Friday, February 27, 2015

சுவாரஸ்ய சுஜாதா

Posted by பால கணேஷ் Friday, February 27, 2015
• என் நண்பன் தேவேந்திர கோயல் போன வாரம் வரை நன்றாக இருந்தான். திடீரென்று கல்யாணம் செய்து கொண்டு விட்டான். கோத்ரேஜ் அலமாரி அப்புறம் ரேடியோ, ரெப்ரிஜிரேடர்,டெரிலின் சூட் கொடுக்கிறார்கள் என்று கல்ணாயம் பண்ணிக் கொண்டானாம். கூட ஒரு பெண்ணையும் கொடுக்கிறார்கள் என்று பிற்பாடுதான் தெரிந்தது. லேட்!

• டெல்லியில் வடக்கத்திக் கல்யாணம் வினோதமானது. காலை எட்டு மணி வரைக்கும் இந்த வீட்டிலா கல்யாணம் நடக்கப் போகிறது என்றிருக்கும். திடீரென்று புயல்போல் சர்தார்ஜி வருவார், ஒரு லாரியில் நாற்காலிகளுடன். இன்னொரு சர்தார் சமைத்த கோழிகளுடன் வந்து இறங்குவார். பின்னால் ஒருவர் பந்தல் துணியுடன் வருவார். அவர் பின்னால் ஸ்வாகத் போர்டு, சக்கர கலர் விளக்கு கம்பிகள் இவற்றோடு எலெக்ட்ரீஷியன் சர்தார்ஜி. ‘பீப் பீப்’ என்று சத்தம் கேட்டு எல்லாரும் ஒதுங்குவார்கள். பாண்டு கோஷ்டி வந்து நிற்கும்.

அப்புறம் ஒரு வெள்ளைப் பெண் குதிரை நொந்துபோய் வரும். அதன் மேல் பூக்களால் ஆன ஒரு குழப்பம். அதுதான் பையன். பையன் பெண்ணின் முகத்தைப் பார்க்கவே மாட்டான். எல்லாவற்றையும் மூடி வைத்திருப்பார்கள். சிறு பையன்களுடன் தடி ஆண்பிள்ளைகள் டுவிஸ்ட் ஆடுகிறேன் என்று சுளுக்கெடுத்து உள்ளே ஒரு எலும்பு மளுக்கென்று ஒடிகிற வரைக்கும் ஆடுவார்கள். பிறகு எல்லோரும் கொக்கோகோலா சாப்பிடுவார்கள். நிறைய ஸ்வீட் வினியோகம் செய்வார்கள். இந்த ஊர் மாப்பிள்ளைகள் பெண்ணுக்குத் தாலி கட்டுவது இல்லை. அப்படி ஒரு வழக்கம் இல்லாதது நல்லதுதான். மற்ற சில்லறை அமர்க்களத்தில் அது மறந்துபோய் விடுமல்லவா?

• மெஸ்ஸில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் என் நண்பர் ஸ்ரீ திடீரென்று தேசபக்தி மிஞ்சிப் போய் ஜவான்களுக்கு ரத்தம் கொடுக்க வெலிங்டன் ஆஸ்பத்திரிக்குச் சென்றார். அவருக்கு ரத்தம் கொடுத்து அனுப்பி விட்டார்கள்.

• டில்லி கரோல்பாக்கில் உள்ள ஏராளமான மதறாசி ‘மெஸ்’களில் ஒன்றில் நுழைகிறோம். எல்லா மெஸ்களுக்கும் பொதுவான சில விஷயங்கள் : பஜனை சமாஜ நோட்டீஸ், ப்ரொப்ரைட்டரின் போட்டோ, ரீகல் தியேட்டரில் ஞாயிறு காலை தமிழ் சினிமா விளம்பரம், ஊதுபத்தி, காதில் பூ வைத்த ராயர், பேரேடு கணக்கு நோட்டு, ‘தோஸ்ஸை’ (இன்றைய ஸ்பெஷல்) அப்புறம்... ஸ்டெனோகிராபர்கள்.

• நம் தமிழ் வார, மாதப் பத்திரிகைகளின் தரத்தைப் பற்றி வருத்தப்பட வேண்டியது படித்தவர்களின் பொறுப்பு. ஒரு முக்கியமான தமிழ்ப் பத்திரிகையில் வெளியான சிறுகதையின் ஆரம்பம் இப்படி!

‘சாப்பிட்ட களைப்பால் சோபாவில் சாய்ந்திருந்த சேகரை மெல்லத் தொட்டாள் உஷா. தொடர்ந்து “இந்தாருங்கள்” என்று அழைத்தாள்.‘

உஷா மேலே என்ன செய்தாள் என்று நமக்கு ஆர்வம். இத்துடன் ஒரு ஆங்கிலக் கதையின் ஆரம்பத்தை ஒப்பிடலாம்.

‘தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த அந்த ஆசாமிக்கு ஒரு தலை இல்லை...’

இந்த ஆரம்பம் திடீரென்று நம்மைக் கவர்கிறது. மேலே அவசரப்பட்டு படிக்கிறோம். இம்மாதிரி துவங்கி எப்படி ஆசிரியர் தப்பிக்கப் போகிறார்  என்று. இப்படித் தப்பிக்கிறார்: “தலை இல்லை என்றா சொன்னேன்? மன்னிக்கவும், எனக்கு ஞாபக மறதிஅதிகம். ஒரு கை இல்லை அவனுக்கு.”
எப்படியோ, உங்களை கதைக்குள் இழுத்து விட்டார். தமிழில் நல்ல சிறுகதைகளே இல்லை என்று சொல்ல வரவில்லை. என் வருத்தம் ஏன் இப்போது கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’, கு.ப.ராஜகோபாலனின் ‘விடியுமா’ போன்ற கதைகள் வருவதே இல்லை என்பதுதான்.

• காற்று வாங்கப் போனேன் - ஒரு
கழுதை வாங்கி வந்தேன் - அதைக்
கேட்டு வாங்கிப் போனான் - அந்த
வண்ணான் என்ன ஆனான்?... ஆ.... (காற்று)

தமிழ் சினிமாப் பாட்டுகளை இம்மாதிரி கொஞ்சம் மாற்றிப் போட்டுப் பாடுவதில் உற்சாகமிருக்கிறது. மற்றொரு உதாரணம் :

பாலிருக்கும் பழமிருக்கும், பசியிருக்காது. பஞ்சணையில் தூக்கம் வரும், காற்று வராது.

நீங்கள் வேறு உதாரணங்கள் யோசிக்கலாம்.

• அச்சுப் பிழைகளில் நகைச்சுவை இருக்கிறது. ‘சம்போ கந்தா’ என்பதை ‘சம்போகந் தா’ என்று அச்சடித்தவர் தன்னையறியாமல் நகைச்சுவை நாஸ்திகராகிறார். சென்ற இதழில் சில சுவாரஸ்யமான பிழைகள் இருந்தன. சுவையுள்ள புத்தகம், சுமையுள்ள புத்தகமானது. “அத்தா, உனை நான் கண்டுகொண்டேன்” என்ற ஆழ்வார் வரி, “அத்தான் உனை நான் கண்டுகொண்டேன்” என்று சினிமாப் பாட்டாக மாறியது. நான் இவைகளை எடுத்துரைப்பதில் என் நோக்கம் இதில் உள்ள ஹாஸ்யத்தைச் சொல்றதற்கே.  அச்சகத்தார் மன்னிக்கவும். அவர்கள் தொழிலில் உள்ள எடினத்தை நான் அறிவேன்.

• இந்த இதழின் மற்றொரு பக்கத்தில் சுஜாதாவின் 6961 என்கிற கதை ஆரம்பிக்கிறதாம். இதற்கு என்ன இத்தனை அல்லோலம்? வருகிறது, வருகிறது என்று இரண்டு மாதமாக பயங்காட்டி, புதுமை, புரட்சி, அது இது என்று புரளி பண்ணி - எனக்கு என்னவோ இந்த எழுத்தாளரைச் சற்று அதிகமாகவே தூக்கி வைக்கிறார்கள் என்று படுகிறது. இதில் ஒரு ஆபத்து - அதிகமாக உயர, உரய இறுதியில் கீழே விழும்போது வலியும் அதிகமாக இருக்கும்.

-ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்ற பெயரில் சுஜாதா எழுதிய கணையாழியின் கடைசிப் பக்கங்களிலிருந்து.

Monday, February 16, 2015

கலகக் கோப்பை கிரிக்கெட்

Posted by பால கணேஷ் Monday, February 16, 2015
முன் குறிப்பு : ‘மின்னல் வரிகள்’ தளத்தின் வழக்கத்துக்கு மாறாக இது சற்றே நீண்ட பகிர்வு. பொறுத்தருள்க. (தவறாமல்) படித்திடுக. கருத்தினை உரைத்திடுக.

வாழ்க்கையென்பது மிக வினோதமான ஒரு வஸ்து. நாம் எதிர்பார்த்ததைச் செய்து தொலைக்காது. நாம் சற்றும் எதிர்பாராத விஷயத்தை நிகழ்த்திவிட்டு நம்பைப் பார்த்துச் சிரிக்கும். இதன் வினோதங்களில் ஒன்றுதான் இப்ப நான் சொல்லப் போறது. கிரிக்கெட்ங்கறது ஒரு விளையாட்டு, ஒருத்தன் பந்தை வீசுவான், ஒருத்தன் பேட்டால அடிப்பான், மத்த பேர்லாம் ஓடி ஓடி அதைத் தடுப்பாங்க... இந்த அளவில் மட்டுமே அந்த விளையாட்டுடன் பரிச்சயம் இருந்த நான் விதிவசத்தால் என் பள்ளி நாட்களில் ஒருமுறை அதை விளையாடி அதிலும் மேன் ஆஃப் த மேட்ச் ஆக ஆனேன் என்று சொன்னால் நம்ப முடியுமா உங்களால...? என்னாலயே நம்ப முடியாத ஒரு சமாச்சாரம்தான் அது. ஆளா அப்படித்தான் ஆச்சு. அன்னிக்கு என்ன ஆச்சுன்னா...

ஞாயித்துக்கிழமை காலையில பத்து மணிக்கு கிரிக்கெட்டுக்காக அந்த வாரமும் தவறாம கிரவுண்டுக்குப் போயிட்டேன். நோ.. நோ... கிரிக்கெட் விளையாடப் போனேன்னு நினைச்சிருந்தீங்கன்னா உங்களுக்கு ஃபெயில் மார்க்தான். நான் போனது மரக்கிளைல ஏறி உக்கார்ந்து வழக்கம்போல வேடிக்கை பார்க்க. அன்னிக்கு நான் போறப்ப பசங்க விளையாடாம கூடிநின்னு குசுகுசுன்னு ஏதோ பரபரப்பா பேசிட்டிரூந்தாங்க. என்னப் பாத்ததுமே, “டேய் கிட்டா, கணேஷைச் சேத்துக்கலாம்டா...”ன்னான் அருமைராஜ்.

“டேய் அருமை... வயக்காட்டுக்குப் போயி மல்லாட்டை(கடலை)ச் செடியப் பறிச்சுட்டு ஆளுங்க பாத்தா தலைதெறிக்க ஓடியார வெளையாட்டுக்கு நான் வரலைடா... ஓடி ஓடி மூச்சு வாங்குது. ஆளவுடு”ன்னேன். அதுவரை தலையக் கவுந்துக்கிட்டு யோசிச்சுட்டிருந்த கேப்டன் கிட்டா (கிருஷ்ணமூர்த்தி) என்கிட்ட வந்து என்னை ஏற எறங்கப் பாத்துட்டு, “அதில்லடா... நாளைக்கு முண்டியம்பாக்கத்துக்கு மாட்ச் விளையாடப் போறோம். இந்த நேரம் பாத்து சுந்தருக்கு கடுமையான ஜுரம். ஸோ, அவனுக்குப் பதிலா நீ வர்ற, வெளையாடற...” என்றான். “டேய் எருமை... இப்படியாடா மாட்டி வுடறது?” என்று அ(எ)ருமையிடம் சீறிவிட்டு, “கிட்டா... சுந்தர் செமத்தியா பேட் பண்ணுவான்... எனக்கு பேட்ட எப்படிப் புடிக்கறதுன்னே தெரியாது. என் உருவத்துக்கு வேகமா ஓடவும் முடியாது. (பள்ளிக் காலங்களில் இப்ப இருக்கறதவுட டபுள் சைஸ் மோட்டூவா இருந்தேன்). அதனாலதான் ஃபுட்பால் டீம்லயே என்னை பேக்கியா வெச்சிருக்காங்க. என் அகலத்துக்கு பந்தைத் தடுக்கறதுதான் நல்லாப் பண்றனாம். அதனால நீ வேற யாரையாச்சும் பாருடா”ன்னேன்.

“அதுக்குல்லாம் டயம் இல்லடா. பேட்டை எப்பிடி பிடிச்சு சமாளிக்கறதுன்னு உனக்கு டிரைனிங் தர்றேன் இன்னிக்கு. நீ அதிகம் ஓடல்லாம் வேணாம். உன் அகலத்துக்கு க்ளீன் போல்ட் ஆக்கறது கஷ்டம். சும்மா நீ வந்து ஸ்டம்ப்பை மறைச்சுட்டு டொக்கு போட்டாப் போதும். நானும் தையரத்தையாவும் பாத்துக்கறோம் ரன் எடுக்கறதை”ன்னான். தையரத்தையாவும் (பேரு ஜெயச்சந்திரன். அந்த டைம்ல ‘சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன் தையரத்தைய்யா’ன்ற பாட்டு ஹிட்டாகியிருந்ததால அவன் பேர் இப்படியாயிடுச்சு. ஹி.. ஹி... ஹி...) அவனுக்கு சப்போர்ட்டாப் பேச ஆரம்பிச்சு கடைசில ஒருவழியா என்னைத் தலையாட்ட வெச்சுட்டாங்க. 

கிட்டா, பாபுகிட்ட பவுலிங் போடச் சொல்லிட்டு என் பக்கத்துல வந்து நின்னுக்கிட்டு பந்து எப்படி வரும், பேட்டால எப்படி தடுக்கறது (நீ அடிக்கல்லாம் வேணாம், தடுத்தாப் போறும்) எல்லாம் கத்துக் குடுத்தான். மரத்து மேலருந்து அவங்க ஆடறதப் பாத்து கமெண்ட் அடிச்சு சிரிச்சது எவ்வளவு பெரிய இமாலயத் தவறுன்னு அப்பத்தான் புரிஞ்சது. நான் பேட்டை ஒரு பக்கம் நீட்டினா, பந்து வேற பக்கமில்ல போறது... என் ப்ராக்டிஸ்(?) முடிஞ்சதும் கிட்டாகிட்ட, “டேய் கிட்டா... நான் தேறுவன்னு எனக்கே தோணலடா. வயத்தக் கலக்கற மாதிரி இருக்கு லைட்டா. நான் வரலைடா” என்றேன் பலவீனமாக. “டேய்... ஆளுக்கு அஞ்சு ரூவா போட்டு பெட் கட்டி வெளையாடப் போறோம். ஜெயிக்கற டீம்ல இருக்கறவங்க எல்லாரும் ஜெயிச்சதுல பாதிப் பணத்த ஷேர் பண்ணிட்டு மீதிப் பாதிய மேன் ஆப்த மேட்சுக்கு தரணும். சீரியஸான மேட்ச்ரா. உன்ட்டருந்து பைசா பேறாதுன்னு தெரியும். (என்னா கால்குலேஷன்) உன் பணத்தையும் நாங்க போட்டுக்கறோம். நீ வர்ற... அவ்ளவுதான்...”னு சீறிட்டு போயே போய்ட்டான். யாராவது கோவமாப் பேசினா பணிஞ்சுபோற என் சுபாவம் தெரிஞ்சுதான் கத்திட்டுப் போறான்னு தெரிஞ்சாலும் வேற வழியில்லாம பலியாடு மாதிரி மறுநாள் முண்டியம்பாக்கத்துக்கு அவங்க கூடப் போனேன்.

டாஸ்ல கிட்டா தோத்துட்டான். அவங்க முதல்ல பேட் பண்றோம்னதும் ரொம்ப நிம்மதியாய்ருச்சு எனக்கு. என்னை முன்னாலயும் நிறுத்தாம, பவுண்டரியிலயும் நிறுத்தாம (கேட்ச் புடிக்கற சாமர்த்தியமும் லேது) நடுவால நிப்பாட்டினான் கிட்டா. எதிரணி ஓபனர்கள் ரெண்டு பேரும் வாட்டசாட்டமா கிங்கரன்ங்க மாதிரி இருந்தாங்க. எங்க டீம்ல பாபுவும் சுந்தாவும் நல்லாத்தான் பவுலிங் போட்டாங்க. ஆனாலும் அவங்க ரன் எடுக்கற வேகம் கூடிட்டுத்தான் இருந்துச்சு. நாலு ஓவர்லயே இருவது ரன் எடுத்துட்டானுங்க. (மேட்ச் முடிய ஓவர் கணக்குலாம் கெடையாது. டீம்ல எல்லாரும் அவுட்டாகற வரைக்கும். அடுத்த டீம் அதவிட அதிக ரன் எடுத்துக் காட்டணும்).

 அப்பத்தான் அந்த முதல் திருப்பம் என்னால, என்னையறியாம நடந்துச்சு. மூணு ஃபோர் அடிச்ச அந்தக் கிங்கரன் நாலாவத அடிக்கறதுக்காக பந்தை இழுத்து அடிக்க, அது மின்னல் வேகத்துல என்னை நோக்கி வந்துச்சு. என்ன ஏதுன்னு நான் யோசிக்கறதுக்குள்ள என் வயத்துல ஒரு டமார்... உச்சமான வலியில என் ரிஃப்ளெக்ஸ் அதிவேகமா செயல்பட்டு கையால வயத்தைப் பொத்திகிட்டேன். அடுத்த செகண்ட் கிரவுண்டல பெரிய ஆரவாரம். எல்லாரும் கை தட்றாங்க. ஆமா... பால் என் கைக்கும் வயித்துக்கும் இடையில பத்திரமாப் பதுங்கியிருந்துச்சு. கைய எடுத்து பந்தக் கீழ போட்டுட்டு கண்ல (வலியால) கண்ணீரோட நானும் கை தட்ட, கிங்கரன் என்னை முறைச்சுட்டே வெலகிப் போனான். (நல்லவேளையா அவன் பந்தை இன்னும் கொஞ்சம் கீழயோ, மேலயோ தூக்கி அடிக்காம விட்டானேன்னு எனக்குள்ள ஒரு ஆறுதலும் இருந்தது எனக்கு மட்டுமே தெரிஞ்ச விஷயம். ஹி.. ஹி... ஹி...)

அதுக்கு அப்பறமா வந்தவன் அவனைவிட எமகாதகனா இருந்தான். வர்ற பந்தைல்லாம் ஏறி ஏறி அடிக்க ஆரம்பிச்சான். ரன்னும் அவங்களுக்கு ஏற ஆரம்பிச்சது. பவுலிங்கை மாத்தி மாத்திப் பாத்தும் பிரயோஜனப்படலை. அப்பதான் திடீர்னு கிட்டா என்கிட்ட வந்து பாலை கைலை திணிச்சான். ”நீ ஒரு ஓவர் போடுறா...” ழேன்னு முழிச்சேன். “டேய்... இதென்னடா விபரீத ஐடியா..?நேக்கொரு எழவும் தெரியாதுரா..” அவன் டென்ஷனா, “தெரியும்டா. சும்மா அவன் மூஞ்சைப் பாத்து எறி. அது போறும்... சீக்கிரம் போ...”. முதுகுல கைவச்சுத் தள்ளி விட்டான். 

கையத் தலைக்கு மேல கொண்டு வந்து கிட்டா சொன்னத மனசுல வெச்சுட்டு முதல் பந்த அந்த எ.கா. மூஞ்சை நோக்கி எறிஞ்சேன். அவன் பந்து பிட்சாவும் நெனச்சு பாத்துட்டு இருந்தவன்,  கொஞ்சம் ஏமாந்து, ஆனாலும் சட்னு தடுத்துட்டான் பாலை. ரெண்டாவது பாலும் அதே மாதிரி ஆகவும், எனக்கு புல்டாஸ் தவிர எதும் தெரியாதுன்னு கண்டுபிடிச்சுட்டான் போலருக்கு... மூணாவது பாலை நல்லாத் தூக்கி அடிச்சான். அது பனைமர உசரத்துக்கு எகிறி பவுண்டரி லைனை நோக்கிப் பறக்கறது. அப்பதான் பவுண்டரி  லைன்ல துரத்துல நின்னுட்டிருந்த கிச்சா, பால் வர்ற வேகத்தை கணிச்சு ஓடிவந்து ஏபிடி பார்சல் சர்வீஸ் படத்துல இருக்கற அனுமார் மாதிரி கைய நீட்டிக்கிட்டே தாவறான். அதிசயமா பந்து அவன் கைல ஒட்டிக்கிச்சு. கீழ உருண்டு பந்தைக் கடாசி எறிஞ்சுட்டு குதிக்கறான். அட... விக்கெட்! 

அடுத்த ரெண்டு பந்துலயும் ரெண்டு ரெண்டு ரன் போச்சு. ஆறாவது பந்துல மறுபடியும் துப்பறியும் சாம்பு மாதிரி லக் அடிச்சது எனக்கு. அந்த ஆறாவது பால் (வழக்கம்போல) புல்டாசாக பேட்ஸ்மேன் பக்கத்துல பிட்ச் ஆக, அந்த எடத்துல ஒரு சின்னக் கல் இருந்து பாலோட டைரக்ஷனை மாத்திருச்சு. பால் இண்டிகேட்டரும் போடாம, கையவும் காட்டாம டர்ன் பண்ற சென்னை ஆட்டோக்காரனுங்கள மாதிரி திடீர்னு ரைட் டர்ன் எடுத்து, அவன் பேட்டைத் தாண்டி அவன் முட்டில மோதி கீழ விழுது. மறுபடி எல்லாப் பயலுவளும் கைதட்டறாங்க. என்னடான்னு கேட்டா, அது பேரு எல்பிடபிள்யூவாம். இன்னொரு விக்கெட் எடுத்துட்டனாம் நானு. கிட்டா பல்லெல்லாம் வாயா, “தூள்டா. இனிம அந்த டீம்ல எல்லாம் சொங்கிங்கடா.. சுலபமா கவுத்திரலாம்” என்றான் என்னிடம்.

ரெண்டு விக்கெட்(?) எடுத்துட்டதால மறுபடி என்னை பந்து போடச் சொன்னான் கிட்டா. ஆனா அடுத்த தடவை எனக்கு அதிர்ஷ்டம் அடிக்காததால அவனுங்க அடிச்சானுங்க - பந்தை! ஒரே ஓவர்ல 16 ரன்னான்னு மெரண்டு போயி கிட்டா அதுக்கப்பறம் வெஷப்பரீச்சை எதும் பண்ணாம விட்டுட்டான். அப்படி இப்படின்னு அவனுங்களை சாமர்த்தியமா கிட்டா காலி பண்ணி முடிச்சப்ப டோட்டல் ஸ்கோர் 110 ரன். 

தைய்யரத்தய்யாவும் கிட்டாவும் ஓபனிங் போனானுங்க. கிட்டாவை சுலபத்துல அவுட்டாக்க முடியாது. லூஸ் பாலாப் பாத்துதான் வெளுப்பான். இல்லாட்டி டொக்கு வெச்சு சிங்கிள், டபுள் எடுக்கப் பாப்பான். தைய்யரத்தய்யா அதிரடி ஆசாமி. இவங்க கூட்டணி பல சமயங்கள்ல செம ரன் எடுத்து ஜெயிச்சிருக்கு. அப்டியே யாராச்சும் அவுட் ஆயிட்டாலும் சுந்தர் பாத்துப்பான் பேட்டிங்கை. (இன்னிக்கு அப்படி ஒரு ஆசாமிக்கு சப்ஸ்டிட்யூட் நானு. ஹும்...). அன்னிக்கு மேட்ச்ல அதிர்ஷ்டம் கை கொடுக்கலை. முதல் நாலு ஓவர்ல தைய்யரத்தய்யா செமத்தியா அடிச்சு 18 ரன் எடுத்தான். கிட்டா 5 ரன். அஞ்சாவது ஓவர்ல அந்தக் கிங்கரன் போட்ட பவுன்ஸரை தைய்யரத்தய்யா வீச, பாட்டோட எட்ஜ்ல பட்டு ரெண்டு பனைமர உயரத்துக்குப் பறந்துச்சு பந்து. இத அவனுங்க புடிக்காம வுட்றணுமேன்னு வேண்டிக்கிட்டு இருக்கற போதே அந்த டீம் சுள்ளான் கரெக்டாப் புடிச்சுத் தொலைச்சுட்டான். தைய்யரத்தய்யா அவுட். கிட்டா சைகை காட்ட, என் கைல பாட்டைக் குடுத்து அனுப்புனாங்க. பலியாடு மாதிரி தலையக் குனிஞ்சுட்டே போனேன்.

கிட்டா என் கிட்ட வந்து, “டேய்.. சொன்னது நினைவிருக்கில்ல.. அவுட்டாகாம டொக்கு வெச்சுட்டு ஓடி வந்துரு”ன்னான். அவன் சொல்லித் தந்த டெக்னிக் அது. கிங்கரன் போட்ட பந்தை மரியாதையாக் குனிஞ்சு அது எழும்பறதுக்குள்ள டொக்கு வெச்சுட்டு அதிவேகமா ஓடினேன். அதுக்குள்ள பாதி பிட்ச் ஓடி வந்திருந்தான் கிட்டா. வி.கீப்பர் வந்து பந்தை எடுக்கறதுக்குள்ள அவன் அங்க ரீச். நான் இங்க ரீச். கிரேட் சிங்கிள். அடுத்த ரெண்டு பாலையும் கிட்டா வெளுத்தான். நெக்ஸ்ட் ஓவர்ல முதல் பால்ல நான் சிங்கிள். அவன் போய் தீயா ஒரு ஷாட். இப்படியே சிங்கிள்ஸாவே நான் பண்ணண்டு ரன் தேத்திட்டப்பதான் அது நடந்துச்சு.

அடுத்த ஓவர் போட வந்த கிங்கரன் என்னப் பாத்ததும் ஒரு முடிவோட வந்துருப்பான் போலருக்கு. ஷாட் பிட்சாப் பந்தப் போட, அது எகிறி என் மூஞ்சிக்கு நேர பவுன்ஸ் ஆகி வந்துச்சு. கண்ண மூடிக்கிட்டு பேட்ட நெத்திக்கு நேராத் தூக்கி அதைத் தடுத்தேன். அவ்ளவ்தான் தெரியும். திடீர்னு எல்லாரும் கை தட்டறாங்களேன்னு கண்ணத் தொறந்து பாத்தா... அம்பயர் ரெண்டு கையயும் தூக்கிட்டு நிக்கிறான். சோகமா பேட்ட எடுத்துட்டு கிட்டாவத் தாண்டி நடக்க ஆரம்பிச்சேன். “எங்கடா போற..?”ன்னான் கிட்டா. “அம்பயர் கையத் தூக்கி அவுட் குடுத்துட்டாரேடா... அதான் போறேன்”ன்னேன். “டேய் வெண்ண... மானத்த வாங்காதடா. ஒரு கையத் தூக்கினாத்தாண்டா அவுட். ரெண்டு கையவும் தூக்கினா சிக்ஸர்னு அர்த்தம்டா. நீ அழகா பேட்டால பந்தைத் திருப்பி சிக்ஸர் அடிச்சுருக்க. போய் ஆட்றா...”ன்னான். “இத என்னாலயே நம்ப முடியலயே”ன்னு முனகிட்டே மறுபடி போய் கிரீஸ்ல நின்னேன்.

கிங்கரன் இப்ப வெறியாகி அடுத்த பந்தையும் அதே மாதிரி எறிஞ்சான். நான் தொடவே இல்ல. கிட்டாகிட்டப் போயி, “டேய்... அவன் ஸ்பீடா போடறதக் கூட தடுத்திரலாம் போலத் தோணுது. ஆனா பந்தை வீசறதுக்கு முன்னால பல்லக் கடிச்சுக்கிட்டு வெஸ்ட் இண்டீஸ் பாட்ரிக் பாட்டர்ஸன் போடற மாதிரி எக்ஸ்ப்ரஷன் காட்டறான்டா. அத கட் பண்ணிட்டு சாதாரணமா போடச் சொல்றா”ன்னேன். “அதெல்லாம் நடக்கற காரியமில்லடா. நீ பாட்டுக்கு அப்ப மாதிரி கண்ண மூடிக்கிட்டு சுத்து”ன்னான். சரி, நாம ஆடி செஞ்சுரியா அடிச்சுரப் போறோம்.. ஆவறது ஆவட்டும்னு அடுத்த பந்தை அவன் எறிஞ்சப்ப லேசா பேட்டால திருப்பி வுட்டேன். அது பவுண்டரி..! ஆஹா... இவன இப்படித்தான் சமாளிக்கணும்னு புரிஞ்சுகிட்டதுல அடுத்த ரெண்டு பால்லயும் ஒரு ரெண்டு, ஒரு நாலு ரன்கள். ஆக அந்த ஓவர் முடியறப்ப என் டோட்டல் முப்பது ரன். ஹா... ஹா.. ஹா...

பட்... அந்த சந்தோஷம் ரொம்ப நேரம் நீடிக்கலை. அடுத்த மூணு ஓவர்ல சிங்கிளும் டபுளுமாச் சேத்து இன்னும் அஞ்சு ரன் சேர்த்திருந்த சமயத்துல அவுட் ஆயிட்டேன். அவங்க டீம்ல ஒரு சுள்ளான் ஒருத்தன் இருந்தான்னு சொன்னேன்லியா...? அவன் சரியான சாமர்த்தியசாலி. மொத ரெண்டு பந்தை மெதுவாப் போட்டு அடிக்க வுட்டுட்டு மூணாவது பாலை ஸ்பீடாப் போட்டுட்டான். நான் பேட்டை நகத்தறதுக்குள்ள பந்து ஸ்டம்பை நகத்திடுச்சு. அவ்வ்வ்வ்... பேசாம வந்து ஒக்காந்து ஆட்டத்தை கவனிக்க ஆரம்பிச்சேன். அடுத்து வந்த மூணு பேட்ஸ்மேன்களும் சிங்கிள்ஸ் எடுத்து கிட்டாவைத்தான் அடிக்க விட்டாங்க. கிட்டா நாலும் ஆறுமா வெளுத்திட்டிருந்தான். அடுத்த நாலு ஓவர்கள்ல இன்னும் மூணு விக்கெட்டும் (டொக்கு வெச்சும்கூட) காலி.  அவனுங்க மூணு பேரோட டோட்டல் ஸ்கோர் 5 ரன். கிட்டா மட்டும்தான் ஸ்டெடியா நின்னான். அதுக்கடுத்த ஓவர்ல நாலாவது பால்ல கிட்டா ஒரு பவுண்டரி அடிச்சு 50ஐத் தொட, டீமோட ஸ்கோர் 112 ஆனது. விக்டரி ஷாட். அஞ்சே விக்கெட் இழப்புல கிடைச்ச மகத்தான வெற்றி.

அம்பயர் கிட்டா கிட்ட ஜெயிச்சதுக்கான பணத்தைத் தர, என்னமோ வேர்ல்ட் கப் வாங்கற மாதிரி பெருமையா அத எல்லாத்துக்கும் முன்னால தூக்கிக் காட்டினான் கிச்சா. அம்பயர் அடுத்ததா, “முக்கியமான மூணு விக்கெட் எடுத்ததோட, 35 ரன்னும் சேத்த கணேஷ்தான் மேன் ஆஃப் த மேட்ச்”ன்னத என்னால இன்னிக்கு வரைக்கும் நம்ப முடியல. கிட்டா, கைல பணத்தக் குடுத்துட்டு கை குலுக்கி, “நாளைக்கு நம்ம டீமுக்கு நீ ட்ரீட் தர்ற... முத மேட்ச்லயே மேன் ஆஃப் த மேட்ச் வின் பண்ணதுக்கு”ன்னான். அடுத்த நாள் எல்லாப் பயலுவளுக்கும் குச்சி ஐஸ் வாங்கித் தந்து ‘ட்ரீட்’ வெச்சதுல, கைக்குக் கெடைச்ச மொத்தப் பைசாவும் காலிங்கறதுதான் இதுல உச்சபட்ச சோகம். ஒரு கப் கொடுத்திருந்தாலாவது பெருமையா வெச்சுட்டிருந்திருக்கலாம். நம்ம லக் அவ்ளவ்தான். அவ்வ்வ்வ்...

பின் குறிப்பு : மிகையான கற்பனை கொண்ட கதை என்று நீங்கள் நினைத்தால் அதில் தவறில்லை. ஏனென்றால் என்னாலேயே நம்ப முடியாத, ஆனால் உண்மையில் நடந்த ஒரு விஷயத்தை சற்றே கற்பனை ஜரிகையில் நெய்து இங்கே தந்திருக்கிறேன். ஆகவே இது உண்மைக் கதை. கதை என்று வந்தால் அதில் உண்மையிருக்காது. உண்மையென்று கொண்டால் அதில் கதை விடக்கூடாது. இதில் இரண்டும் கலந்திருப்பதால், உண்மை + கதை என்பதை நீங்கள் நம்பித்தானாக வேண்டும். சில நேரங்களில் உண்மை கதையாகி விடலாம்... சில நேரங்களில் கதை உண்மையாகி விடலாம். இந்த உண்மைக் கதையில்.... ஐயையோ... அதைக் கீழ போடுங்க. நிறுத்திர்றேன்...!

Friday, February 6, 2015

இவனும் ‘இசை’யும்..!!

Posted by பால கணேஷ் Friday, February 06, 2015
ர்ப்பாட்டமில்லாத மென்மையான இசை என்றால் இவனுக்கு ரொம்பவே பிடிக்கும். முதன் முதலில் இவன் இசை ரசனையில் ஈடுபட்டது ஏழு, எட்டு வயதில்தான். இவன் அத்தை வீட்டில் அப்போது ஒரு ரெக்கார்ட் பிளேயர் இருந்தது. அதன் சைடில் இருக்கும் கைப்பிடியைச் சுற்றி விட்டால் ரெகார்டு சுழன்று அது பாடும். அதை ஒரு நிதானமான வேகத்தில் சுற்றுகிற அளவுக்குத்தான் கைப்பிடியை லயம் பிசகாமல் சுற்ற வேண்டும். அப்போதுதான் ‘எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே’ என்று பாடும்.

இவனுக்கு லயமாவது, புண்ணாக்காவது... வேகமாகச் சுற்றி விடுவான். ‘எணி எணி பாக மம் இபம் கொடாதே’ என்று விசித்திரமான கீச்சுக் குரலில் அது பாடுவதை ரசித்துச் சிரிப்பான். அப்படியே லீவரைச் சுற்றாமல் விட்டு விட்டால்... போதையில் தள்ளாடுகிறவனின் குரலில் ‘எ...ண்...ணி... எ...ண்...ணி... பா...ர்...க்...க...’ என்று இழுத்துப் பாடிக் கொண்டே சென்று நின்று விடும். அதையும் ரசித்து சிரித்துக் கொண்டிருப்பான் இவன். அத்தை வீட்டுக்காரர்தான் காண்டாகி இவன் புடனியில் தட்டி, ‘‘இப்டில்லாம் இ(ம்)சை பண்ணிணா அது ரிப்பேராயிடும். அதுவுமில்லாம அதுல இருக்கற ஊசி ரெக்கார்டுல ஸ்க்ராட்ச் பண்ணிரும். ஒழுங்கா ஹேண்டில் பண்றா’ என்பார்.

“என்னது...? இதுல ஊசி இருக்கா..? எங்கே?” என்று செந்தில், கவுண்டமணியிடம் கேட்கிற மாதிரி இவன் கேட்பதற்கு பொறுமையாக விடை சொன்வார். “இதோ பாரு... இதான் ஊசி. ரெக்கார்டு சுத்தும்போது தட்டையா சுத்தாம கொஞ்சம் மேடு பள்ளமா சுத்துது பாத்தியா...? அதுல ஊசி உரசறப்ப அதுலருந்து சத்தம் வந்துதான் நமக்கு மியூசிக்கா கேக்குது...”. இவனுக்கு ஒரு எழவும் புரியாட்டியும், எல்லாம் புரிஞ்சுட்ட மாதிரி கெத்தா மண்டையாட்டி வெப்பான். (அப்பவே பந்தா!)

அதன்பின் இவன் அப்பா தவறிவிட, கன்னாபின்னாவென வாழ்க்கை அலைக்கழித்ததில் சில ஆண்டுகள் நோ இசை. பின்னர் சற்று ஸ்டெடியான காலகட்டத்தில் சித்தப்பாவின் வீட்டில் ஒரு ரெக்கார்ட் ப்ளேயரைப் பார்த்தான். இப்போது விஞ்ஞானம் முன்னேறி, மின்சாரத்தால் அதுவே ஸ்ருதி பிசகாமல் சுற்றுகிற அளவிற்கு முன்னேறியிருந்தது. கூடவே ஸ்பீக்கரும் அட்வான்ஸ்டாகியிருந்தது. பாட்டைக் கேட்டல் இனிய அனுபவமாகியிருந்தது இப்போது. 

ஆனால் என்ன கொடுமை...! சித்தப்பா வைத்திருந்தது வெகுசில தமிழ்  இசைத்தட்டுகளே.. பெரும்பாலும் இந்திப்பட இசைத் தட்டுகளாகவே வைத்திருந்தார். ‘வீ டோண்ட் ஹியர் தமிழ் மியூசிக்... ஒன்லி இந்தி மியூசிக்’ என்று கா.நே. செல்லப்பா நாகேஷின் லேட்டஸ்ட் வர்ஷன் போலத் தோற்றமளித்தார் சித்தப்பா இவனுக்கு. கேட்டுப் பார்த்ததில் ஒரு வரி புரியவில்லை. ஆனாலும் விடாப்பிடியாய் ஒவ்வொன்றையும் பலமுறை கேட்டதில் ஆர்.டி.பர்மன் ரொம்பவே மனசுக்குப் பிடித்தவராகிப் போனார். 

அதுவும் ஓராண்டுதான்... மதுரையிலிருந்து கோவை, விக்கிரவாண்டி என்று அண்ணனின் உத்யோக நிமித்தம் ஊர்களும் பள்ளிகளும் மாற, ரெக்கார்ட் ப்ளேயர் பிரியாவிடை பெற்றது. இவன் ப்ளஸ் டூ படித்த சமயம் அண்ணா அப்போது பிரபலமாகிக் கொண்டிருந்த டேப்ரெகார்டர் ஒன்றை வாங்கி வந்தார். நேஷனல் பானாஸோனிக் கம்பெனியின் ஒரிஜினல் மோனோ டேப் ரெகார்டர் அது. ஒற்றை ஸ்பீக்கரில் இசையை இரைக்கும். பின்னாளில் வரப்போகிற விஞ்ஞான விந்தைகளை அந்நாளில் ஊகிக்கிற அறிவை இவன் படைத்திருக்கவில்லை என்பதால் (‘இப்ப மட்டும் படைச்சிருக்கானா’ன்ற உங்க மைண்ட் வாய்ஸ் இங்க கேக்குது... அடங்குங்க... ஹி... ஹி...) அதை மிகவே ஆச்சரியித்து ரசித்தான் இவன் அப்போதிலிருந்து கேஸட்டுகளை வாங்கிக் குவிக்கிற காலம் ஆரம்பமானது. 

அடுத்த சில ஆண்டுகளில் டபுள் ஸ்பீக்கர்கள் வைத்து ஸ்டீரியோ இசை கேட்கிற வசதியுடன் டேப் ரிக்கார்டர்கள் வர ஆரம்பிக்க... மோனோ சவுண்டில் பக்கத்தில் வந்து நின்றிருந்த இளையராஜா ஸ்டீரியோ சவுண்டில் மனசுக்குள்ளேயே சேர் போட்டு உட்கார்ந்து விட்டார். என்னா க்ளாரிட்டி... என்னா சவுண்டு...! அதுல பாதி சத்தம் வைச்சாலே அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க சண்டைக்கு வர்ற அளவுக்கு சும்மா அதிர்ந்துச்சுல்ல...

அதை ரசித்துக் கொண்டிருந்த அடுத்த இரண்டாண்டுகளில் அண்ணாவை (பேரறிஞர் அண்ணா இல்லீங்க... இவனோட அண்ணா) அவர் அலுவலகம் சிங்கப்பூருக்கு ஒரு பயிற்சிக்காக அனுப்பி வைத்தது. அவர் வரும்போது ஸோனி வாக்மேன்கள் இரண்டு வாங்கி வந்திருந்தார். ஆஹா... அதில் கேஸட்டைப் போட்டு, இயர்போனினால் ரசித்தபோது... சொர்க்கம்! அத்தனை துல்லிய இசையை அதற்கு முன் இவன் வாழ்நாளில் கேட்டதே இல்லை. வெளியுலகச் சத்தம் எதுவும் இடறாமல். இவனும் வெளியுலகத்தை சத்தத்தால் இடறாமல் நிம்மதியாகக்  கேட்க முடிந்ததில் அத்தனை ஆனந்தம்.

பிற்காலத்தில் இவன் தினமலரில் வேலைக்குச் சேர்ந்து அவர்கள் ஊர் ஊராக இவனை மாற்றல் செய்து பந்தாடிய சமயங்களில் எல்லாம் வாக்மேன் தான் இவனுக்கு உற்ற தோழன். மதுரையில் எலக்ட்ரானிக் சமாச்சாரங்கள் கிடைக்கும் இடமொன்றில் தேடிப்பிடித்து குட்டி ஸ்பீக்கர்கள் ரெண்டு வாங்கியிருந்தான் இவன். அதை வாக்மேனுடன் இணைத்து இயர்போனுக்கு விடுதலை தந்து மெல்லிய சத்தத்தில் (அந்த ஸ்பீக்கரோட அவுட்புட்டே அவ்ளவ்தான்) இசை கேட்பது இவனுக்கும் அறை நண்பர்களுக்கும் வாடிக்கையாகிப் போனது.

அந்த ரிகார்ட் ப்ளேயர்களும், டேப் ரெகார்டர்களும், வாக்மேனும் இப்போது எங்கே போயின என்றெண்ணி பல சமயம் வியப்பதுண்டு இவன். வெறிகொண்டு வாங்கிக் குவித்த கேஸட்டுகள் எல்லாம் ஒரு ஓரமாக ஷெல்ப் நிறையக் குவிந்து கிடப்பதையும், தூசி படிந்து டேப் ரிகார்டர் தூங்கிக் கொண்டிருப்பதையும் பார்க்கையில் பலசமயம் பரிதாப உணர்வு எழும் இவன் மனதில். ஆனாலும் என்ன செய்வது...? பணத்தைத் துரத்த வேண்டியிருக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில், கம்ப்யூட்டரும் ஸ்பீக்கர்களும் இணைந்து எம்பி3 இசைதர வீட்டிலும், வெளியில் செல்கிற தருணங்களில் பேசுவதற்காக கண்டுபிடிக்கப்பட்டு அதைத் தவிர மற்ற வேலைகளுக்கெல்லாம் இன்று பயன்படுத்தப்படுகிற செல்போனும் இயர்போனும் இசையை மட்டற்ற அளவில் வழங்குகிற சூழ்நிலைக்கு ஆட்பட்டுத்தானே இவனும் வாழ வேண்டி இருக்கிறது.

இவன் ரசித்த வயலின் இசை

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி என்கிற ஊர் உங்களுக்கு பரிச்சயமாகி இருக்கும். வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும்போதோ, சென்னையிலிருந்து வெளியூர்களுக்குப் போகிற போதோ பெரும்பாலும் பஸ்கள் பாடாவதி ஹோட்டல்களின் முன்பாக நிறுத்தப்படுவது விக்கிரவாண்டிக்கருகில் உள்ள மோட்டல்களில்தான். இன்றைக்கு ஊரின் முகமே மாறிவிட்டிருக்கிறது. இவன் வாழ்ந்த காலத்தில் ஊருக்கு சற்றுத் தள்ளி நிறைய வயல்வெளிகள் உண்டு. வயல் வரப்பில் உட்கார்ந்து காற்றில் நெல் கதிர்கள் தலையாட்டுதையும், காற்று அதை ஊடறுக்கிற சமயங்களில் எழும் மெல்லிய இசையையும் ரசிப்பது இவனுக்கு மிகப் பிடித்த ஒரு விஷயம். அந்த வயலின் இசைமேல் இவனுக்கு அப்படியொரு காதல். இந்நாட்களில்தான் வயலின் இசையை இவனால் கேட்கவே முடிவதில்லை. அந்த வயலின் இசையைப் பற்றி நிறையச் சொல்லலாம். ஆனா அங்க ஒருத்தங்க பல்லை நறநறன்னு கடிக்கறது இங்க இவனுக்குக் கேக்கறதால உடனே இவன் அப்பீட்டு...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube