், சிறு சிறு துணுக்குகள், நகைச்சுவை என்று எந்த வடிவமாக இருந்தாலும் படிப்பதை நேசிப்பவன் நான். தீவிரமான இந்த வாசிப்புப் பழக்கம் எப்போதிலிருந்து என்னைப் பற்றிக் கொண்டது என்பதை சற்றுப் பின்னோக்கிப் பார்க்கிறேன்.

ள்ளி நாட்களில் பாடப் புத்தகங்கள் தவிர வேறு புத்தகங்கள் எதையும் படித்ததில்லை. கொஞ்சம் பெரிய கிளாஸ் (6,7) வந்த சமயத்தில் அம்புலிமாமா, ரத்னபாலா போன்ற காமிக்ஸ் புத்தகங்கள் படித்ததுண்டு. அவ்வளவே. மற்றபடி சினிமா பார்ப்பதில் இருந்த ஆர்வம் படிப்பதில் இருந்தில்லை. அப்படிப்பட்ட என்னை நிறையப் புத்தகங்கள் படிக்கச் செய்தது அழகப்பா கலைக் கல்லூரி.

அழகப்பா கல்லூரியில் மிகப் பெரிய நூலகம் உண்டு. எல்லா சப்ஜெக்ட் புத்தகங்களும், எல்லா எழுத்தாளர்களின் புத்தகங்களும் அங்கே இருக்கும். கல்லூரியில் கொடுத்த இரண்டு டோக்கன்களை உபயோகப்படுத்தி அம்மா விரும்பிப் படிக்கும் லக்ஷ்மி எழுதிய புத்தகங்களை எடுத்துக் கொடுப்பேன். திருப்பித் தருவதற்கு முன் ஒன்றிரண்டை படித்துப் பார்த்து ரசித்ததுண்டு.

என்னுடன் பொருளாதாரம் படித்த நண்பர்களெல்லாம் நூலகத்திற்குச் செல்லும் போது போட்டி போட்டுக் கொண்டு சாண்டில்யன் எழுதிய புத்தகங்களை எடுத்துச் செல்வார்கள். சாண்டில்யனின் சில புத்தகங்களை யார் முதலில் படிக்க எடுத்துச் செல்வது என்பதில் ஏதோ அடிதடி ரேஞ்சுக்கு முட்டி மோதிக் கொள்வார்கள். சரி, அந்த ஆசாமி என்னதான் எழுதியிருக்கிறார் பார்க்கலாமே என்று யாரும் போட்டியிடாத அவருடைய குட்டி புத்தகம் ஒன்றை (வசந்த காலம்) எடுத்துப் போய்ப் படித்தேன். என்ன ஒரு தமிழ் நடை! என்ன விறுவிறுப்பு! சாண்டில்யன் என்னைப் பற்றிக் கொண்டார். அவரது எல்லாப் புத்தகங்களையும் நானும் போட்டி போட்டு எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். அவருக்கு அடுத்து தமிழ்வாணனும், சுஜாதாவும் என்னை விடாமல் பிடித்துக் கொள்ள அந்த இருவரின் எல்லாப் புத்தகங்களையும் எடுத்துச் சென்று படிக்க ஆரம்பித்தேன்.

ல்லூரி முடித்து வெளிவந்து வேலை தேடிய காலங்களில் என் செலவுகளுக்கும், அப்ளிகேஷன் போடும் செலவுகளுக்காகவும் காலையில் என் நண்பனின் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் பகுதிநேர இன்ஸ்ட்ரக்டராகவும், மாலையில் நான் இருந்த பேங்க் காலனி ஏரியா மக்களுக்காக சர்க்குலேஷன் லைப்ரரி ஒன்றை நடத்தியும் சம்பாதித்து வந்தேன். லைப்ரரிக்காக வார, மாத இதழ்கள் அனைத்தையும் வாங்க வேண்டியிருந்தது.

1985ல் துவங்கி 90 வரையில் மாத நாவல்களின் பொற்காலம் எனலாம். ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், சுபா, பட்டுககோட்டை பிரபாகர், புஷ்பா தங்கதுரை, தேவிபாலா ஆகிய அறுமூர்த்திகள் எழுதித் தள்ளிக் கொண்டிருந்தார்கள். (பின்னல் தாமதமாக வந்து சேர்ந்தவர் இந்திரா செளந்தர்ராஜன்) பாக்கெட் நாவல், க்ரைம் நாவல், எ நாவல் டைம், குடும்ப நாவல், ராணிமுத்து, குங்குமச் சிமிழ், கார்த்திகா, டேபிரேக், ஊதாப்பூ, ரேகா, சின்ன ரேகா, டெவில், சஸ்பென்ஸ், சூப்பர் நாவல், ராஜாராணி, ரம்யா, ஏ ஒன், சுஜாதா, சத்யா, நாவல்டி, கோஸ்ட், உங்கள் ஜூனியர், உல்லாச ஊஞ்சல், புல்லட் ஐ, லென்ஸ் நாவல்.... ஹப்பா, மூச்சு வாங்குது. இப்படி ஒரு மாதத்தில் ஏறத்தாழ 25 மாதநாவல்கள் வெளியான காலம் அது. எல்லாவற்றையும் லைப்ரரிக்காகவும், சொந்த விருப்பத்துக்காகவும் படித்து ரசித்துக் கொண்டிருந்தேன்.

இப்படி லைட் ரீடிங்காக ஆரம்பித்த என் படிக்கும் பழக்கம் பின்னர் ஹெவி ரீடிங்காகவும் மாறியது. இலக்கியம் எழுதும் எழுத்தாளர்களையும் விரும்பிப் படித்தேன். (இந்நாட்களில் பின்நவீனத்துவம் என்று எழுதி, படிப்பவர்களை பாயைப் பிறாண்டச் செய்யும் சில நவீன இலக்கிய(?) வாதிகளை நான் படிப்பதில்லை) நான் விரும்பிப் படித்த எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்கள் அனைவரையும் ஒருமுறையாவது சந்தித்துப் பேசிவிட வேண்டும் என்ற தீராத ஆவல் எனக்குள் இருந்தது. மதுரையில் இருந்து கொண்டு எவ்வாறு எழுத்தாளர்களைச் சந்திப்பதும் கதைகள் குறித்துப் பேசுவதும் இயலும்? ஆகவே நான் படித்த நாவல்கள் குறித்து என் விமர்சனங்களை கடிதங்களாக அனுப்பிக் கொண்டிருந்தேன். (இப்படி எழுதுவதையெல்லாம் எழுத்தாளர்கள் கவனித்துப் படிப்பார்களா? சில சமயம் பாராட்டாமல் திட்டியும் எழுதுகிறோமே... என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் எனக்குள் தோன்றும்)

பயப்படாதீங்க... நான்தான்! அழகப்பா காலேஜ்ல படிக்கறப்ப... (எவ்ளோ பெரிய கண்ணாடிடா!)

அப்படி நான் வியந்து ரசித்த எழுத்தாளர்களில் சிலருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு பின்னாட்களில் எனக்குக் கிடைத்தது. நான் பழகிய எல்லா எழுத்தாளர்களிடமிருந்தும் நான் கண்ட பல நல்ல விஷயங்களை (சுட்டு) எனதாக்கிக் கொண்டேன். என்னை நான் பண்புள்ளவனாக மேம்படுத்திக் கொள்ள நான் பழகிய, இன்றும் பழகிவரும் எழுத்தாளர்கள் அனைவருமே காரணகர்த்தாக்கள். (அதனால் ‘என்னைச் செதுக்கிய சிற்பிகள்’ என்றுதான் தலைப்பு வைப்பதாக முதலில் எண்ணியிருந்தேன்.) நடை பழகிக் கொள்ளும் குழந்தைகள் முதலில் நடை வண்டியைப் பிடித்து நடை பழகி, பின் தானே நடப்பது போல எனக்கு நடை வண்டிகளாக இருந்த எழுத்தாளர்களையும், அவர்களுடனான என்னுடைய நட்பைப் பற்றியும் நான் சொல்லிச் செல்லவிருக்கும் தொடர்தான் இந்த ‘நடை வண்டிகள்’.

எழுத்தாளர்களுடன் பழகி வருவதில் நிறைய நல்ல விஷயங்களும், இனிமையான அனுபவங்களும் கிடைத்ததைப் போலவே ஒரே ஒரு எழுத்தாளர் எனக்குக் கசப்பான அனுபவத்தைக் கொடுத்தார். (இனி அவரைச் சந்திக்கவே வேண்டாமடா சாமி என்று மனதிற்குள் அலறும் அளவுக்கு). அதுபோன்ற கசப்புகளை விலக்கி, இனிப்புகளை மட்டுமே இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள வருகிறேன். என்னைத் தொட்டு நீங்களும் தொடர்வீர்கள் தானே...

பின் குறிப்பு: என் நண்பர்களின் பதிவுகளையும், என் தளத்துக்கு வராத மற்றும் பலருடைய பதிவுகளையும் படித்துக் கருத்திடுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பிடித்த அந்த விஷயத்தை சில சொ(நொ)ந்தப் பிரச்சனைகள் காரணமாக இன்னும் ஒரு வாரத்திற்குச் செய்ய இயலாதவனாக இருக்கிறேன். அடுத்த வாரத்திலிருந்து அனைவரின் தளங்களிலும் என் வருகை இருக்கும். பொறுத்தருளுங்கள் நண்பர்களே!

பின்பின்குறிப்பு: நான் இந்த வலையைத் துவக்கி எழுதத் துவங்கியபோது எனக்குள் பெரிதாய் தன்னம்பிக்கை இருக்கவில்லை. ‘‘பல பெரியவங்கல்லாம் எழுதற இடத்துல நாம என்ன எழுதிக் கிழிச்சிடப் போறோம்... பத்து பேராவது நாம கிறுக்கறதைப் படிச்சாச் சரி’’ என்ற மனநிலைதான் இருந்தது. இன்று 50வது பதிவு வெளியிடும் வேளையில் என்னை நம்பி, என்னைப் பின்தொடர்பவர்கள் நூறு பேர்! எனக்குள் தன்னம்பிக்கையை ஊட்டி, பொறுப்புணர்வுடன் எழுத வைத்த அந்த நூறு பேருக்கும் என் கரம்கூப்பிய நன்றி! (ஆதரவு தரும் மற்ற எல்லா நண்பர்களுக்கும் சேர்த்துத்தான்)

Tuesday, January 17, 2012

மொறுமொறு மிக்ஸர்!

Posted by பால கணேஷ் Tuesday, January 17, 2012
சின்னச் சின்னப் பூக்கள்’ என்ற தலைப்பில் நான் கொடுத்திருந்த பதிவைப் படித்துவிட்டு, ‘‘மொறுமொறுவென்று மிக்ஸர் சாப்பிட்ட மாதிரி இருக்கிறது. வாரம் ஒன்று இதுமாதிரி கொடுங்கள்’’ என்றார் நான் மதிக்கும் எழுத்தாளர் (நண்பர்) கடுகு அவர்கள். அவர் விருப்பப்படி  இந்த வார மசாலா மிக்ஸர்:

===============================================

முதல்ல ஒரு புதிரோட ஆரம்பிக்கலாம். கீழே நான் கொடுத்திருக்கற ஒன்பது கோடுகளை...
| | |  | | |  | | |

அப்படியே பத்தா மாத்தணும். இதென்ன பெரிய விஷயம்? எக்ஸ்ட்ராவா ஒரு கோடு போட்டுட்டாப் போச்சுங்கறார் ஸ்ரீராம் ஸார்! இதே கோடுகளை வெச்சு பத்தா மாத்தணும்கறதுதான் கண்டிஷன்! யோசிங்க மக்காஸ்... அப்பாலிக்கா சொல்றேன் எப்பூடின்னு!

===============================================

ங்கள் குழந்தைகளின் மழலை மொழியைக் கேட்காதவர்கள் குழல் இனிது, யாழ் இனிது என்பார்கள் என்றார் தாடிக்காரர். அப்படி மழலையின் சுகத்தை அனுபவிக்கும் வாய்ப்பை என் பெற்றோர்களுக்கு நான் தந்ததில்லையாம். பேச ஆரம்பி்த்தபோதே தமிழ் உச்சரிப்பு ஸ்பஷ்டமாக இருக்குமாம். (அப்பவே தமிழ்க் காதல் ஆரம்பமாய்டுச்சு போல). ஆனால் அதிலும் ஒரு குறையைத் தந்திருந்தார் பகவான்! அது என்னன்னாக்கே... ‘ச’வே வராது எனக்கு. ‘ச’ என்ற எழுத்தை உச்சரிக்க வராமல் ‘ச’ வரும் இடங்களில் எல்லாம் ‘த’ போட்டுப் பேசியிருக்கிறேன். (அப்பா... ஜெய்தங்கர் படம் கூட்டிட்டுப் போப்பா..)

என்னைவிட பதினைந்து வயது மூத்த என் அத்தங்கா (அத்தை பெண்) மதுரை வந்தால் என்னை அருகில் உட்கார வைத்துக் கொண்டு, ‘‘கண்ணா! என் பேர் என்ன சொல்லு?’’ என்று கேட்பாள். நான் தெளிவாக ‘‘வதந்தி’’ என்பேன். ‘‘படவா, வதந்தி இல்லடா... வசந்தி! எங்க ‌சொல்லு... வசந்தீ!’’ என்று அவள் சொல்ல, அவள் வாயையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஸ்பஷ்டமாக ‘‘வதந்தீ’’ என்று மறுபடி சொல்வேனாம் நான். அவள் கலகலவென்று சிரித்துவிட்டு எனக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு ஓடி விடுவாளாம். பின்னாட்களில் என்னைப் பார்க்கும் போதெல்லாம் இதை சொல்லிச் சொல்லி என்னைக் கலாய்த்து சிரிப்பாள் அத்தங்கா.

===============================================

அடங்கொக்கமக்கா..! ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ன்னு மீசைக்காரன் இதுக்காகவா பாடினார்?


===============================================
ரு ‘அட’ போட வைக்கும் தகவல்: ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தை நாட்டின் பிரதம மந்திரியே திறந்து வைத்திருக்கிறார். அந்தப் பெருமைக்குரியவர்... வேறு யார், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தான்! 1963ல் அந்தமானில் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தை அப்போதைய பிரதம மந்திரியாக இருந்த லால் பகதூர் சாஸ்திரி அவர்கள். உலக அளவில் மக்கள் திலகத்துக்கு மட்டும்தான் அனைத்துலக ரசிகர் மன்றங்கள் உருவாகி 85 நாடுகளில் ரசிகர் மன்றங்கள் அமைக்கப்பட்டன.

===============================================

இது முதல் முதல்ல பத்திரிகைகள்ல வந்த ‘நிரோத்’ விளம்பரம்! பழைய்ய்ய்ய காலத்து புத்தகம் ஒண்ணோட கட்டிங்லருந்து ஸ்கேன் பண்ணது. தேதி, வருஷம் தெரியலை, ஸாரி!===============================================

சிறு வயதில் கமர்கட் வாங்கி ருசித்துச் சாப்பிட்டிருப்பீர்கள். கமர்கட்ன்னா என்னன்னு கேக்குற குயந்தைப் பசங்களுக்கு... இன்னிக்கு நீங்கல்லாம் விரும்பிச் சாப்பிடற ‘மகா லாக்டோ’ மாதிரி ஒரு விஷயம். அதை வீட்லயே செஞ்சு சாப்பிட்டா ரொம்பவே நல்லா இருக்கும்ல... எப்படிச் செய்யறது?

1 கப் தேங்காய்த் துருவலையும், வெல்லத் துருவல் 2 கப்பும், 1 டேபிள் ஸ்பூன் நெய்யையும் எடுத்துக்கங்க. முதல்ல வெல்லத் துருவலை கால் தம்ளர் தண்ணி விட்டு அடுப்புல வெச்சுக் கரைய விடணும். அப்புறம் அந்த வெல்லக்கரைசலை இறக்கி வடிகட்டிக்கோங்க. அடுத்து, வடிகட்டிய வெல்லக் கரைசலை மறுபடி அடுப்புல வெச்சு லேசாக் கொதி வந்ததும் அதோட தேங்காய்த் துருவலை சேர்த்துக் கிளறுங்க.

ஆச்சா... இரண்டும் சேர்ந்து திரண்டு வர்ற சமயத்துல நெய் ஊத்தி நல்லாக் கிளறுங்க. நெய் சேர்ந்து கெட்டியான கலவையா ஆனவுடனே இறக்கிடுங்க. அது சூடு ஆறுவதற்கு முன்னாலயே சட்டுன்னு உருண்டைகளா உருட்டிப் போட்ருங்க. அவ்வளவுதான்! சூப்பரா வீட்லயே கமர்கட் செஞ்சிட்டீங்களே... சாப்பிட்டுப் பாருங்க... சூப்பரா இருக்கும். (‘தில்’ படத்துல லைலா டிவியில குல்பி செய்ய சொல்லித் தர்றதைப் பாத்துட்டு விக்ரம் + டீம் ஏடாகூடமா செஞ்சுட்டு முழிப்பாங்களே.... அதுமாதிரி நீங்க செஞ்சு சரியா வராட்டா என்னைக் கேக்கக் கூடாதுப்பா... சொல்லிப்புட்டேன்!)

===============================================

இப்போ... அந்தப் புதிருக்கு விடை: ஒன்பது கோடுகளையும் இப்படி அடுக்கினா...
TEN
 இப்போ பத்தா ஆயிட்டுது இல்லீங்களா... (ஹய்யோ... ஹேமா ‘கொலவெறி’ யோட என் தலையில குட்டறதுக்கு வர்றாங்க. ஓடிடுரா கணேஷ், ஓடிடு!)

===============================================

அப்புறம்... to end with a smile, வழக்கம் போல என் நண்பர் ஜி.ஆரோக்கியதாஸோட கார்ட்டூன்!ன்ன மக்களே... இந்த வாட்டி மிக்ஸர் மொறுமொறுன்னு இருந்துச்சான்னு கொஞ்சம் சொல்லிப்புட்டுப் போறது...

Saturday, January 14, 2012

கேப்ஸ்யூல் நாவல்-4

Posted by பால கணேஷ் Saturday, January 14, 2012
ல்லா எழுத்தாளர்களுக்கும் ‘மாஸ்டர் பீஸ்’ என்று ஒன்றிரண்டு கதைகள் இருக்கும். ஆல்ரவுண்டர் சுஜாதா விஷயத்தில் அவரது மாஸ்டர் பீஸ் எதுவென்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையைச் சொல்வார்கள். எல்லோரும் ரசிக்கும் கணேஷ்-வஸந்த் கேரக்டர்களை சுஜாதாவின் எழுத்தில் முழுவீச்சில் இந்த ‘கொலையதிர் காலம்’ நாவலில் ரசிக்கலாம். கணேஷின் புத்திசாலித் தனமும், வஸந்த்தின் குறும்புகளும் படிக்கும் அனைவரையும் கட்டிப் போட்டு விடும். விறுவிறுப்பான இந்த த்ரில்லர் இங்கே உங்களுக்காக:

கொலையுதிர் காலம்

ணேஷும் வஸந்த்தும் தீபக் என்பவனி்ன் வேண்டுகோளின்படி லீனா என்கிற பெண்ணின் சொத்து விஷயத்தைக் கவனிப்பதற்காக அவள் சித்தப்பா குமார வியாசன் என்பவரை செங்கல்பட்டுக்கு அப்பாலுள்ள ஒரு கிராமத்திலுள்ள எஸ்டேட்டில் சந்திக்கிறார்கள். குமாரவியாசன், லீனாவின் மேல் ஆவி வருவதாகவும், அவள் சென்ற ஆண்டு ஒரு கொலை செய்து விட்டாள் என்றும், தான் அதை மறைத்து விட்டதாகவும் சொல்கிறார். அங்கே தங்கும் கணேஷும் வஸந்த்தும் மாடியறையில் பல வினோதக் குரல்களைக் கேட்கிறார்கள். மேலே சென்று பார்த்தால் பழைய சாமான்கள் போட்டிருக்கும் அறை அது. யாரும் அங்கு இல்லை. இரவில் சுனை அருகில் உள்ள மண்டபத்தில் சாம்பல் நிறத்தில் லீனாவை ஒத்த உருவமுடைய ஆவி உருவத்தையும் பார்க்கிறார்கள்.

வஸந்த் காலையில் வினோதக் குரல்கள் கேட்ட அறையிலிருந்து ‘சில வினோதங்கள்’ என்ற பழைய புத்தகத்தை எடுத்து வருகிறான். அதில் பிசாசு வரு‌வதைப் பற்றியும், அது வியாசர்கள் பரம்பரையை சாபத்தின் காரணமாக அழித்து வருவதாக இருப்பதையும் காட்டுகிறான். அவன் சென்றதும் கணேஷ் அந்தப் புத்தகத்தை எடுக்க முற்பட, அது தானாக நகர்ந்து புத்தக அலமாரிக்குச் செல்ல, திடுக்கிடுகிறான் கணேஷ்.

ன்றிரவு குமாரவியாசனும் லீனாவும் உடன்வர, கணேஷும், வஸந்த்தும் மீண்டும்  சுனை மண்ட பத்தில் பிசாசைப் பார்க்கிறார்கள். கணேஷ் துணிவாக அதன் மிக அருகில் சென்றுவிட, எதனாலோ தாக்கப்பட்டு வீழ்கிறான். சிகிச்சைக்குப் பின் கண் விழித்து, தன்னை ஆவி அடித்தது என்பதை நம்ப முடியவில்லை என்கிறான் கணேஷ். மறுதினம் மண்டபத்தருகில் ஒரு பிணம் கிடப்பதாக தோட்டக் காரன் வந்து அலறுகிறான். போலீஸ் வர, இன்ஸ்பெகட்ர் பிணத்தின் அருகில் லீனாவின் ஒரு காது ஸ்டட்டையும், உடைந்த வளையல்களையும் கண்டெடுக்கிறார். குமாரவியாசன் அது லீனா செய்த இரண்டாவது கொலை என கணேஷிடம் சொல்கிறார்.

வஸந்த் சில விவரங்கள் சேகரிக்க சென்னை செல்ல, தனியே இருக்கும் கணேஷ் இரவில் லீனாவின் குரல் கேட்டு எழ, ஒரு இருள் உருவத்தால் தாக்கப்படுகிறான். உடன் போன் செய்து வஸந்த்தை வரச் சொல்கிறான். காலை இன்ஸ்பெக்டர் வந்து மண்டபத்தில் கிடந்த பிணம் மார்ச்சுவரி போகும் வழியில் காணவில்லை யென்றும் அதை ஒரு பேய் உருவம் தூக்கிச் சென்றதை ஒருவன் பார்த்ததாகவும் கூறுகிறார்.

கணேஷ், குமாரவியாசனை சந்தேகித்து, லீனா+குமாரவியாசனை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் செலவதாகவும், அவர் அறையில் ஆராயும் படியும் வஸந்த்திடம் சொல்கிறான். வஸந்த் அவர் அறையில் எலக்ட்ரீஷியன் வேலைக்கான விளம்பரத்தையும், குமாரவியாசன் அவனுக்கு வேலை கொடுத்த ஆர்டரையும் கண்டுபிடிக்கிறான். இறந்தது அந்த மெக்கானிக்காகத் தான் இருக்க வேண்டும் என முடிவெடுக்கிறார்கள். போலீஸ் சூப்பிரண்டன்ட் விசாரணைக்கு வர, அவருடன் அனைவரும் மண்டபத்தருகில் ஆவியைப் பார்க்கப் போகிறார்கள். கணேஷ் சைகை செய்ய, வஸந்த் நழுவி கு.வியாசனின் அறையில் மேலும் ஆராயச் செல்கிறான். ஆவியைக் கண்டு சூப்பிரண்டன்ட் உட்பட அனைவரும் மிரண்டு திரும்பிவர, ஆவி பேசிய வார்த்தைகளை தான் எப்போதோ பேசி, அதேபோல அழுதிருப்பதாக லீனா கணேஷிடம் சொல்கிறாள். அப்போது வஸந்த்தின் அலறல் குரல் கேட்டு சென்று பார்க்க, மிகமிக மோசமாகத் தாக்கப்பட்டு, ரத்தக் காயங்களுடன் கிடக்கிறான் வஸந்த்.

வஸந்த் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட, லீனாவின் உதவியுடன் குமாரவியாசனின் அறையை ஆராயும் கணேஷ், பாத்ரூமில் ஒரு புத்தக அலமாரியைக் கண்டுபிடிக்கிறான். ஆஸ்பத்திரிக்கு மீண்டும் வர, வஸந்த் பிசாசின் வசனங்கள் எழுதிய ஒரு பேப்பரை தான் வியாசன் பாத்ரூம் வாசலில் கண்டெடுத்தபோது தாக்கப்பட்டதாக கூறுகிறான். அப்போது அங்கு வரும் கு.வியாசன், கணேஷ்+லீனாவை ஒரு முக்கிய விஷயமாகப் பேச மாலை எஸ்டேட் வரும்படி கூறிச் செல்கிறார். மாலையில் செல்லும் கணேஷும் லீனாவும் தலையில் அடித்துக் கொல்லப்பட்ட வியாசனின் பிணத்தைத்தான் பார்க்கிறார்கள்.

போலீஸார் அங்கு முற்றுகையிட, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட பிக் ஆக்ஸ் லீனாவின் பெட்டியில் அவள் புடவைக் கிடையிலிருந்து கிடக்கிறது. கணேஷிடம், ‘வெங்கடேஸ்வரனை 6’ என்று ஏதோ கடிதம் எழுதத் துவங்கும்போதுதான் வியாசன் அடிபட்டிருக்கிறார் என்று சொல்லி அந்தக் காகிதத்தைக் காட்டுகிறார் இன்ஸ். கணேஷும் வஸ்ந்த்தும் சென்னை திரும்ப, வஸந்த் துப்பறிந்து வெங்கடேஸ்வரனைக் கண்டு பிடிக்கிறான். லீனாவின் பண்ணை வீட்டை மும்பை பார்ட்டிக்கு லீசுக்குவிட தன்னிடம் குமாரவியாசன் ஒரு லட்சம் அட்வான்ஸ் பெற்றிருப்பதாக சொல்கிறார். லீனா போன் செய்ய, தீபக் வந்து அவளை அழைத்துச் செல்கிறான்.

ஸந்த் நடப்பவையெல்லாம் அமானுடத்தின் செயல் என்ற கட்சியில் ஆதாரம் தேட, கணேஷ் அந்தச் சம்பவங்களின் விஞ்ஞான சாத்தியங்களை ஆராய முற்படுகிறான். ஹோலோகிராம் என்ற லேஸர் பிம்பத்தின் மூலம் இப்படி காட்சிகளை அமைப்பது சாத்தியம் என்று படிக்கும் கணேஷ், அதில் கில்லயாடியான புரொபசர் ராமபத்ரன் என்பவரை சந்தித்துப் பேச அவர் அசையும் உருவங்கள் சாத்தியமில்லை என்று கூறிவிடுகிறார். கணேஷ் தங்கள் அறைக்கு வர, வஸந்த் வந்திருக்கவில்லை. ஃபேனைப் போட, மேலிருந்து ‌ஒரு வெட்டுண்ட கை விழுகிறது. அதை போலீஸ் உதவியுடன் லாபுக்கு அனுப்புகிறான். தீபக்கும் லீனாவும் வந்து தாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாகச் சொல்லிச் செல்கின்றனர்.

நடந்த ஒவ்வொரு சம்பவத்துக்கும் ஆவி ரீதியாக வஸந்த் விளக்கங்கள் தர, அகண்ட சொத்தினை மோட்டிவ்வாக வைத்து நடப்பவை அனைத்தும் விஞ்ஞான ரீதியாக சாத்தியமே என்று விளக்குகிறான் கணேஷ். வஸந்த் வியந்து போக, லீனாவின் அகண்ட சொத்துக்கு அவளையும், வியாசனையும் அழித்தால் பயனடையக் கூடிய மூன்றாவது வாரிசு யாராவது இருக்க வேண்டுமென்கிறான் கணேஷ்.

வேறொரு விஞ்ஞானக் கட்டுரையில் நகரும் ஹோலோகிராம் பிம்பங்கள் சாத்தியம் என்று படிக்கும் கணேஷ், அது சம்பந்தமாக ஒரு புத்தகம் வாங்கி வர வஸந்தை அனுப்புகிறான். கமிஷனர் ராஜேந்திரன் போன் செய்து, அந்த வெட்டுண்ட கை ஒரு மெடிக்கல் காலேஜ் அனாடமி லாபிலிருந்து கண்ணியமாக உடையணிந்த ஒருவனால் வாங்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்த விட்டதைச் சொல்கிறார். அப்போது வஸந்த் பதட்டமாக ஓடிவந்து, கணேஷ் வாங்கிவரச் சொன்ன புத்தகத்தில் கட்டுரை எழுதியவர்களின் வாழ்க்கைக் குறிப்பு இருப்பதாகவும்,  புரொஃபசர் ராமபத்ரனின் முழுப்பெயர் ராமபத்ர வியாசன் என்றும் சொல்கிறான்.

அவர்தான் மூன்றாவது வாரிசு என்பது புரிந்துவிட, அவர் முகவரியைக் கண்டுபிடித்த கணேஷும் வஸ்ந்த்தும் அவர் வீட்டில் ஆராய, தேனிலவுக்கு ஊட்டிக்குச் சென்றிருக்கும் தீபக்-லீனாவைத் தொடர்ந்து அவர் சென்றிருப்பதை அறிகிறார்கள். உடன் தங்கள் காரில் ஊட்டிக்கு விரைந்து சுற்றித் தேட, ஏரியில் தீபக் மட்டும் நிற்கிறான். புரொஃபசர், லீனாவுடன் போட்டிங் சென்றிருப்பதாக சொல்கிறான். மற்றொரு படகில் சென்று அந்தப் படகு மட்டும் அனாதையாகக் கிடப்பதையும் கரையோரம் ஒரு தனி வீட்டில் லீனா இருப்பதையும் கண்டுபிடிக்கிறார்கள். நடு ஏரியில் ரமபத்ரன் தன்னைப் பிடித்துக் கொண்டதில் படகு கவிழ்ந்துவிட, நீரில் இருவரும் விழுந்ததாகவும், நீச்சல் தெரியாத அவர் இறுகப் பற்றிக் கொள்ள, உதறிவிட்டு தான் நீந்தி தப்பி விட்டதாகவும் லீனா கூறுகிறாள். போலீஸில் ரிப்போர்ட் செய்துவிட்டு அவர்கள் திரும்புகின்றனர்.

நடந்தவை அனைத்தும் விஞ்ஞான ரீதியாகவே நடந்தன என கணேஷ் சொல்ல, பைசாசம் செய்தது என்று வஸந்த் வாதிட, அந்தக் கேள்விக்கான விடையை வாசகர்களிடமே விட்டுவிட்டு நாவல் நிறைகிறது.

Thursday, January 12, 2012

சின்னச் சின்னப் பூக்கள்!

Posted by பால கணேஷ் Thursday, January 12, 2012
ரு சமயம் மகாவிஷ்ணு கைலாயம் சென்றிருந்தபோது கணேசரிடம் கொஞ்சி விளையாடினார். குழந்தை கணேசர் சட்டென்று தன் துதிக்கையை நீட்டி விஷ்ணுவின் சக்கரத்தைப் பிடுங்கி வாயில் அடக்கிக் கொண்டார். விஷ்ணு எத்தனையோ விதமாக கெஞ்சிக் கேட்டும் பலனில்லை. தரமாட்டேன் என்று அடம் பிடித்தார் வினாயகர். விஷ்ணுவுக்கு ஒரு யுக்தி தோன்றியது. உடனே தன் காதுகளைக் கைகளல் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுந்தார். குழந்தை வினாயகர் அதைக் கண்டு குபுக்கென்று குலுங்கிச் சிரிக்க, வாயில் அடக்கி வைத்திருந்த சக்கரம் வெளியே வந்து விழுந்தது. உடனே விஷ்ணு அதைக் கையில் எடுத்துக் கொண்டு ‘எஸ்கேப்’ ஆனார்.

மகாவிஷ்ணு கைகளால் காதைப் பிடித்துக் கொண்ட செயல் சமஸ்கிருதத்தில் ‘தோர்பிகர்ணம்’ என்று சொல்லப்பட்டது. ‘தோர்பி’ என்றால் கைகளால். ‘கர்ணம்’ என்றால் காதுகள். கையால் காதைப் பிடித்துக் கொள்ளும் ‘தோர்பிகர்ணம்’ நாளடைவில் திரிந்து பேச்சு வழக்கில் தோப்புக்கரணம் ஆகிவிட்டது.  தோப்புக் கரணம் என்றால் தோப்பில் போடும் குட்டிக்கரணம் என்று பொருள் கொள்ளலாகாது. இனி ‘தோர்பிகர்ணம்’ என்றே பொருள் கொள்வீராக!

இப்போது எதற்கு இந்தப் புராணம்? வேறொன்றுமில்லை... நேற்று என் மருமகள் ‘ஹோம் ஒர்க் பண்ணலை. மிஸ் பனிஷ் பண்ணுவாங்க’ என்று பள்ளி செல்ல அடம் பிடித்ததைப் பார்த்த போது என் பள்ளி நாட்கள் நினைவுக்கு வந்தன. பள்ளிச் சிறுவனா யிருந்த காலத்தில் சுந்தரம் வாத்தியார் கொடுத்த அதிகபட்ச தண்டனை இந்த ‘தோர்பி கர்ணம்’தான். மறக்க முடியாத (ஆன்மீக) பனிஷ்மென்ட் ஆச்சே!

==============================================

ள்ளி நாட்கள் என்றதும் வேறொன்றும் தோன்றுகிறது. தமிழ் மொழியின் சிறப்பே இரண்டு பொருள் தரும் ஒரே வார்த்தைகள்தான். இவற்றைப் பயன்படுத்தி எழுதப்பட்ட ‘சிலேடை’ என்கிற அற்புதமான ஒரு விஷயம் தமிழ் மொழியில் நிறைய .உண்டு.

முன்பொரு பதிவில் நாங்கள் தமிழ்ப் பாடல்களை ஆங்கிலப்படுத்தி விளையாடும் வழக்கம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். சில பாடங்கள் மொழிபெயர்ப்புக்குத் தோதாக இல்லையென்றாலும் கர்ணகடூரமாக தமிங்கிலீஷிலாவது மொழி பெயர்த்துப் பாடிவிடுவோம். ‘சிந்து ரிவரின் மிசை மூனினிலே, சேரநன்னாட்டிளம் கேர்ள்ஸ் உடனே சுந்தர தெலுகினில் ஸாங்கிசைத்து, போட்டுகள் ஓட்டி விளையாடி வருவோம்’ என்பது போல. இப்படியெல்லாம் ஆங்கிலப்படுத்தி(?)க் கொண்டிருந்த எங்களை அப்படிச் செய்ய முடியாமல் தோற்கடித்த பாடலும் ஒன்று உண்டு. கீழே நான் கொடுத்துள்ள பாடலை எப்படி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது? தெரிந்தவர் யாராவது சொல்லுங்களேன்...

ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவைப் பழமாக
சேர்ந்தே நடந்தது அழகாக

==============================================

தானே புயல் காரணமாக ‘நாகேஷ்’ என்று மழை பெய்த ஓய்ந்திருந்த (எத்தனை நாளைக்குத்தான் ‘சோ’ன்னு மழை பெஞ்சதா சொல்றது? ஹி... ஹி...), பத்து தினங்களுக்கு முந்தைய ஒருநாள். வாரத்தில் ஒருநாள் நண்பருடன் வள்ளுவர் கோட்டம் அருகில் ஒரு டீக்கடைக்குச் சென்று காபி குடித்துக் கொண்டிருந்தோம். அப்போது தெருவோரத்தின் டிரெய்னேஜில் இருந்த சிறு ஓட்டை வழியாக ஒரு எலிக்குஞ்சு தலையை எட்டிப் பார்ப்பதும், மனித நடமாட்டம் ‌கண்டதும் தலையை .உள்ளிழுத்துக் கொள்வதுமாக இருந்தது. பொந்தை விட்டு சற்று வெளியே வரும். கடையில் நின்றிருப்பவர்களில் யாராவது அசைந்தால் கடகடவென்று மீண்டும் குழிக்குள் ஓடிவிடும்.

இதை நான் கவனித்துக் கொண்டிருந்தபோதே அது நடந்தது. சுண்டெலி தலையை ‌வெளியே நீட்டிப் பார்த்துவிட்டு பொந்தை விட்டு வெளி வந்தது. சிறிது தூரம் அது முன்னேறுவதற்குள் பறந்து வந்த காக்கை ஒன்று அதைக் கவ்வியபடி பறந்து மே‌லே மரக்கிளையில் அமர்ந்தது. அதைக் கொத்தியது.

பாவம், சுண்டெலியார் கொத்தப்பட்டு, மரத்திலிருந்து கீழே விழுந்தார். காகம் அதன் அருகில் சென்று கொத்த முயல, வேறு நான்கைந்து காகங்கள் அருகில் வந்தன. இந்தக் காகம் அவற்றை விரட்டிவிட்டு தானே கவ்விக் கொண்டு மரக்கிளையில் அமர்ந்து மீண்டும் கொத்தித் தின்னத் துவங்கியது. மற்ற காகங்கள் அருகில் வந்ததும் அவற்றை விரட்டிய வண்ணமிருந்தது.

‘காக்கை கரவா கரைந்துண்ணும்’ என்று ஒரு தாடிக்காரப் புலவர் (மதுமதி! உங்களை இல்லைங்க...) இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதி வைத்தாரே... அந்தக் காகங்களெல்லாம் என்னவாயின? ‘இரை கிடைத்தாலும் இல்லையென்றாலும் உறவை அழைக்கும் காக்கைகளே’ என்று எம்.ஜி.ஆர்.  கூடப் பாடுவாரே... அப்படிப்பட்ட காகங்கள் இரை கிடைத்ததும் ஒன்றை மற்றொன்று துரத்தியதைக் கண்டு வியந்தேன். மனிதர்கள் போட்ட உணவுகளைத் தின்று தின்று காகங்கள் கூட குணம் மாறி விட்டனவா என்ன?

நகரக் காக்கைகளிடம் வேறொன்றும் கவனி்த்திருக்கிறேன். மதுரையில் நான் சிறுவயதில் இருந்த காலத்தில் காக்கைகளை சற்று தூரத்தில் இருந்து கையசைத்து ‘போ’ என்று விரட்டினாலே பறந்து விடும். சென்னை நரகத்திலோ... ச்சே, நகரத்திலோ... மாடிக் கைப்பிடிச் சுவரில் அமரும் காக்கையை சற்று தூரத்திலிருந்து ‘போ’ என்று விரட்டினால் ‘எவன்டாவன்?’ என்பது போல் ஓரக்கண்ணால் ‘ஸைட்’ அடிக்கின்றன- எத்த‌னை ஹாரன் அடித்தாலும் நகராமல் ‘இடிச்சுடுவியா நீ?’ என்கிற மாதிரி சென்னை ஜனஙகள் நடுரோடில் நடக்கிறார்களே... அந்த மாதிரி! மிக அருகில் நெருங்கி, விரட்டினால்தான் பறக்கின்றன. இந்த மெத்தனமும் நகரத்து மனிதர்களின் உணவைத் தின்பதனால் அவற்றுக்குப் பழகியிருக்குமோ என்று ஒரு எண்ணம் எனக்குள் தோன்றுவதுண்டு.

==============================================

ழைய (சாவி அவர்கள் ஆசிரியராக இருந்த) குங்குமம் இதழ் ஒன்றில் கண்ணில் பட்ட வித்தியாசமான துணுக்குச் செய்தி இது. (பட், இவங்க நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!)


==============================================

ஓக்கே... இப்போ to end with a smile...  லைட்டா ஹி... ஹி...ங்க!

(கோழி ஒண்ணு முட்டையிட்டு யானைக் குஞ்சு வந்ததுன்னு...)

படம்: என் நண்பர் ஜி.ஆரோக்கியதாஸ்.

Monday, January 9, 2012

நானும் ஒரு கொலைகாரனும்-3

Posted by பால கணேஷ் Monday, January 09, 2012
‘‘இன்னொரு கொலைக்காகத்தான் என்னை போலீஸ் தேடுது’’ என்று அவன் சொன்னதும் என் தொண்டை உலர்ந்து போக, பயத்துடன் அவனை ஏறிட்டேன்.

‘‘உங்க மனசுல இப்ப என்ன ஓடிட்டிருக்குன்னு எனக்குத் தெரியும் ஸார்! எங்க இவன் நம்மளையும் போட்டுத் தள்ளிடுவானோன்னு நினைக்கறீங்க... சரியா?’’ என்று சிரித்தான் அவன். ‘ஙே’ என்று விழித்தபடி தலையசைத்தேன். ‘‘சேச்சே... இங்கருந்து நேரா போலீஸ் ஸ்டேஷன் போய் சரணடையற முடிவோடதான் வந்திருக்கேன் பயப்படாதீங்க ஸார்...’’ என்றான் சிரித்தபடியே.

‘‘சரி! நீங்க ராமனைக் கொன்னதை போலீஸ் கண்டுபிடிக்கலைன்னு சொன்னீங்க. அப்புறம் எதுக்கு இன்னொரு கொலை? யாரை?’’

‘‘ஒரு இடத்துல கொள்ளையடிக்கப் போனப்ப, குறுக்க வந்த ஒருத்தரைக் கொல்ல வேண்டியதாயிடுச்சு ஸார்...’’

‘‘சரிதான்! பஞ்சமாபாதகங்கள்ல எதையும் விட்டு வெக்கலையா நீங்க? ராமனோட சொத்து எல்லாத்துக்கும் அதிபதியானீங்கதானே... அப்புறம் எதுக்கு கொள்ளை, கொலை?’’

‘‘‌விரிவா சொல்றேன் ஸார்! ஏதோ அண்ணனைக் கொலை பண்ணிட்டேன், சொத்தை அடைஞ்சிட்டேன்னு நான் சொன்னதை சுலபமா கேட்டுக்கிட்டீங்க. ஆனா அதுக்கப்புறம் நான் பட்ட அவஸ்தை இருக்கே... ‘சிவப்பு ரோஜாக்கள்’ படத்துல மழை பெய்யும் போது மண்ணிலருந்து ஒரு கை எழுந்து வருமே... அது மாதிரி ராமனைப் புதைச்ச இடம் வெளில தெரிஞ்சுடுமோன்னு மழை பெய்யறப்பல்லாம் பயந்துக்கிட்டே ஜன்னல் வழியா எட்டிப் பார்ப்பேன். கண்ணாடியில என் முகத்தைப் பாக்கறப்பல்லாம் ‘பாவி! ஏண்டா என்னைக் கொன்‌னே?’ன்னு ராமன் கேக்கற மாதிரி இருக்கும். என் முகம்தானே அவனோட முகம்? நரகம் ஸார்! சொல்லி்ப் புரிஞ்சுக்க முடியாது. நீங்க ஒரு கொலை பண்ணிப் பாத்திங்கன்னாதான் அந்த அவஸ்தை புரியும்...’’

‘‘அவ்வ்வ்வ்வ்வ...! நானும் கொலைகாரனாகணுமா? ஆள விடுங்க, கெளம்புங்க ஸார் நீங்க....’’ என்றேன் கோபமாக.

‘‘ஸாரி ஸார். அந்த Mental Agonyயை அனுபவிச்சாத்தான் புரியும்கறதுக்காகச் சொல்ல வந்தேன், இப்படி மனசாட்சி உறுத்தறப்பல்லாம் அந்த உறுத்தல் தாங்க முடியாம தண்ணியடிப்பேன். ராமனோட சொத்துக்களை வெச்சு உல்லாசமா வாழ்க்கையை அனுபவிச்சேன். ராமன் அளவுக்கு எனக்கு பிசினஸ் திறமை இல்லாததால நான் எடுத்த சில முடிவுகளால நஷ்டம் ஏற்பட்டது. நான் வேற ஏதோ லாட்டரில கிடைச்ச பணம் மாதிரி ராமனோட பணத்துல ஜாலியா வாழ்ந்ததுல சீக்கிரமே சொத்து கரைஞ்சு, கடன் கழுத்து வரைக்கும் வந்துட்டுது.

என்ன செஞ்சு கடன்லருந்து மீள்றதுன்னு புரியாம யோசிச்சுக்கிட் டிருந்தப்பதான் ‌எதேச்சையா ஒருநாள் எங்கப்பா எழுதி வெச்ச உயிலை பீரோவுல பார்த்தேன். அதுல இங்க் கறை படிஞ்ச விரல் ரேகை உயிலோட கார்னர்ல இருந்ததைப் பார்த்தேன். அண்ணன் எப்பவோ உயிலைப் பாத்தப்ப, கைல இங்க் பட்டதைக் கவனிக்காம விட்ருக்கான் போலருக்கு. அவன் ரேகையோட அதைப் பார்த்ததும் ஐடியா கிடைச்சது. எங்கயாவது பணக்கார வீடுகள்ல முகமூடி மாட்டிட்டு கொள்ளையடிக்கலாம்னு ஒரு ஐடியா வெச்சிருந்தேன். இப்ப, குறுக்க யாராவது வந்தா கொலைகூடப் பண்ணலாம். பண்ணிட்டு அந்த உயில் பேப்பரை ஓடும்போது தவற விடற மாதிரி வேணும்னே தவறவிட்டுட்டு வந்துட்டா, விரல் ரேகையை வெச்சு போலீஸ் கம்பேர் பண்ணினாலும் டில்லிக்குப் போன தம்பி (நான்தான்) வந்து இப்படில்லாம் பண்றான்னு போலீஸை மிஸ்லீட் பணணிடலாம்.\

 -இப்படி ஒரு ஐடியா கிடைச்சதும் உடனே செயல்ல இறங்கினேன். ரெண்டு மாசம் முன்னால அயனாவரத்துல ஒரு லட்சாதிபதி யோட வீட்ல கொள்ளைன்னு பேப்பர்ல படிச்சிருப்பீங்களே.. அது என் கைங்கரியம் தான்!  அதுல நான் மாட்டிக்கலை. ‌அதுக்கப்புறம் பொறுமையா ஒரு மாசம் கேப் விட்டு, நிதானமா ப்ளான் பண்ணி பல்லாவரத்துல ஒரு கோடீஸ்வரன் வீட்டுல போன மாசம் கொள்ளையடிக்கப் போனேன். அங்கதான் விதி விளையாடிடுச்சு. கொள்ளையடிச்சுட்டு கிளம்பும் போது ஒரு வேலைக்காரன் என்னைப் பாத்துட்டான். அவன் கூச்சல் போட்டதுல அந்த கோடீஸ்வரனும் வந்து ரெண்டு பேருமா என்னைப் பிடிககப் பாத்தாதங்க. போராட்டத்தல என்னோட முகமூடியை அந்தக் க‌ோடீஸ்வரன் கழட்டிட்டான். வெறியில அவனைக் குத்திட்டேன். அதைப் பாத்ததும் பயத்துல வேலைககாரன் பிடியை விட, நான் ஓடும் போது வேணும்னே தவற விடற மாதிரி (போட்ட ப்ளான்படி) உயிலைத் தவறவிட்டுட்டு தப்பிச்சுட்டேன்.

வேலைக்காரன் அடையாளம் காட்ட, போலீஸ் என்கிட்ட வந்துச்சு. நாமதான் இப்ப சமூக அந்தஸ்துள்ள பணக்காரனாச்சுதே! இன்ஸ்பெக்டர் கிட்ட கெத்தாவே பேசினேன். ‘‘மிஸ்டர் இன்ஸ்பெக்டர்! டில்லியில எதோ வேலை கிடைச்சிருக்குன்னு என்கிட்ட சொல்லிட்டுப் போன என்னோட தம்பி லட்சுமணன்தான் இதைல்லாம் செஞ்சிருக்கணும். அயோக்கியன்! நானும் அவனும் இரட்டையர்கள்ங்கறதால என்மேல சந்தேகம் விழட்டும்னே இந்த வேலைக்காரன்கிட்ட முகத்தைக் காட்டிருப்பான் ராஸ்கல்!’’ என்றேன்.

‘‘கொலை நடந்த இடத்துல இந்த உயில் பத்திரத்தைத் தவறவிட்டுட்டு கொலை பண்ணினவன் ஓடியிருக்கான்...’’ என்று அதை எடுத்துக் காட்டினார்.

‘‘பீரோவுல இருந்த இதைக் காணம்னுதான் ஒரு வாரமா தேடிட்டிருக்கேன். படவா! திருடிட்டுப் போனது அவன்தானா?’’ என்று கோபமாக இருப்பது போல நடித்தேன்.

‘‘ஸார்...  உங்க கைரேகையை நான் எடுத்துக்கலாமா? போலீஸ் ஃபார்மாலிட்டிக்ககாக, ப்ளீஸ்!’’ என்றார் இன்ஸ்.

‘‘தாராளமா... போலீசுக்கு ஒத்துழைக்க வேண்டியது என்மாதிரி பெரிய மனுஷங்களோட கடமையில்லையா...’’ என்று கைரேகையைத் தந்தேன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு

சிரித்தது நான் அல்ல, விதி என்பது பின்னால்தான் புரிந்தது. அடுத்த நாள் இன்ஸ்பெக்டர் மறுபடி வீட்டுக்கு வரவும், ‘‘என்ன ஸார்... அவன் அகப்பட்டானா?’’ என்று கேட்டேன்.

‘‘அகப்பட்டது அவன் இல்ல மிஸ்டர் ராமன், நீங்கதான்! அந்த உயில்ல இருக்கற ரேகையும், உங்க ரேகையும் நூறு சதவீதம் ஒத்துப் போகுது. தம்பி பேர்ல பழி போட்டுட்டு தப்பிக்கப் பாக்கறது நீங்கதான். உங்களை அரெஸ்ட் பண்றேன்’’ என்றார்.

என் காலின் கீழ் பூமி நழுவுவதைப் போலிருந்தது. தலை ரோலர் கோஸ்டரில் போனதுபோல் சுற்றியது. ‘எப்படி இது சாத்தியம்? மைகாட்! எப்போதோ ஒரு சந்தர்ப்பத்தில் மைக்கறையுடன் உயிலை நான் தொட்டிருக்கிறேன். அதை மறந்து அண்ணனின் ரேகை என்று எண்ணியது  வினையாகி இப்போது மாட்டிக் கொண்டேனே...

என் அருகில் வந்த இன்ஸ்பெக்டரை அவர் சற்றும் எதிர்பாராத வகையில் தலையில் அடித்தேன். தடுமாறிக் கீழே விழுந்தவரை, மாடிப் படியில் முட்டி மயக்கமுறச் செய்துவிட்டு தப்பினேன். ஒரே ஓட்டம்! போலீஸ் இப்போது என்னை வலைவீசித் தேடிக் கொண்டிருக்கிறது. ஓடிஓடி எனக்கும் அலுத்து விட்டது. போலீஸில் சரணடையப் போகிறேன். அதற்கு முன்னால் உங்களைப் பார்த்து இதைச் சொல்லத்தான் வந்தேன்...’’ என்றான்.

‘‘நான் ஏதோ ஹெல்ப் பண்ணனும்னீங்களே....’’

‘‘ஆமாம் ஸார்... இந்தாங்க என்னோட, அதாவது ராமனோட விஸிட்டிங் கார்ட்’’ நீட்டினான். வாங்கிக் ‌கொண்டேன். ‘‘நான் போலீஸ்ல சரணடைஞ்சவுடனே கேஸ் நடந்தா எனக்கு ஆயுள் தண்டன கிடைக்குமோ, தூக்கு தண்டனை கிடைக்குமோ தெரியாது.  ஆனா ஸ்வேதா என்னைப் பார்த்து அழுவா. என்னை - அதாவது அவ புருஷனை - காப்பாத்தணும்னு வக்கீலை வெச்சு முயற்சி பண்ணுவா-  நான் அவ புருஷன் ராமன் இல்ல, லட்சுமணன்தான். ராமன் செத்துட்டான்கற விஷயத்தை நீங்க அவளை சந்திச்சு சொல்லணும். இந்த விஷயத்தை அவளோட முகத்தைப் பார்த்துச் சொல்ற துணிச்சல் எனக்கு இல்ல...’’

‘எல்லா அயோக்கியத்தனங்களையும் பண்றதுக்கு இவனுக்கு துணிச்சல் இருந்துச்சு. இதுககு இல்லாமப் போயிடுச்சாககும்’ என்று மனதில் நான் நினைத்துக் கொண்டிருக்க, அவன் தொடர்ந்தான். ‘‘அவகிட்ட நான் சொன்ன எல்லாத்தையும் சொல்லி, என்னை மன்னிச்சுடச் சொல்லுங்க ஸார், ப்ளீஸ்! நான் வர்றேன்...’’ என்ற அவன், நான் பேச முற்படுவதற்கு முன் சட்டென்று எழுந்து வெளியேறி விட்டான் அவன். ஸாண்ட்ரோ புறப்பட்டுச் செல்லும் ஓசை கேட்டது.

என்ன செய்வதென்று ‌புரியாமல் பிரமை பிடித்தவன் மாதிரி ‘ஙே’ என்று விழித்தபடி சுவரைப் பார்த்து அமர்ந்திருந்தேன் நான். நீங்களே சொல்லுங்கள் சார்/மேடம்! நான் என்ன செய்ய வேண்டும்?

Friday, January 6, 2012

நான் + ஒரு கொலைகாரன்-2

Posted by பால கணேஷ் Friday, January 06, 2012
திர்ச்சியில் சற்று நேரம் எனக்குப் பேச்சு வரவில்லை. பின் சற்று சுதாரித்துக் கொண்டு கேட்டேன். ‘‘ஏன் அண்ணனைக் கொலை பண்ணீங்க?’’

‘‘சின்ன வயசுலருந்தே ஏற்பட்ட பிளவு ஸார் அது. நான் படிப்புல கொஞ்சம் சுமார். ராமன் படிப்புல கெட்டி. நான் அப்பா தர்ற பாக்கெட் மணியெல்லாம் செலவழிச்சு காலி பண்ணிடுவேன். ஆனா ராமன் அதுல பாதியச் செலவு பண்ணிட்டு பாதியச் சேத்து வெப்பான். இப்படி எல்லா விஷயத்துலயும் எதிரெதிர் பர்ஸனாலிட்டிகளா இருந்தோம். எங்கப்பாவுக்கு என்னைவிட ராமன் மேல பாசம் ஜாஸ்தி. எங்கப்பா பெரிய கோடீஸ்வரர். அவன் எது கேட்டாலும் உடனே கிடைக்கும். எனக்குன்னா ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டுட்டுத்தான் தருவார் எங்கப்பா. இதனால எனக்கு ராமன் மேல வெறுப்பு வளர்ந்துட்டே வந்தது...’’

‘‘அந்த வெறுப்புலதான் கொன்னீங்களா?’’

‘‘அதுமட்டுமில்ல ஸார்... இன்னொரு விஷயத்துலயும் என் லைஃப்ல விளையாடினான். நான் என் மாமா பொண்ணு ஸ்வேதாவைக்  காதலிச்சேன். அவளுக்கும் என் மேல ஒரு ஈர்ப்பு இருக்கறதா உணர்ந்தேன். பட், எங்கப்பா நான் பொறுப்பில்லாதவன்னும், ராமன்தான் அவளுக்குப் பொருத்தமான வன்னும் சொல்லி அவளை ராமனுக்குக் கட்டி வெச்சுட்டார். என்னோட எதிர்ப்பைக் காதிலயே வாங்கிக்கலை.

இந்தப் படுபாவி ராமனும், என் விருப்பத்தைத் தெரிஞ்சுக்கிட்டும், நான் அவன் கிட்ட எனக்காக விட்டுத்தரச் சொல்லிக் கெஞ்சினதை காதுலயே போட்டுக்காம, அவளை என் கண் முன்னாலயே கல்யாணம் பண்ணிட்டு குடும்பம் நடத்தினான். அண்ணனா சார் அவன்? எனக்குள்ள அவன் மேல இருந்த வெறுப்போட சதவீதம் அதிகமாச்சு. கோபத்துல கொந்தளிச்சுட்டிருந்த எனக்கு அடுத்த இடி எங்கப்பா-அம்மா கார் விபத்துல இறந்த பின்னால விழுந்தது.’’

‘‘அம்மாவும் அப்பாவும் ஒரே நேரத்துல இறந்துட்டாங்களா? இதைவிடப் பெரிய இடி என்ன இருக்கு?’’

‘‘இருந்தது ஸார். எங்கப்பாவோட உயில்ல சொத்துல முக்கால் பகுதி ராமன் பேர்லயும், கால் பகுதி என்னோட பேர்லயும் எழுதியிருந்தார். அது அவன் மேல எனக்கிருந்த கோபத்தோட சதவீதத்தை அதிகமாக்கிச்சு. ராமன் என் பங்கைப் பிரிச்சுக் கொடுத்து தனியா அனுப்பிட்டான். நான் எனக்குக் கிடைச்ச பங்கை உல்லாசமா செலவழிச்சு சீக்கிரமே அழிச்சுட்டேன். ராமன் பிஸினஸ்ல பணத்தைப் போட்டு பலமடங்காப் பெருக்கியிருந்தான்.
  வேற வழியில்லாம நான் அண்ணன் கிட்டத்தான் செலவுக்குப் பணம் கேட்டு கையேந்த வேண்டியிருந்தது. அவன்கிட்ட பணம் கேக்கறப் பல்லாம், தம்பியாச்சேன்னு பரிதாபப் பட்டு பலசமயம் பணம் கொடுப்பான். சில சமயங்கள்ல அட்வைஸ் மழையா பொழிஞ்சு தள்ளுவான். நான் ஊதாரித் தனமா ஊர் சுத்தாம அவன் கம்பெனில மேனேஜரா சேர்ந்து வேலை பாக்கணும்பான். ‘நீ முதலாளியா இருப்ப, நான் உன்கிட்ட வேலை பாக்கணுமாடா?’ன்னு எனக்கு கோபமான கோபம் வரும். பணம் கேட்க அவன் வீட்டுக்குப் போறப்ப ஸ்வேதா கண்ணுல படும் போதெல்லாம் எனக்குள்ள வயிற்றெரிச்சலோட அளவு ஜாஸ்தியாயிடும்.

ஒரு கட்டத்துல வெறுப்பாகிப் போயி, என்னை ‘நீ என் தம்பியேயில்ல, இனி இங்க வராத’ன்னு கழுத்தைப் பிடிச்சு வீட்டை விட்டு வெளில தள்ளி அவமானப்படுத்திட்டான். அது நடக்கறப்ப ஸ்வேதா கண்கொட்டாம பாத்துட்டிருந்தா. அவமானத்துல முங்கிப் போய் திரும்பிட்டிருந்தப்பதான் எனக்குள்ள இருந்த வெறி அதிகமாச்சு. அவனைக் கொன்னுடணும்னு திட்டம் போட வெச்சுது...’’

‘‘திட்டம் போட்டா கொன்னிங்க?..?’’

‘‘ஆமாம். போலீஸ்ல மாட்டிக்கிட்டு ஜெயிலுக்குப் போக நான் விரும்பலை. நான் எந்த வகையிலயும் மாட்டிக்காம இருக்கணும்னு முடிவு பண்ணிக்கிட்டு பல நாட்கள் யோசிச்சு திட்டத்தை அலசி ஆராய்ஞ்சு பாத்துட்டு, சில மாதங்கள் காத்திருந்து அப்புறம்தான் செயல்படுத்தினேன்.

ஒருநாள் அவன்கிட்ட போயி, ‘‘டில்லியில ஒரு கம்பெனில வேலை கிடைச்சிருக்குன்னும் அங்க போய் செட்டில் ஆகப் போறேன்னும் சொல்லி அவன்ட்ட பணம் கேட்டேன். ஏ.ஸி. கோச்சுல டிக்கெட் போட்டு, கையில நிறையப் பணமும் கொடுத்தான். ‘விட்டதுடா சனி’ங்கற மாதிரி ஒரு ரிஃலீ்ப் அவன் முகத்துல பாத்ததும் எனக்கு கோபம் எகிறிச்சு.

ரயில்ல ட்ராவல் பண்ணி, நடுராத்திரியில ஏதோ ஒரு ஸ்டேஷன்ல நின்னப்ப இறங்கிட்டேன். ஆட்டோ, டாக்ஸி பிடிச்சா பின்னால பிரச்சனை வரும்னு லாரி பிடிச்சு சென்னைக்கு வந்தேன். என் பெட்டியை ஒரு பாழுங்கிணத்துல போட்டு (அதுல வேல்யுபிளா எந்த திங்ஸ்ம் இல்ல- என் டிரஸ்கள் தவிர) டிஸ்போஸ் பண்ணிட்டேன். (எவிடென்ஸ் கூடாது ஸார்) மீசைய ‌ஷேவ் பண்ணிக்கிட்டு, ராமன் பங்களா சுவர் ஏறிக் குதிச்சு, ராத்திரி பூரா இருட்டுல, கொட்டற பனியில தோட்டத்துல ஒளிஞ்சிருந்தேன்.

காலையில தோட்டத்துல வாக் போறது அவன் பழக்கம்னு தெரிஞ்சு கையில இரும்புத் தடியோட காத்திருந்தேன். அவன் வந்தான். ஓங்கி ஒரே போடு! கத்தறதுக்குக் கூட அவகாசமில்லாம துடிச்சு செத்துட்டான். அவன் கண்கள்ல மட்டும் ‘ஏண்டா?’ங்கற கேள்வி இருந்ததை என்னால மறக்கவே முடியாது.

மடமடன்னு அவன் டிரஸ்ஸைக் கழட்டி நான் போட்டுக்கிட்டு, என் டிரஸ்ஸை அவனுக்குப் போட்டு விட்டேன். தோட்டத்துல மரம் நடுறதுக்காக ஒரு பெரிய குழி தோண்டியிருந்தாங்கன்றதை முதல்நாளே கவனிச் சிருந்தேன். அந்தக் குழியில அவன உடம்பைத் தள்ளி அவசரமா மண்ணைத் தள்ளினேன். அப்போதான் அந்தக் குரல் கேட்டுச்சு...’’

‘‘யாரும் பாத்துட்டாங்களா? மாட்டிக்கிட்டீங்களா? அதான் போலீஸ் தேடுதா உங்களை?’’

‘‘சரியான அவசரக்குடுக்கை ஸார் நீங்க! குரல் கொடுத்தது போலீஸ் இல்ல, குரல் கேட்டதும் திடுககிட்டுத் திரும்பிப் பார்த்தா... வீட்டு தோட்டக்காரன்! வேகமா வந்து, ‘நீங்க ஏன் ஸார் இந்த வேலை பண்ணணும்? நான்தான் காலையில வந்து குழியை மூடி மரக்கன்னை நட்டுடறேன்னு சொல்லியிருந்தேனில்ல... நான் குழியை மூடிடறேன்’ன்னான். நல்ல வேளையா அதுக்குள்ள நான் தள்ளின மண் ராமனை மூடியிருந்ததால அவன் எதையும் பார்க்கலை. மீதி மண்ணை அவன் தள்ளி மரக்கன்றை நட்டு்ட்டான். நான் பங்களாவுக்குள்ள வந்தேன்.‘‘

‘‘இப்ப நான் ராமன். இது என்னோட பங்களா, என் சொத்து. நினைக்கவே தித்திப்பா இரு்ந்தது. ஸ்வேதா வந்து காபி கொடுத்தா. அவளைக் கட்டிப் பிடிச்சு முத்தமிட்டேன். மனசுக்குள்ள ஒரு ஓரத்துல ‘இது தப்புடா’ன்னு மனசாட்சி குரல் கேட்டாலும், ‘நியாயமா எனக்குச் சேர வேண்டியவளை தட்டிப் பறிச்சவன் அவன்தானே. இதுல ஒண்ணும் தப்பில்ல’ன்னு அந்தக் குரலோட கழுத்தை முறிச்சுட்டேன்.

அதுக்கப்புறம் எந்த உறுத்தலும் இல்லாம நான் முழுமையா ராமனாவே மாறிட்டேன். அவனோட நடவடிக்கைகள், மேனரிஸம் எல்லாமே எனக்கு அத்துபடியானதால யாருக்கும் என்மேல எந்தச் சந்தேகமும் வரலை. ஊரைப் பொறுத்தவரை லட்சுமணன் டில்லி போயிட்டான். ராமன்தான் இங்க இருக்கான். எல்லாம் சரியாவே நடந்துச்சு. அந்தக் கொலைய போலீஸ் கண்டுபிடிக்கவே இல்லை ஸார்...’’

‘‘பின்ன... போலீஸ் தேடுதுன்னு சொன்னீங்களே...’’

‘‘ஆமா ஸார். போலீஸ் தேடறது ராமனைக் கொலை செஞ்சதுககாக இல்ல. நான் செஞ்ச இன்னொரு கொலைக்காக...’’ என்று பொக்ரான் அணு குண்டையே என்மேல் வீசினான் அவன். அதிர்ச்சியில் எனக்கு நாக்கு உலர்ந்து போனது.

-ஹய்யோ... ஹய்யோ... அதிர்ச்சி மேல அதிர்ச்சியா குடுக்கறானே... 
அடுத்த பதிவுல முடிச்சுடறேன்!

Wednesday, January 4, 2012

நானும் ஒரு கொலைகாரனும்-1

Posted by பால கணேஷ் Wednesday, January 04, 2012
ரு மனுஷனுக்கு நேரம் சரியில்லைன்னா அது எப்படியெல்லாம் சோதனைகளைக் கொண்டு வருது? சனிப் பெயர்ச்சில என்னோட கிரக நிலை சரியில்லைன்னு போட்டிருந்துச்சுன்னு சரிதா சொன்னப்ப, ஜோசியத்தை நம்பற அவளைக் கிண்டலடிச்சேன். ஆனா... எனக்கு வந்த சோதனை இருக்கே... அப்படி என்னய்யா நடந்துச்சுன்னு கேக்கறீஙகதானே... சொல்றேன்:

காலை நேரம். அலுவலகத்திற்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்த நேரம்... காலிங் பெல் ஒலித்தது. சென்று கதவைத் திறந்தேன். வெளியே... கண்ணியமான, விலையுயர்ந்த .உடை அணிந்து நின்றிருந்த அந்த இளைஞன், ‘‘ஸார், நீங்கதானே கணேஷ்?’’ என்றான். வெளியே அவன் வந்த ஸாண்ட்ரோ கார் பளபளப்பாக நின்றிருந்தது.


‘‘ஆமாம். உள்ள வாங்க...’’ என்றேன். உள்ளே வந்ததும் அவனை சேரில் அமரச் சொல்லிவிட்டு, அவனை ஏறிட்டேன். சராசரி உயரம், வட்ட முகம், பிரபுதேவாவுக்கு இருப்பது போல ஸ்ப்ரிங் முடி. பஃப்களில் பார்க்கும் இன்றைய இளைஞர்களை ஒத்திருந்தது அவன தோறறம். ‘‘யார் நீங்க? என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்கீங்க?’’ என்று கேட்டேன்.

‘‘ஸார்! ‘மின்னல் வரிகள்’ன்ற பேர்ல ப்ளாக் எழுதறது நீங்கதானே...?’’

‘‘ஆமாங்க... நான் யார்ட்டயும் அதைச் சொன்னது கிடையாதே. எப்படி என்னைக் கண்டுபிடிச்சீங்க?’’

‘‘நான் பக்கத்துல கே.கே.நகர்லதான் இருக்கேன் ஸார். ப்ளாக்ல படிக்கும் போது உங்க ஃபோட்டோவை பார்த்திருக்கேன். இந்த ஏரியாவுல ஒரு நாள் கிராஸ் பண்றப்ப நீங்க வீட்டுக்குள்ளருந்து வெளில வந்து ஸ்கூட்டர்ல போறதப் பாத்தேன். நீங்கதான்னு தெரிஞ்சுககிட்டேன். அது இப்ப உதவியா இருக்குது. நீங்க எழுதற மேட்டர்ஸ் நிறையப் படிச்சிருக்கேன். நல்லா எழுதறீங்க ஸார்...’’ என்றான். என் எழுத்தைப் படித்துவிட்டு ஒருவன் வீடு‌‌ தேடி வந்து பாராட்டுவதாவது! உள்ளே திரும்பி சரிதாவைப் பெருமையாகப் பார்த்தேன். ‘‘ரொம்ப நன்றி ஸார்!’’ என்றேன்.

‘‘ஸார், உங்களால எனக்கு ஒரு ஹெல்ப் ஆகணும். அதுக்குத்தான் வந்தேன்....’’

‘‘சொல்லுங்க. என்னால முடிஞ்சதுன்னா கண்டிப்பா பண்றேன்...’’

‘‘ஸார், நான் இப்ப சொல்லப் போறது என்னோட லைஃப்ல நடந்த விஷயங்கள். அதை நீங்க முழுசாக் கேட்டாதான் உங்ககிட்ட நான் ஹெல்ப் கேக்க முடியும். என்னோட கதைய நீங்க உங்க ப்ளாக்ல வேணும்னாலும் எழுதலாம். எனக்கு ஆட்சேபணையில்ல...’’

அடடா... ஆடு தானேவந்து பிரியாணியாகிறேன் என்கிறதே... பதிவுக்கு மேட்டர் தேத்த அலையும் நமக்கு இப்படி ஒரு சான்ஸா? மகிழ்ச்சியாக, ‘‘எழுதறேன் ஸார். முதல்ல உங்க பேர் என்ன சொல்லுங்க...’’ என்றேன்.


‘‘என் பேர் லட்சுமணன். இப்ப ராமன் ஸார்...’’

‘‘அடிக்கடி பேர் மாத்திக்குவீங்களா நீங்க?’’

‘‘இல்ல ஸார். ஒரு சின்னத் தப்புப் பண்ணினதுக்காக இப்ப என்னை போலீஸ் தேடிக்கிட்டிருக்கு...’’

‘‘போலீஸா? போலீஸ் தேடற அளவுக்கு என்ன தப்புப் பண்ணினீங்க?’’

‘‘கொலை பண்ணிட்டேன் சார்...’’ என்றான் கூலாக.

நான் திடுக்கிட்டேன். ‘‘கொக்.... கொக்.... ‌கொக்... கொலையா?’’ என்றேன் துண்டுதுண்டாக. ‘ஙே’ என்று விழித்தேன்.

‘‘அதுக்கு ஏன் சார் கோழி மாதிரி கூவறீங்க? நான் சொல்ற மேட்டரை கவனமாக் கேட்டு உங்க ப்ளாக்ல எழுதுங்க...’’

‘பாவி! கொலை பண்ணுறது சின்னத் தப்பாடா உனக்கு?’ என்று மனதிற்குள் எழுந்த கேள்வியை அடக்கிக் கொண்டு உதறலுடன் சொன்னேன்: ‘‘ஸார், நான் கொஞ்சம் பயந்த சுபாவம். நீங்க வேணா ‘நாஞ்சில் மனோ’ன்னு ஒருத்தர் எழுதறார். நல்ல தைரியசாலி! அவரைப் பாருங்களேன்...’’

‘‘ஹலோ, நானும் ப்ளாக்லாம் படிக்கறவன்தான். எனக்கு உள்நாட்டில எழுதறவங்கதான் வேணும்...’’

‘‘அப்ப ‘சி.பி.செந்தில்குமார்’னு நம்ம ஃப்ரெண்டு ஈரோடுலருந்து எழுதறாரு. ரொம்பப் பிரபலம். நிறைய ஃபாலோயர்ஸ் உண்டு அவருக்கு. கில்மாப் படங்களுக்கு விமர்சனம் தவிர அப்பப்ப உண்மைக் கதைகளும் எழுதுவார். அவரை வேணாப் பாருங்களேன்...’’ என்றேன். மனதிற்குள் ‘ப்ளாக்ல இருக்கற ஃபோட்டோவை முதல்ல எடுத்துரணும்டா கணேஷ்!’

‘‘சும்மாருங்க சார்.. நான் சொல்றதை எழுதறதுக்கு ஃபேமஸ் ஆட்கள் வேண்டாம்....’’

‘‘அப்படியா ராமன் ஸார்? அப்ப ‘ராஜி’ன்னு நம்ம தங்கச்சி ப்ளாக் எழுதிட்டிருக்காங்க. உங்க கார்ல போனா மூணு மணி நேரத்துல பாத்துடலாம்...’’

‘‘பொம்பளைங்கட்ட சொல்ல நான் விரும்பலை. உங்களை என்ன கொலையா பண்ணச் சொன்னேன். கேக்கத்தானே ‌சொன்னேன்? கேளுங்க ஸார்...’’ என்றான் அதட்டலாக.

‘விட்டால் நம்மைக் குத்தி விடுவானோ’ என்று உள்ளே ஒரு எண்ணம் ஓட, நடுங்கியபடி அதை வெளிக்காட்டாமல் , ‘‘சரி, கேக்கறேன். சொல்லுங்க ஸார்...’’ என்றேன். (வேற வழி?)

அவன் பேசுவதற்கு வாயைத் திறந்த நேரம்... சரிதா ட்ரேயில் இரண்டு காபிக் கோப்பைகளுடன் வந்தாள். ‘‘காபி எடுத்துக்கங்க...’’ என்றாள். நான் ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டேன். அந்த ராமன், ‘‘எனக்கு காபி வேணாம். ஹாட் வாட்டர் தாங்க மேடம்...’’ என்றான்.

‘‘அதைத்தான் காபின்னு சொல்லித் தர்றா. சும்மா குடியுங்க...’’ என்றேன். சரிதாவின் முகத்தில், ‘உள்ள வருவில்ல... அப்ப இருக்கு உனக்கு’ என்ற வரிகள் தெரிந்தன. அவள் திரும்பிச் சென்றபின் அவன் பேசத் தொடங்கினான்:


‘‘என் அண்ணன் ராமனும், நானும் இரட்டைப் பிறவிகள். எனக்கு கால் க்ட்டை விரலில் ஒரு மச்சம் உண்டு என்பதைத் தவிர இருவருக்கும் வேறு எந்த உருவ வித்தியாசமும் கிடையாது. இந்த மாதிரி இரட்டைக் குழந்தைகளை பெற்றவர்கள் மட்டும் சரியாக அடையாளம் கண்டு கொள்வார்கள். பள்ளிக்கூடத்துலயும் சரி, உறவினர்கள் மத்தியிலயும் சரி, யாரு ராமன், யாரு லட்சுமணனனு ஒரு குழப்பம் இருந்தது. என் அப்பா நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது என் கழுத்தில் ஒரு கறுப்புக் கயிறு கட்டி வைத்திருந்தார் மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்வதற்காக.

அதென்னமோ தெரியல... ட்வின்ஸ்களோட பேரண்ட்ஸ் எல்லாருமே ரெண்டு‌ பேருக்கும் ட்ரெஸ்லருந்து, ப்ரஷ் வரைக்கும் ஒரே மாதிரிதான் வாங்கறாங்க. எங்கப்பாவும் அப்படித்தான் செஞ்சார். நாங்கள் வளர்ந்து வாலிபர்களான பிறகு நான் சொன்ன யோசனையின் படி ராமன் மீசை வளர்க்காமல் இருந்தான். நான் மீசை வைத்திருந்தேன். இதுதான் எங்களை அடையாளம் கண்டுகொள்ள வழியாக இருந்தது. நாங்க ஒற்றுமையா பாசமுள்ள அண்ணன் தம்பிகளா வாழணும்னு ஆசைப்பட்ட எங்கப்பா எங்களுககு ராமன் - லட்சுமணன்-னு பேர் வெச்சார்...’’

‘‘இவ்வளவு உருவ ஒற்றுமையுள்ள நீங்க அண்ணனுக்கேத்த தம்பியா இருந்திருப்பீங்க...’’

‘‘யார் சொன்னது? உருவம்தான் ஒற்றுமையா இருக்குமே தவிர, நாங்க ரெண்டு பேரும் நேர்எதிராத்தான் இருந்தோம். நான் கொலை செஞ்சேன்னு சொன்னேனே.... அது எங்கண்ணன் ராமனைத்தான்’’ என்று ஒரு வெடிகுண்டை வீசினான் அவன். நான் அதிர்ந்து போனேன்.
-அடுத்த பகுதியில முடிச்சிரலாம்...

ஒரு பின்குறிப்பு: இந்தப் பதிவில் வெளியிட்டுள்ள என் படங்களைப் பார்த்து ‘கொலவெறி’யுடன் கம்பு, கட்டைகளை எடுப்பவர்கள் நண்பர் ‘நாஞ்சில் மனோ’வின் ப்ளாக்கில் சென்று வீசும்‌படி கோரப்படுகிறார்கள். ஐடியா உபயம் அவ்விடம்தான்.

ஒரு மகிழ்ச்சி: நான் வலையுலகில் எழுதத் துவங்கி நான்கு மாதங்கள் முடிந்திராத நிலையில் சென்ற ஆண்டின் ‌வலைப்பதிவர் பட்டியலில் தமிழ்மணம் திரட்டி எனக்கு 55வது இடம் கொடுத்துள்ளது.

ஒரு நன்றி நவிலல்: இதற்கு முழுமுதற் காரணம் உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவுமே. திரட்டியின் மதிப்பைவிட மேலாக உங்கள் இதயங்களில் எனக்கு ஒரு இடம் தந்துள்ள நட்புகள், உறவுகளான உங்கள் யாவருக்கும் என் கைகுலுக்கல் + இதயம் நிறைந்த நன்றிகள்!

ஒரு வருத்தம்: எனக்கு வலைக்கணக்கைத் துவக்கித் தந்து, ஆரம்ப நாட்களில் திரட்டிகளில் இணைத்து வழிகாட்டியாக .உடனிருந்த நண்பர் ‘சேட்டைக்காரன்’ இப்போது வலையுலகில் இல்லாதது. இப்போதும் அவரை எழுதச் சொல்லி நிறைய இமெயில்களும், போன்களும் வருவதாகச் சொன்னார். ‘‘நீங்கதான் பாக்கறீங்களே... என் மனநிலையும், உடல்நிலையும் சரியில்லாத நிலையில நான் எப்படி எழுத முடியும்? எல்லாருக்கும் என் நன்றியையும், வலையுலகில் நான் செயல்பட முடியாத நிலையையும் தெரிவிச்சுடுங்க’’ என்றார். ‌இதன் மூலம் தெரிவித்து விட்டேன்!

Monday, January 2, 2012

‘‘மாதங்களில் நான் மார்கழியாயிருக்கிறேன்’’ என்றான் இறைவன். ‘‘மாதங்களில் அவர் மார்கழி’’ என்று காதலியை வர்ணித்தார் கண்ணதாசன். இத்தனை சிறப்பு மிக்க மார்கழி மாதம் பிறந்தபோதே மார்கழிச் சிறப்பையும், ஆண்டாள் கவிதையையும் வைத்து ஒரு பதிவு போட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். சற்றே தாமதமானதில் மார்கழிச் சிறப்பைப் பற்றி பலரும் பதிவிட்டிருந்ததைப் படிததேன் மகிழ்ந்தேன். மார்கழி 17ம் நாளான இன்று நான் மிக ரசித்த ஆண்டாளின் திருப்பாவையில் 17, 18ம் பாடல்களையும், அதன் எளிய தமிழ் மொழிபெயர்ப்பையும் வழங்கி மகிழ்கிறேன்.

தற்குமுன் என் சிறுவயது அனுபவம் ஒன்று. மதுரையில் மார்கழி மாத அதிகாலையில் பஜனைக் கோஷ்டியினர் பல தெருக்களிலும் பாடியபடி வந்து எங்கள் தெருவைக் கடந்து அடுத்த தெருவில் இருந்த கோதண்டராமர் கோயிலில் முடிப்பார்கள். பனி பெய்யும் அந்த அதிகாலையில் எழுந்திருப்பதே அந்தச் சிறு வயதில் பெரிய விஷயம். அதிலும் குளித்துவிட்டு பஜனை கோஷ்டியுடன் செல்வது... நடக்கிற காரியமா? ஆனால் பஜனை கோஷ்டியுடன் சேர்ந்து பாடியபடி போனால் கோதண்டராமர் கோயிலில் சர்க்கரைப் பொங்கல் கிடைக்கும். அதை விட்டுவிடவும் மனம் வராது.

அதற்காக பஜனைக் கோஷ்டி எங்கள் தெரு முனையில் வரும்போது முகம் கழுவி, குளித்த எஃபெக்டை கொண்டுவந்துவிட்டு, பஜனைக் கோஷ்டியுடன் மெல்லக் கலந்து கொள்வேன். அடுத்த தெரு வரும்வரையில் என் குரல்தான் அங்கு உரத்து ஒலிக்கும். (நான் வருவதை ரிஜிஸ்டர் செய்ய வேண்டுமே...) கோயிலில் பார்த்தசாரதி ஐயங்கார், ‘‘நீ பாடிண்டு வந்தாயோடா?’’ என்று சந்தேகமாகக் கேட்பார். ‘‘என்ன மாமா... நான்தான் முதல்லருந்தே வரேனே... என் குரலைக் கேக்கலையா நீங்க..?’’ என்பேன். ‘‘படவா! சர்க்‌கரைப் பொங்கலுக்காக பெருமாளண்டை நின்னுண்டு பொய் சொல்லப்படாது. இந்தா ரெண்டு தொன்னையா வாங்கிக்க, போ...’’ என்று செல்லமாக தோளில் தட்டி சர்க்கரைப் பொங்கல் தருவார். (இப்போது பார்த்தசாரதி ஐயங்கார் பெருமாள் திருவடி சேர்ந்து விட்டதாக சமீபத்தில் என் பால்ய நண்பனை மதுரையில் பார்த்தபோது சொன்னான்).

ண்டாள்! தமிழில் பெண் கவிஞர் என்றால் முதலில் நினைவுக்கு வருவது ஆண்டாளின் பாடல்கள்தான். விவரமறியாத வயதில் ‘விஷ்ணு  சட்டை போடறதில்லைங்கறத ஆண்டாளே ‘ஓங்கி உலகளந்த உத்தமன் Barebodyன்னு பாடியிருக்காங்கடா’ என்று சொல்லிச் சிரி்த்தது நினைவில் வருகிறது. பின்னாளில் தமிழின் சுவையறிந்து கவிதைகளில் மூழ்கிய காலத்தில் ஆண்டாளைப் படித்த போது உடனே நமஸ்கரிக்கத் தோன்றியது. இனி ஆண்டாள் அருளிய திருப்பாவையின் 17 மற்றும் 18ம் பாடல்கள்:

ம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
    எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே!
    எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்;
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
    உம்பர் கோமானே! உறங்காதெழுந்திராய்;
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
    உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்!
விளக்கம்: ‘‘ஆடை அணிகலன்களையும், அன்னத்தையும், தூய்மையான பருகும் நீரையும், போதும் போதும் என்னும் அளவுக்குத் தானமாகக் கொடுக்கும் நந்தகோபாலா, எழுந்திரு!

பூக்‌கொழுந்தே, புகுந்த வீட்டின் ஒளிவிளக்கே! எங்கள் தலைவியே! தாயே! யசோதா; எழுந்திரு!

பொற்கழல் பூண்ட பலதேவா! அகிலம், ஆகாயம் என அனைத்தையும் காலால் அளந்த கண்ணா! அண்ணன், தம்பி இருவரும் இனியேனும் உறங்காமல் எழுந்து கொள்ளுங்கள்!’’

ந்து மதகளிற்றன், ஓடாத தோள்வலியன்,
    நந்தகோபாலன் மருமகளே, நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்!
    வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
    பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
    வந்து திறவாய், மகிழ்ந்தேலோர் எம்பாவாய்1


விளக்கம்: ‘‘யானை பலம் கொண்டவன், எதிரிகளைக் கண்டு பின்வாங்காத தோள் வலியைக் கொண்டவன் எங்கள் நந்தகோபன்! அவருடைய மருமகளே! நப்பின்னையே! நறுமணக் கூந்தலைக் கொண்டவளே! கதவைத் திறம்மா! கோழி கூவி விட்டது. பூப்பந்தல் மேல் அமர்ந்து குயிலினங்களும் கூவிவிட்டன. .உன் கணவன் கண்ணனின் புகழை உன்னுடன் சேர்ந்து பாட வந்திருக்கிறோம். உன் தாமரைக் கைகளில் அணிந்திருக்கும் வளையல்கள் குலுங்க வந்து வாசல் கதவைத் திறவேன்!’’

விளக்கவுரை : காஷ்யபன். படங்கள் : ஜெ.பி.
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube