Monday, October 28, 2013

மார்ஜியானா - காதல் - நான்!

Posted by பால கணேஷ் Monday, October 28, 2013
து ஒரு மிக இளமைக் காலம். நான் பணிபுரிந்து கொண்டிருந்த நிறுவனத்தில் அவளும் வேலை செய்தாள். அலுவல் நிமித்தம் நிறையப் பேச வேண்டிய சந்தர்ப்பம். அலுவல் தாண்டியும் பேச வைத்தது. அணிலையும் நேசிக்கும் அவள் உள்ளம் என்னை நேசிக்க வைத்தது; நேசிக்கப்பட்டவனாக்கியது. குடும்பத்தினர் அவளுக்கு வைத்த பெயர் வேறு. நான் வைத்த பெயரான ‘மார்ஜியானா’ என்பது அவளுக்கும் பிடித்தமானதாயிற்று. இப்படிப் பெயரிட்டு அழைத்ததற்கும் ஒரு காரணம் உண்டு.

நீங்க வாத்யார் நடித்த ‘அலிபாபாவும் 40 திருடர்களும்' பார்த்திருக்கிறீர்களா? அதில் பானுமதியின் கதாபாத்திரத்தின் பெயர் மார்ஜியானா. அரேபிய பாணியில் ‘பலூன் பேகீஸ்' என்று பேஷனாக அழைக்கப்பட்ட டிரஸ் மாதிரி தொளதொளவென்று ஒரு கால்சராயும், மேலங்கியும் அணிந்திருப்பார் பானுமதி அந்தப் படம் முழுவதிலும். நான் கண்டு ரசித்த மங்கையும் பல நாட்கள் சுடிதாருக்கு லெக்கின்ஸ் அல்லது பேண்ட் அணியாமல் பானுமதி போட்டிருப்பது போல லூஸான சராய் அணிந்து வருவாள். அதனால் வைக்கப்பட்ட காரணப் பெயர் அது. பின்னாட்களில் நான் அசந்து மறந்து அவளது சொந்தப் பேரில் அழைத்தால்கூட, ‘‘ஏன் பேரை மாத்தறே?" என்று அவளே கேட்குமளவுக்கு நான் வைத்த பெயர் பழகிப் போயிற்று.

ப்ளாக்கில் எழுதும்போது பகிர முடியாத பல விஷயங்களை முகநூலில் எளிதாகப் பகிர முடிகிறது. (தங்கைகள் பூரிக்கட்டையைத் தூக்க மாட்டார்கள் என்ற தைரியத்துடன்) அங்கே சற்று சுதந்திரமாக ‘ரெமோ’வாக உலா வரலாம். அப்படி நான் சில சந்தர்ப்பங்களில் என் காதல் தருணங்களை அங்கே பகிர்ந்தேன். அதன் நீட்சியாகத்தான் கவிதையைப் பற்றிய நினைவு வந்ததும் மார்ஜியின் நினைவும் அவளுக்காய் நான் எழுதிய கவிதையும் நினைவு வந்து போன பதிவில் தரப்பட்டது. முகநூலில் நான் பகிர்ந்த மார்ஜியுடனான காதல் துளிகள் இங்கே உங்களுக்காக ரிப்பீட்டேய்...!

============================================

மெலிதான மழைத் தூறல் வெளியில்...! பார்க்கின் ஷெல்ட்டர் ஒன்றினுள் நானும் அவளும் தனித்திருந்தோம். ‘‘என்ன அப்படிப் பாக்கறே?" என்றாள் மார்ஜியானா. ‘‘எனக்கு சூப்பரா கைரேகை பாக்கத் தெரியும்." என்றேன் நான். ‘‘அட... எங்கே, என் கையப் பாத்துச் சொல்லேன்..." என்று கையை நீட்டினாள் விரல் நகத்தைக் கூட தொடவிடாத கள்ளி! கையைப் பற்றினேன். பாலும் டிகாஷனும் ஒன்றிணைந்தது போல (கொடிபறக்குது அமலா - ரஜினி கரம் பற்றுதல் க்ளோஸ் அப்பில் வருவதை கவனத்தில் கொள்க) இரு கரங்களும் இணைந்திருந்தன. கரத்தை என் முகத்தருகில் கொண்டுவந்து பார்த்தேன். கையைத் தடவி சற்று நேரம் ரசித்தேன்.

‘‘என்ன... அப்படிப் பாத்துட்டே இருக்கே... ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறியே...?"

‘‘என்ன சொல்லணும்?"

‘‘கைரேகை பாக்கத் தெரியும்னு சொன்னியே...?"

‘‘எக்ஸாட்லி. அதான் பாத்து, ரசிச்சுட்டிருக்கேனே... பாக்கத் தெரியும்னு சொன்னேனே தவிர, பலன் சொல்லத் தெரியும்னு நான் எப்ப உன்கிட்ட சொன்னேன்?"

‘‘ய்யூ... ராஸ்கல்!" என்றபடி கை கொள்ளுமளவு தண்ணீரைப் பிடித்து என்மேல் எறிந்தாள்.
                                                              -மார்ஜியானாவுடன் ஒரு மழைக்காலத்தில்...!

============================================

‘‘பெண்கள்கிட்ட ஆண்கள் அதிகம் ரசிப்பது என்ன?" திடீரென்று கேட்டாள் மார்ஜி. எக்மோர் ஸ்டேஷன் ப்ளாட்பாரத்தில் அந்த நடுவெயில் நேரத்தில் பென்ச்சில் அமர்ந்திருந்த எங்களிருவரைத் தவிர அதிக ஜனங்களில்லை. ‘‘கண்கள்...!" என்றேன். ‘‘குட்! அப்புறம்...?" என்றாள். நான் சொன்னேன்: ‘‘வருங்காலக் குழந்தையின் ஆரம்பகால ஃபீடிங் பாட்டில்ஸ்!"

‘‘ச்சீய்...!!! ஸ்டுப்பிட்!!!" என்று தன் கைப்பையால் நிஜமாகவே கோபத்துடன் என்னை மொத்தினாள். பின் கேட்டாள்: ‘‘ஆமா... என் ஃப்ரெண்ட்ஸ்ல்லாம் நீ கணேஷ் மாதிரி புத்திசாலின்னு சொல்றாங்க. ஆனா என்கிட்ட மட்டும் ஏன்டா வஸந்த் மாதிரியே நடந்துக்கறே?"

‘‘அதுவா...? நீ ச்சீய்ன்னு நாலு மாத்திரை அளவுக்கு இழுத்துச் சொல்ற அழகை அடிக்கடி பார்த்து ரசிக்கத்தான்...!"

‘‘அப்ப உன்னைப் பாக்கறப்பல்லாம் ச்சீய்... ச்சீய்...ன்னு சொல்லிட்டே இருக்கட்டுமா?"
 
‘‘வேணாம் தாயி...! அப்புறம் என் பேரை மறந்துட்டு எல்லாம் ச்சீய், ச்சீய்ன்னே என்னக் கூப்பிட ஆரம்பிச்சிருவாங்க...!" என்றேன். கை நிறையச் சில்லறைக் காசுகளை மொசைக் ‌தரையில் எறிந்து பாருங்கள்... அது போலக் கலகலவென்று சிரித்தாள்!

                                                           -மார்ஜியானாவோடு ஒரு காதல் காலத்தில்..!

===============================================

நீண்ட நேரம் காக்க வைத்து தாமதமாய் வந்ததற்காய் மார்ஜியைக் கோபித்தேன் நான். கொஞ்சம் கடுமையாகவே பே(ஏ)சி விட்டேன் போலிருக்கிறது. அவள் கண்ணோரம் இரண்டு கண்ணீர் முத்துக்கள் திரண்டு வழிந்தன.

‘‘ஹேய்.... ப்ளீஸ்...! அழாதயேன்... நீ அழுதா என்னால தாங்க முடியாதும்மா..." என்று பதறினேன்.

கண்ணீரைத் துடைத்து விட்டுக் கொண்டு மென்சிரிப்பை உதிர்த்தாள். ‘‘என் மேல அத்தனை அன்பாடா உனக்கு?"

‘‘அதெல்லாம் இல்லடி. நீ சிரிச்சாலே ரொம்ப சுமாரா இருக்கும். அழுதயின்னா பாக்கச் சகிக்காது. அதான்..."

‘‘ச்சீஈய்ய்ய்! யூ ஸ்டிங்கிங் இடியட்!" என்று கோபமாய் என் வயிற்றில் குத்தினாள். ‘‘அவ்வளவுதானா உன் பிரியம், பாசம்லாம்?"

‘‘சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் டியர்...! ஆக்ச்சுவல்லி... நீ சொன்னா பஞ்சமா பாதங்களும்கூட நான் செய்யத் தயார்!"

‘‘ஏய்... இது உளறல்!" என்றாள். ‘‘இல்லை...! இது காதல்!" என்றேன்.

                                         -மார்ஜியானாவுடன் ஒரு மனோகரமான மாலையில்...!

===============================================

மிஸ்டர் ஆவி...! நீங்க சொன்ன மாதிரி பீரியடுக்குப் பொருத்தமான ஃபிகர் படத்தை அட்மாஸ்பியருக்கு வெச்சிட்டேன். இப்ப திருப்தியா? (ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ...?)

===============================================

Friday, October 25, 2013

ந்த வாரம் வலைச்சரத்துல ஆசிரியரா இருக்கற ‘எழில் அம்மா' (முறைக்காதீங்க ப்ளீஸ்...! அப்படித்தான் ஒருத்தரு கூப்ட்டிருந்தாரு அவங்கள...! ஹி... ஹி...!) ஒரு படத்தைப் பிரசுரிச்சு ‘‘இதைப் பாத்தா கவிதை தோணுதா?"ன்னு கேட்டிருந்தாங்க. ‘‘நான்லாம் கவிதை எழுதினா விபரீதம் ஏற்படும்"னு பயமுறுத்திட்டு வந்துட்டேன். இருந்தாலும்... எனக்குள்ள உறங்கிட்டிருந்த ஒரு கவிஞனை அவங்க தட்டி(!) எழுப்பிட்டாங்க. அதனால... ஒரு பழைய கவிதைய இப்ப எடுத்துவிடப் போறேன்.

துக்கு ஒரு ப்ளாஷ்பேக் இருககுங்க... னோகரமான ஒரு மாலை நேரம் மார்ஜியானாவுடன் கழிந்து கொண்டிருந்தது. (மார்ஜியானா யாருன்னு கேக்கறவங்களுக்கு அடுத்த பதிவுல விளக்கம் காத்திருக்கு.) அப்பல்லாம் இப்ப மாதிரி ஷாப்பிங் மால் கிடையாதுங்கறதால அது நிகழ்ந்த இடம் (நாங்கள் அடிக்கடி சந்திக்கும்) ஒரு பூங்கா. நிறைய (அவ) பேசிட்டிருந்தப்ப, (நான்) கேட்டுட்டிருந்தப்ப... திடீர்ன்னு, ‘‘உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்னு டீடெய்லாச் சொல்லேன் ப்ளீஸ"ன்னா. ‘‘சொல்றது என்ன... கவிதையாவே எழுதிக் காட்டறேன்" என்று என் கைவசம் எப்போதுமிருக்கும் சிறுகுறிப்புத்தாள் நோட்டில் எழுத ஆரம்பித்தேன். (‘‘உனக்கு கவிதைல்லாம் எழுத வருமா?"ன்னு அவ கேட்டதும், ‘‘கவிதையே பக்கத்துல இருக்கறப்ப கவிதை வராதா?"ன்னு நான் வழிஞ்சதும் இங்க அவுட் ஆஃப் கவரேஜ்ப்பா!) எழுதி முடிச்சுட்டு அவகிட்டக் குடுத்தேன். பொறுமையாப் படிச்சு முடிச்சவ, எழுந்து, என்னை முறைச்சுட்டு, எதுவும் பேசாம டக்குன்னு போயிட்டா... அதுக்கப்புறம் அவளைச் சமாதானப்படுத்த ஒரு வாரம் கடுமையா மெனக்கெட வேண்டியிருந்தது.

அதனால... இந்தக் கவிதை(?)யைப் படிக்கற உங்களுக்கு ஏற்படப் போற ஊசி (பின்) விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல... விபரீதத்துக்கு வித்திட்ட எழில் மேடம்தான் பொறுப்புங்கறதை மீண்டும் வலியுறுத்திச் சொல்லிக்கறேன். (பத்த வெச்சிட்டியே பரட்டை...! ஹி... ஹி... ஹி...!)


                                                   தனிமை விரட்டும் சத்தம்!

கனவில் தினமும் நீந்திடப் பிடிக்கும்! வைகறை
    வானத்தின் சிவப்பு மிகவும் பிடிக்கும்!
மனம் மயக்கும் சங்கீதம் பிடிக்கும்! கொட்டும்
    மழைதனில் நனைந்து ஆடிடப் பிடிக்கும்!


உனது ஓரவிழிப் பார்வை பிடிக்கும்!  ‘ச்சீய்’
    என்னும் சிணுங்கல் கேட்கப் பிடிக்கும்!
எனது பார்வை மேயுங்கால் சீற்றமாய் - நீ
    என்னை அடிப்பதும் பிடிக்கும்! என்றேனும்
சினங்கொண்டு எனை வெறுத்தால் - உனது
    வெறுப்பும் பிடித்தம் தானெனக்கு!நாங்களும் வெப்போம்ல... கவிதைக்குப் படம்!

படிக்கப் பிடிக்கும்; நிறைய படைக்கப் பிடிக்கும்!
    இருளும் பிடிக்கும்; வெளிச்சமும் பிடிக்கும்!
நடிப்பும் பிடிக்கும்; நங்கையர் சிரிப்பும் பிடிக்கும்!
    மழலையின் முத்தம் மனதுக்குப் பிடிக்கும்!


பண்புடன் ஆடும் பரதம் பிடிக்கும்! உலகம்
    தனை மறந்து உறங்கப் பிடிக்கும்!
அன்பினில் நனைந்து வாழப் பிடிக்கும்! அனல்
    வீசும் எதிரியையும் பிடிக்கு மெனக்கு!


சத்தம் இல்லாத தனிமை பிடிக்கும்! அந்தத்
    தனிமையை விரட்டும் சத்தமும் பிடிக்கும்!
யுத்தம் இல்லாத உலகம் பிடிக்கும்! உன்னில்
    உயிர்ப்பைத் தேடும் தருணங்கள் பிடிக்கும்!


சிந்தனை பிடிக்கும்! வந்தனை பிடிக்கும்! நான்
    புதிதாய்ப் பிறக்கும் தருணங்கள் பிடிக்கும்!

எத்தனை அழகு பூமிதனில்! நிலவுக்குக் கீழே
    வாழ்ந்திடும் உலகில் எல்லாமும் பிடிக்கும்!

இத்தனைக்கு மேலும் என்கவி தொடர்ந்தால் - கண்ணே...
    நிச்சயம் உனக்குப் பைத்தியம் பிடிக்கும்!


கொஞ்சம் புன்னகையுடன்,

கொஞ்சம் குசுமபுடன்,
(கொஞ்சம் கொலவெறியுடன்)...
பாலகணேஷ்!

Monday, October 21, 2013

மொறு மொறு மிக்ஸர் - 21

Posted by பால கணேஷ் Monday, October 21, 2013
ஸ்ரியாதாசனான கோவை ஆவியிடம், ‘‘சென்னைல நாம ‘ராஜாராணி’ படம் சேர்ந்து பாக்கணும்" என்று முன்பே சொல்லி வைத்திருந்தேன். ஏற்கனவே கோவையில் இரண்டு முறை பார்த்திருந்தாலும்கூட எனக்காக மூன்றாம் முறை படம் பார்க்கும் தியாகத்தைச் செய்தார் அவர். படத்தைப் பற்றி வலையில் நிறையப் பேர் வலையில் எழுதித் தள்ளி விட்டார்கள். எனவே, பாயாசத்தில் மிதக்கும் முந்திரிகளாக நான் ரசித்த சின்னச் சின்ன விஷயங்களைப் பற்றிச் சொல்கிறேன்.

* இரவில் குடித்துவிட்டு வீடு திரும்பும் ஆர்யாவுக்காக நயன்தாரா கதவு திறக்க மறுக்க, ஆர்யா அபார்ட்மெண்ட் வாசிகளைத் தூங்க விடாமல் ஒவ்வொரு வீட்டுக் கதவையாகத் தட்டி டார்ச்சர் செய்ய, அனைவரும் ஒன்றுகூடி தத்தமது லாங்வேஜில் நயனிடம் புகார் சொல்லிவிட்டுச் சென்றதும், ப்ளாட் வாசியின் நாய் ஒன்று வந்து அதன் பாஷையில் புலம்பிவிட்டுச் செல்வது. * மப்பில் நஸ்ரியா வீட்டு வாசலில் ஆர்யா மயங்கிவிட, அவரை கேட்டின் உள்ளே இழுத்துப் போட்டுவிட்டு, தான் அவனைக் காதலித்த தருணங்களை நஸ்ரியா நினைத்துப் பார்க்கையில் வரும் நஸ்ரியாவின் சின்னச் சின்ன எக்ஸ்ப்ரஷன் கட்ஷாட்கள். * கஸ்டமர் கேர் ஜெய்யை நயனின் தோழிகள் கலாய்ப்பது (தொடர்ந்து டயல் செய்தால் நாம் விரும்பும் நபரை கஸ்டமர் கேரில் பிடிக்கறதுங்கறது லேசான விஷயமா என்ன?) * சத்யராஜின் கதாபாத்திரம்.

=========================================

நான்கு பதிவர்கள் சந்தித்தால் உலக க்ஷேமத்துக்காக மழை வேண்டி யாகம் செய்வதைப் பற்றியோ, இந்தியப் பொருளாதாரத்தை எப்படி முன்னேற்றுவது என்பது பற்றியோ பேசப் போவதில்லை. நட்புரீதியாக (சிலவேளைகளில் தொழில் ரீதியாகவும்) சந்தித்து உறவுகளை வலுப்படுத்துவதே நோக்கம் என்றால் எவரும் புரிந்து கொள்வதாக இல்லை. தமிழின் முன்னணி(?) பத்திரிகையான குமுதம் இதழில் ஃபேஸ்புக்கையும் ட்விட்டரையும் புகழ்ந்து எழுதியவர்கள் (அதில் வரும் மரண மொக்கைகளை மட்டுமே இவர்கள் பிரசுரிப்பது வேறு விஷயம்!) ப்ளாக் பற்றிய கட்டுரையில் மட்டும் தங்கள் வயிற்றெரிச்சலை கொட்டித் தீர்த்திருக்கிறார்கள். ‘‘....கொஞ்சம் கொஞ்சமாக நான்கு, எட்டு, பதினாறு என வளர்ந்து ‘பதிவர் சந்திப்பு’ என மெரீனா பீச், காந்தி சிலை அருகே சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். வரலாற்று சந்திப்புகளில் இந்த நூற்றாண்டின் மிக முக்கிய சந்திப்புகளில் அதுவும் ஒன்றாக இருககக் கூடும்" என்கிறது குமுதம்.

‘‘நமக்கு கதையோ, கட்டுரையோ, ஜோக்கோ... என்ன எழவா இருந்தாலும் எழுதி அனுப்பிட்டு நாம நாலு பேரு அதை செலக்ட் பண்ணி வெளியிடறதுக்காக நாலு மாசம் நாக்கைத் தொங்கப் போட்டு காத்திருந்து, அப்புறம் அது நாலாயிரம் பேரை அடையறதுல்ல பெருமை... இவனுங்க எழுதி தானே வெளியிட்டுக்கறாங்க. நாப்பதாயிரம் பேரை ரீச் பண்றாங்க... என்னாங்கடா இது?" ‘‘நம்ம வாசகர் ஒருத்தன் இன்னொரு ஊருக்குப் போறான்னா எவனுக்கும் தெரியாது அது. ஆனா ஒரு ப்ளாக்கர் இன்னொரு ஊருக்குப் போறான்னா, உடனே தகவல் தெரிவிச்சுடறான். அங்க இருக்கறவங்க செமையா உபசரிககிறாங்க. என்ன அநியாயம்?" ‘‘நாம (ஓசியில்) படம் பார்த்து ரெண்டு நாள்ல விமர்சனம் எழுதறதுக்கு முன்னாடி இவனுங்க (பணம் கொடுத்து) படத்தைப் பாத்துட்டு ராவோட ராவா விமர்சனமா எழுதித் தள்ளிடறானுங்களே..." -என்பன போன்ற குமுதத்தின் ------ எரிச்சல்கள் அந்தக் கட்டுரையில் பிரதிபலிப்பதாகவே நான் நினைக்கிறேன். ஒருவரை இமிடேட் பண்ணுதல், மிமிக்ரி பண்ணுதல் ஆகியவை புகழ்ச்சியின் மற்றொரு வழியே என்பார்கள். அதுபோல இணையதளத்தைப் பற்றி குமுதம் எழுதியதை பெரிய பாராட்டாகவே இப்போது எண்ணத் தோன்றுகிறது. மகிழ்வோம்!

=========================================

ந்திய ரூபாயின் மதிப்பு ஒரு அமெரிக்க டாலருக்கு இணையாக எவ்வளவு இருக்கிறது என்பதை வைத்துத்தான் பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதைச் சொல்ல முடியும். அதன்படி பார்த்தால் 2012ல் 45 ரூபாயாக இருந்த ஒரு டாலரின் மதிப்பு இப்போது 65 ரூபாயைத் தாண்டி விட்டது. 1977ல் மலேசிய ‘ரிங்கிட்'டின் மதிப்பு அதலபாதாளத்துக்குச் சரிந்தபோது அந்நாட்டு அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து மூன்றே வருடங்களில் அமெரிக்க டாலருக்கு நிகராகத் தன் ‘ரிங்கிட்'டின் மதிப்பை உயர்த்தியது. * தங்கத்தின் இறக்குமதியை நிறுத்தியது * வெளிநாட்டு வங்கிகளில் ஊழல் அரசியல்வாதிகள் போட்டிருந்த பணத்தை சப்ஜாடாக பறிமுதல் செய்தது * வெளிநாட்டு இறக்குமதிப் பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முடியுமா என முயன்று வெற்றி பெற்றது ஆகியவை அந்த நடவடிக்கைகள். ரூபாயின் மதிப்பை உயர்த்த, ‘‘பொதுமக்களே, தங்கம் வாங்காதீங்க" என்கிறார் ஒரு அமைச்சர். ‘‘சொந்த வாகனத்துல பயணிக்காம, பஸ்/ரயில்ல பயணியுங்க"ங்கறார் இன்னொரு அமைச்சர். இப்படி பொதுமக்கள் தியாகம் செஞ்சாப் போதும், நாங்க ஸ்விஸ் பாங்க்குல கோடிகளைக் குவிச்சு வெக்கறதுங்கற விஷயத்தை தியாகம் செய்யவே மாட்டோம்ங்கற தலைவர்களோட தேசப்பற்று புல்லரிக்க வெக்குதில்ல...

சரி விடுங்க... பொருளாதாரத்துல முன்னேறாட்டி என்ன... தொழில்நுட்ப பயன்பாட்டில எங்கயோ போயிட்டிருக்கோம் நாம. இணைய தளத்தைப் பயன்படுத்துவதில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடிச்சிருக்குன்னு ‘காம்ஸ்கோர்’ ஆராய்ச்சி நிறுவனப் புள்ளிவிவரம் தெரிவிச்சிருக்கு சமீபத்துல. செல்போன் பயன்படுத்துபவர்களில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம் கிடைச்சிருக்குன்னும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கினறன. இப்படிப் பெருமைப்படறதுக்கு விஷயங்களா நம்மகிட்ட இல்ல... பாரத் மாதா கீ ஜே!

=========================================

‘‘திரும்பத் திரும்ப ஒரே மாதிரி இடத்துல சந்திக்காம புதுசா எங்கயாவது பாக்கலாமா?’’ என்று ஸ.பை.யிடம் கேட்டதற்கு பரங்கி மலையில் ஏறலாம் என்றார் அவர். எனக்கும் நீண்ட நாட்களாகவே அங்கு செல்லும் எண்ணம் இருந்ததால் சீனு + கோவை ஆவி சகிதம் மலையேறினோம். மலையில் ஏறியதுமே ‘தூய ஆவியின் வருகை உங்களை புனிதப்படுத்தும்’ என்று பாதிரியார் மைககில் பேச, ஆவி நம்மை பெருமையாகப் பார்த்தார். மலையைச் சுற்றி சென்னை அழகியின் இயற்கை அழகை ரசித்து, புகைப்படமெடுத்து பேசிக் கொண்டிருக்கையிலேயே மலையில் நல்ல மழை! மழைக்கு ஒதுங்கிய இடத்தில் ஆவியிடம் எடுக்கப்பட்ட ஒரு மினி பேட்டி

* ‘‘எதனால ஆவின்னு பேர் வெச்சுக்க முடிவு பண்ணீங்க? ‘‘படிக்கறவங்களுக்கு ஒரு டெரரா இருக்கட்டுமேன்னுதான்..." ‘‘அதுக்கு உங்க ஃபோட்டோவை ப்ளாக்ல போட்டிருந்தாலே போதுமே..." ‘‘ஹி...! ஹி...!" * ‘‘மிஸ்டர் ஆவி! ரொம்ப எளிமையான நடையில எழுதிட்டிருக்கீங்க... எப்ப சீனு மாதிரி இலக்கிய நடையில ஜெயமோகனோட ஜெராக்ஸ் மாதிரி எழுதுவீங்க?" (‘‘வாத்தியாரே... இது அநியாயம்’’ -சீனு!) ‘‘எனக்கு ஜெயமோகன், சாருபாலா (சாருநிவேதிதாவை அவர் சொன்ன அழகு! ஹி... ஹி..!) மாதிரி இலக்கியமா எழுதல்லாம் ஆசை இல்ல ஸார்... எழுதவும் வராது. வர்றதைப் பண்ணுவமே..." * ‘‘நீங்க இயக்குனரானா நஸ்ரியாவைத்தான் ஹீரோயினாப் போடுவீங்கன்னு உலகத்துக்கே தெரியும். ஹீரோவா யாரைப் போடுவீங்க?" ‘‘பெரிய பட்ஜெட் படம்னா சூர்யாவைப் போடுவேன்..." ‘‘சின்ன பட்ஜெட் படம்னா..?" ‘‘நானே நடிச்சிடுவேன்..." ‘‘நீர் நடிச்சாலே அது பிரம்மாண்டப் படமா ஆயிடுமே..." ‘‘ஹி... ஹி...! அப்ப நம்ம சீனுவை ஹீரோவாப் போட்டுடுவேன்" -விக்ரமாதித்தனின் சரியான பதிலால் தெறித்து ஓடிய வேதாளம் மாதிரி ஆவியின் இந்தப் பதிலால் சீனு மென்மழையிலேயே ஓடத் துவங்க, மலையை விட்டு இறங்கினோம் கீழே.

=========================================

ன்றரை ஆண்டுகளாக அந்தப் பெண் எனக்குப் பரிச்சயம். நான் எழுதும் பதிவுகளை தவறாமல் படித்து ரசித்த விஷயங்களைச் சொல்லிக் கருத்திட்டுச் செல்வாள். சரி, அவளின் தளத்தில் என்ன எழுதுகிறாள் என்று படிக்கலாம் என்று முயன்றபோதுதான் வலைத்தளமே எழுதாத வாசகி என்பது எனக்குப் புரிந்தது. (இப்படி வலையில் எழுதாத பல வாசகர்கள் கிடைப்பது பாக்கியம்). முதலாம் ஆண்டு பதிவர் திருவிழாவில் சந்தித்தேன் நேரில். ரஞ்சனி அம்மாவும் நானும் தந்த உற்சாகத்தின் பேரில் ஒரு வலைத்தளம் துவங்கி நம்மை நதிக்கரையில் நடைபோடச் செய்தாள் அந்தப் பெண். (இப்பக் கொஞ்ச நாளா நதிக்கரையில எழுதறதில்ல... கல்யாணம் ஆன ராசி நிறைய எழுத வெக்கட்டும்!)

அவளின் பெயர் சமீரா. அதன்பின் பல சந்திப்புகள் மற்றும் தொலைபேசி உரையாடல்கள். ஒரு மகளைப் போல என்மேல் அன்பைப் பொழிந்து வந்த அந்தப் பெண்ணுக்கு முந்தாநாள் திருமண நிச்சயதார்த்தமும், நேற்று திருமணமும் சிறப்பாக நடந்தேறியது. சென்று வாழ்த்தி வந்த அனுபவம் மிக மகிழ்வானது. விழாவுக்கு என்னுடன் வந்திருந்த மற்றொரு பிரபலத்தை (ஹி.. ஹி...) நீங்கள் நன்றாகவே அறிவீர்கள் - படத்தில காண்க.

Tuesday, October 15, 2013

இரண்டாம் ரகசியம்! (நாடக விமர்சனம்!)

Posted by பால கணேஷ் Tuesday, October 15, 2013
கோவையிலிருந்து வந்திருந்த ஆ.வி.யுடன் நானும் மெ.ப.சிவாவும் இணைந்து வாணிமஹாலில் ­ஒய்.ஜி.ம­கேந்ந்­தி­ரா ­கு­ழு­வி­ன­ரின் 'இரண்டாவது ரகசியம்' நாடகம் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அந்நாளில் சோவும், இந்நாளில் டி.வி.வரதராஜனும் போடுகிற மாதிரி சீரியஸான நாடகமாகவும் இல்லாமல், கிரேஸி, எஸ்.வி.சேகர் மாதிரி ஒரேயடியாக சிரிப்புத் தோரணமாகவும் இல்லாமல் ஒய்.ஜி.மகேந்திராவின் நாடகங்கள் இரண்டுங் கலந்து இருக்கும் என்பதை அறிந்ததால் நல்ல ஒரு அனுபவம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன்தான் அரங்கினுள் நுழைந்தோம்.

ரு ரயில்வே ஸ்டேஷனில் புயல் காரணமாக ரயில் தாமதமாவதால் வெயிட்டிங் ரூமில் தங்க நேரிடும் மூவர்தான் முக்கிய கதாபாத்திரங்கள். அரசியல்வாதி ஒய்.ஜி.எம்., குடும்பத் தலைவி ஒருத்தி, ஒரு இதய மருத்துவர் ஆகிய அந்த மூவரிடமும் அதே ரூமில் தற்கொலை செய்து கொண்ட ஆவி ஒன்று இரவானால் பாடும் என்று பயமுறுத்துகிறார் ஸ்டேஷன் மாஸ்டர். (ஆவி பாடும் என்றதும் என் பக்கத்து சீட்டிலிருந்த கோவை ஆவி கொஞ்சம் நெளியத்தான் செய்தாரு!) "என்னடா இது... வைதேகி காத்திருந்தாள் படத்தை உல்டாவாக நாடகமாக்கிடாங்களோ"ன்னு பயமே வந்துருச்சு. நல்லவேளை... அந்த கேரக்டர்ல நடிச்ச ஐஸ்வர்யா பாடாததால தப்பிச்சோம்டா சாமீ...! (அம்­ம­ணி­யின் ‘வெண்­க­லக்’ ­கு­ரல் ­நீங்­கள் ­அ­றிந்­த­தே...) சரி... கதைக்கு வரலாம். ஸ்டேஷன் மாஸ்டர் சொல்லியது போலவே இதயநோய் நிபுணருக்கும், குடும்பத்தலைவிக்கும் ஐஸ்வர்யா தட்டுப்படுகிறார். அங்கி­ருக்­கும் மூவரின் அந்தரங்கங்களையும் போட்டு உடைக்கிறார். ஒய்.ஜி.எம்.மின் கண்களுக்கு அவர் தெரிவதில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஒய்.ஜி.எம்.மின் கண்களுக்கு ஐஸ்வர்யா தெரியும்போது மற்ற இருவரின் கண்களுக்குப் புலப்படுவதில்லை. அனைவரும் அ­வ­ரை ‘ஆவி’யோ என்று சந்தேகிக்க, ‘நான் ஆவியல்ல. என்னைத் தொட்டுணரலாம்’ என்கிறார் ஐஸ்வர்யா. பின்னே அவர் யார்தான் என்கிற ‘இரண்டாவது ரகசியம்’ உடைகிறபோது நாடகத்தின் மெசேஜும் சொல்லப்படுகிறது.

‘‘ரொம்ப நல்ல நாடகமா இருக்கும் போலருக்கே’’ என்று தோன்றுகிறதல்லவா? உண்மை... நல்ல நாடகம்தான். நாடகம் சொன்ன மெசேஜும் அருமைதான். ஆனால் அதை முழுவதுமாக அனுபவிக்க விடாமல் பல்லிடை சிக்கிய சிறு உணவுத் துரும்பாய் நிறைய உறுத்தல்கள். நாடகத்தில் இடம்பெற்ற ஜோக்குகள் மூன்று வகைப்படும். ஒன்று... ஒய்.ஜி.எம். இளைஞராக இருந்தபோது அவரே பேசியதை இப்போது அவரே ரிப்பீட்டுகிறார். உ.ம்.கள்: * ‘‘இவன் சின்ன வயசுல வீட்ல ஊதுபத்தி ஸ்டாண்டை முழுங்கிட்டான்.’’ ‘‘ஐயையோ... என்னாச்சு?’’ ‘‘நல்லவேளையா இவங்க வீட்ல வாழைப்பழம்தான் ஊதுபத்தி ஸ்டாண்ட்’’ * ‘‘அழகான பொண்ணைப் பாத்தேன்னு அவன் சொன்னான்...’’ ‘‘அப்ப நிச்சயமா இந்தப் பொண்ணைச் சொல்லியிருக்க மாட்டான்...’’ -இப்படி ரிப்பீட்டியதில் 30% ஜோக்குகள் சலிப்புத் தந்தன.

மீதி 30% ஒய்.ஜி.எம்.முக்குத் தேவையற்ற ‘ஏ’ ஜோக்குகள். உ.ம்.கள்: * ‘‘இந்த ஊரு பேரென்ன?’’ ‘‘ஏதோ ஒக ஊருன்னு போட்ருக்கு...’’ ‘‘பேரை மாத்தச் சொல்லு, கேக்கறப்பவே வேற அர்த்தம் வருது...’’ * ‘‘என் ஃப்ரெண்ட் ஒரு பல் டாக்டர். ஆஸ்பத்திரி வாசலை பல் ஷேப்ல கட்டியிருந்தான்’’ ‘‘நான்கூட ஹார்ட் டாக்டர். என் ஹாஸ்பிடல் வாசலை ஹார்ட் ஷேப்பில கட்டியிருக்கேன்’’ ‘‘என் ஃப்ரெண்ட் ஒருத்தி கைனகாலஜிஸ்ட். அவ ஹாஸ்பிடல் வாசலை...’’ ‘‘ஐயய்யோ...’’ ‘‘ஏன் அலர்றீங்க? குழந்தை ஷேப்ல கட்டியிருந்தான்னு சொல்ல வந்தேன்’’. ஈஸ்வரா...! இப்படியான 30% ஏ ஜோக்குகள் தலைசுற்ற வைக்கின்றன. சரி போகட்டுமென்றால் மீதி 20% ஜோக்குகள்¢ ஸ்டேஷன் மாஸ்டராக நடித்த சுப்புணி என்ற நடிகரின் (அருணாசலம் படத்தில் ரஜினியை மிரட்டி, பின் ரஜினியால் மிரட்டப்படுவாரே... அவர்!) உயரக் குறைவைப் பற்றி ஒய்.ஜி.எம். அடிக்கிற ஜோக்குகள். ஒருமுறை இருமுறையல்ல.. பல முறை அவர் குள்ளம் என்பதை வைத்து மகேந்திரா ஜோக்கடிக்கும் போது சிரிக்க முடியவில்லை... எரிச்சல்தான் வந்தது! அந்த நடிகர் தன்னைக் குள்ளம் என்று எள்ளி நகையாடப்படுவதை எப்படி சகித்துக் கொள்கிறார் என்பது தெரியவில்லை.

ஆக... இந்த ஜோக்குகளையெல்லாம் தவிர்த்து ஒன்றிரண்டு இடங்களில் மட்டுமே வாய்விட்டுச் சிரிக்கிற நல்ல நகைச்சுவை தென்பட்டது. உ.ம்.கள் : * ‘‘கோமாளி மாதிரியும் பிரதமர் இருக்கலாம்னு தேவேகவுடா நிரூபிச்சாரு... நம்ம நாட்டுக்கு பிரதமரே தேவையில்லன்னு மன்மோகன் நிரூபிச்சுட்டாரு...’’ * ‘‘என்னை மாதிரி அரசியல்வாதி தான் நாட்­டு­ல மெஜாரிட்டி. திடீர்னுல்லாம் எதும் மாற்றம் வந்துடாது. ஏதாவது ‘மோடி’ வித்தை நடந்தாத் தான் உண்டு...!’’ அப்புறம்... ஸ்டேஷன் மாஸ்டராக வரும் நடிகர்
சுப்புணி பங்குபெற்ற நீண்ட நகைச்சுவைக் காட்சி ஒன்று.

ஒய்.ஜி.மகேந்திராவும் மற்ற கேரக்டர்களும், ஒவ்வொரு ஜோக் அடிக்கப்படும் போதும் ‘பாங்’ என்ற சப்தத்துடன் துள்ளுவது மிக மிகையாகத் தெரிந்தது. என்னதான் அதிர்ச்சியான ஜெர்க்கான ஜோக்கானாலும் இப்படியா துள்ளிக் குதிப்பார்கள்? அந்த மிகை நடிப்பை ரசிக்க முடியவில்லைதான்...! சரி... ஒரேயடியா குறையாச் சொல்லிட்டிருந்தா எப்படி? நிறைவான விஷயங்கள் இல்லையான்னு கேட்டா... இருக்கத்தான் செய்தன. நாடகம் நடைபெறும் இடம் ரயில்வே ஸ்டேஷன் வெயிட்டிங் ரூம்... தவிர, ஆஸ்பத்திரி அறை, குடும்பத் தலைவியின் வீடு என்று மூன்றே லொகேஷன்கள் என்பதால் திரையை ப்ளாஷ்பேக் வரும் சமயங்களில் இரண்டாகப் பிரித்து லொகேஷன் சேன்ஜ் செய்து காட்டிய விதம் ரசிக்க வைத்தது. அவர்கள் உரையாடல்கள் நடக்கிற சமயத்தில் ரயில்கள் கடந்து செல்வதை ஒளியமைப்பு மற்றும் சப்தம் மூலமாகவே பார்வையாளர்களை உணரச் செய்த உத்தி ரொம்பப் பிடித்தது.

முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ஒய்.ஜி.மகேந்திராவும், ஐஸ்வர்யாவும் மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தனர். ஸ்டேஷன் மாஸ்டராக நடித்த சுப்புணி என்பவரின் உயரம்தான் குறைவு... அவர் நடிப்பின் உயரம் அதிகம்! ஹார்ட் ஸ்பெஷலிஸ்டாக நடித்தவர், குடும்பத் தலைவியாக வந்த உயரமான பெண், ஃப்ளாஷ்பேக்கில் பேஷண்ட்டின் மனைவியாக வந்த அம்மணி... என்று மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களின் நடிப்பும் சிறப்பாக அமைந்து இவர்கள் மூவரின் நடிப்புக்கு பக்கவாத்தியமாக அமைந்தது. மேலே நான் குறிப்பிட்ட உறுத்தல்களைத் தவிர்த்திருந்தால் ’நல்ல நாடகம் பார்த்தோம்’ என்ற திருப்தி இருந்திருக்கும். இப்போது... ‘‘நல்­ல­வே­ளை... மோ­ச­மா­ன ­நா­ட­கத்­தைப் ­பார்ர்க்­க­வில்­லை’’ என்கிற ஆறுதல் மட்டும் எஞ்சியிருந்தது.

னோ தெரியவில்லை... முன்பு காத்தாடி ராமமூர்த்தியின் நாடகம் பார்த்தபோதும் சரி, இப்போது ஒய்.ஜி.எம்.மின் நாடகம் பார்த்தபோதும் சரி... நாடகம் முடிந்ததும் ஸ்கிரீனுக்குப் பின் சென்று நாலு வார்த்தை பாராட்டிப் பேசலாம் என்பதுதான் முடிவதில்லை. இந்த நடிகர்கள் எல்லாம் நாடகம் முடிந்ததும் பேக் செய்து கொண்டு எஸ்கேப்பாவதிலேயே குறியாக இருக்கிறார்கள். போய் இரண்டு வார்த்தை பேசினால்... ‘‘தாங்ஸுங்க’’ என்று ஒரு முத்தை உதிர்த்துவிட்டு, வேகமாக நகர்ந்து விடுகிறார்கள். (சினிமா நடிகர்களிடம்கூட எளிதாக நிறையப் பேசியதுண்டு நான்.) ஒய்.ஜி.எம்.மிடமும் இதைத்தான் பார்த்தேன். அவருடன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளவே ஆவியும், சிவாவும் கால் மணி நேரத்துக்கும் மேல் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆடியன்ஸின் பல்ஸ் பார்க்காமல் அடுத்தடுத்த நாடகங்களை எப்படி பெட்டராகப் பண்ண முடியும் என்கிற ‘ரகசியம்’ எனக்குப் புரியத்தான் இல்லை...! ஆனால் ஆவிக்கு நாடகம் பார்த்ததிலும், ஒய்.ஜி.எம்.முடன் படம் எடுத்துக் கொண்டதிலும் பரமதிருப்தி. அதனாலேயே எனக்கும் கிடைத்தது கொள்ளை மகிழ்ச்சி!

Saturday, October 5, 2013

பார்த்தாலே கசக்கும்!

Posted by பால கணேஷ் Saturday, October 05, 2013
து என் பள்ளிப் பருவம். ஏழாவதோ, எட்டாவதோ படித்ததாக நினைவு (1979-80). ஒரு தீபாவளித் திருநாளில் 'நினைத்தாலே இனிக்கும்' படம் ரிலீஸான போது ஆர்வமாய் அடித்துப் பிடித்து ஓடி, பெண்கள் வரிசையில் புகுந்து (­ஹி... ஹி... ஹி...!) டிக்கெட் வாங்கிப் படம் பார்த்தேன். அதன்பின் பலமுறை தியேட்டர்களிலும், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் போதும் திரும்பத் திரும்பப் பார்த்து ரசித்திருக்கிறேன். என் எவர்க்ரீன் ஃபேவரைட் லிஸ்டில் அது இப்பவும் இருக்கிறது என்றால் அதற்குக் காரணங்கள் பல.

* அப்போதைய என் ஃபேவரிட் கதாநாயகன் கமலஹாசன் (அப்ப உலகநாயகன் இல்ல... வெறும் காதல் இளவரசன், சாக்லேட் பாய் இமேஜ்தான் அப்ப) கதாநாயகனாக நடித்திருந்தார். * சிங்கப்பூரை அழகாக விஷுவலைஸ் செய்திருப்பார்கள். (அதுதானே முக்கியம், கதை என்பது துளியூண்டு இருந்தால் போதும் என்பது இயக்குனர் கே.பி.யின் தீர்மானம்) * சுஜாதாவின் குறும்பு கொப்பளிக்கும் 'நறுக் சுருக்' வசனங்கள் * சேலை கட்டியும், கட்டாமலும் (ஐ மீன்... பேண்ட் ஷர்ட்டில்!) கதாநாயகி ஜெயப்ரதா ரொம்ப அழகாக பார்பி டால் போல இருப்பார். * 'கறுப்பன்' என்று அதுகாறும் ஏளனமாகப் பேசி கேலி செய்துவந்த ரஜினிகாந்தின் (இன்றைய சூப்பர்ஸ்டார்) நடிப்பை நான் ரசித்துக் கைதட்டிய முதல் படம். * 'இது ஒரு தேனிசை மழை' என்று விளமபரப்படுத்தப்படதற்கேற்ப எம்.எஸ்.விஸ்வநாதன அதகளப்படுத்தியிருந்த இனிமையான பாடல்கள் இப்பவும் 'கேட்டாலே இனிக்கும்!'.

'நினைத்தாலே இனிக்கும்' படத்திற்கு சில மாதங்கள் முன்னால் சுஜாதாவின் கதையான 'ப்ரியா'வை (அமெரிக்கப் பின்னணியில் அவர் எழுதியதை சிங்கப்பூராக மாற்றி, அவர் கதையைக் நிறையவே கொத்துக்கறி பண்ணி) சண்டை, சாகசங்கள் எல்லாம் சேர்த்து (பின்ன... ரஜினிகாந்த் நடிச்சா அதெலலாம் இல்லாம ஆர்ட்ஃபிலிமாய்யா எடுக்க முடியும்?) சிங்கப்பூரை கலர்ஃபுல்லா படம் பிடிச்சுக் காட்டி ஹிட்டடிச்சிருந்தாங்க. இப்பவும் கேட்டா ரசிக்கிற மாதிரி இருக்கும் அந்தப் படத்தின் பாடல்கள்ல இளையராஜாவின் இசை. அதே சுஜாதாவின் கதை வசனத்துல, அதே சிங்கப்பூர்ல, அதே ரஜினி(யோட கமலும்) வெச்சு ஒரு மியூஸிக்கல் ஹிட் குடுக்கறோம் பாருன்னு கே.பாலசந்தர் ஆசைப்பட்டு எடுத்த படம்தான் 'நினைத்தாலே இனிக்கும்' எம்.எஸ்.வி.க்கும் அப்ப 'தன்கிட்ட சரக்கு இன்னும் தீர்ந்துடலை'ன்னு நிரூபிக்கற ஒரு உந்துதல் இருந்தது. அதன் விளைவுதான்... அது 'தேனிசை மழை'யாக உருவானது.

இத்தனை ப்ளஸ்கள் உள்ள, ரசனையான படம் இப்போது டிஜிட்டலைஸ் செய்யப்பட்டு வருகிறது என்ற விஷயம் தெரிந்ததுமே முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். மெ.ப.சிவகுமாரிடம் எப்படியும் டிக்கெட் வாங்கி விடு, நாம் போயாக வேண்டும் என்று கண்டிஷன் வேறு போட்டிருந்தேன். ஆனாலும் படம் ரிலீஸான நேற்றைய தினம் சிவாவால் வர இயலாமல் போனதால், கோவையிலிருந்து வந்திருந்த ஆவியை ஸ்கூல் பையனின் உதவியுடன் பிடித்துக் கொண்டு நேற்று மாலைக் காட்சிக்கு உற்சாகமாகத்தான் போனோம். ஹும்... போகாமலே இருந்திருக்கலாம்னு இப்பத் தோணுது.

முதல்ல குறிப்பிட வேண்டிய விஷயம்... 'டிஜிட்டலைசேஷன்' அப்படின்னா என்னன்னு எனக்கு சுத்தமாப் புரியலை. இதற்குமுன் டிஜிட்டலைஸ் செய்யப்பட்டு வந்திருந்த 'கர்ணன்' 'பாசமலர்' படங்களை நான் பார்க்கத் தவறிவிட்டேன். இப்ப இந்தப் படத்தப் பார்த்தா... எம்.எஸ்.வி. இசை(ழை)த்திருந்த அழகான இசைக்கு நடுவுல சில கூடுதல் ஒலிகளை சேர்த்திருக்காங்க. அதுதான் டிஜிட்டலைஸா? படத்தோட ப்ரிண்ட்ல சில காட்சிகள்ல இப்பவும் மழை பெய்யுது. அப்ப படத்தோட ப்ரிண்ட், கலர் கரெக்ஷன் பண்றதுக்குப் பேரு டிஜிட்டலைஸா? ஒண்ணுமே புரியல ஸாமீஈஈஈஈ! எதுவா இருந்தாலும் இனிமே எந்தப் பழைய படத்தையும் டிஜிட்டலைஸ் பண்றேன் பேர்வழின்னு எவனும் புறப்பட்டுக் கெடுத்துக் குட்டிச்சுவராக்காம இருக்கணும்னு இடியாப்பேஸ்வரரை வேண்டிக்குவோம்.

படத்துல ரஜினிகாந்த் இருக்கறதால வேற நகைச்சுவைகள் தேவையில்லைன்னு டிஜிட்டலைஸ்(?) பண்ணின புண்ணியவான்கள் நினைச்சுட்டாங்க போலருக்கு. கமலின் மியூசிக் ட்ரூப்பில் வரும் 'மாமா' குடித்துவிட்டு வந்து செய்யும் அலப்பறையையும், அதை கேஸட்டில் ரெக்கார்ட் செய்து பின்னால் அவர் மனைவியிடம் நண்பன் மாட்டிவிட்டு அடிவாங்க வைக்கும் காட்சிகளும் ஸ்வாகா! 'யுவர் லவ்விங்லி' என்ற பனியன் போட்டவனை அடியுங்கள் என்று வில்லன் சொல்ல, கமலுக்குப் பதிலாக 'மாமா' அடிவாங்கிக் கதறி ஓடும காட்சியும்கூட அபேஸ்! கீதா அடுக்கு மாடிக் கட்டடத்திலிருந்து தள்ளிவிடுவது போன்ற கனவு கண்டு அலறியபடி எழுந்திருக்கும் ரஜினியின் எக்ஸ்பிரஷனைத் தொடர்ந்து நண்பர்கள் வந்து பேசும் காட்சி நோ! பாயசத்துக்கு மேல மிதக்கற அத்தனை முந்திரிகளையும் அள்ளிக் குப்பையில போட்டிருக்காங்க.

சரி, போய்த் தொலையுதுன்னு மனசைத் தேத்திக்கலாம்னா டிஜிட்டலைஸ் பண்ணின டீமுக்கு இருந்த அசுரப் பசியில ரெண்டு பாட்டுக்களையும் முழுங்கி ஏப்பம் விட்டிருக்காங்க. சிங்கப்பூர் பார்க்ல ஜெயப்ரதாவுக்காக வெயிட் பண்றப்ப கமல் கற்பனைல வர்ற, எம்.எஸ்.வி. எலக்ட்ரிக் கிதார் இன்ஸ்ட்ரூமென்ட் ஒண்ணை மட்டுமே வெச்சுக்கிட்டு அசத்தின 'காத்திருந்தேன் காத்திருந்தேன் காதல்மனம் நோகும்வரை' பாட்டு காதுல (கண்ணுலயும்) விழாமப் போச்சே! கமல் + நண்பர்களோட ஜெயப்ரதா ஊர் சுத்தற பாட்டான 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' பாட்டை யாவரும் கேளாமலிருக்கக் கடவர் என்று வெட்டி எறிந்து விட்டிருக்கிறார்கள்.

ஆக.. முந்திரிப் பருப்புகளும், திராட்சைகளும் அகற்றப்பட்டு பாயாசம்(னு நெனச்சுக்கிட்டு) இந்தப் படத்தை நமக்கு 'இனிக்கும்'னு தந்திருக்காங்க. எனக்குக் கசப்பாத்தான் இருந்துச்சு. இந்தப் படம் பார்த்ததுக்கு அதே காம்ப்ளக்ஸ்ல 'ராஜாராணி' நஸ்ரியாவைப் பார்த்து பிரசவம்... ஸாரி, பரவசம் அடைஞ்சிருக்கலாம். இல்ல... பக்கத்து தியேட்டர் காம்பவுண்ட்ல ஓடற 'ஓநாயையும் ஆட்டுக்குட்டியையும்' பாத்து ரசிச்சிருந்திருக்கலாம். ஹும்...! விதிங்க விதி! இனி டிஜிட்டலைஸ் பண்ணப்பட்டு எந்தப் படம் வெளியானாலும் அதைப் பாக்கறதில்லைங்கறது தியேட்டர்ல பாத்த ஒரு முண்டகக்கண்ணி (அம்மன்?) மேல சத்தியம்! ஹி.. ஹி...!

===================================================
டெய்ல் பீஸ் ஸாரி... தல பீஸ்!: 'நினைத்தாலே இனிக்கும்' படத்துக்கு முன்னால தல நடிக்கிற ¨ஆரம்பம்¨ பட ட்ரெய்லர் போட்டாங்க. ட்ரெய்லர்ல தல ஆக்ஷன் பண்றார். ரெண்டே ரெண்டு வசனம் பேசறாரு. அது என்னன்னுகூட கேக்க விடாத அளவுக்கு தியேட்டர்ல ஆரவாரமும் கரகோஷமும்! அது இனி வெறும் தல இல்லீங்க.... பெருந்தல!
===================================================
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube